என்னுடைய வாசிப்பு, திரைப்பட ஆர்வம் என எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆதாரம் ஆனந்த விகடன். வாரா வாரம் வீட்டுக்கு வரும் விகடன் கூடவே எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், திரைப்பட கலைஞர்கள், சாதனையாளர்கள் சாமானியர்கள் எனப் பலரைக் கைப்பிடித்துக் கூட்டி வரும்.
அந்த வகையில் திரு. எஸ். ராமகிருஷ்ணன் எனக்கு அறிமுகம். ஆனந்த விகடனில் வந்த ‘சிறிது வெளிச்சம்’ தொடர் அவரை எனக்கு வெளிச்சம் காட்டியது. அந்த தொடரில் அவர் கதை, திரைப்படம், பயணங்கள், நிகழ்வுகள் எனப் பலவற்றை விவரிப்பார். நிறையத் திரைப்படங்கள் பார்க்கும் ஆர்வமே தொடர்ந்து அவர் படைப்புகளைத் தேடிப் படிக்கும் ஆவலைத் தூண்டியது.
என் நூலகத்தில் இருக்கும் இவரின் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் ஒரு இடத்தில் இருந்தாலும் எப்போதும் என்னை இன்னொரு புத்தகத்துக்கோ… திரைப்படத்துக்கோ… தேடலுக்கோ உந்தித் தள்ளிக் கொண்டே இருக்கும்.
முகநூல் பயன்படுத்தத் தொடங்கிய ஆரம்பக் காலத்தில் சுயமாக எழுதுவது மிக மிகக் குறைவு. அப்போது எல்லாம் ஒரு படத்துடன் எஸ். ரா அவர்களின் புத்தகத்தில் உள்ள வரிகளை எடுத்துப் போட்டுப் பதிவுப் போடுவேன்.
தேசாந்திரியாகக் குளிர் காலத்தில் காலையில் அவர் கண்ட கங்கை, மசூதியில் குடித்த கசகசா பாயசம், ரயில் நிலையத்தில் காய்ச்சல் வந்து தவித்த தருணங்கள், பசியோடு பயணித்த இலக்கியக் கூட்டம் போன்ற அனுபவங்களை அவர் மொழிகளில் கூற வேண்டுமானால் “சாலைகள் இன்று வரை மயக்கமூட்டுபவையாகவே இருக்கின்றன. உலகில் உள்ள எந்த விருட்சத்தையும் விட அதிகமாகக் கிளை விடுகிறது சாலைகள் மட்டும்தான் என்பதை உணர முடியும்.”
அவர் கையாளும் உவமைகள் ரசனை வாய்ந்ததாக இருக்கும். அவர் கூற வரும் நிகழ்வுகளை அந்த உவமை மேலும் வலுப்படுத்தி மனதில் வேரூன்றிக் கிளைப் பரப்பிவிடும். சில உதாரணங்கள்.
“உண்டியலில் காசு போடுவதைப் போல நம் மனது ஒவ்வொன்றாகப் போட்டுப் போட்டு நிரம்பிக் கொள்கிறது.”
“ஓட்டைப் பாத்திரத்திலிருந்து தண்ணீர் தானே ஒழுகி வருவது போல அவன் மனதிலிருந்து இந்தச் சொற்கள் மட்டும் தானே ஒழுகிக் கொண்டே இருந்தன.”
“உடம்பில் அம்மைத் தழும்புகள் மறையாமலிருப்பது போன்று இளவயது பசியால் ஏற்பட்ட அவமதிப்புகளின் வடுக்கள் இன்றும் மறையாமல் இருக்கின்றன.”
“டிராகுலாவின் பற்கள் பதிந்து விடுவது போல” வயலின் இசை நரம்புகளில் படிந்துவிடும்.
“ஒரு தாதி குழந்தையைக் குளிப்பாட்டித் துடைத்து எடுப்பது போன்று” இரவின் கைகள் உலகைச் சுத்தம் செய்கின்றன.
“கண்ணுக்குத் தெரியாமல் உப்புத் தண்ணீரில் கரைந்து விடுவதைப் போல தன்னிடமிருந்து அழகு யாவும் கரைந்து போய் விட்டிருக்கிறது.”
‘கேள்விக்குறி’யில் வரும் கேள்விகள் அனைத்தும் நம் அன்றாட வாழ்வில் ஒரு முறையேனும் கடந்து வந்து இருப்போம். அந்த கேள்விகளுக்கான ஆழம், அகலங்களை ஆராய்ந்து பதில் தேடும் பயணமாக ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கதையோடும் அல்லது நிகழ்வுகளோடும் நிறைவு பெறும். நான் இதில் வரும் கேள்விகளை அவ்வளவாக எதிர் கொண்டது இல்லை என்பது தான் உண்மை. “ஏமாத்தறது தப்புன்னு ஏன் யாருக்குமே தோணமாட்டேங்குது?” என்ற கேள்வியைத் தாண்டி ஏமாற்றி விட்டு அவர்களால் எப்படி இயல்பாக இருக்க முடிகிறது எனப் பலமுறை சிந்தித்து உள்ளேன். இதில் வரும் தந்தை மகன் கதை என் மனதுக்கு நெருக்கமானது.
‘காற்றில் யாரோ நடக்கிறார்கள்’ புத்தகத்தை ஒரு வழிகாட்டியாகக் கையில் வைத்துக் கொண்டு தமிழகத்தின் சிறு நகரங்களில் அலைந்து திரிந்து பயணம் மேற்கொள்ளலாம். புத்தகக் கண்காட்சியிலோ அல்லது நூலகங்களிலோ எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேடிக் கண்டு வாசித்து மகிழலாம். திரைப்பட விழாவிலோ அல்லது இணையத்திலோ திரைப்படங்களைக் கண்டு ரசிக்கலாம். புத்தகங்கள், சினிமா, இசை, ஓவியம் என எல்லாத் தளங்களிலும் எனது ரசனையை மேலும் வளர்த்துக் கொள்ளக் கையில் ஒரு வழிகாட்டியாக இந்த புத்தகம் இருக்கிறது.
‘இதிகாசங்களை வாசிப்பது எப்படி?’ என்ற கட்டுரையைப் படித்த பின்னர் ‘டிராய்’ (Troy) படம் எனக்கு நன்கு புரிந்தது. பாரீஸ், ஹெலன் இருவரும் திருமணம் செய்வதற்கு ‘அப்ரோடிட்’ தேவதை எவ்வாறு காரணமாக இருந்தது, எந்த வித நேரடி காரணமும் இன்றி அக்கிலஸ் ஒரு போர் வீரனாக மட்டுமே களத்தில் இருந்தது, அக்கிலஸ் குதிக்காலில் அம்புப்பட்டு இறப்பதற்கான காரணம் எனப் பல விஷயங்கள் இந்தக் கட்டுரையைப் படித்த பின்னர் தான் புரிந்தது.
எப்போதும் ஒரு படம் பார்த்த பின்னரோ, புத்தகம் படித்த பின்னரோ அந்த படைப்பு பற்றித் தேடிப் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த வாசிப்பு அந்த படைப்பை மேலும் புரிந்துகொள்ள மற்றும் ரசிக்க உதவியாக இருக்கும். இதற்கு தலைக்கீழகாவும் நடக்கும்.
சத்யஜித் ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’ பார்த்த பின்னர் விபூதி பூஷன் நாவலை நூலகத்திலிருந்து படித்து விட்டுத் திரும்பி வைக்கப் போன போது ‘பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள்’ புத்தகம் கிடைத்தது. பதேர் பாஞ்சாலியை நுணுக்கமாக உள்வாங்கிக் கொள்ள இந்த புத்தகத்தைப் படிக்கத் துவங்கினேன். இந்த புத்தகம் அழைத்துக் கொண்டு விட்ட இடம் அகிரா குரோசாவாவின் ‘த்ரோன் ஒஃவ் பிளட்’. அது உந்தித் தள்ளிய இடம் ‘உலக இலக்கியப் பேருரைகள் ஷேக்ஸ்பியரின் மெக்பெத்’. இந்த தொட்டுத் தொடரும் தேடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
சில காலங்களுக்கு முன்னர் தினமும் எஸ். ராவின் வலைத்தள பக்கத்தைப் படித்து விடுவேன். அதன் தாக்கத்தால் நான் கண்ட படங்கள் — Blue Umbrella, Warriors of the Rainbow: Seediq Bale, Bright Star மற்றும் Desert Flower.
எனது பதவி உயர்வு கலந்தாய்வுக் கூட்டத்தில் என்னை மையமாகக் கொண்டு ஒரு பெரும் பிரச்சனை கிளம்பியது. புயலுக்கு முன் அமைதி போலக் காத்திருப்பு நேரத்தில் ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’ படித்துக் கொண்டு இருந்தேன்.
பல வருடக் காத்திருப்புக்குப் பின்னர் குழந்தைப் பேறு பெற்றேன். கொஞ்ச நாள் தொலைக்காட்சி அலைப்பேசியிலிருந்து தள்ளி இருக்கலாம் என எண்ணி வாசிப்பை மேற்கொண்டேன். அப்போது கையிலிருந்த புத்தகங்கள் ‘கோடுகள் இல்லாத வரைபடம்’, ‘கலிலியோ மண்டியிடுவதில்லை’, ‘மலைகள் சப்தமிடுவதில்லை’, ‘இலைகளை வியக்கும் மரம்’.
எஸ். ராவின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றால் கானகமோ, கதைகளோ, அருவிகளோ, ஆளுமைகளோ, நிசத்தமோ, நிகழ்வுகளோ எனப் பாதைதோறும் பரவசம் நம்மைத் தூண்டில் போட்டு இழுத்துச் செல்லும்.
இலக்கற்ற பயணியாய் அவர் மேற்கொண்ட பயணங்களின் வழி ‘உலக சினிமா’, ‘எனது இந்தியா’, ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’, ‘செகாவின் மீது பெய்த பனி’ என எல்லாவற்றையும் காற்றில் யாரோ நடந்து (நடக்கிறார்கள்) கைப்பிடித்து அழைத்துச் செல்வது போல் எஸ். ரா எனக்கு அறிமுகம் செய்த உலகம் விசாலமானது.
புத்தகங்கள் மீது தீர்க்க காதலையும், பயணங்கள் மீது அலாதி பிரியத்தையும் படங்களின் மீது அதீத பற்றையும் ஏற்படுத்திய எஸ். ராவின் படைப்புகள் என் அறிவு உலகத்துக்கான ஜன்னல்.