திரும்பிச் செல்லும் நதி - ராகவேந்திரன் சிறுகதை

திரும்பிச் செல்லும் நதி

12 நிமிட வாசிப்பு

“சொல்லுங்கள் ப்ரஃபசர் கீமா, எப்படி உங்கள் உடலை முடித்துக்கொள்ள வேண்டும் என்று தேர்ந்தெடுத்துவிட்டீர்களா? லேசர் துகள் ஜெட்டின் முன் நிற்கிறீர்களா? வலி இல்லாமல் தூள்களாகிவிடுவீர்கள். இல்லை பிளாஸ்மாவாக மாற்றி வானத்தில் தூவிவிடலாமா? காந்த சக்தியின் மூலம் ஒரு நானோ வினாடியில் ஒரு மில்லியன் டிகிரி வெப்பத்தை உண்டாக்கும் சேம்பர் எங்கள் அரசாங்கத்திடம் இருக்கிறது. அதுவும் பிடிக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது இளைஞர்கள் முடித்துக்கொள்ளும் வழி. கோக்கில் இரண்டு குளிகை அடர்த்தி குறைவான யுரேனியம் சூரணத்தைக் கலந்து குடித்தால் ஆயிற்று.”

ராணுவ அதிகரிக்குரிய மிகை மிடுக்கும் கூடவே நாட்டின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சிவில் அதிகரிக்கான மென்மையும் கேப்டன் தூளியிடம் காணப்பட்டது. இந்தச் சீருடையும் பதக்கங்களின் பளபளப்பும் எதை மறைப்பதற்காக என்று நினைத்துக்கொண்டார் கீமா. கேப்டனின் தலைக்குப் பின்னால் நான்கு நிறங்களில் சுழன்று கொண்டிருந்த ஒளிவட்டத்தைப் பார்த்துச் சிரிப்பை அடக்கிக்கொண்டார். காது மடல்களின் முன்பகுதியிலும் முகுளத்திற்கு அடியிலும் பொருத்தி இருந்த நுண்மையான புரொஜெக்டர்கள் உண்டாக்கிய செயற்கையான புனித வட்டம்.

இவரது கொள்ளுத் தாத்தாவிற்குப் பிறகு யாரும் ஏழு நிற வட்டத்தை அடையவில்லை. கண்ணுக்குப் புலனாகும் “விசிபிள் ஸ்பெக்ட்ரத்தின்” அலை நீள எல்லையை விரிவுபடுத்தி அகச்சிறப்பு மற்றும் புற ஊதா பட்டைகளுக்கு முன்பாகப் புதிய பண்புகளைக்கொண்ட “வைல்டு கார்டு” ஒளி வீச்சை மாக்ஸ்வெல் ஜூனியர் சொன்னதிலிருந்து இவனுகளின் ஆட்டம் தாங்க முடியவில்லை. மேகத்தில் அரசாணையை எழுதுவது, ஒரு சிறு கோள் அளவிற்கு கட் அவுட் வைத்துக்கொள்வது, பழங்காலக் கடவுள் படங்களைப் போலத் தனக்குத் தானே ஒளிவட்டம் மாட்டிக்கொள்வது என்று ஆரம்பித்துவிட்டானுகள்.

ஒளியை வளைக்கிறானுகளாம். கூமுட்டைகள், ஒரு கோடியில் ஒருத்தனுக்கு ஏதோ ஒரு மின்னல் போல அறிவு தெறிக்கிறது. புதிய வழியைத் திறக்கிறான். எல்லாரும் அந்த வழியில் போகிறார்கள். சுயமாக அறிந்து கொள்ளவேண்டும் என்ற முயற்சியே இல்லை.

ப்ரஃபசர் கீமாவின் எண்ண ஓட்டம் அவரது இருக்கையில் இணைத்திருந்த மீட்டர்களில் சிவப்பு ஒளியைக் காட்டியது.

“வித்தியாசமாகச் சிந்தித்து எமது பிரபஞ்ச அரசுக்கு எதிராக எதுவும் நினைக்க வேண்டாம். உள்ளத்தால் உள்ளலும் தீதே.”

“ஒன்று புரிந்துகொள்ளுங்கள் திருமதி கீமா அவர்களே. நீங்கள் துகளாகச் சிதறப் போகும் காலம் நெருங்கிவிட்டது. இருப்பது ஒன்றே. அதுவே துகள். பத்தாயிரம் ஆண்டுகளாக உங்கள் லஹரி சித்தாந்தவாதிகள் சொல்லி வருவது போல அழியாத அலை என்று எதுவும் கிடையாது. அதற்கான நிரூபணம் இதோ உங்கள் ரகசிய ஆய்வுமையத்தை நாங்கள் கைப்பற்றி உள்ளதுதான்.”

அத்துவானத்தில எங்கோ சுழன்று கொண்டிருந்த அந்தக் கோளின் தரைமட்டத்திலிருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர் கீழே இருந்த ஆய்வுமையத்தை “அதாலம்” என்று அழைத்தனர். அதன் முந்நூற்று இருபத்தைந்தாவது தலைவரான ப்ரஃபசர் கீமா கைகள் கட்டியிருந்த நிலையில் ராணுவ விசாரணைக்கு உட்பட்டிருந்தார். விசாரித்துக் கொண்டிருந்தவர் பிரபஞ்ச அரசின் 426 பட்டத் தலைவரான நாலுவட்டமுடையர் கேப்டன் தூளி.

எலக்ட்ரான்கள் அலைகளாகவும் துகள்களாகவும் இருக்கின்றன என்று டீ பிராக்லி அறிவித்த பின் முந்நூறு ஆண்டுகள் பிரச்னை எதுவும் உருவாகவில்லை. அதன்பின் அலையே எல்லாம் என்று ஒரு பிரிவும் துகளே உலகின் ஆதாரம் என்றும் பிரிந்து மோதிக்கொண்டார்கள். இந்த மதச்சண்டை பல பத்தாயிரம் வருடங்களாகத் தொடர்கிறது.

துகள் கட்சியினருக்குத் துகள் முடுக்கிகளும் அணுப்பிணைப்பு நுட்பங்களும் ஆயுதங்களாக இருந்தன. கிராவிடேஷனல் அலைகளும் பெருவெடிப்பில் உருவான காஸ்மிக் அலைகளும் அலைக்கட்சியினரால் ஏவப்பட்டன. சிறு கோள்களே நிரந்தரக் காந்தங்களாக மாற்றப்பட்டன.

“உங்கள் அறிவியல் பிழையைத் திருத்திக்கொள்ள வேண்டும் கேப்டன் தூளி. லேசரைத் துகள் என்று அழைப்பது பிழை. அது தியோடர் மைமனுக்குச் செய்யும் அநீதி.”

கேப்டன் சிரித்தார். அது பழைய இந்தியத் திரைப்படங்களின் எதிர் பாத்திரம் சிரிப்பது போல “கெக் கெக்” என்று இல்லை. மேற்கத்தியப் படங்களில் காட்டுவது போலப் பல் தெரியாத உதடு வளைந்த ஆணவ நகைப்பாகவும் இல்லை. அவர் உருவாக்கிய ஒலி சிரிப்புதான் என்பது எப்போதும் கூடவே இருக்கும் தனிப்படை வீரர்களுக்கு மட்டுமே தெரியும்.

“துகளே எல்லாம் என்று எங்கள் ஆதி விஞ்ஞானி எழுதிவிட்டுப் போய்விட்டார். பல ஒளி ஆண்டுகளாக இந்த வெளியில் எவ்வளவோ நட்சத்திரங்கள் உருவாகி அழிந்துவிட்டன. பல்சர்கள் சாட்சியாக இந்த உடுவிடைப்பட்ட மேகத்துகள் மண்டலம் இங்கேயே இருக்கிறது. இன்னும் எவ்வளவு ஒளி ஆண்டுகளுக்கு அலை அலை என்று அலைந்து கொண்டிருப்பீர்கள். வானத்திலும் கடலுக்கடியிலும் ஏனிப்படி மோதிச் சாகிறீர்கள்?”

தூளியின் குரலில் பெருமிதம் இருந்தது.

“ஒளி ஆண்டை வைத்துக் காலத்திற்குக் கணக்கு சொல்ல முடியாது. அது நீளத்தின் அலகு” என்று நாக்கு வரை சொல்ல வந்ததை உமிழ்நீரோடு முழுங்கிவிட்டார் கீமா.

கேப்டன் அடுத்த கேள்வியைக் கேட்டார் “இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இன்னும் எங்கெல்லாம் உங்கள் சதி நிலையங்கள் இருக்கின்றன? எல்லாத் தகவல்களும் இன்னும் ஐந்து வினாடிகளில் என் மேசைமேல் இருக்க வேண்டும்.”

கீமா சிரிக்கலாமா என்று யோசித்தார்.

“கைகளைக் கட்டிவிட்டு எப்படி வேலை வாங்கமுடியும்?”

கீமா அமைதியாக இருந்தார். பல நூறாண்டுகள் வாழ்ந்துவிட்ட களைப்பு தெரியாமல் செல் புதுப்பித்தல் நடந்துகொண்டே இருக்கும் உடல். பொலிவான முகம். கூரிய மூக்கு. தனக்குப் பிடித்தமான லாவண்டர் நறுமணம் நாசியிலிருந்து உற்பத்தியாகிக் கொண்டிருந்தது.

அவரது காதுகளுக்கு மட்டும் கேட்கும் இனிமையான பழைய இசை மூளையிலிருந்து கிளம்பிச் செவியின் ஜவ்வுகளுக்கு அலை அடித்தபடி இருந்தது. பதட்டம் தணிக்கும் செரோடோனின் நொதிகள் சரியான விகிதத்தில் மூளையில் தயாராகிக் கல்லீரலை நோக்கி ஒழுகிக் கொண்டிருந்தன. தனது தாயின் விருப்பப்படி பிறப்பிலிருந்து பெண் உருவையே தெரிவு செய்திருந்தார்.

கேப்டன் கண்களை மென்மையாகப் பார்த்தவாறு பேச ஆரம்பித்தார் கீமா. “கைகளுக்கு விலங்கு மாட்டுவது எந்த ஆயிரமாண்டின் பழக்கம் கேப்டன்? உங்கள் துகள் தொழில் நுட்பத்தில் நம்பிக்கை போய்விட்டதா? என்னைக் கட்டுப்பாட்டில் வைப்பது அவ்வளவு கடினமானதா? மான -அவமான உணர்வுகளைத் தாண்டவில்லை என்றால் நீங்கள் இன்னும் எந்த மன அடுக்கில் இருக்கிறீர்கள்? விசாரணை செய்யாமல் முடிவு செய்ய உங்கள் துகளாட்சி அனுமதிக்கிறதா? யுரேனஸ் கன்வெண்ஷனை மதிக்கவேண்டாமா?”

மெதுவாக ஆனால் தொடர்ச்சியாக வீசிய சிறிய ஈயக்குண்டுகள் போன்ற சொற்களில் கேப்டன் சற்று அதிர்ச்சி கொண்டார். கண் மட்டும் ஒருமுறை சுழன்று கட்டளை பிறப்பித்தது. காவலர் விலங்கை விலக்கிவிட்டார்.

“சீக்கிரம் பதில் சொல்லுங்கள் கீமா. தாமதம் செய்யாதீர்கள்”

“எங்களுடைய ஒரே மையம் இந்த இடம் மட்டும்தான்”

“இங்கே என்ன சதி ஆராய்ச்சி நடக்கிறது? சிரிக்க வேண்டாம். இப்போது நடப்பது ராணுவ விசாரணை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.”

“இந்தக் குகைக்குள் ஏன் இவ்வளவு மனித உருவங்கள் வரிசை கட்டி சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கின்றன? ஒன்று மட்டும்தான் எனக்கு அடையாளம் தெரிகிறது. தலையைப் பார்த்துச் சொல்லிவிடலாம். ஐன்ஸ்டின்தானே அது? இதை எல்லாம் நான் சவரம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பே படித்துவிட்டேன். சரியாக ஒத்துழைப்பு தந்தால் நான் உங்களுக்கு உயிர் வாய்ப்புகூட அளிக்க முடியும்.”

“என்ன, மனசை நிரந்தரமாகக் குழப்பத்தில் வைத்திருக்க வேண்டி வரும். ஹிப்போகேம்பஸில் ஒரு சின்ன ஷாட். அவ்வளவுதான். அதற்கான முறிவு மருந்துகள் எதுவும் சதி செய்து கண்டுபிடித்துவிட்டிர்களா என்ன?”

பெண் உருவின் முன் சமநிலை குலையாத மனிதன் உண்டா என்று நினைத்துக்கொண்ட கீமா இலேசாகச் சிரித்தார். சுதாரித்துக்கொண்ட கேப்டன் மீண்டும் கடுமை காட்டினார்.

அவரது கண்களையும் தலை அசைப்பையும் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த உதவியாளர்கள் சல்யூட் அடித்து வெளியேறிவிட்டனர். இரண்டு அதிகாரிகள் மட்டும் உடன் இருந்தனர்.

“நான் இந்தக் கூடத்தின் பொறுப்பேற்று ஐநூறு வருடங்கள் ஆகிவிட்டன. உங்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்குச் சந்தேகமே வராமல் இங்கே ஆராய்ச்சிகள் நடந்து வந்தன. இங்கே உருவாகும் எந்த ஓர் இயல் – வேதி – உயிரிப் பண்புகளின் அலையும் மிகத்துல்லியமாக மாற்று விசையால் சமனம் செய்யப்படுகின்றன.”

“எந்தப் புகையும் இங்கே எழும் நெருப்பைக் காட்டிக் கொடுக்க முடியாது. உங்களது துகளே சர்வம் மதத்தின் கையால் ஆகாத்தனத்திற்கு இதுவே ஒரு நல்ல உதாரணம்.”

“ஒரே ஒரு பிழை நடந்தது. எங்கள் குழந்தை ஒன்று காவலை ஏய்த்து மாக்ஸ் பிளாங்கின் உருவத்தலையை மேலே எடுத்துச் சென்று விளையாடிவிட்டு வந்தது. உங்கள் காவலனுக்குச் சந்தேகம் வந்தது. அதுவம் நல்லதுக்குத்தான். ஆட்சியாளர்களின் மந்தமான முகத்தைப் பார்த்து ரொம்ப காலம் ஆகிறது.”

மந்தமான என்ற வார்த்தையை கேப்டனின் மூளையில் சென்று பொருள் அறியும் கணத்தில் கீமா சுதாரித்து இமைக்கணத்தில் தன் கைவிரல் அசைவால் ஒரு காலச்சுருளை (டைம் ராப்) உருவாக்கி அந்தச் சொல்லைத் திரும்ப எடுத்துக்கொண்டு “மந்தகாசமான” என்று மாற்றினார்.

கேப்டனின் மரமண்டைக்குள் இருந்த சிப்பு அவசரமாக சோம்ஸ்கி நிரலை ஓட்டிப் பொருள் புரிந்துகொண்டு புரோக்காவின் பகுதிக்கு அறிவிக்க, கேப்டனின் முகம் ஒரு சந்திரவதனப் புன்னகையை மலர்வித்தது. அது அசட்டுத்தனமும் கோமாளித்தனமும் கலந்திருந்ததாக கீமா நினைத்துக்கொண்டார்.

“நீங்கள்தான் வென்றுவிட்டீர்களே? எங்கள் இந்த இயந்திரங்களை எல்லாம் லேசர் பீரங்கியால் பொடி செய்து அகண்டாகார வெளியில் வீசிவிட வேண்டியதுதானே? பல லட்சம் ஆண்டுகளாகத் தொடரும் எரிபறந்தெடுத்தல் அதைத்தானே சொல்கிறது?”

கேப்டன் ஒரு கணம் அமைதியானார். அவரது கண் அசைவு மூளையிடம் உதவி கேட்கிறது. மிகப் பழைய சொற்களைத் தலை அகராதியில் ஏற்றிக்கொண்டால் இடப்பற்றாக்குறை ஏற்படும். அதிக சூடாகித் தலை வீங்கிவிடும் வேறு.

அதைவிடச் சிக்கல் தொப்பி சரியாக நிற்காமல் போய்விடும். அப்படித்தான் அதிகாரிப் பயிற்சி நிரல் வகுப்பில் சக வீரன் ஒருவன் அதிகமாகச் சிந்தித்துக் கொண்டிருந்ததால் தலை பெரிதாகித் தொப்பி கிழிந்து கோர்ட் மார்ஷியல் செய்யப்பட்டான். அதனால்தான் இலேசான வெர்ஷன் தலை அகராதி சிப்பை காது வழியாக முன் மண்டையில் செலுத்திக்கொண்டு வந்திருந்தார்.

மேலும் சர்வாதிகாரப் பரம்பரை ஆட்சியில் மொழிக்கும் வாதத்திற்கும் பெரிய வேலை இல்லை என்பதும் ஒரு காரணம்.

“ப்ரஃபசர் கீமா, நீங்கள் திசை திருப்புகிறீர்கள்” இப்படிச் சொல்லிவிட்டுப் பழைய வார்த்தைகளின் பொருள் புரியாத சொதப்பலை மறைக்கவும் தனது அதிகாரத்தை நினைவுபடுத்திக்கொள்ளவும் மேசை மீது மூன்று தடவை ஓங்கிக் குத்தினார்.

ப்ரஃபசர் கீமா தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

இருபுறமும் குச்சி போல ஆடாமல் நின்றிருந்த அதிகாரிகள் இரட்டைப்பிறவிகள்.

அவர்களுக்கு ஒரே நேரத்தில் மூக்கில் வியர்த்தது. அதைத் துடைத்துவிட்டுத் தும்மல் வந்துவிட்டால் தலைவரிடம் மாட்டிக்கொள்வோமோ என்ற சிந்தனைத் தீவிரத்தால் இருவருக்கும் உடல் முறுகியது.

அவர்களின் விரைப்பான தோற்றத்தை அரைக் கண்ணால் கவனித்த கேப்டன் தனது உதவியாளர்களின் உண்மையான மும்முரத்தை எண்ணிப் பெருமைப்பட்டுக்கொண்டார்.

“எல்லாவற்றையும் சொல்கிறேன் கொஞ்சம் நேரமாகும். சொல்லிவிட்டு இந்த ஆய்வகத்தையும் சுற்றிக் காட்டுகிறேன்.”

கீமாவிடம் உண்மையைக் கறக்கப் போகும் ஆனந்தத்தை வெளியே காட்டிக்கொள்ளவில்லை கேப்டன்.

“பல காலம் முன்னால் உலகின் ஆதார சக்தியையும் அடிப்படைப் பொருளையும் தேடிய பயணம் தீவிரமானது. எல்லாப் பொருளும் அணுக்களும் துகள்களும்தான் என்று ஓர் ஆய்வு கூறியது. துகள்கள் அலைகளாகவே இருக்கின்றன. அதனால்தான் சக்தி உருவாகிறது என்று மற்றோர் ஆய்வுக்குழு சொன்னது.

முடிவில் ஒரே பொருள் துகளாக சில கவனிப்புகளிலும் அலையாகச் சில அவதானிப்புகளிலும் நிகழ்கிறது என்று ஒரு சமரச ஆய்வு சொன்னது.

இது முடிந்த சில நூறு ஆண்டுகள் கழித்துப் பிரச்னை கிளறப்பட்டது. அதிகாரத்துக்கு வரவேண்டிய சில குழுவினர் கொள்கை வெறியைப் பயன்படுத்திக் கட்சி கட்டி மதம் வளர்த்துப் பூசல் பரப்பினர்.

சூரியனின் அளவற்ற ஆற்றலைப் பயன்படுத்தித் தூரத்து கேலக்சிகளுக்குச் செல்ல அதிகாரம் தேவைப்பட்டது. துகள் கட்சியும் அலைக்கட்சியும் வானில் மின்னல் போர் செய்தன. கடலில் நீர் பீரங்கிகளைப் பிளிற வைத்தன. பாதாளத்தில் உலோக ஆறுகளைக் கொந்தளிக்கச் செய்தன.

திடீரென எங்கள் மூதாதையான அலைக்கட்சித்தலைவர் சற்று விரைவாக விவேகம் கொண்டார்.

‘துகளும் அலையும் ஒண்ணு
பிரிப்பவன் சிப்பில் மண்ணு’

என்று ஒரு வெள்ளை மேகத்தில் வானவில் நிறத்தில் எழுதித் துகள் கட்சியின் தலைமை அலுவலகத்தின் முன் பறக்கவிட்டார்.

அதன்பின் உயிரை எடுக்கும் மோதல்கள் குறைந்தன. வாய்ச்சண்டை குறையவில்லை. ஆட்சிக்கு நாங்கள் ஆசைப்படவில்லை. ஆராய்ச்சியிலும் ஏகத்துவ லஹரி பாவத்திலும் மூழ்கிவிட்டோம்.

இரு பக்கத்திலும் அவ்வப்போது தீவிர இயக்கங்கள் வெளியே வரும்.”

அப்போது அறையின் கடினமான தடுப்பைத் தாண்டிக் கூச்சல் கேட்டது.

“விடுதலை செய் விடுதலை செய்
ப்ரொபசர் கீமாவை விடுதலை செய்
அலையே தெய்வம். அலையே அனைத்தும்
துகள் ஒழிக தூசு தும்பு ஒழிக”

“இப்படித்தான் கட்சி பிரிக்கிறார்கள் கேப்டன். நான் இவர்களுக்குத் தலைவியாம். நீர்க்கோல வாழ்வில் யார் யாருக்குத் தலைவர் சொல்லுங்கள். நான் இதையெல்லாம் பார்த்துச் சலித்துவிட்டேன் கேப்டன்.”

“இப்படித்தான் எனக்குப் பத்து வயது ஓடிக் கொண்டிருந்த நூறு ஆண்டுகளில் என் அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு நட்சத்திர உலா போகும் மென்னொளி சிலிர்க்கும் இரவுகளில் பல ஊர் கோலங்களைப் பார்த்திருக்கிறேன்.”

“கேலக்சிகளின் இடையே இருக்கும் வெளியில் நின்று கொண்டு பெரிய பெரிய சொற்களை வானில் எழுதுவார்கள். “ஓ” என்று கத்திக்கொண்டு காஸ்மிக் பின்னணி நுண்ணலைக் கதிர்வீச்சின் அமைதியைக் குலைத்துக்கொண்டு இருப்பார்கள். இவர்களைச் செயல்படுத்துவது குழு உணர்வும் மாலையில் நிலாப்பயணங்களில் கிடைக்கும் எரிமலைச் சாம்பல் தூவிய மதுவும்தான்.”

“அதேபோல இந்தப் பட்டிமன்றக்காரர்களுக்கு என்னதான் வேண்டுமென்று தெரியவில்லை. பழைய நகைச்சுவைக் கவிகளும் அபத்த நாடகங்களும் கோமாளித்தனமாக மேடை ஏறிவருகின்றன. துகள் ஆட்சியினர் மோசடி செய்து அதிக பிட்டுகளை வாங்கி ஆட்சியைப் பிடித்துவிட்டார்களாம்.

மறத்தினால் வீழ்ந்துவிட்டாய் என்று மாரில் அடித்துக்கொண்டு கதறுகிறார் ஒரு பேச்சாளர். எப்படியாவது கட்சியின் கவிஞர் குழுவில் பதவி வாங்க வேண்டும்; ஆடம்பரமான ஒரு கிரகத்தில் அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்று பதிவு செய்யவேண்டும். இதுதான் இவர்கள் குறிக்கோள்.”

“இன்னொரு பிரச்னையைக் கிளப்பினார்கள் எங்கள் ஆட்கள். கோள்களுக்கு இடையே இருந்த அதிவிரைவு சாலைகளுக்குத் துகள் மதத்தின் தலைவர்களின் பெயர்களை வைத்துவிட்டார்களாம். வைத்துவிட்டுப் போகட்டுமே என்று சொன்னால் கேட்பதில்லை. இதெல்லாம் நாம் கட்டி அமைத்ததா என்ன? எவ்வளவு ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் கடைசியில் சிதைவு அடையும்போது ஒரு சொட்டு பாலையாவது பால்வெளியில் இருந்து கொண்டு போகமுடியுமா? முடிவு செய்தோ தற்செயலாகவோ சிதைந்துவிட்டோம் என்றால் அதன்பின் ஒரு பழைய பாட்டில் சொன்னது மாதிரிதான்.”

“அண்டம் கூடி அலறி இடித்து
சுண்டவைத்து வற்றி சிப்பினை அகற்றி
மண்டிருள் வெளியில் மலர்போல் தூவி
உண்டு மகிழ்ந்து ஊர் செல்வர்களே”

“போஸ் ஐன்ஸ்டின் கண்டென்செட்களின் மீது துகள் கட்சிக் கொடி வண்ணம் பூசி அஸ்டிராயிடுகளின் இடையே பறக்க வைத்தனர். சில இடங்களில் அலைக்கட்சிப் பெண்களைக் கடத்திச்சென்று கட்டாயத்திருமணம் செய்த துகள் கட்சி இளைஞர்கள் துகள் முத்திரையைக் குத்தி மதம் மாற்றினார்கள்.”

“இந்தச் சண்டையிலிருந்து வெளியே வரவேண்டிய அவசியம் இருந்தது. தனக்கு வயதாவதைத் தடுத்து நிறுத்தாமலிருந்த ஒரு பாட்டி யோசனை சொன்னார். நமது சூரியன் சிவப்பு பூதமாக மாறும் காலம் நெருங்கிவிட்டது. எவ்வளவு காலம் இரு பிரிவும் இப்படி அடித்துக்கொள்வார்கள்? வேறு சூரிய மண்டலத்துக்கு மாறவேண்டும் என்று அரசுக்குப் புரிய வைக்க முடியாது. அவர்களின் அறிஞர்களும் சோம்பேறிகள். போலிகள். கடந்த ஆயிரம் வருடத்தில் விருது பெற்றவர்களில் உண்மையான அறிவியலாளன் ஒருவனாவது இருக்கின்றானா அவர்கள் உருவாக்கிய சர்வ கலாசாலைகளில் தலைக்குள் சூடுள்ள ஒருவனாவது தேறி இருக்கிறானா? நாம் உண்மையான ஆற்றல் மையத்தைத் தேடிப் போவோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மறந்துவிட்ட அடிப்படை கணித – அறிவியல் – வரலாற்றுத் தேடலை சுயமான சிந்தனையை நமது குழந்தைகளுக்குச் சொல்லித் தருவோம். அவர்கள் வானில் சுருங்காத கதிரவன் ஒளிதரட்டும்.”

கீமாவின் சொற்கள் கேப்டன் தூளியின் கண்முன் காட்சிகளாக விரிந்து கொண்டிருந்தன.

“அப்போது உருவானவைதான் இந்தப் பாதாளப் பள்ளிகள். அறிவுத்தேடலின் முதல் காட்சிகளை மனிதன் கண்டறிந்த அதே முறையில் ஒவ்வொருவரும் காண்பதற்குச் சுதந்திரமான சிந்தனைப் பயிற்சியும் முயற்சியும் இங்கே நடக்கிறது. முதல் நெருப்பை உருவாக்கியவனின் சிலிர்ப்பு. முதல் சக்கரத்தைக் கற்பனையில் கொண்டவனின் மின்னல் – இங்கே நிகழ்ந்தது. அறிவியலாளர்கள் அசலாகப் புதிதாக உருவாகி வந்தனர். நூறு ஆண்டுகளில் கணிப்பொறியைக் ‘கண்டுபிடித்தனர்’. இயல்பான பேச்சுமொழிகளில் நிரல்களை எழுதினர்.”

“கிளிஞ்சல்களிலிருந்து நினைவு சிப்களையும் மின்னல் ஒளியில் ஆற்றலையும் செய்துகொண்டார்கள். பொருண்மையையும் ஆற்றலையும் ஒன்றிலிருந்து ஒன்றாக உருமாற்றிப் பயன்படுத்திக்கொண்டனர்.

எண்ணங்களின் ஓட்டமே மனம் என்று அறிவித்தான் ஓர் இளம் அறிஞன்.

இதெல்லாம் பழைய புத்தகங்களில் இருந்தது என்று அவர்களுக்கு யாரும் சொல்லவில்லை.

நியூரான் ஓட்டங்களில் பல பல கோடி வாய்ப்புகளில் ஒன்று ஒரு புதிய பாதையைத் திறக்கிறது என்றாள் ஒரு சிறுமி.

எண்ணங்கள் மொழியாக மாறும் இடத்தை வரையறுத்தான் ஒருவன். அவன் எழுதியது தொல்காப்பியத்தையும் பாணினியின் எட்டு அத்தியாய நூலையும் பெரும்பாலும் ஒத்திருந்தது. ஓர் அதிர்ச்சியூட்டும் தற்செயலில் ஒரு மொழி ஆர்வம் கொண்ட விஞ்ஞானி பழைய புத்தகமான திருக்குறளின் ஒரு பாடலை அப்படியே எழுதி இருக்கிறான்.

எண்ணங்கள், சூழ்நிலையில் அழியாத அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன என்றது ஒரு பள்ளி.

அந்த அதிர்வுகளைச் சுரண்டி எடுத்து பழைய பெரும் விஞ்ஞானிகளின் நினைவுத் தொடர்ச்சியில் அறுபட்ட சரடுகளை மீட்டெடுத்து முன்கொண்டு செல்லும் ப்ராஜெக்ட்தான் நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருப்பது.

மொழியையும் கணிதத்தையும் பிரிக்கவிடவில்லை நாங்கள். அதனால் புதிய துறைகள் உருவாகி வந்தன.

பீகோ தொழில்நுட்பம் உளவியல், மொழியியல், உயிர்தொழில் நுட்பத்துடன் இணைந்தது.

பழைய ஆளுமைகளின் சிந்தனை ஓடிய பாதை மீட்டெடுக்கப்பட்டது. அவர்கள் நின்ற இடத்தில் கோட்டை இழுத்துப் பார்த்தோம். இந்த யோசனைக்கு எங்கள் தலைவர் அனுமதி தந்தபோது நான் இரண்டாவது முறையாக அழுதேன். முதல் முறை என் அம்மா சிதைவடைய முடிவெடுத்தபோது.”

“பூமிக்குச் சென்று பழைய கல்லறைகளிலும் அருங்காட்சியகங்களிலும் இருந்து பழம் பொருட்கள் கொண்டு வந்தோம். நியூட்டனின் ஆப்பிள் மரம், மேரி க்யூரியின் குடுவை, ஐன்ஸ்டினின் வயலின், ராமானுஜனின் நோட்டுப் புத்தகம், அவர் உறங்கிக்கொண்டே கனவில் கணக்குகளைக் கண்ட நாமகிரி அம்மனின் கோயில் கருங்கல் தூண், இது போலப் பல்லாயிரம் பொருட்களைச் சேர்த்தோம்.

ஒவ்வொரு அறிஞரின் எண்ண அலைகளை மீட்டெடுக்க தனி அணிகள் உருவாயின. யாரும் இங்கிருந்து மறைவதில்லை. அலைகளாக, துகள்களாக இருக்கிறார்கள். அதிவேக ரோபோட்கள் பீகோ நுட்பம் மூலம் எண்ணங்களை மீட்க முயல்கின்றன.”

“பல ஆண்டுகள் கழித்து நியூட்டன் ரோபோ அவர் ஆப்பிள் மரத்தின் கீழ் அமர்ந்திருந்த கணத்தை மீட்டெடுத்தது. அதன் திரையில் புவியீர்ப்பு விசையின் சூத்திரம் அச்சானபோது ‘நான் சிந்திக்கிறேன் அதனால் நான் இருக்கிறேன்’ என்று கூவினான் அதன் பொறுப்பாளன்.”

“போதும் ப்ரஃபசர் கீமா. ஆவிகள் எமது ஆட்சியில் தடை செய்யப்பட்டுவிட்டன. உங்களை இதற்கு மேல் பேச விடுவதில்லை” என்றார் கேப்டன்.

வெளியே ஏதோ முழக்கம் கேட்டது. வீரர்கள் இருவர் கதவைத் திறந்துகொண்டு வந்து சல்யூட் அடித்தனர்.

ஒரு சின்னப் பிரச்னை என்றனர்.

அப்படி என்றால் பெரியதாக இருக்கும் என்று கேப்டன் அறிவார்.

உடனே எழுந்து வெளியே சென்றார். தனது கைதியை மறந்துவிட்டார்.

விசாரணை அறையின் வெளியே நீண்டு கிடந்தது ஆய்வகம்.

ரோபோக்களின் வரிசைக்கு இடையே மினுக்கும் மீட்டர்கள் இடையே ஒரு தாடி வைத்திருந்த ரோபோ ஓடிக் கொண்டிருந்தது. அதன் மையச் செயலியின் கூட்டையும் கம்பிகளையும் கழற்றி வீசி வந்து கொண்டிருந்தது.

‘யுரேகா, யுரேகா’ என்று கத்திக்கொண்டே ஆய்வுமேடைகளைச் சுற்றி ஓடி வந்துகொண்டிருந்தது. அதன் உடலில் இருந்துநீர் சொட்டிக் கொண்டிருந்தது.

பின்னால் ஓடி வந்து கொண்டிருந்த அதன் பொறுப்பாளி செய்வதறியாமல் விழித்துச் சுதாரித்துப் பின்னர் அருகிலிருந்த குளியல் தொட்டியை எடுத்து மண்டையில் அடித்தான்.

“மன்னா, கண்டுபிடித்துவிட்டேன். அந்தப் பொற்கொல்லன் திருடன்” என்று சொல்லிக்கொண்டே கீழே படுத்துவிட்டது ரோபோ.

வியப்படைந்த கேப்டன் ஒரு விசும்பலைக் கேட்டுத் திரும்பினார்.

“எதுவும் புதிதாக உதிக்கவில்லை. அறியாமை அல்லது அறிதலின் கணநேர தரிசனம் என் உயிரை உருக்குகிறது” என்று அழுது கொண்டிருந்தது ஒரு ரோபோ. அதன் பீடத்தில் ப்ரஃபசர் ஹார்டி என்று எழுதி இருந்தது.

அடுத்த ரோபோ பெண்மையின் கனிவில் இருந்தது. புற்றுநோய் முற்றிய தூயக் காரிகை. “எனது நாட்டின் பெயரில் நான் உயிர்த்தியாகம் செய்வேன். என் தேசத்துக்காக என் அனைத்து அறிவியலும் சமர்ப்பணம். அடிமையாக இருக்கும் என் அன்னை நிலம் மீண்டு எழும். எனது புதிய கண்டுபிடிப்புக்கு அவள் பெயரில் பொலோனியம் என்ற பெயர் வைக்கவேண்டும்.”

கேப்டன் நெகிழ்ந்து போனார்.

அடுத்த சேம்பரில் நியூட்டன் ராயல் சொசைட்டியின் தலைவராக இருந்து கால்குலஸ் கண்டுபிடித்தது தானே என்று தீர்ப்பு தந்தார். லீப்னிஸ் தலையைத் தொங்கப் போட்டவாறு வெளியே வந்தார்.

வேறொரு சிற்றறையில் ஓர் இளம் மாணவன் கும்பகோணம் பள்ளி ஒன்றில் ஆசிரியர் அறைக்குள் “ஐயா சுழியத்தை சுழியத்தால் வகுத்தால் எனக்குப் பல விடைகள் வருகின்றன,” என்று சொல்லிக் கொண்டிருந்தான். தடுமாறிய ஆசிரியர் முகம் சுளித்து அவன் ஆர்வத்தை அடக்கிக் கொண்டிருந்தார்.

ஆய்லர் தனது ஒளி இழந்த விழிகளுடன் பேரக் குழந்தைகளுடன் விளையாடியவாறே சித்திரங்களையும் தேற்றங்களையும் சொல்லிக் கொண்டிருந்தார். சி எ ஃ ப் காஸ் வகுப்பில் உட்கார்ந்தவாறு எண் வரிசையை எளிமையாகக் கூட்டும் சூத்திரத்தைக் கண்டுபிடித்துக் கொண்டிருந்தார்.

ஹாமில்டன் ஒரு பாலத்தில் நடந்தபடியே ஒரு கல்லை ஏத்திய நொடியில் வெக்ட்டர் என்ற கருத்தைக் கண்டறிந்தார்.

கடைசியாக ஐன்ஸ்டினின் அறை. கையைப் பிசைந்துகொண்டு கண்கள் கூர்மையாகி, தலைமுடி சிலிர்க்க எங்கோ ஓர் ஆழத்தில் போய்க்கொண்டிருந்தார் பெரியவர். அறை முழுவதும் காகிதங்கள். காகிதம் எல்லாம் சமன்பாடுகள்.

ஒரே ஒரு சமன்பாடு – நான்கு விசைகளை ஒருங்கிணைக்கும் ஒன்று – எல்லாவற்றையும் விளக்கிவிவிடும் – எல்லாவற்றையும் பூரணமாக்கும் அது – ஏன் அது இன்னும் உதிக்கவில்லை? ஆனால் அது கண்முன் தோன்றி நிற்பது போல இருக்கிறதே.

ஆ, பிடி அந்த மின்னல் கீற்றை. இல்லை. ஒரு துளி தரிசனம். கணத்தில் தோன்றி மறையும் பேருண்மை. கடுகளவு சத்தியம். பிடித்து வைக்கும் பேறில்லை. தப்பிவிட்டது. இன்னும் எத்தனை காலம் காத்திருப்பது. ஓ மரணம்.

பிதாகரஸ் இந்தியா சென்று வந்த அனுபவங்களையும் சமபக்க முக்கோணத்தின் ஒழுங்கமைப்பையும் மாணவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

எல்லாவற்றையும் பார்த்தவாறு வந்த கேப்டன் மூடி இருந்த ஓர் அறைக்குள் எச்சரிக்கையுடன் நுழைந்தார்.

சாதாரண கிராமத்து அம்மாவின் முகம் கொண்ட ரோபோ ஒன்று தனது குட்டிப் பெண்ணுக்கு நிலாச்சோறு ஊட்டிக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் நின்று பார்த்தார்.

மகனே என்று ஓர் அன்னைக்குரல் அழைத்தது. திரும்பியபோது அவரது அம்மாவை அவர் முதல் முதலாகக் கண்ட கணத்தின் காட்சியில் நின்று கொண்டிருந்தாள். இரு கைகளையும் நீட்டினாள். கேப்டன் அவள் கால் முட்டி அளவுக்கே இருந்தார். காலைச் சுற்றிக் கட்டிக்கொண்டு அவள் அங்கியின் மணத்தில் புதைந்தார். அம்மாவுக்கே உரிய மணம்.

“உனது குறும்பு குறையவே இல்லையா? ஏன் இவ்வளவு சிக்கல்களை உருவாக்கிக்கொள்கிறாய்?” என்றார் ப்ரொபசர் கீமா.

அவரது கையைப் பிடித்து அந்த நீளமான ஆய்வகத்தின் கடைசியில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள்.

தன்னை ஒரு சிறு குழந்தையாக உணர்ந்தார். உடையும் சிறிதாகிக்கொண்டே வந்தது. எதற்கு என்று மழலைக்குரலில் கேட்கும் முன்பே அழகிய கண்ணாடி ஜாடி ஒன்றுக்குள் வைக்கப்பட்டார். அருகிலிருந்த இரண்டடி உயரமுள்ள ஜாடிகளில் சீருடை அணிந்த பழைய கேப்டன்கள் இருப்பதைக் கண்டார்.


புகைப்படம்: பிரஷாந்த்

இதழ் 12 பிற படைப்புகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்