வாழ்வின் நடனம்
பருஉருவில் பற்றநினைக்காமல்
உன் நாயகனைக்கூட
மனித உருவிலும் கற்பனையிலும்
தீண்ட நினைக்காமல்
பார்க்கவும் கண்டுகொள்ளவும்
பழகுவும் மட்டுமே தெரிந்தால் போதும்
வாழ்வின் நடனம்
ஒருக்காலும் உன்னைக் கைவிடாது
உனக்கோ
பார்ப்பதற்கும் பழகுவதற்கும் தடுக்கும்
ஏதாவது ஒரு சாதிதானே வேண்டியுள்ளது?
வாழ்வின் நடனத்தை – கவிதையின் நடனத்தை – நாம் கண்டுகொண்டோமா என்பதுவே நமது மிகப்பெரிய கேள்வி. கண்டுகொண்டிருந்தால் அது ஏன் செயல்படவில்லை என்பது நமது அடுத்த கேள்வி. கேள்விகள் நம் உள்ளார்ந்த தாகவெறியிலிருந்தே பிறந்திருக்குமானால் பதில்களைத் தாமே கண்டடைந்துகொள்ளும். வேகத்தடைகள் யாவை என்பதையும், நம்மை உணர்வுகளற்ற ஒரு மக்குப் பிறவிகளாய்ப் படைத்திருக்கும் குப்பைகளையும் கண்டு களைந்தும் கொள்ளும்.
வாழ்வின் நடனத்தை நாம் கண்டிருக்கிறோமா? காண்பவர்களே கவிஞர்களாகிறார்கள். அல்ல, மனிதர்களே அவர்கள் என்பதுதான் நமது பதில். அதுதான் நாம் அடையவேண்டிய பெருங்களம் எனபதுதான் விதியும்.
0
சென்ற பிப்ரவரி 23-ம் தேதி ஒரு காட்சி ஊடகத்தின் கருத்தரங்க மேடையில் பார்வையாள விருந்தினராகக் கருத்துரைக்க அழைக்கப்பட்டிருந்தேன். அதை இயக்குபவர்கள் அன்றைய அந்தப் பொருளுக்கு என்னைத் தேர்ந்தெடுத்துள்ளமை பெரும் வியப்பூட்டுவதாயிருந்தது. ஒரு பக்கம் தங்கள் தொழிலில் மிகக் குறைந்ததும் சரியானதும் நேர்மையானதுமான கட்டணத்தையே போதுமெனச் செயல்படுபவர்கள், பொருள் சேர்த்தே தங்கள் வளத்தையும் தொழிலையும் பெருக்க விரும்பாதவர்கள். மறுபக்கம், இல்லை, நாம் சற்று வளம் தேடிக்கொள்வதுதான் சரி என்று அதற்கான தங்கள் காரணங்களோடு சாதிப்பவர்கள். ஒரு மருத்துவர், ஒரு ஆட்டோக்கார இளைஞன், ஒரு உணவு விடுதிக்காரர் இவர்கள் நோயாளிகள், ஏழைகளிடமிருந்து மிகமிகக் குறைந்த கட்டணமும் அதுகொண்டே நிறைந்த உழைப்பின்மூலம் போதிய வருமானமும் மிகப் பெரிய மனநிறைவையும் அடைவதாகச் சொன்னார்கள். இவர்களை நான் அங்கே காணநேர்ந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. என் வாழ்வின் ஓர் அற்புத நிகழ்வு அது.
பிடிவாதமான ஒரு முதிய தம்பதியினர் வந்திருந்தனர். இட்லி, புரோட்டா வணிகம். நாம் கற்பனை பண்ணமுடியா அளவு மலிந்த விலையும், தரமும், ஏழைகள் வந்து நிறைந்து உண்டுசெல்லும் அழகைத்தவிர பிற பாதுகாப்பற்ற பொருளாதார நிலை. எதிர்காலத்தில் ஒரு நோய்வந்தால்… உழைக்கமுடியாது போனால்… நிறைய பொருள்தேடுவது ஒன்றும் தப்பில்லையே என்ற எதிரணிக்காரர்களின் ‘நியாயங்’களுக்குப் பதிலாய் அவர்கள் வைத்திருப்பது தங்கள் இருத்திலிருந்து சரிந்துபோகாத ஒரு மகத்தான நம்பிக்கை, உறுதி, கண்டடைதல். எந்தச் சொற்களால் நாம் புரிந்துகொள்வோம் இதனை, எந்தச் சொற்களாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்ப் புரிந்துகொள்ளாமலிருக்கும் நாம்?
எனது இளமைப்பருவத்தில் இவர்களைப் போன்ற ஒரு தம்பதியினரை – அடுத்தவீட்டு உறவாய்ச் – சந்தித்திருக்கிறேன். பொருள்மீது மோகம் கொள்ளாத எளிய மனிதர்கள். தங்கள் அன்பால் என்னையும் என் குழந்தைமையையும் சீராட்டியவர்கள். பின்னொரு காலத்தில் அந்தத் தம்பதியினர் நகரச்சாலையின் ஒரு நடைபாதையில் அந்தியில் கடைவிரியும் ஒரு இட்லி, தோசை உணவு விடுதியராய் இயங்கிக்கொண்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டேன். உடனடியாய் அவர்களை நெருங்கவும் வாய் பேசவும் ஓடவில்லை எனக்கு. அடுத்த கணமே அது, யாரோ கடவுளர்களோ, தேவதைகளோ மாறுவேடமிட்டு வந்து உலவிப் பணி செய்துகொண்டிருப்பது போலிருந்தது. ஒரு நாளும் துயர் தீண்ட முடியாத மனிதர்கள். வீட்டை அடைந்து வெகுநேரம் சிந்தனையில் ஆழ்ந்தவனாயிருந்தேன். மறுநாளோ அதற்கடுத்த நாளோ அவ்விடம் சென்று அதனைப் பார்க்க நினைக்கையில், அவர்கள் இல்லை, நகராட்சிக்காரர்களால் அக்கடை அகற்றப்பட்டிருந்தது.
அதன்பிறகு அத்தகைய மனிதர்களை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. இன்றுதான் இங்கே பார்க்கிறேன்.
‘ஏழை எளியவர்கள்’ என்ற ஒரு சொற்றொடர் உண்டு தமிழில். ஏழைகள் உண்டு, வறுமையையும் அந்த வாழ்வின் போராட்டத்தையும் துயரையும் வலியையும் அறிந்தவர்களே எனினும் சற்று பணம் சேர்ந்தால் பெரும் செல்வந்தர்களாகவே துடிப்பவர்கள். இந்த நாட்டில் ஏழ்மையிலிருந்த ஓர் இனம் படிப்படியாய்க் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தியும் கடும் உழைப்பாலும் ‘முன்னேறிய’ ஒரு சமூகம் பெரும்பெரும் செல்வந்தர்களானதன்றி மனிதகுலத்தின் நிலையான, நிறையான வாழ்வின் அடிக்கல்லாக அமையாதவர்களாய், விஷமேறிய மானுட வரலாற்றின் அங்கமான சாதாரண மனிதர்களாகவே மாறிவிட்டதை நாம் காண்கிறோம். இயேசு என்ற மகாகவி சொன்னான்: ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழைந்துவிடும். செல்வந்தன் சொர்க்கத்துள் நுழைய இயலாது என்று.
இயேசு சொன்ன கவிதைமொழி அது.
காட்சி ஊடகத்தின் நிகழ்ச்சித்தொகுப்பாளரும் அன்பருமான கேள்வியாளர்: ‘நீங்கள் எப்படி இந்த மனநிலைக்கு வந்தீர்கள்’ எனக் கேட்டதற்கு அந்த எளிய மனிதர்கள், அறிவியக்கவாதிகள், படிப்பாளிகள் சொல்லும் சொற்களில்லாது அவர்களறிந்த சொற்களிலும் நம்பிக்கைகளிலுமாய்ப் பேசினார்கள். ஒருவர் என் தந்தை இப்படிச் செய்தார், அவர் நினைவாக நான்… என்றார். ஒருவர், ஒரு துயரக்காட்சியைக் கண்டேன் அது முதல் இப்படித் துணிந்துவிட்டேன் என்று கண்ணீர் மல்கச் சொன்னார். என்றும் மாறாத இளமையுடனிருப்பவர் போன்றிருந்த ஒரு மருத்துவர் சொன்ன சொற்களிலெல்லாம், அவர் கல்விமூலம் கற்றே இராத மெய்மையின் வழிநடையே மிதக்கிறது. (இயேசுவோ, புத்தரோ, கிருஷ்ணமூர்த்தியோ அவரவர்கள் அறிந்த மொழியில் அதை வெளிப்படுத்தியுள்ளார்கள்) உண்மையில் இவர்கள்தாம் மனிதர்கள், மனிதர்கள் அடைய வேண்டிய நிலையை அடைந்துவிட்டவர்கள் என்றேன். (அவர்களைப் பேறுபெற்றோர் என்கிறார் இயேசு.)
அது என்ன நிலை? சொற்களால் விவரிக்க முடியாத அந்த நிலையை, தத்தம் வாழ்வால் செயலால் விளக்கிவிடுபவர்களே இந்த எளிய மனிதர்கள் என்பார். இந்த நிலையிலிருந்துகொண்டுதான் இயேசு மலைப்பிரசங்கம் செய்கிறார். “ஆவியில் எளிமையுள்ளோர் பாக்கியவான்கள், பரலோக ராஜ்யம் அவர்களுடையது” என்கிறார், ‘ஆவியில் எளிமை’ ‘பரலோக ராஜ்யம்’ ‘பெறுபேறு’ – இந்தச் சொற்களுக்கெல்லாம் தான் வாழ்ந்த காலத்தில் எரியும் கேள்விகளோடு வருவோர்களிடமெல்லாம் தங்கள் தாய்மொழியில் உலகியல் உரைநடைப்பேச்சில் எவ்விதம் தெளிவு ஏற்படுத்தியிருப்பார் அவர்களிடம் என்பதை உய்த்துணர்வோர்களுக்குத்தான் மெய்மை புரியும்.
இந்த மனிதர்கள் இயேசுவின் பாஷையில் ‘பரலோகராஜ்ஜியத்தை’ அடைந்தவர்கள். அவர்கள் மனநிறையையும் மகிழ்ச்சியையும் அச்சமற்றதும் உறுதிகொண்டதுமான பெருங்களத்தை அடைந்தவர்கள். அதைத் தங்கள் வாழ்வாகவே வெளிப்படுத்துபவர்கள்.
இந்த உளநிலையிலிருந்து வந்தவையே, “துயரப்படுவோர்கள்… ஆறுதலடைவார்கள்!” ஈனத்துயரையா அவர் அப்படிச் சொல்லியிருப்பார்? முழுமையான, பேரளவான மானுடத்துயர் அது. இரக்ககுணமுள்ளவர், சாந்தகுணமுள்ளவர்கள், நீதியின்மேல் பசிதாகமுடையவர்கள் இதயத்தில் சுத்தமானவர்கள், நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள், இவர்களே இந்த உலகத்துக்கு உரியவர்கள், கடவுளின் மனிதர்கள், இவர்களாலேயே இந்த உலகம் சாந்தி அடையும். இவர்களே உலகத்துக்கு வெளிச்சமாக இருப்பவர்கள்.
தாம் கண்டடைந்த மெய்நிலையிலிருந்தபடியே இன்னும் நிறைய நிறையவே பேசியுள்ளார் இயேசு.
மிக உயர்ந்த ஒரு மனிதரின் சொற்கள் இவை என்று புரிந்துகொண்டவர்களும், ஈர்க்கப்பட்டவர்களும்தான் நாம் எல்லோரும் என்பதில் எந்த ஒரு அய்யமுமில்லை. ஆனால் அது மெய்யான ஒரு புரிதலுக்குப் போதவில்லை என்பதுதான் கண்கூடான உண்மை. மற்றும் இன்னொரு மகிழ்ச்சிகரமான உண்மை என்னவென்றால் எல்லா மனிதர்க்குள்ளும் நிரப்பப்படாத ஆழம் ஒன்று உள்ளது என்பதும், இந்த அரைகுறை மற்றும் நிறைவேறாத உள்ளொளியால் மானுடத்துயர் எதுவும் நீங்கவில்லை எனும் புரிதலும்தான்.
அடையவேண்டிய நிலையை அடைந்துவிட்ட ஒரு மனிதன் இச்சொற்களைக் கண்டுகொள்வதற்கும் பிற மனிதர்கள் கண்டுகொள்வதற்குமிடையே ஒரு பள்ளத்தாக்கு உள்ளது. அங்கேதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சொற்களில் வாழ்ந்துகொண்டிருப்பது என்பதுதான் அது. அந்தச் சொற்கள் அதன் பொருள் ஆகாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் வழிசுட்டும் பலகையாகக்கூட ஆகாமல் வெற்றோசைகளாய்.
மனிதன் தான் அடையவேண்டிய – ஒன்றேயான – வழியையும் களத்தையும் நிலையையும் கண்டுகொள்வதே தேவையானது; சொற்கள் அல்ல; சொற்கள் ஏற்படுத்தும் வியப்பும் கவர்ச்சியும், அந்தச் சொல்லாளனைப் பின்தொடரும் அடிமைகளாகவும் பேதைகளாகவும் ஆக்குமே தவிர ஒருவனை மனிதனாக- அடைய வேண்டிய நிலையை அடைந்த – ஒருவனாக ஒளிரச் செய்யாது. நாம் மிகப்பெரிய ஒரு மனிதனைக் கண்ணுறும்போது, அவரைப் பற்றிய நமது எண்ணங்களாக இருக்கும் அவரை அன்றி, அவர் அடைந்த உளநிலையைக் கண்டடைந்து கைப்பற்றிக்கொள்வதுதான் நடக்கவேண்டிய ஒன்று. அவரும் அதை நோக்கியே நமக்கு வழிசுட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும். இந்நிலையில் அவர் ஒரு வழிசுட்டும் பலகை மட்டுமே. அதனளவில் அதற்கும் ஒரு பெருமை உண்டு. அவ்வளவுதான். நாமோ மிக முக்கியமான பொருளைத் தவறவிட்டுவிட்டு முக்கியமற்ற பொருள்கள்மீது அலைந்துகொண்டிருக்கிறோம். தங்கள் பாட்டுத்திறத்தாலும், தத்துவங்களாலும், சமயங்களாலும், ஆளுமையாலும், புரட்சிகர புறஉலகச் செயற்பாடுகளாலும் உலகைப் பாலித்திட விரும்பியோர் அனைவருமே பூமியின் அவமானச்சின்னங்களாகவே மாறிவிட்டனர்!
இனிநாம் என்ன செய்வது?
கேள்விகள் நம் உள்எரியும் தாகத்தால் விளைந்திருக்குமானால் பதில்களை அவை தாமாகவே தேடிக்கொள்ளும்தானே?
இருள்சூழ்ந்த காட்டில் ஒருவன்
அவன் செல்லுமிடமெல்லாம்
ஒளிர்ந்துகொண்டேவருகிறது,
அவன் கையோடே
விளக்கு ஒன்றை எடுத்துச்செல்வதால்.
அவனே வாழ்வின் நடனத்தை அறிந்தவன்.
கடவுளின் ராஜ்ஜியத்தையும்
கவிதையின் மதத்தையும்
கண்டுகொண்டவன்.
ஒன்றேயான வழியையும் களத்தையும்
கண்டுகொண்டவன்
புதியமனிதன்.
இதுவரை நான் சொல்லிவந்த – கண்டடைந்த – உண்மையை – அனுபவத்தைப் – பற்றி, ‘போதாது’ இன்னும் புரியவில்லை, விளங்கவில்லை என்பவர்களுக்கும், என்னும் நிலையினுக்காகவும்தான் நாம் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறோம் இல்லையா? உலகின் வெளிவிளக்கமும் அவ்வாறே உள்ளது இல்லையா?
நாம் அன்று கண்ட எளிய மனிதர்களைப் பாருங்கள். எளிய மனிதர்கள் என்ற சொல் போதாமல் ‘ஆவியில் எளிமையுள்ளவர்கள்’ என்கிறார் இயேசு. அவர்கள் அடையும் இன்பநிலைதான் ‘பரலோகராஜ்யம்’ என்பது அவரது மொழி, தன்னலமிக்க அற்பத் துயரங்கள் அல்ல இவர்களுடையது என்பது தெளிவு. அமைதியையும் ஆறுதலையும் அடையும் பேறுபெற்றோர் இவர்களே என்பது அவரது அனுபவம். இன்னும் எவற்றையெல்லாம் அவர் உணர்ந்துள்ளார் பாருங்கள்: ‘இரக்க குணமுள்ளோர் பேறுபெற்றொர் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்’ என்பதை நாமும் இந்த நிகழ்ச்சியில் கண்கூடாகவே பார்த்தோம் அல்லவா, பள்ளத்தைப் பார்த்து ஓடும் வெள்ளம்போலும், வெற்றிடத்தை நோக்கி விரையும் காற்றைப்போலும், அத்தகைய மனிதர்களே ஆங்காங்கிருந்து அத்தகைய மனிதர்களைக் காப்பாற்ற விரைந்து வந்ததை. இவர்களுடைய பின்உந்தம் எது என்பதைத்தான் அன்று நானும் விளக்க முயற்சித்தேன். நீதியின்மேல் பசிதாகம் உடையவர்கள், இதயத்தில் சுத்தமானவர்கள், பேராசையற்றவர்கள், ஆசையற்றவர்கள் என்று சொல்லவில்லை பேராசையற்றவர்கள் அவ்வளவே. இதைச் சொல்வதற்காகத்தானே ‘எளிய’ என்ற வார்த்தை தோன்றியிருக்க வேண்டும். இவர்களைக் குறித்து ஒரு மனிதன் சொன்ன மொழியை மட்டுமே பற்றிக்கொண்டிருத்தலால் என்ன பயன்? வாழ்ந்துகாட்டுகிற மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த மதமும் தெரியாது. எந்த மனிதனும் தெரியாது. எந்தக் கடவுளையும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுதான். அதுவே கவிதையின் மதம் என்பேன். என்றேன்.
இந்தப் புறஉலகிலும் பொருளாதாரச் சமத்துவத்திலும், அறத்திலும், அன்பிலுமாய் நாம் அடைய வேண்டிய நிலையை அடைந்துவிட்டோமா? நமது துயரங்கள் எத்தகையவை? நமது இன்பங்கள் எத்தகையவை? இதோ வந்துவிட்டோம் வந்துவிட்டோம் என்று நாம் களிக்கும் இடங்கள் எல்லாமே வாழ்வு நமக்கு இட்ட கருணை அன்றி வேறென்ன? அந்தக் கருணை எதற்காக நிலவுகிறது என்று அதன் ‘காரணத்தை’ நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அங்கேதான் புதையல் இருக்கிறது. அதைத் தோண்டி எடுங்கள் என்று.
நன்றி: சுடலைமுத்து
புகைப்படம்: விஸ்வநாதன்
கவிதையின் மதம் கட்டுரைத் தொடர்:
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…