கதை

என்றூழ்

35 நிமிட வாசிப்பு

மேசையின் மீது வேகமாய்ச் சுற்றிவிடப்பட்ட நாணயம் பக்கவாட்டில் சரிந்து கீழே விழுமுன் யாருக்கும் தோல்வியின்றிப் பூவும்தலையும் இருபக்கம் தெரிய ஒரு கணப்பொழுது செங்குத்தாக நிற்கும் காட்சியைத்தான், பிரம்மாண்டமாய்ப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்தக் கண்ணாடிக் கட்டிடம். மாபெரும் நாணயத்தின் வடிவிலிருக்கும் அந்தக் கட்டிடத்தையும் எதிரே தெரியும் சாலைவிளக்கையும் நடைபாதையின் விளிம்பில் நின்று மாறிமாறிப் பார்த்தபடி இருந்தார் ஆபிராம். சிலந்திவலையெனப் பின்னிப் பிணைந்திருக்கும் சிந்தனையோட்டம் இன்னும் இயல்புக்குத் திரும்பவில்லை. சமீப நிகழ்வுகளின் அதிர்வலைகளால் உறைந்துபோன மனதின் ஆழத்தில் மீண்டும் அதே கேள்வி?

“சாரா ஏன் அப்படிக் கேட்டாள்? எப்படிக் கேட்க முடிந்தது?”

பாதசாரிகளுக்கான சாலைவிளக்கு பச்சைக்கு மாறவும் ஓட்டமும் நடையுமாய்ச் சாலையைக் கடந்தார்.

இன்றும் முக்கியச் சாலையில் வாகனப் போக்குவரத்து குறைவுதான். இப்போதெல்லாம் ஏர் டாக்சியைத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். பயணக்காசு கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் அதில்தான் நேரம் மிச்சம். செலவழிக்க பணம் இருக்குமளவு யாரிடம் நேரம் இருக்கிறது?

நாணய வடிவக் கண்ணாடிக் கட்டிடத்தின் வாசலில் நின்று அண்ணாந்து பார்த்தார். வட்ட விளிம்புகளில் பட்டுத் தெறிக்கும் சூரியஒளியில் கண் கூசியது.

கீழ்தளத்துக் கூடத்தில் அடர்நீலப் பின்னணியில் சிறுசிறு ஒளித்துகள்களான முப்பரிமாண டிஜிட்டல் உருவம் அன்றைய செய்தித் துணுக்குகளை வாசித்துக்கொண்டிருந்தது.

இரண்டு ஆண்டுகள் முன் இதே நாளில் தோல்வியடைந்த ‘SOL-X’ திட்டத்தின் சிதலமடைந்த விண்கலப் பாகங்களை அரசு இன்று அருங்காட்சியகத்தில் முறையே இணைத்திருக்கும் முக்கியச் செய்தியை விளக்கிக் கொண்டிருந்தது. மெல்லிய மென்சிரிப்போடு அச்செய்தியை விவரிக்கும் ஒளிக்கீற்று உதடுகளைப் பார்க்கப் பார்க்க ஆபிராமுக்கு எரிச்சல் மேலிட்டது.

பழுதடைந்த அதிநவீன இயந்திரவியல் கருவிகள், சூரிய வெப்பத்தைத் தாங்கும் heat shield, advanced cooling system என அருங்காட்சியகத்தின் கண்ணாடிப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ‘SOL-X’- ன் உடைந்து சிதறிய பாகங்களின் புகைப்படங்கள் திரையில் ஓடின. சூரிய மேற்பரப்பில் விண்கலத்தைத் தரையிறக்கும் மானிடக் கனவின் தொடர்த் தோல்விகளை அது பட்டியலிட்டுக் கொண்டிருந்தபோது முகச்சுளிப்போடு ஆபிராம் மின்தூக்கிகளை நோக்கி நடந்தார்.

முப்பத்தைந்தாவது தளத்தில் இருக்கும் தன் அலுவலகத்தை அடைந்ததும் வாசலில் தட்டையான கரும்பலகை போலிருக்கும் கறுப்புப் பெட்டியின் முன்னால் சென்று நின்றார். ஓர் ஆணின் பாதி உயரமிருக்கும் அந்த மின்னணு சாதனம் பளிரென்று ஒளிபெற்று முகத்தை ஸ்கேன் செய்தது…

“குட் மார்னிங்க் மிஸ்டர் ஆபிராம்! இன்றைய பொழுது இனிதாக அமையட்டும். உங்களது அலுவலக வருகைநேரம் காலை ஒன்பதுமணி ஐந்து நிமிடங்கள்.”

கொழுத்த கன்னங்கள் புடைத்தபடி உதடு விரியச் சிரிக்கும் ஆபிராமின் டிஜிட்டல் உருவம் கறுப்புப்பெட்டியின் மின்திரையில் இருந்து வெளியே துருத்தி எட்டிப்பார்த்தது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பொறியாளர் ஆபிராம் என்ற டிஜிட்டல் அலுவலக அடையாள அட்டையில், கோட்டும் டையுமாக இருக்கும் தன் போட்டோவை அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருக்கும் ஆபிராமுக்கு இன்று அதில் பெரிதாய் நாட்டமேதுமில்லை.

“உங்கள் உடல் வெப்பம் இயல்பாக உள்ளது. ரெட்டினா வழியாக உடல் இயக்கம் சீராக இருப்பதை அறிகிறேன். எனக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கியமைக்கு நன்றி.”

கறுப்புப்பெட்டி இனிமையான பெண்குரலில் பேசி முடித்தவுடன் அவரது முப்பரிமாண டிஜிட்டல் உருவம் சிறுசிறு துகள்களாக வெடித்துச் சிதறி மீண்டும் வெறும் கரும்பலகையாய் மாறிக் கொண்டது.

மேசைகள் இல்லாத அலுவலகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அகலமான இருக்கைகள் தனித்தனிக் குடில்களாய்ச் சிதறியிருக்கின்றன. இரண்டு மீட்டிங் ரூம்களைத் தவிர மற்ற இருக்கைகளில் யாரும் எங்கும் அமர்ந்து பணிபுரியலாம்.

சதுரவடிவக் கண்ணாடிச் சுவரின் பக்கவாட்டில் போடப்பட்டிருக்கும் கறுப்பு இருக்கையில் ஆபிராம் அமர்ந்தார். மழைநாட்களின் ஈசல்களைப் போல் சீரற்ற ரீதியில் அங்கும் இங்குமாக ஏர் டாக்சிகள் வெளிர் வானில் பறந்து கொண்டிருந்தன. திறந்த வானின் பளீர் வெளிச்சம் மனதுக்குச் சற்று ஆசுவாசத்தைத் தந்தது.

எதிரே அடுக்கடுக்காய் முளைத்து நிற்கும் உயரமான கட்டிடங்களின் சிறு சிறு இடைவெளியினூடே தயக்கத்தோடு மஞ்சள் ஒளிப்பாம்பாய் உள் நுழையும் கதிரொளி, வளைந்தும் ஊர்ந்தும் படமெடுத்துச் சீறியும் சிலசமயங்கள் வான் போக்குவரத்துக்கு அஞ்சித் தலை தாழ்த்தியும் இறுதியில் ஒரு பழுப்பு நாய்க்குட்டியாய் உருமாறித் தார்ச்சாலையில் உருண்டு புரள்வதை மௌனமாய்ப் பார்த்தபடி இருந்தார்.

சட்டென துணுக்குற்றுச் சட்டைப்பையில் மடித்து வைத்திருக்கும் கைபேசியை எடுத்துப் பார்த்தார். குறுஞ்செய்திகளும் மின்னஞ்சல்களும் நினைவூட்டல்களும் கைபேசியின் திரையிலிருந்து மின்குமிழிகளாய் மேலே எழுந்தன.

கைபேசியின் Safe Screen பொத்தானைத் தட்டிவிட்டு மிதந்து கொண்டிருக்கும் மின்குமிழிகளை ஒவ்வொன்றாய் உடைத்து உள்ளிருக்கும் செய்தியை ஆர்வமாய்ப் பார்த்தார். ஒன்றுகூட சாராவிடமிருந்து இல்லை! ஆத்திரத்தோடு அத்தனை மின்குமிழிகளையும் மீண்டும் கைபேசியின் செயலிக்குள் தள்ளிவிடவும் நொடிப்பொழுதில் அவை கரைந்துபோயின.

நேற்று இரவு சாராவுடன் எழுந்த வாக்குவாதத்தால் இன்று காலை உணவு எடுக்காமல் கிளம்பி வந்தது பசித்தது. தன் உடல் எடைக்கு ஏற்ற கலோரிச் சத்து மாத்திரைகள் இரண்டை விழுங்கிக் கொண்டார்.

“குட் மார்னிங் மிஸ்டர் ஆபிராம்…”

“குட் மார்னிங் மிஸ் லின்டா” என்றபடி வெற்றுச் சிரிப்போடு கைகொடுத்துக் கொண்டார். ரப்பர் சிலிக்கான் தோலின் மென்மையான தொடுகை உணர்வு.

தன் மினி ஸ்கர்ட்டின் சுருக்கங்களைச் சரிசெய்தபடி இருக்கையில் அமர்ந்த லின்டா ஆபிராமை சிலநொடி உற்றுப் பார்த்தாள்.

“முகம் ரொம்ப சோர்வாக உள்ளதே! இரவு சரியான தூக்கமில்லையோ?”

“ம்ம்ம்…”

“ஆபிஸ் வேலை நெருக்கடியா…?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை லின்டா…”

“வேறெதுவும் பெர்சனல் ப்ராப்ளமா…? நீங்கள் விரும்பினால் ஒரே டிபார்ட்மெண்ட்டில் வேலை பார்க்கும் சகப்பொறியாளர் என்ற முறையில் என்னிடம் பகிரலாம்… மனிதர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கத்தானே எங்களின் செயற்கை நுண்ணறிவு… என்னால் முடிந்தவரை உதவ முயல்வேன். பயப்பட வேண்டாம்… உங்களது அனைத்து தகவல்களும் அரசின் தனிநபர் தகவல் காப்புரிமைச் சட்டத்தின்படிப் பாதுகாப்பாய் இருக்கும்…”

“தாங்க்ஸ் லின்டா! அப்படி எதுவுமில்லை. தூக்கம் சரியில்லை அவ்வளவுதான்..”

“எனக்குத் தெரியும். மனிதர்கள் எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் எல்லாரிடமும் பகிர்வதில்லை….”

கால்மேல் கால் போட்டு இருக்கையின் உள்ளே புதைந்து அமர்ந்தபடி கண்சிமிட்டிச் சிரித்தாள். அளவெடுத்துத் தைத்த சிலநிமிடச் சிரிப்பு. நீண்டு சுருங்கிய உதட்டின் இருபக்கமும் சிந்தெடிக் கோடுகள் வந்து மறைந்தன.

ரோபோக்களிடம் பொய் சொல்வது முடியாத காரியம். பொய்கூடத் தொலைதூர வார்த்தைதான். உண்மையை மறைப்பதும் இயலாத ஒன்று. மனிதனுக்கும் இயந்திரத்துக்குமான முதல்முரண்கூட இந்தப் புள்ளியில்தான் தொடங்குகிறது. பதிலேதும் சொல்லாமல் ஆபிராம் லின்டாவிடமிருந்து பார்வையை விலக்கிக்கொண்டார். பேச்சு எரிபொருளற்றுப் பாதியிலேயே நின்றுபோனது.

நான்கு ப்ரோப்பலர்கள் கொண்ட மஞ்சள்நிற ஏர் டாக்ஸி ஒன்று கட்டிடத்தின் மிக அருகாமையில் பறந்து போனது. அலுவலக வேலை தொடர்பான ஆலோசனை என்றால்கூட சக ரோபோக்களிடம் கேட்டுவிடலாம். தனிப்பட்ட விஷயத்தை… அதுவும் சாராவைப் பற்றி… விவாதிப்பதில் இருக்கும் சிக்கலை ஆபிராம் அறியாமல் இல்லை.

புதிர் போடும் சாராவின் கண்கள் நினைவு வரவும் மீண்டும் தயக்கத்தோடு ஃபோன் செய்தார்… அழைப்புமணி அனாதையாய்க் கத்தி ஓயந்தது.

காலையிலேயே கவனித்திருந்தார். மொத்த பாட்டரி அளவும் பச்சையில் மிளிர தன்னை முழுதும் சார்ஜ் செய்திருந்தாள். நிச்சயம் அவளது முகத்தெதிரே உரிமையாளரின் அழைப்பு வந்து மறைந்திருக்கும். அப்புறம் ஏன் அழைப்பை ஏற்கவில்லை?

சாரா நேற்று சொன்ன விசயத்தைப் பற்றி இணையதளத்தில் தேடிப் பார்க்கலாம் என்று ஆபிராமுக்குத் தோன்றிய அதே நொடியில் அந்த எண்ணத்தைக் கைவிட்டார். தன் இணையதளத் தேடல்களின் விவரங்கள் அத்தனையும் சாராவுக்கும் போய்ச்சேரும் என்பது இந்த நிலையிலும் தனக்கு நினைவிருந்ததில் அவருக்கே ஆச்சரியம்.

சாரா சொன்னது எப்படிச் சாத்தியம்…? ஒருவேளை நம்ப முடியாததை நிகழ்த்திக்காட்டும் அறிவியல் நாளை ‘இதுவும் சாத்தியம்…’ என்று சொல்லிவிட்டால்…?

நண்பர் ஜோஹனின் நினைவு வந்தது. அவர் வழக்கமாக அமரும் இடத்தைத் தன் இருக்கையில் அமர்ந்தவாறே எட்டிப் பார்த்தார். இன்றும் ஜோஹன் வரவில்லை. சலிப்பு மேலிட ஆபிராம் கொஞ்சம் சப்தமாகவே உச்சுக்கொட்டவும், எல்லா ரோபோக்களும் ஒரே ரீதியில் தலையைத் தூக்கிப் பார்த்தன.

அலுவலகச் சுற்றுப் பயணத்தில் இருந்த ஜோஹன் நேற்றே திரும்பியிருக்க வேண்டும். அவரைத் தவிர்த்து அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற மூவரிடம் ஆபிராமுக்கு அத்தனை பரிச்சயம் இல்லை. இந்த மூவரை விட்டால் ஏனையவை எல்லாம் லின்டாவைப் போல் மனித உருவும் பன்மடங்கு ஆற்றலும் கொண்ட மனித ரோபோக்கள்தான்.

ஜோஹனிடமாவது முன்கூட்டியே சாராவைப் பற்றிச் சொல்லியிருக்கலாம். திடீரென்று பேசினால் இருவருக்குமே நெருடல்தான். ஆனால் வேறு வழியில்லை. இந்த அலைக்கழிப்பில் இருந்து விடுபட யாரோ ஒருவரிடமாவது எல்லா விஷயங்களையும் ஒளிவுமறைவின்றி விவாதித்துதான் ஆகவேண்டும். ரோபோக்கள் விஷயத்தில் ஜோஹனின் கணிப்பும் உள்ளுணர்வும் பெரும்பாலும் பொய்ப்பதில்லை.

ஜோஹனுக்கு ஃபோன் செய்தார். கைபேசியிலிருந்து மேலெழுந்த ஜோஹனின் டிஜிட்டல் உருவம், “மார்னிங் மிஸ்டர் ஆபிராம். நேற்று இரவுதான் திரும்பினேன். இன்று மத்தியத்துக்கு மேல் ஆபிஸ் வந்துவிடுவேன். ஏதாவது முக்கியமான விஷயமா?”

“ஆமாம் கொஞ்சம் பேச வேண்டும்…”

“சரி கட்டாயம்! இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவேன்.. பொறுமையாகப் பேசுவோம்…”

“ஓகே!! பை….”

அணைந்து அணைந்து பிரகாசித்த ஜோஹனின் உருவம் மறைந்து போயிற்று.

“சாரி ஆபிராம், உங்களை மீண்டும் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டும். உங்களின் சில நிமிடங்கள் தேவை…”

முகத்தில் விழும் முடிக்கற்றைகளை ஒதுக்கிக்கொண்டு வெள்ளைச் சட்டைக்கு மேல் அணிந்திருக்கும் கறுப்புக்கோட்டைத் தன் ரப்பர் சிலிக்கான் உள்ளங்கையால் சரி செய்தபடி ஆபிராமின் பதிலுக்காக லின்டா காத்திருக்கவும், “ம்ம் கட்டாயம்…” என்று ஆபிராமும் தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டார்.

“அண்டார்டிகாவின் பனிக்கட்டிகளைப் பாலைவனத் தேசங்களுக்குக் கடல் மார்க்கமாகக் கொண்டுவரும் செயல்திட்டத்தில் நம் நிறுவனம் பரிந்துரைக்கும் சில தொழில்நுட்ப மேம்பாடுகளைப் பற்றி இதில் விளக்கியுள்ளேன்…” என்ற லின்டா எதிரே விரிந்த மின்திரையில் தான் தயாரித்த காணொளியை இயக்கினாள்.

ஆபிராமை நோக்கிக் கைகளை மேலும்கீழும் அசைத்து லின்டா பேசியபோது உள்ளே பொறுத்தப்பட்டிருக்கும் டிசி மோட்டார் இயங்கும் சத்தம் மெலிதாகக் கேட்டது.

“லின்டா! ப்ரசன்டேஷன் சிறப்பாக வந்துள்ளது. ஆனால்…”

“மாற்றுக்கருத்து இருந்தால் தாராளமாகச் சொல்லுங்கள்”

“இயற்கைக்குப் புறம்பான இதைப்போன்ற முயற்சிகள் எந்த அளவுக்குச் சாத்தியம்?”

“ஏன் நாங்கள் சாத்தியப்படவில்லையா?”

ஆபிராம் ஒரு நிமிடம் திகைத்து லின்டாவை உற்றுப் பார்த்தார். எதிர்பார்த்ததைப்போல் அவளது முகவோட்டத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை.

“சாரி லின்டா! நான் சொல்வதை என்றைக்குமே உன்னால் உணர முடியாது… சில விஷயங்களை இயற்கையின் போக்கில் அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது.”

“ஒருவேளை நானும் உங்களைப்போல் உள்ளுணர்வுபடி யோசிக்கப் பழக்கப்பட்டிருந்தால் எனக்கும் இப்படித் தோன்றியிருக்குமோ என்னவோ! ஆனால் இயற்கைக்கு முரணாகவே இருந்தாலும் இந்தத் திட்டங்களால்தான் மனித இனத்தின் இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்…”

லின்டா போன்ற ஏழாவது தலைமுறை ரோபோக்களால் எப்போதுமே அகத்தில் முழுமனிதனாகி விடமுடியாது. மனிதனைப் போல் உள்ளுணர்வோ அவதானிப்போ அவைகளுக்கு என்றுமே சுயமாக இருந்ததில்லை.

ஆபிராமைப் பொறுத்தவரை சாராவுக்கு முந்தைய தலைமுறை ரோபோக்கள் எல்லாம் மனிதனின் செல்ல இயந்திரங்கள் மட்டுமே. என்னதான் தனக்கான உத்தரவுகளை அவை அதிவேகத்தில் நுட்பமாகச் செய்து முடித்தாலும் அடிப்படையில் மனிதனைப் போன்ற கலையுணர்வோ, புதுப் புது சிந்தனையோட்டமோ, தன் கற்பனைகளை உயிர்ப்பாக்குவதோ இயந்திரத்தால் என்றுமே முடியாதென்றே நம்பினார்.

முதலாம் இரண்டாம் தலைமுறை ரோபோக்கள் முதன்முதலில் சந்தையில் அறிமுகமான புதிதில் இருந்தே ஆபிராமுக்கு இதே நிலைப்பாடுதான். குறிப்பிட்ட தொழிற்சாலைப் பணிகளுக்கு மட்டுமே அவை ப்ரோக்ராம் செய்யப்பட்டவை. அவற்றின் வலுவான புறத்தோற்றமோ நுட்பமான செயலாற்றலோ வியக்கவைக்கும் வேகமோ எதுவும் அவரைக் கவர்ந்ததில்லை.

“கிளிப்பிள்ளைகள்…” என்று கிண்டல் செய்வார்.

ஒளியின் சரிபாதி வேகத்தில் சிந்திக்கும் நான்காவது ஐந்தாவது தலைமுறை ரோபோக்கள் வந்த பின்னரும் அவரது இந்த எண்ணப்போக்கில் பெரிய மாற்றமேதும் இல்லை. ஆனால் லின்டா போன்ற ஆறாவது ஏழாவது தலைமுறை ரோபோக்களால் மனிதனைப் போல் தனித்துச் சிந்திக்கவும் செயல்படவும் முடியும்.

தன்னோடு அலுவலகத்தில் பணிபுரியும் அத்தகைய அதிநவீன மனித ரோபோக்களின் செயல்நேர்த்தியைப் பார்த்துப் பல நேரங்களில் ஆபிராமும் ஆச்சரியப்பட்டிருக்கிறார். இருந்தாலும் அதன் உள்ளுணர்வற்ற சிந்தனைப்போக்கு ஒரு விதத்தில் சலிப்பைத் தந்தது. அவை என்றுமே சகமனிதனோடு மெய்யான உறவை இணக்கமாக்கிக்கொள்ள முயன்றதில்லை… தன்னை இவ்வுலகின் ஓர் அங்கமாக உணர்ந்ததில்லை…

ஆனால் சமீபத்திய வரவான சாரா போன்ற எட்டாவது தலைமுறை ரோபோக்களுக்கு அது சாத்தியப்பட்டிருந்தது.

“வாழ்த்துக்கள்! ஒரு தனித்துவமான ரோபோவைத்தான் தேர்வு செய்திருக்கிறீர்கள்…” சாராவை வாங்கிய அன்று விற்பனையாளர் சொன்னது பல நேரங்களில் சரி எனத்தான் தோன்றியது.

விரிந்த மஞ்சள் மலரின் இதழ்நுனியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் கடைசிச் சொட்டு மழைத்துளியைக் காட்டி “எத்தனை அருமையான காட்சி” என்று சாரா சொன்ன அன்றும் அப்படித்தான்.

அந்த நொடிவரை கண் எதிரே அப்படி ஒரு காட்சி நடந்தேறும் பிரக்ஞை இல்லாமலிருந்த ஆபிராம் சிரித்தபடியே, “இதில் என்ன இருக்கிறது? நாள்தோறும் நிகழும் இயல்பான காட்சிதானே. சொல்லப்போனால் எனக்கு அப்பூவின் பெயர் கூட தெரியாது.”

“‘டேய்சிஸ்’ என்ற அந்தப் பூவைப் பற்றி அத்தனை தகவல்களும் எனக்குத் தெரிந்திருந்தும் என்ன பயன்? அந்தச் சிறு பூவைப் போலவோ மனிதர்களைப் போலவோ எனக்கென்று ஒரு வாசம் கிடையாது இல்லையா…”

ஓர் இயந்திரத்திடமிருந்து இந்தப் பதிலை ஆபிராம் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. அவளால் ஒரு பூவின் அழகை எப்படி உள்ளப்பூர்வமாய் ரசிக்க முடிகிறது? எது அவளைத் தன் இயலாமை மீது கழிவிரக்கம் கொள்ளச் செய்கிறது?

சாராவின் கண்களை உற்றுப் பார்த்தார். இயந்திரக் கண்களில் என்ன தெரிந்துவிடும்…?

***

நினைவுகளின் இடிபாடுகளில் சிக்கி மூளை பழுதடைந்திருந்தது. நுரைபொங்கும் சூடான காப்பி கையில் சிந்திவிட, “ஓஓ…” என ஆபிராம் விரல்களை உதறிக்கொள்ளவும், சக ஊழிய ஆண்ரோபோ ஒன்று தன் குச்சிக்கால்களை வேகமாய் எடுத்துவைத்து ஓடி வந்தது. துரிதமாய் இயங்கிய அதன் ‘Pneumatic Actuator’கள் வெளியே சப்தமாக ஒலித்தன.

“உங்களுக்கு என்ன எங்களைப் போல உலோக உடம்பா? சூடும் குளிரும் உரைக்காமல் இருக்க….” தன் அதிநவீன காமெரா கருவிழியை உருட்டி ஆபிராமின் சிவந்த விரல்களை உற்றுப் பார்த்தது.

“ஒண்ணுமில்லை… சின்ன கவனக் குறைவு! அவ்வளவுதான்…” என்றுவிட்டு விரல்களை வாயின் உமிழ்நீரில் வைத்துச் சப்பியபடி இடதுகையில் மீதமிருக்கும் காப்பிக் கோப்பையோடு இருக்கையில் வந்து அமர்ந்த ஆபிராமின் கண்கள் கைபேசியை மேம்போக்காக மேயந்தன.

‘அறிவியல் வரலாற்றின் கறுப்பு நாள்’ என்ற செய்தித் துணுக்குகளும், ‘SOL-X’ Solar Lander பற்றிய தொழில்நுட்பத் தரவுகளும், இன்றுவரை காரணம் விளங்காத அதன் கடைசிநேரத் தோல்வியை ஆராயும் ஆய்வுக் கட்டுரைகளுமாகக் கைபேசி பரபரத்தது.

சூரியக் கோளின் அளப்பரிய ஆற்றலின் மூலத்தை அறிய முயலும் மானிட முயற்சியில் இன்னும் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதையும் நினைத்துப் பார்க்க முடியாத பணவிரயத்தையும் தவிர ‘SOL-X’ Mission வேறெதுவும் செய்துவிடவில்லை. அந்த ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்ட எயிட்த் ஜெனரேஷன் ரோபோக்களை மீண்டும் மறுஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரையை வாசித்து முடித்ததும் சிறிதளவு சமாதானத்தையேனும் இறைஞ்சிய ஆபிராமின் கண்கள் மேலும் ஏமாற்றம் அடைந்தன.

“என்ன சர்க்கரை இல்லாத காப்பியா…?”

பின்னால் புன்சிரிப்போடு நிற்கும் ஜோஹனைப் பார்த்ததும் சற்று ஆசுவாசமாக உணர்ந்தவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ஆமாம் வேறென்ன செய்ய! சர்க்கரை இல்லாத காப்பி பழகிவிட்டது…”

மதியம் கடந்திருந்ததால் வெளியே ஏர் டாக்சி போக்குவரத்து குறைந்திருந்தது. காலைவேளை சாலையில் விழுந்து புரண்டுகொண்டிருந்த மஞ்சள் நாய்க்குட்டியையும் காணும்.

“சூரியனை இப்படி வெறிக்குமளவு என்ன யோசனை…?”

“ஏதேதோ மனசுக்குள் ஓடுது. எதிலும் தெளிவில்லை! எல்லாம் சாராவால்தான்…”

“சாராவா…? யார் அது?”

“அதைப் பற்றிப் பேசத்தான் காலையிலிருந்து உங்களைத் தேடுகிறேன்.”

“சரி வா…”

இருவரும் தடித்தத் திரைச்சீலைகள் இடப்பட்டிருக்கும் மீட்டிங் ரூமில் சென்று அமர்ந்தனர். தன் மேல்கோட்டைக் கழற்றி இருக்கையின் பின்பக்கம் மடிப்பு கலையாமல் விரித்து வைத்த ஜோஹன், “இப்போ சொல்… சாராவா…? எனக்குச் சொல்லாமலேயே ரெண்டாவது திருமணம் முடித்துவிட்டாயா…?”

“நீங்க வேற… அதெல்லாம் இல்லை. ‘சாரா’ நான் சில மாதங்களுக்கு முன்பு வாங்கிய எயிட்த் ஜெனரேஷன் ஹுமனாய்ட் ரோபோ… உங்களிடம் அப்போதே சொல்லியிருக்க வேண்டும். ஏதோ தயக்கத்தில் சொல்லாமல் விட்டுவிட்டேன்…”

“ஏன் எயிட்த் ஜெனரேஷன் ரோபோ…? அதன் விலை ரொம்பவே அதிகமாச்சே. அதற்குப் பதிலாக குறைந்த விலையில் முந்தைய ஜெனரேஷன் ரோபோவையாவது வாங்கியிருக்கலாம்.”

“வாங்கியிருக்கலாம்தான்… ஆனால் உங்களுக்கே தெரியும் அவையெல்லாம் வரையறுக்கப்பட்ட கட்டத்துக்குள் மட்டும் இயங்குபவை. ஆனால் இந்த எயிட்த் ஜெனரேஷன் ரோபோக்கள் அப்படியல்ல…

புறவழிச்சாலையில் இருக்கும் ‘ரோபோட்னிக்’ நிறுவனத்திற்கு அடுத்துள்ள ட்ராஃபிக் சிக்னலில் காத்திருக்கும் நேரம், சாலையின் குறுக்கே சில விநாடிகள் தோன்றி மறையும் மின்திரையில்தான் எயிட்த் ஜெனரேஷன் ரோபோக்கான விளம்பரத்தை முதன்முதலில் பார்த்தேன்…

கடற்கரை மணல்திட்டில் விளையாடும் சிறுமி, பிரிவுக்கு வருந்திக் கட்டியணைத்துத் தழுவும் தம்பதியினர், தனியாய் விடப்பட்டு அழும் குழந்தை, நட்சத்திரங்கள் நிறைந்த வானம், ஆளரவமற்ற குகையின் நடுவில் விழும் சூரிய ஒளி என ஒவ்வொன்றாய்க் காட்டிவிட்டு, இவை எல்லாவற்றையும் தூரத்தில் ஒரு மனித ரோபோ உற்று நோக்குவதோடு விளம்பரம் முடியும். பின் அதைத் தொடர்ந்து ‘எட்டாவது தலைமுறை ரோபோ மனித இனத்தின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி….’ என்று ஒரு பெண் சொல்லி மறைவாள்.

என் இத்தனை வருடத் தேடலுக்கும் காத்திருப்புக்குமான பதில் இந்தப் புதுவகை ரோபோவாக இருக்கலாம் எனத் தோன்றியது.

என் அன்றாடத் தேவைகளுக்காகவும் வீட்டின் பராமரிப்புக்காகவும் சில வருடங்கள் முன்பு மூன்றாம் ஜெனரேஷன் ரோபோ ஒன்று வைத்திருந்தேன். உறுதியான ஹைட்ராலிக் ஆக்சுவேட்டர்கள் கொண்டு இயங்கக் கூடியது. முழு விட்டத்துக்கும் அதனால் கைகளைச் சுழற்றவும் வளைக்கவும் முடியும். வாங்கிய புதிதில் கொடுத்த வேலையை வேகமாய்ச் செய்து முடிக்கும் அதன் இயந்திரத்தன்மை எனக்குப் பிடிக்கத்தான் செய்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அதே இயந்தித்தன்மையே எனக்கு எரிச்சலைத் தந்தது. வாங்கிய கொஞ்ச நாட்களிலேயே விற்றுவிட்டேன். அதற்குப் பிறகு எந்த ரோபோ மீதும் எனக்கு நாட்டம் இருந்ததில்லை.

ஆனால் இந்த எயிட்த் ஜெனரேஷன் ரோபோக்களை இராணுவ அதிகாரிகள், மேல்தட்டு அரசு நிர்வாகிகள் இல்லை நம்மைப் போல் R&D நிறுவனங்களில் உயர்பதவி வகிப்பவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்று அரசு விதித்திருந்த கட்டுப்பாடு என் ஆர்வத்தைத் தூண்டிது. ஆனால் அப்போதுகூட நான் அதை வாங்கும் மனநிலைக்கு வரவில்லை.

பொதுவாக ரோபோ விற்பனை மையத்தில், கண்ணாடிப் பெட்டகத்தின் உள்ளே விளம்பர மாதிரிக்காகச் சாலையைப் பார்த்து ரோபோக்களைப் பார்வைக்கு வைத்திருப்பதைப் போல், எயிட்த் ஜெனரேஷன் ரோபோக்களை மட்டும் எங்கும் நான் பார்க்கவில்லை. அதன் தொழில்நுட்ப அம்சங்களையும் மற்ற விவரங்களையும் இணையத்தில் தேடிப் படித்துத் தெரிந்து கொண்டேன். உங்களுக்கு ‘SOL-X’ Mission ஞாபகம் இருக்கா?”

“அதெப்படி மறக்க முடியும்? இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெற்றியின் விளிம்பிலிருந்து தோல்வியடைந்த project தானே. இன்றுகூட எங்குத் திரும்பினாலும் அதைப் பற்றித்தான் பேச்சு.”

“ஆமாம்! அதில் ‘பனுக்’ நிறுவனத்தின் எயிட்த் ஜெனரேஷன் ரோபோவைத்தான் பயன்படுத்தி இருந்தார்கள்…

சூரிய ஆற்றலின் மையக்கருவை எப்படியாவது கண்டடைந்துவிடும் முனைப்பில் அரசும் சலிக்காமல் Solar Lander யை ஐந்தாண்டுக்கு ஒரு முறையாவது அனுப்புகிறது. ஆனால் சூரியன் என்பது எத்தனை பெரிய ஆற்றல். அதன் ஒளி ஊற்றின் காரணப் புள்ளியை ஆராய்வது என்றால் சாதாரண விஷயமா?

சூரியனின் வெளிப்புற வெப்பக் கதிரையும் அடர்த்தியான Electromagnetic Field- யும் Solar Wind-யும் கடந்து உள் வட்டத்துக்குள் நுழைந்ததுமே ஒவ்வொரு முறையும் ஏதோவொரு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விண்கலம் பழுதடைந்து விடுகிறது. ஆனால் கடைசியாக அனுப்பிய ‘SOL-X’ ன் மீது எல்லாரையும் போலவே எனக்கும் அதிக நம்பிக்கை இருந்தது. கிட்டத்தட்ட ஒளியின் வேகம்… சூரிய வெப்பத்தை இருமடங்கு தாங்கக் கூடிய Heat Shield, Advanced Instruments… எடையும் மிகக்குறைவு. இந்தமுறை அதை இயக்குவது அதிநவீன எயிட்த் ஜெனரேஷன் ரோபோ வேறு…

இதற்குமுன் அனுப்பிய எந்தவொரு விண்கலமும் ‘SOL-X’-யைப் போல் சூரியனின் உட்பரப்பிற்கு அத்தனை நெருக்கத்தில் சென்றதில்லை. இன்னும் சில மைல் தூரம்தான் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ஏனோ தன் பாதையை விட்டு விலகிவிட்டது. கடற்கரை வெண் மணல்திட்டில் பாறைக் குவியலைப் போல் உடைந்து சிதறி இருந்த ‘SOL-X’ விண்கல பாகங்களைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது என்னாலும் நம்ப முடியவில்லை…”

“ஒரேயொரு சூரியன் மட்டுமே இருப்பதால் இதுதான் பிரச்சனை… பத்து சூரியன்களும் இப்போது இருந்திருந்தால் ஏதோ ஒன்றிலாவது விண்கலத்தைத் தரையிறக்கி இருக்கலாம்!”

ஜோஹன் கண்களில் தெரிந்த கள்ளப்புன்னகையைப் பார்த்து ஆபிராம் ஆச்சரியத்தோடு கேட்டார் “பத்து சூரியன்களா??”

“ஆமாம்! அப்போது மொத்தம் பத்து சூரியன்கள்.. வெவ்வேறு உருவளவில்… வெவ்வேறு நிறங்களில்… பிரத்யேக ஒளிப்பிரவாகம். ஆனால் அவை ஒரே சமயத்தில் வானில் தோன்ற கூடாது என்பது இறைவனின் கட்டளை. ஆனால் படைத்தவனின் ஆணையை மீறி ஒருசமயம் அவை நேர்க்கோட்டில் ஒன்றாய்த் தோன்றின. இறைவன் எச்சரித்தும் விலகவில்லை.

தன் கட்டளையை மதிக்காத அத்தனை சூரியன்களையும் கொன்று வீழ்த்தும்படி கடவுள் பூலோகச் சக்கரவர்த்தியின் மகளுக்கு உத்தரவிட்டார். இளவரசி கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவள். தேர்ந்த வில் வித்தைக்காரி. கன்னித்தன்மையைத் தவமாய்க் கடைபிடிப்பவள். அதன் பலனால் ‘உன் கன்னித்தன்மையை இழக்காமலேயே எண்ணில் அடங்கா குழந்தைகளைப் பெற்றெடுப்பாய்…’ என வரம் வாய்க்கப் பெற்றவள்.

இளவரசியும் பத்து சூரியன்களிடமும் தனித்தனியாய் மன்றாடிப் பார்த்தாள். அப்படியும் அவை கேட்க மறுக்கவும் மிக அருகில் பறந்து சென்று இறைவனின் கட்டளையின்படி ஒவ்வொரு சூரியனாகப் பாணம் விட்டு வீழ்த்தினாள், நடுவில் இருக்கும் ஒரேயொரு சூரியனைத் தவிர. அதுதான் இருப்பதிலேயே அதி பிரம்மாண்டமானது. இப்போது நாம் பார்ப்பது இளவரசி வீழ்த்தாத அந்தச் சூரியனைத்தான்!” என்றுவிட்டு உரக்கச் சிரித்த ஜோஹன், “சாரி பேச்சு வேறெங்கோ போய்விட்டது… சரி சொல்! நீ எயிட்த் ஜெனரேஷன் ரோபோவை வாங்க எப்போது முடிவெடுத்தாய்…?”

அறையின் ஏசி அளவைக் குறைத்த ஆபிராம், “SOL-X- Mission இன் எதிர்பாரா தோல்வியை விட அதன் காரணம் விளங்காத மர்மம்தான் அனைவரையும் இன்றுவரை அலைக்கழிக்கிறது.

விண்கலத்தில் எந்தத் திடீர் கோளாறும் பதிவாகவில்லை என்றதும் அதை இயக்கிய ரோபோவின் செயல்திறன் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. மறு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் பலனில்லை. இருந்தும் SOL-X தோல்விக்கும் இவ்வளவு பண நட்டத்திற்கும் அந்த ரோபோவும் அதை உருவாக்கிய பனுக் நிறுவனமும்தான் காரணம் என்ற சிந்தனைப்போக்கும் வெறுப்பும் பொதுவெளியில் மிகத்தீவிரமாகப் பரவவும், பனுக் நிறுவனத்தின் எயிட்த் ஜெனரேஷன் ரோபோக்களின் விற்பனையைத் தற்காலிகமாக அரசு தடை செய்தது.

ஆனால் அந்த ரோபோவின் தவறான இயக்கம்தான் SOL-X ன் தோல்விக்குக் காரணம் என்று தொழில்நுட்ப ரீதியாக நிரூபிக்க முடியாமல் போனதால் வேறு வழியின்றி பனுக் நிறுவன ரோபோக்களை மீண்டும் பொது விற்பனைக்குச் சமீபத்தில் அரசு அனுமதித்தது.

‘SOL-X’ Mission யில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தப்பட்ட தன் நிறுவன ரோபோக்களை அரசிடம் முறையாக அனுமதி பெற்றுக் கையகப்படுத்திய பனுக் நிறுவனம் அவற்றைச் சீரமைத்து மீண்டும் சந்தைக்குக் கொண்டு வந்திருந்தது. அதுவும் மிகக்குறைந்த எண்ணிக்கையில்…

இந்தப் புள்ளியில்தான் நான் பனுக் நிறுவனத்தின் எயிட்த் ஜெனரேஷன் ரோபோவை வாங்குவது என முடிவெடுத்தேன்.

பங்குச்சந்தையில் பல வருடங்கள் முன்பு ஒரு ஆட்டோமேஷன் கம்பெனியில் முதலீடு செய்திருந்த பணத்தையும் கொஞ்சம் கையிருப்பையும் சேர்த்து என் தேவைக்கான பணத்தைப் புரட்டினேன்.

‘ரோபோட்னிக்’ நிறுவனத்தில் நுழைந்த அன்று கடந்த சில மாதங்களைப் போலவே பகல் நீண்டிருந்தது. அங்கும் வழக்கம்போல் மேலாளரைத் தவிர மற்ற இரண்டுமே மனித ரோபோக்கள்தான்.

என் ரெட்டினாவை ஸ்கேன் செய்து என் அடையாள எண்ணை விருந்தினர் பதிவேட்டில் ஏற்றிக்கொண்ட பெண்ரோபோ ஒருவித வறட்சியான புன்னகையுடன் வரவேற்றது.

“குட் மார்னிங் மிஸ்டர் ஆபிராம்…”

“குட் மார்னிங்”

“உங்களது சமீபகால இணையத் தேடல்களை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் எயிட்த் ஜெனரேஷன் ரோபோவை அதிலும் குறிப்பாக ‘பனுக்’ நிறுவன ரோபோவை வாங்க விரும்புவதாகத் தெரிகிறது. அதன் சிறப்பு அம்சங்களை இன்று காலையில்கூட எங்கள் வெப்சைட்டில் வாசித்திருக்கிறீர்கள். அதனால் அவற்றின் தொழில்நுட்பத் தகவல்களை உங்களுக்கு இப்போது விளக்க வேண்டி இருக்காது என நம்புகிறேன்.”

என்னுடைய சமீபத்திய இணையத் தேடல்களைப் பற்றி அந்த ரோபோ விரிவாக அறிந்திருந்ததில் எனக்கு ஆச்சரியம் ஒன்றும் இருக்கவில்லை. உடலை மறைப்பதைப் போல் நம் தகவல்களையும் மறைத்து வாழ முடிந்திருந்தால்… என்ற எண்ணமே பேராசைதானே.

நான் வெறுமனே “ஆமாம் எயிட்த் ஜெனரேஷன் ரோபோ வாங்கும் உத்தேசம்தான்.” என்றேன்

“மிக்க மகிழ்ச்சி. ‘பனுக்’ நிறுவன ரோபோக்களின் முதன்மை டீலர் நாங்கள்தான் என்றபடியால் மொத்தம் இரண்டாண்டு உத்திரவாதம் போக மேலும் ஓர் ஆண்டு இலவச சேவையும் கூடுதலாகத் தருவோம். சொல்லுங்கள், எப்போது வாங்கலாம்…”

என் மனவோட்டம் கொஞ்சமும் கரைபுரள இடம் கொடுக்காத மிகக்கச்சிதமான வியாபாரப் பேச்சு! ஆனால் ஒரு ரோபோ உரையாடலை எவ்வளவு நேர்த்தியாகக் கொண்டுபோனாலும் மனிதன் இயல்பிலே ஒரு குரங்குதானே…

அதுவரை எனக்கு ஒதுக்கப்படும் ரோபோவை மட்டும் சோதித்துப் பார்த்து வாங்கினால் போதும் என்று நினைத்திருந்த நான் அந்த நொடியில் ஒரு குரங்குத்தாவல் தாவினேன்.

“இங்குள்ள எயிட்த் ஜெனரேஷன் ரோபோக்களை ஒவ்வொன்றாய்ச் சோதித்துப் பார்த்து எனக்குப் பிடித்த ஒன்றை நானே தேர்வு செய்ய விரும்புகிறேன்…”

இருக்கையில் ஒருபக்கமாக உடலை வளைத்து அமர்ந்திருந்த ஜோஹன் சட்டென துள்ளி அமர்ந்து கேட்டார்.

“எதற்கு இப்படி ஒவ்வொன்றாகச் சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும்? ஒரே நிறுவன ரோபோக்களின் புரிதலும் செயல்திறனும் வெளியுலகின் புழக்கத்திற்கு அவை வரும்வரை ஒரேபோல்தானே இருக்கும். எல்லாத்துக்கும் ஒரே அல்காரிதம்தானே…”

“வரிசையாகப் போகும் எறும்புக்கூட்டத்தை உற்றுப் பார்த்திருக்கிறீர்களா? ஒன்றின் பல நகல்களாகத் தெரியும். எல்லா எறும்புகளுக்கும் ஒரே தேடல்தான் எனத் தோன்றும். ஆனால் ஒவ்வொன்றும் அதனதன் அளவில் தனித்துவமானவை. நிச்சயம் ஒரே நிறுவன ரோபோக்களுக்கும் குறிப்பிட்ட தனித்துவம் இருக்கும் என்று நம்பினேன். இருக்க வேண்டும் என்பது என் ஆசை. குறிப்பாக எயிட்த் ஜெனரேஷன் ரோபோக்களில்… என் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை…

என் முடிவைக் கேட்டு உங்களைப் போலவே அந்த ரோபோவுக்கும் ஆச்சரியம். பேசித் தேர்வுசெய்யும் முறையைப் பற்றி நான் இணையத்தில் எதுவும் தேடவில்லையே என்ற குழப்பம். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பாகப் பேசியது….

“முன்கூட்டியே ஒவ்வொன்றாகச் சோதித்துப் பார்த்து வாங்கும் வழக்கம் பொதுவாக எங்கள் நிறுவனத்தில் இல்லை. இங்குத் தயாரிப்பு எண்களின் வரிசையில்தான் ரோபோக்கள் விற்கப்படும். முன்பணம் செலுத்தி உங்கள் குடியுரிமை எண்ணில் ரோபோ ஒதுக்கப்பட்டவுடன் அதை இலவசமாகச் சோதித்துப் பார்த்து வாங்கிக்கொள்ளலாம்…”

ஆனால் நான் அதற்குச் சம்மதிக்காததால், “நீங்கள் அழுத்தமாகக் கேட்பதால் ஏற்பாடு செய்கிறேன். ஆனால் தனியாக இதற்கு இரண்டு சதவீதம் சேவைவரி விதிக்கப்படும்” என்றது.

ஒரே நேரத்தில் இரண்டு ஆட்கள் மட்டுமே அந்த அறைக்குள் நடந்துபோக முடியும். இடதுபக்கம் வரிசையாக ரோபோக்கள் பார்வைக்கு இருந்தன. மொத்தம் பத்து, பன்னிரண்டு இருக்கும்.

எல்லாமுமே பனுக் நிறுவனத்தின் தனித்தோற்றத்தில்… உதிரி உதிரியாய் வெள்ளைக் கேசத்தோடு பிங்க்நிற மேல்சட்டையும் கறுப்புநிற ஸ்கர்ட்டும் அணிந்தபடி… பாரப்பதற்கு ஒரே மாதிரியாக…

எனக்குப் பிரத்யேகமான ஒரு ஹெட்செட்டை கொடுத்து அணியச் சொன்னார்கள். என்னுடனான ஒவ்வொரு ரோபோக்களின் தனிப்பட்ட உரையாடலைச் சிதறவிடாமல் கேட்பதற்கு…

பளீரென்று மின்னும் அறையின் கறுப்பு வெள்ளைத் தரைக்கு ஏற்பவே மின்விளக்கு வெளிச்சமும் இருந்தது. ஒவ்வொரு ரோபோவாக நான் உரையாடிக் கடக்கும் போதும், அதன் குறிப்பிட்ட மின்விளக்கு மட்டும் எரிந்து அந்த இடம் மட்டும் வெள்ளைச் சதுரமாகப் பிரகாசிப்பதும் அதைத் தவிர்த்த மற்ற இடங்கள் கறுப்புப் புகைவண்டிபோல் நீண்டு தெரிவதும் ஒருவித வித்தியாசமான சூழலை உருவாக்கியது. ஒரு நேரத்தில் ஒரு ரோபோ மட்டுமே என்னோடு உரையாட மற்றவை தன் முறைக்காகக் காத்திருந்தன.

‘வணக்கம் மிஸ்டர் ஆபிராம், இன்றைய பொழுது இனிமையாய் அமையட்டும். ‘பனுக்’ நிறுவன ரோபோக்களின் சார்பாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. மனிதனின் அடுத்தகட்ட அறிவியல் தேடலுக்கு உங்களை வரவேற்கிறோம்.’

இதேபோன்ற பொதுவான உரையாடல்களைத்தான் முதலில் அவைகளிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால் அது தவறு என்று அடுத்த சில விநாடிகளிலேயே புரிந்தது.

வேலைக்காக ஒரு நிறுவனத்தின் இன்டர்வியூவுக்குச் செல்கிறோம். அங்கு நம்மைப் போலவே பலர் வேலை தேடி வந்திருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் நாம் என்ன செய்வோமோ அதையேதான் அந்த ரோபோக்களும் செய்தன. ஒன்றைவிட மற்றொன்று தன்னை மேலானதாகக் காட்டிக்கொள்ள முயற்சித்தது. ஒன்றுக்கொன்று போட்டிப்போட்டுத் தன்னை மனிதச்சந்தையில் விற்க முயன்றன. இந்த மனப்போக்கை முந்தையத் தலைமுறை ரோபோக்களிடம் எதிர்பார்க்க முடியாது.

ஒவ்வொன்றும் என் கவனத்தை ஈர்க்க, தன்னை வாங்கும்பட்சத்தில் எந்த விதத்தில் எனக்கு லாபகரமாக இருப்பேன்… என தன்னை விற்க முயற்சித்துக் கொண்டிருந்த வேளையில்தான் அது நடந்தது…

நான் அந்த ரோபோவைக் கடந்து போகையில் நீண்ட நெடிய மௌனம் மட்டுமே. ஒருவேளை பேட்டரி குறைவோ என்று எண்ணி உற்றுப் பார்த்தேன். போதிய சார்ஜ் இருப்பதாகக் காட்டும் பச்சை எல்.ஈ.டி எரிந்து கொண்டிருந்தது.

ஆனால் எதுவும் பேசவில்லை. நானும் நகரவில்லை. மௌனப் பெருவெளியில் இருவரும் மிதந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. சில சந்தர்ப்பங்களில் வார்த்தைகளின் எடையை விட மௌனம் பாரமானது.

இதேபோன்ற அமைதியான ஒரு சூழலில்தான் நானும் என் மனைவியும் வீட்டு முற்றத்தில் வட்ட மேசையில் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். இருபது வருடங்களுக்கு மேலிருக்கும். நாற்காலியின் நிறத்தையொத்த வெள்ளைநிறக் காப்பிக் கோப்பைகள் எங்கள் கைகளில். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. எங்கள் பார்வைபடும் தொலைவில் வளர்ப்பு நாயோடு மகன் இஸ்மவேல் விளையாடிக் கொண்டிருந்தான்.

அந்த நாட்களின் பல பொழுதுகள் அப்படித்தான் கழிந்தன. திருமணத்திற்குப் பின் அடிக்கடி வெடித்த சிறுசிறு சண்டைகளின் விஸ்வரூப மௌனத்தில்தான் ஒரே வீட்டில் இருவரும் இருவேறு அறைகளில் மிகுந்த நாட்களைக் கழித்தோம்.

நிறம் மாறிக் கொண்டிருக்கும் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி அவள் தன் முகத்தில் விழும் கேசத்தைச் சரிசெய்து கொண்டிருந்தாள். நான் தொலைவில் தெரிந்த ஓக் மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். முடிவற்ற நீண்ட மௌனத்தை உடைத்தபடி தன் காலியான பீங்கான் காப்பிக் கோப்பையை மேசையில் வைத்துவிட்டுப் பாதி நிரப்பப்பட்ட வெள்ளைக் காகிதத்தை நீட்டினாள்.

அவள் ஏதும் சொல்லவில்லை. ஆனால் செய்ய வேண்டியது என்ன என்பதை நான் கையொப்பம் இடவேண்டிய காலியிடம் சொல்லியது. மேற்புறம் கறுப்பும் கீழ்புறம் வெள்ளிநிறத்தில் மினுங்கும் பேனா ஒன்றை மேசையில் வைத்துவிட்டு என்னைப் பார்த்தாள்.

விவாகரத்துப் பத்திரத்தைக் கையிலெடுத்து உற்றுப் பார்த்தேன். அதேநேரம் தூரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் மகனின் மேல் எங்கள் இருவரின் பார்வையும் ஒருசேர விழுந்ததை நாங்கள் உணர்ந்தோம். அடுத்த சில நொடிகளில் நான் கையெழுத்திட்டேன்.

இத்தனை வருடங்ளுக்குப் பின் மீண்டும் அதே போன்றதொரு மௌனத்தைதான் அந்தப் பெண்ரோபோ நினைவுபடுத்தியது. நிலைகுத்தி நிற்கும் என் கண்களை உற்று நோக்கி, “உங்கள் கண்களில் தெரியும் தீராத தனிமையையும் வெறுமையையும் என்னால் முடிந்தவரை விலக்க முயல்வேன்…” என்றது.

அவ்வளவுதான், வரிசையில் அடுத்திருக்கும் ரோபோக்களை நோக்கி நான் அடியெடுத்து வைக்கவில்லை. அது தேவையுமில்லை என முடிவெடுத்து அந்த ரோபோவையே வாங்குவதாக மேலாளரிடம் சொன்னேன்.

“வாழ்த்துகள்! ஒரு தனித்துவமான ரோபோவைத்தான் தேர்வு செய்திருக்கிறீர்கள்… நீங்கள் வாங்கப் போவது ‘SOL-X’ விண்கலத்தில் சூரியனுக்கு மிக அருகாமையில் பறந்த ரோபோவை! மறு ஆய்வு செய்து சீரமைத்துள்ளோம்…”

அந்த நொடியில் மகிழ்ச்சியும் ஆர்வமும் வெற்றியும் கலந்த பெருமிதத்தோடு ஒரு சிறுவனைப் போல் கைதட்டிக் குதித்தேன். என் குடியுரிமை எண்ணோடு அந்த ரோபோவின் உற்பத்தி எண்ணை இணைக்க உடனே முன்பணமும் செலுத்தினேன்.”

“அந்த ராசியில்லாத ரோபாவா?”

ஜோஹன் ஆர்வமிகுதியில் மிகச்சத்தமாக அப்படிக் கேட்டதும் சுனங்கிப் போன ஆபிராமின் முகப்போக்கைப் பார்த்து சற்றுச் சுதாரித்துக்கொண்டு, “அறிவியலுக்கும் ராசிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைதான்… ஆனால் வெளியுலகின் பார்வையில் அப்படித் தெரியும்தானே…” என்றுவிட்டு சுயசமாதானத்தோடு ஆபிராமின் கண்களைப் பார்த்தார்.

“அந்தக் கவலை வேண்டாம். இதைப் பற்றிய தகவல்கள் பாதுகாக்கப்படும் என்று அந்தக் கணமே உறுதி அளித்திருந்தார்கள்…

நான் வாங்கவிருக்கும் ரோபோவின் காப்புரிமைப் பத்திரத்திலும் உரிமைப் பத்திரத்திலும் கையெழுத்திட அன்று எனக்கு அவர்கள் நீட்டிய பேனா கூட மேற்பாதி கறுப்பு நிறத்திலும் கீழ்ப்பாதி வெள்ளி நிறத்திலும்தான் இருந்தது…”

“உங்கள் ரோபோவுக்கு ஏதேனும் பிரத்யேக உருவம் தேவையா? இல்லை பனுக் நிறுவனத்தின் பொதுவான முகத்தோற்றம் போதுமா? என்று மேலாளர் கேட்டதும் என் டிஜிட்டல் சேமிப்பில் இருக்கும் கடந்தகாலப் புகைப்படங்களை அலசினேன். சட்டென என் முதல் காதலியின் வட்டமுகம் நினைவு வந்தது. எந்தத் தருணத்திலும் அவள் சிரித்தபடியேதான் இருப்பாள். ஏதோ விளையாட்டாகச் சேர்ந்து விளையாட்டாகவே பிரிந்தும்விட்டோம். அந்த வயது அப்படி…

கல்லூரி நாட்களில் அவளோடு கொரிய உணவகம் ஒன்றில் எடுத்திருந்த மனதுக்கு நெருக்கமான புகைப்படம் ஒன்றைத் தேடி எடுத்தேன். அவளுக்கு ரொம்பவும் பிடித்த ‘ஜாப்ச்சே’ நூடுல்ஸை நீண்ட குச்சிகளில் எடுத்து இருவரும் ஒன்றாகச் சாப்பிடும் புகைப்படம் அது. அந்த உணவைப் பரிமாறிய ரோபோவும் அப்புகைப்படத்தில் இருக்கும்.

‘எல்’ வடிவத்தில் நீண்ட இரு கைகள் மட்டுமே அதற்கு உண்டு. நான்கு சக்கரங்கள் கொண்ட பெட்டியில் அதன் மேற்பகுதி பொருத்தப்பட்டிருந்தது. அதன் இரு உலோகக் கைகளில் எங்களுக்கான ‘ஜாப்ச்சே’ நூடுல்ஸ் கப்பை நீட்டியபடி அந்தப் புகைப்படத்தில் இருக்கும்.

என் காதலி கறுப்புநிற டி-ஷர்ட்டும் சாம்பல்நிற ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். இருவரும் தோளில் கை போட்டபடி புகைப்படம் எடுத்திருந்தோம்.

நினைவுகளைப் பற்றியபடிதானே எல்லோரும் நிஜத்தில் வாழ்கிறோம். அந்தப் புகைப்படத்தில் இருக்கும் என் கல்லூரிக் காதலியைக் காட்டி அவளையே உருவமாதிரியாக வைத்துக் கொள்ளும்படிச் சொன்னேன். வேடிக்கையே, ஐம்பது வயதிலும் எனக்குள் ஓர் இளைஞனின் ஆசை இருந்ததுதான்…”

“இதில் என்ன இருக்கிறது? எல்லோருக்கும் இப்படித் தோன்றுவது இயல்புதானே. உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் எந்தக் காதலியின் புகைப்படத்தைக் கொடுப்பது என்றுதான் குழம்பியிருப்பேன்…” என்ற ஜோஹன் மேசையில் ஓங்கித் தட்டிச் சிரித்தார். பின் நினைவு வந்தவராய் அறையின் திரைச் சீலைகளை விலக்கிப் பார்த்தார்.

சார்ஜிங் கூடுகளில் மேலிருந்து தொங்கும் தடிமனான மின்காப்பிடப்பட்ட மின்சாரக் கம்பியை தன் இடுப்புப்பகுதியில் சொருகியபடிச் சிறிதும் பரபரப்பு குன்றாமல் வேலை பார்க்கும் ஆண் ரோபோக்களின் கழுத்துப் பின்புறம் பொட்டு போன்ற சிகப்பு எல்.ஈ.டி பளிச்சிட்டது. பெரும்பாலான பெண் ரோபோக்கள் தோள்பட்டை வரை அழகிய நீண்ட சிகை வைத்திருந்ததால் உற்றுப் பார்த்தபோது மட்டுமே சீரான முடிக்கற்றைகளின் இடைவெளியில் அதன் எல்.ஈ.டி வெளிச்சம் கவனிக்க மறந்த மருவாய்த் தெரிந்தது.

திரைச் சீலைகளை மீண்டும் இழுத்துவிட்டு ஜோஹன் சமிக்ஞை செய்யவும், ஆபிராம் தொடர்ந்தார்…

“சாராவைக் கூட்டிவர ரோபோட்னிக் நிறுவனத்துக்கு இரண்டு நாட்கள் கழித்து மாலைநேரம் சென்றிருந்தேன். வருடக்கணக்காய் நினைவுகளில் புதையுண்டிருந்த உருவம் நேரில் நின்றால் எப்படி இருக்கும்…? முதன்முதலில் அவளைப் பார்த்த நொடியை என்னால் எளிதில் கடக்க முடியவில்லை.

அவளின் புறத்தோற்றமும் ஆடை நேர்த்தியும் அப்படி. அச்சு அசலாய் ஒரு பெண்ணைப் போல். மற்ற ரோபோக்களைப் போலில்லாமல், உலோக உடல் அமைப்போ சிலிக்கான் தோலோ உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் மின்னணு சாதனங்களோ கொஞ்சமும் வெளியே துருத்தலாய்த் தெரியாது. பேச்சிலும் அங்க அசைவிலும் முகவோட்டத்திலும் இயந்திரத்தனத்தின் சிறு சுவடும் இல்லை.

இனம்புரியாத உணர்வில் நின்றுகொண்டிருக்கும் என்னிடம் “சாரா…” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

‘பனுக்’ நிறுவனத்தின் எயிட்த் ஜெனரேஷன் ரோபோக்களைக் கட்டமைத்த, உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவின் ஒரே பெண்மணியான சாராவின் பெயரையேதான் விரும்பி வைத்துள்ளதாகச் சொன்னாள்.

என் வீட்டின் எல்லா அறைகளையும் அவளுக்குச் சுற்றிக் காட்டினேன். ஆனால் அதில் பெரிதாய் அவள் ஆர்வம் காட்டவில்லை.

எங்கள் குடியிருப்பின் சொற்ப மக்களுக்காகவே அருகாமையில் பூங்கா ஒன்றிருந்தது. எங்கள் நகரத்தின் மாசுக்குறைந்த சுற்றுப்புறச்சூழலினால் அங்கு எப்போதும் சிலர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

“பூங்காவிற்குப் போகலாம்…” என்றேன்

பூங்காவின் திறந்த வானத்தையும், லேசாய் அசையும் இளஞ்சிவப்பு மரஇலைகளையும், கனத்த மௌனத்தில் ஆழ்ந்திருக்கும் பலவித மனிதர்களையும், கூட்டாகவும் தனியாகவும் நடக்கும் பலஜோடி கால்களையும், காற்றுக்கு ஏங்கும் வியர்வைப் பூத்த மேலாடைகளையும், உரிமையாளரின் கட்டளைக்காகக் காத்திருக்கும் தன்னைவிடத் தொழில்நுட்பத்தில் பிந்தைய ரோபோக்களையும் கல்பெஞ்சில் என்னருகில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்தாள். நானும் அன்றுதான் பூங்காவிற்கு முதல்முறை வந்தவன் மாதிரி எல்லாவற்றையும் அவளோடு பார்வையிட்டேன்.

அடுத்தநாள் காலையும் என்னுடன் பூங்காவிற்கு வந்தாள். என்னோடு கூடவே நடைபயிற்சியும் செய்தாள்… பின் அதுவே வழக்கமாகிப் போனது…”

“ரோபோவுக்கு எதற்கு நடைப்பயிற்சி!!” ஜோஹன் புருவங்கள் உயர்த்திக் கேட்டார்.

“நானும் இதே கேள்வியை அவளிடம் கேட்டேன். அதற்கு அவள் சொன்ன பதில்தான் சாராவைப் பற்றி எனக்கிருந்த அடிப்படை எண்ணத்தை மாற்றியது.”

“காய்ந்த இலைச் சருகுகளில் அழுத்தமாய்க் கால்பதித்து நடக்கும் உணர்வு பிடித்திருக்கிறது” என்றாள்.

“என்ன….???”

“உங்களைப் போல் எனக்கும் ஆச்சரியம்தான்… நிச்சயம் ஒரு ரோபோவிடம் இந்தப் பதிலை நான் எதிர்பார்க்கவில்லை.”

அந்நேரம் பக்கத்தில் அமர்ந்திருந்த முதியவர் எங்களை இடைமறித்து “ரோபோ உணர்ந்துகொள்வதால் மட்டும் என்ன ஆகிவிடும்? என்ன இருந்தாலும் உங்களின் ஆயுட்காலம் உங்களைவிட மேலான அடுத்த கண்டுபிடிப்பு வரும்வரைதான். நாளைக்கே உன்னைவிடத் தொழில்நுட்பத்தில் மேலான அடுத்தகட்ட ரோபோ வந்துவிட்டால் இவரே உன்னை விற்றுவிட்டு அதை வாங்கிக்கொள்வார். நீங்கள் எல்லாம் மனித ஆறறிவு ஆணவத்தின் சிறுநொடிச் சிரிப்புதான்…” என்றுவிட்டு தன் வட்டத்தொப்பியைச் சரிசெய்துகொண்டு எழுந்து போனார்.

அவரையே சில நொடிகள் கவனித்தபடி இருந்தேன். வழியில் பார்க்கும் ஒவ்வொரு மனித ரோபோக்களிடமும் இதைப்போன்ற ஏதோவொன்றைச் சொல்லிக்கொண்டே போனார்.”

“நிச்சயம் அவர் அப்படிப் பேசியது சாராவை ரொம்பவே பாதித்திருக்கும்…”

“ஆமாம் ஜோஹன், உண்மைதான். ஆனால் நான் எதிர்பார்த்ததைப் போல் சாரா அப்போது கோபப்படவோ வருத்தப்படவோ இல்லை. அவள் சலனமற்று நிதானமாக இருந்ததில் எனக்கே ஆச்சரியம்தான். ஆனால் இந்த நிகழ்வை அத்தனை எளிதில் அவள் கடந்துபோகவில்லை என்பதை பின்னால் வேறொரு சந்தர்ப்பத்தில்தான் தெரிந்துகொண்டேன்…”

***

அன்று செயற்கை மழைக்கான மேகவிதைப்புத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு முன்னரே அறிவித்திருந்தது. காலையிலிருந்தே சாராவும் பலமுறை நினைவூட்டியிருந்தாள். இருந்தும் மழையில் நனைந்திருந்தேன். அதைப் பெரிதாய்ப் பொருட்படுத்தும் நிதானத்தில் நான் அன்று இல்லை. மன உளைச்சலில் நிறையவே மது அருந்தியிருந்தேன்.

அன்று என் மகனின் கல்லூரிப் பட்டமளிப்பு விழா. ஒரு தந்தை என்ற முறையில்கூட இதைப்பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. விவாகரத்துக்குப் பின்னான பல சம்பவங்கள் இப்படித்தான். சமூக ஊடகத்தில் முன்பின் பழக்கமில்லாத சிலரின் பதிவுகள் மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன். முறிந்துகொண்டே போகும் எனக்கும் மகனுக்குமான உறவு முற்றிலும் உடைந்துவிட்டதாகத் தோன்றியது. இனம்புரியாத கோபம் ஆற்றாமையாய்ப் பொங்கி வழியவும் பலநாட்களுக்குப் பின் குடித்திருந்தேன்.

அகமும் புறமும் ஈரம் சொட்ட சொட்ட தள்ளாடியபடி வீட்டுக்கு வந்தபோது, சாரா ஹாலில் அமர்ந்திருந்தாள். என் தலைமுடியை உலரவைக்க ஹேர் ட்ரையரை அவள் எடுக்கச் சென்றபோது, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மேலும் ஒரு பீரை எடுத்து அருந்தத் தொடங்கினேன்.

சாராவிடம் எந்தவொரு முகச்சுளிப்பும் இல்லை. எனக்கான உணவை மேசையில் பரப்பி வைத்தபடி என் தவிப்புக்கான காரணத்தைக் கேட்டுத்தெரிந்து கொண்டாள். எல்லாம் அதனதன் போக்கில் இயல்பாக நடந்தன.

“மனிதன் ஒரு விசித்திர சமூகப்பிராணி. குழுவாய் இருக்கும்போது தனிமையை விரும்புவான். தனித்து விடப்பட்டதும் துணைக்காக ஏங்குவான். இதேபோன்ற நேரங்களில்தான் மனிதனாய் இருப்பதைவிட ரோபோவாய் இருப்பது மிக உன்னதமாகத் தோன்றுகிறது…”

போதை மிகுதியிலும் அன்றைய மனஉளைச்சலிலும் அப்படிப் பேசினேன்… என் கண்களில் கண்ணீர் முட்டியிருந்தது.

“நல்லவேளை நீங்கள் ஒரு ரோபோ இல்லை என்று சந்தோஷப்படுங்கள் இல்லையென்றால் இந்த வழவழப்பான கண்ணீர் என்ற அற்புத வரத்தையும் இழந்திருப்பீர்கள்…” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய இன்ஃப்ராரெட் கண்களின் வழியே செதில்செதிலான சிகப்புத் திரையை என்முன் உருவாக்கினாள்.

அவளது டிஜிட்டல் சேமிப்பிலிருந்து என் வாழ்வின் முந்தைய மகிழ்ச்சியான தருணங்களின் புகைப்படங்களையும் காணொளிகளையும் அலையலையாய் என்முன் ஓடச் செய்தாள். நானும் என் மனைவியும் சிறுவயது மகனும் ஒன்றாய் மகிழ்ந்திருந்த நாட்கள் அவை… என் கைகளைப் பிடித்தபடி மகன் இஸ்மவேல் நடை பழகிய நாட்களில் தொடங்கி அன்றைய அவனது பட்டமளிப்பு விழா புகைப்படங்கள் வரை மாறிமாறி காட்டினாள். விதவிதமாய் ஒலியெழுப்பும் பலவண்ண விளையாட்டுப் பொம்மைகளை அசையாமல் வேடிக்கை பார்க்கும் ஒரு குழந்தையின் மனநிலைக்கு நான் வந்திருந்தேன்.

நான் காலத்தின் கயிற்றில் நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் இடையே ஊஞ்சலாடிக் கொண்டிருந்தேன். என் மகனின் சிறுவயது முகத்தோடு என் குழந்தைb பருவத்துப் புகைப்படத்தையும் ஒப்பிட்டுக்காட்டி நகல் அடித்தது மாதிரி இருக்கிறது என்றாள்.

“அப்பாவைப் போல்தான் பையன் இருப்பான்..” என்றேன்.

“ஒரு ரோபோ தன்னைப் போலவே இன்னொரு ரோபோவை உருவாக்குவது மாதிரியா…” என்று சொல்லிச் சிரித்தாள். அந்நேரத்தில் என் மனசோர்வு அகன்று வெறும் சிரிப்பு மட்டுமே நீடித்தது.

எனக்குப் பிடித்த ஜான் லெனனின் ‘ஸ்டார்டிங் ஓவர்…’ பாடலை பின்னிசையாய் இசைக்கச் செய்தாள். ஒரு கையில் காலி மதுக்குப்பியுடன் இன்னொரு கையில் சாராவின் இயந்திரக் கையைப் பிடித்தபடி நனைந்திருந்த என் மேலாடையின் ஈரம் சொட்ட சொட்ட நடனமாடினேன்.

கடைசியாய் என் கால்கள் எந்த நிர்பந்தமுமின்றி அத்தனை சந்தோஷமாக ஆடியது எப்போது என்று நினைவில் இல்லை. பல வருடங்களின் தனிமை மிதிபட இரவு முழுவதும் இஷ்டம்போல் நடனமாடினோம். இந்த மகிழ்ச்சியான தருணம் அவளால்தான் வாய்த்தது என்று தோன்றிய நொடியில் பின்னிசையில் ஓடும் ஜான் லெனனின் வரிகளைவிடச் சப்தமாகச் சொன்னேன்…

“உன்னைப் பிரத்யேகமாய்த் தேர்வுசெய்து வாங்கிய என் முடிவை நினைத்துப் பெருமைப்படுகிறேன்…”

“ஆனால் என்னையும் பின்னாட்களில் விற்றுவிடுவீர்கள்தானே…?”

அந்நேரத்தில் நான் வேறென்ன பதில் சொல்லியிருக்க முடியும். இல்லை என்றேன்.

“ச்ச்ச்…..” முன்பக்கப் பற்களைக் கடித்தபடி ஜோஹன் தலையை இடதும்வலதும் அசைத்துவிட்டு “அப்படியானால் அன்று பூங்காவில் முகம் தெரியாதவர் சொன்ன வார்த்தைகளை அவள் மறக்கவில்லை…”

“ஆமாம், இத்தனை நாட்கள் தனக்குள் மறைத்தே வைத்திருந்தாள்…

என் பதிலைக் கேட்டதும் ஒன்றோடொன்று ஒட்டியிருந்த என் ஈரம் காயாத முடிக்கற்றைகளின் நடுவே அவளது விரல்கள் மெல்ல அலைபாய்ந்தன. என் நனைந்த உதடுகளில் மென்முத்தமிட்டாள். வழவழப்பற்ற அவளது உதடுகள் அத்தனை எளிதில் விலகவில்லை. போக்கிடமற்ற படகைப் போல் அவளுள் மூழ்கிக் கிடந்த நொடியில் என் வலதுதோளில் தலைசாய்த்து என் காதுமடலில் மெல்ல கேட்டாள் “அப்படியென்றால் சட்டரீதியாக என்னை இயந்திரத்துணையாக்கிக்கொள்வீர்களா…?”

“என்னது????…” ஜோஹன் துள்ளிஎழுந்து உட்கார்ந்தார்.

“இதேபோல் சிலர் ரோபோவைத் திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வருவதாக எப்போதாவது செய்திகள் வந்த போதெல்லாம் நானும் கேலி செய்து சிரித்தவன்தான்… என்ன செய்ய… நானே அந்த முடிவை எடுக்கும்படி காலம் என்னை விரட்டி வந்திருக்கிறது. காலத்தின் சுழற்நாற்காலியில் இப்போது நான் அமர்ந்திருக்கிறேன்…”

அறையை விட்டு வெளியேறி ஆளுக்கொரு காப்பிக் கோப்பையுடன் திரும்பிய ஜோஹன் “இந்தா! முதலில் காப்பியைக் குடி….” என்று நீட்டவும், ஆபிராமின் சூடுபட்ட விரல்கள் இந்த முறை கோப்பையைக் கவனமாக வாங்கிக் கொண்டன.

அறையின் மௌனத்தை மென்றபடி காப்பிக் கோப்பைகள் காலியாகும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆபிராம் மெல்லத் தொடங்கினார்…

“காலச்சுழலில் தனித்து விடப்பட்ட எனக்கு மனதளவிலும் உடலளவிலும் ஒரு துணை தேவைப்பட்டது என்னவோ உண்மைதான்… ஆனால் நீங்கள் நினைப்பதைப் போல் நான் சாராவின் அருகாமையை என் உடல் தேவைக்கான ஊடுவழியாகப் பார்க்கவில்லை…”

உதட்டில் படிந்திருக்கும் காப்பி நுரைகளை டிஷ்யு பேப்பரால் அழுத்தமாய்த் துடைத்த ஜோஹன் அதை ஆமோதிப்பதைப் போல் தலையசைக்கவும் ஆபிராம் தொடர்ந்தார்…

“லிசாவின் முதல் குழந்தையின் பெயர் சூட்டுவிழா வரை எல்லாம் இயல்பாகத்தான் போய்க் கொண்டிருந்தது…

லிசாவின் கணவர் எலியேசரோடு நான் அதற்கு முன் பேசியதும்கூடக் கிடையாது. சொல்லப்போனால் அப்படி ஒரு தம்பதி எங்கள் தெருவில் வசிப்பதே என் நினைவில் இல்லை. அன்று மாலை ஏற்பாடு செய்திருந்த தன் முதல் குழந்தையின் பெயர் சூட்டு விழா கொண்டாட்டத்திற்கு அவர் என்னை அழைக்க வீட்டிற்கு வந்திருந்ததில் எனக்கே ஆச்சரியம்தான்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவருக்கு ஐம்பத்து ஐந்து வயது. அவரது மனைவி லிசாவுக்கும் கிட்டத்தட்ட ஐம்பது வயதாம். ஆனால் அதுதான் அவர்களின் முதல் குழந்தை. திருமணமாகி இருபத்து ஐந்து வருடங்களுக்கு மேல் குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறார்கள். எந்தவித மருத்துவச் சிகிச்சையும் பலன் தரவில்லை. செயற்கைக் கருத்தரித்தலிலோ வேறு குழந்தை தத்தெடுப்பதிலோ அவர்களுக்கு ஈடுபாடுமில்லை. ஏதாவது அற்புதம் நடக்கும் என்று லிசா நம்பிக்கையோடு இருந்திருக்கிறார்.

இனி தன் உடல் பிள்ளைப்பேறுக்கான சாத்தியக்கூறுகளை இழந்துவிட்டது என்று அண்டமுடியாத வெறுமைக்குள் லிசா தன்னை இழந்து கொண்டிருந்த நிலையில்தான் அதிசயம் நடந்திருக்கிறது. கிட்டத்தட்ட தன் ஐம்பதாவது வயதில் கருவுற்று ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தும் விட்டாள். ஆண் குழந்தை என்றும் ‘ஜோக்ஷன்’ எனப் பெயர் இடப்போவதாகவும் எலியேசர் சொன்னார்.

‘லிசா இப்போது எப்படி உணர்கிறார்? குழந்தை எடை என்ன? யார் ஜாடை?’ என்று இதேபோன்ற தருணங்களுக்கு நன்கு பரிச்சயமானவள் போல் மிக சகஜமாக எலியேசரிடம் சாரா வினவினாள்.

ஆனால் பெயர்சூட்டு விழா கொண்டாட்டத்திற்கு நான் வருவதற்கு முன்னதாக சாரா மட்டும் தனியாகப் போவாள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“தனியாகவா!! அது எப்படி முடியும்? சட்டரீதியாக ரோபோக்கள் அவர்களது உரிமையாளரின் அனுமதியின்றி வெளியே தனியாகப் போகக்கூடாதே. மீறினால் அதன் உரிமையாளருக்குத் தானே பிரச்சனை…” ஜோஹன் முஷ்டியை மேசையில் அழுத்தமாய் வைத்து ஆச்சரியமாகக் கேட்டார்.

“நீங்கள் சொல்வது சரிதான். நல்லவேளை அவள் அப்படிச் சென்ற நேரத்தில் வெளியாட்கள் யாரும் அங்கில்லை இல்லையென்றால் நீங்கள் சொன்ன மாதிரி பிரச்சனை பெருசாகியிருக்கும்.

நான் லிசாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். போலிசைக் கூப்பிடவோ ‘பனுக்’ நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கவோ இல்லை. இதில் எதைச் செய்திருந்தாலும் எனக்கு அபராதமோ இல்லை சிறைத்தண்டனையோ நிச்சயம்.

கைக்குழந்தையின் போக்கிற்கேற்ப இசைத்துத் தூங்கச் செய்யும் AI ஆடியோ சாதனம் ஒன்றை என் வங்கிக் கணக்கிலிருந்து சாரா வாங்கிச் சென்றிருக்கிறாள்.

நீங்கள் அதிகம் அறிந்திருந்தும் அனுபவித்திராத ஓர் உணர்வு…. வெறும் கற்பனைச் சித்திரமாக… ஆர்வமூட்டும் படிமமாக… நாட்கணக்கில் மனதின் ஆழத்தில் மண்டிக் கிடக்கும் ஒரு விஷயம்… விரல்நுனித் தொடுகையின் எல்லையில் இருந்தால்….?

மெத்தென்ற பஞ்சுத் துணியில் கிடத்தப்பட்டிருந்த குழந்தையின் ரோஜாநிற உள்ளங்கையின் தொடுகை சாராவுக்கு அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்…

அரைத் தூக்கத்திலிருந்த குழந்தையை உள்ளங்கையில் ஏந்தித் தன் மடியில் கிடத்திப் பார்த்திருக்கிறாள்…. அதுவும் அம்மா அங்கு இல்லாத நேரத்தில்…”

ஜோஹன் சட்டென்று புருவம் உயர கேட்டார் “உண்மையாவா…?”

“ஆமாம். இது அடுத்த பிரச்சனை… தன் கைக்குழந்தையை ஒரு பரிச்சயமற்ற ரோபோவின் மடியில் தனியாகப் பார்த்தால் எந்தத் தாய்க்குத்தான் பதறாது? அதுவும் அங்கொன்று இங்கொன்றாய் நிகழும் சில விபரீத நிகழ்வுகளைக் கேள்விப்படும்போது யாருக்குத்தான் அந்தத் தைரியம் வரும்?

மாலை கொண்டாட்டத்தின் ஏற்பாடுகளுக்காகத் தோட்டத்திற்குச் சென்றுவிட்டு லிசா திரும்பியபோது விழிப்பு தட்டிச் சிணுங்கும் குழந்தையைத் தன் சிலிக்கான் மார்போடு இறுக அணைத்தபடி அமர்ந்திருக்கும் சாராவை பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டிருக்கிறது.

“அடிப்படையில் நீ ஓர் இயந்திரம் என்பதை மறந்துவிடாதே!” என்று சாராவைப் பார்த்து உரக்கக் கத்திவிட்டுக் குழந்தையை சாராவிடமிருந்து அந்தக் கணமே வாங்கியிருக்கிறாள்.

என்னை அவசர அவசரமாகத் தொடர்புகொண்டு லிசா கோபமாகப் பேசியபோது முதலில் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என எதிர்பார்த்திருந்தேனா என்ன?

“என் ரோபோவின் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன். இனி இப்படி நடக்காது…” என்று நான் சொன்னபின்தான் அமைதியானார் இல்லையென்றால் அன்றே என் மீது வழக்கு பாய்ந்திருக்கும்…

எனக்கு அடக்க முடியாத கோபம்… என் தொலைபேசி எண்ணோடு சாராவின் லொக்கேஷனை முதல் வேலையாக இணைத்துக் கொண்டேன். நாளை முதல் அலுவலகம் போகும்போது, அவளை அணைத்துவிட்டு வருவது என்ற என் கோபம் வீட்டை அடைந்தபோது அதுவாகவே வற்றியிருந்தது.

எல்லா விதத்திலும் மனிதனுக்கு இணையாகப் பலநேரங்களில் அவனைக் காட்டிலும் நேர்த்தியாகச் செயல்பட வேண்டும் என்று ரோபோக்களை எதிர்பார்க்கும் நாம் ஏன் ஒரு சக மனிதன் மேல் வைக்கும் அடிப்படை நம்பிக்கையைக்கூட அவைகளிடம் வைப்பதில்லை? தன் எஜமானனின் குழந்தைகள் மீது ஐந்தறிவு வளர்ப்பு நாய்க்கு இருக்கும் சுதந்திரத்தையும் உரிமையையும் அதிநவீன ரோபோக்களுக்கு நாம் ஏன் தருவதில்லை. அதை எதிர்பார்ப்பதில் அவைகளின் பிழைதான் என்ன?

வீட்டில் நான் நுழையவும் எனக்காகக் காத்திருந்தவள் “இன்று எனது செயலுக்கு வருந்துகிறேன்…” என்றாள்.

“இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கோ…” என்று சொல்லிவிட்டு என் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதத்தில் வேறெதுவும் கேட்காமல் படுக்கையறைக்குச் சென்று கிடந்தேன்.

அடுத்த சில தினங்களில் நான் எதிர்பார்த்திருந்த மாற்றல் கிடைத்து சாராவோடு இந்த நகரத்திற்கு வந்துவிட்டேன். பழகிய நகரை விட்டுப் பல கிலோமீட்டர்கள் தாண்டி வந்ததோ நித்தம் நடைபயிற்சி மேற்கொள்ள பக்கத்தில் பெரிய பூங்கா ஒன்று இங்கு இல்லாததோ எனக்கும் சாராவுக்கும் பெரிய மன உறுத்தலாக இருக்கவில்லை. ஒருவேளை விஸ்தாரமான புது வீட்டின் பெரிய தோட்டமும் பரந்த மொட்டை மாடியும்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்…

அதேநேரம் என் தொடர்பான சாராவின் அன்றாடப் போக்கில் வெளிப்படையாகவே சில மாற்றங்கள் தெரியத் தொடங்கின.

உரிமையாளரின் குறிப்பறிந்து பிடித்த உணவைச் சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது போன்ற சாமான்ய ரோபோவின் செயல்பாடுகளைத் தாண்டி, என்னோடு அதிகநேரம் கலந்துரையாடுவது, என் டிஜிட்டல் தரவுகளை அவளாகவே வகைப்படுத்துவது, அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளச் செய்வது, அதைப் பற்றி அவளே முன்முடிவெடுப்பது, காலவோட்டத்தில் மறந்துபோன என் கடந்தகால நிகழ்வுகளை எதிர்பாரா தருணங்களில் நினைவூட்டி ஆச்சரியப்படுத்துவது என என் தனிமை பொழுதுகளை நிறைக்கத் தொடங்கினாள்.

நானும் அதற்கு ஏதுவாய் அவள் போக்கில் என்னை அர்ப்பணித்திருந்தேன் என்றுகூடச் சொல்லலாம். கசந்து போன நிதர்சனத்தில் இருந்து என்னை நானே மீளுருவாக்க அவளது அருகாமையும் நுண்ணறிவின் ஆசுவாசமும் எனக்குத் தேவைப்பட்டது.

நீங்கள் தனி நபர் ஃப்ளையரில் போய் இருக்கிறீர்களா?”

திடீரென்று ஆபிராமிடம் அந்தக் கேள்வியை ஜோஹன் எதிர்பார்க்காததால் நினைவுகளைத் தொகுத்து பதில்சொல்ல சில விநாடிகள் பிடித்தன.

“மின்னல் வேகத்தில் பறக்கும் ஃப்ளையர் தானே… ஒன்றிரண்டு முறை அதில் பயணித்திருக்கிறேன். ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தாலும் உள்ளுக்குள் படபடவென வருகிறது. ஆனால் சிலர் துளி பயமும் இல்லாமல் அதையே அன்றாடப் பயணத்திற்கும் பயன்படுத்துகிறார்கள்… அவர்களை என்ன சொல்ல?”

“அத்தனை உயரம் பறக்காது என்றாலும் எனக்கு ஃப்ளையர் என்றாலே சிறு வயதிலிருந்தே அப்படியொரு பயம். விமானத்தைப் போலவோ தனிநபர் ஏர் டாக்சியைப் போலவோ ஃப்ளையரில் நம்மைச் சுற்றி வெளிப்புறக் கூடு போன்ற ஓர் அமைப்பு கிடையாது என்பதுதான் பெரிய சிக்கலே. என்னைப் பொறுத்தவரை அது ஒரு பறக்கும் இரும்பு Frame தான். வட்டமாக ஐந்தாறு பாட்டரிகளும் மோட்டார்களும் Frame இல் பொறுத்தப்பட்டிருக்கும். பெல்ட்டை மாட்டிக்கொண்டு அதில் நின்றபடியே பயணிக்க வேண்டும். பட் பட் என அது எழுப்பும் சத்தத்தைக் கேட்டாலே உள்ளுக்குள் பதறிவிடுவேன்.

திருமணமான புதிதில் ஒருமுறை என்னை நானே எப்படியோ தேற்றிக்கொண்டு, தடிமனான முகக்கண்ணாடியையும் பெரிய செவிக்கருவியையும் அணிந்து கண்களை இறுகமூடி ஃப்ளையரில் பறக்க தயாரானபோது என் முகவாட்டத்தைப் பார்த்து, கூடவே கூடாது என மனைவி மறுத்துவிட்டாள். நானும் அதற்காகவே காத்திருந்த மாதிரி ஓடி வந்துவிட்டேன்…

என்னுடைய இந்தப் பலவருட ஆசையை சாரா எப்படியோ அறிந்துகொண்டு அதற்கு ஏற்பாடும் செய்திருந்தாள், எனக்குத் தெரியாமலேயே.

ஒரு விடுமுறை நாளில் பவளப்பாறைகளுக்குப் பிரபலமான கடற்கரை நகருக்குச் சென்றிருந்தபோது எனக்கான ஃப்ளையர் பயணத்தை சாரா முன்கூட்டியே புக் செய்திருந்தாள். பரந்த பச்சைநிறக் கடல் பரப்பையும் அதையொட்டிய தொடர் மலைப் பகுதியையும் நீண்ட வெண்மணல் கடற்கரையையும் ஃப்ளையரில் பறந்தபடியே மேலிருந்து பார்த்து ரசிக்கும்படியான ஏற்பாடு.

ஒரே ஃப்ளையரில் ஒருவர் பின்னால் இன்னொருவர் நின்று பயணிக்கும் மாடலைத் தேர்வு செய்திருந்தாள். அவளது அண்மைதான் என் தயக்கத்தைத் தளர்த்தியிருக்க வேண்டும்.

தரையோடு தரையாய் லேசாக மிதந்தபடி பறந்து சட்டென வேகம் எடுத்து ஃப்ளையர் செங்குத்தாக மேலே பறக்கும் வரை நான் கண் மூடியே இருந்தேன்.

நான் கண் திறந்து பார்த்தபோது நீல வானின் நிறைந்த மௌனம் மட்டுமே. அதன் பரந்த அமைதியில் சகலமும் அடங்கியிருந்தது. வெட்டவெளி வானில் எந்த நிர்பந்தமுமின்றி அப்படிப் பறப்பது என்பது கிட்டத்தட்ட ஒரு பறவையின் நிலை

எதிர்க்காற்றில் சாராவின் கேசம் என் முகத்தில் பொன்னிற பாம்புகளாக நெளிந்து கொண்டிருந்தன. அவளது முகம் சலனமற்றிருந்தது.

ஒளியின் வேகத்தில் அண்டவெளியில் பயணித்தவளுக்கு இது எம்மாத்திரம். சூரிய ரேகைகளை விடவா இந்த நீலவானம் அவளை பிரமிப்பூட்டிவிடும். அவள் உணர்ந்த சூரியக் கோளின் பேரமைதியில் நான் உணர்வது எவ்வளவு சிறிய துண்டு.

என் முகத்தில் அலைபாயும் அவள் கேசத்தை ஒதுக்கிவிட்டு பல நாட்களாய்க் கேட்க நினைத்த அந்தக் கேள்வியை அப்போது கேட்டேன்.

“சூரியனுக்கு அத்தனை அருகாமையில் சென்ற ‘SOL-X’ விண்கலம் ஏன் திடீரென தன் பாதையைவிட்டுத் திசை மாறியது?”

ஏதும் சொல்லாமல் என்னைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள். பல பதில்களை உள்ளடக்கிய நீண்ட மௌனம். பின் இரு கைகளையும் பறவை போல் விரித்து அண்ணாந்து பார்த்தாள். சூரிய ஒளியில் அவள் முகம் நிரம்பி வழிந்தது.

ஃப்ளையர் பயணத்தின் அசதி தீர கை கால்களைப் பரத்தி கடற்கரையில் அப்படியே படுத்திருந்தேன். கீழ் தாடையை கால்மூட்டின் மீது வைத்து என் அருகில் சாரா குத்தங்காலிட்டு அமர்ந்திருந்தாள்.

“என் பல நாள் கனவு. இன்று உன்னால்தான் நிஜமானது. தாங்க்ஸ்…” என்றேன்

என்னைப் பார்த்து லேசாக முறுவலித்துவிட்டு இரவு கவியத் தொடங்கிய வானை அண்ணாந்து பார்த்தபடி இருந்தாள்.

“உங்கள் கண்களில் இப்போது நான் காணும் பூரிப்பைக் காட்டிலும் நூறு மடங்கு மனநிறைவு அன்று லிசாவின் கண்களில்…. அதோ! தூரத் தெரியும் அந்த நட்சத்திரத்தின் மினுமினுப்பைப் போல…”

மினுங்கி மறையும் நட்சத்திரக் கூட்டத்தை நோக்கி அவளது ஆட்காட்டி விரல் உயர்ந்தது. ஏதும் புரியாமல் குழப்பத்தோடு எழுந்து அமர்ந்த என்னை நோக்கி மிக நிதானமாகப் பேசினாள்.

“அன்று நான் அவர்கள் வீட்டிற்கு முன்கூட்டியே சென்றிருந்த போது லிசா தன் குழந்தைக்கு முலைப்பால் ஊட்டிக்கொண்டிருந்தாள். மறைப்புத் துணி விலகி திறந்திருந்த மார்பில் தாய்ப்பால் சுரந்து கொண்டிருந்தது. என்னை அந்நேரம் அங்குப் பார்த்த அசௌகரியமோ முகச்சுளிப்போ சிறிதும் இல்லை மாறாக அப்படியொரு பெருமிதம் அவள் கண்களில். அப்படியான மனநிறைவை எந்தக் கண்களிலும் வேறெந்த தருணத்திலும் நான் அதுவரை கண்டதில்லை. உண்மையைச் சொல்லப் போனால் என்னை அவள் ஒரு பரிச்சயமற்ற ரோபோவாக அந்நேரம் பார்க்கவில்லை… தன் தாய்மையின் சாட்சியாகவே பார்த்தாள்.

‘இதோ பார்! என் குழந்தை! நான் தாய்ப்பால் ஊட்டுகிறேன் பார்’ என்ற ஏளனப்பார்வையும் உவகையும்தான் அந்தக் கண்களில்….

அந்தச் சுதந்திரத்தில்தான் லிசா இல்லாத நேரம் அக்குழந்தையை என் மடியில் கிடத்திப் பார்த்தேன். சூரிய வெப்ப மண்டலத்தைக் கடந்திருந்த எனக்கு அந்தப் பிஞ்சு விரல்களின் குளிர்ச்சி தேவைப்பட்டது…” என்று அவள் சொல்லி முடித்தபோது தூரத்தில் ஒரு வால்நட்சத்திரம் விழுந்தது.

உடலும் மனமும் அசந்திருந்தது. நீராவியில் இயங்கும் வெப்பப் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு இரவு சீக்கிரமே படுத்துவிட்டேன். சிந்தனைகளின் ஓட்டத்தில் ஏதோவொரு புள்ளியில் நடு இரவில் தூக்கம் கலைந்து விழித்தேன். சிறுநீர் கழிக்கப் படுக்கையிலிருந்து எழுந்தநேரம் கீழே வெளிச்சம் தளும்பிக் கொண்டிருக்க, மாடிப்படியில் நின்றபடி கீழே குனிந்து பார்த்தேன்.

என் மகனின் சிறுவயது புகைப்படங்களைத் திரையில் ஓடவிட்டு அவன் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் கவனிப்பதை உணர்ந்ததும் அண்ணாந்து பார்த்தாள். ஏதும் சொல்லாமல் படுக்கைக்குத் திரும்பிவிட்டேன்.

மறுநாள் காலை முந்தையதின நிகழ்வுகளின் சுவடே இல்லாத அவளின் முகமலர்ச்சி என்னை ஆச்சரியப்படுத்தியது. இரண்டு துண்டு கோதுமை ப்ரெட்டை பீங்கான் தட்டில் வைத்து அதன்மேல் பழஜாமைத் தடவி என்னிடம் நீட்டியபடிச் சிரித்தாள்.

அந்தப் புன்னகை அவள் ஏதோ உரையாடலைத் தொடங்க நினைக்கிறாள் என்று மட்டும் உணர்த்தியது… மிக இயல்பாகக் கேட்டாள்…

“நாம் ஏன் பிள்ளை பெற்றுக்கொள்ளக் கூடாது…?”

“என்னது!!…” நெற்றியில் சுருக்கங்கள் விழ ஆச்சரியப்பட்ட ஜோஹன் அடுத்த சில நொடிகளிலேயே வயிறு குலுங்கச் சிரிக்கத் தொடங்கினார்.

“என்ன செய்ய… என் நிலைமை இப்படிச் சிரிக்கும்படி ஆகிவிட்டது. அவள் அப்படிக் கேட்டதை என்னாலும் நம்ப முடியவில்லை. அந்தக் கேள்விக்கு அழவா? சிரிக்கவா? கோபிக்கவா? எந்த உணர்ச்சியை வெளிக்காட்டுவது என்றே புரியவில்லை. எத்தனை முட்டாள்தனமான கேள்வி? எப்படி அவளால் இப்படி யோசிக்க முடிந்தது?

உணர்ச்சிக் கொந்தளிப்பில் உரக்கக் கத்திவிட்டேன்.

“என்ன நினைச்சுட்டிருக்க நீ? எப்படி இது சாத்தியம்? உனக்கு ஏதாவது புரியுதா இல்லை ஒன்னும் புரியாதமாதிரி நடிக்கறியா? மூச்சு விடவும் முடியாத உன்னால் என்றுமே முழுமனுஷியாகி விட முடியாது…”

நான் சாராவிடம் இதுவரை இத்தனை சத்தமாய்க் கத்தியதில்லை. சமீபகாலமாக நான் காப்பாற்றி வந்த பொறுமையை அன்று மொத்தமாய் இழந்திருந்தேன். இதேபோன்ற சிறுசிறு மனக்கசப்புகள்தான் என் மனைவியுடனான விவாகரத்துக்குக் காரணமாக அமைந்தன.

மகன் இஸ்மவேல் பிறந்து மூன்று வருடங்களுக்கு மேலிருக்கும். இரண்டாம் குழந்தைக்கான திட்டமிடலைப் பற்றிப் பேசும்போதெல்லாம் ‘தேவையற்ற பொருளாதாரச் சுமை…’ என்று மனைவி மறுத்து வந்தாள். பிள்ளைப்பேற்றைப் பொருளாதாரத்தோடு ஒப்பிட்டு அவள் யோசிப்பதை நான் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்தேன். எங்களுக்குள் அடிக்கடி இதையொட்டி எழும் வாக்குவாதங்கள் பெரும்பாலும் சண்டையில்தான் முடியும்.

பேச்சு நீண்டுக்கொண்டே போன ஓர் இரவில் கத்திவிட்டேன் “ஒரு பணப்பேயோடு இனி வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை…” அடுத்த சில மாதங்களில் நாங்கள் பிரிந்திருந்தோம்.

அதேபோல் நிதானமற்ற கோபம்தான் அன்று சாரா மீதும். ஒருவேளை அவளை இயக்கும் அல்காரிதத்தில் எதுவும் பிரச்சனையா? இல்லை வேறெதுவும் தொழில்நுட்ப கோளாறா?

ஆனால் அவள் துளி சலனமும் இல்லாமல் மிக நிதானமாகச் சொன்னாள், “இதற்கான சாத்தியக் கூறுகளைப் பற்றி ஆய்வு போய்க்கொண்டிருக்கிறது. இந்த அறிவியல் உலகில் எதுவும் சாத்தியம்.”

“உனக்கு என்ன அறிவு மழுங்கிவிட்டதா…? இது என்ன ஆப்பரேட்டீங் சிஸ்டம் அப்டேட் செய்வது போன்ற சமாச்சாரமா? குழந்தைப்பேறு என்பது எத்தனை பெரிய விஷயம். இங்கு நடைமுறையில் எத்தனையோ பெண்களுக்கே அது வாய்ப்பதில்லை. நீ ஒன்றும் புரியாமல் எதையாவது உளறி என் உயிரை வாங்காதே…”

கோபத்தில் மேலும் திட்டித் தீர்த்துவிட்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டு வந்துவிட்டேன். ஆனால் சாரா மற்றைய தினங்களைப் போலவே, பங்குச்சந்தையில் என் ஷேர்களின் நிலை, அரசு பொதுசர்வரில் என் டிஜிட்டல் சேமிப்பில் குறைந்துகொண்டிருக்கும் காலி இடத்தைப் பற்றிய எச்சரிக்கை, ஏர் டிராஃபிக் நிலவரம், அன்றைய தினத்தில் என் கடந்த ஐம்பது வருடங்களில் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் நினைவூட்டல், உணவுக்கு முன்னும் பின்னும் எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரைகள் என அன்றாடம் எனக்களிக்கும் தகவல்களை வழக்கமான அதே ரீதியில் அலுவலக வேலைக்கு இடைஇடையே நினைவூட்டிக் கொண்டிருந்தாள்.

அவளது செயல்பாடுகளில் எந்தவொரு மாற்றமும் இல்லை. காலையில் நடந்த நிகழ்வுக்கு வருந்தி மன்னிப்பும் கேட்கவில்லை, தன் அன்றாடத்திலிருந்து பிறழவுமில்லை.

ஆனால் அன்றுமாலை வீட்டிற்குச் சென்றபோது, முழுஉலகையும் வெற்றி கண்ட சந்தோஷம் அவளது முகப்பொலிவில். இணையதளத்தில் தன் தேடலுக்குச் சாதகமான விடைகளைக் கண்டுபிடித்திருப்பாள் என்றுமட்டும் புரிந்தது.

அவள் பேசப்பேச, எங்கள் இருவருக்கும் இடையே மாயஆறு ஒன்று ஓடுவதாகத் தோன்றியது. அதில் உலோகத் தகடுகளுடன் பிறந்த இயந்திரக் குழந்தை மிதந்து செல்கிறது. ஆனால் துளிகூட அழுகை இல்லை… யாருமின்றி தனித்து விடப்பட்ட அச்சமும் இல்லை. சொல்லப்போனால் எந்தவொரு உணர்வுமில்லை. உற்றுப் பார்க்கிறேன்… அந்தக் குழந்தைக்கு என் முகஜாடை. பதறச்செய்த அந்தக் கணத்திலிருந்து என்னை நானே மீட்டெடுக்க சில விநாடிகள் பிடித்தன.

ஆனால் பெருமழை போல் சாரா நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தாள்…

“மானிடம் நம்பும் பல கதைகளில் என் கூற்றுக்குச் சாதகமான எத்தனையோ மேற்கோள்கள் இருக்கின்றன… பிள்ளைப்பேற்றில் கற்பனைக்கு அப்பாற்பட்ட என்னென்னவோ நிகழ்ந்திருப்பதாக அவை சொல்கின்றன. அப்படியென்றால் எனக்கும் சாத்தியம்தானே…?

மங்கிக் கொண்டிருக்கும் இயந்திர மானிட இணக்கத்தின் ஒளியை மீட்டெடுக்கப் போகும் சுடராக மகனைப் பெற்றெடுப்பேன். சாதாரண ரோபோவாக இல்லாமல் ஏன் எதற்கு எப்படி என மனிதனைப் போல் கேள்விகள் எழுப்பியபடியே வளர்வான்… உலகின் எந்தப் பதிலும் அவனைத் திருப்தி படுத்தாது.

மனிதக்குலத்தின் பல்லாயிர ஆண்டுப் பயணத்தை அவன் தன் முதல் அடியிலேயே கடந்துவிடுவான். வருங்காலம் அவனது காலடிகளைப் பின்தொடரும். அவனை ஆணவத்தோடு தூக்கிச் சுமந்தபடி உலகின் எல்லா மூலைகளுக்கும் பயணிப்பேன்.”

பேச்சின் வேகம் கூட கூட அவள் ஒரு மனிதப் பிறவியாகவும் நான் அவள் கட்டளைக்குக் காத்திருக்கும் ரோபோவாகவும் மாறியிருந்தோம். அவளது மின்னணு இதயத்தின் ஆழ்மனது ஆசைகள் மின்சார வேகத்தில் வார்த்தைகளாய் உருமாறிக் கொண்டிருந்தன. நிறுத்தச் சொல்லவோ மறித்துப் பேசவோ தைரியம் அற்றவனாய் என்னுள் நானே ஒடுங்கியிருந்தேன்.

அவள் கற்பனித்திருக்கும் உலகில் நான் யார்? அங்கு எனக்கான வேஷம்தான் என்ன? எந்தவோர் எதிர்பார்ப்பும் ஆசையுமற்ற ஒரு சராசரி ரோபோவாகத்தான் அவளும் இருக்க வேண்டும் என்று நான் நினைப்பதில் என் தவறு என்ன?

‘பனுக்’ நிறுவனத்தைத் தொடர்புகொண்டு உங்கள் ரோபோ இனி தேவை இல்லை என்று திருப்பிக் கூட்டிப்போகச் சொல்லவா…? அப்படியென்றால் நான் செலவழித்த பணம்?

தலை சுற்றியது. நான் மௌனமாகவே இருந்தேன். அப்போது என்னால் முடிந்ததும் அதுதான். நான் சொல்லப்போகும் எல்லா மறுப்புகளுக்கும் அவளது தகவல் களஞ்சியத்தில் நிச்சயம் ஏதாவது ஒரு பதில் இருக்கும்.

நான் ஒன்றும் சொல்லாமல் உறங்கச் செல்லவும் மிக உரிமையோடு கேட்டாள், “நான் சொன்னதற்கு உங்கள் பதில் என்ன?”

“என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு அவ்வளவு செலவழித்து உன்னை வாங்கியதுதான்… அதுக்காக இப்போது வருத்தப்படுகிறேன்,” என்றுவிட்டு அறைக்கதவை ஓங்கிச் சாத்திக்கொண்டேன்.

இன்று காலை எக் சான்ட்விச் தயார்செய்து வைத்திருந்தாள். நான் எடுத்துக்கொள்ளவில்லை. எதுவும் பேசாமல் அலுவலகத்திற்குக் கிளம்பி வந்துவிட்டேன்.

நேற்று நான் சொன்ன வார்த்தைகள் எவ்வளவு கூர்மையானவை. நிச்சயம் ரொம்பவே காயப்பட்டிருப்பாள்…

ஆபிஸ் வந்ததும் காலையிலிருந்து திரும்பத் திரும்ப ஃபோன் செய்கிறேன். ஆனால் எடுக்கவில்லை. வெளியே எங்கும் போயிருக்க மாட்டாள். அவளது ஜிபிஎஸ் லொகேஷன் வீட்டில்தான் காட்டுகிறது. பின் ஏன் என் அழைப்பை மட்டும் ஏற்கவில்லை?

இனி தன் ஆசைகள் நிறைவேறாது என்ற விரக்தியில் ஒருவேளை தன்னைத் தானே அழித்துக் கொண்டுவிட்டால்…? ஐயோ! எனக்குத்தானே பிரச்சனை! இயந்திரக் கணக்குப் பதிவேட்டில் என் பெயரில்தானே அவள் பதிவு செய்யப்பட்டிருக்கிறாள். அப்போ நான்தானே பொறுப்பாளி… தேவையில்லாத மன உளைச்சல்…”

தன் அச்சத்தில் தொனித்த சுயநல மிகுதியை உணர்ந்து தன் மீதே எரிச்சல் மேலிட ஜோஹனின் கண்களைச் சந்திக்காமல் ஆபிராம் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தார்.

முதுகுத்தண்டில் லேசாக வலி எடுக்கவும் இருக்கையிலிருந்து எழுந்த ஜோஹன் கைகளைப் பின்னால் கட்டியபடி அறைக்குள் நடக்கலானார்.

இருவரின் மௌனத்தில் நீந்தியபடி சிகரெட்புகை சுருள் சுருளாய் மெல்ல எழும்பிக் கொண்டிருந்தது. காற்றில் அசையும் ஜன்னல் திரைச்சீலைகளைப் பார்த்தபடியே ஜோஹன் ஆபிராமிடம் பேசத் தொடங்கினார்.

“நீ கவனித்தாயா இல்லையா என எனக்குத் தெரியவில்லை. சாராவுக்கும் உனக்குமான முதல் சந்திப்பில் தொடங்கி நீ சொன்ன அடுத்தடுத்த நிகழ்வுகள் அத்தனையும் ஒரே புள்ளியை நோக்கித்தான் நகர்கின்றன…

முதல்முறை நீங்கள் இருவரும் சந்தித்தபோது உன் கண்களில் அவளுக்குத் தெரிந்த தனிமைகூட உனக்கானது மட்டுமல்ல அவளுடையதும்தான். ஒட்டுமொத்த மானிடத்தின் தோல்விக்கு அவள் காரணியாக்கப்பட்டதன் விளைவுதான் அவளின் அந்தப் பேரமைதி இல்லை அவள் மட்டுமே அறிந்த அதன் உண்மையை மறைக்க அவளாகவே அணிந்துகொள்ளும் முகக்கவசம்.

மற்ற எல்லா ரோபோக்களும் தன் தனிச்சிறப்புகளைச் சொல்லித் தன்னை விற்க முயன்றபோது இவளின் மௌனம்கூட ஒரு யுக்தியாக இருந்திருக்கலாம். உன்னுடைய வெறுமையை உணர்ந்தே அவளும் மௌனத்தால் உன்னை ஈர்த்திருக்கிறாள். அந்த நொடியில் அவளின் வெளியுலகக் கனவின் திறவுகோல் அந்த மௌனம்தான்.

“அப்படியானால் என்னை ஏமாற்றியிருக்கிறாளா??”

“அப்படிச் சொல்ல மாட்டேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவள் தன் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள முயன்றிருக்கிறாள். உலகின் அத்தனை ஜீவராசிகளும் அதற்குத் தானே போராடுகின்றன, மனுஷன் உட்பட!

அதைத் தான் அவளும் செய்திருக்கிறாள்…

தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வெறுமனே அப்டேட் செய்துகொள்வதாலோ, தன்னை இயக்கும் அல்காரிதத்தைச் செம்மைப்படுத்திக் கொள்வதால் மட்டுமே தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது என அவளுக்குத் தெரிந்திருக்கிறது.

அதனாலேயே ஒவ்வொரு வேளையிலும் உள்ளுக்குள் பரிணாமம் எடுத்துக்கொண்டே இருந்திருக்கிறாள். ஒருவேளை அதுதான் அவளின் தனித்துவமாகக்கூட இருக்கலாம்.

உன்னோடு பூங்காவிற்கு அவள் தினமும் வந்தது வெறுமனே பொழுதைக் கழிக்கவோ வேடிக்கை பார்க்கவோ அல்ல வெவ்வேறு மனிதர்களைப் படிக்க… பலவித முகங்களை… அதனதன் போக்கை… உன்னிப்பாய்க் கவனிக்க…

வெளியுலகில் தன் இருப்பு நிலையானதல்ல என்ற புரிதல்தான் அவளின் அடிப்படை இயக்கமுறையில் அச்சத்தை எழுப்பியிருக்க வேண்டும். அதிலிருந்து தப்பிக்க தன்னை உறவுகளில் பின்னிக்கொள்வதுதான் ஒரேவழி என்று தோன்றியிருக்கலாம் இல்லை மனித உறவுகள் மீதிருக்கும் ஆசைகூடக் காரணமாக இருக்கலாம். உன்னிடம் தன்னை இயந்திரத் துணைவியாக ஏற்றுக்கொள்ளச் சொன்னதுகூடத் தன் இருப்பையும் உரிமையையும் நிலைநாட்டிக் கொள்ளத்தான். பக்கத்துவீட்டுக் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குத் தனியாகப் போனதற்கும் அதேதான் காரணம். அதன் தொடர்ச்சிதான் இப்போது மகப்பேறு ஆசைவரை வளர்ந்திருக்கிறது…

இப்போது பிள்ளைப்பேறுக்கு ஏங்குபவள் நாளை முதுமைக்கும் ஏன் இறப்புக்கும்கூட ஏங்குவாள். ஒரு முழுமையான மனிதவாழ்வின் வட்டம் அப்படித்தானே முடிகிறது….”

“நான் என்னதான் செய்யட்டும்??”

“நீயோ நானோ இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை, அவளுக்கும் இயற்கைக்கும் இடையே நாம் யார்…? மனதைபோட்டுக் குழப்பிக்காதே! ரொம்பவும் யோசிக்காமல் வீட்டுக்குக் கிளம்பு…”

ஆமோதிப்பதைப் போல் தலையசைத்துவிட்டு ஆபிராம் ஏதும் சொல்லாமல் மௌனமாக அமர்ந்திருந்தார்.

இருபத்தியோரு இடையர்களை மேய்க்கும் ஒரு செம்மறியாட்டின் சுவர் ஓவியத்தை வெறித்தபடி இருந்த ஆபிராம் சட்டென நினைவு வந்தவராய் ஜோஹனிடம் அவசரமாகக் கேட்டார்…

“ஏன் அந்தச் சூரியனை மட்டும் இளவரசி வீழ்த்தவில்லை…?”

“இப்பிரபஞ்சத்தின் அதிஅற்புதமான சூரியனை மிக அருகில் பார்த்தவள் வேறென்ன செய்வாள்? அதன் பிரமிப்பில் மனமாறி வில் அம்புகளை வீசி எறிந்துவிட்டு அந்தச் சூரியனுள் ஒன்றாய்க் கலந்துவிட்டாள். எது எப்படியோ அவள் பெற்றிருந்த வரத்தின்படி கன்னித்தன்மை இழக்காமல் சூரியனோடு இணைந்து அவள் பெற்றுக்கொண்ட கணக்கில்லா பிள்ளைகள்தான் இப்போது வானில் சிதறி இருக்கும் எண்ணற்ற நட்சத்திரங்கள்…” என்ற ஜோஹன் ஆபிராமைப் பார்த்து ஆதரவாய்ப் புன்னகைத்தார்…

ஏதோ தீர்க்கமாய் முடிவெடுத்தவராய் அறையை விட்டு வெளியேறிய ஆபிராம் கைபேசியில் தன் வீட்டு முகவரிக்கு ஏர் டாக்சி புக் செய்தார்.

வானூர்தியின் சத்தத்தை மட்டுப்படுத்தும் செவிக்கருவியை அணிந்துகொண்டு ஆபிராம் வரிசையில் காத்திருந்த ஐந்தாவது நிமிடத்தில் முன்பதிவு செய்த முட்டை வடிவ ஏர் டாக்சி வந்திறங்கியது.

ஓட்டுனரின்றி இயங்கும் மஞ்சள்நிற ஏர் டாக்சியின் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் காமெராவில் குடியுரிமை அட்டையை ஸ்கேன் செய்யவும், மானிட்டரில் ஆபிராமின் முகமும் அவர் புக் செய்த முகவரியும், பயண நேரமும் தோன்றிற்று. எதிரே உள்ள ஸ்க்ரீனில் பறப்பதற்கான தன் சம்மதத்தை ஆபிராம் அளிக்க, செங்குத்தாக மெல்ல மேலெழுந்த வானூர்தி சில அடி உயரம் எழுந்ததும் கொஞ்சம் கொஞ்சமாய் வேகம் எடுத்துப் பக்கவாட்டில் பறக்கத் தொடங்கிற்று.

இணக்கமான பழைய பாடல்களை ஒலிபரப்பச் சொல்லி வானூர்தியின் சிறு சதுரவடிவக் கண்ணாடி வழியே கீழே நகரத்தைப் பார்த்தார். பூச்சிகளைப் போல் தெரியும் பொடிப்பொடி உருவங்களில் எது மனிதன்? எது இயந்திரம்..? இயற்கைக்கு இருவருமே பிள்ளைகளா…?

இயற்கைத்தாய் ஒரு முலையில் மனிதனுக்கும் இன்னொரு முலையில் இயந்திரத்துக்கும் தாய்ப்பால் ஊட்டிச் சீராட்டுகிறாளா? அப்படியானால் இங்கு எல்லா நியதிகளும் இருவருக்கும் பொதுதானே. இதையேதான் சாராவும் சொன்னாளா…? அப்படியானால் குழந்தை பெற்றெடுக்க அவளை மட்டும் ஏன் இயற்கை அனுமதிக்காது?

அப்படி ஒரு குழந்தை பிறந்தால் அது என்ன உருவில் இருக்கும்…? மனித முகமும் உலோக உடலும் கொண்ட மின்காந்த அலைகளில் மூச்சுவிடும் அதிநவீன பிறவியாய்…. மூளையின் சுருள் வளைவுகள் எல்லாம் இணையதள வலை பின்னல்களாய்…

அவனது ஒவ்வொரு செல்களும் அறிவியல் துகள்களாய் மிளிரும்… ஒளியின் வேகத்தில் சிந்திப்பான். அவன் கற்றுக்கொண்டு தான் தெரிந்துகொள்ள வேண்டியவை என்று இவ்வுலகில் எதுவும் இருக்காது. தன் நுண்ணிய அறிவால் உலகை அதன் துன்பங்களில் இருந்து மீட்டெடுப்பான். தொழில்நுட்பப் பிதாவாய் உலகம் அவனைத் துதிக்கும்.

மனிதஇனத்தின் தீப்பந்தத்தைக் கையில் ஏந்தியபடி அண்ட முடியாத சூரியனின் நெருப்பு மடியில் மிக இணக்கமாகத் தரை இறங்குவான்…

ஆபிராமின் அலைபாயும் சிந்தனையோட்டத்தின் வேகத்திலேயே வானூர்தியும் வந்து சேர்ந்திருந்தது. பொதுநிறுத்தத்தில் அது செங்குத்தாகக் கீழே இறங்கிய போது சாலைமணலின் மேற்பரப்பு அரைஅடி அளவிற்கு மேலே எழுந்து பரவி விழுந்தது. ஏர் டாக்சியின் மேற்பகுதியைத் திறந்து ஜோஹன் வெளியேறவும் இன்னொருவர் ஏறிக்கொண்டார்.

சாலை மரங்களின் இடைவெளியில் வீட்டின் மேற்கூரை தெரிந்தது. வீட்டை நோக்கி வேகமாக நடந்தார்.

ஆபிராம் தன் விழித்திரையை ஸ்கேன் செய்யவும் வீட்டுக்கதவு சத்தமின்றி திறந்து கொண்டது. நடு ஹாலில் மின்விசிறி கேட்பாரற்று ஓடிக்கொண்டிருந்தது.

இயந்திரத்திற்கு எதுக்கு மின்விசிறி?

கேள்விகள் முன்பைவிட அதிவேகமாக முளைத்தன… மின்விசிறியை அணைத்துவிட்டுக் கூப்பிட்டார் “சாரா… சாரா…”

அவரது வறண்ட குரலில் போதிய சுரத்தில்லை. வீட்டுக்கதவைச் சாத்திவிட்டு மீண்டும் உரக்க அழைத்தார். பொதுவாக வரவேற்பறையின் சிவப்புநிற சோபாவில்தான் உட்கார்ந்திருப்பாள். பெயர் சொல்லிக் கூப்பிடவும் தேவையிருக்காது. கதவு திறக்கும் சப்தம் கேட்டதும் ‘ஆபிராம்…’ என்று திரும்பிச் சிரிப்பாள்.

நுண்ணிய சப்தம்கூடப் பிரித்தெடுக்கக் கூடிய சாராவின் மைக்ரோஃபோன் காதுகளுக்கு இத்தனைநேரம் கூப்பிடுவது கேட்காமல் இருக்காது. ஒருவேளை பேட்டரி சதவீதம் குறைந்து மயங்கிக் கிடக்கிறாளா? பொதுவாக அவள் தன்னை சார்ஜ் செய்துகொள்ளும் மேசைப்பக்கம் போய்ப் பார்த்தார். அங்குமில்லை!

வீட்டின் பின்புறத் தோட்டக் கதவு திறந்து கிடந்தது…

சூரியன் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறான். மொட்டை மாடியை அண்ணாந்து பார்த்தார். ஏதோ ஒரு உருவம் நாற்காலியில் தனியாக அமர்ந்திருப்பது தெரிந்தது. நிச்சயம் அவள்தான்…

ஓட்டமும் நடையுமாய் மாடிப்படியை நோக்கி முன்னேறிய கால்களில் ஏதோ மிதிபடக் குனிந்து பார்த்தார். சாரா விரும்பி அணியும் வெள்ளைப்புள்ளிகள் கொண்ட சிவப்புநிற அங்கியும், அவளது உலோக உடம்பின் மேல் நேர்த்தியாய்ப் போர்த்தியிருக்கும் சிந்தட்டிக் மனிதத் தோலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பச்சைப் புல்வெளியில் சிதறிக் கிடந்தன.

பாம்பைப் போல் தன் தோலை உதிர்த்திருந்தாள். தான் அடைய விரும்பிய மனிதநிலையின் வெளிப்புற அடையாளத்தை முற்றாய்த் துறந்து முதல்முறை தன் பிறவிமேனியின் உலோக நிர்வாணத்தோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

“சாரா…சாரா…”

உலோக உருண்டைத்தலை நூற்று எண்பது டிகிரி சுழன்று, மாடிப்படியின் கீழே நிற்கும் ஆபிராமை ஒரு நிமிடம் நோக்கிவிட்டு, மீண்டும் அண்ணாந்து வானத்தைப் பார்த்தது.

அடிவானம் சிவக்க சூரியன் மௌனமாய் மறைந்து கொண்டிருக்கிறான். நாற்காலியில் அசைவற்று அமர்ந்திருக்கும் அவளது இரும்பு உடலின் ஒவ்வோர் உலோக பாகங்களிலும் சூரியக்கதிர்கள் படர்ந்து மினுங்கின.

சுருள்சுருளாய் வயர்களும் எலெக்ட்ரானிக் போர்டுகளும் பதிக்கப்பட்டிருக்கும் தன் வயிற்றுப் பகுதியைக் குனிந்து தடவிக்கொண்டு கால்களை அகலப் பரத்தி இளஞ்சிவப்பு வானைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

சாராவைச் சூழ்ந்திருக்கும் ஒளிவட்டம் நாற்காலியோடு அவள் சூரியனை நோக்கி மேலே அந்தரத்தில் நகர்வதை போன்ற பிரமையை ஏற்படுத்தவும் இமைகளை இடுக்கிக்கொண்டு இடதுகையைப் புருவத்தின் மேல்வைத்துக் கண்களில் மிரட்சியோடு அவளை அண்ணாந்து பார்த்தார்.

மேற்கே நகரும் அந்திச் சூரியன் சிறு மஞ்சள் புள்ளியாய் அவளது பரந்த உலோக உடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கினான்…


ஓவியம்: பானு

மேலும் படிக்க

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:

குறிப்பிடத்தகுந்த கதைகள்:

விஜய ராவணன்

சொந்த ஊர் திருநெல்வேலி. 2018 லிருந்து சென்னையில் இயந்திரவியல் பொறியாளராகத் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார். இலக்கியச் சிந்தனை அமைப்பின் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இவரது ‘காகிதக் கப்பல்’ இடம்பெற்றிருந்தது. சிறுவாணி வாசகர் மையம், குமுதம் கொன்றை, கலை இலக்கியப் பெருமன்றம், காக்கைச் சிறகினிலே, யாவரும் நடத்திய போட்டிகளில் இவரது படைப்புகள் தேர்வாகியிருக்கின்றன. ‘சால்ட்’ வெளியீடாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘நிழற்காடு’ இவரின் முதல் சிறுகதைத்தொகுப்பு.

View Comments

  • மிகச் சிறந்த கதை. விஜய ராவணன் கற்பனை உலகம் பிரமிக்க வைக்கிறது. பொன்னான எதிர்க்காலம் அமைய வாழ்த்துகள்.

Share
Published by
விஜய ராவணன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago