கட்டுரை

எஸ்.ராவின் பயணங்கள் வாசகனுக்கான வாசல்

5 நிமிட வாசிப்பு

பயணம் எப்போதுமே எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் நாம் பயணம் செய்யும் விதம்தான் மாறிக் கொண்டிருக்கிறது. பயணம் சிறுவயதில் வீட்டுக்கு வெளியே விளையாடப் போவதிலிருந்து தொடங்குகிறது. பால்ய காலம் வரை பயணங்கள் இலக்கோடுதான் போகிறது. பால்யத்தைக் கடந்தபின்தான் பயணம் இலக்கற்றப் பயணியாகச் சிறகை விரித்துக்கொள்கிறது.

பயணம் என்பது கற்றுக்கொள்ளலே. ஒவ்வொரு பயணமும் ஒரு பாடம். கண்களால் மட்டும் உலகைப் புரிந்துகொண்டுவிட முடியாது. அனுபவித்து, செரித்து, ஆழ்ந்து, அறிந்துகொண்டு உலகோடு இணைந்துவிட வேண்டும் என்று பயணங்களின் காதலன் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிடுவார்.

பயணம் ஒவ்வொரு மனிதருக்கும் பிரத்தியேகமான ஓர் உணர்வு. கடவுள் நம்பிக்கை போல், காதலைப் போலத் தனக்கே உரிய ஓர் அந்தரங்கமான உணர்வு. மனித உயிர்கள் ஆதியில் இடம் பெயர்ந்து பெயர்ந்து ஒவ்வொரு நிலமாகத் தேடிப் பாதுகாப்பான இடங்களில் உண்டு உறங்கி, பின் மீண்டும் வேரோர் இடத்துக்குக் கூட்டமாகச் செல்லும் வழக்கம் கொண்டிருந்தது. ‘வால்கா முதல் கங்கை வரை’ எனும் நூலில் தொடங்கி இன்று வெளியாகும் புத்தகங்கள் வரை பயணக் கதைகளைப் படிக்க ஆர்வலர்கள் உண்டு. அவர்களில் ஒரு சாரார் விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டி வாசிப்பவர்கள். இன்னொரு சாரார் பயணம் மேற்கொள்ளும் முன் வழித்துணையாய்ப் புத்தகங்களையும் இணையத்தையும் நாடி வருபவர்கள். இரண்டாம் தரப்பினருக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்கக் கூடியவர் யாரெனில் பயணத்தைச் சுற்றுலாவாக மாற்றாமல் அதன் பொருட்டு செல்பவர்களே. எந்த நிபந்தனையோ அவசியமோ இல்லாமல் மனம் சொல்லும் இடங்களுக்கெல்லாம் கால்களை அழைத்துச் செல்பவர்கள். அவர்களிடம் அபரிமிதமான பணமோ, பயணத்துக்கு வேண்டிய சௌகரியங்களோ ஏன் திட்ட வரைபடமோகூட இருக்காது. ஓரிடத்துக்குச் சென்று அங்கிருந்து நூல் பிடித்து இன்னோர் இடம் அங்கிருந்து மற்றொரு பயணம் எனச் சலிக்கச் சலிக்க ஊர் உலகத்தைச் சுற்றுபவர்கள் அவர்கள்.

அவர்களில் ஒருவர்தான் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். தேசாந்திரி என்று தனது பதிப்பகத்துக்குப் பெயர் வைக்கும் அளவுக்கு அவர் அசாத்தியமான பயணி. அவரின் ஒரு புத்தகத்தின் தலைப்பு ‘இலக்கற்றப் பயணி’. இன்னொரு புத்தகத்தின் பெயர் ‘ரயில் நிலையங்களின் தோழமை’. தவிர பயணம் குறித்துப் பேசுவதிலும் அவரது இணையத்தில் பல பதிவுகளை எழுதுவதிலும் பேரார்வம் கொண்டவர். கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பது சொர்க்கத்துக்கும் மரணத்துக்கு அப்பாலும் பொருந்தும். ஆனால் பயணத்தைப் பொருத்தவரை கண்டவரால் விட்டுவிட முடியும். ஒவ்வோர் எழுத்தாக அந்தந்த இடங்களை வாசகருக்கு இடம்பெயர்க்க முடியும் என்பதை விரிவாகத் தமது கட்டுரைகளில் எழுதியிருப்பார் எஸ்.ரா.

பயணம் ஏன் ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமாகிறது என்பதை எஸ்ராவின் கட்டுரை மூலமாகத்தான் அறிந்துகொள்ள முடியும். பயணத்தின் வழியாகத்தான் நம் நாட்டின் நம் நிலத்தின் பண்பாட்டுக் கூறுகளை, நமது கலாச்சாரச் சிறப்புக்களை, நமது முன்னோர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து சென்ற தடங்களை, மனித வாழ்க்கையின் நம்பிக்கைகளை அடையாளம் காண முடியும் என்று நம்புகிறார். ஒரு ஜோல்னாப் பையுடன் எழுத்தாளர் ஒருவர் தாகத்துடன் வெவ்வேறு ஊர்களில் பயணிக்கும் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். எஸ்.ராவின் கால் படாத ஊர்களே இல்லையெனும் அளவுக்குக் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் தென்கோடியிலிருந்து வட பகுதி வரை பல இடங்களுக்கு அலைந்து திரிந்துள்ளார். அதிலிருந்து அவர் கற்றதும் பெற்றதும்தான் அவரது எழுத்துகளின் உந்துதல். எவ்வளவு பெரிய தாகம் இருந்தால் இது சாத்தியமாகும்?

ஓர் ஊருக்குப் போனால் அந்த இடத்தின் தட்ப வெப்பத்தில் தொடங்கி, அங்கு அவர் சாப்பிட்ட உணவு குறித்தும் அவர் வியந்த விஷயங்களைக் குறித்தும் விரிவாகப் பதிவிடுகிறார். சிறு தகவலையும் விட்டுவிடாமல் கவனமாகப் பதிவேற்றுகிறார். அவரது இந்த அயராத முயற்சியைப் பாராட்டும் அதே சமயம் நம்மாலும் இதுபோன்று ஊன்றிக் கவனித்து இயற்கையுடன் இயைந்து திளைத்துப் பயணிக்க முடியுமா? என்று யோசிக்கவும் வைக்கிறார்.

கட்டற்ற சுதந்திரம் என்பது எப்போது கைவசம் வருமெனில் இப்படி நாடோடியாக அடுத்த நொடி எங்கிருப்போம் என்ற நிச்சயமற்ற தன்மையுடன் வாழ்க்கையாகிய பயணத்தை எதிர்கொள்ளும் போதுதான் வாய்க்கப்பெறும். இளவரசன் சித்தார்த்தன் ஞானத்தைத் தேடிப் பல இடங்களுக்குப் பயணப்பட்ட போதுதான் ஒரு நாள் புத்தனாக மலர்ந்தான். அவ்வகையில் தேடல் கொண்டு தாகம் கொண்டு அலைந்து பயணப்படும் ஒவ்வொருவரும் புத்தனே எனலாம். ஞானத்தின் அளவுகோல்கள் மாறலாம், விழிப்புணர்வின் நிறங்களில் சில வண்ணங்கள் சேராதிருக்கலாம், ஆனால் அவர்கள் சென்றடையும் இடம் நிச்சயம் போதியின் நிழலாகத்தான் இருக்கும்.

ரயில் நிலையங்களைப் பற்றி எஸ்.ராவின் குறிப்புகள் மிகவும் முக்கியமானது. ரயிலில் தரப்படும் உணவுகள் குறித்த புகார் இந்திய ரயில்வே தொடங்கிய நாள் முதல் இருந்திருக்கும் போலும். பயணம் எப்போது இனிக்கும் எப்போது முழு வெற்றி பெறும் என்று எஸ்.ரா தனது புத்தகத்தில் குறிப்பொன்று தருகிறார். பயண நாட்களில் உடல் ஆரோக்கியமாக இருந்தாலே பயணம் வெற்றிதான் என்கிறார். அதில் முக்கிய பங்கினை உணவு வகிக்கிறது. தேவையான அளவுக்கு உணவு உட்கொண்டால் போதும், அதிகக் காரமோ, சுவையோ, மசாலா போட்ட உணவுகளையோ நாக்கின் ருசிக்கேற்ப சாப்பிடத் துவங்கினால் பயணம் நிச்சயம் சுவைக்காது. எங்காவது மருத்துவமனையில் முடங்கிப் போகலாம். தேவையான சத்தான உணவும், தண்ணீரும்தான் பயணத்தின் முதல் முக்கியமான தேவைகள். இது சரியாகப் பார்த்துக்கொண்டால் உடல் நலமாகவே இருக்கும். சுவர் இருந்தால்தானே சித்திரம். உடல் நிலை நன்கு இருந்தால் பல இடங்களுக்குத் தடைகள் இன்றி செல்ல முடியும். எனவே எங்குப் போக வேண்டும் என்றாலும் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தயிர்ச் சாதம் அல்லது சப்பாத்தி – இரண்டுமே எளிதாகக் கிடைக்கும், அதிக சிக்கல்களை ஏற்படுத்தாது. தயிர் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் எளிமையான உணவு எது கிடைக்கிறதோ அதை உண்ணலாம்.

மனித மனம் எப்போதும் இருக்கும் இடத்தை விட்டுப் பறக்கவே நினைக்கும் குணமுள்ளது. வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் நிச்சயம் பயணம் செய்யவே விரும்புவார்கள். ஆனால் சூழல்கள் காரணமாகச் சிலருக்கு மட்டுமே வரமாகக் கிடைக்கும் பயணம் பலருக்கு எட்டாக் கனியாகவே விளங்குகிறது. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பது உண்மைதான். பொன்னியின் செல்வன் புதினத்தில் கல்கி வந்தியத்தேவனின் பயணத்தை மிக விரிவாகவும் ஆழமாகவும் சொற்சுவை பொருட்சுவையுடன் ரசித்து ரசித்து எழுதியிருப்பார். காலம் கடந்து காவியமாக அது மாறியதன் காரணம் அந்தப் பயணக் கதையைப் படிக்கும் யாரொருவரும் தன்னை வந்தியத்தேவனாகவே நினைக்கும் வண்ணம் அந்த எழுத்து செறிவாக விறுவிறுப்புடன் புத்துணர்வு தரும் வகையில் எழுதப்பட்டிருக்கும். அவ்வகையில் எஸ்ராவின் பயணக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் படிக்கப் படிக்க நாம் அந்த இடத்தின் கண்களாகவே மாறிப் போகிறோம்.

கங்கையாகட்டும், வாரணாசியின் சாலைகள் ஆகட்டும் அவரின் கால் படும் ஒவ்வோர் இடமும் வெளிச்சத்தால் விசாலமாகிறது. கஜுரகோ சிற்பம் பற்றி அவர் எழுதும் விதத்தைப் பார்த்தால் இந்தச் சின்னஞ்சிறிய வாழ்க்கையில் நாம் ஏன் கூண்டுக்குள் இன்னும் அடைந்து கிடக்க வேண்டும். சிறகுகளைத் தேடிக் கண்டடைந்து உடனே எஸ்ரா கூறும் உலகிற்கெல்லாம் சென்று சேர வேண்டும் என்ற விழைவை ஏற்படுத்திவிடுகிறார்.

யானையைப் பற்றி, காட்டுயிர்களைப் பற்றி, உடன் வந்தவர்களைப் பற்றி, சூழலியலைக் குறித்து, எழுத்தாளர்களைப் பற்றி என்று தன் பயணக் கதைக்கு வலு சேர்க்கும் சம்பவங்களைச் சுவாரஸ்யமாகக் கோத்து எழுதியிருக்கும் பாங்கு வாசகரை வியப்பில் ஆழ்த்தும். இப்படியெல்லாம் பயணிக்க முடியுமா இப்படியெல்லாம் வாழ முடியுமா என்று ஏங்கச் செய்துவிடும் ஆற்றல் எஸ்ராவிடம் உண்டு. காடு, மலை, கடல், ஆறு, நிலம் என்று அவர் பல இடங்களுக்கு அலுக்காமல் சளைக்காமல் வாசகரைக் கையைப் பிடித்து மென் நடையில் அழைத்துச் செல்கிறார். இங்கு நான் பார்த்த காட்சி – அதோ அந்தப் பறவையின் உடலிலிருந்து உதிரும் ஓர் ஒற்றைச் சிறகு – அரியாசனமாகக் காட்சி தரும் மேகக் கூட்டம் நொடி நேரத்தில் அரக்கனாக உருமாறிக் கலைந்து செல்லும் வானில் – கவிக் குவியல்களாகச் சிந்தனைகளை உருவாக்கக் கூடியவை அவரின் பயணங்களின் சாரம்.

வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை ஒரு மனிதர் எவ்விதம் கற்றுக்கொள்ள முடியும்? வாழ்ந்து பார்த்துத்தானே? போலவே பயணம் எப்படி இருக்கும் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை அவரவர் பயணம் செய்து பார்த்துத்தான் அறிந்துகொள்ள முடியும். காடு அடர்த்தியானது என்ற சொல்லின் அடர்த்தியை விளங்கிக்கொள்ள முடியும். அதே சமயத்தில் காட்டின் வழி சென்று அந்த மரங்களின் பச்சைமையை உணர்ந்த பொழுதுதான் நம்மால் காட்டின் உண்மையான அடர்த்தி என்னவென்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அவ்வகையில் விளக்கினால் ஆயிரம் விளக்குகளை ஏற்ற முடியும் என்பதனைப் போல ஒரு பயணியால் ஆயிரமாயிரம் கதைகளை விளக்க முடியும். அதே நோக்குடன் தேடல் உள்ளவர்களுக்கு அது ஒளிவிளக்காக வெளிச்சம் காட்டும். எஸ்ராவின் பயண நூல்கள் வாசகருக்குள் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சும் என்பது உண்மை. நீங்கள் இந்தியாவின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் புறப்பட்டுச் செல்லுங்கள். உங்கள் கைகளில் தேசாந்திரி அல்லது இலக்கற்ற பயணி இருந்தால் போதும் – வழித்துணையாக உங்களுடன் சில நூறு பேர்கள் இருந்தது போல் இருக்கும். அந்தக் குரல்களின் மாய வசீகரத்துடன் உங்கள் பயணம் இன்னொரு வழித்தடத்தை உங்களுக்கு உருவாக்கித் தரும்.

உலகம் என்பது சிறு கூடுதான். மனம் இருப்பவர்களுக்கும் கால்களில் வலுவும் கண்களில் தேடலும் உள்ளவர்களுக்கு. ஜீவனுடனும் உயிர்ப்புடன் வாழத் தெரிந்தவர்கள் முதலில் செய்யத் துணிவது வீட்டை விட்டுச் சிறிது தூரமாவது பயணப்படுவதுதான்.

சுற்றுலா குடும்பத்துடன் செல்லலாம். ஆனால் தனக்கான அகத்தேடலை ஒருவர் துவங்க வேண்டுமெனில் தனியாக அதிக திட்டங்கள் இல்லாத பயணங்களே சிறந்தது. உங்களை ஞானியாக மாற்றாமல் போனாலும் குறைந்தபட்சம் நல்ல மனிதராகவாவது பயணங்கள் உங்களை உருமாற்றும் என்பதில் எள் அளவும் மாற்றுக் கருத்தில்லை.


மேலும் படிக்க

ராம் தங்கம்

ராம் தங்கம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். தினகரன், விகடன் போன்ற பத்திரிகைகளில் பணிபுரிந்தவர். தற்போது முழுநேர எழுத்தாளராக, இலக்கியத்திலும், பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார். திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பின் மூலம் கவனம் பெற்ற இவர் காந்திராமன், ஊர்சுற்றிப் பறவை, மீனவ வீரனுக்கு ஒரு கோவில் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். பொன்னீலன்-80 புத்தகத்தின் தொகுப்பாசிரியர். நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்திற்காக சூரியனை எட்ட ஏழு படிகள் என்கிற சிறுவர் புத்தகத்தை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார். அமேசான் கிண்டிலில் இவரது கடவுளின் தேசத்தில் பயணக் கட்டுரைத் தொகுப்பு வெளியாகியுள்ளது.

இவரது திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பு சுஜாதா விருது, அசோகமித்திரன் விருது, படைப்பு இலக்கிய விருது, வடசென்னை தமிழ்ச்சங்கம் இலக்கிய விருது, சௌமா இலக்கிய விருது, அன்றில் வளர் தமிழ் சிறுகதையாளர் விருது உட்பட ஆறு விருதுகளைப் பெற்றுள்ளது. அந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'வெளிச்சம்' சிறுகதை நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி தமிழ்த்துறையில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய ராஜவனம் குறுநாவல் சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்ட குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது.

Share
Published by
ராம் தங்கம்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

1 year ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

1 year ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

1 year ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

1 year ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

1 year ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

1 year ago