சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஏன், யாராவது என்னிடம் சொல்லியிருந்தால் நானுமே நம்பியிருக்க மாட்டேன். ஆனால், நம்பக்கூடியது மட்டும்தான் வாழ்க்கையில் நடக்க வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இருக்கிறதா என்ன!
பார்க்கப்போனால், கிருஷ்ணனை நான் முதன்முதலாகச் சந்தித்தபோது, நம்பிக்கை – நம்பிக்கையின்மை என்ற இரண்டு எல்லைகளை அறியாத பிராயத்தில் இருந்தேன். ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம். நல்லது – கெட்டது, நியாயம் – அநியாயம் என்பதெல்லாம்கூடத் தெரியாத வயது. வேண்டியது – வேண்டாதது மட்டும் தெரியும். வேண்டியதின்மேல் ஆசையும், வேண்டாதது பற்றி அச்சமும் இருந்தது என்பதெல்லாம் இப்போது திரும்பிப்பார்த்தால் தெரிகிற சங்கதிகள்.
நான் சந்தித்தது நிஜமான கிருஷ்ணனை, அதிலும் கோகுலாஷ்டமி தினத்திலேயே என்றால் இவ்வளவு பீடிகைக்குக் காரணம் புரிந்துவிடும். காலில் கொலுசு, தலையில் சன்னமான கிரீடம், அதில் செருகிய மயிற்பீலி, கைகளில் கங்கணம், இரண்டு புஜங்களிலும் வங்கி என காலண்டரில் இருந்து இறங்கி வந்தவன் மாதிரியே இருந்தான். குஞ்சம் வைத்த புல்லாங்குழல் வேறு கையில் வைத்திருந்தான். சுவரில் தொங்கும் பழைய காலண்டரையும் அவனையும் மாறிமாறிப் பார்த்தேன். படத்தில்போலவே அழகாகச் சிரித்தான். கொழுகொழுவென்று இருந்தான். ஒரேயொரு வித்தியாசம், காலண்டரில் நீல நிறமாய் இருந்தவன், நேரில் நல்ல கறுப்பு.
நான் என் அம்மா மாதிரி. நல்ல சிவப்பு நிறம். மற்றபடி, கண்ணாடியில் பார்க்கும்போது தெரியும் கண்ணன் மாதிரியே இருந்தான் அவன். நான் கைக்குழந்தையாய் இருக்கும்போது, அதாவது, அப்பா முழுநேரக் குடிகாரராய் ஆவதற்கு முன்பு, என்னைத் தன் கொடுங்கையில் அமரவைத்துக் காலண்டர் அருகில் தூக்கி உயர்த்துவாராம் – உப்பிய இரண்டு முகங்களும், அவற்றில் மலர்ந்த இரண்டு சிரிப்புகளும் ஒரேமாதிரி இருப்பதைப் பெருமையோடு காட்டுவதற்காக. எனக்குக் கண்ணன் என்று பெயர் வைத்ததே அதனால்தான்… கிருஷ்ணன் குரலும் என்னுடையது மாதிரியே இருந்தது.
என்னைக் கைபிடித்து சமையல்கட்டுக்குள் அழைத்துப்போனான். இருள் மண்டிய இடம் அது. ஜன்னலே இல்லாத சிற்றறை. காலங்காலமாய்க் கரி அப்பி மண்டிய சுவர்கள். குண்டுபல்பைப் போட்டவுடன் பாயும் மங்கிய ஒளியில் இருட்டு இன்னும் ஜாஸ்தியாகிவிடும். ஆனால், அந்தப் பயல் நுழைந்ததும் பட்டப்பகல் மாதிரி, வெட்டவெளி மாதிரி, வெளிச்சமடைந்தது.
ஒரு எவர்சில்வர் சம்புடம் நிறைய வெல்லச் சீடை, மற்றொன்றில் உப்புச்சீடை, மூன்றாவதில் தேன்குழல் என்று செய்து வைத்துவிட்டுப் பெரியம்மா வீட்டுக்குப் போயிருந்தாள் அம்மா. பெரியம்மா உடம்பு முடியாதவள். அம்மாவின் பிறந்தவீட்டு உறவுகளில் தொடர்பு மிச்சமிருக்கும் ஒரே ஜீவன். அங்கே போய்ப் பட்சண வகையறா செய்து தருவதற்காகப் போயிருந்தாள். இங்கிருந்தே செய்து கொண்டுபோகலாம். இங்கே சமைத்தவற்றுக்கு அங்கே அனுமதி கிடையாது.
சமையல் கட்டுக்குள், சுட்ட எண்ணெயின் கமறல் மணம் இன்னும் மிச்சமிருந்தது. லேசாகப் புகையும் மண்டிய மாதிரிப் பட்டது. அங்கங்கே சிமெண்ட் பெயர்ந்த தரை. நான் மட்டும் பிறந்திருக்காவிட்டால், அவ்வளவு பட்சணம் செய்து வைத்திருக்க மாட்டாள் அம்மா என்றுதான் நினைக்கிறேன். அல்லது, தன் பழைய குடும்பத்துடைய வழக்கத்தின் மீது, தன் பழைய அடையாளத்தின் மீது ஆசையோ.
இந்தப் பயல் கூசாமல் ஒவ்வொரு சம்புடமாய்த் திறந்து பார்க்கிறான். ’தப்புக் காரியமாச்சே, நைவேத்தியம் ஆனபிறகு அம்மாவே கொடுப்பாளே’ என்று லேசாக எனக்குள் அச்சம் படர்கிறது. அவசரமாக வெளியேறி, வெறுமனே சாத்தியிருக்கும் அறைக் கதவை ஓசையெழாமல் திறந்து பார்க்கிறேன். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள் பாட்டி. கதவு திறக்கக் காத்திருந்த மாதிரி குறட்டைச் சத்தம் வெளியே பாய்கிறது. கூடவே, அந்த அறையில் நிரந்தரமாக மண்டியிருக்கும் பூண்டு மணமும்.
மறுபடியும் சமையலறைக்கு வந்தால், வெல்லச்சீடைச் சம்புடத்தைக் கவட்டில் வைத்துக்கொண்டு சட்டடியாய் உட்கார்ந்திருந்தான். எனக்கு ஒன்று எடுத்து நீட்டினான்.
தப்பு தப்பு. நேவித்தியம் ஆனதுக்கு அப்புறம்தான் திங்கணும்.
என்றேன். ஆனால், முழுமனசோடு சொல்லவில்லை என்று எனக்கே தெரிந்தது.
அட, வாங்கிக்கடா. எனக்குத்தானே நேவித்தியம் பண்ணுவா. அதான் நான் ஒண்ணு தின்னுட்டனே!
புன்னகைத்தான். நியாயம் என்று பட்டது. தின்ன ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஐம்பது சீடைகள். அவக்அவக்கென்று தின்றேன். ஒரு கட்டத்தில் ருசி மரத்துவிட்டது. ஆனால், நிறுத்த முடியவில்லை. மொத்தச் சம்புடமும் காலியான பிறகு, பழையமாதிரியே இறுக்க மூடி, அதே இடத்தில் வைத்துவிட்டு, வெளியே வரும்போதுதான் கவனித்தேன். கிருஷ்ணனைக் காணோம். எப்போது போனானோ.
பாட்டியின் அறைக்குள்ளிருந்து குறட்டை இன்னும் கசிந்துகொண்டிருந்தது. தெருவில் சேக்காளிகளோடு விளையாடப் போய்விட்டேன். கொஞ்சநேரத்தில் அம்மா என்னைத் தாண்டிப் போனாள். போகும்போது என் தலையில் செல்லமாகத் தட்டிவிட்டுப் போனாள்.
திரும்பிவந்தபோது, வீட்டின் சூழ்நிலையில் கடும் இறுக்கம் சேர்ந்திருந்தது; இன்றைய வயதில் அப்படித்தான் தோன்றுகிறது… அம்மா பிரமை பிடித்த மாதிரி அமர்ந்திருந்தாள். பாட்டி தன் கட்டிலில் உட்கார்ந்து நேர்ப்பார்வையாக அவளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஏண்டா கண்ணா, வெல்லச்சீடையெ எடுத்தியா?
அது பச்செப்புள்ள. அதெப்போயிக் கேக்குறியே, கூதறையாட்டம்? அறிவிருக்காடி ஒனக்கு?
இருங்கோ. கேக்கத்தானே செய்யறேன், அதுகூடக் குத்தமா?
என்னாத்தேக் கேக்குறேன்… க்குறேன்னுக்கிட்டு.
என்று உறுமினாள் பாட்டி. இது ஒரு பெரிய குழப்பம் இவர்களோடு. அம்மா ‘பாட்டி’ என்று கூப்பிடச் சொல்வாள். கிழவியானால், ‘அவ்வா’ என்று கூப்பிடச் சொல்லி அடிப்பாள்… பாட்டியின் கொச்சைப் பேச்சுக்கும் கெட்டவார்த்தைகளுக்கும், அப்பாவின் பெல்ட் அடிக்கும் ஈடுகொடுக்க முடியாமல் திணறுவாள் அம்மா. பாட்டியின் சொற்கள் மீது ஆர்வமும் கூச்சமும் எனக்குள் போட்டிபோடும்.
‘இல்லை’யென்று தலையாட்டினேன். அம்மாவின் கண்களில் பிரமிப்பு அதிகமானது.
அதானெ சொல்லுறன். நா இங்கிணயேதானெ இருந்தன். ஒரு நிமுசம் கண்ணு மூடலயே. நீ வர்றப்பத்தான் லேசா அசந்தன். கூப்பாடு போட்டு எளுப்பீட்ட… நீ போம்போது வெளாடப் போன புள்ளெ. இந்தா இப்பத்தான் உள்ளயே வருது.
எந்த ஒரு விஷயத்திலும், பாட்டிக்கு என்னை ஆதரிப்பது இல்லை – அம்மாவை மறுத்துச் சொல்வதுதான் நோக்கம் என்பது அந்த வயதிலேயே எனக்குப் புரிய ஆரம்பித்திருந்தது. பாட்டி உறுதியாய்த் தொடர்ந்தாள்:
அப்பிடியே எடுத்துருந்தாலும், எதோ ஒண்ணு ரெண்டு திங்கிம். டப்பாவையேவா காலிசெய்யும் புள்ள? எங்குட்டுருந்துதான் இளுத்துட்டு வந்தானோ, இப்பிடி ஒரு கிறுக்கச்சியெ.
எப்போதாவது ஒரு தடவை,
ஏன் இப்பிடில்லாம் சொல்றேள்? ரெண்டுபேரும் ஆசெப்பட்டுத்தானே கல்யாணம் செஞ்சிண்டோம்…
என்று அரற்றுவாள் அம்மா. சமீபகாலமாக அது நின்றுபோயிருந்தது. முன்பெல்லாம், நிரக்க பெல்ட் அடி வாங்கிவிட்டு, என்னை அணைத்தபடி படுத்திருக்கும்போது,
என் தலையெழுத்து இப்பிடி ஆயிடுத்தேடி அம்மா… என்னெப் பெத்தவளே…
என்று புலம்புவாள். அதுவும் நின்றுபோயிருந்தது. மறந்துபோனது நினைவுவந்தவள் மாதிரி, காலிச் சம்புடத்தை இன்னொரு தடவை திறந்து பார்த்தாள். அய்யோ, அந்தக் கண்களில்தான் என்னவொரு பீதி! அந்தச் சமயத்திலாவது நான் நடந்ததைச் சொல்லியிருக்கலாம். அதுதான் ஆரம்பத்திலேயே சொன்னேனே, எனக்கே அந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சம் நம்பமுடியாமல்தான் இருந்தது. தவிர, இனிமேல் சொன்னால் சரிவராது என்றும் ஏனோ தோன்றியது…
ஆனால், அந்தக் கோகுலாஷ்டமியின் பின்விளைவாக இரண்டு சமாசாரங்கள் நடந்தன. மறுநாள் எனக்கு வயிற்றோட்டம் ஆரம்பித்து, இரண்டு நாட்கள் ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடக்க வேண்டியதானது; அப்போதுகூட, யாருக்குமே என்மீது சந்தேகம் வரவில்லை என்பதுதான், இன்றுவரை என்னோடு இருக்கும் துணிச்சலுக்கு விதையாக அமைந்திருக்க வேண்டும்.
இரண்டாவது, இன்னும் சங்கடமான சங்கதி. இருட்டைப் பார்த்து அஞ்சுகிறவளானாள் அம்மா. சமையல்கட்டுக்குள் நுழையவே நடுங்கினாள். அடித்தும் உதைத்தும் அவளை மீட்டெடுக்க முடியாத அப்பா, வேறு வழியில்லாமல் வீடு மாற்ற வேண்டி வந்தது. இரண்டு தெரு தள்ளி, மூன்றாவது மாடியில் இருந்த ஓரறைப் படுக்கையறைக் குடியிருப்பு. கீழ் மத்தியதர வகுப்புக்கு லிஃப்ட் வசதியெல்லாம் கிடைக்குமா. இடுப்பொடிய தண்ணீர்க் குடத்தைத் தூக்கிக்கொண்டு திரும்பத்திரும்பப் படியேறும் அம்மாவைப் பார்க்கும்போது மனத்தைப் பிசையும் எனக்கு. கருவாட்டு நாற்றமும் மீன் மணமும் போட்டிபோடும் தெரு. அம்மா அடிக்கடி ஓங்கரித்து வாந்தியெடுப்பாள். ’சரி, அவள் தலையெழுத்து’ என்று சமாதானப்பட்டுக்கொள்வேன்.
அம்மாவைக் காப்பாற்ற வேண்டிக் குறுக்கே போனவன், அப்பா உதைத்த வேகத்தில் மாடிப்படியில் உருண்டேன். இடது முழங்கால் மூட்டு பிசகிவிட்டது. அரசாங்க ஆஸ்பத்திரியில் மாவுக் கட்டு போட்டு, நடக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்துவிட்டார்கள்.
அதற்காக, ப்ளஸ் டூ படிக்கிற பையன் சாயங்காலத்தை வீட்டில் கழிக்க முடியுமா? அம்மா சொல்லச் சொல்லக் கேட்காமல், சுரேஷின் சைக்கிளில் உட்கார்ந்து ரயில்வே கிரவுண்டுக்குப் போனேன். சுரேஷ் படுஜாக்கிரதையாக ஓட்டிச் சென்றான், பாவம். என்னைத் தோள்தாங்கி நடத்தி, சிமெண்ட் பெஞ்ச்சில் உட்கார வைத்துவிட்டு விளையாடப் போனான். பேசாமல் ஏதாவது பார்க்குக்குப் போயிருக்கலாம். இங்கே வந்ததால் என்னென்னவெல்லாம் நடந்துவிட்டது…
ரயில்வே கிரவுண்டின் சிறப்புகள் அலாதியானவை. ஒரு ஊர் அளவு விரிந்த, எல்லாப் புறமும் திறந்திருக்கிற திடல். குறைந்தது பத்துப் பன்னிரெண்டு குழுக்கள் கிரிக்கெட் விளையாடலாம். இதுபோக, மாலை நடை வரும் கிழவர்கள், வீட்டுக்குத் தெரியாமல் கொஞ்சநேரம் சந்தித்துப் பிரியும் ஜோடிகள், கிட்டிப்புள், பம்பரம் என்று உதிரி விளையாட்டுகள் ஆடுகிற பையன்கள், உடற்பயிற்சி செய்யும் அண்ணன்கள், சைக்கிள் பழகும் சிறுவர்கள் என்று, நம்மோடு வந்தவர் யாரென்றே அடையாளம் மறக்கும் அளவு கூட்டம் இருக்கும்.
எங்கிருந்தோ பறந்துவந்த கிரிக்கெட் பந்து மிகச் சரியாக என் காலடியில் நின்றது. விலை உயர்ந்த பந்து. புத்தம் புதியது. குனிந்து எடுத்து, அது வந்த திசையிலேயே எறியும் உத்தேசத்தோடு நிமிர்ந்தவன், பெஞ்ச்சில் என் அருகே அமர்ந்திருக்கும் கிருஷ்ணனைக் கண்டேன். என்னைப்போலவே அரை ட்ரவுசர் அணிந்திருந்தான். பூனைமயிர் மினுங்கும் மேலுதடு. வாஞ்சையாய்ச் சிரித்தவன், அதே தொனியில் சொன்னான்:
சும்மா ஒளிச்சு வச்சுக்கடா. அதுவாத்தானே ஒங்கிட்டெ வந்துருக்கு. நீயா போயி எடுத்தே?
சீச்சி. அது தப்பில்லே?
அடப் போடா கிறுக்கா. கிரிக்கெட் வெளையாட்டுலே பந்து தொலையிறது
என்ன அபூர்வமா! நீயே எத்தனெ தொலைச்சிருக்கே? எவனாவது கொண்ணாந்து குடுத்துருக்கானா?
இந்தச் சமயத்தில் தரையைப் பார்த்தபடியே ஒரு சிறுவன் வந்தான். என் வயதுதான் இருக்கும். ஆனால்,
அண்ணா, இந்தப் பக்கம் பந்து வந்துச்சாண்ணா?
என்று கேட்டான். ‘அண்ணா’ என்று அழைக்காவிட்டால் ஒருவேளை கொடுத்திருப்பேனோ என்னவோ. உடனடியாய்ப் பந்தை ஒளிக்கத் தோன்றியது.
இல்ல்லெ.
என்று அழுத்தமாய்ச் சொல்லி, வெல்லச்சீடைக்கு ஆட்டியதுபோலவே தலையாட்டினேன். அவனும் போய்விட்டான். நம் ஆள் சொல்கிறான்:
பாத்தியா. இதுக்குப் போயிப் பெருசா அலட்டிக்கிட்டியே.
அநாவசியமாக நிறைய நேரம் சிரித்தான். உள்ளூர எனக்கும் சிரிப்புப் பொங்கியது. பந்தைத் தேடி வந்தவன் பலவீனமானவன் என்று நான் கணித்தது சரிதான்…
ஆனால், அத்தனையையும் யாரோ பார்த்திருக்கிறார்கள் என்பது இருவருக்குமே தெரியாமல் போயிற்று…
கண்ணம் பய வூடு இதுதான?
என்று குரல் கேட்டது – மறுநாள் காலை பத்துமணி சுமாருக்கு. கிட்டத்தட்ட என் பாட்டியின் குரல் போலவே இருந்தது. அம்மா எனக்கு இட்லி ஊட்டிக்கொண்டிருந்தாள். அடிபட்டிருந்தது காலில்தான்; என்னுடைய நடவடிக்கைகள் எதுவுமே குன்றிவிடவில்லை; என்றாலும், தாய்ப்பாசம் லேசுப்பட்டதா.
ஞாயிற்றுக்கிழமை என்பதால், தூக்கம் கலைந்தும் எழ மனசில்லாமல் புரண்டு கொண்டிருந்தார் அப்பா. விசையாய் விடும் மூச்சில், முந்தைய இரவின் போதை மிச்சமிருந்து வீடு முழுக்க நாறியது… பாட்டி வெளியில் போனாள். என்னிடம் விசாரிக்காமலே,
அப்பிடியெல்லாம் எங்க புள்ளெ எடுத்துட்டு வராது.
என்று கறாராய்ச் சொன்னாள். அந்த இடத்தில் முடிந்திருக்கவேண்டிய கதை. வந்த கிழவி இந்தக் கிழவிக்குச் சளைத்தவளில்லை. வரும்போதே எங்கள் பூர்விகத்தை அக்கம்பக்கத்தில் விசாரித்திருக்க வேண்டும். மாடியிறங்கத் திரும்பும்போது, சற்று உரத்தே சொன்னாள்:
பலவட்டறெக் குடும்பந்தானே. களவாங்க யோசிக்குமா?
என்னாடி சொன்னே? …மவளே. ஒங்க வூடு மாரித் தேவிடியாக்குடின்னு நெனச்சியாக்கும்?
யாரென்றே தெரியாத பெண்பிள்ளையின் பூர்வோத்திரம் என் பாட்டியின் வாயிலிருந்து எச்சில்போலத் தெறித்து நாற ஆரம்பித்தது. அப்பப்பா, எத்தனை அபூர்வமான சொற்கள். மறைவுறுப்புகளின் எத்தனை வகைமாதிரிகள். ஆண்பெண் சேர்க்கையின் எத்தனை விதங்கள். எத்தனைமுறை காறித் துப்பினாள்! இறங்கிப் போன கிழவி, அரைமணி நேரத்தில் படையுடன் திரும்பி வந்தாள். கேவலம், ஒரு பந்தை முன்னிட்டு இரண்டு தெருக்கள் மோதிக்கொண்டன… இப்போது புரிகிறது – பந்து வெறும் சாக்குதான். இரண்டும் வெவ்வேறு சாதிகள் பெரும்பான்மையாய் வசிக்கும் தெருக்கள்.
அப்பாவிடம் பெல்ட் மட்டும்தான் இருக்கிறது என்று நினைத்திருந்தேன். அவர் சூரிக்கத்தியுடன் பாய்ந்தபோது, மொத்தக் கூட்டமும் மிரண்டுபோனது. அவரைத் தடுத்து நிறுத்த, பத்துப்பேர் வரை போராட வேண்டியதானது.
இத்தனை களேபரத்திலும் யாருமே என் அலமாரிக் கதவைத் திறந்து பார்க்கவில்லை என்பது ஒரு ஆறுதல். ஆனால், இன்னொரு வயிற்றெரிச்சலையும் சொல்ல வேண்டும்; மறுநாள் அதிகாலையில் மாரடைப்பால் இறந்துவிட்டாள் என் பாட்டி. கிழவி ஒருநாள் முன்னதாக இறந்திருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும்…
அதன் பிறகு, கிருஷ்ணனை நிதானமாகச் சந்திக்கக் கிடைக்கவில்லை. நடைமுறை வாழ்க்கையைச் சமாளிக்க, என்னிடம் இயல்பாக இருந்த கள்ளத்தனங்களே போதும் என்று நினைத்துவிட்டானோ என்னவோ. அப்படிச் சமாளித்து, வெற்றிபெற்றதாக நான் நம்பும் தருணங்களில், மின்னல்போலத் தோன்றி மறைவான். பிரமை என்று நினைத்துக்கொள்வேன். உடனடியாக, சீதோஷ்ணம் மாறி, வெற்றி என்று நான் நினைத்தது அவமானகரமாகத் திசை திரும்பும்.
ஒருவிதத்தில், அவனைச் சந்திக்காதது நல்லது என்றுகூடத் தோன்றும். வெறுமனே பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பங்களில்கூட, கிட்டத்தட்ட என்னைத் தெருவில் இழுத்துவிட்டிருக்கிறான்; நானே முனைந்து மீள வேண்டியதாகிவிடும். அநேக சம்பவங்கள் நினைவில் இல்லை என்றாலும், ஒவ்வொரு முறையும் பெரிய பிரச்சினையாகி மூச்சு திணறிப்போகும். ஏதோவொரு விதமாகத் தப்பித்துவிடுவேன்; என்றாலும், தப்பித்து மீளும்வரை இருக்கும் மன உளைச்சல் இருக்கிறதே, தாளவே முடியாது.
இதனாலேயே, வந்து போகிறவன் கிருஷ்ணன்தானா, அந்த வேடத்தில் வரும் துர்தேவதையா என்றுகூடச் சிலசமயம் குழம்பியிருக்கிறேன்.
எனக்குத்தான் குழப்பம். சக ஊழியர் சாலமன் அடிக்கடி, ’சாத்தான் மாறுவேடத்தில் வந்து மனிதப் பிறவிகளை ஏமாற்றுவான்’ என்பார். மிகத் தெளிவாகச் சொல்வார்: ’உங்கள் கடவுள்கள் எல்லாம் உங்களைக் காப்பதற்காக ஆயுதம் வைத்திருக்கவில்லை. மிகச் சரியான நேரத்தில் உங்கள்மேல் அவற்றைப் பிரயோகிப்பார்கள். அதற்கு முன்னால் உங்களை நீங்களே காத்துக்கொள்ளுங்கள்…’ இவ்வளவு நல்ல தமிழில் பேசமாட்டார் – எனக்குத்தான் அவருடைய பேச்சுத் தமிழை நகலெடுக்கத் தெரியவில்லை.
ஆனால், இதற்கான பதிலை, வேறொரு பேச்சுமுறையில் வழங்குவார் ராமானுஜம். ’தெய்வசித்தப்படி நடக்கும் ஏதோவொரு காரியத்தை, மனுஷ்யர்கள் முனைந்து தடுத்துவிட முடியுமா’ என்பார் அவர். நெற்றி நிறையத் திருமண்ணுடன் அவர் பக்கத்து இருக்கையில் இருப்பதே என்னைக் காப்பாற்றுவதற்காகத்தான் என்று தோன்றும். மதிய உணவின்போது அவர்கள் இருவரும் வாதம் செய்வதைப் பார்த்தால், இனி ஒருவருக்கொருவர் முகமுழியே இல்லாமல் போய்விடும் என்று நினைப்பேன். ஆனால், நாலுமணி சுமாருக்கு இரண்டு பேரும் சேர்ந்து டீ குடிக்கப் போவார்கள்.
ஒரு பலவீனமான நாளில் ராமானுஜம் மிகமுக்கியமான ஆறுதலை எனக்கு வழங்கினார்: ’கடவுள் தீர்மானித்துத்தான் ஒருத்தரை இன்னாராகப் பிறக்க வைக்கிறார். இறப்புவரை அந்த நபரின் இருப்புக்குக் கடவுள்தான் பொறுப்பு. பகவானின் உத்தேசத்தை மாற்றியமைக்க யாருக்கும் உரிமை கிடையாது; யாராலும் முடியவும் முடியாது…’ முழுக்கச் சரி என்று பட்டது.
ஞாயித்துக்கெழமெ நம்ப வீட்டுக்கு வாங்களேன். இன்னும் நெறையப் பேசலாம்.
என்று ராமானுஜம் அழைத்தபோது, உடனடியாய்ச் சம்மதித்தேன்.
அழைத்தது அவரல்ல; ’நல்லது பொல்லது அத்தனையும் நான் செய்வதாக்கும்’ என்று அறிவித்த மாயக்காரன் என்பது அந்த ஞாயிற்றுக்கிழமை மதியத்தில், ராமானுஜம் வீட்டிலிருந்து திரும்புவதற்காகக் கிளம்பியபோது உணரக் கிடைத்தது.
எனக்குக் கல்யாணம் ஆனதுவும் இரண்டு குழந்தைகள் பிறந்து இருவரும் உயர்நிலைப் பள்ளியை எட்டிவிட்டதுவும் ஊருக்கே தெரியும். ஆனால், பவானியைக் கைபிடிப்பதற்கு முன்னால் பிருந்தாவிடம் சொக்கிக் கிடந்தது எனக்கு மட்டும்தான் தெரியும். பிருந்தாவுக்குத் தெரியவந்த அதே கணத்தில் கருகி உதிர்ந்த பூ அது. அவளுடைய அருகாமை தந்த உத்வேகம்தான் நான் பல்கலைக்கழக அளவில் ராங்க் வாங்கியதற்குக் காரணம்.
அதன் காரணமாகவே அவளுடைய அப்பா என்னை மருமகனாக்கிக்கொள்வார் என்று நம்பியே அவளிடம் என் காதலைச் சொன்னேன். அடிவாங்கிய மாதிரிச் சுண்டியது அவள் முகம். மளுக்கென்று நிரம்பிய கண்களுடன் அவள் சொன்னது என்னை முழுசாக நொறுக்கிவிட்டது:
இப்பிடி வெகுளியா இருக்கியே கண்ணா. இதுக்காகவே நான் உன்கூட வாழ்நாள் முழுக்க இருந்துருவேன். ஆனா…
என்றாள். நான் அதிர்ந்துபோய் அவளை வெறித்துப் பார்த்தேன். அடுத்த கணமே, கண்ணுக்கொன்றாக இரண்டு முத்துக்கள் உருண்டு இறங்கின.
…வேணாம் விடு. இந்த ஆசையெ இத்தோட விட்டுரு.
காரணம் தெரிந்துகொள்ளாமல் விட்டுவிட முடியுமா. இன்னும் எவ்வளவு கால வாழ்க்கை மிச்சமிருக்கிறது. இப்படியொரு உறுத்தலோடு எப்படி வாழ்ந்து தீர்ப்பது. அவளிடம் மன்றாடினேன். அவளும், எவ்வளவு நேரம்தான் தொடர்ந்து மறுக்க முடியும். கடைசியில் கொட்டினாள்:
எங்கப்பா ஒனக்கு என்ன பேரு வச்சிருக்காரு தெரியுமா? கேட்டா, அவரு மூஞ்சியிலெயே முளிக்க மாட்டே.
சொல்லு. சும்மாச் சொல்லு பிருந்தா. ப்ளீஸ்…
‘களுதெப்புலி’ ம்பாரு.
என் மூஞ்சியில் செருப்பாலடித்த மாதிரி இருந்தது. என் தாயும் தகப்பனும் வெவ்வேறு சாதி என்பதற்காக அப்படிச் சொல்கிறாராம்; விளக்கிவேறு தொலைத்தாள்… அவர்கள் வீட்டுக்குப் போகும்போதெல்லாம், முகம் மலர்ந்து,
வாப்பா. வாப்பா.
என்று பிரியமாய் வரவேற்று,
ப்ருந்தூ, உன் ஃப்ரண்ட் வந்திருக்காம் பாரு. என்ன கண்ணா, அப்பாம்மால்லாம் சௌக்யமா இருக்காளா?
என்று கேட்கும் மனிதரா இப்படி. எனக்கு ஆறவேயில்லை. பிருந்தாவிடமே கேட்டேன். தன்னியல்பாகப் பதிலளித்தாள்:
நன்னாப் படிக்கற பையன். சரஸ்வதி கடாட்சம் இருக்கு. என்ன பிரயோசனம், சேத்துலேன்னா பொறந்திருக்கான், பாவம்…
என்று அடிக்கடி குறிப்பிடுவாராம்.
அவள் சொன்னதுக்கப்புறம்தான் இன்னொரு விஷயம் உறைத்தது: அவர்கள் எனக்கு எவர்சில்வர் தட்டில் எதுவுமே கொடுத்ததில்லை. பாக்குமட்டையோ, காகிதத் தட்டோதான். பீங்கான் கோப்பையில்தான் காஃபி தருவார்கள். ரோஜாப்பூ அச்சிட்ட, கைப்பிடிக்கருகில் சில்லு பெயர்ந்த, அதே வெள்ளைக் கோப்பைதான் எப்போதும். சட்டென்று அந்தக் குடும்பத்திடமிருந்து ஒரு விலகலை உணர்ந்தேன். ஆனால், ரொம்பகாலம் அதைப் பேண முடியவில்லை…
பெங்களூரில் ஒரு வங்கி ஊழியருக்கு வாழ்க்கைப்பட்டாள் பிருந்தா. என் திருமணத்துக்குக் கணவனோடு வந்து வாழ்த்தினாள். பெற்றோரும் வந்தார்கள். பரிசுப் பார்சலைக் கொடுத்து, புகைப்படத்துக்கு என்னோடு நின்றார்கள். கடனுக்குப் புன்னகைத்து வைத்தேன்.
ஒரு வருடம் போலக் கழிந்திருக்கும். யதேச்சையாக, பார்த்தசாரதி கோவில் வாசலில் பிருந்தாவின் அப்பாவைப் பார்க்க நேர்ந்தது. ஆள் சரிபாதியாய் இளைத்திருந்தார். மனைவியின் தோளைப் பிடித்துக்கொண்டு சோர்வாக நடந்துவந்தார். என்னைப் பார்த்தவுடன் அவருடைய கண்கள் மினுங்கிய விதம் எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டார்.
என்ன கண்ணா, வீட்டுப் பக்கம் வரவே மாட்டேங்கறே?
வரணும் அங்க்கிள். எங்கே, ஆஃபீஸ் போறதுக்கும் வரதுக்குமே சரியா இருக்கு. அது சரி, ப்ருந்தா எப்பிடி இருக்கா?
அதெயேம்ப்பா கேக்கறே. கிளியெ வளத்துப் பூனை கையிலெ குடுத்துட்டோம்…
என்று மாமி சொன்னார். குரலில்தான் என்னவொரு துக்கம். வேறுபக்கம் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் என்புறம் திரும்பி, தழைந்த குரலில் சொன்னார்:
ரொம்ப நாள் ஓடாதுப்பா. அன்னாடம் சித்ரவதைப் படறதுக்கு, தனியா இருந்து கழிச்சுடலாம்… மனுஷனா அவன்?
என்னுடைய வாழ்நாள் ஆசை நிறைவேறிய மாதிரி அத்தனை திருப்தியாய் இருந்தது. துக்கம் மண்டிய அந்த முகங்களைப் பார்ப்பதுதான் எவ்வளவு இதமாய் இருந்தது! சதிகாரக் கிருஷ்ணன் ஒருமுறை கண்முன் தோன்றி மறைந்தான்…
அப்படித்தான் மீண்டும் அவர்கள் வீட்டுக்குப் போக ஆரம்பித்தேன். முதல் தடவையே எவர்சில்வர் தம்ளரில் கள்ளிச்சொட்டாகக் காஃபி தந்தார் மாமி. அவர்களும் ஓரிரு தடவை தாம்பரத்தில் என்னுடைய ஃப்ளாட்டுக்கு வந்துபோனார்கள். என் குழந்தைகள் ’தாத்தா… பாட்டி…’ என்று ஒட்டுதலாய்ப் பழகியது எனக்கு ஆச்சரியமில்லை; பவானி உடனடியாய் அவர்களை ’அம்மா, அப்பா’ என்று கூப்பிட்டதில்தான் மலைத்துப்போனேன். நான் மட்டும்தான் யாருடனுமே ஒட்டாமல் இருக்கிறேனோ? உள்ளூர எனக்கு அளவில்லாத தாழ்வுணர்வு இருக்கிறது என்று ராமானுஜம் சொல்வது சரிதானோ. அவரை வீட்டில் சந்தித்த அந்த ஞாயிற்றுக்கிழமை இதை எத்தனை தடவை சொன்னார்…
திரும்பும் வழியில் கோடம்பாக்கத்தில் அவர்களைப் பார்த்துவிட்டுப் போகலாமே என்று தோன்றியது. காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது தோன்றாத எண்ணம் எனக்குள் திடீரென்று துளிர்விட்டதன் பொருள் இப்போதுவரை விளங்கவில்லை. லிஃப்டில் மாடியேறும்போது, சூட்சுமமாக யாரோ என்னுடன் இருப்பதுபோல உணர்ந்தேன். நிச்சயம் பிரமையாய்த்தான் இருக்க வேண்டும்…
அழைப்புமணியை அடித்தபோதுகூட நான் எதிர்பார்த்திருக்கவில்லை. கதவைத் திறந்தது பிருந்தா. பத்துப் பதினைந்து வருடங்களில் இன்னும் அழகாகியிருந்தாள். கழுத்தின் வெளுப்பு அதிகரித்து, சங்குபோலவே வழுவழுப்பாகத் தெரிந்தது. அதில் விளிம்பு கட்டியிருந்த கறுத்த மயிர்ச்சுருள்கள் வெண்மையை மேலும் ஒளிரச் செய்தன. பார்வையை அகற்ற முடியாமல் தவித்தேன். இரண்டு ஒற்றை சோஃபாக்கள் இருந்தும் நான் அமர்ந்த இரட்டை சோஃபாவிலேயே வந்து அமர்ந்தாள் சண்டாளி.
அப்பிடியே இருக்கியே கண்ணா! யூனிவர்ஸிட்டிலே பாத்த மாதிரியே இருக்கே!!
என்று சொன்னபோது கண்கள் எப்படி மலர்ந்தன…!
அங்க்கிளும் ஆண்ட்டியும் திருப்பதி போயிருக்கிறார்கள். நல்லபடியாக விவாகரத்து ஆகி வீடு திரும்பிவிட்டால் அங்கிள் மொட்டை போட்டுக்கொள்வதாக வேண்டுதலாம்.
கல்யாணம் ஆகணும்ன்னு வேண்டி அப்பொ ஒரு மொட்டை போட்டுக்கிட்டார். இப்போ இதுக்கு….!
என்று சிரித்தாள். நான் பதில் சொல்லத் தெரியாமல் திகைத்தேன். எங்கெங்கோ நகர்ந்த பேச்சின் ஒரு கட்டத்தில்,
…பேசாமெ நீ ஆசைப்பட்டபடி செஞ்சிருக்கலாம், கண்ணா. வீணா நான்தான் பயமுறுத்திட்டேன். இல்லே?
என்று கேட்டு என் கண்களையே உற்றுப் பார்த்தாள். பதினைந்து வருடப் பழைய விஷயமல்லவா. அந்தச் சமயத்தில் எனக்குள் ஓங்கியிருந்தது பயமா, அருவருப்பா, இரண்டையும் மீறி எழும்பும் வேறு ஏதோவொன்றா என்று யோசித்துப் பார்த்தால், தீர்மானிக்க முடியவில்லை – இப்போதுகூட…
அவளும் வேறு ஏதோ யோசித்தபடியேதான் என்னுடன் உரையாடியிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த அரைமணி நேரத்தில் அத்தனை நெருக்கமாக, அத்தனை சரளமாக, அத்தனை வேகமாக நாங்கள் செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை.
அய்யோ, அவளுடைய புறங்கழுத்தின் மரிக்கொழுந்து மணத்தை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை. அதைவிட, லிஃப்ட் வரை என்னை வழியனுப்ப வந்தவள், பொத்தானை அமுக்கிவிட்டுக் காத்திருக்கும்போது என்னிடம் சொன்ன வார்த்தைகளை மரணத்துக்கு அப்புறம்கூட மறக்கமாட்டேன் என்றுதான் தோன்றுகிறது.
முகத்தில் கலக்கமேயின்றி, யாரிடமோ சொல்வதுபோலச் சொன்னாள், பழிகாரி. கோரிக்கை விடுக்கும் குரலில்,
கண்ணா…
என்றாள். ஒரு நொடியில் விதவிதமான கற்பனைகளும், எதிர்காலத் திட்டங்களும் ஊற,
என்ன?
என்று கேட்டபடி ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த்தேன்.
இன்னிமே இந்தப் பக்கம் வந்துராதே. என்ன?
என்று சொல்லிவிட்டு, வேகமாக வீட்டுக்குள் போகத் திரும்பினாள். கல்லூரி நாட்களை விடுங்கள், இப்போதுகூட வந்த நிமிடம் முதல் அவள் சொன்னதையோ, சொல்ல விரும்பியதையோ கேட்டுத்தானே நடந்திருக்கிறேன். சம்மதமாய்த் தலையாட்டினேன். அவள்தான் நின்று பார்க்கவில்லை. என் முதுகுக்குப் பின்னால், டமாரென்று அறைந்து சாத்திக்கொண்டது வீட்டுக் கதவு.
லிஃப்ட் திறந்தபோது இல்லாதவன், கதவு மூடிய மாத்திரத்தில் என்னுடன் இருந்தான். நாசமாய்ப்போன கிருஷ்ணனேதான். என்னைப் பார்த்துக் கண்ணடித்தான். கட்டைவிரலை உயர்த்தி வெற்றிமுத்திரை காட்டினான். வகிட்டை ஒட்டி தலைமுடி மேலேறி மெல்லிய வழுக்கை படிந்திருந்தது. சற்று தாராளமாகவே நரை பாய்ந்துவிட்ட கேசம். வசீகரத்துக்குக் குறைச்சலே இல்லை. ஆனால் அவனைப் பார்த்த கணத்தில், அப்படியே தரையில் தள்ளி நெஞ்சில் மிதிக்கவேண்டும் போல இருந்தது. மறுகணம், ஆரத்தழுவி இறுக்க வேண்டும் என்றும் தோன்றியது. இரண்டும் அடுத்தடுத்து ஒரே சமயத்தில் தோன்றியதில், மூச்சுமுட்டியது எனக்கு. ஆமாம், முதல் தடவையாக அவனைத் தொட்டு உணர ஆசையாய் இருந்தது.
அதைவிட, விசித்திரமான பழியுணர்ச்சி பொங்கிப் பெருகியது. இப்படியே மாடியேறித் திரும்ப வேண்டும். கதவைத் திறக்கும் பிருந்தாவை மூர்க்கமாகக் கட்டிலுக்குத் தள்ளிச் சென்று மூச்சுத் திணறத் திணற…
சட்டென்று நின்றது எண்ணவோட்டம். அவளை மனதார விரும்பிய நாட்களில் இப்படியெல்லாம் யோசித்திருப்பேனா. எவ்வளவு பவித்திரமாக நினைத்திருந்தேன் அவளை, அவளுடைய சிநேகிதத்தை. இந்தப் பயல் வந்துதான் என்னைக் கலக்கிவிட்டிருக்க வேண்டும்… என் எண்ணம் புரிந்தமாதிரி சிரித்தான். அவனுக்கென்ன, பதினாயிரம்பேருடன் சரசம் புரிந்தவன். சிரிக்கத்தான் செய்வான். நான் அப்படியா? அப்புறம், பவானிக்குத் தெரிந்தால் சும்மா விடுவாளா என்னை?
அது சரி, எப்போதும் கலகலப்பாகப் பேசுகிறவன்தானே இந்தப் பயல், இன்றைக்கு ஏன் பேசவே மாட்டேனென்கிறான்? ஒரு வார்த்தை சொல்லிவிட்டானென்றால், நானும் மனம் திறந்து கொட்டிவிடுவேனே. மனதார அவனைத் திட்டித் தீர்ப்பேன். குறைந்த பட்சம், மேலேறிப் போனபோதும் அவன் என்னுடன் வந்தானா என்றாவது விசாரித்துத் தெரிந்துகொள்வேன்…
ஏனோ, ஒரு சொல்லும் பேசவில்லை ராஸ்கல். ஆனால், என்னுடைய முகம் பேயறைந்த மாதிரி ஆகியிருக்க வேண்டும் – லிஃப்ட்டில் ஏறக் காத்திருந்த இளம் ஜோடி, என்னைப் பார்த்த பார்வையில் அப்படியொரு மிரட்சி இருந்தது.
எல்லாம் அரதப் பழைய கதைகள். எழுபத்திச் சொச்சம் வயதில், ஒருநாளும் இல்லாத திருநாளாக, இன்று வரிசையாய் அத்தனையும் நினைவு வருவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பால்கனியில் காயும் பிற்பகல் வெயிலையும், ஆர்ப்பாட்டமும் அபத்தமுமான நிறங்களை அள்ளித்தட்டும் தொலைக்காட்சியையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டு ஸோஃபாவில் உட்கார்ந்திருந்தேன். தாண்டிப்போன ஏதோவொரு சானலில், கண்ணன் தொடர்பான பாட்டுக்களாகப் போடுகிறான். இன்று கோகுலாஷ்டமியல்லவா.
கள்ளத்தனமே உருவாய்க் கொண்ட காவியக் கண்ணா வா…
எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டுத்தான்…
கண்ணன்… என்ன சொன்னான் – மணிக் கிள்ளையே
கண்ணீர் வர… காரணம் ஏன் கொடி முல்லையே…
என்று கறுப்பு-வெள்ளையும், வண்ணங்களும் மாறிமாறி வந்தவண்ணமிருந்தன. தொகுப்பாளர் ஞான சிகரம். ’கண்ணன்’ என்ற சொல் வந்தாலே சேர்த்துக்கொள்ளுவார் போல. சம்பந்தமேயில்லாமல்,
கண்ணா… நீயும் நானுமா?
என்று பாட்டுப் போட்டார். ’நீயும் சிவாஜி. நானும் சிவாஜி. ஆனால், இரண்டுபேருக்கும் ஒரு தலைமுறை வித்தியாசம்…’ என்று நினைத்துக்கொண்டே பால்கனிப் பக்கம் பார்வையைத் திருப்பினேன் – அதிர்ந்துபோனேன்.
ஆமாம். கிருஷ்ணன் நின்றிருந்தான். எத்தனை வருடம் ஆகிவிட்டது. இன்னும் கறுத்திருந்தான். தளர்ந்திருந்தான். முகத்தின் புன்னகை மறைந்துவிட்டது. கேசம் முழுக்க நரைத்து, உச்சந்தலை முழுக்க வழுக்கை படர்ந்திருந்தது. பற்கள் உதிர்ந்ததாலோ என்னவோ, இரண்டு கன்னங்களிலும் டொக்கு விழுந்திருந்தது. பின்னங்கைகளை பால்கனிச் சுவரில் ஊன்றி, மல்லாக்கச் சாய்ந்திருந்தான். ஊன்றிய கைகள் லேசாக நடுங்குவதுபோலத் தென்பட்டது உண்மைதானா என்று எப்படித் தெரிந்துகொள்வது? எப்படியானாலும், அவன் கிருஷ்ணனேதான் என்பதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேகமில்லை.
என்னையே பார்த்துக்கொண்டிருந்த முகத்தில் இருந்த பாவனை இன்னதென்று கணிக்க முடியவில்லை. இதற்குள், பின்னணி இசை துயரமாக ஒலிக்கத் தொடங்கியது. ரொம்பப் பரிச்சயமான பாட்டுத்தான்…
உடம்பு முழுக்க நீலப் பெயிண்ட்டும், உதட்டுக்குச் சிவப்புச்சாயமும் அடித்திருந்த என்ட்டி ராமராவ், சீர்காழியின் குரலுக்கு அற்புதமாக வாயசைத்தார்.
உள்ளத்தில் நல்ல உள்ளம்…
பால்கனிக் கிருஷ்ணனைத் திரும்பிப் பார்த்தேன். ராமராவ் ஜாடையில்லை. அதே படத்தில் கர்ணனிடம் யாசகம் கேட்க இந்திரன் வருவாரே, தொண்டுக் கிழமாக. அப்படியொரு பாவனை இருந்தது முகத்தில். கூனை மறைப்பதற்காகத்தான் பின்னால் சாய்ந்து நிற்கிறானோ…
எம்ஸீஸியில் இயற்பியல் பேராசிரியராய் இருக்கும் என் பேரன் பராசரன், தோளில் இடுக்கிய மொபைல் ஃபோனோடு அறைக்குள் வந்தான். அவர்கள் தலைமுறைக்குக் கவசகுண்டலம் மாதிரி. எந்நேரமும் தோள்பட்டையில் இறுக்கியிருப்பார்கள். பராசரனுக்கு கனத்த குரல். ஃபோன் இல்லாமலே மறுமுனைக்குக் கேட்கும். அன்றாடம் வகுப்பெடுத்துப் பழகியவன் இல்லையா,
கையில் பாவனையாய்ப் பிடித்த ரிமோட்டால் டிவியைச் சுட்டி, ’ஓசையைக் குறை’ என்று சைகை செய்தான். ஒலியை முற்றிலுமாக நிறுத்தினேன். பீரோவைத் திறந்து எதையோ தேடிக்கொண்டே ஃபோன் உரையாடலைத் தொடர்ந்தான் அவன்.
பின்னணியாய் ஒலிக்கும் பராசரனின் பேச்சுக்குத் தொடர்பேயில்லாமல், மந்தகாச முகத்துடன் ராமராவ் வாயசைத்துக்கொண்டிருந்தார். பராசரனின் குரல்,
அதெல்லாம் ரொம்ப மாறிப்போச்சு சார். ஒண்ணு, வேவாத் தெரியும்; இல்லேன்னா பார்ட்டிகிளாத் தெரியும்ன்றதெல்லாம் பழைய தியரி. ஹல்லோ… ஹல்லோ… கேக்கலையா. ஸிக்னல் சொதப்புதோ! என்னது, புரியலையா!! வேவ் சார்… வேவ். அலை. என்னது, பார்ட்டிக்கிளை என்னன்னு சொல்றதா?! குசும்பு சார் ஒங்குளுக்கு. பார்ட்டிக்கிள்ன்னா, பார்ட்டிக்கிள்ன்னா… என்னன்னு சொல்றது… துகள்ன் னு வச்சிக்கலாம். அந்தத் தியரியெல்லாம், ‘பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்’ காலத்துது! பாக்குறவன் வேவாப் பாத்ததுனால வேவாத் தெரிஞ்சது; பார்ட்டிக்கிளாப் பாத்துருந்தான்னா அதேவிதமாத் தெரிஞ்சிருக்கும். அதாவது, இவனோட அந்தரங்க விருப்பப் பிரகாரம்தான் அது தெரியும்; தன்னளவுலெ இன்னதாத்தான் இருக்குன்னு அறுதியாச் சொல்லவே முடியாது. அதாவது, ‘இவன் என்னவாப் பாக்க விரும்புறானோ, அப்பிடியேதான் தெரியும் அது’ன்ற முடிவுக்கு எப்பவோ வந்துருச்சு ஸையின்ஸு…
என்று சிரித்தது. தொடர்ந்து பேசிக்கொண்டே வெளியே போனான். பாட்டு முடிந்து, அந்த நிகழ்ச்சியும் முடிந்திருந்தது.
பால்கனியைப் பார்த்தேன். கிருஷ்ணன் நின்ற இடம் காலியாய் இருந்தது.
ஓவியம்: esamskriti.com
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…