சிறுகதை

இடமோ வலமோ?

9 நிமிட வாசிப்பு

நேற்று இறந்த பிணம் எரித்துச் சாம்பலான பின் இன்று காலை கரைப்பதற்கு எலும்பு பொறுக்கினார்கள். மிச்சம் கிடந்த சாம்பலைக் கூட்டிக் குவித்து, அதன்மேல் வெள்ளம் வடியவைத்த தென்னங்கருக்கை நிமிர்த்து நாட்டி வைத்து, அதன் திறந்த வாயில் விரிந்த தென்னம்பாளையைக் கொத்தாகச் செருகி இருந்தார்கள்.

செத்துப் போனது ஆணோ, பெண்ணோ, மூத்ததோ, இளையதோ, சுமங்கலியோ, கைம்பெண்ணோ, நோய்ப்பட்டதோ, திடமோ, கொலையோ, தற்கொலையோ, மூத்த பிள்ளையோ, குடியானவனோ எவராக இருந்தால் என்ன? கண் பஞ்சடைவதும், காலன் வருவதும் எவர் சம்மதத்தின் பேரில்? எரித்தால் எலும்பு பொறுக்கித்தானே ஆக வேண்டும்!

வரிசையாக ஏழெட்டுக் குழிகள் கிடந்தன. முற்படுத்தப்பட்ட, நடுப்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கானவை. எதிர்காலத்தில் காந்திய, மார்க்சிய, திராவிட, சநாதனக் குழிகள் எனப் பகுபடல் ஏற்படக்கூடும்.

முந்திய நாள் எரியூட்டிய உடலின் எலும்புகளை மறுநாள் காலையில் வந்து சாம்பரில் துழாய்ந்து பொறுக்கி, தலைவாழை இலையில் குவித்து, பால், தயிர், கருக்கு வெள்ளம், பன்னீர், களப சந்தனம் என அபிடேகங்கள் செய்து, பூ போட்டு, இலையோடு சுருட்டி அள்ளிப் பித்தளைச் சருவத்தில் வைத்து, முதல்நாள் கொள்ளிவைத்து மொட்டை போட்டவரின் தலையில் வடசேரி ஈரிழைத் துவர்த்து முண்டால் பரிவட்டம் கட்டி, அதன்மேல் எலும்புப் பொதியல் சருவத்தைத் தூக்கி வைத்து வீட்டுக்குப் போவார்கள். வீட்டு வாசலில் அதை வைத்து, பெண்கள் பாலூற்றித் தொழுதபின் கரைக்க வலுவான இருவர் கன்னியாகுமரிக் கடற்கரைக்குக் கொண்டு போவார்கள்.

எலும்புக் குவியல் அபிடேகத்துக்கு வெட்டிய தென்னை இளநீரின் வெள்ளம் வடிய வைத்தபின் காலியான இளம் தேங்காயைச் சுடுகாட்டுக் குழியின் சாம்பல் திட்டில் நிறுத்தி, அதன் வாயில் விரிந்த தென்னம்பாளைக் கதிர் செருகி வைப்பார்கள்.

அனைத்து மயானக் குழிகளையும் பொதுவாகக் காவல் காத்து நின்ற சுடலையின் பார்வையில் சமூக நீதி சுடர்விட்டது. மேட்டில் நின்ற சுடலையின் பீடத்துப் பரப்பில், அவர் காலடியில் நேற்று விரித்திருந்த தலைவாழை இலை வெயிலில் சுருண்டு கிடந்தது. செவ்வரளி, வெள்ளரளிப் பூக்கள் சிதறிக் கிடந்தன. வைத்திருந்த ஒரு சீப்புப் பேயன் பழத்தையும் மாடு மேய்ப்பவரோ, வழிப்போக்கரோ தின்றுவிட்டு, தோலை எறிந்திருப்பார்கள். உடைத்து வைத்த தேங்காய் முறிகளை மடியில் மறைத்து எடுத்துப் போயிருப்பார்கள். அல்லது பீடத்தின் அடுத்துக் கிடந்த துறுகல்லில் முறியை உடைத்துப் பருப்பைத் தின்றுவிட்டுச் சிரட்டையை வீசியிருப்பார்கள்.

வடக்குமலையில் உயிர்த்து மணக்குடிக்காயலில் கலக்கும் பழையாற்றின் மேலக்கரை அது. யாறுகள் அனைத்தும் புனிதமே! ‘வாங்கரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்’ இன்னரு நீர்க்கங்கை யாற்றைப் பாடினான் என்றால், நாஞ்சில்நாடன் பழையாற்றைப் பாடினான்.

மேற்கு கிழக்காக ஓடும் சாலையில் இருந்து, இடதுவசம் திரும்பினால் பழையாற்றின் மேலக்கரை. சூதானமாக ஓட்டினால் சக்கடா வண்டி போகும். ஏர்மாடு போகலாம். முன்னிரண்டு பின்னிரண்டாக நால்வர் தோள் போட்ட பாடையும் போகலாம். அது சாதாரணப் பாடையோ, தேர்ப்பாடையோ!

வழித்தடத்தின் இருமருங்கும் திருகுக்கள்ளி, கொடிக்கள்ளி, சப்பாத்திக்கள்ளி, சதுரக்கள்ளி, எருக்கு, குருக்கு, நொச்சி, கடலாமணக்கு, காட்டாமணக்கு, காரை, பூலாத்தி, உண்ணி, பீ நாறி, அழிசு, உடை, மஞ்சணத்தி, தொட்டாவாடி, பிரண்டை, பூச்சிமுள், ஆவாரை, ஊமத்தை, ஊதா, கொழுஞ்சி, குறுந்தட்டி, நாயுருவி எனப் பல்வகைச் செடி கொடிகள் படர்ந்து பாதையை மறிக்கப் பார்க்கும். ஊரில் பிணம் விழுந்தால், இரண்டு பேர் மண்வெட்டியுடன், வெட்டுக்குத்தியுடன் போய் முன்பே பாடை போகும் தடத்தைச் சுத்தப்படுத்துவார்கள்.

ஆற்றங்கரையின் மயானக்குழிகளின் வரிசையின் கீழ்ப்புறம் பழையாற்று நீரோட்டத்துக்குச் செல்லும் கால்தடம் கிடந்தது. நீண்டு கிடந்த கால்தடத்தின் இருவசமும் நாணல், ஆனையறுகு, கோரை, நீர்முள்ளி எனப் பம்பிக் கிடந்தன.

சுடுகாட்டுத் தடத்தில் எழுபதுபோல் பிராயமுள்ள ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். எங்கிருந்து புறப்பட்டு எங்கு போகிறார் என்று ஒரு கோளாறும் தெரியவில்லை. வடசேரி இறக்கத்தில் நடந்து, நெடுங்குளம் சாலை கடந்து, புத்தேரி கீழூர் வழியாகக் குளத்தங்கரையோரமாக வந்து, நொண்டிப் பாலத்தில் சாலையை மிதித்துக் கீழ்த்திசை நோக்கிப் பொடி நடையாக வந்து, பழையாற்றுப் பாலம் தொடங்குமுன் இடதுபுறம் பிரியும் தடத்தில் நடந்திருக்கலாம்.

அப்படியே மேற்கொண்டு நடந்து பூதப்பாண்டி போவாராக இருக்கும். பூதலிங்கசாமிக் கோயிலில் கொடியேறி ஐந்தாம் திருவிழா அன்று. அல்லது பூதப்பாண்டி நுழையுமுன் ஆண்டித் தோப்பை அடுத்த பழையாற்றுப் பாலத்தில் ஏறி, ஆற்றைக் கடந்து, வலப்பக்கம் திரும்பி, சீதப்பால் வழியாகத் தாழக்குடி போவாராக இருக்கும்.

நடந்து சுடுகாட்டு மேட்டை அடைந்தவர், சற்றுநேரம் கால் மடக்கி, ஆலமரத்து நிழலில் நின்ற சுடலைமாடன் காலடியில் அமர்ந்தார். இரு கைகளாலும் கால் முட்டுக்களையும், கறண்டைகளையும் தேய்த்து விட்டுக்கொண்டார். கையை உயரத்தூக்கி, சடைவு முறித்து நீட்டிப் படுத்து அறிதுயிலில் ஆழ்ந்தார். ஒரு நாழிகை சென்றபின் துயில் கலைந்து எழுந்து, சுடலைமாடன் பீடத்தின் வடக்கெல்லையில் நின்று மூத்திரம் பெய்தார். வில் போல் வளைந்து சென்று விழுந்த சிறுநீர்ப் பாய்ச்சலில் கட்டெறும்புக் கூட்டம் ஒன்று கலைந்து பரந்தது.

மயானக் குழியில் குவித்துப் போடப்பட்டிருந்த சாம்பல் மேட்டையும், அதில் நட்ட வாக்கில் நின்ற தென்னங்கருக்கையும், அதன் திறந்த வாயில் செருகப்பட்டிருந்த தென்னம்பாளையின் விரிந்த கதிரையும் பார்த்தார். என்ன மொழி என்று பகிர்த்து அறிய இயலாத கூவல் ஒன்று பிறந்தது அவர் தொண்டையில் இருந்து. ஏதோவொரு தேவபாடையாகவும் இருத்தலாகும். கூவலா அல்லது கேவலா என அவரே அறியவும் கூடும்.

பீடத்தில் இருந்து பைய இறங்கி, சமதளத்தில் உட்கார்ந்து நரங்கி, மயானக் குழியில் சரிந்து இளநீரையும் தென்னம்பாளையையும் நெஞ்சோடு சேர்த்தணைத்து, பிரயத்தனம் செய்து மேட்டுக்கு ஏறினார்.

பீடத்தின் மேலேறி நின்ற திருக்கோலத்தில் உலகத்துத் தீமையை எல்லாம் கணத்தில் கருக்கிவிடுவதைப் போன்று சினந்த விழிகொண்டு நின்ற சுடலையின் வாளேந்திய கரத்தில் கொண்டு தென்னம் கதிரைச் செருகினார். வெட்டப்பட்ட இளநீரினுள் உற்றுப் பார்த்தார். சுடலைமாடன் பீடத்தில் கிடந்த கற்பாளத்தில் கருக்கை மடார் மடார் என்று அடித்து உடைத்தார். கருக்குக்கு மாற்றாக வறண்டு செம்பட்டை பரந்து விரிந்து கிடந்த மண்டையை மோதி ஹாராக்கிரி செய்துவிடுவாரோ என சுடலை ஒருகணம் திடுக்கிட்டார்.

கருக்கு தொண்டோடு இரண்டாகப் பிளந்து உள்நின்ற அரை விளைச்சல் தேங்காப் பருப்பு இன்முகம் காட்டிற்று. சுடுகாட்டுச் சாம்பல் துகள்கள் இளம் தேங்காய்ப் பரப்பில் ஒட்டிக் கிடந்தன. சுற்றுமுற்றும் பார்த்து, சற்று நீங்கிக் கிடந்த காய்ந்த தேங்காய்ச் சிரட்டைத் துண்டை எடுத்து, இளந்தேங்காய்ப் பருப்பைக் கீறி அடர்ந்து எடுத்தார். நைவேத்தியமாக ஒரு கீற்று மாடனுக்கு வைத்துவிட்டு, மிச்சத்தை வயதான பற்கள் நோகாமல் ஒதுக்கி ஒதுக்கிச் சவைத்துத் தின்றார். வாயோரம் தேங்காய்ப்பால் வடிந்தது.

சுத்தமாகச் சுரண்டித் தின்று, இரு பாதிக் கதம்பைகளைத் தூக்கி எறிந்து, பழையாற்று வெள்ளம் பாயும் பள்ளத்துக்குப் போகும் ஒற்றையடிப் பாதையில் இறங்கிக் குனிந்து ஆற்றைக் குடித்தார்.

என்ன உட்குரல் ஒலித்ததோ, உடைகளைக் களையாமல் – உடை என்றால் என்ன? அழுக்கேறிய காவி நிறத்து வேட்டியும் தோள் துண்டும்தான் – அப்படியே இடுப்பளவு ஆழத்தில் இறங்கித் துழாய்ந்து நீராடினார்.

நாட்களோ, கிழமைகளோ, மாதங்களோ பஞ்சைப் பரதேசியாகத் திரிந்திருப்பார் போலும். நீராடப் புழைகள் இருந்தன. பல்துலக்க ஆலோ, வேலோ, வேம்போ, நாயுருவியோ கிடைத்தன. இரக்கப்பட்ட எவரோ நைந்து கிழிந்த அழுக்குத்துணி மாற்றச் சொல்லி, வேட்டியோ துண்டோ கொடுத்திருக்கலாம். அவரிடம் கட்டைப் பை, தோள் பை ஏதும் இல்லை. மடிசஞ்சி கூட இல்லை. எனவே கைநீட்டினால் பணம், அரிசி, பயிறுகள், காய்கள் கொடுத்தால் வாங்க மாட்டார் போலும். சமைத்த உணவு, மீந்த உணவு காப்பாற்றி வந்திருக்கலாம்.

பட்டினத்தடிகளோ, பதினெண் சித்தரோ, தாயுமானாரோ, இராமலிங்க வள்ளலோ, மஸ்தான் சாகிபுவோ அறிந்திருந்த சுவடுகள் இல்லை. எதைத் தேடுகிறார் என்றும் எதைக் கண்டடைந்தார் என்றும் யாரறிவார்? அறிந்தவருக்கே தான் எதைத் தேடினோம் என்றும் எதைக் கண்டடைந்தோம் என்றும் போதம் உண்டா?

தேங்காய் கருக்குத் தின்று, பழையாற்றில் நீராடி, ஈர வேட்டி துண்டுடன் நீர் சொட்ட சுடலைமாடன் சந்நிதியில் வந்து தொழுதார். இந்தக் கதாசிரியனுக்கு இப்போது சிவவாக்கியர் பாடல் ஒன்று இடைவெட்டுகிறது.

“தீர்த்தம் ஆட வேணும் என்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தமாட எவ்விடம் தெரிந்து நீர் இயம்புவீர்
தீர்த்தமாட எவ்விடம் தெரிந்து நீர் அறிந்தபின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாய அஞ்செழுத்துமே!

காய்தல் உவத்தல் அற்றுக் கண்சிமிட்டால் கண்டு நின்றான் சுடலை. சந்நிதியில் ஆலமரத்து அடர் நிழலில், மேற்கே தலைவைத்துக் கிழக்கே கால்நீட்டி மல்லாந்து படுத்தவருக்கு, உறக்கமோ கிறக்கமோ அள்ளிக்கொண்டு போயிற்று. வரப்போ தலகாணி, வாய்க்காலோ பஞ்சுமெத்தை!

எந்தப் பரபரப்பும், பாசாங்கும், இனமானச் செருக்கும், கொள்கைத் தரிப்பும் இன்றிப் படுத்திருந்தவரைச் சொற்பம் கருணையுடன் பார்த்தார் சுடுகாட்டுச் சுடலை. தனது வாழ்நாளில் இந்தச் சுடுகாட்டின் தட்டகத்தில் எத்தனை அழுகை, ஆதாளி, ஒப்பாரி, நெஞ்சடிப்பு, கசிந்துருகல், புலம்பல், பிலாக்கணம், பொச்சரிப்பு, பொய் நடிப்பு, வெளிச்சோகம் – உட்காமம், கண்ணீர், கம்பலை, காலாட்டல், கருணை பார்த்திருப்பார்? வழக்கமாக அவர் கையில் கமுகம் பூம்பாளை செருகுவதே மரபு. விவரம் தெரியாமல் மயானச் சாம்பல் துகளில் ஆடிய தென்னம்பாளைக் குலையைச் செருகிய கோபம் சுடலைக்குச் சற்றே தணிந்தது.

‘ஊரேதோ, பேரேதோ, உறவேதோ? கட்டை இப்பிடிச் சுடுகாட்டு மேடையிலே கெடந்து ஒறங்குகு!’ எனச் சற்றுக் கனியவும் செய்தார்.

பழைய பாடல் வரி ஒன்றுண்டு.

“பதிவிரதைக்கு இன்னல் வரும்; பழையபடி தீரும்,
பரமசிவன் அருள்புரிய வந்து வந்து போவார்”

என்றொரு பகடிப் பாடல். அதுபோல் சுடுகாட்டுச் சுடலையாண்டிக்குத் தனது காலடிக் கற்பாளத்தையும் பஞ்சணைபோல் பாவித்துப் பள்ளிகொண்டு யோகிபோல் துயிலும் இந்தப் பாவிக்குக் கொஞ்சம் அருள் சொரிந்தால் என்னவென்று தோன்றியது.

பாமரனுக்கு அருள்புரிய நாலு வேதம், ஆறு சாத்திரம், பதினெண் புராணம், ஆகமங்கள், வியாகரண வியாக்யான தத்துவார்த்த சநாதன சம்வாத தர்க்க சாத்திரங்கள் கரைத்துக் குடித்துக் கால்வழியே மோள வேண்டும் என்ற விதி உண்டா என்ன? சுடலையப்பனுக்கு ஆயுர்வேதம்கூடத் தெரியுமோ என்னவோ?

உடனே எடுத்த எடுப்பில் நீங்கள் கற்பனை செய்ய வேண்டாம். தமிழ் சினிமாக் கடவுளரின் சின்முத்திரைக் கையின் நடுவில் இருந்து ஒளிக்கீற்றொன்று புறப்பட்டு, படுத்துக் கிடந்தவரின் நெற்றியில் பாய்ந்து, அவர் உடல் சிலிர்த்து சர்வாலங்கார பூஷிதனாய் புத்தாடையும் புடைத்தெழுந்த சிக்ஸ் பேக் சதைத் திரட்சியுமாய் எழுந்து நின்று சுற்றுமுற்றும் கம்பீரமாய்ப் பார்ப்பது எல்லாம் நடப்பில்லாத காரியம்.

சுடலைமாடன் என்ன உலகை உண்டு இல்லை எனச்செய்யும் சக்திகள் கொண்ட பாலாழி பள்ளி கொண்டானோ, நச்சரவம் பூண்ட நஞ்சுண்டகண்டனோ அல்ல. அவனுக்குத் தங்கத்தேர், நவமணிப் பூண்கள், ஒரு லட்சத்து எட்டு வடைகளால் ஆன மாலை, எதுவும் வேண்டாம். கால் குப்பி வாற்றுச் சாராயமும் சுட்ட அயிலைக் கருவாடும் போதும். நாட்டுக்கோழி முட்டையும், கருஞ்சேவலும், ஒரு முறித் தேங்காயும், அரிசிப் பாயசமும், நான்கு பேயன் பழங்களும் என்பது விருந்து. சம்பாப் பச்சரிசியில் பொங்கலும் முற்றத்தில் வெட்டிய வெள்ளாட்டுக்கிடாவின் இறைச்சிக்கறியும் என்பது குடியரசுத் தலைவர் மாளிகை விருந்து.

ஆருத்ரா தரிசனமும் வைகுண்ட ஏகாதசியும் போன்ற மகத்துவங்கள் இல்லை. வேத கோஷங்கள் வேண்டாம், வில்லுப்பாட்டு போதும். வேணுகானம், வீணை இசை, சொகுசுகா மிருதங்க தாளமு வேண்டாம். நையாண்டி மேளம் போதும். பரதமுனி அடவு சொல்லிக் கொடுத்த நிருத்தம் வேண்டாம். கரகாட்டம், கணியான் கூத்து போதும். மேலும் சுடலைமாடன் தேவ பாஷை அறிந்தவரோ, பத்து சுலோகங்கள் மனனம் செய்து சொல்லி வித்வான், பண்டிட், விற்பன்னர் அடைமொழி கொண்டவரோ அல்ல. வட்டார வழக்கில் வர்த்தமானம் பேசுகிறவர்.

தனது ஆட்சி எல்லைக்குள் வந்து கிடப்பவரைப் பார்த்து, ‘சவத்துப் பயலை என்ன செய்யதுண்ணு தெரியலையே!’ என்று ஆயாசப்பட்டார்.

‘இவுனுக்கு என்ன செய்து நமக்கு என்ன ஆகப்போகுது? குவார்ட்டர் டாஸ்மாக் பிராந்திக்குப் போக்கு இருக்குமா? கிழிஞ்சு தொங்கும் சல்லடம் கச்சை மாத்தப் போறானா? பொங்கல் விட்டு, வெள்ளாட்டுக் கிடா வெட்டி படப்புச் சோறு போடப் போறானா?’ என்றும் ஆயாசப்பட்டார் சுடலை. தெய்வத்துக்கும் கட்டப் பஞ்சாயத்து ஆதாய நோக்கம் வந்துவிடும் போலும்!

“Fiddler on the roof” திரைப்பட நாயகன் “On the other hand” என்று மாற்றி யோசித்ததைப் போல, சுடலையும் கால் மாற்றிச் சிந்தித்தார். ‘நாம என்ன கட்சித் தலைவரா? என்ன செய்து கொடுத்தாலும் இருபத்திரண்டு சதமானம் கேக்கதுக்கு? செறுக்கி விள்ள நம்ம காலடியிலே வந்து பாவமாட்டு விழுந்து கெடக்கான். சரி! எந்திரிச்சு நம்மளை வேண்டிக் கும்பிட்டா அதைப்பத்தி ஆலோசிப்போம்’ என்று நினைத்தார். பேயாடு கானத்துப் பிறங்கு தழல் ஏந்தித் தீயாடும் சுடலைக்கு உடனே சிவவாக்கியர் பாடல் ஒன்று ஊடறுத்து ஓடியது.

“மண் கிடாரமே சுமந்து மலையுள் ஏறி மறுகிறீர்
எண்படாத காரியங்கள் இயலுமென்று கூறுவீர்
தம்பிரானை நாள்கள் தோறும் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடி வாழ்வது எங்ஙனே!”

சித்தர் பாடல் என்பதால் உரை சொல்லத் தேவையில்லை. மேலும் சிறுகதைக்குள் பாடல் வரிகளுக்கு உரை சொல்வதைப் பவணந்தி முனிவரும் அனுமதிக்கவில்லை.

சுடலையின் கருத்தியலுக்குள், முன்னால் கிடப்பவரின் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, பான் கார்ட், ஆதார் அட்டைப் பெயர் குருத்துப்போல் முளைவிட்டது. காசிலிங்கம்… பாஸ்போர்ட் எடுக்கும் நிர்ப்பந்தம் இல்லை அவருக்கு. தென்னம் பூக்குலையை எடுத்துவந்து கையில் செருகியதும் தென்னை இளநீர்த் தேங்காய்க் கீற்றைப் படைப்பதுபோல் வைத்ததும் மின்னலாய் வெட்டியது.

‘ஆமால்ல… சும்ம சொல்லப்பிடாது… கெழட்டு மூதிக்குத் தோணீருக்குல்லா… திருமூலர் சொல்லீருக்காரே 252-ம் திருமந்திரத்திலே!

“யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே!”

இதென்ன சாமானியமான பேச்சா? அப்பம் காசிலிங்கம் அவரால ஏன்றதை நமக்குச் செய்திருக்காரு… பெறவு அவுருக்கு ஒரு நல்லது செய்தா என்னா? கெட்டுக் குட்டிச்சுவராட்டா போயிருவோம்? இதுகூட இல்லேண்ணா நாமெல்லாம் ஒரு சாமிண்ணு என்ன மயித்துக்குக் கையிலே வெட்டுக்குத்தி தூக்கீட்டு முழிச்சு முழிச்சுப் பாத்துக்கிட்டு நிய்க்கணும்? கொள்ளாண்டே சொள்ளமாடா உமக்கு அருளு!’ என்றது மனசாட்சி.

கடவுளே ஆனாலும் அவருக்கும் ஒரு உள்மனது இருக்குமல்லவா? முன்னிற்பவர் பழவண்டி தள்ளுபவர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் என்று பேதம் தெரியுமா? கடவுளுக்கு இல்லை என்றாலும் சாத்திரங்களின்படி, ஆகம விதிகளின்படி ஆராதனை செய்யும் அர்ச்சகர் அறிந்திருப்பார்தானே! சுடலைமாடனின் கொடுவாள் மீசைக்கு இடையில் சிற்றொளி நறுமுகை பாய்ந்தோடிற்று. ‘நானார் என் நெஞ்சங்களார்?’ என்றும், ‘உன்னையே நீயறிவாய்!’ என்றும், ‘தன்னையறிதலே தகவு’ என்றும் யோசிப்பதும் போதிப்பதும் ஞானியர்க்கே சாத்தியம். கடவுளர் தன்முன் நிற்கும் இவன் யார், இவன் யோக்கியதை என்ன என்றுதானே சிந்திப்பார்.

எல்லாம் அறிந்த, முக்காலமும் உணர்ந்த, திரிகரண சுத்தி என யோசிக்கிற இறைவனுக்குத் தெரியவேண்டும்தானே! முன்னிற்பவன் அரசாங்கத்துக்குக் கட்டிய வீடு பதினெட்டு ஆண்டில் இடிந்து விழுந்ததேன் என்று அறியாதிருப்பானா ஆண்டவன்! சொந்த வீடு நூறாண்டு நிற்கத்தானே செய்கிறது. இடியும் வீட்டைக் கட்டியவன், அனுமதி அளித்தவன், ஆய்வு செய்தவன் என்பவன்கள் அணிவிக்கும் நவரத்தின கண்டி, வைரக்கிரீடம், மார்புக்கவசம், தண்டை, சிலம்பு, காப்பு எல்லாம் அவர் கண்ணைப் பொத்திவிடுமா? கண்ணை மறித்தால் அவன் கடவுளா அமைச்சனா?

சுடலைமாடன் வெளிக்கண் மூடி, அகக்கண் சுடர்விட நின்றார். நின்றாரும் நின்றார் நெடுமரம் போல் நின்றாரில்லை. முன்கிடந்து உறங்குகிறவன் யாவன் என சிந்தித்தார். அவர் தீட்சண்யத்தில் சில மாதங்கள் முன் நிகழ்ந்த காட்சியொன்று விரிந்தது.

பின்னிரவு சரிந்து கொண்டிருந்தது. அதிகாலை மூன்றரை இருக்கலாம். மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்தில் விரைவுப் பேருந்து ஒன்று வந்து திரும்பி நின்றது. சென்னை – திருவனந்தபுரம் என முகப்பு காட்டியது. ஐந்தரை மணிக்கெல்லாம் கேரளத் தலைநகர் எய்திவிடும். ஓட்டுநரும் நடத்துநரும் இறங்கி எதிரே இருந்த காப்பிக்கடைக்கு சாயா குடிக்கப் போனார்கள். நாகர்கோயிலில் இறங்குபவர்கள் எல்லோரும் எந்தப் பரபரப்பும் இன்றி பெட்டி, தோள் பை, கட்டப்பை, குட்டிச் சாக்கு எனக் குடும்பம் குடும்பமாக சாவகாசமாக இறங்கினார்கள்.

தோளில் சிறிய பையுடன் ஒருவரும், அவரின் தோளைப் பற்றியபடி எழுபது வயது சொல்லத்தக்க ஒருவருமாய்ப் பதனமாக இறங்கினார்கள். வயதானவர் கையிலும் ஒரு ரெக்சின் பை இருந்தது. அதனுள் மாற்றுடை இரண்டு செட், துண்டு, சில நூறு ரூபாய் பணம், பற்பசை, பிரஷ், போர்வை இருந்தன. கழுத்தைச் சுற்றி மப்ளர் கிடந்தது. மூக்குக் கண்ணாடியும்.

மூத்தவர் பாங்கிழவன் இல்லை. தடுமாற்றம் இன்றி நடந்தார். பேருந்து நிலையத்தின் வடக்குக் கோடியில், இன்னும் திறக்காத கடையின் படிக்கட்டில் மூத்தவரை உட்கார்த்தி வைத்தார் அவர் மகனான இளையவர். இருவர் உடையிலும் உடற்கூறிலும் வறுமைச் சுவடேதும் இல்லை.

தகப்பனிடம் மகன் ஏதோ குனிந்து ஓசையின்றிச் சொல்லி நின்றார். தகப்பன் எப்பொருளுமின்றி வெறித்துப் பார்த்தார். தேநீர் வாங்கி வருகிறேன் என்றோ, ஆட்டோ பிடித்து வருகிறேன் என்றோ, முகவரி விசாரித்து வருகிறேன் என்றோ, மறைவாக ஒன்றுக்குப் போய் வருகிறேன் என்றோ கூறியிருக்கக் கூடும்.

சில நிமிடங்களில் ஓட்டுநரும் நடத்துநரும் வந்து விரைவுப் பேருந்தில் ஏறி, மெதுவாக வண்டியை உருட்டி ஒழுகினசேரி போகும் சாலையில் திருப்பினார்கள். பேருந்து திரும்பும் இடத்தில் மறைந்து நின்ற மகனார், பேருந்தைக் கை காட்டி ஏறிக்கொண்டார். பேருந்து ஒழுகினசேரி, வடசேரி, கிருஷ்ணன் கோயில் விலக்கு என வேகமெடுத்துத் திருவனந்தபுரம் சாலையில் விரையலாயிற்று. தகப்பனார் காத்திருந்து படிக்கட்டில் கால் நீட்டிச் சாய்ந்து உறங்கலானார்.

சுடலைக்கு யாவும் தெள்ளத் தெளிவாயின. தன்முன் படுத்துக் கிடப்பவருக்கு தன்னைப் பற்றிய பேதமில்லை, உறவு – நட்பு நினைவுமில்லை, அகமில்லை புறமும் இல்லை என்று. காசிருக்கும் வரை கடைகளில் கேட்டு வாங்கித் தின்றிருப்பார். தன் சொந்தப் பெயரேகூடத் தப்பிப் போயிருக்கும். பிறகென்ன, உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

நினைப்பில் ஊர், முகவரி, உறவுகளின் பெயர்கள் யாவுமே கெட்டழிந்த நிலையிலேயே காணாமற் போக்கப்பட்டிருக்கிறார். காணாமற் போக்கியவருக்கும் அவர்க்கான நியாயங்கள் இருக்கலாம்!

சுடலைமாடனுக்கு இரு வினாக்கள் இருந்தன முன்னால். ஒரு சன்னப் பார்வையால் காசிலிங்கத்துக்கு உறக்கத்திலேயே விடுதலை வழங்கிவிடலாமா? இல்லை பிறழ்ந்த நினைவுப் பிலங்களின் பழங்கணக்குகளை வழங்கி, தனது உண்டியலையும் திறந்து சில்லறை காட்டி, சொந்த ஊருக்கே திரும்பிப் போக ஆற்றுப்படுத்திவிடலாமா?

உயிருக்கு விடுதலை வழங்குவது தனது அதிகார வரம்பினுள் இல்லை என்று தோன்றியது சுடலைக்கு. அது கூட்டு ஒருவனை வேண்டாக் கொற்றவன் கூற்றுவனின் ஆட்சிப்பணி. மாற்றாக மறதி நோயைக் குணப்படுத்தி, மறுபடியும் சாதாரண மானுடனாக்கி விடலாம் எளிதாக! ஆனால் பெற்ற மகனே கருதிக் கூட்டி அறிந்தே தொலைத்துவிட்டுப் போன பின்பு, அந்த மகன் இனி இவர்க்கு எதற்கு என்றும் தோன்றியது.

சுடுகாட்டுக் காவல் பணி ஆற்றும் சுடலைமாடனின் தீர்மானம் இடதுமாகலாம், வலதும் ஆகலாம்!


ஓவியம்: https://commons.wikimedia.org

இதழ் 13 பிற படைப்புகள்

நாஞ்சில் நாடன்

டிசம்பர் 31, 1947ஆம் ஆண்டு பிறந்த நாஞ்சில் நாடனின் இயற்பெயர் ஜி.சுப்பிரமணியன். நாஞ்சில் நாட்டில் வீரநாராயணமங்கலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். பல ஆண்டுகள் மும்பையில் பணி நிமித்தம் வசித்து, பின்னர் கோவைக்கு திரும்பியவர், தற்போது கோவை புதூரில் வசிக்கிறார். மனைவி, மகள், மருமகன் மற்றும் இரண்டு பேரன்கள் உடன் வசிக்கிறார்கள். மகன் மென்பொறியாளராக ஹைதராபாதில் பணியாற்றி வருகிறார். சூடிய பூ சூடற்க எனும் சிறுகதை தொகுதிக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர். கனடா இலக்கிய தோட்டம் விருது பெற்றவர். அவர் பெயரில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு விருது நிறுவப்பட்டு ஒவ்வொரு வருடமும் அளிக்கப்படுகிறது.

ஆறு நாவல்கள், 150 கதைகள், 400க்கும் மேற்பட்ட கட்டுரைகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள், நாற்பதிற்கும் மேற்பட்ட நேர்காணல்கள், பழந்தமிழ் இலக்கிய வாசிப்பு என நவீன தமிழ் இலக்கியத்தின் அனைத்து துறைகளிலும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொய்வின்றிப் பங்காற்றி வருபவர் நாஞ்சில் நாடன்.

https://nanjilnadan.com/

View Comments

  • தமிழாசிரியருக்கு வணக்கம்!

    நலம் தொடர்க!

    " இடமோ வலமோ" படித்தேன். முதலில் சுடுகாட்டின் விளக்கமான விவரணைகளிலிருந்து பழையாற்றின் மேலக்கரை செடிகளின் வரிசை வரை கதையின் போக்கு பிடிபடவில்லை. எதைக்கொண்டு நகர்த்தப்போகிறீர்கள் என்பது ஊகத்தில் சிக்கவில்லை, காசிலிங்கம் நடந்து வரும்வரை. கிடைத்ததைத் தின்று கண்ட இடத்தில் உறங்கும் முதியவரென்றாலும் சுடுகாட்டில் அவர் கேவல் வெளிப்படும் இடம் வித்தியாசமானது. சுடலைமாடன் காசிலிங்கத்திற்கு உறக்கத்திலேயே விடுதலை வழங்குவதுதான் சரியென்று பட்டது. அறிந்தே தொலைத்ததை தொலைத்தது அறிதலென்பது பெரும் வதையே. லா.ச.ரா. ஒரிடத்தில் " துரோகம் தெரியாமல் இருப்பதே தேவலை" என்று எழுதியிருப்பது நினைவில் வந்து சென்றது. பழையாறையின் மேலக்கரையின் சுடுகாட்டில் "ஹரகிரி" என்ற சொல் வந்து விழுவதை எதிர்பார்க்கவில்லை. உணர்ச்சிகளின் அழுத்ததை உரையாடல்கள் இல்லாமல் சொல்லிச்சென்றது கதையின் அழுத்தத்தைக் கூட்டியதென்று நினைக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.

    நான் வணங்கும் இறை தங்களுக்கு எல்லா நலன்களையும் ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்.

    அன்புடன்
    நா. சந்திரசேகரன்

  • அருமையாக உள்ளது! ஆற்றொழுக்கு போல் செல்கிறது! இதுதான் நாஞ்சில் நாடன்!

  • வாழ்க்கை முடியும் இடமே கதைக்களமாக இருப்பது சிறப்பு...

    கதையின் ஓட்டம் தெளிந்த நீரோடையாய் சென்று கடலில் கலப்பது மிகவும் அருமை ஐயா ....

    தங்கள் தமிழ்ப்பணி சிறக்கட்டும்...!!!!

Share
Published by
நாஞ்சில் நாடன்

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago