கதை

தூமை

12 நிமிட வாசிப்பு

கருங்கும்மென்றிருக்கிறது. 

மெல்ல விரிந்த கருவிழி இருளுக்கேற்றார்போல் கண்பாவையைத் திருத்திக் கொடுத்ததும், என்னை இடை வரை மூடியிருந்த சிறு கூட்டிலிருந்தபடி சுற்றிலும் பார்க்க எத்தனிக்கிறேன். 

உயிர்த்துத் துடித்துக்கொண்டிருந்த சுவர்களைக்கொண்ட ஆளரவமற்ற நீண்ட பெருங்குகையின் நடுவிலே, ஏதோ ஓர் இலக்கு நோக்கி ஓசையின்றி ஓடிக் கொண்டிருந்த கருந்திரவத்தில் தனியளாய் மிதந்து கொண்டிருக்கிறேன் நான். அமர்ந்திருந்த கூடு மெல்லிய ஓட்டத்தில் தள்ளாடுகிறது. காற்றில் ஈரத்தோடு கலந்திருந்த ஏதோவொரு வாடை நாசி துளைத்துக்கொண்டு போய்த் தொண்டையைக் கமற்றுகிறது. அது என்ன வகை நாற்றமெனத் தெரியவில்லை. ஆனால் அழுத்தமாக இருக்கிறது.

எங்கும் திறப்பில்லை. மூச்சடைக்கிறது. கூடு அசைந்து அசைந்து தூரத் தெரியும் மிகச் சிறியதொரு ஒளிப்புள்ளி நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது புலப்படுகிறது. 

பார்த்துக்கொண்டே இருக்கையில் சட்டென அருகே வந்திருந்த அந்த ஒளிப்புள்ளி, ஒரு பனை உயரத்துக்குச் சீரற்ற ஒளிக்கீற்றாய்ப் பிளந்து திறந்துகொள்கிறது. 

அடங்கிக் கிடந்த அணையிலிருந்து திறப்பு கண்ட நீர் போலத் திருகி ஓடிய திரவத்தோடு நானும் கூடும் சேர்ந்து பயணித்துக் கண்ணைப் பறிக்கும் அந்த ஒளிச்சீற்றத்தைக் கிழித்துக்கொண்டு வெளியேறுகிறோம்.

சொத்தென்று விழுந்து உடைகிறது கூடு. 

வெளிப்பட்டு எழுந்து நிற்கிறேன் நான். 

திரும்பிப் பார்க்கிறேன். குருதி சொட்ட விரிந்து கிடக்கிறது பேரளவிலான ஓர் யோனி. 

“மெல்லினி, இன்னும் எழுந்து கொள்ளவில்லையா?”

“இதோம்மா.”

“நேரமாகிறதே? இன்னும் சின்னப்பெண்ணா நீ?” 

ஒளிர்பட்டைக் கடிகாரத்தைக் கையில் பொருத்தியபடி அறைவாசலில் நின்ற அன்னை கண்ணைச் சிமிட்டினாள். புரிந்து சிரித்தேன். பின்பு அவளையே கண்கொட்டாமல் பார்த்தேன். பொதுவாக இந்தத் தமிழ் மண்ணின் பெண்களுக்கே உரிய நெகுநெகுவென்று கதவின் உச்சி தொடும் உயரம் அவளுக்கு. நானாவது சற்றுக் குள்ளமாக அப்பாவைக் கொண்டு பிறந்திருக்கலாம். ஆனால் நானும் அவளின் அச்சுதான். காவலதிகாரியாகப் பணி செய்கிறவள். மிடுக்காகக் கிளம்பி நின்றாள். 

அம்மாவின் நெடிய கால்களுக்குப் பின்னால் சிற்றுருவமாய் நகர்ந்து போய்க்கொண்டிருந்தாள் மகரி. அப்பாவுக்குக் காலை உணவு செல்கிறது. அடுத்து எனது அறைக்கு வரும். அதற்குள் நான் கிளம்பியாக வேண்டும். அம்மா எனும் அந்தக் கருந்தேக்குச்சிலை கைக்கடிகாரத்தை மாட்டி முடித்துவிட்டு ஒற்றை விரலசைத்து, கிளம்பு என்று மீண்டுமொரு முறை சொல்லிவிட்டுக் காற்றிலொரு முத்தத்தையும் பறக்கவிட்டு விட்டுச் சென்றது. முத்தத்தின் ஈரம் மெல்ல என்னை வந்தடைந்து சிலிர்ப்பூட்டியது. அவளுக்கு அடுத்த அறையில் மீண்டும் இதே பாட்டைப் பாட வேண்டும். இங்கே போல மெல்லிய பதில் கிட்டாது. வீடே அலறும். வேகமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்துகொண்டேன்.

கனவில் வந்த யோனி நினைவிலிருந்து அகல்வதாயில்லை. குளியலறையின் ஆளுயர நிலைக்கண்ணாடியின் முன் கால் விரித்து நின்று பார்த்தேன்.  

இப்படித்தானா இருந்தது அது? இல்லையென்றால் என்ன வேறுபாடு?

அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தேன். மாற்றம் வரப்போகிறதோ இல்லையோ, எல்லாம் என் கையில்தான். வெளியே உரத்த குரல் வீட்டை உருட்டிக்கொண்டிருந்தது. மேகா எழுந்துவிட்டாள் போலிருக்கிறது. அவள் குளியலறைக் கதவைத் தட்டி உடைத்துவிடுமுன் உடுத்திக்கொண்டு வெளியேறினேன். நான் கிளம்பி வருவதற்குள் எனக்குப் பிடித்த அளவில் வெண்ணையும் பழக்கூழும் தடவிய, குறுக்காய் நறுக்கப்பட்ட சூடான ரொட்டித்துண்டுகளும், சரியான திடத்திலிருந்த நரசுஸ் காஃபியுமாக எனக்காகக் காத்திருந்தாள் மகரி. 

“நன்றி மகரி” பயனற்ற சொற்களைப் பழக்கத்தால் போட்டு வைத்தேன். சிரிப்பற்ற மகரி பரவாயில்லை என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்றாள்.

ரொட்டியில் தடவப்பட்டிருந்த பழக்கூழ் மீண்டும் கனவை நினைவூட்டியது. கசிந்தொழுகும் செந்நிற முக்கோணம். 

“இன்று மாலைக்குள் முடிவெடுத்தாக வேண்டும். நினைவிருக்கிறதல்லவா?” அம்மா கேட்டது காதில் ஒலித்தாலும் கேட்காதது போலப் பாவித்துக்கொண்டு கிளம்பி வாசல் வந்தேன். 

“இன்றிலிருந்து எல்லாமே மாறிவிடக்கூடும் மெல்லினி. உன் ஒற்றைப் பதிலில்தான் இருக்கிறது. என்ன செய்யப் போகிறாயோ, எதுவாக இருந்தாலும் நன்றாக யோசித்துச் சொல் சரியா? மற்றபடி மனமார்ந்த வாழ்த்துகள்”

நன்றாக யோசித்துச் சொல். என்ன செய்யப் போகிறாய்? 

என்ன பதில் சொல்வது? 

ஒரு வாரமாகக் கேட்கப்படும் கேள்வி. 

இல்லை. அப்படிக்கூடச் சொல்ல முடியாது. விவரம் புரிந்த காலம் முதலே இந்த முடிவை எடுக்க வேண்டிய தேவை இருப்பது எனக்குத் தெரியும்தானே? 

ஆனாலும் ஏனோ முடியவில்லை. மேகாவைப் போல என்னால் சட்டென இதை முடிவு செய்துவிட முடியவில்லை. எங்களின் ஆறாவது பிறந்தநாளன்றுதான், இந்த விஷயம் முறையாக எங்களுக்குச் சொல்லப்பட்டது.  அன்றே மேகா முடிவெடுத்துவிட்டாள். இன்று வரை அதில் மாற்றமும் இல்லை. மாற்றம் வர வாய்ப்புண்டு என்று அம்மா நினைத்திருக்க வேண்டும். அதனால்தான் இருக்கட்டுமென்று ஈராண்டுக்கு ஒருமுறை கேட்டு வைப்பாள். அதற்கு மேகாவின் உரத்த பதிலும் எனது மௌனமும் என்று இரண்டுமே அவளுக்குப் பழகிவிட்டவை. 

நாங்கள், அதாவது நானும் மேகாவும் இரட்டையர். இருமத்தின் ஒன்றும் சுழியும் போல என்பாள் அம்மா. அவ்வளவு வேறுபாடு எங்களுக்குள். இருவரும் பெண்கள் என்பது மட்டுமே எங்களுக்குள்ளான ஒற்றுமை. அதுவும் இல்லாதிருந்திருக்கலாம். இப்படி முடிவெடுக்க வேண்டிய நிலையாவது வந்திருக்காது. 

இன்று மாலை எங்களின் பதினாறாவது பிறந்தநாள் கொண்டாட்டம்.

கொண்டாட்டமென்றால் பெரிதாக ஒன்றுமில்லை. நான், மேகா, அம்மா, அப்பா இன்னும் சில அக்கம்பக்கத்தினர், மேகாவின் உரத்த குரல் தோழமைகள் என்று எண்ணிப் பத்து பதினைந்து பேர் இருக்கலாம். கேக், பானம், இரவு உணவு. அவ்வளவுதான் வசதி எங்களுக்கு. நடுத்தரக் குடும்பம்தான் நாங்கள். பக்கத்துத் தெரு மினாவைப் போலக் கோட்டைகளுக்குச் சொந்தக்காரர்கள் அல்ல. போன வாரம் அவளது பதினாறாவது பிறந்தநாளுக்கு அவளுடைய மலைக்கோட்டை ஒன்றில் விருந்து நடந்தது. 

ஊரையே, அதாவது உண்மையாகவே மொத்த ஊரையும் வண்டி வைத்து அழைத்துச்சென்று நடத்தப்பட்ட விருந்து. அவளுடைய அம்மா பெரிய அரசாங்க அதிகாரி. எது எப்படியிருந்தாலும் இன்று எங்களுக்குக் கேக்கோடு பழரசமும் பரிமாறுவார்கள் என்பது ஒன்றே மேகாவை உற்சாக மிகுதியில் இருத்தப் போதுமானதாக இருந்தது. ஆனால் அதையும் தாண்டிய ஒரு விஷயமும் இருக்கிறது.

ஆம். மேகாவுக்கு இது ஒரு மிகப்பெரிய கொண்டாட்டம். பதினாறு என்பது பெண்களின் வாழ்வில் புதிய துவக்கம். புதிய பிறப்பு. அதற்குப் பதிவு செய்யக் காலையிலேயே மாவட்ட சுகாதார நிலையத்துக்குச் செல்லும் திட்டமிருந்தது அவளுக்கு. இந்நேரம் போயிருப்பாள். 

பைக்குள்ளிருந்து பரிதியின் குரல் கேட்டது. என்ன இந்த நேரத்தில் அழைக்கிறான்?

ஓ! உங்களுக்குத் தெரியாதல்லவா? பரிதி என் காதலன். 

அப்படித்தான் நினைக்கிறேன். ஆமாம், எதிலும் எனக்குத் தெளிவான கருத்தில்லை. 

பதினாறு வயதாவதற்குள் ஆண் இணை இல்லையென்றால் சமவயதுப் பிள்ளைகள் கேலியாகப் பார்ப்பார்கள் என்பது மட்டுமே நான் பரிதியின் காதலை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம். இன்னபிற உடலின்ப இத்யாதிகள் என்னை அவ்வளவு ஈர்த்துவிடவில்லை. கலவிப்பண்பில் எனக்கு மதிப்பெண் குறைவாக இருக்கிறதென்று பள்ளி உடல்நல ஆலோசகர் என்னை அழைத்துச் சொன்ன அறிவுரைகளெல்லாம் பின்பற்றிக்கொண்டு தானிருக்கிறேன். ஆனாலும் ஏதோவொன்று என்னை நெடுகத் துரத்திக்கொண்டிருந்தது. ஆறு வயதிலிருந்தே அது என் எல்லா முடிவுகளையும் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. பரிதியின் அழைப்பை ஏற்று ஊடலைச் செவிப்பொறியைக் காதில் மாட்டிக்கொண்டேன்.

“சொல்லுடா பரிதி”

“எங்கே இருக்கிறாய்? பணிக்கு இன்று நீ விடுமுறையாமே? என்னிடம் சொல்லவேயில்லையே?” 

“எதற்குச் சொல்ல வேண்டும்?” சற்று நேரம் மௌனம் நிலவியது. பதினைந்து வயதில் உயர்கல்வி முடித்து அவரவர் திறன்சார் பயிற்சிப்பணி துவங்கியிருந்தது. எனக்குப் பொறியியல் துறை கொடுக்கப்பட்டிருந்தது. பரிதியும் என் துறையில் பணி செய்கிறவன்தான். 

“எங்கே இருக்கிறாய்?” மீண்டும் அதே கேள்வி.

“இன்று எனக்கு முக்கியமான வேலையொன்று இருக்கிறது.”

“தெரியும், உனக்குப் பிறந்தநாள். அரசு விடுமுறை. உன் வயது என் நினைவிலேயே இல்லை. மன்னித்துக்கொள்.”

நான் ஏதும் பேசவில்லை.

“சரி மாவட்ட சுகாதார நிலையத்துக்கு எப்போது போகிறாய்?”

“மாலையில்தான்.” போவேனா இல்லையா என்ற குழப்பத்தையெல்லாம் அவனிடம் திணிக்கவில்லை. இதில் அவனது நிலைப்பாடு என்னவென்றுதான் எனக்கு நன்றாகத் தெரியுமே!

“ஓ! வேறு எங்கும் போகிறாயா?”

“ம்ம்…தெரியவில்லை. இன்னும் யோசிக்கவில்லை.”

“உன் குழப்பம் இன்னும் தீரவில்லையில்லையா? நான் அவ்வளவு சொல்லியும்…”

அவனுக்கு என்னிடம் பிடிக்காதது என்னுடைய மௌனம்தான் என்பதை அறிந்தே மௌனமாய் இருந்தேன்.

“சரி எங்கே போனாலும் நானும் வருகிறேன். உனக்கு உதவியாக இருக்கும். இப்போது எங்கே இருக்கிறாய் என்று சொல் பேபி.”

“ரஜினி சதுக்கத்திலிருக்கும் சிக்கன் ரைஸ் கடை வாசலில் இருக்கிறேன்.” சொல்லிவிட்டு நானும் ரஜினி சதுக்கம் நோக்கி நடந்தேன். சதுக்கத்தின் மையத்தில் சரித்திரக் கதாநாயகன் ரஜினியின் பெரும் கற்சிலை. நூறு கரங்களும் அத்தனையிலும் துப்பாக்கிகளுமாகக் கருகருவென அசுரத்தனமாக நின்றுகொண்டிருந்தார் ரஜினி. வழக்கம் போலவே சாலைகளில் மக்கள் நடமாட்டமே இல்லை. காலியாக இருந்த சிக்கன் ரைஸ் கடையில் வாடிக்கையான எலுமிச்சை சர்பத் ஒன்றைச் சொல்லிவிட்டுக் காத்திருந்தேன்.

“இங்கே என்ன செய்கிறாய் மெல்லினி?” திரும்பினால் ஜோதி நின்றிருந்தாள். என் வகுப்புக்காரிதான். பள்ளிக் காலம் முழுதும் பேசாமல் போனவள். ஆனால் கடந்து போகையில் ஒரு சிரிப்பு மட்டும் மறக்காமல் செய்துவிடுவாள். இன்று தானாக வந்து பேசுகிறாள். ஏதோ கேட்டாளில்லையா? என்ன கேட்டாள்?

“இங்கே என்ன செய்கிறாய் என்று கேட்டேன். விடுமுறையா?”

“ஆமாம்.” பக்கத்து நாற்காலியை இன்னும் பக்கத்தில் போட்டுக்கொண்டு அமர்ந்தாள். போன முறை பார்த்ததை விடவும் முகம் பூரிப்பாய் இருந்தது.  அவளது பதினாறாவது பிறந்தநாள் வந்து போய்ச் சில மாதங்கள் ஆகியிருக்குமென்று நினைக்கிறேன். பள்ளியிறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடிய நினைவு.

“இன்றைக்கு உனக்குப் பிறந்தநாள்தானே? செய்தி வந்தது. பிறந்த நாள் வாழ்த்துகள் மெல்லினி.” கைகுலுக்கும் பழைய வழக்கத்தை இன்னும் பின்பற்றும் ஒரே ஆள். நீட்டிய கரம் பற்றிக் குலுக்கினேன். 

“நன்றி”

“இப்போது சொல். என்ன சிக்கல்? உன் முகமே சரியில்லை. தெருமுக்கிலேயே பார்த்துவிட்டேன்.”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே!”

“எனக்குத் தெரியும். இன்றைக்கு நீ முடிவைச் சொல்ல வேண்டுமில்லையா? என்ன செய்யப் போகிறாய்?”

மீண்டும் அதே கேள்வி. இம்முறை அது பெருமளவில்… கனவில் கண்ட அந்த யோனியைப் போலப் பேரளவில் என் மனக்கண்ணில் உயர்ந்தெழுந்து அச்சுறுத்தியது.

“தெரியவில்லை ஜோதி. இன்னும் குழப்பமாகத்தான் இருக்கிறது.”

பையிலிருந்த அலைபேசியில் புதிய ஒளிப்படம் வந்திருப்பதாக இசைத்துக் காட்டியது. எடுத்து மேசைமீது வைத்தேன். அரசுத் தகவல் மையத்திலிருந்து வரும் தனிச்செய்தி. மேலெழும்பிய முப்பரிமாண ஒளிப்படிமத்தில் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடி ஆடியது ஒரு மயில். அது முடித்த கையோடு கதைப்பாடலொன்று துவங்கியது.

சில நூறாண்டுகளுக்கு முன் கருப்பை இல்லாமல் பிறக்கத் துவங்கிய பெண்குழந்தைகள்… இருபது சதமாகக் குறைந்த உலக மக்கள் தொகை… செயற்கைக் கருத்தரிப்பு… வாடகைத்தாய்… பொது மகப்பேறு முறை… செயற்கைக் கருப்பை சிகிச்சை எனும் மகப்பேறு மறுமலர்ச்சி… லல்லலல்லா… எல்லாம் கேட்டுக் கேட்டுப் புளித்த பழைய கதை. 

பெண்ணாய்ப் பிறந்தால் இதைக் கேட்காமல் முடியாது. கேட்டால் பெண்களுக்கு மட்டுமே கிடைக்கும் பிரத்யேக உரிமை. உங்கள் சிறப்பை நீங்கள் உணர்வதேயில்லை என்று பரிதி போன்ற ஆண்கள் கதை சொல்ல வருவார்கள்.

அந்த ஈர வெங்காயமெல்லாம் எங்களுக்குத் தெரியாதா?

முடிவு முடிவு என்று தொல்லை தாங்காமல் உயிரை விட்ட பெண்கள் எத்தனை பேர்? கோழைகள் என்று மேகா இடித்துரைப்பாள். என்னவோ அது ஒன்றே அவர்கள் இறக்கப் போதுமான காரணம் என்பது போல. 

என் முகபாவனைகளைப் புரிந்துகொண்டு ஒளிப்படத்தைப் பாதியில் நிறுத்தினாள் ஜோதி. இப்படிப் பதினாறாவது வயதில் செய்தி அனுப்பும் திட்டம் என்னைப் பொருத்தவரை ஓர் உள வன்முறை. இந்த வகைமைக்குள் வராதவர்கள், பிற உறுப்புக்குறைபாட்டோடு பிறந்தவர்கள் அத்தனை பேருக்கும் இது எவ்வளவு வலிக்கும்? பள்ளியில் ஜோஜி என்ற பெண்ணுக்கு வந்த இந்த ஒளிப்படத்தை அருகேயிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒருத்தி அப்படியே ஓடிப்போய் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட கதை எல்லோரும் அறிந்ததுதானே? அவள் வீட்டில் ஐந்து பெண்பிள்ளைகள். அனைவரும் கருப்பை மட்டுமல்ல யோனியும் இல்லாமல் பிறந்தவர்கள். ஆயிரத்தில் நூறு பேர் இப்படித்தானே இருக்கிறார்கள்? வறுமை வேறு. என்னதான் செய்வாள் அவள்?

“அம்மா என்ன சொல்கிறார்கள்?” மெல்லக் கேட்டாள் ஜோதி.

“என்ன சொல்வார்கள்? உன் முடிவுதான் முக்கியம் என்று சொல்கிறார்கள்.” எதையும் தொண்டைக்குள் திணிக்கும் பழக்கம் அம்மாவுக்குக் கிடையாது. ஆனால் அவளது எண்ணம் முகத்தில் தெரியத்தான் செய்யும். அம்மாவின் அந்தக் கண்ணாடிப்புன்னகை மனதில் வந்து போனது. யுகங்கடந்த பெண்ணினத்தின் சோகம், குற்ற உணர்ச்சி, என் முடிவு மேகாவுடையதை ஒத்திருந்தால் அதற்குத் தேவையானவற்றைச் செய்ய வேண்டிய முயற்சி என்று அந்தப் புன்னகைக்குப் பின்னால் எவ்வளவோ இருந்தது.  

“மேகாவின் முடிவு?”

“அவளுக்குக் கருப்பை சிகிச்சை கண்டிப்பாக வேண்டுமாம். பொதுமனையில் சினைமுட்டை கொடுத்து இயந்திரம் வளர்த்திப் பெற்றுக்கொடுக்கும் பிள்ளை தனதாக இருக்க நூற்றில் ஐம்பது விழுக்காடுதான் வாய்ப்பிருக்கிறதென்று எங்கோ படித்த கதையைத் தினம் இரவில் சொல்லி அலுப்பூட்டுகிறாள். அவள் பிள்ளை பெறவே பிறப்பெடுத்தவளாம். அவள் வயிற்றில்தான் பிள்ளை வளர வேண்டுமாம். அதற்காக எவ்வளவு காலமானாலும் இரத்தம் சிந்தத் தயார் என்கிறாள்.”

“ஓ…” 

நீ அப்படியில்லையா என்ற கேள்வியை ஜோதி என்னிடம் கேட்டிருந்தால் என்ன பதில் சொல்வதென்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. முன்பே சொன்னேனே, எனக்கு எதிலும் தெளிவான முடிவில்லை. 

நீங்களே சொல்லுங்கள், இப்படியொரு சிக்கலுக்கு எப்படித் தெளிவான முடிவு கிட்டும்?

எதிர்வீட்டு ரேகா கண்முன்னே பொதுமகப்பேறு மூலம் மூன்று பிள்ளைகள் பெற்றாள். ஒரு நாள்கூடத் தூக்கம் தொலைக்கவில்லை வேலை நிறுத்தவில்லை என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறாள். பிள்ளைகளையும் பிறந்தவுடன் வீட்டுக்குக் கொண்டுவரவில்லை. ஐந்து வயது வரை குழந்தைகள் வளர்ப்பு மையத்தில் விட்டு வளர்த்த பின்தான் வாங்கிக்கொண்டாள். எனது முடிவு எப்போதும் சரியாகவே இருக்குமென்ற பெருமை அதைச் சொல்கையில் அவள் முகமெங்கும் ஒளி வீசுவதைப் பார்த்திருக்கிறேன். 

பொதுமகப்பேறு முறையே சிறந்தது என்பதுதான் ஓரிரு தசாப்தங்கள் முன்பு வரை இருந்த பொதுக்கருத்து. இந்தப் புதிய முறை மேல்தட்டுக்காரர்கள் கண்டுபிடித்த முறை. எதையாவது செய்து, தான் தனித்துத் தெரிய வேண்டும். சாமானியர்களுக்கு இணையாக இருந்துவிடக் கூடாது. 

ஓ! உங்களுக்குத் தெரியாது அதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

நாடுகள்கூட அப்படித்தான். வசதியான நாடுகளெல்லாம் இந்தப் புதிய முறையைப் பொதுமையாக்கி அனைத்துக் குடிமக்களுக்கும் அதை இலவசமாக்கி இருந்தன. நமது நேரம், அப்படியான நாட்டில் பிறக்கக் கொடுத்து வைக்கவில்லை. அப்படியே பிறந்திருந்தாலும் நீ என்ன முடிவு எடுத்திருப்பாயென்று கேட்கிறீர்களா? எனக்குத் தெரியவில்லை. கண்டிப்பாக அப்போதும் இப்படித்தான் குழம்பியிருப்பேனென்று நினைக்கிறேன்.

அந்த நாடுகளில்கூடப் பலரும் வலியற்ற பொது மகப்பேறு முறையைத்தான் பயன்படுத்துகிறார்களாம். ஆண் பெண் என்றில்லாத எத்தனை இணையர்களுக்கு இந்தத் திட்டம் உதவுகிறது? அவ்வளவு ஏன்? நானும் மேகாவுமே பொதுமகப்பேறு வழியாகப் பிறந்தவர்கள்தான். நாங்கள் பிறந்த சமயம் அம்மா எல்லைப் பாதுகாப்புப் பணியில் இருந்தாள். அப்பா தூரதேசத்துப் பல்கலையொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தார். வளர்ந்து மூன்று வயதிருக்கும்போதுதான் எங்களை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். என்ன கெட்டுவிட்டோம்?

எதற்கு வயிற்றைக் கிழித்து, அதில் புதிதாய்க் கருப்பையை, சூலகத்தை இன்னும் என்னென்னவோ வைத்துத் தைத்து… மருந்து மாத்திரைகள் உண்டு… எல்லாம் எதற்கு?

இதெல்லாம்கூடப் பரவாயில்லை. அந்தத் தூமை…

“ஜோதி?”

“ம்…”

“வலிக்குமா?” எது என்று நான் கேட்காமலே புரிந்துபோனது அவளுக்கு. அவள் கருப்பை சிகிச்சை செய்து கொஞ்சகாலம் ஆகியிருக்கிறதே.

“ஆமாம். ஒவ்வொரு மாதமும் உதிரப்போக்கும் வலியும் அதிகம்தான். ஆனால் சூல் கொண்ட பிறகு வலி இருக்காது என்கிறார்கள்.” வலியைச் சொல்வதில் அவள் முகம் அவ்வளவு பூரித்தது. 

“பேறு காலத்தின்போது?” ஆயிரம் கதைகள் கேட்டுவிட்டேன். பல நூறு ஒளிப்படங்கள் பார்த்துவிட்டேன். எல்லாவற்றிலும் அன்னையரின் பொங்கிப் பிரகாசித்த முகமே முடிவாக இருந்தாலும், எனக்கென்னவோ அவை யாவற்றிலும் வலி மட்டுமே பிரதானமாகப் புலப்பட்டது.

“வலிக்கத்தான் செய்யும். வெட்டியெடுத்தால் வலி குறைவு. தானே பெற்றெடுத்தால்..”

“வேண்டாம் சொல்லாதே. பலமுறை பார்த்துவிட்டேன்.” கண்களை மூடிக்கொண்டதும் நினைவை மீண்டும் கனவு ஆக்கிரமிக்கத் துவங்கியது. 

யோனி என்பது வெறும் இன்பத்துக்கான உறுப்பல்ல. அது உயிர்வாசல். அது இல்லாமல் என்ன பெண்ணினம்? வரமாய்க் கிடைப்பதைப்போய் வேண்டாமென்பாயா ? மேகாவின் குரல் உள்ளுக்குள் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. 

“உனக்கு நினைவிருக்கிறதா மெல்லினி? ஒரு காலத்தில் பெண்கள் பிள்ளை பெறுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் படாதபாடு படுவார்களென்று பண்டைய வரலாற்றுப்பாடத்தில் சொன்னபோது எப்படி நம்பமுடியாமல் வாய் பொத்திச்சிரித்தோம்? மாதமொருமுறை ஒழுகும் யோனி, அடிவயிற்றைக் கீறும் வலி இதெல்லாம் எதற்கென்று எவ்வளவு பகடி செய்திருப்போம்?” ஜோதி சர்பத் குவளையில் கிடந்த உறிஞ்சுகுழலைச் சுழற்றியபடி பழைய நினைவில் ஆழ்ந்தாள். அவளது குரலே அதெல்லாம் அசட்டுத்தனம் என்று அறிவுறுத்துவதாய் இருந்தது.

“உனக்கு ஃபிலோமினா அக்காவை நினைவிருக்கிறதா?” 

ஃபிலோமினா அக்காவை எனக்கு நன்றாக நினைவிருந்தது. எங்களைவிட சில அகவைகள் மூத்தவர். நெட்டை உருவம் தட்டை மார் அகன்ற தோள்களென்று அசலான வீராங்கனை. 

“அதென்ன பெண்களுக்கு மட்டும் இந்தத் தலைவலி? ஏன் ஆண்கள் செய்துகொள்ளக் கூடாதா இதையெல்லாம்? மாதவிடாய் மகப்பேறு குழந்தை வளர்ப்பு என்று எல்லாமும் பெண்கள் பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி நினைத்த வேலையில் சாதனைகள் செய்ய முடியும்? ஒவ்வொருவரும் வயிற்றைத் தள்ளிக்கொண்டு நின்றிருந்தால் இன்றைக்கு உலக நாடுகளின் அதிபர்கள், பெருந்தலைவர்கள் துறைசார் வல்லுநர்கள் என்று பெண்கள் பெரும்பான்மை வகிப்பது சாத்தியமே ஆகியிருக்காது. வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போயிருக்க வேண்டியதுதான். இதெல்லாம் எதற்கு? இருவரும் உடல் நோகாமல் பிள்ளை பெறும் பொது மகப்பேறு முறைதான் சரி. இந்த ‘நமக்கே நமக்குக் கருப்பை’, ‘நான் வயிற்றில் சுமந்த பிள்ளை’ – இந்த உணர்வு மயிரு மண்ணாங்கட்டி கதையெல்லாம் ஆண்கள் செய்யும் தந்திரம். அப்படியே நம்மை அடிமையாக்கி வீட்டுக்குள் உட்கார வைக்கப் பார்க்கிறார்கள். அப்போதுதானே அவர்கள் நமக்கு மேலே உட்கார முடியும்? இது ஒரு கல்ட். இதிலெல்லாம் ஏமாந்து என் சுதந்திரத்தைத் தொலைத்து விடமாட்டேன் நான்.” வாரியம் தோறும் அரசு நடத்தும் பிறப்புறுப்புப் பயிற்சிப்பட்டறையில் ஒரு முறை இந்தக் கருப்பை சிகிச்சை பற்றிய விளக்கம் முடிந்த உடன் ஃபிலோமினா அக்கா பேசிய வீர வசனம் இது.

“ஆமாம், அவர்களுக்கென்ன?”

“அவர்களுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. பொது மகப்பேறு அல்ல. சுய மகப்பேறு. இரட்டையர். தாயும் பிள்ளைகளும் நலமாக இருக்கிறார்கள். நேற்று போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். சுகப்பிரசவமென்று சொல்வது உண்மை போலத்தான் தோன்றுகிறது. ஆளே மாறிப்போயிருக்கிறார்கள். உள்ளம் விளைவித்ததா அன்றி உடற்கூறு விளைவித்ததா என்று தெரியவில்லை முகத்தில் அத்தனை கனிவு.”

ஃபிலோமினா அக்காவேவா? மனது சுழற்றியடித்தது. ச்சே.. ஏற்கனவே இருக்கிற குழப்பம் போதாதா? இதையெல்லாம் எதற்கு என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்? 

“ஒருவேளை நீயும் கருப்பை சிகிச்சை வேண்டுமென்று சொன்னால் உன் வீட்டில் என்ன செய்வார்கள்? நமது அரசாங்கம் ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தானே இலவசக் கருப்பை சிகிச்சை தருகிறது.”

அது எனக்குத் தெரியாதா? அல்லது இவள் வீட்டில் போல – எத்தனை பெண் பிள்ளைகள் இருந்தாலும் சிகிச்சைக்குச் செலவு செய்யுமளவுக்கு – எங்களிடம் பணம் இல்லை என்பது இவளுக்குத் தெரியாதா? எதற்கு இப்போது குடைகிறாள்?

“அம்மா வங்கிக்கடன் வாங்கலாமென்று சொல்கிறாள்”

“ப்ரிமியம் அதிகமாயிற்றே.”

“சித்தி உதவுவதாகச் சொல்லியிருக்கிறாள்.” எல்லாம் என் முடிவைப் பொருத்துதானே. 

பேசாமல் முட்டையும் விந்தணுவும் கொடுத்துவிட்டுப் பொறுத்திருந்து  பிள்ளையை வாங்கிக்கொண்டு போகாமல் எத்தனை முடிவுகள்? எத்தனை செலவுகள்? இதைக்கூட விடுங்கள், சில ஆண்டுகளாகப் புதிதாக ஒரு கொண்டாட்டம் பிறந்திருக்கிறது. 

சொன்னால் நம்ப மாட்டீர்கள்!

பதினாறு வயது நிரம்பிக் கருப்பை சிகிச்சை முடிந்த பின்பு பெண்களுக்கு முதன் முதலாக வரும் தூமையைக் கொண்டாட வேண்டுமென்று கிளம்பியிருக்கிறது ஒரு கூட்டம். திருவிழா மாதிரி கொண்டாடுகிறார்கள். பழைய பாரம்பரியப்படி பட்டுடுத்தி மனையலங்கரித்து மாலை நகை பூட்டி ஊர் உறவு அத்தனை பேரையும் கூட்டி விருந்து வைத்து… எல்லாம் ஓர் ஒழுகும் யோனிக்காக… ச்சை…

இதையெல்லாம் பார்த்து மயங்கி இப்போது எல்லோருக்கும் இந்த ஆசை வந்துவிட்டது. சில ஆண்டுகளாகவே அரசு அங்கீகாரமில்லாத செயற்கைக் கருப்பை நிலையங்கள் முளைத்துக்கொண்டேதான் இருக்கின்றன. அங்கேயெல்லாம் போய் உயிரை விலை பேச வேண்டிய அளவுக்குப் பித்து பிடித்திருக்கிறது மக்களுக்கு. ஆனால் அம்மாவுக்கு அப்படியல்ல. செய்தால் உருப்படியாகச் செய்ய வேண்டும் என்பாள். 

“மெல்லினி, எனக்குத் தெரிந்த ஒரு மூதாள் இருக்கிறாள். அவளைப் போய்ப் பார்ப்போமா? அவள் பேச்சைக் கேட்டால் உனக்குக் கொஞ்சம் தெளிவு பிறக்கும்.” சந்தேகம் இல்லாமல் இவள் காரணமாகத்தான் என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். அந்தத் திருவிழா கூட்டத்துக்கு ஆள் பிடிக்கிறாளோ? பரிதியின் குரல் இடையிட்டது.

“சொல் பரிதி.”

“இல்லை, நான் வரக் கொஞ்சம் தாமதமாகும். காத்திருக்கச்சொல்லித்தான்..”

“வேண்டாம் பரிதி. உனக்குச் சிரமம் வேண்டாம். நான்… ஜோதியோடு இருக்கிறேன். அவளோடு வெளியே போகிறேன், இனி நீ வர வேண்டாம்.” திடீரென உடைபட்ட சங்கிலிபோல உள்ளே முறுகிக்கிடந்த சொற்கள் வெளியேறி விழுந்திருந்தன. நான் சொல்வதைவிடவும் சொல்லாமல் போவதைச் சரியாகப் புரிந்துகொண்டவன் போல அமைதியாகிவிட்டான் பரிதி. நானும் சற்று நிதானித்தேன்.

“சரி. நீ காத்திருக்க வேண்டாம். மாலையில் சந்திப்போம்” 

“அப்படியென்றால் போவோமா?” முகம் ஒளிரக் கேட்டாள் ஜோதி.

“இல்லை. வேண்டாம்.”

“பிறகு நீ பரிதியிடம்…”

“பொய் சொன்னேன்.” என்னைப் பார்த்துக்கொண்டு பேசாமல் அமர்ந்திருந்தாள் ஜோதி.

***

மாலையில் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருந்த வீட்டினுள் நுழையும்போதே உடலில் அறுபது கிராம் எடை அதிகமாகிவிட்ட உணர்வு வந்துவிட்டது. பிற்பகல் முழுவதும் பழைய நூலகத்தில் காகிதப் புத்தகங்களைப் புரட்டிப் புரட்டி விரல் தேய்ந்துவிட்டது. நான் பார்க்காத ஒளிப்படங்களே இல்லை. நூலகர் வந்து சிரித்துவிட்டு, சற்று என்னோடு பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போனார். 

அவருக்கு ஐந்து பிள்ளைகளாம். எல்லாம் பொது மகப்பேறு வழியாகப் பிறந்தவர்கள். முகப்பேற்றில் ஐந்தடுக்கு வீடு இருக்கிறது. ஆளுக்கொரு தளத்தில் பிள்ளைகள். அவர்களில் இருவருக்குப் பொது மகப்பேற்றில் இரண்டு பிள்ளைகள். மூவர் இணையரில்லா வாழ்வைத் தேர்ந்தெடுத்துச் சுகமாக இருப்பதாகச் சொன்னார். எதெதற்குச் செலவு செய்ய வேண்டுமென்ற தெளிவு வேண்டுமம்மா என்று சொல்லி என்னைக் கூடக்கொஞ்சம் குழப்பிவிட்டுப் போனார். 

ஆகக்கூடி வீடு வரும்போது காலையில் இருந்ததை விடவும் அதிகமாகக் குழம்பியிருந்தேன். சுகாதார நிலையத்துக்குச் செல்ல இன்னும் இரண்டு மணிநேரம்தான் அவகாசமிருந்தது. நான் போவதாக இருந்தால் அம்மாவும் உடன் வருவதாகச்சொல்லியிருந்தாள். என்னை நன்கு அறிந்தவளாயிற்றே.

வீடு கலகலப்பாக இன்னும் காலம் இருந்தது. மகரி சக்கரக்கால்களில் நகர்ந்து ஒளிரலங்காரங்களைச் சுவர்களில் நிரப்பிக் கொண்டிருந்தாள்.  என்னைப் பார்த்ததும் முதல் ஆளாய் ஓடிவந்து கைகளைப் பற்றிக்கொண்டு சிரித்தாள் மேகா.

“என்ன முடிவு செய்தாய் மெல்லினி? சுகாதார மையம் போனாயா?” நானே என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பதைப் போலிருந்தது. ஆனால் அவள் முகம், அதில் தென்பட்ட கூடுதல் வெளிச்சத்தை உடனே கண்டு கொண்டேன். கேள்வியாய்ப் பார்த்தேன். அவளுக்கு அதற்கு மேல் கேட்க வேண்டியதில்லை.

“நாள் கொடுத்துவிட்டார்கள். நாளை மறுநாள் மெல்லினி. கருப்பை சூலகம் எல்லாம் புதிதாய்க் கிடைக்கப் போகிறது. எண்ணிப் பதினைந்து நாட்களில் எனக்கும் தூமை வந்து விடும். அப்பாடா… கப் வாங்க வேண்டும். மாத்திரைகள்… உணவுப்பழக்கங்கள். காட்..எவ்வளவு வேலை இருக்கிறது தெரியுமா? நானும் கவினும் (மேகாவின் காதலன்) பேசிவிட்டோம். இருபது வயதில் முதல் குழந்தை. இருபத்தி இரண்டில் இரண்டாவது. அப்புறம்” அதற்கு மேல் அவள் பேசிய எதுவுமே எனக்குக் கேட்கவில்லை. 

கனவின் யோனி புதிதாய்ப் பிளக்கிறது. ஓடிச் சுழித்துவரும் குருதி என்னை அடித்துச் சுழற்றிக் கொண்டோடுகிறது.

“மெல்லினி…” அக்கறையோடு முன்னே நின்றிருந்தாள் அம்மா தெளிவற்ற வடிவாய்த் தெரிந்தாள்.

“என்னடா? எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. உன்னுடைய முடிவுதான் உனக்குச் சரியானதாக இருக்கும். அடுத்தவர் சொல்வதையெல்லாம் மனதுக்குள் போட்டுக் குழப்பாதே. இது உன் மனது எடுக்க வேண்டிய முடிவு.”

பேசிக்கொண்டிருக்கும்போதே அவள் குரலடங்கியது. திடீரெனப் பெருவலி. 

வயிற்றைத் திருகிக்கொண்டு வலி. இல்லாத ஒன்று இருப்பவற்றையெல்லாம் உள்ளே விழுங்கிக்கொண்டிருந்தது. என்னையே விழுங்கிக்கொண்டிருந்தது. அது உண்டு முடித்த உறுப்புகளின் மீதம் கரைந்து யோனி வழியாகக் குருதியாக ஓடிக்கொண்டிருந்தது.

தரையெல்லாம் குருதி.

குருதியோடிய தூமைத்துணிகளும் பஞ்சுத்தட்டிகளும் வீட்டின் கூடத்தை நிறைத்து மூடிக்கொண்டிருந்தன. வளர்ந்து கொண்டிருந்தது மலை. தூமை வீச்சம் தெருவெல்லாம் கசிந்துவிட்டது. பூக்களெல்லாம் கருகிக்கொண்டிருந்தன.

அம்மாவும் அப்பாவும் பூசணி போலப் பெருத்த வயிற்றைப் பிடித்துக்கொண்டு மேகாவும் ஓட முயன்று குருதிச்சுழலில் மாட்டிக்கொண்டு தத்தளிக்கின்றனர்.

என் கால் வழியோடிய குருதி ஊரையே விழுங்கிக்கொண்டிருந்தது. மீண்டும் அந்தக் குகைக்குள் கருந்திரவத்தில் நான் தனித்து மிதந்து கொண்டிருந்தேன். மீண்டும் அந்த வெளிச்சப்புள்ளி…

“மெல்லினி…மெல்லினி…”

“ம்மா…” பத்தாண்டுக் குழப்பமும் முடிவுக்கு வந்தது போல உடைப்பெடுத்து ஓடியது கண்ணீர். 

“என்னம்மா மெல்லினி? என்…” என் கண்ணில் தெரிந்த ஒளி வெள்ளத்தைக் கண்டுகொண்டவள் பாதிப்பேச்சில் நிறுத்தினாள். பின்னர் குரலதிரக் கேட்டாள் 

“முடிவெடுத்துவிட்டாய்தானே?” கண்ணீர் மல்க ஆமோதிப்பாய்த் தலையாட்டினேன். என்ன முடிவென்று நான் சொல்லாமலே அவளுக்குத் தெரிந்துவிட்டது. முதல்முறையாக மிகத்திடமான முடிவெடுத்த எனக்குக் கண்ணீர் நிற்கவில்லை. அவளும் என்னைவிட அதிகமாக அழுவது போலிருந்தது. 

அதைத் துடைக்காமலே உப்பு கரிக்கும் என் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் சூல் கொள்ளாமலே என்னைப் பெற்றெடுத்த என் தாய். 


புகைப்படம்: பிரஷாந்த்

இதழ் 12 பிற படைப்புகள்

மாயா

இயற்பெயர் மலர்விழி பாஸ்கரன் (1983). மதுரையில் பிறந்து சென்னை சீனா மலேசியா என்று சுற்றிவிட்டுத் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். கதைகளைக் காதலிப்பவர். அறிபுனைவுகளிலும் வரலாற்றுப்புனைவுகளிலும் கூடுதல் நாட்டம். இது வரை இரண்டு அறிபுனைப் புதினங்கள் 'கடாரம்' என்ற வரலாற்றுப்புதினம் உட்பட ஐந்து புனைவுகளும் வரலாற்றுப் பயணக்குறிப்பு அபுனைவு நூலொன்றும் எழுதியிருக்கிறார். இணைய இதழ்களிலும் மலேசிய நாளிதழிலும் தொடர்கதைகள் எழுதி இருக்கிறார். தென்கிழக்காசிய வரலாற்று ஆய்வுகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

எழுத்தின் எல்லைக்கோட்டுக்குள்ளும் வெளியும் உள்ள பல்வேறு பரிமாணங்களையும் தொட்டுப்பார்த்துவிடவும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் விரும்புகிறவர். கவிதைகளிலும் நாட்டமுண்டு. கீழ்க்காணும் வலைப்பூவில் இவரது கவிதைகள் வாசிக்கக் கிடைக்கும்.

https://authormaya.wordpress.com/

Share
Published by
மாயா

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago