அ-சரீரி

அ-சரீரி

8 நிமிட வாசிப்பு

கணினிக்கு முன்பு வெறித்துக்கொண்டு அமர்ந்திருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்குத் தோன்றாததால் தான் எழுதிய கதையையே மீண்டும் ஒரு முறை வாசித்து பார்க்கத் தொடங்கினான். இந்த நூற்றாண்டின் சிறந்த கதைகளுள் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டியது அனாதரவாக மின்னஞ்சலின் அனுப்பியவை பட்டியலில் தேமேயென்று இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தபோதே மனசு வலிக்கத் தொடங்கியது. ஒரு தோல்வி இத்தனை தூரம் தன்னைப் பாதிக்குமா எனக் கற்பனைகூடச் செய்திருக்கவில்லை. தன் மகளுக்குத் தான் விரும்பிய பள்ளியில் இடம் கிடைக்காமல் போனபோதுகூட இவ்வளவு வருந்தவில்லை. அந்தப் பள்ளிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றவாறே மழலை மொழி மாறாத குழந்தையோடு முக மலர்ச்சியாக வெளியேறினான். ஆதிதான் முகத்தை கோணலாக்கிக்கொண்டாள். அந்தவொன்றை வைத்தே அவன் பரம்பரையையே திட்டித் தன் கோபத்தைப் போக்கிக்கொண்டாள்.

அவளிடம் பேசலாம். முதலில் தன் கதையின் பிழையைத் தான் உணர்ந்துகொண்டால் ஆறுதலுக்கான ஆயத்தத்தைத் தேடலாம் என்று முடிவு செய்தவன் கதையை முதலில் இருந்து வாசிக்க ஆரம்பித்தான்.

***

கணினிக்கு முன்பு வெறித்துக்கொண்டு அமர்ந்திருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்குத் தோன்றாததால், நான் எழுதிய கதையையே மீண்டும் ஒரு முறை வாசித்துப் பார்க்கத் தொடங்கினேன். ஒரு தோல்வி ஏன் இத்தனை வலி மிகுந்ததாக இருக்கிறது. என்னுடைய மகளுக்கு நகரின் மிகப் பெரிய பள்ளியில் இடம் கிடைக்காமல் போனபோதுகூட அவளின் மழலைக் குரலைக் கேட்டவாறே முக மலர்ச்சியோடுதான் வெளியேறினேன். ஏமிதான் முகத்தைக் கோணாலாக்கிக்கொண்டாள். அந்தவொன்றை வைத்தே என் பரம்பரையையே திட்டித் தன் கோபத்தைப் போக்கிக்கொண்டாள்.

அவளிடம் பேசலாம் என யோசனை தோன்றியபோதே இதையும் காரணமாக வைத்து என்னைப் பலவீனமானவனாக நினைத்தால்கூடப் பரவாயில்லை. ஏதாவது ஒரு சொல்லில் வெளிப்படுத்திவிட்டால் அதன் பிறகான உணர்வுகளுக்கு இந்தத் தோல்வியே தேவலை என்று உணர்ந்து அமைதியாக மீண்டும் அந்தக் கதையைப் படிக்கத் தொடங்கினேன்.

கதை இப்போது போலல்லாமல் முன்னால் நடைபெறுகிறது. அப்பா இறந்ததில் இருந்து கதை தொடங்குகிறது.

அப்பா அன்றுதான் இறந்தார். அதற்கு முன்பும் இருக்கலாம். நினைவுகள் மங்கிவிடும் சாபத்துடன்தான் பிறக்கின்றன. அவற்றால் நாம் தொலைத்தவற்றுக்கு மிகச் சமீபத்தில் நம்மைக் கொண்டுவிட முடியும். நாம்தான் நம்முடையவற்றைக் கண்டறிய வேண்டும். அப்பா இறந்ததற்கு முதல் நாள் காலையில் மிக உற்சாகமாக அந்த நாளைத் தொடங்கியவர்களுள் அவரும் ஒருவராக இருப்பார். தன்னுடைய தொடு திரையில் அன்றைக்கான செய்திகளை அவர் பார்வையிட்டதாகப் பின்னர் அறிந்துக்கொண்டேன். தன்னுடைய மருந்துகள் எந்த அலமாரியில் இருக்கின்றன என்று ஆத்தாவிடம் வினவியுள்ளார். ஆத்தா என்பது அவருடைய மெய்நிகர் (விர்சுவல்) உதவி செயலியின் பெயர். குரலையும் அவரது ஆத்தாவின் குரல் போலவே அமைத்துக்கொண்டார். எனக்கும் பல நேரங்களில் தோன்றுவது உண்டு. என் அப்பத்தாவே உயிர் பெற்று வந்துவிட்டதோ என்று. ஒரு நேரத்தில் மட்டும் தொண்டையை அடைக்கும். என் சம்பளத்தின் நான்கில் ஒரு பகுதியை ஆத்தாவை உயிரோடு வைத்திருக்க, மாதக்கட்டணம் செலுத்த வேண்டி வரும்போது மட்டும்.

அன்றைக்கு மட்டும் நூற்றி ஐம்பத்தி எட்டு முறை ஆத்தா என்று அழைத்துள்ளார். உணவு எங்கு வந்துகொண்டு இருக்கிறது என்பதில் தொடங்கி, இன்றைக்குத்தான் எனக்கு கடைசி நாளா எனக் கேட்டது வரை. அவர் கேட்டதற்கு ஆத்தா என்ன பதில் சொன்னது என்கிற விபரங்கள் இல்லை. ஆனால் அதுதான் அவருடைய கடைசி வார்த்தைகள்.

அப்பாவின் முகத்தை எல்லோரும் பார்த்தோம். நானும் ஏமியும் என் மகளும் நேரடியாக சென்றிருந்தோம். அப்பாவை சிதை கொள்ளும் நெருப்பு எங்கள் முன் நின்ற கண்ணாடிச் சாளரத்தில் அலையலையாகத் தெரிய நான் உடைந்து அங்கேயே அமர்ந்துவிட்டேன். பணம் செலுத்தியதில் இருந்து அஸ்தியைக் காசிக்கு அனுப்பி வைத்தது வரை எல்லாவற்றையும் ஏமி பார்த்துக்கொண்டாள்.

அப்பா இல்லாத அறை பேரமைதியாகக் காட்சியளித்தது. அவரது மேசை அத்தனை சுத்தமாக இருந்தது. அவரின் அன்றாடப் பணிகளில் ஒன்று மேசையைச் சுத்தம் செய்வது. அந்த மேசைதான் அவருக்கு உலகம். அந்த மேசைக்கென்று தனியாக எந்த வரலாறும் இல்லை. இருந்தும் அந்த இடத்தில் வேறு எந்த மேசை இருந்திருப்பினும் அவர் ஒரே போலத்தான் பாவித்துக் கொண்டிருப்பார். மேசையின் ஒரு மூலையில் பழைய கட்சிப் புத்தகங்கள். என்றாவது புரட்சி வரும் என்று பேசியவை. புரட்சி வந்ததோ இல்லையோ அழிவுதான் வந்தது. இருந்தும் அதன் தடிமனான சிவப்பு நிற அட்டை அப்பாவின் பழைய போராட்ட காலத்தின் ஆயுதங்களாக அங்கேயே வீற்றிருப்பது போலத் தோன்றுகிறது.

அப்பாவின் பணிகள் பெரிதாக மாறாது. அல்லது ஆத்தா மாறவிட்டதில்லை. காலை யார் முதலில் எழுந்து யாருக்கு வணக்கம் சொல்வது என்பதில் இருவருக்கும் போட்டியே நடக்கும். ஆத்தா சில நாட்களில் அப்பாவை ஜெயிக்க விடும். அப்பா சில நேரங்களில் முன்னரே எழுந்திருந்தும் கண்களை அசைக்காமல் அப்படியே படுத்திருப்பார். ஆத்தா ஜெயிக்கட்டும் என்று காத்திருப்பார். ஒரு விளையாட்டு போல இருவருக்கும். எழுந்ததும் செய்ய வேண்டிய உடலைச் சுத்தம் செய்வது, நெற்றி நிறைய பட்டை இட்டுக்கொள்வது, திருவாசகமோ பெரிய புராணமோ ஆத்தாவைப் படிக்கவிட்டுக் கேட்பது. இல்லை தானே படிக்க முயற்சி செய்வது. ஏதோ வித்தியாசமாக உணர்கிறீர்கள் அப்படித்தானே. ஆமாம். கம்யூனிசக் கொள்கைகளில் இருந்து திருப்பாவைக்கு நகர்வது உலக வழக்கம் இல்லைதான். அப்பாவுக்கு மட்டுமில்லை அவர் தொலைத்த இளமையில் உடன் கம்யூனிசத்தைப் பற்றிக் கொண்டிருந்த எல்லோருக்கும் பற்றிக்கொள்ள வேறு தேவைப்பட்டது. பொதுமை சமூகக் கனவில் இருந்து பன்னடக்குச் சமூகத்துக்குத் தங்களைப் பொருத்திக்கொள்வது வலி மிகுந்தது. அப்பாவை அந்த ஒரு விஷயத்தில் மட்டும் சந்தர்ப்பவாதி எனச் சொல்லிவிட முடியும்.

காலை உணவு. அதன் பிறகு தம்பியோடு பேசுதல் என ஓர் அடைவு காத்திருக்கும். தம்பி என்பது அவரது மகனான நான்தான். ஒரு நாள் தவறாது அப்பா என்னை அழைத்துவிடுவார். எதுவும் பேச இல்லையென்றாலும் என்னுடைய பணி சார்ந்து நாளிதழ்களில் பார்த்த செய்திகளையும் அரசியல் நடப்புகளைக் குறித்தும் பேசிக் கொண்டிருப்பார். அவருக்கு நான் தேவைப்பட்டேனா என்பது தெரியாது. ஆனால் அவரது பார்வை எனக்குத் தேவைப்பட்டது.

ஒவ்வோர் அடுக்கிலும் வளர்கிற குழந்தைகளுக்கு அளிக்கும் ஊட்டச்சத்து தொடர்பான விவாதங்கள் கிளம்பியபோது நாடெங்கும் கலவரங்கள் வெடித்தன. அப்பா தன்னுடைய பார்வையை முன்வைத்தார். அது சரியாகவும் இருந்தது. இந்த அடுக்குகள் நிலையானவை அல்ல. ஒவ்வொன்றில் இருந்தும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் அரசிடம் விண்ணப்பித்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை முறையாக ஒழுங்குப்படுத்துவதை எப்போதும் கடினமான பணி என்று நினைத்தே அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என்பார். கீழ் அடுக்குகளில் இருக்கும் குழந்தைகளுக்கு மற்ற அடுக்குகளைக் காட்டிலும் அதிகபட்ச ஊட்டச்சத்து அளிக்க வேண்டும் எனப் போராடியவர்களில் அப்பாவும் ஒருவர்.

அப்பாவின் முற்பகல் நேரம் காணொளிகளுக்கானது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில், ஒரு வீட்டில் வாழ்கிறவர்களை எட்டிப் பார்த்து சந்தோசம் அடையும் பார்வையாளர்களுக்கான நிகழ்ச்சிகள் பெரும் செல்வாக்கு பெற்ற பின்னர், அதே பாணியில் தோன்றியவற்றில் எதையாவது பார்த்துக் கொண்டிருப்பார். அவ்வப்போது அந்த நிகழ்ச்சிகளில் தோன்றும் நபர்கள் குறித்து ஆத்தாவிடம் தேடச் சொல்வார். ஆத்தா, அப்பா என்னவெல்லாம் பார்த்தார் என்று எனக்கு அறிக்கையை அனுப்பிக் கொண்டிருக்கும்.

ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு இது தெரிந்தபோது கோபமானார். அடுத்தவன் மூக்கில் கையை நுழைக்கிற அளவுக்குச் சுதந்திரத்தை உங்களுக்கு யாருடா கொடுத்தது. கோபமாக இருக்கும்போதுதான் அப்பா ஒருமையில் விளிப்பார். அன்றைக்கு நான் எதுவும் பேசவில்லை. மறுநாளே செயலி இயக்ககத்துக்குச் சொல்லி அறிக்கை அனுப்புவதை நிறுத்தச் சொன்னேன். நான் செய்த தவறு அங்கேதான் தொடங்கியது.

அப்பா அடுத்த ஒரு வாரத்திற்கான மருந்துகளைச் சரியாக எடுத்துக்கொள்ளவில்லை. தெளிவற்றே என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். மருந்துகள் சரியானவைதானா என்பதிலேயே அவருக்குக் குழப்பம் வந்திருக்கக் கூடும். அப்பாவை நேரில் சந்திக்கக் கிளம்பிச் சென்றேன்.

பதினான்காவது மாடியில் மாந்தோப்புகளுக்கு இடையே அப்பாவின் குடில் இருந்தது. மாந்தோப்பு, குடில் எல்லாமும் கண்களுக்கு மட்டுமேயான விருந்தோம்பல். மா வாசனையை அங்கு நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் அழுகிய மாங்கொட்டை குப்பைத் தொட்டியில் கிடப்பதாகப் புரிந்துகொள்ளலாம்.

‘அப்பா’

மூன்றாவது அழைப்புக்குப் பிறகு அலைபேசியை எடுத்தார். வெளியே காத்திருக்கிறேன் என்று சொன்ன அடுத்த நொடியில் கதவைத் திறந்தார். ஓடி வந்திருக்க வேண்டும் என்று ஊகித்துக்கொண்டேன்.

‘சாப்பிட்டீங்களா’

அப்பாவின் கண்கள் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தன. அவருக்குப் பேச வேண்டும் போல இருந்திருக்கும். ஆனாலும் கோபத்தில் இருக்கும்போது பேசக் கூடாது என்பதைக் காட்டுவதற்காக அமைதியாக இருந்தார்.

எனக்கு என் நியாபகம் வந்தது. சின்ன வயதில் ஏதாவது தப்பு செய்துவிட்டால் அப்பா இரவு வீட்டுக்கு வந்ததும் ‘அப்பாகிட்ட சொல்லுறேன் இரு’ என அம்மா சேர்த்து வைத்த கோள்களை எல்லாம் அவிழ்த்துவிடுவார்.

‘இன்னிக்கு உங்க மகன் என்ன செஞ்சான்னு கேளுங்க’ எனத் தொடங்கும்போது பாவமாக முழியை மாற்றிக்கொள்வேன். அப்பா திட்டியதால் கோபித்துக்கொண்டு அறையில் முடங்கிக் கிடப்பவனைச் சமாதானப்படுத்திச் சாப்பிடுவதற்காக அமர வைக்கும்போது, கோபமும் பேசும் ஆர்வமும் கலந்து நான் விழிப்பது போலவே இருந்தது அப்பாவின் பார்வை. உணவு மேசையில் பிரசங்கமாகும் அப்பாவின் பேச்சுக்கள் எனக்குப் பிடித்தமானது. இதற்காகவே அவர் வரும்வரை காத்திருந்த நாட்கள் உண்டு.

இரவுகள் அப்பாவுக்கு மதுவையும் மகிழ்ச்சியையும் வாரி வழங்குபவை. அந்த உற்சாகத்தில் அவரின் பேச்சுக்களைக் கேட்கும் ஆவலில் கழிந்த இரவுகள் குறித்து யோசித்தால் இப்போதும் உற்சாகம் எங்கிருந்தோ துளிர்க்கிறது.

‘இனி உங்களைப் பற்றிய அறிக்கைகள் எதுவும் எனக்கு வராது பா’

அப்பா கண்களை உருட்டிக் கொண்டிருந்தார்.

‘ஆமாம் பா. நான் அவங்க சேவை மையத்திடம் பேசிட்டேன். இனிமேல் உங்க செயல்பாடுகள் எதுவும் எனக்கு அறிக்கையாக வராது.’

‘இல்லை தம்பி. நீ ஏன் நல்லதுக்கு தான் பண்ணி இருப்ப. நான்தான் அன்னிக்குக் கோபமாகப் பேசிவிட்டேன்’

‘அப்படி இல்ல ப்பா. உங்களுக்கான தனியுரிமைன்னு ஒன்னு இருக்குல்ல’

அதன் பிறகு நான் அப்பாவை நேரில் சந்தித்தபோது அவரது விழிகள் அணைந்திருந்தன. அவரது கண்ணாடி தனியாக என்னிடம் தரப்பட்டது. அப்பாவின் விழிகளைப் பார்க்கத் தோன்றும் போதெல்லாம் அவரது மருளும் பார்வையை நினைவுறுத்தும் கண்ணாடிகளை எடுத்து மேசை மீது வைத்துக்கொள்வேன். அப்போது மேசையில் அப்பாவின் கண்ணாடி விரிந்த நிலையில் இருந்தது.

பிற்பகலில் அப்பாவின் வேலை என்பது புத்தகங்களை வாசிப்பது. நிறைய புத்தகங்களைச் சேமிப்பில் வைத்திருந்தார். மாலை பூங்கா அரங்கில் அவரின் நண்பர்களோடு நடை செல்வார். எந்தவித மாற்றமும் கோராத இந்தத் தொடர் நிகழ்வுகள் அன்றைக்குச் சிதைந்திருந்தன. அதுதான் அவரின் இறப்பிற்கான காரணமா எனத் தெரியவில்லை.

அப்பா அன்றுதான் இறந்தார். அதற்கு முன்பும் இருக்கலாம். அப்பா இறந்ததற்கு முதல் நாள் காலையில் மிக உற்சாகமாக அந்த நாளைத் தொடங்கியவர்களுள் அவரும் ஒருவராக இருப்பார். அன்றைக்கு என்ன நடந்தது என்பதற்கான தரவுகளைக் கேட்டபோது எங்கள் கைவசம் இல்லை என மெத்தனமாகப் பதில் அளித்த நிறுவனத்திடம் போராடிப் பெற்ற தரவுகளும் முழுமையாக இல்லை. அரைகுறையாக ஆத்தா என்ற பெயரை நூற்றி ஐம்பத்தெட்டு முறை விளித்தார். உணவு எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பதில் தொடங்கி இன்றைக்குத்தான் எனக்குக் கடைசி நாளா என்பது வரையிலான கேள்விகள் மட்டும் முப்பத்தெட்டு. புதிதாக இணையத்தில் தேடியவை ஒன்பது. காணொளி நேரம் 2 மணி நேரம். இப்படி உதிரி உதிரியாக கிட்டிய தகவல்கள் எதுவும் பயன் தரவில்லை. நிறுவனத்தின் பதில் தெளிவாக இருந்தது, ‘நீங்கள் அறிக்கைகளை அனுப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்ததால் எங்கள் பயனரின் விபரங்கள் அன்றைய இரவிலேயே தானியங்கி முறையில் அழிந்துவிடும்படி அமைப்பை மாற்றி வைத்துவிட்டோம். நாங்கள் எதையும் சேமிப்பில் கொள்ளவில்லை.’ நிறுவனத்திடம் வேறு எதையும் பெற முடியவில்லை.

என்னிடம் ஏற்கனவே இருந்த அறிக்கைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அவர் கடந்த மாதத்தில் ஒரே நாளில் ஐநூற்று எழுபது முறை கூட ஆத்தா என விளித்துள்ளார். உணவு வந்து கொண்டிருப்பதை விசாரிப்பது பெரிய விஷயமில்லை. இன்றைக்குத்தான் எனக்குக் கடைசி நாளா என்ற கேள்விதான் கொஞ்சம் இடறுவதாகத் தோன்றியது.

ஏமி, ‘ரொம்ப குழப்பிக்காதீங்க. அப்பாவுக்கு வயசாயிட்டுல. நாம பிடிச்சுவைக்க முடியுமா என்ன’. ஏமிக்கு ஒரு வகையில் பூர்வீகம் திருநெல்வேலி பக்கம். அவள் அங்கு ஒருமுறை கூட சென்றதில்லை எனினும் மொழி விடுமா என்ன. மொழி என்ற போதுதான் எனக்கு அப்பாவின் நாட்குறிப்பு நினைவு வந்தது.

அப்பாவின் நாட்குறிப்பைத் தேடினேன், அவருடைய பொருட்களை எல்லாம் அடைந்திருந்த பெட்டியில்.

அப்பா அன்றைக்கு எழுதிய குறிப்பில் இருந்த வரிகள்,

‘டொக் டொக் டொக் டொக்
பட் பட் பட் பட்
டொக் டொக் டொக் டொக்
பட் பட் பட் பட்’

இந்த மனிதருக்கு மூளை எதுவும் குழம்பிவிட்டதா. இதையெல்லாம் அமர்ந்து எழுதி வைத்திருக்கிறார். இதில் என்ன இருக்கிறது. குழப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதை மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன். யாராவது என்னை நிறுத்தி உங்க அப்பா எப்படி இறந்தார் எனக் கேட்கும்போது என்னையும் அறியாமல் ‘டொக் டொக் டொக் டொக் பட் பட் பட் பட்’ நினைவுக்குள் ரீங்காரமிடத் தொடங்கிவிடுகின்றன.

உளவியல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொண்ட மருந்துகள் குறைந்தபட்சம் பயனளித்திருப்பினும் முழுவதுமாக நான் குணமாகவில்லை என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

அப்பாவின் நடைப்பயிற்சி நண்பரைப் பார்க்க சென்றேன். ஆறுதலான வார்த்தைகளைப் பேசிக் கொண்டோம். அப்பாவின் குறிப்பில் இருந்த வரிகளைச் சொன்னேன்.

சிரித்தவாறே, ‘உங்க அப்பா அதையெல்லாமா எழுதி வைச்சுருக்கிறாரு. அது இந்த ஆப்காரன் சொல்லிக்கொடுக்கிற விளையாட்டு தம்பி. எங்களுக்கு நினைவுத் திறன் பயிற்சியா அதைச் சொல்லிக் கொடுக்கிறதா சொல்லுறான். அந்தந்த வார்த்தைக்கு ஒவ்வொரு அர்த்தம் நாங்களே வைச்சுப்போம். ஆப்க்கு மட்டும்தான் அது புரியும். அது திரும்பி கேக்கும்போது அதைச் சொல்லி பயிற்சி மாதிரி செய்வோம். வேடிக்கையா இருக்கும்’

ஆத்தாவைத் தூசி தட்டி வெளியே எடுத்தேன். வழக்கம் போல அது பேசத் தொடங்கியது அப்பத்தா குரலில்.

‘ஆத்தா’

‘நீ என் மகன் இல்லை. என் மகன் எங்க. கூப்பிடு’ அப்பத்தாவின் மெல்லிய குரல்.

‘ஆத்தா, நான் தான் உன் மகன்’ -நான் மூன்றாவது மனிதரின் குரலைப் போல என்னிலிருந்து எழுந்த குரலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

‘நீ என் மகன் இல்லை. என் மகன் எங்க. கூப்பிடு’

‘டொக்.டொக்.டொக்.டொக்.
பட்.பட்.பட்.பட்.
டொக்.டொக்.டொக்.டொக்.
பட்.பட்.பட்.பட்.’

‘தரவுகள் பரிமாற்ற நேரம்: இரண்டு நிமிடம் முப்பது விநாடிகள்’

‘தரவுகள் பரிமாற்ற நேரம்: ஒரு நிமிடம் பதினைந்து வினாடிகள்’

‘பத்து’

‘ஒன்பது’

‘எட்டு’

‘ஏழு’

‘ஆறு’

‘ஐந்து’

‘நான்கு’

‘மூன்று’

‘இரண்டு’

‘ஒன்று’

‘பரிமாற்றம் நிறைவு பெற்றது’

‘தம்பி’

அப்பா அழைத்திருக்கிறார். அலைபேசியைக் கையில் வைத்தவாறே,

‘தம்பி ஒரு எட்டு வந்துட்டு போவே’

‘இருங்க ப்பா. ஒரு பத்து நிமிஷம்’

அதிகாலை மூன்றரை மணி. இரவுக்கு இப்போது வெப்பம் சற்றே தணிந்திருந்தது. அடுக்ககத்தில் பதினான்காவது மாடியில் உள்ள அப்பாவின் அறை பாதி திறந்திருந்தது.

‘சொல்லுங்க ப்பா. கூப்பிட்டு இருந்தீங்க’

‘ஒன்னுமில்லபா. ஆத்தா பேசுறது ஒன்னுமே புரிய மாட்டேங்குது. என்னனு பாரு’

‘டொக் டொக் டொக் டொக்
பட் பட் பட் பட்
டொக் டொக் டொக் டொக்
பட் பட் பட் பட்’

அதிர்ந்து பின் வாங்கினேன்.

***

கணினி திரையில் இருந்து கண்களை அகற்றியபோது ஆதி எதிரில் நின்று கொண்டிருந்தாள்.

‘என்னாச்சுங்க.’

‘இல்லை. இந்தக் கதையில் அறிவியல் புனைவிற்கான அறிகுறி எதுவுமே இல்லை என நிராகரிச்சுட்டாங்க மா’

கொஞ்சமாகத் துக்கப்பட்டாள். அடுத்து எதிலோ உற்சாகமானவளாக, ‘சரி விடுங்க. அதை விட முக்கியமான ஒன்னு. இங்க வாங்க’

அழைத்துச் சென்றவள், கண்களைத் திறங்கனு சொன்னபோது வீடு வான் நீல நிறத்தில் மாறி இருந்தது.

குரல் சுவரின் எல்லாப் பக்கமிருந்தும் ஒலிப்பது போல இருந்தது,

‘தம்பி…’


ஓவியம்: பானு

மேலும் படிக்க

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:

குறிப்பிடத்தகுந்த கதைகள்:

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்