“நெஞ்சே! அந்தப் புதிரை நீ விடுவிக்கப்போவதில்லை,
நுண்ணறிவால் ஞானியர் தேடும் இலக்கு எட்டாது உனக்கு;
மதுவும் ஆனந்தக் கோப்பையும் கொண்டு ஒப்பேற்று இங்கு,
மீண்டும் நீ ஆனந்தம் அடைவாயோ மாட்டாயோ, யாருக்குத் தெரியும்?”
-ஒமர்கய்யாம், ருபாயியத் (4)
மெய்த்தேடலில் அலைக்கழிப்பில் ஒருவர் தேடலைப் பற்றிக்கொள்வதும், ஒருவரைத் தேடல் பற்றிக்கொள்வதும் நிகழக்கூடியது. ஓர் ஆன்ம சாதகனுக்கு ஏற்கனவே அவர் அடைந்த ‘ஆனந்தம்’ என ஒன்று உண்டெனில், மனம் மீள மீள அதை நாடிச்செல்கிறது, அதன் விளைவான அலைக்கழிப்பையும் எதிர்கொள்கிறது. அதன் புதிரையும் இரகசியத்தையும் அறிய மீளமீள ஆராய்ந்துகொண்டே இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக பின் வரும் இரண்டு ருபாயியத்களை வாசிக்கலாம்.
“நீயோ நானோ அறிந்துகொண்டதில்லை நித்தியத்துவத்தின் மர்மங்களை,
நீயோ நானோ புரிந்துகொண்டதில்லை இந்தப் புதிரை;
நீயும் நானும் பேசுவது மறைப்பின் இப்புறத்தில்;
நீயோ நானோ இருக்கப்போவதில்லை இங்கே, மறைப்பு அகலும்போது.”
(7)
“இருத்தலெனும் சமுத்திரம், அந்தப் பேரிருளிலிருந்து வந்தது,
மெய்ம்மையெனும் இந்த ரத்தினம், ஊடுருவிப் பார்த்ததில்லை எவரும்;
அவரவர் இயல்பின்படி சொல்லிச் சென்றார்கள் ஒவ்வொருவரும்,
எதனுடைய குணத்தையும் விளக்க முடியாது எவராலும்.”
(8)
கவிதையின் அருகாமையைப் பற்றி இருத்தல் பற்றி ரூமி சொல்வார். இங்கே ஞானத்தின் இழையைப் பற்றி இருத்தல் பற்றி ஒமர்கய்யாம் கூறுகிறார்.
“வானகக் கூரையை நிரப்பியிருக்கும் கோள்கள்,
இவைதான் தோற்றுவிக்கின்றன ஞானிகளின் குழப்பங்களை;
இறுகப் பற்றியிரு ஞானத்தின் இழையை, விட்டுவிடாதே,
நம்மை ஆளும் சக்திகளும் நிலைகொள்ளாமல் சஞ்சரிப்பதால்.”
(9)
தேடல் என்னும் நெடிய சாலைக்கு முடிவு இருந்தால்,
“நிம்மதியான ஓய்வுக்குச் சந்தர்ப்பம் மட்டும் இருந்தால்,
இந்த நெடிய சாலைக்கு முடிவு மட்டும் இருந்தால்,
நூறாயிரம் ஆண்டுகளின் வழித்தடத்தில், புழுதியின் உள்ளிருந்து
நம்பிக்கையும் பசுமையைப் போல் மீண்டும் துளிர்த்தால்”
(22)
“சிறுவர்களாக இருந்தபோது குருவிடம் சென்றோம் சில காலம்,
நமது ஞானத்தில் நாமே மயங்கிக் கிடந்தோம் சில காலம்;
கேளுங்கள், விஷயத்தின் முடிவு என்ன, நேர்ந்தது என்ன என்பதை:
நீரைப் போல் வந்தோம் காற்றைப் போல் சென்றோம்”
(37)
நமது ஞானத்தில் நாமே மயங்கிக் கிடக்கும் முக்கியத்துவமற்ற ஒரு தோன்றல்
“ஒரு நீர்த்துளி இருந்தது, அது கடலோடு சேர்ந்துவிட்டது,
தூசியின் துகள் ஒன்று, அது மண்ணோடு மண்ணாகிவிட்டது;
என்ன சொல்வது, இவ்வுலகில் நீ வந்ததையும் போனதையும்?
பூச்சி ஒன்று வந்தது, சென்றது.”
(41)
“இந்த நெடிய சாலையில் சென்றவர்களில்
ரகசியத்தை நமக்குச் சொல்லத் திரும்பியவர் எங்கே?
கவனம், உனக்குத் தேவைப்படுமென்று விட்டுச்செல்லாதே எதையும் இந்த இருமுனைப்பாதையில்
நீ திரும்பி வர மாட்டாய்.”
(46)
அவரவர் இயல்பினில் சொல்லிச் சென்றனர் இந்த நெடும் பாதையின் ரகசியத்தை.
“குடிப்பதும் களித்திருப்பதும்தான் வாழ்க்கைக்கான எனது இலக்கணம்,
மத நம்பிக்கை, நம்பிக்கையின்மை இரண்டிலிருந்தும் விடுபட்டிருப்பதுதான் எனது மதம்:
விதியென்ற மணப்பெண்ணிடம் கேட்டேன் அவளின் பரிசப் பணம் என்னவென்று,
‘மகிழ்ச்சியான உன் இதயம்தான்’, என்றாள் அவள்”
(74)
மத நம்பிக்கை, நம்பிக்கையின்மை இரண்டிலிருந்தம் விடுபட்டிருக்கும் மதம் எத்தகையது?
இந்த உலகம் முழுவதையும் பார்த்திருக்கிறாய், நீ பார்த்ததெல்லாம் ஒன்றுமில்லை,
நீ சொன்னது, கேட்டதெல்லாம், அவை கூட ஒன்றுமில்லை:
ஒரு துருவத்திலிருந்து மறு துருவத்துக்கு ஓடினாய், அங்கும் ஒன்றுமில்லை,
வீட்டிலே நீ பதுங்கி கிடந்தபோதும், அங்கும் ஒன்றுமில்லை.”
(101)
எனினும்
“நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கை என்பது மின்னல் வெட்டும் இடைவெளியே
சந்தேகத்துக்கும் நிச்சயத்தன்மைக்கும் அட்சரமொன்றே வேறுபாடு:
பொக்கிஷமெனப் போற்று விலைமதிப்பற்ற இக்கணத்தை,
இது ஒன்றே நம் வாழ்வின் பலன்”
(107)
இக்கணத்தில் வாழ்தல் பற்றி ஒமர்கய்யாம் மீளமீளக் கூறுகிறார், கூடவே இவ்வுலகின் நிலையாமை பற்றியும், அறியவொண்ணா ரகசியம் பற்றியும்.
“எழுந்திரு என் இன்னுயிரே, அதிகாலை நேரமிது,
மெல்லமெல்ல மதுவருந்தி மீட்டு அந்த யாழையும்,
இங்கிருப்பவர்களில் எஞ்சப்போவது யாருமில்லை,
போனவர்களில் திரும்பி வரப்போவதும் யாருமில்லை”
(114)
“வாழ்வின் இந்தச் சொற்ப நாட்கள் கழிந்துவிட்டன
ஓடையின் நீராய், பாலைவனத்தைக் கடக்கும் காற்றாய்;
இரண்டு நாட்களைப் பற்றிய வருத்தம் பீடித்ததே இல்லை என்னை-
கழிந்து போன நேற்றைய தினம், வரப் போகும் நாளைய தினம்”
(146)
அடைதல்
“எல்லாம் இழந்த வறியவன் ஒருவனின் பாதையைப் பின்பற்றாதவரை,
நீ அடையப்போவது எதுவுமில்லை;
உன் கன்னங்கள் இரத்தக் கண்ணீரால் கழுவப்பட்டாலொழிய அடையப்போவது
எதுவுமில்லை;
ஏன் வளர்க்கிறாய் ஆசைத்தீயை? ‘தான்’ விழுங்கப்பட்டு மறைந்த தூயவர்களைப் போல தயங்காமல், ‘ நான்’ என்பதை நீ கைவிடும் வரை எதுவும் சாத்தியமில்லை”
(167)
அறிதலுக்கு அப்பால்
“கல்விக்குக் குறைவில்லை என் அறிவுக்கு,
அறியப்படாமல் எஞ்சிய புதிர்கள் ஏதுமில்லை;
இரவு பகலாகத் தியானித்தேன் எழுபத்திரண்டு வருடங்கள்,
அறிந்தது எதுவுமில்லை என்பதை அறிந்துகொள்வதற்கு”
(182)
இதுவுமல்ல அதுவுமல்ல பாதை
“மதத்தின் பாதையை எண்ணி மூளையைக் கசக்கிக்கொண்டு ஒரு சாரார்,
யோகியின் நிச்சயப் பாதையைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டு மறு சாரார்;
ஆனால் ஒரு நாள் இந்தப் பெருங்குரல் எழும் என்று நான் அஞ்சுகிறேன்,
‘ஓ முட்டாள்களே, இதுவுமல்ல, அதுவுமல்ல பாதை'”
(206)
‘Truth is a pathless land’ என்கிறார் ஜே கிருஷ்ணமூர்த்தி
Reference: ருபாயியத், ஒமர்கய்யாம். ஆங்கிலம் வழி தமிழில் தங்க. ஜெயராமன், ஆசை. க்ரியா பதிப்பகம்
புகைப்படம்: விஸ்வநாதன்
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…