நியுவெல்-சைமன் ஆராய்ச்சிக் கழகத்தில் நான் முதலாம் ஆண்டு முனைவர் பட்ட மாணவராக இருந்தபோதுதான் நான் முதல்முதலாக கும்பக் கோட்பாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.
முதல்நாள் வகுப்பில் என்னுடைய ஆசிரியர் புரெஃபசர் ராத் அரைவட்ட வகுப்பறைக்குள் தன்னுடைய சக்கரநாற்காலியில் வேகமாக உருண்டு வந்து அறையின் மத்தியில் ஒரு சுழல் சுற்றிச் சறுக்கென்று நின்றார். அவருக்கு இவ்வகை வித்தைகள் பிடிக்கும்.
அறையைச் சுற்றி ஒரு முறை பார்த்தார். “அடுத்த ஐந்து நிமிடங்களில் உங்கள் தொடுதிரைகளில் ஒரு ரோபாட்டை வரையுங்கள்,” என்று ஆணையிட்டார்.
நாங்கள் வேகமாக வரைந்த படங்களை முடிக்க முடிக்க அவருடைய தொடுதிரைக்கு அனுப்ப அவற்றை ஒவ்வொன்றாக அவர் தனக்குப் பின்னால் தொங்கிய பெரிய திரையில் பளீரிட விட்டார்.
கடைசிப் படத்தையும் அனைவருக்கும் போட்டுக் காட்டிய பிறகு, “உங்கள் ‘பாட்டுகள் அனைத்திலும் ஓர் அடிப்படையான குறையுள்ளது,” என்றார்.
நாங்கள் பேசாமல் அவரைப் பார்த்தோம்.
“மண்டையும் முகமும் கைகளும் சரி. கண்களும் காதுகளும் சரி. சிலர் தோல் போன்ற அமைப்புகள்கூடத் திட்டமிட்டிருந்தீர்கள். எல்லாம் சரி. அவை ரோபாட்டுகளுக்கு இருக்கலாம்,” அறையைச் சுற்றி நோக்கினார். “ஆனால் இருக்கவேண்டுமென்று அவசியமில்லை.”
“கால்கள்?” என்றாள் மாதவி. அப்போதுதான் நான் அவளை முதன்முறை பார்த்தேன்.
வலதுபுறக் கண்ணாடிக் கண்ணை மட்டும் அவள் பக்கம் திருப்பினார் புரொஃபெசர் ராத். “நல்ல கேள்வி. மாணவர்களே, இதை ஒரு பொன் விதியென்று வைத்துக்கொள்ளுங்கள். எந்த ரோபாட்டுக்கும் மனிதனைப்போல் கால்களே இருக்கக்கூடாது,” என்றார். “ஏன்? சொல்லுங்கள் பார்ப்போம்?”
மாதவி மீண்டும், “மனிதக் காலின் அசைவுகளை மென்பொருளில் சரியாகச் செயல்படுத்த மிகக்கடினமான கணக்குகளை உருவாக்க வேண்டும்,” என்றாள்.
“பிறகு?”
“உலோகக் கால்களுக்கு வேகம் கூடாது. வேகத்தைக் கூட்ட வேண்டுமென்றால் வேறு மூலப்பொருள் வேண்டும்”
“ஆனால் அது நாம் வடிவமைக்கும் ரோபாட்டின் எடையையும் தாங்க வேண்டும்.”
“அது மட்டுமில்லை, காலில் அதிக வேகம் அமைப்போமென்றால் உள்ளே சூடு கூடிவிடும். அதைத் தணிக்க வழி உருவாக்க வேண்டும். சூடு தணியும்போது வேகமும் குறையும். சீர் வேகத்தை நிலைநாட்டுவது கடினம்”
புரொஃபெசர் ராத் சொன்னார். “எல்லாம் சரிதான். ஆனால் நீங்கள் உங்கள் ‘பாட்டுகளை வரையும்போது இதையேதும் சிந்தித்துப் பார்க்கவில்லை,” என்றார். “ஏன்?”
நாங்கள் பேசாமல் இருந்தோம்.
ராத் கண்களால் சுற்றிச்சுற்றி எங்களைப் பார்த்தார். நான் மனமில்லாமல், “ஏனென்றால் நாங்கள் எங்களைப் போலவே அதை வடிவமைக்க நினைத்தோம்,” என்றேன்.
ராத் புன்னகைத்தார். “அதுகூடப் பாதிப் பதில்தான்,” என்றார். “நீங்கள் உங்களைப்போல உங்கள் உருவாக்கத்தை வடிவமைக்க நினைத்ததில் தவறில்லை. ஆனால் நீங்கள் வெறும் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே நகலெடுத்தீர்கள். உங்களுக்குக் கற்பனை போதவில்லை.”
அவர் மீண்டும் அறையைச் சுற்றிப் பார்த்தார். “ஒன்றை உருவாக்க அதன் சாரமென்ன என்றுதான் நீங்கள் நோக்க வேண்டும். ப்ளாட்டோ சொன்ன ஐடியல். ஒரு பொருளின் எச்சென்ஸ். அதை அந்தப் பொருளாக மட்டுமாக, பிரிதொன்றென்றில்லாமல் ஆக்கும் அம்சம். நீங்கள் நகலெடுக்க வேண்டியது அதைத்தான். சரி, கால்களின் சாரம் என்ன?”
“நகர்தல்,” என்றோம் நாங்கள்.
அவர் தான் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியை நோக்கிக் கைகாட்டிப் புன்னகைத்தார். “இவை என் கால்கள்,” என்றார். “ஆனால் இதை இன்னும் எளிமையாக்கலாம்.” அவர் வகுப்புத் திரையில் ஒரு பெரிய உருண்ட கோளத்தை வரைந்தார்.
“ஒரு ‘பாட்டுக்கு இதைத் தவிரக் கால்கள் வேறு தேவையில்லை. எல்லா திசைகளிலும் உருளக்கூடியது. உராய்வு விசை மிகக் கம்மியானது. வேகத்தைத் தேவைக்கேற்றாற்போல் கூட்டலாம், குறைக்கலாம். எந்த மூலப்பொருளிலும் செய்யலாம். ‘பாட்டின் மொத்த எடையைத் தாங்கும்படிச் செய்யலாம். இந்தக் கோளத்தைத்தான் ‘கும்பம்’ என்கிறோம்.”
பன்னிரண்டு ராசிகளில் பதினோராம் ராசியான அக்வேரியஸ் என்ற கும்பத்தின் படத்தை வரைந்தார். தண்ணீர் தளும்பும் பெரிய கலசம்.
அதனருகே அதன் குறிச்சின்னத்தை வரைந்தார். இரட்டை நெளி நீர்க் கோலம்.
“ரோபாட்டுகளின் நகர்தலை வகுக்க ஒரு கோட்பாடாக உருவாக்கப்பட்ட கும்பம், நாளடைவில் ரோபாட்டுகளின் இயக்கத்துக்கே ஒரு குறியீடுபோல் ஆனது,” என்றார். “இன்று ரோபாட்டிக்ஸில் ‘கும்பம்’ என்பது ஓர் அடிப்படை விதியாகவே சொல்லலாம்.”
அவ்வாறுதான் நான் கும்பத்தின் மூன்று விதிகளைக் கற்றுக்கொண்டேன்.
நகர்தல், பொருந்துதல், தாங்குதல்.
வேகம், நெகிழ்வு, வல்லமை.
நான் அந்தக் கோட்பாடுகளை என் மனதில் அவ்வாறே நிறுத்திக்கொண்டேன்.
இன்று காலை காயசாலையில் என் கையில் நர்ஸிங்பாட் ஒரு சிறு கலசத்தை வைத்தபோது இவ்வார்த்தைகள் என் மனதிற்குள் சுற்றிச்சுற்றி ஓடிக்கொண்டேயிருந்தன. வேகம், நெகிழ்வு, வல்லமை.
‘பாட் என்னிடம் மிகக் கனிவாகப் பேசியது. எத்தனை பெரிய போராட்டம், என்றது. அவளைப்போல அழகான, பொறுமைசாலியான, மிருதுவான ஜீவனை நாங்கள் கண்டதில்லை, அவள் இல்லாத இடத்தை யாரும் நிரப்ப முடியாது, என்றது. ஆனால் பேசிக்கொண்டே அது அறைக்குள் எங்கள் கவனம் சிதறாத வகையில் வேகமாக உருண்டு செய்ய வேண்டியவற்றைச் செய்தது. உங்கள் இழப்புக்கு ஈடில்லை, என்றது. இருந்தாலும் அவர் ஆசைப்பட்டார். தனக்கு ஒருவேளை இப்படி ஆக நேருமென்றால் இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னார். எடுத்துக்கொள்ளுங்கள்.
அவளுடைய அஸ்தி நிரம்பிய கலசத்தை இரு கைகளிலும் பிச்சையெடுக்கும் பாத்திரம்போல அபத்தமாகப் பிடித்துக்கொண்டு நான் காயசாலையிலிருந்து வெளியேறினேன்.
நேற்றுவரைகூடத் தேறிக்கொண்டிருந்ததாக, மெல்ல மெல்ல வலுக்கூடுவதாகத்தான் சொன்னார்கள். மாலையில் அவளிடம் பேசினேன். ஆனால் இரவு ஏமாற்றிவிட்டது.
“பால் கட்டியிருக்கிறது,” என்று வலதுபக்கம் கைகாட்டிச் சொல்லியிருக்கிறாள். தெளிந்து தெளிந்து மயக்கத்துக்குள் புகுந்திருக்கிறாள்.
திடீரென்று விழித்து பெரிதாக அலறியிருக்கிறாள். செவிலி வேகமாக உருண்டு வர, “எரிகிறது! பால் நெருப்பாக எரிகிறது! தயவு செய்து கசக்கி எடுங்கள்,” என்று அவள் கையைப் பிடுங்கித் தன் நெஞ்சில் அழுத்திக் கெஞ்சியிருக்கிறாள்.
செவிலியும் “இதோ, மருத்துவர் வந்துவிடுவார், எடுத்துவிடுகிறோம்,” என்று ஆதுரமாய்ச் சொல்லியிருக்கிறது.
ஆனால் மருத்துவர் வருவதற்குள் அவள் மூச்சு அடங்கியது.
பால் கட்ட அங்கே அவளுக்கு முலை இல்லை, என்று செவிலி இயந்திரம் அவளிடம் சொல்லவில்லை.
அந்த இங்கிதம் இரண்டாம் விதியில் அடங்கிவிடும். நெகிழ்வு.
ஓர் உருப்பு மட்டும் குறைந்த உடலின் அஸ்தி. நான் என் கையில் சற்று தூரமாய்ப் பிடித்துக்கொண்டிருந்த கலத்தை ஒரு கணம் பார்த்தேன். அவள் உடல் அதில் இருக்கிறதென்றால் நான் யாருக்குக் கணவன்? இல்லை, இனிமேல் நான் கணவன் இல்லை. மாதவி இல்லை. அவள் உடல் இதில் இருக்கிறது. உடல் இல்லாமல் நான் கணவனாக இருக்க முடியாதா என்ன? அப்படியென்றால் உடலுக்குத்தான் நான் கணவனா?
பின்னிரவில் என் மேல் கைபோட்டு அணைத்து உறங்கும்போது அவள் வலப்பக்க முலை என் கழுத்துக்கடியில் வந்து அமையும். ஓரப்பார்வை பார்ப்பதுபோல் பெரிய கண்ணுடன் இருக்கும். சற்றே முகத்தைத் தூக்கி அதன் மீது ஒரு முத்தத்தை நான் பதிப்பேன். அவள் இலேசாக விழித்துக்கொள்வாள். “இது யாருடையது?” என்று அவள் காதில் கேட்பேன். குரல்சொக்கி, “உன்னுடையது,” என்று அவள் சொல்வாள். அவளுடைய சரண் பாவனை என்னைக் கிளர்த்தும். மீண்டும் முத்தமிடுவேன், அவளை ஆவேசமாக அணைப்பேன். சதைக்கட்டை மீறி உட்புகுந்துவிடலாம் என்பதுபோல் அவள் தன் உடலை என்னில் அழுத்துவாள். நான் என் முகத்தை அவள் நெஞ்சுக்குழியின் இருட்டுக்குள் புகுத்தி “என்னுடையது, என்னுடையது,” என்று அந்த உருப்பை மூச்சு திணறுவது வரை முத்தமிடுவேன்.
ஆனால் இனி அது என்னுடையதல்ல. அவளுடையதுமல்ல. சாகாவரம் பெற்ற அந்த பூதம் முதலில் அதைக் கொண்டுபோனது. இப்போது அவளையும் கொண்டுபோனது.
பூதம் பிடித்தபோது அதிலிருந்து அவளுக்குப் பால் பெருத்துப் பெருத்து வந்தது. குழந்தை பிறந்தபோது அந்த ஒரு முலையின் பாலே அதன் தேவைகளையெல்லாம் தீர்த்தது. அதை மீறியும் பொங்கியது. அவள் உடலையெல்லாம் வெண்தீற்றல்களாக நிறைத்தது. அதில் எந்நேரமும் நெய்பாயசத்தின் மணம். அப்படித்தான் பூதம் பிடித்ததை அறிந்தோம். அந்த உருப்பு வெட்டப்பட்டேயாகவேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். சிகிச்சை முடிந்து இரண்டு வாரங்கள்தான் ஆகின்றன. இறந்துவிட்டாள்.
அதுதான் ஒரு காணிக்கை கொடுத்தேனே? ஏன் அந்த பூதம் அவளை மொத்தமாகக் கொண்டுபோயிற்று? கலத்தை எட்டிப்பிடித்த என் கைகள் நடுங்கின. ஆம். சிவன் தாட்சாயணியை வெட்டியது போல நானும் அவள் மொத்த உடலைத் துண்டு துண்டு துண்டாக வெட்டி ரௌத்திரவெறியோடு பேரோலமிட்டு ஆடி ஆடி அதை நிலத்திலெங்கும் தூக்கியெறிந்துவிட்டுப் பஸ்மமாகிச் சாகவேண்டும்! ஆம், சாகவேண்டும்.
ஆனால் என் கையில் பலவீனமாகத் துவண்டு கிடப்பது அந்தக் கலம் மட்டும்தான். இனி நான் கணவன் இல்லை. என் ஒரு வயது மகளுக்கு நான் அப்பா. அது மட்டும்தான். என் பாதை சென்று சேரும் இலக்கு ஒன்றுதான். அப்பாவாக, அமைதியாக, மறுபேச்சில்லாமல், வீட்டை நோக்கித்தான் நான் சென்றாக வேண்டும்.
வேகம், நெகிழ்வு, வல்லமை.
நான் வீட்டுக்குள் நுழைந்தபோது குழந்தை தூங்கிக்கொண்டிருந்தாள்.
அம்மாவின் கரங்களை ஒழிந்து வாரங்கள் ஆனாலும் அது இன்னமும் அவளுக்காக ஏங்கிக்கொண்டு தூக்கத்தில் துழாவும். அவள் பழைய உடுப்புகளை நுகர்ந்தால் அழும். ‘ம்ம்மா’ என்று மழலையில் கத்தும். அந்த மந்திரத்தைச் சொன்னால் அவளை உருவகித்துவிடலாம் என்பது போல்.
எனக்கு நெஞ்சு உடைந்தது. குட்டி, உன் அம்மா வந்துவிட்டாள், இதோ இந்தக் கலத்தில் இருக்கிறாள் பார், என்று கதறவேண்டும் போல் இருந்தது.
எத்தனை பெரிய அநீதி! என்னைத் தனியாகவிட்டாள். மகளையும் ஏன் அவள் தனியாக விட வேண்டும்? குளிர்ப்பெட்டியில் முட்ட முட்ட அவள் சுரந்த பால் புட்டிபுட்டியாகக் காத்திருக்கிறது, அவள் வயிற்றை நிரப்ப. ஆனால் அதனைப் புகட்ட மட்டும் அம்மா வரமாட்டாள். அவள் தலையைக் கோத, முதுகைத் தடவ, கைகளால் தோள்களால் அணைக்க, அம்மா வரமாட்டாள். அந்த அநீதியை நினைக்க நினைக்க எனக்குக் கண்ணீர் பொங்கியது. உதட்டை இறுக்கினாலும் மீறி வழிந்து வழிந்து உப்பு கரித்தது.
குழந்தையைக் காக்கும் செயலி என்னைக் கண்டதும் சின்னப் புன்னகையுடன் தலையசைத்து உள்ளே மெதுவாக உருண்டு போனது.
அது தடமேயில்லாமல் உருண்டுபோன திசையைப் பார்த்துக்கொண்டு நான் சற்றுநேரம் அப்படியே நின்றேன்.
“மனிதன் ஏன் ரோபாட்டுகளைக் கண்டுபிடித்தான் என்று தெரியுமா?” அவள் என்னை ஒருமுறை குறும்புப் புன்னகையுடன் கேட்டாள். “எனக்கு ஒரு தீஸிஸ் இருக்கிறது.”
“சொல்,” தாராளமான புன்னகையுடன் நான் சாய்ந்துகொண்டு கேட்கலானேன். அவள் எப்போதாவது தன்னை மறந்து இப்படி சுவாரஸ்யமாக எதையாவது பேசத்தொடங்குவாள். அதை நான் மிகவும் ரசித்தேன்.
“அம்மாக்கள் வேலைக்குப் போக ஆரம்பித்ததும் ஆண்களுக்கு இன்னொரு அம்மா தேவைப்பட்டதா? ரோபாட்டுகளைக் கண்டுப்பிடித்துவிட்டார்கள்,” என்றாள்.
“அத்தனை எளிமையானதா?”
“யோசித்துப்பார்? ரோபாட்டுகள் செய்வதெல்லாம் என்ன? அமைத்தல், பராமரித்தல், பாதுகாத்தல். அந்தக் காலத்தில் எல்லாம் பெண்களின் வேலைகளைத்தானே?”
“தொழிற்சாலைகளில்? ஆய்வுக்கூடங்களில்?”
“பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொழில்வரலாற்றைப் போய் எடுத்துப்பார். இன்று ரோபாட்டுகள் அங்குச் செய்யும் அனைத்து வேலைகளையும் ஆரம்பத்தில் பெண்கள்தான் கூட்டம் கூட்டமாக நகரங்களுக்கு வந்து செய்தார்கள்.”
நான் அவளைப் பார்த்தேன்.
“கும்பவிதிகளின் படி உருவாக்கப்பட்ட முதல் ரோபாட் எதற்காகப் பயன்படுத்தப்பட்டதென்று தெரியுமல்லவா?”
நான் அசூயையில் உதட்டைச் சுழித்தேன். “மனிதன் ஓர் அற்பப் பிறவி. எல்லா தொழிற்நுட்பத்தையும் முதலில் அதற்குத்தான் பயன்படுத்தியிருக்கிறான்,” என்றேன்.
“அல்லது போருக்கு,” அவள் தோள்களைக் குலுக்கினாள். “அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. மனிதனுக்கு என்ன தேவை என்று அது காட்டுகிறது… கூடல், சண்டை, மீண்டும் கூடல். சாப்பிட்டுச் சாப்பிட்டு விளையாடுவதுபோல். ஆனால் அதிலும் ஒரு சுவாரஸ்ய விஷயம் தெரியுமா?”
“ம்?”
“அந்த ‘பாட்டுக்கு கால்களே கிடையாது.”
“பிறகு?”
“தொடைப்பகுதிக்குக் கீழே மொட்டைதான். வேறொன்றும் தேவையில்லையே? செக்ஸ் ரோபாட் என்ன எழுந்து நடமாடவா வேண்டும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்,” புன்னகைத்தாள்.
நான் அவள் உடல் அஸ்தியாகிவிட்ட கலத்தை மெதுவாக நடுமேசையின் மேல் வைத்தேன். வெண்கலத்தில் சிறு தாழி. மேலே சிவப்புத்துணியிட்டு மூடப்பட்டிருந்தது. ஒரு சின்னக் காற்று அதன் மூடிய வாயைச் சுற்றிச் சுழல்வது போல் ஒரு சின்னப் படபடப்பு இருப்பதாக எனக்குத் தோன்றியது. அது என் பிரமையாக இருக்கலாம்.
“செயற்கை அறிவாக மட்டும் மனிதனை எஞ்ச வைக்க முடியுமா என்று ஒரு திட்டம் இருபத்தோராம் நூற்றாண்டில் பரிசீலிக்கப்பட்டது,” அவள் மற்றொரு முறை சொன்னாள். “தட்ஸ் கம்ப்லீட்லி ஸ்டுபிட். உடல் இல்லாமல் வெறும் பிரக்ஞை மட்டும் எஞ்சினால் என்ன பயன்?”
“அது ஓர் இலட்சிய நிலை அல்லவா?” என்று நான் வேண்டுமென்றே தர்க்கம் செய்தேன். “இறப்பைத் தாண்டி, தூய அறிவாக அது நம்மை இங்கே நிலைக்க வைக்கும்”
“சரிதான். ஆனால் எல்லோரும் தூயப் பிரக்ஞைகளாகிவிட்டால் அப்புறம் அதற்கு யார் குற்றேவல் செய்வது? அவர்களுடைய ஏ.ஐ. மெயின்ஃபிரேம்களுக்குள் ஒரு ‘பக்’ புதுந்துவிட்டால் அவ்வளவுதான்,” அவள் சிரித்தாள். “அல்லது அந்த உலகில் புல் பூண்டு பூச்சிகள்கூட இருக்காதா?”
அஸ்தியிலும் புல் புழு பூச்சி முளைக்காது. அவள் தூயப் பிரக்ஞையாக இங்கு எங்காவது சுற்றிக்கொண்டிருக்கிறாளா? என்னைப்பார், என்னைப்பார், என்று தன்னை வெளிப்படுத்த முடியாமல் தவித்துத் தவித்து அது இந்த அறையில் திரைச்சீலைகளையும் தலைக்குமேலே சாண்டிலியர் படிகங்களையும் அசைத்தவாறு முணுமுணுத்துக்கொண்டே உலவுகிறாளா?
நான் பெருமூச்சு விட்டேன். இன்னும் சற்று நேரத்தில் குழந்தை எழுந்துவிடும். பசியில் அழும். “அம்மா,” என்று. பாலைச் சூடுபடுத்தி நான் கொடுக்கலாம். அம்மாவுக்கு நான் எங்கே போவேன்?
நான் உடல் சோர்ந்து சமையற்மேடைக்குச் சென்றேன். எனக்கு ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் பாலை ஊற்றிக்கொண்டிருக்கும்போது மேடைமேல் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறு வெண்ணிறத் தாள் உறையைக் கண்டேன். அதன் மேல் என் பெயர் எழுதப்பட்டிருந்தது.
நான் அந்த உறையை எடுத்துப்பார்த்தேன். உள்ளே, மென்மையான வெள்ளியில், நுண்மையாக வடிவமைக்கப்பட்ட சிறிய சாவி இருந்தது. கூடவே ஒரு குறிப்பு. “மாதவி அம்மையார் இதை ஒருவேளை தான் இல்லாமல் ஆனால் உங்களிடம் சேர்க்கச் சொன்னார்.” வீட்டுப் பராமரிப்புச் செயலியின் முத்திரை அதிலிருந்தது.
அது அவளுடைய ஆய்வறையின் சாவி என்று எனக்குத் தெரியும். வீட்டில் அவளுக்கென்று இருந்தது அந்த அறை. அங்கே நேரம் கிடைத்தபோது தன் சொந்தத் திட்டங்களை அமைத்துப் பரிசோதித்துப் பார்ப்பாள். அவள் என்னை அழைத்தாலன்றி நான் அங்கே போகும் வழக்கம் இல்லை.
ஆனால் இப்போது ஏன் என்னை அங்கே அழைத்திருக்கிறாள் என்று கணநேரத்தில் புரிந்துவிட்டது. காலில் தடுக்கி விழுந்து ஓடினேன். பலத்த ஓசையுடன் கதவைச் சுவரில் அறையத் திறந்தேன். “மாதவி!” என்று கூவினேன்.
அறை நடுவே வெறுந்தரையில் அது ஓசையில்லாமல் சீறாக உருண்டுகொண்டிருந்தது.
“மாதவி,” என்றேன் நான் மீண்டும். உணர்வெழுச்சியில் என் குரல் நடுங்கியது.
“நான்தான்,” என்றது அதன் குரல். அவள் குரலுக்கு மிக நெருக்கமாக இருந்தது.
“நீயேவா?”
“அவள் பிரக்ஞையின் சில பதிவுகள்,” என்றது.
நான் அவளைப் பார்த்தேன். அவள் என்னை நோக்கி மெல்ல உருண்டு வந்தாள்.
மெல்லிதாகப் புன்னகைத்தேன். “தூயப் பிரக்ஞை இல்லை,” என்றேன். “நல்ல வேளை.”
“என் குழந்தைக்குப் பசிக்கும்,” என்றாள். என் கால்களைக் கடந்து உருண்டு போனாள்.
அவள் குளிர்சாதனப்பெட்டியில் உருண்டு ஏறும் ஒலி கேட்டது. ஒரு சின்ன ‘கிளிக்’. தொடர்ந்து குளுக் குளுக்கென்று நீரோடை வழிவது போலச் சப்தம் கேட்டது.
நான் அவளைப் பின்தொடர்ந்தேன். “மாதவி?” அவள் உருண்டு திரும்பி ஒற்றைக்கண்ணால் என்னை நோக்கினாள்.
பூரணமான, முழுமையான, நிறைவான, ஒரு குறையுமற்றத் தூயக் கும்பமாகத் தன்னை வடிவமைத்துக்கொண்டிருந்த மாதவிக்குத் தன் உடலில் அந்த ஒற்றைக்கண்ணைத் தவிர வேறு உறுப்பு இல்லை. அதிலிருந்து மெல்லிய நீர் ஒலியுடன் பால் ஒழுகிக்கொண்டிருந்தது.
புகைப்படம்: Navneet Shanu
அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:
குறிப்பிடத்தகுந்த கதைகள்:
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…
View Comments
Very nice.