கட்டுரை

புனைவின் அறிவியல் பற்றி…

10 நிமிட வாசிப்பு

அறிவியல் புனைவு, சரித்திரப் புனைவு, சமூகப் புனைவு என்று அநேகவிதமான சொற்றொடர்களும் வகைமைகளும் புழங்காத இலக்கியச் சூழல் ஒன்று இருக்குமா என்ன! மறுபக்கம், ‘சரித்திரம் என்பதே புனைவுதான்’; ‘சமூகம் என்பதும் புனைவுதான்’ என்று எந்தத் தரப்பையும் மறுக்கும் எதிர்த்தரப்புகளும் நிலவத்தான் செய்யும். எவ்வாறாயினும், அறிவியலின் புனைவுத்தன்மை பற்றி அறிவியலாளர்களுக்கே பெரும் ஐயம் இருக்காது என்றே தோன்றுகிறது.

அறிவியலின் செயல்பாட்டு முறையே அதுதான். அதாவது, தரிசனம் முதலில்; நிரூபணம் பிறகு என்பது. யதேச்சையாகக் கருக்கொள்ளும் கற்பிதத்தையொட்டி, அதன் நிகழ்சாத்தியங்களை, நிரூபணங்களைத் தேடிப் புறப்படுவது; நிரூபணமாகி, ஒரு கோட் பாடாக வடிவெடுத்த பிறகு, எதிர்க்கோட்பாட்டைத் தானே உருவாக்கி இரண்டையும் மோத விடுவது; இரண்டின் சாரமான அம்சங்கள் இணைந்த மூன்றாவது கோட்பாட்டை உருவாக்கி அதை நிலைப்படுத்துவது. தன்னளவில் முழுமையான கோட்பாடாக அதை வடித்தெடுத்த பின்னர், அடுத்த கட்டமாக இதற்கான எதிர்க் கோட்பாட்டைப் பிறப்பிப்பது என. ஆக, தனக்குத்தானே உரையாடிக்கொள்ளும் மகத்தான புனைவு மரபாகவே அறிவியலைக் கருதலாம். நிரூபண சாட்சியம் கொண்ட புனைவுப் புலம்.

இதில், ‘அறிவியல் புனைவு’ என்பது, ‘நிஜப் பொய்’ என்கிற மாதிரியான விசித்திரச் சொற்றொடர். அறிவியலின் மறைவெல்லைகளை விஸ்தரித்து, படைப்பு மனம் கொள்ளும் குறளிகளைப் பதிவு செய்யும் செயல்பாடு. நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாதது. அதன் காரணமாகவே, அதி சுதந்திரமானது. ‘கோட்டாற்றில் ஒரு சண்டை நடந்ததாமே… ஒரு பழைய பாடல், பழைய பாடலின் வாய்ப்பான ஒரு வரி, கிடைத்தால் போதும் – தொள்ளாயிரம் பக்கத்துக்கு எழுதிவிடுவேன்’ என்று ‘ஜே ஜே சில குறிப்புக’ளில் திருச்சூர் கோபாலன் நாயர் ஏங்குவதை இங்கு பொருத்திப் பார்க்கலாம். ஒரேயொரு அறிவியல் தரவு அகப்பட்டால் போதும் – கதையாக்கிவிடலாம் என்பதுதான் அறிவியல் புனைவாளர்களின் ஆதங்கமாக இருக்கும்!

ஆனால், அறிவியலுக்கும் புனைகதைக்கும் இடையில் மிகப்பெரும் வித்தியாசம் இருக்கிறது – அறிவியலின் அடிப்படை, அனுபவவாதம். புலன் அனுபவத்துக்குட்படாத எதுவுமே சந்தேகத்துக்குரியது என்பது. மாறாக, புனைகதை, நூதனமான இன்னும் யாருக்கும் நேர்ந்திராத அனுபவத்தைக் கட்டமைப்பது. ஆக, அறிவியல் மனோபாவமும் இலக்கிய மனோபாவமும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சேர்ந்தே இருப்பதில்லை.

அறிவியல் புனைவைப் பொறுத்தவரை, வாசகரின் பங்கு அதிமுக்கியமானதாகிறது. அறிவியலுக்கும் புனைவுக்குமான விகிதாசாரம் பொருத்தமாய் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்; இலக்கிய உலகின் நடைமுறை விதிகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் ஏற்றதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்; குறிப்பிட்ட புனைவு வழங்கும் உணர்நிலை வெறும் மேசைத் தகவலாக மீந்துவிடுகிறதா, இலக்கிய அனுபவமாகத் தனக்குள் வளர்கிறதா என்று மதிப்பிடத் தெரிய வேண்டும்; என்றோ நடக்கவிருப்பதாய் இருந்தாலும், இன்றைய வாழ்வின் அம்சங்களைக் கணக்கிலெடுக்கிறதா என்று பார்க்க வேண்டும். கொக்கோக நூலாக இருந்தால்கூட, அதற்குக் கலைப் பெறுமானம் இருக்கிறதா என்று பார்க்க முனைவதில்லையா, இலக்கிய ஆர்வமுள்ள ஒரு மனம்!

ஃபாண்ட்டஸி வகை எழுத்துக்கும், அறிவியல் புனைவுக்குமான வேறுபாட்டை அல்லது, இடைவெளியைப் பற்றியும் பேசியாக வேண்டும். இரண்டு வகைமையிலுமே, நடப்புக் காலத்தை மீறிய, அல்லது நடப்புக்காலத்தை விசாரிக்கும், அம்சம் ஒன்று செயல்படுகிறது. ஃபாண்ட்டஸிக்கு, பருவுலக எல்லைகளைத் தாண்டும் சாகசம் மட்டுமே போதும். அதீதமும் அசாத்தியமும் நிரம்பியது. புனைவுலகின் உச்சத்தைத் தொட முற்படுவது. அந்த வகைமையில், குதிரைக்கு இறக்கைகள் முளைத்துப் பறந்துவிட முடியும். காட்சியை உருவகப்படுத்திக்கொண்டு ஆனந்திக்க, குழந்தை மனமே போதும்.

அறிவியல் புனைவு பருவுலகத்தின் வரையறைகளுக்குள் மட்டுமின்றி, அறிவியலின் விளிம்புகளுக்குள்ளும் முழுமையாகச் சிறைப்பட்டது. அறிவியல் அளவுக்கே நிரூபணங்களை, எதிர்கால சாத்தியங்களைக் கோருவது. குதிரையின மரபணுத் தொடரில், பறவையின மரபணுக்களைச் செருகுவதன் மூலம், இறக்கை முளைக்க வைப்பதாக முழுக்கத் தொழில்நுட்பக் கூறுகள் வழியாக நிறுவ வேண்டும்! விளக்கமும் உரிய மொழியில் இருந்தாக வேண்டும். கால எந்திரத்தில் பின்னோக்கிப் பயணம் செய்கிற, இறந்த காலத்தில் நிகழ்ந்தது பற்றிய கதை என்றால், அந்தத் தலைமுறை கவனிக்காது விடுபட்ட நிஜத்தின் சாயையைக் கொண்டிருக்க வேண்டும். அதாவது, அப்போதே சிறுகச் சிறுக முளைக்கத் தொடங்கிவிட்டிருந்த உபரி அங்கத்தை அவர்கள் பார்க்கத் தவறியிருந்தார்கள்; அதற்கான தடயங்கள் இவையிவை என்பதுபோலச் சான்றுகளை முன் வைக்க வேண்டும்.

ஆகவே, அறிவியல் புனைவு கைக்கொள்ள வேண்டிய நம்பகத்தன்மை தர்க்கப்பூர்வமானது. மேற்படி தர்க்கத்தைப் பரிசீலிக்கும் வல்லமையுள்ள, ஓரளவேனும் அறிவியல் ஞானமும், அபரிமிதமான இலக்கிய ரசனையும் என இரண்டுபுறமும் கூர்மையான கத்திபோன்று இருக்கும் வாசக மனத்தைக் கோருவது.

அறிவியல் புனைவுகள் பெரும்பாலும், தொழில்நுட்ப அடிப்படையிலான அனுமானங்களையே கொள்கின்றன. அறிவியல் வளர்ச்சி குன்றிய நாடுகளில், தொழில்நுட்பவியலாளர்களை விஞ்ஞானிகளாக உருவகித்துக்கொள்ளும் நடைமுறை மாதிரி! இந்தப் போட்டிக் கதைகளிலேயே செயற்கை நுண்ணறிவைப் பற்றிய கரிசனம் கொண்ட கதைகள் அதிகம்.

மாறாக, அறிவியலின் ஆதாரக் கேள்விகளை, ஆதார தர்க்கத்தை, இன்னும் குறிப்பாக, ஆதார அறவியலை முன்வைக்கும் கதைகள் அதிகம் எழுதப்பட்டிருக்கின்றனவா என்று தெரியவில்லை. இயல்பாகவே, அறிவியல் புனைகதைகளை வாசிப்பதில் எனக்கு ஆசை கிடையாது. வேறொன்றுமில்லை, அறிவியல் ஆர்வமும் ஞானமும் குறைவு என்பதுதான் காரணம். போட்டிக்கு வந்தவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் இவற்றை வாசித்தேன் என்றே சொல்லலாம். ஆக, என் கவனம் இவற்றின் அறிவியல்புலப் பெறுமானம் சார்ந்தது அல்ல; இலக்கிய மதிப்பீடு என்னவாய் இருக்கிறது என்பதில் மட்டுமே.

சலனமற்றிருக்கும் நீர்ப்பரப்பில் ஒரு சிறு கல் வீழ்ந்ததும் எழும் சிற்றலைகள் போல, அறிவியல் புனைவு என்ற சொற்றொடரும் எனக்கு அனுப்பப்பட்ட கதைகளை வாசித்த அனுபவமும் எனக்குள் ஏற்படுத்திய சலனங்களையே மேலே பட்டியலிட்டிருக் கிறேன்.

ஆக, அரூ அறிவியல் புனைவுப் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்பட்டியலில் இடம் பெற்ற கதைகளை வாசித்ததை முன்னிட்டே எனது அபிப்பிராயங்கள் வெளியாகின்றன என்பதை அடிக்கோடிட்டுச் சொல்லுகிறேன்!

உலக இலக்கிய வளர்ச்சிக்கும், போக்குகளுக்கும் ஈடுகொடுத்த அளவுக்கு அறிவியல் புலத்தில் இந்தியச் சூழல் – குறிப்பாக, தமிழ்ச்சூழல் – மேலோங்கியிருக்கிறதா என்பது யாருக்கும் தெரிந்த வெளிப்படையான சமாச்சாரம்தானே. அறிவியல் மனோபாவமும், அறிவியல் ஞானமும் வெகுவாக மங்கியிருக்கும் மொழிச்சூழலில், அறிவியல் புனைவு எழுதுவது என்பதே தீரமான செயல்தான். சாதாரண இலக்கியத்துக்கே வாசகர்கள் குறைவாக உள்ள, வெகு விசேஷமான வாசகத் தளம்! இதுபோன்று துறைசார்ந்த சிறப்புப் புனைவுகளுக்கு எந்த மாதிரியான வாசகர்கள் இருக்கிறார்கள், அவர்களில் ஆங்கில வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களின் வீதம் என்ன, தமிழில் அறிவியல் கோட்பாடுகள் எந்த அளவுக்குப் புரியக்கூடியவையாய் இருக்கின்றன என்று அடுக்கடுக்காகக் கேள்விகள் எழுகின்றன.

தமிழில் அறிவியல் புனைவு எழுதுவோர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், கலைச்சொல் பற்றாக்குறை. பெரும்பாலும் கல்வித்துறை சார்ந்தவர்கள், அல்லது மொழியியல் ஆர்வலர்கள் உருவாக்கும் சொற்கள் மற்றும் சொற்றொடர்களே ஆயத்தமாய்க் கிடைப்பவை. அவற்றின் பரவலான ப்ளாஸ்ட்டிக் தன்மை, இயற்கையாய் ஒருவருக்குள் எழும் அறிவியல் தேட்டத்தை இன்னும் கொஞ்சம் தள்ளிப்போட்டுவிடக் கூடும்! இந்தக் கதைகளிலேயே ஒன்றில், ‘நெருக்கடி அனுமதி’ என்று ஒரு சொற்றொடர் பார்த்தேன்; ‘Emergency permission’ என்று உணர்த்த முயல்கிறார் போல…

புனைகதையாளர்கள் முனையும்போது, மிகப் பொருத்தமான, துல்லியமான சொல்லாக்கங்கள் வசப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், பொதுவாகத் தமிழில் அறிவியல் புனைவில் ஈடுபடும் யாரும், தனித்துவமான சொல்லாக்கங்களையோ தமக்கேயுரிய மொழிநடையையோ உருவாக்கக்கூட மெனக்கெடுகிற மாதிரித் தெரியவில்லை. அறிவியல் புனைவு எழுத முனைபவர்கள், தத்துவவாதியின் குரலில் ஏன் பேசவேண்டும்! சங்கத் தமிழ் மொழியில், கவிதைநடையில் பேச வேண்டிய அவசியமென்ன?

இந்தப் போட்டியில் பங்கேற்றிருக்கும் அநேகர், ஜெயமோகனின் மொழியில் மயங்கி, அதில் சிக்குண்டவர்களாகவே தென்படுகிறார்கள். மஹாபாரதத்தை மீட்டுருவாக்குவதற்காகக் கைக்கொண்ட மொழியொழுக்கை, தனது பிற கதைகளுக்கேகூட ஜெயமோகன் கையாண்ட மாதிரித் தெரியவில்லை. இதில், தார்மீகமான இன்னொரு பரிமாணமும் உண்டு; பல்லாண்டுகால உழைப்பு மற்றும் தேர்ச்சியின் பயனாக ஓர் எழுத்தாளர் தமக்கென வனைந்தெடுத்த மொழிநடையை அப்பட்டமாக நகல் செய்வது, ஒருவிதத்தில், உழைப்பின்மையின் சான்றுதான். துப்பறியும் கதைகளுக்கும், மர்மக் கதைகளுக்கும் தாம் பயன்படுத்திய அதே நடையில்தான் அறிவியல் புனைவுகளை எழுதினார் சுஜாதா. ஆனால், அது அவரே உருவாக்கிக்கொண்ட பிரத்தியேக நடை.

இலக்கண வழுக்களும், சொற்பிழைகளும் மொழி ஒழுங்கின்மையும் தனது சிறப்பியல்புகளாகக் கொண்ட புதிய தலைமுறை ஒன்று உருவாகிவிட்டது என்பதை இந்தக் கதைகளும் மெய்ப்பிக்கின்றன. ‘பரிசோதனை’ என்பதை ‘பாதுகாப்பு’ என்று எழுதியிருக்கிறார் ஒருவர்! ஒருவேளை, நூலாக வரும்போது பதிப்பாளர்கள் உழைத்து நேர் செய்தால் உண்டு. மொழிப் பிரக்ஞை மிகமிகக் குறைவாக இருக்கும் முகநூல் சூழலின் பாதிப்பு என்றே இதைக் கருதுகிறேன். ஆனாலும், ‘மனத்தில் டோப்பாமைன் சுரந்தது’ என்பதுபோன்ற தர்க்கப் பிழைகளை அறிவியல் புனைவுலகம்கூட மன்னிக்காது! இன்னொரு கதையில், கொலையுண்டவர் எந்த அளவு வலியை அனுபவித்தார் என்பதற்கான அளவை அலகு பேசப்படுகிறது. கொல்வதற்கு முன்னால் அளவைக் கருவியைப் பொருத்திவிட்டுக் கொலை செய்ய வேண்டும்; அல்லது, பிரேதத்தினுள் மேற்படி வலி அளவு சிதையாமல் சேகரமாகி இருக்கும் என்று நிறுவியாக வேண்டும்…

அறிவியலைச் சாக்காக வைத்து உளவியல் பேசலாம்; சமூகவியல் பேசலாம்; ஆன்மவியலும் பேசலாம். அது எந்தவிதமான வாசிப்பை விரும்பும் வாசகரையும் ஈர்ப்பதற்கு வாய்ப்புண்டு. அறிவியலை மட்டுமே, கட்டுரைத் தொனியில் பேசினால் அது எப்படிப் பொதுவாசக மனத்தில் அதிர்வுகளை உருவாக்கும்?

அறிவியல் வளர்ந்த நாடுகளில் எழுதப்படும் அறிவியல் புனைகதைகளை முன் மாதிரியாகக் கொண்டே தமிழ்ச்சூழலில் அறிவியல் புனைகதைகள் எழுதப்படுகின்றன என்று தோன்றுகிறது.

உலகளாவிய தளத்தில், பொதுமனத்துக்கான அறிவியல் அபுனைவுகள் ஏகப்பட்டவை கிடைக்கின்றன. புனைகதையாளர்களைவிடவும் நயமான மொழிநடையில், புனைகதைகளைவிடவும் மேலதிகக் கிளர்ச்சி தரக்கூடிய, கலையனுபவமாகவே மாறித் திகழ்கிற நூல்கள். யதேச்சையாக நான் வாசித்த ஓரிரண்டை உதாரணமாகச் சொல்ல ஆசையாய் இருக்கிறது.

ரிச்சர்ட் ஃபெய்ன்மேனுடைய வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதி Surely Your’re Joking, Mr.Feynman! (W W Norton & Company, 1985) என்ற, வெகுசுவாரசியமான நூல். ‘பூட்டுடைப் பவன் பூட்டுடைப்பவனைச் சந்திக்கிறான்’ என்ற தலைப்பிலான அத்தியாயம் பூரணமான அறிவியல் புனைகதை. அணுகுண்டுத் தயாரிப்பு மையத்தில் இருக்கும் முக்கியமான அறிக்கைகளை, சோதனைப் பதிவுகளைப் பத்திரப்படுத்தும் அலமாரிகள் எந்த அளவு பாதுகாப்பற்றவை என்று நிரூபிக்க, நாள்முழுவதும் அதே சிந்தனையில் மூழ்கியிருக்கிற அணுவிஞ்ஞானியின் வாக்குமூலம் போன்றது. (அறிவியல் மனோபாவம் எப்படிச் செயல்படும்; அணுகுண்டு என்ற சங்கதி எழுப்பும் அறவியல் விசாரங்கள் என்று வேறுபக்கமும் நகர ஏதுவுண்டு!)

நம்பர் பூட்டுகளைத் திறப்பதற்கான சூட்சும எண் மறந்துபோகும் சந்தர்ப்பங்களில், பின்னாளில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் உதவிக்கு வருகிறார். கணித சாத்தியங்களை விவரிக்கும் கட்டுரை அது. கணிதப் பின்னணி அறவே இல்லாத என்போன்ற பாமர மனத்தைத் தன்னியல்பாகத் தனக்குள் இழுத்துக் கொள்வது. கணித அறிவு, அதிலும் அட்சர கணித அறிவு இல்லாத மனம் இயற்பியலின் ஆழங்களுக்குள் எட்டிப்பார்ப்பது எவ்வளவு கடினம் – எனது இந்தப் பலவீனத்தையும் மேவி என்னைத் தனக்குள் இழுத்துக்கொள்ளும் கட்டுரை அது. ஆமாம், எனக்குக் கடை சிவரை பூட்டுடைத்தல் பற்றிய அவரது கருதுகோள் புரியவேயில்லை. ஆனால் புனைவின் ருசியை முழுமையாக வழங்கிய கட்டுரை அது!

கரடுமுரடான அறிவியல் கோட்பாடுகள் மட்டுமே அறிவியல் புனைவை உருவாக்க முடியும் என்ற கட்டாயம் கிடையாது. பார்க்கப்போனால், கவிதார்த்தமான திறப்புகளைக்கூட, எளிய அறிவியல் அறிமுக நூல்கள் வழங்க முடியும். மேற்சொன்ன ரிச்சர்ட் ஃபெய்ன்மேனே வேறொரு நூலில், சொல்கிறார்:

வெறுங் கண்ணால் ஓர் அணுவைப் பார்க்க முடியுமா என்றால், முடியும். ஓர் ஆப்பிளை பூமிக்கோளம் அளவுக்குப் பெரிதாக்கிப் பார்த்தால், ஆப்பிள் அளவு இருக்கும் அணு.

எவ்வளவு எளிதாக உருவகித்துக்கொள்ள முடிகிறது! பிறகும் அதன் பிரம்மாண்டமும், மர்மமும் கொஞ்சமும் குலையாமல் எப்படி எஞ்சியிருக்கிறது…

இன்னொரு சந்தர்ப்பமும் நினைவு வருகிறது. மிச்சியோ காக்கு எழுதிய Hyper- space (Oxford University Press, 1994) நூலின் ஆரம்பக் கட்டுரையில் நன்னீர் மீன்கள் வளைய வரும் தொட்டி ஒன்றை விவரிக்கிறார். வேடிக்கை பார்க்கும் சிறுவனின் கைக்குக் கொஞ்சநேரம் இடம் பெயர்ந்துவிட்டு, நீர்த் தொட்டிக்குத் திரும்பும் மீன்கள், அவர்கள் சமூகத்தின் ‘விஞ்ஞானிகள்’ ஆகி, நீர்ப்பரப்பின்மீது மழை பெய்தல் போன்ற நிகழ்வு களுக்கும், லில்லித் தண்டுகள் அசைவதற்கும் ‘அறிவியல்’ காரணங்கள் கற்பிப்பது பற்றிய விவரணை. அதில், ‘நீர்ப்பரப்பின் மேல்மட்டம் என்ற ஒரு சிறு கண்ணாடிச் சுவருக்கு இந்தப் புறம் ஒரு பிரபஞ்சமும், அந்தப் புறம் வேறொரு பிரபஞ்சமும் இருந்தன ‘ என் றொரு மகாவாக்கியமும் உண்டு!

இன்னும் ஆலிவர் சாக்ஸ், ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்றவர்களுடைய நூல்களில் வண்டிவண்டியான சந்தர்ப்பங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கல்விப்புலக் கோட்பாடுகள், வறட்டு மொழி, செயற்கையான மயிர்க்கூச்செரிதல், மேலோட்டமான மானுட விசாரம் மற்றும் அதீதச் சிடுக்குகள் கொண்ட கற்பனைகள் வழியாக மட்டுமே அறிவியல் புனைவுகள் நகர்ந்தாக வேண்டியதில்லை என நிகழ்த்திக் காட்டுபவை.

இந்த ஆண்டு அரூ அறிவியல் புனைகதைப் போட்டியாளர்களுக்கான சில அவதானங்களும் கேள்விகளும்:

1. அறிவியல் புனைவுகள் அத்தனையுமே எதிர்காலத்தில், பல நூறு ஆண்டுகள் கழித்தே நிகழவேண்டிய அவசியமென்ன? நடப்புக் காலத்தில் அறிவியலின் கண்ணுக்கு மட்டுமே புலனாகிற, பாமர மனம் கவனிக்கத் தவறுகிற விந்தைகள் ஏதும் கிடையாதா! இந்த வகையில், இந்தத் தொகுப்பில் இடம்பெறும் ‘வலசை’, ‘பாஞ்சஜன்யம்’ என்ற இரண்டு கதைகளும் என்னைக் கவர்ந்தன. முதல் கதையில் வீடியோ கேமுக்கு ஒரு நடையும், நடைமுறை நிகழ்வுக்கு வேறொரு நடையும் இருப்பதும், தன்னியல்பாக வரலாற்றுக் குறிப்புகள் இடைப்படுவதும் நல்ல உத்தி. இரண்டாவது கதையில், காதுக்குள் பொருத்தப்படும் கருவிக்கும் நத்தைகளுக்குமான ஒப்பீட்டைச் சிறப்பாகக் குறிப்பிடத் தோன்றுகிறது. தெளிவாகத் திறந்துகிடப்பது போன்று தோற்றமளிக்கும் நிகழ்காலம் தனக்குள் பொதிந்துவைத்திருக்கும் புரியாமையைப் பேச முயலும் கதைகள் இவை.

2. அறிவியலுக்குத் தரும் அதே அளவு கவனத்தையாவது, இலக்கிய வடிவத்துக்கும் தரவேண்டாமா! தமிழ் மொழி அளவிலாவது, சிறுகதை என்ற வடிவம் வந்து சேர்ந்திருக்கும் இடமென்ன, சிறுகதைக்கும் குறுநாவலுக்கும் உள்ள மேலோட்டமான வேறுபாடுகள் தாம் என்னென்ன என்பது பற்றிய பரிசீலனை வேண்டாமா! நிச்சயம், பக்க அளவை மட் டுமே நான் குறிப்பிடவில்லை!! உண்மையில், அறிவியலின் புலத்திலிருந்து கிடைக்கும் சிறு தரவு மட்டுமே போதும் – அதன்மேல் அமர்ந்து கற்பனையை விரியவிடுவதுதானே புனைகதை? வேறு வார்த்தைகளில், ‘கோட்டாறில் சண்டை நடந்ததாமே!’ என்ற குறிப்பு மட்டுமே போதுமானது! தான் அறியக் கிடைத்த அறிவியல் கருதுகோள் பற்றிய கட்டுரையைப் புனைகதைக்குள் செருகும் தந்திரம் வாசிப்பவரை விலக்கவே செய்யும்!

3. அறிவியல் புனைகதை எழுதுகிறவர்கள் திடீர்திடீரென்று தத்துவவாதியின் குரலில், பொதுமைப்படுத்திப் பேசவேண்டிய நிர்ப்பந்தமென்ன? துல்லியமான, கச்சிதமான, விமர்சனபூர்வமான கதைநிகழ்த்துதலின் வழி, வாசகமனத்தில் தானாக ஏற்பட வேண்டிய எதிர்வினைகளை, கதாசிரியரே தொகுத்துச் சொல்வதையெல்லாம், நவீனத்துவக் கதைசொல்லல் ஏற்குமா?

4. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அப்படியே ஏற்று, மேலும் கொஞ்சம் முன்னேற்றிக் கற்பனை செய்வது மட்டுமே போதுமா? அது உருவாக்கும் அறவியல் கரிசனங்களைப் பேசுவது முக்கியமில்லையா? உதாரணமாக க்ளோனிங் பற்றிப் பேசும் கதையில், இனப்பெருக்கம் தொடர்பான கலாசாரக் கேள்விகளுக்கு இடமில்லாமல் போகுமா? ‘என்றூழ்’ என்ற கதையில், இயந்திரப்பெண் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் சந்தர்ப்பம் முக்கியமான ஒன்றாகப் படுகிறது.

5. ஆகப் புதுமையான, நவீனமான கதையொன்றை விவரிக்கும் மொழி, ஆகப் பழைய சங்கத் தமிழ்மொழியில், மரபுக் கவிதையின் அலங்காரமான நடையில் ஏன் பேச முனைகிறது? இன்னும் தெளிவாகச் சொன்னால், டி என் ஏ மாலிக்யூல்கள் பற்றி, கபிலரின் மொழியில் பேசவேண்டிய நிர்ப்பந்தம் என்ன! பல நூற்றாண்டுகள் தாண்டி நடக்கப்போவதான ஆரூடத்தை விவரிக்க, பல நூற்றாண்டுப் பழமைகொண்ட சொற்கோவைகளும், சொற்றொடர்களும், ஓங்காரமும் எதற்கு? அறிவியல் வளர்ந்த பிற நாடுகளின் இலக்கியப் பரப்பில் எழுதப்படும் அறிவியல் புனைவுகளில் இதுபோன்ற கோமா ளித்தனங்கள் நடக்கின்றனவா!

6. அதைவிட, ‘ஏம்லே மூதி’ என்று கதாபாத்திரங்கள் விளித்துப் பேசும்விதமாக, பேச்சுத்தமிழ் இதேவிதமாய் நீடிப்பதற்கு உத்தரவாதமுண்டா! இந்தத் தொகுப்பில், சென்ற ஆண்டு வென்றவர்களின் கதைகளும் பிரசுரமாகின்றன – விதிமுறைகளின்படி, போட்டியில் பங்குபெறாதவை. கோள்களுக்கிடையில் ஒளிவருடங்கள் கணக்காகப் பயணம் செய்யும் பாத்திரங்களின் உரையாடலில், தாமிரபரணி காணாமல் போய்விட்டது; திருநெல்வேலியின் வட்டார வழக்கு அப்படியே மீந்திருக்கிறது – ரம்மியமான கனவு!

7. இறுதியான, ஆனால் மிக மிக முக்கியமானதாக, நான் கருதும் கேள்வியொன்று: தொழில்நுட்பம் வெகுவாக நகர்ந்து சென்று, நூறு நூறு ஆண்டுகள் தாண்டிய பிறகும், மனித உறவுநிலைகளும் உணர்வுநிலைகளும் இப்போதுள்ள விதமாகவே நீடிக்கும்; இப்போதைய கிலேசங்களும் பிறழ்வுகளும் கனிவுகளும் மட்டுமே நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை அறிவியல்பூர்வமானதுதானா.

வரும் ஆண்டுப் போட்டிகளில் பங்கேற்கவிருப்போரும் மேற்சொன்னற்றைப் பரிசீலித்துப் பார்க்கலாம்!

மேற்சொன்ன அனைத்தையும் என் பரிசீலனைக்கு வந்த கதைகள் பற்றிய நேரடியான ஆதங்கம் என்று மட்டுமே கொள்ள வேண்டியதில்லை. மிகச் சமீப காலத்தில் தலையெடுத்திருக்கும் புதிய வகைமை பற்றி, அதன் தொடக்கத்திலேயே கொள்ள வேண்டிய அக்கறைகள் என்று எனக்குப் படுகிறவற்றைப் பட்டியலிட்டிருக்கிறேன், அவ்வளவுதான்.

மற்றபடி, இந்தக் கதைகளில் புருவம் உயர்த்தவைத்த சந்தர்ப்பங்கள் அநேகம் இருந்தன. உதாரணமாக, செவ்வாய் கிரகத்தில் உயிர் இருந்ததா என்ற கேள்வியை முன் வைக்கும் ‘உளதாய் இலதாய்’ கதை. கதையின் முடிவில் ஒரு திருப்பத்தை அறிய நேரும்போது கிடைக்கும் அதிர்ச்சி பரவசமூட்டுவது. மலையேறிகளிடம் திசைகாட்டி இருக்காதா என்பது போன்ற எளிய கேள்விகளை எழுப்பி அசௌகரியப்படுத்தினாலும், கதையின் ஆதாரக் கோட்பாடு உரையாடல் வழியாகவே விவரிக்கப்படுவதில் சிறு சலிப்பு நேர்ந்தாலும், தனக்கேயுரிய தர்க்க நியாயம் கொண்டிருக்கும் கதை. இந்தத் தொகுப்பின் சிறந்த கதையாகத் தேர்வாகும் அருகதை கொண்டது.

‘கார்த்தூஸியர்களின் பச்சை மது’ கதை ஆரம்பத்தில் கொண்டிருக்கும் கட்டுரைத் தன்மை புனைவுக்குள் புனைவாக தீவுக்கதை தொடங்கியதும் சட்டென்று வேறொன்றாக மாறி வசீகரிக்கிறது.

இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட்டிருக்கும் கதைகள் ஒவ்வொன்றையுமே பரிசுக்குரியவைகளாகத் தேர்ந்தெடுக்கக் காரணங்கள் உண்டு. ஆனால், என் மதிப்பீட்டில், ‘நோய் முதல் நாடி’ கதையைப் பரிசுக்குரியதாக முன்வைக்கிறேன்.

எதிர்காலத்தில் இருக்கக்கூடிய மருத்துவ உலகம் எதையெல்லாம் கணக்கிலெடுக்கும் என்பதையும், தொழில்நுட்ப வசதிகளை முழுமையாய்ப் பயன்படுத்தும் அரசு நிர்வாகம் தனிமனித வாழ்க்கையில் எந்த அளவு தலையிடக் கூடும் என்பவற்றோடு, அங்கீகாரமின்மையால் துவளும் மனித மனம் எப்படி மாறாமலே தொடரக்கூடும் என்பதையும் யூகிக்கும் கதை இது. சிறுகதையின் வரம்பைத் தெளிவாக உணர்ந்திருக்கும் கதை.

தவிர, முன்னமே சொன்னபடி, கலைச்சொற்கள் போதாமையை முழுக்க நிகழ்த்திக் காட்டியிருக்கும் கதையும்தான் இது. உரையாடலில் மட்டுமின்றி, கதாசிரியரின் விவரிப்பிலும்கூட இடம்பெற்றிருக்கும் ஆங்கிலச் சொற்கள்தாம் எத்தனையெத்தனை. ‘தமிழில் எழுதப்பட்ட ஆங்கிலக் கதை’ என்றேகூடச் சொல்லிவிடலாம்! இந்தச் சொற்களெல்லாம் அவற்றின் கோட்பாட்டு அழுத்தம் சற்றும் குறையாமல் தமிழில் வந்து சேர்வதற்கும்; அவற்றின் பொருள் உணர்ந்து திளைக்கும் வாசகமனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகவும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ என்று மலைப்பாக இருக்கிறது.

போட்டிக் கதைகளின் குறும்பட்டியலில் இடம்பெற்ற அனைவருக்கும், அரூ இதழின் ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

யுவன் சந்திரசேகர்
சென்னை
02/05/2021


புகைப்படம்: ஶ்ரீநாத்

மேலும் படிக்க

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:

குறிப்பிடத்தகுந்த கதைகள்:

யுவன் சந்திரசேகர்

(பி. 1961) யுவன் சந்திரசேகர் (எம்.யுவன்) பிறந்தது மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகிலுள்ள கரட்டுப்பட்டி என்ற சிறு கிராமத்தில். வசிப்பது சென்னையில். பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார்.

Share
Published by
யுவன் சந்திரசேகர்

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago