கட்டுரை

கவிதையின் மதம் – 9: கடவுள்தான் உன்னைக் காப்பாற்ற வேண்டும்

8 நிமிட வாசிப்பு

‘கடவுளைக் கண்டமாதிரி இருக்கிறது.’ ‘கடவுளாலும் உன்னைக் காப்பாற்ற முடியாது.’ ‘கடவுளே வந்தாலும் முடியாது.’ ‘கடவுள் என்று ஒருத்தர் இருந்தால் உண்மையிலேயே எவ்வளவு நன்றாக இருக்கும்!’ ‘பார்த்தீர்களா, கடவுள் இருக்கிறார்.’ – இது முதல்வரியைப் போன்றதேதான். இப்படி இப்படி கடவுள் என்ற சொல்லைத்தான் நாம் எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம். அறிவுக்கு அப்பால் நின்றபடிதான் ஒரு கவிஞனும் கடவுள் என்று தனக்குப் பெயர் சூட்டிக்கொள்கிறான்.

ஊட்டி நாராயணகுருகுலத்திலிருந்து வந்த துண்டுபிரசுரம் மூலம் நித்ய சைதன்ய யதியின் தன் வரலாற்று நூல் வெளிவந்துவிட்டது என அறிவிக்கப்பட்டிருந்தது. சற்றும் தாமதிக்காமல், உடனேயே தொகை அனுப்பி – அப்போதே அது எனக்கு மிகப் பெரியதொகை – உடனே வழக்கம்போல் பள்ளிக்குச் செல்லும் வழி அஞ்சல்நிலையத்திலேயே அதைப் பெற்றுக்கொண்டு பள்ளியின் ஓய்வுநேரத்திலேயே அதைப் படிக்கத்தொடங்கி ஒரே மூச்சில் அதை முடித்தேன். வாசிப்பில் அணுக்கமான நண்பரிடம் நான் அதைச் சொல்ல அவர் அதை ஊர்ந்து வாசிக்கத் தொடங்கி, நானே திரும்பவும் மற்றொரு நூலை வாங்கிக் கொள்ளும்படிச் செய்துவிட்டார். அந்த நூலில் இரண்டு இடங்களில் நான் அடிக்கோடிட்டிருந்தேன். ஒன்று மிகப் பிரபலமான அரசியல்வாதி ஒருவரைப் பற்றிய வருத்தத்திற்குரிய உண்மை. மற்றொன்றுதான் கடவுளைப் பற்றி அவர் என்னைப்போலவே எழுதியுள்ள வரிகள். இப்போதும் அது இந்த ஊரில் என் கைவசமில்லை கிடைக்கும்போது அதையும் இந்தக் கட்டுரையில் வேண்டுமானால் இணைத்துக்கொள்ளலாம். அது ஒன்றும் முக்கியமல்ல என்றும் ஆகலாம்.

நமக்குத் தேவை இந்தப் பிரச்னைகளிலிருந்து நாம் விடுபடுவது எப்படி என்பதுதானே? இப்போது என்ன பிரச்னை? ‘நான்’ தான் கடவுள் என்ற போதே இவ்வுலகம் இரண்டுபட்டுப் பேரழிவுகளுக்கு உள்ளானதும். நான் அழிந்தபோதே அது தன் பேரமைதிக்கும் பேரழகிற்கும் மீண்டதும்… இல்லையா? புரிந்துகொண்டு கவனமாகப் வாசிக்கிறீர்கள் என நம்புகிறேன். நான் என்பது நம் எண்ணங்கள் என்பதன்றி பிறிதென்ன? நம் எண்ணங்களை நாம் அறிதல் என்பதும் தன்னை அறிதல் என்பதும் ஒன்றுதானே? ஆனால் தன்னை அறிதல் என்பதே நம்மில் பலருக்கு இயல்வதாக இல்லை. தனை அறியும் அறிவு ஒன்றே வழி என்பதும் புரிவதாயில்லை.

ஏராளமான தடைகளை அதன்மேல் குவித்து வைத்திருக்கிறார்கள் அவர்கள். இவர்களைத்தாம் நாம் உணர்வுத் தீவிரமற்றவர்கள் என்கிறோம். அவர்களை மந்தமாக்கி, சராசரி மனிதர்கள் எனும் பெயரில் எல்லோரும்தான் பூமி முழுக்கப் பெருகி நிற்பவர்களாய் மாற்றிவிட்டிருப்பவைகளைத்தாம்; நாம் வழிபட்டுக்கொண்டும் பற்றிக்கொண்டும் கடைப்பிடித்துக்கொண்டுமிருக்கிறோம். இவைகளே ‘உள்ளது’ என்ற நிலையில் உண்மையாகவும் பொய்யாகவும் இருக்கின்றன. உண்மையை உண்மை என்றும் பொய்யை பொய் என்றும் அறிவதற்கே இயலாது கிடக்கிறது மனிதகுலம், தொழில்நுட்பத்திலும் பொருளுலக வளர்ச்சியிலும் பிற கிரகங்களைக் கண்டடைந்து விடுமளவுக்கு வளர்ந்துவிடக் கூடியவர்களாய் இருப்பினும்.

தடைகளிற் சிக்குண்டவர்களாலல்லாது, உண்மையைக் கண்டுகொள்ளத் தெரிந்தவர்களால்தாம் மெய்யான அன்பையும், அமைதியையும், ஆற்றலையும் கொண்ட மனிதகுலத்தைப் படைக்கமுடியும் என்பதைத்தான் ஒரு கருத்தாக்கமாக அன்றி இதைக் கவனிப்பவர்களுக்குக் கண்கூடான ஒரு உண்மையாகச் சுட்டிக்காட்டிவிட முயற்சிக்கிறேன்.

நமது மானுட ஆற்றலைக் கெடுக்கக் கூடியதாக நாம் எத்தனை எத்தனை வகைமைகளைத்தான், நமக்கு உள்ளே கொண்டிருக்கிறோம்; இதுவரை நாம் இயற்றியுள்ள மதங்களும், சிந்தனைகளும் தோற்றுவிட்டன இல்லையா? ஓன்றுகூட இல்லாது? அல்லது அது நமது குறைபாடா? குறைபாடு எங்குள்ளது, எதிலுள்ளது என்று கண்டுகொண்டு களைந்துவிட வேண்டியதுதானே? அதற்கும் தடையாயிருப்பது எது? ஒளிரக்கூடியது உண்மை ஒன்று மட்டுமே இல்லையா? எரிந்துகொண்டிருக்கும் இந்த வாழ்வை நாம் அறியாதவரை எப்படி அதை நாம் காப்பாற்ற முடியும்?

இடைவெட்டாக இவ்விடத்தில் ஒன்றைச் சொல்லிவிட்டுத் தொடரலாம் என நினைக்கிறேன். அச்சமும், நிச்சயமின்மையும், போரும், சச்சரவும், குழப்பங்களும், வறுமையும், அறமின்மைகளும் அறியாமைகளும், கொடுமைகளுமே இன்னும் நிலைத்து நிலவும் உலகம் இது. ஒரு மரத்தைக் கூட காண முடியாத இந்த உலகில் மாற்றப்படவேண்டிய அவசியம் உணர்ந்த தீவிரமுள்ளவர்கள் மட்டுமே வாசிப்பைத் தொடரலாம். மற்றவர்களுக்குத் தான் எவ்வளவு பொழுதுபோக்குகள் இருக்கின்றன, கலைகள் எனும் பெயரில், கவிதைகள் எனும் பெயரிலும் கூடத்தான்.

2001இல் ஆப்கானில் உலகத்திலேயே மிக உயரமான ஒரு புத்தர் சிலை, ஆங்குள்ள தாலிபான் மதத் தீவிரவாதிகளால் அகோரமாகச் சுட்டுச் சிதைக்கப்பட்டதைக் காணொலியில் கூட மக்கள் கண்டிருப்பார்கள். புத்தர் அதே மாறாத புன்னகையுடன் ‘நீங்களேதான் கண்டுபிடியுங்கள்!’ என்ற பாவனையுடன் சிரித்துக்கொண்டிருக்கிறார்.

காணவும் அறியவும் தெரியவும் வேட்கைஆற்றல் உள்ளவனுக்கு ஒரு கவிதையே போதும் என்கிறது கவிதையின் மதம்.

எந்த மதங்களும் தங்களைச் சரியாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்பதே ஏன் இதன் பொருளாக இருக்கக்கூடாது? தங்களால் பின் உருவாகப்போகும் பேராபத்துக்களை ஏன் இந்த மதங்களும், சிந்தனைகளும் – எல்லா மதங்களும் சிந்தனைகளும்தான் – முன் உணர்ந்திருக்கவில்லை? உணர்ந்திருந்தால் அதற்கான ஒரு வழியையும் பாதுகாப்பையும் தானே அது முதன்மையாகக் கொண்டிருக்க வேண்டும்? நான் இவ்வாறு கூறியவுடன் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் விதமாகவே, சாக்குப்போக்காகத்தான் வலிந்து ஒவ்வொரு மதத்திற்குள்ளும் – அந்த மதத்திலிருந்து கொண்டே – ஒன்றைக் கண்டுபிடித்துச்சொல்வீர்கள். ஏனெனில் மனிதகுலத்தைவிட உங்களுக்கு உங்கள் மதம்தான் முக்கியமாகிவிட்டதன் விளைவு என்பதை நீங்கள் காணத் தவறிவிடுகிறீர்கள்.

அடுக்கடுக்காக இதைத்தொடர்ந்து நான் எழுதிய கவிதைகள் சில எனக்கு ஞாபகம் வருவதைப் போலில்லாமல் உங்களுக்கு நான் கூறுவதிலுள்ள உண்மை ஒரு தாக்குவலுவுடன் உங்களைத் தொடுமானால் நான் சற்று இளைப்பாறுவேன், இங்கே.

‘கவிதையின் மதம்’ என நாம் இங்கே வைத்திருக்கிற சொல்லை முன்னிட்டு இதுவும் ஏனைய மதங்களைப் போலவே பேராபத்தானதாகத்தானே கூடும் என்பார்களானால் அவர்களை நோக்கி நான் மிக அறுதியிட்டு ஒன்றைக் கூறுவேன். ‘கவிதையின் மதம்’ அந்தப் பேராபத்தை முதன்மையாக முன்னுணர்ந்தே பிறந்துள்ள ஒன்று என்பதுதான் அது. அதற்கான விவேகத்தை அது முன் மொழிந்துள்ளது.

ஒரு கவிதை இங்கே :

சூரிய மின்விசிறி

எனது அன்பான எக்ஸ்ஹாஸ்டிங் மின்விசிறியே
இடையறாது சுழலும் என் சூரியனே
ஆக்கும் செயல்களால்
புகைமண்டி இருண்டு
கண்ணைக் கரிக்கும் இந்த அறையில்
எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்காத
செயல்வீரம் நீ.

இந்தக் கவிதையைக் கொண்டும் நான் இதனை அடிக்கடி விளக்கிச் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறேன்.

***

மெய்யான வாழ்வு என்பது என்ன? நாம் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எத்தகைய வதைவெளிகளிலும் நாம் வாழவே துடிப்பதென்ன? நாம் எப்படி இத்தகைய – அறமும் சமத்துவமுமற்ற இந்த உலகை உண்டாக்கிவிட்டிருக்கிறோம்? எத்தகைய அறிவிலிகள் நாம்? இவைகளைத்தாம் முதன்மையாக நாம் அறிந்துகொள்வது அவசியம் இல்லையா?

‘தண்ணீரில்லாமல் ஒருவன் வாழ்ந்துவிடமுடியும். கவிதை இல்லாமல் ஒருவன் வாழ்ந்துவிடமுடியாது’ என்னும் ஒரு கவிதைவரியை (தாகூர்) நான் பல இடங்களிலும் சொல்லிவிட்டேன். சொல்லிக்கொண்டே இருக்கிறேன். வாழ்வைக் குறித்தும் உயிர்வாழ்வின் இரகசியத்தைக் குறித்தும் இத்துணை ஆழமாக வேறு எந்த வரிகளாலும் சொல்லமுடியாது என்றே நினைக்கிறேன்.

ஒரு குழு – நண்பர்கள் குழு – கல்லூரிகளில் படித்திருந்தாலும்கூட நாம் நினைக்கும்படியான ஆற்றல்களும் படிப்பறிவும் இல்லாதவர்கள் – தங்கள் தங்கள் தொழிலை மட்டுமே செய்து கொண்டிருப்பவர்கள் – ஒரு ஓய்வுவேளையின் உரையாடல்களில் பொங்கிப் பொங்கிச் சுழன்றுகொண்டிருக்கும் இன்பமழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். தீடீரென்று அங்கே அவர்களை நோக்கி வந்த அறிவாளிகளைக் காணவும்… ஒரு பெரிய தாழ்வுமனப்பான்மை எனும் விலக்கம்கொண்ட மனிதர்களாய் அடங்கி அமைதியாகி முழித்துக்கொண்டு அமைவதை நீங்கள் கண்டிருக்கலாம். இந்த அறிவாளிகள் கூட்டமோ அத்தகைய ஒரு களிப்பை – தங்களிடையேயுள்ள, போட்டிகள் பொறாமைகளுடைய அறிவுகளால் இழந்திருப்பார்கள். ஆனாலும் இவர்களும் தங்கள் கூடுகைகளில் அதை அடைவதுண்டு அல்லவா?

இந்த வாழ்வின்பங்களின் இரகசியங்களை நாம் அறியவில்லை என்பதையும், அவைதாம் நம்மை வாழ்வித்துக்கொண்டிருக்கிறது என்பதையும், வாழ்வு நெடுக இருக்கும்படி இவைகளை நாம் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதையும், தனிப்பெருங்கருணை ஒன்றாக மட்டுமே இவைகள் நமக்குக் கிடைக்கின்றன என்பதையும், தடைகள் ஒழிந்துகொண்ட வேளைகள்தாம் அவைகள் என்பதையும், நம் தடைகள் யாவை என்பதையும் நாம் அறிவது அவசியம் அல்லவா?

இன்பம், துன்பம், இன்பதுன்பங்களற்ற நிறைவமைதி, உயிர்வாழ்வின் முழுஒத்திசைவையும் கண்டுவிட்ட பெருங்களி, பெருந்துக்கம் இவைகளையெல்லாம் சொற்களாகவேனும் நாம் கண்டுகொண்டவர்கள்தாமே?

‘தனிப்பெருங்கருணை’ ஒன்றால் மட்டுமே இவைகள் நமக்குக் கிடைக்கின்றன என்ற சொற்றொடரை மீண்டும் இங்கே கவனிக்கவேண்டும் நாம்.

எத்தகைய தியானம், ஆன்மிகப்பயிற்சி, நூல்வாசிப்பு எவை இல்லாமலிருக்கையிலும் தன்னை அறியாமலேயே அவன் ‘நான்’ அழிந்து நிற்கும் வேளையிலெல்லாம் வந்து நிற்கிறது அது. ‘நான்’ அழிந்த நிலையில் எங்கும் நின்றுகொண்டிருக்கிறது அது. தனிப்பெருங்கருணை என்ற சொல்லுக்கும் கடவுள் என்ற சொல்லுக்கும் உள்ள ஒற்றுமையையும் நாம் அறிந்துகொள்கிறோம். கடவுளைப் பார்ப்பது போலிருக்கிறது என்ற சொற்றொடரிலும், போன்ற பிற சொற்றொடர்களிலும் அது சுடர்விடுவதைக் காண்கிறோம். இவை தருணங்கள் சம்பந்தப்பட்ட மெய்யான உறவு நிலைகளிலெல்லாம் பாய்ந்து கொண்டிருப்பவை. இந்த வாழ்வுப் பெருஞ்செல்வத்தை அறிந்தவர்கள், பெறுபேறு பெற்றோர். இந்த பூமியைத் தங்களுடையதாக கருதுபவர்கள் இவர்களே. பல்கிப்பெருகி இந்த பூமியை நிறைக்கப் போகிறவர்கள். அல்லாதவகையில் நிறைவடையப்படாத பூமியை நன்கறிந்தவர்களும் ஆனவர்கள்.

மனிதர்கள் யாவரும் அடைந்தேயாக வேண்டிய இந்நிலையை மனிதர்கள் தோன்றிய காலம் முதலாய், பேதாபேதமற்று, குனிந்து, எல்லா மனிதர்களின் உள்ளங்கைகளையும் நீட்டச்சொல்லி, பிடித்து இழுத்துவைத்தும் – அவர்களுக்குக் கவிதையைக் கொடுக்கக் மறக்காத கருணை – கடவுள் – கவிதைத்தெய்வம் – எல்லாவற்றையும் அக்கணமே அக்கணமே தவறவிட்டுக்கொண்டேயிருக்கும் மனிதர்களால் காலம்காலமாக நிறைவேறாத பசியுடனே – துயரத்துடனே – இதுகாறும் தோன்றிய பெருங்கவிஞர்களாலும் கூட நிறைவேறாத பசியுடனே காற்றைப்போல திசையெங்கும் அலைந்து கொண்டிருக்கிறது. கண்டுபிடித்து இன்றும் கூறிக்கொண்டுமிருக்கிறது இல்லையா? காற்றின் வழியெல்லாம் விரிந்த குப்பைகூளங்களின் அழுகல் துர்நாற்றத்தைத்தான், உந்துகளில் விரைந்துசெல்லும் உன் முகத்தில் வீசி அடிக்கிறது இல்லையா? தன் வீட்டை ஒருவன் தான்தான் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறது அது. ஒரு கட்டடத்தைக் காப்பது எப்படி? என்று சொல்லித்தருகிறது அது. எப்போதும் ஒளிவீசும் படியாய்த் தூய்மையாகிவிட்ட ஒரு பயன்பாத்திரமும்;. தன் பயன்பாட்டின் போதெல்லாம் அழுக்கேறியும் நீர் பொழிந்து பாதுகாக்கத் தெரிந்தவனுக்காக எவ்வளவு எளிதாகவும் வசதியாகவும் தன்னை வைத்திருக்கிறது?

புகழாலும் செல்வத்தாலும் ஆயிரம்ஆயிரம் அறக்கொடைகளாலும் நம் புறஉலகில் நிகழ்த்தும் பெருஞ்செயல் புரட்சிகளாலும் தொண்டுகளாலும் நிறைவேறாத உண்மை இது. உலகம் இது. தன்மய்யம் கொண்ட சாத்தானின் புதிதுபுதிதுதான வேடங்கள் தாம் இவை என்பதைக் கண்டுகொள்வதே மெய்யான அறிவு. இதை நான் விளக்க வேண்டும், விளக்குகிறேன்.

பாற்குடத்தில் விழுந்த துளிவிஷம் – விஷங்கள் – குப்பையின் அழுக்கு முழுப்பாலையும் அது விஷமாக்கிவிடக்கூடியது புதியபுதிய பிறப்புகளும், தன்னமுதைச் சொரிந்துகொண்டே இருக்கின்றன. அமுதவெளியில் இயற்கையின் நீரூற்றுகளும் சுரந்துகொண்டேயிருக்கின்றன. ஒருபக்கம் அல்லது ஒரு கணம் எல்லாம் கலந்து குழம்பி சரிந்து போர்களும் துயரங்களுமான சாக்கடை. ஒருபக்கம், ஒருகணம்; அமுதமும், இயற்கையின்; தூய நன்னீரும். வீட்டிலிருந்துகொண்டு நாம் அடைந்துவிடக் கூடியதொன்று வெளியே உள்ளது. நாம் வீட்டிலிருந்துகொண்டு அடைந்ததுதான் அதுவும் என்று நம் முகத்தில் அறையும் அது. வாழ்வு நாம் செல்ல வேண்டியதையும் நிகழ்த்த வேண்டியதையும் கேட்டுக்கொண்டேதான் இருக்கும். எல்லாம் உயிர் நெருப்பின் தீவிரத்தைத் தனக்குள் கொண்டிருப்பவர்களிடம் தான். நம் ஒவ்வொரு செயல்களுமே துளிவிஷத்தையோ துளியமுதத்தையோ தன்னுள் கொண்டு முழுப்பால்வெளியையும் நிறைத்துவிடக்கூடியவை. கலங்கிய பால் விஷமாகத் தாக்குவதையும் விஷம்விஷமாகத் தாக்குவதைப் போலவே, புதிதபுதிதாய் பிறந்து கொண்டிருக்கும் ஊற்றுநீரும் அமுதமும் ஊற்றுநீரும் அமுதமுமாகவே நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. தேக்கமின்றியும் தேக்கத்தோடும், எப்போதும் பாய்ந்தும் பரவியும் கொண்டிருக்கும் இந்தப் பால்வெளியில் நாம் கருணையையும், கொடூரங்களையும், அமுதையும் ஒருசேரப் பருகிக்கொண்டு வாழ்கிறோம், இல்லையா?

எக்காலத்திற்குமான பொன்வெளியை – நம் பாத்திரத்தை – துலக்கிவைக்கவேண்டிய – நம் ஆளுமைகளை, மேதைகளை நாம் தெரிந்துகொள்வதும் அவசியம்தான்.

புகழ்மீதும், செல்வத்தின்மீதும், அதிகாரத்தின்மீதும் கொண்ட பற்றும்பாசமும்தானே நமது காலம்காலமான ஆளுமைகளின் மேதைகளின் இருப்பு எனவும் ஆகியிருக்கிறது. அல்லது ஆக்கியிருக்கிறோம். விரிந்து பரவித் ததும்ப வேண்டிய நமது ஆற்றல்களெல்லாம் அதிகாரம் செல்வம் கல்வி அறிவு எனும் ஒற்றைவெளியிலேயே குப்பைமேடுகளாய்க் குவிந்துள்ளன, குவித்திருக்கிறோம். விரிவையும் ஆழத்தையும் கண்டுகொள்வதற்கும் இயற்றிவிடுவதற்குமான ஒளியாகத் திகழ்வதற்குப் பதில், மீண்டும்மீண்டும் புகழையும் அறிவையும் மட்டுமே வளர்த்துக்கொண்டு, மாற்றப்படாத ஓர் உலகின் வறிய மயானத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள அறியவில்லை என்பதுதானே கண்கூடானஉண்மை?

இவ்வுலகைப் பீடித்திருக்கும் தீராத பிணியை ஒருவன் கண்டுகொள்வதற்கும் களைவதற்கும் என்ன வழி? கைப்புண்ணைக் காண்பதற்கு கண்ணாடியா தேவை என்றொரு எளிய மனநிலையில் தோன்றும் மக்கட் சொற்றொடர் ஒன்றுண்டு. காணுதல் என்பதும் உற்றுக்கவனித்தல் என்பதும், தனைஅறிதல் என்பதும்தானே அதன் பொருள்? பிழைகளுக்கே வழிகாட்டிவிடக்கூடிய பின்பற்றுதல் என்பது வேறு கவனித்தலும் நாம் அதுவாகவும், அவர்களாகவுமும் மாறிவிடுதல் என்பது வேறு. நம் புரிந்துகொள்ளலே முதன்மையானது. எத்தகைய பெரிய நூல்களை வாசிக்கும்போதும் சரி, நேர்கண்ட ஓர் உரையாடலில் ஓர் ஆளுமையின் சொற்களை நீங்கள் உற்றுக்கேட்டுக்கொண்டிருக்கும் போதும் சரி, அந்த நூலை விடவும், கண்ணெதிரே காணும் மாபெரும் ஓர் ஆளுமையைவிடவும், கேட்போனும் கவனிப்போனுமாகிய நீங்களே அவ்வேளை உயர்தளத்தில் இருக்கிறீர்கள். நூல்கள் என்பது கடந்தகால அறிவின் பளு, அவ்வளவுதான். பேசுவர், ஞானமேயானாலும் அதை ஓர் அறிவுத்தளத்தில் நின்றபடிதான் பேசுகிறார், அந்த ஒரு நூலைப் போலத்தான். ஆகவே… என நான் சொல்ல முனைவதை நன்றாக புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். ‘அதரபானம்’ என்றொரு கவிதை. அதனையும் இத்தோடு இணைக்கச் சொல்லிவிடுகிறேன்.

மொத்தம் அய்ந்து கவிதைகளோடு இக்கட்டுரையை இப்போது முடித்துக்கொள்ளலாம்.

1. இரண்டு மாபெரும் உண்மைகள்

நான்தான் அந்தக் கடவுள்
என உணர்ந்த ஒரு தருணமும்

நான் முழுமையாய் அழிந்தபோதே
இவ்வுலகு ஒரு பேரமைதியில் ஜொலித்ததும்.

– புல்வெளியில் ஒரு கல் (1998)

2. ஒரு கட்டடத்தைப் பாதுகாப்பது எப்படி?

கட்டிமுடித்த மனிதன்
இல்லை அந்தக் கட்டடத்துள்
கதவுகளும் ஜன்னல்களும்
தங்கள் அர்த்தங்கள் இழந்து மூடிக்கிடந்தன
ஓர் உடைப்பு வழி உட்சென்ற
திருடர்களும் வேசிகளும்
கள்ளப் புணர்ச்சிக்காரர்களும்
இருந்து புழங்கக் கூசும்
அசுத்தப் பெரும்பாழாய் நாறியது அந்தக் கட்டடம்.

செத்த எலிகளைத் தொடர்ந்து
புழுபூச்சி ஜீவராசிகளும்
பெருச்சாளிகளும் பொந்துகளும் பாம்புகளும்
இருள்தேடி வெளவால்களுமாய்
செழிப்புடன்
ஜேஜே என நிறைந்துதான் இருந்தது அந்தக்கட்டடம்.

ஒரு கட்டடத்தைப் பாதுகாப்பது எப்படி என்பதை
ஒரு சாதாரண மனிதன் அறிவான்
நாம் அறியவில்லை;
துயரகரமானது நமது சித்திரம்.

3. விஷம்

பாற்குடத்தில்
விழுந்துவிட்டது
விஷம்
வேர்பிடித்துப் பரவும்முன்
அள்ளி எடுத்துவிடத்
தவிக்கும் கைகள்
எல்லாமே விஷ அழுக்குக் கைகளானால்?


தீண்டிவிட்டது சர்ப்பம்
புண்ணில்லாத வாய்கொண்டு
கடித்துத் துப்பு உடனே
ஏனெனில்
குடலுடம்பு ஒரு புண்

காலங்காலமாய்
நான் விசுவாசத்தோடு
தொழுது வந்த தெய்வம்
ஒரு விஷசர்ப்பம்
(பின்னால்தான் இது தெரிந்தது)
ஒருநாள் என்னைக்கொன்று
இட்டுச் சென்றது ஓர் அமுதவெளிக்கு
இன்று அமுதவெளிமுன்
ஒரு விஷசர்ப்பம் நான்
பாற்குடத்தில் விழுந்துவிட்ட
துளிவிஷம்

தெய்வத்தைக் கொன்று
பட்டத்தை அபகரித்துச் சூடிக்கொள்
இல்லையேல்
தெய்வம் உன்னைக் கொல்லவிடு
ஆள்பவன் ஒருவனுக்கே இது இடம்.

– மின்னற்பொழுதே தூரம் (1981)

4. வழி

செயல்படுத்தமட்டுமல்ல
உரைக்கக்கூடத் தகுதியற்ற
அருவருப்பான, ஆபாச
மற்றும் அறமின்மைகளுமான
எண்ணங்களை நீ அறிந்திருப்பாயல்லவா,
களைந்திருப்பாயல்லவா?
எப்படி?
எப்படி எனக் கேட்பாயோ?

எல்லாப் பெருங்கொடுமைகளும்
போலிப் பெருங்கொடைகளும்கூட
நுண்ணுயிர்போன்ற
சிறுதூசு அளவில்தானே தொடங்குகிறது?

சொற்தூசு அளவிலல்லாது
காலக் கறை படரமுடியாத
வெறுமையிலிருந்தல்லவா வருகின்றன,
எல்லா நற்செயல்களும்?

பாவக் குற்றங்கள்தாம்
உண்மையின் பாதைக்குத் தடைக்கற்களாகி
எல்லாத் தீமைகளையும் படைத்துவிட்டிருப்பதை அறிந்தால்
அறிந்தவன் தான் எப்பேர்ப்பட்ட பாவி என்பதையும்
வேறு யாரோ ஒருவர் சொல்லித்தரவா காத்திருப்பான்?

எந்தத் தடைகளையும்
தானியங்கி
அறுத்துப் பாய்ந்து முன்செல்லும்
பேராயுதம், பேராற்றல் அல்லவா
விவேகம் என்பது?
காலத்தில் வாழ்கிறவர்களும் வாழத்துடிக்கிறவர்களுமான
மனிதர்கள் மறந்துபோனது?

(பிப்ரவரி: 2022)

5. அதரபானம்

எச்சிலென விழுந்தபின்
நக்குவதல்ல
முத்தம்.

சொல்லூறும் வாய்
ஒரு கிணறு.
கேட்கும் காது
வாய்விரித்த ஒரு வெற்றுவாளி.
கிணற்றின்நீர்
வாளியின் வெற்றுவெளியைத் தீண்ட
வாளியின் வெறுமை
கிணற்றின் ஊற்றுநீரைத் தீண்ட
கேட்டல் – ஒரு பரிவர்த்தனை.

கேட்டல்
குழாய்நீர் ஒழுக்கல்ல,
ஆனதனால்
நீர் எடுப்பதற்கு
கயிறும் வாளியும் மட்டும் போதாது
தசைநார் வலு வேண்டும்.

– மின்னற்பொழுதே தூரம் (1981)

நன்றி: சுடலைமுத்து
புகைப்படம்: தாலிபானால் 2001இல் தகர்க்கப்பட்ட புத்தர் சிலை இருந்த இடத்திற்கு அருகில் இளைஞர்கள் கால்பந்தாட்டம் விளையாடும் காட்சி (Source: AFP)

இதழ் 13 பிற படைப்புகள்

Share
Published by
தேவதேவன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago