கதை

பாஞ்சஜன்யம்

14 நிமிட வாசிப்பு

“அப்பா ரொம்ப படுத்தறாராம். வச்ச இம்பிளாண்ட் அவருக்கு ஒத்துக்கல. அக்கா என்கிட்ட சொல்றா. இம்பிளாண்ட வச்சதுலேந்து அப்பா முன்ன மாதிரி இல்ல. சாதாரணமா பேசினாக்கூட அதிர்றதுங்கறார். மண்டைக்குள்ள எதோ இரைச்சலாவே இருக்குங்கறார். பாவம் மனுஷன் சரியா இல்ல. மொத்த சப்தமும் அடங்கிய லோகம்தான் அவருக்கு வேண்டியிருக்கு போல. எப்போதும் எதோ அவர் காதுல கேட்டுண்டே இருக்கு. அவருக்கு இந்தக் கருவி பொருத்தினத்துக்கு அப்புறம் நிம்மதியே இல்ல. தூக்கம் சரியா வர்றது இல்ல அவருக்கு. அர்த்த ராத்திரி சுத்த நிசப்தமா இருக்கும்போது கூட எதோ சத்தம் கேட்டது போல அலறி அடிச்சுண்டு எழுந்துக்கறார். ரொம்ப கஷ்டப்படறார்டா. இதனால் அவருக்கு அக்காகிட்டயும் அடிக்கடி சண்டை. பிணக்கு. நான் ஏதும் அவர்கிட்ட கேட்டுக்கறது இல்ல. இங்கயிருந்துண்டு என்ன பண்ண முடிஞ்சுரும் சொல்லு. அக்காதான் பாவம். ஒருநாள் அவர் அக்காகிட்டேயே கத்தியிருக்காராம். முன்ன மாதிரியே நான் முழுச்செவுடனாவே இருந்துக்கறேன்னு அவகிட்ட எரஞ்சு பேசிருக்கார். அவகூட நின்னுண்டிருந்த அத்திம்பேருக்கே ஒரு மாதிரி ஆயிடுத்துன்னு அக்கா சொல்றா. ஏதாவது பண்ணமுடியுமா என்ன? பாத்து சொல்லுடா.”

நான் என் நண்பன் சாரங்கனிடம் ஸ்கைப் வீடியோ காலில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

அப்பாவுக்கு காக்லியர் இம்பிளான்ட் ஆறு மாதத்துக்கு முன்புதான் வைத்தது. கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் செலவில் சாரங்கன் மேற்பார்வையில்தான் பொருத்தப்பட்டது. அப்பாவின் முழுச்செவிடிற்கு அது மாற்றாய் இருக்குமென நாங்கள்தான் கட்டாயப்படுத்தி அப்பாவை ஒத்துழைக்கச் சொன்னோம். அப்பா ஆரம்பம் முதலே பிடிவாதமாகத்தான் இருந்தார். ஆனால் கடைசியில் ஒத்துக்கொண்டார்.

அப்பாவின் இந்தச் செவிக்குறைபாடு அம்மாவின் இறப்பிற்குப் பின்தான் எங்களுக்குத் தெரியவந்தது. அதற்கு முன்பு அரைகுறையாய் அவருக்குக் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. ஒரு முறை அப்பா தன் இருசக்கர வாகனத்தில் வடபழனி சிக்னலைக் கிராஸ் செய்யும்போது, அம்மா பின்னிருக்கையில் அமர்ந்திருந்தார். சைடில் இருந்து வந்த லாரியின் ஹாரன் சத்தம் அவருக்குக் கேட்கவில்லை. பொருட்படுத்தாமல் வண்டியைச் செலுத்தியிருக்கிறார். அவன் நெருங்கிக்கொண்டிருந்தான். அதிர்ச்சியில் அம்மா அலறி அவரை முதுகில் தட்டி தடுத்திருக்கிறாள். நல்ல வேலை. லாரிகாரன் கெட்டிக்காரத்தனமாகக் கையாண்டு லாரியை நிறுத்திவிட்டான். பதற்றத்தில் இருந்த அப்பா வண்டியின் ஆக்சிலேட்டரை மேலும் திருக, இறங்கப் போன அம்மாவின் புடவை நுனி வாகனத்தின் பின் சக்கரத்தில் மாட்டி இழுத்து அவளைக் கீழே தள்ளிவிட்டது. பேரலறல். அது அப்பாவின் காதில் விழுந்ததோ என்னவோ தெரியவில்லை. அம்மா சாலையில் உருண்டு விழுந்து கிடக்கிறாள். தலையின் பின்பகுதியில் பலத்த அடி. இரண்டு மாதம் படுத்தபடுக்கையாய்க் கிடந்தாள். பிறகு இறந்துவிட்டாள். ஆறேழு வருடம் ஆகிவிட்டது.

அப்பாவுக்குத் தான் அம்மாவைக் கொன்றுவிட்டோமோ என்கிற குற்றவுணர்வு. நாங்கள் எல்லாரும் அவரிடம் பேசிப் பார்த்தாகிவிட்டது. ஒன்றும் பிரயோஜனப்படவில்லை. அவ்வப்போது அவரது செவியில் அம்மாவின் அந்தக் கடைசிப் பேரலறல் கேட்பதாகச் சொல்லி அழுவார். மற்றபடி நாங்கள் பேசுவது அவருக்குக் கேட்காது. இரண்டு மூன்று வருடம் அப்படியே அம்மா இறந்த அதிர்ச்சியிலேயே இருந்தார். ஒரு நாள் வீட்டுத் தோட்டத்தில் வலம் வந்தவருக்கு என்ன ஆகியதோ தெரியவில்லை. தோட்டத்துப் பூச்செடிகளின் முன்பு நின்று கொண்டு தனியாகவே பேச ஆரம்பித்தார். “ராஜி, என்ன மன்னிச்சிடுடி” என்று அம்மாவிடம் பேசுவது போல் விசும்பி அழுதார். அது அவரைக் கொஞ்சம் ஆற்றுப்படுத்தியது.

அங்கு சென்று அந்தப் பூச்செடிகளுடன் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார். நாளின் முழுப்பகுதியையும் தன் வீட்டுத் தோட்டத்திலேயே கழித்தார். அந்தப் பூச்செடிகள் எல்லாம் அம்மா பார்த்துப் பார்த்து நீரூற்றி வளர்த்தது. நந்தியாவட்டை, பவழமல்லி, செவ்வரளி, ஜாதி முல்லைக்கொடி முதலிய பூச்செடிகளும் ரோஜா, செம்பருத்தி, கற்றாழை, மனத்தக்காளி, கற்பூறவள்ளி ஆகிய தொட்டிச் செடிகளும் வெற்றிலைக்கொடி, பிரண்டை, வெண்டை, பீர்க்கங்கொடி, கத்தரிக்காய், பாகை போன்ற காய்கறிச் செடிகொடிகளும் எங்கள் வீட்டைச் சுற்றி அம்மாவின் கை வளர்ப்பில் எழுந்திருந்தன. பொங்கலுக்குத் தேவையான மஞ்சள் இஞ்சிக்கொத்துகூட எங்கள் வீட்டில் இருந்தே எடுத்துக்கொள்வோம். அம்மாவுக்குத் தோட்டம் வைத்து வளர்ப்பதென்றால் அவ்வளவு ஆசை. அதனால் முழு ஈடுபாடு காண்பித்தாள். அப்பா அப்போதெல்லாம் தோட்டம் பக்கம் நிற்பதே குறைவுதான். அம்மாவும் நானும் அக்காவும்தான் நீர் பாய்ச்சுவோம்.

ஆனால் இன்று அப்பாவுக்கு அந்தத் தோட்டத்தில் நேரத்தைச் செலவிடுவது அவ்வளவு ஆசுவாசமாக மாறும் என்று நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அவரே வேலி கட்டுவார். களக்கொத்தைக் கொண்டு நீர் செல்லப் பாத்தி அமைப்பார். நீர் பாய்ச்சுவார். உரமிடுவார். வாசல் தெருவில் இருக்கும் பசுஞ்சாணியைக் கொண்டு வந்து செடிகளுக்குப் போடுவார். பல நேரங்களில் அந்த செடிகளை வெறுமே வெறிக்கப் பார்த்துக்கொண்டிருப்பார். இல்லை “ராஜி, ராஜி” என்று சொல்லிக்கொண்டு பேசிக்கொண்டிருப்பார்.

அப்பாவுக்கு அம்மாவின் குரல் என்றால் அவ்வளவு பிடித்தம். அம்மா நன்றாகப் பாடக்கூடியவள். தனுர் மாத அதிகாலை வேளைகளில் அம்மா பாடும் திருப்பாவை திருவெம்பாவை பாடல்கள் மீது இன்னும் கூடுதல் பிடித்தம் அவருக்கு. அதிலும் திருப்பாவையின் இருபத்தி ஆறாவது பாசுரத்தின் மீது அவருக்குக் கொள்ளை பிரியம்.

அம்மாவை அடிக்கடி பாடச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருப்பார். அம்மா அவர் எப்போது கேட்டாலும் தன் குரலை இலகாக்கிப் பாடிக்காட்டுவாள். தயக்கப்பட்டதே கிடையாது.

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்சஜன்யமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

அப்பா ஒரு நாள், காலை வேளையில் பவழமல்லிச் செடிக்கு அருகில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தார். “ராஜி, ராஜி. நீ ரொம்ப நன்னா பாடுவியே. அந்தத் திருப்பாவை இருப்பத்தி ஆறாவது பாசுரம். அத பாடிக்காட்டேன்” அவரே முதல் இரண்டு வரிகளைப் பாடிப் பார்த்தார். பின்பு நிறுத்திக்கொண்டுவிட்டார். அதனைப் பார்த்த பிறகுதான் எனக்கே தெரிய வந்தது.

அப்பா இப்படியே எல்லா விஷயங்களையும் பேசிக்கொண்டிருந்தார். அம்மாவிடம் சொல்வது போலப் பகிர்ந்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் அது அவரைத் தேற்றினாலும் நானும் அக்காவும் ஒரு கட்டத்தில் பயந்தோம்.

ஏதாவது மனநோயா என்று வருத்தப்பட்டோம். அப்போதுதான் என் நண்பன் சாரங்கனிடம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன்.

அவன் சொன்னான், “வெளிலேந்து எந்தக் குரலும் உள்ள நுழைய முடியாம போனதால மாமாக்கு, உள்ளேந்து நெறைய சொல்ல வேண்டியது இருக்கு போல. அதான் மாமிகிட்ட பேசுறமாதிரி பேசிண்டிருக்கார். கவலைப்படுறதுக்கு ஒன்னும் இல்ல.”

அக்கா, “இல்ல அவர் பொழுது விடிஞ்சதுலேந்து சாயரட்ச்ச வரைக்கும் தோட்டத்துலேயே பழியா கிடக்கார். சித்த பிரமை புடிச்ச மாதிரி செடிகிட்ட பேசிண்டிருக்கார். எந்த லோகத்துலயோ இருக்கறா மாதிரி. சாப்பிடறதுக்குக்கூட சட்டுனு வர மாட்டேன்கிறார். ரொம்ப பிடிவாதம். தனியா இந்த மனுஷன் பேசிண்டிருக்கறத பாத்தா அக்கம்பக்கம் உள்ளவா என்ன நெனைப்பா?” என்றாள். நானும் அவளோடு சேர்ந்துகொண்டேன்.

சாரங்கன் சொன்னான். “பேசாம காக்லியர் இம்பிளாண்ட் பண்ணிடலாம் மாமாக்கு. காது நல்லா கேக்கும். வெளிலேந்து சத்தம் போகும்போது அவர் உங்களோட வாழ்க்கைக்குள்ள வந்துடுவார்.”

அப்பாவை அதற்கு ஒத்துக்கொள்ள வைக்க நானும் அக்காவும் அத்திம்பேரும் படாதபாடுபட்டோம்.

அறுவை சிகிச்சைக்கு ஆயத்தம் ஆகும்போது சாரங்கன் அப்பாவிடம் சொன்னான். “மாமா உங்களுக்கு ஒன்னும் இல்ல. இந்த நத்தை இருக்கே நத்தை அதுக்குக் காது கேக்காது. ஆனா காது கேக்கற நத்தை உண்டு பாத்துக்கோங்கோ. எங்கங்கறேள்? மனுஷா நம்ம ஒவ்வொருத்தரோட காதுக்குள்ள. ஒன்னுக்கு ரெண்டா ஆடாம அசையாம நம்ம காதுகளுக்குள்ள இருக்கு. அதுக்குக் கேட்டுண்டிருக்கறதுனாலதான் மனுஷாளுக்குக் காதே கேக்கறது. இப்போ உங்களுக்கு அந்த ரெண்டு நத்தையும் வேலை செய்யல. நான் இப்போ அத வேலை செய்ய வைக்கப்போறேன். அவ்ளோதான். கவலைப்படாதேள்”

அப்பாவிற்குக் காது மடலுக்குப் பின் ஒரு செவிக்கருவியும் காதுக்குள் காக்லியா என்கிற காதின் உட்பகுதியில் ஒலியதிர்வைக் கடத்தும் மின்முனையும் பொருத்தப்பட்டது. அந்த மின்முனை செவிக்கருவியில் விழும் ஒலியை நேரடியாகச் செவிப்புல நரம்புக்குக் கடத்தி நம்மால் ஒலியைக் கேட்கச் செய்துவிடும்.

அறுவை சிகிச்சை முடிந்து ஓரிரண்டு வாரங்களுக்கு அப்பா சாதாரணமாக இருந்தார். அவரால் இயல்பாகக் கேட்க முடிந்தது. எங்களோடு அதிக நேரம் செலவிட்டார். டிவி பார்த்தார். எப்போதாவது காது கூசுகிறது என்று சொல்வார். ஆனால் அது தாங்கிக்கொள்ளக் கூடியவாறுதான் இருக்கிறது என்பார். அவ்வப்போது தோட்டத்திற்குச் சென்று தனியாய்ப் பேசுபவராகவும் இருந்தார். ஆனால் முன்பு போல மோசமில்லை.

எனக்கும் நான் விண்ணப்பித்திருந்த ஆஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்த பிரபல bio acoustics (உயிர் ஒலியியல்) பள்ளியில் இருந்து முனைவர் பட்ட மேற்படிப்புக்கு அழைப்பு வந்திருந்தது. இரண்டு வருடம் அங்கேயே தங்கிப் படிக்க வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகள் புரியத் தொடங்கினேன்.

***

புகைப்படம்: ஶ்ரீநாத்

தாவரங்களுக்கும் உணர்வுண்டு என்று வங்காள அறிவியலாளரான ஜெ.சி. போஸ் கண்டறிந்திருக்கிறார். அவற்றுக்கும் வலிக்கும், அவையும் மகிழும் என்று சொல்லியிருக்கிறார். இக்கூற்றுகளால் அவர் “பகல் கற்பனைகளில் இருந்து அறிவியலைத் திரிக்கிறார்” என்று அவரது சமகாலத்தவரால் கேலி செய்யப்பட்டார்.

எனக்கும்கூட என் சிறுவயதில் நாங்கள் இப்போது வாழும் வீடு கட்டப்பட்டபோது வீட்டின் நிலை கதவு பொருத்தும் சடங்கில் ஆசாரி சொன்னது நினைவுக்குத் தட்டுப்பட்டது. அதற்கு முன் இருந்த காலி மனையின் மூலையில் இருந்த பூவரச மரத்தை வெட்டி அந்த மரத்தில்தான் எங்கள் வீட்டின் பிரதான நுழைவு வாயிலின் நிலைக்கதவு செய்யப்பட்டது. அப்போது ஆசாரி, “அந்த மரம் வெட்டப்படும்போது வருத்தப்பட்டிருக்கும். அதன் வருத்தத்திற்கு நாம்தானே காரணம். நம் சுயநலத்துக்காகத்தான் அது வெட்டப்பட்டிருக்கிறது. அதனால் அதற்குப் பரிகாரம் செய்வதற்காகத்தான் இந்தச் சடங்கு” என்றார். அம்மாவும் அதை ஆமோதித்தார். எப்போதெல்லாம் நிலைக்கதவு வழியாக உள் நுழைகிறேனோ அப்போதெல்லாம் நான் ஒரு மரங்கொத்தி எப்படி ஒரு மரத்துக்குள் பொந்திட்டு வாழ்கிறதோ அது போலத்தான் நாங்களும் இந்த மரத்துக்குள் வாழ்கிறோம் என்று கற்பனை செய்துகொள்வேன்.

ஜெ.சி. போஸின் அக்கூற்றுகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபணம் ஆகிக்கொண்டு வருகின்றன. தாவரங்களின் ஒலிப்புலனுணர்வு இயல்புகள் அவரது சிந்தனைகளை அடியொட்டிப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தாவரங்களின் அழுகுரலை மனிதர்கள் கண்டறியத் தொடங்கியுள்ளனர். தக்காளி, புகையிலை போன்ற செடிகள் தண்ணீர் இல்லாத வறட்சிக் காலத்தில் தவிக்கும் போதும், அவை வெட்டப்படும் போதும் மனிதச் செவிகளுக்கு அப்பாற்பட்ட மீயொலிகளை எழுப்புவதாக டெல்-அவீவ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இது போன்று தாவரங்களின் வெவ்வேறு பருவநிலைகளில் வெவ்வேறு நிகழ்வுகளின்போது அவை எவ்வாறு வெளி ஒலியை உள்வாங்கிக் கொள்கின்றன? அவ்வொலிகள் அவற்றில் எத்தகைய மாற்றங்களை விளைவிக்கின்றன? வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவை எவ்வாறு தங்களுக்குள்ளிருந்து ஒலியெழுப்புகின்றன? தாவரங்கள் “கேட்பதோடு” நின்றுவிடாமல் “சொல்லவும்” செய்கின்றன என்பதை அதி தேர்ந்த, பரந்த வீச்சு அதிர்வுகளைக் கண்காணிக்கும் ஒலிக்கருவிகள் மூலம் பதிவு செய்து ஆராய்வதே உயிர் ஒலியியலாளர்களின் தொழில். தாவரங்களின் செவிப்புலன் இயல்புகளைக் கண்டடைந்து அவற்றுக்கும் சூழியலுக்கும் பெருத்த நன்மையை ஏற்படுத்த முடியும் அதுவே உயிர் ஒலியியல் துறையின் அடிநாதம்.

***

தாவரங்களின் பாடல்கள் வண்டுகளை ஈர்க்கின்றன. தாவரங்கள் மகிழ்வடையும்போது பூ பூக்கின்றன. பூக்களில் தேன் சுரக்கின்றன. பூ பூக்கும் ஓசையை இம்மனித குலம் விரைவில் கேட்க இருக்கிறது.

மனிதன் ஒலியால் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டவன். தாவரங்களுக்கும் மிருகங்களுக்கும் இருக்கும் செவியுணர்திறன் அவனுக்கு வழங்கப்படவில்லை. யானைகளுக்கும் திமிங்கிலங்களுக்கும் பறவைகளுக்கும் இயற்கைப் பேரிடரின் தாழொலிகளை முன்கூட்டியே உணர்ந்து கொண்டு தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரிந்திருக்கிறது. மனிதன் இயற்கையின் தாழொலிக்கும் மீயொலிக்கும் இடைப்பட்ட பயல். அதனாலேயே பாவப்பட்ட பயல்.

***

ஒலியால் சூழப்பட்ட உலகு இது. இயற்கை நிறைத்திருக்கும் மௌனத்தின் சமன் குலைவே அதிர்வாகி வெளிப்படுகிறது. நீடித்த அதிர்வுகளே ஒலியாகிப் பிரவகிக்கிறது. பிரவகிக்கும் ஒலியே மொழியாவது. இசையாவது. பலவாகிப் பிரிந்து மீண்டும் மௌனமும் ஆவது. இந்த உலகத்தில் ஒலி எழுப்பாத பொருட்களே இல்லை. ஒன்று மற்றொன்றைத் தன் ஒலியினால் அறிகிறது. ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் ஒலியினால் இணைந்திருக்கின்றது. அவ்வொவ்வோர் ஒலியையும் உணரச் செவிதான் இங்கு எவரிடத்திலும் இல்லை.

***

அக்காவிடம் இருந்து அப்பாவைப் பற்றின செய்தி வரும்போது நான் மத்திய ஆஸ்திரேலியாவின் தி கிரேட் விக்டோரியா பாலைவனத்தின் ஒரு சிற்றூரில் இருந்தேன். வெவ்வேறு பாலைவனத்துச் செடிகளின் இலைகளில் இருக்கும் ஒளிநுழையும் துளைகளை மீயொலி (ultrasonic) அதிர்வுகளை எழுப்பி எப்படி இருட்டில் அவற்றைத் திறக்க வைக்க முடியும் என்கிற ஆய்வுக்காக சிட்னியில் இருந்து ஒரு குழுவோடு வந்து செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.

சாரங்கனிடம் அதற்குப் பிறகுதான் பேசினேன். அவனும் சரி நான் இந்தியா வந்த பிறகு அப்பாவுக்கு அந்த இம்பிளாண்டை அகற்றிவிடலாம் என்றான். அப்பாவிடமும் அந்த விஷயத்தைத் தொலைபேசியில் தெரிவித்தேன். அதை அவரிடம் சொன்னபோது ஏதோ அவரை இறுக்கிய ஒரு கட்டு தளர்ந்ததைப் போல உணர்ந்தார். மூன்று வாரம் அங்கு வந்து தங்குவதாக என் பயணத்திட்டத்தையும் அவரிடம் சொல்லியிருந்தேன்.

நான் ஊர் திரும்பிய பொழுது, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் உருவாகியிருந்தது. கடந்த ஒரு மாதமாக நல்ல மழை பெய்திருந்தது. நான் வீட்டுக்குள் நுழைந்தபோது அப்பா இல்லை. அக்கா மட்டும் அவளது வீட்டில் இருந்து அன்று வந்திருந்தாள்.

“அப்பா எங்கே?” என்று கேட்டேன். “எங்கயோ போயிருக்கார் என்கிட்ட கூட சொல்லாம” என்றாள். பிறகு அப்பா வந்தார். கையில் என்னென்னவோ சாமான்கள். கேட்டதற்கு அரசு விதைப்பண்ணை வரை சென்று வந்ததாகச் சொன்னார்.

எதற்கு என்று கேட்டதற்கு அந்தச் சாமான்களை ஒவ்வொன்றாகப் பிரித்தார். காப்பர் சல்ஃபேட், அக்டாரா என்று ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகள். கூடவே ஒரு ஸ்பிரேயர் வைத்திருந்தார். அதையும் எடுத்துக் காண்பித்தார்.

“எதற்கு இதெல்லாம்?” என்றேன். “வா காட்டுகிறேன்” என்று சொல்லிவிட்டுத் தோட்டத்துப்பக்கம் கூட்டிச் சென்றார். நானும் வரும்போதே கவனித்தேன். வீட்டைச் சுற்றிய காம்பவுண்ட் சுவற்றில் எல்லாம் அவற்றின் நீர்த் தடம் இருந்தது. வாசலின் நுழையும்போதுகூட தரையில் பல இடங்களில் சீரான இடைவெளியில் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளாத இரு வரிகளில் மெல்லிசான நீர்க்கீறல் போல அவற்றின் நீர்த் தடம் தெரிந்தது.

மஞ்சள் செடிக்கு அருகே சென்று நின்றோம். அப்பா காண்பித்தார். இத்தனை பெரிய நத்தை. அந்தச் செடியின் இலையைப் பாதி தின்றும் திங்காததுமாகக் காலி செய்து கொண்டிருந்தது. அருகே இருந்த பூச்செடிகளை, காய்கறி செடிகளையும் அவை விட்டு வைக்கவில்லை. கொத்துக்கொத்தாக ஊர்ந்து கொண்டிருந்தது. பார்ப்பதற்கு அவையே காய்த்துத் தொங்கிக்கொண்டிருப்பது போல. ஒரு குழுவில் ஐம்பது அறுபது நத்தைகளாவது இருக்கும். தன் மெல்லுடலைக்கொண்டு ஒன்றன் மேல் ஒன்று ஏறி நழுவி விழுந்து சரிந்து எழுந்தன அந்நத்தைகள். எங்கிருந்து இத்தனையும் வந்தன என்று தெரியவில்லை. எந்த ஒரு பூவையும் காயையும் விட்டு வைப்பதில்லை. இலைகளை அரித்து வைத்துவிடுகின்றன என்றார் அப்பா. நானும் பார்த்தேன். தோட்டத்தில் பாதி செடிகள் அவற்றுக்கு இரையாகி இருந்தன.

வெளிப்புற ஈரச்சுவர்களில், கிணற்றடியில், துவைக்கும் கல்லின் பக்கவாட்டுகளில் எங்கும் அவைதான். ஒவ்வொரு நத்தையும் ஒரு ஆப்பிள் அளவுக்கு இருந்தது. ராட்சச நத்தைகள். அதன் ஓடுகள் ஒவ்வொன்றும் வேறுபட்ட பழுப்பு நிறங்களில் அங்கங்கே வெண்ணிறத் தீற்றல்களுடன் தென்பட்டன. இத்தனை பெரிய நத்தையை நான் இதற்கு முன் கண்டதே இல்லை.

அப்பா புலம்பினார். அம்மா வைத்த இந்தத் தோட்டம் இந்த நத்தைகளுக்கு இரையாவது அவருக்கு மட்டுமல்ல எனக்குமே சங்கடத்தைத் தந்தது.

அப்பா சொன்னார். இவை கிழக்கு ஆப்பிரிக்காவின் நன்னீர் நத்தைகளாம். மழைக்காலம் என்பதால் அருகில் கேட்பாரற்றுக் கிடக்கும் காலி மனைகளில் இருந்து பல்கிப் பெருகிப் படையெடுத்து வருகின்றன என்றார்.

நானும் அன்று மாலை அக்கம் பக்கம் விசாரித்தேன். கண்ணாலேயேகூட கண்டு விட்டு வந்தேன். எங்கள் நகர்ப் பகுதி முழுவதுமாகவே அவற்றை எங்கேயும் பார்க்க முடிந்தது.

ஏன் இவை வருகிறது? எங்கிருந்து வந்தவை இவையெல்லாம்? எப்படி திடீரென்று இங்கே தோன்றியிருக்கிறது? எதற்கும் பதிலில்லை. இதற்கு முன்பான வருடங்களில்கூட மழைக்காலங்களில் இத்தகைய நத்தைகளின் வரத்தை நான் கண்டதில்லை.

அப்பா இவற்றால் பெரும் மனம் உளைச்சலுக்கு ஆளானார் என்பது பின்னர்தான் தெரிய வந்தது. காதுக்கருவியின் தொந்தரவு இனி இல்லை என்கிற அவரது நிம்மதியைச் சீர்குலைத்து இப்படி ஒரு பிரச்சனை அவரை அலைக்கழித்தது.

துவண்டு போய் “ராஜி, என்ன இதல்லாம்? எங்கேந்து இதுகள கூப்ட்ருக்க நீ? சொல்லேன்? நான் பேசுறது உனக்குக் கேக்கறதா இல்லையா? ஏதாவது சொல்லேன்? இப்ப நீ ஏதாவது சொன்னாதான் எனக்குக் காதுல விழும். அடுத்த வாரத்துலேந்து அதும் கெடையாது. ஆனா ராஜி, நான் உன்ன இப்படியே உட்ற மாட்டேன்.” என்று நான் வந்த நாளில் இருந்து தோட்டத்துச் செடிகளிடம் புலம்பிவிட்டு வருவார். எனக்கும் அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை.

தான் கொண்டு வந்த பூச்சிமருந்துகளைச் சரி விகிதத்தில் நீருடன் கலந்து செடிகளில் தெளித்தார். இரண்டு நாட்கள் அப்படிச் செய்தார். அவை ஒழிந்த பாடில்லை. என்ன செய்வதேன்றே தெரியவில்லை. இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே வேப்பெண்ணெய் மற்றும் இதர இயற்கைப்பூச்சி விரட்டி மருந்துகளை அடித்துப் பார்த்திருக்கிறார். பயன் இல்லை. மஞ்சள் கலந்த நீரை தெளித்திருக்கிறார். உப்புக்கரைசலைத் தெளித்துப் பார்த்திருக்கிறார். ஒன்றும் உதவவில்லை. மழையும் வேறு விடாமல் பெய்திருக்கிறது. அடுத்த வாரம் அவரை அறுவை சிகிச்சைக்காகத் தயார் படுத்த வேண்டும்.

மருத்துவமனையில் அப்பாவைச் சேர்க்கும் நாளுக்கு இரண்டு நாட்கள் முன்பு நத்தைகள் இன்னும் இன்னுமென எங்கள் வீட்டுத் தோட்டத்தில் தென்பட்டன. செடிகள் அனைத்தும் தரை தெரியாத அளவுக்கு நின்ற மழை நீரில் மூழ்கியிருந்தன. நத்தை அரித்த இலைகள் அழுகத் தொடங்கியிருந்தன. ஒருவித அழுகல் வாடை அவற்றிலிருந்து வெளிவந்து காற்றின் ஈரத்தில் கலந்திருந்தது. வீட்டின் எந்த அறையில் நுழைந்தாலும் அந்த வாடையை உணர முடிந்தது.

அப்போது என்ன தோன்றியதோ எனக்கு. நான் ஒரு காரியம் செய்தேன். நான் என் ஒலிக்கருவிகளைக் கையோடு எடுத்து வந்திருந்தேன். அவற்றில் பத்து பதினைந்து மைக்ரோஃபோன்களை என் வீட்டைச் சுற்றி இருந்த தோட்டச்செடிகளுக்கு நடுவிலும் அருகிலிருந்த சுவர்களிலும் ஒட்டிவைத்தேன். அவற்றை எளிதாக நினைவு வைத்துக்கொள்ள அவற்றுக்கு ஒன்று, இரண்டு, மூன்று என எண்வரிசை இட்டு வைத்துவிட்டுக் குறித்துக்கொண்டு வந்தேன். என் கணிப்பொறியில் இயங்கும் மென்பொருள் ஒன்றில் என் வீட்டிற்கு வெளியே பொருத்தியிருந்த கருவிகள் மூலமாகப் பதியப்படும் ஒலிகளின் அதிர்வெண்களை அன்றிலிருந்து கண்காணித்து வந்தேன். அக்கருவி மழை வெயில் இடி புயலென அனைத்தையும் தாங்கக்கூடியதாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் பிரச்சனை இல்லை.

என் மென்பொருளும் ஒலிக்கருவிகளும் எந்தவோர் ஒலி அதிர்வுகளையும் பதிவு செய்துவிடும். தாழொலி அலைகளிலிருந்து மீயொலி அலைகள் வரை அதில் கண்காணிக்கலாம். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 0 hz முதல் 400000 hz வரை. இந்தக் கருவி மேற்சொன்ன அளவைகளுக்கு இடைப்பட்ட அத்தனை ஒலியையும்தான் பதிவு செய்யும். ஆனால் அந்த மென்பொருளில் ஏற்றப்பட்ட பொறிகற்றல் தொழில்நுட்பத்தின் (machine learning) மூலம் நமக்குத் தெரிந்த அன்றாட ஒலிகளையும் பழக்கப்பட்ட ஒலி அலைவரிசைகளையும் நீக்கிவிடும். அதனால் அவற்றை வைத்துக்கொண்டு எந்த ஒரு மாற்று ஒலி அதிர்வுகளையும் அளக்க முடியும்.

எனக்கு இது ஏன் தோன்றியது என்றால், திடீரென்று இந்த நத்தைகள் இங்கு தோன்றியிருக்க முடியாது? எவையோ அவற்றை அழைத்திருக்க வேண்டும்?

இந்த உலகத்தில் ஒன்று ஏதோ ஒரு மற்றொன்றை ஓயாமல் ஒலியெழுப்பி அழைக்கின்றது. என் தோட்டத்துச் செடிகள் அழைக்காமல் இவை வந்திருக்காது? ஆம், தாவரத்துக்குத் தான் நீரில் கிடந்து அழுகுவது தெரிய வந்திருக்கிறது. அப்படித் தெரியவரும் போது அவை தன்னைப் புசிக்க பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும் அழைப்பை விடுக்கின்றன. ஒலி எழுப்புகின்றன. அவ்வொலியை உணர்ந்து கொண்டு இந்த நத்தைகள் இங்கு வந்திருக்கலாம்தான். அப்படிப்பட்ட ஒலியும் பதியப்படலாம்தானே. படலாம்தான். தாவரங்கள் தன் மரணப்பாடலைத் தானே பாடுகின்றனவா? மற்ற உயிரினங்கள் தழைப்பதற்கென “செத்தும் கொடுத்து” செல்கின்றனவா அவை? அழுகும் செடியில் இருந்து அப்படிப்பட்ட அழுகை பதியப்பட்டால்?

***

அப்பாவை மருத்துவமனையில் சேர்க்கும் நாளும் வந்தது. கிளம்பும்போது கன்றிப்போய் நின்றிருந்த தோட்டத்துச் செடிகளைக் கண்டார். “நான் போய்ட்டு வரேன் ராஜி” என்று அவற்றிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்.

அப்பா ஏழு நாளுக்கு மருத்துவமனையிலேயே தங்க வைக்கப்பட வேண்டும் என்று சாரங்கன் கூறியிருந்தான். நான்காம் நாள் அறுவை சிகிச்சையை வைத்துக்கொள்ளலாம் என்று தேதி சொல்லியிருந்தான். நான் ஒன்பதாம் நாள் புறப்படத் திட்டமிட்டிருந்தேன். அப்பாவை நானும் அக்காவும் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் பார்த்துக்கொண்டோம். அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில் நான் என் வீட்டுக்குப் போகவேயில்லை. அப்பாவுடனேயே இருந்தேன். அக்கா அவள் வீட்டில் இருந்து வேண்டுமென்கிற சாமான்களையும் சாப்பாடு பழவகைகளையும் கொண்டுவந்து தருவாள். அப்பாவை இப்படிப் பார்ப்பதற்கு எங்கள் இருவருக்குமே கவலையாக இருந்தது. தன் முழுச்செவிடிற்கே திரும்ப வேண்டுமென்று இவருக்கு ஏன் இத்தனை பிடிவாதம்?

குறிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாள் அறுவை சிகிச்சை தள்ளிப்போனது. அன்று சாரங்கனுக்கு வேறு ஒரு வேலை வந்துவிட்டது. தோழன் என்பதனால் மன்னிப்பு கேட்டுக்கொண்டு தள்ளிப்போட்டுவிட்டான். கடந்த மூன்று தினங்களாக நன்றாக வெயில் அடித்தது. அப்பாவைச் சேர்த்த முதல் நாளில் ஒரு பேய் மழை அடித்தது. அத்துடன் மழை முழுவதுமாக நின்றுவிட்டிருந்தது.

அப்பாவுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அவர் காதுகளில் பொருத்தப்பட்ட செவிக்கருவியும் மின்முனையும் (electrode) எந்த ஓர் உப விளைவுகளுக்கும் அவரை உட்படுத்திவிடாமல் நீக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து அவரை வீட்டிற்கு அழைத்துச்செல்லலாம் என்று சொல்லிவிட்டான் சாரங்கன்.

அப்பா நல்லபடியாக இருந்தார். இனி எதுவுமே அவர் செவிகளில் விழப்போவதில்லை. “இரைச்சல் நின்னுடுத்து” என்றார் என்னைப் பார்த்து. ஆனால் அவர் முகத்தில் இருந்த கவலை இன்னும் நீங்கவில்லை. எப்போது வீட்டிற்குச் செல்வோம்? செல்வோம்? என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அறுவை சிகிச்சை முடிந்து மூன்றாம் நாள் காலை நானும் அக்காவும் அப்பாவுடன் எங்கள் வீட்டிற்கு வந்து இறங்கினோம்.

அப்பா அவசர அவசரமாக இறங்கி ஓடினார். நேராகத் தோட்டத்திற்குச் சென்று பார்த்தார். செடிகளைச் சூழ்ந்திருந்த நீர் வடிந்திருந்தது. நத்தைகள் முழுவதுமாக அகன்றுவிட்டிருந்தன. ஆனால் அவற்றின் ஓடுகள் அங்கங்கே குவியலாக கிடந்தன. தோட்டத்தில் எங்கு கால் வைத்தாலும் நறநறவென அவை மிதிபடும் நொறுங்கும் சத்தம்தான். அப்பா உடைந்திடாத சில நத்தை ஓடுகளைப் பொறுக்கினார். ஒவ்வோர் ஓடும் நல்ல வலஞ்சுழி சுருள்வளையங்களைப் பெற்று ஆட்காட்டி விரலின் நீளத்திற்கு சுருள் கொண்டு அமைந்திருந்தது.

அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. திடீரென்று அவற்றில் ஒன்றைத் தன் காதின் அருகில் கொண்டு போய் அதனின் வாய்ப்பகுதி அவரது காதில் படுமாறு வைத்துக் கேட்டார். இரண்டு மூன்று நிமிடம் அப்படியே வைத்துக்கொண்டு நின்றார். பின்னர், விண்ணென்று ஏதோ ஒரு சத்தம் அவர் காதில்பட்டுத் தாக்கியது போலச் சட்டென அதனைத் தன் காதில் இருந்து விலக்கிக்கொண்டார். அவரது உடல் நடுக்கம் கண்டிருந்தது. அவரது நடுக்கம் கொண்ட கை விரல்கள் அவர் அறியாமலேயே தன்னிச்சையாகவே மீண்டும் அந்த நத்தை ஓட்டை அவரது காதுக்கு அருகினில் கொண்டுபோய்ச் சேர்த்தது.

பிரமை பிடித்தவரைப் போல் நின்றவர், சற்று நேரத்திற்குள்ளாகவே மேகம் கருக்கொண்டு மழை பொத்துக்கொள்வது போலக் கண்ணீர் வடிக்கத் தொடங்கினார். அவரது காதுகளுக்குள் அம்மாவின் பாடல் மெலிதாக மிகவும் குழைவாகச் சுழன்று சுழன்று தூரத்தின் எதிரொலியாக ஓங்காரமாக ரீங்காரமாக எங்கோ ஒலித்துக்கொண்டிருந்தது.

“ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்சஜன்யமே”

வானத்தைப் பார்த்துக்கொண்டு அந்தக் கிளிஞ்சலில் செவிசாய்த்து, கேட்டுக் கரைந்து கொண்டிருந்தார்.

“அப்பா, அப்பா” என்று கூப்பிட்டுக்கொண்டே நான் அவரது முதுகில் தட்டி அழைத்தேன். திரும்பி எங்கள் இருவரிடமும் கண்ணீர் மல்க, “உங்க அம்மாவோட குரல் கேக்கறது எனக்கு. நான் சொல்லிட்டுப்போனது அவளுக்குக் கேட்டுடுத்து. அவ எனக்காகப் பாடிண்டிருக்கா. எந்த மலைல எந்தக் குகைல எதிரொலிச்சிண்டு இருக்கறதோ அவளோட குரல். எந்தக் கடல்ல எந்த ஆழத்துல ஒளிஞ்சுண்டு இருந்ததோ இந்தக் குரல் இத்தனை நாளா” என்று சத்தம் போட்டுத் தேம்பினார்.

எங்கள் காதுகளிலும்கூட அப்பா அந்த நத்தை ஓட்டினை வைத்து “அம்மா குரல் கேட்கறது பாரு. கேட்கறதா?” என்று கண்கள் அகன்ற புருவங்கள் உயர்ந்த ஒரு பதைபதைப்புடனும் ஆச்சரியத்துடனும் கேட்டுக்கொண்டிருந்தார். எங்களுக்கு எதுவுமே கேட்கவில்லை.

பிறகு அக்கா எடுத்துச்சொன்னாள். “சாரங்கன் சொல்லிருக்கானேடா, இம்பிளான்ட் எடுக்கப்பட்டவாளுக்கு கொஞ்ச காலம் சில நேரம் இப்படி ஆடிட்டரி ஹாலுசினேஷன்ஸ் இருக்கும்னு. பழைய குரல்கள்லாம் இப்படி கேட்க வாய்ப்பிருக்கும்னு. அதுவா இருக்கும். நீ ஒன்னும் பயப்படாத. நான் பாத்துக்கறேன் இனிமே. அப்பா இருக்கிற நிலைமைக்குச் சொல்லவே வேணாம். ஏதோ கற்பனை பண்ணிண்டிருப்பார். நீ ஊருக்குக் கெளம்பற வழியப்பாரு” என்று என்னைச் சமாதானப்படுத்தினாள். அன்றே நான் புறப்பட்டாக வேண்டும். அதனால் அவசர அவசரமாக என் பொருட்களை எடுத்து வைத்துக் கிளம்பிக்கொண்டிருந்தேன்.

புறப்படும் முன் அப்பாவிடம் சொல்லிக்கொள்ளச் சென்றேன். அப்பா தோட்டத்தில், மாடிப்படிக்குக் கீழ் கிடத்தப்பட்டிருந்த உடைந்த மேசையை இழுத்துப் போட்டு அதில் தன்னை அமர்த்திக்கொண்டு தான் சேர்த்து வைத்த கிளிஞ்சல்களையெல்லாம் ஒவ்வொன்றாய் எடுத்துக் காதில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். என்னிடம், புருவங்கள் உயர்ந்த அதே ஆச்சரியத்தோடு “அம்மாவோட குரல் கேட்கறது பார். அம்மாவோட குரல் கேட்கறது பார்” என்று இன்னும் சொல்லிக்கொண்டிருந்தார்.

***

சென்னையில் இருந்து அன்று மதியமே விமானம் ஏறியிருந்த நான் ஆஸ்திரேலியாவுக்கு இணைப்பு விமானத்தைப் பிடிப்பதற்காகக் கோலாலம்பூர் விமான நிலையத்தில் காத்திருந்தேன்.

விமான நிலைய லாஞ்சில் மிகப்பெரிய LED டிவியில் ஒளிப்பரப்பப்பட்ட செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் இந்திய நேரப்படி மதியம் மூன்று மணி வாக்கில் அந்தமான் தீவுகளுக்கும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைக்கும் மத்தியில் வங்கக்கடலில் 5.5 ரிக்டர் அளவையில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாகச் செய்தி ஒளிபரப்பட்டுக் கொண்டிருந்தது. சென்னையில் சில இடங்களில் அந்த நடுக்கத்தினை உணர்ந்ததாக மக்கள் செய்தியாளர்களிடம் செய்தியளித்துக் கொண்டிருந்தனர். ஆனால் பெரிதும் பாதிப்பில்லை என்றனர். நான் அக்காவுக்குத் தொலைபேசியிட்டுக் கேட்டறிந்தேன். அவள் “நாங்கள் எங்கள் பகுதியில் எதுவும் அப்படி உணரவில்லை” என்றாள். நான் அப்பா சாதாரணமாக இருக்கிறாரா என்று கேட்டுவிட்டு ஃபோனை வைத்தேன்.

சட்டென எதுவோ தோன்ற, நான் என் மடிக்கணினியைத் திறந்து அந்த மென்பொருளுக்குள் நுழைந்தேன். கண்காணிக்கப்பட்ட ஒலி அளவைத் தரவுகளை ஒருமுறை நோக்கினேன். வழக்கத்துக்கு மாறாக புதிதாக ஏதும் தட்டுப்பட்டதா என்று கூர்ந்து அலசினேன். சொல்லி வைத்தாற் போல, சரியாக அன்று காலை அப்பாவுடன் வீட்டுக்குள் நுழைந்து சில கணங்களுக்குப் பிறகு, நான் எண்வரிசையிட்டு வைத்திருந்த, அவசரத்தில் பிய்த்துக்கொண்டு வந்த அத்தனை ஒலிப்பான்களிலும் 15 hz அளவையிலான ஒரு தாழொலி (infrasonic) பதிவாகியிருந்தது. அவை நிச்சயம் நிலநடுக்கத்தின் ஒலி அலைகள்தான். நிலநடுக்கத்தின் ஒலி அலைகள் – செய்ஸ்மிக் அலைகள், நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய குறைந்த அதிர்வெண்கொண்ட தாழொலி அலைகள்தான்.

அதில் 11 என்று எண்ணிட்ட மைக்ரோஃபோனில் மட்டும் ஒரு துளி கணத்துக்கு ஒலிச்செறிவு எகிறிப்போய் இறங்கியிருந்தது. மற்றவைகளில் அப்படி ஏதும் பதிவாகவில்லை. என்ன நடந்தது என்று யோசித்துப் பார்த்தேன். அவசர அவசரமாக நான் பிய்த்துக்கொண்டு வந்தபோது அந்த 11 என்று எண்ணிட்டு வைத்திருந்த, சுவரில் ஒட்டியிருந்த அந்த ஒலிக்கருவியின் மேல் ஒரு முழு நத்தை ஓடு அதன் வாய்ப்பகுதி அக்கருவியின் மேல் மூடி சிக்கியிருந்ததை நினைவுக்கூர்ந்தேன். நத்தை ஓட்டை எடுத்துத் தூர எறிந்துவிட்டு இதனை மட்டும் பிய்த்துக்கொண்டு வந்திருக்கிறேன்.

அப்பாவுக்கு முதல் முதலாக இம்ப்ளாண்ட் வைத்தபோது சாரங்கனிடம் பேசிக்கொண்டிருந்ததில் சாரங்கன் ஒன்றை விளக்கியிருந்தான்.

“இந்த காக்லியாங்கற நம்ம காதோட உட்பகுதி, ஒரு ஸ்பைரல் அமைப்ப கொண்டிருக்கு. அது வழியா ஒலியலைகள் அந்தச் சுருள்வட்டப்பாதையில போகும்போது அதிக ஃப்ரீக்குவன்ஸி உள்ள சவுண்டெல்லாம் அந்தச் சுருளோட வாய்ப்பகுதிலேயே கண்காணிக்கப்பட்டு மூளைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனா, இந்தக் கம்மியான ஃப்ரீக்குவன்ஸி சவுண்டெல்லாம் அந்தச் சுருளோட மையம் வரை ஊடுருவும். அப்ப அதோட சவுண்ட் இண்டென்ஸிட்டி கூடி அந்தக் கம்மியான சத்தத்தையும் நம்மலால கேக்கும்படியா மாத்திடறது இப்படியான ஒரு ஸ்பைரல் அமைப்பு” என்று சொன்னதை மேகங்களுக்கு மத்தியில் இருட்டில் பறந்து கொண்டிருக்கும் என் விமானம் ஒரு பக்கமாய்ச் சாய்ந்ததில் அதன் இறக்கையில் மினுமினுத்த அந்த மஞ்சள் வெளிச்சத் தீற்றலைப் பார்த்துக்கொண்டே நினைத்துக் கொண்டிருந்தபோது என் நினைவுச்சரட்டின் ஒரு துண்டறுந்து தெறித்து விழுந்தது.


மேலும் படிக்க

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:

குறிப்பிடத்தகுந்த கதைகள்:

லோகேஷ் ரகுராமன்

பெங்களூருவில் கணினி தொழில்நுட்பத்துறையில் பணிபுரிகிறார். சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம். இரண்டு வருடங்களாய்ச் சிறுகதைகள் எழுதிவருகிறார். தொடர்ந்து சொல்வனம், கனலி, நடு, தமிழினி போன்ற இணைய இதழ்களுக்குச் சிறுகதைகள் எழுதி அனுப்பியிருக்கிறார். விஷ்ணு வந்தார், நீர் பதுமராகம், அரோமா, அது நீ போன்ற கதைகள் தமிழினி இணைய இதழில் பரந்த வாசிப்புக் கவனத்தைப் பெற்றன.

Share
Published by
லோகேஷ் ரகுராமன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago