சாலை கவிதை

< 1 நிமிட வாசிப்பு

0
சோம்பேறிகள் சாலையில் வண்டி ஓட்டுகிறார்கள்
கடின உழைப்பாளிகள் அந்தரத்தில் சாலை அமைத்து
அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள்
0
கடத்தல்காரன் ஒரு குழந்தையை
சாலையில் கடத்திக்கொண்டு போகிறான்
சாலை உடனே
ஒரு பாயைச் சுருட்டுவது போலத் தன்னைச் சுருட்டிக்கொண்டது
கடத்தல்காரன் வண்டியிலிருந்து இறங்கி ஹா ஹா எனச் சிரித்தவாறு
உனக்கு வராததையெல்லாம் ஏன் செய்கிறாயென சிகரெட் நெருப்பால்
அதன் குண்டியில் சூடு வைக்க
குண்டியைத் தடவிக்கொண்டே சாலை அவனுக்கு வழியைவிட்டது
0
சாலைக்கு வேலையே கிடையாது
வாகனங்களில் உட்கார்ந்திருப்பவர்கள்தான்
சதா ஓடிக்கொண்டேயிருக்கிற வேலையிருப்பதாகச் சொல்லி
அதற்கு மண்டைக் கனத்தை ஏற்றிவிட்டார்கள்
நாம் இவ்வாறு சொன்னதும்
அந்த மண்டைக் கனத்தில்கூட சாலை இப்படி ஓடலாமல்லவா என
இப்பொழுது கூறுகிறார்கள்

0
ஒரு காரிகை சாலையில் நடந்து போய்த் தொலைகிறாள்
ஒரு அநாமதேயக் காரிகை இந்தச் சாலையில் நடந்து போனாளா என
வேறு சாட்சியில்லாததால் காவல்துறையினர் சாலையையும்
ஒரு சாட்சியாக்கிச் சாலையிடம் கேட்டனர்
அவள் காரிகை என நான் தெரிந்துகொண்டால்
அவள் நாமம் எப்படி எனக்குத் தெரியாமல் போகும்
முட்டாள்களே என்றது சாலை
0
சாலையின் வளைவுகள் ஒரு பெண்ணை ஞாபகப்படுத்திய
அடுத்த வினாடி வண்டியை நிறுத்தி ஒன்றுக்கடிக்கிற மாதிரி
சாலைக்குத் தன்னுடைய குறியைக் காட்டினான்
இப்படியா செய்கிறாயென
சாலை காற்றிடம் சொல்லி அவன் ஒன்றுக்கை
அவனுக்கே திருப்பிவிட்டது

0
எல்லாரையும் கூட்டிப் போகிறேன் என்னை யாருமே
கூட்டிப் போக மாட்டேனென்கிறார்கள் என்றது சாலை
எல்லாரும் தங்களது இயலாமைக்குப் பிராயச்சித்தமாகத்
தாங்கள் கடந்த சாலைகளிலிருந்தெல்லாம் கிளம்பிய இடம் நோக்கி
திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்
0
அதோ தெரிகிற வானத்தில் இறக்கிவிடுமாறு சொல்லி ஒருவர்
சாலையில் ஏறினார்
அதோ தெரிகிற சாலையில் இறக்கிவிடச்சொல்லி
வானத்தில் ஒருவர் ஏறிக்கொண்டிருக்கிறார்
0
சாலை மிகச் சாதுவானது
சாலையில் போட்ட கோதுமை ரொட்டிகளைக்கூட எடுத்து
அதற்குத் திங்கத் தெரியாது
அந்த ஒரு பெயர் வேறு இருப்பதால்
நாளை முடிக்க வேண்டிய கொலை விபரங்களை
சாதுவான முறையில் சரி பார்த்துக்கொண்டன இரண்டு சாலைகள்

0
நடந்து போனால் வீடு போய்விடலாம்
ஒருவேளை சாலையும் தன்னைப் பார்த்து நடந்து வீடுபோய்விட்டால்
தன் ஒட்டு மொத்த சந்ததியினருக்கே சாலையில்லாமல் போகுமென்று
சாலையிலேயே ஒருவன் இருந்தான்
0
எதிர்காலம் மீது நம்பிக்கையற்றவர்களை நினைத்து
வருத்தம் கொண்டிருக்கின்ற சமயத்தில்தான் கடவுள்
மலைப் பாதைகளை உருவாக்கினார்


புகைப்படம்: கார்த்திகேயன் துளசிராமன்

இதழ் 12 பிற படைப்புகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்