கார்தூஸியர்களின் பச்சை மது

கார்தூஸியர்களின் பச்சை மது

15 நிமிட வாசிப்பு

“பிரச்சனைகள் எதுவானாலும் சரி ஒரேயொரு தீர்வுதான் இருக்க முடியும் – அறிவியல். தெய்வங்களுக்குப் பதிலாக அறிவியலாளர்களை வணங்க ஆரம்பிக்க வேண்டும். மதம் தத்துவம் என்ற சரடுகளில் சிக்காமல் அறிவியலின் துணை கொண்டு நாம் முன்னேற்றத்தை அடைந்துகொண்டேயிருக்க வேண்டும்.”

கொரோனா பரவுவதற்கு முன்பு என் காலை வேளை இப்படியாகத்தான் விடியும். ஆனால் இன்றோடு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. திரும்பிய திசையெங்கும் மரணங்கள். பூங்காக்களிலும் தெரு ஓரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்த வைரஸ் வரமும் சாபமுமாக இருக்கிறது. எல்லா இடங்களும் இப்போதெல்லாம் காலியாகக் கிடக்கிறது. துரத்தவுதற்குகூட யாரும் எங்களை நெருங்குவதில்லை. மனிதர்களைச் சந்திக்காமல் எத்தனை நாட்கள் வாழ்வது? என் சகாக்களுக்குக் கஞ்சாவும் கொக்கெய்னும் எங்கிருந்தோ கிடைத்துவிடுகிறது. எனக்கு அதிக விலைக்குக் கொடுக்கிறார்கள். பணத்திற்கு நான் எங்கே போவேன்? சரி விடுங்கள், என்னுடைய சொந்தப் பிரச்சனைகளை உங்களிடம் விவரித்துச் சங்கடப்படுத்த விரும்பவில்லை. நான் சந்தித்த ஒருவரைப் பற்றி உங்களிடம் சொல்லியாக வேண்டும்.

இலையுதிர்க்கால மாலை நேரம் ஏழு மணியிருக்கும், அப்போதுதான் நான் ஹோசேவை பாஸ்டன் காமனில் இருந்த நினைவு தூணுக்கு பின்னால் இருந்த மரத்தினடியில் கண்டேன். தனியாக அமர்ந்திருந்தார். வாயில் பெரிய சிகார் புகைந்து கொண்டிருந்தது. நான் அடுத்தநாள் உணவுக்காகப் பழைய பாட்டில்களை அங்கிருந்த குப்பைத்தொட்டிகளில் எடுத்துக்கொண்டிருந்தேன். பாஸ்டனில் இலையுதிர்கால மாலை ஏழு மணி என்பது இரவின் அடர்த்தியில் இருக்கும். எனவே இயல்பாகவே ஊரடங்கிவிடுவார்கள். அதில் ஒரு மனிதன் தனிமையில் சிகார் புகைத்துக்கொண்டிருந்தது அதிசயமாக இருந்தது. மெல்ல அவரிடம் சென்று ஏதேனும் சில்லறை கொடுப்பாரா என்று கேட்டுப் பார்த்தேன். எதுவும் சொல்லாமல் என்னை நோக்கியவாறு மீண்டும் புகைத்துக்கொண்டிருந்தார். என் வயதையொத்த தோற்றம் அவருக்கு. சிகார் புகைக்கும் விதத்தைப் பாராட்டினேன். இப்படியாக அவர் பெயர் ஹோசே என்றும் வெகுநாளுக்குப் பின்னர் சற்று வெளியே வந்திருப்பதாகவும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

சற்று பொறுங்கள், கொஞ்சம் என்னுடைய கதையை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். என் பெயர் ஃபீனிக்ஸ். அப்படி அழைக்கப்படுவதைத்தான் நான் விரும்புகிறேன். ஆனால் பாஸ்டன் பூங்காவுக்கு வரும் பலரும் என்னை ‘பிக் பியர்’ என்று அழைப்பார்கள். அப்படி அழைக்கும் யாவரையும் ஒரு பெருங்கரடியாக மாறி அடித்து முழுங்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் முடியாது. இப்படிப் பூங்காக்களுக்கு வரும் மனிதர்கள் தரும் ஒன்றிரண்டு டாலரைக் கொண்டே என் ஜீவிதம் நகர்கிறது. வீடில்லாமல் இருபது வருடங்களைக் கடந்துவிட்டேன். எங்களைப் போன்றோர்களுக்கான முகாம்களில் வாழ்வதைவிட இப்படி தெரு ஓரங்களில் வாழ்வது சுதந்திரமாகவும் வசதியாகவும் இருக்கிறது. குளிர்க்காலங்கள் மட்டும் கொடுமையானவை. இருபது வருடங்களைச் சமாளித்துவிட்டேன். இனிமேல் வாழ்க்கையில் ஒன்றுமில்லை. போதைப் பழக்கம் இருக்கிறது. விதவிதமான போதை வஸ்துகளை முயன்று பார்க்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே எஞ்சியிருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்னால் மருத்துவ ஆய்வகம் ஒன்றில் அறிவியல் ஆலோசகராகப் பணிபுரிந்து வந்தேன். உங்களுக்கு இது ஆச்சரியமாக இருக்குமானால் இங்கு என்னோடிருக்கும் பலர் நல்ல வேலையில் இருந்தவர்கள். ஒரு வழக்கறிஞரும் ஒரு காவல் துறை நண்பரும்கூட இங்கிருக்கிறார்கள். நான் வேலையிழக்கக் காரணம் எங்கள் ஆயவகத்துக்கு வரும் நார்கோட்டிக் சேர்மங்களை நான் சரியாகக் கையாளவில்லை. உங்களுக்கு நான் சொல்ல வருவது புரிகிறதில்லையா? அதனோடு சூதாட்டம். வேலை பறிபோனதோடு மனைவியும் சென்றுவிட்டாள். அதற்கு மேல் வீடு இல்லாமல் போனது. இங்கு வந்துவிட்டேன். ஆனால் அறிவியலின் மீதான காதல் போகவில்லை. வேதியல் சேர்மங்களின் வடிவங்களும் அதன்மீதான சூத்திரங்களும் என் தலையில் சுழன்றபடியே இருக்கின்றன. நட்சத்திரங்களின் வடிவியலும் வாகனங்களின் இயக்க விதிகளும் என் கவனத்தை ஈர்த்தபடி இருக்கின்றன. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், அன்றிரவு ஹோசேவுடன் நான் அறிவியல் குறித்து உரையாட ஆரம்பித்தேன். யாரிடமும் நான் அறிவியல் குறித்தே உரையாட விரும்புகிறேன். நான் காயமடைந்த சிங்கம். இருக்குமிடத்திலிருந்து நான் கர்ஜித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன். அறிவியல் தவிர எனக்கு வேறெதுவும் தெரியாது. அறிவியல் யுகம் பிறக்காதிருந்தால் இவ்வுலகம் மத மூடநம்பிக்கைகளில் சிக்கிச் சீரழிந்திருக்கும். அறிவியலுக்கு நன்றி. ஆனால் சமீப காலத்தில் மனிதர்கள் பழமைக்குத் திரும்புவதாகத் தோன்றுகிறது. கடவுளின் பெயரால் நிகழ்ந்த யாவும் முன்னேற்றத்துக்கு எந்த வகையிலும் உதவவில்லை இதுதான் நான் ஹோசேவுடன் பேசியதன் சாரம்.

என் பேச்சைக் கேட்டு ஹோசே அமைதியாகச் சிரித்துக்கொண்டிருந்தார். அவர் சிரிப்பு எனக்கு எரிச்சலை வரவழைத்தது.

“மிஸ்டர் ஃபீனிக்ஸ், நீங்கள் ஏன் இவ்வளவு தற்காப்புணர்வுடன் பேசுகிறீர்கள்? அறிவியல் உயர்ந்தது என்று என்னிடம் நிரூபிப்பதால் உங்களுக்கு என்ன ஆகப்போகிறது?”

பெரிய சமர் ஒன்றுக்குத் தயாரவது போல ஹோசே தன் சிகாரை அணைத்துவிட்டு பெரும் மூச்சுவிட்டார். பின்னர் என்னை நோக்கிப் பேச ஆரம்பித்தார்.

“ஃபீனிக்ஸ், அறிவியல் பற்றிய உங்கள் வாதம் அடிப்படை மிகவும் மேலோட்டமாக இருக்கிறது. நீங்கள் பெருமைபட்டுக்கொள்ளும் பல அறிவியலாளர்களும் பேசத் தயங்கும் விஷயங்களை நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். பழமைவாதம் எதிர்க்கப்பட வேண்டும் ஆனால் அதைப் பழமையுடன் நீங்கள் இணைப்பதும் மதங்களை இழுப்பதும் சரியல்ல.”

“ஓ இப்போது எனக்குப் புரிகிறது. நீங்களும் அவர்களில் ஒருவரா? நான் எப்போதும் அறிவியல் என்னும் மதத்தைப் பின்பற்றுகிறவன். தெரியாமல் கேட்கிறேன் நிரூபணமாகாத ஒன்றை நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்?”

“இன்னும் உங்களிடம் என்னைப் பற்றிச் சொல்லவில்லை. தயவுசெய்து எந்த முன் முடிவுகளுக்கும் வந்துவிடாதீர்கள். நான் அறிவியலை முழுவதுமாக நம்புகிறேன். அதே சமயம் மத நம்பிக்கைகளை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. இரண்டு புத்தகங்கள் நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது: 1. மதங்கள் நம்பும் வேதங்கள் 2. இயற்கை என்னும் புத்தம். இவைகளுக்கு இடையில் நடக்கும் குழப்பங்கள்தான் அறிவியலுக்கும் மதங்களுக்கும் இடையே நடக்கும் குழப்பங்கள். அறிவியல் உலகம் தோன்றியதிலிருந்தே இருக்கிறது. அவற்றை உணரச்செய்யும் ஞானம் என்னும் ஒளியைப் பல யுகங்கள் கழித்துக் கண்டடைந்தோம். மதங்கள் பிரதானமாக ஞானத்தை நோக்கிப் பயணப்பட்டன. அப்பயணம் அறிவியலுக்கும் பங்களித்திருக்கிறது. வேறுமாதிரி சொல்ல வேண்டுமென்றால் நமக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு புத்தகங்களும் ஞானத்தை நோக்கியே நம்மை நகர்த்துகின்றன. மதங்கள் அடிப்படைவாதத்தை ஆதரிக்கிறது என்று சொன்னால் அதற்கு சற்றும் குறையாத அடாவடித்தனத்தை அறிவியலும் கொண்டிருக்கிறது எனபதை மறந்துவிடக் கூடாது. ஞானம் என்பது வேர் என்று வைத்துக்கொண்டால் மதமும் அறிவியலும் நம்பிக்கை என்னும் தண்டிலிருந்து பிரியும் இருவேறு கிளைகள்.” அருகிலிருந்த மேப்பல் மரத்தைச் சிந்தனைப்பூர்வமாக நோக்கினார்.

“ஹோசே, நீ தத்துவவாதியா? மதங்களிலிருந்தாவது உலகைக் காப்பாற்றிவிடலாம், ஆனால் தத்துவவாதிகள் இன்னும் ஆபத்தானவர்கள். எளிமையான விஷயங்களையும் தத்துவம் என்கிற பெயரில் கடுமையாக்கிவிடுவீர்கள். மதங்களின் ஆதாரம் நம்பிக்கை. அறிவியல் அனைத்தையும் எளிமையாக்குகிறது. நம்பிக்கைகளுக்கு அறிவியலில் இடமில்லை. எளிமையானவைகளை வைத்துக்கொண்டு சிக்கலானவைகளைத் தவிர்த்துவிடுங்கள்.”

சத்தமாகச் சிரித்த ஹோசே, “ஃபீனிக்ஸ், மீண்டுமாக நீங்கள் தவறாகப் புரிந்துகொள்கிறீர்கள். அதுபோக நீங்கள் கடைசியாகச் சொன்னது ‘ஆக்கம்ஸ் ரேஸர்’ (Occam’s Razor). வில்லியம் ஆக்கம் என்ற பிரான்ஸ்கன் துறவி கொடுத்தது. மீண்டுமாக உங்களால் நம்பிக்கைகளைத் தூக்கி எறிந்துவிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.”

“நீங்கள்தான் புரிந்துகொள்ளச் சிரமப்படுகிறீர்கள். அறிவியல் எல்லாவற்றையும் நிரூபித்துவிடுகிறது. நம்பிக்கைகள் மதத்தின் அடிப்படை. அவ்வளவுதான்.”

“மதங்களின் அடிப்படை நம்பிக்கை என்றால் அறிவியலின் அடிப்படை என்ன?”

“அதான் சொன்னேன் அல்லவா? நிரூபிக்கப்படாத எதற்கும் அறிவியலில் இடமில்லை.”

“இல்லை. அறிவியலின் அடிப்படையும் நம்பிக்கைதான். இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்கிறேன். உங்கள் வாதப்படி மதங்கள் கடவுளின் இருப்பை ‘நம்புகின்றன’ என வைத்துக்கொண்டால், ‘நம்பிக்கை’ என்பது மக்கள் அனைவரும் சேர்ந்து நம்புவதால் வருகிறது. அப்படித்தானே? அறிவியலும் அதே நம்பிக்கையில் கட்டமைக்கப்படுகிறது. உதாரணமாக புவியீர்ப்பு விசை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னும் நாம் புவியீர்ப்பில்தானே வாழ்ந்தோம்? அறிவியல் பெயரிட்டு உணரச் செய்தது. இது மிகவும் அவசியமானது. ஏன் இது அவசியமாகிறது? அப்போதுதான் முன்னேற்றம் சாத்தியமாகும். நீங்கள் எதன் மீதாவது நின்றால் மட்டுமே உயரத்திலிருப்பதை எட்டிப் பிடிக்க முடியும். அந்த நிற்கும் இடம்தான் நம்பிக்கை என்கிறேன். மதங்களின் நம்பிக்கையும் அப்படித்தான். இவ்வளவு முன்னேற்றங்களுக்கு பிறகும் மனிதனால் மத நம்பிக்கைகளைக் கைவிட முடியவில்லை என்றால் அதில் ஒரு பேருண்மை இருக்கிறது. காலம் காலமாக அவைகள் அறிவியலுக்கும் பங்களித்திருக்கின்றன. இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருகிறது. புவியீர்ப்பு விசை குறித்துச் சொன்னேன் அல்லவா? அதில் பெரும் பங்காற்றிய ஐசக் நியூட்டன் அறிவியல் குறித்து எழுதியதைவிட அதிகமாக இறையியல் குறித்து எழுதியிருக்கிறார். எல்லாவற்றையும் ஒரு குறுகிய சட்டத்துக்குள் அடைத்ததைத் தவிர நவீன அறிவியல் என்ன செய்துவிட்டது? உங்கள் பார்வைக்குப் பிறகோர் உலகம் உண்டென ஏன் நாம் நம்ப மறுக்கிறோம்? ஃபீனிக்ஸ், நீ நவீன அறிவியலின் ஓர் உருவாக்கம்தான். உனக்குத் தெரிந்த பார்வையிலிருந்துதான் நீ என்னை அணுகிக்கொண்டிருக்கிறாய். உன் பிடிகளிலிருந்து நழுவி நழுவி நானும் இந்த உரையாடலை வளர்த்தெடுக்கிறேன். உனக்குப் புரியவில்லை என்பதற்காக நம்பிக்கைகளைத் தூக்கியெறிவது சரியான அணுகுமுறையல்ல.”

ஹோசே என்னை வெற்றி கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தான். வாழ்வில் எவ்வளவோ தோல்விகளைச் சந்தித்துவிட்ட எனக்கு அன்றிரவு ஏற்பட்ட தோல்விகள் சாதாரணமானதாக இல்லை. என்னுடைய கடைசித் தாக்குதலை நான் நிகழ்த்தினேன்.

“நீங்கள் என்னை மதம் மாற்றம் செய்யப் பார்க்கிறீர்கள் ஹோசே. எதையோ சொல்லி என்னைக் குழப்பப் பார்க்கிறீகள்.”

“இல்லை. நானும் அறிவியலை முழுமையாக ஆதரிக்கிறேன். அதன் மீதான பார்வை வேறு என்று சொல்கிறேன். இயற்கையின் புத்தகத்தை நவீன அறிவியல் சிதைக்கிறதேயன்றி கவனமாக வாசிக்கவில்லை என்கிறேன். இன்று நாம் அறிவியல் என்று ஏற்றுக்கொண்ட பலவும் பண்டைய ஞானத்திலிருந்து நாம் அடைந்தவைகளின் நீட்சி. நீங்கள் சொல்லும் அறிவியல் யுகத்தில் எத்தனை எத்தனை போர்களை மனிதர்கள் சந்தித்துவிட்டார்கள்? இதையா வளர்ச்சி என்று கொண்டாடுகிறீர்கள்? இதற்குக் காரணம் நீங்கள் சொல்லும் அடிப்படைகளை, நவீன அறிவியல் உதறிவிட்டது. இன்று பழமை எனப்படுவதும், அறிவியலின் வடிவம்தான் என்பதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? தெரிந்தோ தெரியாமலோ சில அறிவியல் உண்மைகள் அக்காலத்தில் மத நம்பிக்கைகளோடு இணைக்கப்பட்டுவிட்டது. அறிவியலுக்குப் பல கோணங்கள் உண்டு. அடிப்படைகளை மறுக்கும் அடாவடி அறிவியல் அடிபடைவாதம் போற்றும் மதங்களைப் போல ஆபத்தானது என்று புரிந்துகொள்ள வேண்டும்.”

“ஹோசே, நீங்கள் சொல்வது போன்று அறிவியலுக்குப் பல முகங்கள் இருக்கிறதென்றால் எனக்கு நிரூபியுங்கள். நானும் ஏற்றுக்கொள்கிறேன்.”

ஒரு மர்மப்புன்னகையுடன், “Elixir of long life பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்றார்.

“தேவதைக் கதைகளில் படித்திருக்கிறேன்.”

“வெறும் கதையாக எஞ்சிவிட்ட ‘பெருவாழ்வின் பானம்’ உண்மை என்று சொன்னால் நம்புவீர்களா?”

நான் ஆர்வமடைந்ததைப் பார்த்து ஹோசே தொடர்ந்து பேசலானார்.

“முதல் உலகப் போரில் ப்ரான்ஸ் நாட்டைத் தாக்க வந்த ஜெர்மனியப் போர் விமானம் ஒன்று ப்ரன்ச் படையினரால் தாக்கப்பட்டு வட அட்லாண்டிக் பெருங்கடல் மேல் தடுமாறிக் கொண்டிருந்தது. வெடிக்கும் நிலையிலிருந்த விமானித்திலிருந்து படைவீரன் ஒருவன் சமாளித்து வெளிவந்து கடலில் குதிக்கிறான். அவன் நீர்ப்பரப்பை அடையும் முன்னர் விமானம் வெடித்து உள்ளிருந்தவர்கள் இறந்துவிடுகிறார்கள். மறுநாள் அவனொரு தீவை அடைகிறான். மயங்கிக்கிடந்த அவனைத் தீவிலிருந்த துறவி தன் கழுதையின் மேல் ஏற்றிச் சென்று துறவிகளின் மடத்தில் கொண்டு சேர்க்கிறார். கொஞ்ச நாள் எந்த நினைவின்றி இருந்த அந்த வீரனைத் துறவிகள் மருத்துவம் பார்த்துக் குணமாக்குகிறார்கள். சில மாதங்கள் கழித்துக் குணமடைந்த வீரன் மடாலயத்தை விட்டுத் தீவைச் சுற்றிப் பார்த்து வர கிளம்பினான். அந்தத் தீவில் மடாலயத்தைத் தவிர வேறெதுவும் இல்லையென்று அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது. அங்கிருந்த துறவிகளிடம் கேட்டபோது யாரும் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. சில நாட்களுக்குப் பிறகு ஓர் இளம் துறவி அவனிடம் வந்து பேசலானார். குழம்பிப் போயிருந்த அவனுக்குப் பதில் கிடைத்ததில் பெரிய மகிழ்ச்சி. அந்தத் துறவிகள் கார்தூஸியச் சபையைச் சார்ந்தவர்கள் என்றும் வாரத்தில் ஒருநாள் மட்டும் மற்ற துறவிகளிடம் பேசுவார்கள் என்று அறிந்துகொண்டான். மேலும் அந்த இளம் துறவி தாங்கள் ப்ரன்சுப் புரட்சியின்போது துரத்தப்பட்டவர்கள் என்றும் தவ வாழ்வு வாழ இந்தத் தீவைக் கண்டுபிடித்துக் குடியேறியதாகவும் சொன்னார். தங்கள் தவ வாழ்வின் நிமித்தமாகத் தீவை யாரும் அறியாதவாறு மறைவாக வைத்திருப்பதாகவும். வெகுசில துறவிகள் இந்தத் தீவிலிருந்து வெளியேறி மடாலயத்துக்குத் தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக வருடத்துக்கு ஒரு முறை சென்று வருவார்கள் என்றும் கூறினார்.

கார்தூஸியர்களைப் பற்றி முன்பு கேள்விப்பட்டிருந்த அந்த வீரனுக்கு அவர்களின் வாழ்வை நெருங்கிப் பார்த்ததில் ஆச்சரியம் தாங்கவில்லை. இவ்வுலகில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று தனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டான். அதன் பின் அவன் பூர்ண குணமடையும் வரை அவர்களுடன் தங்கியிருந்தான். அவர்களின் வாழ்வியல் முறைகளால் அவன் பெரிதும் கவரப்பட்டு அவர்களுடன் சேர்ந்து ஒரு துறவியாக வாழும் ஆசையைச் சொன்னான். மடத்தின் தலைமை துறவி மிக நீண்ட மௌனத்துக்குப் பிறகு அவனை துறவியாக ஏற்றுக்கொண்டார்.

ஒரு துறவியின் வாழ்வில் நேரம் அதிகமாக் கிடைக்கிறது என்பதையும் அதனால் உலகம் வியக்கும் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளைத் துறவிகள் சாதாரணமாகக் கண்டுபிடித்துவிடுகிறார்கள் என்பதையும் அவனுடைய துறவு வாழ்வு அவனுக்குச் சொல்லிக் கொடுத்துக்கொண்டேயிருந்தது. துறவறத்தில் பல்வேறு படி நிலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் துறவிகள் தங்கள் சுதந்திரத்தைச் சுருக்கிக்கொண்டே செல்கிறார்கள். எல்லாம் கடவுளுக்காக. துறவு வாழ்வு இவ்வுலக வாழ்விலிருந்து தப்பித்தல் அல்ல மாறாக உலகம் நன்றாக இயங்குவதற்காக. படைவீரனாக இருந்த அந்தப் புதிய துறவிக்கு எல்லா துறவற வழக்கங்களும் சிரமமாக இருந்தது. மற்றவர்களுடன் பேச வாய்ப்பளிக்கும் வாரத்தின் அந்த ஒரு நாளுக்காகக் காத்திருப்பான். இப்படி அவன் மற்ற துறவிகளிடம் பேசியதன் வழியாக ‘பெருவாழ்வின் பானம்’ (Elixir of long life) பற்றி அறிந்துகொண்டான். துறவின் கடைசி நிலையைக் கடந்தவர்களுக்குப் பெருவாழ்வின் பானம் வழங்கப்படும் என்றும் இந்த மடாலயத்தில் நால்வருக்கு மட்டுமே அது வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அதில் இருவருக்கு மட்டுமே அதன் செய்முறை தெரியும் என்பதை அறிந்துகொண்டான். மடாலயத் தலைமைத் துறவியைத் தவிர அங்கிருந்த துறவிகளுக்கு யார் அந்த பானத்தைப் பருகியிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. அங்கிருந்த யாவருக்கும் பெருவாழ்வின் ஒரு துளியையாவது ருசித்துவிட வேண்டுமென்ற ரகசிய ஆசை இருந்தது.

பெருவாழ்வின் பானம் என்பது உண்மையில் ஒரு மது. பார்ப்பதற்குப் பச்சை நிறத்தில் இருக்கும். 1789ஆம் ஆண்டு நடந்த ப்ரன்சுப் புரட்சியில் அந்த நாடெங்கும் இருந்த பல்வேறு மதத் தலைமையகங்கள் சூரையாடப்பட்டன. புரட்சியில் பெரும் ஆபத்து என்னவென்றால் அதில் பகுத்தாயும் திறனற்றுத் தன் வழியில் வரும் எதையும் வேட்டையாடிவிடும். அப்படி சூரையாடப்பட்ட கார்தூஸிய மடாலயத் துறவிகள்தான் அந்த யாருமறிய தீவில் மடாலயம் அமைத்து வாழ ஆரம்பித்திருந்தார்கள். தங்களுடன் பழைய தோல் சுருளேடுகளைச் சுமந்து வந்திருந்தவர்கள், அதனைப் பிரதியெடுக்கத் துவங்கினார்கள். அதில் பல்வேறு குறிப்புப் படங்களுடன் எளிதில் யாராலும் வாசிக்க முடியாத சுருளேடு ஒன்றிருந்தது. அதனைக் குறிப்பெடுக்கத் துவங்கிய துறவியின் கண்கள் அகலமாக விரிந்தன. உடனே அதை மடாலய அதிபரிடம் காண்பிக்க மற்ற துறவிகளுடன் ஆலோசித்த தலைமைத் துறவி இருவருக்கு மட்டும் அந்தச் சுருளேட்டை வாசிக்கும் அதிகாரம் வழங்கி மற்றவர்களை அதை வாசிக்கக் கூடாது என்று தடுத்தார். அந்தச் சுருளேடு மிகுந்த கவனத்துடன் பிரதியெடுக்கப்பட்ட பின் மடாலயத்தின் ரகசிய அறையில் பாதுகாக்கப்பட்டது. பலநூறு வருடங்களுக்கு முன் பெயரறியா ரசவாதி ஒருவனால் மரணத்தைத் தள்ளிப்போட வல்ல மது செய்வதற்கான குறிப்புகள்தான் அவை. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் கார்தூஸியத் துறவிகளிடம் கதையாக மிஞ்சியிருந்த ‘பெருவாழ்வின் பானம்’ (Elixir of Long Live) பற்றிய அசல் குறிப்புகள். ப்ரன்ச் தளபதியான ப்ரான்சுவா அனிபால் தெஸ்த்ரியால் தாய் மடத்துக்கு வழங்கிய குறிப்புகள். இவர்களுக்குக் கிடைத்த பிரதி ஒருவேளை துறவியான ஜெஹோம் மூபக் அவர்களால் பிரதியெடுக்கப்பட்டதாகவோ அல்லது துறவி அந்தோணியால் பிரதியெடுக்கப்பட்டதாகவோ இருக்கலாம் என்று அவர்கள் கருதினார்கள். சுமார் நூற்று முப்பது வகையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் அது, சக்தி வாய்ந்த மது.

இவ்வளவு தரவுகளையும் மடாலயத்தின் நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட புத்தகங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொண்டான். மடாலயத்தில் சில வருடங்கள் கழித்த பின் அவனுக்கு அதன் ரகசிய வழிகள் புலப்படத் தொடங்கின. பாழடைந்த நிலவறை ஒன்றில் பெருவாழ்வு பானம் செய்வதற்கான குறிப்புகளை மிகந்த சிரமப்பட்டுக் கண்டுபிடித்தான். இரவு நேரத்தில் துறவிகள் தங்கள் அறையில் வெகு நேரத்துக்கு விளக்கேற்றி வைக்க முடியாது. ஆனால் யாருமறியாமல் குறிப்பெடுப்பது என்றால் அறையைத் தவிர வேறெங்கும் அவ்வாறாகச் செய்ய முடியாது என்பதால் ஒவ்வொரு பக்கங்களையும் மனப்பாடம் செய்து அதை இரவில் அறைக்கு வந்த பின்னர் தனியாகக் குறிப்பேடு ஒன்றில் எழுதி வைத்தான் அந்த இளம் துறவி. இருட்டில் கண் தெரியாமல் எழுதும் நுணுக்கம் சில நாள்களிலே அவனுக்குக் கைகூடியது. ஆசை என்ற மணல் துகள் நெஞ்சில் விழுந்துவிட்டால் அது தரும் உறுத்தல் அலாதியானது. அதை மொத்தமாகத் தூக்கியெறிந்திட முடியாது. பெருவாழ்வின் ரகசியமறிந்த இரு துறவிகள் அந்தத் தீவு முழுவதும் ஆங்காங்கே அதைச் செய்வதற்கான நூற்று முப்பது வகை மூலிகைகளையும் பயிரிட்டிருந்தார்கள். அம்மூலிகைகளைச் சேகரிக்கவே அவர்கள் கழுதைகளைப் பயன்படுத்தினார்கள். நூற்றி முப்பது மூலிகைகளில் பாதிக்கும் மேல் மடாலயத்தின் காய்கறித் தோட்டத்திலிருந்தது. துறவிகள் ஒவ்வொரு நாளும் இதையறியாமல் அவற்றைப் பராமரித்து வந்தார்கள். ரகசியங்கள் புலப்பட்ட புதிய துறவிக்குப் பெருவாழ்வின் பானத்தின் மீது ஆசை பிறந்தது. இரவெல்லாம் தூங்காமல் குறிப்புகளைப் பிரதியெடுப்பதில் செலவிட்டான். பகல் முழுவதும் மடாலய ரகசிய அறைகளைத் தேடுவதில் செலவளித்தான்.

ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் இவனது செய்கைகளில் மற்ற துறவிகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சந்தேகம் வர ஆரம்பித்தது. கூட்டுப்பிரார்த்தனைகளில் இந்தப் புதிய துறவி இல்லாமல் இருந்ததை, தலைமைத் துறவியும் கவனிக்கலானார். முழுநிலவு நாள் ஒன்றில் அந்தத் துறவி குறிப்பேட்டின் கடைசி பகுதியைப் பிரதியெடுத்தான். அதனடியில் சில கோடுகள் வரைந்திருந்தது ஏனென்று காரணம் புரியாமல் இருந்தான். பெருநிம்மதியுடன் உறங்கச் சென்ற துறவிக்கு அர்த்தமில்லாமல் வரையப்பட்டிருந்த கோடுகள் தூக்கத்தைக் கலைத்த வண்ணம் இருந்தன. குறிப்புகளைத் தேடி நிலவறைக்குச் சென்ற நினைவு வர அங்கிருந்த தரையில் இம்மாதிரியான கோடுகள் வரையப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. அதே இரவில் பௌர்ணமி நிலவின் உதவியுடன் வெளியே வந்து யாருமறியாமல் மீண்டும் நிலவறைக்குச் சென்றான். அதுவரை துணை வந்த நிலவின் வெளிச்சம் நிலவறைக்குள் வர மறுத்து நிற்க, தடுமாறி ஒரு விளக்கைக் கண்டெடுத்து ரகசிய அறையினுள் நுழைந்தான். கவனமாகத் தரையில் இருந்த கோடுகளைக் கண்டுபிடித்துத் தடவிப்பார்க்கையில் அது இன்னொரு நிலவறைக்கு அழைத்துச் செல்லும் கதவென்று தெரிந்தது. குளிர்ந்திருந்த அவ்வறை முழுவதும் இருள் அடர்ந்திருந்தது. தன்னிடமிருந்த விளக்கின் வெளிச்சத்தில் ஆராய்ந்ததில். பல்வேறு உபகரணங்கள் அங்கிருந்தன. இரட்டைக் குழல் கொண்ட தாமிர வடிப்பான்கள், மரப்பீப்பாயகள் இவையாவற்றையும் குறிப்பேட்டில் படமாகப் பார்த்திருக்கிறான். கடைசியில் வானதூதர்கள் செதுக்கப்பட்ட அலமாரி ஒன்றிருந்தது. அதைத் திறந்தபோது பச்சை ஒளி கிளம்பி அவ்வறை முழுவதையும் நிறைத்தது. கண்ணாடிக் குடிவையில் பச்சை நிறத் திரவத்திலிருந்து புறப்பட்ட வெளிச்சம்தான் அது. ஆவலுடன் அதைத் திறந்து முகர்ந்து பார்த்தான். அதுவரை கண்டிராத பரவசம் அவனை நிறைத்தது. ஒரேயொரு மிடறு மதுவை அவன் அருந்தினான். சொல்ல முடியாத பேரானந்தம் அவனுள் வந்தது. அடுத்த மிடறுக்குத் தயாரகும்போது யாரோ ஒருவர் மேலறையைத் திறந்துகொண்டு வருவது தெரிந்தது. அவரசரவசரமாகக் குடுவையை மூடி ஒளிந்துகொள்ள முயன்றான். கொஞ்சம் பரபரப்பு அடங்கியது. யாரும் வரவில்லை என்பதை தெரிந்துகொண்டு வேகவேகமாகத் தன்னுடைய அறைக்கு ஓடினான். இவனுடைய விளக்கின் ஒளியை இன்னோர் ஒளி தொடர்ந்து வந்தது தன் முகத்தை மூடிக்கொண்டு வேகவேகமாக அறைக்குள் நுழைந்தான். பதற்றத்தில் தடுமாறிக் கையிலிருந்த விளக்கு விழுந்ததில் அவன் படுக்கை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது அந்தத் தீ அவனது குறிப்பேட்டையும் எரித்தது. எவ்வளவோ முயன்றும் அவனால் குறிப்பேட்டைக் காக்க முடியவில்லை. வேகமாக வெளியில் ஓடி வந்தபோது தலைமைத் துறவி கையில் விளக்குடன் நின்றிருந்தார். தீ ஏற்படுத்திய சந்தடியில் மற்ற துறவிகளும் வெளியில் வர ஆரம்பித்தார்கள். என்ன செய்வதென்ற பதற்றத்தில் வேகமாக அவன் கடல் கரையை நோக்கி ஓட ஆரம்பித்தான். அதற்கு முன் தலைமைத் துறவியின் கண்களை ஒரு நொடிப்பொழுது நோக்கினான். அவர் எந்தச் சலனமுமின்றி அவனைப் பார்த்திருந்தார். அவன் ஓடுவதை மற்ற துறவிகளும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்வையிலிருந்து மறைந்தவன் சில மரக்கிளைகளைக் கடலில் மிதக்கவிட்டு அதைத் தொற்றிக்கொண்டு அத்தீவை விட்டு நீங்கினான். சில நாட்களுக்குப் பின் வேறொரு தீவையடைந்து அங்கிருந்த பழங்குடியினர்களின் உதவியுடன் மீண்டுமாக ப்ரான்ஸ் நாட்டையடைந்து தன் சொந்த தேசமான ஜெர்மனிக்குத் திரும்பினான். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் முதல் உலகப் போர் முடிந்து இரண்டாம் உலகப் போருக்குத் தேசங்கள் தயாராகிக் கொண்டிருந்தன.

தன் குறிப்புகள் எரிந்துவிட்டாலும் மனப்பாடம் செய்து வைத்திருந்த குறிப்புகளை இன்னோர் ஏட்டில் எழுதிவைத்தான். வேறெந்த வேலைகளிலும் நாட்டமிழந்த அவன் மூலிகைகளைத் தேடி நாடெங்கும் பயணித்தான். பல வருடங்கள் கழிந்தும் அவனால் கால்வாசி மூலிகைகளைக்கூடச் சேர்க்க முடியவில்லை. ஐரோப்பா முழுவதும் தேடியலைந்தான். கண்டம் விட்டு கண்டம் தேடி ஒரு வழியாக எல்லா மூலிகைகளையும் கண்டுபிடித்தான். முறைப்படி மதுவைத் தயாரித்தான். அவன் விரும்பிய வண்ணம் மதுவும் நன்றாக வந்தது.”

இவ்விடத்தில் கதையை நிறுத்திய ஹோசே என்னைக் கூர்ந்து பார்த்து அந்தத் துறவி யார் தெரியுமா? என்று கேட்டான். அவன் சொன்ன கதையில் ஆழ்ந்திருந்த நான் தெரியவில்லை என்று தலையாட்டினேன். ஒரு பெருமிதப் புன்னகையுடன், “உனக்கிந்தக் கதையைச் சொன்ன நானே அந்தத் துறவி” என்றான்.

நான் சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு மெல்ல சிரித்தேன். பாக்கெட்டிலிருந்து பேனாவை எடுத்து என் கைகளில் கணக்கிட ஆரம்பித்தேன். முதல் உலகப்போர் தொடங்கியது 1915ல். அப்போது ஹோசே பதினெட்டு வயதை அடைந்திருந்தாலும் 1915லிருந்து பதினெட்டு வருடம் முன்பாக என்றால் 1896 அல்லது 1895 வயதில் பிறந்திருக்க வேண்டும். இப்போது 2020. தற்போதைய வயது 125 இருக்க வேண்டும் என்று தோராயமான முடிவுக்கு வந்தேன். என்னுடைய எண்ணவோட்டத்தை அறிந்தவராக, “சரிதான். என் வயது 125” என்றார் ஹோசே.

“சும்மா விளையாடாதீர்கள்! இது எப்படி சாத்தியமாகும்?”

“இல்லை. நான் ஏன் உன்னிடம் விளையாடப் போகிறேன்? உண்மையில் அதுதான் என் வயது.” சற்று புன்முறுவல் பூத்தார் ஹோசே. “உலகம் எவ்வளவோ மாறிவிட்டது ஃபீனிக்ஸ். நான் இந்த மூலிகைகளுக்கான தேடலில் இருந்தபோது கார்தூஸியர்களின் ஒயின் போலவே கார்தூஸியர்களின் பச்சை மதுவும் பிரபலமாகியது. உண்மையில் பெருவாழ்வின் பானத்துக்கான குறிப்புகள் கிடைத்த சமயத்திலிருந்து மடாலயத்துக்கு இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் ரகசியங்கள் பரிமாறப்பட்டன. இன்றும் அப்படியாகவே அந்தப் பாரம்பரியம் தொடர்கிறது. ஆனால் அந்த ரகசியத் தீவில் மட்டுமே அது தன் பரிசுத்தத்துடன் வடித்தெடுக்கப்பட்டது. மற்ற மடாலயங்களில் இருந்து வருவதும் நல்ல மதுதான். தங்கள் வருவாயைப் பெருக்கிக்கொள்ள அது பயன்படுகிறதேயன்றி அதனால் பெருவாழ்வை வழங்க முடியாது. நீ கேட்ட நிரூபணம் நான்தான்.”

“நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை.”

“நான் அருந்தியது பெருவாழ்வின் பானம் என்று நம்பினேன். ஆனால் அது நிரூபிக்கப்பட எனக்குப் பல வருடங்கள் ஆனது. நான் உன் சந்தேகத்தை அலட்சியப்படுத்தவில்லை. அதுதான் அறிவியலின் முக்கியமான கோட்பாடு. உனக்கிருக்கும் சந்தேகங்களைக் கேள்.”

“பிறக்கும் யாவும் மரித்தாக வேண்டும் என்ற இயற்கையின் விதியை நீங்கள் சொன்ன அந்தப் பச்சை மது குடிப்பதால் மீறிவிட முடியுமா?”

“ஃபீனிக்ஸ், மரணமின்மை என்பது உண்மையில் சாத்தியமில்லாதது. இயற்கையின் விதியைக் கடவுளாலும் மீற முடியாது. தன்னால் தூக்க முடியாத கல்லை கடவுள் தூக்கிக் காட்ட முடியுமா? தன்னால் தூக்க முடியாது என்பது உண்மையானால் அவர் கடவுள் இல்லை என்றாகிவிடும். ஏனெனில் கடவுள் எல்லாம் வல்லவர். அப்படி தூக்கி காண்பித்தால் ‘தூக்கமுடியாத கல்’ என்பது அர்த்தமிழந்துவிடும். பிறக்கும் யாவையும் மரணித்தே ஆக வேண்டும். இந்தப் பச்சை நிற மது செய்வதெல்லாம் மரணத்தை ஒத்திப்போடுகிறது. அவ்வளவுதான்.”

“நீங்கள் சொல்வது உண்மையென்றால் அப்படி ஒரு பானம் இருப்பதற்கான அர்த்தமென்ன? துறவிகள் பற்றற்றவர்கள். அவர்களுக்கு ஏன் இது கிடைக்க வேண்டும்? துறவின் கடைசிப் படிநிலையில் இதை ஏன் அவர்கள் அருந்த வேண்டும்?”

“இதற்கான பதில் என்னிடம் இல்லை. ஆனால் மனிதர்கள் தனித்து வந்தவர்கள் அல்ல. இம்மாதிரியான பல துணுக்குகள் கொண்டு கட்டப்படுகிறார்கள். இன்று நாம் சாதாரணமாக எதிர்கொள்ளும் ஒரு விஷயம் நாளை வரலாற்றின் பக்கங்களில் பதியப்பட்டு நினைவு கூறப்படுகிறது. இந்தப் பச்சை மதுவைக் குறித்த குறிப்புகளைக் கொடுத்த பெயர் தெரியாத ரசவாதி உண்மையில் இதைத்தான் கண்டுபிடித்தானா? தெரியாது. அவனுக்கு இப்படியொரு சாத்தியத்தினை யார் சொல்லியிருக்க முடியும்? தெரியாது. அவன் இதை மற்றவர்களுக்குச் சொல்லக் குறித்து வைத்தானா? தெரியாது. அவன் செய்ய நினைத்தது இதுதானா? தெரியாது. ஆனால் காலங்களைக் கடந்து அவனுடைய குறிப்புகளின் உதவியுடன் அம்மது வடித்தெடுக்கப்பட்டுவிட்டது. இம்மாதிரி எத்தனை கண்டுபிடிப்புகள் நம்மிடம் இருந்தன? சாதாரண பொருட்களைத் தங்கமாக மாற்றும் ரசவாதம். உயிரை உடலுக்குள் அடக்கி வைத்தல். எல்லாம் அறிவியல். அவற்றை நாம் நவீன அறிவியலின் துணை கொண்டு விளங்கிக்கொள்ள மறுத்துவிட்டோம். இவைகளின் பயன்பாடு என்ன? தெரியாது. இதற்குப் பிறகு வேண்டுமானால் பயன்பாடு என்ன என்பதைக் கண்டறிந்துகொள்ள முடியலாம்.”

“என்னுடைய கடைசிக் கேள்வி இதுதான். எனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. தூக்கம் வராத இரவில் ஒரு வீடற்றவனிடம் நீங்கள் ஏன் கட்டுக்கதை சொல்லியிருக்க கூடாது? உங்கள் பச்சை மது குறித்த குறிப்புகளை எனக்குக் காட்டுங்கள்.”

சற்று நிமிர்ந்து உட்கார்ந்த ஹோசே என்னை உற்று நோக்குகிறார். ஹோசே சொன்னது ஒரு தேவதைக் கதையைப் போல எனக்குத் தோன்றினாலும் உள்ளுக்குள் சின்ன ஆசை கிளர்ந்தெழுந்தது. அவர் காட்டும் குறிப்புகளை நான் அபகரித்துக்கொண்டால் இந்த உலகத்தின் பணக்கார வரிசையில் நானும் சேர்ந்துவிடுவேன். குளிரிலிம் மழையிலும் நான் வாட வேண்டியதில்லை. ஒவ்வொரு நாள் காலையும் காலைக்கடன் செலுத்த பொதுக் கழிப்பிடங்களைத் தேடியோ உணவகங்கள் தேடியோ ஓட வேண்டியதில்லை. தினமும் விதவிதமான மது வகைகளை அருந்தலாம். என் நண்பர்களிடன் கஞ்சாவுக்கோ கொக்கெயினுக்கோ பிச்சை எடுக்க வேண்டிய அவசியமிருக்காது. அவர்களுக்கும் ஊரிலுள்ள அனைவருக்கும் நான் அவைகளை விற்பனை செய்யலாம். அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வதென்ற கவலையின்றி இருக்கலாம். ஹோசே தன் குறிப்புகளை எடுத்தவுடன் பிடுங்கிக்கொண்டு ஓடிவிடலாம் என்று நினைத்திருந்தேன்.

“ஃபீனிக்ஸ், அதை மட்டும் என்னிடம் கேட்காதே. நான் அந்தக் குறிப்புகளை மனப்பாடம் செய்ததையும் அதைக் குறிப்புகள் எடுத்ததையும் அந்த மடத்தின் தலைமைத் துறவி நன்கு அறிந்திருந்தார். அவை எரிந்து சாம்பலான அன்று நான் பதற்றத்தில் அந்தத் தீவை விட்டுத் தப்பிக்க எத்தனித்தேன். அப்போது அவர் கண்களில் பார்த்த அந்த சாந்தம் என்னை இன்னும் அடிபணிய வைக்கிறது. உண்மையில் நான் அந்தத் தீவை விட்டு ஓடி வந்தது என் ஆணவத்தால். என்னால் பெருவாழ்வின் பானத்தைச் செய்துவிட முடியுமென்ற ஆணவம். அதுதான் என்னை இந்நாள் வரை ஓடச் செய்து கொண்டிருந்தது. இன்று என் ஆணவம் தனிந்துவிட்டது. நான் அருந்திய மதுவின் மணத்திலும் சுவையிலும் மீண்டுமாகப் பச்சை மதுவைத் தயாரித்துவிட்டேன். எனக்கிருக்கும் ஒரே ஆசை மீண்டும் அந்தப் பெயரறிய தீவில் உள்ள மடாலயத்தில் மீண்டுமாகச் சரணடைய வேண்டும். எனவே என்னிடம் அந்தக் குறிப்புகள் குறித்துக் கேட்காதே.”

“ஆனால் நீங்கள்தான் இப்போது துறவி இல்லை. நீங்கள் யாருக்கும் கட்டுப்பட்டவரல்ல. எனவே நீங்கள் அந்தக் குறிப்புகளை என்னிடம் காட்டாலாம். போக அதைப் பார்த்து நான் என்ன செய்துவிடப் போகிறேன்?”

“நான் ராணுவத்தில் பணி புரிந்ததன் அடிப்படையில் சொல்கிறேன். நாங்கள் செய்யும் சிறு தவறுகளுக்காகப் பெரிய அதிகாரிகளால் தண்டிக்கப்படுவோம். அடுத்த முறை அந்த அதிகாரி எங்களை நெருங்கும்போது எங்களிடம் கத்திகளும் துப்பாக்கிகளும் இருக்கும். யோசித்துப் பார். வளர்ந்த ஒரு மனிதனை மற்றவர்கள் முன் தண்டிக்கும்போது எவ்வளவு அவமானமாக இருக்கும்? நாங்கள் அந்த உயரதிகாரிகளைப் பழி தீர்த்திருக்க முடியும்தானே? ஆனால் நாங்கள் அப்படி ஒரு போதும் செய்ததில்லை. எது அந்த அதிகாரிகளை எங்கள் துப்பாக்கிகளிடமிருந்து காத்ததோ அதுவே என்னை உன்னிடம் ரகசியங்களைச் சொல்லவிடாமல் தடுக்கிறது. அதுபோக நாம் செய்து வைத்திருக்கும் காரியத்தைப் பார். கண்ணுக்குத் தெரியாத வைரஸ் இவ்வுலகத்தின் இயல்பை முடக்கியிருக்கிறது. இதில் மரணத்தைத் தள்ளிப்போடும் மது கையில் கிடைத்துவிட்டால்… நினைத்துப் பார்க்க முடியாத அபாயங்கள் நிகழும். காரணமில்லாமல் இம்மாதிரியான கண்டுபிடிப்புகள் ரகசியங்களாகப் பாதுகாக்கப்பட மாட்டாது.”

இருவரும் அமைதியாக கொஞ்ச நேரம் இருந்தோம். ஹோசே என்னை நோக்கி, “ஃபீனிக்ஸ், நான் உனக்குக் குறிப்புகளைத் தரப்போவதில்லை. ஆனால் உனக்கும் எனக்கும் பயன்படும் செயலைச் செய்யப்போகிறேன். என்னோடு வா.” என்றார்.

வேகமாக என் கைகளைப் பற்றிக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார். பல தெருக்களில் புகுந்து வெளிவந்து கடைசியாக மரத்தால் ஆன சிறிய வீட்டினுள் என்னை அழைத்துச் சென்றார். வீடு முழுதும் வித்தியாசமானதொரு சுகந்தம் வீசியபடியிருந்தது. ஓர் அறையினுள் சென்ற ஹோசே இரண்டு கண்ணாடி க்ளாசில் பச்சை நிற ஒளிரும் திரவத்தை எடுத்து வந்தார். வசியப்பட்டவனைப் போல நான் எதுவும் பேசாமல் அவர் கொடுத்த திரவத்தை அருந்தினேன். நான் இதுவரை அருந்தியதில் சிறந்த மது இதுதான். என்னால் விளக்க முடியாத சுவையில் அது இருந்தது. அந்த மது கொடுத்த கிறுகிறுப்பில் மீண்டுமாக ஹோசேவிடம் இரண்டு கேள்விகள் கேட்டேன். இது கார்தூஸியர்களின் உண்மையான பச்சை மது என்பதை நான் எப்படி நம்புவது? இதனால் உங்களுக்கு வரும் பயனென்ன?

சற்று உரக்க சிரித்த ஹோசே, “இது உண்மையான பெருவாழ்வின் பானமென்றால் நீதான் அதன் சாட்சியாக இருப்பாய். ஆனால் அதற்கு நீ பல வருடங்கள் பொறுத்திருக்க வேண்டும். அப்படி நீ பல்லாண்டுகள் வாழ்ந்திருந்தால் நான் இத்தனை வருடம் செலவளித்துக் கண்டுபிடித்ததன் வெற்றி அதுதான்.” மீண்டுமாக சத்தமாகச் சிரிக்கத் தொடங்கினார்.

அதன் பிறகு ஹோசேவை அந்தப் பூங்காவில் நான் சந்திக்கவேயில்லை. என் நினைவில் இருந்த வழியைப் பின்தொடர்ந்து ஹோசேவின் வீட்டுக்குச் சென்ற போது அது பாழடைந்து கிடந்தது. அன்று ஹோசே வாயில் சிகாருடன் எதற்காகக் காத்திருந்தான் என்பது, எனக்கு அப்போதுதான் புரிந்தது. அவனுக்குத் தன் கண்டுபிடிப்பைச் சோதித்துப் பார்க்க ஓர் எலி தேவைப்பட்டது. அவனது பொறியில் நானாக அகப்பட்டுவிட்டேன். இதில் யாருக்கும் பெரிய நஷ்டமில்லை என்றாலும், பெருவாழ்வின் பானத்தை உண்மையில் அவன் கண்டுபிடித்தானா? என்றறிய நானும் உங்களைப் போலக் காத்திருக்கத்தான் வேண்டும்.


புகைப்படம்: பானு

மேலும் படிக்க

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:

குறிப்பிடத்தகுந்த கதைகள்:

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்