கதை

சொல்லாழி வெண்சங்கே

9 நிமிட வாசிப்பு

அஸ்வின் அன்று அதிகாலையில் விழித்துக்கொண்டார். தன் சிறிய அறையிலிருந்து வெளியே வந்து நின்றார். அந்த வளாகத்தின் ஓரத்தில் உயரம் குறைந்த சுற்றுச்சுவரை ஒட்டிய இடம் அது. அதற்கு அப்பால் மணல்வெளியைக் கடந்து இந்தியப்பெருங்கடல். விடிவெள்ளியைப் பார்த்துக்கொண்டு நின்றார். நீரஜ் அவருக்குத் தேநீர் கொண்டு வந்து தந்தான்.

“எதற்காக நீயும் எழுந்தாய்…போய்ப் படுத்துக்கொள்,”

அருகிலிருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்த அவன், அஸ்வின் கொடுத்திருந்த அவரின் தனிப்பட்ட குறிப்பேடு ஒன்றை வாசிக்கத் தொடங்கினான்.

நான் முதன்முதலாக இந்த மிகப்பெரிய ஆய்வுக்கூடத்தில் நுழையும்போது பேரமைதி நிலவியது. ஒலிகளை விழுங்கிக்கொள்ளும் கண்ணாடி அறைகள். பரந்த ஐந்து தளங்களைக் கொண்டது. அந்த ஆய்வகத்தில் என் ஆய்வைச் செய்ய வேண்டும் என்பதே இது நாள் வரை வாழ்வின் ஒரே விருப்பமாக இருந்தது. இங்கு மீமனிதனை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கித் தலைமுறைகள் சென்றுகொண்டிருக்கின்றன. செயற்கை இயந்திரங்களில் தன் கனவை வைத்த மனிதன் ஒரு திருப்பத்தில் அதை வீசி எறிந்துவிட்டுத் தன்னையே ஆய்வின் கருவியாக்கியிருக்கிறான்.

சிந்தித்துச் சிந்தித்துத் தலைபெருத்த மனிதன் உடல் சிறுத்தான். காலகாலங்களாக அடுத்து என்ன என்ன என்ற நகர்வால் பூமியைத் தனதாக்க முயன்றவன் தன்னையே அடுத்ததாகக் கையிலெடுத்திருக்கிறான்.

தலைபெருத்தவன் உடல் பெருத்தவனை உருவாக்கினான். உடல் பெருத்தவனைத் தலைபெருத்தவனுமாக்கினான். அவனை மீறிய ஒன்று உள்ளே கிடந்து குறைபடுத்திக்கொண்டே இருந்தது. ஏழாம் தலைமுறை ஆய்வாளர்களாக நாங்கள் அந்தப் பணியில் இன்று தலைகொடுத்திருக்கிறோம்.

நீரஜ் குறிப்பேட்டை மூடி வைத்தான். வெளியே நின்ற தன் பேராசிரியரைப் பார்த்தபடித் தேநீர் பருகினான்.

வான் பார்த்து நின்ற அஸ்வினின் விழிகள் ஆய்வகத்திற்கு அடுத்திருந்த பள்ளிமைதானத்தைக் கடந்து வகுப்பறைகளைச் சென்று தொட்டன. நடைபாதையில் நடந்தார். அவரை உருவாக்கிய பள்ளி. மூளையைக் கூர்தீட்ட உடலை வார்த்தெடுக்க என்னென்ன தேவையோ அத்தனையும் சூழ, தேர்ந்தெடுத்த மாணவர்கள் பயிலும் பள்ளி.

மனிதனை உருவாக்குவதில் மரபும் சூழலும் சரிபாதி பங்கெடுக்கும், எனில் மரபால் விளைந்ததைச் சூழலால் மாற்ற இயலும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இயங்கும் பள்ளி. ஒரு பக்கம் உயிரியல் ஆய்வுக்கூடமும் மறுபக்கம் வகுப்பறையும் உயர்ந்து நிற்கும் வளாகத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி நடந்தார்.

***

சங்கா முதல்மீன் விண்ணில் எழும் பொழுதில் இல்லத்தின் வாயிலில் நின்றாள். தொன்நீர் காணும் நெடுஞ்செலவிற்கான முதலடியை அவள் எடுத்து வைக்கும் தருணத்தில் அன்னை நிரதி அவளுக்கு ஒரு அடி பின்னால் நின்றாள். அவள் பாதம் பதிந்த மண்ஏட்டை எடுத்துப் பதப்படுத்த மூதன்னை சலதி முற்றத்திற்கு வந்தாள்.

சங்காவின் அழுந்திய பாதப்பதிவைக் கண்டு புன்னகைத்த அன்னை திரும்பினாள். முதன்னையிடம் தலையாட்டிப் புன்னகைத்தாள். அந்தப் பாதங்களைப் பின்தொடர்ந்தாள். முதன்னை கிழக்கு நோக்கிக் கை தொழுத பின், தன்னிருகைகளால் அந்த ஏட்டை எடுத்துச் செஞ்சுடரின் முதல்கதிர் படரும் முற்றத்தில் வைத்தாள்.

சங்கா தன்னிலிருந்து வெளியேறும் செம்மை வானில் படர்வதைக் கண்டபடிக் கிழக்கு நோக்கி நடந்தாள். அவள் பஃறுளி ஊற்றுமுகம் காணும் பாதையில் ஏறி நடந்தாள். அவள் மறைவதுவரை அன்னை நின்றஅடி பெயறாது நின்றாள்.

பசுமை விரியத் தொடங்கியிருக்கும் காலம். நெருஞ்சிகளில் சின்னச்சிறு பொன்மலர்கள் மலரும் பருவம் இது. கோடை வெம்மையில் தீய்ந்து உயிர் காத்தவை அடைமழைக்கும் பிறகு பசுஞ்தீயெனப் பற்றிப் பரவிக்கொண்டிருந்தன. பன்மலையடுக்கங்களைப் பசுமை போர்த்தியிருந்தது.

***

ஆய்வகத்தின் கண்ணாடிக்கதவுகள் வழியே சிறுநகரம் விரிந்து கிடந்தது. அஸ்வின் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். டி.என்.ஏ கோடிங்கில் எந்த நியூக்லியோடைடுகள் உருவாக்கும் புரதங்கள் ஆகச்சிறந்த உடலிற்கும் மனதிற்கும் அடிப்படையாகும்? என்ற தேடலில் இருந்தார். அதைப் புறமாக ஒருவனுக்குக் கொடுக்க முடியுமா? கொடுத்தால் நல்ல முடிவு கிடைக்குமா? சூழலால் உருவாக்க முடியும் என்றால் எத்தனை தலைமுறைகள் புறச்சூழலைத் தந்தபடி இருக்க வேண்டும்? என்ற சிந்தனை மூளையைச் சுற்றி வந்தது.

உயிரின் இயல்புகள் அனைத்தும் சூழலால் தகவமைந்தவை. அவையே மரபணுக்களில் பதிவாக உள்ளன. எனில் சூழலால் புதுப்பதிவுகளை உருவாக்க முடியும் என்று முதன்முதலாகப் பரவசத்துடன் எழுதியது அவர் நினைவிற்கு வந்தது.

அன்று பேராசியர் சஞ்சீவிக்கு உடல் ஓய்ந்திருந்தது. அவர் இறுதிப் படுக்கையில் இருந்தார். ஒரு மாதத்தில் உருவம் தேய்ந்து வேறொருவராக மாறியிருந்தார். அஸ்வினிடம் பேச வேண்டும் என்று அழைத்திருந்தார். “ஆகச்சிறந்த அறிவியல் அறிவு என்பது இப்புடவியின், இப்புவியின் இயல்பை அறிந்து, பின் புரிந்துகொள்ள முயற்சித்தல். அதன் சாத்தியங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியுமே தவிர வேறொன்றுமில்லை. உயிரியலும் விதிவிலக்கல்ல,” என்று தன் ஆசிரியர் இறுதியாகக் கூறிய சொற்கள் நினைவிற்கு வந்தன. மீமானுடத்தன்மையை எய்த முடியுமா? மீமானுடத்தன்மை என்று எதையாவது அறுதியாகக் கூறவிட முடியுமா? என்று இப்பொழுதெல்லாம் தோன்றுகிறது.

நாளும் அவர் அச்சிறுநகரவீதிகளில் அலைந்து திரிந்தார். கடற்கரை மணலில் மணிக்கணக்காக அமர்ந்திருந்தார். ஓராண்டுக்கும் மேலாக ஆய்வுக்கூடத்திலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ளும் அவரை நீரஜ் கவனித்துக்கொண்டிருந்தான்.

அவர் மானுடர்களை ஓயாது கவனித்தார். ஒன்று மீறினால் ஒன்று குறைந்தது. ஒன்று குறைந்தால் அடுத்தது மீறியது. அவருடன் இணைந்த குழுவும் அதன் கிளைகளும் ஓயாது மானுடரின் தனித்த இயல்புகளைத் தேடியழைந்தது. மரபணுக்களை உடைத்து உடைத்து நெய்தது. பிரபஞ்சத்தின் அணுவின் அணுவென அந்த ஆய்வுக்கூடம் நின்றது. அதில் ஓயாத வெடிப்புகள், ஓயாத சுழற்சிகள், ஓயாத பிளவுகளும் இணைத்தல்களும் நடந்து கொண்டிருந்தன.

***

அன்னையின் கண்களுக்கு முன் காடு அடர்ந்து செழித்திருந்தது. வெம்மையும் மழையும் தன் முழுவீச்சில் பொழியும் இடம் அது. அவை இரண்டும் சரிபாகமாய் நின்று அந்த நிலத்தை நெய்திருந்தன. முற்றிலுமாக இருள் கரைந்து ஔிவிரிந்த பொழுதில் அந்த மலைமுகட்டில் சங்கா சென்றவழி பார்த்து நின்ற அன்னையின் நினைவில் மூதாதையர்களின் சொற்கள், காற்றலைகள் எனச் செவிகளில் மோதி நெஞ்சத்தில் ஒலித்தன.

மூதாதை சொல்:

‘பண்டொருநாள் நாம் கண்காணா தொலைவிலிருந்து ஆழிப்பேரலைக்குத் தப்பி இங்கு ஒதுங்கினோம். எண்ண ஒன்னா குலங்கள் பெருகிக்கிடந்த நிலம் அது. வானுயர்ந்த மாடமாளிகைகளும், பத்துஅடிகளுக்கு ஒரு ஆலயமுமாகப் பொழிந்த நிலம். உலகை கைக்குள் அடைக்கும் எந்திரங்கள் படைத்த காலம் அது.

எங்கோ ஒரு புள்ளியில் அனைத்தும் முறிந்து ஆழிக்குள் நுழைந்தன. இது எப்பொழுதும் இவ்வாறுதான். கனிகனிந்து காம்பு கைவிடும் காலத்தின் இயல்பு.

அந்தப் பொழிநிலத்தில் காலங்காலமாக மறைக்கப்பட்டதும், நம்மால் மறக்கப்பட்டதுமான ஒன்றை மீட்டெடுக்கும் பணி நமக்குள்ளது. நம்முடைய மூதாதையின் சொல்லை ஏந்திய ஏட்டில் உள்ளபடி ஒவ்வொன்றையும் நிகழ்த்தி அறிவது நம்கடன். நம்மை வழிநடத்தும் மூதாதைக்கு நாம் அளிக்கும் கொடை’

ஏடு சொல்வது:

எடுத்தியம்புவது கேளீர்! இது நம் அழியாச்சொல் எனக்கொள்க. தன்னிலிருந்து ஒன்றைப் படைப்பது எதுவோ அதுவே வலிமையானது. அதுவே உலகில் முதன்மையானது. புடவியின் சாரம் அது ஒன்றே. ஒன்றிலிருந்து ஒன்று வெடித்து உண்டான இவ்வெளியில் உன்னிலிருந்து உன்னைப் படைக்கும் நீயே சக்தி. நீ கொண்ட தசைவடிவம் வலிமை பெறட்டும். படைப்புக்கென நீ கொண்ட மென்மையைப் பட்டின்நூலென அறுந்திடாத சரடாக்கு. படைப்பது எதுவோ அது தன்னிச்சையானது. அதைக் கைப்பற்றி ஆள்வது என்பது அது படைக்கும் படைப்பை உச்சத்தை எய்தவிடாது ஒச்சமாக்கும் என்றுணர்க. உன் கனிவைக் கண்டு பணியட்டும் உன்னில் பாதியென்றிருக்கும் சிவம். அப்பணிவின் உயர்வுகண்டு தாழட்டும் உன் தீ.

அன்னை மனதிற்குள் ‘உன்னிலிருக்கும் உன்ஆதியை காணும் தெளிவு பெருக உன்சிந்தை. அச்சிந்தைக்கு உடனிருக்கட்டும் உன்உடல்’ என்று தியானித்தாள்.

அவள் மனதை எதிரொளிப்பதைப்போல எங்கோ மின்னிய மின்னலை அடுத்து இடி முழங்கியது. முழக்கத்தை எதிரொளித்தன பன்மலையடுக்கங்கள். அதைக் கேட்டபடி அன்னை நடந்தாள்.

எழுகதிரின் ஔிப்பட்டு மினுங்கிய தன் வளத்தோளைக்கண்டு புன்னகைத்தாள். நிதானமான நடை. தொலைவுகளை எளிதில் கடக்கும் எட்டுவைத்த நடை. துளியும் பிசகாத நேர்நடை. தலைமுறை தலைமுறையாகக் காத்த செல்வம் அவள் உடல். மார்புகள் திமிர தலைஉயர்த்தி அகன்ற கால்களை எடுத்து வைத்தாள்.

சங்கா காட்டின் ஒவ்வொரு மரத்தையும் கண்டாள். தடித்து ஓங்கி வளர்ந்து, பூத்தும், காய்த்தும், பழம் செறிந்த மரங்கள். ஆலும் வேலமும் வேம்பும் மாவும் பலாவும் புளியமும் மருதமும் வேங்கையும் பெயர்சூடாமரங்களும் கொடிகளும் செடிகளும் சிற்றோடைக்கரை நாணல்களுமாக அடர்ந்த காடு. அவள் காட்டில் பதுங்கவும், பாயவும்,சிற்றுயிர்களைக் கூர்நோக்கவும், வேட்டைமிருகங்களின் காலடிகளை உணர்ந்து மறைந்துகொள்ளவும் அறிந்திருந்தாள்.

***

அன்று நிலைகொள்ளாமலிருந்தது கடல். தென்குமரியின் இந்தியப்பெருங்கடலில் நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் எழுந்த ஆழிப்பேரலைகள் தன் வலிய கரங்களை நிலத்தின் மீது பதித்து பரவின. பள்ளத்தாக்குகள் மேடாகவும், மலைகள் மடுவாகவும் மாற கண்டத்திட்டுகள் நகர்ந்து வழிவிட்டன.

கடலில் மிதந்த சொகுசுக்கப்பல்கள் திசையறியாமல் அலைபாய்ந்து தென்கடலில் நிலையழிந்து கொண்டிருந்தன. பலமாதப் பயணத்தை முடித்துத் திரும்பியவை கரைசேரவில்லை. எச்சரிக்கை நாளுக்கு முன்பே கரைகளை மாற்றிய ஆழிப்பேரலைகளால் மேலும் மேலும் அந்தக் கப்பல்கள் நீருக்குள் சென்றன. எத்தனை கணிப்புகளுக்குப் பின்பும் எஞ்சியிருக்கும் இயற்கையின் பெருநடனம்.

நீரிலிருந்து எழுந்து நின்ற அந்தப் புதுநிலத்தில் சிலர் கரையேறினர். எஞ்சியவர்கள் மிஞ்சிய அந்நிலம் காலத்தின் மறுசுழற்சியில் நீரில் இருந்து எழுந்த பண்டைய நிலம். அந்நிலத்தின் நினைவுகள் அவர்களுக்கு மொழியெனக் கவியென ஆழ்மனதில் நின்றிருந்தன. அந்நினைவை மீட்டும் மொழியன் ஒருவனின் வாய்ச்சொல்வழி அவர்களுக்குள் மீண்டு எழுந்தது நிலம். எதுவும் மாறவில்லை. இது இப்படி எப்போதும் எந்நாளும் இருப்பது எனப் பன்மலையடுக்கமும் குமரிக்கோடும் பஃறுளி ஆறும் அவர்களை அணைத்துக்காத்தன.

காட்டைக் கடந்து சங்கா மலையேறி பஃருளி உருவாகும் சுனையை அடைந்தாள். வழியிலேயே அவளுக்குள் கீற்றென இருந்தது ஊற்றென எழுந்திருந்தது. சுனைக்குள் மூழ்கி எழுந்தாள். சுனையிலிருந்து நீரின் பாதையில் நடந்தாள். கால் பாவஇயலாது கற்கள் உருண்டும், கூர்நீட்டியும், பாசி வழுக்கும் தடைகளாய்க் கிடக்கும் கரைநிலத்தில் வரையாட்டின் காலடிகள் கொண்டு குதித்தேறி இறங்கினாள்.

அவளை முற்றத்தில் அமர்த்தி நிலவெழும் அந்தியில் முத்துக்கொட்டை நெய்யால் சுடரும் விளக்கின் அடியில் அமர்த்தி அன்னை சொல்வாள்:

நம் பண்டுநிலத்தில் இரண்டாம் குடிகள் நாம். இல்செறித்து வைக்கப்பட்ட மென்புறாக்கள். சொன்னதைச்சொல்லும் கிளிப்பிள்ளைகள். கல்வி கேள்வியும் பெற்று, பொருள் தேடியெடுத்த பின்னும் உடலால் நாம் நம்மை இல்செறித்துக் கொண்டோம். மீறிய உடல்கள் வேட்டையாடப்பட்டன. நம் காட்டின் தளிர்கள் நசுக்கப்பட்டன.

நமக்கான இரவென்று ஒன்றில்லை கண்ணே. நம் இரவிற்குப் பாதைகள் இல்லை. நம் இரவின் நிலவுகள், நட்சத்திரங்கள் நம் கூரைக்கு மேல் உள்ளவை மட்டுமே. நம் கால்களுக்குத் துணை தேவையிருந்தது. அந்த நிலம் அவர்களுக்கென ஆக்கப்பட்டதென ஒரு குரல் சொல்லியது. அது அவர்களுக்குள் இருந்த தாட்டானின் குரல். எதையும் வலியவையே வகுக்கும் எனில் வலியதாவதே வழி கண்ணே.

சிறுமி சங்கா அன்னையின் சொல் கேட்டபடி செப்பு உதடுகளும், சற்று விரிந்த நாசியும், படர்நெற்றியுமான சிறுமுகத்தை நிமிர்த்தி வானத்தைப் பார்த்தாள். அத்தனை விண்மீன்களும் புன்னகைத்தன. பொழுதனைத்தும் ஓடி ஆடிக் களைத்த தசைகள் இளகுவாகி இனிய சோர்வை அடைய அன்னையின் மடியில் உறங்கிப்போனாள்.

***

பஃறுளி ஊற்றாக இருந்தது ஓடையாகிச் சலசலத்தது. கிளையாகப் பாய்ந்து நதி என நகர்ந்தது. சங்கா உறுதியான கால்களை எடுத்துவைத்து தென்றலாய் காற்றாய் புயலாய்க் கடந்து சென்றுகொண்டிருந்தாள்.

பதின்வயதுப்பெண்ணான சங்கா கால்களை மடக்கி நிமிர்ந்து அமர்ந்திருந்தாள்.

அன்னை சொல்வாள்:

இவ்வுடலில் நீ விழிக்கும் நாளில் நீ உன்வழி தேர்ந்து நட. நானும் மூதன்னையும் அவ்வழி நடந்தோம். எவ்வழி தேர்வது என்பதை உன் ஆழம் சொல்லும். எவ்வழியாயினும் அவ்வழி சென்று ஆழி கண்டு திரும்புக. மீண்டு வந்து நீ உணர்ந்ததைச் சொல்க. இந்நாள் வரை ஆழி காணாமல் திரும்பியவர்கள் பலர். ஆழி கண்டு சொல்லிழந்தவர் அதனினும் மிகுதி. நான் ஆழி கண்டு திரும்பி சொல்ழெழாதவள். ஏதோ ஒன்று ஒச்சமாகிறது கண்ணே. எது நம்மை இங்கு நிறுத்தியதோ, தேட பணித்ததா அது உன் வழி தன்னை அறிவிக்கட்டும்.

மீள ஒரந்தியில் நிலவு வளரும் கீற்றொளியில் அதே விளக்கொளியில் முற்றத்தில் அமர்ந்த அன்னை கூறினாள். அந்நிலத்தில் நமக்குச் சிட்டுக்குருவியின் பதைப்பு நிறைந்த விழிகளை, நம் மனதிற்கு அளித்திருந்தது காலம். எத்தனை எத்தனிப்புகளுக்குப் பிறகும் அதை நம்மால் வென்று கடக்க முடியவில்லை கண்ணே.

அன்று முதன் முறையாக சங்கா சொல்லெழுப்பினாள். அதை அடைந்தவர் எவருமே இல்லையா அன்னையே?

இந்நிலம் அதற்கானது கண்ணே. இங்கே நாம் வரையாடு ஏறும் அந்தச் சிகரத்தை எட்டியிருக்கிறோம். கூட்டத்தை வழி நடத்தியிருக்கிறோம். இயற்கை அதன் சாரத்தின் துளியை நமக்களித்திருந்தது. அதை அங்கே தொலைத்துவிட்டோம். எங்கோ எப்போதோ நடந்த சுழலில் மீண்டுமென இங்கு வந்திருப்பது நமக்காக நம் பொருட்டுத் தவமியற்றிய நெஞ்சங்களின் தீராத ஏக்கத்தின் விசையால். அவர்கள் கடக்க முயன்ற ஒன்றைக் கடக்கும் வாய்ப்பு ஒருத்திக்கேனும் சித்திக்கட்டும். அதிலிருந்து கிடைக்கட்டும் புத்தம்புது மானுடத்திற்கான திறவுகோல்.

சங்கா விழிகள் விரிய அன்னையின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த முகத்தை மனதில் நிறுத்தினாள். அது மட்டுமே தன் ஆழம்வரை செல்லும் என்ற அவள் மனம் அறிந்திருந்தது.

நம் முன்னவள் எழுதிய சூத்திரங்கள் கேளாய்… நம் உடல் இருபொருள்களால் ஆனது. அவனுடல் ஒரே பொருளின் இரட்டித்தலால் ஆனது. ஓரே பொருள் இரட்டிக்கையில் நதியின் வலிமை போல அறுபத்திநான்கு மடங்கு வலிமை கூட்டும் அது. இருவேறு பொருளின் கூட்டின் வலிமை என்பது அந்தப் பனிமலையில் உறங்கும் எரியின் உறைந்த விசைக்கும், கண்களைக் கடந்து பரந்து விரிந்து ஆழ்ந்து தழும்பும் தொன்னீர்க்கும் நிகர். உறங்குவதை எழுப்பும் பெருவிசை எழ வேண்டும். அதற்குத் தொன்னீர் காணும் செலவைத் தனித்து முடிக்க வேண்டும். நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் என்சொல்லும், என்வழி வந்த முன்னவர் சொல்லும் உன்னுள் எழட்டும்.

பின்பொருநாள் அதே முற்றத்தில் அதே ஔியில் நிலவில்லா இருளில் அவளை அமர்த்தி அன்னை சொன்னாள். நம் அலைபாயும் மனதிற்கு ஊழ்கமில்லை என்று கூறி விலக்கியது அந்நிலம். மனம் உண்டென்றால், அது அலைபாயும் என்றால், அது நிலைக்கவும் வேண்டுமல்லவா? உன் ஆழத்தைத் தேடு. கண்களை மூடி அமர்ந்து உன் உள்ளே தேடு. தொட்டு எடு உன்னை. நான் சென்ற தொலைவை உனக்களிக்கிறன். நீ செல்லும் தொலைவை உன் பின்னுள்ளவளுக்காக்கு. உன் உள்ளே செல்ல உள்வெளியைப் பெருக்கு. வெளியைப்போல் விரிவதே நமக்கு ஊழ்கம். ஆழி முன் உன் ஆழம் தெளியட்டும். மொழி அதை தன்னுள் ஏந்தட்டும்.

பஃறுளி தன்னைப் பின்னல்களாக்கி நெளிந்து கொண்டிருந்த இடம்வரை சங்கா இறுகிய கால்களின் பலம் கொண்டு நடந்து வந்திருந்தாள். முதலடி எடுத்து நடக்கத் துவங்கியது முதல் எத்தனை தொலைவுகள் நடந்த கால்கள். பிடிக்கத் துவங்கியது முதல் எத்தனை இழுவைகளை இழுத்த கைகள். என்றும் ஓயாத உடல் இன்று துவள்வதைக் கண்டு கால்களை ஓங்கி மிதித்தாள். இன்னும் விரைவாக நடந்தாள்.

***

அஸ்வின் பற்றிய செய்திகள் ஆய்வுக்கூடத்தில் பரவின. முன்னவர்கள் அனைவருக்கும் நிகழ்ந்ததே அவருக்கும் நிகழ்ந்துவிட்டது. அவர் சித்தம் தடம் மாறி நடக்கிறது. இனி அவரால் ஆய்விற்குப் பயனில்லை என ஆய்வுக்குழு அறிவித்தது.

நீரஜ் அஸ்வினின் புத்தகக்காட்டில் அலைந்து திரிந்தான். ஆய்வுக்கூடத்தில் கிடந்து உழன்றான். தன் பேராசியரின் ஆய்வுகள் அனைத்தும் பிழையற்றிருக்க, எழும் பிழை எது என்று அவன் சித்தம் நெடுந்தொலைவு ஓடியது. நின்று பார்க்கும் போது அதே இடமாக இருந்தது.

***

நிலவு தேயும் ஓரந்தியில் அன்னை சொல்வாள். என்னிலிருந்து எழுந்தவளே உடல் வலுப்பெறுகையில் அகந்தையின் முன் மனம் வலுவிழக்கும் அறிக. நம் முன்தெய்வ மொழிபு ஒன்றுண்டு கேளாய். உடமையாகாத ஒன்று மற்றொன்றை உடமையாக்காது. அவை இரண்டும் ஒன்றில் இரண்டாயிருக்கும் ஆதிஅந்தம், உடலும் உயிரும், காற்றும் அது தேரும் திசையும், இருளும் ஔியும், ஒலியும் அதுசெல்லும் வளியும்.

சங்கா வாட்டம் நீங்கி புதுக்காலையின் பொலிவுடன் அந்தக் கடற்கரையில் நின்றாள். கண்கள் உணரும் எல்லைவரை வெண் மணல் விரிந்து கிடந்தது. திரைகளாகி தன்னை அனுப்பி அனுப்பி மீண்டும் அனுப்பி ஓயாமல் அழைத்துக் கொண்டிருந்தது தொன்னீர்.

பொழுதெழும் பொழுதில் கடலில் மூழ்கித் துழாவினாள். மூச்சைப் பிடித்து மீனென நீந்தினாள். கைகளால் கண்களால் துளாவினாள். சங்குகள் நிறைந்து கிடந்தது கடல். வண்ண வண்ணப் பாறைகளால் அதில் முளைத்த கரங்களால் ஆடித்திளைத்திருந்தது கடல்.

அலைகள் மோதும் கடலிற்கு அப்பால் அலைமோதாக் கடலை அந்திவரை கண்டு நின்றாள். மோதித்தவிப்பது, ஆற்றாது அலறுவது, கரையை மீற எத்தனிப்பது அது. பின்னிருந்து அதை அதே கடத்திக்கொண்டிருந்தது. ஒன்றின் இருமை…ஒன்றென இரண்டாகி நிற்கும் பேருண்மை.

குமரிக்கோட்டில் ஔியோன் மறையும் அந்திவானில் செம்மையுடன் கலந்த நீலமாய்ப் பிரபஞ்சம் தன்னைக் காட்டி நின்றது. இருளும் அல்ல ஔியும் அல்ல. பொழுது ஒன்றே. ஒன்றை ஒன்று மறைக்கும் போதும், ஒன்றை வெளிப்படுத்தும் போதும் அது ஒன்றே. வெளி என்ற ஒன்று, இரண்டாய் மாயம் காட்டிச் சமைத்தது இப்பேருலகு. இதில் நான் நீ என்பதெல்லாம் கடல் மேல் எழும் நுரை. நாம் என்பது அந்த நுரை மேல் எழும் வண்ணங்கள். அது ஒன்றேதான்.

மீண்டும் கடலுக்குள் பாய்ந்தாள். கண்களை மூடித் தன் உள்ளம் தொட்ட சங்கை எடுத்துக் கடல் மேல் எழுந்தாள். நீர் வழியும் மேனியில் பட்டு மினுமினுத்தான் மறைந்துகொண்டிருந்த ஔியோன். பெரிய வெண்சங்கு அது. இடையில் சங்கைக் கட்டினாள். மீண்டும் வந்தவழி நடந்தாள்.

முற்றத்தில் அமர்த்தி அன்னை சொல்வாள். அங்கு செல்வாயா மகளே…இதைச் சொல்வாயா? அவர்களின் ஆழம் அறிந்த ஒன்றை, அவர்களின் அகம் அறிய, புறம் அறிய செய்வாயா?

விடிமீன் எழும் பொழுதில் சங்கா தன் இல்லத்தின் முன் நின்றாள். தன் இடையிலிருந்த சங்கை எடுத்துத் தலையுயர்த்தி வெளிநோக்கி விளித்தாள். கருமை போர்த்திருந்தது வெளி. மெல்ல மெல்ல இருளில் ஔிகலகத் தொடங்கியது. அவளின் சங்கநாதம் அவர்களின் தொல்நிலம் நோக்கி ஒலித்தது.

***

அஸ்வின் உயிர் குலங்கள் தோன்றிய ஆதித்தாயிடம் வந்து நின்றார். இங்குதானே தோன்றியது இங்குதானே என்று மனம் அரற்றியது. அவர் சிந்தை தறிகெட்டு ஓடி நின்று சமைந்திருந்தது. தென்கடலின் முனையில் நின்றிருந்த கன்னியின் பாதங்களின் அமர்ந்தார். இந்நாள் வரை நான் தேடியது இல்லவே இல்லாத மாயையா? என் தேடல் வெற்று ஆணவமா? அப்படி ஒன்று இருக்கவே முடியாதா?

தன்முன் திரையெறியும் முந்நீரை பார்த்தபடியிருந்தார். விரிந்து பரவி தழும்பினாள். தன்னுள்ளே முடிவிலா உயிர்களைச் சுமப்பவள். நீரின் பசும்பரப்பிலிருந்து திரண்டு சின்னஞ்சிறியவளாக எழுந்தாள். அலைகள் அவளை ஏந்தி வந்தன. கண்களை மூடிக்கொண்டார்.

அவள் பாறையில் ஏறி அவரை நோக்கிவந்தாள். பலநூறு உடல்களைக் கண்களால், பல நூறு உயிர்த்தன்மைகளை உள்ளுணர்வால் கண்டவர் அவர். சித்தம் தடதடக்க எழுந்து நின்றார். அவள் பின் வருபவள் அன்னை சங்கா.


புகைப்படம்: ஶ்ரீநாத்

மேலும் படிக்க

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:

குறிப்பிடத்தகுந்த கதைகள்:

கமலதேவி

சொந்த ஊரான திருச்சிராப்பள்ளி மாவட்டம் பா.மேட்டூரில் பெற்றோருடன் வசிக்கிறார். இணைய இதழ்களில் கதைகள் மற்றும் வாசிப்பனுபவக்கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். சக்யை, குருதியுறவு, கடுவழித்துணை என்ற மூன்று சிறுகதைத்தொகுப்புகள் வாசகசாலை பதிப்புகளாக வெளிவந்துள்ளன. 2016 டிசம்பரில் இவரின் முதல் கதை ‘விடாய்’ சொல்வனத்தில் பிரசுரமாகியது. 2019 ஜனவரியில் இவரின் முதல் சிறுகதைத்தொகுப்பான ‘சக்யை’ வெளிவந்தது. ‘சொல்லாழி வெண்சங்கே’ என்ற கதை இவர் முதன்முதலாக எழுதிப்பார்த்த அறிவியல் புனைவு. "என் சூழலில் வாய்த்தற்கரிய வாசிப்பு மற்றும் எழுத்தை, உடல் மனம் பொருளாதாரம் மற்றும் ஊழின் எல்லைகளுக்குட்பட்ட இந்தச் சிறுவாழ்வின் சுழலில் முடிந்தவரைத் தொலைத்துவிடக்கூடாது என்ற பதட்டத்துடன், மானசீகமாக நம் முன்னோடிகளின் கரங்களைப் பற்றிக்கொண்டு நடக்கிறேன்."

Share
Published by
கமலதேவி

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago