“எனது எழுத்தாளர்” என்ற இந்தச் சொற்கூட்டு என்னளவில் மிகவும் வியப்புக்குரியது. மதிப்புக்குரியது. பல சமயங்களில் மிகவும் புனிதமானதும்கூட. எத்தனையோ எழுத்தாளர்களை வாசிக்கிறோம், ஆனாலும் இவர்தான் “என்னுடைய எழுத்தாளர்” என்று அந்தரங்கமாக ஒருவரைக் கண்டடைவது என்பது வாசகனின் நல்லூழ். அதுவரையிலான அவனது வாசிப்பில் அது ஒரு திருப்புமுனை. ஒருவகையில் “தனது எழுத்தாளர்” என்று ஒருவரைக் கண்டடைவது என்பது வாசகன் தன்னையே கண்டடைவதுதான். தனது அகத்தின் ஒரு மெல்லிய புள்ளியை ஒரு படைப்பாளி அவரது எழுத்தின் மூலம் தொட்டுவிட்டப்பிறகு அந்தப் படைப்பாளி என்பவர் வாசகனின் அகத்தின் ஒரு பகுதியாகி விடுகிறார். அவரது படைப்பின் ஆழ அகலங்களுக்குள் அமிழ்ந்து பல்வேறுபட்ட அனுபவங்களைக் கடக்கும் வாசகன் ஒரு கட்டத்தில் அவரையே தனது வழிகாட்டியாகக் கருதிக்கொள்கிறான். அதன்பின் அவரது எழுத்தைத் தாண்டி அவரது ஆளுமையையே தான் ஸ்வீகரித்துக் கொள்கிறான்.
“எனது எழுத்தாளர்” என்று ஒருவரைக் கண்டடைந்தபின் ஒரு வாசகன் என்னவாகிறான் என்பதும் கவனத்துக்குரியது. அவன்முன் இரண்டு வழிகள் உள்ளன — ஒன்று அவன் அந்த எழுத்தாளர் மட்டுமே தனக்குப் போதுமானவர் என்று அவரது படைப்புகளுக்குள்ளேயே தன்னை மானசீகமாகச் சிறையிட்டுக் கொள்ளலாம் (காண்டேகரை மட்டுமே வாசிக்கும் ஒரு நண்பர் எனக்கிருக்கிறார். பிற எவரையும் அவர் வாசிக்க விரும்பமாட்டார்). அல்லது அவரை ஒரு உந்துபலகையாகக் கொண்டு மேலும் உயரங்களுக்குச் செல்லலாம். ஒரு வரைபடத்தைப் போல அவர் காட்டித்தரும் பல்வேறு திசைகளை நோக்கி ஒரு வாசகன் தன்னுடைய பயணத்தைத் தொடரலாம். அவன் எங்கு சென்றாலும் அந்த இடங்களை எல்லாம் அவனுக்குக் காட்டித் தருபவர் அவன் “தனது எழுத்தாளர்” என்று கொண்டாடும் அந்த எழுத்தாளர்தான். எங்கு சென்றாலும் மீண்டும் வீட்டுக்கு வந்துதான் ஆகவேண்டியிருப்பது போல எத்தனை எழுத்தாளர்களை வாசித்தாலும் மீண்டும் மீண்டும் வாசகன் தனது எழுத்தாளரிடம் திரும்பத்தான் வேண்டும். ஏனெனில் அவனுக்குத் தனது எழுத்தாளரிடம் கற்றுக்கொள்வதற்கு முற்றிலும் புதிய விஷயங்கள் கிடைத்துக்கொண்டேயிருக்கும். முற்றிலும் புதிய அனுபவங்களுக்கான வெளி இருந்துகொண்டேயிருக்கும். ஆம். அவர், தோண்டத் தோண்ட ஊறும் மணற்கேணியேதான். ஒருபோதும் அதில் சுரக்கும் தண்ணீரை முழுக்கப் பருகிவிட முடியாது. அதே சமயம் அதில் சுரக்கும் தண்ணீர் என்பது தனக்காகவேதான் என்று வாசகனின் அந்தரங்கம் சந்தேகத்திற்கிடமில்லாமல் உணர்ந்துகொண்டுமிருக்கும். இது ஒரு தீராத விளையாட்டு. ஒருபோதும் நிறைவடையாத ஒரு ஞானப் பரிமாற்றம்.
அதிலும் இளம் வாசகனிடம் மேற்சொன்ன பாதிப்பை ஒரு எழுத்தாளர் உருவாக்கிவிட்டால் அதன்பின் அவன் தன் வாழ்நாள் முழுதும் இந்த எழுத்தாளரின் தோளின் மீது ஏறி உலகைப் பார்க்கத் துவங்கிவிடுவான். இது ஒரு ஆக்கப்பூர்வ பாதிப்பு என்றுதான் நான் எண்ணுகிறேன். இன்றைய வறட்டுக் கல்விமுறையிலும், எதிர்பார்ப்புகளால் நிரம்பிய சக்கை உறவுகளிலும், ஒருவித குடி மயக்கத்திலேயே வைத்திருக்கும் சமூக ஊடகச் சிறைக்கம்பிகளிலும் சிக்கிக்கொண்டிருக்கும் ஒரு இளம் வாசகனின் உலகில் அவனது எழுத்தாளர் ஒரு விடியலை ஏற்படுத்துகிறார். ஆக்கப்பூர்வமான ஒரு ஆளுமை மாற்றத்தை உண்டாக்கிச் செல்கிறார். அவனைத் தளைத்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத சங்கிலியின் பிடியிலிருந்து விடுதலை செய்கிறார். முற்றிலும் சுதந்திரமான, ஆகாயத்தின் ஒரு துளியை அவரது எழுத்தின் மூலம் அந்த வாசகன் பார்த்துவிடுகிறான். அவனுக்கான ராஜ பாட்டையின் தரிசனம் கிடைத்துவிடுகிறது. வெள்ளத்தில் தத்தளிப்பவனுக்குக் கிடைத்த மரவேர் அது. அதன் பிடியை அவனால் தளர்த்திக் கொள்ள இயலாது. அதுதான் அவனுக்கு உயிரைத் தக்கவைத்துக்கொள்ள உதவப்போகிறது.
இங்கே நினைவில் கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம்: வாசகன் எழுத்தாளனின் ஆளுமையைப் போலி செய்யவில்லை. தனது எழுத்தாளனின் கண்கள் வழியே அவன் இந்த உலகைப் பார்க்கவில்லை, மாறாக தனது ஆளுமையிலுள்ள சில சிடுக்குகளைத் தனது எழுத்தாளனின் எழுத்துகள் வழியே சீராக்கிக்கொள்கிறான். இங்கே நடப்பது ஆளுமைத் தானமல்ல. மாறாக, ஆளுமை உருவாக்கம். ஆளுமையை உருவாக்குவதிலும் தகவமைப்பதிலும் எழுத்தாளனின் எழுத்து இங்கு முக்கியப் பங்காற்றுகிறது.
எஸ். ராமகிருஷ்ணனை “எனது எழுத்தாளர்” என நான் உணரத் துவங்கியது என்னுடைய கல்லூரிப் பருவத்தில்தான். அப்போது ஆனந்த விகடனில் அவரது ‘துணையெழுத்து’ கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு கட்டுரையும் அருமணிகள். குறிப்பாக அன்பின் விதைகள், கடவுளின் சமையல்காரன், காகிதக் கத்தி, கோல் போஸ்ட், நதியிலொரு கூழாங்கல், ஸ்திரீபார்ட், முத்திரையிடப்பட்ட நாட்கள், காற்று எழுதிய காவியம், ஒரு கொத்துச் சாவிகள், இனி நாம் செய்யவேண்டியது என்ன, நீரில் மிதக்கும் நினைவுகள் போன்ற கட்டுரைகள் என் மனதில் சாஸ்வதமாகத் தங்கிவிட்டவை. இக்கட்டுரைகளின் பல வரிகளை என்னால் நினைவிலிருந்தே சொல்லிவிட இயலும். துணையெழுத்து வெளியான நாட்களில் ஒவ்வொரு வார விகடனையும் எடுத்துக்கொண்டு கட்டிலில் படுத்தபடியே நான் எனது தம்பிக்கும், அம்மா, அக்காவிற்கும் வாசித்துக் காட்டுவேன். வாசித்து முடித்ததும் அவர்கள் அவர்களது கருத்துகளைச் சொல்வார்கள். ஒரு விளையாட்டாக, கேளிக்கையாகத் துவங்கிய இந்தப் பழக்கம் பிறகு நிரந்தரமாகிப் போனது. நான் வந்து வாசிக்கும்வரை என் குடும்பத்தினர் விகடனில் துணையெழுத்தை மட்டும் வாசிக்காமல் வைத்திருப்பார்கள். இன்று யோசிக்கையில் அதுவே என் இலக்கிய வாசிப்பிற்கும் எழுத்திற்கும் முதல் உரமாக இருந்திருக்கிறது. என் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரும் எஸ்.ராவின் வாசகர். அவரும் நானும் வகுப்பிற்கு வெளியே துணையெழுத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். நான் படித்தது பொறியியல். வெளியில் இருந்து பார்ப்பவர்கள் ஒரு மாணவனும் ஆசிரியரும் பொறியியல் சம்பந்தமான விஷயங்களைத் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைப்பதுண்டு. ஆனால் நாங்கள் துணையெழுத்தின் அந்த வாரம் வெளியான கட்டுரையைக் குறித்துப் பேசிக்கொண்டிருப்போம். என் பேராசிரியர் அடிக்கடிச் சொல்வார், “ராமகிருஷ்ணன் எழுதுவது சிறுகதையா கட்டுரையா எனத் தெரியவில்லை. வாசிக்கும்போது கதை போலவும் இருக்கிறது, கட்டுரை போலவும் இருக்கிறது”. அப்போது creative non-fiction என்ற எழுத்துமுறை இருப்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது.
‘அன்பின் விதைகள்’ என்ற கட்டுரை என் மனதில் ஆழமானத் தாக்கத்தை உண்டாக்கியது. பள்ளியில் வாட்ச்மேனாக வேலை செய்யும் ஒருவர் தனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் ஒரு பகுதியை மருத்துவ உதவி வேண்டுவோருக்கு மணியார்டர் மூலம் அனுப்பியபடியிருப்பார். செய்தித்தாளில் உதவி தேவை என்ற அறிவிப்பை வாசித்ததும் அவரால் இயன்ற தொகையைத் தேவைப்படுவோர்க்கு அனுப்பிவிடுவார். அவரால் உதவி பெற்ற ஒரு பெண் தனது மகனை அழைத்துக்கொண்டு அவருக்கு நன்றி தெரிவிக்க ஒரு நாள் அவரைத் தேடிவருவார். இந்த அனுபவத்தைத்தான் ‘அன்பின் விதைகள்’ கட்டுரையில் எஸ்.ரா எழுதியிருப்பார். உதவி என்றாலே பெருந்தொகையாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை. நம்மால் இயன்ற சிறு தொகையையும் தந்துதவலாம். சிறு துளியென்றாலும் அதுவும் உதவியே என்ற புரிதலை அந்தக் கட்டுரை அந்த இளம்வயதில் எனக்கு ஏற்படுத்தியது. பின்னாளில், அந்தக் கட்டுரையை வாசித்த ஒரு பெண் மாதாமாதம் இப்படி உதவி தேவைப்படும் ஒருவருக்கு மணியார்டர் அனுப்பிவிட்டு அந்தச் சலானை எஸ்.ராவுக்கு அனுப்பினார் என்று எஸ்.ரா சொல்லியிருக்கிறார். எழுத்தின் தாக்கம் எந்தளவு தீவிரமாய் இருக்கும் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்தான். பிரமிள் குறித்து அவர் எழுதிய கட்டுரையை வாசித்த ஒரு வாசகர் பிரமிளுக்கு நினைவு மண்டபம் எழுப்புவதற்கு ஒரு லட்சம் ரூபாய் அனுப்பியதாகவும் எஸ்.ரா தெரிவித்திருக்கிறார். இதற்கு மேல் ஒரு எழுத்தாளருக்கு என்ன விருது வேண்டும்?
புதுமைப்பித்தன் பற்றிய தன்னுடைய ‘முத்திரையிடப்பட்ட நாட்கள்’ கட்டுரையில் சென்னை நகரைப் பற்றியும், இந்த நகருக்கு ஜெயிக்கலாம் என்ற ஆசையில் வந்து தோல்வியுற்ற கலைஞர்களைப் பற்றியும் எழுதிச் செல்கிறார். “நகரம் ஒரு சூதாட்டப் பலகையைப் போலச் சுற்றிக்கொண்டேயிருக்கிறது. ஒவ்வொருவரும் எதையோ இதன்முன் பணயமாக வைத்து ஆடத்துவங்குகிறார்கள். பலகை சுழலும் வேகத்தில் கைப்பொருட்கள் யாவும் காணாமல் போய்விடுகின்றன”, “எக்மோர் ரயில்நிலையத்தில் ரயில் வந்து நிற்கும்போதெல்லாம் மனம் தானே காலத்தின் பின்னே போய்விடுகின்றது. இதே ரயில் நிலையத்தில் எத்தனை எழுத்தாளர்கள், கலைஞர்கள் வந்து இறங்கியிருப்பார்கள். அவர்களில் அறியப்பட்ட ஒரு சிலரைத் தவிர மற்றவர்களெல்லாம் என்ன ஆனார்கள்? ஒரு கல்வெட்டைப் போன்றதுதான் ரயில் நிலையப் படிக்கட்டுகளும். அதில் பதிந்துள்ள பாத வரிகளைப் படிப்பதற்கு இன்றளவும் வழியில்லை,” போன்ற வரிகள் எல்லாம் இன்றும் நினைவில் பசுமையாக உள்ளன.
இந்தக் கட்டுரைகளையெல்லாம் வாசித்து இதை எழுதியவர் நிச்சயம் அறுபது வயதுக்கு மேலுள்ளவராகத்தான் இருக்க முடியும் என்று நானாக கற்பிதம் செய்திருந்தேன். ஆனால், துணையெழுத்து தொடர் நிறைவுற்றதும் எஸ்.ராவின் புகைப்படத்தை விகடனின் பார்த்தேன். அதில் ஒரு இளம் எழுத்தாளர், வெள்ளையும் நீலமும் கலந்த ஒரு டீ-ஷர்ட்டில் காட்சியளித்தார். ஏனோ மனதுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.
துணையெழுத்து வெளியான நாட்களில் எந்தப் பேனா வாங்கினாலும், ‘துணையெழுத்து’, ‘எஸ்.ராமகிருஷ்ணன்’, ‘நீரில் மிதக்கும் நினைவுகள்’ போன்ற துணையெழுத்து கட்டுரைகளின் தலைப்புகளைத்தான் எழுதிப்பார்ப்பேன். எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ஒரு நீண்ட வாசகர் கடிதமும் எழுதினேன். சில நாட்களிலே எனக்கு அவருடைய பதில் கடிதம் வந்தது. அதைப் படித்ததும் வாழ்வில் முதல்முதல் எதையோ சாதித்துவிட்டதைப் போன்று மனம் மகிழ்ச்சியில் துள்ளியபடியிருந்தது.
எஸ்.ரா ஒரு அஞ்சலட்டையில் பதில் எழுதியிருந்தார். அதுவரை அஞ்சலட்டையில் குறுக்குவாக்காக (landscape) எழுதித்தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், எஸ்.ரா நீளவாக்கில் (portrait) சிறிய எழுத்துகளில் எழுதியிருந்தார். இம்முறையில் மேலும் அதிகம் எழுதமுடியும். வாசகனுக்கு பதில் கடிதம் எழுதும் அவரது விருப்பத்தையும், அதேசமயம் அவரது சிக்கனத்தையும் என்னால் ஒருசேர அறிந்துகொள்ளமுடிந்தது. இந்த சிக்கனத்தை அவர் தனது விருப்பமான ஆளுமையான காந்தியிடமிருந்து பெற்றுக்கொண்டிருப்பார் போலும் என நினைத்தேன். ஆனால் ஒரு வாசகனாக பதினெட்டு வருடங்களுக்கு முன் எனக்கு அவர் எழுதிய அந்தக் கடிதத்தில் இடப்பெற்ற வரிகள்தான் இன்றளவும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் சுருக்கமாக இவ்வாறு எழுதியிருந்தார், “பார்வைக் குறைப்பாட்டினை ஒரு கண்ணாடி போடுவது சரிசெய்துவிடுவது போல மனதில் உள்ள குறைப்பாட்டினைப் புத்தகம் வாசிப்பது சரிசெய்துவிடும். உங்கள் மின்னணுவியல் புத்தகங்களுக்கு நடுவே துணையெழுத்திற்கும் இடமளித்தது மகிழ்ச்சியளிக்கிறது.” நான் உங்கள் தீவிரமான ரசிகன் என்று எழுதியிருந்ததற்கு அவர் இவ்வாறு பதில் அளித்திருந்தார், “நான் வாசகராக, ரசிகராக எவரையும் நினைப்பதில்லை, எல்லோருமே எனக்கு நண்பர்கள்தான். நீங்கள் நான் கண்ணில் காணாத ஒரு நண்பர், அவ்வளவே.” மின்னஞ்சலும், ஸ்மார்ட் போன்களும் அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லாத அந்தக் காலகட்டத்தில் ஒரு எழுத்தாளர் எனக்கு எழுதிய முதலும் முடிவுமான கடிதம் அதுவே. அதன்பின் எஸ்.ராவுடனும் வேறு பல எழுத்தாளர்களுடனும் மின்னஞ்சல் மூலம் தொடர்பில் இருந்தாலும் இன்றளவும் எனக்கு எஸ்.ரா எழுதிய அந்த அஞ்சலட்டைக் கடிதமே நினைவில் பொக்கிஷமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது.
அதன்பின் எஸ்.ரா எழுதிய அனைத்து நூல்களையும் தேடித்தேடி வாசித்தேன். ‘வெயிலைக் கொண்டு வாருங்கள்’ என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு சற்று வித்தியாசமான நடையில் இருந்தது. அதுவரை துணையெழுத்து கட்டுரைகளில் இருந்த எளிமையான நடைக்கு மனம் பழகிப்போயிருந்தது. ஆனால் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் வாசிப்பதற்கு சற்று கடினமாகவும் அதே சமயம் மனதிற்கு நெருக்கமாகவும் இருந்தன. அதன்பின் தீவிர இலக்கியக் கதைகளையும் பின்நவீனத்துவ மாய யதார்த்தக் கதைகளையெல்லாம் வாசிக்க இக்கதைகள் ஒரு உந்துசக்தியாக இருந்தன என இப்போது தோன்றுகிறது.
அவரது சிறுகதைகளை மூன்று பெரும் தொகுதிகளாக உயிர்மை வெளியிட்டிருந்தது. அவரது மொத்த கதைகளையும் ஒருசேர வாசிக்கையில் எனக்கு முதலில் தோன்றியது, நாமும் எழுதலாமே என்றுதான். உண்மையில் அவரது பல கதைகள் மிகச் சாதாரணமாகத் துவங்கி ஒரு தீவிரமான புள்ளியில் நிறைவடையும். ஒரு தேர்ந்த இலக்கிய வாசகனுக்குத் தீவிரமான வாசிப்பு அனுபவத்தையும் அளித்து அதே சமயம் தானும் எழுத முயற்சிக்கலாமே என்ற ஊக்கத்தையும் அளிப்பவை அவரது கதைகள். எனக்கு மட்டுமல்லாது பலருக்கும் இதே உணர்வு தோன்றியிருப்பதை நான் அறிவேன்.
எஸ்.ராவின் சிறுகதைப் பயணம் மூன்று அடுக்குகளினானது என்று என் வாசிப்பு அனுபவத்திலிருந்து உணர்ந்திருக்கிறேன். முதல் அடுக்கு அவரது யதார்த்தவாதக் கதைகள். அவரது ‘பழைய தண்டவாளம்’, ‘வெளியில் ஒருவன்’ போன்ற கதைகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள். வண்ணநிலவனின் பாதிப்பு வெளிப்படும் கதைகள். மெல்ல மெல்ல யதார்த்தவாதத்தைக் கடந்து அவர் தீவிரமான பின்நவீனத்துவப் பாணிக் கதை சொல்லல் முறைகளை நோக்கி நகர்ந்தார். இதை அவரது கதைகளின் இரண்டாவது அடுக்கு எனலாம். ‘வெயிலைக் கொண்டு வாருங்கள்’ தொகுதியில் உள்ள கதைகளை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இதில் மாய யதார்த்தவாதம், அதிகதைகள், நேர்க்கோடற்ற கதைசொல்லல் முறை, மையமற்ற கதைகள் என பலவகைகளில் எழுதியிருக்கிறார். அதன்பின் பின்நவீனத்துவ பாணியையும் உதறி மீண்டும் நவீன யதார்த்தவாதக் கதைகளுக்கு நகர்கிறார். இதில் பெரும்பாலும் மாநகரம் சார்ந்த மனிதர்கள், அவர்களின் விசித்திரப் பழக்கவழக்கங்கள், கைவிடப்பட்ட மனிதர்கள், முதியவர்களின் உலகம், பெண்களின் உலகம் என பரந்துபட்ட தளத்தை யதார்த்தவாத எழுத்தில் கையாண்டிருக்கிறார். ‘தாவரங்களின் உரையாடல்’ பாணி கதைகளிலிருந்து முன்னகர்ந்து கற்பனாவாத அடர்த்தியும், செறிவான மொழியையும் கைவிட்டு, எளிய நேரடியான மொழியைக் கையாண்டு அதே சமயம் தீவிரம் குறையாத படைப்புகளை நோக்கிய அவரது சமீபத்தைய நகர்வை அவரது கதைகளின் மூன்றாவது அடுக்கு எனலாம். என் வாசிப்பில் ‘பதினெட்டாவது நூற்றாண்டின் மழைத்’ தொகுதியிலேயே அவரது இரண்டாவது அடுக்கு நிறைவடைந்து அதற்குப் பின் எழுதப்பட்ட கதைகளில் மூன்றாவது அடுக்கு நோக்கி நகர்ந்திருக்கிறார் என்பேன்.
‘நெடுங்குருதி’ நாவல் நான் வாசித்த முதல் தீவிர இலக்கிய வகை நாவல். அதற்கு முன் நான் வாசித்ததெல்லாம் வரலாற்றுக் கற்பனாவாதப் புனைவுகளே. கல்கி, சாண்டில்யன், விக்கிரமன் நாவல்கள். அதிலிருந்து என்னைத் தீவிர இலக்கியத்தின் வழி மடைமாற்றியது எஸ்.ராவின் இந்த நாவல்தான். முற்றிலும் புதிய கதை சொல்லும் முறை, கவிதையின் எடை நிரம்பிய உரைநடை, பல வரிகள் கவிதை என்றே சொல்லத்தக்கவை, முற்றிலும் எதார்த்தமான பாத்திரங்கள், ஆயினும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தனித்துவமானவர்கள், மாய யதார்த்தம் விரவி நிற்கும் கதைச் சம்பவங்களும் கனவுகளும், குறிப்பாக ஆதிலட்சுமி கனவும் எதார்த்தமும் கலந்த ஒரு mystical-ஆன கதாபாத்திரம். வரலாறும் யதார்த்தமும் கவித்துவமான மொழியும் ஊடும் பாவுமாகக் கலந்திருக்கும் இது போன்ற நாவலை அதற்கு முன் நான் வாசித்ததில்லை. அரூப கதாபாத்திரங்களின் தாக்கம் நிறைந்த நாவலும் கூட. குறிப்பாக, வெயில் ஒரு கதாபாத்திரமாக விரியக்கூடிய அல்லது நாவலில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்களின் மௌன சாட்சியாகவே கடைசி பக்கம் வரை உடன்வரும் நாவல் பிறிதொன்றில்லை.
நெடுங்குருதி வாசித்த பின்புதான் ‘உபபாண்டவம்’ வாசித்தேன். அதிலும் முற்றிலுமான புதிய கதைசொல்லல் முறை. அடர்த்தியும் செறிவும் கூடிய கவித்துவமான மொழியில் செய்யப்பட்ட மகாபாரத மீள்புனைவு. நாவலின் முதல் பகுதியில் வரும் துரியோதனன் கூத்து, மிகுந்த உணர்வெழுச்சியூட்டுவது. தெய்வப் புருஷர்களாக, அதிமானுடர்களாக நாம் அதுவரை நினைத்திருந்த மகாபாரத கதாபாத்திரங்களை நம்முடன் வாழும் சக மனிதர்களைப் போல நினைக்கச் செய்வதுதான் நாவலின் வெற்றி. குறிப்பாக, வெற்றியடைந்த கதாபாத்திரங்களைக் காட்டிலும், அதுவரை வெளிச்சம் படாதிருந்த பெண்கள், சூதர்கள், பிற அடையாளமற்ற மனிதர்கள், அவர்களின் வாதைகள், ஆகியவற்றைக் கவனப்படுத்தும் நாவல் இது.
அதைத் தொடர்ந்து உறுபசி, யாமம், நிமித்தம், துயில், சஞ்சாரம் துவங்கி சமீபத்தில் வெளியான அவரது ‘ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை’ வரையிலான அனைத்து நாவல்களையும், கட்டுரைத் தொகுப்புகளையும் வாசித்தாயிற்று. இத்தனை காலமான பின்பும் எஸ்.ரா என் மனதின் உயரத்திலிருந்து வழுவவில்லை. தொடர்ச்சியான பயணமும், வாசிப்பும் அவரது படைப்புகளை முற்றிலும் புதிய திசைகளுக்கு இட்டுச்சென்றபடியிருக்கிறது. அவர் இன்னும் எனக்குச் சலிக்கவேயில்லை. இன்றும் பல புதிய அறிதல்களை அவரது புனைவுகளும் கட்டுரைகளும் அளித்துக் கொண்டேயிருக்கின்றன. அவரது வலைத்தளம் மாபெரும் தகவல் சுரங்கம். உலக இலக்கியம், நுண்கலைகள், வரலாறு, உலக சினிமா, பயணம், சிறார் இலக்கியம் என இத்துறைகளில் வாசிக்க, சாதிக்க நினைக்கும் எவருக்கும் அவரது வலைத்தளம் ஒரு மாபெரும் Database ஆக இருக்கிறது. இன்று இந்த வலைத்தளத்திற்கு நிகராக எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளத்தை மட்டுமே சொல்லமுடியும்.
விகடனில் துணையெழுத்து தொடருக்குப் பின் ‘கதாவிலாசம்’ என்ற கட்டுரைத் தொடரை எஸ்.ரா எழுதினார். தமிழ் எழுத்துலகில் தன்னுடைய முன்னோடிகள் மட்டுமல்லாமல் தனது சமகால எழுத்தாளர்களையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். வாசகர்களைப் பிற எழுத்தாளர்களையும் தேடித் தேடி வாசிக்க வைத்தார். வாசிப்பு என்பதை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்தார். எப்படி வாசிப்பது, யாரை வாசிப்பது, எந்த நூல்களையெல்லாம் வாசிக்க வேண்டும், வாசிப்பதன் நுணுக்கங்கள், வாசிப்பதை எப்படிப் புரிந்துகொண்டு விவாதிப்பது, அதனை வாழ்வோடு எப்படிப் பொருத்திக்கொள்வது போன்று வாசிப்பு சார்ந்த சகலத்தையும் அவர் தன்னுடைய பல்வேறு கட்டுரைகள் மூலமாகவும் பல்வேறு உரைகள் வாயிலாகவும் தொடர்ந்து பகிர்ந்துகொண்டு வருகிறார். வாசிப்பு சார்ந்து அவர் பேசியவற்றையும் எழுதியவற்றையும் தொகுத்தாலே குறைந்தது ஆயிரம் பக்கங்கள் வரும். இப்படி ஒரு எழுத்தாளர் நமக்கு முன்பிருந்த தலைமுறையில் இல்லை. க.நா.சுவைச் சொல்லலாம். ஆனால் வாசிப்பு அருகிப் போன நமது தலைமுறையில், இன்னும் சொல்லப்போனால் ஒரு எழுத்தாளரின் பெயர் கூடத் தெரியாத இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் சலிக்காமல் திரும்பத் திரும்ப வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார் எஸ்.ரா. ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சியில் தொடர்ச்சியாக வாசிப்பைக் குறித்து, வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்கள் குறித்து, புதிய எழுத்தாளர்களைக் குறித்துப் பேசியபடியிருக்கிறார். ஐ.ஐ.டி யில் சென்று புதுமைப்பித்தனைப் பற்றிப் பேசுகிறார். கல்லூரிகளில் வாசிப்பைப் பற்றித் தொடர்ந்து பேசுகிறார். பள்ளிகளில் சென்று கதை சொல்கிறார். ஒரு எழுத்தாளனின் நேரம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது என்னைப் போன்ற வாசகர்களுக்கு நன்றாகத் தெரியும். எஸ்.ரா போன்ற எழுத்தாளர்கள் சென்று பேசுவதால் எத்தனை கல்லூரி மாணவர்கள் உடனே இலக்கிய நூல்களை வாசிக்கப் போகிறார்கள் என்பது யாவருக்கும் தெரிந்ததே. ஜெயமோகன் கூட மனம் சலித்து நிறைய முறை எழுதியிருக்கிறார், கல்லூரிகளில் சென்று பேசுவதைப் போன்ற சலிப்பூட்டும் அனுபவம் பிறிதில்லை என. ஆயினும், ஏதோவொரு நம்பிக்கையில், இருளில் கைவிளக்கை ஏந்திச்செல்வது போல தொடர்ந்து வாசிப்பைக் குறித்து பள்ளி கல்லூரிகளில் எஸ்.ரா பேசிக்கொண்டேயிருக்கிறார். பலனைக் குறித்த பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல், நாமும் அவரிடம் இந்த நீடித்த நம்பிக்கையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
“எனது எழுத்தாளர்” என்று எஸ்.ராவை நான் விரும்புவதற்கு முதன்மைக் காரணம் இதுதான். வாசிப்பு, எழுத்தையெல்லாம் தாண்டி வாழ்வைக் குறித்தும், சுற்றியுள்ள மனிதர்களைக் குறித்தும் (அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும்) வாசகனுக்கு ஒரு ஆக்கபூர்வமான பார்வையை அளிக்கிறார். நம்பிக்கையை உறுதிசெய்கிறார். நம்பிக்கை என்ற சிறுவெளிச்சத்தைப் பின்தொடர்ந்தபடியே நாம் எப்படிப்பட்ட இருளையும் கடந்துவிட முடியும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறார். கொரோனா ஊரடங்கு காலத்திலும் அவர் இந்த நம்பிக்கையை வலியுறுத்தி தனது வலைத்தளத்தில் கட்டுரைகள் எழுதினார். அப்படிப்பட்ட வலிமிகுந்த காலகட்டத்திலும் வாசகர்கள் வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியலை அளிப்பது, பார்க்க வேண்டிய திரைப்படங்களின் இணையச்சுட்டிகள் தருவது எனத் தொடர்ந்து ஆக்கபூர்வமாகச் செயல்பட்டார். வாசகன் அவரிடமிருந்து எழுத்து, வாசிப்பு, இலக்கியம் இவற்றையெல்லாம் கற்காவிட்டாலும் கூட இவரது அந்த நீடித்த நம்பிக்கை உணர்வையும், ஆக்கபூர்வமான மனநிலையையும் நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டும்.
எத்தனை எத்தனை எழுத்தாளர்களை எஸ்.ரா அறிமுகப்படுத்தி எழுதியிருக்கிறார் என்று நினைக்கையில் மலைப்பேற்படுகிறது. கதாவிலாசத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்தாளர்களைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தினார். இலக்கிய உலகிற்கு வெளியே உள்ள வாசகர்களை இது மிகவும் கவர்ந்தது. நிறைய பொது வாசகர்கள் இலக்கிய உலகிற்குள் கதாவிலாசம் மூலம் வந்தார்கள். அதைத் தொடர்ந்து வாசகர்களையும், எழுத்தாளர்களையும் குறித்து விரிவாக ‘வாசக பர்வம்’ நூலில் எழுதினார். பஷீரின் வாசகரான மணி என்பவரைப் பற்றிய முதல் கட்டுரை இலக்கிய வாசகர் அனைவரும் தவறாமல் வாசிக்கவேண்டிய கட்டுரை என்பேன்.
உலக இலக்கிய எழுத்தாளர்களைக் குறித்து ‘விழித்திருப்பவனின் இரவு’ என்ற நூலை எழுதினார். ஒவ்வொரு இலக்கிய வாசகன் கையிலும் இந்தப் புத்தகம் கட்டாயம் இருக்க வேண்டும். நபகோவ் துவங்கி ஆக்டேவியா பாஸ் வரை எத்தனையோ எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் இந்நூலில் விரிவாக அறிமுகம் செய்கிறார் எஸ்.ரா. நபக்கோவ் பெயரில் ஒரு பட்டாம்பூச்சி இனம் அறியப்படுகிறது போன்ற செய்திகளெல்லாம் வாசகனுக்குச் சிலிர்ப்பூட்டுபவை.
‘நம் காலத்து நாவல்கள்’ என்ற நூலில் உலக இலக்கியத்தின் சிகரங்கள் எனக் கருதப்படும் நாவல்களைப் பற்றி விரிவாக எழுதுகிறார். இது போல எத்தனை எத்தனை நூல்கள். இது மட்டுமல்லாது உலக இலக்கியப் படைப்புகள் குறித்து பேருரைகளும் ஆற்றிவருகிறார்.
உலக சினிமா குறித்து எஸ்.ரா எழுதியவற்றை வாசித்து அவர் சொன்ன படங்களைப் பார்த்தாலே ஒருவர் தேர்ந்த உலக சினிமா ரசிகராக மட்டுமல்ல, உலக சினிமா நிபுணராகவே ஆகிவிடலாம். இது மிகையில்லை. உண்மை. அவரது ‘சிறிது வெளிச்சம்’ என்ற நூலில் ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு உலக சினிமாவைப் பற்றிச் சுருக்கமாக எழுதியிருப்பார். அந்தப் பட்டியலைக் கையில் வைத்து வடபழனியில் ஆர்காட் ரோட்டில் உள்ள கடைகளில் நானே ஐம்பதுக்கும் மேற்பட்ட டி.வி.டிக்களை வாங்கியிருக்கிறேன். அந்தக் கடைக்காரர்களே பலமுறை “இந்தப் படம்லாம் எப்படி சார் உங்களுக்குத் தெரியும், இது ஒரு கிளாசிக் சார், இப்பல்லாம் யார் இதைப் பாக்குறாங்க,” என்று வியந்து கேட்டிருக்கிறார்கள்.
‘உலக சினிமா’, ‘நான்காவது சினிமா’, ‘பெயரற்ற நட்சத்திரம்’, ‘காட்சிகளுக்கு அப்பால்’, ‘இருள் இனிது ஒளி இனிது’ என எத்தனையோ நூல்களை உலக சினிமா குறித்து எஸ்.ரா எழுதியிருக்கிறார். இலக்கிய உலகில் இருந்து உலக சினிமா குறித்து இத்தனை நூல்கள் எழுதிய பிறிதொரு எழுத்தாளர் இல்லை.
பயணத்தின் முக்கியத்துவம், பயணம் ஒரு மனிதனின் ஆளுமை வளர்ப்பில் ஆற்றக்கூடிய பங்கு, பொதுவாகப் பயணம் குறித்த விழிப்புணர்வு என எஸ்.ரா எழுதியவை ஏராளம். பயணம் என்பதே தேவையற்ற அலைச்சல் எனப் பொதுப்புத்தியில் உள்ள அபிப்ராயத்தையே எஸ்.ரா தலைகீழாக்கினார். அவரது எழுத்தின் மூலம் பயணத்தின் மதிப்பையே அவர் அதிகரித்தார். அவரது “பயணம்தான் என்னை எழுதவைத்தது” என்னும் வரி எனக்கு மிகவும் விருப்பமானது. துணையெழுத்து, தேசாந்திரி உட்பட அவரது பெரும்பாலான கட்டுரைகள் பயணம் பற்றியும், பயணத்தில் அவர் சந்தித்த மனிதர்களையும் பற்றியதுதான். விசித்திரமான பயணங்கள் (சென்னையிலிருந்து மதுரைக்கு டவுன் பஸ் மூலமே பயணித்தது, லாரியின் மேற்கூரையில் அமர்ந்து வட இந்தியா முழுக்க அலைந்தது), அப்பயணங்களில் சந்தித்த விசித்திரமான மனிதர்கள் என அவரது பெரும்பாலான படைப்புகளில் அடிநாதமாக இந்தப் பயணமே உள்ளது எனலாம். “நான் ஒரு பாதி முழுக்கப் பயணங்களாலும் இன்னொரு பாதி முழுக்கப் புத்தகங்களாலும் ஆனவன்” என்று அவரே பலமுறை எழுதியிருக்கிறார். இலக்கற்றப் பயணங்கள், திட்டமிடாத திடீர்ப் பயணங்கள், பொதுப் பார்வையில் அதிகம் தென்படாத இடங்கள் என அவரது பயணங்கள் வியப்பூட்டுபவை. சில சமயம் அச்சமூட்டுபவையும் கூட. சுற்றுலா முக்கியத்துவம் உள்ள இடங்களைத் தவிர்ப்பவர் (தாஜ் மகாலைக் கூட யமுனை நதிக்கரையோர கிராமங்களில் அலைந்து கொண்டிருந்தபோது தூரத்தில் இருந்துதான் பார்த்திருக்கிறேன் என்பவர்). பயணங்களில் எந்தவிதக் குறிப்புகளும் எடுத்துக்கொள்ளாதவர். நினைவில் இருந்து மட்டுமே எழுதுபவர் என இவரது பயணப் பழக்கவழக்கங்கள் பிற எழுத்தாளர்களிடமிருந்து பெரிதும் வித்தியாசமானவை.
சிறார் எழுத்தை விரும்பி முன்னெடுத்தவர். ‘ஏழு தலை நகரம்’ துவங்கி எத்தனையோ நூல்களை எழுதியவர். ஆலிஸின் அற்புத உலகைத் தமிழுக்கு கொண்டுவந்திருக்கிறார். இப்போது எத்தனையோ சிறார் நூல்கள் வெளிவந்தபடியிருக்கின்றன. அதற்கு ஒருவகையில் முன்னுதாரணமாக அமைந்தவை எஸ்.ராவின் நூல்களே எனலாம்.
எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல, தமிழில் அவர் ஒரு இயக்கம். தொடர்ந்து பல வருடங்களாக அவர் தன்னுடைய எழுத்துச் செயல்பாட்டின் வழியாக சப்தமில்லாமல் ஒரு சமூக மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறார். அதன் அளவுகள் வேறுபடலாம். ஆனால் அந்த மாற்றம் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது, இனியும் நடக்கும் என்பதே உண்மை. சமூக மாற்றம் என்பது சமூகத்தில் உள்ள மனிதர்களின் மனோபாவங்களின் மாற்றம்தான்.
சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், சினிமா, பயணம், வரலாறு, வாசிப்பு, சிறார் எழுத்து, நாடகங்கள், ஓவியம் முதலான நுண்கலை குறித்த எழுத்து என அவரது எழுத்துலகம் ஒரு அகன்ற Spectrum போன்றது. பல்வேறு நதிகள் கடலில் கலப்பது போல பல்வேறு துறை சார்ந்த அறிவு அவரது எழுத்தில் கலந்திருக்கிறது. அவற்றை அள்ளிப் பருகி தன்னுடைய ஆளுமையை மறுவார்ப்பு செய்து கொள்ள வேண்டியது வாசகனின் கடமை என்றே கருதுகிறேன்.
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…