கதை

குவாக்

6 நிமிட வாசிப்பு

மார்கழியின் பின்னிரவுக் குளிர். ஊர் தார்ச்சாலையிலிருந்து மேற்கின் உள்தரிசில் தனியாளாக வாத்துப்பட்டி போட்டிருந்தாள் முருகு. எண்பது வயதாகும் முருகின் உடலெடை காளான் மூட்டையின் கனம்தான் வரும். அதுவும், சடைபிடித்த தனது நேர்த்திக்கடன் தலைமுடியால். தோள்பட்டைகளைத் தொடுமளவுக்கு காதுகள் வளர்த்திருப்பாள். வெற்றுக் காதுகள். முழங்கைகளில் நிறைய பச்சைக்குத்தல்கள் தீட்டியிருப்பாள். சுருக்கத் தோல்களில் அவைகள் தெளிவாகத் தெரியாது.

நெல்லறுப்பு முடிந்திருந்ததால் அக்கம்பக்கத்தில் ஆள் நடமாட்டமில்லை. வாடைக்காற்றைத் தவிர ஊரின் உரல் சத்தம், உலக்கைச் சத்தம்கூடக் கேட்காத அடிக்கருது வனாந்திரம். ஆங்காங்கே மின்கோபுரங்கள் மட்டுமே பூதமனிதர்களாக நின்றிருந்தன.

சேவுகனின் வலது கையிலிருக்கும் அரிவாள், இருட்டில் நன்றாகவே பளபளத்தது. பழக்கமான தென்னையேறியிடம் முன்னமே அரிவாளை வாங்கி வைத்திருந்தான். கருதறுத்த மிஷின்களின் சங்கிலி டயர் பதித்த பள்ளங்கள் தரிசெங்கும் காணப்பட்டது. போதைத் தள்ளாட்டத்தில் பள்ளத்தில் விழுந்துவாரி, பட்டியை நோக்கி வெறிவேக்காடாய் ஓடி வந்தான் சேவுகன். கவட்டைக் காலன். வட்ட வலையைச் சுற்றியிருந்த வர்ண ரேஷன் சீலைகள், பட்டியை அவனுக்கு அடையாளம் காட்டியது.

பட்டிக்குப் பக்கத்தில் சேவுகன் வந்தவுடன் மயில்கழுத்து நிறமுடைய ஆண் வாத்து வேற்றாள் வருகையைக் குறிப்பறிந்து சத்தமிட்டான். உடனே ஐநூறு ஜோடி வாத்துகளும் விழித்துக்கொண்டு கரகரத்துப் பதட்டமானார்கள். முருகை உசுப்ப அபாயக் குரல்களை அதிகப்படுத்தினர்.

அவளது அப்பா, கருங்காலி மரத்தில் செய்துகொடுத்த காவக்கம்போடு ‘எவன்டா அவென்…’ என தார்பாய்க் கூடாரத்துக்குள்ளிருந்து ஓடிவந்தாள் முருகு. கம்பின் அடி மேலில் விழவும், அவன் குனியவும் சரியாக இருந்தது.

அவளை ஈரக்கொலையில் வத்தென முட்டி வாமடைக்குள் தூக்கி எறிந்தான். பழமையான குறுக்கெலும்பு விரிசல்விட மயக்கச்சுருளுக்குள் ஆழ்ந்தாள். வந்தவன் சேவுகன்தான் என்று அந்தக் கொடுவேதனையிலும் அறிந்துகொண்டாள்.

அவள் என்ன ஆனாள் என்பதைப் பொருட்படுத்தாமல், உடனே பட்டிக்குள் தவ்வினான். நல்ல மேய்ச்சலால் விளைந்த முட்டைகள் அவனது அகல பாதங்களில் உடைபட, குண்டாங்கூறாக எல்லா திசைகளிலும் அரிவாளைச் சுழற்றினான். தென்னங்குலைகளைச் சீவும் அந்தப் பதம் பனியில் நனைந்திருந்த மென்வாத்துகளைச் சிக்கில்லாமல் துண்டங்களாக்கத் தொடங்கின. அரிவாள் ஓயவில்லை. பயந்தோடிய வாத்துகள் பட்டியின் வாசல் தடுப்பைத் தள்ளித் தப்பிக்க முயன்றனர். திறக்க முடியவில்லை. தள்ளுமுள்ளோடு உயிர் காக்கும் அவட்டையில் எந்தப் பக்கம் ஓடுவதெனத் தெரியாமல் அவன் கால்களுக்கருகே திரும்ப வந்து குவிந்தனர்.

சிரித்துக்கொண்டே வெட்ட வெட்ட, சிதறும் இறகுகள்கூடக் குறுக்குநெடுக்காய் அறுபட்டன.

முற்றிலும் தலைகள் வேறு உடல்கள் வேறான வாத்துகள் ரத்தம் பீய்ச்சத் துடித்தனர். சிலர் முண்டமாய் ஓடிச் செத்தார்கள். எங்கெங்கோ கிடக்கும் அவர்களுடைய கண்களில் கடைசி உயிர் மின்னியது. திறந்திருந்த விழிகளை விதைகளைப் போல அரிவாள் கொண்டு மண்ணுக்குள் அழுத்தினான். அங்கங்கள் இழந்தவர்கள் முருகைத் தேடி ரணத்தில் கதறினார்கள். தங்களின் பக்கத்தில் அரிவாள் வருவதற்குள் குஞ்சின் கண்கள் நிலை குத்தின.

நகரமுடியாமல் கிடந்த முருகின் பார்வைக்கு எல்லாமும் மங்கலாகத் தெரிந்தது. காரணங்கள் தெரியாமல் சாகும் வாத்துகளின், ஜீவனடங்கும் அலறல்களுக்குள் அவளின் ஓலம் அமுங்கியது. அரைவுயிரானவர்கள் வலைச்சீலையை விட்டு வெளியில் ஓடப் பறபறத்தனர். கைகள் சோர்ந்து போகும்வரை அவர்களை வெட்டி, மயங்கியவர்களை நாடி பார்த்து நறுக்கினான். மிஞ்சியவர்களைத் தரையில் கிளறிக் கொத்தினான்.

வெட்டுண்ட பச்சைக்கறிக் குவியலின் உஷ்ணம் உக்கிரமாய்த் தகித்தது. கொலையாட்டம் முடித்து ரத்தப்பிசுப்பில் நிற்கும் அவனை நோக்கி, எழுந்திரிக்க முடியாமல் மண்ணள்ளித் தூற்றினாள் முருகு. மிகக் கொஞ்சதூரமே மண் போனது. வாசல் தடுப்பை இறுக்கமாய் அடைத்த குற்றவுணர்வில் தனது புழுதிக்கரத்தைக் கடித்துக்கொண்டாள்.

மழை உரலுக்குள் இடிக்கப்பட்ட பட்டைமிளகாய்களாக, பிறைநிலவின் பார்வைக்குக் காட்சியளித்தது பழியடங்கிய குருதிப்பட்டி.

ஓவியம்: கணேஷ் பாரி

முருகின் பட்டியிலிருக்கும் மரை வாத்து, முதியமரத்தின் பட்டைகள் மாதிரி தோற்றமளிப்பாள். பலவித நஞ்சு உரங்களையும் செறித்துப் பீயாக வெளியேற்றுவாள். விஷப்பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிட்டு நீரின் ரேகைகளைக் கணிப்பாள். மாரடைப்பிலும் உயிர்த்தெழுந்து நீந்தியவள். வானிலை மாற்றங்களை நோட்டமிட்டுப் பட்டியை வழிநடத்தும் மூத்தியே, மரை. அவள் முட்டை ஈனுதலை நிறுத்திக்கொண்டாலும் யாருக்கும் கறிக்கு அனுப்பாமல் பாதுகாத்திருந்தாள் முருகு.

சவக்களத்தின் பேரமைதியில் முருகின் கண்ணீர் அனத்தல் லேசாகக் கேட்டது. பட்டியின் மூலையில் ‘குவாக்…’ என்ற பெருஞ்சத்தம் அதிர்ந்தது. சேவுகன் திரும்பிப் பார்த்தான். அடைகாக்கும் தொனியில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் மரை. இது மட்டும் எப்படி தப்பித்ததென நினைத்து அதை வித்தியாசமாகக் கொல்ல, அதாவது உடைகல்லைத் தூக்கி அதன் தலையில் போட்டு சாகடிக்கலாமென அருகில் போனான்.

தனது சக வாத்துகளின் உயிரற்ற திரேகங்களுக்குள் திடீரெனப் பேருருவாக எழுந்து நின்றாள் மரை. மின்கோபுரத்தின் உயரத்துக்கு வளர்ந்தாள்.

இப்படியான ராட்சத வாத்தைப் போதைப்பித்தில் நாம் கற்பனை செய்கிறோமாவென அச்சத்தில் மல்லாந்தான். தொல்மரத்தின் தூர் போன்று படர்ந்திருக்கும் மரையின் கால்களுக்கு மத்தியில் கிடந்தான். மூச்சுவிட்டு அசையும் அவளின் அடிவயிறு அவனை இன்னும் அச்சுறுத்தியது. படர்த்திய பிரம்மாண்ட றெக்கைகள் நிலவையும், பின்புற மலையையும் மறைத்தன. அரண்டதில் தெளிச்சியான முருகு, மரையை அண்ணாந்தபடி வாமடைக்குள் ஒண்டினாள்.

நடக்கப் போவதை வேடிக்கை பார்க்க மின்கோபுரங்கள் சம்மணமிட்டு உட்கார்ந்தன. தங்களின் மேல் வசிக்கும் கூட்டுப் பறவைகளை விளையாட்டுப் பொருட்களாக மடியில் ஏந்தியிருந்தன.

நிதானமாகத் தலை தாழ்த்தி சேவுகனைக் குறுகுறுத்தாள் மரை. அவன் கத்துவது அவளுக்கு ஊமை ஜாடையாகத் தெரிந்தது. தனது வாயால் அவனைப் புரட்டி, பசியில் மாட்டிய இரையாக அவனைக் கவ்வியெடுத்தாள். விடுபடத் துடித்தவனைப் பால்நண்டு மாதிரி ருசித்து உட்கொள்ள ஆரம்பித்தாள்.

மனிதர்கள் இல்லாத மாற்று உலகமான மரையின் வயிற்றுக்குள் சேவுகன் முழுதாக இறங்கியவுடன் மடியிலிருந்த கூடுகளை விண்ணோக்கி வீசி கைகள் தட்டின மின்கோபுரங்கள். கூட்டின் முட்டைகள் அந்தரத்தில் பறவைகளானது. தாய்ப் பறவைகள், சிசுப்பறவைகள் எல்லாம் முருகின் தொங்கு காதுகளுக்குள் புகுந்து புதுதிசை பார்த்துச் சென்றன. அவள் பச்சைக்குத்தலில் வாழ்ந்திருந்த சுருக்க மைனாக்களும் சடசடத்து அவைகளுடன் போனது.

உடம்பைச் சிலுப்பிய மரை முருகையே கவனித்தாள். அனிச்சையாகத் தலைக்கு மேலே கைகள் கூப்பி வணங்கினாள் முருகு.

செஞ்சிவப்பாய்க் குழைந்திருந்த கரம்பை நிலம், தாமதிக்காமல் மரையைச் சுற்றிக் கொழுத்த புழுக்களைக் கொப்பளித்துப் பொங்கின. அதைப் பார்ப்பதற்கு லட்ச தானியங்கள் ஒருசேர முளைவிடுவது போன்றிருந்தது. பூமியைப் பிளந்து வந்த புழுக்கள் சடல வாத்துகளைக் கட்டிச் சுருண்டன. புழு அணைப்புகள் முருகின் பாசத்தொடுதலைச் சவங்களுக்குக் கடத்தியது.

பூக்குழியின் கங்குகளாகப் பரசிக்கிடந்த உறுப்புகளைப் பொறுமையாகச் சுமந்து வந்து தங்களின் கழிவுகளால் வாத்துகளை ஒட்ட வைத்தன. எந்த இடத்தில் எந்த உறுப்பு வரவேண்டுமென ஆரம்பத்தில் குழம்பி, பின் தெளிவாகின. அழிமாந்திரமான முட்டைகளுக்குக் கொள்ளிக்குடத்தின் சில்லுகள் எடுத்து ஓடமைத்தன. 999 வாத்துகளுக்கு முழுவுருவமும் கிடைத்தவுடன் அவற்றின் இரைப்பெட்டிக்குள் புகுந்து தங்களைப் பொசுக்கிக்கொண்டன புழுக்கள்.

வாத்துகளுக்கு உயிர் மலர மலர, பட்டிக்குள் மட்டும் மாமழை இறங்க ஆரம்பித்தது.

சிறு வயதிலிருந்து இப்போது வரை முருகு நடந்த மேய்ச்சல் நிலங்களைக் கணக்கிட முடியாது. அந்த மேய்ச்சல் நில மழைகளின் ஒவ்வொரு துளிச் சேர்மானமே இந்த மாமழை. வாத்துகளின் நிறத்தில் பொழிந்தன மழைக்கற்றைகள். இத்தனைக் காலம் முருகு தேடித்தேடி அள்ளியூட்டிய கம்பு சோளம் குருணை அரிசி வரநெல் நத்தைகள் தவளைகள் பூச்சிப்பொட்டுகள் எல்லாம் மழையுடன் ஆலங்கட்டிகளாக விழுந்தன.

பட்டிக்குள் ஊருணியாக நீர் பல்கியவுடன் மழை நின்று, புண்ணாற்றும் அருமருந்தொன்றின் நறுமணம் கடுமையாகப் பரவியது.

முருகுக்கு ஊன்றுகம்பாகி, அவளுக்குத் தெம்பூட்டித் தூக்கிவிட்டது வாசனை.

அவளுக்கு அந்த மணம் பழக்கப்பட்டதுதான். வாசம் எப்படியிருக்கிறது என விளங்கிக்கொள்ளத் தெரியாது தவித்தாள். முருகின் சிறுவயது உடலில் தோன்றிய ஆழமான வெட்டுக்காயத்திற்கு, அப்பா இட்ட கைமருந்தின் நெடி அதுவென மட்டும் உறுதியானாள். சீலையை ஏற்றித் தொடையைப் பார்த்தாள். உருவத்தை இனங்காண முடியாத பாறை ஓவியம் போலிருந்த அந்தத் தழும்பிலிருந்து சுனைச்சுழியாகப் பொங்கியது வாசம்.

நிலவு முழுதாகக் கரைவதற்குள்ளாகவே அவ்விடத்திற்குச் சூரியன் வந்தது. வாசம் மட்டுப்பட்டது.

முருகு ஓடிவந்து பட்டிக்குள் பார்க்கையில் எல்லாமும் நேற்றின் மாதிரி அப்படியே இருந்தன. மரையும், மின்கோபுரங்களும் உட்பட. கண்களால் சரசரவென எண்ணிக்கை போட்டாள். சரியாக இருந்தார்கள். சேவுகன் மட்டும் இல்லை. வாத்துகள் துளி காயமின்றி, பொழிவோடு அவளைப் பார்த்து மகிழ்ச்சியில் விசிறினர். சூட்டுக்கம்பியில் அவர்களின் மூக்கிலிட்ட அடையாளக்குறிகள் அச்சுமாறாமல் இருந்தன. முட்டைகள் கூழாங்கற்களாகப் படுத்திருந்தன.

பட்டிக்கதவைப் பிடுங்கி வீசினாள்.

மரை வழிநடத்த எல்லாம் குதூகலமாக ஓசைபாடி, வரிசையாக வெளியேறி தூரத்தில் தண்ணீர் பாய்ந்த தரிசுக்கு விரைந்தனர். கூட்டத்தின் பின்னால் குஞ்சு வாத்து மாதிரி போனாள் முருகு. மரை நொண்டியபடி அங்கங்கே உட்கார்ந்து ஓடினாள். அவளைத் தூக்கிப் பார்த்தாள். வழக்கமான எடையைவிடக் கொஞ்சம் கூடுதலாகக் கனத்தாள். சூரிய வெளிச்சத்தில் மரையின் மிருதுவான சவ்வுக்கால்கள் முட்டைக்கோஸின் தளிரிலையை ஒத்திருந்தன. அதில் ஏறியிருந்த வெள்ளிமுள்ளைப் பிடுங்கிவிட்டுக் கீழே விட்டாள். வாத்துகள் நீரில் படகுகளாகி விளையாண்டார்கள். அலகுகளால் மண்ணைக் குடைந்து பசியாறி, முக்குளிப்பு போட்டனர்.

மரை மட்டும் வரப்பைவிட்டு இறங்காமல் சீக்கடித்த மாதிரி ரொம்ப நேரமாக யோசனையுடன் நின்றாள்.

சேவுகன் உண்மையிலேயே மரையின் வயிற்றுக்குள்தான் இருக்கிறானா? இரவு நடந்தது கனவா? நிஜமா? ஜாலமா? என மரையின் தோரணையில் எதிர் வரப்பில் முருகு நின்றிருந்தாள்.

அவள் எதிர்பார்க்காத தருணத்தில் ஈச்சமர வாய்க்காலை நோக்கிப் பறந்தாள் மரை. வாய்க்காலின் தலைமாட்டில் தரையிறங்கி, தன்னுடைய கொதி வயிற்றுக்குள்ளிருந்து குமட்டி வாய்க்காலுக்குள் ஏதோவொன்றைக் கக்கினாள். முருகு ஓடிவருவதற்குள் இது நடந்துவிட்டது. துப்பிய பொருள் சேவுகனா இல்லை வேறெதுமா என்று முருகு தவித்தாள். அக்கணமே மரைக்கு நல்ல செரிமானமான கழிசல் வெளியேறியது. திரும்பி வந்து தனது கூட்டத்துடன் இலகுவாய் ஆர்ப்பரித்தாள்.

நடந்தவற்றை யாரிடம் சொல்ல, எப்படிச் சொல்ல, சேவுகன் என்ன ஆனானென மண்டை நரம்புகள் வெடிக்கவிருந்த முருகு, விரலால் கழிசலைக் கிண்டினாள். எதுவும் தட்டுப்படவில்லை.

*

முருகுக்கும், சேவுகனுக்கும் பக்கத்து பக்கத்து வீடு. இருவரது வீட்டையும் பிரிப்பது பொதுச்சுவர். ரெண்டடி அகல மண்சுவர் அது. பருவமழைக்கு விழுந்த மண்சுவருக்கு கவர்மென்ட்டிலிருந்து நிவாரணத்தொகை வாங்குவதிலும், யாருக்குச் சுவர் சொந்தம் என்பதிலும் முருகுக்கும், சேவுகனுக்கும் பகையானது. மதில் பஞ்சாயத்தில் யார் ஜெயிப்பதென்று கள்ளத்தனமாய்க் காத்திருந்தனர் ஊரார்.

தன்னுடைய பழுப்பேறிய பத்திரங்களோடு அதிகாரிகளிடம் முறையிட்டாள். சர்வேயர் வந்து நியாயம் சொல்வது வரை மாதக்கணக்கில் சுவர் இடிந்த நிலையிலேயே கிடந்தது. அதற்கிடையில் சேவுகன் வகையறா கொல்லாத குறையாக முருகின் மீது எல்லா வகையிலும் தாட்டியம் செய்தனர். அவள் அனைத்துக்கும் பொறுமை காத்தாள்.

