கதை

சக்கர வியூகம்

12 நிமிட வாசிப்பு

“தர்மா, நீ மனசால அபிமன்யு… கருவிலேயே சக்கர வியூகத்தை உடைக்கக் கத்துக்கிட்டவன்… ஆனாலும் போர்ல அநியாயமா செத்துட்ட… இப்பொழுது நீ சக்கர வியூகத்த அழிக்க வந்த தலைவனாக மீண்டும் பிறப்பெடுத்துருக்கன்னே நினைச்சுக்கோ…”

தர்மாவின் காதில் லிங்கத்தின் குரல்கள் மட்டுமே பதிவு செய்து மீண்டும் ஒலிபரப்பப்படுவதைப் போன்று மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தன. வேறெந்த நினைவுகளும் அற்ற சூன்யவெளியில் தர்மா நின்றிருந்தான். அவன் முன்னே தெரிந்த அனைத்துமே சக்கர வியூகத்தின் பிம்பங்கள் மட்டுமே. அதனை எதிர்த்து அவன் உருவாக்கும் போரின் மீதே அவன் முழு கவனமும் குவிந்திருந்தது.

0311270 என்பவன் லோரோங் ஜாத்தியில் வந்து நின்றான். இந்த முகம் தர்மாவின் மூளையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்ததால் சட்டென அடையாளம் கண்டு கொண்டான். 0311270, அவனை அப்படித்தான் அழைக்க வேண்டும். தனிப்பட்ட பெயர்களைச் சொல்லக்கூடாது என்பதே அங்குப் பிரதான விதிகளில் ஒன்று. அதனால் அந்தத் தனித்த சாலையின் கோடியிலுள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அவனைக் குறி வைத்துத் துப்பாக்கியை ஏந்தியிருக்கும் தர்மாவுக்கு 0311270-இன் உண்மைப் பெயர் இப்பொழுதுவரை தெரியாது. இன்னும் ஐந்து நிமிடத்தில் அவனைச் சுட்டுவிட வேண்டும் என்பது மட்டும்தான் தர்மாவுக்குக் கிடைத்த கட்டளை. அங்கிருப்பவன் வெறும் சதை. அதற்குமேல் அவனைப் பற்றிய எந்தப் புரிதலையும் வளர்த்துக் கொள்ளக்கூடாது. தர்மா மீண்டும் நினைவுப்படுத்திக் கொண்டாலும் மனத்தினுள் ஏதோ செல்லரிப்பு. நினைவுகள் இருத்தலுக்கும் இல்லாமைக்கும் நடுவில் ஊடாடிக் கொண்டிருந்தன. சட்டென தர்மாவுக்குப் பிரக்ஞை வெளியில் ஒருவித அசூசை உண்டானது.

“அபிமன்யுவோட மரணம் கொஞ்ச நேரத்துக்குப் போரையே திண்டாடிப் போக வச்சுச்சாம்… தர்மா… மரணத்துக்கு முன்ன கொஞ்சம்கூட தலை குனிஞ்சிறக் கூடாது…”

மீண்டும் லிங்கத்தின் குரல். அங்கு நிற்கும் அவன் செத்து வீழ்ந்து சில நாள்களில் அவன் பெயர் தெரிய வரும்போது மண்டியிட்டு இறைவனிடன் இவனுடைய பெயரைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்கிற சிந்தனை சட்டென தர்மாவின் மனத்தில் தோன்றியதும் துப்பாக்கியைக் கீழறக்கி வெகுநேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இல்லாமை ஒரு வெளி. இல்லாமல் இருப்பதும் ஒரு வெளி. இல்லாமல் இருக்க வேண்டும் என மீண்டும் தர்மாவின் ஆழ்மனம் அவனிடத்தில் நினைவுறுத்தியது.

ஜாலான் ஜாத்தி 03, 05 போன்ற குண்டர் குழுக்களின் பழிவாங்கும் படலங்களில் பேர்போன சாலை என்பதால் பொதுமக்கள் இங்குப் புழங்க மாட்டார்கள் என்பதே தர்மாவுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆளரவமில்லாமல் தனித்திருந்த 500 மீட்டர் தூர அளவு கொண்ட இந்தச் சாலை 03, 05 குழுக்களின் எல்லைகளைப் பிரிக்கும் பகுதி. இந்த இரு எல்லைகளுக்கு அப்பால்தான் பொட்டல விற்பனைகள் நடைபெறும். ஜாத்தி எல்லையைக் கடந்து இரு குழுக்களின் உறுப்பினர்களும் இடம் மாற்றிப் பொட்டலம் விற்பது அவர்களின் தொழில் தர்மத்தைச் சீர்குலைப்பதற்குச் சமானமான துரோகச் செயல். அத்தகைய ஒரு துரோகமிக்கச் செயலைச் செய்வதற்குத்தான் 0311270 காத்துக் கொண்டிருக்கிறான். 03 அவன் பிரதிநிதிக்கும் குழுவின் பெயர். 11270 என்பது அவனது உறுப்பிய எண். இரண்டையும் இணைத்துதான் அவனுக்கு அப்பெயர் கிடைக்கப் பெற்றது.

அவன் கையில் பொட்டலத்தைப் பிடித்திருப்பதை தர்மா மீண்டும் பார்த்து உறுதிபடுத்திக் கொண்டான். அவனுடைய கையில் பொட்டலத்தைப் பார்க்கும்போது தர்மாக்குக் கோபம் பிரக்ஞைக்குள் சூழ்ந்து நின்றது. அது ஆபத்தான பிரம்மாஸ்த்திரம். உடனே அழித்துவிட வேண்டும் என தர்மா துடித்தான்.

“தர்மா… பொட்டலம் என்பது ஆயிரம் அம்புகளுக்குச் சமம்… பல்லாயிரம் பேரோட மார்புக்குக் குறி வைக்கற ஆற்றல் அதுக்கு இருக்கு…”

கருப்புச் சட்டை அணிந்துகொண்டு மோட்டாரில் வந்த ஓர் இளைஞன் அவனிடம் பொட்டலத்தை வாங்கிக்கொண்டு 08 குழுவின் எல்லைக்குள் சென்று மறைந்தான். அவன் சென்றதும் தர்மா மேலும் ஒரு பொட்டலத்துடன் காத்திருக்கும் 0311270-ஐக் குறி பார்த்தான். கனத்த மனத்துடன் துப்பாக்கியை அழுத்தினான். 0311270-இன் வலது புருவத்தின் மேல் குண்டு பாய்ந்தது.

தர்மா

இவனது பெயர் OH25430. O என்பது Obsession, H என்பது Hysteria. 25430 என்பது அவனது பயிற்சி எண். தர்மா இங்குக் கொண்டு வரப்பட்டு ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. அவனது பயிற்சி மருத்துவர் திரு.லிங்கம். கொலைக்குப் பின்னர் உடனே பயிற்சியகத்திற்கு வந்துவிட வேண்டும். கொலை செய்யும்போது நடுக்கம் வருவது தொழில் தர்மத்திற்குப் பாதகமான செயல் என்பது தர்மாவுக்குத் தெரியும். இன்று அவனைக் கொல்லும்போது அவனது மனம் கனமானதை தர்மாவால் உணர முடிந்தது.

என் எதிரில் இருப்பவன் யார்? அவனைக் கொல்ல நான் யார்? ஒரு பொட்டலம் அவனைக் கொல்வதற்கு என்னைத் தூண்டுகிறது என்றால் அவற்றின் குறியீடு என்ன? என்கிற குழப்பச் சிந்தனைகள் அவனது நினைவைத் தின்று கொண்டிருந்தன. எத்தனைமுறை ஞாபகப்படுத்தியும் அவன் யாரென்று அவனால் உணர முடியாமல் தடுமாறினான். ஒரு 16 வயது சிறுவனின் முகம் மட்டுமே அவனுக்குள் வந்து போனது.

QRW தலைமையகத்திற்கு வந்து சேர்ந்ததும் துப்பாக்கியை மூன்றாவது மாடியிலுள்ள அவனது வைப்பறையில் வைத்துவிட்டு அவனுக்கென்று வழங்கப்பட்டிருந்த அறையில் முதலில் குளித்தான். குளிர்ந்த நீர் உடல் முழுவதும் பரவியது. உடலிலிருந்த கனத்த வலிகள் இறங்கியோடுவதைப் போல் உணர்ந்தான். எதிரில் இருக்கும் பொருள்கள், சற்று முன்பு நடத்தி முடித்த கொலை, மருத்துவரின் முகம், வெளியே சில காட்சிகள் தவிர தர்மாவின் சிந்தனையில் வேறொன்றும் இல்லாத சூன்யத்தை நினைத்து அவனே பலமுறை ஸ்தம்பித்து நின்றுள்ளான். இதுபோன்ற மூளை விபத்து அவ்வப்போது அவனுக்குள் நிகழும். உடல் சோர்வை உதறித் தள்ளிவிட்டு மருத்துவ அறைக்குச் சென்றான். மொத்தம் 340 மருத்துவர்களுக்கான அறைகள் நிரம்பிய தளம் அது. அதில் லிங்கத்தின் அறை எண் 140.

“தர்மா, உள்ள வா. நீ அபிமன்யு என்பது ஞாபகத்துல இருக்கா?”

“இருக்கு…ஆனா…”

“இன்னிக்குக் கொலை செஞ்சப்ப மனசு ரொம்ப உறுத்துனுச்சா?” என்றவாறே ஆழ்ந்த அமைதிக்குள் இருந்த லிங்கம் எழுந்து சென்று அவனை நாற்காலியில் உட்கார வைத்தார்.

“இருந்துச்சி. மனசுலே இலேசான வலி. என்னான்னு தெரில…”

“இருக்கக்கூடாது, தர்மா. உங்க பேரு என்ன?”

“தர்மசீலன் அபிமன்யு”

“உங்க வயசு?”

“தெரில…”

“உங்களுக்குக் குடும்பம் இருக்கா?”

“தெரில…இல்ல போல…”

“உங்க வாழ்க்கையில கடைசியா நீங்க எதை ஞாபகம் வச்சிக்கணும்?” என்றவாறே மருத்துவர் லிங்கம் தர்மாவின் அசைவற்ற கண்களைக் கவனித்தார்.

“நான் கடைசியா செஞ்ச கொலையப் பத்தி மட்டும்தான்…”

“கடைசியா எப்போ கொலை செஞ்சீங்க?”

“0311270, இன்னிக்குக் காலைல,”

“அதுக்கு முன்ன?”

“ஞாகபம் இல்ல,”

“கொலை செஞ்சிட்டு செத்தவனோட முகத்த பார்த்தீங்களா?”

“இல்ல… அப்படியே வந்துட்டன்…”

“உங்க வாழ்க்கைல நடந்த ஏதாவது சம்பவத்த ஞாபகம் வச்சிருக்கீங்களா?”

“எனக்கு பதினாறு வயசு இருக்கும்… நான் போர்ல இருந்தன்… என்னை யாரோ அம்புல குத்தி கொலை செஞ்சிட்டாங்க… இரத்த வெள்ளத்துல கெடந்தன்…”

“அதை யாரு செஞ்சானு ஞாபகம் இருக்கா, தர்மா?”

“ம்ம்ம்… யாரோ ஓர் ஆளு… சரியா தெரில…தூரத்துல இருந்தான்…”

“அப்புறம் என்ன ஆச்சு?”

“என்ன சுத்தி நின்னு பலரும் அழுதாங்க…”

“அவுங்கலாம் யாரு?”

“நிச்சயமா தெரில…”

“நல்லா ஞாபகப்படுத்திb பாருங்க, தர்மா…”

“துடிக்கத் துடிக்கச் செத்தன்… அது நல்லா தெரியுது…”

“கொலை செய்றது பாவமா, தர்மா?”

“எனக்கு மனசுல அப்படித்தான் தோணுது…”

“ஓகே, தர்மா. நீங்க உங்க அறையில படுத்துக்கலாம். இன்னிக்கு ஏழு மணிக்கு உங்களுக்குப் பயிற்சி இருக்கு…”

லிங்கம் தர்மாவின் பயிற்சிக் களத்தைத் தயார் செய்தார். Freud Hysteria 045. இன்று மாலை 7.00 மணிக்கு தர்மாவின் ஆழ்மனத்தில் இருக்கும் அவனுடைய உணர்வதிர்ச்சி சம்பவத்திற்குள் கொலை செய்ய வேண்டியவர்களின் மாய இருப்பை மேலும் ஆழப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் தர்மா தயங்காமல் கொலை செய்வான். அவன் மனதினுள் எழும் வலியை, இரக்கத்தை முற்றிலும் அழிக்கும்வரை தர்மாவைப் போரில் ஈடுப்படுத்த முடியாது என்பது லிங்கத்திற்குத் தெரியும்.

லிங்கத்தின் பயிற்சியகத்தில் தர்மா ஒரு கறும்புள்ளியாக மாறிவிடக்கூடாது என்பதில் அவர் கூடுதல் அக்கறையுடனே இருந்தார். தர்மா கதவைத் திறந்து சென்ற திசையையே லிங்கம் கவனித்துக் கொண்டிருந்தார். தர்மா ஒரு துணிச்சல்மிக்க காவல் அதிகாரி. ஒரு விபத்தில் மனைவியைப் பறிக்கொடுத்த பின்னர் மன அழுத்தத்தின் உச்சத்தில் இருந்தவனை QRW தலைமையகம் அடையாளம் கண்டு உருமாற்றியது.

தர்மா அத்தகைய மனச்சோர்வான நிலைக்குள் தவித்துக் கொண்டிருந்தபோதுதான் லிங்கத்திடம் அனுப்பி வைக்கப்பட்டான். இரண்டு வாரங்கள் தர்மாவின் ஆழ்மனத்துடன் பேசி லிங்கம் தகவல்கள் அனைத்தையும் சேகரித்து தர்மா OH25430 என்கிற கோப்பை உருவாக்கி QRW தலைமையகத்தின் கூட்டத்தில் சமர்ப்பித்தார். தர்மாவைப் போரில் பயன்படுத்த உகந்த சாத்தியங்கள் முதலில் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டன. லிங்கத்தின் கடைசி வாய்ப்பு அது. பலமுறை QRW தலைமையகத்தின் நம்பிக்கையைப் பெற முடியாமல்போன லிங்கத்திற்கு அளிக்கப்பட்ட கடைசி வாய்ப்புதான் தர்மா.

அவனை முழுமையான ஒரு போர் வீரனாக உருவாக்குகிறேன் என்ற லிங்கத்தின் முடிவில் இப்பொழுது சிறு கீறல் நிகழ்ந்துள்ளதை லிங்கத்தால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. QRW தலைமையகத்தின் ஆட்டுவிப்பு என்கிற மருத்துவ அணுகுமுறையை லிங்கம் ஒரு வருடம் கற்றுக்கொண்டு அதன் வழியாக இருபது போர் வீரர்களை உருவாக்கி அனுப்பிவிட்டார். அதில் 12 பேர் போரில் மற்றவரைக் கொல்ல முடியாமல் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்கள். கடந்தாண்டு லிங்கத்திற்கு நிகழ்ந்த பேரிழப்பு இது.

மூளை நரம்புகளுக்குள் உணர்வதிர்ச்சியை உருவாக்கி தர்மாவின் நினைவுகளை முழுவதுமாக அழித்துவிட்டுப் போருக்கு அவனைத் தயார் செய்யக்கூடிய சம்பவங்களை மட்டுமே அவனது நினைவடுக்கில் விட்டுவிட வேண்டும். தர்மாவுடன் லிங்கம் நடத்திய ஆழ்மன உரையாடலில் அவனது அப்பாவின் மரணமும் மனைவியின் மரணமுமே அவனை ஆட்டுவித்துக் கொண்டிருந்ததை லிங்கம் கண்டுபிடித்தார். தர்மாவுக்குள் இருந்த அவனுடைய சிறுவயது மனக்கிளர்ச்சியைவிட மனைவியின் இறப்பினால் உண்டான மனக்கிளர்ச்சி ஓங்கியிருந்தது. ஆனால், அது தனது கவனக்குறைவால் உண்டான மரணம் என்பதை அவன் ஆழ்மனம் அழுத்தமாக நம்பியிருந்தது. அதே போல அப்பாவின் மரணம் ஒரு விபத்து என்றே அவனுக்குப் பலரும் நிறுவிவிட்டார்கள். அதனுள் உணர்வதிர்ச்சியை உருவாக்க இயலாது. தர்மாவின் ஆழ்மனம் அச்சம்பவங்களுடன் நெருக்கமான தொடர்பாடலைக் கொண்டுள்ளது. ஆக, அப்படியொரு சம்பவத்தை அவன் நினைவிலிருந்து முற்றிலுமாக ஆட்டுவிப்பு மூலம் மூளைக்கு அதிர்ச்சிக் கொடுத்து நீக்கிவிட்டார்.

“தர்மா… நீ அபிமன்யு. போர்ல உன்ன அந்நியாயமாகக் கொன்னுட்டாங்க. தர்மத்தோட பக்கம் நின்ற நீ ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டுட்ட… உன்ன கொன்னவன் யார் தெரியுமா? இந்த உலகம் யாரைக் கொடை வள்ளல்னு புகழுதோ அந்தக் கர்ணன்…” லிங்கத்தின் இக்கதையை மெல்ல தர்மாவின் ஆழ்மனம் ஏற்கத் துவங்கியது. நினைவுகளற்ற வெளிக்குள் தன்னை அபிமன்யு என்று தர்மா நம்பிக்கை கொண்டு கட்டமைக்கப்பட்டான். அது அவனுக்குள் அழுத்தமான மனக்கிளர்ச்சியை உருவாக்கியிருந்தது.

அப்புள்ளியையே லிங்கம் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தார். போராளிகளின் அகத்தை ஆய்வு செய்து அவர்களின் மூளைக்குள் சம்பவச் சீர்திருத்தம் செய்வதற்குரிய பயிற்சியைத்தான் லிங்கம் போன்ற 340 மருத்துவர்களின் முதன்மையான வேலைகளாகும். QRW தலைமையகம் அவர்களை உருவாக்கியதற்கும் அதுதான் காரணம். ஆட்டுவிப்பு வழிமுறை, மூளை நரம்புகளுடன் தொடர்புப்படுத்தப்பட்டு மனித மூளையின் நினைவுகள் சேகரிக்கப்படும் இடத்திலுள்ள அணுக்களின் அசைவுகளைச் செயற்கைக் கதிர்வலைகளின் மூலம் கண்டறிந்து அதனுள் உணர்வதிர்ச்சியைச் செலுத்தி ஆட்கொள்ள முடியும். கூடுதலான சில சம்பவங்களைச் செயற்கை அணுக்களாக மாற்றி அதனைக் கதிர்வீச்சின் வழி மூளையின் நினைவடுக்குப் பகுதிக்குள் கொண்டு செல்ல முடியும். கதிர்வீச்சு கொண்டு செல்லும் ஆல்ஃபா துகள்கள் அனைத்துமே செயற்கையாக உருவாக்கப்பட்டு தர்மாவின் மூளையிலுள்ள அணுக்களில் கடத்தப்படும்.

தர்மாவின் இப்போதைய மனமும் நினைவுகளும் சிந்தனையும் லிங்கம் உருவாக்கியன. சிந்தைகளற்ற சிந்தை. விநோதமான ஒரு மனநிலை. அதனுள் சிறு பிழை உண்டானாலும் தர்மா சுயமாகத் தன்னை அழித்துக் கொள்வான் என்று லிங்கத்திற்குத் தெரியும். நினைவுகள் இல்லாமல் இருப்பதும் திருத்தப்பட்ட நினைவுகளுடன் இருப்பதுக்குமான வேறுபாட்டின் விளைவுகளைப் QRW தலைமையகம் இன்றும் ஆராய்ந்து வருகிறது.

லிங்கம் அடுத்து இன்னொருமுறை தோல்வியடைந்தால் இங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுவிடுவார் என்கிற அச்சம் அவருக்குண்டு. தலைமையகத்தால் தேர்வாகி வந்த ஏறத்தாழ 340 பேர்களில் லிங்கமும் ஒருவர். மாதம் இலட்சக் கணக்கில் சம்பாதிக்க முடிந்த சூழல் இனி கிட்டாது என்பது லிங்கத்தின் பயமாக இருந்தது.

மாலை 7.00 மணிக்கு தர்மா அவரது அறைக்கு வந்தான். தெளிவாகக் காணப்பட்டான். நாற்காலியில் அமர்ந்து கொண்டதும் ஆட்டுவிப்பு கருவியுடன் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பிகளை அவன் தலையைச் சுற்றிலும் இணைத்தார். இன்று இரவு தர்மா போரின் முதல் கட்டத்தில் ஈடுப்படுத்தப்படவுள்ளான். அதற்குள் தனது கடைசி மதிப்பீட்டையும் சீர்த்திருத்தப் பணியையும் லிங்கம் முடித்தாக வேண்டும்.

“தர்மா, உங்களுக்கு இப்ப ஆறு மாசம். அம்மாவோட வயித்துல இருக்கீங்க… சக்கர வியூகம் போர் உத்தி உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுது… ஓர் ஒளிக்கூட்டத்துலேந்து அந்த மெசெஜ் உங்களுக்கு வருது… ஞாபகம் இருக்கா?”

“ஆமாம்… என் தலையெ சுத்தி ஓர் ஒளி வட்டம் சுழலெடுத்து பரவுது…”

“இந்தச் சக்கர வியூகம் எதுக்கு, தர்மா?”

