(குறிப்பு: எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் அறிவியல் புனைவின் பகுதிகள்…)
பெயர் சொல்ல விரும்பாத ஒரு நகரத்தில், கவனமும் ஒழுங்கும் இல்லாமல் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பகுதி நேர ஆசிரியனாக இணையத்தின் வரலாற்றைக் கற்பித்து வந்தேன்.
என் பெயர் புருனோ (ஆம் உண்மையான பெயர் இல்லைதான்).
அன்றைக்கு, கூட்டுத் தற்கொலை, சாலையோரத்தில் உறவுகொள்ளும் ஆண்களைக் கைது செய்யும் போலீஸ் அல்லது இசைத் திருட்டைப் பற்றிய செய்திகள் எதுவுமே இல்லை.
இணையத்தின் வரலாற்றைச் சற்றேனும் அறிந்திருப்பவர்கள் EDI, TCP/IP இவை குறித்தெல்லாம் அறிந்திருப்பார்கள். வரலாற்றின் துவக்கக் காலத்தில் இவையெல்லாம் பயன்பாட்டிலிருந்தன.
இணையத்திற்கு முந்தைய காலத்தை நாங்கள் இருண்ட காலமென்று அழைக்கிறோம். போர்களும், சிறார்களுக்கான ஜனநாயகமும் நிலவிய காலம்.
ஏற்கனவே பாட்காஸ்ட்களின் வழியாக இணைய வரலாற்றை அரைகுறையாக அறிந்திருந்த எனது மாணவர்களுக்கு நான் நடத்திய பாடத்தின் நடுவே, வகுப்பறைக்கு உள்ளாக அழுத்தமாக ஒலிக்கும் எனது குரலின் ஓசையைக் கடந்து ஒலித்த, அக-அழைப்பைக் கேட்டேன்.
ஆழத்திலிருந்து ஒலித்த அந்த அழைப்பு,
மார்பெலும்புகளின் பெட்டகத்திலிருந்து இதயத்தைப் பிடுங்கி எடுத்துச் சுவைக்கும் போதும், பதறாதே பொறு என்று நம்மை அமைதிப்படுத்தும்.
நமது உடலையே ஒரு சாக்லெட் ப்ரௌனியாக மாற்றி, பாதங்களில் இருந்து நம்மையே உண்ணச் செய்யும் போதும்கூட, பார் அனைத்தும் நன்றாகவே இயங்குகின்றன எனச் சமாதானம் செய்யும்.
அந்தக் குரலுக்கு மறுப்பேதும் சொல்லாமல், நான் என்னையே ஒப்படைத்தேன்.
மூப்படைந்த பாம்புகள் வாலிலிருந்து தம்மையே விழுங்கத் துவங்கிப் பசியாற முனையும்.
நாம்கூட வாலைக் கவ்விய பாம்புகளே.
***
நீல நிறத்தை நீங்கள் ஆழத் தியானித்திருக்கிறீர்களா?
தியானம் ஓசைகளை ஒழித்து, குறிப்பாகத் தத்தளிக்கும் மன அலைகளின் ஓசையை நிறுத்துவது மட்டுமல்ல, மெளனத்தோடு நாம் நிகழ்த்தும் பேச்சுவார்த்தையே தியானம்.
(மன அலைகளின் ஓசை போன்ற பழைய உருவகங்களை நாங்கள் அதிகமாகப் பயன்படுத்தக் காரணம், புதிதாக எங்களால் ஒன்றையும் உருவாக்க முடியவில்லை என்பதால் மட்டுமல்ல, புதியதென்று ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது)
அக-அழைப்புகளை நாங்கள் IC என்று அழைத்தோம்.
இடைமறிப்பாளர்கள் எங்கள் உரையாடலை இடைமறித்துக் கேட்டால், நாங்கள் இணையத் தொடர்பியல் குறித்து உரையாடுவதாக அவர்கள் நினைக்கக் கூடும்.
POLM அமைப்பின் இடையீட்டிலிருந்து தப்புவதற்காக இம்மாதிரி சுருக்கப் பெயர்களைப் பயன்படுத்துவது எங்களுக்கு உதவுக் கூடுமென்று கற்பனை செய்வோம்.
எப்போதெல்லாம் POLM அமைப்பை ஏமாற்றிவிட்டு உரையாடலை முடித்துவிட்டதாகக் கருதுகிறேனோ, உடனடியாக ப்ளெய்ஸ் பாஸ்கல் சொன்னதை நான் நினைவு கூர்வேன்.
‘கற்பனை ஒரு முட்டாளைப் புத்திசாலியாக்காது. ஆனால் தன்னோடு நட்போடிருப்பவர்களைப் பரிதாபத்திற்கு உரியவர்களாக்கும் பகுத்தறிவிற்கு மாறாக அது அவனை மகிழ்ச்சியானவனாக மாற்றும்’
யாருக்கு இதைச் சொன்னார்? அவருக்கா? அல்லது நம் எல்லோருக்கும்?
உரக்கப் பேசுவது, மெய்யியலாளர்களின் மிகப்பெரிய பலவீனம்.
எனது வகுப்பு முடிந்து, மாணவர்கள் அடுத்த வகுப்பிற்குச் செல்லும் வரை காத்திருந்தேன். பாட அட்டவணையைப் பார்த்தேன். அடுத்த வகுப்பு பண்டைக்கால உயிரியல் அமைப்பு.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் உறை பிரித்து சுவரில் மாட்டிய புதுக் கடிகாரம்.
காலத்தின் வனப்பைக் காட்டிய கடிகாரம்.
பெரியதும் சிறியதுமான முட்கள் சுற்றுவதில் துவங்கும், அவை ஒன்றுக்கொன்று நிகழ்த்தும் என்றென்றைக்குமான வேட்டை நாடகத்தின் முதல் கட்டத்திலேயே காணாமல் போய்விடும் காலத்தின் வனப்பு.
அக-அழைப்பு என்னை மறைந்து போகும்படி சொன்னது.
நான் தலையசைத்தேன்.
***
மணி 3.00. பள்ளியிலிருந்து நடந்தே எனது அடுக்ககத்தை அடைந்தேன். சில வருடங்களாக நான் எல்லாவிதமான வாகனங்களையும் தவிர்த்து வந்தேன்.
நடை நம்மை அந்தரத்திலிருந்து இறங்கி வரச் செய்கிறது.
பெரும்பனிக்காலத்தில் ஒரு துண்டு உலர்ந்த நிலத்தைக் காண நெடுந்தொலைவு நடந்தே சென்றவர்களின் கால் வெடிப்பிலிருந்து கசிந்த உதிரத்துளிகளின் தடத்தைப் பின்பற்றுபவர்களாக நம்மைக் கருதச் செய்யும் நடை.
வெண்பனிப் பாலையின் செந்நிறக் காலடித் தடங்களில் மினுங்கும் நட்சத்திரப் புள்ளிகள்.
‘நீ வாழ்வின் மிகச் சாதாரணமான ஒன்றையும்கூட மிகைப்படுத்துகிறாய்’
ஆதித்யாவின் குரல்.
அந்நேரத்தில் கிளர்ச்சி அடைந்திருந்த என்னுடைய மனநிலைக்கு ஏற்ற விதமாக SUBCOM அவனது குரலை ஒலிபரப்பியது.
குறைந்த ஊதியம் வாங்குபவர்களுக்கான மலிவான அடுக்ககம். மொத்தம் அறுபது தளங்கள். என்னுடைய ஃபிளாட் முப்பத்தி மூன்றாவது தளத்தில் இருந்தது.
அடுக்ககம், ஒரு பெரிய அரச மரத்திற்கு எதிரே நின்றிருந்தது. GrtDet நிகழ்வில் அழிந்து போனவர்களுக்கான, அழிந்து போனவைகளின் நினைவாகக் கன்றாக ஊன்றப்பட்டு, பெரிய மரமாக வளர்ந்திருக்கிறது.
இப்போது யாரும் GrtDetஐப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அது காலத்தின் முதுகில் குத்தியிருக்கும் ஒரு முள்.
மின்தூக்கியில் என்னோடு துணையாக வர யாருமில்லை. நீல வட்டமாக மின்னும் தளங்களின் எண்களைக் கவனித்து, ஒன்றிலிருந்து முப்பத்தி மூன்று வரை எண்ணினேன்.
எண்ணுவதைத் தவிர வேறு எதையாவது யோசித்தேனா?
SUBCOM அமைதியாக இருந்தது. குறுகிய கால நினைவுத் தேடலுக்குத் துணையாக அது ஒன்றையும் அளிக்கவில்லை. அல்லது அமைதியின் வழியாக அது பதில் சொன்னதா?
கதவில் பொருத்தியிருக்கும் மைக்கின் முன்னே என்னுடைய கடவுச் சொல்லைச் சொன்னேன், சிறிய இடத்தில் நிரம்பியிருக்கும் அளவிட முடியாத வெற்றிடத்திற்குள்ளாக கதவு திறந்தது. உயிர்ப்பெற்றுச் சிலம்பிய மூன்று மின்னணுக் கருவிகள் என்னை வட்டமிடத் துவங்கின. சிவப்புநிறக் கருவி எனது உடற்சூட்டை, எனது உடைகளின், உடைகளின் மறைப்பில்லாத பகுதிகளின் கிருமித்தொற்றளவைப் பரிசோதித்தது. நீலநிறக் கருவி எனது தலையைச் சுற்றி வட்டமிட்டு, கண்களுக்குள்ளாகப் பார்த்தது.
நீலநிறக் கருவியின் பெயர் MoonFinder.
நமது மனநிலையைக் கணித்து, அந்நேரத்தைய மனநிலையை நீட்டிக்கவோ, குறைக்கவோ தேவையானதைச் செய்வதற்கு அந்தக் கருவி வடிவமைக்கப்பட்டிருந்தது.
பெரும்பாலும் VirPlayவை முடுக்கி ஒரு காணொளியை அல்லது நான் விலை கொடுத்து வாங்கியிருக்கும் இசைத்துண்டுகளில் ஒன்றை ஒலிக்கவிடும்.
சோதிடப் பிரதிகள், நிலவை மனதின் அதிபதியாகச் சொல்கின்றன.
நமது காலத்தில் மனநிலை, வெப்பத்தோடும், சூரியனோடும் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. ஆனாலும் நீலநிறக் கருவிக்கு உருவகப் பொருத்தத்தோடு அவ்வாறு பெயரிடப்பட்டிருக்கிறது.
ஆதித்யா சொல்வான் :
‘பெயர்கள் நம்மைக் கற்பனையில் ஆழச் செய்கின்றன. பெயர்களிடத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. உதாரணத்திற்கு, வரையாடு என்று ஒரு பெயரைச் சொல்கிறேன். அழிந்துபோன ஓர் உயிரினத்தை, அதன் வாழ்வை நாம் கற்பனை செய்ய ஆரம்பிப்போம். இருண்ட கால உயிரினம் ஒன்றின் அழிவிற்காக இப்போது நாம் ஏன் துக்கப்பட வேண்டும்? இழப்புணர்வு ஒரு வகையில் நம்மை ஏமாற்றுகிறது. பொறுப்பு ஏற்கச் செய்வது என்பதே ஒருவகையில் உன்னை ஏமாற்றுவதுதான். நீ உன்னுடையதை இழந்தால் சரி, ஆனால் எப்போதோ வாழ்ந்த உயிரினமொன்று அழிந்ததென்று சொன்னால், உனது முன்னோர்கள்தான் அதனை அழித்தார்கள் என்று கருதி நீ துக்கம் அடைகிறாய். அவர்களை நீ உடனே குற்றவாளிகள் என்கிறாய். அதோடு நில்லாமல், அவர்களுக்கும் சேர்த்து நீயே குற்றவுணர்வும் கொள்கிறாய். ஏன் இந்த உணர்வு உனக்கு வருகிறது? காலத்தின் குரூரமொன்றிற்கு நீ எவ்வாறு பொறுப்பாக முடியும்? துப்பாக்கிகளைக் கொண்டு, தத்தி நடக்கும் டோபோ பறவைகளின் தலையில் சுட்டுக் கொன்றவர்களின் மீது நீ ஏன் எரிச்சலடைகிறாய்? அழிந்துவிட்ட அனைத்துமே இன்று உயிரோடிருந்தால், அது உன்னைக் குற்ற உணர்விலிருந்து விடுவிக்கலாம். ஆனால் நீ அவைகளை அழிக்கும் குற்றவாளியாக இருப்பாய். ஆனால் இயற்கை ஒன்றை அழித்தால் அதன் பொருட்டு நாம் குற்றவுணர்வு கொள்வதில்லை. நாம் அதற்கு பொறுப்பல்ல. அழிவும், இழப்புணர்வும், குற்றவுணர்வும் மனிதர்களின் ஆழமான சிக்கல்கள். உனது வலது கை அழிவைச் செய்தால், உனது இடது கை அதைத் தடுக்க முனையும். மனிதர்களின் தனிச்சிறப்பான விதி இது.’
தேய்ந்து வளரும் அந்த ஒளியுமிழும் துணைக்கோள், வசீகரமே இல்லாமல் விண்முட்டும் கட்டிடங்களின் தலைக்கு மேலே இப்போதும் இரவில் தோன்றுகிறது.
கண்ணாடிக் கதவுகள் பொருத்திய சாளரத்திற்கு அருகே போடப்பட்டிருக்கும் எனது கட்டிலில் அமர்ந்தேன். வியர்வையில் ஊறிய மறுசுழற்சி செய்யப்பட்ட துண்டுத் துணிகளால் ஆன மெத்தை நைந்து போயிருந்தது. மின்னும் நீல நிறத்தையும், அருகேயிருக்கும் மற்றொரு விண்முட்டும் அடுக்ககத்தையும் பார்த்தேன். திறந்திருந்த ஒன்றிரண்டு சாளரங்களுக்கு அருகே யாருமில்லை.
என்னுடைய கருத்தின் படி, அதை நீங்கள் மதிப்பவராக இருந்தால் சொல்கிறேன், நீலம் ஒரு மென்மையான நிறம், அதனைக் கொண்டு நம்மைப் பயங்கொள்ளச் செய்ய முடியாது.
நிலத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பும் நீல நிற ஊற்றைக் கற்பனை செய்யுங்கள். அது ஒரு போதும் நம்மைத் திகிலடையச் செய்யாது. ஆனால் அதையே சிவப்பு நிறமாக, கருப்பாக, வெண்ணிறமாகக் கற்பனை செய்யுங்கள். நம்மால் அந்த நிறங்களின் பயங்கரத்தை எளிதாகக் கையாள முடியாது.
நீலம், கண்விழித்தவைகள் கண்ட முதல் நிறம்.
நீலம், நியூட்ரலான ஒரு நிறம்.
GrtDetற்குப் பிறகு அரசு, முடிந்தவரை வாழ்வின் அனைத்துக் கூறுகளையும், சுவர்களின் நிற அமைப்புகள் உட்பட நியுட்ரலாக மாற்றவே முயற்சிக்கிறது.
சாம்பல் நிறமும், கருப்பு நிறமும் ஏறக்குறைய தடை செய்யப்பட்டுவிட்டன. செந்நிறத்தை, இளஞ்சிவப்பெனக் கருதக் கூடிய அளவிற்கு அதன் அடர்த்தியைக் குறைத்துவிட்டது.
எனது வீட்டின் உட்புறச் சுவர்கள் மஞ்சள் நிறத்திலானவை, அடுக்ககச் சுவர்கள் வெளிர்பச்சை நிறம்.
‘எனக்குப் பிடித்தமான நிறம் எதுவென்று நீ கேட்டால், நான் சாம்பல் நிறமென்றே சொல்வேன். மரணத்தின் நிறம் அதுதான். பலகாலமாக மனிதர்கள் கருப்பு நிறத்தை மரணத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள். அது தப்பானது. சாம்பல் நிறமே மரணத்திற்கு அருகே செல்லக் கூடியது. ஒன்றின் பிரதிபலிப்பை அதன் அருகே இருப்பவற்றில்தான் துல்லியமாகப் பார்க்க முடியும். சாம்பல் நிறத்தில் மெளனத்தின் ரேகைகளைப் பார்க்கலாம். கருப்பு நிறம் அனைத்து நிறங்களையும் ஒன்றுமில்லாமல் செய்கிறது. இன்மையில் வாழ்வின், மரணத்தின் எந்தத் தடயமும் இல்லை. மரணத்தின் தடயங்களை மனிதர்கள் ஏன் வழிபடுகிறார்கள் என்றால், அதனைத் தவிர்ப்பதற்காக அல்ல, ஆனால் அதனைக் கண்டு அஞ்சாமல் அதனோடு நட்பு கொள்வதற்காக. எதனோடு நீ நட்பு கொண்டாலும் அதனை நீ அஞ்சத் தேவையில்லை’
ஆதித்யா சொன்னான்.
நான் வெகுநேரம் நீல நிறத்தைப் பார்த்திருந்தேன்.
நினைவின் வழியாக ஆதித்யா பேசினான். SUBCOM நினைவுகளைக் கட்டுப்படுத்துகிறது. நீலத்தை வெகுநேரம் தியானித்து விட்டதாகத் தோன்ற, படுக்கையிலிருந்து எழுந்து குறுகலான சமையலறைக்குச் சென்று உணவு டப்பாக்களைத் தேடி, சோயாத் துண்டுகளை எடுத்தேன்.
அவை எப்போதும் போல சுவையற்றிருந்தன.
சோயாவை விட்டால் கோழி இறைச்சி மட்டுமே கிடைக்கும். GrtDetற்குப் பிறகு HighOffகளுக்கு மட்டுமே வேறு இறைச்சிகள் வழங்கப்படுகின்றன.
படுக்கைக்குத் திரும்பினேன். என்னுடைய கடைசி உணவு என்பதால், மிகக் கவனமாக ஒன்றையும் மிச்சம் வைக்காமல் ஒவ்வொரு துண்டையும் கையால் எடுத்துச் சாப்பிட்டேன்.
கைகளைக் கழுவுவதற்கத் தேவையான தண்ணீர் இல்லை.
உணவை அமைதியாகவும், மெதுவாகவும் உண்ணுவது அதற்கு நாம் அளிக்கும் மரியாதையென்று நினைத்தேன்.
உணவை அமைதியாக உண்ணுவதையே தியானமென்று போதித்தவர்கள் இருந்தார்கள் எனச் சொல்லப்பட்டிருக்கிறேன்.
அமைதி மரியாதையின் சின்னம்.
இப்போதும்கூட எல்லோரும் அமைதியாகவே அவரவர் உணவை உண்கிறார்கள். பேசுவதற்கும், இருப்பதைப் பரிமாறிக்கொள்ளவும்கூட யாருமற்றவர்கள் இந்த நகரத்தின் ஒவ்வொரு மலிவான அடுக்ககங்களிலும் நிரம்பியிருக்கிறார்கள்.
இரவு உணவிற்கு நட்சத்திரங்களைத் துணைக்கு வைத்துக்கொள்ளும் வசதியை, உயர அடுக்ககங்களின் மேல் தளங்களில் இருப்பவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
குப்பை அழிப்பானில் உணவு டப்பாவைத் தூக்கி எறிந்தேன்.
குப்பைகள் அனுமதிக்கப்படுவதில்லை.
சாலையோரங்களில் தற்கொலை செய்யும் ஆண்களே குப்பையாக வீழ்ந்து கிடப்பார்கள்.
அடுத்த நாள் செய்திகளில், அந்தக் குப்பைகளின் பெயரையும், சிற்சில அடையாளங்களையும் நாம் அறியலாம்.
மீண்டும் படுக்கைக்குத் திரும்பி, எனது பதிவுக் கருவியை எடுத்து அதன் மின்கல ஆற்றல் அளவைப் பரிசோதித்தேன்.
போதுமான அளவிற்கு இருந்தது.
எனது வாக்குமூலத்தை அல்லது கடைசிச் செய்தியைப் பதிய ஆரம்பித்தேன்.
யாருக்காக இதைப் பதிவு செய்கிறேன்? வெளியே யார் இருக்கிறார்கள் இதனைக் கேட்பதற்கு?
பலரையும் போல நான் அரசின் குழந்தை.
GrtDetற்குப் பிறகு பெற்றோர்களை இழந்துவிட்ட குழந்தைகளை அரசு தத்தெடுத்து வளர்த்தது. மலிவான விடுதிகள், மலிவான உணவு, மலிவான ஆடைகள், மலிவான கல்வி.
ஆனால் அரசு, இந்த வாழ்க்கையைக் கிடைத்தற்கு அரியதென்று மதிக்கச் சொல்லியிருந்தது.
நாங்கள் அமைதியாக அதனை ஏற்றோம்.
அமைதி அச்சத்தின் சின்னமும்கூட.
நான் சிறுவனாக இருந்தபோது உணவைப் பற்றி மட்டும்தான் கவலை இருந்தது.
நான் பதின்பருவத்தை அடைந்தபோது உணவோடு சேர்த்து வேறு ஒரு கவலையும் சேர்ந்தது.
உணவிற்கு விடுதி நிர்வாகம் பொறுப்பேற்றிருக்க, இரண்டாவது கவலை வயதின் கைகளிடம் விடப்பட்டிருந்தது.
எனது விடுதி வாழ்க்கையின் ஒவ்வொரு பதின்பருவ இரவும், பலரும் தங்கள் காற்சட்டையின் மேற்பகுதியைத் திறந்து, ஒரே சமயத்தில் சுயமைதூனம் செய்வதைப் பார்ப்பதாகவே இருந்தது.
சிறுவர்களாக இருந்த காலத்திலிருந்தே எங்களுக்குப் பொம்மைகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. எங்களது குறியையே பொம்மைகளாகப் பாவித்து வந்தோம்.
நான் பல இரவுகளை, இடைப்பகுதியில் நிகழும் அந்தக் குறுகிய காலக் கலவரத்தை அடக்குவதிலேயே கழித்தேன்.
ஆதித்யாவைக் கண்ட பிறகுதான் என்னுடைய வாழ்க்கை துவங்கியதாக நினைக்கிறேன்.
பெண்களுக்கு எதிரான வன்முறையை விசாரிக்கும் காவல்துறைப் பிரிவின் விசாரணை இயந்திரத்தின் முன்னே அமர்ந்திருந்தேன். இயந்திரம் என் கண்களைப் படம் பிடித்த பிறகு, அதன் வாய் போன்ற ஒலிபெருக்கியின் வழியாகக் கேள்விகள் கேட்டது :
‘உங்கள் பெயர்?’
‘என்னுடைய பெயர் உங்கள் பதிவுகளில் முன்பே இருக்குமே?’
‘உங்கள் பெயர்?’
‘சம்பத்’
‘தொழில்?’
‘இணைய வரலாற்றைக் கற்பிக்கும் ஆசிரியன்’
இயந்திரம் சற்று அமைதியானது. திரையில் சில எண்களும், எழுத்துகளும் மின்னி மறைந்தன. ஒரு பெண்ணின் புகைப்படம் தோன்றியது.
அவளை நான் அறிந்திருந்தேன்.
‘இவளை நீ வாடகைக்கு எடுத்தாயா? சொந்தமாக வாங்கினாயா?’
‘சொந்தமாக வாங்கினேன்’
இயந்திரம் திரும்பவும் அமைதியானது. கேள்விகளைத் தேடுவதற்காக அல்ல. பின்னணியில் நான் வாடகைக்கு எடுத்த பெண்களையும், வாங்கிய பெண்களின் தகவல்களையும் அது தேடிப் பார்க்கும்.
‘உங்கள் எண்ணில் வேறு எந்த வன்முறை நிகழ்வும் பதியப்பட்டிருக்கவில்லை’
உண்மைதான். நான் முன் எப்போதும் வன்முறையில் ஈடுபட்டதில்லை.
‘எனவே, உங்களுக்கு இம்முறை ஒருவார காலச் சிறைத் தண்டனை மட்டுமே வழங்கப்படுகிறது.’
சிறைச்சாலை என்று தனியே ஒன்றும் இல்லை. வீடுதான் சிறை. ஒருவார காலம் இணையத் தொடர்பு முதலாக அனைத்துத் தொடர்புக் கருவிகளும் துண்டிக்கப்படும். கதவு வெளியே இருந்து பூட்டப்படும். சாளரங்களும் திறக்கப்படாது. இருவேளை உணவு மட்டுமே அதுவும் மலிவான உணவுப் பொருட்கள் மட்டுமே வழங்கப்படும். கடிகாரங்கள் அகற்றப்படும். VirPlay அணைத்து வைக்கப்படும்.
அந்த ஒரு வார காலமும் சுவர்களில் காதுகளை வைத்து வெளியுலகின் ஓசைகளைக் கேட்க முனைந்தேன்.
அமைதி.
சுவர்களுக்கு வெளியே உலகே இல்லாதது போன்ற அமைதி.
அந்த ஒருவாரக் காலம் சுயமைதூனமும், தியானமுமாகக் கழிந்தது. எனது விடுதிக்கால நினைவுகள் சிலவற்றை SUBCOM அளித்தது.
பின்னாளில் ஆதித்யா சொன்னான்:
‘ஒவ்வொரு சுயமைதூன முயற்சியும் ஆழ்ந்த கற்பனையின், தன்னிரக்கத்தின் விளைவு. அதே சமயம், இந்தத் தன்னிரக்கமே கழிவிரக்கமாகவும் மாறுகிறது. ஆயிரம் கற்பனைகள் ஒரு மென்தசையைத் தொடுவதற்கு ஒப்பாகாது. நாம் நமது தசைகளை வேறு ஒருவருடையதாகக் கற்பனை செய்கிறோம். கரமோ பாலுறுப்பின் வடிவத்தை எடுக்கிறது. நாம் கலவி கொள்ள விரும்பும் உடல் நமது கற்பனையில் அதனை வளைந்து கொடுக்கிறது. அது பேசுவதில்லை, மணமும் இல்லை. ஒருவகையில் மனதைப் புணர்வதே சுயமைதூனம். உனது மனம் அப்போது ஒரு பெண்ணின் வடிவை எடுக்கிறது. அவளுடைய உடலாகவே அது நிரம்பியிருக்கிறது. நீ உனது உடலை அமைதிப்படுத்த உனது மனதைப் புணர்கிறாய். மனதைக் கொன்ற பிறகு கிடைப்பதே அமைதி. தியானம் மனதைக் கொல்ல முனையும் நீண்ட காலப் போர். காமமும் தியானமும் ஒன்றையே செய்ய விரும்புகின்றன. மரணத்தின் முன்வாசலை நமக்குக் காண்பிக்க முனைகின்றன. அசலான மரணம் நேர்கையில் நாம் ஏற்கனவே அதன் உள்ளரங்குக்குள் நுழைந்திருப்போம். பெரும் விலக்கம் பெரும் தனிமைக்கு, பெருந்தனிமை உள்ளாழ்தலுக்கும் நம்மைக் கொண்டு செல்லும். அப்போது உன்னுடைய நினைவுகளுடன் நீ உரையாடுவாய். பெரும்பாலும் நம்மையே குற்றம் சொல்லிக்கொள்வதில்தான் அந்த உரையாடல் முடிவடையும். உனது மனதோடு நிகழ்த்தும் உரையாடலில் இருந்து நீ வெளியேற விரும்புவாய். அது இருட்டோடு பேசுவதற்கு ஒப்பானது. புறவுலகு வினைகளால் ஆனது. வினைகளின் தாங்க முடியாத எடையை மனது சுமப்பதற்குத் தயாராக இருப்பதில்லை. அது ஒரு இறகைப் போல அல்லது நீரைப் போலத் தன்னை வைத்துக்கொள்ள விரும்புகிறது. நாம் நமது மனதின் வலிமையை அதிகமாக நம்புகிறோம். உண்மையில் மன வலிமை என்பது தாங்க முடியாத எடையைத் தூக்கிப் போட முனையும் அதன் எதிர்வினை. நீ என் மீது உன்னுடைய பலத்தைக் கொண்டு சுமத்தியதை, என்னுடைய பலத்தினால் தூக்கி எறிந்தேன் பார், என்பதைப் போல. உலகம் மனதை ஆக்கிரமிக்க விரும்புகிறது. மனமோ அந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராடுகிறது. ஆனால் அதற்கு எவ்வாறு எதிர்வினை செய்வதென்பது தெரியாது. விளைவு, இந்த உலகு மனதின் அலங்கோலமாகவே காட்சியளிக்கிறது. வலிமையும், அறிவும் மனதை ஒரு மலரைப் போல விரிக்க முனைந்தால், அச்சமும், குற்றவுணர்வும் அதனை வெய்யிலாகச் சுட்டுக் கருகச் செய்கிறது. அறிவுடைய ஒன்று எவ்வாறு அச்சமடைகிறது என்பதுமே ஆச்சரியம்தான். நீ ஒரு வாரத்தை மட்டுமல்ல, உன் வாழ்நாளையே மனதில்தான் கழிக்கிறாய். உடல், நீ உண்ட விடுதி உணவைப் போல மலிவானதல்ல, மனம் உயர்வானதுமல்ல. ஒரே பொருள் ரிசீவராகவும், டிரான்ஸ்மிட்டராகவும் இருப்பதைப் போலத்தான். எல்லாவற்றிலிருந்தும் ஒரு விடுமுறை எடுத்துக்கொள். காலம் கடப்பதைப் பார்க்காதே, காலமாகவே இரு. இதுதான் அடுத்த முறை நீ தண்டனை பெற்றால், தண்டனைக் காலத்தை பெரிய வேதனைகள் இல்லாமல் கழிக்க உதவும் வழி.’
எனது ஃபிளாட்டின் கதவுகள் திறக்கப்பட்டன. அவை ஒரு பெரும் பிணையத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன.
எல்லாக் கதவுகளும் ஒரு பெரும் பிணையத்தினால் இயக்கப்படுவதாக இருக்க, உள்ளே நுழையவும், வெளியே செல்லவும், எல்லோருக்கும் ஒரு கடவுச் சொல் வழங்கப்பட்டிருக்கிறது.
கடவுச் சொல், வெளியின் துண்டுகளுக்கு நம்மை உடமையாளராகப் பாவிக்கச் செய்கிறது.
நமது உடல் ஒரு கடவுச் சொல்.
***
(அடுத்த அரூ இதழில் குறுநாவல் தொடரும்…)
புகைப்படம்: குரியன்
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…