முருகு இடத்தில்தான் சுவர் வருகிறதென நில அளவையில் நேற்று உறுதியானது.

*

மீன் பிடித்தலில் தங்களுடன் சேர்த்துக்கொள்ளாமல் சேவுகன் மகனை சேக்காளிகள் துரத்திவிட்டனர். அதனால், ஈச்சமர வாய்க்காலின் கால்மாட்டைத் தேர்வுசெய்து அங்கு பானைப்பரி பதித்திருந்தான். வாய்க்காலின் தலைமாட்டுத் தூண்டில்களுக்கும், மற்ற பானைப்பரிகளுக்கும் போக எஞ்சுவதுதான் அவனது பானைக்கு வரும்.

நாள்கணக்கில் வெறும் தண்ணீர்ப்பாம்புகள் மட்டும் விழும் தனது பானைப்பரியின் மீது வெறுப்பில் இருந்தான். இன்று, ஒரு மீனானாலும் முரட்டுத் தேளி பானையில் மாட்டியது. நீண்ட மீசைமயிர்களுடன் சிம்பிய தேளியை எடுத்துக்கொண்டு ஆசையாய் வீட்டுக்குப் போனான்.

‘ஒன்னய என்ன பண்ண சொன்னா, நீயென்னடா பண்ணிட்டு வந்துருக்க. நேத்து போன ஒங்கொப்பேன் இன்னும் வீடு வரல. தேடி கூட்டியாடான்னா சொனமனயா திங்க மீனப் புடிச்சுட்டு வந்துருக்கியா நீயி’ என்று அம்மா திட்டினாள்.

‘சின்ன நொட்டையா அந்தாளு. அதலாம் வந்துருவாரு. வந்து மொத மீனப்பாரு’

‘இத வாய்க்காவுல விட்டுட்டு ஒங்கொப்பன பார்த்துட்டு வாறீயா, இல்ல மீனப் புடுங்கி ரேன்சுல போடவாடா’ அம்மா கோபத்துடன் அடிக்க வந்தாள்.

‘ச்சரிம்மா…ச்சரிம்மா..

போய்த்தொலைக்கிறேன்’

தனது வேட்டை துச்சப்படுத்தப்பட்டதில் அவமானப்பட்டு மீனுடன் வீட்டை விட்டு வெளியேறினான்.

மகனின் சட்டையில் கட்டப்பட்டிருந்த சேவுகன், அவனிடம் சிக்கியதிலிருந்து அசராமல் துள்ளிக் கொண்டேயிருந்தான். வாய்க்காலுக்குத் திரும்பும் மகன், தன்னை யாரெனக் கண்டுகொள்ளாத கடுப்பில் அவனது வெறும் மாரில் வாலால் பழுக்க அடித்தான். சாட்டையாகச் சுளீரென அடி விழுந்ததில் மாரில் வரித்தடுப்பு சிவந்தது. எரிச்சலான மகன், சேவுகனைத் தலைக்கு மேலே சுற்றித் தரையில் பலமாய் அடித்தான்.

மரையின் செரிமானக் கழிசல் சேவுகனின் அரிவாள்.


ஓவியம்: கணேஷ் பாரி

இதழ் 13 பிற படைப்புகள்

முத்துராசா குமார் and கணேஷ் பாரி

சொந்த ஊர்: மதுரை மாவட்டம், சோழவந்தானுக்கு அருகேயுள்ள தென்கரை கிராமம். வசிப்பிடம்: சென்னை சுயாதீனப் பத்திரிகையாளராக இயங்கி வருகிறேன். அச்சு மற்றும் இணைய இலக்கிய இதழ்களில் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறேன். 'பிடிமண்' என்ற பெயரில் எனது முதல் கவிதைத் தொகுப்பு (2019 செப்) வெளிவந்துள்ளது. வெளியீடு: சால்ட் - தன்னறம் வலைப்பூ தளம்: https://muthurasa.blogspot.com/

Share
Published by
முத்துராசா குமார் and கணேஷ் பாரி

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago