“மன்னிப்பு” என்ற வார்த்தை எத்தனையோ பேருக்குப் பிடிக்காத வார்த்தையாக இருக்கலாம். ஆனால், இந்த உலகம் இயங்குவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக மன்னிப்பே இருக்கிறது. இப்போதும் எப்போதும் இந்தச் சொல்லை எவரும் புறக்கணிக்கவே இயலாது என்பதையே உலக இலக்கியங்களில் இருந்து நீதி நூல்கள் வரை நாம் அறிகிறோம். எங்கேனும் தவறுதலாக மன்னிப்பு என்ற இந்தச் சலுகை தகுதியற்ற நபர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கலாம். அது சாத்தியம்தான். ஆனாலும் அதனால் மட்டிலும் இந்தச் சொல்லின் வீரியத்தை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடலாகாது. “மன்னிப்பு” என்ற இந்த ஒற்றை வார்த்தை மிகவும் அர்த்தப்பூர்வமானது. மகத்தான மனிதர்களை மன்னிப்பே உலகிற்கு அளித்திருக்கிறது. மகத்தான இலக்கியங்களையும்.
மன்னிக்கப்பட்ட ஒரு திருடனே ராமாயணத்தை எழுதினார். கொலைத் தண்டனையிலிருந்து மன்னிக்கப்பட்டவரே “குற்றமும் தண்டனையும்” நாவல் எழுதினார். நடைமுறையில் எத்தனையோ குடும்பங்கள் அமைதியாக வாழ்வதன் அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக மன்னிப்பே இருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும் உலகில் எங்கோ எவரோ மன்னிக்கப்பட்டுக் கொண்டிருக்கக்கூடும். மன்னிப்பு என்றதும் ஏன் உடனே பெண்கள் நம் நினைவுக்கு வருகிறார்கள் என்று அடிக்கடி என்னை நானே கேட்டுக்கொள்வதுண்டு. எத்தனையோ குடும்பங்களில் பெண்கள் ஆண்களை மன்னித்தபடியே இருப்பதை நாமறிவோம். நம்முடைய குடும்பங்களிலேயே அப்படிப் பல உதாரணங்களை நம்மால் சொல்ல முடியும். குழந்தைகள் அம்மாக்களிடமும், மாணவர்கள் ஆசிரியைகளிடமும் நெருக்கத்தைப் பேணுவதன் உளவியல்பூர்வமான காரணங்களில் மன்னிப்பும் ஒன்று.
மன்னிக்க மறுக்கும் ஆண் வெறுப்பையும், அச்சத்தையும், விலக்கத்தையும் ஈட்டுகிறான். பெண்களோ மன்னித்தருள்கிறார்கள். அதனால் அன்பையும் மரியாதையையும் ஈட்டுகிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும் மன்னிக்கக்கூடிய நபர்கள் உடனடி மதிப்பைப் பெறுவதை நாம் பார்க்கமுடியும். மன்னிக்கக்கூடிய அரசாங்கங்கள் மேலும் அதிக கவனத்தையும் மரியாதையையும் ஈட்டும். அதே சமயம் மன்னிப்பு என்பது எளிதாகக் கிடைக்கக்கூடியதில்லை, அரிதினும் அரிதான ஒன்று என்பதையும் வரலாறு நமக்கு நினைவூட்டத்தான் செய்கிறது.
உலக இலக்கியங்களில் மன்னிப்பு என்பது மாபெரும் பேசுபொருள். “அன்னா கரீனினா” துவங்கி “தாசியும் தபசியும்” வரை. அவ்வகையில், கொடூரமான ஒரு திருடனுக்கு ஒரு மலர் மன்னிப்பு பெற்றுத்தரும் அதிசயத்தை செல்மா லாகர்லாவ்-இன் தேவமலரில் வாசிக்கலாம்.
செல்மா லாகர்லாவ் ஸ்வீடிஷ் நாட்டு எழுத்தாளர். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர். அது மட்டுமல்ல, ஸ்வீடிஷ் நாட்டு கரன்சியான க்ரோனார் நோட்டில் இவரது புகைப்படம் இடம்பெறுமளவிற்கு மதிப்பும் புகழும் வாய்ந்தவர். எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் அரிய கௌரவம் இது. எனக்குத் தெரிந்து செல்மாவும், ஜப்பானிய எழுத்தாளரான நட்சுமி சுசூகி ஆகிய இருவரின் படங்கள்தாம் அவரவர் நாட்டு கரன்சி நோட்டுகளில் இடம்பெற்றுள்ளன.
செல்மா லாகர்லாவ்வின் “மதகுரு” என்ற நாவல் உலக இலக்கியத்தின் சிகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. க.நா.சுவிற்கு மிகவும் பிடித்த நாவல் இது. அவரே இந்நாவலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். (அந்த மொழிபெயர்ப்பின் முன்னுரையில் க.நா.சு அந்த நூலை எந்த அளவிற்கு வெறித்தனமாய் நேசித்துள்ளார் என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார். இலக்கிய வாசகர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய கட்டுரை அது.) “தேவ மலர்” என்ற குறுநாவலையும் அவரே தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
தேவமலர் குறுநாவலில் இரு விழுமியங்களின் விஸ்வரூப தரிசனங்கள் காணக்கிடைக்கின்றன. ஒன்று முதலில் சொன்ன மன்னிப்பு. மற்றொன்று நம்பிக்கை. நம்பிக்கையும், மன்னிக்கத் தயாராய் இருக்கும் உள்ளமும் உடைய மனிதன் தெய்வத்தின் ஒரு சிறுதுளி அல்லவா. அப்படியொரு மனிதன்தான் இக்கதையில் வரும் மதகுரு அப்பட்ஹான்ஸ். ஆனால் ஒரு பானைப் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் அது வீணாகிவிடுவதைப் போல, ஒரு துளி அவநம்பிக்கை எஞ்சியிருந்தாலும், எதுவுமே தரைமட்டமாகிவிடும், அங்கு முன்னேற்றத்திற்கு இடமில்லை. இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகக் கதையில் ஒருவன் வருகிறான். அவன் அந்த மதகுருவின் சீடன்.
நம்பிக்கையுடைய உள்ளத்திற்கு இறைதரிசனம் கிட்டும் என்ற செய்தியைத் தரும் இக்கதை, அதே சமயம் துளி அவநம்பிக்கை இருப்பினும் எப்பேர்ப்பட்ட தெய்வ தரிசனத்தையும் அது பாதியில் துண்டித்து நீர்த்துப் போகச் செய்துவிடும் என்பதையும் காட்டுகிறது.
கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவில் கீயிங்கே வனம் தேவவனமாக மலர்ந்து நிற்கும் என்ற ஒரு தொன்மத்தை இக்கதையில் ஆராய்ந்திருக்கிறார் செல்மா லாகர்லாவ். ஒரு வனம் உண்மையில் தேவ வனமாக மாறுமா, அதுவும் நல்லவர்கள் கண்களுக்கெல்லால் தென்படாமல் ஏன் அது ஒரு திருடனது கண்களுக்குப் பிரதி வருடமும் காட்சி தருகிறது. தேவ வனத்தைக் காண்பதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய தகுதிதான் என்ன? என்ற கேள்வியில் இருந்து மெல்ல மெல்ல விரிந்து உண்மையில் வனம் என்பது என்ன, தேவ மலர் என்பது என்ன என்று நிறுவும் புள்ளியில் கதை முடிகிறது.
2
பல கொடிய குற்றங்களைச் செய்த திருடன் ஒருவன் கீயிங்கே வனத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறான். அந்த வனத்துக்குள் தப்பித்தவறி வரும் வழிபோக்கர்களையும், யாத்ரீகர்களையும் தாக்கி அவர்களின் உடைமைகளையும் பறித்துக்கொள்கிறான். அவன் அந்த வனத்தில் இருப்பதால் நாட்டு மக்கள் எவரும் அந்த வனத்திற்குள் செல்வதில்லை. ஒரு கட்டத்தில் எவரும் அந்த வனத்திற்குள் வராததால் திருடனும் அவனது குடும்பமும் பட்டினியில் வாடுகிறார்கள். முடிவாக, திருடனது மனைவி தன் பிள்ளைகளுடன் நகருக்குள் பிச்சையெடுக்க வருகிறாள். திருடனின் மீதுள்ள அச்சத்தால் நகர் மக்கள் அவர்களுக்கு தாராளமாகவே உணவளிக்கிறார்கள். அதனால் இதையே திருடனின் மனைவி முழுநேரத் தொழிலாக்கிக்கொண்டாள். ஒருநாள் கிறிஸ்துவ துறவிகளின் மடத்தில் யாசகம் கேட்க வருகிறாள். தற்செயலாக மடத்துக்குள் உள்ள அழகிய தோட்டத்துக்குள் புகுந்துவிடுகிறாள். அந்தத் தோட்டத்தில் உள்ள மலர்கள் எவருக்கும் சுலபத்தில் காணக்கிடைக்காத அரிய அழகிய மலர்கள். அந்த மடத்தின் தலைமை குருவான அப்பட் ஹான்ஸ் பெருமுயற்சி எடுத்து நாடெங்கும் அலைந்து திரிந்து சேகரித்த மலர்கள் அவை.
அந்த மலர்களின் அழகில் மயங்கி அங்கிருந்து நகர மறுக்கும் திருடனின் மனைவியை மடத்தின் சீடர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறார்கள். அப்போது அப்பட் ஹான்ஸ் அங்கு வருகிறார். அந்தப் பெண்ணைத் தனது தோட்டத்தினைப் பார்க்க அனுமதிக்கிறார். அவள் ஒவ்வொரு செடிக்கு முன்பும் வெகு நேரம் நின்று அதன் அழகை ரசிக்கும்போதெல்லாம் அந்த மதகுருவுக்கு அளப்பரிய ஆனந்தம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் தன்னுடைய தோட்டம் எப்படியிருக்கிறது என அவர் பெருமையுடன் அவளிடம் கேட்கும்போது அவள் தரும் பதில் அவருக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவள் தான் கீயிங்கே வனத்தில் இதை விடவும் அழகிய மலர்களைக் கண்டதாகவும் அவற்றின் அழகின்முன் இந்த மலர்களெல்லாம் மிகச் சாதாரணமானவை என்றும் சொல்கிறாள். கீயிங்கே வனத்தில் கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவில் அந்த வனமே மலர்ந்து தேவ வனமாக மாறிநிற்கும் என்ற கதையை மதகுரு அறிந்திருக்கிறார். ஆனால் மற்றவர்களைப் போலத் தானும் அது ஒரு கட்டுக்கதை என்றுதான் நினைத்திருந்தார். திருடனின் மனைவியிடம் இருந்து மீண்டும் அதைக் கேள்விப்பட்டபோது ஒருவேளை அது உண்மையாக இருக்குமோ என்று நினைத்தார். அதையும் பார்த்துவிடுவோமே என்ற எண்ணம் அவருக்குள் வலுப்பட, அவளிடம் தன்னை அந்த வனத்துக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்று கேட்கிறார், தேவ வனத்தின் தரிசனம் தனக்குக் கிடைத்துவிட்டால், அதற்குப் பிரதி உபகாரமாகத் திருடனுக்கு பொதுமன்னிப்பு கிடைக்கச் செய்கிறேன் என்கிறார். இதைக் கேட்டதும் முதலில் சற்று அஞ்சிய திருடனின் மனைவி, பின் மெல்ல மெல்லத் துறவியின் வருகையால் தனக்கும் தனது கணவனுக்கும் எவ்விதத் தீங்கும் விளையாது என்று நம்புகிறாள். இந்த உரையாடலை அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கும் சீடனுக்கு மட்டும் திருடனின் மனைவி சொன்ன எதுவும் உண்மையில்லை எனத் தோன்றுகிறது. தனது குருவைக் காட்டிற்குள் அழைத்துக்கொண்டு போய்த் திருடனும் அவனது மனைவியும் அவரைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டுகிறார்கள் என நினைக்கிறான். ஆனால் அவனை அவர்கள் இருவரும் பொருட்படுத்தவேயில்லை. மதகுருவின் மீதான நம்பிக்கையினால் திருடனின் மனைவி அவரைக் கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய இரவு காட்டுக்கு அழைத்துச்செல்வதாக அவருக்கு வாக்கு கொடுக்கிறாள்.
அதன்பிறகான ஒரு நாள் மதகுரு அந்த நாட்டின் அதிகாரம் வாய்ந்த பிஷப்பைச் சந்தித்துத் திருடனுக்கு மன்னிப்பு அளிக்கப் பரிந்துரைக்கிறார். பிஷப் அதற்கு சம்மதிக்காததால் மதகுரு அவருக்கு கீயிங்கே வனத்தைப் பற்றியும் பிரதி வருடமும் கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவில் அந்த வனம் தேவ வனமாக மலர்வதையும் அதற்குச் சாட்சியாக திருடனும் அவனது குடும்பமும் இருப்பதையும் தெரியப்படுத்துகிறார். அப்போதும் அதை நம்பாத பிஷப், ஒருவேளை அது உண்மையாக இருந்தால் அப்படியொரு தேவ வனத்தில் ஒரு மலரை மட்டும் நீங்கள் பறித்து வந்து என்னிடம் கொடுங்கள், அதன் பின் உண்மையிலேயே அந்தத் திருடனுக்கு நான் மன்னிப்பளிக்கிறேன் என்கிறார்.
கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு தான் வாக்களித்தபடியே திருடனின் மனைவி தனது மகனை மதகுருவிடம் அனுப்புகிறாள். அவனுடன் மதகுருவும் அவரது சீடனும் செல்கிறார்கள். நடுவனத்தில் இருளிலும் பனியிலும் உறைந்திருக்கும் திருடனின் குடிசைக்கு அவர்கள் செல்கிறார்கள். திருடன் அவர்களைச் சந்தேகத்துடனும் அச்சத்துடனும் பார்க்கிறான். ஆனால் திருடனின் மனைவி அவர்களை இயல்பாக வரவேற்கிறாள். நள்ளிரவு வரை அவர்கள் வனம் மலர்வதற்காகக் காத்திருக்கிறார்கள். சற்று நேரத்தில், மெல்ல மெல்ல இருள் போர்வை விலகுகிறது. வானில் இருந்து மெல்லிய வெளிச்சம் கசிந்து பின் ஒளிவெள்ளமே பொழிகிறது. பனிப் பாளங்கள் யாவும் சட்டென உருகி அந்தப் பகுதியே வசந்த காலத்தில் தகைவு கொள்கிறது. இன்னிசை ததும்பிய தெய்வீகப் பாடல்களை தேவதைகள் பாடிக்கொண்டு வருகிறார்கள். மலர்கள் யாவும் வெள்ளியினாலும் தங்கத்தினாலும் செய்தது போல ஒரு தெய்வீக அழகில் ஆன்மாவை மயக்கும் நறுமணத்தோடு மலர்கின்றன. கீயிங்கே வனம் தேவ வனமாக மாறும் இந்தக் காட்சியை செல்மா லாகர்லாவ் தனது கற்பனை வளத்தால் கவித்துவமாகவும் துல்லியமாகவும் காட்சிப்படுத்தியபடி செல்கிறார்.
மதகுரு தன்னுடைய வாழ்நாளில் இத்தகையதொரு காட்சியைக் கண்டதில்லை. திருடனின் மனைவி சொன்னது உண்மைதான் என அறிந்துகொண்டார். தெய்வம் தனது ஆற்றலைக் காட்சிப்படுத்தும் அரியதொரு தரிசனம் தனக்குக் கிட்டியமைக்காக ஆனந்தப் பரவசமடைகிறார். அந்த நிலையிலும் மதகுருவின் சீடன் மட்டும் தான் காணும் காட்சி எதையுமே நம்ப மறுத்தவனாய் சந்தேகம் வாய்ந்தவனாய் இருக்கிறான். தன்னைச் சுற்றி நிகழும் எதுவும் உண்மையில்லை, இது முழுக்க முழுக்க சாத்தான் நிகழ்த்தும் மாயம் என நம்புகிறான். தேவ கானத்தை இசைத்தபடியே தன்னருகே வரும் ஒரு தேவதையை, சீ.. தள்ளிப்போ.. சாத்தானே என்று மூர்க்கமாக ஏசுகிறான். அடுத்த வினாடியே, அந்தத் தெய்வீக இசை நின்று போகிறது. வெளிச்சம் அருகி இருள் மூடுகிறது. மீண்டும் வனத்தைப் பனி மூடுகிறது. அதுவரை மலர்ந்திருந்த தேவ மலர்கள் ஒவ்வொன்றாகக் கூம்பிப் போய் மெல்ல மறைகின்றன.
தன்னுடைய அவநம்பிக்கையினால் அந்தச் சீடன் ஒரு தெய்வீகப் பிராந்தியத்தை இருளடையச் செய்துவிட்டான். எல்லோரும் அவனை வெறுப்புடன் பார்க்கத் துவங்குகிறார்கள். அந்த நிலையிலும் தான் திருடனின் மனைவிக்குக் கொடுத்த வாக்கை மறவாத மதகுரு விரைவாக ஓடிச் சென்று மறைந்து கொண்டிருக்கும் தேவ வனத்தில் விழுந்து ஒரு மலரைப் பறிக்கிறார். முழுக்கப் பறிப்பதற்குள் அந்த மலர் கூம்பிப்போய் ஒரு கிழங்கைப் போலாகிவிடுகிறது. மதகுரு மீண்டும் எழவில்லை. அந்தத் தேவ வனத்தின் மண்ணில் விழுந்து மரித்துப் போகிறார்.
குற்ற உணர்ச்சியினால் பீடிக்கப்படும் சீடன் தன்னுடைய குருவின் உடலையும் அவர் பறித்த மலரையும் சுமந்துகொண்டு நகருக்குத் திரும்புகிறான். அனைத்து மரியாதைகளுடனும் மதகுருவின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அந்த வனத்தில் நிகழந்தவற்றின் சாட்சியான சீடன் மட்டும் தன்னுடைய குரு பறித்த அந்தக் கிழங்கை அவர் உருவாக்கிய மடத்தின் தோட்டத்திலேயே நட்டு வைக்கிறான், ஏதோவொரு நம்பிக்கையில் தொடர்ந்து நீரூற்றி வருகிறான். அடுத்த வருடமும் கிறிஸ்துமஸ் வருகிறது. அதைக் கொண்டாடுவதற்கு மதகுரு இல்லை. ஆனால் அவர் பறித்த கிழங்குச் செடியில் இருந்து அதிசயத்திலும் அதிசயமாக அதுவரை யாருமே தங்கள் வாழ்நாளில் பார்த்திராத ஒரு தேவ மலர் பூத்து நிற்கிறது.
அந்த மலரைப் பறித்துக்கொண்டு பிஷப்பிடம் ஓடுகிறான் சீடன். அனைத்தையும் கேள்விப்பட்ட பிஷப் மதகுரு அப்பட் ஹான்ஸை மரியாதை செய்யும் விதமாக அந்தத் திருடனை மன்னித்து ஊருக்குள் அனுமதிக்கிறார். அதன்பின் ஒவ்வொரு கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவும் கீயிங்கே வனம் தேவ வனமாக மாறவேயில்லை. ஆனாலும், மதகுருவின் மடத்தில் ஒரே ஒரு செடியில் மட்டும் பிரதி வருடம் கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவில் ஒரு தேவ மலர் மலர்கிறது.
3
“தேவ மலரின்” உச்சமாக நான் நினைப்பது கீயிங்கே வனம் தேவ வனமாக மாறும் தருணம்தான். தேவ வனத்தின் சித்தரிப்பில் கவித்துவத்தின் உச்சமும் ஓவியத்தின் நுட்பமும் சந்தித்துக்கொள்கின்றன. கதையின் மையமே இந்தக் காட்சிதான் என்பதால் இது மிக விரிவாகவும் சொல்லப்படுகிறது.
இந்தக் கதையின் முடிவில், யாவரும் நல்லவர்களாகக் காட்டப்படுகிறார்கள். தேவ வனம் நிரந்தரமாக மறைவதற்குக் காரணமாய் இருந்த சீடன் மனம் மாறி திருடனுக்கு மன்னிப்பு அளிக்க வேண்டி தேவ மலருடன் பிஷப்பிடம் ஓடுகிறான். முதலில், திருடனுக்கு எதிராகப் பேசிய ஆர்ச் பிஷப் அவனுக்கு மன்னிப்பு அளிக்கிறார். இந்தத் துறவிகளை அறவே நம்பாமல் இருந்த திருடன்கூட முடிவில் மனம் திருந்தி திருட்டுத் தொழிலைக் கைவிடுகிறான். இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் நேரடிக் காரணமாய், தேவமலர் அமைந்தாலும் அப்பட் ஹான்ஸின் மரணமும், அவரது மன்னிக்கும் மனோபாவமுமே மெய்யான காரணங்கள். எண்ணிப் பாருங்கள், இதில் யாராவது ஒருவர் நன்மையின் பக்கம் இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும்? சீடன் அந்த தேவ மலரைப் பறிக்காமல் இருந்திருந்தாலோ, பிஷப் அந்த மலரை அங்கீகரிக்காமல் போயிருந்தாலோ, திருடனுக்கு மன்னிப்பு கிடைத்திருக்காது. அப்பட்ஹான்ஸின் மரணம்தான் இவர்களின் இதயத்துள் இருக்கும் நல்லெண்ணத்தைத் தூண்டிவிட்டு திருடனுக்கு மன்னிப்பளிக்க வைக்கிறது. தேவ மலர் என்பது ஒரு குறியீடுதான். உண்மையில், அந்த தேவ மலர் மனிதர்களாகிய நம் எல்லோரின் இதயத்திலும் இருக்கிறது. அந்த மலரை நாம் மானுடத்தின் மீட்சிக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதே இக்கதையின் மையமாக இருக்கிறது. இந்தக் கதையைப் படித்த வாசகனுக்குள் ஒவ்வொரு கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவிலும் இந்த “தேவ மலர்” என்ற கதை மலர்ந்து மணக்கும் என்பது நிச்சயமான உண்மை.
நம்பிக்கையுடனும், நல்லெண்ணத்துடனும் இருந்தால் ஒரு சிறிய கிழங்குகூட ஒளி மிகுந்த தேவ மலராக மாறிவிடுகிறது. அவநம்பிக்கையுடனும், அசூயையுடனும் இருந்தால் பிரமாண்டமான, ஒளி மிகுந்த தேவ வனம்கூட இருளடைந்துவிடுகிறது.
“கருணை என்பது கிழங்கின் பெயராகவே மிஞ்சிவிட்டது” என்றார் புதுமைப்பித்தன். இந்த உலகில் கருணை என்பது ஒரு கிழங்கின் பெயராகவாவது மிஞ்சி இருக்கிறதே என்று பெருமைப்பட்டுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஒரு கிழங்குதானே, இந்தக் கதையில் வரும் திருடன் கருணையுடன் மன்னிக்கப்படக் காரணமாக இருக்கிறது!
4
செல்மா லாகர்லாவ் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு அவர் கிறித்துவ மதத்தின் கொள்கைகளை இலக்கியத்தின் மீது திணிக்கிறார் என்பதே. உண்மையில் இது ஒரு சரியான விமர்சனம் அல்ல. ஏனெனில், பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டில் எழுதத் துவங்கிய இலக்கிய மேதைகளில் பலரும் கிறித்துவ மதத்தின் சாரமான கொள்கைகளை விதந்தும் ஆராய்ந்தும் எழுதியவர்களே. அவர்கள் உருவான நிலத்தில், பண்பாட்டில் மதம் கலந்துள்ளது. அப்போது தோன்றிய மாபெரும் இலக்கியங்கள் மதத்தின் ஆன்மிகமான சாரத்தைப் புனைவு வெளிக்குள் கொண்டுவந்து அதனைக் குறியீடுகள் மூலமாக மேலும் ஆழமாக நிறுவியவை செல்மா லாகர்லாவ்வின் “தேவ மலர்”, “மதகுரு”, பேர்லாகர் க்விஸ்ட்டின் “பாரபாஸ்” (தமிழில்: “அன்பு வழி”) போன்றவை இப்படிப்பட்ட படைப்புகளே. அல்லது மதத்தின் கொள்கைகளை, விழுமியங்களை விமர்சனபூர்வமாக ஆராய்ந்து மாற்று மெய்மையை முன்வைத்தவை. டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்”, “புத்துயிர்ப்பு”, தஸ்தாயெவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்”, “கரமசோவ் சகோதரர்கள்”, நிகாஸ் கசந்த்சகீஸின் “கிறிஸ்துவின் இறுதிச் சபலம்” போன்ற படைப்புகளை இப்போக்கிற்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.
ஓர் இலக்கியப் படைப்பையும் வெறும் மதப்பிரச்சாரப் படைப்பையும் ஓர் இலக்கிய வாசகன் வாசித்ததுமே இனங்கண்டுகொள்வான். மேலும், மதப் பிரச்சாரப் படைப்புகளின் ஆயுள் சொற்பமே, காலத்தைத் தாண்டி நிற்கும் ஆற்றல் இலக்கியப் படைப்புகளுக்கே உள்ள தனித்துவமான கூறு. மதங்களைக் கடந்து ஒட்டுமொத்த மானுட குலத்துக்கென விரியும் ஒரு நல்ல விழுமியத்தை ஓர் இலக்கியப் படைப்பு முன்வைக்கும்போது அதை மதத்தின் கண்ணோட்டதில் குறுக்குவது அப்படைப்பை அவமதிப்பதுதான் என்பதை நல்ல இலக்கிய வாசகர்கள் அறிவார்கள். அவர்களை நம்பித்தான் இப்படிப்பட்ட படைப்புகள் காலம்கடந்தும் நிற்கின்றன.
அதே சமயம் கிறித்துவ மதத்தின் சில ஆதாரமான பார்வைகள் இக்கதையில் உள்ளதை மறுக்கவும் முடியாது. அதுவே கதைக்கான அடிப்படைக் களத்தை உருவாக்கிக் கொடுக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. உதாரணம்: தேவ வனம் மலர்வது என்பதை ஏசு கிறிஸ்து தரிசனம் தருவதேதான் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அது பொருள் தேடும் நகர் மாந்தர்களுக்குக் கிட்டாமல் ஏழ்மையானவனும் மனிதர்களில் கடையன் எனவும் கருதப்படும் திருடனுக்கும் அவனது குடும்பத்துக்கும் கிடைக்கிறது. ஏழ்மை என்பது இறைவனின் ராஜ்ஜியத்திற்கு நெருக்கமானது என்பதனால் இருக்கலாம். அது ஒரு முனைதான். மறுமுனையில் இருப்பவன் இறைவனைத் தன் தூய இதயத்தில் வைத்து வழிபடுபவன், சக மனிதன் மீது துவேஷமற்றவன். அதனால் அப்பட் ஹான்ஸுக்கும் இறைத் தரிசனம் கிடைக்கிறது.
மனித குலம் முன்னேறுவதற்கும், மனித குலமாகவே நீடிப்பதற்கும் ஆதாரமான விழுமியங்களைக் குறியீட்டு ரீதியில் என்றுமுள்ள இலக்கியத்தில் பதிந்து வைத்திருப்பதாலேயே தேவ மலர் இன்றும் தன் சுகந்தத்தைப் பரப்பியபடியே இருக்கிறது.