கட்டுரை

அறிவுப் பாதை முடிவும், புனைவுப் பயணத் தொடக்கமும்…

10 நிமிட வாசிப்பு

சமீபத்தில் அறிவியல் புனைவு சார்ந்த விமர்சனங்கள் சமூகவலைத் தளங்களில் நடந்தது. இவ்வாறு விமர்சிக்கும் பொது வாசகர்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்தார்கள். இதில் அறிவியல் இல்லை, இது எதிர்-அறிவியல், தவறான அறிவியல் செய்திகளை வாசகர்களுக்குச் சொல்லித் தவறாக வழிநடத்துகிறது, குழப்புகிறது, குழந்தைகளின் அறிவுக்குத் தீங்கிழைக்கிறது, அறிவியல் புனைவு எழுத்தாளர்களுக்கும் சமூகப் பொறுப்புணர்வு வேண்டும், இன்னபிற… இன்னொரு வகையினர் ஓர் அறிவியல் புனைவை ஒரு வகைமையின் சட்டத்துக்குள் அடைத்து அதற்கு வெளியே இருப்பதை எல்லாம் தவறானது என்று பெயர் பண்ணி தமது விமர்சனங்களுக்கு நியாயம் கோரினார்கள். ஓர் அறிவியல் புனைவு ஒரே வகைமைக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்று நிர்பந்தித்தார்கள்.

சிறுவயதிலிருந்தே அறிவியல் புனைவு என்று அறிவியல் செய்திகளை ஒரு கதைக்குள் ஏற்றிச் சொல்லும் புத்தகங்களையே படித்து அவைதான் அறிவியல் புனைவு என்றே எண்ணி இருப்பதன் விளைவு அது என்று புரிந்துகொள்கிறேன். நான் என் புரிதலுக்கு அதை “அறிவியல் கதை” “அறிவியல் புனைக்கதை” என்று எளிமையாகப் பிரித்துக்கொள்கிறேன். “அறிவியல் கதை” என்பது அறிவியல் செய்திகளை ஒரு கதையில் ஏற்றிச் சொல்வது, (அதை “கதை” என்று சொல்வது ஒரு வசதிக்காகத்தான், ஆனால் உண்மையில் அது “புனைவுக் கட்டுரை” எனும் வகைமையிலேயே சேரும்.) அங்கு முதன்மைப்படுத்தப்படுவது நேரடி அறிவியல், கதை என்பது அறிவியலை ஏற்றிச் சொல்வதற்கான ஓர் ஊர்தி மட்டும்தான்.

வன்-அறிபுனைவு, மென்-அறிபுனைவு, யூகப்புனைவு, மிகையூகப்புனைவு என்று பலவிதங்களில் அறிபுனைவை வகைப்படுத்தலாம் எனினும் எந்த ஓர் அறிவியல் புனைவையும் மொத்தமாக ஒரு வகைமைக்குள் அடைத்துவிட முடியாது. நேரடி அறிவியல் என்று நிரூபித்தவற்றுக்குத்தான் ஒரு தளம், ஆனால் ஒரு அறிபுனைவு மேற்சொன்ன எல்லாவற்றின் கூறுகளையும் தன்னிடத்தே கொண்டிருக்கலாம். எனவே ஓர் அறிபுனைவை ஒரு சட்டகத்துக்குள் நாமே அடைத்து, பின் அதன் மற்ற கூறுகளை எல்லாம் விமர்சிப்பது ஏற்புடையது அல்ல.

அறிவியல் புனைவு என்பது நேரடி அறிவியல் இல்லை. அறிவியல் அடிப்படைக் கட்டுமானத்தின் மேல் புனைவு கட்டி எழுப்பப்பட்டு நமது எல்லைக்குள் இப்போது இருக்கும் அறிவியல் நியதிகளைத் தாண்டிச் செல்வதற்கான நோக்கத்தையும் கொண்டது. It is a fictionalized thought experiment. அறிவியலை மீறி, நம் சிந்தனையை மேலேற்றிப் பறக்கச் செய்யும் ஒரு யுக்தி. மற்ற இலக்கியப் புனைவுகள் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது எனில் அறிவியல் புனைவு சமூகத்தில் இப்போது இல்லாததையும், இன்னும் சாத்தியப்படாத ஒன்றையும் யூகிக்கும். கலை என்பதே ஓர் உணர்வின் உச்சத்தை வாசகனுக்குத் தொட்டுக்காட்டி வாழ்வு சார்ந்த சில கேள்விகளுக்குப் பூடகமாகப் பதில் சொல்வது எனும்போது அந்தக் கலை அறிவியலோடு இணைகிறது எனில் அது அறிவியலின் உச்சபட்ச சாத்தியத்தையும் சொல்கிறது என்றே கொள்ள வேண்டும். நம் அறிவின் எல்லைக்குள் இன்னும் வராததை நோக்கிய பாய்ச்சல் எனக் கொள்ளலாம். “பாஞ்சஜன்யம்” (திருமால் கையில் இருக்கும் சங்கின் பெயர், சப்தப்ரம்ம வடிவம்) அப்படி ஒரு புனைவுதான். தாவரங்களுக்கும் உணர்வுண்டு என்று ஜெகதீஸ் சந்திரபோஸ் சொல்லி இன்று 120 வருடங்கள் ஆகிவிட்டது. போஸ் சொன்னதில் இருந்து இன்று தாவரங்களால் பார்க்க முடியும், மற்ற உயிர்களுடன் தொடர்பு கொள்ள முடியும், கேட்க முடியும், நுகர முடியும், தம் நில உரிமைக்காகச் சண்டையிடும், எதிரிகளை விரட்டியடிக்கும், சிறைபிடித்துக் கொள்ளும் எனும் அளவுக்கு ஆராய்ச்சி முடிவுகள் வந்திருக்கின்றன, இதனாலெல்லாம் அவற்றைத் தாவரங்களின் தன்மையாக நமக்கு கற்பிக்கப்பட்ட பார்வையை மாற்றி அவைகளை Slow Animal என்ற வகையில் பார்க்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். அதிலிருந்து இந்தக் கதையை வளர்த்தெடுத்துச் செல்கிறார் எழுத்தாளர். அறிவியலோடு நமது மரபு இந்த ஓரறிவு உயிர்களை எப்படி வரித்துக்கொண்டது என்பதில் இருந்து, ஓரறிவில் இருந்து ஐந்தறிவு கொண்ட அனைத்து உயிர்களும் சகப்பிரயாணிகளாக எப்படி ஒன்றோடு ஒன்று உறவாடிக் கொண்டிருக்கின்றன, இதில் துயரும், தனிமையும் கொண்ட மனித வாழ்வில் இவற்றின் இருத்தலின் சாரம் என்ன என்று பேசுகிறது.

அறிவியல் புனைவின் சவால் என்பது, இவ்வாறு படைக்கப்பட்ட ஓர் இலக்கிய வகைமையைப் புரிந்துகொள்ள இதே தளத்தில் இயங்கும் வாசக மனமும் தேவையாகிறது. அறிவியல் புனைவுகளின் பிரபலமின்மைக்கு இது ஒரு முக்கியக் காரணம் அது வாசகனிடம் இருந்து உழைப்பைக் கோருகிறது, இதுதான் எல்லா இலக்கிய ஆக்கத்துக்குமான நியதி எனினும், இங்கு இப்புனைவை வாசிக்கும் வாசகனுக்குக் கூடுதலான அறிவியல் முன்னறிவு (prior knowledge) தேவைப்படுகிறது. அதை எழுத்தாளனே கொடுக்க வேண்டிய சூழ்நிலையும் இருக்கும்போது ஆசிரியர் கூற்று, குறிப்புணர்த்துதல் இல்லாமை போன்றவைகளால் புனைவின் இயல்பான உணர்வுத்தளத்தை நீர்த்துப்போகச் செய்கிறது, அது கதைக்கான ஒருமையைக் குலைக்கிறது.

கதையில் அறிவியல் விளக்கம் என்பது அறிபுனைவின் இயல்புதான், ஆனால் அதை எந்த அளவு கொடுக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

இங்கு “நோய் முதல் நாடி” அப்படி ஒரு நவீன அறிவியல் பயன்பாட்டை முன்வைத்த ஒரு புனைவு, Personalized Genomic Medicine and Surgery (PGMS). ஒவ்வொரு மனிதனையும் அவன் மரபணு அளவில் பிரித்தரிந்து மிகவும் தனிப்பட்ட நுண்ணளவில் சிகிச்சை அளிப்பது. இந்தப் புனைவில் அதன் அறிவியல் தகவல்கள் மிக இயல்பாக இயைந்து வருகிறது. இதுவும் ஒரு எதிர்காலச் சிந்தனைதான், ஆனால் அதன் அறிவியலின் நம்பகத்தன்மை வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சிகிச்சையை மரபணுவழியாகப் பிரத்யேகமாக ஒரு குறிப்பிட்ட தனித்த மனிதனுக்காக என்று வடிவமைக்கும் முன்னேறிய காலத்திலும் சமூக நன்மை என்பது ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான நன்மை எது என்று பார்க்கப்படுமே தவிர தனிமனிதனோ சிறு குழுக்களோ அல்ல என்பதும் உணர்த்தப்படுகிறது. இவ்வாறு அறிவியலையும் வாழ்க்கையையும் ஒரு கதைக்குள் இயைந்து புனைந்து, அதே சமயத்தில் அதன் அறிவியல் விளக்கங்கள் கதைக் களத்தில் இருந்து வாசகனை அந்நியப்படுத்திவிடாமல் அதன் உணர்வுத்தளத்தையும் தக்க வைப்பது என்பது அறிவியல் எழுத்தாளனின் சவால்தான், அதை இக்கதை திறம்பட செய்கிறது. இதற்கு மாறாக இந்தத் தொகுப்பில் இருக்கும் சில கதைகளிலேயே மேலதிக விபரங்கள் கதையின் ஒருமையைக் குலைத்துக் கதை மனதுக்குள் செல்வதைச் சிதறடிப்பதை வாசகர்கள் உணர முடியும்.

நமது கற்பனைத் திறனின் உச்சத்தில் ஓர் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பி, அதில் மனித வாழ்வின் சாரமாகக் காலத்தின் நீட்சியில் எது நிலைக்கும் எனும் வினாவை நோக்கி விரித்தெடுப்பது அறிவியல் புனைவுகளின் பெரும் வசதி. “என்றூழ்” (சூரியன் அல்லது அது சார்ந்தவை) கதை அப்படி உள்ளுணர்வு எனும் மனிதத்தன்மையை முன்வைத்து ஓர் இயந்திரத் துணையைப் புனைந்து பார்க்கிறது. மனிதப் பிரத்யேகத் தன்மைகளாக நாம் கருதும் உள்ளுணர்வு, அவதானிப்பு, கலையுணர்வு போன்றவற்றையும் மீறி அவை அன்பு, ஏக்கம், போன்ற சுயங்களோடும் பரிமளித்தால்?, அத்தகைய மனித ஆதார உணர்வை அவையும் சகமனிதராக உணர, பகிர எத்தனித்தால்?, தவறுகளுக்கான பழி சுமத்தல், குற்ற உணர்வு போன்ற மனித உறவுச் சிக்கல்களுக்குள் நுழைந்தால்?, பரிணாமம் கொண்டால்?, இருத்தலியல் கேள்விகள் அவளையும் ஆட்கொண்டால்? நிலையின்மையின் அச்சம் எழுந்தால்?, அதற்காக “மனிதத்தன்மையிலேயே” போராடினால்?…… இங்கு அறிவியல் புனைவு என்பது மானுட அடிப்படையை நோக்கி நம் அறங்களை மீள் வரையறை செய்வதற்கான உத்தி மட்டுமல்ல, நவீனகால விழுமியங்களை கட்டமைத்தலுக்கான அவற்றை நோக்கிய நகர்வுக்குமான தயாரிப்பாகவும் இருக்கலாம்.

அறிவியல் கதைகளைப் படிக்கும்போது மிக முக்கியமான ஒரு பண்பாக நான் எதிர்பார்ப்பது அது வாசக மனத்தைத் தூண்டி அந்த அறிவியல் சார்ந்த சிந்தனையை அவனுள் விரிவடையச் செய்கிறதா என்பதும் கதையை வாசித்து முடித்த பின்னும் வாசக மனதில் அது ஒரு சிந்தனைத் தொடர்ச்சியைக் கொள்கிறதா என்பதும். அறிவியல் உணர்த்தப்படுகிறதா என்பதும் எனக்கு முக்கியமாக இருக்கிறது. அறிபுனைவு என்பது ஓர் அறிவியல் செய்தி அல்லது தொழில்நுட்பத்தைச் சுற்றி கதையெழுப்புவது அல்ல என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டி இருக்கிறது. அறிவியலின் தத்துவத்தை ஒரு கதையோடு இயைந்து சொல்வது, அறிவியல் கொள்கைகள், கோட்பாடுகளைப் புனைவின் தளத்தில் விரித்தெடுப்பது அல்லது விசாரணை செய்வது. முதலில் அறிவியல் தகவல்களில் இருந்து அறிவியல் சிறுகதை எழுதும் உந்துதலைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு சராசரி அறிவியலாளருக்கு எப்படி படிமம், குறியீட்டியல் சார்ந்த பரிட்சயம் இன்றி, மொழிவளப் போதாமை இருக்கிறதோ அதேபோல் எழுத்தாளர்களுக்கு அறிவியலின் தத்துவம் கோட்பாடு சார்ந்த புரிதல் குறைபட்டிருக்கிறது. இதைக் கவனத்தில் கொண்டு அறிபுனைவை அதன் தொழில்நுட்பத்திலேயே, தகவல்களால் கட்டமைக்காமல், அதன் கோட்பாட்டு வளர்ச்சியின் ஒரு படிநிலையில் இருந்து இன்னொரு படிநிலைக்கு உயர்த்துவதாக, அல்லது சிந்தனைத் தளத்தை மாற்றுவதாக இருக்க வேண்டும். அறிவியல் புனைவு ஒரு கோட்பாட்டை அடிநிலையாக வைத்து அதில் இருந்து பாய்ச்சலை நிகழ்த்த வேண்டும் அல்லது விஸ்தரிக்க வேண்டும்.

உயிர் என்பது என்ன என்ற கேள்வி மிகப் பழமையானது, நூற்றுக்கும் மேற்பட்ட விளக்கங்கள் இதுவரை கொடுக்கப்பட்டாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விளக்கம் இன்னும் இல்லை. உயிர் என்பதை பூமியை முன்வைத்து மட்டும் புரிந்து கொண்டோம் எனில் பூமிக்கு வெளியே அதன் அத்தனை அர்த்தங்களும் தோற்றுப்போகும். “உளதாய் இலதாய்” அதை அப்படி பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியின் சாயலைக் கொண்டிருந்த, தண்ணீர் இருந்த செவ்வாய்க் கிரக உயிரிகள், அந்தக் கிரகம் வறண்டு போவதிற்கு முன் வேறு கிரகம் தேடி அருகில் இருந்த பூமிக்கு வந்திருந்தால் எனும் கேள்வியை வளர்த்தெடுத்து செல்வதன் மூலம் விசாரணை செய்கிறது. முடிவிலியான இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள நம்மிடம் இருப்பது இருக்கும் தகவல்கள் இடைவெளிகளை இட்டு நிரப்பிக்கொள்ளும் கற்பனைதான். அப்படியின்றி, அறிபுனைவு சார்ந்த சிந்தனையை அதன் தகவல்களில் இருந்து வளர்த்தெடுத்துச் சென்றோம் எனில் கதையின் இறுதியில் தகவல்களின் கோர்வை மட்டுமே ஒரு வாசகரைச் சென்று சேரும், மேலும் அதுதான் கதைகளுக்கு ஒரு கட்டுரைத் தன்மையை கொடுத்துவிடுகிறது. இந்தத் தொகுப்பிலும் சில கதைகளுக்கு அதன் கட்டுரைத் தன்மை பெரும் இடைஞ்சலாக இருக்கிறது.

இந்தக் கதைகள் அனைத்திலும் முதன்மையாகக் கவர்ந்தது அதன் மொழி. மிக இலகுவான கதைசொல்லல். செறிவான, அழகியல் சார்ந்த, ஊடுபிரதித்தன்மையுள்ள, செவ்வியல்தன்மையுடைய என்று பல்வேறான மொழி வளம் மற்றும் கூறும் முறை மிகவும் கவர்ந்தது. அறிபுனைவு என்றாலே அது எதிர்காலத்தை நோக்கியதாகச் சிந்தனை இருப்பது இயல்பானதுதான், இந்தக் கதைகளிலும் அதிகபட்சம் எதிர்காலத்தை நோக்கியதாக இருப்பது இதன் இன்னொரு பொதுத்தன்மை. அதை அறிபுனைவு உருவானதிற்கான முதன்மைக் காரணமாகவும் சொல்லலாம். இந்தப் பிரபஞ்சமும், இயற்கையும், மனமும் முடிவிலிகள். முடிவிலிகளின் முயக்கத்தில் இந்த மனித வாழ்வின் சாத்தியங்கள் கணக்கிட முடியாதது. அதன் எல்லையற்ற சாத்தியங்களை இதே வாழ்க்கைச் சூழலில் ஒரு வாழ்வைக் கட்டமைத்துப் பதிலைக் கண்டடைந்துவிடமுடியாத இலக்கியம், இப்போது நடைமுறையில் இல்லாத ஒரு வாழ்வை, யதார்த்தத்தைப் படைப்புக்குள் கட்டமைக்க வேண்டியதாயிருக்கிறது. அது அறிவியல் புனைவாலேயே சாத்தியமாகிறது. அந்த வாழ்வின் நம்பகத்தன்மைக்கு ஒரு கச்சா பொருளாவதே அறிவியல். எனவே பெரும்பாலான கதைகள் எதிர்கால வாழ்வைக் கட்டமைப்பது அறிபுனைவில் இயல்பானதாகிறது. ஆனால் இதில் அறிபுனைவு எழுத்தாளர்களின் சவாலே அதில் மனித வாழ்வையும் அறிவியலையும் எப்படி ஒன்றின் உள்ளீடாக இன்னொன்றைக் கொண்டு வருகிறோம் என்பதுதான்.

இந்தக் கதைகளிலே எதிர்காலத்தில் வலி அளவிடப்பட்டு அது ஒரு தண்டனைக்கான அலகாகக் கொள்ளப்படும்போது அது எப்படி மனித வாழ்வை ஒரு மீட்சி அல்லது மீள்துன்பம் என்று இருதிசையிலும் பயணப்படலாம் எனும் “100 நலன்கள்” கதையாகட்டும் அல்லது மரணமிலாபெருவாழ்வு சார்ந்த “கார்தூஸியர்களின் பச்சை மது” கதையாகட்டும் அது அறிவியலின் செயல்படு முறையை இன்னும் விசாரணை செய்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். மரணமில்லா பெருவாழ்வு சார்ந்த ஒன்றை அறிவியல்புனைவாகக் கொண்டால் அதன் கருவை உருவகிப்பதிலும் விரிவாக்கம் செய்வதிலும் அடிப்படையான அறிவியல் நோக்கு செயல்பட்டாக வேண்டும், இங்கு அமிர்தத்தின் அறிவியல் என்பது அறிபுனை என்பதற்காகவும் வாசகனின் நம்பிக்கைத்தன்மைக்கும் முக்கியமாகிறது. உலகின் எல்லா பழமையான வரலாறு கொண்ட இந்திய, சீன, ஜப்பான் தென்னமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளின் மரபுகளிலும், புராணங்களிலும் அந்த மரணமிலாப்பெருவாழ்வு கற்பனை செய்யப்பற்றிருக்கிறது. இன்று அதை அறிவியல்படுத்தி எழுதும்போது அதற்கான அந்த மூலிகை மருந்து எந்தக் குறிப்பிடட பிரத்யேகமாகச் செயல்படும்விதத்தின் மூலம் (Mechanism of action) அதைச் சாத்தியமாக்குகிறது என்பதை விவரிக்கலாம், அதை ஆதிகால மரபு எப்படி பார்த்தது, அந்த மரபின் அறிவை எந்த விதத்தில் இப்போதைய நவீன அறிவியல் வளர்ச்சியின் புரிதலில் விளங்கிக்கொள்ள முடியும் என்பதை விளக்கலாம். இவை ஓர் அறிபுனைவாகக் கதை மீதான வாசக நம்பிக்கைத்தன்மையை அதிகரிக்கும்.

நாம் எழுதும் அறிவியல் புனைகதைகள் நமது மரபில் இருந்து வந்தவையாக இருந்தால் நல்லது என்று ஜெயமோகன் ஓரிடத்தில் சொல்லி இருக்கிறார். இன்னொரு விதத்தில் அது ஒரு சிறந்த யோசனையாகத் தோன்றியது. ஏனெனில் நம் மரபு சார்ந்த ஓர் அறிவியல் புனைவைப் படிக்கும் வாசகனுக்கு எழுத்தாளன் அது சார்ந்த “விரிவான” அறிவியலறிவைக் கதைக்குள் கொடுக்க வேண்டியதில்லை, நமது மரபு சார்ந்த அறிவியல் அறிவு நாம் கற்றறியாமலேயே நமக்குள் ஓரளவு சேகரமாகி இருக்கிறது. மேலும் இலக்கியம் படிமங்களையும், தொன்மங்களையும் எடுத்துத் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது எனில் அதற்கு நம் மரபு சார்ந்த ஒன்றுதான் ஏதுவாக இருக்கும், எனவே அதனால் எளிதாக கலை இலக்கிய மனதுக்குள் ஊடுருவமுடியும், வாசகனுடன் தொடர்புறுத்த முடியும், மற்றவை நமக்குள் ஒரு படிமமாக முடியாததால் ஒரு அந்நியத்தன்மையைக் கொடுக்கும்.

“இறுதி யாத்திரை” போன்ற விந்தையான கற்பனைகளைத் தூண்டக்கூடிய, காலம் மற்றும் அதனுள் இயங்கும் மனித வாழ்வு என்பதன் பொருள் என்ன எனும் வினாவை எழுப்பிக்கொள்ளும் புனைவு, எதிர்கால வாழ்க்கைச் சூழலில் மனிதனும் அறிவியல் தொழில்நுட்பம் முயங்கும்போது இருவருக்குள்ளுமான உறவுநிலை பேணல், ஊடாடல், உறவுகள் பதிலீடு செய்யப்படுதல் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மானுடத்தை எவ்வகையில் எல்லாம் பாதிக்கும் “அசரீரி” என்பது போன்ற கற்பனைகள் மற்றும் இந்தப் பேரண்டத்தில் மனிதத் தோற்றத்தின் நிகழ்தகவை, நிலையின்மையை, விபத்தை, இப்பெரும் மனிதவாழ்வின் அபத்தத்தை நிகழ்த்திக்காட்டும் “அது” போன்ற கதைகள் வாழ்வைப் பற்றிய பார்வைகளை அளித்து, வாழ்க்கையின் அடிப்படைக்கேள்விகளுக்கு அறிவியலின் படிமங்களைப் பயன்படுத்திப் பதில் தேட முயல்கின்றன. இப்புனைவுகள் முன்வைக்கும் தத்துவார்த்தமான கேள்விகள் மூலம் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. “வலசை” கதை மரபில் இருந்து கொணர்ந்த படிமங்களை அறிவியலூடாகச் எடுத்துச் செல்வதிலும், மனித உணர்வுகளின் வெளிப்பாட்டிலும், கதையின் அந்தரங்கத்தன்மையிலும், “பகுதாரி” மனித மனதை அறிவியலின் தொழில்நுட்பத்தில் விசாரணை செய்ய முயல்வதிலும் அறிபுனைவாகிறது.

ஆதிகாலம் முதலாகவே மனிதனுக்கு இந்தச் சுற்றமும் இயற்கையும் ஒரு சவாலாகவே இருந்திருக்கிறது. அதன் புரிந்துகொள்ள இயலாத்தன்மை, பிரமாண்டம், அறிவின் எல்லைக்கு அப்பால் இருப்பது எல்லாம் மிரட்சியைக் கொடுத்திருக்கிறது. அச்சம் மனிதனின் ஆதாரப் பண்பு. அறிதல் அவனுக்கு ஒரு விடுதலை. ஒவ்வொரு மனித மனமும் புரியாதவைகளின் இடைவெளியில் புனைவை நிகழ்த்தி அதற்கு ஒரு காரணத்தை, முழுமையைக் கொடுத்து அதிலிருந்து விலக எத்தனிக்கிறது. எப்படி மனிதர்களின் ஆரம்பகாலப் புனைவுகள் புராணங்களாக, பேய்க்கதைகளாக, தேவதைக்கதைகளாக மிகைக் கற்பனைகளாக யதார்த்தத்தை மீறி இருந்ததோ அதேபோல் அவனின் ஆதிகால அறிபுனைவும் அறிவியலின் கட்டற்ற வளர்ச்சி சார்ந்த அவனின் அச்சமாகவே 1820 களிலேயே ‘ஃபிராங்கின்ஸ்டை’ உருவகித்தது. அது அறிபுனையின் ஒரு வகைமையாகியது. “சனி பகவானும்” அப்படி ஒரு வகையான “பிராங்கின்ஸ்டைன்” தான். அறிவியல் சார்ந்த கதை சொல்லல்தனமும், அதனுடாக ஊடாடிச் செல்லும் மனித வாழ்க்கையின் கதையோட்டமும் இன்றைய வாழ்க்கை மீதான அதன் விமர்சன நோக்கும் இந்தக் கதையை முக்கியமானதாக ஆக்குகிறது.

ஏதாவது இன்னோர் இலக்கிய ஆக்கத்தில் இருந்து அல்லது திரைப்படத்தில் இருந்து “தாக்கத்தைப்” பெற்று அறிபுனைவை எழுதுகிறோம் எனில் அது முன்வைத்த அடிப்படை அறிவியல் கேள்வியில் இருந்து நமது ஆக்கம் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தி இருக்க வேண்டும். அப்படி அல்லாமல் நியூட்டன் ஆப்பிள் மேலே இருந்து கீழே விழுந்ததற்குப் புவியீர்ப்பு விசைதான் காரணம் என்று கண்டுபிடித்தார் எனில் நாம் ஆரஞ்சை எடுத்துக்கொண்டு அது மேலே இருந்து கீழே விழுந்ததற்கும் புவியீர்ப்புவிசைதான் காரணம் என்று “கண்டுபிடித்துச்” சொல்வது போல் ஆகிவிடும். இதில் இணைப்பிரபஞ்சத்தின் மானுட சாதனைகள் எல்லாம் ஒன்றாகக் குவிக்கப்பட்டால் மானுடகுலம் எத்தகைய பாய்ச்சலை நிகழ்த்தும் எனும் ஒரு புனைவு எனக்கு Coherence திரைப்படத்தை நினைவுறுத்திக்கொண்டே இருந்தது. ஒரு ஐடியா தோன்றினால், அது சார்ந்த தேடுதலைக் கொண்டு அதில் உங்களுக்கு ஏற்படும் தர்க்கக்கேள்விகளுக்கும் பதில்களைக் கண்டு, முரண்களைக் களைய வேண்டும். அறிபுனைவில் வைக்கப்படுவது புனைவுத்தர்க்கம்தான் எனினும், அந்த வசதி படைப்பாளிக்கு இருந்தாலும், அது அறிவியல் தர்க்கம்தான் என்ற “தோற்றம்” வாசகனிடம் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். உங்களுக்கு ஏற்படும் எல்லா தர்க்கங்களும் வாசகனுக்கும் தோன்றும், அதை அவனுக்கு நிவர்த்தி செய்யாமல், அவனை கன்வின்ஸ் பண்ணாமல் அவனால் கதைக்குத் தன்னை ஒப்புக்கொடுக்க முடியாது. கதை அவனை உள்ளிழுக்காது.

அறிபுனைவு எழுத்தாளர்கள் தம்மையும் ஒரு விஞ்ஞானியாகக் கருதிக் கொள்வதும் அந்த மனநிலையைக் கைக்கொள்வதும் மிக மிகமுக்கியமானது என்று நினைக்கிறேன். இது அவர்கள் பொறுப்புணர்வை அவர்களுக்கு உணர்த்தும். அவர்கள் ஒரு துறை சார்ந்த விஞ்ஞானிகளுக்குச் சிந்தனைத் தளத்தில் எந்தவிதத்திலும் குறைவானவர்கள் இல்லை. ஓர் அறிவியலறிஞருக்குத் தான் சார்ந்த துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் படிநிலைகளை அறிந்திருத்தல் மிக முக்கியமானது. அதேபோல் அவரை அந்தத் துறையில் முன்நகர்த்துபவையாக இருப்பது, கவனித்தறிதல், ஒப்புநோக்கல் மற்றும் தொடர்ந்து கற்றல் (Observation, Comparision and Study). ஓர் இலக்கியவாதிக்கும் இதுவே இருக்க வேண்டிய அடிப்படைப் பண்பு, மற்ற முக்கியமான பண்புகள் கற்பனையும் உள்ளுணர்வும். எப்படி ஓர் அறிவியலறிஞர் கருதுகோள்கள் மற்றும் தத்துவச் சிந்தனைகளில் ஏற்படும் விபர இடைவெளிகளைக் கற்பனை மற்றும் உள்ளுணர்வு மூலம் இட்டு நிரப்பி ஒரு முழுமையைக் கொண்டுவந்து அதைப் பரிட்ச்சித்துப் பார்க்கிறாரோ அதுவேதான் அறிபுனைவு எழுத்தாளர்களுக்கும்.

இயற்கை என்ற முடிவிலியை அதன் பேரியக்கத்தை அறிய முற்படும் அறிவியலறிஞருக்கும் எழுத்தாளருக்கும் கற்பனை மற்றும் உள்ளுணர்வு மட்டுமே ஏறத்தாழ பயனுள்ள வகையில் வழிகாட்ட முடியும். எத்தனையோ விஞ்ஞானிகள், எந்த நிரூபணங்களும் இல்லாமல், நிரூபிக்கச் சாத்தியமில்லாத கால கட்டத்திலேயே தமது கற்பனை மற்றும் உள்ளுணர்வு மூலம் எழுதி வைத்துச் சென்ற குறிப்புகள் பிற்காலத்தில் உண்மையென்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் எழுத்தாளர்கள் தமது புனைவுகளில் சொல்லிச் சென்ற எவ்வளவோ அறிவியல் கருத்துகள், யூகங்கள், செய்திகள் பலபல பத்தாண்டுகள் கழித்து நிரூபணத்துக்கு வந்திருக்கின்றன, அவற்றைப் பட்டியலிட முடியும். எனவே அறிபுனைவு எழுத்தாளர் தம்மை ஓர் ஆராய்ச்சியாளர் தளத்தில் வைத்துக் கொள்ளும்போதுதான் வாசகன் கற்கிறான், உணர்த்தப்படுகிறான், அவன் இருக்கும் ஒரு புரிதல் தளத்தில் இருந்து இன்னொரு தளத்துக்கு உயர்த்தப்படுகிறான். அந்தப் படைப்பின் மீதான வாசகனின் நம்பிக்கைத்தன்மை அதிகரிக்கிறது. அறிபுனைவு நேரடி அறிவியல் இல்லை ஆனால் எந்த ஒரு புனைவுக்கும் வாசகனின் நம்பிக்கைத்தன்மை Believability என்பது மிகமுக்கியம், அதில் சொல்லப்பட்டிருக்கும் அறிவியல் மீதும், அதன் அறிவியல் மேல்கொள்ளும் நம்பிக்கையும்தான் புனைவுக்குள் வாசகனைக் கொண்டு செல்லும். இதற்காக இன்னொன்றையும் ஓர் யோசனையாகச் சொல்ல முடியும், எப்போதும் வன்-அறிபுனைவுக்கே நம்மைத் தயார் செய்துகொள்வது சரியானதாக இருக்கும், முயற்சி அதற்கானதாக இருக்க வேண்டும், ஆனால் கதையின் ஒட்டத்தில் அது வன்-அறிபுனைவாகாமல் மென்-அறிபுனைவாகவோ அல்லது இரண்டும் இயைந்த ஒரு வகைமையாகவோ ஆகலாம், ஆனால் எப்படி வந்தாலும் அது மிகச் சிறப்பான ஒன்றாகவே இருக்கும். ஏனெனில் இங்கு நமக்கு அனுமதிக்கப்பட்டது கதையை அல்லது அந்த அறிவியல் கேள்வியை/சூழ்நிலைச் சிக்கலைப் பின்தொடர்ந்து செல்வது மட்டும்தான், எப்படி அது பரிமளிக்கிறது என்பது நம் கையில் இல்லை, இங்கு “வன்-அறிபுனை” எனும் தேர்வு நம்மைத் தயார் செய்துகொள்வதற்கு மட்டும்தான், ஏனெனில், மிகத்தெளிவான இறுதியான முன்தீர்மானத்துடன் எழுதுவது படைப்பின் கலைத்தன்மையைக் குலைக்கிறது. மேலே சொன்னவைகளுடன் அறிவியலின் தத்துவப் புரிதல்களுக்கும் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு, அதைப் புனைவில் ஏற்றிப் பறக்கவிட்டால், மனித வாழ்வு பற்றிய பார்வைகளோடு, அறக் கேள்விகளும், மெய்யியல் விசாரணையுமாக, அதனுடைய பிரத்யேக வடிவத்தை அதுவே கண்டடைந்து ஒரு மிகச் சிறந்த அறிபுனைவாக அது வெளிவரும். வாழ்த்துகள்!!!


புகைப்படம்: ஶ்ரீநாத்

மேலும் படிக்க

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:

குறிப்பிடத்தகுந்த கதைகள்:

சரவணன்

சரவணன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில், நோய்களின் உயிரணு மற்றும் மூலக்கூறு இயங்குமுறை ஆராய்ச்சிகளில் இயங்கும் விஞ்ஞானி. தீவிர வாசகரும், இலக்கிய ஆர்வலருமான சரவணன், தமிழின் முன்னோடி எழுத்தாளர்களான ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன், ஞாநி, சு. வேணுகோபால், சூத்ரதாரி போன்றவர்கள் பங்கேற்ற பல இலக்கிய நிகழ்வுகளைச் சிங்கப்பூரில் ஒருங்கிணைத்திருக்கிறார்.

Share
Published by
சரவணன்

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago