கதை

நோய் முதல் நாடி

21 நிமிட வாசிப்பு

[1]

நேசன் நிர்வாணமாக படுத்திருந்தான்.

போர்த்தியிருந்த ஆகாய நீல நிற மின்போர்வையைக் கழுத்துவரை சரியாக இழுத்துவிட்டுக்கொண்டு கையிலிருந்த விசையை அழுத்தினான்.

எதிரே இருந்த திரைச்சீலை விலக, கணியின் பெரிய திரையில் அழகியின் முகம் புன்னகைத்தது.

“குட் மார்னிங் நேசன். வெல்கம் டு யுவர் அப்பாய்ன்மெண்ட் அட் டெலிஹெல்த்!”

“உங்களோட ஸ்கேன் சில நொடிகள்ல ஆரம்பிக்கப் போகுது. எனி க்வஸ்சின்ஸ்?”

இல்லை என்று தலையசைத்தான்.

“குட். ப்ளீஸ் ஸ்டே ஸ்டில் அன்டில் த ஸ்கேன் இஸ் கம்ப்ளீட்”

திரையில் அவள் முகம் மறைந்து மாண்டலின் ஸ்ரீனிவாசின் ’சாமஜ வரகமனா’ மென்மையான தாளத்துடன் ஒலிக்க ஆரம்பித்தது.

மின் போர்வையின் வெளியே தலையற்ற மனித உடலின் கோட்டுருவமான படம் வரையப்பட்டிருந்தது. அதனுடன் பொருந்தி தலை மட்டும் வெளியே தெரியும்படி நேசன் ஒரு கேலிச்சித்திரத்தைப்போலப் படுத்திருந்தான்.

போர்வையின் உள்பக்கத்தில் ஏகப்பட்ட சென்ஸர்கள். மின்மினிப்பூச்சி போல மினுங்கியபடி தரவுகளைச் சேகரித்து சாட்டிலைட் இணைப்பு வழியாக மருத்துவமனையின் கணினிக்கு அனுப்பிக்கொண்டிருந்தன. அவை அனைத்தும் ஆராயப்பட்டுத் திரும்பி வந்து படங்களாகவும் மலைத்தொடர் போல் ஏறி இறங்கும் கோடுகளாகவும் திரையில் தெரிய ஆரம்பித்தன.

நேசன் அசையாமல் கண்களை மூடிப் படுத்திருந்தான்.

அரக்குநிற உதட்டுச்சாயம், திருத்தப்பட்ட புருவங்கள், அடர்க் கருப்பில் குட்டையான தலைமுடி. உடனடி புன்னகை, கிருஷ்ணநீலத்தில் உடலோடு ஒட்டிய தோலாடை. இந்தக் காலத்துப் பெண்டுகள் இயந்திரத்தைப்போல மாறிவிட்டார்கள். இவள் உண்மையில் பெண்தானா? ரோபோ அல்லது அனிமேஷனாகக்கூட இருக்கலாம்.

ஆனால் இதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவும் முடியாது என்று நினைத்துக்கொண்டபோது எரிச்சலாக இருந்தது.

“யுவர் ஸ்கேன் இஸ் கம்ப்ளீட்டட் நேசன், யு மே கெட் அப்”

கணினியின் திரையை அணைத்துத் திரைச்சீலைகளையும் மூடிவிட்டுப் படுக்கையிலிருந்து மெதுவாக இறங்கினான்.

ஆடைகளை அணிந்தபின் கைகளை உயர்த்திச் சுழற்றி ஆசுவாசப்படுத்திக்கொண்டு அமர்ந்தான்.

“உங்களின் ரிப்போர்ட் தயாராகிவிட்டது. ரெடி டு ஹியர்?” திரையில் மீண்டும் அதே அழகி.

“ஆம்” எனத் தலையை அசைத்தான்.

“கிரேட். ஆல் குட் ந்யூஸ் நேசன். உங்களின் இரத்த அழுத்தம், இதயம், சுவாசம், சிறுநீரகம், கல்லீரல், பெருங்குடல், கணையம், மூளை இயக்கம்… ஆல் ஆர் இன் குட் கண்டிஷன்.. ஃபுல் ரிப்போர்ட் இஸ் இன் யுவர் ஃபைல். நீங்க எப்ப வேண்டுமானாலும் பார்க்கலாம்”

எதையோ நினைவுகொள்ள முயன்று அவன் பேசத் தயங்குவதைக் கவனித்து, “ஐம் மேஹா” கேள்விகள் இருந்தால் என்னை அழைக்கத் தயங்க வேண்டாம்” என்றாள், அழகான பல்வரிசை.

“தாங்யூ மேஹா, ஷ்யூர்” கணினியின் திரையை அணைத்துவிட்டு நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டான் நேசன்.

எதையோ நினைத்துக்கொண்டு அதிருப்தியில் வெறுமனே அமர்ந்திருந்தான்.

[2]

நேசன் கருப்புக்கண்ணாடி அணிந்து வெளி முற்றத்தில் நின்றிருந்தான். கையில் தேநீர்க் குவளை.

வெளியே மங்கிய அழுக்கு நீல வானம். கீழே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அழகாகக் கத்தரிக்கப்பட்ட புல்வெளி.

வெளிறிய மஞ்சள் நிறச் சூரியன் அடிவானத்தை நிறைத்துக்கொண்டு மேலே எழுந்துகொண்டிருந்தது.

தினமும் பார்க்கும் உதயம்தான். ஆனால் ஏதோ ஒரு வித்தியாசம். கூர்ந்து பார்த்தான்.

தேனீக்கள் போலக் கரும்புள்ளிகள் ஒளி வட்டத்தின் அடிப்பக்கத்தில் இருந்து கிளம்பிக்கொண்டிருந்தன.

வாட்….?! நம்ப முடியாமல் உற்றுப்பார்த்தான். மேலும் பல தேனீக்கள் கிளம்பி மேல்நோக்கி வந்து கொண்டிருந்தன.

திகைப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சூரியனின் நீல ஒளி வட்டம் முழுக்க தேனீக்கள் நிறைந்துவிட்டன.

அப்போதுதான் அதைக் கவனித்தான். அவை தேனீக்கள் அல்ல, துளைகள்!

கரும்புள்ளிகள் இன்னும் அதிகமாகிக்கொண்டிருந்தன. முழுக்க உயர்ந்துவிட்ட சூரியன் இப்போது பிறைநிலவு போலத் தெரிந்தது.

சில நொடிகளில் சூரிய வட்டம் முழுக்க தேனீக்கள் சூழ்ந்துவிட்டன்! உடையப்போகும் சோப்புக்குமிழி போல… நூற்றுக்கணக்கான துளைகள்!

திடீரெனக் குளிர ஆரம்பித்திருந்தது. என்ன நடக்கிறது?

வெட்டி எறிந்த நகம் போலச் சூரியன் கொஞ்சூண்டு தெரிந்தது.

இல்லை. இப்போது முழுக்க மறைந்து விட்டிருந்தது.

“ஓ மை காட்!” அலறினான்.

குளிர் அதிகமாக ஆரம்பித்திருந்தது.

வேகமாக வீட்டுக்குள் வந்து கதவை மூடிவிட்டுக் கம்பளிச் சட்டையை எடுக்க ஓடினான்.

வீட்டுக்கூரையின் மீது ஒரு கண்ணாடிப்புட்டி விழுந்து உடையும் ஒலி!

கண்ணாடிப்புட்டி எப்படிக் கூரையில்?

கம்பளிச் சட்டையை அணிந்து கொண்டிருக்கும்போது மேலும் சில கண்ணாடிப்புட்டிகள் விழுந்து நொறுங்கிக் கொண்டிருந்தன.

அவசரமாக சப்பாத்துகளை அணிந்துகொண்டு கதவைத் திறந்து வாசலுக்கு ஓடினான்.

பீங்கான் புட்டிகள் கூரையிலும் தரையிலும் விழுந்து நொறுங்கிச் சிதறிக்கொண்டிருந்தன.

விழுந்து நொறுங்கிச் சிதறிய புட்டி ஒன்று காலுக்குப் பக்கத்தில் விழுந்தது.

ஏதோ பழக்கமான ஒன்று. கால் அருகில் கிடந்ததைக் குனிந்து கையில் எடுத்தான்.

வெள்ளை நிறப் பீங்கான் புட்டியா? அப்போதுதான் கவனித்தான். அது பீங்கான் போல உடைந்து சிதறிய புறா ஒன்றின் பாதி உடல்!

வெள்ளை நிறப் பீங்கான்புட்டி போல உறைந்து விறைத்த புறாக்கள்!

பெரும் ஓசையுடன் கூரையிலும் தரையிலும் விழுந்து, விழுந்த வேகத்தில் பீங்கான் புட்டிகளைப்போல நொறுங்கி சிதறிக்கொண்டிருந்தன.

மேலும் அதிகமான புட்டிகள் விழுந்து சிதறும் ஒலி!

இருள் சூழ ஆரம்பித்திருந்தது. கடுமயான குளிர்.

இப்போது மேலும் நூற்றுக்கணக்கில் புட்டிகள் வீட்டுக் கூரை மீதும் முற்றத்திலும் விழுந்து நொறுங்கிக்கொண்டிருந்தன.

கூரை உடைந்து நொறுங்குவது போன்ற சத்தம். ஐய்யோ..கட்டிடம் உடைந்து மேலே விழுந்துவிடுமா?

பீதியில் அலறிக்கொண்டே சாலையை நோக்கி ஓடினான்.

உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. விரல்களில் கடுமையான வலி.

ஓட முடியவில்லை. மூச்சு இரைத்தது.

உடலை உறைய வைக்கும் குளிர். இடது கால் மரத்துவிட்டிருந்தது. கைகளில் பொறுக்க முடியாத வலி.

மரத்துவிட்ட காலை இழுத்துக்கொண்டே ஓடினான்.

நன்றாக இருட்டிவிட்டது. தூரத்தில் ஏதோ ஒரு சிறு வெளிச்சம்.

இரும்புத்துருவின் வாசம். எங்கிருந்து வருகிறது? அவன் முகத்தில் மூக்கு இருந்த இடத்தில் இரு துளைகள். காய்ந்த களிமண் பிண்டத்தைப்போல முகத்திலிருந்து பிளந்த மூக்குச்சதை தரையில் விழுந்து கிடந்தது.

சில அடிகள் வைத்திருப்பான். ஏதோ உடைந்து விழுந்து காலில் இடறியது.

மிருகத்தைப்போல அலறிக்கொண்டு நடுங்கியபடி தோள் பட்டைக்குக் கீழே இடது கையால் தொட்டுப்பார்த்தான்.

வலதுகை இருந்த இடத்தில் பீங்கான் சில்லு போல உடைந்த எலும்பு துருத்திக்கொண்டிருந்தது. கை இருந்த இடம் வெறுமையாக இருந்தது.

அலறிக்கொண்டு கடும் இருட்டில் தரையை தடவி எடுத்தான். பனிக்கடிபோல உறைந்து உடைந்து விழுந்திருந்த வலது கை!

அலறிக்கொண்டு ஓடினான்.

கணுக்காலுக்குக் கீழே இடது பாதம் பிளந்து தனியாக விழுந்தது.

ஒரு காலால் தத்திக்கொண்டே ஓடினான். சில அடிகள் ஓடுவதற்குள்ளாகவே வலது பாதம் பிளந்து தனியாக விழுந்தது.

பெருங்குரலெடுத்து அலறினான். ஆனால் எந்த ஒலியும் எழவில்லை. கழுத்துத் தசைகள் இறுகி உதடுகள் உலர்ந்து வெடித்த மரப்பட்டையைப்போல ஆகிவிட்டிருந்தன.

நீராவி உறைந்து பனி படர்ந்துவிட்ட கண்ணாடியின் வழி மேலிருந்து விழும் பொருள்களின் அசைவுகள் மங்கலாகத் தெரிந்தன.

தரையில் விழுந்தபோது அழ முடியவில்லை. உடல் கற்சிலையைப் போல ஆகிவிட்டிருந்தது. ஏதோ ஒரு பாதாளத்துக்குள் அவன் உடல்.

கண் விழித்தபோது உடல் வெடவெடத்து நடுங்கிக்கொண்டிருந்தது.

காற்று சுத்திகரிக்கும் எந்திரத்தின் மெல்லிய உறுமல்.

படுக்கையைத் தடவிப்பார்த்தான். கையையும் கால்களையும் தொட்டுப் பார்த்துக்கொண்டான்.

தேங்க் காட்! வீட்டில்தான் இருக்கிறேன், உயிரோடுதான் இருக்கிறேன்!

எழுந்து நின்று சுவரைப் பார்த்தான். மனைவியும் மகனும் நிற்கும் பெரிய சட்டமிட்ட டைனமிக் படம். நேசன் பார்த்ததும் அவர் மனைவி கண் இமைத்து முறுவலித்தாள். அவளின் கையைப் பிடித்து நின்ற சிறுவன் பக்கவாட்டில் திரும்பினான். அவன் கையிலிருந்த வெள்ளை நாய்க்குட்டியின் நீண்ட ரோமம் காற்றில் அலையாடியது.

வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு “கடவுளே!” பெருங்குரலில் அலறினான்.

[3]

“ஸோ யு ஸ்டில் கெட் தோஸ் நைட்மேர்ஸ்?

“யெஸ் டாக்டர், தினமும்”

“டெலிஹெல்த்ல தொடர்ந்து நாலு தடவை ஒருநாள் விட்டு ஒருநாள் கம்ப்ளீட் பாடி ஸ்கேன் பண்ணிருக்கீங்க… உடம்பு மூளை எல்லாமே ஆரோக்கியமாக இருக்கு எந்த வியாதியும் இல்லைனு ரிப்போர்ட் ஆயிருக்கு, கரெக்ட்?”

“எஸ் டாக்டர். யோகா, பிராணாயாம், மெடிடேஷன், ஃபிளவர் தெரபி எல்லாமே பண்ணிப் பார்த்துட்டேன். ஆனா கனவுகள் வர்றது நிக்கவே இல்லை”

“ராத்திரியில படுக்கைக்குப் போகவே பயமா இருக்கு”

“ஐ கேன் ஸீ தட். கனவு அல்லது பயம் இதனால ராத்திரியில நல்ல தூக்கம் இல்ல. ராத்திரி சரியா தூங்காதனால பகல்ல தூக்கம் வருது. ஏற்கனவே பகல்ல தூங்கிட்டதால ராத்திரியில் தூக்கம் வர்றதில்ல…ஐ கெட் இட். இட் இஸ் எ விஸியஸ் சைக்கிள்” டாக்டர் சிரித்தார்.

கண்களுக்குக் கீழே கருவளையங்கள். முகம் சற்று மங்கிச் சிறுத்திருந்தது. திடீரென முன்னை விட சில வயதுகள் மூத்துவிட்டது போல மாறி இருந்தான் நேசன்.

“கவிதைகள், நாவல்கள் – இந்த மாதிரி எதுனா வாசிக்க முயற்சி பண்ணீங்களா?”

“முயற்சி பண்ணேன் டாக்டர், புக்க அரைப்பக்கம் படிக்கிறதுக்குள்ள கண்ணு டயர்டா ஆகி கொஞ்ச நேரத்திலயே இண்ட்ரஸ்ட் போயிடும்”

“கிளாஸிகல் ம்யூஸிக் கேக்கறது?”

“ஜெ. எஸ். பாஹ்னு ஒருத்தரோட பியானோ மியூஸிக்க க்ளன் கூல்ட்னு ஒருத்தர் வாசிக்கறத கேட்டுகிட்டே, அந்த ஆல்பத்தைப் பத்தி என்ன ரிவ்யூஸ் இருக்குன்னு பாத்துகிட்டு இருந்தேன். பாஹோட நோட்ஸ முட்டிமோதி தப்பான இடத்துல சேர்த்து வாசிக்கிறார்னு ஒருத்தர் எழுதிருக்கார். மொஸார்ட்னு ஒருத்தர் நிறைய கம்போஸ் பண்ணிருக்கார். சத்தத்தோட ஃப்ரீக்வென்ஸிய சைக்கிள்ஸ் பெர் செகண்டுனு துல்லியமா அளக்க ஆரம்பிச்ச காலத்துக்கு முன்னாடி காலத்தை சேர்ந்தவர். அவர் யூஸ் பண்ண பியானோல 440 ஹெர்ட்ஸ்ல இருக்க வேண்டிய ஏ நோட் 422 ஹெர்ட்ஸ்ல தப்பா இருக்குனு ஒரு ரிசர்ச்சர் சொல்றார். பழைய மியூஸிக் எல்லாமே இப்பிடி தப்பு தப்பா இருக்குனு தெரிஞ்ச உடனயே அதுல ஆர்வம் இல்லாம ஆயிடுச்சு”

“இண்ட்ரஸ்டிங்” என்று சொல்லிவிட்டு டாக்டர் தொடர்ந்தார்.

“ஆல்ரைட். இன்னிக்கு எடுத்த டெஸ்ட்ஸுக்கு வருவோம்.. எலக்ட்ரொ என்ஸெபலோகிராஃப், எலக்ட்ரோ மேக்னடிக் டோமோகிராபி, ஸிஸ்கோர் நியூரோமெட்ரிக்ஸ். இப்பிடி உங்க மூளையோட ஒவ்வொரு அங்குலத்தையும் துருவி ப்ரெய்ன் வேவ்ஸோட கம்ப்ளீட் ப்ரொபைலயும் எடுத்தாச்சு”

“சொல்லப்போனா இதெல்லாம் சுமார் இருநூறு வருசத்துக்கும் மேல புழக்கத்துல இருக்கற பழைய டெஸ்ட்ஸ். ஆனாலும் நாடி பிடிச்சுப் பாக்கறது மாதிரி.. சில வைட்டல் சைன்ஸ் இதுலயே தெரிஞ்சிடும்”

“பல மெஸர்மெண்ட்ஸ் இருக்கு. ஃபார் இன்ஸ்டன்ஸ், ஈஸியா சொல்லப்போனா உங்க மூளையோட முன்பகுதியில பீட்டா வேவ்ஸோட வீச்சு அதிகமா இருக்கு. ஆல்பா வேவ்ஸ் தீட்டா வேவ்ஸ் ரெண்டும் கம்மியா இருக்கு.”

“இதெல்லாம் வச்சு பாக்கிறப்போ…ஒண்ணுதான் சொல்ல முடியும்”

டாக்டர் அவன் முகத்தை உடுருவுவது போல பார்த்தார். “யு ஹேவ் ஸம் கைண் ஆப் டிப்ரஷன். டிப்ரஷன் கூட ஒரு ஸ்ட்ராங்கான வார்த்தை. ஏதோ ஒரு கவலை அல்லது உளைச்சல்னு வச்சிக்கலாம்”

“அது என்ன? இது தெரிஞ்சாத்தான் குணப்படுத்தறது பத்தி யோசிக்க முடியும்”

டாக்டர் நாற்காலியை அருகில் இழுத்துகொண்டு அமர்ந்தார். “லெட் மி ஸீ யுவர் பயோ. நேசன், வயசு 56, மனைவி விபத்துல இறந்துட்டாங்க. ஒரு பையன். காலேஜ் முடிச்சிட்டு வேற நாட்டிலயோ கிரகத்துலயோ இருக்கான். நோ ரெகுலர் காண்டாக்ட்ஸ், யு லிவ் பை யுவர்செல்ஃப்.”

“இப்ப சொல்லுங்க. நீங்க எங்க வேலை பார்த்தீங்க? உங்க ஹாபிஸ் என்ன, உங்களுக்கு என்ன பிரச்சனை?”

அந்த அறையில் இருக்க விரும்பாதவனைப்போல உட்கார்ந்திருந்த நேசன் மெதுவாக பேச ஆரம்பித்தான், “பித்தாக்ரஸ் இஞ்சினியரிங்ல. ஜுனியர் இஞ்சினியரா சேர்ந்து ஆறு வருசம் கழிச்சு சீனியர் இஞ்ஜினியரா புரமோஷன். அதுக்குப்பிறகு எட்டு வருஷம் சர்வீஸ். அப்பறம் லீட் இஞ்சினியரா புரமோட் ஆகி ஏழு வருசம் … மொத்தமா இருபத்து ஒரு வருசம்”

டாக்டர் உற்சாகமான குரலில் இடைமறித்தார். “ஓ வாவ். இந்த ஹாஸ்பிட்டல் பில்டிங் அவங்க கட்டினதுதான். யு மைட் பி எ கிரேட் இஞ்சினியர்!”

“வெல்! யு கேன் ஸே தட் ஐ கஸ்”. சிரமப்பட்டுப் புன்னகைக்க முயன்றான். முகத்தில் உடனே இருட்டு திரும்பிவிட்டது.

“பித்தாக்ரஸ் இஞ்சினியரிங்ல லீட் இஞ்சினியரா இருந்திருக்கீங்க. யு மைட் பி ஒன் ஆப் த பெஸ்ட். அப்படீன்னா இந்த கவலை, மன உளைச்சல் இதெல்லாம் எங்க இருந்து வருது?” டாக்டர் கூர்மையாகப் பார்த்தார்.

“எங்க அப்பாவும் பித்தாக்ரஸ் எஞ்ஜினியரிங்கலதான் வேல பார்த்து ரிடையர் ஆனார். ஜெஸீரோவில இருக்கற பழைய ரிசர்ச் பில்டிங் அவர் இன்சார்ஜ்ல கட்டினதுதான்.”

நேசன் தலைகுனிந்து சன்னமான குரலில் சொன்னான். “56 வது பர்த்டே முடிஞ்சு ஒருவாரம் ஆகியிருக்கும். …ஹி கமிட்டட் சூஸைட்”.

“ஐ எம் ஸோ சாரி!” என்றார் டாக்டர்

கொஞ்ச நேரம் அமைதி. அசெளகர்யத்தை உடைத்துக்கொண்டு நேசன் சொன்னான். “அவரும் லீட் இஞ்சினியராத்தான் இருந்தார். ஆனா அவருக்கு பெரிய ஒரு மனக்குறை. அதில இருந்து அவரால வெளிய வரவே முடியல”

டாக்டர் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

“நான் பிறந்த வருசம் ஜூனியர் எஞ்ஜினியரா சேர்ந்தார். அப்ப அவருக்கு 24 வயசு. எனக்கு ஆறுவயசு இருக்கும்போது எங்களோட புதுவீடு கட்டி முடிஞ்சது. அப்ப அவருக்கு முப்பது வயசுக்குமேல இருக்கும்.”

“வீட்டு டிராயிங் ரூம்ல முக்கோண வடிவத்துல மாடம் மாதிரி ஒரு ஸ்ட்ரக்சர். புது வீட்டுக்குக் குடிபோன முதல் நாளே அது என்னனு கேட்டேன். இந்த வருசம் அப்பா ஒரு அவார்ட் வாங்கப்போறேன், அது வைக்கபோற இடம்னு சொன்னார்”

“அப்பத்தான் பித்தாக்ரஸ் எஞ்ஜினியரிங் ஆண்டு விழால தர்ற அந்த அவார்ட் பத்தி தெரிஞ்கிட்டு சரி கிடைக்கும்னு நினைச்சுகிட்டேன். அந்த வருஷ ஃபங்ஷனுக்கு அம்மாவயும் என்னயும் அப்பா கூட்டிகிட்டு போனார்”

“ஆனா அவருக்கு அவார்ட் கெடைக்கல. அதுனால அவர் அப்ஸெட்டா இருந்தார்னு பல வருஷங்கள் கழிச்சு தெரிஞ்சுகிட்டேன்”

“அடுத்த வருஷமும் போனோம். அதே போல அதுக்கு அடுத்த வருஷமும்”

“ஆனா அவருக்கு அவார்ட் கிடைக்கவே இல்ல…”

“கடைசி வருஷம் ரிடையர்மெண்ட் ஃபங்ஷனும் சேர்ந்து வந்ததால நானும் அம்மாவும் போனோம். ம்கூம்..! …அப்பவும் கெடைக்கல”

“அப்ப நான் வெளியில இருந்து காலேஜ் முடிச்சிட்டு லீவ்ல வீட்டுக்கு வந்த சமயம். அப்பா ரிடையர் ஆகி ஒரு வருசம் இருக்கும். ஒரு நாள் ராத்திரி லேட் நைட். அப்பா உட்கார்ந்து அந்த மாடத்தில இருக்க காலி இடத்தையே பார்த்துகிட்டு இருந்தார்”

“அன்னிக்கி, எப்படியாவது அந்தப் பிரமிட கொண்டு வந்து அங்க வைக்க முடியாதான்னு இருந்திச்சு. ஹி வாஸ் சச் என் அமேஸிங் டாட், ஃபேமிலி மேன்”

“ஹி வாஸ் அ கிரேட் ஹியூமன் பீயிங்…யு நோ..” நேசனின் குரல் தழுதழுத்தது.

“அதுக்கப்பறம் ஒரு மூணுமாசம் ஆயிருக்கும். வீட்ல யாரும் இல்லாதப்ப அதே நாற்காலில உட்கார்ந்த மாதிரியே கைய இடது கைய அறுத்துகிட்டார். ரேடியல் ஆர்ட்டரி, வீட்ல எல்லா ரூம்லயும் ஹீம் சென்ஸர்ஸ் இருக்கணும்னுங்ற சட்டம் இல்லாத காலம் அது. ஹி குட் நாட் பி ஸேவ்ட்”

“காலேஜ் முடிச்சு நானும் பித்தாக்ரஸ்ல வேலைக்குச் சேர்ந்ததுக்கு அப்பறமாத்தான் தெரிஞ்சது. அது ஒரு சாதாரணமான அவார்ட்டுனு. மணி வேல்யூன்னு பெரிசா எதும் இல்ல. ஒரு மொமண்டோ. வீட்டு ஷோ ரூம்ல வெச்சுக்கலாம், அவ்வளவுதான். சொல்லப்போனா ஒரு கை அளவுள்ள சின்ன பிரமிட் ஷேப் கண்ணாடி. இன்னார்க்கு இந்த வருஷம் கொடுத்தது அப்பிடின்னு மேல என்ங்கிராஃப்ட் ஆகியிருக்கும். வேற எதுக்கும் யூஸ் ஆகாது, இட்ஸ் ஜஸ்ட் எ மொமண்டோ”

“ஆனா அது ஒரு பப்ளிக் ரெகக்னிஷன். வாங்கற ஆளுக்கு மட்டுமே தெரியர சீக்ரட்டான சேலரி ஸ்லிப் இல்ல. எம்ப்ளாயீஸ் அத்தனை பேர் முன்னாடியும் எல்லாரும் பாக்கற மாதிரி பெரிய ஸ்டேஜ்ல ஓப்பனா தர்றது. கம்பனி நியுஸ்லெட்டர்ஸ், பேப்பர்ஸ், மாகஸின்ஸ் எல்லாத்திலயும் படத்தோட நியூஸ் வரும்”

“அப்பறம் நானும் பித்தாக்ரஸ்ல வேலைக்குச் சேர்ந்து லீட் எஞ்ஜினியரா புரமோட் ஆகி பல வருசம் ஆனப்பறம்தான் தெரிஞ்சது. சுமாரான புரஃபைல்ல இருந்த பல பேருக்குப் பிரமிட் அவார்ட் கிடச்சுது. லீட் எஞ்ஜினியரா ஆகியும் அதே ரோல்ல என்னையவிட சுமார பெர்பாம் பண்ண வேற சிலருக்கும் கிடச்சுது”

“ஆனா என்னோட அப்பா மாதிரியே, எனக்கும் கிடைக்கல”

“ரொம்ப தொந்தரவுன்னு இல்ல..ஆனா எப்பவுமே மெல்லிசா குத்திகிட்டே இருக்கும் பழைய சிலாம்புனு அந்தக் கால பொயட்ரில வருமே. அது மாதிரி. எப்பவுமே அந்த அந்த பிரமிட் ஞாபகம்.

“இதுல என்னமோ தப்பா இருக்குனு மனசுல தோணிகிட்டே இருந்துச்சு. அப்பாவோட பழைய பிரண்டு ஒருத்தர் ஹச்ஆர் மேனஜரா இருந்து ரிட்டையர் ஆனவர். அவர்ட்டயும் பேசி பார்த்தேன். அவரும் அதைத்தான் சொன்னார். இதுல பெரிய சீக்ரட் எதும் இல்ல. ஒரு ஆறு கிரைட்டிரியா கொஸ்டினர். அத மீட் பண்றவங்கள அவங்களுக்கு மேல இருக்க மானேஜர் ரெகமண்ட் பண்ணி மேனேஜிங் டைரக்டர்ஸுக்கு ஃபார்வர்ட் பண்றாங்க….அதுல இருந்து அநேகமா எல்லாருக்கும் அவார்ட் கெடக்கும் அவ்வளவுதான்”

“ஒரு சீனியர் மேனேஜரா நானும் எனக்குக் கீழ இருந்த சில அபாரமான ஆட்களை ரெகமண்ட் பண்ணி அவங்களுக்கும் பிரமிட் அவார்ட் கிடச்சிருக்கு”

“எங்க அப்பா பேரும் என்னோட பேரும் ஏழெட்டு தடவை அந்த லிஸ்டல இருந்ததா சொன்னார்.. எனக்கும் கிடைச்சிருக்க வேண்டிய அவார்ட்தான்…என்னோட அப்பாவுக்கும் கிடைச்சிருக்க வேண்டியதுதான்…ஆனா ரெண்டு பேருக்குமே கெடைக்கல. ….ஏன்?

டாக்டர் கேட்டார், “அதுக்கு ஏழாவதா எதாவது காரணம் இருக்கும்னு உங்களுக்கு தோணலையா?

“நிச்சயமா இருக்காதுன்னு தான் ரொம்ப வருசமா நினச்சுகிட்டு இருந்தேன்”

“..அப்பிடி இருக்காதுன்னு என்னால …அவ்வளவு உறுதியா, …இப்ப சொல்ல முடியல”

டாக்டர் சொன்னார், “இத உங்கிட்ட சொல்லலாமா வேணாமான்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்…உங்களோட கண்டிஷனைப் பார்த்தா சொல்லலாம்ணு தோணுது. ஆனா அதுக்கு சட்டப்படி நீங்க ஒரு நான்டிஸ்க்ளோஷர் அக்ரீமெண்ட்ல கையெழுத்து போட வேண்டி இருக்கும். சட்டப்படி, நீங்க அதுல கையெழுத்து போட்டா மட்டுந்தான் என்னால அதோட டீடெய்ல்ஸ உங்களுக்கு சொல்ல முடியும். உங்களுக்கு வேண்டாம்னா விட்ரலாம். நினைச்சிருந்தா உங்க அப்பா கூட அவரோட டெர்ஷியரி ஜீனோம் ரிப்போர்ட்ட பார்த்திருக்கலாம். ஆனா அவர் அப்படி பார்த்தாரா இல்லையானு நம்மால சொல்ல முடியாது”

“அப்ப நான் நிச்சயமா செய்யறேன் டாக்டர். இதைப் பத்தி எனக்குத் தெரிஞ்சாகணும்”

“அப்ப, இதைப் படிச்சிட்டு இங்க கையெழுத்து போடுங்க” டாக்டர் ஒரு தாளை எடுத்து மேசையில் அவன் முன் வைத்தார்.

இந்த தகவல்களை யாரிடமும் விவாதிக்க மாட்டேன், மீறி செய்ததாகத் தெரியவந்தால் நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்வேன் என்று கால் பக்கத்துக்குச் சட்டப்பூர்வமாக எழுதப்பட்ட வரிகள். நேசன் உடனே கையெழுத்தைக் கிறுக்கிவிட்டு அவரிடம் நீட்டினான்.

“ஓகே, முதல் நிலை தகவல்களை மட்டும் இப்ப உங்களுக்குச் சொல்றேன். நூத்தி இருவது வருசத்துக்கு முன்னால ’ஜினோம் இன்ஃபர்மேஷன் அமெண்ட்மெண்ட் ஆக்ட்’ சட்டத்தின் வழியா ஜீனோம் சீக்வன்ஸிங் ஒரு பேஸிக் ஹியூமன் ரைட்டா, ஸ்டாண்டர்ட் ஹாஸ்பிடல் டெஸ்டா அப்ரூவ் ஆச்சு. அப்கோர்ஸ் நம்ம சாப்பாடு சுற்றுப்புறம் எல்லாமே நம்மலோட ஆரோக்கியத்தைப் பாதிக்கறதுதான். ஆனா நம்ம உடம்புலயும் மனசுலயும் வர்ற வியாதிகளுக்கான காரண காரியங்களுக்கான புளூபிரிண்ட் நம்ம ஜினோம்ல இருக்கு. அதனால ஒரு குழந்தை பிறந்த உடனயே அதோட முழு ஜினோமயும் சீக்வன்ஸ் பண்ணி அதை ஆராய்ஞ்சு பாக்கணும், அந்தக் குழந்தையோட வாழ்நாள் ஆரோக்கியத்துக்கான எல்லா பரிந்துரைகளுக்கும் டிரீட்மெண்ட் தேர்வுகளுக்கும் ஜீனோம்ல உள்ள ரெலவண்ட் இன்ஃபர்மேஷனையும் கன்ஸிடர் பண்ணனும்னு இந்தச் சட்டத்தோட முதல் ஷரத்து சொல்லுது.”

டாக்டர் கண்ணாடியைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு பேசினார். “ஒரு மனுஷனுக்கு எப்ப வேணாலும் என்ன வேணாலும் நடக்கலாம். ஆகவே உடனே ரெஃபர் பண்றதுக்கு வசதியா முழு ஜீனோம் இன்பர்மேஷனயும் எப்பவுமே தயாரா வச்சிருக்கணும். அதே சமயம், எப்ப தேவைப்படுதோ அப்ப மட்டும் தேவைப்படும் பகுதிகளை மட்டும்தான் டாக்டர்கள் பார்க்கணும். அப்படி ஒரு அவசியம் இல்லாதப்ப யாருமே பார்க்க முடியாதபடி அது ரொம்ப பாதுகாப்பா வைக்கப்படணும் அப்பிடிங்கிறது ரெண்டாவது ஷரத்து”

“பல பெர்ஸனலான தகவல்கள் இருக்கறதால, ஒரு நபரோட ஜீனோம் அந்த நபரோட ரகசியம். அதுலயும் குறிப்பா அவர குணப்படுத்த தேவைப்படாத தகவல்கள் உள்ள பகுதிகள் யாருமே பார்க்க வேண்டிய அவசியமே இல்லாத டைரி மாதிரி. கிளினிகல் நெஸஸிடி அல்லது கோர்ட் ஆர்டர் இல்லாம அதை யாரும் பார்க்கவோ படிக்கவோ கூடாது. இதெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். ஒருவேளை தெரியலைன்னா, இப்ப உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.”

“இது தவிர டெர்ஷியரி ஜீனோம் டேட்டான்னு ஒண்ணு இருக்கு. அப்படி ஒண்ணு இருக்குங்ற விஷயத்தைத் தெரிஞ்சுக்க மட்டுந்தான் இந்தப் பேப்பர்ல கையெழுத்து போட்டிருக்கீங்க. மொத்த ஜீனோம்ல, மனித உடல் உருவாகி இயங்க தேவையான புரோட்டின்ஸ்க்குத் தொடர்புடைய பகுதிகள் சுமார் சுமார் ரெண்டுசதம் மட்டுந்தான். மீதி 98 சதம் தகவல்கள் நமக்குப் புரியாதவை, தெரியாதவை. அதோட இண்டர்பிரடேஷன்ல உங்க கேள்விக்குப் பதில் இருக்கலாம்”

“புரியல டாக்டர். என்ன சொல்றீங்க? என்னோட ஜினோம் டேட்டாவுக்கு எனக்கு அவார்ட் கிடைக்காததுக்கும் என்ன சம்பந்தம்?” நேசன் குழப்பத்துடன் டாக்டரைப் பார்த்தான்.

“இருக்கு நேசன். டெர்ஷியரி ஜீனோம் டேட்டா ரொம்ப கான்பிடலென்ஷியலான விஷயம். உங்கள மாதிரி சீரியஸான நெருக்கடிகள், கிளினிகல் பிராப்ளம்ஸ் இருந்தா சம்பந்தப்பட்டவங்க ரெக்வஸ்ட் பண்ணி சீல் பிரேக் பண்ணி அதை பார்க்கலாம் அவங்களுக்கு ஹெல்ப் பண்ற டாக்டர்ஸ் பார்க்கலாம். ஒவ்வொரு தடவை அப்படி பார்க்கும்போதும் சம்மந்தப்பட்ட நபரோட அடையாளம், அங்க தர்ற காரணம் எல்லாமே சிஸ்டம்ல வேலிடேட் ஆகணும், அப்படி ஆச்சுனா, லீகலா ஆடிட் ஆகி ரெகார்ட் ஆகும். இல்ல யாராவது மூணாவது மனுஷன் பார்க்கணும்ணா கிரிமினல் கேஸ்ல கன்விக்ட் ஆன கோர்ட் ஆர்டர் இருக்கணும்”

“டெர்ஷியரி ஜீனோம் ரிப்போர்ட் அக்ரீமெண்ட்ல நீங்க கையெழுத்து போட்டீங்கன்னா, அது சிஸ்டம்ல அக்ஸெப்ட் ஆச்சுன்ன அதுல இருக்கறத தெரிஞ்சுக்க உங்களுக்கு உரிமை இருக்கு. அந்த அக்ரிமெண்ட்டோட பங்குதாரர நீங்க, உங்க டாக்டரா நான் ரெண்டு பேர் மட்டுந்தான் இருப்போம். இதுல உள்ள தகவல்கள் இந்தப் பிரபஞ்சத்துலயே உங்களுக்கும் எனக்கு மட்டுந்தான் தெரியும், தெரியணும். அது அப்படியே இருக்கணும். அக்ரிமெண்ட்ல இல்லாதவங்க கிட்ட நீங்க இதைப் பற்றிப் பேசவோ இந்தத் தகவல்களைப் பகிரவோ முடியாது. மீறினா கடுமையான விளைவுகள். இன்னொன்னு அதுல நீங்க எதிர்பார்க்காத உங்களுக்கு அதிர்ச்சியான அல்லது பாதகமான தகவல்கள் இருக்கவும் வாய்ப்பு இருக்கு. உங்களுக்கு மேற்கொண்டு புரஸீட் பண்ணனுமானு சொல்லுங்க”

எச்சரிக்கும்படியான குரலில் சொன்னார் “இட் இஸ் எ சீரியஸ் பிசினஸ், அத நீங்க மொதல்ல புரிஞ்சுக்கணும். இதுனால வர்ற கான்ஸிக்வன்ஸஸ்ல இருந்து நீங்க தப்பிக்க முடியாது. அண்ட் தெர் இஸ் நோ கோயிங் பேக்”

“ஐ ரியலி வான்ட் டு நோ டாக்டர், லெட்ஸ் புரஸீட்.” நேசன் உடனடியாகச் சொன்னான்.

“ஓகே, ஒன் செகண்ட்” டாக்டர் அலமாரியில் கோப்புகளைத் தேடி ஒரு தாள்கற்றையை எடுத்து நேசனிடம் நீட்டினார்.

“திஸ் இஸ் ரிக்வஸ்ட் பார்ம். உங்களோட டெர்ஷியரி ஜினோம் டேட்டாவ, நீங்க பாக்கணும்னு கேக்கறது. அப்பறம், இது கன்ஸெண்ட் ஃபார்ம். நான் உங்க டேட்டாவ உங்களுக்காக நான் ரிவ்யூ பண்ணலாம்னு நீங்க எனக்கு அனுமதி தர்ற ஒப்புதல்”

“கூட, இன்னும் சில முக்கியமான டிஸ்க்ளோஷரோட டீடெய்ல்ஸும் இருக்கு. எல்லாமே கடுமையான சட்ட விளைவுகள் உள்ளவை. அதோட விளைவுகள்ல இருந்து நீங்க தப்பிக்க முடியாது. எல்லாத்தயும் படிச்சுப் பார்த்துட்டு நல்லா யோசிச்சிட்டுக் கையெழுத்து போடுங்க. ஒரு வேளை வேண்டாம்னு தோணுச்சுனா, பேப்பர்ஸ அந்த ஷ்ரெட்டர்ல போட்ருங்க, நோ ப்ராப்ளம்”

“இது நீங்களா சுயமா யோசிச்சு எடுக்கற முடிவு. நான் பக்கத்துல இருக்கக் கூடாது. கையெழுத்து போடும்போது ரெட் பட்டனை அழுத்தினீங்கனா அது நீங்கதானாங்கிறதை உறுதிப்படுத்த உங்களோட வீடியோவும் பயோமெட்ரிக் டீடெயெல்ஸும் கையெழுத்தோட சேர்ந்து எலக்ட்ரானிக்கா வேலிடேட் ஆகணும். அப்படி ஆச்சுன்னா லீகலா ரெகார்ட் ஆகி சர்வர்ல இருந்து லாக் ஓப்பன் ஆகி உங்க பைல் டவுன்லோட் ஆகும். இதெல்லாம் முடிஞ்சப்புறம் ஐ வில் பி பேக்”

“தி டெஸிஷன் இஸ் யுவர்ஸ். நல்லா யோசிச்சு முடுவு எடுங்க. குட் லக்” டாக்டர் கதவை அடைத்துவிட்டு வெளியேறிச்சென்றார்.

தாள் கற்றையை வாங்கிப் பார்த்தவன் மேலோட்டமாக வாசித்துப் பார்த்தான். கடுமையான மொழியில் சுவாரஸ்யமில்லாத ஆங்கிலத்தில் ஆறுபக்கத்துக்கு இருந்தது.

“திஸ் இஸ் மை ஜீனோம். மை டேட்டா…வாட் த ஹெல்” வாய்விட்டு சொல்லிவிட்டு வேகமாகக் கையெழுத்தைக் கிறுக்கிவிட்டு ரெட் பட்டனை அழுத்தினான்.

[4]

கதவை மென்மையாகச் சாத்திவிட்டு டாக்டர் உள்ளே வந்தார். “கங்கராஜுலேஷன்ஸ். லுக்ஸ் லைக் எவ்ரிதிங் காட் த்ரு. ஆல் த பேப்பர் வொர்க்ஸ் ஆர் டன்”

“ஸோ…வி கேன் டாக் அபெளட் இட் நவ். டெர்ஷியரி ஜீனோம் ரிப்போர்ட், அப்பிடின்னா என்ன?”

“ஒருத்தரோட உடலும் மனசும் உருவாகறதுக்கு உரிய புளுபிரிண்ட் ஜீனோம்ல இருக்கு. ஆகவே ஜீனோம்ல இருக்க குறைபாடு எவ்வளவோ விதத்துல ஒருத்தரைப் பாதிக்கலாம். ஒருத்தர் பலம் குறைஞ்சவரா இருக்கலாம், உயரம் கம்மியானவரா இருக்கலாம், வேகமா வாசிக்க முடியாதவரா, வேகமா ஓட முடியாதவரா இருக்கலாம். இவங்க எல்லாரையும் எப்படி ஒரே மாதிரி நடத்த முடியும்? பாக்ஸிங் சேம்பியன்ஷிப்ல மோதற வீரர்களை அவங்க எடைக்குத் தகுந்தபடி பிரிச்சு ஒரே மாதிரி எடை இருக்கவங்கள மட்டுந்தானே அலவ் பண்றோம்? அதுமட்டுமில்ல, ஊனமுற்றவர்கள் உடல்குறைபாடு உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புல, கார் பார்க்கிங்ல இட ஒதுக்கீடு தர்றமே? அது மாதிரி ஜீனோம் குறைபாடுகள் காரணமா பாதிக்கப்டறவங்களுக்கும் உரிய சலுகையை முன்னுரிமைய தரணும்னு மனித உரிமைகள் கழகம் கவர்மெண்ட் மேல கேஸ் போட்டுப் பெரிய பிரச்சினையா ஆச்சு. இதெல்லாம் ஒரு நூறு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. ஹிஸ்ட்ரி கிளாஸ்ல நீங்க படிச்சிருக்கலாம்”

“வோர்ல்ட் கிளினிகல் ஜினோம் மீட்டிங்ல இத கடுமையா விவாதிச்சு அவங்க ரெகமண்டேஷனை சான்சலர் ஆபிஸுக்கு அனுப்பிச்சாங்க”

“மேஜைக்கு வர்ற எல்லா ஃபைலையும் அன்னிக்கே கையெழுத்து போட்டு செகரட்டரிக்கு திருப்பி அனுப்புற சான்சிலர் இதைப் பத்தி முடிவெடிக்க எட்டு மாசம் எடுத்துக்கிட்டார்”

“ஜீனோம் இன்ஃபர்மெஷன வச்சு ஒருத்தருக்குத் தகுந்த சலுகை அல்லது முன்னுரிமை தர்றதுனா என்ன? எங்கே சலுகை தரணும்? இதை டிஸ்கஸ் பண்ணி டிசைட் பண்ணத்தான் அவ்வளவு டைம் ஆச்சு”

“ஒரு மாணவர் நேஷனல் லெவல் காம்படிஷனுக்கு வர்றார்னு வச்சிக்குவோம். நேஷனல் லெவலுக்கு எப்படி வந்தார்? ஸ்டேட் காம்படிஷன் வழியா. ஸ்டேட் காம்படிஷனுக்கு எப்படி வர்றார்? ஸோனல் காம்படிஷன் வழியா. ஸோனல் காம்படிஷனுக்கு? ஸ்கூல்ல லெவல்ல ஜெயிச்சு. அதாவது, சின்ன காம்ப்டிஷன்ல ஜெயிக்கலனா பெரிய காம்படிஷனுக்குள்ள போக முடியாது”

“ஆகவே ஜீனோம் இன்ஃபர்மேஷன வச்சு சலுகை தர்றதுல சின்ன காம்படிஷன் பெரிய காம்படிஷன்னு பிரிக்க முடியாது. காம்படிஷன் இஸ் காம்படிஷன். எல்லாமே முக்கியமானதுதான், ஆகவே எல்லாவிதமான அவார்ட், காம்படிஷன்லயும் இவ்வொருத்தருக்கும் அவங்களுக்குரிய சலுகை இருக்கணும்னு சான்சலர் ஆபீஸ் ஒரு அமென்மண்ட் கொண்டுவந்து அது செனட்ல பாஸாகி சட்டமா ஆச்சு”

“இது மனிதவள மேம்மாட்டுத் துறையோட கேஸ். ஆனா தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தோடயும் சம்பந்தப்பட்டது. அதை விடவும் ரொம்பவே சென்ஸிடிவான மேட்டர். ஸோ இத ஓப்பனா அறிவிக்கவேண்டாம் சீக்ரட்டா வைக்கலாம்ணு செனட்ல முடிவு பண்ணாங்க. இனி ஜினோம் இன்ஃபர்மேஷன அடிப்படையா வச்சு மக்களுக்கு தகுந்த சலுகைகள் வழங்கப்படும் – அப்படின்னு ஒரு சின்ன அறிவிப்பு மட்டும் கவர்ன்மெண்ட் கெஸட்ல வந்துச்சு”

டாக்டர் அவசரமில்லாமல் சொல்லிக்கொண்டிருக்க நேசன் சற்று எரிச்சலுடன் கேட்டுக்கொண்டிருந்தான்.

“நம்ம நாட்டு ஹாஸ்பிடல் சட்டப்படி குழந்தை பிறந்த அன்னிக்கே அதோட ஜினோம் சீக்வன்ஸ் பண்ணி நேஷனல் ரெப்பாஸிட்டரிக்குப் போயிடுது. இதுவரைக்கும் இருக்கிற மனித ஜீனோம் சீக்வன்ஸ் எல்லாத்தையும் மிலிட்டரி ஹாஸ்பிடல் லேப்ல அனலைஸ் பண்ண ஆரம்பிச்சாங்க”

“மொதல்ல ஒவ்வொருதரோட முழு ஜீனோம் சீக்வன்சஸயும் முப்பதாயிரம் துண்டுகளா பிரிச்சு, அது ஒவ்வொன்னுக்கும் மனிதனோட அடிப்படையான திறமைகளுக்குமான தொடர்பை நிர்ணயிச்சாங்க”

“ஏற்கனவே இருக்கற நோயாளிகளோட ஜீனோம் விபரங்கள், சிமுலேஷன்ல வந்த பிரடிக்ஸன்ஸ், இதையெல்லாம் வச்சு அந்தத் துண்டுகள்ள இருக்க மாற்றங்கள் ஏற்படுத்தற பாதிப்பு பாஸிடிவானதா நெகடிவானதான்னு தீர்மானிச்சாங்க. பிறகு அந்தப் பாதிப்பு எவ்வளவு ஆழமானதுன்னு வரையறுத்து ஒவ்வொண்ணுக்கும் தனித்தனியா ஒரு நியூமரிகல் ஸ்கோர் அசைன் பண்ணாங்க. அப்பறம் அதையெல்லாம் கூட்டிக்கழிச்சு ஒரு தனி ஸ்கோர் வர்றது மாதிரி அல்கோரிதம் டிசைன் பண்ணாங்க”

“எல்லா டிசைனிங்கும் முடிஞ்சதுக்கு அப்பறம் எல்லாத்தயும் என்கிரிப்ட் பண்ணி ஒரு பிளாக் பாக்ஸ்ல சீல் பண்ணிட்டாங்க. அதுனால ஒரு தனிப்பட்ட நபரோட ஜீனோம்ல என்ன சீக்வன்ஸ் இருக்கு, அதுக்கு என்ன ஸ்கோர் இருக்கு அப்பிடிங்கிறத யாருமே பார்க்க முடியாது”

நேசன் நம்ப முடியாமல் சந்தேகத்தோடு கேட்டான். “நீங்க சொல்றது எதோ சயன்ஸ் பிக்‌ஷன்ல வர்ற மாதிரி இருக்கு. ஆனா இதெல்லாம் சாத்தியம்தான்னும் தோணுது. இதெல்லாம் இத்தனநாள் எப்படி வெளிய தெரியாம இருக்கு?”

“வெல்! யு ஆர் டாக்கிங் அபெளட் பீப்பிள் ஆப் தி ட்வண்டி செகண்ட் செஞ்சுரி! பிட் லெஸ் இன்ஃபார்ம்டு அண்ட் மியர் ஸ்லேவ்ஸ் ஆப் டெக்னாலஜி” டாக்டர் சிரித்தார்.

“ட்ரண்ட் இப்ப கொஞ்சம் ரிவர்ஸ் ஆயிருக்கு. சமீபமா கவர்மெண்ட்மேல மக்கள் கொஞ்சமாவது ஆர்வம் காட்றாங்க. நூறு வருசத்துக்கு முன்னால மக்கள் எதிலயுமே ஆர்வமில்லாம டெக்னாலஜிக்குள்ள மூழ்கி இருந்த சமயம். யாருமே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கல. எதிர்த்துக் கேள்வி கேக்கல. ஸோ கவர்ன்மெண்ட் நிறைய பவர் கிளைம் பண்ணிகிச்சு. இதுக்கு கவர்ன்மெண்டுக்கு அதிகாரம் இருந்துச்சு. எல்லாமே சட்டபூர்வமானதுதான். அதுனாலதான் இதெல்லாம் உங்க கிட்ட என்னால சொல்ல முடியுது”

“பின்னிப் பிணைஞ்சு நம்ம அன்றாட வாழ்க்கையோட ஒரு பகுதியா இருக்கு. அதுனால அது எப்பிடி ஒர்க் ஆகுதுங்கிறத நாம யாருமே கேள்வி கேக்கறதே இல்ல. எல்லாமே கிராண் ஜுரி டிஜிட்டல் முடிவு பண்றதுதான்”

“கிராண் ஜுரி டிஜிட்டல்… ஜீனோமிக் டேட்டவ யூஸ் பண்ணுதா? ரியலி? நேசன் ஆச்சரியமாக கேட்டான்,

“சர்வ நிச்சயமா. ஏக்சுவலா கிராண் ஜுரி டிஜிட்டல் எப்படி வந்துச்சுன்னு இப்ப இருக்கற ஜெனரேஷன்ல நிறைய பேருக்குத் தெரியாது. யாரும் எதையுமே தெரிஞ்சிக்கிறதில்ல. தெரிஞ்சுகிட்டா ஆச்சரியமா இருக்காது”

“போன நூற்றாண்டுல தடகளப் போட்டிகள்ல யார் முதல்ல பினிஷ் லைன தொட்டாங்கங்கறது மாதிரி நிறைய டிஸ்ப்யூட்ஸ் வரும். அதே போல விளையாட்லயும். கிரிக்கெட்ல ஒரு பேட்ஸ்மன் அவுட்டா இல்லையாங்கிறத முடிவெடுக்க பந்து வீசறவர் ஓட ஆரம்பிக்கிற இடம், ஸ்டம்புக்கு பக்கத்துல கால ஊண்ற இடம், பந்த வீச கைய தூக்கிற இடம், அந்த பந்த பேட்ஸ்மன் எங்க கால வச்சு எப்படி அடிச்சார், பந்து எங்க போய் அத பீல்டர் எப்படி கேட்ச் பிடிச்சார் இதெல்லாத்தையும் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் டிஜிட்டல் ஸ்நாப்ஸ் கம்ப்பேர் பண்ணிபார்த்து முடிவு செய்வாங்க. இத யார் எப்படி அனலைஸ் பண்றாங்க அப்பிடிங்றத பொறுத்து அதுல நிறைய வேரியேஷன்ஸ் வந்து அதுலயும் பல டிஸ்ப்யூட்ஸ் வந்துச்சு. விளையாட்டுகள்ல மிகப்பெரிய அளவுல பணம் புழங்க ஆரம்பிச்ச காலம். அதனால நிறைய கோர்ட் கேஸுன்னு ஆகி, கடைசில கோர்ட் அதாவது கவர்ண்மெண்ட் தலையிட்டுப் பிரச்சினை தீர்க்க வேண்டி வந்துச்சு. அதுக்காக நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் மெஷர்மென்ட்ஸ்ல ஒரு அல்காரிதம் டெவலப் பண்ணி, கவர்ன்மெண்டே தேவைப்பட்டப்ப அனலஸின் பண்ணி குடுத்தாங்க. அதுதான் எல்லாரும் ஏத்துகிட்ட டிஜிடல் ஜூரியா இருந்திச்சு”

“அடுத்து எல்லா விளையாட்டு முடிவுகளயும் அந்த அல்காரிதம் முடிவெடுக்கலாம்ங்கற அக்ஸப்டன்ஸ் படிப்படியா மக்களுக்கு வந்துச்சு. முழு விளையாட்டும் டிஜிட்டலா ரெகார்ட் ஆகி, அது அனலைஸ் ஆகித்தான் ஃபைனல் ரிசல்ட்ஸ் வருது. அப்ப பீல்ட்ல ரெபரீஸ் அம்பயர்ஸ் எதுக்குத் தேவையில்லாம? அப்படின்னு ஒரு விவாதம் ஆரம்பிச்சது. டிஜிட்டல் ஜூரி சொல்றதுதான் எப்பவுமே கடைசி முடிவா இருக்கு. அப்ப நாங்க எதுக்கு பீல்டுக்கு தேவையில்லாம வரணும்? அப்படின்னு அம்பயர்ஸ் அண்ட் ரெபரீஸ் அசோசியேஷன்ல இருந்து புரட்டஸ்ட் பண்ணாங்க. ஆக்சுவலி அதுமாதிரி எந்தத் தேவையும் அவசியமும் இல்லங்ற நிலைலதான் விளையாட்டுகள் அப்ப இருந்துச்சுங்கிறதுதான் உண்மை.” டாக்டர் சிரித்தார்.

“படிப்படியா டிஜிடல் ஜூரி அல்காரிதத்த டெவலப் பண்ணி, பெரிசாக்கி, ’கிராண்ட் ஜூரி டிஜிட்டல்’னு பேர் வச்சாங்க. இப்படித்தான் எல்லா ஸ்போர்ட்சுமே அங்க நேரடியா ஒளிபரப்பாக ஆரம்பிச்சது அது எல்லாருக்கும் ஈஸியாவும் இருந்துச்சுங்கறதுதான் முக்கியமான காரணம். இது மாதிரி நெறய டேட்டா சேர ஆரம்பிச்சு இருக்கறதுலயே பெரிய ரெப்பாஸட்டரியும் கூடவே கிராண் ஜூரில டெவலப் ஆச்சு”

“அடுத்ததா விளையாட்டு அல்லாத இதர போட்டிகள் முடிவுகள், அது சம்மந்தமான தகவல்கள் எல்லாத்துக்கும் உரிய இடமா கிராண்ட் ஜூரி டிஜிட்டல் ஆச்சு. எல்லா போட்டிகள் விருதுகள் சம்பந்தமான தகவல்களையும், ஃபைனல் லிஸ்ட்ல இருக்கவங்க பெயர் உட்பட, அங்க பப்ளிஷ் பண்ண ஆரம்பிச்சாங்க”

“சின்னதோ பெரிசோ… நம்ம நாட்டில் ரெஜிஸ்டர் ஆகி இருக்கற பள்ளிகள், கல்லூரிகள் நிறுவனங்கள் எல்லாமே சான்சலர் ஆபீஸ் அதாவது கவர்ன்மெண்ட் நெட்வொர்க்கோட கனெக்‌ஷன்ல ஏற்கனவே இருக்கு. அதனாலதான் ஃபைனல் லிஸ்ட்ல இருக்கவங்க பெயர் உட்பட எல்லா விருதுகள் போட்டிகள் சம்பந்தமான தகவல்களையும் கிராண் ஜூரி டிஜிட்டல்ல கட்டாயமா பதியணும்னு சான்சலர் ஆபீஸ் நோட்டீஸ் அனுப்பினப்ப யாருமே எதிர்க்கல”

“அதனால அது சட்டமா ஆச்சு. எல்லா ஃபைனல் லிஸ்ட்டும் கிராண்ஜூரி டிஜிட்டல் கரெக்‌ஷன்ஸுக்கு உட்பட்டதுன்னு சட்டம் வந்தப்ப யாருமே ஏன்னு கேள்வி கேக்கல. எதிர்க்கவும் இல்ல”

“கடைசில விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவங்க பெயர்களை சப்மிட் பண்ணலாம். அவங்க தகுதிகளை நுணுக்கமா ஆராய்ஞ்சு கிரேட் பண்ணி கிராண்ஜூரி டிஜிட்டல் செலக்ட் பண்ணும், அப்பிடிங்கிற பிராக்டிஸ் வந்துச்சு. இதுல கிடைக்கற ப்ளிஸிடினால இதைப் பரவலா மக்கள் ஏத்துக்கிடாங்க. அப்பறம் அதுவே சட்டமாவும் ஆகி வேற சில ரூல்ஸும் வந்துச்சு. மொத்தம் மூணு விருதுன்னா தகுதியான ஆறுபேர் இருக்கற லிஸ்ட அனுப்பனும்னு. இதுக்கெல்லாம் பெரிய எதிர்ப்பு, அப்பிடினு எதும் வரல. பீப்பிள் காட் யூஸ் டு இட் ஸோ மச்!”

[5]

“டெர்ஷியரி ஜுனோம் ரிப்போர்ட் அனலசிஸ் அண்ட் ரிப்போர்ட்டிங் எல்லாமே முன்னாடி ஷ்பெஷலிஸ்ட்கள் மட்டுந்தான் பண்னாங்க. இப்ப என்ன மாதிரி ஃபேமிலி டாக்டர்களுக்கும் ஏத்த மாதிரி அல்காரிதம் அத எளிமையான ரிப்போர்ட்டா ஆக்கிருச்சு”

“லெட்ச் ஸீ யுவர் டெர்ஷியரி ரிப்போர்ட்” டாக்டர் கணினியில் சில கோப்புகளைத் திறந்து படிக்க ஆரம்பித்தார்.

“ஐ ஸீ…. ஐ ஸீ…. …ம்…!”

“ஓ மை காட்…!

ஆச்சரியமும் இரக்கமும் தெரியும்படி மாறிக்கொண்டிருந்த டாக்டரின் முகம் இப்போது லேசான பதட்டத்தைக் காட்டும்படி மாறியிருந்தது.

சிந்தனையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு எண்ணங்களைச் சேகரித்துக்கொள்வதைப்போல டாக்டர் பேச ஆரம்பித்தார்.

“டெர்ஷியரி ஜீனோம் ரிப்போர்ட்ல இருக்கற உங்களோட அக்ரிகேட் ஸ்கோர் மைனஸ் 2.. உங்களுக்குப் பிரமிட் அவார்ட் கிடைக்காம போனதுக்கு இதுதான் காரணம்”

குழப்பத்துடன் நேசன் கேட்டான், “மைனஸ் ரெண்டு அக்ரிகெட் ஸ்கோர்?.. அப்பிடின்னா?”

“இட்ஸ் எ காம்ளக்ஸ் ஜக்லிங் ஆப் மாத்தமாடிக்ஸ்… ஈஸிய சொல்லணும்னா இப்படிச் சொல்லலாம். உடல் உறுப்புகளோட ஆரோக்யம், உடலோட வலிமை, பசிதாங்கும் சக்தி, நோய் எதிர்ப்புதன்மை… இது மாதிரி ஒரு பயலாஜிகல் எண்டிட்டியா பாதகமான சூழ்நிலைகள்ல சமாளிச்சு உயிர் வாழத் தேவையான திறன்கள ஒட்டுமொத்தமா கூட்டி, அதை இதுவரைக்கும் ஜீனோம் டெஸ்ட் பண்ண ஆள்களோட கம்பேர் பண்ணா.. உங்க அப்பாவுக்கும் நீங்களும் டாப்ல வர்றீங்க.. அதாவது உயிர் வாழத் தேவையான ஆற்றல் ஒட்டுமொத்தமா, எல்லாரையும் விட, உங்களுக்கு அதிகமா ஸ்கோர் ஆயிருக்கு”

நேசன் முகத்தில் இருந்த தெளிவின்மையைக் கவனித்துவிட்டு டாக்டர் சொன்னார், “எக்ஸாம்பிள் சொல்லணும்னா எனக்கு மூணு விஷயம் ஞாபகத்துல வருது.. 1918ல ஏற்பட்ட பிளாக் ஃபுளூங்கிற வைரஸ், …2019ல உலகம் முழுக்க பரவுன கோவிட்ங்ற வைரஸ், …அப்பறம் 3011ஆம் வருசம் உண்டான சதையைச் சாப்ட்ற ஸ்டெப்டோக்காக்கஸ்ங்கிற பாக்டீரியா. …இதுமாதிரி பல நோய்க்கிருமிகளுக்கும் எதிர்ப்பு சக்தி உங்க இரத்தத்துல யாரை விடவும் அதிகமா இருக்கு. இது மாதிரி பல அட்வாண்டேஜஸ் உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு”

கேட்டுக்கொண்டிருந்த நேசன் ஆழமாக யோசித்துவிட்டுச் சொன்னான், “எங்க முன்னோர்கள்ல சிலர் வேட்டையாடி வாழ்ந்து விவசாயிகளா மாறின க்ளான சேர்ந்தவங்கன்னு எங்க அப்பா ஒரு தடவ சொல்லிருக்கார். அதுல ஒருத்தர், …ஸம் ஏன்ஸியன்ட் கண்ட்ரி ஃபெஸ்டிவல், ….அதுல புலி மாதிரி மேக்கப் போட்டுட்டு ஆடுவாராம். முறுக்குன கொம்போட எதிர்ல நிக்கிற பெரிய ஆட்டுகுட்டிய, அதோட வால, பல்ல கடிச்சு இழுத்து அந்தப் பக்கமா தூக்கி வீசற மாதிரி பலசாலியாம்… இட் மே பி ட்ரூ”

“நிச்சயமா இருக்கலாம்.. உங்க ஜீனோம்ல பல இடங்கள் ரொம்ப ஸ்ட்ராங்காவே இருக்கு…” டாக்டர், திரையில் ஒரு பெரிய பட்டியலை உருட்டி பார்த்துக்கொண்டிருந்தார்.

“ஒட்டுமொத்தமா சொன்னா பலசாலியா இருக்கறதுக்கான பல பகுதிகள் எல்லாரையும் விட, என்னோட ஜீனோம்ல அதிகமா ஸ்கோர் ஆயிருக்கு… அதனால, மத்தவங்கள கம்ப்பேர் பண்ணா, எனக்கு எந்த சலுகைகளும் தேவையில்லை. அப்பிடியா டாக்டர்?”

“அப்ஸலூட்லி” என்றார் டாக்டர். திரையில் இன்னமும் ஒரு பட்டியலை உருட்டிப் படித்துக் கொண்டிருந்தார்.

“அந்த மாதிரி சலுகைகள் மத்தவங்களுக்குத் தேவைப்படுது….அதுனால அவங்களுக்கு அவார்ட் கிடைச்சது. எனக்கும் எங்க அப்பாவுக்கும் கெடைக்கல. அப்பிடியா டாக்டர்”

“யெஸ். யு காட் இட்” ஆர்வமாகப் படித்துக்கொண்டு, திரையிலிருந்து பார்வையை விலக்காமல் டாக்டர் சொன்னர்.

“பொதுவா மன அழுத்தம் அல்லது டிப்ரஷன் மாதிரியான பாதிப்பு இருக்கவங்களுக்கு இந்த மாதிரி அவார்ட்ஸ் ரொம்பவே நல்லா ஹெல்ப் பண்ணுதுன்னு ஆராய்சிகள்ல புரூவ் ஆயிருக்கு. ஸோ அந்த மாதிரி ஆட்களுக்கு முன்னுரிமை இருக்கற மாதிரி ஸிஸ்டம்ல கான்ஃபிகர் ஆயிருக்கு”

“அப்ப என்னோட மகனுக்கும் இந்த மாதிரி அவார்ட் எதுமே கிடைக்காது! சரியா டாக்டர்..?

“சரியா டாக்டர், இது சரியா டாக்டர்?…..” நேசன் குரலை உயர்த்திக் கத்தினான். டாக்டர் அவனை நோக்கித் திரும்பினார்

தலையை மேசையில் மடிந்த கைகளுக்குள் வைத்து, நேசன் குலுங்கி அழுது கொண்டிருந்தான். மூச்செடுத்து அடுத்த கேவலின் ஒலி அறை முழுக்க உரக்க வெடித்து எதிரொலித்தது.

டாக்டர் மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னார், “ஐ யாம் ரியலி ஸாரி மிஸ்டர் நேசன், ஒருவகையில இது நியாமில்லதான்”

“மனுஷ வரலாற்றில எத்தனையோ அநீதிகள் யார் யாருக்கோ நடந்திருக்கு. அதையெல்லாம் யார் விரும்பி ஏத்துகிட்டாங்க? எது சரி எது தப்புங்கிறத யார் தீர்மானிக்கிறது?” ஆறுதல் படுத்தும் தொனியில் டாக்டர் சொன்னார்.

“ஒரு தனிமனிதனா நாம ஒரு சாதாரண சிம்பிள் அனிமல். நாம வாழற காலத்தில நமக்கு கொஞ்சம் அநீதியா அசெளகர்யமா இருக்கற மாதிரி சில விஷயங்கள் இருக்கலாம்… ஆனா அது ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் நல்லது, அப்படின்னா.. சமூகத்தோட பொறுப்பான உறுப்பினரா நாம அதுக்குக் கட்டுப்பட்டவங்கதான்”

“திஸ் இஸ் ராங் டாக்டர்! திஸ் இஸ் ராங்,!” இரண்டு கைகளாலும் தாக்குவது போல நேசன் மேசையை அறைந்து கொண்டிருந்தான்.

மூக்கை உறிஞ்சிக்கொண்டு சொன்னான். “உயரமான எல்லா எடத்துக்கு கீழயும் எலாஸ்டிக் நெட்.. எல்லா டிராபிக்கு ஸீல் பண்ண ட்யூபுக்கு உள்ள. மொட்டை மாடிக்குப் போக முடியாது. ஆபத்தான எந்த மருந்தையும் வீட்ல வைக்க முடியாது. எங்க பார்த்தாலும் ஸேஃப்டி சென்ஸர்ஸ், கேமாராஸ். கரண்ட் முப்பது வோல்ட்தான். கைய அறுத்துக்க முடியாதபடி எல்லா சுவத்துலயும் ஹீம் சென்ஸர்ஸ். ஒரு சாமன்ய மனுஷன் சாகறத்துக்கு ஒரு வழியும் இல்ல”

“ஒரு வழியும் இல்ல. ஒரு வழியும் இல்ல!” நேசன் கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டு சொன்னதையே திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்.

ஒரு மூக்கிலிருந்து சளி ஒழுகிக்கொண்டிருந்தது. கலைந்த தலை முடி, கண்கள் சிவப்பாகி அவன் உருவமே அச்சமூட்டும்படி மாறிவிட்டிருந்தது.

திடீரென எழுந்து, கதவை நோக்கிச் செல்ல முயன்றான்.

“ஐ யாம் ஸாரி நேசன். உங்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் வந்திருச்சு. சூஸைட் பண்ணிக்க முயற்சிக்கறது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். உங்களோட விருப்பத்தை நீங்களே ஓப்பனா சொன்னதுக்குப் பிறகு உங்கள ஹாஸ்பிடலை விட்டு வெளிய போக அலவ் பண்ண முடியாது”

“நீங்க உங்களுக்கு ஆபத்து இல்லைனு உறுதியா புரூவ் ஆகற வரைக்கும் யு வில் பி அண்டர் சூப்பர்விஷன்”

நேசன் சீற்றத்துடன் திரும்பினான். “வாட் நான்ஸென்ஸ்! நான் வீட்டுக்குப் போகணும் டாக்டர்”

“நோ நேசன். நீங்க டெர்ஷியரி ஜினோம் ரெக்வஸ்ட்ல கையெழுத்து போட்ட அந்த செகண்ட்ல இருந்து யு அர் அண்டர் நியூ கண்டிஷன்ஸ். யு கெனாட் பிரேக் தெம் நவ்”

“டாக்டர் என்ன சொல்றீங்க?”

“ரெண்டு சென்சுரீஸ்க்கும் மேல ஆயிருச்சு. ஆனா ஜீனோம் மெடிஸின் இன்னும் கூட வளர்ற ஸ்டேஜ்லதான் இருக்கு. சில டெர்ஷியரி ஜீனோம் சீக்வன்ஸுக்கு என்ன பிஹேவியர் தொடர்புங்கிறத, பல சமயம், அந்த சீக்வன்ஸ் இருக்கறவங்க எப்படி பிஹேவ் பண்றாங்கங்கிறத பார்த்துத்தான் எக்ஸ்பரிமெண்டலா புரூவ் ஆகுது. ஜீனோம் பத்தின நம்மலோட புரிதல் தொடர்ந்து அப்டேட் ஆயிட்டேதான் இருக்கு. அதோட பிரம்மாண்டத்துக்குத் தனி மனிதர்களா நாம ரொம்ப ரொம்ப சின்னவங்க. விரும்பியோ விரும்பாமலோ சில சமயம் நாமளே எக்ஸ்பரிமெண்டல் மாடலாவும் ஆகிடறோம்”

“உங்களோட ஜீனோம் ரிப்போர்ட்ல சில பகுதிகள கேள்விக்குறியான பகுதிகளா நோட் பண்ணிருக்காங்க. காரணம் அது உங்கள்ட்ட மட்டுந்தான் இருக்கு. ஆகவே அது எந்த மாதிரியான பாதிப்பை உருவாக்கும்ங்கிறத உறுதியா சொல்ல நிரூபணங்கள் இல்ல”

“அதுல ஒரு சீக்வன்ஸ், சூஸைட் மாதிரி சீரியஸான டிப்ரஷன இன்புளூயன்ஸ் பண்ணுமாங்கிற கொஸ்ஸனோட இருக்கு. உங்களோட சூஸைடல் தாட்ஸ், ஜீனோம் சீக்வன்ஸ் ரெண்டுமே பாஸிடிவா இருக்கு”

“இவ்வளவு சீரியஸான பிரச்சினையோட நீங்க உங்களோட ஜீனோம் ரிப்போர்ட்ட பார்க்கிறதுக்காக போட்ட கையெழுத்து, நீங்க அவரோட பயலாஜிகள் சன் அப்பிடிங்றது பயோமெட்ரிக்கலா கன்பர்ம் ஆகி, வேலிடேட் ஆன உடனயே …அதுவே உங்க அப்பாவோட ஜீனோம் சீக்வன்ஸயும் ஓப்பன் பண்ண தேவையான ஆதரைஷேசனையும் குடுத்திருச்சு”

“நீங்க அக்ரிமெண்ட்ல கையெழுத்து போட்டு அந்த ரெட் பட்டன பிரஸ் பண்ண ஒடனயே உங்க நடவடிக்கைகள், நம்ம பேசிகிட்டு இருக்கறது… எல்லாமே வீடியோவோட ரெகார்ட் ஆக ஆரம்பிச்சிருச்சு”

“டாக்டர் என்ன சொல்றீங்க?”

“ஐ யாம் ஸின்சியர்லி ஸாரி நேசன், ட்ரூலி ஐ யாம்”

“ப்ளீஸ் அக்ஸெப்ட் மை ஹார்ட்ஃபெல்ட் அபாலஜீஸ்”

“பட் யு கெனாட் லீவ் நவ்”

“நான் வீட்டுக்குப் போக முடியாதா?

“டாய், என்னடா சொல்ற?” நேசன் பாய்ந்து வந்து டாக்டரின் டையைப் பிடித்து இழுத்து உலுக்கினான்.

டாக்டர் மூச்சு திணறியபடி “கோட் ரெட்! கேட் ரெட்” என்று அலறினார்.

கதவை உடைப்பது போலத் திறந்துகொண்டு புயல் போல நுழைந்த சீருடையணிந்த காவலர், நேசனைப் பார்த்துக் கத்தினார்.

“ஸ்டாப், ஸ்டாப்!” அவர் கையில் கறுப்பு நிறப் பிஸ்டல் அவனைக் குறி பார்த்திருந்தது.

“ஸ்டாமினோ ஒன் ஓ சிக்ஸ் டேக் த பேஷண்ட் டெளன். டேக் ஹிம் டெளன்” காவலர் ஆணையை உரக்கக் கத்தினார்.

மெதுவாக, உறுதியாக அடி எடுத்து வைத்தபடி, சராசரி மனிதனைவிட சுமார் ஒன்றரை மடங்கு பெரிய, வலு பொருந்திய செக்யூரிட்டி ரோபோ அறைக்குள் நுழைந்தது.

நேசனை நோக்கி வந்து, அவனைப் பிடிக்க கை நீட்டியது.

நேசன் “திஸ் இஸ் ராங்! திஸ் இஸ் ராங்!” என்று அலறிக்கொண்டிருந்தான்.


புகைப்படம்: பானு

மேலும் படிக்க

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:

குறிப்பிடத்தகுந்த கதைகள்:

வேணு தயாநிதி

மருத்துவ மரபியலில் விஞ்ஞானி; இலக்கியம், இசையில் ஆர்வம். எழுத்தாளர் ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதை ஒன்று 'புதிய வாசல்' நூலில். மொழிபெயர்த்த சிறுகதை ஒன்று 'நிலத்தில் படகுகள்' தொகுதியில். வேணு தயாநிதி, காஸ்மிக் தூசி ஆகிய பெயர்களில் கவிதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் பதாகை, சொல்வனம், தி ஹிந்து, கனலி இதழ்களில். தமிழில் கவிதைத் தொகுதியும் சிறுகதைத் தொகுதியும் ஆண்டு இறுதியில் தொகுக்கப்பட உள்ளன. ஆங்கிலத்திலும் கவிதைகள் தொகுதி அடுத்த ஆண்டு.

View Comments

  • ஆங்கிலத்திலேயே கதையை எழுதியிருக்கலாம். மற்றப்படி பாதி வழியில் நித்திரை வந்துவிட்டது.

  • I am a great fan of yuwans writing. This story chosen is very boring , very lengthy, harping on same point of genome sequencing & stuff like that. Predictable end. Totally waste. Very sacred to read other science fiction stories of this year

Share
Published by
வேணு தயாநிதி

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago