கதை

இறுதி யாத்திரை

12 நிமிட வாசிப்பு

சங்கரலிங்கம் தன்னைக் கண்ணாடியில் பார்த்தார். வலதுபுறக் கன்னம் மேலே எழுந்திருந்தது. நாக்கு மெல்ல நகர்ந்து மேலுதட்டுக்கடியில் ஊறி மறுபக்கமாகக் கீழிறங்க நரைத்த முடி முகத்தில் கொத்துக்கொத்தாக எழுந்தெழுந்து அடங்கியது.

பெருமூச்சுடன் நாற்காலியில் பின்னால் சாய்ந்துகொண்டு கைகாட்டினார். “ஆரம்பிக்கலாம்”

முத்து சவரக்குழைவை நுரைக்க நுரைக்கக் கிண்ணத்தில் குதப்பிக்கொண்டிருந்தார்.

“டே, உன் கையால கடைசியா ஒரு அசல் கத்திச்சவரம்,” என்றார் சங்கரலிங்கம்.

“என்ன கடைசி? என் கத்தி மேல நம்பிக்கையில்லாமப் போச்சோ?” என்றார் முத்து

சங்கரலிங்கம் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். “தெரியாதா? நானும் வீட்டம்மாவும் கிளம்பறோம். போய்ப் பிள்ளைகளோட இருக்கப் போறோம்.”

கண்ணாடியில் முத்துவின் புருவங்கள் உயர்ந்தன. “அதுக்குள்ளையா?”

“அதுக்குள்ளன்னா? எங்களுக்கு என்ன வயசாகுதுன்னு நெனச்ச? எனக்கு எழுபத்தேழு. அவளுக்கு மாசி முடிஞ்சா அறுபத்தெட்டு. இப்பப் போகாம எப்பப் போக?”

முத்து நுரையை சங்கரலிங்கத்தின் கன்னங்களில் சீரான கோடுகளில் இட ஆரம்பித்தார். “அவங்க ஒத்துக்கிட்டாங்களா?”

“யோசனையே அவதான் சொன்னது?” வாயோரமாகத் தெரித்த நுரையை மெல்லத் தொட்டுத் தொட்டுத் துடைத்துக்கொண்டார். “மக வரச்சொல்லறதாத்தான் சொல்லறா. ஆனா இவளுக்குத்தான் போயி மகளோட இருக்கணும்முனு ஒரு இது.”

“உங்களுக்கு?”

“நமக்கென்ன? வீட்டம்மா சொல்லியாச்சு. கேட்டுத்தானேயாகணும்?”

“சரிதான்,” குரல் இலகுவடைந்தது. “கண்டிப்பா லேசர் கூண்டு வேணாங்களா? நம்ம கடைக்கு இளவட்டங்கள் வர்ரதே அதுக்காகத்தான்…”

“ம்ஹ்ம்ம்,” சங்கரலிங்கம் தலையசைத்தார். அவர் மீண்டும் கண்ணாடிக்குள் முகம் காட்டிக்கொண்டிருந்தார். “நமக்கு அந்தக் காலச் சவரக்கத்தியே போதும்டே. அப்பத்தானே உங்கிட்ட பேச முடியும்?” முத்துவைத் திரும்பிப் பார்த்தார். “வயசானவந்தான். வாயோயாமப் பேசறேன்னு கோமதி சொல்லிக்கிட்டே இருக்கா. சரி. ஆனா மனுஷன்னா பேசணுமில்ல? இல்ல ஜடமாகி கால விரிச்சுப் படுக்கவேண்டியதுதான்…”

முத்து சவரக்கத்தியை வைரக்கல்லில் வரக் வரக்கென்று தீட்டி, “அதுக்கென்ன. உங்கக்கிட்ட பேசாம யாருகிட்ட பேசப்போறேன்,” என்றார்

சங்கரலிங்கம் பின்னால் சாய்ந்து கண்ணை மூடினார். சவரநுரையின் மணமெழ முத்துவின் குரலும் சுமுகமாக ஒலித்தது. “கடையாளுங்க கேப்பாங்க. யாருய்யா அது, பெரியவரு, வாராவாரம் கத்திச்சவரத்து வந்திருவாரேன்னு. இங்குள்ளவரில்லியேன்னு.”

“ம்ம்”

“பழைய கல்லூரி முதல்வருய்யான்னு சொல்வேன். அந்தக் காலத்துல முகத்தப் பார்த்தாலே மிரளுவாங்க பசங்க. அவரு பொட்டிப்பாம்பா அடங்குறது எங்க? நம்மக் கையில மட்டும்தான்… ஒரு பெருமையில்ல?”

“உன் கையில கத்தி இருக்கு, அடங்காம?”

“கத்திக்கா அடங்குறீங்க? அன்புய்யா, அன்பு. இருபது வயசுல எங்க அப்பாரு கையிக்கடியில வந்தீங்க. அவர் காலத்துக்குப் பிறகு நம்ம கை. ஒரு அன்னியோனியம் வந்திரும்ல? அதத்தான் சொல்வேன். சார் நம்ம கூட்டுக்காரனாட்டும்முன்னு. நம்ம கை பிடிச்ச ஒரு நல்ல டர்மாபிளேட் சவரக்கத்தியத் தவிர எதையும் முகத்துலப்பட விடமாட்டாருன்னு. இப்ப அதுக்காகவே பல்லவப்பட்டினத்திலிருந்து இம்புட்டுத் தூரம் வாராவாரம் ஹைப்பர்டிரைவில வருகிறாருன்னு.”

“ம்” கன்னத்திலிருந்து நேர் சீவல்களாக வழிக்கப்பட்ட முடி கொத்துக்கொத்தாக மடியில் விழுந்தது. சங்கரலிங்கம் மீண்டும் நாக்கை உதட்டுக்கடியில் சுழற்றினார்.

“மீசைய இலேசா நறுக்கிவிடு போதும்”

“கருப்படிக்கவா?”

“எதுக்கு? மனுஷனுக்கு வெள்ளி கொஞ்சம் மொளச்சு நிக்கணும். விவேகம் வந்துட்டதா சொல்லிக்கலாமில்ல?” முத்துவைக் கண்ணாடியில் ஓரச்சிரிப்புடன் பார்த்தார். “விவேகம் வர்ரதுக்கு முன்னால மூப்பு வரக் கூடாது, என்ன?”

“அதென்னங்க?”

“ஷேக்ஸ்பியர் சொன்னது”.

“நம்ம தாமிரவருணி சித்தர்கூட அப்படிச் சொல்லிவச்சுட்டுப் போயிருக்காருங்களே? மூப்பு வர்ர வரையிலும் சிரிப்பு வரக் காத்திருக்கக் கூடாதுன்னு”

“அவரு யாரவரு? தாமிரவருணி சித்தர்?”

“ஆயிரத்தெட்டு சித்தருள்ள ஒருவர்? இங்கே கடல் கொண்டு போனதுக்கு முன்னால பழைய தாமிரவருணி ஆறிருந்துதல்ல? அங்கக் கரையில ஒரு ரசாயன லோபனசாலை நடத்தி அவரு மருத்துவம் பார்த்ததா சொல்வாங்க”

“சிரிக்கவச்சே மருத்துவம் பார்த்தாரோ?”

“ஆமாங்க. உண்மையாலுமே… மனுஷங்க பிள்ளைங்களாட்டும் சிரிச்சு வெளையாடினா நோய்நொடியே வராதுன்னு சொன்னதா வாக்கு. குழந்தசாமின்னுத்தான் கூப்பிடுவாங்க. சிரிச்சுச் சிரிச்சு முகமெல்லாம் சிவந்து போயிருமா, அதான் தாமிரவருணின்னு பெயர் வந்ததா இன்னொரு கதையும் உண்டு…”

“சித்தர் கதையெல்லாம் நல்லா சொல்லுறியே”

“பழைய கதைய நாம மனசுல நிறுத்தாம யாரு நிறுத்துவாங்க சாமி. காலம் போற போக்குல… நீங்களும் சோலிய முடிச்சு கிளம்பப் போகுதா சொல்றீங்க…”

“அதது வேளை வந்தா நடந்து போடனும் இல்ல?”

“சரிதான்…” அயிரமாயிரம் மென்மையான நுண்கைகளாலான நீருயிரிப் பஞ்சினால் சங்கரலிங்கத்தின் முகத்தை ஒற்றத் தொடங்கினார். சருமத்தை மென்மையாகக் கடித்தது. “நீடுவழியாத்தானே போவீங்க?”

“நீடுவழியிலப் போனா எப்பப் போயி சேற? அஞ்சு வருஷம் ஆகுமில்ல?”

“அப்ப குறள்வழியா எடுக்குறீங்க?” முத்து சிசுருசையை நிறுத்தி அவரைக் கண்ணாடியில் வியந்து பார்த்தார்.

“அதுதான் சரி வருமுன்னு கோமதி சொல்லறா”

“அப்படியா.” முத்து மீண்டும் ஒற்றலைத் தொடங்கினார். “அது சரி. பிள்ளைங்களோட மொத்தமா போயி வாழணுமுன்னா பெரிய விஷயம் சாமி. நமக்கும் இருக்கு, மூணு. எல்லாம் நன்றிகெட்டதுங்க… நன்றிகெட்ட பிள்ளைய வளக்கதுக்கு நல்ல பாம்ப வளக்கலாமுன்னு ஒரு வார்த்தையுண்டு. நான் சீக்குவந்து சீரளிஞ்சாலும் அதுகக்கிட்டப் போவேனா? ம்ஹூம். நமக்குக் கடையிருக்கு, சோலியிருக்கு… நீங்க கொடுத்துவெச்சவங்க சாமி. உங்கக் குட்டி கெட்டித்தங்கமில்ல?”

“தங்கம்தான், இருந்தாலும் ஒண்ணும் உரசல் வராதிருக்க நாமதான் பாத்துச் சூதானமா நடந்துக்கற்ணுமுன்னு அவ சொல்லிகிட்டே இருக்கா. எந்நேரமும் இந்தப் பேச்சுதான்.”

“சரிதான். மனத்தாங்கல் வந்திரப்பிடாதில்ல?”

“அதுக்குன்னுட்டு நாமளும் ஒவ்வொண்ணையும் பாத்துக் கண்காணிச்சு நடக்க முடியுமா, சொல்லு? வயசுக்கும் ஆயுசுக்கும் ஒரு மரியாதை இருக்குல்ல? நாமளும் இருக்குறபடித்தான் இருக்க முடியும்? இந்த வயசுக்கு மேல கூத்தாடச்சொன்னா எப்படி?”

“வாஸ்தவம்தான்”

“நமக்குள்ள சொல்லிகிடறேன் முத்து. வளந்த பிள்ளைங்களும் பெத்தவங்களும் அப்படி ச்சேர்ந்துகிடறதெல்லாம் சரியேயில்ல. மேல போயி உரசிகிட்டே இருப்பம். அவங்களுக்கும் சங்கடம். நமக்கும் தன்மானமுன்னு ஒண்ணு இருக்கு.”

“நயம்பட்ட பிள்ளைங்க அப்படில்லாம் மனசுகோணலா நடந்துக்க மாட்டாங்க சாமி”

“இருந்தாலும்? நாம ஒரு தூரத்த வச்சுக்கிட்டாத்தான நமக்கும் மரியாதை?”

“அவங்க என்ன சொல்றாங்க?”

“அவளுக்கென்ன? அவ எல்லாத்துக்கும் வளஞ்சிருவா…”

“உங்க மகளும் அவங்க கொணம்தான் சாமி. வளஞ்சுகொடுக்கும்”

“அப்படியா சொல்ற?”

“கெட்டித்தங்கமில்ல? உங்க வளர்ப்பு அப்படி”

“ரொம்ப கண்டிப்பா இருந்திட்டேனோன்னு ஒரு இது எப்பம் உள்ள இருக்கு முத்து.”

“பிள்ளைகள நாம கண்டிக்காம? ஒரு வயசு வரை கண்டிப்பு வேணும்தான் சாமி. நம்ம பிள்ளைகள அப்படி நான் பிடிக்கல. பாருங்க அதுங்க ஒவ்வொண்ணும் தறிகெட்ட கழுதையா அலையுது…”

“நல்ல பிள்ளைதான். தங்கம். நல்லா பாத்துக்குவா”

“ஆமா சாமி”

“குழந்தைய எப்படி பாத்துக்குது தெரியுமா.”

“பெண்பிள்ளைகளுக்கு அது உள்ளதுதான் சாமி. வயிறு நெறஞ்சுட்டா நம்ம ஆத்தாளே உள்ள எறங்கினா மாதிரி”

“அவ எங்களையும் நல்லபடி வச்சுக்குவா. மாப்பிள்ளையும். அருமையான பிள்ளைங்க ரெண்டும்”

“ஆமங்க. பாப்பாவ இஞ்ச இருந்தப்ப எத்தனமுறை பாத்திருக்கேன். சின்னவயசுல முடிவெட்ட இங்கேத்தான் கூட்டியாருவீங்க. துருதுருன்னுட்டு நுங்குபழமாட்டும் இருப்பாங்களே”

“பல்லவபட்டினத்துக்கு மாத்தலானப்பெறவு அவள இங்க அதிகம் கூட்டி வர்ர முடியல.”

“நியாயம்தான். படிப்பும் மத்ததும் இருக்குமே.”

“படிப்பு முடிச்சு ஒரு வருஷம் இருந்தா. மறு வருஷமே கப்பலேறிட்டா.”

“பொத்திப் பொத்தி வளத்தீங்களே. எப்படித்தான் போக விட்டீங்களோன்னு இஞ்சே நாங்க எல்லாரும் பேசிக்குவோம்.”

“நாங்க எங்க விடுறது? ஒரு வயசு வரைக்கும்தான். நம்ம கண்டிப்பு, கட்டுப்பாடு எல்லாம் வேலைக்காகும். அப்புறம் கேட்கறுதெல்லாம் இல்ல. சொல்லுறதோட சரி. அப்பா, வீடு சின்னதாயிடுச்சு, நான் போகறேன்னு சொல்லிட்டா. ஒரு வயசுக்கு மேலையும் நாம அதுக்கு எதித்து நின்னா நமக்கும் மரியாதையில்ல பாரு? சரிம்மா, உன் இஷ்டம், கிளம்புன்னு சொல்லிப்புட்டேன்”

“அஞ்சு வருஷமாச்சில்ல போயி?”

“அஞ்சா? அங்கக் கப்பல்ல போகவே அஞ்சு வருஷமில்ல? அவ போயி பன்னிரண்டு வருஷமாவுது”

“கப்பலிலேயே படிப்பாங்களா சாமி?”

“ஆமா. அங்கங்க ஒரு நிறுத்தம் போட்டு இறங்கி அந்தக் கோளிலேயே கொஞ்சகாலம் இருந்துட்டு, சுத்திப் பாத்திட்டு, புறப்பட்டு மேல போவாங்க. படிப்புன்னா அதுதான். இப்ப அங்க போயி நாலு வருஷமா வேலையும் பாக்குறா,” அவர் கண்கள் கண்ணடிக்குள் மினுங்கின. “நம்ம காலத்துல இதெல்லாம் இருந்திருந்தா நாமளும் எல்லாத்தையும் விட்டுப் போயிருப்பம், என்ன முத்து? சிந்துபாது போனா மாதிரி. சாகசப் பயணம்.”

“நமக்கு வாய்க்காதது நம்ம பிள்ளைகளுக்கு வாய்க்கும்போது சந்தோஷம்தானே சாமி.”

“சரிதான், இருந்தாலும் ஒரே மகளா போயிட்டா பாரு? அதான். ஒரு இது. அத்தன தூரமாட்டு போகணுமான்னு” சங்கரலிங்கம் பெருமூச்சு விட்டார்.

“உங்க வீட்ல ரொம்ப ஏங்கியிருப்பாங்க.”

“அவதான். போன முதல் வருஷம் முக்கோணியில பேசுறப்பல்லாம் அழுவா. என் செல்லத்த பாக்க முடியுது பேச முடியுது கட்டிப்பிடிக்க முடியலியேன்னு.”

“அதான் இப்ப நீங்க போறீங்களே? எல்லாம் சரியாயிறும்”

சங்கரலிங்கத்தின் மார்பில் கட்டியிருந்த கருப்பு முடியுண்ணியை விலக்கி முத்து பின்னால் இழுத்து உதறினார்.

“பாப்பா நல்லா இருக்காங்களா?”

“ம், அவளுக்கென்ன. குட்டி பின்னாலேயே ஓட்டம்.”

“குட்டிக்கு ஆறு மாசம் இருக்குமா?”

“எட்டு.”

“பேச்சு வர்ர நேரம்”

“இப்பத்தான் கொஞ்சூண்டு வர்ரது”

“நம்ம பாஷ பேசுங்களா?”

“அது என்ன பாஷ பேசுமுன்னு அதுக்குத்தானே தெரியும்? குய்யா முய்யான்னுட்டு,” மழித்துப் பளபளத்த முகத்தில் மூன்று பற்கள் இல்லாத இடைவெளியுடன் சங்கரலிங்கம் இன்பப்பட்டுச் சிரித்தார். புத்தம்புதியதாக இருந்தது முகம்.

“நீங்க போனா சீக்கிறம் பேச்சு வந்திரும் சாமி”

“அதான் கோமதியும் சொல்லுறா”

“பேரப் பிள்ளையோட கொஞ்சி விளையாடுறது ஒரு கைவல்யம்”

“நான் போக ஒத்துக்கிட்டதே அதுக்குத்தான்”

விடைபெற்றபோது சங்கரலிங்கம் முத்துவிடம், “இனி நான் வரமாட்டேண்டே,” என்றார்.

“வர்ரது போறது நம்ம கையிலியா இருக்கு சாமி,” என்றார் முத்து.

சங்கரலிங்கம் “காலம் அப்படி,” என்றார்.

ஹைப்பர்டிரைவில் பல்லவப்பட்டினத்துக்குத் திரும்பும் அரை மணி நேரமும் சங்கரலிங்கம் காலத்தைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தார். காலத்தை நான் செலவழித்தேன். இப்போது காலம் என்னைச் செலவழித்துக்கொண்டிருக்கிறது. மீண்டும். காலம் என்னைச் செலவழிக்கிறது. அதுவும் ஷேக்ஸ்பியர் வரி. மெல்லிய கசப்பேறிய வரி. கசப்பு மட்டுமே கீறக்கூடிய அங்கதம் கூடிய வரி. சங்கரலிங்கம் புன்னகைத்கார்.

ஆம், ஓர் அம்பைப்போலக் காலம் சென்றுகொண்டிருக்கிறது. அல்லது காலத்திற்குள் ஓர் அம்பாக நான் சென்றுகொண்டிருக்கிறேன். அம்பு நேராகச் செல்லச் செல்ல காலம் என் வாலின் இறகுகளை ஒவ்வொன்றாக என்னிலிருந்து மெல்ல உதிரவைக்கிறது. உதிர உதிர நான் இலகுவடையத்தான் வேண்டும். ஆனால் ஏன் மேலும் மேலும் எடை கூடியவனாகிறேன்? குறைக்கக் குறைக்கக் கூட்டும் விந்தை அறிந்ததா காலம்? ஊதாரிக்குடிமகன் போல் காலம் என்னை மொத்தமாகச் செலவு செய்கிறது. ஆனால் காலம், ஓர் நன்றியுள்ள பிராணி. வளர்ப்புநாய், தான் குதறிய மாமிசத்தை வீட்டில் நன்றியுடன் சேர்ப்பதுபோல, காலம் தன் களிம்பை மட்டும் என் பரப்பின் மீது கனக்கக் கனக்கப் படியவிட்டுச் செல்கிறது. அந்தக்களிம்பை என் கிழங்கிலிருந்து சீவி மழித்தெடுக்க ஒரு சவரக்கத்திக்கூடவா இல்லை, இப்பிரபஞ்சத்தில்? காலமுதிர்ந்து காலமுதிருந்து பறக்கமுடியுமானால், மறு எல்லையில் எந்த இலக்கைச் சென்று தீண்டும் இந்த அம்பு? சீறிப் பறந்துகொண்டிருந்த ஹைப்பர்டிரைவின் கண்ணாடியில் தீற்றலாய் இழுக்கப்பட்ட தன் முகத்தைக் கண்டார் சங்கரலிங்கம்.

ஆனால் பாளையில் அல்வாவும் கண்ணகிபுரத்தில் கொழுத்த மல்லிமொட்டும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பியபோது அவர் மனம் இயல்பாக லௌகீகத்துக்கே மீண்டது.

“என்ன? இளமை திரும்பிட்டதா நினைப்போ?” கோமதி அவற்றை வாங்கிக்கொண்டே அலுத்துக்கொண்டாள்.

“முகத்தப்பாத்து சொல்லு?”

“நல்லாத்தான் இருக்கு, யாரில்லென்னா. இருந்தாலும் இருக்கற சோலிகளையெல்லாம் விட்டுட்டு எதுக்கிப்ப அலைச்சல்?”

“என்ன பெரிய சோலி. வீட்டப் பார்க்க நாளைக்கி ஆளு வர்ராங்க. மறுநாள் போயி நாம சீட்டு வாங்கிக்குறப் பேறோம். வேறென்ன?”

“வேறென்னவா? அரசாங்கத்துட்ட மொதல்ல தாளு வாங்கணும். இல்லாம சீட்டு கொடுக்க மாட்டான். நம்ம துணிமணிகளெல்லாம் பிரிச்சு வச்சுட்டேன். சாரதா வந்து எடுத்துப்போறதா சொன்னா. அங்க நமக்கு இதெல்லாம் தேவைப்படாது இல்ல? களஞ்சியத்துக்குப் போகணும். நீங்கதான் போகணும். கையெழுத்து கேப்பான். சட்டிச்சாமானெல்லாமும் கொடுத்துறணும். வெண்கலச்சொம்பு மட்டும் வச்சிருக்கேன்…”

“இவளப் பாரு. அங்க உள்ள சமையலுக்கு வெங்கலச்சொம்பு எப்படி சேறும்.”

“சரி, சமயலுக்கு வேண்டாம். வச்சு அவ பேறப் பிள்ளைகளுக்குக் காமிக்கட்டுமே? எங்கூரு முப்பாட்டியோட வெண்கலச்சொம்புன்னு.”

“போடீ நீயும் சொம்பும்”

“முத்தண்ணன கட்டிப்புடிச்சு அழுதீங்களா?” கோமதி சிரித்தாள்.

“ஆமா. அவண்ட்ட சொன்னேன். மகள பாக்குறப்பல்லாம் நீ எப்புடி கதறுவன்னு”

“அவருக்கு எல்லா பேச்சும் புரியும். யார் அழுவாங்க, யார் அழமாட்டாங்க, யார் அழாத மாதிரி நடிப்பாங்கன்னு. எல்லாம்…”

வேலைகள் ஒவ்வொன்றாகச் சீராக முடிந்தன. வீட்டைப் பார்க்க வந்தவருக்குப் பிடித்துப்போனது. முன்பொன்னும் கைமாறியது.

அரசாங்கத்தில் தாள் வாங்கப் போனபோது கேட்க வேண்டிய கேள்விகளை இயந்திரம் தன் குரலில் மனிதத்தன்மையைப் புகுத்த எந்தப் பிரயத்தனமுமில்லாமல் அலுப்புடன் கேட்டது.

“குறள்வழியின் நிபந்தனைகளைப் படித்தீர்களா?”

சங்கரலிங்கம் கோமதியைப் பார்த்தார். “படித்தோம்”

“நிபந்தனைகள் புரிந்ததா?”

“புரிந்தது”

“இங்கே கையெழுத்துப் போடுங்கள்”

கையெழுத்திட்ட தாளுடன் வெளிவந்தபோது சங்கரலிங்கம் கோமதியிடம் திரும்பி, “நீடுவழி நமக்கு சரிவராதில்ல?” என்றார்.

“என்ன பேசரீங்க. அஞ்சு வருஷமாவது ஆகும். குறைஞ்சது. அப்புறம் போனா என்ன போகலைன்னா என்ன.”

“ஆமாம்மா. இதான் சரி.”

“எல்லாம் பழகிக்குவோம்.”

“நமக்கே ஒரு புதுசா இருக்கும், என்ன?”

“எது?”

“அங்க எல்லாமே.”

“ம்கும்ம். உங்கள கட்டிக்கிட்டப்ப மட்டும் எப்படி இருந்திச்சாம். கண்ண கட்டி அத்துவானக்காட்டுல விட்டா மாதிரித்தனே இருந்துச்சு.”

“கோமதி?”

“என்ன?”

“கப்பல்ல போக பயம்மா இருக்கா? வெளிச்சத்தோட வேகமா போகுமுங்கறாங்க?”

“நாம தூங்கிருவோங்க. ஒண்ணுமே தெரியாது. மறுநாள் விழிச்சா போய் சேர்ந்திருப்போம்”

நாட்கள் ஒன்றிலொன்று கரைந்து தீற்றலாக அவர்களைக் கடந்து பறந்து சென்றன. வீட்டுக்கு நல்ல விலை வந்தது. வீட்டுப்பொருட்களெல்லாம் விற்கப்பட்டன, அல்லது தானமளிக்கப்பட்டன. சீட்டுகளும் வாங்கப்பட்டுவிட்டன.

புறப்படுவதற்கு முந்தைய நாள்.

சங்கரலிங்கம் தன்னைக் கண்ணாடியில் பார்த்தார். வலதுபுறக் கன்னம் மேலே எழுந்திருந்தது. நாக்கு மெல்ல நகர்ந்து மேல் உதடுக்கு அடியில் ஊறி மறுபக்கமாக கீழிறங்கியது

“வயசாய்டிச்சு,” என்றார்.

“யாருகிட்ட பேசரீங்க?” என்றாள் கோமதி.

“சும்மா…”

“…”

“கோமதி, முத்துக்கடைக்குப் போய்க் கடைசியா ஒரு மழிப்பு மழிச்சுக்கவா?”

“எதுக்கு?”

“இல்ல, பிரயாணத்துக்கு நல்லா இருக்கும்?”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.”

சங்கரலிங்கம் கண்ணாடியில் உதட்டுக்கடியில் நாக்கை மீண்டும் சுழட்டிக்கொண்டிருந்தார். சட்டென்று அவளிடம் திரும்பி, “கோமதி, ‘செவென் ஏஜஸ் ஆஃப் மேன்’ ஞாபகம் இருக்கா?” என்றார்.

“‘உலகம் ஒரு நாடக மேடை
ஆணும் பெண்ணும் அதில் சொற்ப நடிகர்கள்
பல வெளியேற்றங்கள், பல நுழைவாயில்கள்
கொண்ட மேடை – அதில்
ஒரு மனிதன் தன் வாழ்நாளில்
பல பாத்திரங்களில் நடிக்கிறான்.
வாழ்வின் ஏழு பருவங்கள்
அந்நாடகத்தின் ஏழு அங்கங்கள்’”

சங்கரலிங்கம் அவ்வரிகளை மெல்ல அலையலையாக உச்சரித்தார்.

“பரவாயில்லியே. கல்லூரியில வகுப்பெடுத்ததெல்லாம் இத்தனை ஞாபகம் இருக்கு. அப்பறம் என்ன வயசாச்சு பிலக்கணம்?”

“கோமதி?”

“ம்ம்?”

“உனக்குப் பயமா இல்ல?”

“அன்னியிலிருந்து இதே கேட்கறிங்க. எதுக்குப் பயப்படணும்?”

“அங்க எப்படி இருக்கும்முன்னு?”

“இத்தனை நாளா இங்க இருக்கல?”

“இது வேற. இது நமக்காக நாம அமைச்சுக்கிட்ட வாழ்க்கை”

“அங்கேயும் நாமளாதானே முடிவுபண்ணிப் போறோம்?”

“இல்ல, அங்க நாம மத்தவங்கள சார்ந்து இருப்போம்”

“எல்லாருமே எப்போவுமே மத்தவங்கள சார்ந்துதான் இருக்கணும்.” அவர் கையில் தோசைத்தட்டை நீட்டினாள். “இப்ப இங்க நீங்க என்ன சார்ந்து இருக்கிங்க. நான் உங்கள சார்ந்து இருக்கேன். நாம புவியரசாங்கத்தச் சார்ந்து இருக்கோம். இனிமே நாம இரண்டு பேரும் மகளைச் சார்ந்து இருப்போம். யாரையும் சாராதிருக்கணும்முனா சித்தராத்தான் போகணும். சாம்பார் ஊத்தவா?”

“அதுக்கில்ல, இப்படிப் பண்ணாம நாம இரண்டு பேரு மட்டும் தனியாப் போய் இருந்திக்கிறலாமே? மலை மேல, நமக்கு மட்டும் ஒரு சின்ன வீடு…”

“கால் கொடையுது, கை நோவுதுன்னா யாரு மலையிலிருந்து இறக்கிவிடுகிறது?”

“அதெல்லாம் வர்ரப்ப பாத்துக்கலாம்… எனக்கென்ன உடம்புக்கு?”

“உங்களுக்கொண்ணுமில்ல. எனக்குத்தான் நிறைய இருக்கு. கையும் தோளும் வெறுஞ்சுப் போய்க் கிடக்கு. பிள்ளைய அணைச்சாத்தான் தேறும். என்னை என் பேரப்பிள்ளையோட இருக்க விடுங்களேன்?”

“ஏன்? என் பேரப்பிள்ளை இல்லையா?”

“அப்ப சிணுங்காம ஆசையா வர்ரேன்னு சொல்லுங்க”

“இல்ல, அவளுக்கு நாம போகுறதுல ஏதும் சங்கடம் ஏற்பட்டா?”

“அவத்தானே வா வான்னு சொன்னா.” அடுத்தத் தோசையை வெடுக்கென்று கோமதி தட்டில் திருப்பினாள். “ஒரு சங்கடமும் வராது. வந்தாலும் நான் பாத்துக்குறேன்.”

“வியாக்கியானமெல்லாம் நல்லா பேசு,” சங்கரலிங்கம் ஓரவாயால் முணுமுணுத்தார்.

“அவ நம்மள எப்பையாவது ஏதாவது சுடு வார்த்தை சொல்லிறப் போறாளேன்னு பயப்படுறீங்களா?”

சங்கரலிங்கம் நிமிர்ந்து கோமதியின் கண்களை ஒரு நொடி சந்தித்து தோசையிடமே மீண்டார். தன் மனதில் ஓடிக்கொண்டிருந்ததை அத்தனைத் துல்லியமாக, சர்வ சாதாரணமாக, அவள் எப்படிச் சொன்னாள் என்ற வியப்பு ஏற்பட்டது.

“இல்ல, அவ அப்படியெல்லாம் சொல்ல மாட்டா…”

“சொன்னாலும் என்ன? நம்ம பொண்ணுதானே?”

சங்கரலிங்கத்தின் புரைபடிந்தகண்களில் சுருக்கென்று ஒரு சீற்றம் எழுந்தது. பிறகு மெல்லத் தணிந்தது.

“அவ அப்படிச் சொல்லக்கூடாது,” என்றார். “நான் வயசானவன்…”

“உங்க வயசு என்ன சிம்மாசனமா? கட்டி வச்சு காத்து இப்ப ஏறி உட்காற?”

சங்கரலிங்கம் அவளை மேலும் வியப்புடன் பார்த்தார். பிறகு எரிச்சலுடன். “உனக்குப் புரியல…” என்றார்.

“உங்களுக்குத்தான் புரியல. வயசானா மட்டும் போதாது, விவேகமும் வரணும். கொஞ்சம் இறங்கி வரணும்,” என்றாள்.

“உனக்குச் சிம்மாசனமில்ல, நீ சொல்லிட்ட,” என்றார் சங்கரலிங்கம். விஷம்! எனக்குள்ளே அத்தனை விஷம். இதையும் மூட்டைக்கட்டிக்கொண்டுதான் அங்கே போகப் போகிறேன். ஆம்.

ஆனால் கோமதி அதற்கு அசரவில்லை. “ஆமா, என்கிட்ட சிம்மாசனமில்ல. அதனால புண்பட்டாலும் எனக்கு ஒண்ணுமில்ல. ஆனா நான் சந்தோசமா இருப்பேன். தன்மானத்தையே கட்டிக்காத்தா சந்தோசமா இருக்க முடியாது,” என்றாள்.

உறங்கப்போவது வரை சங்கரலிங்கத்துக்கு உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை.

அன்று இரவு சங்கரலிஙத்துக்கு வெட்டவெளியில் பறந்துகொண்டிருப்பதுபோல் கனவு வந்தது. இருபக்கமும் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே போனார்.

தீடீரென்று எதிரில் முதலும் முடிவுமில்லாமல் தொங்கிய மிகப்பெரிய ஆடிக்கு முன்னால் வந்து நின்றார்.

அதை ஆடியென்று முதலில் அவர் நோக்கவில்லை. அவருக்குப் பின்னால் நின்ற நட்சத்திரங்கள் ஆடிக்குள் மின்னின. அதற்கும் வெளியேயிருந்த நட்சத்திரங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இருட்டும் உள்ளேயும் வெளியேயும் ஒன்றுபோலத்தான் இருந்தது.

ஆனால் எதிரே ஒரு சங்கரலிங்கம் பறந்து வந்து நின்றார். முறைத்துப்பார்த்தார். அவர் உதட்டுக்கடியில் நாக்கைச் சுழட்டியபோது எதிரிருந்த சங்கரலிங்கமும் சுழட்டினார். எதிரே இருப்பது ஆடி, பிம்பத்தில் தெரிவது அவர்தான் என்று புரிந்துகொண்டார்.

ஆடியிலிருந்த பிம்ப சங்கரலிங்கம் வெளியே மிதந்த சங்கரலிங்கத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

பிறகு, ஒரே நொடியில், பார்வைச்சரடு அறுபட, பிம்ப சங்கரலிங்கம் மீனைப்போல் உடலைத் திருப்பிக்கொண்டு மறுபக்கம் கண்ணாடி வெட்டவெளிக்குள் நீந்திச்சென்றார். உல்லாசமாக மிதப்பதுபோல் அத்தனை இலகுவாகச் சென்றார். தீற்றலாகி, புள்ளியாகி மொத்தமாக மறைந்துபோனார். அவர் புள்ளியும் இல்லாமல் ஆன அந்த வெட்டவெளியைப் பார்த்துக்கொண்டே சங்கரலிங்கம் சற்றுநேரம் அந்தரத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தார்.

சங்கரலிங்கம் பதறி விழித்துக்கொண்டார். எழுந்து, “கோமதி, கோமதி,” என்றார். ஆனால் கோமதி கனவுகளின் பாரம் இல்லாது நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்.

மறுநாள் சங்கரலிங்கம் அதிஉல்லாசமாக இருந்தார்.

“பயணம்! பெரிய பயணம்! கிளம்பப்போறோம்…” என்றார்.

கோமதி சிரித்தாள். “என்ன இத்தனை உற்சாகம் திடீர்னு?” என்றாள்.

ஆனால் சங்கரலிங்கத்தால் பதில் சொல்ல முடியவில்லை.

அவர்கள் கடைசி மூட்டைக் குப்பையைப் பொறுக்கி வெளியே வைத்தார்கள். கையிலிருந்த சிறு சமையல் பொருட்களை, படுக்கை விரிப்புகளை அண்டைவீட்டாரிடம் கொடுத்தார்கள். வீடு வெறித்துக் கிடந்தது. வீட்டுச்சாவியைப் பாதுகாவலரிடம் கொடுத்தார்கள். பயணச்சீட்டுகளை எடுத்துக்கொண்டார்கள்.

“கையில வேற எதுவுமே எடுத்துக்கவில்லையா?” சங்கரலிங்கத்துக்கு வியப்பு. “ஒரு சின்ன பைகூட இல்லாம பயணமா?”

கோமதி புன்னகைத்தாள். “சாகசப் பயணம்ன்னா இதுதானே?” என்றாள்.

“சரிதான். ‘கனவும் தொடாத கரைகளை நோக்கி’யில்ல போறோம்,” என்றார். வாய்திறந்து எங்கேயோ யாரையோ பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார்.

இருவரும் கிளம்பி கப்பல் புறப்பாட்டுத் தளத்துக்குச் சென்றார்கள்.

பரிசோதக இயந்திரக்காரர் பயணச்சீட்டுகளை வாங்கிச் சரிபார்த்தார்.

“குறள்வழிப்பயணம்,” என்றார்.

“ஆம்,” என்றார் சங்கரலிங்கம்.

“கப்பலில் ஏறிக் கிளம்பியதும் சயனவாயுவின் ஆற்றல் தொடங்கிவிடும். கனவுகள் வரலாம். ஆனால் விழிப்பு இருக்காது. முதல் நூற்றியைம்பது ஒளியாண்டுகளைக் கடந்ததும் குறள்வழி தொடங்கும். அப்போது நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பீர்கள். குறல்வழியிலிருந்து வெளியேறியதும் அங்கே சென்று சேர்வீர்கள். சேரும் நேரம் விழிப்பீர்கள். இரண்டு சூரியன்கள் விடிந்திருக்கும்.“

இருவரும் தலையசைத்தார்கள்.

“கேள்விகள்?”

தயக்கத்துடன், கோமதி இயந்திரக்காரரிடம் “எங்கள் ஆடைகள்?” என்றாள்.

“அங்கே இறங்கியவுடன் புதிய ஆடைகள் தரப்படும்.”

அவள் தலையசைத்தாள்.

இயந்திரக்காரர் அவர்கள் இருவரையும் கட்டடம் வழியாகப் புகுந்து வெளியே அழைத்துச்சென்றார். மேலே வானம் அந்திவேளை நிறங்களின் பதாகைகள் விரியத் திறந்திருந்தது. இருவர் மட்டுமே அமரக்கூடிய உருள்வடிவமான யானம் காத்திருந்தது.

இயந்திரக்காரர் ஒரு பொத்தானை அழுத்த மேற்பகுதி சீரான சீழ்கையொலியுடன் திறந்தது. உள்ளே இறங்கப் படிகள் தென்பட்டன.

இருவரும் உள்ளே இறங்கினார்கள். வட்ட வடிவமான ஓர் அறை போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது யானம். பக்கம்பக்கமாக அவர்கள் படுத்துக்கொள்ள விரிந்த படுக்கைகள் போடபட்டிருந்தன.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு, சங்கரலிங்கமும் கோமதியும் ஆளுக்கொரு படுக்கையில் சென்று தங்கள் உடல்களை விரித்துக்கொண்டார்கள்.

இயந்திரக்காரர் வந்து அவர்களைப் படுக்கையில் இறுத்திவைக்கும் வார்களை பொருத்திவிட்டார். அவை சரியாக இருந்தனவா என்று இழுத்துப்பார்த்தார்.

“கப்பலை நாங்கள் இங்கிருந்தே இயக்குவோம். தேவையென்றால் வழியில் ஓர் இறக்கம் இருக்கும். ஆனால் உங்கள் உறக்கத்தை அது தொந்தரவு செய்யாது,” என்றார்.

சங்கரலிங்கம் தலையசைத்தார். அவர் தொண்டை வற்றியிருப்பதுபோல் இருந்தது.

“உங்கள் பயணம் இனிதாகுக.”

இயந்திரக்காரர் படியேறிச்செல்லும் சப்தம் உலோக எதிரொலிகளாகி விலகி மறைந்தது. கோமதியும் சங்கரலிங்கமும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அவர்களால் முகத்தை மட்டுமே திருப்ப முடிந்தது. உடல்கள் படுக்கையோடு பிணைந்திருந்தன.

தலைக்குமேலே கப்பலின் மேற்பகுதி வெளியுலகை மெல்ல மறைத்தபடி சீராக மூடியது. கப்பலுக்குள் மெல்லிய ஊதா நிற ஒளி மட்டும் மிஞ்சியது. ஒரு மெல்லிய ‘ஹம்ம்’ ஒலி கிளம்பியது.

சங்கரலிங்கம் கோமதியின் கையை அனிச்சையாகப் பற்றிக்கொண்டார். அவளும் அவர் கையை பற்றினாள்.

“சொக்குது,” என்றாள் அவள். “ம்ம்,” என்றார் அவர்.

இருவரையும் நித்திரை கவிந்து மூடியது.

***

இரண்டு சூரியன்களின் வெளிச்சம், மூடிய இமைகளுக்குள் தங்கமழை போல் ஊடுருவியது.

கோமதிதான் முதலில் கண் திறந்தாள்.

“எழுந்திருங்க. எழுந்திருங்க. வந்திட்டோம்,” என்றாள்.

சங்கரலிங்கம் மெல்லக் கைகால்களை முறித்து விழித்தார். “எங்கே? எங்கே?”

கோமதி சங்கரலிங்கத்தைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் பொசுக்கென்று முகமெல்லாம் குழிவிழச் சிரித்தாள். “இதுவும் நல்லாத்தான் இருக்கு…”

சங்கரலிங்கமும் கோமதியை மேலும் கீழுமாக அதிசயத்துடன் பார்த்தார்.

“என்ன? இப்பத்தான் மொத முறை பார்க்குறா மாதிரி.”

“இது முதல் தடவைதானே?” குறும்புச்சிரிப்புடன், “உனக்குப் பல்லே இல்ல…” என்றார்.

“உங்களுக்கு மட்டும்?” என்றாள் அவள்.

இருவர் படிகளில் இறங்கி வந்து படுக்கை வார்களை விடுவித்து ஆளுக்கொருவராக அவர்களைத் தூக்கிக்கொண்டு ஏறினார்கள்.

“சிந்துபாதுக்குக்கூட இது நடந்திருக்காது,” என்றார் சங்கரலிங்கம்.

“சிந்துபாதெல்லாம் என்னத்தக் கண்டான்? பயணம்ன்னா இதுதானே?” என்றாள் கோமதி

“குறள்வழி,” என்றார் சங்கரலிங்கம்

“ஆடிப்பிரபஞ்சத்துக்குள்ளல்ல புகுந்து வந்திருக்கோம்,” என்றாள் கோமதி

“அம்பு திசைய மாத்திவிட்டோம்,” என்றார் சங்கரலிங்கம்

“காலத்த உள்ளுக்கு வெளியா உறுவிவிட்டோம்,” என்றாள் கோமதி

“ஆடிப்பிரபஞ்சத்துக்குள்ள கண்ணு முழிச்சுப் பாத்திருக்கணும்,” என்றார் சங்கரலிங்கம்

“என்னத்த?” என்றாள் கோமதி

“உன்னத்தான்? சின்னப் பொண்னா? ரெட்டை ஜடையெல்லாம் வச்சுக்கிட்டு?” என்றார் சங்கரலிங்கம்

“ம்க்ம்ம், ஆசைதான்?” என்றாள் கோமதி

“பொண்ணு பிறந்தப்ப இருந்தியே? நல்லா பூத்துப் பெருத்து?” என்றார் சங்கரலிங்கம்

“ஐய்யோ சும்மா கெடங்க. வயசுக்குப் பொருத்தமாப் பேசுங்க,” என்றாள் கோமதி

அவர்கள் இருவருக்கும் புதிய ஆடைகளைப் பாதுகாவலர்கள் மாட்டி விட்டுக்கொண்டிருந்தார்கள்.

“பொண்ணு வந்திருவா,” என்றார் சங்கரலிங்கம்.

“பேரனும் வந்திரும்,” என்றாள் கோமதி.

“பசிக்கிது,” என்றார் சங்கரலிங்கம்.

“வந்து சோறூட்டுவா,” என்றாள் கோமதி.

“அப்புறம் விளையாடலாம்,” என்றார் சங்கரலிங்கம்.

“நமக்கு வேறென்ன வேலை?” என்றாள் கோமதி.

அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்ட மழலை பாதுகாவலர்களுக்குப் புரியவில்லை. “தத்துகிறார்கள், பார்,” என்று ஒருத்தி இன்னொருத்தியிடம் சங்கரலிங்கத்தைக் காட்டிச் சொன்னாள். “செல்லக்கிளி!” என்று மற்றவள் கோமதியின் கன்னத்தில் முத்தம் பதித்துக் கொஞ்சினாள். மழலைகள் இரண்டும் ஒன்றையொன்று பார்த்து முகமெல்லாம் குழியாகிப் பொக்கைவாய்க் காட்டிச் சிரித்தன.


பின்குறிப்புகள்

  1. காலத்தின் அம்பு
  2. ஆடிப்பிரபஞ்சம் [1]
  3. ஆடிப்பிரபஞ்சம் [2]

புகைப்படம்: ஶ்ரீநாத்

மேலும் படிக்க

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:

குறிப்பிடத்தகுந்த கதைகள்:

சுசித்ரா

(பி.1987) சொந்த ஊர் மதுரை. அறிவியலில் பட்டமேற்படிப்பு செய்திருக்கிறார். தற்போது சுவிட்ஸர்லாந்தில் வசித்து வருகிறார். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் புனைவு எழுதி வருகிறார். மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். இவருடைய முதல் சிறுகதை தொகுதியான ‘ஒளி’, பதாகை/யாவரும் வெளியீடாக 2019 இறுதியில் வெளிவந்தது. இவருக்கு 2020க்கான வாசகசாலை அமைப்பின் 'சிறந்த அறிமுக எழுத்தாளர்' விருது வழங்கப்பட்டது.

Website - https://suchitra.blog/

Share
Published by
சுசித்ரா

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago