கதை

100 நலன்கள்

11 நிமிட வாசிப்பு

வான் பார்த்து செங்குத்தாக உயர்ந்து நின்ற அந்த மதிலைக் கண்டவுடன் அகிலா தன் நெஞ்சில் தொற்றிக்கொண்டிருந்த பாரத்துடன் மகிழுந்திலிருந்து கீழே இறங்கினாள். முன்னிரவிலிருந்து உணவேதும் உட்கொள்ளாமல் வயிறு இழுத்துப் பிடித்துக்கொண்டது. தன் பையில் இருந்த பிஸ்கட் பொட்டலமொன்றைப் பிரித்துச் சில பிஸ்கட்டுகளை விழுங்கித் தண்ணீர் குடித்து நடந்தாள். அங்குக் கூடியிருந்த ஒரு சிலர் அவளை அடையாளம் கண்டுகொண்டனர்.

அவளை நெருங்கி “விடு மா.. இன்னியோட எல்லாமே முடிஞ்சிடும்” என்று ஆறுதல் சொல்லிவிட்டுச் சென்றனர். ‘அப்படியா?’ என்று கேட்க விழைந்தாள். இருப்பினும் வேறு எந்தக் கேள்விகளும் கேட்டுத் தர்மசங்கடத்திற்கு உட்படுத்தாமல் கண்ணியமாக நடந்து கொண்டதற்காக ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்துவிட்டு நகர்ந்தாள். மதில் சுவரை நெருங்க நெருங்க ஒருவித சந்தோஷமும் குற்ற உணர்வும் மாறாட்டம் செய்து அவளை அலைக்கழித்தன.

அவளுக்கு முன்னே சில பொது மக்களும் பத்திரிக்கையாளர்களும் உள்ளே சென்று கொண்டிருந்தனர். மிகப்பெரிய அந்தக் கதவு வாழ்வின் மர்மங்களைச் சேகரித்து பின்பு பொசுக்கிவிடும் வல்லமை படைத்த காட்டேறிகள் வசிக்கும் அரண்மனையின் வாயிற்கதவைப் போலத் தோன்றியது. மதிலுக்கு உள்ளே ஒரு வட்ட வடிவிலான இரண்டு மாடிக் கட்டிடம் அமைதியாய் வீற்றிருந்தது. பெரும் கதறலுடன் வெடித்து அழ எத்தனிக்கும் வெள்ளை உடையணிந்த சிறு குழந்தையைப் போல அது நிசப்தத்தில் ஒடுங்கியிருந்து. அந்த அசௌகரியமான நிசப்தத்தைப் போலவே அன்று வெண்ணிற ஆடையை அணிந்திருந்தாள் அகிலா.

ஒவ்வொருவராக அந்தக் கட்டிடத்திற்குள் நுழையும் முன் அவர்கள் கொண்டுவந்திருந்த பொருட்கள் சரிபார்க்கப்பட்டுப் பின்னர் அவர்களிடம் அளிக்கப்பட்டது. ஒலியையும் காணொளியையும் பதிவு செய்யாதிருக்கக் கைப்பேசிகளுக்கு டோக்கன் போடப்பட்டு அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டன. பல காரணங்களுக்காக அந்த நாளை எதிர்நோக்கி இருந்த எட்டு வருடக்காலம் மொத்தமாகச் சுருங்கி, பிரபஞ்ச பெருவெடிப்பு போல, ஒரு நொடியாக வெடித்தது அவளுக்கு.

எல்லாம் ஒரு கனவு போல் நிகழ்ந்து விட்டிருந்தது. அப்பாவின் மரணமும் அவருக்கு நீதி கிடைக்க அவள் எடுத்த முயற்சிகளும். அந்த வட்ட வடிவிலான கட்டிடத்திற்குள் அவளுக்கு முன்னே சென்று கொண்டிருந்தவர்களை அவள் சட்டென்று அடையாளம் கண்டுகொண்டாள். ஒரு பெண்ணும் அவளைவிடக் கொஞ்சம் இளவயது ஆணும். அவளுடைய தந்தையைக் கொன்றவனின் பிள்ளைகள் – இருவரும் அவளைவிட இளையவர்கள். எட்டு வருடங்களாக அவளைப் போல அவர்களும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அகிலா அவர்களுடைய உடல் மொழியையும் முக பாவனைகளையும் உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.

‘தன் தந்தையானாலும் ஒரு கொலைக் குற்றவாளியை எப்படி ஆதரிக்க முடியும்?’

அந்தக் கேள்வி எழுந்த மறுகணமே அதைக் கடந்துவிட்டாள். இந்தக் கேள்விகளெல்லாம் ஏற்கனவே லட்சம் முறை எழுப்பப்பட்டு விடை தெரியாமல் கைவிடப்பட்டன. அது கொலையல்ல விபத்துதான் என நிறுவ அவர்கள் இருவரும் முயன்று தோற்றிருந்தார்கள்.

அந்த வட்ட வடிவிலான கட்டிடத்தின் மேல் “தண்டனைக் கூடம்” என்ற சொல் சின்னதாகப் பொரிக்கப்பட்டிருந்தது. அந்த எழுத்துகள் கொஞ்சம் பெரிய அளவில் இருந்திருந்தாலும் ஏதோ ஓர் அருங்காட்சியகத்தின் பெயர்ப் பலகை போல இருந்திருக்கும் என அவளுக்குத் தோன்றியது. கூடத்திற்குள் சென்ற அகிலா மெல்லிய வெளிச்சத்தைக் கக்கிய விளக்குகள் அலங்கரித்த பாதையை அடைந்தாள். நினைவில் ‘தண்டனைக் கூடம்’ என்ற பெயர் மட்டும் நிற்க அதில் ‘மரணம்’ என்ற சொல் இல்லாததும் அவளுடைய தந்தையின் நினைவுகளும் ஒரு பேரலையைப் போல நெஞ்சில் வந்து மோதின.

அவள் தந்தையைக் கொன்றவன் பெயரை அவள் அறிந்திருந்தாலும் அதை என்றுமே அகிலா உச்சரித்ததில்லை. எந்தவிதத் தீங்கும் இழைக்காத அன்பான ஒரு மனிதரின் இறப்பிற்குப் பொருள் விளங்காமல் அதைப் பல நாட்கள் தேடிக் கண்டறிய முயன்று தோற்று மன்னித்துப் பின்னர் மீண்டும் பெருங்கோபம் கொண்டு அதை மறக்க முடியாதவளாய் இப்போது இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறாள்.

முதன்முதலாக மரண தண்டனையை நிறைவேற்றத் தேர்வு செய்யப்பட்ட இந்தப் புதிய செயல்முறை பற்றிய செய்தி வெளியாகும்போது அதற்கு எதிராகவே அகிலா தன் தந்தையிடம் பேசினாள்.

“அது எப்படி? நீதிமன்றமே ஓர் உயிரைக் கொன்னாலும் அது தப்புதானே?” அவளுக்கும் அவள் தந்தைக்கும் வாக்குவாதம் முற்றிக் கொண்டிருந்தது. “தப்புதான். ஆனா மரண தண்டனையே இல்லன்னா அந்த பயம் போய்விட்ட மாதிரி ஆகிவிடாது?”

“இல்லையே… காலம் காலமா மரண தண்டனை நிறைவேற்றிக்கிட்டே தான இருக்காங்க? இப்ப மட்டும் எல்லாருக்கும் மத்த உயிர் மேல மதிப்பு வந்துடுச்சா, என்ன?”

“புரியுது”

அகிலாவின் அப்பா வெகு நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார். பின்பு தொடர்ந்தார்…

“என்னோட கேள்வி எல்லாம் நீதி-ன்றது எந்த நிலையில நிர்ணயிக்கப்படுது? ஒரு குற்றவாளிக்கு ஏதோ ஒரு தண்டனையைக் கொடுக்கிறதுல இருந்தா? இல்ல சுற்றி இருக்கிற எல்லாருக்கும் இந்த மாதிரி குற்றங்களுக்கான தண்டனை இதுதான் அப்படின்னு அவங்க மனசுல பதிய வைக்கிற இடத்துல இருந்தா? இல்ல அந்தப் பாதிக்கப்பட்டவரோட வலிய குற்றவாளிக்கு உணர்த்திய நொடிகளில் இருந்தா?”

“இன்னொன்னையும் நீங்க மறந்துட்டீங்க. அந்த இறந்தவருடைய குடும்பமும் நண்பர்களும் தேடுகிற மனசாந்திக்குத் தர பதில்தான் எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இவர்களுடைய நீதி எல்லாம். இத மனசுல வெச்சுதான இங்க தீர்ப்புகள் இயற்றப்படுது?”

“சரிதான்”

வெகு நேர அமைதிக்குப் பிறகு அகிலா அவரிடம் மீண்டும் கேட்டாள்.

“சொல்லுங்கப்பா. இப்ப என்ன யாராவது கொல செஞ்சிட்டாங்கனா, அந்தக் கொலகாரனையோ/காரியையோ நீங்க பழிவாங்க நினைப்பீங்களா?”

அவர் அகிலாவை ஒருமுறை கண் இமைக்காமல் பார்த்தார். வேறெதுவும் கூறி அந்த உரையாடலை அவர் திசைதிருப்ப நினைக்கவில்லை.

“இல்ல மா! நான் கண்டிப்பா பழிவாங்கணும்னு நினைக்க மாட்டேன்” என்றார். அவர் கண்களில் அவள் மகளாகிய தன்னைப் பற்றிய பெருமிதமும் அன்பும் மிளிர்ந்ததை அகிலா உணர்ந்தாள்.

நினைவுகள் கலைந்து, அகிலா சென்று கொண்டிருந்த சிறிய வழிப்பாதை விரிந்து ஒரு பெரிய அறையை நோக்கி நீண்டது. சட்டென்று எழுந்த கடுங்குளிர் அவள் தந்தையைப் பிணவறையில் பார்த்த நினைவுகளை எழுப்பித் தடுமாறச் செய்தது. மயிர்க் கூச்செறிந்து ஒரு வினோத வலியும் பதட்டமும் முதுகுத் தண்டில் இறங்கியது.

அந்தப் பெரிய அறையின் வடிவமைப்பு ஒரு ஸ்டூடியோவைப் போலவும் தேர்ந்த விசாரணை அறையைப் போலவும் இருந்தது. இரு அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய அறையின் சுவரில் ஒரு பெரிய கண்ணாடி பார்வையாளர்களையும் குற்றவாளியையும் பிரித்தது. பார்வையாளர்கள் உள்ளே நடப்பவற்றைப் பார்க்க முடியும். குற்றவாளிகள் ஆசைப்பட்டால் பார்வையாளர்களையும் வெளியே நடப்பவற்றையும் பார்க்க முடியும்.

பார்வையாளர்கள் அறைக்குள் நுழைந்ததிலிருந்து அகிலாவின் நெற்றியும் கைகளும் வேகமாக வியர்த்துக் கொட்டின. ஏதோ ஒரு பெருந்தவறைச் செய்து கொண்டிருப்பவளைப் போல மெல்லிய நடுக்கத்துடன் உள்ளே நுழைந்தாள். குற்றவாளியின் மகனும் மகளும் தங்கள் தாடைகளை இறுக்கிக்கொண்டு அழுகையை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அதையும் மீறி விம்மி விம்மி அழத் தொடங்கினர்.

உள் கண்ணாடி அறைக்கு இன்னும் குற்றவாளி வந்தடையவில்லை. அகிலாவுக்கு அவ்வப்போது அங்கிருந்து வெளியேற வேண்டுமென்று தோன்றும் போதெல்லாம் அப்பாவின் நினைவுகள் ஆட்கொண்டு கோபத்தின் தழல்களுக்கு மீண்டும் உயிரேற்றும். அந்தக் கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்னால் இருந்ததைவிட நூறு மடங்கு துக்கமும் பயமும் நிம்மதியும் சேர்ந்து அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தன. இதில் ஏதோ ஒன்று வெற்றி பெற்றிருந்தாலும் அவளுடைய இந்த அனுபவம் முற்றிலுமாக மாறிவிட்டிருக்கும். ஆனால் எந்த ஒன்றையும் நிலைக்க விடாமல் எல்லா உணர்வுகளும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. சில நேரங்களில் அந்தக் குற்றவாளியின் பிள்ளைகளைப் பார்ப்பதற்கும் அவளுக்குப் பாவமாகத்தான் இருந்தது. இந்த நிலை யாருக்கும் வரக்கூடாதுதான்.

‘ஆனால் என் வலிக்கு என்னதான் தீர்வு?’ என்ற ஒற்றைக் கேள்வி அவளை இந்த நிகழ்காலத்தை நோக்கி நகர்த்தியிருந்து. திடீரென ஏதோ நினைவுக்கு வந்தது போலத் தன் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்தாள். அது ஒரு பிளாஸ்டிக் மென்தகடைக் கொண்டு மூடப்பட்டிருந்தது. அதைக் கையில் பிடித்திருக்கையில் ‘என்ன ஓர் அற்பத்தனம்’ என்று தோன்றியது. எந்த அளவுக்கு அவளுக்குள் வன்மமும் ஊடுருவி இருந்தால் அந்த ஆவணத்தை இப்படிப் பத்திரப்படுத்தி வைத்திருப்பாள்? அந்த ஆவணத்தை வெளியே எடுக்கும்போது இருவரும் அவளைக் கவனித்தனர். அந்த நொடி வரை அவள் இருப்பதை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை. அவர்களிருவரும் கூனிக்குறுகி உட்கார்ந்திருந்ததோடு அவர்கள் கண்களில் குழப்பமும் கேள்வியும் மிச்சம் இருந்து.

ஏதோ ஒரு சத்தம் கேட்டு அவர்கள் திரும்பிப் பார்க்க அந்தக் கண்ணாடி அறைக்குள் ஓர் உருவம் உள்ளே நுழைந்தது. மரண தண்டனையை நிறைவேற்றும் அதிகாரி சக்கர நாற்காலியில் குற்றவாளியை உள்ளே அழைத்துவந்தார். பிள்ளைகள் இருவரும் தங்கள் கரங்களைப் பற்றிக்கொண்டு கதறி அழத்தொடங்கினர். அகிலா தலையைத் தாழ்த்திக்கொண்டாள். குற்றவாளி அதிகாரியிடம் ஏதோ சொல்ல அவர் கைபேசியில் ஒரு பொத்தானை அழுத்தவும் உடனே ஒரு மெல்லிய திரை கண்ணாடிக்கு பின்னிருந்து விலகியது. கண்ணாடி அறை மேலும் பிரகாசமானது. அந்தக் குற்றவாளி இப்போது அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

கண்ணாடி அறையிலிருந்த அதிகாரி பார்வையாளர்கள் அறைக்கு வந்து அகிலாவின் பெயரை அழைத்தார்.

“நீங்க அந்த டாக்குமெண்ட கொடுங்க” என்றவர் அவளை ஒரு முறை பார்த்தபின் தொடர்ந்தார்.

“சரி, இந்த டாக்குமெண்ட் பாருங்க” என்றார்.

அதில் இருந்த வலியின் அளவு தொடர்பான தகவல்கள் தவறாக இருந்தன.

“இது.. இது என்னது” என்று அகிலா பதறினாள். ஒரு நொடி அவள் கண்கள் இருண்டு போக அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

அந்த இரு ஆவணங்களிலும் அகிலாவின் தந்தை இறக்கும்போது அவர் உணர்ந்த வலியின் அளவு குறிப்பிடப்பட்டிருந்தது. இறந்த ஒருவரின் தசைகளிலும் நரம்புகளிலும் இருந்த கடைசி இறுக்கம், இரத்தத்தின் சூடு, முகத்தசைகளின் அளவு, கருவிழித்திரையின் அளவு ஆகியவற்றிலிருந்து அவர்களுக்கு ஏற்பட்ட வலியின் அளவைத் துல்லியமாக நிர்ணயிக்கும் கருவிகள் அதை எளிதில் கணித்தன. நலன் பெருமாள் கண்டுபிடித்த அந்தக் கருவியில் அளக்கப்படும் வலியின் அளவுக்கு அவர் பெயரே சூட்டப்பட்டது.

அவளிடம் இருந்த ஆவணத்தில் வலியின் அளவு 32 நலன்கள் என்றிருக்க அதிகாரியின் ஆவணத்தில் 100 நலன்கள் என்றிருந்தது.

“இது… இது இத எப்ப மாத்துனீங்க?”

“இந்த மெஷினைப் புதுசா கேலிப்ரேட் பண்ணும்போது இந்த வலி அளவ மாத்தச் சொல்லி தீர்ப்பு வந்தது. அதனாலதான்…..”

அகிலா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நொறுங்கி உடைந்து அழத் தொடங்கினாள்.

மருத்துவர்கள் நோயாளிகளின் வலி அளவுகளைச் சரியாகப் புரிந்துகொள்ளப் பயன்படுத்தப்பட்ட இந்த சாதனத்தை ஒரு குறிப்பிட்ட கொலைக் குற்றத்தில் ஒரு கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது அவருடைய வலி அளவை அறிய இந்தக் கருவி பயன்படுத்தப்பட வேண்டுமென்ற தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே பெரும் வலியில் இருந்ததால் அவருக்கு வலியற்ற முறையில் மரண தண்டனையை நிறைவேற்றக் கோரி அவர் குடும்பத்தார் தொடுத்த வழக்கில் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் அது நிரந்தரமாக மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான நெறிமுறைகளில் சேர்க்கப்பட்டது.

பிறகு இந்த நிலை மாறி குற்றவாளியின் வலி அளவுகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல், இறந்தவரின் வலி அளவுகளோடு ஒப்பிட்டு வழங்கப்படும் தண்டனையே சரியானது என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டுப் பல வருட விவாதங்களுக்குப் பிறகு நடைமுறையாக்கப்பட்டது. இந்த வழிமுறை இறந்தவர் அனுபவித்த வலியைக் குற்றவாளியும் அனுபவிக்க வேண்டுமென்ற துன்பியல் சார்ந்த வேட்கையை ஊக்குவிப்பதாகப் பல ஆராய்ச்சியாளர்களும் மனநல ஆய்வாளர்களும் எச்சரித்த போதும் நீதிமன்றம் அதை விளக்கிக்கொள்ளவில்லை.

கொலையாளிகள் தாங்கள் அடுத்தவருக்குக் கொடுத்த வலியின் அளவை அறிந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் நிம்மதியையும் உடல் நலத்தையும் இழக்கத் தொடங்கினர். குற்ற உணர்ச்சி பெருக்கெடுத்தும் வலியின் தன்மையை நினைத்தும் பல நேரங்களில் அவர்கள் உடல்நிலை சீர்குலைந்தது. சில நேரங்களில் குற்றவாளியின் உடல்நிலையைக் கருதி அந்த வலியின் அளவு அவர்களுக்குத் தெரிவிக்கப்படமாட்டாது. இந்த முடிவைப் பாதிக்கப்பட்டவரின் குடும்பம் எடுக்க இயலும் – மரண தண்டனை முறையில் உள்ள சிறு கருணையின் வெளிப்பாடாகவும் இது அறியப்பட்டது.

தன் தந்தையின் வலி அளவு குறைவாகவே இருந்ததால், அகிலா எப்போதாவது அதை நினைத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வாள். அப்பா இறந்தபின் சோகமும் தனிமையும் கோபமும் ஆட்கொண்ட போதும் அந்த மரணம் அவருக்கு வலியில்லாததாக இருந்ததென்று நினைத்திருந்தாள். ஆனால் இப்போது அவள் கைகளில் இருந்த புதிய தகவல் அவள் நம்பிக்கையைப் பொய்யாக்கியது. அவளுடைய அழுகையைப் பார்த்தவுடன் குற்றவாளியின் பிள்ளைகளும் அவளருகே வந்து அந்த ஆவணங்களைப் பார்த்தனர். பின்னர் இருவரும் கடைசியாக ஒரு முறை அவரைக் கண்ணாடி வழியாக உற்று நோக்கினர். குற்றவாளி அவர்கள் இருவரையும் பார்த்து லேசாகப் புன்னகைத்தார். ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்பது போல் கண்களைச் சிமிட்டி தலையைச் சாய்த்து அவர்களைப் போகச் சொன்னார். பிள்ளைகளுக்கு என்ன நடக்கிறது என்பது புரிந்தது. அவர்கள் இருவரும் சில நொடிகள் அங்கேயே நின்றுவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினர். அகிலா அவர்களைத் தொடர்ந்து சென்று பார்த்தபோது அக்காவின் தோளைத் தாங்கிப்பிடித்தபடி தம்பி நடக்க, இருவரும் அந்தக் கட்டிடத்தை விட்டு வேகமாக வெளியே சென்று கொண்டிருந்தனர். இதற்கு என்ன அர்த்தம்? இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

கலங்கி இருந்த அகிலாவிடம் அதிகாரி – “நீங்க விருப்பப்பட்டா 100 நலன்கள் அளவுக்கு அவருக்கு மருந்து செலுத்திடலாம்” என்றார்.

‘செலுத்திக் கொன்றுவிடலாம்’ என்று சொல்லி முடிப்பார் என எதிர்பார்த்தாள். எல்லோரும் கவனமாக அந்த வார்த்தையைத் தவிர்த்துக்கொண்டு இருந்தனர்.

அகிலா பெருங்கோபம் தெரிக்க, “ஒருவேளை இதுவும் கம்மியா இருக்குன்னு அப்புறம் தெரிய வந்தா என்ன பண்ணுவீங்க?” என்றாள்.

“என்னை என்ன செய்யச் சொல்றீங்க?”

ஓர் ஓரத்தில் அமர்ந்து கண்ணை மூடினாள். கண்ணாடி வழியாக அந்தக் கொலையாளி அவளை நேராகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் அவளுடைய கோபம் இன்னும் பெருகியது. தன் தந்தை தாங்க முடியாத ஒரு வலியுடன் இறந்திருக்கிறார் என்பதை அவளால் நினைத்துக்கூடப் பார்க்க இயலவில்லை.

“உங்ககிட்ட ஒரு ஆப்ஷன் இருக்கு. உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்” என்றார் நிர்வாகி. அகிலா தன் இரு கைகளையும் தலையில் வைத்துக்கொண்டு அமர்ந்தாள். இந்த விவகாரங்கள் வெகுநேரம் எடுத்துக்கொள்ளவே அந்த அறையிலிருந்து ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருந்தனர். அகிலா தனக்குச் சிறிது அவகாசம் தேவை என்று கேட்க, அருகிலுள்ள ஒரு கூடத்தில் வேறு ஒரு பிரபல வழக்கு தொடர்பான தண்டனை நிறைவேற்றப்படுவதாக அறிவிப்புகள் வந்ததையடுத்துப் பத்திரிக்கையாளர்களும் பலரும் அந்தக் கூடத்திற்குச் சென்றனர்.

இந்த அறையின் கதவுகள் அடைக்கப்பட்டு அகிலாவும் குற்றவாளியும் நிர்வாகியும் மட்டுமே இருந்தனர். குற்றவாளியின் முகத்தில் சன்னமான ஓர் அமைதி பரவியிருந்தது.

“சரி அந்த ஃபார்ம் குடுங்க” என்றாள். அதிகாரி கண்ணீர்த் துளிகள் தேங்கிய அவள் கண்களை ஒரு நொடி பார்த்துவிட்டுப் பின் அவர் கையில் இருந்த படிவத்தைக் கொடுத்தார். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு (60 நலன்களுக்கு) மேல் வலி ஆவணப்படுத்தப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் எவரேனும் ஒருவர் தாங்களே அந்தத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு அந்தப் படிவம் அனுமதி வழங்கும். அகிலா அதில் அவசரமாகக் கையெழுத்திட்டாள்.

குற்றவாளியின் நாற்காலியுடன் ஒரு கருவியில் குழாய் வடிவிலான கலன்களும் ஊசியும் சேர்த்து அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர் அறையை விட்டு நிர்வாகி வெளியே செல்ல அகிலாவும் கண்ணாடி அறையை நோக்கிச் சென்றாள். அந்தப் பத்தடி தூரம் அவள் வருடக் கணக்கில் சேர்த்து வைத்திருந்த வலிகளின் தொகுப்பைவிட நீளமானதாகவும் கொடுமையானதாகவும் தோன்றியது. ஆனாலும் இதை முடித்தாக வேண்டுமென்ற எண்ணமும் ஓங்கி நின்றது.

அந்தக் கண்ணாடி அறைக்குள் நுழைந்தவுடன் நிர்வாகி விலகி நின்றார். அகிலா உள்ளே சென்று குற்றவாளியின் முகத்தை அருகிலிருந்து கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு முக்தி நிலையை அடைந்துவிட்டது போல அவர் அமைதியாக இருந்தார்.

“ஏன் முன்னாடியே சொல்லலை? இவ்ளோ கொடூரமான வலி அனுவிச்சிருக்காரு எங்க அப்பா! ஏன் இப்படி?” அவர் பதிலேதும் பேசவில்லை.

“எங்க அப்பா அனுபவிச்ச வலியைப் பத்தி நீங்க என்கிட்ட சொல்லி இருக்கலாமே. நான் கஷ்டப்படுறதப் பார்த்து இன்னும் நீங்க சந்தோசமா இருந்திருக்கலாமே? இத்தன நாள் எனக்கு இந்த நிம்மதிய எதுக்குக் கொடுத்தீங்க? எங்க அப்பா வலி இல்லாமதான் செத்தாருன்னு என்னை ஏன் நம்ப வெச்சீங்க?”

பேசிக்கொண்டிருந்த போதே அவருடைய சக்கர நாற்காலியில் பொருத்தப்பட்டிருந்த வலி அளக்கும் கருவி அவள் கண்ணில் பட்டது. அதில் வெள்ளை, இள மஞ்சள், மஞ்சள், சிவப்பு, அரக்கு என்ற பல நிலைகளும் அந்த நிலைகளைக் குறிக்கும் அளவுகளும் இருந்தன.

“உங்கள நான் இப்ப எப்படி கொல்லனும்? என் கையாலதான? அதுதான உங்களுக்கு வேணும்?”

அகிலாவைப் பார்த்த நிர்வாகி லேசாக நடுங்கிப் பின்னோக்கி நகர்ந்தார்.

“அவர் உங்களிடம் எதுவும் வாயைத் திறந்து பேச மாட்டார்” என்று நிர்வாகி அகிலாவிடம் கூறினார்.

அகிலாவின் கைகள் அந்தக் கருவியை நோக்கிச் சென்றன. நடுங்கும் கைகளைக் கொண்டு அந்த ஊசியை இயக்கினாள். குற்றவாளி கண்ணை மூடினார். அளவுகளை மேலும் அதிகரிக்காமல் கருவியின் மேல் கையை வைத்துக்கொண்டு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் எவ்வித சலனமும் இல்லை.

‘இப்படி ஒரு மரணத்தை ஒருவர் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்’ என்ற குழப்பம் அவளுக்குள் ஏற்பட்டது. அகிலா அந்தக் கருவியை மெதுவாக இயக்க சிறு அசௌகரியம் அவர் உடம்பில் பாய்ந்தது. அதை மேலும் இயக்க அவளிடம் எந்தத் தைரியமும் இல்லை. ஆனால் தன் தந்தையின் முகத்தை நினைவில் வைத்துக்கொண்டு மீண்டும் அதை இயக்கினாள். அப்பா துடிதுடித்து இறந்தபோது எவ்வளவு நேரம் அந்த வலியை அனுபவித்திருப்பார்? அந்தக் கருவியை இயக்கும் போது வேறு எந்த நினைவுக்கும் அவள் இடம் கொடுக்கவில்லை.

மருந்து உடம்பில் ஏற அவர் பெரும் வலியை உணர ஆரம்பித்தார். தாடையும் கன்னங்களும் இறுகிப் புடைத்தன. கருவியில் அளவு கிட்டத்தட்ட 95 நலன்கள் அடைந்தும்கூட அவள் விரல்கள் அந்தக் கருவியிலிருந்து விடுபடவில்லை. பின்பு கனத்த கண்களுடன் எழுந்து நின்றாள்.

நிர்வாகி பேச்சு மூச்சற்று நின்றுகொண்டிருந்தார். குற்றவாளியின் உடல் அவருடைய உயிரை விடுவித்திருந்தது அவர் கண்கள் அகண்று விரிந்திருக்க அதில் ஏதோ ஒரு நிம்மதி தெரிவது போல் இருந்தது. அகிலா அவருடைய முகத்தைப் பார்த்தபோது கழுத்தும் தாடையும் பெரும் வலியை உணர்ந்ததற்கான சுவடுகளை வெளிக்காட்டின.

அகிலா நிர்வாகியைப் பார்த்தாள். இறந்தவரின் முகம் தன் அப்பாவின் வலி அளவை ஒத்திருக்கவில்லை. அவர் முகம் முற்றிலுமாக மாறிவிட்டிருந்தது. அப்பா 100 நலன்கள் அனுபவித்திருக்க வாய்ப்பு இல்லை என்று அவளுக்குத் தோன்றியது. அவருடைய முகம் அவளுக்கு இன்றும் தெளிவாக நினைவில் இருக்கிறது. அவரைவிட இன்னும் அதிக வலியை இந்தக் குற்றவாளி அனுபவித்திருப்பதாக அவளுக்குத் தோன்ற, பெரும் குற்ற உணர்வு பூஞ்சை போல அவள் மனதை நிறைத்துக்கொண்டது.

“இந்த… இந்த வலி அளவு தப்புதானே? சொல்லுங்க? எங்க அப்பா 100 நலன்கள் வலியை அனுபவிச்சாரா? இவர் முகம் ஏன் வேற மாதிரி இருக்கு? எங்க அப்பா முகம் எப்படி இல்லையே! இவ்வளவு காயங்கள் இல்லையே!”

நிர்வாகி இதை எதிர்பார்க்கவில்லை. அவள் தந்தையின் முகத்தில் இருந்த சிறு உணர்வையும் அவற்றுக்குப் பின்னாலிருந்த வலியையும் அகிலா அறிந்து வைத்திருந்திருந்தாள்.

“இல்லை… நீங்க ஏதோ ஒரு குழப்பத்துல இருக்கீங்க. இந்த அளவு சரிதான்,” என்று எப்படியோ அவளைச் சமாளித்துவிட்டதாக நினைத்தார்.

அகிலாவுக்கு அதிகாரியின் பதிலில் நம்பிக்கை இல்லை. கொலையாளியின் முகத்தில் இருந்த நிம்மதியும், அதிகாரியின் தயக்கமும் இவளுடைய சந்தேகங்களை உண்மையாக்கின. இது அவருடைய முடிவு. இந்த வலி அவர் தேர்ந்தெடுத்தது. முன்பொருமுறை அவரைச் சந்தித்தபோது அவரிடம் இருந்த குற்ற உணர்வும் பயமும் இப்போது இறப்பதற்கு முன் கடைசியாக அவளைப் பார்த்த அந்தப் பார்வைக்குமான அர்த்தமும் நிறைவும் அவளுக்கு விளங்கியது.

குற்றவாளியின் கைகளைப் பற்றிக்கொண்டு தனக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் சேர்த்து “அப்பா” என்று அலறி அழத் தொடங்கினாள். கொலையாளி என்ற நிலையிலிருந்து அவரை விடுவித்துவிட்டு, இப்போது தான் கொலையாளி ஆகியிருப்பதை உணர்ந்தாள்.

***

“அசோக்”

“சொல்லுங்க மனோகர் சார்”

“ஹ்ம்ம்… ஒன்னும் இல்ல. இன்னும் எத்தன நாள் இருக்கு?”

“…”

“பரவயில்ல… சொல்லுங்க”

“நாலு மாசம் சார்”

“ஓ… சரி”

“……”

“எனக்கு ஒரே ஒரு ஆசை தான்”

“என்ன சார்”

“எனக்கு இந்த சாவு பத்தாது அஷோக்”

“,,,,,”

“வண்டியில போகும்போது தெரியாம அவரு என்ன இடிச்சாரு. நான் அவர அடிச்சேன். கீழே விழுந்து அவருக்கு அடிபட்டது. ஏதோ ஒரு வேகத்துலதான் ஒரு அடி அடிச்சுட்டேன். அடிச்ச அந்த நொடியில் அவருடைய இதயம் நின்னு போச்சுனு டாக்டர் சொன்னாரு. நான் ஒன்னும் அவ்வளவு பலசாலி இல்லையே! எனக்கு ரொம்ப நாள் இது புரியவே இல்ல”

“ஹ்ம்ம்”

“என்னுடைய கோவத்த இன்னொருத்தர் மேலக் காட்டி அவருடைய வாழ்க்கையை நாசமாக்கிட்டேன். அவருக்கு ஏற்கனவே இதய நோய் இருந்திருக்கு. நான் அடிச்ச உடனே அவருடைய உயிர் போயிருச்சு. அந்தப் பொண்ணோட முகத்தைப் பாக்கும் போதெல்லாம்….” என்று விசும்பி அழத் தொடங்கினார்.

“சார்… விடுங்க சார்.. அழாதீங்க.. எனக்கு தெரியும் சார். நீங்க சொல்லி இருக்கீங்க”

“நான் உன்கிட்ட ஒன்னு நான் கேட்பேன். அந்தப் பொண்ணுதான் என் மரணத்தை நிறைவேற்றணும். அவள் அப்பா அனுபவித்ததைவிட மூன்று மடங்கு அதிக வலியை நான் அனுபவிக்கனும்”

“சார், அப்படி செய்ய முடியாது”

“அசோக்! குறைக்கத்தான் கூடாது கூட்டலாம் இல்லையா? ஏதாவது ஒரு காரணத்த எழுதுங்க. அதிக வலி கொடுத்தா நான் சீக்கிரம் போயிடுவேன்னு… கொஞ்சமா வலி கொடுத்தா ரொம்ப நேரம் அந்த அவஸ்தைய என் உடம்பு தாங்காது.. அந்த மாதிரி ஏதாவது. இது என்னோட சொந்த விருப்பம்”

“….”

“உங்ககிட்ட கேட்கிறதெல்லாம் இது ஒன்னுதான். மூணு மடங்கு வலி. ஒன்னு எனக்காகவும் என் பிள்ளைகளுக்காகவும்… ஒன்னு அவருக்காக… இன்னொன்னு எந்த பொண்ணுக்காக. இதுதான் என்னால முடிஞ்சது.”

சில நொடிகள் மௌனத்திற்குப் பிறகு அஷோக்கைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“இதை எழுதிக் குடுங்க, பிளீஸ். நான் கையெழுத்து போடுறேன். என் பசங்க கிட்டயும் இதச் சொல்லி இருக்கேன். பிற்காலத்துல அந்தப் பொண்ணுக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது.”

***

மனோகர் சொன்ன அனைத்தையும் அதிகாரி மனதில் அசை போட்டுக்கொண்டிருந்தார். அகிலா தன் கண்ணீர் உலர்ந்த கண்களுடன் “மனோகர் சார். என்ன மன்னிச்சிடுங்க,” என்று தனக்குள் பேசிக்கொண்டே அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியேறினாள். அப்போது வீசிய காற்று தன் பெருமூச்சைவிடப் பல மடங்கு வலி நிரம்பியதாகவும் வானுயர்ந்த அந்த மதில்களை விட்டு வெளியேற முடியாமல் தவித்துக்கொண்டிருப்பதாகவும் அவளுக்குத் தோன்றியது.

அந்தப் பெருங்கதவைத் திறந்து அவள் வெளியேற ஓர் இழப்பிற்காக அதைவிடப் பலமடங்கு அதிக வலியைச் சுமந்துகொண்டு அந்தக் கட்டிடத்தை விட்டு அவளைப்போலப் பல உயிர்கள் அங்கிருந்து வெளியேறின.


புகைப்படம்: விஸ்வநாதன்

மேலும் படிக்க

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:

குறிப்பிடத்தகுந்த கதைகள்:

முரளிதரன்

முரளிதரன் சென்னையைச் சேர்ந்தவர். மின்னணு மற்றும் கருவி மயமாக்கலில் இளங்கலைப் பட்டமும், ஆங்கிலத்திலும் மானுடவியலிலும் முதுகலைப் பட்டமும் பெற்றவர். முழு நேரமாக, மின்வழிக் கற்றல் துறையில் பாடங்களை வடிவமைத்துக் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புனைவுகள் எழுதுவதோடு மொழிப்பெயர்ப்பும் செய்து வருகிறார். நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் துணையுரைகள் (subtitles) எழுதியுள்ளார். 'அரூ அறிவியல் சிறுகதைகள் 2020' தொகுப்பில் இவர் எழுதிய 'மின்னு' சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.

Share
Published by
முரளிதரன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

1 year ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

1 year ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

1 year ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

1 year ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

1 year ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

1 year ago