மார்ஷை நம்பலாமா என்று சந்தேகமாகவே இருந்தது. ஏனெனில் மலைச்சிகரம் தெரிகிறது என்று இதுவரை மூன்று முறைகள் சொல்லியிருக்கிறான். ஒவ்வொரு முறையும் தட்டுத் தடுமாறி கற்கள், பாறைகளை ஏறக்குறைய பற்றிக்கொண்டு ஏறி ஒரு திருப்ப முனையில் நின்று அண்ணாந்து பார்த்தால்…இன்னொரு மேடுதான் தெரியும்.
“என்னை நம்பு, இப்போது ஸ்னோடன் கபே தெரிகிறது. அதன் அருகில்தான் உச்சி. இன்னும் கொஞ்ச தூரம்தான். வாவா ஜெப்…” மார்ஷின் குரல் எப்போதும் போல நம்பிக்கையாக ஒலித்தது. ஜெப்ரி தடுமாறியபடியே அடுத்த கல்லின் மேல் வலது காலை வைத்து ஊன்றிச் சரிபார்த்துக்கொண்டு இடது காலை அடுத்த இரண்டு கற்களின் மேல் அரைகுறையாக வைத்து…இப்படித்தான் கடந்த நான்கு மணி நேரமாகத் தடுமாறிக்கொண்டே இந்த ஸ்னோஸ்டோனியா மலைப்பாதையில் ஏறி வருகிறார். காலை 10 மணிக்கு ஆரம்பித்த மலையேறப் பயணம்.
“ஓ…ஆமாம், தெரிகிறது” வலது கையை நெற்றியில் சல்யூட் அடிப்பது போன்று வைத்துக்கொண்டு அண்ணாந்து பார்த்தார் ஜெப்ரி. அறிபுனைவு திரைப்படங்களில் வரும் விண்கலம் போலத்தான் தெரிந்தது அந்தக் கபேயின் கூரை. “சிறு விண்கலம்” என்று முனகினார். “கடல் மட்டத்திலிருந்து 3,500 அடிகள் மேலே ஒரு கபே…அதுவும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்ஸிலேயே உயரமான மலையின் உச்சியில் ஓர் கபே” என்றார்.
“இந்தக் கோவிட் காலத்தில் அது பூட்டப்பட்டுதான் இருக்கும். நிற்காமல் ஏறிக்கொண்டே இருந்தால் இன்னும் பத்து இருபது நிமிடங்களில் போய்விடலாம்” என்று சொல்லிக்கொண்டே போனான் மார்ஷ்.
பாதை இப்போது மேலும் செங்குத்தாகச் சென்றது. சொல்லப்போனால் பாதையே இல்லை. பன்முக வடிவப் பகடைக்கட்டைகளாய்ப் பெரும் கற்கள்தான் முன்னே கொட்டி இருந்தன. ஒன்றைப் பற்றித் தடுமாறி அதன் மேல் கவிழ்ந்து சுதாரித்துக்கொண்டு பின் அடுத்ததின் மேல் ஏற வேண்டியதிருந்தது. பலவித வடிவக் கற்கள் நிரம்பிய பாதையில் காலை வைக்கும்போது ஒன்றிற்கும் மேற்பட்ட கற்கள் நறுநறுத்தன. ஒரு காலை வைத்து ஊன்றும்போது சில சமயங்களில் பின்னங்காலுக்குக் கீழே கற்கள் இல்லாமல் தடுமாற வேண்டியிருந்தது.
சற்று நேரம் கழித்து ஏறுவதை மூச்சு வாங்க நிறுத்திவிட்டுப் பக்கவாட்டில் பார்த்தார்.
சரிவு உடனடியாகக் கீழே இறங்கி மறைந்து போனது. தொலைவில் சற்று கீழே ஒரு பெரிய ஏரி தெரிந்தது. தோளில் தொங்கிக்கொண்டிருக்கும் பைனாக்குலர் வழியாகப் பார்த்தார். தெளி பசுஞ்சுடர் மேற்பரப்பில் அலைகள் வருடிச்சென்றன.
“இதன் பெயர் என்ன தெரியுமா? வரைபடத்தில் இருக்குமே?” என்று முன் நோக்கிக் கத்தினார் ஜெப்ரி. மார்ஷ், கிட்டதட்ட 150 அடிகளுக்கு முன்னால் இருந்தான். அங்கிருந்து இரு உள்ளங்கைகளையும் தம் மார்பை நோக்கி விசிறி போல் ஆட்டினான். ஜெப்ரிக்குச் சிரிப்பு வந்தது. பொறு, பொறு வந்துகொண்டுதான் இருக்கிறேன் என்று முனகிக்கொண்டு மறுபடியும் நறுநறுக்கும் கற்பாதைகளின் மேல் தனது 90 கிலோ பாரத்தைக் கொண்டு அழுத்தி அழுத்தி ஏறிச் சென்றார்.
மார்ஷ் என்னச் சொல்லப் போகிறான் என்று ஜெப்ரிக்கு தெரியும். இப்போதே மணி இரண்டாகப் போகிறது. போய்ச் சேருவதற்கு இன்னும் அரை மணி ஆகும் போல இருக்கிறது. இத்தனை சிரமப்பட்டு வந்திருக்கிறோம். உச்சியிலிருந்து நிலக்காட்சிகளை எல்லா திசைகளிலிருந்தும் பொறுமையாகப் பார்க்க ஒரு மணி நேரமாவது வேண்டும். அப்புறம் மலையிறங்க ஆரம்பித்தால் எப்படியும் மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஆகிவிடும் போலிருக்கிறது. மூன்று மணி நேரம், மேலேறவும் கீழிறங்கவும் என்றுதான் கணக்கிட்டு ஏற ஆரம்பித்தார்கள்.
கணக்கிட்டு..! ஜெப்ரி தாராளமாக, நிமிர்ந்து புன்னகைத்தார்…
நேற்று இதே நேரம்கூட, எதையும் திட்டமிட்டிருக்கவில்லை. வழக்கம் போல், கடந்த பல மாதங்களாக இருந்தது போல், வடக்கு லண்டனில் தனது இரு படுக்கையறை வீட்டின் வரவேற்பறையின் சன்னலின் வெளியே வெறித்துக்கொண்டுதான் இருந்தார். வார நாட்களை, பள்ளி ஆன் லைன்வகுப்புகள் என்று ஒரு மாதிரி கடந்துவிட முடிகிறது. சொல்லப்போனால் அது ஒன்றுதான் வார நாளையும் வார இறுதிக்குமான ஒரு நூலிழை வித்தியாசம். மற்றபடி ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரிதான் சென்றன. அவரது தெருவில் இருக்கும் ஒரே மாதிரி வீடுகள் மாதிரி, அவை அத்தனை முன்னிருக்கும் ஒரே மாதிரியாகக் கத்திரிக்கப்பட்டிருக்கும் மரங்கள் மாதிரி…
அடுத்த தெருவும் முந்தின தெருவும் போல…ஒரே மாதிரி.
தினமும் காலை 6:30 மணிக்கு ஒரு அரை மணி நேர நடை. தெரு முனையிலுள்ள டெஸ்கோ துரித பலசரக்கு அங்காடியில் இரு வாரங்களுக்கொரு முறை போய்ச் சுருக்கமான ஷாப்பிங்.
மற்றபடி, பகல், அந்தி, இரவு எல்லா வேளைகளும் அந்த இரு படுக்கையறை வீட்டினுள், மழையில்லையெனில் பின் கட்டுக் குட்டித்தோட்டத்தினுள்தான். எதிர்ச் சாரியில் தனக்குத் தெரிந்து ஐந்து வீட்டுகாரர்களுக்குக் கோவிட் வந்திருக்கிறது என்றான் மார்ஷ்.
அநிச்சையாகத் திரும்பி கெட்டிலை ஆன் செய்தார். இந்த லாக்டவுன் நாட்களில் கெட்டிலும் மைக்ரோ ஓவனும் வாழ்வின், உடலின் பகுதிகளாகவே ஆகிவிட்டிருந்தன. கொரோனா பதட்டத்திற்கு முன் தனிமை என்று ஒன்று அவர்கள் வாழ்க்கையில் இந்த 47 வயது வரை இல்லை. வாரநாட்களில் பகலில் பள்ளி, செவ்வாய் மற்றும் வியாழன் பின் மாலைகளில் மாநகராட்சி நீச்சல் குளத்தில் ஒரு மணி நேர நீச்சல், சனி ஞாயிறு மதியங்களில் ஸ்குவாஷ் என்று தனிமை என்ற ஒன்று இல்லவே இல்லாத அவர்கள் வாழ்க்கையில் 2020 வருட மார்ச் ஆரம்பத்தில்தான் இந்தப் புது கவலை ஆரம்பித்தது. சற்று யோசிப்பதற்குள் பனிக்கால இரவு போல லாக்டவுன் அவர்கள் மேல் சட்டெனக் கவிழ்ந்துவிட்டது. மொத்த லண்டன் மேல். பிரித்தானியா மேல்…இந்தக் கிரகத்து மனிதர்களின் மேல்…
ஜெப்ரியும் தனிமையை விரட்ட என்னென்னவோ முயன்றார். விண்வெளிக் கப்பலில் வாழ்வது போலக் கற்பனை செய்துகொள்வார். பூமியிலிருந்து செவ்வாய்க்கு செல்லும் அல்லது அங்கிருந்து வரும் விண்கப்பலில் அவரும் மார்ஷும் மட்டுமே பயணிகள். கப்பலினுள்ளேயே எல்லாம். உண்பது, வாசிப்பது, திரைப்படங்கள், ஆவணப்படங்கள், விளையாட்டுகளைப் பார்ப்பது எல்லாம் கப்பலினுள்ளேயே. எப்போதாவது தேவைப்படும்போது ஆக்ஸிஜன் மற்றும் இதர பாதுகாப்புக் கவச உடைகளுடன் கப்பலுக்கு “வெளியே” உலாவப்போவது…
இதற்கு வழக்கமாக மார்ஷ் சிரித்து எதையாவது சொல்லிவைப்பான். நேற்று வித்தியாசமாக, தீவிரமாகி ஜெப்ரியையே நோக்கினான். சட்டென அவன்தான் இந்த யோசனையை முன் வைத்தான். இந்த வார இறுதி, மழையெதும் இல்லை. கப்பலை விட்டு வெளியேறி ஏதாவது மலையேறுவோமா என்றான். தேவையில்லாமல் வெளியே போவது என்பது சட்டவிரோதம் என்பது இருவருக்கும் தெரிந்துதான் இருந்தது.
பின் இருவரும் அதிகம் யோசிக்கவில்லை. சனிக்கிழமை மாலை, ஜெப்ரி “கப்பலை” விட்டு வெளியே போய்க் காரில் எரிபொருளை நிரப்பிவிட்டு வந்தார். ஞாயிறு அதிகாலை, இருவரும் வடக்கு வேல்ஸை, ஸ்னோடோனியாவை நோக்கிக் கிளம்பிவிட்டனர். வழியில் எங்காவது காவல் துறையினரால் நிறுத்தப்படுவதை எதிர்பார்த்துக்கொண்டேதான் இருந்தார்கள். கிட்டதட்ட இருநூற்று ஐம்பது மைல்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. மார்ஷ் சொன்னது போல் புத்தம் புது மணத்துடன் கூடிய ரொட்டியைப் புது கத்தியால் வெண்ணையை வெட்டியது போல் நழுவி, தாண்டி வந்துவிட்டார்கள். மலையேறுபவர்களுக்கான கார் பார்க்கிங் மூடப்பட்டுக் கோவிட் எச்சரிக்கைகள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தப் பாதையிலேயே சற்று தொலைவு சென்று ஓர் ஓரத்தில் மரங்களுக்கு இடையில் செருகிவிட்டு ஏற ஆரம்பித்துவிட்டார்கள்.
மார்ஷ், ஸ்னோடன் மலை உச்சியை அடைய இருக்கும் ஆறு வழிகளில் இருப்பதிலேயே அதிகச் சுற்று ஆனால் சுலப வழியைத் தேர்ந்தெடுத்திருந்தான் “இதைத்தான் யாரும் அதிகம் தேர்வு செய்யமாட்டார்கள்”.
மரங்களுக்கு மத்தியில் மறைந்திருந்த பாதையின் ஆரம்பத்தைச் சற்று சிரமத்திற்குப்பின்தான் கண்டுபிடித்தார்கள். பாதை, விருட்டென மேலேறாமல் zigzak ஆக வளைந்து வளைந்து, மெல்ல மெல்ல உயர்ந்து சென்றது. செம்மறி ஆடுகளின் சத்தம் கேட்ட சற்று தூரத்திலேயே மலைச்சரிவில் ஆட்டு மந்தையைக் கண்டார்கள்.
வெவ்வேறு வண்ண குறிகள் இடப்பட்டிருந்த ஆடுகளை ஜெப்ரி கவனித்தார். அவைகளும் சிரத்தையாக அவரைக் கவனித்தன. பாதை சற்று உயர்ந்தவுடன் மரங்கள் குறைந்து சிறு சமவெளிக்கு வந்தது போலிருந்தது.
“வீட்டிற்கு வெளியே இத்தனை நேரம் இருந்து எத்தனை நாட்கள் ஆயிற்று…என்ன ஒரு ஆறு மாதங்கள் இருக்குமா,?” என்று கேட்டார் ஜெப்ரி.
“கடைசியாக சென்ற நீண்ட பயணம், சென்ற மார்ச்…பர்மிங்ஹாம்…” என்று யோசனையிலேயே இருந்த மார்ஷ் முனகினான்.
கடந்த சில நாட்களாக மழை இல்லை போல, மண் ஈரமே இல்லாமல் இறுகி இருந்தது. முகத்தில் அடித்த மெல்லிய காற்றில் குளிரே இல்லை. அவ்வவ்போது எதிர்பட்ட சிறு ஓடைகளைக் கடந்து சென்றனர். சற்றே பெரிய ஓடையினுள் தேய்ந்து வழவழப்பான கற்களின் கால்களை மாற்றி மாற்றி வைத்து கால் சராய் ஓரங்கள் நனைய கடந்தனர். ஜெப்ரி ஒரு தடவை நின்று குனிந்து தண்ணீரை இரு கைகளாலும் அள்ளினார்.
“கண்ணாடியை அள்ளுவது போலிருக்கிறது, மார்ஷ்” என்றார். “குளிர்ந்த கண்ணாடி” என்று பதில் வந்தது.
மலைச்சரிவு மேலேற ஏற, அடிவாரம் மெல்ல மெல்லத் தாழ்ந்து கொண்டு போவதை உணரவில்லை. ஒரு கட்டத்தில் நின்று வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் ஏற ஆரம்பித்த இடம், புள்ளியாகத் தெரிந்தது கண்டு வியந்தார்.
அதன்பின் அவ்வப்போது நின்று திரும்பிப் பார்த்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் அப்புள்ளி மறைந்து போனது.
பாதை ஓர் உச்சிக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டுச் சற்று சமவெளியாக வந்து கொண்டிருக்கும், பின் சற்று இறங்கி வளைந்து விருட்டென மேலேறும். முதலில் புரியவில்லை, பின் ஏற ஏற மலைகளின் அமைப்பை ஒரு மாதிரி புரிந்துகொண்டார். அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிய மாபெரும் ஒழுங்கற்ற பிரமிட்களாக இருந்தன. பாதை, ஒரு பிரமிட்டின் உச்சியை அடைந்து பின் அதைவிட உயரமான அடுத்த பிரமிட்டின் மத்தியப் பகுதியில் தொடர்ந்தது.
யாருமே தென்படாத பாதையில், சுற்றிலும் பெயர் தெரியாத பறவைகளின் கீச்சொலிகளும், அவ்வப்போது தென்படும் அல்லது கேட்கும் ஓடைச்சத்தத்தில் உடலும் மனமும் தளர்ந்து இலகுவாக ஆகிக்கொண்டிருப்பதை ஜெப்ரி உணர்ந்தார்.
“The hills are alive” என்று மெல்லிய விசிலுக்கு முன்னே சென்று கொண்டிருந்த மார்ஷ் மெல்ல, தலையைக் குனிந்து திரும்பி புருவங்களை உயர்த்திச் சிரித்துவிட்டான்.
ஜெப்ரி, விஸிலடித்து முடித்துவிட்டு”மலைகள்…உயிர், மார்ஷ்!” என்றார்.
“ம்…நினைவிருக்கிறதா, போன மாத அறிவியல் வகுப்பில் பயல்கள் செவ்வாய் கிரகத்தைப் பற்றிக் கேட்டது”
“ஆமாம்! ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் போலவா கேட்டார்கள்…அடேயப்பா! அதெப்படி பூமியும் செவ்வாயும் கிட்டதட்ட சகோதரிகள் கிரகங்கள்; கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் உருவான இரண்டு கிரகங்களில் ஒன்றில் மட்டும் உயிர்கள் இருக்கின்றன, மற்றொன்றில் ஒன்றும் இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது என்று பயல்கள் கேள்விகளைக் கேட்டுத் துளைத்து எடுத்துவிட்டனர். இணைய வகுப்பில் கேள்வி கேட்பதற்கான விதிமுறைகளையெல்லாம், எல்லாரும் மறந்துவிட்டனர். பின், அனைவரையும் மியுட் செய்ய வேண்டியதாகிவிட்டது!”
அவர்கள் கேட்டதில் நியாயம் இல்லாமல் இல்லை….ஜெப்ரி யோசித்துக்கொண்டே நடந்தார். ஒரு துண்டு மேகம் கூட இல்லாமல் தலைக்கு மேல் நீலம் எங்கும் வியாபித்திருந்தது. தன்னைச் சுற்றிப் பார்த்தார்.
“நம்மைச்சுற்றிப் பார், மார்ஷ்…” மார்ஷ், இப்போது என்ன என்பது போல் பார்த்தான்.
“பாறைகள், மலைகள், மலைச்சரிவுகள், கிடுகிடு பள்ளத்தாக்குகள், தூரத்தில் குதிரைக் குளம்பாய் பெரும் ஏரிகள்….செவ்வாய் கிரகத்திலும் இப்படித்தான் இருக்கின்றன. குத்துப் பாறைகள், மாபெரும் மலைகள், எவரெஸ்ட்டை விடவும் பல மடங்கு உயரமுள்ள மலைச்சிகரங்கள், கணவாய்கள், ஆறுகள், பெருங்கடல்கள்…”
“நீரும் உயிரும் இல்லாத ஆறுகள், பெருங்கடல்கள்” என்று திருத்தினான் மார்ஷ்.
“முன்னர் இருந்திருக்கிறதுதானே…”
“முன்னர் இருந்திருக்கலாம்..ஹ! ஆம், சமீபத்தில், ஒரு நாலு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்..!”
மார்ஷின் கிண்டல் தொனியைப் புறக்கணித்துப் பேசிக்கொண்டே சென்றார்.
பாதை இப்போது செங்குத்தாக ஆரம்பித்தது. கிட்டதட்ட பாறைகளைப் பிடித்துக்கொண்டு சில சமயங்களில் தொங்கிக்கொண்டுதான் ஏற வேண்டியிருந்தது. அவ்வப்போது இளைப்பாற நின்றார்கள், அப்படியே உட்கார்ந்து தண்ணீர் போத்தல்களை உறிஞ்சினார்கள்.
மார்ஷ்தான் முதலில் எழுந்து நடக்க ஆரம்பிப்பான். இப்படியே நடந்து சில பிரமிட்களில் ஏறி ஒரு வழியாய் மலைச்சிகரமும் கபேயும் கண்களில் படும் இடத்திற்கு வந்துவிட்டனர்.
திடீரென நாம் தனியே இல்லை என்று மார்ஷ் கத்தினான். திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார். இப்போது மலைச்சிகரத்தில் சில ஆட்கள் சிறு பூச்சியாகத் தெரிந்தனர்.
காவல் துறையினரால் எல்லாரையும் தடுக்க முடியாதுதான் என்று சிரித்துக்கொண்டார்…
கண்ணெதிரே தெரிந்தாலும் உச்சியை நெருங்குவதற்கு நேரமாயிற்று. ஒரு வழியாய் ஸ்னோடனின் சிகர உச்சியை மூச்சிரைக்க அடைந்தனர். உச்சியில் பெருங்கற்களைச் சேர்த்துக் குவிக்கப்பட்ட ஒரு பெரும் தகடில் சிகர உயர விபரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
அதனருகில் இரு இளைஞர்கள் அதனருகில் V சைகையைக் காட்டிக்கொண்டு நிற்க, மூன்றாவது இளைஞர் அவர்களது அசட்டுக் களிப்பை மொபைல் போனில் சேகரித்துக்கொண்டிருந்தார்.
ஜெப்ரிக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வமில்லை. மார்ஷ் கேட்டுப்பார்த்துவிட்டு ஒரு செல்பி எடுத்துக்கொண்டான்.
அருகில் இருந்த மாபெரும் கல் மேடையில் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு அமர்ந்தார் ஜெப்ரி. வெளீரென வெயில் எங்குங்கும் வியாபித்திருந்தது. சுற்றிலும் ஆங்காங்கே பிரமிட் முகடுகளும் அவைகளுக்கு நடுவில் பள்ளத்தாக்குகளும் அவைகளில் குதிரைக் குளம்பு ஏரிகளும் கண்களையும் மனதையும் நிறைத்தன. திடீரெனச் சற்று அமளியான சத்தத்தைத் தொடர்ந்து பெரு வாத்துக்கூட்டம் ஒன்று அவர்களைக் கடந்தது.
மெல்ல அம்மேடையில் மல்லாந்தார். ஏராளமான வெளிச்சம் முகம் முழுவதும் அமிழ்ந்தது. கண்களை மெல்ல மூடிக்கொண்டார்.
கணக்கில்லாத கணங்களுக்குப் பின், மெல்ல “சொல்லு மார்ஷ்”
“என்ன சொல்லவேண்டும், ஜெப்?” என்றான் மார்ஷ். ஏதோ யோசனையிலேயே இருந்தான்.
“செவ்வாய்க் கிரகத்தில் நாலு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நீர் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கிறதெனில் அப்போது உயிர்களும் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது இல்லையா?”
“ஆமாம்!”
ஜெப்ரி திடுக்கிட்டு கண்விழித்தார். மார்ஷ் குரல் போல இல்லையே? மல்லாந்தவாறே பக்கவாட்டில் திரும்பினார். குறும்பு நீலக்கண்களுடன் சணல் முடிகளும் கொண்டு, ஓர் சிறுவன் அவருக்கு மிக அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
“மன்னிக்கவும், உங்களை ஒட்டு கேட்கும் எண்ணம் இல்லை. ஆனால், உங்கள் குரல் தானாக என்னை வந்தடையும்போது என்ன செய்வது?” என்றான்.
ஜெப்ரி இப்போது நன்றாக எழுந்து உட்கார்ந்துகொண்டு அந்தச் சிறுவனை நன்றாகப் பார்த்தார். கூர் நாசி புடைத்துக்கொண்டு அவரை மோப்பம் பிடித்தது. ஒன்பது அல்லது பத்து வயதிற்கு மேல் இருக்காது. இப்படி மொத்த நீலக்கண்களும் சிரித்து இதுவரை ஜெப்ரி பார்த்ததில்லை.
“மன்னிக்கவும், என்ன சொன்னாய்?!”
“வெல், செவ்வாய்க் கிரகத்தில் நாலு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நீர் இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன என்று சொன்னீர்கள் இல்லையா?”
“ஆம். மாபெரும் ஆறுகளும் பெருங்கடல்களும் இருந்திருக்கின்றன. பிரமாண்ட அருவிகளும் இருந்திருக்கின்றன”
“அந்தச் சூழ்நிலையில் எப்படி உயிர்கள் இல்லாமல் போயிருக்கமுடியும்?”
“வெல்…அங்குதான் ஆக்ஸிஜன் இல்லையே?”
“இப்போதுதானே இல்லை…அப்போது இருந்திருந்தால்…?”
ஜெப்ரி புன்முறுவல் பூத்தார்.
“இருந்திருந்தால்?”
“உயிர்களும், ஏதோ ஒரு வடிவத்தில் இருந்திருக்கலாம் இல்லையா?”
“ப்ராவோ!…” பையனுக்கு உற்சாகம் அதிகமாகியிருக்க வேண்டும். தலையைக் கோதிக்கொண்டான்.
“நீங்கள் நம்பவில்லை”
ஜெப்ரி நிதானமாக அவனைப் பார்த்தார். பின், “இல்லை, நம்புகிறேன். ஆனால் நீ ஏன் இப்படி நம்புகிறாய் என்று எனக்குச் சொல்ல வேண்டும்”
“ம்” என்றவாறு பையன் அவரைப் பாராமல் நேராகப் பார்த்தான். முகம் சட்டெனத் தீவிரமானது.
“பூமி போன்றே செவ்வாயின் நிலப்பரப்பும், பெருங்கடல்களும் ஆறுகளும் இருக்கும்போது உயிர்கள் மட்டும் ஏன் இருந்திருக்கக் கூடாது?”
“ம்…அதுதான் எப்படி சாத்தியம்?”
பயல் அவரைக் கவனிக்கவில்லை. எதிரே தொலைவில் தெரிந்த சிகர உச்சிக்கொம்புகளையும், அவை தொட்டுக்கொண்டிருந்த துல்லிய வானத்தையும் அச்சிகரங்களுக்கு நடுவில் ஆங்காங்கு தெளித்து விட்ட நீர் துளிகள் போன்ற குதிரைக் குளம்புகளையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்துக்கொண்டிருந்தது போலிருந்தது.
ஜெப்ரி மெல்ல, “இதுவரை நமக்குக் கிடைத்திருக்கும் நாஸா செய்திகளின்படி செவ்வாய் ஒரு கைவிடப்பட்ட கிரகம்” என்றார்.
“ஆம்…இப்போது கைவிடப்பட்ட கிரகம்…முன்னர் யாராவது இருந்திருக்கூடிய வீடுதானே?”
“தாமஸ்..” என்ற குரல் வந்த திக்கை நோக்கினார்.
“யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லித்தானே கூட்டி வந்திருக்கிறேன்” என்றவாறு ஒரு பெண் ஏறிவந்தார்.
எத்தனை அகலமான முகம்! ஆங்காங்கே செம்புள்ளிகளுடன் (சிறுவன் முகத்திலும் இம்மாதிரி புள்ளிகள் இருந்ததை நினைத்துக்கொண்டார்) கூர்ந்த நாசி, நடைகளுக்கு ஏற்ற பெரும் பூட்ஸ்களும் சாதாரண மேல் சட்டையும் அரை நிஜாரும் அணிந்திருந்தார். கையில் நீண்ட கோலுடனும் தொப்பியுடனும் இரு படிகளாகத் தாவி வந்தார்.
“மன்னிக்கவும், தாமஸின் தொந்தரவிற்கு”
“சேச்சே…நாங்கள் இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறோம்!” என்று முனகினார் ஜெப்ரி. வியந்து, நிமிர்ந்து பார்ப்பதை உணரவில்லை.
“இந்த லாக்டவுன் காலத்தில் எப்படி இங்கே?” என்று சிரித்து முகம் முன் வந்து மறைத்த முடியைக் கதவுத் திரைச் சீலைகளை ஒதுக்குவது போல் இரு கைகளாலும் ஒதுக்கினார்.
மார்ஷ் மெல்லச் சிரித்தபடி “நாங்கள் லண்டனிலிருந்து வந்திருக்கிறோம் என்றால் நம்புவீர்களா?”
அந்தப் பெண், சட்டென வியந்து” வாவ்…அங்கிருந்தா?” என்றவாறே ஜெப்ரிக்குப் பின்னால் பார்த்தார்.
“பைதிவே, என் பெயர் ரூத்.” என்று கை நீட்டிக் குலுக்கினார். கன்னங்களும் மார்புகளும் ஒரு வித ஒழுங்கில் அசைந்தன. இரண்டுமே பூரித்துப் போயிருந்தன.
“நான் ஜெப்ரி” என்று கை குலுக்கிவிட்டு “நீங்கள் மட்டும் எப்படி” என்று கேட்க ஆரம்பிப்பதற்கு முன், ” எங்கள் பண்ணை, மலையடியவாரத்தில் இருக்கிறது” என்றார்.
“ஓ….”
“பனிக்காலம் தவிர மற்ற நேரங்களில் மாதம் ஒரு முறையாவது இங்கு வந்துவிடுவோம். தாமஸிற்கு இந்த மலையேற்றப் பயணம் ஒரு பிடித்த பொழுதுபோக்கு..”
ஜெப்ரி புருவங்களை உயர்த்தினார். அந்த வேகமான வெல்ஷ் உச்சரிப்பில் புரிந்துகொள்ளச் சற்று சிரமமாக இருந்தது. “மொபைல்கள், டேப்லட்களிலிருந்து கண்களை விலகியிருக்க வைக்கும் எந்தச் செயலும் நல்லதுதான்” தோள்களைக் குலுக்க முயன்றார்.
“மிஸ்டர் ஜெப்ரி, ஒரு நிமிடம், இதோ வருகிறேன்” என்றவாறு தாமஸ் எழுந்து சிகரத்தின் இன்னொரு பக்கத்தை நோக்கி ஓடினான்.
“தாமஸ்…தாமஸ்…கவனம், அந்தப் பக்கம் போகக் கூடாது என்று சொன்னது நினைவிருக்கட்டும்” என்று கத்தினார்.
“நினைவிருக்கிறது” என்ற குரல் கேட்டது.
“நீங்கள் எந்த வழியில் மேலேறி வந்தீர்கள்?”
“அது…”ஜெப்ரி தயங்கினார். மார்ஷிற்குத்தான் தெரியும்…எழுந்து நின்று சுற்றிப் பார்த்தார்.
சிகர உச்சியிலிருந்து பார்த்தால் எந்த வழியாக மேலேறி வந்தார்கள் என்றே தெரியவில்லை. எல்லா வழிகளும் ஒரே மாதிரியாக இருப்பது போன்று இருந்தது. தடுமாறினார்.
“உச்சிக்கு வருவதற்கு அதிகாரப்பூர்வமாக மட்டுமே மொத்தம் ஆறு வழிகள் மலையின் வெவ்வேறு திசைகளில் இருக்கின்றன” என்றவாறு எழுந்து நின்றார் ரூத்.
“காரை எங்கு நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்?”
“ஒரு ymca விடுதியைத் தாண்டி காரை நிறுத்தியிருக்கிறோம்”
“சரி சரி, வழியில் அருவி எதையாவது கடந்து வந்தீர்களா?” என்று கேட்டார்.
“அது போன்று எதுவும் நினைவில்லையே?” என்று தயக்கமாகச் சொன்னார், ஜெப்ரி.
“சரி, அனேகமாக, ஸ்னோடன் ரேஞ்சர் பாதையில் வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்…அதில் பெரும்பாலும் வழி, அதிக சிரமமில்லாததாக இருக்கும். கடைசி சில நூறு அடிகள் மட்டும் செங்குத்தாக, பாறைகளைப் பற்றி ஏறி வரவேண்டியதாக இருக்கும்”
ஜெப்ரி சற்று சிரித்து வைத்தார்.
“இன்று அருமையான நாள். முழுமையாக, பனிக்காலத்தினுள் மூழ்கிப் போய்விடுவதற்குமுன் மழையில்லாத வேனி காலத்தை ஒரு முறை திரும்பிப் பார்ப்பது போன்ற ஒரு நாள். சரியெனக் கிளம்பிவிட்டோம்”
“ஆம், நாங்களும் அப்படி காலநிலைத் தளங்களைப் பார்த்துவிட்டுதான் இன்று பயணத்தைத் தேர்ந்தெடுத்தோம்”
ரூத் அவரை முழுமையாக கவனித்தார்.
“மலையேறுவதற்கான உடைகளை அணைந்திருக்கிறீர்கள். ஆனால் இவை கோடை கால உடைகள்…மலையில் காலநிலை எப்படி மாறும் எனச் சொல்லவே முடியாது…முக்கியமாக இலையுதிர்காலத்தில். பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே, அடுத்த நொடியில் மாறிவிடும், கவனம்” என்றார்.
“இந்த லாக்டவுன் மட்டும் இல்லையெனில் இவ்விடத்தில் நீங்கள் இப்படி உட்காரக்கூட முடியாது. அத்தனை கூட்டமாக இருக்கும், தெரியுமா?” என்றார்.
சற்று நேரம் மவுனமாக இருந்தார்கள். பின், ரூத், “தாமஸ்…” என அவனைத் தேடிப் போனார்.
ஜெப்ரி தனது பையிலிருந்து சாண்ட்விச் பொதியைத் திறந்து அதனுள் உருளை வருவலைப் பொதித்து வைத்துப் பொறுமையாக வாயை அகலமாகத் திறந்து திணித்துக்கொண்டார்.
***
கற்கள் நெரிபடும் சத்தங்கள் அதிகரிக்க, தாமஸ் அவர்களை நோக்கி வந்தான்.
“உன்னுடைய சேகரிப்பை மிஸ்டர் ஜெப்ரியிடம் காட்டினாயா?” என்ற ரூத்தின் குரல் அவனுக்குப் பின் ஒலித்தது. பெருமை புன்னகையுடன் தோளிலிருந்த தோல் பையைத் தட்டினான், தாமஸ்.
என்னதிது என்ற ஜெப்ரியின் கேள்விப்பார்வையை எதிர்பார்த்தது போல் பைக்குள்ளிலிருந்து என்னவோ எடுத்து ஜெப்ரியின் முகத்தின் முன் உள்ளங்கைகளை விரித்தான்.
வெளுத்த உள்ளங்கைகளுக்குள் சிறிதும் பெரிதுமான வழவழப்பான செம்மண் ஒட்டிய கருங்கற்கள் மினுமினுத்தன.
“இதோ பாருங்கள் மிஸ்டர் ஜெப்ரி, என் சேகரிப்பு… இவை என்னவென்று சொல்லுங்கள்?”கண்களிலும் குரலிலும் குறும்பு வழிந்தது.
ஜெப்ரி தன் இரு கைகளையும் சாண்ட்விச் துகள் போக உரசிக்கொண்டு, “வெல்…கற்கள்” என்றார். தாமஸின் முகம் மாறவில்லை.
மார்ஷ், மெல்ல “…கரிமியம்” என்றான்.
“மிகச்சரியாக சொன்னீர்கள்!” கூக்குரலிட்டான் தாமஸ்.
“அட…” ஜெப்ரி, தாமஸை குறுகுறுப்பாகப் பார்த்தார்.
“நாம், இந்த மலை, ஏரி எல்லாமே இந்தக் கரிமியம்தான். கரிமியத்தைத்தான் உண்கிறோம், சுவாசிக்கிறோம். செவ்வாய்…”
மார்ஷ், யோசனையுடன் தாமஸைக் கூர்ந்து பார்த்தான். பின் சற்று வியப்பான குரலில், “ஓ…நீ கார்பன் சுழற்சியைக் குறிப்பிடுகிறாய், இல்லையா?”
தாமஸ், குறுகுறுப்பு குறையாமல் தலையை மேலும் கீழும் ஆட்டினான்.
மார்ஷ், “ஜெப்ரி, பூமியின் கார்பன் சுழற்சியை வைத்து பூமியை, உயிர்களின் பரிமாணத்தை அறிந்தது போல் செவ்வாயின் கார்பன் சுழற்சியைப் பற்றி அறிந்துகொள்ள ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று நாம் பள்ளி நூலக சஞ்சிகைகளில் படித்தோம்…”
ஜெப்ரிக்குச் சரியாக நினைவில்லை. ஆனால் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
இப்போது மார்ஷ், உற்சாகமான குரலில், “ஆம், நேஷனல் ஜியோக்கிராபி மலரிலா அல்லது வேறு ஏதும் அறிவியல் சஞ்சிகையோ, நினைவில்லை, ஆனால் படித்தோம், நன்றாக நினைவிருக்கிறது. செவ்வாயின் கார்பன் சுழற்சியின் முடிச்சு பலவித விடைகளுக்குக் கொண்டு செல்லும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்”
தாமஸ், நிதானமாக அப்பாறையின் அமர்ந்து, தன் இரு கைகளையும் கொண்டு மடிகளில் ஊன்றி இரு பக்கக் கன்னங்களையும் தாங்கிப்பிடித்தவாறே,
“அப்படி என்ன ஆராய்ச்சி செய்கிறார்கள், கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றான்.
மார்ஷ், “பொறு…படித்ததை நினைவு கூர கொஞ்சம் நேரம் கொடு..” என்று சிரித்து மெல்லத் தலையை வலமும் இடமும் ஆட்டிக்கொண்டான்.
“ஓகே…செவ்வாய்க் கிரகத்தில் எடுத்த கற்களையும் தூசிகளையும் ஓவன் வெப்பத்தில் ஆழ்த்தி, அவற்றிலிருந்து வெளிப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடையும் ஆக்ஸிஜனையும் வைத்து என்ன மாதிரியான கனிமங்களிலிருந்து இவ்வாயுக்கள் உருவாகி வந்திருக்கும் என்ற கோணத்தில் ஆராய்ச்சி நடக்கிறது”
“இதுவரை, செவ்வாயில் கிடைத்திருக்கும் கார்பொனட்டுகளின் அளவு குறைவு. ஏமாற்றம்தான். ஆனால் ஒருவேளை அவை இன்னொரு வடிவில் வேறு கனிமங்களில் மறைந்திருக்கலாம். உதாரணத்திற்கு ஆக்ஸலெட்டுகள் வடிவத்தில். அவை, கார்பனட்டுகளின் வடிவத்திலிருந்து மாறுபட்டவை”
“நான் சொல்லவருவது உனக்கு முழுவதும் புரியும் என நான் எதிர்பார்க்கவில்லை” என்று சிரித்தான், மார்ஷ்.
தாமஸ், “ஆக்ஸலெட்டுகள்…பூமியில் தாவரங்கள் உற்பத்தி செய்பவைதானே?” என்றான் அமைதியாக.
மார்ஷ், புருவங்களை உயர்த்தி, அவனை உற்றுப் பார்த்தான்.
“என்னை ஆச்சரியப்படுத்துவதை நீ நிறுத்தவில்லை, தாமஸ்!”
“ஆம், ஆனால் அவை உயிரியல் அல்லாத ஒளிச்சேர்க்கை மூலமாகவும் உண்டாகலாம். பூமியில் இது தேவைப்படாது, ஏனெனில் இங்கு தாவரங்கள், உயிர் இருக்கின்றன…”
சற்று யோசித்துவிட்டு, “சொல்லப்போனால், இங்கு தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு முன் இப்படி உயிரியல் அல்லாத ஒளிச்சேர்க்கை மூலமாகத்தான் முதல் உயிர் உருவாகியிருக்கலாம் என்ற கருதுகோளும் இருக்கிறது…
எனிவே, இனி வரும் காலங்களில் நிறைய சுவாரசியக் கண்டுபிடிப்புகள் வெளிவரும் என்பது மட்டும் நிச்சயம்!”
ரூத் மெல்ல எழுந்து தாமஸின் பையைத் தூக்கிப் பார்த்தார். “இதற்கு மேல் சேகரிக்காதே தாமஸ்! இப்போதே கனக்கிறது!”
“இவைகளைக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்?”
“வெல்…” என்று தயங்கி, வெட்கச் சிரிப்புடன் ரூத்தைப் பார்த்தான்.
“தயங்காமல் சொல்” என்றாலும் அவன் தோள்களைக் குறுக்கிக்கொண்டு அம்மாவிடம் மெல்ல ஒண்டினான்.
அவன் தலையைத் தடவிக்கொண்டே, நாளை செவ்வாய்க்குப் போகும்போது இவற்றை எடுத்துக்கொண்டு போவான். அப்படித்தானே, தாமஸ்?” என்று குனிந்து கேட்டார்.
தாமஸ், அம்மாவிடம் ஒண்டிக்கொண்டே நிமிர்ந்து ஜெப்ரியை முழுவதும் பார்க்காமல் தலையை ஆட்டினான். பின் “இன்னும் ஒரு தடவை” என்று அவரிடமிருந்து பிய்த்துக்கொண்டு ஓடினான்.
“போதும் தாமஸ், கீழே போகும் போதும் எடுக்கத்தான் போகிறாய்” என்றார். அவரது தாடை, சற்று அதீதமாக அகலமாக, நீண்டு இருப்பதைக் கவனித்தார்.
“ஸோ, எப்போது கீழே இறங்க ஆரம்பிக்க உத்தேசம்?” என்று கேட்டதும்தான் ஜெப்ரிக்கு உடனே மணி பார்க்கத் தோன்றியது.
நாலாகிவிட்டது!
“நீங்கள் வந்த பாதையிலேயே திரும்பப் போகிறீர்கள் எனில் இப்போதே நீங்கள் இறங்க ஆரம்பிக்க வேண்டும்” என்றார்.
“இன்னும் இரு மணி அல்லது மூன்று மணி நேரத்திற்குள் இருட்டிவிடும்”
“அடிவாரத்தைவிட மலையில் வெளிச்சம் அதிகம் இருக்கும். இருந்தும் இப்போதே ஆரம்பிப்பது நல்லது”
ஜெப்ரி, பதட்டத்தைக் காட்டாதது போல் மெல்ல எழுந்துகொண்டார். மறுபடியும் சுற்றிப் பார்த்தார். இப்போது மலைச்சிகரத்தில் யாருமே இல்லை. ஆங்காங்கே ஓரிருவராக தெரிந்தவர்கள் எல்லாரும் கீழே இறங்க ஆரம்பித்திருக்க வேண்டும்.
சிகரத்தைச் சுற்றி எல்லா திசைகளிலும் ஒரு வழி கீழே செல்லுவது தெரிந்தது. எல்லாமே ஒரு கட்டத்தில் கீழே சென்று மறைந்தன. அதன் அருகில் சென்று பார்த்தால் மட்டுமே கீழே தெரியும் போல.
மார்ஷிற்கும் இறங்க வேண்டிய வழி தெரியவில்லை என்று பார்த்தாலே தெரிந்தது.
ரூத், பதட்டப்படாமல் எழுந்துகொண்டு, “என்னுடன் வாருங்கள். இருவர் பாதைகளும் ஒன்றாகத்தான் கொஞ்ச தூரம் செல்லும்” என்று தம் தோள் பையை இறுக்கிக்கொண்டார். தண்ணீர் பாட்டிலைச் சிறிது சப்பிக்கொண்டார்.
சற்று தயக்கமாக ஜெப்ரி, ” நீங்கள் செல்லும் வழி…” என்று இழுத்தார்.
“அது சற்று சுருக்கமான வழி, ஆனால் மிக செங்குத்தாக இறங்கும், அனுபவம் கொண்டவர்களே சற்று தடுமாறுவார்கள். உங்களுக்குச் சரிப்பட்டு வராது” என்றார். மேலும், “அது, நேராக எங்கள் பண்ணைக்குப் பின்புறம் சென்றுவிடும்…தாமஸ்…போகலாம் வா” என்று முன் நகர்ந்தார்.
ஜெப்ரி, மார்ஷை நோக்கினார். வேறு வழியில்லை, கிளம்பவேண்டியதுதான் என்பது போல் தலையை ஆட்டினான்.
வானம் துல்லியமாக நீலமாக இருந்தாலும் சுற்றி இருந்த மலை முகடுகளை ஒட்டிய அதன் ஓரங்கள் மெல்ல ஆரஞ்சு அல்லது ரோஸ் நிறத்திற்கு மாறிக்கொண்டிருந்தன. முகத்தில் மெல்லிய அலைகளாகத் தொடர்ந்து வீசிக்கொண்டிருந்த காற்றில் சற்று குளிரை உணர்ந்தார் ஜெப்ரி.
“அதோ..ஐரிஷ் கடல் தெரிகிறதா..தூரத்தில்…” வெகு தூரத்தில் சின்ன நீலக் கோடு வானத்தின் அடியில் இருந்ததைப் பார்க்க முடிந்தது.
அவர்கள் செல்லும் பாதையைக் கவனித்தார். எதிரே, சற்று தூரத்தில் பாதை, ஒரு முகட்டில் சென்று இறங்கி சரலென மறைந்தது. எப்படி இறங்கப் போகிறோம் என்று சற்று திகைப்பாக மார்ஷைக் கவனித்தார். அவனும் பாதையையே கவனித்தபடியே நடந்துவந்தான்.
“மிஸ்டர் ஜெப்ரி, உங்கள் இடதுபுறம் பாருங்கள்” தாமஸின் குரலில் உற்சாகம் வற்றவில்லை.
இடதுபுறம் மலைச்சரிவு, இவர்களுடன் மேலும் இறங்கியது. “செவ்வாய்க் கிரகத்திலும் இப்படித்தான். மலைகளும், சரிவுகளும், கிடுகிடு பள்ளத்தாக்குகள், தூரத்தில் குதிரை குளம்பாய்ப் பெரும் ஏரிகள்”
“என்ன, செவ்வாய், இப்போது செஞ்கிரகம். நாமோ பச்சை அல்லது நீலப் பந்து”
ஜெப்ரி, “உன் பையை மறக்காமல் எடுத்துக்கொண்டாய் அல்லவா?”
ஆம், அதை எப்படி மறப்பேன்”
சற்று முன் சென்றுகொண்டிருந்த ரூத், “முன்பெல்லாம் டைனஸர்கள்தான் இவனது பேவரிட். அவைகளின் அனைத்து வகை பொம்மைகளையும் சேகரித்து வைத்திருந்தான். அவைகளைப் பற்றிய சின்ன சின்ன விவரங்கள்கூடச் சொல்வான். சென்ற வருடத்திலிருந்துதான் செவ்வாய் இவனது பேஷனாக மாறிப்போனது” என்று சிரித்தார்.
தாமஸ், இப்போது ஜெப்ரியை ஒட்டி நடந்துவந்தான்.
“நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் கண்டிப்பாய் ஒரு நாள் அங்கு உயிர்கள் இருந்தன என்று கண்டுபிடித்துச் சொல்லப்போகிறார்கள்…நான் வளர்ந்ததும் அங்கு செல்லும் ஷட்டிலைச் செலுத்தும் விமானியாக ஆவேன். பின் அங்கு இறங்கி விண்வெளி வீரனாக ரோவரை ஓட்டிச் செல்லுவேன்”
“அப்புறம்?”
“அங்கிருந்த மனிதர்களைப் பற்றி நிறைய கண்டுபிடிப்பேன்”
“மனிதர்கள் என்று முடிவே செய்துவிட்டாயா?!”
“சரி, ஏதாவது ஓர் உயிரி” ரூத், இப்போது சிரித்துக்கொண்டே திருத்தினார்.
“அவர்கள் இன்னும் அங்கிருக்கிறார்கள் என்றும் கண்டுபிடித்துச் சொல்வேன்”
“அப்படியா சரி, எப்படி தொடர்புகொள்வாய்…தொடர்பு மிக முக்கியமல்லவா?”
“ம்…அது…எப்படியாவது செய்ய வேண்டும்…அல்லது…” யோசிக்கிறான் என்று தெரிந்தது.
“அல்லது..?”
“அல்லது, அவர்களும் ஏதாவது ஒரு வழியில் தொடர்புகொள்ள முயற்சி செய்வார்கள்…அப்போது பிடித்துக்கொள்ள வேண்டும்”
“ஆமாம்…நீ பெரியவனாக ஆகும்போது நிச்சயம் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லும் பணி இன்னும் இலகுவாக மாறியிருக்கும். இப்போதே நாஸா அல்லாது மற்ற தனியார்ப் பயண முயற்சிகளைப் பற்றி நிறைய செய்திகள் வருகின்றன…”
ஆம்…சற்று யோசனைக்குப்பின், “மிஸ்டர் ஜெப்ரி…”
“ம்?”
“அவர்கள் இப்போது தொடர்புகொள்ளவில்லை என்பது எப்படி நமக்குத் தெரியும்?” என்று அவரைப் பக்கவாட்டில் நிமிர்ந்து பார்த்துக் கேட்டான்.
“வெல்…நல்ல கேள்வி…நாஸாவும் பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும் எத்தனையோ சாட்டிலைட்டுகளும் இதுவரை எதையும் பிடித்தது போலத் தெரியவில்லையே..?”
பாதை மலை முகட்டில் போய் முடிய முடிய, கீழே இறங்கி இப்போது மேலும் தெரிந்தது. சற்று சறுக்கியது. கவனம் என்றார் ரூத்.
“நமக்கு இன்னும் புரியவில்லை என்றும் வைத்துக்கொள்ளலாம் இல்லையா?” மார்ஷ்.
நீயும் இதில் இறங்கிவிட்டாயா என்பது போல் புன்னகைத்தார், ஜெப்ரி.
பாறைகளின் இடையே காலை வைத்து இறங்குவதற்கு அதிகக் கவனம் தேவைப்பட்டது. சுலபமாக இறங்கிவிடலாம் போல என இப்போது தோன்றியது.
ஜெப்ரி இரு கற்கள் தாண்டுவதற்குள் ரூத்தும் தாமஸும் பல படிகள் தாண்டிச் சற்று தொலைவில் நிற்பதைச் சங்கடமாக உணர்ந்தார். ஆனால் இதற்காக, வேகமாக இறங்க முற்படுவது கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். ஒரு சிறு சறுக்கு, தலையில் சிறு அடி போதும் அல்லது வலது பக்கம் கூடவே வந்து கொண்டிருக்கும் சரிவு எங்கு கொண்டு போய்ச் சேர்க்கும் என்று நிச்சயமாகத் தெரியவில்லை…
மார்ஷுடமிருந்து ஒரு சத்தமும் இல்லை. முழு கவனத்துடன் இறங்கிக்கொண்டிருந்தார்கள்.
சற்று தூரம் சென்று ஒரு முனையில் திரும்பி மலையின் இன்னொரு பக்கத்திற்கு வந்ததும் சற்று சமதளமாக இருந்தது. தூரத்தில் இன்னொரு குதிரைக் குளம்பு ஏரி தெரிந்தது.
“இந்த வழியிலா வந்தோம்…” என்று இழுத்தார், ஜெப்ரி.
“இப்படித்தான் வந்திருக்கிறீர்கள். பழக்கம் இல்லையெனில் மலையில் எளிதில் வழி மறந்துவிடும், கவனம்” ரூத், சற்று வேகமாக முன்னேறிச்சென்றார்.
“மிஸ்டர் ஜெப்ரி…இங்கு பாருங்கள், எனக்கு எப்போதுமே பிடித்த இடம்…” தாமஸ் ஒரு முனையில் நின்று கத்தினான். சற்று நேரம் கழித்து அவனிருக்கும் இடத்தை அடைந்தார். அந்த இடத்தில் பாதை வளைந்து மலையின் இன்னொரு பக்கத்தில் திரும்பியது. நேர் எதிரில் பெரிய பள்ளத்தாக்கு.
ஒரு மாபெரும் டைனஸோரின் முதுகின் ஏதோ ஓர் முனையில் இருப்பது போன்று உணர்ந்தார். இங்கிருந்து கீழே பார்க்கும்போது மலையின் தொடர் ஓர் பெரும் கோடாகச் சென்று முகடாக எழுந்து பின் சரிந்து பள்ளத்தாக்காக இறங்கி பின் மெல்ல, டைனஸரின் மூச்சு மேல் எழுவது போல் எழுந்து இன்னொரு முகடாக உயர்ந்து பின் மறுபடியும் இறங்கி…முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.
“ஒரு பெரிய எருதின் முதுகில் ஒட்டிக்கொண்டிருப்பது போல இருக்கிறது, இல்லையா, மிஸ்டர் ஜெப்ரி?”
“… அங்கே பாருங்கள்…” தாமஸ் வானத்தைக் காட்டினான்.
பழுப்பு மேகம் போன்று ஒன்று சட்டென அலைந்தது. சடசடவென சத்தமும் அதிகரித்து அசைந்தது. “ஸ்டார்லிங் குருவிகள்தானே…அடேயப்பா நூற்றுக்கணக்கில் இருக்கும் போலிருக்கிறதே?” என்ற ஜெப்ரிக்கு உடனே பதில் சொல்லாமல் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த மார்ஷ் முணுமுணுத்தான்.
“ஆயிரக்கணக்கில் என்று நினைக்கிறேன்”
அந்தப் பெரிய பழுப்புத் திரை1 ஒரு திசையில் சென்று அடுத்த நொடியில் எதிர்த் திசையில் திரும்பி, பின் சடாரெனக் கீழ் நோக்கிச் சென்று அலைந்துகொண்டே இருந்தது. பெரிய மீன்பிடி வலையை உதறுவது போல். சட்டு சட்டென வித வித வடிவங்களை அடைந்தது. நிமிர்ந்த குடை போன்று இருக்கிறது என்று எண்ணும்போதே குடை சுருண்டு பின் நீண்ட திமிங்கலமாக மாறிவிட்டது. பின் ஒரு மாபெரும் பிக்னிக் விரிப்பை உதறியது போல் அலைஅலையாகச் சென்றது அல்லது வந்தது கண்டு அசந்து நின்றார் ஜெப்ரி. மார்ஷ் மெல்லத் திரும்பிப் பெரிய பாறையின் மேல் வசதியாக உட்கார்ந்து கொண்டான்.
“இதற்கு விளக்கம் வைத்திருப்பாயே மார்ஷ்?” என்பதற்குள்,
“ஆயிரக்கணக்கில் இவை இப்படி ஒன்று சேர்வது, வேட்டையாட முயலும் பெரும் பறவைகளிடமிருந்து தப்பவும் தங்களுக்குள் செய்திகள் பரிமாறிக்கொள்ளவும்தான் என்று படித்திருக்கிறேன்” என்றான் மார்ஷ்.
ஒரு கட்டத்தில் அப்பறவைகளின் மேக வடிவம் மாபெரும் ஒற்றை வாத்து வடிவம் கொண்டதைக் கண்டபோது ஜெப்ரி, சிறு கண்ணீர்த் துளியை உணர்ந்தார்.
“கூடி கூடி இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்து இறுதியில் பார்த்தால் ஒரு பறவைதான் தெரிகிறது. நாங்கள் எப்போது வரும்போதும் இதைப் பார்ப்போம்” என்றான் தாமஸ்.
முகத்தில் குளிர்க் காற்று பலமாக அடிக்க ஆரம்பிக்க, அந்த அக்டோபர் மாலையில் பள்ளத்தாக்கின் ஏதோ ஒரு முனையை ஒட்டி நின்றபடி, வான்வெளியை, குதிரைக் குளம்பு ஏரிகளை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“வளர்ந்து பெரியவனானபிறகு, செவ்வாய்க் கிரக மலைகளின் மேல் இப்படி ஏறப்போகிறாய்தானே, தாமஸ்”
தாமஸின் கை, தனது கையுடன் மெல்லக் கோர்த்துக்கொள்வதை உணர்ந்தார், ஜெப்ரி.
“ஆம்” கிசுகிசுத்தான்.
“எனக்கு இப்போதே அப்படித்தான் இருக்கிறது. என்ன, இங்கு பச்சை, அங்கு சிவப்பு…”
“ஆனால்…அவை மிகப் பெரியவை…எவரெஸ்ட்டை விட மூன்று நான்கு மடங்கு உயரமான சிகரங்கள்”
“அவ்வளவு பெரிதா?”
“ஆம். மாபெரும் பெரிய சிகரங்கள்…பள்ளத்தாக்குகள், எரிமலைகள்…அருவிகள்…ஒரு அருவி கிட்டதட்ட ஒன்பது கிலோமீட்டர்கள் உயரம் தெரியுமா?”
“அப்படியா…எப்படி உனக்கு இத்தனையும் தெரியும்…”
“என்னிடம் மொத்தப் பட்டியலும் இருக்கிறது. சென்ற கிறிஸ்துமஸிற்கு தாத்தா பரிசாகக் கொடுத்த டிவிடியில்…”
“நிச்சயம் ஒரு நாள் மவுண்ட் ஒலிம்பஸ்ஸில் ஏறுவேன்.”
“மிஸ்டர் ஜெப்ரி…” இரண்டாவது முறையாக ஒலித்த ரூத்தின் குரலிற்குத்தான் இருவரும் அசைந்தார்கள்.
“மிஸ்டர் ஜெப்ரி, இந்த பாதையைத் தொடர்ந்து இறங்கிக்கொண்டே போனீர்களானால் ஓர் அரை மணி நேரத்தில்…உங்கள் வேகத்திற்கு நான் இன்னொரு இருபது நிமிடங்களை சேர்த்துக்கொள்வேன் – ஒரு குதிரைக் குளம்பு ஏரி உங்கள் வலது புறத்தில் வரும்…”
மெல்லத் தயங்கினார்… சற்று யோசித்துவிட்டு, “இல்லை, இடது புறத்தில் வரும்.”
“அதைத் தாண்டிப்போனால் கற்களைத் தூண் போலக் குவித்து வைத்த ஒரு கற்குவை2 இருக்கும். சுலபமாகக் கண்களில் படுவது போலத்தான் இருக்கும். அங்கிருந்து இடது, வலது, இரு புறங்களிலும் பாதை பிரியும். நீங்கள் இடது பக்க வழியில் செல்லுங்கள். அதன்பின் வழி தடுமாற்றமிருக்காது” என்று சொல்லிக்கொண்டே தண்ணீர் போத்தலை வாயில் கவிழ்த்துக்கொண்டார். உடனே எடுத்தும் விட்டார்.
அவர் சொன்னதில் என்னவோ வித்தியாசமாக இருந்தது. என்னவென்று யோசிக்க ஆரம்பிக்கையில் “உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி…” என்று கை குலுக்கினார்.
“நீங்கள் இப்போது எப்படி போகப் போகிறீர்கள்?” என்று கேட்டான் மார்ஷ்.
ரூத் கை காட்டிய இடத்தில் வழி இருப்பதாகத் தெரியவில்லை. ” இது சற்று குறுக்கு ஆனால் சரிவான வழி. உங்களுக்குச் சிரமமாக இருக்கும். எனவே நான் இப்போது காட்டிய வழியிலேயே செல்லுங்கள்” தன் கை மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்துக்கொண்டு, “ஏழு அல்லது எட்டு மணிக்குள் நீங்கள் அடிவாரத்தை அடைந்துவிடலாம். டார்ச் எல்லாம் வைத்திருக்கிறீர்கள் அல்லவா?”
“…மிஸ்டர் ஜெப்ரி, நம்முடன் இந்த வழியிலேயே வரட்டுமே?” தாமஸின் குரல் சற்று கெஞ்சலாக இருந்தது.
“அவருக்கு இது சிரமம் தாமஸ். மேலும் அவர் கீழிறங்க வேண்டிய இடம் வேறு, கார் நிறுத்தி வைத்திருக்கும் இடத்திற்கு அல்லவா போக வேண்டும்” ரூத்தின் குரல் சற்று கனமாக ஒலித்தது. இப்போது என்ன வித்தியாசம் என்று புரிந்துவிட்டது. வேல்ஷ் உச்சரிப்பு இல்லை.
“மிஸ்டர் ஜெப்ரி…இந்த வழியில் ஓர் அருமையான அருவி வரும்…நீங்கள் தவறவிடுகிறீர்கள்…”
சங்கடமாக, ரூத்தையா, தாமஸையா, யாரை நோக்குவது என்று பொத்தாம் பொதுவாக நேர்ப்பார்வை பார்த்து முதுகுப் பையைச் சரி செய்துகொண்டார்.
“வெல்…ஆல் த பெஸ்ட்” மார்ஷ் கை குலுக்கினான்.
அடுத்த சில நொடிகளில் அம்மாவும் பையனும் அச்சிறுவெளியில் நுழைந்து மறைந்தேவிட்டார்கள். இருவரும் சென்ற சடுதியே தெரியாது எல்லாம் பழையபடி மவுனமானது.
சிறு பெருமூச்சுடன் ஜெப்ரி தம்முன் நீண்ட பாதையைத் தொடர்ந்தார்.
“இந்த கால சிறுவர்கள் என்னவெல்லாம் விஷயங்கள் தெரிந்திருக்கிறார்கள்” என்றார்.
“எல்லாம் கிடைக்கும் வாய்ப்புகள்தான். புத்தகங்கள், இணையம் – விஷயங்கள் தெரிந்துகொள்வது எளிது…ஆனால் ஒரு குழந்தைப் பார்வை, வியப்புப் பார்வை, அது முக்கியமானது” என்று முனகினான் மார்ஷ்.
“ஆம்…அவன் சொல்வது மிக சுவாரஸியமாக இருக்கிறது. உண்மையும் கூட…போன மார்ச் நேஷனல் ஜியோ இதழில் சமீபத்திய நாஸா ரோவரைப் பற்றி நிறைய விஷயங்கள் இருந்தன, நினைவிருக்கிறதா, மார்ஷ்?”
“ஜியோ இதழ், நாஸா தளம், செவ்வாய் பற்றிய படங்கள், ரோவர் எடுத்து அளித்துக்கொண்டிருக்கும் எல்லா படங்களும்தான் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றனவே…இதே போன்ற மாபெரும் மலைத்தொடர்கள், சிகரங்கள் பள்ளத்தாக்குகள், எரிமலைகள், அருவிகள்…
“மார்ஷ், நீ சொன்ன ஆராய்ச்சிகளின்படி, செவ்வாயில் ஏதோ ஒரு கட்டத்தில் கரிமியம், பின் உயிர் தோன்றி அவை பரிணாம வளர்ச்சி பெற்று ஒரு மாபெரும் வாழ்க்கை, பில்லியன் கால வாழ்க்கை இருந்ததாக, வாழ்ந்ததாக நினைக்கும் போதே தலை சுற்றுகிறது…அடேயப்பா…எத்தனை நீள காலம்..!”
“என்ன பெரிய நீண்ட காலம்…காலமெனும் யுடியூப் வீடியோவை ஒரு பில்லியன் வருடத்திலிருந்து இன்னொரு பில்லியனுக்கு யாரோ ஒருவர் சட்டென விரலைக்கொண்டு இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு இழுத்துவிடுவது போலத்தான்..! ரொம்ப சுலபம்..!”
“ஆனால்…யாரந்த ஒருவர்? மில்லியன்…மன்னிக்கவும் பில்லியன் டாலர்…மறுபடியும் மன்னிக்கவும், பில்லியன் கால கேள்வி..!”
மார்ஷின் குரலைக் கவனியாது, செவ்வாய்க் கிரக வானூர்த்தியின் விமானி, விண்வெளி வீரன், மலையேறி என்று நொடிக்கு ஒரு முறை மாறிக்கொண்டிருந்த தாமஸை நினைத்துக்கொண்டிருந்தார்.
மார்ஷ், சற்று மவுனத்திற்குப் பின் நாம் ஏன் செவ்வாய்க் கிரகத்திற்குப் போக வேண்டும் என்று கேட்டான்.
“ஏனா?… பூமியின் அத்தனை வளங்களும் வறண்டு போவதிற்கு முன் இந்தப் பால்வெளியில் வேறு எங்காவது வாழச் சாத்தியமிருக்கிறதா என்று தேடுவது இயல்புதானே?”
“அப்படியெனில் பில்லியன் ஆண்டுகளுக்கு முன் செவ்வாய்க் கிரகம் வறண்டு போவதிற்கு முன் அங்குள்ள உயிர்கள் இது போன்று தேடி வேறு எங்காவது இந்நேரம் போயிருந்திருக்கலாமோ?”
“அட…மார்ஷ்!”
“குழந்தைகளுக்கே உரிய வியப்புப் பார்வை உன்னிடமும் இருக்கிறது மார்ஷ், வெரிகுட்” என்றார் ஜெப்ரி.
“சாத்தியம் உண்டா இல்லையா? அதை மட்டும் யோசித்துப் பாரேன்.”
சாத்தியம்தான்…ஒருவேளை… “அவர்கள் வேறு எங்கு போயிருக்க முடியும்…அருகில் செவ்வாயைப் போன்றே இன்னொரு கிரகம், பூமி இருக்கும்போது”
இருவரும் ஒரு கணம் ஒருவரையொருவர் நோக்கினர்.
“சரி, உன் தியரிப்படியே வைத்துக்கொள்வோம்…இப்போது எங்கே அவர்கள்..?”
“ம்ம்ம்..அவர்கள் நம்மைவிட பரிணாமத்தில் முந்தினவர்கள்தானே…வேறு எங்காவதுகூடப் போயிருக்கலாம், இங்கேயே வந்திருக்கலாம்…வேறு வடிவத்தில்கூட இருக்கலாம்…நம்மை கவனித்துக்கொண்டேகூட இருக்கலாம்…”
“ம்! விடாதே…இன்னும் யோசி! அருமையான தியரி…!
“முதலில்…எப்படி அத்தனை உயிரிகளும் மொத்தமாக “வீடு” மாறியிருக்க முடியும்…”
“ம்ம்ம்…நல்ல கேள்வி…நம் கிரகத்து உயிரிகள் போல் பில்லியன் கணக்காய் உயிர்கள் இருந்திருந்தால் எப்படி ஒட்டு மொத்தமாக…பொறு, பொறு…”
மார்ஷ், தீவிரமானான். “ஒட்டுமொத்தமாக…ம்…ஒருவேளை அத்தனை உயிர்களும் இந்த ஸ்டார்லிங் குருவிகள் போல ஒன்றுடன் ஒன்றாக கலந்து ஒன்றேயானால்…எப்படி என் தியரி?!”
ஜெப்ரி மெல்ல விஸிலடிக்க ஆரம்பித்தார்.
“செவ்வாய் குளிர்ந்து உறைந்து வாழ முடியாத காலகட்டத்தின்போது அருகில் இருக்கும் பூமியைவிட அவர்களுக்கு வேறு என்ன தகுந்த இடம் இருந்திருக்க முடியும்…மேலும் அப்போதுதான் பூமியில் உயிரிகளுக்கான சூழ்நிலை வளர்ந்துகொண்டிருந்த காலத்தில்…இதை விட அருமையான புது வீடு வேறு இருந்திருக்க முடியாது..”
“அவர்கள் இங்கு வந்து இறங்கினார்கள்…சரி, அப்புறம்?”
“அப்புறம் என்றால்..?”
“அவர்கள் இங்கு வந்திறங்கிய போது பூமியில் உயிர்கள் தழைத்தோங்க ஆரம்பித்த காலம் என்று வைத்துக்கொண்டால்…அவர்கள் நமது பரிணாம வளர்ச்சியைப் பார்த்துக்கொண்டே இருந்தார்களா? இருக்கிறார்களா?..”
“அப்படியே வைத்துக்கொண்டாலும் எங்கே இப்போது…இதுவரை ஏன் நம்மைத் தொடர்புகொள்ளவில்லை?”
“ம்ம்ம்…தொடர்பு கொண்டிருக்கலாம், நமக்குத்தான் தெரியவில்லையோ என்னமோ…ஏதாவது ஒரு வழியில் தொடர்புகொள்ள முயற்சித்திருக்கலாம்… வாயேஜரின் கோல்டன் ரெக்கார்ட் மாதிரி…”
“நம்மால்தான் இன்னும் உணர முடியவில்லை அல்லது நாம்தான் அதை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இயற்கை அல்லது கடவுள் என்றெல்லாம் எண்ணிக்கொண்டு இருந்துகொண்டிருக்கிறோமோ என்னவோ…”
“கடவுள்…ஹஹஹ!”
“நம்மிடையே வைத்துக்கொண்டு வெளியே தேடுகிறோம் என்று சொல்கிறாயா…”
“இருக்கலாம், அப்படி தேடுகின்ற பல விஷயங்களில் இதுவும் ஒன்றோ என்னவோ…”
“வாயேஜர் என்று சொன்னாய்…அது சூரிய மண்டத்தைவிட்டே அந்தக் கலம் போய்விட்டது இல்லையா”
“ஆம், இரண்டாவதும்கூடப் போய்விட்டது…”
பேசுவதை நிறுத்திவிட்டுக் கவனித்தார்
இப்போது கிடுகிடு பள்ளத்தாக்கு இடது புறம் தோன்றியிருந்தது. எப்போது மாறியது என்று தெரியவில்லை.
சுற்றி நோக்கினார். சட்டென இருட்டு மாபெரும் குடையாக அவர்கள் மீது விரிந்திருந்தது.
தலைக்கு மேல் இத்தனை விரிந்த வான்வெளியை இதற்கு முன் பார்த்தது போல் நினைவில்லை. பகல் நீலத்திலிருந்து இன்னொரு நீலமாகிவிட்டிருந்தது. எங்கும் நீலம். எங்கும்.
அண்ணாந்து பார்த்துக்கொண்டே சுற்றினார். ஆங்காங்கே சிதறி மின்னும் கற்களுடன் எங்கும் நீலம்.
ராட்சச பலூனில் உலகின் அத்தனை நட்சத்திரங்களையும் கொட்டி வைத்துக்கொண்டு பெரிதாய் ஊதி, பின்னர் உடைத்துச் சிதறிவிட்டது போல் இருந்தன அம்மின்னும் கற்கள். பார்த்துக்கொண்டே இருக்கும் போதே சில கற்கள் அசைந்தன. சில மின்னுவதை நிறுத்திவிட்டு இவர்களைக் கவனித்தன. பின் மின்னுவதைத் தொடர்ந்தன.
“கிறிஸ்துமஸ் விளக்குகள்…” என்றான் மார்ஷ்.
தூரத்தில் மின்னும் சிறு சிவப்புக்கற்களில் எது செவ்வாய்? ஒரு பாறையில் காலை வைத்துக்கொண்டே தோளிலில் தொங்கிக்கொண்டிருந்த பைனாக்குலரை எடுக்க முயற்சித்தார்.
அடுத்த நொடிக்குள் வலது கால் வழுக்கி, பாறையின் இடுக்கிற்குள் புகுந்தது கொண்டது. சுரீரெனக் கணுக்காலிருந்து வலி நொடிக்கும் குறைவாக மூளையைத் தொட்டது. அநிச்சையாக இரு கைகளையும் கொண்டு சொத்தெனப் பாறையில் இழுத்து அமர வைக்கப்பட்டார். அமர்ந்தார். “கவனம், கவனம்” என்றான் மார்ஷ். கால் கெண்டைச்சதைகளும் புட்டமும் முதுகும் இறுகிக்கொண்டதை உணர்ந்தார்.
உள்ளங்கைகள் எரிந்தன. இறங்க ஆரம்பிக்கும் முன் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும். மெல்லக் காலை பாறை இடுக்கிலிருந்து எடுத்தார். கணுக்கால் வரை ஈரமாகியிருந்தது.
“மவுண்ட் ஒலிம்பஸ்ஸில் நீரும் பாசிகளும் இருக்காது, நீயும் வழுக்கி விழ மாட்டாய்” என்றான் மார்ஷ்.
“மார்ஷ், நீயும் உன் டைமிங்கும் நாசமாகப் போக”
மெல்ல எழுந்து ஒரு அடி எடுத்து வைத்துப் பார்த்தார். வலிக்கவில்லை. சரியென அடுத்த அடியை எடுத்ததும் வலி சுரீரென இருக்கிறேன் என்றது.
மெல்ல, மெல்ல நகர்ந்தார். குளிர்க் காற்றை கழுத்தில், கன்னத்தில், காது மடல்களில் உணர்ந்ததும் மேற்சட்டையின் காலரை முடிந்தவரை இழுத்துவிட்டுக்கொண்டார்.
“அதோ, குதிரை குளம்பு ஏரி” என்று மார்ஷ் கீழே கைக் காட்டினான். தூரத்தில் ஒரு விழி, வானத்தை மல்லாந்து பார்த்துக்கொண்டிருப்பது போல இருந்தது. அருகில் செல்லச் செல்ல மொத்த வானத்தையும் நிரப்பிக்கொண்டு மவுனமாக மல்லாந்திருந்தது தெரிந்தது.
“ராட்ஷச விழி” என்றார் ஜெப்ரி. மேலேறி வரும் போது இரண்டு ஏரிகளைக் கடந்து வந்தது போல இருந்தது. ஆனால் ஆனால் இந்த ஏரியா…?
மேற்பரப்பில் காற்று வீசிய திசையை நோக்கி அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒட்டிப் பதற்றமாகச் சென்றுகொண்டிருந்தன.
” பெரிய, நிரம்பிய காபி கோப்பையின் மேற்பரப்பு போல் இருக்கிறது” என்றான் மார்ஷ்.
அப்படியும் போலத்தான் இருந்தது. யாரோ ஒரு சிறுவன் அதைப் பிடித்துக்கொண்டு வேகமாக நடப்பது போல் ததும்பிக்கொண்டிருந்தது.
“தாமஸ்” என்று சிரித்தார் ஜெப்ரி.
ஏரி பக்கவாட்டில் சற்று தூரம் வந்து கொண்டிருந்தது. கிட்டதட்ட அது முடியும் தருவாயில் “கற்குவை2இருக்கும் என்று சொன்னாரே…ஒன்றும் தெரியவில்லையே” என்று சொல்லி முடிக்கும்முன் “அதோ,அதோ” என்று உற்சாகமாக மார்ஷ் கையைக் காட்டிய திசையில் ஒரு சிறு பிரமிட் அல்லது தூண் போன்று கற்கள் ஒன்றன் மேல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அருகில் செல்லச் செல்லச் சற்று தள்ளி இன்னொரு கற்தூண் இருப்பது தெரிந்தது. அதன் அருகில் அதை விட உயரமாக இன்னொன்று…
இருவரும் நின்றுவிட்டார்கள்.
இப்போது அவர்களால் கிட்டதட்ட ஐந்தாறு கற் தூண்களைக் காண முடிந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருந்தன.
மார்ஷ், “பொறு,பொறு…லாஜிக்கலாக யோசிக்கலாம். வரும்போது இந்த இடத்தைத் தாண்டித்தான் வந்தோம்…எந்த வழியாக மேலேறி வந்தோம் என்று நினைவிருக்கிறதா…பதட்டப்படாமல் யோசி” என்றான்.
ஜெப்ரிக்கு மேலேறி வந்தபோது இந்த மாதிரி கற்தூண்களைப் பார்த்தது போலெல்லாம் நினைவே இல்லை. ஏரி மட்டும் நினைவிருந்தது. ஆனால் இந்த ஏரிதானா…குழம்பினார்.
தோள் பையை இறக்கினார். திறந்து உள்ளிருந்து உலர் திராட்சைகளை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சாக்கலட் பட்டையைத் திறந்து கொண்டார். சரியான வழி கண்டுபிடிப்பதை அந்தப் பாழாய்ப்போன மார்ஷ் பார்த்துக்கொள்ளட்டும்.
செவ்வாய்க் கிரக உயிரிகள், பூமி போன்ற, பூமியின் சாயலைக்கொண்ட கிரகத்தில் வசித்த, பூமியைப் போன்று தண்ணீர் திரவ நிலையில் இருந்த ஒரு கிரகத்தில் உயிரிகள், நம்மைப் போன்றுதானே இருந்திருக்கவேண்டும்…அப்படியா…நம்மைப் போலத்தான் இருந்திருக்க வேண்டும் என்று கட்டாயம் இருக்கிறதா என்ன..?
காற்று இப்போது சட்டெனத் திசை மாறியதை உணர முடிந்தது. பக்கவாட்டிலிருந்து இப்போது அடிக்கத் தொடங்கியது, மேலும் குளிர் அலைகளாகவும் மாறிவிட்டிருந்தது.
பிரித்தறிய முடியாத பல்வேறு பறவைக் கரைச்சல்கள். “போர்ட்டபெல்லா ரோடு மார்க்கெட் போல என்ன சத்தம்!” என்று சொல்லிக்கொண்டே, பையை மூடுவதற்கு முன் மறக்காமல் கையுறைகளையும், குல்லாவையும் அணிந்துகொண்டார். கழுத்திற்கான ஸ்கார்ப்பையும் அணிந்துகொண்டார்.
“நிச்சயம், இந்த கற்குவியல்தானா? நிச்சயம் இதற்கு இடது புறம்தானா?” கேட்கத் தேவையில்லை என்று இருவருக்குமே தெரிந்திருந்தது. நிச்சயமாகத் தெரியவில்லை.
மார்ஷ் கூட்டிச்சென்ற பாதை சற்று மேலேறிச் செல்வது போலிருந்தது. அந்த மேட்டின் உச்சி வானத்தைத் தொடுவது போல இருந்தது.
மார்ஷ் மேட்டின் உச்சி நுனியை அடைந்ததும் வானத்தைப் பார்த்துக்கொண்டே நின்றான். ஜெப்ரி மெல்ல அவனருகே அடைந்தார்.
எங்கெங்கினும் பரவியிருந்த வானத்திரையில் வெளிச்சப்புள்ளிகள் ஏதோ ஓர் ஒழுங்கில் பரவி அநாயாசத் துல்லியமாக ஒளிர்ந்தன. இவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தன.
“பார்த்தாயா…பால்வெளி3“ மார்ஷின் வியப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. கண்களை அகற்றவே முடியாமல் வான் திரையில் பிரபஞ்சத்தில் எங்கோ ஒளிர் விட்டுக்கொண்டிருக்கும் இந்த விந்தைக்கு நாம் மட்டும்தான் சாட்சி…ஜெப்ரி முணுமுணுத்தார்.
அளவிட முடியாத கணங்களுக்குப் பின் ஜெப்ரியின் தும்மல்தான் அவர்களை அசைத்திருக்க வேண்டும். இரவு நடைப்பயணத்திற்கான டார்ச் பட்டையை நெற்றியில் அணிந்துகொண்டார்.
“கிளம்பலாம் மார்ஷ்…இந்த பாதை சரியான பாதைதான் என்று நம்புவோம், அதுமட்டும்தான் இப்போதைக்கு நம்மால் முடியும்” என்று முன்னகர முற்பட்டார். ஆனால் மார்ஷ் வானிலிருந்து கண்களை எடுக்கவில்லை.
“என்னதிது…”
முதலில் யாரோ ஒரு ராட்சச டார்ச் விளக்கை மலை முகடுகளுக்குப் பின்னிருந்து கடலோர விளக்கு கோபுரம் போல, ஆனால் வானை நோக்கி அடிப்பது இருந்தது.
ஜெப்ரி இரு கைகளையும் வானை நோக்கி நீட்டி முடிந்தவரை விரித்தாலும் அப்பெரு விளக்கு வெளிச்ச அலைகள் அவற்றைத் தாண்டிப் பரவின. அம்மெல்லிய ஆரஞ்சு அலைகள் வானைத் தொட்ட இடங்கள் எல்லாம் மெல்லிய பச்சையாக, பச்சைப் பாதைகளாக ஒளிரிட்டன.
“இல்லை, ஊதா நிறம்” என்று முனகினான், மார்ஷ்.
“ஆம், இப்போது ஊதா நிறமாகிவிட்டன…” தலையை அசைத்தார் ஜெப்ரி.
அவற்றை ஒளிக்கற்றைகளாகத்தான் சொல்ல வேண்டும். அக்கற்றையில் ஓரிரு அளவு குறைந்தன. பின் மறைந்தன. மற்ற சில அளவில் நீண்டன…
“வேல்ஸ்ஸில் துருவஒளியா4? இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே?”
“ஆமாம், ஸ்காட்லாந்தில், ஸ்காண்டிநேவியன் நாட்டு முனைகளில்தான் தெரியும் என்று படித்திருக்கிறேன்…”
ஒரு பிரமாண்ட விண்வெளி கீபோர்ட்டின் பல கீகளை யாரோ பத்து விரல்களாலும் வாசிப்பது போல இருக்கிறது…
ஆமாம், ஒவ்வொரு கீயை அழுத்தும்போதும் வண்ணம் மாறுகிறது…”
எனக்கு அப்படி தோன்றவில்லை…ஹேய்…”
மூச்சு விடுவதை நிறுத்திவிட்டார்கள்.
அவ்வொளிக்கற்றை…சட்டென ஒரு பெரும் வாத்து வடிவம் கொண்டது. பச்சையாக ஒளிரும் வாத்தின் கூர் மூக்கு…சில கணங்களுக்குப் பின் இப்போது பெரும் குடையாக விரிந்து எல்லா திசைகளுக்கும் பரவிக்கொண்டிருந்தது, அதன் உச்சியில் ஒளிர் கூர் முனைகூட இருந்தது… பின் சட்டென ஓர் அருவி போன்று வடிவம் கொண்டது…அருவியாக…ராட்சஷ ஒளிரும் அருவியாக…9 கிலோமீட்டர் உயர அருவியாக கொட்டியது…அல்லது மேலே சென்றது…
பின்னர்…துதிக்கையாக மாறி மெல்ல…அவர்களை நோக்கி வந்தது போல் தெரிந்தது..!
பின், சட்டென அடங்கிவிட்டன. மீண்டும் பால்வெளி, ஒரு தொழிற்சாலையின் புகைப்போக்கியிலிருந்து வெளியேறும் புகைத்திரல் போல் பால்வெளித் திரையில் மவுனமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.
“மார்ஷ்..ப்ளடி மார்ஷ்..!”
பறவைகளின் சடசடப்புக் கூவல்கள், விசாரிப்புகள் எங்கும் மிச்சமிருந்தது.
மேலும் ஓர் அரை மணிநேரம் சென்றிருப்பார்கள். மலையின் கீழ் இறங்குவது போல் தெரியவில்லை.
“ஜெப்ரி, மலையைச் சுற்றிதான் வருகிறோம் என்று நினைக்கிறேன். மலையின் இன்னொரு புறத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம் என்று படுகிறது” மார்ஷின் குரல் உறுதியாக இல்லையெனினும் ஜெப்ரிக்கும் அந்தச் சந்தேகம் வலுத்துக்கொண்டிருந்தது.
குளிர் அணிந்திருந்த ஜாக்கெட்டின் ஊடுறுவதையும் கவனிக்காமல் இல்லை. கையுறைகள் அணிந்திருந்தும் கைவிரல்கள் குளிரில் வலிக்க ஆரம்பித்தது ஆச்சரியமாக இருந்தது. முக்கியமாக இரு சுண்டு விரல்களும் உணர்வே இல்லாதது போல் இருந்தது.
திடீரெனப் பாதை செங்குத்தாகச் செல்ல ஆரம்பித்தது. திரும்பிவிடலாமா…திரும்பி எங்கு போவது…மறுபடியும் அந்தக் கற்குவியல்களுக்கா…அல்லது இன்னும் மேலே…தாமஸும் ரூத்தும் பிரிந்து சென்ற பாதைக்கா…
தாமஸ்…என்ற எண்ணம் வந்தற்கு இன்னொரு காரணமும் இருந்தது. இப்போது மேலே தண்ணீர் சளசளப்பு ஒலி மாதிரி கேட்டது.
“மாதிரியெல்லாம் இல்லை. நிச்சயம் அருவிச் சத்தம்தான்”.
“ஆனால் கீழே ஒலிக்கவில்லை…தலைக்கு மேலே..!”
திடுக்கிட்டார். ஏறிட்டுப் பார்த்தார். எதுவும் தெரியவில்லை. மேலே இன்னும் போக வேண்டும் போல…
“இந்த வழியில்தான் ரூத்தும் தாமஸும் சென்றிருக்கவேண்டும்…” என்று மார்ஷ், பாதையை உற்றுப் பார்த்துக்கொண்டே கூறினான்.
“அவர்கள் எப்போதோ கீழே சென்றிருப்பார்கள்…”என்றபடியே அடுத்த அடியை வைத்த ஜெப்ரி மறுபடியும் சொத்தென விழுந்தார்.
ஏராளமான கற்கள் புட்டத்தைத் தாக்கின.
” அ…என்னதிது?”
புட்டத்தின் அடியிலிருந்து எடுத்துத் தலைப்பட்டை டார்ச்சில் பார்த்தார். அடக்கடவுளே…
“தாமஸின் பை…”
சட்டெனச் சுற்றும் முற்றும் பார்த்தார். “தாமஸ்…”வீறிட்டுக் கத்தினார்.
“தா…மா…ஸ்”
இங்கு என்ன செய்கிறான்…எப்படி பையை விட்டுவிட்டுப் போயிருப்பான்…”ரூ…த்…ஹ…லோ…”
நிலவொளியில் பாறைகள், கற்கள், மரங்கள் எல்லாம் வேறு உருகொண்டு அவரை உற்றுப் பார்த்தபடி இருந்தன.
மறுபடியும் கத்திக்கொண்டே கற்களின் மேல் யோசிக்காமல் கால்களை வைத்து அழுத்தி நெறுக்க நெறுக்க ஏறினார். இப்போது அருவிச்சத்தம் அதிகரித்து மேலே ஈரம் ஒட்டியது. பின் சற்று நேரத்தில் தெரிந்தது. சற்று பெரிய அருவிதான். சாரல் மெல்லியதாய் முகத்தில் ஒட்டியது. அருகில் செல்லச் செல்லச் சத்தமும் அதிகமானது. அருவியிலிருந்து விழுந்த நீர் குளமமைத்து பெரிய ஓடையாக சமதளத்தில் சற்று தூரம் ஓடி, பின் இன்னொரு அருவியாக மீண்டும் விழுந்து சென்றது.
அருவியை ஒட்டிய செங்குத்தான பாதையில் கால்களை உறுதியாக மாறி மாறி ஊன்றி மேலே ஏறினார்.
“தா…ம…ஸ்”… மறுபடியும், “தா…ம” மார்ஷ் உஷ் என சுட்டு விரலை அவரது உதட்டில் அமர்த்தினான்.
நின்று கவனித்துக் கேட்டார்.
அருவிச்சத்தத்துடன் இப்போது பலகீன முனகல் கேட்டது. அருவியிலிருந்து முனகல் எப்படி…
கால்களைப் பலமாக ஊன்றிக்கொண்டு அருவியின் ஓரத்தை இடது கையால் அளைந்தார். தட்டுப்பட்ட செடிகொடிகளைக் கலைத்து உள் நோக்கிப் பார்க்க முயன்றார். முகத்தில் சாரலைத் துடைத்தபடியே சத்தம் வரும் திசையை உற்று உற்று நோக்கினார்.
பின் திரும்பிப் பாதையிலேயே உட்கார்ந்துவிட்டார்.
“என்ன ஜெப்ரி, என்ன…என்ன பார்த்தாய்?” மார்ஷ் துளைத்தான்.
மறுபடியும் திரும்பி அந்த இடத்தை உற்று நோக்கினார். உள்ளே மெல்ல ஏதோ அசைந்தது போல இருந்தது. “தா…ம…ஸ்” என்று கத்தினார்.
நெற்றிப்பட்டை டார்ச் வெளிச்சம் பலகீனமாக இருந்தது. மொபைலை எடுத்து அதிலுள்ள டார்ச்சை உயிர்ப்பித்து உள்ளே நீட்டினார்.
“கவனம், மொபைலை நனைத்துவிடாதே…” மார்ஷ் எச்சரித்தான்.
“அது தாமஸ் போலத்தான் தெரிகிறது…எப்படி இங்கு வந்து சிக்கிக்கொண்டான்?…புரியவே இல்லையே”
“தாமஸ்…என் குரல் கேட்கிறதா…உன்னால் நகர முடியுமா…என்னை நோக்கி கை நீட்டு, ப்ளீஸ்!”
ஒரு எட்டு வைத்து எழும்பினால் அவனைத் தொட்டுவிடலாம்….
“வேண்டாம், அந்த இடம் வழுக்கிவிடும் போல தோன்றுகிறது, இதற்கு மேல் போகாதே” மார்ஷ் நிதானமாக அதே சமயம் கடுமையான அடிக்குரலில் எச்சரித்தான்.
இடது காலை ஊன்றி வழுக்கவில்லை என்று உறுதி செய்துகொண்டுதான் வலது காலையும் கையையும் நீட்டி தாமஸ் திசையை நோக்கித் தாவினார். தடாலெனச் சில நொடிகள் அந்தரத்தில் உணர்ந்தார்.
அருவியோடு விழுந்தார். அதிக உயரமில்லை. அவர் விழுந்த குளம்கூட அதிக ஆழமில்லை. தடுமாறி கால்களை அநிச்சையாக அடித்துக்கொண்டு மேலே வந்துவிட்டார். வந்து மூக்கையும் வாயையும் முடிந்த வரை திறந்து மூச்சை, ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக்கொண்டார். நுரையீரலுனுள் பெரும் பனிக்கட்டி நிரம்புவதைத் துல்லியமாக உணர்ந்தார்.
கரையில் எப்படியோ ஏறி அப்படியே குப்புறக் கிடந்தார். மார்ஷின் பதட்டமான குரல் அவரை அடையவே சில நிமிடங்களானது.
பின் தன்னை ஒரு மாதிரி சேகரித்துக்கொண்டு மறுபடியும் பாதையின் மேல் அருவியை நோக்கிக் கிட்டதட்ட தவழ்ந்து சென்றார். கால் விரல்கள் அனைத்தும் கடுமையாக வலித்தன. குளிர் இப்படி வலிக்குமா என்ன? தலை முடியிலிருந்து பனி கட்டி நீர், உடல் முழுவதும் பரவியது. இந்தக் குளிர் அவரைத் துணுக்குறச் செய்தது. குளிர் குண்டுகளாய்க் கனத்த காலணிகளை மிகச் சிரமப்பட்டு இழுத்துக்கொண்டு தவழ்ந்தார்.
“பார்த்தாயா..நாந்தான் சொன்னேனே…இப்போது பார், மொபைல் தண்ணீருக்குள் விழுந்துவிட்டது போலிருக்கிறதே ” மார்ஷின் குரல் அவரைப் போலவே நடுங்கியது. அதைப் பொருட்படுத்தாமல் நேரே மறுபடியும் விழுந்த இடத்திற்குச் சென்றார்.
“தாமஸ்…தாமஸ்…எங்கே இருக்கிறாய்?…என்ன நடந்தது? உன் அம்மா எங்கே?” கத்தினார்.
ஜெப்ரி, குரல் குழறி, குளிரில் நடுங்கி உதறுவதை உணர்ந்தார்.
ஜெப்ரியின் உடல் நடுக்கத்தை உச்சக்குரலில் அதிர்ந்துகொண்டிருக்கும் ஒலிப்பெருக்கியைப் போல் உணர்ந்தார்.
“உதவி எப்படி கோருவது, மார்ஷ்? மொபைலைத் தொலைத்துவிட்டோம்” அவர் குரல், உடலோடு சேர்ந்து நடுங்கியது.
“தாமஸ்…கமான்…எங்கிருக்கிறாய்? எழுந்துகொள்…செவ்வாய்க் கிரகத்திற்குப் போக வேண்டாமா, அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று தெரிய வேண்டாமா…அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாமா…”
“கமான் மை பாய்…இந்த பூமியில் நீதான் முக்கிய உயிரி…எங்கிருக்கிறாய்…சத்தம் கொடு, உன்னை நான் காப்பாற்றுகிறேன்…” கடுமையாக நடுங்கினார்.
“எப்படி…எப்படியாவது யாரையாவது தொடர்பு கொள்ளவேண்டுமே…எப்படி…யாராவது உதவி…” உடல் தூக்கிவாரிப் போட்டது.
மார்ஷிடமிருந்து சத்தமே இல்லை… மெல்லப் புரண்டு மல்லாந்து பனி மூச்சை இழுத்தார், நடுங்கியவாறே புகையாக வெளிவிட்டார்.
இப்போது பாதையின் இன்னொரு புறத்தில், வெட்ட வெளியில்…மறுபடியும் அந்தப் பிரமாண்ட ஒளிக்கற்றைகள் தோன்றின…ஆரஞ்சும் பச்சையும் கலந்த மாபெரும் திரைப்போர்வை…ஆங்காங்கே கலைந்து பின் சீராகி, இன்னோர் இடத்தில் மடிந்து…
மெல்ல அனைத்து வெளிச்சக் கற்றைகளும் ஒன்றாகச் சேர்ந்து இரு பெரும் கற்றைகளாக அவர்களை நோக்கி வந்தன. வர, வர இரண்டும் இணைந்து மாபெரும் ஒற்றை வடிவமாக ஆனது…அவ்வடிவம் என்னவென ஜெப்ரிக்குப் புரிந்துபோனது. அவ்வடிவம் சற்று தயங்கி, பின் சீரான வேகத்தில் அவர்களை நோக்கி வந்தது!
செங்குத்தான பாதையில் அப்படியே மல்லாந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
“கனவு காண்கிறோம் ஜெப்ரி. மயங்கிவிடாதே…இந்தத் துருவ ஒளி என்பது துருவங்களில் காந்தப் புலங்களில் சூரிய அலைகள் இணையும்போது தெரிவது. வேல்ஸ்ஸில் எப்படித் தெரியும்…”
மார்ஷின் மெல்லிய விளக்கங்களைக் கவனிக்கவில்லை. அவ்வடிவம் அவர்களின் மிக அருகில் வந்தபோது மார்ஷிடமிருந்து சத்தமே இல்லை. அருகே வர வர…அருவி, மரம் செடிகொடிகள், செங்குத்தான கருகற்கள் கொண்ட சேற்றுப்பாதை, கீழுள்ள குளம் அனைத்திலும் அவ்வடிவம் படர்ந்தது, அனைத்தும் பச்சையும் மஞ்சளும் கலந்து ஒளிர்ந்தன. ஜெப்ரி அவ்வடிவத்தை நன்றாகப் பார்த்தார். உறுதிப்படுத்திக்கொண்டார், புன்னகைத்தார். அவ்வடிவம் அவர்களை அணைத்துக்கொண்டது.
***
“ஹலோ…ஹல்லோ…கேட்கிறதா? பொறுங்கள், சற்று தள்ளிப்போய்ப் பேசுகிறேன்…”
“ஹலோ…ஆம், இப்போது எனக்கு ஓரளவிற்குக் கேட்கிறது…என்ன..? ஸ்னோடோன்யா மலை மீட்புக்குழுதானே…”
“ஆம், நான் தான் அவசர உதவி எண்ணிற்கு அழைத்தேன்…நாங்கள் இங்கு ஸ்டோடன் மலையில் ஏறிக்கொண்டிருக்கிறோம்..”
“…”
“ஆம், அப்போதுதான் இவரைப் பார்த்தோம்… பார்த்தால் இரவு முழுவதும் இங்கு இருந்திருப்பார் போலத் தோன்றுகிறது. ஆனால் எப்படி, இந்த மலையில் இரவு குளிர் மைனஸ்ஸில் உயிர் பிழைத்திருக்கிறார், புரியவில்லை……குழப்பமாக இருக்கிறது…அ.. ஒரு நிமிடம் இருங்கள். இந்த ஆளிற்கு இப்போது நினைவு மெல்லத் திரும்புகிறது…கேட்கிறேன்…”
“ஹலோ…மிஸ்டர்…மிஸ்டர்…”
முழுவதும் கண்களைத் திறக்கவில்லையெனினும் “தாமஸ்…தாமஸ்” என்று முனகினார்.
தலையை மெல்லத் தூக்கி அசைத்தார் “புரிந்துவிட்டது..!” பின்னர் தலை சரிந்தது.
“அந்த பை…பை…தாமஸின் பை…”
“என்ன பை? தாமஸ் என்றா சொன்னீர்கள்?…ம்ம்ம்….இங்கு எந்தப் பையும் இல்லையே?”
“ஹலோ மிஸ்டர்…உங்கள் பெயர் என்ன..? நினைவிருக்கிறதா?”
புன்னகை ஒட்டிய தலையை மேலும் கீழும் அசைத்தார். “தாமஸ்…ரூத்…” பலகீனமாகக் கையை எங்கோ காட்டினார்.
“யார்…எங்கே?…இங்கு யாரும் இல்லையே? தாமஸ்? இதுவா உங்கள் பெயர்?”
“இல்லை…” மெல்லத் தலையை வலது இடதாக ஆட்டினார்.
“இல்லையா…உங்கள் பெயரென்ன…நினைவிருக்கிறதா? சொல்ல முடியுமா..?” கன்னத்தை யாரோ ஒருவர் பலமாக தட்டுவதை உணர்ந்தார்.
“மிஸ்டர்..இங்கு பாருங்கள்…இங்கிருந்து கொண்டு ஆம்புலென்ஸ் ஹெலிகாப்டரில் உங்களை ஏற்ற முடியாது. அதற்கு நாங்கள் உங்களை இன்னும் சற்று கீழே கொண்டு செல்ல வேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்”
“அந்தப் பை…”
“எந்தப் பை?…ம்… இங்கு எதுவும் இல்லையே? நீங்களும் உங்களின் மலையேறி பையும்தான் இங்கு இருக்கின்றன”
“அந்தத் தோல்பை…பை நிறைய கற்கள்…கரிமியம்…”
“எந்தப் பை…கற்கள்..? அப்படியெதுவும் இங்கில்லையே?”
“முதலில் உங்கள் பெயர் என்ன? கொஞ்சம் சொல்ல முடியுமா?”
“ஜெப்ரி…” என்று முனகினார்.
“மிக்க நன்றி…ஜெப்ரி…உங்கள் முழு பெயரைச் சொல்ல முடியுமா..ப்ளீஸ்?”
“ஜெப்ரி மார்ஷ்…”
“என்ன..? சற்று தெளிவாய்ச் சொல்லுங்கள்?”
முனகினார்.
“நன்றி மிஸ்டர் மார்ஷ்…உங்களுக்கு ஏதாவது அடிபட்டிருக்கிறதா? காலை அசைக்க முடியுமா?”
“என்னை கூட்டிச்செல்வதற்கு முன் தவறாமல் தயவுசெய்து அந்தப் பை தேடித் தாருங்கள்…”
அவர்கள் அவரைக் கவனமாக எழுப்பி இருவரின் கழுத்துகளிலும் அவரது இரு கைகளைத் தொங்கவிட்டு ஒரு மாதிரி தயார் செய்து கீழே எடுத்துச் செல்ல மேலும் அரை மணியாகிவிட்டது.
அவ்வளவு நேரமும் அவர் கரிமியம், கற்கள் என்று அனத்திக்கொண்டே இருந்தார். ஆனால் அவர்கள் அவற்றையெல்லாம் தேட முயற்சிக்கவில்லை. அவரை எப்படியாவது ஹெலிகாப்டர் கவர்ந்து கொள்ளத் தோதான இடத்திற்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்பதில்தான் கவனமாக இருந்தார்கள்.
அப்படியே தேட முயற்சித்திருந்தாலும் அவ்வோடைக்கரையோரம் சிதறிக்கிடந்த கற்களைக் கண்டு கொண்டிருப்பார்கள் என்பது சந்தேகமே. அப்படியே இருந்தாலும் அவற்றை எடுத்துத் திருப்பிப் பார்த்திருக்க மாட்டார்கள். ஒருவேளை அப்படிப் பார்த்திருந்தால் கற்களின் இன்னொரு பக்கத்தில், ஜெப்ரி மார்ஷ்ஷை முந்தின இரவு அணைத்த விளக்குக் கற்றைகள் ஒளிர்ந்துகொண்டிருந்ததைக் கண்டிருப்பார்கள்…
1Starlings murmuring
2cairn
3Milky Way
4Aurora borealis/ Northern Lights
புகைப்படம்: ஶ்ரீநாத்
அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:
குறிப்பிடத்தகுந்த கதைகள்:
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…