அந்நியர்கள் - கோ.கமலக்கண்ணன் - பானு

அந்நியர்கள்

13 நிமிட வாசிப்பு

மேல்மாடியின் திறந்த வெளியில் உறங்கியிருந்தாள் ஹேமா. இரவில் உறங்க நெடுநேரமாகி இருந்தது. பின்னிரவின் குளிரும் அக இருளின் கேள்விகளும் ஒன்று சேர்ந்து அவளுடலை நடுங்கச் செய்தன. குளிர்வளி புகாவண்ணம் போர்வையை இழுத்துத் தன் மேனியை அவள் மூடியபோதும் அகத்தை மூடுவது அத்தனை எளிதாக இல்லை. அரைகுறையாய் விழித்தபோது வானம் தெளிந்திருந்தது. கதிரவன் கண்கசக்கி விழித்துக் கடைவாயில் ஒளியுமிழ்ந்தபோதும் அவளுக்கு உறக்கம் கலையாமல் நீண்டிருந்தது.

விழித்து மணி பார்த்ததும் தன் உறக்கத்தை எண்ணி ஹேமாவுக்கு வியப்பெழுந்தது. நெடுநாட்களுக்குப் பிறகு நல்லுறக்கம். மெல்ல ஒளி வெப்பமாகி அவள் கன்னங்களில் வருடிக் கனப்பேற்றியபடி அவளை அணைத்து உறங்க வைத்திருக்கிறது. சினம்கொண்ட தாயென பானு செங்குத்துக் கதிர்களைத் தெளித்த பின்னரே அவள் விழித்திருக்கிறாள். கண்விழித்து கைநீட்டிச் சோம்பல் முறித்து துயிலைத் துரத்தியதும் தோன்றிய முதல் எண்ணம் அன்று விடுமுறை தினம் என்பது. அவ்வெண்ணமே அவளை இறகுபோல் எடையற்றதாக ஆக்கியது. கண்களைச் சிமிட்டி மென்மையாகத் திறந்தபோது நீலப்போர்வை வானம் தன்னை மூடியிருந்ததுபோல அருகாமையில் தோன்றியது. முறுக்கிய விரல்களை நீட்டினால் தொட்டுவிடலாம் என்பது போல விரிந்திருந்த விசும்பு மீண்டும் அவள் சோம்பல் முறிக்க வெளியாகித் தள்ளிச் சென்றது! வானத்தில் ஆங்காங்கே வெண்முகில்சேறு தீற்றல்களாக மெழுகியிருந்தன.

முந்தைய இரவு அறைக்கதவைத் திறக்காமல் உட்தாழிட்டிருந்தான் தேவ். முன்னேற்பாட்டின்படி அவள் கதவைத் தட்டியபோது எச்சரிக்கும் விதமாகத் தனக்குத் தனிமை தேவை என்று குறுஞ்செய்தியில் தெரிவித்தான். சில நாட்களாக தேவ் அவளிடம் விகாரமாக வன்மத்துடன் நடந்துகொள்ளவில்லை என்பதும் அவன் தனக்குள் வாழும் ஒரு கொடிய மிருகத்துடன் போராடி மெல்ல தேறிவருகிறான் என்பதும் அவளை மலரச் செய்தன.

இனிய கணவனின் கதகதப்பில் கட்டியுறங்காமல் மொட்டை மாடியில் நாய்போல் சுருண்டு உறங்குவது அத்தனை உவப்பேற்படுத்தாது என்றபோதும் தேவ் தன்னைத் துன்புறுத்தும் நோய் பற்றிய ஒரு ஒழுங்கைச் சுயமாக அவதானித்து, போராடி வருவதை அவள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்றே கருதினாள்.

அவனது அவசங்களும் வலியும் எண்ணும் தோறும் அவள் மார்பில் ஒரு குறுமின்னலைச் செலுத்தின என்றபோதும் அவையே அவனை இத்தகைய போராட்டத்திற்கு அணியமாக்கிவை என்ற எண்ணம் தோன்றியதும் அவனது போராட்டம் பெருமிதமளித்தது. தன்னைக் கடுமையாக வருத்திக்கொள்கிறான். மெல்ல மெல்ல இனம்புரியாத அந்த உளச்சிக்கலில் இருந்து விடுபட வழிதேடுகிறான். ஹேமா வழங்கிய அறிவுரைகளையும் கடந்து தன்னை வருத்தி அறிதலின் லயத்தில் ஒருசில தருணங்களில் தன்னையே மீறிச்செல்கிறான்.

அவள் மீதான அவனது மென்மையான காதல் முன்போல இனி ஒருபோதும் நிகழச் சாத்தியமில்லை என்று சில நாட்கள் முன் அவனே புலம்பியதைத் தற்போதைய மெல்லிய முன்னேற்றத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தாள். இன்றைய அவனது நிலை தெம்பூட்டியது. அவனது சமீபகால வாழ்வின் நினைவு வீமணம்போல விகசித்து அவளை நிரப்பியது.

***

ஓவியம்: பானு

தேவ் ஹேமமாலினியை மணந்துகொண்டதில் இருந்து மூன்று ஆண்டுகள் அவள் மீது வன்முறையை நிகழ்த்தியதில்லை. அவன் இயல்பிலேயே அது கிடையாது. அவளை மணமுடிக்கும் முன் அவன் காதலித்த நான்கு ஆண்டுகளிலும் அவன் வன்முறையற்றவன்தான். எளிதில் அழக்கூடியவன். ஆனால் ஒருபோதும் பிறரைத் துன்புறுத்தாதவன். அவனுக்கு அவளை ஒரு நாய்குட்டியைப் போல் கொஞ்ச மட்டுமே தெரியும். அவளைச் சிரிக்கவைப்பதே முதன்மையான நோக்கம் என்றிருந்தவன். அவள் வறண்டால் மழையாகத் துணிந்தவன். அவள் வெகுண்டால் பனியாக உறைபவன். ஹேமாதான் அவனைச் செல்லமாக அடிப்பதும் சினமெழும்போது காரணமே இன்றி அவன் நெஞ்சில் கடுமையாகக் குத்தி, மோதி தன்னைத் தணித்துக்கொள்வதுமாக இருந்தாள்.

ஒருமுறை அவள் படுக்கையை மடிக்கவில்லை என்ற சிறுபிள்ளைத்தனமான காரணத்தைச் சுட்டி தண்டனை அளிக்கப்போவதாகச் சொல்லி அவளது தளர்வாடைக்குள் புகுந்தவன் மார்புக்கதுப்புகளுக்கு இடையில் பூனையாக மாறி முகம் செருகினான். அவ்வப்போது பாலுறிஞ்சும் ஒலியெழுப்பி அவளைக் கூசிச் சிரிக்க வைத்தது அப்பூனை. தன் மீசையால் முலைக்குவையை இன்காயம் செய்தபடி ரோபோட் பூனையைப் போல ‘நான் இங்கதான் இருப்பேன்…’ என்று கீச்சுக்குரலால் நயப்புடன் முனகியது அப்பூனை. பூனை போல குரலெழுப்ப முடியாமல் ரோபோட் பூனை போல அவன் பேசுவது அவளை மேலும் சிரிக்க வைத்தது. ஒரு மணிநேரம் இனிய இம்சையை அனுபவித்தாள். அவளை அகலவிடாமல் வைத்திருந்து தாமதமாகப் பணிக்கு அனுப்பியது அப்பூனை. அதுவே அவன் உள்ளம், அவன் பண்பு. அதுவே அவர்களது தாம்பத்ய வழக்கம்.

ஆனால் வெங்கோடையில் முன்னறிவிப்பின்றிப் பதற்றத்துடன் விண்ணிலிருந்து வீழும் சிறு சிறு கற்களெனக் கோபத்துடன் வரும் ஆலங்கட்டி மழையைப் போல அந்த முதல் அறிகுறி வெளிப்பட்டது. ஓரிரு வாரங்களாக ஏதோ மன உளைச்சலில் அவள் மீது கடுமையாக எரிந்து விழுந்தான். அவன் அவளை எதிர்க்க நினைக்கவில்லை என்றும் விளையாட்டாகவே அப்படி நடந்துகொள்கிறான் என்றும் அவனைப் பொருட்படுத்தாமல் இருந்தவளுக்கு அன்று தெளிவான செய்தியைத் தெரிவித்தான். எதிர்பாராத கொஞ்சல் விளையாட்டுகளுக்கு நன்கு பழகியிருந்த ஹேமா அன்று அவனைச் சீண்டி விளையாடும் பொருட்டுத் தன் மேலாடையின் கொக்கியைப் பொருத்துமாறு அழைத்தபோது தன்னிச்சையாக எழுந்து அருகே வந்தவன் அவளது புறங்கழுத்துக்குக் கீழ் ஓங்கி அறைந்தான். அதுவரை அவளறிந்திருந்த தேவின் கரமல்ல அது. ஒரு அரக்கனின் கரம். முதுகுத் தசையில் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி வழித்ததைப் போல உணர்ந்தாள். சில நொடிகளுக்கு வாய்விட்டு வலியை வெளிப்படுத்த இயலாதவள் உடலே குரலாகத் துள்ளினாள். மூச்சைச் சார்ந்திருக்கும் சொற்கள் அவள் குரல்வளையிலேயே சிறைபட்டு நாவை அடைய முடியாமல் தவித்தன.

சில நிமிடங்கள் வலியால் துடித்தாள். மெல்ல வலி குறைந்தபோதும் அவள் கண்ணீர்ச் சுரப்பு நிற்கவில்லை. அவளைப் பார்த்தவாறிருந்த தேவ் மெல்ல தன்னிலை மீண்டவனைப் போல அவளிடம் அவ்வாறு நடந்துகொண்டதற்காகப் பலமுறை அழுது மன்னிப்பு கோரினான். தான் அந்தக் காரியத்தை அறிந்து செய்யவில்லை என்றும் ஏதோ ஒரு ஆற்றல் தன்னுள் இருந்து தன் கையைப் பயன்படுத்தி அதைச் செய்துவிட்டதாகவும் ஈரவிழிகளுடன் மன்றாடினான். அவன் அன்று மிகக் குழம்பி காணப்பட்டான். ஒன்று அவன் பிழை செய்துவிட்டு தவிக்கும் குழந்தையாக இருக்க வேண்டும் இல்லையேல் உண்மையைக் கரந்து வன்மம் உமிழும் சாத்தானாகவோ இருக்க வேண்டும். தான் தான் அன்று ஹேமாவை அப்படித் தாக்கியது என்ற உண்மையை அவனாலேயே எள்ளளவும் நம்ப முடியவில்லை. தனக்குக் கடுமையான தண்டனை அளிக்கும்படி கோரி அவள் முன் மண்டியிட்டு அழுதான். அவள் பாதங்களில் கண்ணீர் சொரிந்தான். ஒன்றுமே புரியாதபோதும் தன் முதுகில் விறுவிறுப்பு அடங்குவதற்கு முன்பாகவே மாலினியால் அவன் நிலை கண்டு இரங்க முடிந்தது.

இரண்டாவது முறை வன்ம வெளிப்பாடு அப்படி நிகழவில்லை. தெளிவான உரையாடலுக்கிடையே மிக இயல்பாக நிகழ்ந்தது. சிறந்த வகை மது எது என்பது தொடர்பாக இருவருக்குள்ளும் ஒரு அற்ப விவாதம் நிகழ்ந்தது. தேவ் வோட்காவுக்கும் மாலினி விஸ்கிக்கும் வழக்காடினார்கள். ஒரு புள்ளியில் கட்டுப்பாடு இழக்காதவனாய்த் தன் பலம் முழுக்கத் திரட்டி விரல் முட்டிகளில் ஏற்றி அவள் தலையில் கொட்டினான். அவன் தாக்குவதற்கு முன்பே அவளுக்குள் அச்சம் புகுந்தது. நிதானமான வன்மத்தில் வன்மத்தைவிட அது நிகழ்த்தப்படும் விதமே கொடியது. மதுவைப் பற்றிப் பேசினானே ஒழிய அவன் மதுபோதையில் நிச்சயம் இல்லை என்பது இன்னும் அவளைப் பீதியாக்கியது. கூரிய பனிக்கத்தி விழியறியா உயரத்தில் இருந்து எதிர்பாராத தருணத்தில் நடுத்தலையில் விழுந்து தன் ஆற்றலை வேர்களெனப் பரப்பி அவளது தலை, கழுத்து, உடலெங்கும் நிரப்பியது. சிலிர்த்தாள். துள்ளினாள். இம்முறை அவன் தன் பிழைக்கு வருந்தி மன்னிப்பு கோரவும் இல்லை அப்படிக் கோரியிருந்தாலும் அவனை மன்னிக்க அவள் தயாராகவும் இல்லை.

அன்றிரவே ஒரு விடுதியில் அறையெடுத்து அங்குச் சென்று தங்கியவளுக்குத் தன் வலியைவிடப் பெண் மீது தேவ் நிகழ்த்தும் வன்மம் கற்பனையிலும் எண்ணி அறியாத ஒன்றாக, தாளமுடியாததாக இருந்தது. இரவு முழுவதும் அவனைக் கொல்வது, மணமுறிவு செய்வது, மறப்பது, பழிதீர்ப்பது குறித்து வெவ்வேறு சாத்தியங்களைக் கற்பனையில் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்த்திப் பார்த்துவிட்டு உறங்க இயலாமலும் முயலாமலும் தவித்தவள், அத்தகைய செய்கைகள் தன்னால் இயல்வதல்ல என்ற முடிவுக்கு வந்தாள். உண்மையில் அவன் ஏன் அப்படி நடந்துகொண்டான் என்று தெரியாமல் அவளால் அவனை விலக முடியாது. விரும்பியவர்களைக் காரணமின்றி வெறுப்பது வெறுப்பவர்களுக்கே பெருவலியென முடியும். மறுநாளே மீண்டும் அவனைச் சென்று சேர்ந்தாள். அவன் விழிகள் அழுது வறண்டவைபோல் காட்சியளித்தது அவளுக்கு மகிழ்வழித்தது. அவன் உடல் வறட்சியில் மணல்போல மின்னியது. ஓடித்தாவி அவன் மீது ஏறிக் குழந்தைபோல் தொற்றினாள். அவன் வறட்சியை முத்தத்தால் கரைத்தாள். கண்ணீரின் ஈரக்கசிவால் தொலைந்த உராய்வு அன்றைய கலவியை மகத்தானதாக்கியது.

மாலினியின் அண்ணன் பிரேமைத் தற்கொலை எண்ணங்களில் இருந்து மீட்டுத்தந்த புகழ்பெற்ற உளச்சிகிச்சை நிபுணர் பிரபு மருதாச்சலத்திடம் தேவை அழைத்துச் சென்றாள். தேவ் அதற்கு ஒத்துழைத்தான் என்றபோதும் தன் நிலையைக் கண்டு முன்பைவிடக் கடும் குழப்பத்திலும் அவமானத்திலும் இருந்தான். முன்னங்கைகளில் கீறல்களால் கோட்டோவியங்கள் தீட்டியிருந்தான். பற்களின் ஈறுகளில் கருமை படர்ந்திருந்தது. விழிகள் உயிரற்றவையாக உருண்டன. மருத்துவர் அவனை உறக்கநிலைக்கு அழைத்துச் சென்றார். உண்மையில் சிரமப்பட்டார். வழக்கத்திற்கு மாறாக உறக்கநிலைக்குச் செல்வதற்கு தேவ் இணங்குவதாகவும் ஆனால் அதற்கு நேரெதிராக அவனுக்குள் இருந்து ஒரு உறக்க எதிர்ப்பு உண்டாவதாகவும் தெரிவித்தார். உளப்பிளவு நோயாக அது இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் ஆய்வு செய்தார். ஆயினும் அவரால் அறுதியிட்டு எதையும் சொல்ல முடியவில்லை.

எந்தச் சோதனையும் மருத்துவமுறையும் பலனளிக்காமல் போகப் போக தேவின் வன்மம் அதிகமானது. அதை அவன் கட்டுக்குள் வைக்க இயலாமல் தன்னைத் தானே ஒரு அறையில் பூட்டிக்கொண்டான். அவன் அலறலைக் கேட்கும்போது தன் இதயத்துடிப்பு ஒலிபெருக்கியால் அலறுவதைப் போல உணர்ந்தாள். அவனைக் காத்தாக வேண்டும் என்ற தீவிரம் அவளுக்குள் ஊறியது.

உரையாடலிடையே உளச்சிகிச்சையாளர் தந்த ஒரு வழி அவனுக்கு நிச்சயம் உதவும் என்று அவள் உள்ளம் சொன்னது. அக அவதானிப்பு என்ற உளவியல் முறையைப் பயன்படுத்துவதே சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தாள். மாபெரும் அறிவுத்தளங்கள் தள்ளாடும்போது உள்முகமாகத் திரும்புவதே சரியானதாக இருக்கும். நடப்பதும் விளைவதும் எப்படியோ போகட்டும். தாம் முழுமையாக இதைச் செய்யலாம் என்று முடிவெடுத்தாள். விண்வெளி ஓடங்களில் தேடியடையும் கண்டடைதல்களும் அளையிருளில் அமர்ந்து முனியும் தியானத்தின் கண்டடைதல்களும் ஒன்றே!

அறிகுறிகளற்ற நேரங்களில் தேவை அழைத்து உரையாடினாள். அவன் விழிகள் தசைநார்களை இழந்து இரண்டு வெண்கோலிகள் என்றே உருண்டன. அமைதி, சினம், மகிழ்வு, அஞர், வலி, மறதி, உறக்கம், உறக்கமின்மை என்று அவன் தன்னை உணரும் அத்தனை வகை பரிமாணங்களையும் நன்கு உணர்ந்து விரிவான குறிப்புகள் எடுக்க வேண்டுமெனக் கோரினாள். ஆரம்பத்தில் அதில் ஆர்வமில்லாதவனைப் போல தேவ் நடந்துகொண்டாலும் மெல்ல மெல்ல உத்வேகம் பெற்று, தன் அத்தனை நொடிகளையும் மிக விரிவாகப் பதிவு செய்தான்.

அவனுக்குள் தன்னுணர்வின்றிப் பெருகிய வன்மத்தையும் அப்போது அவன் உடலுக்குள் நிகழும் ரசாயன மாற்றங்களையும் அவனால் நினைவில் மீட்டெடுக்க முடியவில்லை. தான் வன்மம் மிக்கவனாக ஆகும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தன் அகத்தில் என்ன நிகழ்கிறது என்பதன் தடயம் சற்றும் நிலைத்திருக்கவில்லை. ஒலியாகவோ வலியாகவோ ஞாபகமாகவோ ஒரு தடயமும் எஞ்சியிருக்கவில்லை. யாரோ எங்கிருந்தோ விழியறியா உறிஞ்சியை நீட்டி அவன் அகத்திலிருந்து அந்தக் கணங்களின் உணர்வுகளை மட்டும் உறிஞ்சிவிடுகிறார்கள். சூறைக்காற்று கூரைமீதென அவனை ஆட்கொண்டு ஆடி அகன்றுவிடுகிறது சன்னதம் போன்ற அந்நோய்க்குறி. ஆயினும் அத்தருணங்களுக்கு முன்னும் பின்னும் அவன் உடல்நிலையில், மனநிலையில், உணர்ச்சிகளில் எல்லாம் என்ன வகையான மாற்றங்கள் உண்டாகின என்பதைக் கவனமாகக் கேட்டறிந்து, அவனது குறிப்புகளையும் தன் குறிப்புகளையும் சேர்த்துத் தனியாக ஒரு பதிவேட்டைப் பராமரித்தாள் ஹேமா.

***

சென்னைப் பெருநகரின் கடல்பகுதியை ஒட்டியுள்ள துணைப்பெருநகரம். அங்கு சமீபகாலமாகப் பெண்கள் மீது ஆண்கள் பிரயோகிக்கும் வன்முறைக் குற்றங்கள் புரிந்துகொள்ள இயலாதபடிப் பெருகி வருவதைத் தன் நண்பன் பரக்கத்திடமிருந்து அறிந்துகொண்டாள் ஹேமா. தேவ் இறந்து நகர்ந்திருந்த நத்தை நான்காண்டுகள் ஹேமாவை உருமாற்றி இருந்தன. அரசின் கொள்கை முடிவுகளிலும் பல கமுக்கமான செயல்திட்டங்களிலும் மாநிலத்தின் பாதுகாப்புத் துறைக்கான மென்பொருள் உருவாக்கத்திலும் முக்கியப் பங்காற்றக் கூடிய ஒரு சட்ட, பண்பாட்டு, அரசியல் பரிந்துரை நிறுவனத்தில் பணியாற்றினாள். தன் பணியன்றித் தனிமை மட்டுமே துணையிருக்க வாழ்ந்து வந்தாள். அவளுடைய கல்லூரி நண்பன் பரக்கத் அரசாங்கத்தின் கமுக்கமான ஒரு துறையில் மிக முக்கியப் பொறுப்பில் இருந்தான்.

மாலை நேர நடையின்போது பரக்கத்தைச் சந்திப்பது அவளது தினசரி நிகழ்வானது. ஒருமுறை ஹேமா தற்செயலாகத் தன் கணவன் தேவ் பற்றி விவரித்ததும் பரக்கத்தின் முகத்தசைகள் சுருங்கின. சொல்லின்றி கேட்டான். அவன் கண்களில் செந்நிறம் அடர்ந்தது. இதுவரை ஏன் இந்தத் துயரைத் தன்னிடம் பகிரவில்லை என்று அவளிடம் வினவினான். தன் பணியின் மையமே இந்தப் பிரச்சனைதான் என்பதை விளக்கினான். தெளிவாகப் புரியாத ஒரு அரக்கத்தனத்துடன் உலகம் போராட வேண்டிய நிலை உருவாகி இருப்பதாக மட்டும் அவளிடம் சொல்லிவிட்டு அது தொடர்பாகச் சேகரித்த சில நிழற்படங்களைத் தன் தனிக்கணினியைத் திறந்து கடவுச்சொல்லிட்டு அவளிடம் காட்டினான். அவன் வாயிலாக ஹேமாவால் எளிதாக தன் தேவுக்கும் அந்தக் கோப்புகளில் இருந்தவர்களுக்கும் இடையேயான ஒற்றுமைகளைக் கண்டறிய முடிந்தது. அவள் புருவங்களும் சுருங்கின. குற்றங்களின் எண்ணிக்கை பெருகியது தொடர்பான கோப்புகளை பரக்கத்திடமிருந்து தன் மின்னஞ்சல் பெட்டியில் பெற்றுக்கொண்டவள் அதில் அவள் வாசித்த செய்திகள் மிகக் குழப்பம் தரக்கூடியனவாகவும் மனித இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் அச்சுறுத்தல்களாகவும் இருந்ததை உணர்ந்தாள்.

ஆரம்பத்தில் புரியாத செய்திகள் மீண்டும் மீண்டும் படித்து ஆராய்ந்து கருமமே கண்ணாயிருந்தவளுக்குப் புலப்படத் தொடங்கியது. இணைப்புகள் பிடிபட்டன. தேவ் பட்ட வலிகள் இன்று பலரையும் தீண்டியிருப்பது அவளுக்குள் கரந்திருந்த ஊக்கத்தைக் கிளறியது. குறைந்தது ஒரு தடயமேனும் கிட்டியாக வேண்டும். தேவின் இருப்புக்கும் மறைவுக்கும் சேர்த்து ஒரு பதில் இருந்தே தீர வேண்டும்!

புலனாய்வுத் துறை, தொல்லியல் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, உடற்செயலியல் துறை என்று பல்வேறு துறை நிபுணர்களின் அறிக்கைகள் அந்த மந்தணக் கோப்புகளில் இருந்தன. சமீபகாலமாக நரம்பியல் மண்டலம், நாளமில்லாச் சுரப்பிகள் மண்டலம், உளவியல் ஆகிய துறைகளின் விற்பன்னர்கள் ஒன்றிணைந்து இந்தக் குற்றவியல் செயல்பாடுகளைத் தீவிரமாக ஆராய்ந்து வந்துள்ளனர். மூளையில் இருந்து சுரக்கும் செரடோனின் என்ற ஹார்மோன் குறைபாட்டினால் ஆண்களில் இயல்பாகவே சுரக்கும் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோனின் சுரப்பு வீதம் அதிகமாகி அவர்களின் வன்முறைக்குக் காரணமாக அமைகின்றன என்றும் சடுதி மாற்றத்தின் காரணமாக நரம்பு மண்டலத்தின் கிளர்வு ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால் அவர்களது வன்முறை அதிகமாகி வருகிறது என்றும் பல்வேறு கோணங்கள் அவற்றில் இருந்தன என்றபோதும் காரணத்தையோ முடிவையோ அறுதியிட்டு அவை குறிப்பிடவில்லை. மானுடத்தின் முன்னிகழ்வுகளையே அந்த அறிக்கைகள் அடிப்படையாகக் கொண்டிருந்தனவே ஒழிய பிரச்சனை இதுவரை மானிடம் காணாத புதிய சிடுக்கை எதிர்நோக்குவதை எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

மே பத்து அன்று வங்கக்கடலில் ஏற்பட்ட விநோதமான பெருவெடிப்பை ஒட்டிய ஆய்வுகளும் அறிக்கைகளும் இருந்தன. அந்த வெடிப்பின் காரணமாகச் சில புதிய வகை கதிரியக்கம் வெளிப்பட்டுக் காற்றில் பரவி சென்னை பெருநகரத்தைச் சூழ்ந்து இந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்ற இயல்பாகவே எழக்கூடிய சிந்தனையில் தொடங்கி வேற்று கிரகத்தவரின் ஊடுருவலாகவும் இது இருக்கலாம் என்பது போன்ற மிகச் சிடுக்கான கோட்பாடுகள் வரை மானுடச் சிந்தனைகளுக்கு எட்டிய அத்தனையும் அவற்றில் இருந்தன. ஆனால் எதிலுமே அறுதியான கருத்து எட்டப்படவில்லை என்பது ஹேமாவுக்குள் ஒரு சோர்வை ஏற்படுத்தியது. மனிதனுக்குள் சுரக்கும் ஒரு துளிக்கும் பேரியற்கையில் சொட்டும் ஒரு துளிக்கும் உள்ள உறவின் இடையேயான ஒத்திசைவை எட்ட இயலாத அளவுக்குத்தான் இன்னும் மனிதனின் மூளை வளர்ந்துள்ளது என்ற எண்ணம் வந்ததுமே அவளது சோர்வு தீவிரமடைந்தது.

ஆனால் சோர்வின் முடிவு கிளர்வே. உறக்கத்தின் முடிவு விழிப்பே. அந்தியிருள் உச்சக்கருமை கொண்டதும் நைந்து வெளிறத் தொடங்கியாக வேண்டும். அவள் மனத்தில் ஆர்வமும் கிளர்ச்சியும் தேவைக் காப்பாற்ற வேண்டும் என்ற உத்வேகமும் பன்மடங்கு பெருகியது. தனியொருத்தி என்ன செய்ய இயலும் என்ற ஊக்கத்தடைக் கேள்விகள் இல்லாமலே போயின. எதுவாக இருந்தாலும் இது மானுடத்தின் தனித்தன்மையையே அறைகூவல் விடும் ஒரு நிகழ்வு என்று அவளுக்குப் புரிந்தது. ‘என் தேவ் இந்தப் புதிரிலிருந்து விடுபட வேண்டும். அவன் பட்ட துன்பமெல்லாம் பொருளுடையதாக வேண்டும். அவனது அன்புக்கு கைம்மாறாக நான் என் வலியையும் சகிப்புத்தன்மையையும் வளர்த்தெடுத்தாக வேண்டும்’ என்று அவள் உளக்குரல் அரற்றியபடியே இருந்தது. உலகுக்கே தீர்வு வழங்கத் தன் உள்ளத்திற்கு நெருக்கமான ஒரு காரணம் இருந்தால் போதும்.

***

மே பத்து 2045. அறிவியலால் தெளிவாக விளக்க முடியாத ஒரு இடர் நேரிட்டது. வங்கக் கடலின் ஒரு பகுதியில் எறும்புத்திண்ணி மண்ணைத் தோண்டி எறியும்போது அரைவட்டமிடும் மணலைப்போலத் தொடர்ந்து கடல்நீர் அரைவட்டமிட்டது. அதன் பெளதீகக் காரணத்தை விளக்க முடியாத கடலியல் அறிஞர்கள் அல்லும் பகலும் அங்கு கூடி ஆராயத் தொடங்கினர். இது புவியின் உட்கருவில் இருந்து வெளிக்கசிந்த தாளமுடியாத வெப்பத்தால் நடந்தது என்றும் இதுவரை மனிதக் கண்டுபிடிப்புகளில் இருந்து விடுபட்டிருந்த ஒரு அரிய வகை உயிரினத்தின் வருகை என்றும் வேற்றுக் கிரகவாசிகளின் விண்கலம் இறங்கியிருக்கக் கூடும் என்ற கருத்தும் முதற்கட்ட ஆய்வில் எட்டப்பட்டது. அந்த ஆய்வில் பணியாற்றிய பல விஞ்ஞானிகளும் வெகு விரைவில் சுயநினைவை இழப்பதும் கட்டுப்பாடின்றி அலைவதுமாகினர். முதன்மை விஞ்ஞானி ஓமு சுகாவா அகில உலக மாநாட்டில் இது குறித்த அறிக்கையைப் படிக்கும் நேரத்தில் மேசைமீது எழுந்து நின்று தன் ஆண்குறியை வெளியே எடுத்துவிட்டு ஒரு வனவிலங்கைப்போலக் கொக்கரித்துக் கத்தினார். அதையடுத்து முற்றாக ஆய்வுக்குத் தடை விதிக்கப்பட்டது.

***

‘இதற்கு யாருமே என்னை அணியப்படுத்தி இருக்கவில்லை. புதிய களத்தில் அமர்ந்திருந்தேன். என் முன் பெருங்கருணையுடன் ஒளி வீற்றிருந்தது. இது கடவுளின் இருப்பிடமா இல்லை என் மூளையின் சஞ்சலமா என்ற ஐயம் எழுந்தது. தொடுதிரையைத் தீண்டும்போது என் விரலைப் பற்றி யாரோ உள்ளிழுத்துக்கொண்டதைப் போல உணர்ந்தேன். மனித உள்ளம் அத்தனை எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஒரு வெளி என் முன் விரிந்திருந்தது. வெகு விரைவில் இந்தத் தொழில்நுட்பம் அனைவரது கைகளிலும் சேரப்போகிறது. மரணத்தை வெல்வதற்கே மனித இனம் தன் அத்தனை ஆயுதங்களையும் அறிவியல் சாதனங்களையும் போக்குவரத்தையும் தகவல் தொழில்நுட்பத்தையும் கண்டறிந்திருக்கிறது. காலத்திற்கு எதிராக ஓடுவதும் ஒருவகையில் மரணத்தை வெல்வது அல்லது மரணத்திற்கு பழிப்பு காட்டுவதுதான். இயற்கை அளித்திருக்கும் காலத்தை மருத்துவத்தினால் நீட்டித்துக்கொள்வதும் காலத்தைக் கடந்து நிற்கும் சாதனைகளும் மனிதன் பேரியற்கையின் மீது காட்டும் சிறுபிள்ளைத்தனமான கொக்கரிப்புதான் என்றபோதும் அது அவனது அளவுகோலில் ஒரு சாதனைதான்.’ ஹேமா தான் மெய்நிகரிக் கனவுப் புழைச் சோதனைக்கு ஒரு மாதிரியாக ஒப்புதல் அளித்திருப்பது குறித்து ஊடகங்களுக்குச் செய்தியறிக்கை வெளியிட்டாள். இது வெற்றியடைந்தால் பல்லாண்டுகளாகத் தீர்க்கமுடியாமல் இருக்கும் மே 10 மர்மத்திற்கும் அது தொடர்பாக விளைந்த வன்முறைகளுக்கும் பதில் கிடைக்கும்.

மெய்நிகர் உலகம் இத்தனை சன்னமான தகவல்களையும் இத்தனை விரிவான பின்புலத்தையும் உருவாக்கி நிறுவும் என்பது குறித்து சில ஆண்டுகளுக்கு முன் யாருக்கும் கடும் ஐயமே இருந்திருக்கும். அந்த வெள்ளோட்டத்தில் ஈடுபட்டபோதே நேரடி சோதனைக்கு ஒப்புதல் அளித்துவிட்டாள் ஹேமா. தேவ் இறந்து இன்றோடு ஏழாண்டுகள் கடந்துவிட்டன. தேவின் போராட்டமும் தேவைப் போலவே ஏறத்தாழ ஆயிரம் பேர் போராடி வன்முறை பயின்று வாழ்ந்தது, கொன்றது, இறந்தது எல்லாம் முடிவே எட்டப்படாத பழங்கதையாகிப் போனது. அரசுக்கும் அந்த நிகழ்வின் மீது கவனம் இல்லை. மரணத்தின் பிரிவில் இருந்து மெல்ல மெல்லத் தவழ்ந்து, விலகி வாழ்வுக்குள் பறக்க காலத்தைத் துணைகோடுவது போலவே அவளும் அந்த மர்மத்தின் பிடிகளில் இருந்து போதிய தூரம் விலகி இருந்தாள். அந்த நிகழ்வில் இருந்து விலக விலக மனத்தைத் தேவ் பற்றிய இனிமையான எண்ணங்களைக்கொண்டு பழவூறலைப் போல இனிக்கவைக்கப் பழகியிருந்தாள்.

வலைத்தளப் பதிவுகளையும் வெவ்வேறு செயலிகளின் வழியாகப் பெற்றுத் தொகுத்த நுண் தகவல்களையும் கொண்டு தேவின் மெய்நிகர்ப் பிரபஞ்சத்தை அழகாகப் படைத்திருந்தார்கள். அது தேவ் உயிருடன் இருந்து தன் பிரக்ஞை மூலமாகத் தொடர்புகொள்வதைப் போலவே – அதைவிடக் கூர்மையாகத் தொடர்புகொள்ளும் – தகவல்களை அளிக்கும். இந்நூற்றாண்டு அறிவியிலின் உச்சமாக இந்தக் கருவி கருதப்பட்டது. இணைப்பிரபஞ்சத்துடன் உரையாடும் ஆற்றல் மிக்க சமிக்ஞைகளை இது உற்பத்தி செய்யும். இந்தத் தொடர்புக்கு மாதிரியாகத் தான் இருக்க முதல் ஒப்புதல் அளித்தவள் ஹேமா. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய மெய்நிகரியில் முதல் ஆளாக வெள்ளோட்டத்தின் ஒருபகுதியாகத் தான் படுத்திருப்பது குறித்து எழவேண்டிய ஆச்சரியமோ தவிப்போ ஹேமாவுக்குள் எழவில்லை. அவளது சமநிலையும் இந்த ஆய்வு தொடர்பான அவளது பங்களிப்பையும் வைத்தே அவளை முதல் மாதிரியாகச் சோதனை செய்யத் தேர்வு செய்தார்கள். மெய்நிகரி சாதனம் பற்றிய விபரங்களை ரசித்தாள். பரக்கத்திடம் நன்றி சொன்னாள்.

***

‘நீ எப்போதான் மறுபடி திருமணம் செய்துகொள்ளப் போற?’ என்றான் பரக்கத்.

ஹேமா காஃபியை உறிஞ்சினாள். அவன் கண்காட்டிய இடத்தில் இருந்த தூய்மைத்தாளைக் கொண்டு உதடுகளை ஒற்றினாள். வெதுவெதுப்பாகத் தொண்டையில் இறங்கிய பானம் பேசத்தொடங்கும் முன் உணவுக்குழாயில் இறங்கியது. ‘இல்லடா. உடல் ரீதியான விருப்பங்களுக்கு அப்பப்ப தற்காலிகமாக மனமொக்கும் ஆண்களிடம் தேவையை நிறைவேற்றிக்கிறேன்’ என்றதற்கு அவன் புருவம் உயர்த்தினான். அவனது சிறு தயக்கத்தை மெளனம் விழுங்கட்டும் என்பது போல சில நொடிகள் அமைதி காத்துவிட்டு ‘மற்றபடி பணியில் முழுக்க ஈடுபட்றேன். என் வாழ்க்கைல ஒரு பர்பஸ் இல்லடா… அது நீர்வழிப்படும் புனைபோலப் போகுது. தேவ் இறந்த பிறகு குழந்தைப்பேறுக்கான வாய்ப்பை நிரந்தரமாகத் தடை செய்துகிட்டேன். எனக்குத் திருமணம் எல்லாம் மீனிங்லெஸ்டா…’ என்று பதிலளித்தாள். அவள் குரலின் தீர்க்கம் அவளுக்கே மெளடீகமாக ஒலித்தது.

‘ஹேய்… என்ன இப்படியெல்லாம் பேசுற?’

‘பர்பஸ் இப்ப இல்லனுதான் சொல்றேன். ஒருகாலத்தில் இருந்துச்சி. தேவ் அவதிபட்டபோது ஒரு தீர்வ கண்டுபிடிச்சிரணும்னு ஒரு நோக்கம் இருந்திச்சி. அதற்கு முன்னாடி அவன மாதிரியே ஒரு அழகன பெத்தெடுக்கனும்னு ஒரு நோக்கம் இருந்திச்சி… இப்ப வாழ்க்கையோட போக்கே மாறிடுச்சு அப்டிங்கிறதால வாழ்க்கையோட நோக்கத்த மாத்திக்கனும்னு அவசியம் இல்லையே…’

ஹேமாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் தனக்கிருந்த தெளிவைத் தாளமுடியாதவனாய்ச் சொல்லின்றிச் சில நொடிகள் தன் கைகளில் சூடேற்றிக்கொண்டிருந்த பானத்தையே பார்த்திருந்தான். ‘சரி… இந்த ப்ராஜக்ட் தொடர்பாக நீ செய்த அத்தனை ஆராய்ச்சியையும் எங்களுக்குத் தர முடியுமா?’

‘கண்டிப்பா… அது எனக்கு ஒரு வெற்றுத்தாள் அவ்வளவுதான். எல்லாத்தையும் தரேன்.’ மூன்றாண்டுகளுக்கு முன்பு அவள் வெறித்தனமாகச் செய்த ஆய்வுகளையும் தேவிடமிருந்து சேகரித்து வைத்த குறிப்பேடுகளையும் பரக்கத் செய்யும் ஆய்வுக்குத் தரச் சம்மதித்தாள்.

‘நன்றிப்பா…’

‘ஒரு ஆர்வத்தில்தான் கேக்கிறேன். இப்ப எதற்காக அது?’

‘உண்மைய சொல்லணும்னா எதற்குக் கேக்கிறேன்ற தெளிவு என்னிடம் இல்ல. ஆனால் ஒரு மாதத்திற்கு முன்னால் அந்தக் குறிப்பிட்ட கடல்பகுதியில் மீன்கள் மர்மமான முறையில் இறக்கின்றன… வகைப்படுத்த முடியாத ஒரு அதிர்வலைகள் உருவாக்கப்படுவதாகத் தகவல்கள் வருது. மீண்டும் மே 10 பேரிடர் கடுமையாகத் தாக்குமோன்னு அரசு பயப்படுது. ஒருவேளை உன் அறிக்கை ஏதாவது உதவலாம்னுதான் கேக்குறேன்.’

***

மெய்நிகரி சாதனத்தில் மின்னணுப் படுக்கையில் இருந்தவாறு விழிகளை மூடினாள் ஹேமா. தன்னை இழக்கத் தயாரானாள். அவள் முகத்தைச் சுற்றி வேர்களென மின் கம்பிகள் படர்ந்திருந்தன. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு உண்டாகும் முன் தனக்கு இறப்போ மூளை இறப்போ நிகழக்கூடும் என்ற ஆபத்தை அறிந்து அதற்கு ஒப்புதல் அளித்திருந்தாள். அவளுக்குத் தரப்பட்ட ரசாயன மாத்திரையின் காரணமாக உலகை மீறி உறக்க நிலைக்குச் சென்றாள். உறக்கத்தின் வாயிலாகச் சறுக்கியபடி பல்வேறு அகத்தளங்களுக்குச் சென்றாள். அவள் கனவுக்குள் பதற்றங்கள் மிகுவதை அவள் உடல் துள்ளிக் காட்டியது. அவளைச் சுற்றியிருந்த மருத்துவர்களும் சேவகர்களும் அவளுக்குத் தேவையான உதவிகளைத் தருவதற்கு முன்னெச்சரிக்கையுடன் கவனமாகக் குறிப்பெடுத்தபடி நின்றனர்.

‘விழிகளை மூடினேன். ராட்டினம் சுழல்வது போல உருளொலி கேட்டது. பனிக்குடம் உடைந்த குழவியென தரையில் வீழ்ந்தேன். என் முன் வெண்ணிறத் தாளை விரித்ததுபோல் பனி உறைந்திருந்தது. யாருமற்ற புதுவெளி. மலர்கள் தோன்றா மாயப்புவி. மலர்களுக்கு முந்தைய அசுகந்தம் மணத்தது. அழுகைபோல் உள்ளத்தில் இருந்து ஏதோவொன்று குமுறியது. நின்றேன். மண்டியிட்டேன். தொழுதேன். விழிகளை மூடிக்கொள்ள முயன்று முயன்று தோற்றேன். என் முன் ஒரு திகம்பர வாலிபன் நின்றான். அவன் பனித்திரை விலக்கி என்னருகில் வந்தான். அவன் உதடுகள் அசையாதபோதும் அவன் சொல்லும் வேதங்கள் என்னுள் பொருள் பொதிந்த சொற்றொடர்களைப் பதித்தன. அவன் என் வாழ்வின் மிக நெருங்கிய ஓர் உயிரி என்ற அணுக்க உணர்வு தோன்றியது. அவன் புடவி மானுடத்திற்கு உதவ விழைகிறவன். அவன் தேவ தூதன். அவன் மார்பின் சருமம் எஃகுக் கவசமெனத் தோன்றியது. அவன் கன்னங்கள் ஒட்டியிருந்தன. அழகின் இலக்கணம் என்றே மிளிர்ந்தான். அவனுடைய இருப்பு தீரவே கூடாது என்று விழைந்தேன். அவனுடைய குறியை நான் பார்க்க விழையவில்லை அல்லது அவனுக்குப் பால்குறி இல்லை. அவன் குழந்தையா வாலிபனா தந்தையா தேவனா என்று குழம்பியிருந்தேன். அவனது விழியைக் கூர்ந்தபோது அதில் இரு நீலப்பிழம்புகள் மின்னின. மானுடத்தின் நீட்சியைத் தகர்க்க வந்த தம் பிரபஞ்சத்தின் நோக்கங்களையும் அவர்களிடமிருந்து மீள்வதற்கான தற்காப்பினையும் சங்கேத வார்த்தைகளில் சொன்னான். மீள்வேதம் போலிருந்தது. ஒவ்வொன்றும் துலங்கியது.’ ஹேமாவின் கனவு உலகின் வழியே இணைப்பிரபஞ்சத்தில் இருந்து மின்னணு சமிக்ஞைகள் அனுப்புவது மின்நரம்புப்படத்தாளில் அச்சானது.

பதினேழு மணித்துளிகளுக்குப் பிறகு மெல்ல விழிகளைத் திறந்தாள். இந்தப் புடவி அவளுக்கு வலியைத் தரும் ஒன்றாகவே மீண்டும் தோன்றியது. ஆயினும் முன்னகர வேண்டிய தேவையை உணர்ந்தவள்போல முகம் மலர்ந்தாள். மலரின் மணம் உணர்ந்தாள். தன்னைச் சுற்றி நிற்கும் உயிர்களின் பெருமூச்சு தொகையாக சலசலப்பது கேட்டது. மின்னணு சாதனத்தில் இருந்து எழுந்து அமர்ந்தாள். அவள் ரத்த அழுத்தம் மாறுபடக்கூடுமென்று இரு செவிலியர் அவளைத் தாங்கினர். மெளனப்பாறையை உடைப்பது போல அனைவரும் ஆர்ப்பரித்துக் கையொலி எழுப்பினர். தொடர்ந்து சில நிமிடங்கள் நீடித்த கரவொலி மழையெனக் குன்றித் தூறலாகி நின்றது. மீண்டும் மெளனம் நிரம்பியது. அவள் செவிக்குள் ‘நான் இங்கதான் இருக்கேன்…’ என்று ஒரு பூனை முனகியது. புன்னகைத்தாள்.


ஓவியம்: பானு

இதழ் 13 பிற படைப்புகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்