கதை

ஒளி நிறைந்தவர்கள்

29 நிமிட வாசிப்பு

“ஐ வாஸ் ஒன்ஸ் அ ஹார்வெஸ்டர் ஆஃப் லைட். நௌ அ க்ரூக்கெட் ஓல்ட் மேன்” என்று பதில் குரல் வந்தது.

ஏதோ ஒரு மனிதர்தான். உட்கார்ந்தபடி இருக்கிறார். முதுகுப்பக்கம் மட்டும்தான் தெரிந்தது. அருகில் ஒரு காலுறை கழற்றிய நிலையில் இருந்தது. தரையில் கிடந்த இலைச்சருகுகளைக் கொண்டும் காய்ந்த சுள்ளிகளைக் கொண்டும் ஏற்படுத்தியிருந்த தீயில் எதையோ வாட்டிக் கொண்டிருந்தார்.

கிளம்பும்போது மனிதக் கும்பலை விட்டு ஒழிந்தால் போதும் என்றிருக்கிறது. ஆனால் இங்கு வந்தும் ஒரு மனிதரா? காட்டில் தொலைந்து போகப் போக நம் அகம் சகமனிதரை எப்படியோ காட்டிக் கொடுத்துவிடுகிறது. நாம்தான் வேண்டாம் வேண்டாம் என்று ஒதுங்குகிறோம். ஆனால் நம் அகமோ இருட்டின் மூலை முடுக்கிலும் ஒளிப் பாய்ச்சிக் காட்டித் தந்துவிடுகிறது.

பின்னர்தான் உணர்ந்தேன் வரும் வழியில் எழுந்த புகைமணம்தான் என்னை இங்கு வந்து சேர்த்திருக்கிறது. நான் பேசாமல் நேராக நடந்துவிடலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் ஏதோ ஒரு மனிதர்தான் என்று தோன்றிய பின்னர் உறுதிப்படுத்திக்கொள்ள என்னை அறியாமலேயே உரக்கக் கத்தி “யாரது, யாரது?” என்றிருக்கிறேன்.

அருகில் நீரோடிய சலனம் தெரிந்தது. வேகமாக வந்தவன் அவரிடம் இருந்து விலகிச் சென்று பார்த்தேன். கண் மறைவில் ஓர் அருவி ஒழுகிக்கொண்டிருந்தது. அது விழும் இடம் ஆழம் அதிகமில்லை. இறங்கிக் குளிக்கலாம் என்று தோன்றியது. நான்கு மணி நேரமாக மலையேறிய களைப்புக்கு நன்றாக இருக்கும். ஒரு நேச்சூரல் ஜக்கூசி பாத். ஆனால் முகத்தை மட்டும் கழுவிக்கொண்டேன்.

நான் மீண்டும், “சாரி, ஐ மிஸ்ட் இட்” என்று அவரருகே சென்று நின்றேன்.

“ஐ வாஸ் அ ஹார்வெஸ்டர் ஆஃப் லைட் ஒன்ஸ். நௌ அ க்ரூக்கெட் ஓல்ட் மேன்” என்று பின்னால் திரும்பி என்னைப் பார்த்துப் பதிலளித்தார். முன்பும் இதேதான் சொல்லியிருந்தது போலத் தெரிந்தது. நான்தான் காதில் சரியாக வாங்கவில்லை.

அவரது முகத்தசைகள் சுருங்கி வெளிறியிருந்தன. தோற்றத்தில் இந்தியர் போலத் தெரியவில்லை. வெள்ளி நிறக் கண்மணிகள். தாடைகளில் அடர் வெண்மயிர் பரவியிருந்தது.

அவருக்கு எதிரிலேயே சற்றுத் தொலைவில் அருவியின் நீர் வழிந்தோடும் தடத்தில் அதன் கரையில் முழங்கால் உயரமிருந்த கழி ஊன்றப்பட்டுத் தூண்டில் கட்டப்பட்டிருந்தது. நிறுத்தி வைக்கப்பட்ட அத்தூண்டில்

தழைந்து அதன் மறுமுனையில் இருந்த கயிற்றிழை நீர்ப் பரப்பில் அலைவு கொண்டிருந்தது.

அவரது அருகில் ஒரு வெளிர் நிறத்துண்டில் விரல் அளவிலான சிறிய ஆரல் மீன்கள் கிடந்தன. அதில் இருந்து துள்ளிக்கொண்டிருந்த ஒரு மீனை எடுத்து அந்த மீனின் இரு கண்களையும் திருப்பித் திருப்பி உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். ஏன் இப்படிச் செய்கிறார்? அந்த மீன் அவர் கைத்தளத்திலும் துள்ளிக்கொண்டிருந்தது. காற்றை நீர் என்று நினைத்து இன்னும் அதன் சிறகை அதிர்த்திப் பார்த்துக் கொண்டிருந்திருந்தது.

அதன் துள்ளல் அடங்கிய பிறகும் ஒரு முறை அதன் கண்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டுப் பின்னர் அதனை ஒரு சுள்ளியால் குத்தி வாட்ட மூட்டியிருந்த நெருப்பில் காட்டினார். மீன் நன்றாகக் கருகி வெந்தது. நான் என் முதுகுச் சுமையோடு அவரருகிலேயே கால் மூட்டின் மேல் கை கட்டிக்கொண்டு அமர்ந்துகொண்டேன். “ஹார்வெஸ்டர் ஆஃப் லைட்”. இதை நான் புதிதாகக் கேள்விப்படுகிறேன். இவ்வார்த்தையை நான் நெஞ்சில் ஏற்றிக்கொண்டேன். ஆனால் என்னவென்று புரியவில்லை.

அவர் என்னை ஒருமுறை பார்த்துவிட்டு, அந்த மீனைத் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் செதில் செதிலாகச் சீவி உரித்தார். பிறகு அதனை எனக்குத் தின்னக் கொடுத்தார். அவரது கையில் அவ்வளவு நடுக்கம். முதுமையின் நடுக்கம்.

எனக்கும் பசி எடுத்தது. தயங்கியபடி இருந்தேன். “எடுத்துக்கொள்” என்று புன்முறுவலோடு கொடுத்தார். அவர் கொடுத்த மீனை வாங்கி உண்டேன். ஒவ்வொரு மீனாய் வாட்டி உரித்து எனக்குத் தின்னக் கொடுத்துக் கொண்டிருந்தார். நான் என்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். முதுகுச் சுமையோடு அப்படியே பின்னால் சாய்ந்துகொண்டேன். காட்டு மரங்களின் இலைகளில் அதன் ஓரங்களில் நின்றிருந்த நீர்மை வெளிச்சத்தை வாங்கியபடி பசுமையைக் கசியவிட்டுக் கொண்டிருந்தது.

நான் வான் நோக்கிப் பார்த்திருந்தவாறே, “உங்களைப் பற்றி மேலும் விளக்கமாகக் கூற முடியுமா?” என்றேன்.

அவரது கரகர குரல் முழங்கியது. “நான் ஒளி விஞ்ஞானியாய் இருந்தவன். என் நாடு நெதர்லாந்து” என்றார்.

நான் எழுந்து சரியாக அமர்ந்துகொண்டேன். கதைவிடுகிறாரா இவர்? வெள்ளைக்காரர் வேறு. இவரை நம்பலாமா என்ன?

அவரிடம் ஏதோ ஒன்றைக் கேட்கப் போய் இதைக் கேட்டேன். “ஏன் ஒவ்வொரு மீனையும் கையில் ஏந்திப் பார்த்துப் பார்த்துத் தீயில் வைத்தீர்கள்?” என்றேன்.

இதுதான் நான் கேட்க விரும்பிய ஒன்றா? அடச்சை.

அவர் வாய்விட்டுச் சிரித்தார். பின்பு சொன்னார், “எங்கள் ஊரில் ஒரு கவிஞன் இப்படி எழுதியிருக்கிறான். ‘நான் மீனின் கண்ணில் அணையும் கடைசி மின்’ என்று. நான் அந்த உவமையைச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன் அப்போது” என்றார்.

“அப்படியென்றால்?” என்றேன்.

“அதன் கடைசி மின் அந்த ஒளி எங்குச் சென்றது? அதுவரை அதனுடன் இருந்ததுதானே? ஏன் அந்த ஒளி அதனுடனேயே இருப்பதில்லை. அந்த மீன் சென்ற பிறகு அதுவும் கூடவே சென்றுவிடுகிறதே?” என்றார்.

நான் எழுந்து போகலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். எனக்கு எரிச்சல் வந்தது. “இதனை இங்கு வந்துதான் ஆராய வேண்டுமா? வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஒரு மீன் தொட்டி வாங்கி ஆராய்ந்தால் என்ன கேடு இவருக்கு என்று உள்ளுக்குள் புழுங்கியது. எனக்குக் களைப்பும் தாங்க முடியவில்லை. பொழுது சாய்வதற்குள் மேலே ஏறிவிடவேண்டும். அங்குச் சென்று என் கொட்டகை விரிப்பை விரித்துக் கண்ணுறங்க ஒரு நல்ல இடம் தேட வேண்டும். அவ்வளவுதான்.

அவர் நான் எழுவதைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“ஒரு நல்ல உவமை இல்லையா?”

“மேலே செல்லப் போகிறீர்களா? நானும் வருகிறேன் இருங்கள்”

அவர் அத்தனை தள்ளாட்டத்துடன் எழுந்துகொண்டார். அவரது உடைமைகளையெல்லாம் எடுத்துக்கொண்டார். எனக்கு ஆச்சரியமாகவும் பாவமாகவும் ஒரு சேர இருந்தது. இத்தனை தள்ளாட்டத்திலும் மூப்பிலும் இவர் ஏன் மலையேற்றத்திற்கு வந்திருக்கிறார்? ஆனாலும் இத்தனை தூரம் ஏறி வந்திருக்கிறாரே?

நான் அவர் காலுறை அணியும்போது பிடித்துக்கொண்டேன். அவர் தன் மலையேற்றக் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு ஊன்றி ஊன்றி என்னுடன் நடந்து வரத் தொடங்கினார்.

***

இது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் “எருதின் திமில்” என்கிற சிகரத்தை அடைவதற்கான மலையேற்றப் பாதை. இந்தச் சிகரம் கர்நாடக மாநிலத்தின் உத்தர கன்னடா என்கிற மாவட்டத்தில் கோவாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடைப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் இருக்கிறது. காளி நதியின் தோற்றுவாயும் இங்குதான். அந்தச் சிகரம் என்று சொன்னேன் அல்லவா, அதற்குக் கீழ் உள்ள ஒரு பள்ளத்தாக்கில்.

இது எவருக்குமான மலையேற்றப் பாதை இல்லை. இதன் துவக்கப் பகுதிகளில் இங்கு வாழும் மக்கள் ஊரை ஒட்டிய அவர்களின் தோட்டங்களுக்குச் செல்வதற்காக ஒரு சில இடங்களில் சரளைக்கற்கள் கொண்டு நிரப்பியிருக்கிறார்கள். ஆனால் முழுதும் அப்படி இல்லை. ஒற்றையடிப் பாதையில் மலைச்சரிவுகளில் வகிடு எடுத்தாற் போலச் செல்ல வேண்டும். பேன் ஊர்வது போலத் தூரத்தில் உள்ளவர்க்கு நாம் தெரிவோம். அடர்ந்த காட்டின் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே காட்டாறுகளும் அருவிகளும் வழிந்து ஓடும். மழைக்காலங்களில் இப்பாதை முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுவிடும். வருடத்திற்கு எட்டு மாதங்கள் இங்கே மழை கொட்டித் தீர்த்துவிடும்.

நான் வெகு நாட்களாகவே விடாப்பிடியாக இங்கு வரவேண்டும் என்றிருந்தேன். இன்று ஒரு வழியாக வந்துவிட்டேன். இங்கு வேற்று மக்கள் வரப் பொதுவாக வனத்துறையினரின் அனுமதி கிடைக்காது. என் நண்பன் ஷைலேந்திராவின் தயவினால் எனக்கு இந்த அனுமதி கிடைத்தது. அவன் அவனுக்குத் தெரிந்த நபர்கள் மூலம் அணுகியிருக்கிறான்.

அவனுமே இந்த இடத்திற்கு வந்ததில்லை. அவனுக்கு இது போன்று ஆயிரம் சிகரங்கள் இருக்கும். ஷைலேந்திரா என் நண்பன். மைசூருக்கு அருகே உள்ள நஞ்சன்கூடு என்கிற ஊரைச் சேர்ந்தவன். அவனும் நானும் பெங்களூருவில் ஓரே நிறுவனத்தில்தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென ஒருநாள் அவன் இவ்வேலையைவிட்டு ஒரு மலையேற்றக் கம்பெனியில் வேலைக்குச் சேர்வதாய்ச் சொன்னான். சேர்ந்தும் விட்டான். கேட்டால் “வாழ்க்கை, நான்கு சுவற்றுக்கே அப்பாலே மகா” என்பான் கவுடக் கன்னடத்தில். என்னால் அப்படி வேலையை விட முடிந்ததில்லை. அவனுக்கு வாராவாரம் ஏதோ ஒரு குழுவினரைக் கூட்டிக்கொண்டு கர்நாடகத்தின் இது போன்ற மலைப்பகுதிகளுக்கு அழைத்துவந்து மலையேற்றித் தங்க வைத்துத் திரும்ப இட்டுச் செல்ல வேண்டும்.

இப்போது இதுமாதிரி எல்லாம் பெங்களூரில் பரவலாகி வருகிறது. திரும்பிய திசைகளில் எல்லாம் ட்ரெக்கர்ஸ் அண்ட் பேக்பாக்கர்ஸ்தான். எனக்குக் குழுவோடு பயணிப்பது உவப்பில்லாதது. அதனால் தவிர்த்துவிடுவேன். சிலமுறை அவன் குழுவினரோடு அல்லாமல் தனியாகவே பயணிப்பதுண்டு. அப்படிப் போகும் நாட்களில் முடிந்தவரையில் நானும் அவனுடன் இணைந்துகொள்வேன். அப்படி ஏற்பட்ட பழக்கம்தான் இது. ஒரு முறை அவனில்லாமல் தனித்தும் பயணித்துப் பார்க்கலாமே என்றிருந்தது. அதுவும் இப்போது நிகழ்ந்துவிட்டது. நான் இதனை மூன்று நாள் பயணமாகத் திட்டமிட்டிருந்தேன். முன்கூட்டியே அலுவலகத்தில் விடுப்புக்குச் சொல்லிவிட்டிருந்தேன்.

***

நானும் அவரும் அந்த மழைக் காட்டில் நடந்து கொண்டிருந்தோம். வழி நெடுக இருபக்கமும் நெப்ரோலிபிஸ் இலைத் தழைகளில் மழை ஈரம் பிசுபிசுத்துக் கிடந்தது. கீழே அட்டைகள் வாயும் காலும் ஒன்றெனத் தொத்தித் தொத்தி நகர்ந்து கொண்டிருந்தன. அட்டைக் கடி வாங்காமல் இருப்பதற்கான க்ரீமை நான் என் பையில் இருந்து எடுத்துக் கைகால்களில் தடவிக்கொண்டேன். அவருக்கும் கொடுத்தேன். பின்னர் தொடர்ந்து நடந்தோம்.

அவர் தன் கண் முன் விரிந்து கிடந்த பச்சை வெளிச்சத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தார்.

அவர் அமைதியை இடைமறித்து நான் கேட்டேன், “உங்கள் வயது என்ன?”

” எழுபத்தி எட்டு” என்றார்.

“இந்த வயதில் இங்கு வரவேண்டும் என்று ஏன் தோன்றியது?”

அவர் பதில் சொல்லவில்லை.

அவரது முகக்களை அந்த மீன்களை எடுத்துப் பார்த்த நினைவிலேயே எஞ்சி இருப்பதாய்த் தோன்றியது.

“அந்த ஒளி எங்கு சென்றது என்று இன்னும் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறீர்களா?” என்றேன்.

அவர் தலை அசைத்தார். பேசவில்லை.

நான் விளையாட்டாய்க் கேட்டேன், “உங்களுக்கு அது எங்கேயும் செல்லக்கூடாதா? அந்த இறந்த மீனின் கண்களுக்குள்ளேயே அடைந்திருக்க வேண்டுமா என்ன?”

அவர் “ஆமாம்” என்றார்.

“ஏன் அப்படி?”

“நான் தேடுவது அப்படி ஒரு பொருளைத்தான்”

“எப்படி ஒரு பொருள்?”

“ஒளியைத் தனக்குள்ளேயே அடைத்து வைத்துக்கொள்ளக் கூடிய ஒரு பொருள்” என்றார்.

நான் “அப்படியெல்லாம் அடைத்து வைக்கச் சாத்தியமே இல்லை. அதுவும் ஒளியை” என்றேன்.

அவர் சீண்டப்பட்டார்.

“எல்லாமே தெரியுமா உனக்கு? வேசி மகனே?” என்றார்.

இந்தச் சாதாரண மறுப்புக்கு இப்படி எதிர்வினை ஆற்றுவார் என்று தெரிந்திருக்கவில்லை. எனக்குச் சுறுக்கென்று இருந்தது.

“என் உள்ளுணர்வு அது. அதன் கனம் பற்றி உனக்குத் தெரியாதடா நாய் மகனே” என்றார் தொடர்ந்து.

நான் சற்றுப் பேசாமல் நடந்தேன். சரியான பைத்தியக்காரரிடம் மாட்டிக்கொண்டுவிட்டோமோ என்று மீண்டும் எரிச்சல் கொண்டேன்.

எங்கோ நடந்துகொண்டிருக்கையில் திரும்பியபோது, என் கால்சராயின் வலது பக்கத்தில் இருந்து என் அலைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தேன். அலைவரிசை கிடைத்திருந்தது. ஷைலேந்திரா “எங்கே இருக்கிறாய் மகா?” என்று கேட்டுச் செய்தி அனுப்பியிருந்தான். அவனுக்குப் பதில் அளித்துவிட்டு மீண்டும் அலைபேசியை என் கால் பைக்குள் திணித்துக்கொண்டேன்.

அவர் என் அலைபேசியைப் பார்த்திருந்தார்.

“எவ்வளவு ஜிபி சேகரம் இதில் கொள்ளலாம்?” என்றார்.

பரவாயில்லை. இதெல்லாம் கேட்கிறாரே மனிதர் என்று இருந்தது.

“நான் 32 ஜிபி மெமரி. 8 ஜிபி ராம்” என்றேன்.

“ஹம்ம். ஒரு தகவல் எந்த வடிவில் உன் அலைபேசியில் சேகரம் கொள்கிறது. உனக்குத் தெரியுமா ?”

நான் சற்று யோசித்து, “பூஜ்ஜியமாகவும் ஒன்றாகவும்” என்றேன்.

“சரி. அந்தப் பூஜ்ஜியமும் ஒன்றும் எப்படி நிர்ணயிக்கப்படுகின்றன?”

என்னால் சொல்ல முடியவில்லை.

“இது அலைபேசி. இதனை எலக்ட்ரானிக் டிவைஸ் என்றுதானே சொல்கிறோம்”

“ஆமாம்” என்றேன்.

“அப்படியென்றால் தகவல் சேகரமும் அந்த எலக்ட்ரான்களால்தான் நிகழ்த்தப்படுகிறது”

“அதாவது நீ சொன்ன 32 ஜிபி என்பதும் சிறு சிறு அறைகளாய் இருக்கின்றன. தேன்கூட்டின் அறைகள் போல. அவற்றில் ஒன்றும் – ஒன்று இல்லாமையும் இருக்கின்றன. அதாவது எலக்ட்ரானின் தாவல் நிகழும்போது ஒன்று வந்து சேர்கிறது. அந்தத் தாவல் நிகழாதபோது பூஜ்ஜியம் வந்து சேர்கிறது. உலகத்தில் உள்ள அத்தனை ஆயிரம் தகவலும் இப்படித்தான் அடைபட்டுக் கிடக்கின்றன”

அவரது பேச்சு தொடர்ந்தது.

“இதற்கு முன் தகவல் சேகரம் எப்படி இருந்தது என்று சொல்ல முடியுமா? ஒரு பத்திருபது வருடங்களுக்கு முன்பு வரை”

கொஞ்சம் யோசித்துவிட்டு, நான் சொன்னேன். “ஃப்லாப்பி டிஸ்க் போன்ற தகடுகளில். இன்னும் காலத்தால் பிந்திச் சென்றால் மாக்னெடிக் டேப்களில்” என்றேன்.

நான் சரியாகச் சொல்லிவிட்டிருந்தேன். அவர் தலையசைத்து ஆமோதித்தார்.

“ஆம், நீ சொன்னது சரிதான். அவையெல்லாம் காந்தவியல் விதிப்படி இயங்குபவை”

“நேற்று காந்தவியலால் நிகழ்ந்தது. இன்று எலக்ட்ரான்களின் தாவல்களால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாளை?”

நான் ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். எதுவும் தோன்றவில்லை.

“மனிதன் பேராசையில் திளைப்பவன். அவனது ஒவ்வோர் அறிதலும் பேராசையினாலேயே நிகழ்ந்தது. நிகழ்கிறது. இனியும் நிகழும். உலகம் இன்னும் இன்னுமென விரிவடைய இருக்கின்றது. அப்படி விரிவடையும்போது இந்த எலக்ட்ரான்கள் நிகழ்த்தும் குரங்குத் தாவல் எல்லாம் போதுமா? சொல். வேகமும் வீச்சும் எப்படி இருக்கவேண்டும் இனிமேல்? அவற்றுக்கு நாம் என்ன விலை கொடுக்கப் போகிறோம் வரும் காலங்களில்? சொல். நாம் இனி வேண்டுவது இந்த வெற்றுத்தாவலை அல்ல, விரைவுப் பாய்ச்சலை. அது சாத்தியப்படுமா? சொல்.” என்றார் அவரது சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் விழிமட்டும் அகன்று திறந்திருந்தது. ஒரு காட்டின் மறைவில் கிடந்த சுனை போலத் ததும்பி நின்றது அது.

நான் அவரிடம் கேட்டேன். “உங்களிடம் அதற்கான விடை இருக்கிறதா?”

“ஆம் இருக்கிறது. நாளை அது ஒளியால் நிகழும்”

நான் பெருமூச்சுவிட்டேன். உடம்பில் இருந்து வியர்வை வழிந்து என் கால்களில் ஒழுகும் தடங்களை உணர்ந்தவாறு நின்றேன். அவர் எனக்குத் தண்ணீர் கொடுத்தார். வாங்கிக் குடித்து நான் என்னைத் தணித்துக்கொண்டேன்.

அவர் அதன் பிறகு என்னிடம் குரல் தாழ்ந்து உரையாடத் துவங்கினார். அந்த உரையாடலில் இருந்த ஒவ்வொரு சொல்லிலும் அவரை நான் எப்படியாவது ஏற்றுக்கொண்டு உடன்பட வேண்டும் என்கிற மன்றாடல் தொனித்தது.

“நான் சொல்கிறேன் இதனை இப்படி யோசித்துப் பார். அணுகணமும் விரியும் இந்த அதிவிரைவான உலகை இயக்க இந்த உலகத்திலேயே அதிவிரைவான ஒன்று வேண்டுமல்லவா? ஒளி அதிவிரைவான ஒன்று. 3 * 10 power 8 m/sec பயணப்படக்கூடியதுதானே. அதனால் இது நிகழும் சாத்தியம் இருக்கிறதுதானே சொல் சொல்” என்றார்.

“நாம் இன்று இப்போது நின்றுகொண்டிருப்பது ஒரு penultimate நிலையில். கடைசிக்கு ஒரு படிதான் இன்னும் பாக்கி. உலகம் முழுதும் சேகரம் கொள்கின்ற தகவல்கள் ஒளியால் ஒளிவடிவில் திகழ்ந்தால் எப்படி இருக்கும்? சற்று யோசித்துப் பார். இன்று வந்துவிட்டது ஒளியால் கடத்தப்படும் தொழில் நுட்பம் (optical transportation) இன்னும் மிஞ்சுவது ஒளியாகவே சேகரம் செய்யும் தொழில் நுட்பம் மட்டுமே. ஆம் அது ஒன்றுதான் இனி மிச்சம்.”

“இன்று ஒளியாகவே தகவல் கடத்தப்படுகிறது. அதே தகவல் ஒளியாகவே சேகரமும் செய்யப்பட்டுவிட்டால் அது மனித இனம் நிகழ்த்திய பெரும்பாய்ச்சல் இல்லையா? சொல்”

எவருமே அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது போல அவர் கிடந்து ஏன் என்னிடம் இறைஞ்சுகிறார்? இவற்றை எல்லாம் என்னிடம் சொல்லி அவருக்கு என்ன பயன்? என்னால் மட்டும் என்ன சொல்லிவிடமுடியும். அவர் அதனை உணரவில்லையா என்ன? இருந்தும்…

“மொத்த பூமியையும் இந்த ஒளித் தெய்வம்தான் நிகழ்த்தும் அல்லவா? அந்தக் கடை நிலையை நாம் எட்டவேண்டும். எப்படியாவது அது நிகழ்ந்தேற வேண்டும். அது என் காலத்திலேயே நடந்தேற வேண்டும். அந்தப் பெரும்பாய்ச்சலை உணர்ந்துகொண்ட மனித இனத்தின் முதல் பிரதிநிதியாக இருக்க வேண்டும். ஆம், நான் அதனைக் காண்பேன். நிச்சயமாகக் காண்பேன்.”

நான் அவருடைய ஒழுக்கில் அடித்துச் செல்லப்பட்டிருந்தேன். பிறிதொரு நிமிடம் புரிந்துகொண்டேன். நான் அவருக்கு ஒரு வடிகால் போல. புலம்பிவிட்டுப் போகட்டுமே என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.

“ஒருநாள் ஒளித்தெய்வம் இந்தப் பூமியை ஆளும். அறிவால் ஆற்றலால் ஞானத்தால். நான் சொல்வதை யோசித்துப் பார். இந்த உலகில் பல நாகரிகங்கள் ஏன் ஒளியை வழிபடுகின்றன?”

“ஒளி ஆற்றலின் மூலம். ஒளியே அனைத்துப் பசிகளுக்கும் உணவாகிறது.

ஒளியே தாவரத்தில் பசுமையாக இறங்கி விலங்குகளின் பசியை நிறைக்கிறது. நாம் ஒளியைத்தானே உணவென உட்கொள்கிறோம். மனிதன் ஒளியின் மேல் கட்டிமை இல்லாதவன். அவன் ஒரு பக்கம். ஒளி அவனுக்கு மறுபக்கம். அவனின் ஒளியை அடைய முடியாமையே அவனுக்கு அதைத் தெய்வமாக்கி வழிபட வழிவகுத்துவிடுகிறது. நீ பார்க்கலாம். மனிதனின் அடையமுடியாமை அறியமுடியாமையே எங்கும் தெய்வமாகத் திகழ்கிறது.

எளிமையாக்கி இப்படிச் சொல்கிறேன் கேள். நம் ஐந்து புலன் உணர்வுகளில் ஒளியே முதன்மையது. உன் வாயால் எழுப்பப்பட்ட ஓசையை உன் செவி கேட்கிறது. இதோ வியர்த்து வழியும் உன் உடலை நக்கினால் உன் சுவையை நீயே உணரமுடியும். முகர்ந்தால் உன் வாசனையை. அது போல உன் தொடுகையும் நீ உணர முடிகிறதுதானே. நீயே அவற்றுக்குத் தொடக்கமாகவும் முடிவாகவும் இருக்கமுடியும். ஆனால் உன்னால் ஒளியைப் பெற்றுக்கொள்ளத்தான் முடியுமே ஒழிய தோற்றுவிக்க முடியாது. ஐந்து புலன்களில் மனிதன் ஒளியால் மட்டுமே தோற்றக்கடிக்கப்படுகிறான். நாம் இதனை முதலில் உணரவேண்டும். நான் என்றோ உணர்ந்துவிட்டேன். ஆனால், ஆனால் என்னால்….”

எத்தனை தூரம் கடந்து வந்தோம் என்பது தெரியவில்லை. கிறுகிறுத்து வந்தது. காதடைத்தது. கண்களின் மேல் வெப்பம் சுழன்று அழுத்தியது. ஏற்றம் கண்டது மூச்சிரைக்க வைத்தது. நின்று குனிந்தபடி மூட்டைப் பிடித்துக்கொண்டு நின்றேன். நுரையீரல் அகல விரிய மூச்சைப் பிடித்து வெளித்தள்ளினேன். சற்றுத் தலை சாய்த்து அவரைப் பார்த்தேன். அவரும் தளர்ந்தவராக இருந்தார். அவர் கொண்டு வந்த கழியைப் பற்றிக்கொண்டு ஊன்றி நின்றுகொண்டிருந்தார். முகச்சுருக்கங்களில் எல்லாம் வியர்வை. உடைவதற்கு ஒருபடி முந்தைய நிலையில் இருந்தார். அவரைத் தாங்கி நிற்கும் அந்தக் கழிதான் இன்னும் அவரை முறியவிடாமல் தடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிய அடுத்த கணம், அந்தக் கழியை எறிந்துவிட்டு என் இருகரங்களையும் வேகமாகப் பற்றினார். நான் நிமிர்ந்துகொண்டேன்.

“என்னை அவர்கள் நம்பவில்லை. என்னை எடுத்தெறிந்துவிட்டார்கள். இடக்கையால் கசக்கி மூலையில் கடாசிவிட்டார்கள். “நிரூபணம் ஆகமுடியாத ஊகம் குப்பைக்குச் சமானம்” என்று என்னை ஒட்டுமொத்தமாக விலக்கி வைத்துவிட்டார்கள். சும்மா இல்லை. பத்துப் பதினைந்து வருடங்களாக இதற்காக என்னை ஒப்புக்கொடுத்திருக்கிறேன். உலகின் ஒவ்வொரு மூலைக்கும் முக்குக்கும் அலைந்து திரிந்திருக்கிறேன். இன்னும் அப்படித்தான் இருக்கிறேன். என்னால் அதனை இன்று வரை அடையமுடியவில்லை. முதல் பத்து வருடங்களுக்கு அவர்களால் பொறுக்க முடிந்தது. அதற்குப் பிறகு என் மேல் சுத்தமாக நம்பிக்கை ஏற்படவில்லை. போராடிப் பார்த்தும் பயனில்லை. இன்று அவர்கள் சொல்வது போல் காற்றின் போக்கில் அல்லலுறும் காகிதக் குப்பைதான் நான். வெறும் நாடோடி. சொல். சொல். நீ என்னை நம்புகிறாய் அல்லவா? நான் சொல்வது ஏற்றுக்கொள்வது போலத்தானே இருக்கிறது உனக்கு? என் உள்ளுணர்வு பொய்க்காதுதானே. நீ அதனை உணர்கிறாய் அல்லவா? சொல், சொல்” என்று நா இழுபட இழுபட இறைத்துக்கொண்டு தழுதழுத்தார்.

இதோ இந்தக் கணம்தான். நான் இதற்கு முன்பே இதனைக் கண்டிருக்கிறேன். இதே போல் என் கைகளை மற்றொரு கைகள் பற்றி இருக்கிறது. இதே போல் ஒரு மனிதர். வெள்ளைக்காரர். இதே போன்ற ஏதோ ஒரு மலைமுகட்டில் நடுக்காட்டில் நின்றுகொண்டு… இப்படி என் முன் இறைஞ்சுதலை நான் முன்னரே கண்டிருக்கிறேன். எல்லாமே துலங்கித் துல்லியத்தை நெருங்கி வருகிறது.

நான் என் கைகளை விலக்கிக்கொண்டு வேகவேகமாக முன்னால் நடந்து சென்றேன். எனக்கு எங்கோ சாய்ந்துகொண்டு அமரவேண்டும் என்றிருந்தது.

தூரத்தில் பார்த்தேன். ஓர் அசைவு. எதிரில் தெரிந்த மலைத் தொடரின் முதுகுகளில் ஒரு பச்சை அலை எழுந்து நெளிந்தாடியது. காற்றின் அலை. இம்மலைத் தொடர்களின் தாழ்ந்த பகுதியில் இருக்கும் அடர்க் காட்டினைக் கடந்து மேலேறி வந்துவிட்டோம் என்று உரைத்தது. இனி பசும்புல்வெளிகள்தான்.

நான் நின்றிருந்த இந்த மலைமுகட்டையும் அந்தப் பச்சை அலை தழுவியது. நான் மொத்தமாக திறந்து வைத்துக்கொண்டு நிற்பவன் போலக் காற்றை என் உடம்பில் வாங்கிக்கொண்டேன். அந்த நேரத்தில் அது எனக்குப் பேருதவியாக இருந்தது. சிறிது தூரம் சென்றவுடன் அடர்க்காட்டின் எல்லையை அடைந்துவிட்டேன். அங்கு நின்றிருந்த கடைசி மரத்தின் வேரில் என் உடலைச் சாய்த்துக்கொண்டு அமர்ந்துகொண்டேன்.

நான் என்னைத் திரட்டிக்கொண்டேன். ஆம், இது எனக்கு முன்பும் நிகழ்ந்திருக்கிறது. கனவிலா? என்றால் இல்லை. ஆனால் நிகழ்ந்தது பதிவாகியிருக்கிறது என் நினைவுச் சேகரத்தில். மூளையும் நரம்புப் பின்னலும் சேர்ந்து நிகழ்த்தும் ஒரு விளையாட்டு. கண் முன் நிகழ்வதை என்றோ எங்கோ நிகழ்ந்தது போலக் காட்டும் அதன் மாய வித்தை – மறுநிகழ்த்து அனுபவம்தான் இது.

அவர் என்னிடம் என்ன வேண்டுகிறார்? ஓர் ஒத்துக்கொள்ளலைத்தானே. ஓர் ஒப்புதலைத்தானே. என்ன மூழ்கிவிடப் போகிறது? நான் ஏன் அப்போது அவரை விலக்கிவிட்டு நடந்தேன்? ஒரு சிறு தலை அசைப்பு அவரை நெகிழச் செய்திருக்கும் அல்லவா? அதனை நான் ஏன் செய்யவில்லை? எனக்கு என் மேலே எரிச்சல் வந்தது. காறினேன். ஆனால் உமிழாமல் எனக்குள்ளேயே விழுங்கிக்கொண்டேன். பின்னர், நான் அவர் வரும் வழியைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன்.

***

முன்பு போல அசட்டையாக இல்லாமல் நான் அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டு வந்தேன். அவரைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது போல இறங்கி வந்தேன்.

“நீங்கள் வேண்டுவது என்ன? தகவலை ஒளியாய்ச் சேகரம் செய்வது. அப்படியென்றால் ஒளியை நிரந்தரமாக நிறுத்திவைக்க வேண்டும். ஒரு கூட்டில் அதனை அடைபட வைக்கவேண்டும். அப்படிப்பட்ட பொருள் எங்கோ இருக்கிறது என்று நம்புகிறீர்கள். அதைத் தேடித்தான் உங்கள் அலைச்சலே இருக்கிறது சரியா?”

அவர் வெறுமனே தலையசைத்தார்.

“ஒளியைச் சிறைப்படுத்தி வைத்திட முடியும் என்கிற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?”

“ஒளியின் இருமையை நீ அறிந்து கொண்டிருப்பாய். ஒளி ஒரு நேரத்தில் அலையாகவும் ஒரு நேரத்தில் நிறை கொண்ட துகளாகவும் இருக்கிறதுதானே. இன்று தகவல் சேகரம் எலக்ட்ரான்களால் நிகழ்கிறது. நான் சொல்வது எலக்ட்ரான்களை விடவும் நுண்ணியவையான ஒளித்துகள்களால் அதாவது ஃபோட்டான்களாலும் அதை நிகழ்த்த முடியும் என்பதே.”

“அப்படியொரு கூட்டை நீங்கள் எப்படி உருவகித்திருக்கிறீர்கள்?”

“நீ இரு கண்ணாடிகளை நடுவில் நின்று பார்த்திருக்கிறாய்தானே?”

“ஆம்.”

“எத்தனை நீக்களை நீ அங்கே அந்தக் கண்ணாடித் தளத்துக்கு மத்தியில் உணர்வாய்?”

“எண்ணில் அடங்காத நான்கள்.”

“இப்போது உன் இருபக்கம் மட்டுமின்றி உன்னைச் சுற்றி இருக்கும் அத்தனை பக்கங்களிலும் கண்ணாடித் தளம் இருக்கிறது என்று கொள்வோம். நடுவில் இருந்த நீ மறைந்துவிட்டாய் என்றும் கொள்வோம். இப்போது உன் பிம்பம் அத்தகைய கண்ணாடி அறையினுக்குள்ளேயே சிறைப்பட்டுவிட்டது. அதாவது சேமிக்கப்பட்டுவிட்டது என்று கொள்க. ஒளி உன் இருப்பை அங்குத் தேக்கி வைத்திருக்கின்றது. அனைத்துக் கண்ணாடித் தளங்களினாலும் உன் பிம்பம் பிரதிபலிக்கப்பட்டு நிரந்த சேமிப்பாய் நீ அங்கே மாறியிருப்பாய்.”

எனக்கு அந்த வியர்வை வழிவிலும் குளிர்ந்தது போல இருந்தது. ஒரு கணம் மெய் சிலிர்த்தது. சிறு நடுக்கம் என்னுள் எழுந்து அடங்கியது. அவர் சொல்லொழுக்கில் அடித்துச் செல்லப்படாமல் இருக்க ஏதோ ஒரு மரக்கிளையைப் பற்றிக்கொள்ள வேண்டியதாக இருந்தது.

அவர் என்னைச் சலவை செய்கிறார். நான் என் தர்க்க மனத்தைத் துணைக்கழைத்துக்கொண்டேன். அவர் என்னை வைத்து அந்த உதாரணத்தைச் சொன்னார். அதுவே அந்த உதாரணத்தின் பலம். அது எவருமே செய்யக்கூடியதுதான். குடிபோதையில் நண்பன் செய்யக்கூடியது. ஊடலின்போது காதலி செய்யக்கூடியது. இவரும் அவர்களைப் போன்ற ஒருவர்தான். மிகைப்படுத்தி எடையிட்டுவிடக் கூடாது.

நான் என்னை அந்தக் கற்பனையில் இருந்து விடுவித்துக்கொண்டேன். அது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் இப்படி எத்தனையோ கற்பனைக் கற்களை வான் நோக்கி விட்டெறியலாம்தான். ஆனால் எந்தக் கல்லை வானே கொண்டுவிடும்? மொத்தமும் நம்மீதே அல்லவா விழுந்துவிடும்.

நான் அவரிடம் கேட்டேன். “இந்த யூகத்தை எப்போது நீங்கள் கண்டறிந்து முன்மொழிந்தீர்கள்?”

“40 ஆண்டுகளுக்கு முன்பாக”. அவர் அதனை வேண்டாவெறுப்பாகச் சொன்னார். இனி அவரிடத்தில் எனக்கான வார்த்தைகள் எதுவும் இல்லாததைப் போல, என்னை ஒருமுறை கண்கள் சுருக்கிப் பார்த்துவிட்டுப் பின்னர் அகலக்காலடி எடுத்து வைத்து விரைவாக என்னைக் கடந்து சென்றார். வழியும் அத்தகைய ஏற்றம் நிறைந்ததாய் இல்லை. சமதளமாகத்தான் இருந்தது. அவருக்கு அதுவே அந்த விரைவை அளித்தது. நான் அவரை என் கண்பார்வைக்கு எட்டும் தூரத்திலேயே வைத்திருந்து பின்தொடர்ந்து சென்றேன். ஒரு மணி நேரம் அப்படி நடந்திருப்பேன்.

அப்போது வரை வானத்தில் கரிய மேகங்கள் மூட்டமாய் நின்றிருந்தது. ஆனால் சுத்தமாக மழை இல்லை. துளித் தூறல்கூட இல்லை. காலையில் நான் ஏறத்துவங்கும் முன் பெய்த மழைதான். முக்கால் வாசி தூரம் கடந்துவிட்டேன் என்று எண்ணிக்கொண்டேன். மேகக்கருமைகளும் மேகங்களும் வானால் உறிஞ்சப்பட்டுவிட்டதுபோலக் காணாமலாகி வான் நிராதரவாகி வெளிறிக்கொண்டு வந்தது.

***

நான் தூரத்தில் அவர் வேறொரு மனிதருடன் நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். ஆனால் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. சற்றும் ஒரு புதிய மனிதரை நான் அங்கு எதிர்பார்த்திருக்கவே இல்லை. எங்களோடு எவருமே வரவில்லை. ஒருவேளை எங்களுக்கு முன்பே எவராவது வந்திருப்பார்களோ? என் பார்வையின் தொலைவெல்லைக்குள்ளேயே என் உடன் வந்த அவரை வைத்து நடந்திருக்கிறேன். அதற்குள் இன்னொரு மனிதர் எப்படி நுழைந்தார்? எங்கோ பிசகியிருக்கிறது.

அவர்கள் அருகில் வந்தேன். அந்த மூன்றாமவருக்கு இவரை முன்பே தெரிந்திருக்குமோ? அருகில் கிடந்த மூட்டையில் சிவந்த நிறத்தில் பாக்குப் பழங்கள் நிறைந்து இருந்தன. அவர் என்னைக் கண்டபோது என்னை அவருக்கு நன்றாக தெரிந்தவனைப் போல வரவேற்றார். எனக்குமே அவரது முகம் நன்கு பரிச்சயமானதாகத் தெரிந்தது. ஏதோ ஓர் இலகுத்தன்மையை எளிதாக்கத்தை அவர் அவரைக் கண்ட மாத்திரத்திலேயே நிகழ்த்துகிறார்.

முகத்தில் அப்படியொரு புன்னகை. நான் இதுவரை அப்படியான நிறைநகையைப் பார்த்ததில்லை. ஒரு மனிதரை விட்டு எளிதில் என்னால் விலக முடிந்திருக்கிறது. ஆனால் இவரிடம் அப்படியிருக்காதோ? அவர் சிரிப்பில் ஏதோ ஒரு ஆதூரம் ஒளிந்திருந்தது. எவரையும் எளிதில் அவரை விட்டு அகன்றுவிடச் செய்யாத ஆதூரம். கடைசியாக இது போன்ற ஒரு நிறை சிரிப்பை நான் பல மாதங்கள் போகாமல் விட்டிருந்த வீட்டுக்கு மீண்டும் திரும்பிச் சென்றபோது என் தந்தையிடம் உணர்ந்திருக்கிறேன். அந்த மனிதரின் கண்களும்கூட அதே நிறைவைச் சூடிக்கொண்டுதான் இருந்ததன

அவர் பாக்குப் பழ மூட்டையை எடுத்துத் தோள்பட்டையில் சுமந்துகொண்டு முன் சென்றார். இவர் என்னை அசைவினாலேயே “எங்களுடன் வா” என்பது போல அழைத்தார்.

“இவரை உங்களுக்கு முன்னமே தெரியுமா? இங்கு நீங்கள் முன்பே வந்திருக்கிறீர்களா?” என்றேன்.

அவர் பதில் சொல்ல முயற்சியே செய்யவில்லை. அவமானமாக இருந்தது. நான் இவரின் மேல் இருந்த சீற்றத்தினால் அந்த இடத்திலேயே நின்றிருந்தேன். சற்று தூரம் சென்ற பிறகு இருவரும் என்னைப் பார்த்தனர். நான் அவர்களின் வழியிலே பின்தொடர்ந்து நடந்தேன்.

அப்படியென்ன கேட்டுவிட்டேன் இவரிடம். அவரை இவருக்கு முன்பே தெரியுமா என்றுதானே அதற்குப் பதில் சொன்னால் என்ன?

பிறகு நானே சொல்லிக்கொண்டேன். எனக்கே அந்த புதிய மனிதரை ஏற்கனவே தெரிந்தது போலத்தான் இருந்தது. எப்படி? இம்முறை இது மூளையின் சித்து விளையாட்டெல்லாம் அல்ல. ஆனால் அவரைத் தெரிந்திருந்தது. நான் கேட்ட கேள்வி அபத்தமெனப்பட்டது.

அவர்கள் சென்ற திசையிலேயே பார்வையோட்டிப் பார்த்துக்கொண்டே பின் தொடர்ந்து நடந்தேன். அப்போது ஓங்கி உயர்ந்து எழுந்திருந்த அம்மலையை நான் கண்டேன். ஏறிப் புடைத்துச் செங்குத்தாகச் சரிந்து இருந்தது அது. பாறையின் கருமையும் பச்சைப் பரப்பும் சேர்ந்து மாலையின் மஞ்சள் ஒளியில் என் கண் முன் மிளிர்வு கொண்டன. நிமிரலின் மிளிர்வு. அதன் உச்சியில் ஒரு கரிய பெரும் வழுக்குப் பாறை. அது அதேதான். எருதின் திமில். ஒரு கணம் மெய்சிலிர்ப்பு கொண்டேன். ஒரு பெரிய எருது காலை மடித்து அமர்ந்திருப்பது போல எண்ணிக்கொண்டேன். சூரிய ஒளியில் அந்தத் திமிலின் நிழல் படிந்து கீழிருந்த பள்ளத்தாக்கில் விழுந்தது. அங்கு ஒரு சிறிய ஊர் இருப்பதாகப் பட்டது. அவர்கள் அந்த நிழலில் அடைக்கலம் தேடிக்கொண்டவர்கள் போல. இன்னும் கீழே பார்த்தால் அந்த ஊரைச் சுற்றி நீர் சுழித்து ஒரு சிற்றோடை சென்றது. அது கடந்து மலைமேட்டைத் திருத்தி நிலத்தை அடுக்குகளாக்கி வரப்பிடப்பட்டிருந்த பசியநிற நெல்வயல்கள். ஆங்காங்கே பாக்குமரக் கூட்டம் தென்பட்டுக் கொண்டிருந்தது. அவற்றின் இடைவெளிகளில் ஏழெட்டு செந்நிறத் தட்டோட்டுக் குடில் வீடுகள். கிழக்கில் இருளேறத் தொடங்கியிருந்தது. அந்திச் சூரியன் எங்கோ ஒளிந்துகொள்ளத் துவங்கியிருந்தான்.

இப்படி இங்கு ஒரு சிறு பழங்குடி மலைக்கிராமமே இருக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தி முழுதாக மூடுவதற்குள் அந்தக் கிராமத்துக்குள் நுழைந்துவிட்டோம்.

***

இரண்டாமவர் எங்கள் இருவரையும் ஒரு குடிலில் தங்கவைத்தார். சுட்ட மண் கற்களைக் கொண்டு சுவரெழுப்பிக் கட்டியிருந்தார்கள்.

இருளத் துவங்கியதால் சுவர்ப்புரையில் சொருகியிருந்த பந்தத்தை எடுத்துக் கொளுத்த அவர் வெளியே சென்றார். நான் அவரிடம் பரவாயில்லை. என்னுடன் ஒரு கைவிளக்கு கொண்டுவந்திருக்கிறேன் என்றேன். என் பையில் இருந்து அதனை எடுத்துக் குடிலுக்கு நடுவில் வைத்தேன். உடன் வந்தவர் சுவரில் ஒரு மூலையில் சாய்ந்து அமர்ந்திருந்தார். விளக்கின் வெளிச்சம் அவர் மீது விழுந்தது. அவர் என்னைப் பார்த்தார். பார்வையிலேயே ஓர் ஏளனம் ஒளிந்திருந்தது.

“சொல்லுங்கள் அவருக்கு உங்களை முன் கூட்டியே தெரியுமா? என்னையும் அவருக்கு நன்றாகத் தெரிந்திருப்பதைப் போல் தோன்றுகிறது எப்படி?”

அவர் சிரித்தார். அந்த நகைப்பு இளக்காரமாய் ஒலித்தது.

பின்னர், “அவருக்கு நீயும் ஒன்றுதான். உனக்குப் பதிலாக ஒரு நாய் வந்திருந்தால் அதுவும் ஒன்றுதான்” என்றார்.

எனக்குக் கோபமாக வந்தது. உள்ளே சீறிக்கொண்டிருந்தேன். பேசாமல் சற்று நேரம் அமைதி காத்தேன்.

அவர் மீண்டும் சொன்னார். “அவர்களுக்கு நீ வந்தாலும் ஒன்றுதான். உன்னைப் போல என்னைப் போல வேறெவரும் வந்தாலும் ஒன்றுதான். இன்னும் ஏன்? மனிதர்களை விடு. வேறோர் உயிரினத்தைக் கூட்டிக்கொண்டு வந்தாலும் அதுவும் அவர்களுக்கு ஒன்றுதான். அதைத்தான் அப்படிச் சொன்னேன்” என்றார்.

“அப்படியென்றால்?”

“அவர்கள் பேதமற்றவர்கள். உலகில் எவரும் எதுவும் அவர்களுக்கு வேற்று ஆள் கிடையாது. அனைவரும் அவர்களுக்குத் தெரிந்தவர்கள்தான். உன்னால் அவர்களின் அந்த வாஞ்சையான சிரிப்பை எடைபோட முடிந்திருந்தால் கண்டுபிடித்திருப்பாய்.”

நான் தலையைத் தாழ்த்திக்கொண்டு “சந்தேகப்பட்டேன்” என்று முணுமுணுத்தேன்.

“அப்படியென்றால் நீங்கள் அவரை இன்றுதான் முதன்முறையாகச் சந்திக்கிறீர்களா?”

அவர் “இல்லை” என்றார்.

குழம்பிப்போய் நின்றேன்.

அவர் சொன்னார். “நாற்பது ஆண்டுகளாக அவரை எனக்குத் தெரியும். போதுமா? நான் இங்கு நாற்பதாண்டுக் காலமாக வருபவன். ஆனால் நான் இங்கு வந்தபோது எப்படி இருந்ததோ அதே போன்றுதான் இன்று வரையில் நீடிக்கிறது. சாண் கூடவும் இல்லை குறையவும் இல்லை”

என்ன சொல்கிறீர்கள்?

அவர் தன் பையில் வைத்திருந்த அந்தக் குறிப்பேட்டை எடுத்தார்.

ஒரு பக்கத்தை எடுத்து என்னிடம் நீட்டி,

“இது இந்த மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடிச் சமூகங்களைப் பற்றிய சில மானுடவியல் – இனவரைவியல் குறிப்புகள் கொண்ட ஆவணம். இதில் இருந்து படி” என்றார்.

நான் விளக்கின் அருகில் அமர்ந்துகொண்டேன். தாள்கள் எல்லாம் நசநசத்துப் போய் இருந்தது. அட்டையில் கர்நாடக அரசின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அரசாங்க ஆவணத்தின் கைப்பிரதி. நான் வாசிக்கத் தொடங்கினேன். முகப்பில் சற்று முன் சென்றாரே அந்த மனிதர் அவரது இளவயது முகம். புகைப்படம். ஆனால் அதே புன்னகை ஒட்டிக்கொண்டிருந்தது. கண்களிலும் அதே நிறைவு. இவற்றுக்கு வயதாகாதுதான்.

***

கர்நாடகத்தின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் “கௌலி” இன மலைவாழ்க் குடிமக்களை “ஒளி நிறைந்தவர்கள்” என்றழைக்கிறார்கள். இம்மக்கள் ‘எருதின் திமில்’ என்று சொல்லப்படும் மலைச்சிகரத்தின் அடியில் உள்ள பள்ளத்தாக்கில் காளி நதியின் தோற்றுவாயிற்கு அருகில் உள்ள என்றுமே மாறாப்பசுமை கசியும் அந்த மலைக்காட்டில் நானூறு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துகீசியப் படையெடுப்புக்குப் பயந்து கோவா மாநிலத்தின் காடுகளில் இருந்து எல்லை தாண்டி வந்து கர்நாடகத்தின் இந்தப் பகுதிக்கு இடம்பெயர்ந்து குடியமர்த்திக்கொண்டவர்கள். அடிப்படையில் இவர்கள் வேட்டைச் சமூகமாக இருந்தவர்கள்தான். முக்கியமாக மிளா வேட்டை. ஆனால் இப்போது ஊன் உணவே உண்பதில்லை. முற்றிலுமாக வேட்டைத் தொழிலைக் கைவிட்டுவிட்டு மலைப்பகுதியில் கிடக்கும் சமநிலப் பகுதிகளில் நிலத்தைச் சீர்த்திருத்தி விவசாயம் மட்டுமே மேற்கொள்ளும் சமூகமாக மாறிவிட்டிருக்கின்றனர். முக்கியமாக இப்பகுதியில் நெல்லும் பாக்குமாகச் சாகுபடி செய்கிறார்கள்.

“தெராலி” என்கிற இந்தக் கடைசி மலைக்கிராமத்திற்குச் செல்ல “ஜொய்டா – கும்பர்வாடா” என்கிற மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்த சிற்றூரில் இறங்கி அங்கிருந்து இருபது கிலோமீட்டர் மலையேற்றப் பாதையில் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் இந்தப் பாதைகூட இல்லாமல் இருந்திருக்கிறது. இவர்களைப் பற்றிய எதுவுமே வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது. யாரோ எவரோ அந்தப் பாதை வழி சென்று இவர்களைக் கண்டடைந்திருக்கிறார்கள். மையநிலத்துடன் தொடர்பு இவர்களுக்கு அப்படி ஏற்பட்டதுதான்.

இம்மக்கள் கொங்கனி பாஷை பேசுபவர்கள். இப்பகுதியில் உள்ள பிரதான பழங்குடி பாஷை அதுவே. சுத்தக் கொங்கனி என்று இல்லாமல் அவர்களுக்கான ஒரு பேச்சு வழக்கு கொங்கனி மொழி அவர்களிடம் புழங்குகிறது. மையநிலத் தொடர்பால் மையநில மொழியான கன்னடமும் அவர்களுள் சிலபேருக்குத் தெரிந்திருக்கிறது.

மையநிலம் பற்றி எல்லாம் அவர்களுக்குப் பரிச்சயம் இருந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இவர்களுக்கு அங்கு வாழும் மக்களைப் பற்றித் தெரிந்திருந்தது. சமநில வாழ்க்கை பற்றித் தெரிந்திருக்கிறது. அரசாங்கம் பற்றித் தெரிந்திருக்கிறது.

அவர்களிடத்தில் எந்தப் புகார்களும் இல்லை. எவரிடத்திலும் கோபதாபங்கள் இல்லை. அவர்களுக்குள் எந்த ஒரு சிறு சண்டையும் பூசலும்கூட இது வரை எழுந்ததில்லை. வேற்றிடத்தை நாடிப் போக எந்த ஒரு தேவையுமே அவர்களுக்கு இருந்ததில்லை.

“அவர்களை அணுகணமும் எதுவோ நிறைத்துக்கொண்டு இருக்கிறது. அவர்களிடத்தில் அது குறைவதே இல்லை. அதுதான் அவர்களிடத்தில் என்றுமே அணியாகத் தவழும் இந்தப் புன்னகையாய் வழிகிறது போலும்”.

அந்தக் குறிப்பு இப்படி முடிந்திருந்தது. ஒருவர் அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பழங்குடித் தலைவரைப் பார்த்துக் கேட்கிறார். “உங்களுக்கு இப்படிப் புன்னகைக்கக் கற்றுக்கொடுத்தது யார்?”

***

நான் இதெல்லாம் என்ன என்பது போல அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“சரி, இதெல்லாம் தெரிந்துகொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டேன்.

அவர் “நீ படித்த இந்தக் குறிப்பில் ஒரு பெரிய விடுபடல் இருப்பதைக் கவனித்தாயா?”

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நான் “இல்லை” என்றேன்.

“வேட்டைச் சமூகமாக இருந்த இவர்களை இப்படி மாற்றியது என்ன என்கிற கேள்வி உனக்கு எழவில்லையா?”

நான் யோசித்துப் பார்த்தேன். வெளியில் முழு நிலவு ஏறி இருந்தது. நல்ல வெளிச்சம். எங்களை அழைத்து வந்த பழங்குடித் தலைவர் எங்களுக்காகச் சோறும் ஏதோ ஒரு தொடுகறியும் கொண்டு வந்தார். எல்லாம் அதுவாகவே நடந்தது. இந்த மனிதர் அவரிடம் ஏதாவது சொல்லிவைத்திருப்பாரோ? இவரும் சேர்ந்து உண்டார்.

ஒவ்வொரு சோற்றுப்பருக்கையும் குண்டுகுண்டாக இருந்தது. அந்தத் தொடுகறி ஏதோ ஒரு மலைக்கிழங்குதான். சேப்பங்கிழங்கின் சுவையை ஒத்து இருந்தது. சோற்றில் பிசைந்து சாப்பிட்டேன். கொஞ்சம் எடுத்துக்கொண்டதே வயிறடங்கியது. காலையில் இருந்து மலையேறி வந்த களைப்பு சுத்தமாக நீங்கியிருந்தது. புதிதாகப் புலர்ந்தவன் போல உணர்ந்தேன்.

நான் “உங்களுக்கு அந்தச் சந்தேகம் எழுந்ததா?” என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே, “ஆம், அந்த விடுபடலை நான் ஒளியால் நிரப்பிக்கொண்டேன்” என்றார்.

“எப்படி?”

“எனக்கு ஒரு நண்பன் இருந்தான். போர்த்துகீசியன். அவனது தந்தை போர்த்துகீசியர்கள் இந்தியாவில் இங்கு இந்த அரபிக் கடல் பகுதியில் முக்கியமாக கோவாவில் ஆட்சி செய்துகொண்டிருந்த வரையில் இங்கு ஆட்சிப் பணியில் இருந்தவர். 1961 வரை கோவா போர்த்துகீசியர்களின் காலனியாக இருந்து, பின்னர்தான் முழு விடுதலை அடைந்தது. அவர் தனது பொழுதுபோக்காக ஒரு வாடிக்கை கொண்டிருந்தார். அவர் இங்குள்ள மலை மக்களைப் பற்றித் தேடித் தேடித் தெரிந்துகொண்டார். அதனை அவர் டயரி குறிப்புகளாக எழுதிவைத்தார். பொழுதுபோக்காக எழுதிவைத்தது பின்னாளில் அவர் இறந்த பின்னர்தான் கை கொடுத்தது. என் நண்பன் இந்த டயரிக்குறிப்புகளில் இருந்த ஆவணத்தன்மையை முக்கியமானதாகக் கருதினான். பின்னர் ஒருநாள் போர்த்துக்கீசு அரசாங்கத்திடம் இந்த ஆவணத்தைச் சமர்ப்பித்தான். அவனது தந்தையில் சார்பில் அவரின் குடும்பத்தினரை அழைத்து அரசு என் நண்பன் குடும்பத்தைக் கவுரவித்தது. இன்று அந்த ஆவணம் வெளியுறவுத் துறையின் அமைச்சகத்தின் பொறுப்பில் இருக்கிறது. என்னிடம் பலமுறை அந்த டயரிக்குறிப்புகளைப் பற்றிப் பேசுவான். அப்படி நான் ஒருமுறை தற்செயலாக அந்த ஆவணத்தைப் படிக்க நேர்ந்தது. அந்த ஆவணத்தில் இப்பழங்குடியினர் பற்றிய ஒரு குறிப்பு இருந்தது. அதுதான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தது. நீ இப்போது படித்தது உங்கள் அரசாங்கத்தின் ஆவணம். அது நான் முதல் தடவை இங்கு வந்தபோது எனக்குக் கிடைத்தது. ஆச்சரியமாக இங்குக் கிடைத்த ஆவணங்களில் அந்தக் குறிப்பே இல்லை. ஏன் என்று தெரியவில்லை. அப்போதுதான் நான் என் நண்பனின் தந்தையின் அவரது இந்த ஆவணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். சில சமயங்களில் வெளியில் இருந்து ஒருவர் பார்த்து எழுதப்படுவதுதான் இன்றியமையாததாக மாறிவிடுகின்றது. என்னைப் பொறுத்தவரை அது ஓர் அழைப்பு. எனக்கான அழைப்பு. ஏனென்றால் மானுடம் ஒளியைத் தழுவும் இத்தகைய சந்திகளைத்தான் நான் தேடித் தேடி அலைபவனாக இருந்தேன். ஏன் என்றால் எந்த ஓர் அறிவியலாளனுக்கும் இப்பிரபஞ்சம் ஆய்வுக்கூடமும் ஆகும்.”

எனக்கு எல்லாம் தெளிந்து வருவது போல இருந்தது. ஆனால் மேலும் அந்தத் தெளிதலின் மேல் இன்னொன்று வந்து விழுந்துவிடுகிறது. சுற்றிச் சுற்றிப் புதிர் வளையங்கள் எழுகின்றன..

அவர் என்னை ஒருமுறை பார்த்துக்கொண்டார். பின்பு சொன்னார்.

“இவர்கள் வழிபடும் தெய்வம் ஒரு படிகக்கல்.”

“என்ன சொல்கிறீர்கள்?”

“இவர்களுக்கு ஒரு பழங்குடித் தொன்மக்கதை உண்டு. நான் இங்கு வந்து இவர்களிடம் புழங்கி வாய்மொழிக்கதையாக அறிந்துகொண்டது. நான்கு நூற்றாண்டுகளுக்கு முன், இவர்கள் இந்த மலைக்கு அந்தப் பக்கத்தில் இருந்து இங்கு வந்து புதிதாகக் குடியமர்த்திக்கொண்ட புதிதில், உன்னைப் போன்று ஒருவர்தான் அதாவது மையநிலத்தில் இருந்து ஒருவர் – ஒரு அருந்தவச்சீலர் – வந்திருக்கிறார். அவர்கள் வேட்டையாடும்போது அவர்கள் கண்ணில் இவர் பட்டிருக்கிறார். அப்படி வந்தவர் இங்கே இவர்களோடுதான் உயிர்விடும் வரை தங்கியிருக்கிறார். அவர்தான் இவர்களுக்கு வேட்டையாடுவதை நிறுத்தி நிலத்தைத் திருத்தக் கற்றுக்கொடுத்தார். அப்படி மாறியவர்கள்தான் இன்று நீ பார்ப்பது.

அந்தத் தவச்சீலரிடம் இருந்து எதுவோ நிறைத்துக்கொண்டிருப்பதை இவர்களும் உணர்ந்தார்கள். அவரது வார்த்தைகளுக்குத் தங்களை முழுதுமாக அளித்தார்கள். அந்தத் தவச்சீலர் தன் சாவை முன்னரே உணர்ந்திருந்தார். ஒரு முழுநிலவு நாளின் நள்ளிரவில் அந்தச் சிகரத்தை நோக்கி இவர்களைக் கூட்டிச் சென்றார். அவர்களைத் தொலைவிலேயே நிற்க வைத்துவிட்டு, “உங்களை நீங்கள் ஒளியால் நிறைத்துக்கொள்ளுங்கள். உங்களை ஒருமுறை நிறைத்த ஒளியானது என்றென்றைக்குமாக உங்களைவிட்டு அகலாது உங்களை நிறைவாக வைக்கட்டும். அந்த ஒளியை நீங்கள் உங்கள் சக உயிரிகளிடம் தெரிவுபடுத்துங்கள்” என்று தன் போதனையைக் கூறிவிட்டு உச்சியில் அந்த வழுக்குப் பாறை இருந்ததல்லவா அதனை நோக்கி நடந்திருக்கிறார். இவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பாதி வழியில் ஒரு தருணத்தில் ஒரு சிறு ஒளிக்கீற்று பாதையில் எழுந்திருக்கிறது. அது நிலவொளியில் பெருகிப் பெருகி ஒரு கால்பந்து அளவிற்கு அந்த இடமே ஒளியூட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் அவரை அதன் பிறகு பார்க்கவில்லை. அவர்கள் கண்ணீர் மல்க அந்த ஒளிப்பந்தை மட்டுமே பார்த்துக்கொண்டு நின்றனர். மறுநாள் காலையில் அங்கு சென்று இவர்களில் ஒருவன் பார்த்திருக்கிறான். நம் உள்ளங்கை அளவிலான ஒரு படிகக்கல் பாறையோடு பாறையாக அங்கு இருந்திருக்கிறது. அதைத்தான் இன்று இவர்கள் வழிபடுகிறார்கள் “

“அத்தகையதொரு நாள் மீண்டும் வரும். அங்கே அது போன்று மீண்டும் ஒளி எழும். அவர் மீண்டும் வருவார் என்பது இவர்களிடத்தில் இருந்து வரும் நம்பிக்கை” என்று சொல்லி முடித்தார்.

ஒரு மலையேற்றத்தில் எத்தனையைத்தான் நான் தாங்குவது. கொஞ்சம் இடைவெளி விட்டு, “எனக்குமே அந்த நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

“நீங்கள் இது போன்றவற்றை எல்லாம் நம்புகிறீர்களா? ஏதோ பழங்காலக் கதை என்று கடந்து போய்விடலாம்தானே” என்றேன்.

“முட்டாள், மனிதனின் கூட்டு உள்ளுணர்வை உன்னால் எளிதாக உதறிச் செல்ல முடியாது” என்றார்.

இந்த மண்ணோடு இந்த மலையோடு இந்த நாட்டோடு எந்தச் சம்பந்தமும் இல்லாதவர். அதுவும் தன்னை ஒரு விஞ்ஞானி என்று சொல்லிக்கொள்பவர் இப்படிச் சொல்வது ஆச்சரியம்தான்.

“ஆண்டுக்கு ஒருமுறை நான் இங்கு வருவது அதற்காகத்தான்” என்றார்.

“என்ன சொல்கிறீர்கள்? ஒவ்வொரு முறையும் வருகிறீர்களா?”

“ஆம். கடந்த நாற்பது வருடங்களாக”

“இன்று அந்த நாளா?”

“ஆம்.”

“அந்த ஒளியை நீங்கள் கண்டிருக்கிறீர்களா?”

“இல்லை.”

“அவர்கள் கண்டிருக்கிறார்களா?”

“இல்லை. கதையில் மட்டுமே கண்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.”

“அது அப்படித்தானே இருக்கும். எதை வைத்து இவ்வளவு மூர்க்கமாக

நம்புகிறீர்கள்?

“கொஞ்சம் உறங்கிக்கொள். இரண்டு மணி நேரம் கழித்து எழுப்பிவிடுகிறேன். அவர் நம்மை அழைத்துச் செல்ல வருவார்.”

“அர்த்த ராத்திரியிலா? எங்கே செல்லப் போகிறோம்?” என்று கேட்டேன்.

“அவர்களின் வழிபாட்டுச் சடங்குக்கு.”

“சரி சென்றுவரலாம். நானும் அவர்களின் நம்பிக்கையை ஏற்கிறேன். மறுப்பதற்கில்லை. அந்த வழிபாட்டை நிகழ்த்துவதனால் அவர்களின் மனதிற்குள் ஒரு சமாதானமும் சமநிலையும் ஏற்படுகிறது. அதையும் நான் ஏற்கிறேன். அது அவ்வளவுதான். அதனை அத்தோடு வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் மிகையாக ஏற்றிச் சொல்லப்படும் கதைகளை எல்லாம் நம்பவேண்டுமா என்ன? நீங்களே அதை வாய்மொழிக் கதை என்கிறீர்கள். நான் கேட்கிறேன். நீங்கள் ஏன் இப்படியிருக்கிறீர்கள்?”

“எதைப் போல? எப்படி இருக்கிறேன்?” தன் கண்கள் அகலக் கனத்த குரலில் கேட்டார்.

“ஒரு நேரத்தில் அதிமேதாவியாகவும் ஒரு நேரத்தில் அடி முட்டாளாகவும். இப்படி இரண்டாங்கட்டான் தனமாய் “

அவர் சிரித்தார். “ஏதாவது ஒரு நல்ல உவமையை உன் வாக்கியத்தில் அமைத்துச் சொல்லேன்”

எனக்குப் பற்றிக்கொண்டு வந்தது. “நான் சொன்னது உங்களுக்குப் புரிந்ததுதானே. அது போதும்”

“சரி, நானே ஒன்றைச் சொல்லிக்கொள்ளட்டுமா?”

என்ன இவர்? இப்படி இருக்கிறார்.

” சரி சொல்லுங்கள்”

“ஒளியைப் போல. அல்லவா?”

அவர் விழுந்து சிரித்துக்கொண்டிருப்பதை நான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். மூடன் கிறுக்கன். அவரது நெஞ்சில் இருந்து இருமியது. ஆனாலும் சிரிப்பை நிறுத்தாதிருந்தார்.

***

எப்போது உறங்கிப் போனேன் என்பது தெரியவில்லை. நல்ல தூக்கம். உறக்கம் தட்டியவுடனேயே கனவு எழுந்தது. நான் கருக்கிருட்டில் வயல் வரப்பில் அமர்ந்திருக்கிறேன். கதிரவன் எழுகிறது. காலைப் பொன்னொளி எழுகிறது. அவ்வொளி நெற்பயிர் முனைகளில் பட்டு ஒவ்வொரு நெல்மணிகளும் ஒளிர்கிறது. கண் முன்னே மஞ்சள் அலையென அவை நெளிகிறது. “ஹார்வெஸ்ட்” என்கிற வார்த்தை அப்போது எனக்குள் எழுந்து வருகிறது. நெல் என்பது ஓர் ஒளித்துளிதான். கதிர் ஒளியால் எழுப்பப்பட்டதனால்தான் அதனை நெற்கதிர் என்கிறோமா? எனக்குள் நானே கேட்டுக்கொண்டேன். எவரோ ஒருவர் கதிர் அரிவாளோடு வருகிறார். விளைந்த நெற்பயிரை அறுத்தறுத்து நெற்கட்டுகளை ஒன்றாகச் சேர்க்கிறார். குவிந்த நெற்கட்டுகளிலிருந்து உதிர்ந்த சில நெல்மணிகளைக் கைத்தளத்தில் எடுத்து வைத்து அவற்றில் விரலோட்டிப் பார்க்கிறார். அருகில் நான் இருப்பதைக் கண்டுகொண்டு என் முன் நீட்டி “ஒளித்துளிகள்” என்று காண்பிக்கிறார். எனக்குக் கண்கள் கூசியது. விழித்துக்கொண்டேன். அந்தப் பழங்குடித் தலைவர் எங்கள் இருவரையும் எழுப்பிக்கொண்டிருந்தார்.

***

வானத்தின் முழுநிலவு தன் முழு பால் வண்ணப் பொழிவையும் அக்கானகத்தில் அப்போது இறைத்துக்கொண்டிருந்தது. மேகங்களே தென்படவில்லை. தெளிவான வானம். நட்சத்திரக் கூட்டம் துலக்கமாகத் தெரிந்தது. நடுச்சாமம். ஒன்றரை மணி நேரமாக ஏறிக் கொண்டிருக்கிறோம். அந்த மனிதர் எங்களை வழி நடத்தி அழைத்துச் சென்றார். அவரைப் பின் தொடர்ந்து அப்பழங்குடி மக்கள் பெண்கள் குழந்தைகள் என்று ஒரு முப்பது பேர் கையில் பந்தத்துடன் உடன் வந்தார்கள்.

அநேகமாக அந்த எருதின் நடுமுதுகு வகிட்டில் நடந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். சற்றுக் கால் தடுக்கினால் போதும் இரு பக்கமும் செறிந்திருக்கும் இருள் நம்மைச் செறித்துக்கொண்டுவிடும்.

எனக்குக் குளிர்ந்தது. நல்லவேளை, குளிராடையை எடுத்துக்கொண்டு வந்தேன். கைகளை இறுக்கமாகக் குறுக்கில் கட்டிக்கொண்டு அவருடன் நடந்தேன்.

“சரி நான் உங்கள் வழிக்கே வருகிறேன். உங்களிடம் காரணம் இல்லாமல் இருக்காது. அந்தப் படிகக்கல் எப்படி தோன்றியது? அந்தப் படிகக்கல்லுக்குள்தான் அவர் சென்று மறைந்தாரா? ஒளி எப்படி எழுகிறது அதில்? உங்கள் ஊகத்தின் நிரூபணம் அந்தப் படிகக்கல்லில்தானா?”

அவர் சொல்ல ஆரம்பித்தார். “இது போன்ற படிகக்கற்கள் இந்தப் பூமியில் பல உண்டு. உயர்ந்த சிகரங்களிலும் ஆழ்ந்த கடலடிகளிலும் மட்டுமே காணப்படுபவை. அவற்றை crystals of solitude என்கிறார்கள். அவை மற்ற படிகங்கள் போல நிரை நிரையாக பாறையின் பரப்பில் உருவாவதில்லை. அரிதினும் அரிதாகத் தன்னந்தனியே எனப் பாறையின் தளத்தில் காணப்படுபவை. ஜொலிஜொலிப்பில்லாதவை. அதனாலேயே விலை போகாதவை. அவற்றுக்கான விலைமதிப்பை அவற்றின் தன்னந்தனிமைகூட அளித்துவிடவில்லை.”

“படிகக்கல் என்பது ஒரு வைரம் போன்று ஒரு கற்கண்டு போன்றுதான். தனக்குள் பல்லாயிரம் கண்ணாடி அறைகளைக் கொண்டுள்ளது. அதற்குள் ஒளி ஊடுருவினால் அந்த ஒளி பல்லாயிரம் முறை அதற்குள்ளாகவே சிதறடிக்கப்படுகிறது.”

“இவர்கள் வழிபடுவது நான் இரண்டாவதாகச் சொன்ன இந்தத் தன்னந்தனி வகை படிகக்கல்.”

“இவற்றுக்கு ஒரு கூடுதல் சிறப்பியல்பு இருக்கலாம் என்று நான் அனுமானித்திருக்கிறேன். இது என் எண்ணம் மட்டுமே. இந்தத் தன்னந்தனி படிகக் கற்களுக்குள் புகும் ஒளியானது அதற்குள் சிதறிச் சிதறி அதற்குள்ளாவே சுழன்று கொண்டிருக்கும். அந்தச் சிதறடிப்பு அதன் கண்ணாடி அறைகளில் என்றென்றைக்குமாக நடைபெறுகிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் அந்தப் படிகக்கற்கள் ஒளியை வெளியே விடுவதில்லை. தனக்குள்ளேயே வைத்துக்கொண்டுவிடுகிறது. இப்படி அந்த உட்புகுந்த ஒளியானது நிரந்தரமாக அதற்குள் தேக்கி வைக்கப்பட்டுவிடும் அல்லவா?”

“இச்சிறப்பியல்பினால் அவற்றை “light stopping crystals of solitude” என்று வரையறுக்கிறேன். இதுவரை இப்படி ஒரு படிகக்கல்லை எவரும் கண்டடைந்திருக்கவில்லை. இங்கிருப்பது அப்படி ஒரு படிகக்கல்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. இப்படி ஒன்றை நான் கண்டடைந்துவிட்டால் போதும். நான் என் வாழ்நாளை முடித்துக்கொள்வேன். ஒவ்வொரு முறையும் அந்த நம்பிக்கைதான் இங்கு வருவதற்கு என்னைச் செலுத்துகிறது. நான் என்ன செய்ய? நான் என் உள்ளுணர்வால் அலைக்கழிக்கப்படுகிறேன்.”

***

நாங்கள் வந்துவிட்டிருந்தோம் என்று நினைக்கிறேன். என் பயணத்தின் எண்ணம் நிறைவேறப்போகிறது. அந்தச் சிகரத்தைத் தொடப்போகிறேன். பகலில் வந்திருக்கவேண்டும். என்ன நாளை ஒருமுறை மீண்டும் வந்துவிட வேண்டியதுதான்.

அந்தப் பழங்குடித் தலைவர் எங்களை நிற்கச் சொன்னார். ஓர் அடித் தொலைவில் நின்றுகொண்டு அவரது பந்தத்தை முன் தெரிந்த பாறையின் மீது ஓட்டினார். நான் அதனைப் பார்த்துவிட்டேன். அந்தப் படிகக்கல் சாதாரணமாகத்தான் இருந்தது. அவர் சொன்னது போல ஒருவரின் உள்ளங்கை அளவுதான். சவரம் முடித்துவிட்டுப் பயன்படுத்தப்படும் ஒரு படிகாரக்கல் போன்றுதான் இருந்தது அல்லது வீட்டின் வாயிலில் கரிய நிறக் கயிற்றால் தொங்கவிடப்படும் திருஷ்டிக்கல் போல. யாரோ எவரோ இந்தப் பாறையில் பதித்துவிட்டுச் சென்றுவிட்டார்களா என்ன?

எங்கள் பின்னால் வந்தவர்களும் அப்படியே நின்றுவிட்டார்கள்.

நான் எல்லாரும் சேர்ந்துகொண்டு ஏதாவது செய்வார்களா என்று எதிர்பார்த்துக்கொண்டு நின்றேன். ஒருவரிடத்திலும் அசைவே இல்லை. அவர்கள் கண்கள் எல்லாமே அந்தப் படிகத்தின் மீதே இருந்தது. எந்த ஒரு வழிபாடும் படையலும் இல்லை. சடங்கு என்றார்களே!

நான் இவரிடம் கேட்டேன். “இந்தக் கல்லில் ஒளி எழும் என்றா இங்கு வந்திருக்கிறோம்? எவரோ பதித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்”

அவர் சொன்னார், “அந்தத் தவச்சீலர் இதில்தான் மறைந்தார்.”

“எனக்கு ஒன்று புரியவில்லை. உள்ளுணர்வு, தொன்மக்கதை போன்ற விஷயங்களை எல்லாம் இப்போதைக்கு ஓரங்கட்டிவிடுவோம். தர்க்கத்தின் அடிப்படையில் கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.. உங்கள் தர்க்கத்தின் அடிப்படையில் இங்கு நடந்தது என்று சொல்லப்பட்டவற்றை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிருக்கிறீர்கள் ?

ஏன் கேட்கிறேன் என்றால்? எத்தனை தடவைதான் வந்து வந்து ஏமாறப் போகிறீர்கள்? பெளர்ணமியானது மாதத்துக்கு ஒரு முறை வரும். ஆனால் நீங்கள் வருடத்துக்கு ஒரு முறைதான் இங்கு வருகிறீர்கள். அந்தத் தவச்சீலரோ நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ ஒரு பெளர்ணமியில் ஒளிவடிவை எய்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. காலக்குழப்பம் இருக்கிறதல்லவா? மேலும் இந்தப் படிகத்துக்குள் ஒளி என்றென்றைக்குமாக இருக்கும் என்றீர்கள். இதில் துளி மினுப்பைக்கூட நான் காணமுடியவில்லை.

சரி அந்த ஒளி இன்று எழப்போகிறது என்று வைத்துக்கொள்வோம். இதற்கு முன் இந்தப் படிகத்திற்குள் ஒளியே செல்லவில்லையா. அது எங்கே இப்போது?

பந்த வெளிச்சம் அவர் கண்களில் தழலாடியது. அவர் கனிவுடன் என்னைப் பார்த்தார்.

“இங்கு நடக்கப்போவது அற்புதம் ஏதும் இல்லை. ஒரு இயற்கை நிகழ்வுதான். கிரகணம் போல”

“என்ன சொல்கிறீர்கள்?”

“உன் காலக் குழப்பம் நியாயமானதுதான். ஆனால் இயற்கை ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறது. அந்த ஒழுங்கின் அந்தச் சுழற்சியின் கால இடைவெளியை நாம் அறியமுடியாது. இதற்கு முன்பு அவர் மறைந்தபோது அந்த நிகழ்வு நடந்திருக்கும். அப்போது அவர் சென்று மறைந்திருக்கலாம். பின்னர் அவர் மறைவைச் சுற்றி இத்தகைய கதைகள் எழுந்திருக்கலாம். இது உலகெங்கிலும் உள்ளதுதான். இன்னும் ஏன் அவர் மறைவிற்கு முன்னும் எப்போதோ இதே போன்றதொரு நாளில் இது நிகழ்ந்திருக்கலாம்தான். அத்தகைய நிகழ்வு மறுபடியும் நடக்க பல காலம் பிடிக்கலாம்.

ஒவ்வொரு படிகக் கல்லுக்கும் ஒரு கண் உண்டு. அதன் கண் என்பது அதன் மேல் ஒளி படும் கோணம்தான். ஒவ்வொரு படிகத்துக்கும் அதன் உட்பொருளுக்கேற்ப அதன் அணு அடுக்குகளுக்கேற்ப அந்தக் கோணம் அமையும்..அந்தக் கோணத்தில்தான் அந்தப் படிகம் தன்னை முற்றிலுமாகத் திறந்து வைத்திருக்கிறது. அந்தப் படிகத்திற்குள் அந்தக் கோணத்தில் ஒளி புகுந்தால் மட்டுமே அதனால் ஒளியை வாங்கிக்கொள்ள முடியும். அது தவிர மற்ற கோணங்களில் விழும் ஒளியானது வீண்தான். இதோ, நிலவு அங்கு இருக்கிறது. இப்படிகக்கல் இங்கிருக்கிறது. இந்த இடத்தின் அட்சரேகை தீர்க்கரேகை துல்லியமாகக் கண்டறிந்துவிடலாம். அப்படி ஒளி இதன் மேல் விழும் கோணத்தைக் கண்டறிந்துவிடலாம். இந்தக் கோணம் இதற்கு முன் அப்படிகத்துக்குச் சரியாக வாய்க்காமல் போயிருக்கலாம். அந்தத் தவச் சீலர் மறைந்தபோது அது வாய்த்திருக்கலாம்.

எளிதாகச் சொல்லவேண்டும் என்றால் அந்தப் படிகத்தின் கண் திறக்க வேண்டும். இப்படியும் சொல்லலாம். என் நிரூபணத்திற்கு அந்தப் படிகக்கல் மட்டுமே போதாது. அதனைக் கண் திறக்க வைக்கும் கோணமும் தெரிந்திருக்க வேண்டும். இல்லை என்றால் பயனில்லை.

சரி அப்படியே வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் முன்பு அவர் மறைந்தபோது உள் சென்ற ஒளி அதற்குள் இருக்க வேண்டுமே? அதுதான் இல்லையே.

“எவர் சொன்னார் அதற்குள் இல்லை என்று”

“இதோ பாருங்கள், உங்கள் கண் முன்னால்தானே இருக்கிறது. ஒரு பொட்டு ஒளி தெரிகிறதா சொல்லுங்கள்”

அவர் சிரித்தார். “உண்மை நம்மருகில்தான் இருக்கும் அல்லது உண்மைக்கு அருகில்தான் நாம் இருப்போம். ஆனால் நம்மால் அதனை அறியமுடிவதில்லை.”

“தத்துவத்தை விடுங்கள். தர்க்கத்துக்கு வாருங்கள். இந்த உரையாடலை அப்படித்தானே ஆரம்பித்தோம். புரியும்படி சொல்லித்தொலையுங்கள்”

“சரி. இதோ இருக்கும் இந்தப் படிகக்கல் அப்படி ஒரு மாயத்தைச் சமைக்கிறது. காரின் ஜன்னல் வழியாக உள்ளிருப்பவர் வெளியே பார்க்கலாம். ஆனால் வெளியிருப்பவர் உள்ளே என்ன என்பதனை அறிய முடியாதல்லவா? ஒளி இயங்கியலின் polarisation. அதனை அப்படிகம் நிகழ்த்துகிறது. அதாவது தனக்குள் இருக்கும் ஒளியைத் தனக்குள்ளேயே தக்கவைக்க அது இப்படி ஒரு நாடகம் ஆடுகிறது. அது தக்கவைப்பதோடு தன்னைத்தானே காட்டிக்கொள்ளவும் விரும்பவில்லை.”

என் உடல் மயிர்கள் சிலிர்த்துக்கொண்டன. நான் இப்போது எங்கிருக்கிறேன்? எதனைக் காண வந்தேன்? எதனைக் காணப் போகிறேன்? ஒரு நாளில் நிகழக்கூடியவையா இதெல்லாம். நான் என் அச்சத்தைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

“இதெல்லாம் உங்கள் ஊகங்கள்தானே?”

அவர் புருவம் சுழித்து, உதடு ஒட்டிப்போனவராய் வாய்ப்பகுதியை மேடாக்கிக்கொண்டு மெலிதாகத் தலையை அசைத்தார். இது வரை அவர் சொன்னதையெல்லாம் அவரே ஏற்றுக்கொள்ளாதவரைப் போல.

நான் வெறுமே பார்த்துக்கொண்டு நின்றேன். பிறகு எந்தப் பேச்சும் என்னில் எழவில்லை. நான் சுற்றியிருப்பவர்களைப் பார்த்தேன். அவர்கள் எல்லாம் தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டு உறைந்த நிலையில் அந்தக் கல்லைப் பார்த்துக்கொண்டிருந்தனர். இவரது கண்களிலும் அவ்வளவு உயிரோட்டம் ததும்பி நின்றது. என்ன செய்வதென்று தெரியாமல் நான் என் கண்களை இறுக மூடிக்கொண்டு நின்றேன்.

***

எத்தனை நேரம் கழித்துக் கண் திறந்திருப்பேன் என்று தெரியாது. அப்படிகக்கல்லைப் பார்த்தேன். சுற்றி முற்றி நின்றவர்களைப் பார்த்தேன். அவர்களின் தீப்பந்தம் பற்றிய கைகள் மெதுவாகத் தாழத் துவங்கின. மீண்டும் அப்படிகத்தைப் பார்த்தேன். அதில் சிறு மின் எழுந்தது. வெலவெலத்துப் போய் நின்றேன். அந்த மின் மற்றொன்றைப் பற்றியது. அதுவும் மின்னியது. அவை இரண்டும் பிறிதொரு இரண்டைப் பற்றியது.

சில நொடிகளிலேயே அப்படிகம் முழுதாக ஒளி கொண்டது.

என் மேல் விழுந்துகொண்டிருக்கும் நிலவொளிதான் அந்தப் படிகக் கல்லிலும் விழுகிறது. ஆனால்…

நான் சுற்றியிருந்தவர்களைத் தன்னிச்சையாக நோக்கியபோது, அவர்கள் அப்படிக்கத்தின் மீதிருந்த தங்களின் பார்வையை விலக்காமல் தாங்கள் கொண்டு வந்திருந்த தீப்பந்தங்களைத் தாழ்த்திக் காலிற்கு அருகே கொண்டு சென்று தீயெழும் முனையை நிலத்தில் அறைந்தடித்து அணைத்தனர்.

பின்பு ஒவ்வொருவரின் பின்னில் இருந்தும் எவரோ நின்று தள்ளிவிட்டது போல உடம்பை நெகிழ்த்தித் தளர்ந்து அனைவரும் ஒரே நேரத்தில் மண்டியிட்டனர்.

நான் மீண்டும் அப்படிகக்கல்லைப் பார்த்தேன். ஓர் ஒளிக்குமிழ் போல உருத்திரள்வு கொண்டிருந்தது. அதில் இருந்து ஓர் ஒளிப்பொட்டு என்னை வந்து அடித்தது. கையில் பட்டுச் சுளீர் என்றது. நான் துடிதுடித்துக் கீழே சாய்ந்தேன். நிதானித்து எழுந்துகொள்ள முயற்சி செய்தபோது சுற்றியிருந்த கண்ணாடித் தளங்களில் எல்லாம் ஒளிப்பொட்டுகள் பட்டுப் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தன. எனக்கு மேலிலும் கீழிலும் முன்னிலும் பின்னிலுமாக என்னைப் போன்றவர்களையே நான் கண்டேன். அவர்களும் என்னைக் கண்டார்கள். அவ்வொளிப்பொட்டுகள் என்னை மீண்டும் மீண்டுமென வந்தறைந்தன. நான் அங்குக் கிடந்து துவண்டு கொண்டிருந்தேன்.

அவை என்னை நிறைக்கப் பார்த்தன. என் துவளல் அடங்கும் வரை என்னை துய்த்துக் கொண்டிந்திருந்தன. நான் அவற்றுக்கு என்னை முழுதுமாக அளித்தேன். எண்ணம் இல்லை. வலி இல்லை. உயிர் இல்லை. காலிப் பாண்டமாக இருந்தேன்.

நிறை. நிறை. எங்கும் நிறை இறையே நிறை. நான் காணக்கண்டிருந்தது இம்மலைமுடியை. இச்செழுங்காட்டினை. இதுவரை என்னைத் தாங்கி நின்றிருந்த இப்புடவியை. நான் களிக்கக்கண்டிருந்ததோ அரும் மானுடம். அழற்பிரபஞ்சம். அதி தைவதம்.

நான் வியர்த்து விக்கித்து நின்றுகொண்டிருந்தேன். அவரைப் பார்த்தேன். அவரது மருட்சி கொண்ட கண்கள் சூழ்ந்திருந்த தசைகளால் இழுபட்டுக்கொண்டிருந்தன. சூழ்ந்திருந்தவர்களைப் பார்த்தேன். அவர்கள் தங்கள் விழிநீரால் தங்களைத் தாங்களே இறைத்துக் கொண்டிருந்தார்கள்.

கண்கள் இழுபட்டுக்கொண்டிருந்தவர் துடியிறங்கியவர் போல விழப்போனார். நான் அவரைத் தாங்கிப் பிடித்தேன். தன் சட்டைப்பையில் கையைத் துழாவி ஒன்றை எடுத்து என் கையில் தந்தார். அவருக்கு இளைப்பெடுத்தது. அவர் என் கையில் கொடுத்ததை நான் அவர் வாயில் நுழைத்துப் பிடித்துக்கொண்டேன். அதனை அவர் முழுதுமாக உள்ளுக்குள் உறிஞ்சினார். நான் அவரது நெஞ்சைத் தடவிக்கொடுத்தேன். இதன் எதனினாலும் அவர் பார்வையிலிருந்து துளி விலக்கமில்லை. ஒரு வெள்ளி கால்பந்து அளவுக்கு அந்த ஒளி வீங்கியிருந்தது. அரை நாழிகைக்கு அவ்வொளி அவ்வாறே நீடித்தது. பின்பு குன்றத் துவங்கியது. கால் நாழிகைக்குள் அது எழுந்த தடமே தெரியாமல் அடங்கிப்போனது.

அனைவரும் எழுந்து பந்தங்களைப் பற்ற வைத்துக்கொண்டு கீழிறங்கத் தயாரானோம். எவரிடத்திலும் எந்தவித சலனமும் எழவில்லை. காற்றும் அடங்கியிருந்தது. காடும் அடங்கியிருந்தது. பந்தத்தில் எரிந்து கொண்டிருக்கும் தீயின் தழலாடும் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. அந்தத் தழலின் ஒளியே ஓசையுமாகி எங்களை வழிநடத்தியது. அனைவரின் உயிரும் அந்த ஒற்றை நிகழ்வில் அந்த நிகழ்வின் கணத்திலேயே தங்கிவிட்டது. அவர்களது உடல்களில் உயிரைச் சுமந்தலைந்த அந்தப் பழைய நினைப்புதான் இப்போது அவர்களை அசைத்து நகர்த்திச் சென்று கொண்டிருந்தது.

நான் அவரைத் தாங்கிப் பிடித்தவாறே அழைத்து வந்தேன். அவரிடம் பேச்சு கொடுக்கவில்லை. அவரது நெஞ்சில் இளைப்பிருந்தை இன்னும் உணர முடிந்தது. அவரைக் குடிலுக்கு அழைத்து வந்து படுக்கவைத்தேன். வெளியே தூரத்தில் ஒரு மின்னல் முறிந்து விழுந்தது.

***

அதிகாலை மூன்று மணியாகியிருந்தது. நீரைக் குடித்துவிட்டு அவர் அருகிலேயே படுத்து உறங்கிப் போனேன். எதுவோ ஒன்று எனக்குள் விழித்துக்கொள்ள நான் கண் திறந்தேன். அருகில் இருந்தவரைப் பார்த்தேன். காணவில்லை. வெளியே மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. மழைக்கோட்டை அணிந்துவிட்டு என் கைவிளக்கை எடுத்துக்கொண்டு அவரைத் தேடி அலைந்தேன்.

ஏதோ ஓர் எண்ணம் என்னை உந்த, அந்தச் சிகரத்தை நோக்கி மழைத் திரையை ஊடுருவி ஊடுருவிச் சென்றேன். என் வேகம் எனக்கே திகைப்பை அளித்தது. அவரைக் கண்டுகொண்டுவிட்டேன். அவர் அத்துணை ஆவேசத்துடன் எதையோ செய்துகொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்தேன். அவர் கையில் முழங்கை அளவில் ஒரு கோடரி இருந்தது. அதனை வைத்து அந்தப் படிகக்கல்லை அடியில் பெயர்த்துக்கொண்டிருந்தார்.

நான் “என்ன செய்கிறீர்கள்? இது அவர்களது தெய்வம்?” என்று அவரைத் தடுத்து நிறுத்தினேன்.

அவர் என்னைக் காதில் வாங்கியவராகத் தெரியவில்லை. நான் அவர் உடலைப் பிடித்துத் தள்ளினேன்.

“விடு மடையா. விலகிச் செல்” என்றார்.

நான் என் சக்திக்கு மீறி அவரைப் பிடித்து நிறுத்தினேன்.

“இது அவர்களது நூற்றாண்டுக் கால நம்பிக்கை.” என்றேன்.

“இது என் நம்பிக்கையும் கூடத்தான். உனக்கே தெரியும்.”

அவர் என்னைக் கீழே தள்ளினார்.

“நான் இது நாள் வரையில் என் வாழ்நாளில் கடைசிக்கு முந்தைய நிலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மனிதன். அப்படியே நான் சாக விரும்பவில்லை.”

அவர் வார்த்தை கனத்தது. நா குழறியது. வாயில் எச்சில் வடிய நின்றவர் அருகில் காறி ஒருமுறை உமிழ்ந்துகொண்டார். இருந்தும் மழைத்திரையில் அவரது கோழை வடிந்துகொண்டிருந்தது தெரிந்தது.

நான் அவர் கால்களைக் கட்டிக்கொண்டு அவரை இடறச் செய்தேன். கணம் பொறுக்காமல் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் தன் கால்களைக் கட்டியிருந்த என் கைகளில் அடித்தார். என் உடல் அந்த வலியை முழுதாக ஏற்று முடிப்பதற்குள் கோடரியின் பின் பக்கத்தை வைத்து என் நெற்றியில் பலமாகத் தாக்கினார்.

நான் மூர்ச்சையாகி விழுந்து கிடந்தேன். ஆனால் என் கண்கள் அகலத் திறந்து கிடந்தன. என் உடம்பில் என் பார்வை மட்டும் மிஞ்சி இயங்கிக்கொண்டிருந்தது. என் பார்வையில் என் கைவிளக்கின் வெளிச்சத்தில் அவர் அந்தப் படிகக்கல்லை வெட்டி எடுத்துச் சென்றது பதிந்திருந்தது. பின்னர் அங்கு அதுவரை பலத்து பெய்த மழை நின்று, கருக்கிருள் அகன்று ஒளி எழுந்த பின்னர் வெட்டி எடுக்கப்பட்ட குழியில் நீர் நிரம்பி மழைத் தூறல் அதில் சொட்டிக்கொண்டிருந்தது பதிந்திருந்தது.

***

கண் திறந்தபோது தலை கனத்தது. தலையில் காயங்கள் ஏதும் இல்லை. அடிப்பட்ட அதிர்ச்சி மட்டுமே இருந்தது. அதுதான் வலியாய்த் தெரிகிறது. வலக்கையில் மட்டும் கட்டிடப்பட்டிருந்தது. மெதுவாக கையை ஊன்றிக்கொண்டு எழுந்து குடிலை விட்டு வெளியே வந்தேன். உச்சிக்கு மேல் வெயிலேறிக் கிடந்தது, கண் கூசியது.

அந்தப் பழங்குடித் தலைவர் என்னைக் கண்டுவிட்டு வந்தார்.

“வலி குறைந்திருக்கிறதா? இப்போது பரவாயில்லைதானே?”

“நானே காலி வயிற்றுடன் உங்களைப் படுக்கவிடக்கூடாது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். பின் மதியம் ஆகிவிட்டதல்லவா?”

நேற்று நான் பார்த்த போதிருந்த அதே முகம். அதே வாஞ்சை. என்னிடம் இருக்கும் இந்தப் பரிதவிப்பு ஏன் அவரிடம் இல்லை? நேற்றிரவு நடந்ததையெல்லாம் அவருக்கு ஒரு முறை நினைவுபடுத்தவேண்டும் என்பது போல.

“இருங்கள், இதோ வருகிறேன்”

நான் அவரைப் பிடித்து நிறுத்தி, வாயில் வார்த்தை எழாமல் திக்கி “அவர், அவர் உங்கள் தெய்வத்தைக் கொண்டு சென்றுவிட்டார்” என்றேன்.

“பரவாயில்லை. அதனாலென்ன?”

அவர் அதனைச் சொல்லிவிட்டு அருகில் புகையெழுந்து கொண்டிருக்கும் குடிலுக்குள் சென்றார். நான் அந்தப் புகை மூட்டம் செல்லுகின்ற தடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவனாக நின்றிருந்தேன். என்றோ எங்கோ இந்தப் புகை வானில் துளியாய் மாறி மீண்டும் நிலத்தில் வீழும் – அது கொள்ளப்போகும் – நிறைவைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்.


புகைப்படம்: பிரஷாந்த்

இதழ் 12 பிற படைப்புகள்

லோகேஷ் ரகுராமன்

பெங்களூருவில் கணினி தொழில்நுட்பத்துறையில் பணிபுரிகிறார். சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம். இரண்டு வருடங்களாய்ச் சிறுகதைகள் எழுதிவருகிறார். தொடர்ந்து சொல்வனம், கனலி, நடு, தமிழினி போன்ற இணைய இதழ்களுக்குச் சிறுகதைகள் எழுதி அனுப்பியிருக்கிறார். விஷ்ணு வந்தார், நீர் பதுமராகம், அரோமா, அது நீ போன்ற கதைகள் தமிழினி இணைய இதழில் பரந்த வாசிப்புக் கவனத்தைப் பெற்றன.

Share
Published by
லோகேஷ் ரகுராமன்

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago