கட்டுரை

கவிதையின் மதம் – 8: காதலும் எண்ணங்களும்

7 நிமிட வாசிப்பு

முதல் எண்பதுகளில் ஓர் ஆண்டு அது. அடையாறு வசந்தவிஹாரில் பத்துநாட்கள் (ஏழு நாட்கள்?) ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவினைக் கேட்கச் சென்றிருந்தேன். அந்தப் பத்துநாட்களின் பிற பொழுதுகளெல்லாம் பிரமிளுடன் கழிந்தன. ஊர் திரும்புகையில் பிரமிள் போகிறது போகிறீர்கள் திருவண்ணாமலை சென்று யோகி ராம்சுரத்குமாரைச் சந்திந்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறியிருந்தார். சென்றேன். போகும்போது ஏதாவது ஒன்று – அந்தப் பொருளையும்கூட குழந்தைக்கு வழிகாட்டுவதுபோன்ற ஆலோசனையுடன் அவரே கூறியிருந்தார்.

அந்த இல்லத்திற்குள் அவரைச் சுற்றி நிறைய பார்வையாளர்கள் அமர்ந்திருந்தார்கள். பிரமிளையும் என் வருகையையும் கூறியபடி நான் கொண்டுவந்த கடலைமிட்டாய்ப் பொதிவை அவரிடம் நீட்டினேன். அவரைச் சுற்றி இதுபோலும் நிறைய பொருட்கள் கூடியிருந்தன. அவர் அவற்றைப் பிரித்துப் பிரித்து அனைவருக்கும் பகிர்ந்துகொடுப்பவராய் இருக்கிறார். “அங்கே அப்படிவை” என்பதுபோல் கைசுட்டினார் அவர். அப்போது நடந்த நாடகத்தால் இருவருமே காயம்பட்டவர்களாய் உணர்ந்தது போலிருந்தது எனக்கு.

ஜே.கிருஷ்ணமூர்த்தி என்ன சொல்கிறார்? எனக் கேட்டார். எண்ணங்கள் குறித்து அவர் கூறும் தீர்க்கமான முடிவுகளை நான் கூறினேன். ‘அ, அது எப்படி முடியும்?’ என, சாத்தியமற்றது என்பது போன்று அவர் உரைத்த தொனியும் வரியும் நன்றாகவே நினைவிலுள்ளது. அதைத் தொடர்ந்துதான் எண்ணங்கள் குறித்து ஆழமாக அவரிடம் விளக்க முயன்றதும் ஞாபகம் இருக்கிறது. என் வாழ்க்கையிலேயே முதன்முதலாக நான் ஆங்கிலத்தில் வாய்திறக்கும்படியான வேளை அது. பேச்சிற்கிடையே நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள், என்ன பணி செய்கிறீர்கள் என்று கேட்டமைக்கும் சொன்னேன். எனது கேவலமான ஆங்கிலத்தால் எனக்கு ஓர் அவமானத்தையும் அவருக்கு ஓர் எரிச்சலையும் உண்டாக்கிவிட்டிருந்தேன் போலிருந்தது. ஆனால் பிற்காலத்தில் அன்பர் பவா.செல்லத்துரை அவர்களை நான் சந்திந்தபோதும், என்னுடன் கழிந்த அவரது மேடைப்பேச்சுக்கள் மற்றும் ஒவ்வொரு கலந்துரையாடலின் போதும் யோகி, கவிஞர் பிச்சுமணி கைவல்யம் தெரியுமா உங்களுக்கு, மிக முக்கியமான மனிதர் எனக் கூறியதை அடிக்கடி, திரும்பத் திரும்ப நினைத்துக்கொள்பவராய் இருந்ததைக் கண்டு எனக்கு ஓர் அதிர்ச்சியும் நிறைவமைதியும் உண்டானதை அறிந்தேன். மேலும் மொழியைத் தாண்டித்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டியதும் கடத்த வேண்டியதும் இருக்கின்றன என்பதையும்.

தற்போது நான் எழுதிக்கொண்டிருந்த ‘எண்ணங்களுக்கும் ஓர் இடமுண்டு’ கவிதை என்னுள் எழுப்பிய நினைவுகளைத்தான் இப்போது உங்களோடு இங்கே பகிர்ந்துகொண்டிருக்கிறேன். எண்ணங்கள் பற்றிய அந்தக் கவிதையையும் இத்தோடு இணைத்துள்ளேன். தலைப்பும் கவிதையின் இந்த முதல்வரியும் விளக்கப்படாமலேயே எண்ணங்கள் குறித்த தீவிரமான ஓர் உண்மையை சுட்டிவிடுகிறது என்றே நம்புகிறேன்.

எண்ணங்களுக்கும் ஓர் இடமுண்டு

எண்ணங்களுக்கும் ஓர் இடமுண்டு
எண்ணங்களினால்
காதலை நெருங்க முடிந்தால்!
எண்ணங்களைக் கொண்டே
எண்ணங்களை அழிக்க முடிந்தால்!

எண்ணங்கள் எத்துணை ஆபத்தானவை!
எண்ணங்கள் ஒருபோதும் உண்மையானவை
அல்ல எனும் எண்ணமே உண்மையானது.

உண்மையான எண்ணங்களுக்கு
நிச்சயமாக ஓர் இடமுண்டு எனினும்
எண்ணங்களால் காதலை நெருங்க முடிவதில்லை.
எண்ணங்கள் தம்மை அழித்துக்கொண்டே
காதலை நெருங்குகின்றன.

எண்ணங்களில்
உண்மையானவை பொய்யானவை என்றில்லை
நேர்மறையானவை எதிர்மறையானவை என்றில்லை
தன்னை அறியாதவரை
தான் யார் என்பதே அதற்குத் தெரியாது.

எண்ணங்களில்
எண்ணங்கள் மட்டுமே உள்ளன
பயனற்றவை என்பதே
அதனுடைய சரியான குணச்சித்திரம்.

காதலின் எண்ணங்களில்
வியர்த்தமும் இன்பமும் உண்டுபோலவே
தப்பித்தலும் தப்பித்தலினால் விளையும்
ஆபத்துகளும் உண்டாதலால்
எண்ணங்களோடு எப்போதுமே
நாம் கவனமாகவே இருக்க வேண்டும்
நாம் பயன்பெறும்படி
நாமே கட்டமைத்த உலகில்தான்
நாம் எப்போதும் புழங்குபவர்களாயிருப்பதால்
ஒளிராத இந்த எண்ணங்களோடு எப்போதுமே
நாம் கவனமாக இருக்கவேண்டும்.

கவனம், பார்வை இவையே
எண்ணங்களைக் காட்டிலும்
அவசியமானவை
மேலானவை
வைரமாய்ச் சுடர்பவை
ஒளிரும் பிறிதொன்றில்லாததாய்
நாம் காண்பவை.

நித்ய சைதன்ய யதியும், யோகி ராம்சுரத்குமாரைப் போலவே அபிப்பிராயம் கொண்டிருப்பதை நான் கேட்டிருக்கிறேன். மூன்றாவதாக ஜே.கிருஷ்ணமூர்த்தியோடு ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட பிரமிள் எவ்வாறு இத்தகைய ஞானிகள், பித்தர்கள் மீதும் ஈடுபாடு காட்டுகிறார் என்பது வியப்பளிக்கக்கூடிய ஒன்றுதான். யதி கூறியதாக ஜெயமோகன் சொற்கள் மூலம் நாம் கேள்விப்பட்ட ஒன்றே இதற்கான மிக அழகான – இயற்கை வரைக்குமுள்ள – ஒரு பதிலாகத் தோன்றுகிறது எனக்கு. அது: “பறவைகளில் பல வகைகள் இருக்கின்றன, அல்லவா?”

இதில் நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இவர்களெல்லாம் விடுதலை பெற்ற மனிதர்கள் – குறிப்பாக, பள்ளிக்கூடம், பணிகள் என நாம் கட்டமைத்த மானுட வாழ்க்கையிலிருந்து என்பதுதான். இதுபோதாது என்பதுதான் இன்று நம்முடைய கேள்வியும் அதற்கான பதிலும். போதாது என்றால் என்ன பொருள்? அரைகுறை என்பதுதானே பொருள்? விடுதலையையும் முழுமையையும் அடைந்த மனிதனின் செயல்பாடுகள் இவைகள்தாமா? அய்யம் வருகிறதல்லவா? காதலையும் கருணையையும் இவர்கள் அனுபவிப்பவர்களாக இருக்கலாம். கண்டுகொண்டார்களா என்பதும் காண்பதன் மூலமாக வரும் செயல்பாடுகளும் இல்லாமைகளும் உலகத் துயர்களும் நீங்கும்படியான வாழ்வுக்கான தாகமும் பொறுப்புணர்வும் வழியும், ஒளியும், உறவும், துக்கமும் இவர்களிடம் உள்ளதா? இவைகளிடமிருந்து தப்பித்துச் சென்றுவிடும் ஒரு மனநிலையும் மூளையும்தானே ஒரு விநோத உயிரினமாக மட்டுமே இவர்களாய் இருக்கிறது. தீவிரமற்ற சாரசரி மனிதர்களைத் தாண்டிவிட்டவர்கள் என்பதைத் தவிர நாம் இவர்களிடம் காண்பதென்ன? பலவகைப் பறவைகள் என்ற சொல் உலகியல் மாதிரியான ஓர் இயற்கை இயல், அவ்வளவுதானே? அதிசயப் பிறவிகள், அபூர்வ மனிதர்கள் என்பதற்கான மனநிலையும் மூளையும்கொண்டு முழுமையான மனிதர்களை, புனிதர்களை உருவாக்க முடியவில்லை. தாழ்ந்து வழிபடும் மனிதர்களையும் திசைதெரியாத கூட்டத்தில் நெரிபடும் மனிதர்களையுமே நாம் உருவாக்க முடிகிறது. வாழ்வின் மெய்மையான மலரோ சுயம்புவான மனிதர்களையே எதிர்நோக்கியிருக்கிறது. அதற்கான களம் இது என்று எனக்குச் சொல்லத் தோன்றவில்லை. ‘மின்னற்பொழுதே தூரம்’ என்றிருப்பதை எவ்வளவு காலம் மாறுதலற்ற அதே உலகையே மாறிமாறிக் காலம் போக்கிக் காலம் வளர்த்துக்கொண்டேயிருக்கிறோம் என்பதுதான் நாம் கண்டதாகும்.

இத்தகைய மனிதர்களைக் குறித்து பிரமிள் ஒருவகைப் படைப்புணர்வுடன் கூடிய கண்டுபிடிப்பாகவும் அழகியல் உருவகமாகவும் விளக்கி உரைப்பதுண்டு. ராம்சுரத்குமார் வாழ்க்கை, ஜே. கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை பற்றி எழுதிய குறிப்புகள் அத்தகையவை. அவர்கள் மீதான ஓர் வியப்பின்வழி அவர் கண்டடைந்த அந்த உண்மைகள், ஒரு சீரிய வெளிப்பாடுதான். மாபெரும் இலக்கியங்கள், கவிதைகள், காவியங்கள் எல்லாம் இத்தகைய வெளிப்பாடுகளைக் கொண்டவைதான். அதே சீரிய ஆற்றலை அவை நம்முள் எழுப்பும்போது மட்டுமே. ஆனால் அவைகள் கலைகள் எனத் தேங்கி நிற்கும்பட்சத்தில் காலம் போக்கித்தள்ளும் எல்லாக் கலைகளையும் போலவே ஆகிவிடுகின்றன. அடைய வேண்டிய நிலையை அடைந்தவர்களாவதில்லை அவற்றின் வாசகர்களும்கூட.

0

பிற்காலத்தில் எண்ணங்கள் குறித்த பெரும்பாலும் கருத்துகளில் மட்டுமே முழுமையான புரிதலில்லாதவர்களான யோகியைப் போலவும், யதியைப் போலவும் பலர் கருத்துகள் உதிர்க்கக் கேட்டிருக்கிறேன். காரணம் நாம் எண்ணங்களினாலேயே நாம் நம் வாழ்க்கையையும், காதலையும், காவியங்களையும் படைத்துக்கொண்டே அதையே படைப்புணர்வாகவும் கொண்டே காலம்காலமாக வாழ்ந்துவருகிறோம் என்பதினால்தான் என்பது எனது துணிபு.

அன்று எண்ணங்கள் குறித்து என்னென்ன எப்படிஎப்படிப் பேசினேன் என்பது நினைவிலில்லை. இன்று எண்ணங்களைத் தொடர்ந்து எண்ணங்களைத் குறித்த சிந்தனைகளாகவும் ஒரு கண்டடைதலாகவும் இப்போது எழுதிய கவிதைதான் இந்தக் காதலும்.

காதல்

நினைக்கும்போதும் பேரின்பம் தருவது
காதல்மட்டுமே,
நினைவுகளற்ற நிலையில்தான்
எப்போதும் அது நிலவுவதால்.

பொருள்கள்மீது படரும் எந்த நினைவும்
காமம் என்றுதானே அழைக்கப்படுகிறது?
காதல்மீது படரும் காதல்மட்டுமே
காதல் என்றழைக்கப்படுகிறது.

என்ன வியப்பு இது,
பெருவெளியே இளைப்பாற்றும்
காதல் தருநிழலாகவும் வந்துநிற்பது!

இந்தக் கவிதை தனக்கேயுரிய திறன்பாட்டில், அற்புதமான ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறது. எண்ணங்கள் குறித்த தெளிவும் நிறைவும், நிறைவின் இன்பமும் தரும் பார்வைதான் அது இல்லையா?

0

நித்ய சைதன்ய யதியும் கவிஞர் தேவதேவனும்

போதனைகள், சடங்குகள், நம்பிக்கைகள், மெய்யியல்கள், கோட்பாடுகள், கொள்கைகள், மாமனிதர்கள் எல்லாமே நம் உணர்வுளிலிருந்தன்றி நம் எண்ணங்கள், ஞாபகங்கள், சிந்தனைகள், நம்பிக்கைகளிலிருந்து பிறந்து, அங்கிருந்து பிறந்ததினாலேயே வாழ்வின் மெய்ச்செயல்கள் அனைத்திடமிருந்து விலகித் துயரையும் போரையும் தீராத வலிகளையும் உண்டாக்கும் மானுட வாழ்வைப் படைத்துவிட்டிருக்கின்றன. அமைதியைத் தேடும் மனிதன் தன்னை அறிவதினின்றும் விலகித் தனக்கு வழங்கப்படுபவற்றின் மீது சிக்கிக்கொண்டவனாய் அலமறுகிறான். அல்லது உணர்வுகள் மக்கியவனாய்க் கிடக்கிறான். எண்ணங்களில்லாமல் வாழ முடியாத ஓர் உலகை மட்டுமே அறிந்தவனாய் அச்சம், போட்டி, பொறாமைகள், ஆசைகள், துயரங்களுடன் நம் கவிதை சுட்டும் மெய்யான வாழ்வை என்றும் இழந்தவனாகக் காணப்படுகிறான். நாம் அறிந்துகொள்ள வேண்டியதெல்லாம் காலாதீதமான பேரியற்கையின் தனிப்பெருங்கருணை ஒன்றைத்தான். வாழ்வின்மீது நாம் எந்நிலையிலும் கைவிடவிரும்பாத இழக்கமுடியாத தீராக்காதலை உயிராசை எனும் பெயரில் மோகிக்கும்படி நம்மையும் இயற்கையையும் படைத்துள்ளது அதுதான். இந்த ‘இரகசியங்களே’ பேருண்மையின் வாழ்வுக்கான ஒரே வழியும் ஒளியும். இவைகளே மனிதன் இன்னும் அறியாதிருப்பதும் அறிந்தும் பற்ற இயலாதிருப்பதும் அறிய வேண்டியதும் ஆம். நாம் நம் எண்ணங்கள் எனும் மனித விரல்களால் பற்ற முடியாத இவற்றை நம் பார்வையால் பற்ற இயலும் அப்புறம் நாம் பற்றிக்கொள்ள வேண்டியதெதுவுமே இருக்காது. அப்போது அங்கே அமைதியான ஒரு புதிய மூளை எந்தவிதமான தன் பாதுகாப்பு, உயிர்வாழ்வு பற்றிய அச்சமற்றதும், மரணத்தை அஞ்சாமல் மரிக்கவும் உயிர்க்கவும் அறிந்த பேரறிவுபெற்ற ஒரு மூளை பிறந்துவிடும். தளைகள் என்றறியாது அது பற்றிக்கொண்டிருந்த பிடிமானங்கள் எல்லாம் அதனிடம் எதுவும் இல்லாதபோது அது நிச்சயமான வலுவான பேராற்றலுடன் தோன்றிவிடும்.

பொதுவாகவே, நம் மேதைகள் பெரும்படைப்பாளிகளின் படைப்புகளில் ஆங்காங்கே மெய்மை பளீரிடுவதைக் காணலாம். மற்ற இடங்களிலும் வாழ்விலும் அவை சோரம் போனவைபோல் தென்படுகிறது எதனால்? அந்த உள்ளொளியை அவர்கள் தம்முள் அணையாத பேரொளியாகக் கொள்ளாதிருப்பதுதானே காரணமாக இருக்கக்கூடும்? உழலும் துயரங்களிலிருந்தும் ஆசைகளிலிருந்தும் விடுபடாததுதானே காரணமாக இருக்கக்கூடும்? கவிதையை அறிந்துகொண்டுள்ள நாம் கவிதையின் மதத்தை அறிந்து கொள்ளப்பார்ப்போம். எல்லோரும் இணைந்து அல்ல; ஒவ்வொருவரும் தனித்தனியாகவே அதை அறிந்து நுழைந்தால்தான் அது சாத்தியப்படும்.

ஒரு கவிதையைப் பார்ப்போம்:

பற்றுக பற்றுஅற்றான் பற்றினைத் அப்பற்றைப்
பற்றுக பற்றுவிடர்க்கு.

குறள் : 350

எல்லாப் பற்றுகளையும் துறந்து முழுமையான இன்மையை வாழ்வின் இரகசியத்தை, பேருண்மையைக் காட்டுவதால் இது கவிதையாகிறது. கடவுள் என்ற சொல்லின் (பற்றற்றான்) பொருளும் உலகியல் பொருளில் மனிதர்கள் பருகிமாயும் பொருளில் அல்லாமல் எல்லாப் பற்றுகளையும் துறந்த ஒரு மானுட மனநிலையையே குறிக்கிறது. இந்தப் பொருளினைப் பற்றுவது எல்லாப் பற்றுகளையும் விடுவதற்குத்தான் என்கிற வரியில் பொருளின் உச்சமும் கவிதையின் உச்சமும் இணைந்து நிற்பதைக் காண்கிறோம். இந்த ஆற்றல் நிலையைத்தான் பற்றற்றான், கடவுள், என்ற சொற்களில் உரைக்கிறோம். இவ்வாறு கவிதையை உணர்வதற்கே ஒரு தர்சனசக்தி தேவைப்படுகிறது, இல்லையா? ஆனால் பிற இடங்களிலும் காலங்களிலும் மனிதர்களிடம் இக்கவிதைக்கு என்ன நிகழ்கிறது? பக்தி, கடவுள், துறவு எனும் சாமானியதளத்தில் உறைந்துவிடவும் கூடுகிறது, பரிதாபம்தான் இல்லையா? ஆனால் இப்போதல்ல, எப்போதுமே நாம் பற்றிக்கொள்ள வேண்டியது அந்தத் தர்சனசக்தியையேதான் என்பதறிய எந்தப் புறச்சக்திகளுமே நமக்குத் தேவைப்படுவதில்லை, இல்லையா? கவிதை கவிதைக்காக அல்ல: கவிதையின் மதத்திற்காகவே என்றே நாம் எப்போதும் சொல்லவிழைகிறோம். கவிதையும் கவிதையின் மதமும் வேறுவேறல்ல என்று அனுபவிப்போருக்கோ நாம் சொல்ல எதுவுமே இல்லை.

மீண்டும் இவ்வழியில் காணப்படும் மிக எளிய ஒரு சங்கப்பாடலைக் காணலாம்.

பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல்
அதனினும் இலமே.

இந்தக் கவிதை நம்மை எங்கே தூக்கி எறிந்துவிட்டிருக்கிறது அல்லது இருத்துகிறது என்பதை உணர்வதற்கு அதே தர்சனசக்திதான் வேண்டியிருக்கிறது இல்லையா? ஆனால் இப்போது நம்மிடையே உள்ள குறை மற்றும் நம் துன்ப துயரங்களுக்கெல்லாம் காரணம், அவ்வப்போதுதான் பொறியாக, ஒரு மின்னலாக, ஒரு அருட்பெருஞ்சோதியின் தனிப்பெருங்கருணையே நம்மைத் தீண்டுவதை அறிந்திலராய், பேரருளை ஒரு சுடராக்கி அதன் ஒளியில் வாழாதவராய், கவிதையின் மதத்தைக் கண்டடையாதவராய் நம்பிக்கைகள், சடங்குகள், பக்தி, சாதி எனும் ஆயிரத்தெட்டு குப்பைக்கூளங்களுடன் வாழ்ந்துகொண்டிருப்பதுதான், இல்லையா? தங்கள் இருளினைக் கண்டுகொள்பவர்களால்தானே சுடர்விளக்கினைப் போல் எரியும் கவிதையினைக் கண்டுகொள்ளமுடியும்? பேரும் புகழும் அடைய விரும்பும் கவிஞர்கள் பேரோடும் புகழோடும் அடங்கிவிடுகிறார்கள். புதிய கவிஞர்கள் பேரும் புகழையுமே நாடும் விழைவில் ‘புதியவை’ என்பவற்றோடே அடங்கிவிடுகிறார்கள். கவிதையின் மதம் அனாதரவாய்க் கிடப்பதையே காண்கிறோம்.

வெளிப்பாட்டுக்கே உரிய ஒரு குறைபாடாக அவனையும் மீறிப் புகுந்துவிட முயலும், தன்னைத்தானே முன்னிறுத்திக்கொள்கிற ஒரு கள்ளத்தனமும் அதில் அடங்கியிருப்பதாய்க் கண்டு வருந்துகிறேன். தனிப்பெருங்கருணையினால் தமக்குக் கிடைத்த காட்சிகளை, தங்களுடைய அழுக்கு விளிம்புகளை மட்டும் காட்டாது மறைத்து ஒளித்த நிலையில், எல்லையற்ற பெருவாழ்வைத் தம் படைப்புகளில் இயற்றிவிடுவதில் கவிதையின் மதத்தையே ஏய்த்துவிடும் கொடுமைதான் நிகழ்ந்துவிடுகிறது.

இங்கே நான் சொல்லத் தவிப்பதில் கவிதையின் மொழியில் ஒருவேளை கூடுதலான துல்லியத்துடன் சொல்லிவிடமுடியுமோ எனும் நினைப்புடனேதான் அண்மையில் நான் எழுதியுள்ள மேலும் மூன்று கவிதைகளை இந்த உரைமொழியோடு இணைத்துத் தந்துள்ளேன்.

0

இரகசியமாய்

இரகசியமாய்
அதனைக் கண்டுகொண்டதில்
குற்றமில்லை.
மூடிமறைத்துவிட்டமையில்தான்
குற்றம்.

பரசியமாய்
அது வெளிப்பட்டதில் குற்றமில்லை
உரைக்கப்படும் சொற்களாய் மட்டுமே
குவிக்கப்பட்டதில்தான் குற்றம்.

வாழ்வாகவும் உறவாகவும்
வெளிவிளக்கம் கொண்டு
அது உலவுகையில் மட்டும்தான்
ஒளிர்கிறது காண்
உண்மையும் நன்மையும் அழகுமாய்!

பலூன்

பலூனைக் கண்டதும்
விசித்திரமான ஆசையுடன்
விரும்பிக் கேட்கும்
குழந்தையுள்ளத்தை
நாம் ஆராய்ந்து பார்ப்பது
அவசியம் இல்லையா?

கோயில் திருவிழாவோ
வேறென்ன என்ன கும்பலோ?
கூட்டத்தில் மிதந்துவருகிற குழந்தை
கண்டுகொண்டதோ
தான் காணவேண்டியதையும்
கண்டுகொண்டதையும்?

எந்த ஒரு மாசுமில்லா உடலுடனே
வெளியிலும் வளியிலும்
வெளியையும் வளியையுமே
தனக்குள் கொண்டபடி மிதக்கும் பலூன்.

நெருங்கிவரும் வானம்

மழைவெள்ளம் சூழ்ந்துவிடும்
பள்ளத்துவீடானதால்
தளத்தை ஒன்றரையடி உயரம்
மேடுறுத்தினோம்.

என்ன வியப்பு இது
நாங்கள் ஏதும் செய்யாமலேயே
கூரையும் ஒன்றரையடி உயரம்
எட்ட வந்து நின்றது காண்!

இந்த வியப்போடு
நீ நின்றுவிடும்போதுதான்
போதவில்லை என்கிறேன் தம்பி
என்றது ஜன்னலருகே
வந்து நின்ற வானம்.
முதலில் இந்த வீட்டைவிட்டும்
நீ வெளியே வா
ஆ! வந்துவிட்டாயா? நன்று.
ரொம்ப மகிழ்ச்சி
விஷயங்களை இன்னும் நீ
ஆழ அகழ்ந்து
கண்டுகொள்ள வேண்டும்
நீ பள்ளத்தை உயர்த்த உயர்த்தத்தான்
நான் உனக்கு
எட்ட எட்ட வருகிறதைக் கவனி
என்றது அது.

மேலேயுள்ள (நெருங்கிவரும் வானம்) கவிதையின் இரண்டாவது பத்தியோடு கவிதை முடிந்துவிட்டது என்பவர்களையும் கவிதையையும் நம் வாழ்வைச் சூழ்ந்துள்ள பிரச்னைகளையும் பற்றித்தான் இக்கட்டுரையில் தெளிவாகவே எழுதிவிட்டோம் என்று நம்புகிறேன்.


நன்றி: சுடலைமுத்து
புகைப்படம்: ரம்யா வார்ரியர்

மேலும் படிக்க

இதழ் 12 பிற படைப்புகள்

Share
Published by
தேவதேவன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

1 year ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

1 year ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

1 year ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

1 year ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

1 year ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

1 year ago