“பொட்டலம் வச்சிருக்க ஒவ்வொருத்தனும் ஒரு சக்கரத்துக்குள்ள ஒருத்தனுக்குக் கீழ ஒருத்தன் பின்னப்பட்டுருக்கான்… அவனுக்குக் கூலி இன்னொருத்தன்…”

“நீ இந்தச் சக்கர வியூகத்துல என்ன செய்யணும், தர்மா?”

“பொட்டலத்த உருவாக்கறவன்… அதைப் பிரிச்சி கீழ உள்ளவனுக்குக் கொடுக்கறவன்… அதை எடுத்து அதுக்கும் கீழ உள்ள கூலி படைக்குக் கொடுக்கறவன்… அதுக்கும் கீழ ஒவ்வொரு ஜாலான்லயும் பொட்டலம் ஓட்டறவன் ஒவ்வொருத்தனையும் அழிக்கணும்…”

“உங்க மேல பாஞ்ச அம்பு கர்ணனோட, தர்மா? ஞாபகம் இருக்கா?”

“ஆமாம்…”

“கர்ணன் தான தர்மம் செய்றவன், தர்மா… அப்புறம் எப்படி அவனோட அம்பு பாவத்துக்குரியதா போகும்?”

“அப்படின்னா அந்த அம்பு என் மேல பூக்களாத்தான விழுந்திருக்கணும்?”

“தர்ம தேவதை எல்லாம் இல்ல, தர்மா… அது நியாயமான ஒரு போர் இல்ல… உன் மரணத்துக்கு முன்ன அந்த முழுப்போரும் தனது தர்மத்தை இழந்துருச்சி… உன் மேல விடப்பட்ட அம்புகள் எல்லாம் அந்நியாத்துக்கானது தர்மா… என்ன செய்யலாம்?”

“மீண்டும் போர் வேணும்… அந்தக் கர்ணன்… துரியோதணன்… எல்லாத்தயும் என் கால்ல போட்டு மிதிக்கணும்… இரத்தக்காட்டேரிகள்…”

லிங்கத்திற்கு தர்மாவின் பதிலைக் கேட்டதும் வியர்த்து வடிந்தது. இலேசான பதற்றமும் சூழ்ந்து கொண்டது. தர்மாவை இப்பொழுது கோபத்திற்கும் நிதானத்திற்கும் இடையில் கொண்டு வர வேண்டும்.

“ஓகே தர்மா. இப்போ நான் உங்களுக்கு ஷோக் கொடுக்கப் போறன்… இது ரொம்ப இன்பமா இருக்கும். அப்படியே வானத்துல பறக்கற மாதிரி. கீழ நீங்க விட்டு வந்த போர்க்களம்… தேர்கள், குருஷேத்திரம் எல்லாம் தெரியும்… நல்லா கவனியுங்க… செத்து மண்ணுல கெடக்குற உங்க சின்ன ஒடம்ப பாருங்க…”

லிங்கம் ஆட்டுவிப்புக் கருவியை முடுக்கினார். ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த அபிமன்யுவின் மூளை அணுக்கள் மாதிரிகளை தர்மாவின் நினைவடுக்கை நோக்கி லிங்கம் செலுத்தினார். அதிவேகத்தில் அது மூளை நரம்பு மண்டலங்களைச் சென்றடைந்து அதிர்வுக்குள்ளாக்கின. தர்மாவின் உடல் மெல்ல அதிர்ந்து அடங்கியது.

“தர்மா, எங்க இருக்கீங்க?”

“பெரிய சக்கரம் கொண்ட தேருக்குப் பக்கத்துல…”

“இப்போ அங்க என்ன பாக்கறீங்க?”

“பெருங்கூட்டம்… மரண ஓலம்… இரத்தம் படிஞ்ச அம்புகள்…”

“அங்க வேற யாரு இருக்கா?”

“ஒருத்தன் கையில பொட்டலம் வச்சிருக்கான், கஞ்சாக்காரன்…”

“அவன் அங்க என்ன செய்றான், தர்மா?”

“என்னை நோக்கி குறிப்பாக்கறான்…”

“அவன் உருவாக்கன சக்கர வியூகத்துல நீங்க மாட்டிக்கிட்டீங்க, தர்மா”

“ஆமாம்…அந்தச் சக்கர வியூகத்துலேந்து என்னால அப்போ வெளியாக முடியல… கூட்டத்துக்குள்ள சுத்தி வளைச்சிட்டாங்க…”

“அப்புறம் என்ன நடந்துச்சி, தர்மா?”

“தூரத்துல தேர்ல இருந்த ஒருத்தன் என்னை நோக்கி அம்புகள விட்டான்…”

“நல்லா பாருங்க அவன் கையில வில்லும் அம்பும் மட்டுமில்ல… ஒரு வெள்ளப் பொட்டலமும் இருக்கும்…”

“தெரியுது…”

“அந்தச் சாவு நியாயமா, தர்மா?”

“ஒரு சின்ன பையன கொல்ல நினைக்கற எண்ணங்கள், வியூகங்கள், நிச்சயமா நியாயத்த நோக்கியது இல்ல…”

ஆட்டுவிப்புக் கருவியை லிங்கம் முடக்கினார். தர்மா அப்படியே உறக்க நிலையில் இருந்தான். அவன் மீண்டும் எழுந்து நிதானத்திற்கு வர இன்னும் சில மணி நேரங்கள் தேவைப்படும். லிங்கம் அவன் அமர்ந்திருந்த நாற்காலியின் அருகில் அமர்ந்து கொண்டார். அவனது உறங்கும் அமைதிக்குள் திளைத்திருந்தார். ஒரு புது ஜென்மம் தர்மாவுக்கு மீண்டும் தரப்பட்டுள்ளது. இம்முறை அவன் குழப்பமில்லாமல் கொலை செய்ய வேண்டும். இன்னும் ஒரு கொலையை அவன் நிலை தடுமாறாமல் செய்துவிட்டான் என்றால் அவனைப் போருக்குத் தயார்ப்படுத்த இயலும். அதுவும் இன்றிரவு சக்கர வியூகத்துக்குள் இவனை அனுப்பத் தலைமையகம் முடிவு செய்துவிட்டது.

அதன் கடைசிப் பயிற்சியாக இன்றிரவு அவனுக்கு இன்னொரு கடமை காத்திருந்தது. விஸ்மா கெளாடி உணவகத்தில் இன்று பொட்டலம் கிலோ கணக்கில் கைமாற்றப்படும் தகவலை QRW தலைமையகம் லிங்கத்திற்குத் தகவல் அனுப்பிவிட்டிருந்தது. அதன்படி சரியாக இரவு 9 மணிக்கு தர்மா அங்குச் சென்று 08 குழுவைச் சேர்ந்த ‘பப்பாவைச்’ சுட வேண்டும். இந்த மரணம் 03, 08 குழுக்களின் தலையெழுத்தை மாற்றும். இது மிகப்பெரிய பயிற்சி என்பது லிங்கத்திற்குத் தெரியும். அதனால்தான் வழக்கத்தைவிட தர்மாவின் நினைவகத்திற்குள் செலுத்தப்பட்ட அணுக்கள் அதிவேக அசைவைக் கொண்டவை. அவனை மேலும் மூர்க்கமாக மாற்றிவிடும் அதீத சக்தி கொண்டவை. தனது மரணத்தின் மீதான கோபமும் பகைமையும் அவனுக்குள் அதித்தீவரத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

சில மணி நேரங்களுக்குப் பின்னர் தர்மா அலாரம் கொடுத்ததைப் போன்று சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். இன்றைய இரவு பயிற்சிக்கான குறிப்புகளும் கட்டளையும் அவனுக்குள் இருந்தன. அதனை உறுதிபடுத்திக் கொண்டு தர்மா துப்பாக்கி அறைக்குச் சென்றான். இப்பொழுது அவன் நினைவுகள் தெளிவுடன் இருப்பதாக உணர்ந்தான். சுட்டு வீழ்த்த வேண்டும் என்கிற எண்ணமே அவனுக்குள் இயக்க சக்தியாக இருந்தது.

துப்பாக்கியுடன் அவனது விரைவு மோட்டாரில் ஏறிக்கொண்டான். அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு அத்தனை தகவல்களும் முன்னமே அம்மோட்டாரின் செயலியில் செயல்படுத்தப்பட்டிருந்ததால் தர்மா எவ்விதக் கலக்கமும் இல்லாமல் தனித்த நகருக்குள் பயணித்தான். சாலையில் இருளும் நீண்ட மௌனமும் மட்டுமே விரிந்திருந்தன. விஸ்மா கெளாடியின் எதிர்ப்புறம் இருக்கும் தங்கும் விடுதிக்குக் கீழ் மோட்டார் நின்றது. தர்மா மெல்ல இறங்கிப் படியில் ஏறினான். முதல் மாடியின் சன்னலைத் திறந்துவிட்டு விஸ்மா கெளாடிக்கு வெளியில் இருக்கும் உணவக மேசைகளைக் குறிப்பார்த்தான். அங்குத்தான் இன்றைய சந்திப்பு. எப்படியும் நான்கைந்து பேர் திரள்வார்கள். அவர்களுள் தர்மா கொல்ல வேண்டியவன் 08125. 08 என்கிற குழுவின் ஆரம்பக்கால உறுப்பினர் அவன். இப்பொழுது அவன்தான் அக்குழுவின் ‘பப்பாக்’.

குறிப்பிடப்பட்டிருந்ததைப் போலவே முதலில் இருவர் வந்து நீல நிற மேசையைச் சுற்றி அமர்ந்தனர். அவர்களுக்குப் பின் மேலும் இருவர் பக்கத்தில் இருந்த மஞ்சள் நிற மேசையைச் சுற்றி அமர்ந்தனர். தர்மா துப்பாக்கியைக் குறிப்பார்த்துத் தயார்ப்படுத்தினான். தொப்பையும் தாடியுமாகத் தெரிந்த அந்த உருவம் ஒரு கருப்பு நெகிழிப் பைக்குள்ளிருந்து பொட்டலங்களை எடுத்து இன்னொரு துணிப்பைக்குள் வைத்துக் கொண்டிருந்தது. தர்மா தனது துப்பாக்கி முனையை நேர்ப்படுத்தினான். அவர்கள் அமர்ந்திருந்த மேசைக்கு அருகிலுள்ள இன்னொரு மேசையில் ஒரு பெண் வந்து அமர்ந்தாள். தர்மா அப்பெண்ணைக் கவனித்தான். அவள் முகம் அவனை என்னவோ செய்தது. நன்கு உற்றுக் கவனிக்கும்படியான ஒரு முகவெட்டு. அவனது சிந்தனைகள் குழப்பமடைந்தன.

யார் இவள்? இவளுடைய முகம் என்னை ஆட்கொள்கிறதே? யார் இந்த மாயக்காரி?

மூளை விபத்து உருவாகலாம் என்று நினைத்த தர்மா சட்டென சுதாரித்துக் கொண்டு துப்பாக்கியை அழுத்தினான். குறி தவறாமல் தோட்டா 08125இன் மார்பைத் துளைத்தது.

கொலைக்குப் பின்னர் தர்மா தலைமையகத்துக்குச் சென்றான். அங்கு லிங்கத்துடன் மேலும் சிலர் இருந்தனர். அவர்களை தர்மா பார்ப்பது இதுதான் முதல்முறை.

“தர்மா, நீ போருக்கு ரெடி… சக்கர வியூகத்த உடைக்கற சக்தி உனக்கு இருக்கு… இன்னிக்கே நீ அங்க போற… அதுக்கான எல்லா தயார்நிலைகளும் இப்போ நடந்துரும்…” வாட்டம்சாட்டமாக இருந்த அவர் இராணுவ அதிகாரியைப் போலவே காட்சியளித்தார். தர்மாவை மேலும் சிலர் மேல்மாடிக்கு அழைத்துச் சென்றனர்.

“லிங்கம்… உங்களோட கடைசி வாய்ப்பு இது… ஒருவேள தர்மா போருக்குள்ள சமாளிச்சி வந்துட்டானு உங்களுக்கு இங்க வேல நிரந்தரம்… இல்லைன்னா நீங்க திரும்பிப் போய்றணும். கிளினிக் இருக்குல? அதைப் பார்த்துக்கிட்டு மீதி காலத்த ஓட்டிருங்க…”

லிங்கத்திற்கு அதைக் கேட்க சற்றே தயக்கமும் பயமும் சூழ்ந்து கொண்டன. அவர் லிங்கத்தின் பயிற்சி அறைக்குள் சென்று அவரது கடவுச்சொல்லைத் தட்டி QRW Abimanyu பயிற்சி களத்தினை முடக்கினார்.

“லிங்கம்… இதுவரைக்கும் தர்மா செஞ்ச அத்தனை கொலைகளும் நம்ம உருவாக்கன மாயைன்னு அவனுக்குத் தெரியவே கூடாது. அது ஆழ்மனசுல பாதிப்பை உருவாக்கும். அவன் நம்பற ஒன்னு பொய்ன்னு ஆழ்மனசுல படியற சைக்கோலோஜியை அப்புறம் நாம உடனே அழிக்க முடியாது… இது பயிற்சி மட்டும்தான்… அவன் கொல்லப் போற உண்மையான ஆளுங்க இனிமேல்தான் போர்க்குள்ள சந்திக்கப் போறான்… அதுல அவனுக்கு முழுசா நம்பிக்கை வரணும்… ஆழ்மனசோட பேசறேன்னு எதையும் உளறி வச்சிடாதீங்க… இதுக்கு அப்புறம் நாங்க பாத்துக்கறோம்… நீங்க போக வேண்டிய கார் வெளில நிக்குது. கூப்டும்போது வந்தா போதும். கூட்படலைன்னா தெரிஞ்சிக்குங்க… ஆப்ரேஷன் பற்றி வெளில தெரியக்கூடாது… ஞாபகம் இருக்கட்டும்…”

லிங்கம் தயக்கத்துடன் நின்றிருந்தார்.

“தர்மாவோட வெற்றி உங்களோட வெற்றி. அடுத்து உங்கக்கிட்ட வர்ற நோயாளிகள அணுக்கமா கவனிங்க. நமக்கு வேண்டியது ஹிஸ்டீரியா பேஷண்ட்…”

லிங்கம் அங்கிருந்து தனது கடைசி நோயாளி தர்மாவின் நினைவுகளுடன் புறப்பட்டார். தர்மா போரில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே அவரது பிரார்த்தனையாக இருந்தது. தர்மாவுக்குப் புதிய ஆடைகள் வழங்கப்பட்டன. பலத்த பாதுகாப்புகளுடன் உருவாக்கப்பட்ட ஆடை. எப்பேற்பட்ட தோட்டாக்களும் உள்நுழைய முடியாத அமைப்புடன் தயாரிக்கப்பட்டிருந்தது. தர்மா மன அளவிலும் தயாரானதும் அவனது உணர்வதிர்ச்சி மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. சற்றுமுன் அவன் பார்த்த அப்பெண் தனது மனைவியின் உருவம் என்பதை அவனால் 0.05% வரை மட்டுமே தன் அகத்தினுள் உணர முடிந்தது. அதனையும் மின்சார அதிர்ச்சியின் வாயிலாக நினைவகத்தை விட்டு நீக்கினார்கள். முழுத் தெம்புடன் தர்மசீலன் அபிமன்யு போருக்குத் தயாரானான்.

“தர்மா… நல்லா ஞாபகம் வச்சிக்கோ… நீ போற இடம் போர்க்களம்னு நெனைச்சுக்கோ… ‘தார்கேட்’ மறக்கக்கூடாது. உன்கூட இன்னும் நாலு பேர் வருவாங்க. உங்க தார்கேட் ‘சௌக்கிட்’ சாலை. இங்க பாலியல் தொழிலுக்கும் கஞ்சாவுக்கும் பஞ்சமே இல்ல. இது கெட்டவர்களோட சக்கர வியூகம். சுத்தம் செய்யணும் தர்மா. பொட்டலம் வச்சிருக்க ஒவ்வொருத்தனும் அழிக்கத் தகுதியானவன். இன்னிக்கு இந்த உலகத்தையே தன் வசத்துல வச்சிருக்கற Drug Lordsக்கு எதிரான ஒரு போர் இது… அறிவியலுக்கும் அதர்மத்துக்கும் காலத்துக்குமான முக்கோணப் போர். இதுவரை மானுடம் காணாத ஓர் அகப்போர்… உன்ன கொன்னவன் நீ சின்னவன்னு பார்க்கல… உன் மார்பு அம்புகள தாங்கற சக்தி இல்லாத பிஞ்சின்னு அவனுக்குத் தெரில…எல்லாம் அந்தப் பொட்டலம் வச்சிருக்கவனுங்கத்தான்… உன் கண்ணுல காட்டப்படற அத்தன பேரும் சாக வேண்டியவனுங்க…”

தர்மா, இன்னும் மூவர் Quantum Reverse Way (QRW) மின்னியல் காலச் சுழற்சி பாதைக்கு முன் நிறுத்தப்பட்டார்கள். 2334ஆம் ஆண்டிலிருந்து போதைப்பொருள் தலைத்தூக்கத் துவங்கிய 2010ஆம் ஆண்டிற்கு அனுப்பப்படத் தயாரானார்கள்.

OH25430 அபிமன்யு
OH25456 சுபத்திரை
OH25441 அர்ஜுனன்
OH25500 தர்மன்
OH21110 பீஷ்மர்

QRW மின்னியல் காலச் சுழல் பாதை திறந்தது. தர்மா துப்பாக்கியைக் கையில் கெட்டியாகப் பிடித்துக்ஃப்கொண்டே உள்ளே நுழைந்தான். இம்முறை சக்கர வியூகத்தை அழித்துவிட்டு வர வேண்டும் என்பது மட்டுமே அவன் ஆழ்மனத்திலும் மூளையிலும் வியாபித்துக் கொண்டிருந்தது.


ஜாலான் – சாலை,
பொட்டலம் – போதைப்பொருள்
பப்பாக் – குண்டர் குழுத் தலைவன்
விஸ்மா கெளாடி – இடத்தின் பெயர்


புகைப்படம்: ஶ்ரீநாத்

மேலும் படிக்க

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:

குறிப்பிடத்தகுந்த கதைகள்:

கே.பாலமுருகன்

மலேசியா, கடாரத்தில் வாழும் கே.பாலமுருகன் 2005ஆம் ஆண்டு முதல் தமிழில் சிறுகதை, நாவல், சிறுவர் நாவல், சினிமா விமர்சனம், பத்தி, கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரை கல்வி, இலக்கியம் என்று 25 நூல்கள் இயற்றியுள்ளார். தமிழ்மொழிச் சிறப்பாசிரியராகப் பணியாற்றி வரும் இவர் மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், கல்லூரி, பல்கலைக்கழகஙகளில் மாணவர்களுக்குச் சிறுகதை பயிற்சிகளும் வழங்கி வருகிறார். இதுவரை அநங்கம், பறை, களம் போன்ற சிற்றிதழ்களை நடத்தியுள்ளார். 2009ஆம் ஆண்டு அமரர் சுஜாதா நினைவாக ஆழிப் பதிப்பகம் நடத்திய உலகலாவிய அறிவியல் புனைக்கதைப் போட்டியில் ஆசியா பசிபிக் பிரிவில் சிறப்புப் பரிசைப் பெற்றுள்ளார். மேலும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கையின் மூலம் 2010ஆம் ஆண்டு தன்னுடைய 'நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்' என்கிற நாவலுக்குக் 'கரிகாற் சோழன்' விருதைப் பெற்ற முதல் மலேசிய இளம் படைப்பாளி ஆவார். இதுவரை தமிழில் பத்துக்கும் மேற்பட்ட பலதரப்பட்ட விருதுகளைப் பெற்ற இவருடைய சிறுவர் நாவல்/சிறுவர் இலக்கிய முயற்சிகளைப் பாராட்டி அன்னை வேளாங்கன்னி அறிவியல் கலைக்கல்லூரி 2018ஆம் ஆண்டு 'தமிழ் நாயகர் தனி நாயகர்' விருதை அளித்துக் கௌரவித்தது. மேலும், நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை காலக்கட்டத்தில் மாணவர்களுக்காக அவர் வழங்கிய இலவச கல்விச் சேவையைப் பாராட்டி 2020ஆம் ஆண்டுக்கான தேவநேயப் பாவாணர் விருதும் அளிக்கப்பட்டுள்ளது. தன் balamurugan.org என்கிற அகப்பக்கத்தில் தற்போது எழுதியும் வருகிறார். இவருடைய மூக்குத் துறவு என்கிற அறிவியல் சிறுகதை கடந்தாண்டு அரூ அறிவியல் சிறுகதை போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான பத்து கதைகளில் ஒன்றாகும். இதுவரை எழுதிய நூல்களின் எண்ணிக்கை கல்வி, இலக்கியம் சார்ந்து 38 நூல்கள் ஆகும். சமீபத்தில் இவரது குறும்படத்திற்காக மலேசிய அளவிலான சிறந்த குறும்படம் பிரிவில் சோழன் விருது கிடைத்தது.

View Comments

  • இச்சிறுகதையை வாசிக்கும்போது இன்னொரு பாகம் கூட எழுதலாம் எனத் தோன்றியது. அடுத்து இன்னும் நீண்டிருந்தால் இன்னும் சுவார்ஷயமாக இருந்திருக்கக்கூடும். வாழ்த்துகள். வித்தியாசமான முயற்சி. அறிவியல் உனைவென்றாலே வாசிப்பவர்களுக்குப் புரியாமல் எழுதுவது என்கிற ஒரு ஸ்டைல் உருவாகிவிட்டது. இச்சிறுகதையில் அப்படியில்லாமல் வெகு இயல்பாக நகர்த்தி சென்றுள்ளார்.

    • *அறிவியல் புனைவென்றாலே

Share
Published by
கே.பாலமுருகன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago