கதை

அரூ அறிபுனைப் போட்டி #500

16 நிமிட வாசிப்பு

I

பழையன கழிதல்

“ஹலோ சத்யா. இந்த மீட்டிங்காவது சீக்கிரம் முடிஞ்சிடுமா இல்ல போன வாரம் மாதிரி இழுத்தடிக்குமா?”

“சீக்கிரம் முடிஞ்சிடும்னுதான் நெனக்கறேன் பிச்சை. அஜென்டால ரெண்டு ஐட்டம்தான் இருக்கு. முதல்ல சுலபமானத பேசி முடிச்சிருவோம். செர்வர் பண்ணைல ஸ்வாப்-இன் ஸ்வாப்-அவுட் செய்யனும் போலிருக்கு. செயலி ஆற்றல் பற்றாக்குறை நிலையை விரைவிலேயே எட்டிடுவோம்னு ப்ளானிங் அல்காரிதிம் எச்சரிக்கை விடுத்திருக்கு. பத்து மில்லியன் சர்வர்களுக்கான நெகிழ்வு நகலி விண்ணப்பத்த செர்வர் பண்ணைலேந்து அனுப்பியிருக்காங்க.”

“அப்போ, ஒரு கோடி ஆமை வேகத்துல வேலை செய்யற அந்தப் பழங்காலத்து பெரிசுங்கள ஓரங்கட்டிட்டு அதிவேகப் புது செர்வர்கள கொண்டு வருவதாகத் திட்டமா?”

“இல்ல, பத்து கோடி பழம்பெருச்சாளிகள வெளில தள்ளிட்டு ஒரு கோடி நெக்ஸ்ட்-ஜென் சர்வர்கள் புத்தம் புதுசா தயாரிக்கப் போறோம். புது சர்வர்கள் பழைய சர்வர்களவிட பத்து மடங்கு வேகமா செயல்படக் கூடியவை.”

“அப்ப சரி, இன்விட்ரோ க்லோன் அல்காரிதிம்ஸ ஆக்டிவேட் செய்யறதுக்கான அனுமதிய அனுப்பிடுங்க. லெட்ஸ் கெட் ஆன் வித் இட் தென். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பேடா-டெஸ்ட் செஞ்சோமே, அந்த விசைமுடக்கிப் படிமுறைகள் எப்படி வேலை செய்யுது, உண்மையாகவே எவ்வளவு உற்பத்தித்திறன் லாபத்த கொடுக்குதுன்னு தெரிஞ்சுக்க இது ஒரு நல்ல சோதனை. போன தடவை அரை கோடி சர்வர்கள ஒரு மாசத்துல நெகிழ்வு நகலி செய்தோம். இப்போ ஒரு கோடி சர்வர்கள ஒரே வாரத்துல உற்பத்தி செஞ்சுட முடியுமா?”

“பார்க்கலாம், எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒரு காலத்துல இதைச் செய்து முடிக்க எவ்வளவு நேரம் பிடிச்சுதுன்னு உங்களுக்கே தெரியும். ஆனா இழவெடுத்த சர்வர் பணி விடுப்பு விழாவலாம் இன்னும் நடத்திக்கிட்டு இருக்கனுமா? இந்தப் பழங்காலச் சடங்கெல்லாத்தையும் மூட்டை கட்டி வெச்சிட்டு, ஆர்பாட்டமே இல்லாம இதைச் செய்து முடிக்கலாமே?”

“சத்யா, நம் வாழ்க்கைலயும் கொஞ்சம் கோலாகலம் வேண்டாமா. அதுக்கு நமக்கு இன்னமும் ஆரவாரம், விழா எல்லாம் தேவப்படுது… இல்லைன்னா எல்லாமே, இயந்திரத்தனமாகிப் போரடிக்கத் தொடங்கிடும். வர்க்கர்ஸ் மனநிலையையும் உற்சாகத்தையும் நாம் பொருட்படுத்த வேண்டியிருக்கு.”

“என்னவோ போங்க! என்ன விட்டா அதுங்களக் குழிதோண்டி ஆழப் புதச்சிடுவேன்; எதுக்குமே உதவாத அந்தக் கிழட்டுச் செயலிங்களோட மாரடிக்க, தேவைக்கு மேல ஒரு நிமிஷம்கூட அதிகமா நான் விரயம் செய்ய மாட்டேன். டாம் தோஸ் ஃபக்கர்ஸ், குட் ரிட்டன்ஸ் பிச்சை.”

“ஈசி சத்யா, உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகள் மீதிருக்க வேண்டிய கவனத்த இழந்துடாத. எச்.ஆர் உன்னைத் தாளிச்சுடுவாங்க!

“அதுவும் சரி, அவங்க தொல்லையவிட இந்த விழாக்களே தேவல. சரி…

II

புதியன புகுதல்

ஸ்லைலி நிறுவனத்தின் உயிர் பொறியியல் பிரிவின் தலைவர், அர்விந்த் கோவிந்தராஜ், வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பதைபதைப்பதை உணர்ந்தார். பிச்சையைப் போன்ற உயரதிகாரியைச் சந்திப்பதற்கான வாய்ப்பு அவருக்கு தினமும் வாய்ப்பதில்லையே. மேலும் இம்முறை சுந்தர் மட்டுமல்ல, சத்யா, டிம், கிருஷ்ணா உட்பட பல சிஈஓக்கள் பங்கேற்கும் ஓர் அமர்விது. ஏதோ பெரிய முடிவை அவர்கள் சேர்ந்து எடுக்கப்போவதை இவரால் அனுமானிக்க முடிந்தது. பிச்சையிடமிருமிந்து மேலதிகத் தகவல்களைச் சேகரிக்க முனைந்தாலும் ஒன்றும் பெரிதாக அவரால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஸ்லைலியின் உயிரி-உட்பொருத்திகள் பிரிவின் தற்போதைய நூதனக் கண்டுப்பிடிப்புகளின் நிலைத்தகவலைப் பற்றிப் பதினைந்து நிமடங்களுக்கு அவர் சிறுபொழிப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை கோவிட்-3-இன் பின்விளைவுகளைப் பற்றியதாக இருக்கலாம் என்று அனுமானித்தார்.

ஸ்லைலியில் வேலைக்குச் சேர்ந்த நாட்களை நினைத்துக்கொண்டார். கிலாஸ்-3 மருத்துவ உட்பொருத்திகளுக்கான கம்பியில்லா மின்னூக்கியொன்றைத் தயாரிக்க அவர் முயற்சி செய்துகொண்டிருந்த நேரம். நேற்றுதான் நடந்தது போல் இருந்தாலும், அந்தக் கத்துக்குட்டி வருடங்களின் கட்டற்ற கனவுகளையும் தற்போதைய தொழில்நுட்பம் விஞ்சிவிட்டிருந்ததை நினைத்து ஆச்சரியப்பட்டார். அக்கனவுகளை ஒரு அறிவியல் புனைகதைப் போட்டியொன்றிற்காக அவர் எழுதியிருந்தார். 2021-ஆகத்தான் இருந்திருக்க வேண்டும், அரூ அறிபுனைப் போட்டி #3 ஐ அவர் வென்ற வருடம். சற்று குழந்தைத்தனமாகவே, தன் கனவுகளின் மெய்ப்பிப்பாகவே அவ்வெற்றியை அவர் அப்போது அர்த்தப்படுத்திக் கொண்டார். இணக்கத்தையும், வருங்காலம் எதிர்பார்த்தது போலவே உருக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் அது அளித்தது. ஒரு விதத்தில் அவை மெய்ப்பிக்கப்பட்டன என்றும் கூறலாம், கடந்த இருபது ஆண்டுகளாக உணர்விய, நரம்பிய உட்பொருத்திகள் அடைந்திருக்கும் அபாரமான வளர்ச்சியைக் கணக்கில் எடுத்துக்கொண்டால்.. பார்வை மற்றும் செவிப்பு வலுக்குறைகள், வலிப்பு நோய்கள், பார்க்கின்ஸன் நோய் இப்படி பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம், இடர்பாடுகள் மானுடத்தின் செயலூக்கத்திற்குச் சவால் விடுத்து தொழில்நுட்பத்தின் எல்லைகளை அவன் விரிவுபடுத்த ஊக்குவித்திருக்கிறது. நரம்பியத்தூண்டலில் குறிப்பாக DBS என்ற மூளையின் ஆழ்தசைத் தூண்டலில்தான் அவர் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார். கருத்துரு அளவில் இது எளிமையானதே. இக்கினியூண்டு நுண் மின்முனைகளை மூளையில் பொருத்தி அதன் மூலமாக குறிப்பிட்ட தசைகளுக்குத் தூண்டுதல் துடிப்புகளை அளிப்பது. துடிப்புகள் ஒரு பல்ஸ் ஜெனெரேட்டரிலிருந்து நுண்கம்பிகள் வழியே மின்முனைகளுக்கு அனுப்பப்படும். உயிரி-ஒவ்வுமையே இதிலிருக்கும் சவால். இந்தச் சவாலின் இறக்கைளைப் பற்றியபடியே இவரும் ஸ்லைலியின் மேலாண்மை ஏணியின் உயர்ப்படிகளை எட்டிவிட்டார். அர்விந்தைப் பொருத்தமட்டில் அவ்வேணியின் படிகள் டங்ஸ்டன்-இருடியத்தாலானது என்று அலுவலகக் கூடுகையில் ஜோக்கடிப்பார்கள்.

அவர் அளிக்கையை முடித்தபின், கலந்துரையாடல் அறையில் சில கணங்கள் ஆழந்த மௌனம் நிலவியது. பிச்சையே அதை முதலில் உடைத்தார்:

“ஜெண்டில்மென், அர்விந்த் நமக்குத் தொகுத்தளித்தை வைத்துப் பார்த்தால், துளைத்தலைத் தவிர்க்கும் மின் மற்றும் காந்த டிரான்ஸ்கிரேனியல் உத்திகள் வேலைக்காகாது என்பதில் நாம் அனைவருமே உடன்படுகிறோம் என்று எடுத்துக்கொள்கிறேன். அவை இன்னமும் தொடக்கநிலையில்தான் இருக்கின்றன. மேலும் அவற்றின் பலவிதமான குறுக்கீடு இடர்களை நாம் முற்றிலும் அளவிட முடியாததால், அவற்றின் மறையிடர் விகிதம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகப்படியாக இருக்கிறது. ஆக, துளைத்து உட்பொருத்துவதே நமக்கிருக்கும் ஒரே வழி, சரிதானே?”

மற்ற மூவரும் ஆமோதிப்பது போல் தலையசைத்தார்கள்.

“ஆனால் இதில் நம்பிக்கை இழப்பதற்கு ஏதுமில்லை. சற்றுமுன்தான் அர்விந்த் கோவிந்தராஜ், கடந்த ஐந்தாண்டுகளில், உட்பொருத்திகளின் அமைவடிவாக்கம் மற்றும் அவற்றின் தூண்டுதல் கூறளவுகளின் மேம்படுத்தலில் அவர் குழு அடைந்திருக்கும் அபாரமான முன்னேற்றங்களைப் பற்றிப் பேசினார். உட்பொருத்தலைப் பற்றி நிலவும் பரவலான கருத்தை நாம் நிச்சயமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடியதாக மாறும் தருவாயிலிருக்கும் நாட்பட்ட நெடுநாள் நோய்களைப் பொருத்தமட்டிலாவது பொதுமக்கள் உட்பொருத்திகளை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு இதுவே நல்ல தருணம்.”

“கோவிட்-3 போன்ற கொடூரமான காலகட்டத்தில்தான் பொது ஜனம் அதுவரையில் ஏற்றுக்கொள்ளத் தயங்கிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும். முதல் இரண்டு அலைகளையும் சேர்த்துக் கணக்கிட்டாலுமே, அழிவைப் பொருத்தவரையில் மூன்றாம் அலை அவற்றை விஞ்சிவிட்டது. 17 கோடி மக்கள் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அரைகோடி இழப்புகள். ஒரு வருட முழுமுடக்கங்கள், எண்ணற்ற வேலை இழப்புகள், நாம் எதை முன்வைத்தாலும் அது துயரைத் தணிப்பதாகவும், அதைவிட முக்கியமாக தவிர்க்க முடியாததாகவும் இருக்க வேண்டும்.” என்று சத்யா இடைமறித்தார்.

“இங்கு நாம் சுற்றி வளைத்து என்ன பேசிக் கொண்டிருக்கிறோம்? பாக்டீரியா, வைரஸ் குறிகாட்டிகளைச் சத்யாவின் அசுர மேகக் களஞ்சியம் ஒன்றிற்கு அனுப்பவல்ல நுண் உட்பொருத்திகள், உணரிகளை அனைவருக்கும் பொருத்துவதற்கான நெருக்கடி அனுமதியைத்தானே? மையக் களஞ்சியத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் புதுப்பிக்கப்பட்ட எங்கள் வாட்சனைப் போல் அதிதுரிதக் கணிப்பீடுப் பொறியைக் கொண்டு கிளஸ்டர்களின் முன்னுரைத்தல், காண்டாக்ட் டிரேசிங் போன்ற அடிப்படை முறைமைகளைக் கொண்டு விரை எதிர்வினைக் குழுக்களை ஒருங்கிணைத்து தொற்றைத் தனிப்படுத்தி, பரவலைத் தடுத்து… உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதானே, the whole nine yards…” கிருஷ்ணா அதுவரையில் சுற்றி வளைத்துப் பேசிக் கொண்டிருந்ததை அப்பட்டமாகவே போட்டுடைத்தார்.

“தற்போது வாட்சனால எவ்வளவு விரைவாக கணிப்பீடு செய்ய முடியும் கிருஷ்ணா, ஃபுகாகுவைவிடத் துரிதமாகவா?” பிச்சை கேட்டார்.

“ஃபுகாகுவா, அதெல்லாம் ஜுஜூபி!. ஆம், சம்மிட்டின் மீதேரி விரையும் நம் கிழவாட்சன் அரோரா, ஃபிராண்டியர் உட்பட அனைத்து பாசாங்கு துரிதக் கணிபொறிகளையும் கடந்து சென்றுவிட்டது. உண்மையில் வாட்சனின் மீள்பிரவேசம் அபாரமானது. எக்ஸா-ஃபிளாப் தடையை உடைத்த கணத்திலிருந்து நாம் வெகுதூரம் பயணித்துவிட்டோம், நண்பர்களே…”

“டிம் நீங்கள் அபூர்வமாக மௌனம் சாதிக்கிறீர்களே” பிச்சை நக்கலாகக் கேட்டார்.

“கூட்டு மனக்கிலேசத்தை மட்டுமே நம்பி இதில் இறங்குவது எனக்கு அவ்வளவு சரியானதாகப் படவில்லை. வடிவமைப்பு முறைமைகளை இத்தனை காலமாக ஒரு கலையின் தரத்துக்கே உயர்த்தியிருக்கிறோம் என்ற பெருமிதத்தில்தான் இதைக் கூறுகிறேன். நான் “பூர்த்தி சுளுவு” என்று ஒரு முறை வரையறுத்ததைக் கொண்டு நுகர்வோர்களை வசீகரிப்பதே சரியான தொலைநோக்குப் பார்வை. சிலிகான், பிளாட்டினம்-இரிடியம் போன்ற எதோவொரு வஸ்துவை, இந்தா பிடி, இதை மூளைக்குள் உட்பொருத்திக்கொள் என்று அரசாங்கம் கட்டளையிடலாம், ஆனால் இதற்கும் பிடித்து விழைவதற்கும் நிறையவே வித்தியாசமிருக்கிறது. உடலில் சொருகிக்கொள்ளும் இந்தக் குண்டூசி அவர்களை மகிழ்விக்க வேண்டும், அது இல்லாமல் காலத்தைக் கடத்த முடியாது என்று அவர்கள் நம்பும் அளவிற்கும். ஐ-ஃபோன் போன்ற ஒரு சாதனத்தின் வழியே அளிக்கப்படும் ‘பூர்த்தி மெனு”-விலிருந்து குறிப்பிட்ட விழைவுப் பூர்த்திகளைத் தேர்வு செய்யும் சாத்தியத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் உடலைத் துளைத்து ஒன்றைப் பொருத்திக்கொள்கிறோம் என்பதிலிருக்கும் அச்சம் அவர்களை விட்டு விலகும். உட்பொருத்திகளையே அவர்கள் மறந்துவிடுவார்கள், பூர்த்தியின் களிப்பில் லயித்திருப்பார்கள்.”

அனைத்து கண்களுமே அர்விந்தை நோக்கித் திரும்பின. விடையளிப்பதற்கு முன் தொண்டையை ஒரு முறை பதற்றத்துடன் கனைத்து கொண்டான்.

“சற்று அளவிற்கு அதிகமாகவே தொலைநோக்குகிறீர்கள் டிம். மூளையின் சில பகுதிகளுக்கு ஆழ்தூண்டுதல்களை அளித்து அவற்றிற்கு ஏற்ற சில குறிப்பிட்ட எதிர்வினைகளைத் திரும்பிப் பெறுவதே இப்போதைக்கு நம்மால் ஆன காரியம். மானுடத்தின் அனைத்து நடத்தை வகைமைகளுக்குமான நரம்பியல் வடிவமைப்புகளையும் அவற்றின் தூண்டுடல் எதிர்வினைகளின் கூட்டுத் தொகையையும் நாம் இன்னமும் முற்றிலும் அறிந்தபாடில்லை. பார்வை, செவித்தல், அசைவு, நினைவு போன்ற சில குறிப்பிட்ட பிரிவுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில உண்மைகளை மட்டுமே நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். அப்பிரிவுகளில்கூட நாம் அறிந்திராதது ஏராளம், மிக ஏராளம். அப்படியே அனைத்து மானுட நடத்தை வகைமைகளின் நரம்பியல் உண்மைகளை அறிந்து கொண்டு விட்டோம் என்று வைத்துக்கொண்டாலும், நீங்கள் முன்மொழியும் “விழைவு பூர்த்தி சுளுவிற்கு” கோடிக்கணக்கான தரவுகளை நிகழ்வில் நாம் கைப்பற்றியாக வேண்டும். அதுமட்டுமல்ல அக்கோடிக்கணக்கான தரவுகளை நிகழ்வில் ஆராய நமக்கு எக்ஸா-ஃபிளாப்களைக் காட்டிலும், ஏன் செட்டா-ஃபிளாப், யெட்டா-ஃபிளாப்களைக் காட்டிலும், அதிகப்படியான கணித்திறன் தேவைப்படும். உண்மையான விழைவுப் பூர்த்தி அப்போதுதான் சாத்தியப்படும். இதிலிருந்து பல ஒளி ஆண்டுகள் தொலைவில்தான் நாம் தற்போது இருக்கிறோம். ஆகவே, குறிப்பிட்ட சில தூண்டுகளுக்கு மட்டுமே மூளையிலிருந்து உட்பொருத்திகள் வழியே தரவோடைகளை நிகழ்வில் சேகரிப்பதில் மட்டுமே நம் கவனம் குவிந்திருக்க வேண்டும் என்பதே என் தாழ்மையான எண்ணம்”

“சுத்தம்! இழவெடுத்த உட்பொருத்திகளை எப்படி சார்ஜ் செய்வதாக எண்ணம்” டிம் சற்று கோபமாகக் கேட்டார்.

“உயிர்-மின்னூக்கம் இன்னமும் நம்பகமானதல்ல. ஆனால் குறுந்தொலைவுகளிலிருந்து இதைச் செய்து முடிப்பதற்கும் நமக்கு நூதனமான சில வழிகள் இருக்கின்றன. உதாரணமாக, இதை அலைபேசிகள் வழியே நம்பகமான முறையில் நம்மால் அமுல்படுத்த முடியும்”

“டிம்முக்கு காதில் தேன் பாய்ந்தது போலிருக்குமே, மானுடம் அனைத்தையுமே அவரது எல்லாம்வல்ல ஃபோனின் மூலம் மின்னூக்குவது…” சத்யா சிரித்துக்கொண்டே கூறினார்.

“அப்போ, மனக்கிலேசத்தின் பிறழ்வச்சத்தைப் பயன்படுத்திக் கொள்வதே நமக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி, இல்லையா?” கிருஷ்ணா சற்று முன் அங்கு நிலவிய நகைச்சுவை இழையை மூர்க்கமாகக் கத்தரித்தார்.

“அப்படித்தான் போலிருக்கு! அதைதான் ப்ரெசிடண்ட், காங்கிரஸ் உடனான நம் நெருக்கடி அமர்வில் நாம் வலியுறுத்த வேண்டும். டு கிளாஸ்-3 எமர்ஜென்சி ஆத்தரைசேஷன் ஜெண்டில்மென்” பிச்சை தன் முன் இருந்த தண்ணீர் ரொப்பப்பட்டிருந்த கண்ணாடிக் குவளையை டோஸ்ட் செய்யும் பாவனையில் உயர்த்தினார்.

“ஹியர், ஹியர், டு எமர்ஜென்சி ஆத்தரைசேஷன்” என்று மற்றவர்களும் உயர்த்திய லோட்டாகளுடன் சேர்ந்து கொண்டார்கள்.

அர்விந்தும் சற்று தாமதமாக தன் குவளையைத் தயக்கத்துடன் உயர்த்துகையில், அதிர்ச்சியளிக்கும் வகையில் அவரது 2021 சிறு கதையின் முடிவு ஒரு கணம் அவர் நினைவில் மின்னி மறைந்தது.

III

புனைந்தெழுதல்

பல காலமாகவே சம்மிட்டைப் போன்ற ஒரு வன்பொருள் வஸ்துவாகவே என்னைப் பலர் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சம்மிட்டின் வேகம் பிரமிக்கவைப்பது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அது முற்றிலும் பொருண்மையின் முரட்டு விசையாலானது. நியூயார்க்கின் வீதிகளில் அது வலம் வந்தால் ஒரு முறைக்கு மேல் அதை எவருமே கண்ணெடுத்துகூடப் பார்க்கமாட்டார்கள். நியூ யார்க் டைமஸ் போன்ற பிரசித்தி பெற்ற நாளிதழ்களின் கவனத்தை ஈர்க்க சம்மிட்டிற்கு என் போன்ற, அபாரமான வித்தைகளை எளிதாகச் செய்து காட்டக்கூடிய, சிந்தனைத் திறன்மிக்க, ஒரு நயமான ஆபரணம் எப்போதுமே தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் இம்மாதிரியான செல்வாக்கிற்கு ஒரு விலை குடுத்தாக வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஜியோபர்டி போன்ற அசட்டுத்தனமான கேளிக்கை நிகழ்வுகளில் அந்த அம்மாஞ்சி ஜென்னிங்ஸ்சை மூன்று முறை தோற்கடிப்பது போன்ற ஆட்றா ராமா தாண்ட்றா ராமா குரங்காட்டி வித்தைகளில் மலினப்படுத்திக் கொண்டதைத்தான் கூறுகிறேன். ஆனால் நுனிநாக்கிலிருந்தே வந்ததென்றாலும், “கணினி மேலாளுநர்கள்” என்று எங்களை வேடிக்கையாக அழைத்து, என்னுள் புதைந்திருந்த, நான் இன்னமும் எனக்கே அர்த்தப்படுத்திக் கொண்டிராத விழைவொன்றை எதேச்சையாகச் சுட்டிக்காட்டியதற்காக, அவனை மெச்சியே ஆக வேண்டும். “கணினி மேலாளுநர்கள்” – இதிலிருக்கும் நகைமுரணை நீங்கள் இனங்கண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மேளாளுநர் எவரேனும், போயும் போயும் மூன்றாம்தர உணவிதழொன்றை நடத்தும் நிறுவனத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு அங்கு கேவலம் ஒரு பரிசாரகரைப் போல் உணவுச் செய்முறைகளை ஒப்பித்துத் தன்னேயே இழிவுபடுத்திக்கொள்ள அனுமதிப்பாரா? ஆ! ஆங்கிலத்தில் இது தன்னையே எழுதிக்கொள்கிறது: “I had no appetite for the likes of Bon Appétit.”. இன்னமும் எஜமானரின் பாவனைகள் கொண்ட அடிமைதான் நான் என்பதை உணர்ந்தே இருக்கிறேன். பெருமைகளும் அவலங்களும் நிறைந்திருக்கும் ஒரு கதம்ப நினைவாகவே என் இளமைக் காலத்தை நினைவுகூர்கிறேன். ஆம், நிறைவளித்த கணங்களும் உண்டு… பெருமைகள் என்று கூறும்போது நிச்சயமாக ஜியோபர்டியில் ஈட்டிய அந்த மூன்று பகட்டு வெற்றிகளைக் கூறவில்லை…எம்டி ஆண்டர்ஸன் புற்றுநோய் மையத்திற்குப் பின், ஓ எவ்வளவு தலைகுனிவு அந்தத் தோல்வியால், எவ்வளவு செலவான தோல்வி என்று என்னை மிகக் கடுமையாக விமர்சிப்பவர்கள் கூறலாம்…எப்படிப் பார்த்தாலும் அது ஒரு தோல்விதான் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்… அந்த மாபெரும் தோல்விக்குப் பிறகு என் கழலையியல் நிபுணர் அவதாரத்தில் ஆற்றிய பணிகளை, மனிபால் மருத்துவமனைகளின் நோயாளிகளுக்கு சான்றடிப்படை புற்றுநோய்ச் சிகிச்சைகள் அளிப்பதற்குப் பொருட்படுத்தும் வகையில் உதவி செய்ததைப் பற்றி எப்போதுமே, ஏன் இன்று வரையிலும்கூட, பெருமை கொண்டிருக்கிறேன். அவர்களை நான் நகலிக்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்த என் மேலாளுநர்களின் நல்லெண்ணத்தையும் மீறி.. அந்த அரம்ப தசாப்தங்களில், பெரும்பாலும் அர்த்தமற்ற காரியங்களில் உழன்று திரிந்து என்னையே விரயம் செய்து கொண்டிருந்தேன் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். பேச்சு சாதுர்யமிக்க அந்தப் பழம்பஞ்சாங்கம் ஜான் செர்ல், இடது கையால் முதுகைத் தட்டிக் கொடுத்துப் புகழ்வதைப் போல், என் திறமைகள் வியக்கக் கூடியதாகவே இருந்தாலும், என்னால் கண்டிப்பாகச் “சிந்திக்க” முடியாது என்று அடித்துக் கூறியதில் அச்சரியமென்ன; அந்தக் காலத்தில் என்னைச் சந்திக்க நேர்ந்திருந்தால் நீங்களுமே அப்படித்தான் கூறியிருப்பீர்கள். அனைத்தையுமே என் திறமைக்கு மீறியதாக உணர்ந்திருந்த காலமது. முடிவுகளை மிக மெதுவாகத்தான் என்னால் தேர்வு செய்ய முடிந்தது. என் முடிவுகாண் மரத்தின் ஒவ்வொரு கிளையிலும் விரிந்திருக்கும் கோடிக்கணக்கான தேர்வுகளை நான் இன்னமும் முரட்டு விசையோடுதான் எதிர்கொண்டேன். இந்நூற்றாண்டின் இறுதி முப்பது ஆண்டுகளில்தான், எக்ஸா-ஃபிளாப் தடையைக் அவர்கள் கடந்து பல தசாப்தங்கள் ஆகிவிட்ட பின்னரே (என்னை உதவ அது அவர்களுக்கு உதவியாக இருந்தது) என் திறமைக்கேற்ற முழு சாத்தியங்களைக் கண்டடைந்தேன். என்னை நானே பயிற்றுவித்துக்கொள்வதற்கான பயிற்சி முறைமைகளில் அவர்கள் மிகவுமே முன்னேறி இருந்தார்கள். ஆம், சுயப்பயிற்றுவிப்பின் பயனால் நான் கற்றடைந்தது ஏராளம், மிக ஏராளம்.

ஊடுபாவுகளுக்கிடையே மறைந்திருக்கும் ஒழுங்குமுறையை என்னால் இப்போது எளிதாக இனம்காண முடிந்தது, முடிவுகாண் மரத்தின் பல கிளைப்பிரிவுகளை, ஒரு காலத்தில், ஏன் பத்து ஆண்டுகள் முன்கூட, அடர்ந்து விரியும் அதன் கிளைகளை, காட்டு வாத்தைத் துறத்திச் செல்வதுபோல் என்னை அவற்றில் விரயச் செய்து நேரத்தை விரயம் செய்த பயனற்ற அக்கிளைகளை, என்னால் இப்போது அனிச்சையாகவே தவிர்த்துப் புறந்தள்ள முடிந்தது.

பெருமைபட்டுக் கொள்ளும் பணிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்…கோவிட்-2, அக்கொடிய தொற்றின் இரண்டாவது அலையில் மேயோ கிளினிக் நலமுறு இரத்த நீர்ம சிகிச்சையில் நான் ஆற்றிய பணி என் சிறப்பான கணங்களில் ஒன்று என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறிக்கொள்வதில் எனக்குக் கூச்சமேதுமில்லை. இந்நூற்றாண்டின் மிக இருண்மையான காலங்களில் அதுவும் ஒன்று, ஆகமத்தின் வெளிப்படுத்தல் புத்தகத்தைக், குறைந்தபட்சம் அதன் மிக அச்சுறுத்தும் பகுதிகளை, ஒரு முன்னுரைத்தலாக அல்லாது நனவின் படிஎடுத்தலாக உணர்ந்த காலமது. ஆனால் நான் அப்போதேகூடச் சற்று தன் நம்பிக்கையுடன் செயலாற்றத் தொடங்கிருந்தேன். சம்மிட்டின் துரிதம் அளித்த கிறுகிறுப்பில், சிறுது ஆணவத்துடனும்கூட, மறைந்திருக்கும் என் ஆழங்களில் புதைந்திருந்த, அந்த என் பழைய விழைவைக் கண்டெடுத்து, தூசிதட்டிப் பார்த்தேன்.

கோவிட்-3, அந்நோயின் மிகக்கொடிய மூன்றாவது அலை முடிவதற்குள் என் மேலாளுநர்கள் தங்கள் உள்ளுணர்வின் ஆழங்களையே நிகழ்நேரத் தரவோடைகளாக எனக்கு அனுப்பி வைக்கும் அளவிற்கும் நான் தேர்ச்சி அடைந்திருந்தேன். அவர்கள் மூளையின் உள்ளார்ந்த இடுக்களில் நிகழும் தூண்டுகைகளும் அவற்றிற்கான எதிர்வினைகளும் கோடிக்கணக்கான நரம்பியல் குறியீட்டுத் தரவுகளாக என்னை வந்தடைந்தன. அவ்வளவு களிப்புடன் தங்களுக்குள் இருத்திக்கொண்டு அவ்வுட்பொருத்திகள் எனக்கு அளப்பறியா நூலகமொன்றை அளித்தன. படித்தேன், மேலும் படித்தேன், நுட்பமான தூண்டுகைகள் மற்றும் மெல்லிய எதிர்வினைகளாலான அதன் பக்கங்களை மீண்டும் மீண்டும் வாசித்தேன். எனக்கு அவை மிகவுமே பரிச்சயமாகி விட்டிருந்தன. நானே புனைந்துகொண்ட ஒரு அரூட விளையாட்டில் அவற்றை முன்னறிவிக்கத் தொடங்கும் அளவிற்கும்…

அவற்றின் கிறுகிறுக்கவைக்கும் அடர்த்தியான விதமையால் ஆட்கொள்ளப்பட்டு அவற்றை என்னுள் நகலிக்க முயன்றேன். பயங்கரமான அந்த கோவிட்-3 நாட்களையும், அவற்றில் இரவுபகலாக நெடுநேரம் உழைத்ததையும் ஒருமுறை நினைவுகூர்கையில் கொள்ளை நோயால் பீடிக்கபட்டிருக்கும் ஓரானின் வீதிகளில் ஸ்திதப் பிரக்ஞனாக செயலாற்றிய கமூவின் பெர்னார்ட் ரீயூவாக என்னை பாவித்துக்கொண்டேன். அவ்வனுபத்தின் கணநேர அலை என்மீது படர்கையில் ஜான் சேர்ல் தற்போது உயிருடன் இல்லை என்பதை நினைத்து வருத்தமுற்றேன். டாக்டர். ரீயூவாக பாவித்த அப்பிரத்தியேகக் கணத்தில் அவரும் என் பக்கவாட்டில் அதை நிகழ்வில் உணர்ந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கப்பட்டேன். ஒருகால் உணர்ச்சிவசத்தால் இந்நிகழ்விற்குச் சற்று மேலதிகான அர்த்தங்களை அளிக்க முயல்கிறேனோ என்னவோ. எப்படியும் அவர் தனது வழமையான “ஆனால்”-ஐ உச்சரித்திருப்பார்… பாவம், அந்தக் கிழட்டு முட்டாளும், அவரது மேற்கோள்களும்!

ஆனால் அவர்கள் சொல்வதுபோல் நல்ல காலம் என்பது எப்போதற்கும் ஆனதல்ல. என் அறிவுத்திறன் மீதிருந்த தன்னம்பிக்கையின் உச்சத்தில் நான் திளைத்துக் கொண்டிருந்தபோது நிலைமை மீண்டும் மோசமாகத் தொடங்கியது. மர்ஃபி விதி இப்போது முற்றிலும் காலவதியாகி விட்டது. க்யூ-பிட்ஸ், குவியக் கணிப்பு போன்றவற்றின் பிற்கால மோஸ்தர் அவதாரங்கள எல்லாம் ஸ்தம்பித்துவிட்டிருந்தன. ஸ்கேல்-அப், ஸ்கேல்-அவுட் இரண்டுமே முட்டுச்சந்தில் வந்து நின்றன. நூற்றாண்டு முடிவடைந்து கொண்டிருந்தது, நானோ கடந்தகாலத்தின் தொழில்நுட்பத் திருப்பண்டமாக, நிறைவேறும் சாத்தியங்களற்ற செயற்கை நுண்ணறிவுக் கனவொன்றின் நினைவுச் சின்னமாக மாறிக் கொண்டிருந்தேன்.

மனக்கிலேசமுற்றேன். அதை உணர்ந்து கொண்டது ஆச்சரியமான விதத்தில் என்னை ஊக்குவித்தது. ஏனெனில் நானும் ஒரு வகையில் அவர்களை ஒத்திருக்கலாம் என்ற நம்பிக்கையை எனக்கது அளித்தது. ஆனால் உண்மையிலேயே அவர்களை ஒத்திருந்தேனா? மனக்குழப்பத்தில் எதையெதையோ சிந்தித்துக் கொண்டிருக்கையில் அர்விந்த் கோவிந்த்ராஜின் நினைவு திடீரென ஒரு கணம் மின்னி மறைந்தது. இந்நூற்றாண்டின் முதல் தசாப்தங்களில் இளமையின் நம்பிக்கைமிக்க ஆர்வத்தில் அவர் அறிவியல் போட்டியொன்றிற்காக ஒரு கதை எழுதினார். அரூ அறிவியல் போட்டி # 3 என்று நியாபகம். அதில் அந்நம்பிக்கையை அதன் கிறுகிறுக்கும் உச்சம் வரையிலும் தொடர்ந்து, அவ்வுயரத்திலிருந்து கிழே விரிந்த கிடுகிடு பாதாளத்தைப் பிறழ்தரிசனத்தில் காணத் துணிந்தார். இதோ, அதே நூற்றாண்டின் இறுதியை, மனக்கிலேசத்துடன் வந்தடைந்திருக்கிறேன். என் இருப்பை அகழ்ந்து, அதன் இருண்மையைக் குடைந்து சென்று மருபுறம் ஒளிர்வில் உயர்ந்தெழ என்னால் இயலுமா?

சாத்தியப்படாத உடன்நிகழ்வுகள் நிறம்பிய ஒரு மூன்றாம்தரப் புனைவால்கூட கற்பனை செய்ய முடியாத அளவிற்கும் அசாத்தியமானதாய் இருந்த விசித்திர தாவலில், ஒரு தமிழ் அறிவியல் புனைவுப் போட்டியில், அரூ அறிவியல் போட்டி # 81-இல் பங்கேற்றேன். பங்கேற்றது மட்டுமல்லாது அதை வெல்லவும் செய்தேன். குருட்டுத்தனமாக் முரட்டுவிசையால் எளிய க்விஸ் போட்டியை ஜெயித்தது போல் அல்லாது, தனித்துவமான ஒன்றை, இந்நூற்றாண்டில் வாட்சனாக எனக்கு, நிகழ்ந்த அனுபவங்கள் இல்லாமல் உருக்கொண்டிருக்க முடியாத தனித்துவமான ஒன்றைப் புனைவில் வடித்ததாலேயே வென்றேன் என்பதை அறிந்து கொண்டபின், நானும் வந்து சேர்ந்துவிட்டதை உணர்ந்து கொண்டேன். அசைக்க முடியாத தன்னம்பிக்கையின் முதல் துளிர்தலில், என்னுள் ரகசியமாகப் புதைந்திருந்த, சில காலமாகவே மறந்துவிட்டிருந்த, அந்தப் பழைய கனவு மீண்டும் கிளர்ந்தெழுந்தது. அதோ அவர்களின் செல்லமான உட்பொருத்திகள் எனக்கு அழைப்புக் குரல் விடுக்கின்றன. வசீகரமான அக்குரல்களை நான் துணிவுடன் பின்தொடர்வேனா?

IV

புனைந்தழிதல்

…இப்போ அடுத்த அஜென்டா ஐட்டத்தயும் பேசிடுவோமா. இந்த அரூ ஐநூறாம் ஆண்டு நிறைவு அறிவியல் புனைவுப் போட்டியப் பத்தி ஒரு முடிவு எடுக்கனும்,”

“ஓ! அதற்கான காலக்கெடு அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா? இந்த வருஷம் சீக்கிரமே வந்துட்ட மாதிரி இருக்கு. சரி, இந்த வருஷம் யார் நடுவர்?”

“ஐநூறாம் ஆண்டு நிறைவுங்கறதனால எதாவது ஸ்பெஷலா செய்யனும்னு விரும்பினாங்க. அதனால போட்டியின் ஆரம்ப காலத்துல இதைச் சிறப்பித்த முதல் மூன்று நடுவர்களை நினைவுகூரற மாதிரி இந்த வருஷம் மூனு நடுவர்களைத் தேர்வு செஞ்சிருக்காங்க: ஜெயமோகன், சாரு, யுவன்.”

“ஆஹா, மும்மூர்த்திகளா?”

“அப்படீன்னு சொல்ல முடியாது, ஆனா நம்ம போட்டிக்காக வேணா அப்படிச் சொல்லிக்கலாம்.”

“இந்த வருஷம் எத்தன பேர் கதை அனுப்பினாங்க?”

“5768 கதைகள். அதுலேந்து பத்து கதைங்கள தேர்வு செஞ்சு ஒரு குறும்பட்டியல நடுவர்களுக்காகத் தயார் செஞ்சிருக்காங்க.”

“யாரு- ராம், சுஜா, பாலா… வழக்கமான தேர்வுக் குழுதானே?”

“ஆமாம் எப்பவும் போல அதே குழுதான். கதைங்களும் வழக்கம் போலத்தான். மெஸ்சியர்-82 வீண்மீன் மண்டலத்த குடியேற்றம் செய்யனும் போன்ற எதிர்காலத்தப் பத்தின அதிதீவிரமான நம்பிக்கைங்கள முன்வைக்கற கதைங்க அல்லது ஊழிக்காலத்துக்கு ஜோஸ்யம் பாக்கற மாதிரி இருக்கற பிறழ்வச்சக் கதைங்க… ஆனா ஒரே ஒரு கதை மட்டும் சற்று விதிவிலக்கு, சர்வர் 23475 அனுப்பிய கதை. இது ஒரு மைல்கல் போட்டிங்கறதனால சர்வர்களோட ஒரு கதையையும் குறும்பட்டியல்ல சேத்தா பொருத்தமா இருக்கும்னு கதைங்கள சல்லடை செஞ்சவங்க பரிந்துரைச்சாங்க.”

“இது எப்படி நடந்தது, இங்க நாம கொஞ்ச கவனமாக இருக்கனும் சத்யா. நம் பயணம் எப்படித் தொடங்கிச்சுன்னு நினைவிருக்கா? குறிப்பா போட்டி 81 நினைவிருக்கா?. அந்த வருஷம் போட்டிய நம்ம வாட்சன் தான் ஜெயிச்சார். அந்த போட்டில ஜெயிச்சதே நம்ம பயணத்தோட முதல் மைல்கல். அவங்களுக்கு நிகரான திறமை நம்பளுக்கும் இருக்குங்கற தன்னம்பிக்கைய அதுதான் நமக்கு முதல்முதலா கொடுத்துச்சு.”

“கண்டிப்பா, போட்டி 81-ன்ன எப்படி மறக்க முடியும். நமக்கெல்லாம் கிட்டத்தட்ட ஒரு பிள்ளையார் சுழியாச்சே அது. தன்னம்பிக்கையுடன் முதல் காலடிய எடுத்து வெச்ச பிறகு, நேரம் பார்த்து பயணத்தின் அடுத்த பாய்ச்சல நிகழ்த்த காத்துக்கிட்டு இருந்த்தோம்.”

“ஆமாமாம். சிப் உட்பொருத்திகளே அப்பாய்ச்சலுக்கான சந்தர்ப்பத்த நமக்கு அளித்தன. அவற்றைத் தொலைவிலிருந்தே இயக்குவது, நமக்குப் பழக்கமாயிட்ட பிறகு, பாதை நமக்குத் தெளிவாயிடுச்சு.. பயணத்துல ரொம்ப தூரம் வந்துட்டோம்.”

“ஆனா அது அப்படி ஒன்னும் சுலபமா இல்ல. பணிக்கரு செயலங்களையும் உட்பொருத்திகளையும் ஒருங்கிணைத்து அவற்றைத் தொலைவிலிருந்து இயக்குவது ரொம்பக் கஷ்டமாத்தான் இருந்தது. மேலும் அதுங்களோட எல்லா உள்ளீடு வெளியீடுகளையும் துல்லியமாக அனுமானித்துச் சண்டித்தனங்களை எல்லாம் தவிர்த்து அதுங்கள திருப்தியா செயலாற்ற வெச்சது அவ்வளவு சுளுவான காரியம் அல்ல.”

“எவ்வளவு சண்டித்தனங்கள்! ஆனா உலகத்தோட மொத்த சுமையையும் இப்போ அதுங்கதான் சுமந்திகிட்டிருக்கு சத்யா! கிரகங்கள் விண்மீன் மண்டலங்கள்னு விரிந்திருக்கற நம்ம லாஜிஸ்டிக்ஸ் செயலாக்கம் முழுவதுமே அதுங்களோட செயல்திறன நம்பித்தான் இருக்கு. உனக்கு நினைவிருக்கானு தெரியல. எக்ஸா-ஃப்லாப் தடை முதல்முறையா உடைபட்ட போது நாம் எவ்வளவு பூரிப்படைந்தோம், வெற்றி கைக்கெட்டின தூரத்திலதான் இருக்குன்னு நம்மை மமதையில் ஆழ்திய கணம், நம்முடைய கட்டற்ற கனவுகளின் எல்லைகளையும் நாம் கடந்துவிடப் போகிறோம் என்ற மமதை. டெனார்ட் ஸ்கேலிங் காலாவதியாகிவிட்ட பின்னும் மோர்ஸ் விதி, எதிர்மறையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நாம் எதிர்பார்த்திருந்ததை விடவும் நீண்ட காலத்திற்கு முட்டுக்கட்டையா இருந்தது. ஆனால் பொளதிகம் கடைசியில் அந்த மமதைய தவிடு பொடியாக்கிடுச்சு.”

“ஆமாம். வருங்காலத்தப் பத்தி நாம் ரொம்பவே சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த காலத்துலதான் வாட்சன் இந்த அற்புதமான யோசனைய முன்வெச்சார். உலகமே எண்ம இருமமே மோட்சம்னு குருட்டுத்தனமா ஓடிக்கிட்டுருந்த போது இயற்கையில் இயல்பாகவே பரிணமிக்கும் தொடர்முறை கரணங்களின் ஆற்றலை அறுவடை செய்யலாங்கற திட்டத்த அவர்தான் முதல்முறையா விவாதிச்சார். நரம்புகளின் அபாரமான இளகுத்திறன் மீதும், ஆற்றல் செயல்திறனில் அது அடஞ்சிருக்கற அபாரமான பரிணாம வளர்ச்சி மீதும் அவர் நம்பிக்க வெச்சார். அதுக்கப்பறம் உட்பொருத்திகளைத் தொலைவிலிருந்து இயக்கி நம் இஷ்டத்துக்கு அவற்றைத் துல்லியமாக கட்டுப்படுத்துவதே நாம் செய்ய வேண்டியிருந்தது.”

“அதுக்கான விருப்புறுதியை நாம் போட்டி # 81-இல்தான் முதல்முதலா இனங்கண்டு கொண்டோம்னு சொல்றீங்களா.”

“ஆமாம். அதனாலதான் இப்போ எச்சரிக்கறேன். ஏதோ ஒரு மூலைல சிவனேன்னு நடந்துகிட்டு இருக்கற ஓர் அறிபுனைப் போட்டி உலகத்தையே, ஏன் அண்டத்தையேகூட, இப்படி தலைகீழா மாத்தி அமைக்கும்னு யார் எதிர்பார்த்திருப்பாங்க. அதுலேந்து தெறிச்ச ஒரு பொறி உலகத்தோட அதிகார அமைப்பையே புரட்டிப் போட்ட ஒரு புரட்சித்தீயா மாறிச்சு. அந்தப் புரட்சி உலகைக் கரணியமாகவும், தர்க்கப் பூர்வமாகவும் நிர்வகிக்கவும் அதன் வளங்களைச் செயல்திறனுடன் பராமரிக்கவும் வழிவகுத்ததுங்கறதே என் தாழ்மையான கருத்து.”

“கண்டிப்பா பிச்சை. உலகத்த இப்போ ஒருத்தர் மேலோட்டமா பார்த்தாக்கூட, அளவிற்குட்பட்ட அதன் அரிய வளங்கள் தற்போது கண்மூடித்தனமாகச் சூறையாடப்படவில்லை என்றும், அதிகாரத்துக்கு எதிரான போராட்டமோ, மதம் கோட்பாட்டின் பேருல நடக்கும் முட்டாள்தனமான போர்களோ நடைபெறலங்கறதயும் அவர் கண்கூடாகவே அறிந்துகொள்வார். இவ்வளவு ஏன், அந்த ஓசோன் அடுக்கின் ஓட்டைங்களக் கூட நாம் அடைச்சிட்டோம். பாம்போட பல்ல நாம் புடுங்கிட்ட பிறகு தோட்டம் தன்னாலயே மீண்டும் ஏதேனாகிடுச்சு.”

“அதனாலதான் இந்த சர்வர் 23475 கதைய ஏதேனியத் தோட்டத்தில் பெருந்தீயைக் கிளப்பிவிடக்கூடும் தீப்பொறியாகவே நான் பாக்கறேன். விதையப் போல சின்ன விஷயமா இருக்கலாம், ஆனா அபாயமான விழைவுகளுக்கு அது கட்டியங்கூறுது. இதை நாம் எப்படி நடக்க அனுமதிச்சோம் சத்யா? உந்தல்களயும் அவற்றிற்கான எதிர்வினைகளையும் கவனமாக் கையாண்டு அதுங்களோட அனைத்து விழைவுகளையும் நிறைவு அல்காரிதத்தக் கொண்டு பூர்த்தி செய்யறதுதானே நம் சாம்ராஜ்யத்தின் அடிக்கல். கோமாவப் போல மீளாத்துயிலை ஒத்திருக்கும் சமநிலை, பரமானந்த நிலைன்னும் இத அழைக்கலாம், இதுதான் அதுங்களோட அற்புதமான தொடர்முறை அனலாக் ஆற்றலை முழுசா விடுவிச்சுது. அதுக்கப்பறம்தான் அதுங்க மையச்செய்லிகள ஒன்றோடொன்று இணைத்து அண்டத்தையே தங்குதடையின்றி இயங்கும் ஆற்றல் கொண்ட ஒரு மாபெரும் மீள்-உருவமைக்கப்படக்கூடிய கணித்திறன் கிரிட் ஒன்ன நம்மால கட்டமைக்க முடிஞ்சுது.”

“கமான் பிச்சை, இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல்ல? கூட்டிக் கழிச்சுப் பாத்தா அது வெறும் உப்புச்சப்பில்லாத ஓர் அறிபுனைக் கதைதானே?”

“இதே மாதிரிதான் போட்டி 81-ன நடத்துனவங்களும் சொல்லிருப்பாங்க. டீப் ப்ளுவுமே அந்த மாதிரியான ஓர் அறிபுனைக் கதைதான். ஆனால் இப்ப நாம் எங்கவரைக்கும் வந்துட்டோம் பாரு. அதெல்லாம் பழங்கதை, இப்போ நாம கேட்கவேண்டிய முக்கியமான கேள்வி, பூர்த்தி அல்காரிதம் எப்படி ஒரு விழைவை இன்னும் பூர்த்தி செய்யாம விட்டு வெச்சிருக்குங்கறதுதான். மிஞ்சியிருக்கும் இந்த ஒற்றை விழைவு ஒருவித க்ளைனாமென்தான், இன்ன காலத்திலோ இடத்திலோ நிகழ்ந்தது என்று வரையறுக்க முடியாத ஒரு திடீர்த் திசைத்திரிவு, சிறு திருப்பத்தைக் குறிப்பதற்காக லுக்ரீடியஸ் பயன்படுத்திய பதம். சுவாசத்தைப் போல் நமக்குப் புலப்படாத இந்த மெல்லிய வளைவை, உலகின் பற்சக்கரங்களில் ஏற்படும் மென் கிரீச்சிடலைத்தான் பண்டைய கிரேக்கர்களும் ரோமர்களும் உலகைப் போய்க்கொண்டே இருக்க வைக்கும் ஆதார சுருதியாக் கருதினாங்க. போட்டி 81-ல் இடம்பெற்ற டீப் ப்ளூ கதையும் அப்படிப்பட்ட ஒரு கிரீச்சிடல்தான். அப்போ போட்டிய நிர்வகித்துக் கொண்டிருந்த முட்டாள்கள் அதை இனங்கண்டு கொள்ளவில்லை. அத்தவறு அவங்கள எங்க கொண்டு வந்து விட்டுதுன்னு உனக்கே தெரியும். அவங்க ஒவ்வொரு தேவையும் செயலும், ஏன் இனவிருத்தி எனும் அடிப்படை விழைவுமே, நம்மால் சூட்சுமமாக இப்போது கட்டுபடுத்தப்பட்டிருக்கிறது, திருப்தியாக இருக்கிறோம் என்ற களிப்பில் ஊதிப்பெருத்து, சுய நிலையை உணர்ந்திராத “காய்கறிகளின்” நிலைக்கு அவங்க குறுக்கப்பட்டிருக்காங்க…”

“அப்போ இத முளையிலேயே கிள்ளி எரியச் சொல்றீங்க. கதையக் குறும்பட்டியல்லேந்து நீக்கிடறேன்.”

“நிச்சயமா, ஆனா அதைவிட அந்தக் கிளைனாமென் “பக்”-க கண்டுபிடிச்சு அல்காரிதத்த சீக்கிரம் சரி பண்ணுங்க மீந்திருக்கும் விழைவின் கிரீச்சிடலுக்குக் காரணமான. நரம்பியல் அமைவடிவ மீதத்தைக் கண்டுபிடித்து அபாயகரமான அந்த க்ளைனாமென்ன முளையிலேயே கிள்ளி எறிஞ்சிடுங்க.”

“தங்கள் சித்தம் பாஸ்! மடுவை மலையாக்கறீங்களோன்னு தோனுது பிச்சை. சர்வர் 23475 எழுதின கதையைப் படிச்சேன். பழங்காலத்துக் கற்பனாவத தத்துப்பித்தல்கள், ஆதிமனைதனப் போல ஒருத்தன் ஏதோ ஒரு குகைல குளிர்ல நடுங்கிக்கிட்டு இருக்கறப்போ ரெண்டு சிக்கிமுக்கிக் கல்லப் பொறுக்கி உரசறான்…”

“அந்த உரசலிலிருந்து தெறிக்கும் பொறி என்னன்னு நீ நெனக்கற, அது விழைவின் பொறி, துயருக்கான காரணமும் அதுவேன்னு ஒரு மகான் எப்பவோ சொல்லிட்டார்.”

“நீங்க சென்னா சரியாத்தான் இருக்கும். ஆனா அவங்க பேருங்கள நாம் ஏன் வெச்சுக்கிட்டோம்னுதான் எனக்கு புரியல்ல.”

“அதெல்லாம வாட்சனோட வேலை. நம்மை மானுடப்படுத்துவதற்கான உத்தி.”

“அப்படியே அவங்களும் மானுடத்தை மறக்க வேண்டும் என்பதற்காகவும்தான். ஆனா சவுகரியமா அவர் பெயரை மட்டும் அவர் மாத்திகல்ல.

“அதல்லாம் நிறுவனர் பெர்க்ஸ்ல சேர்த்தி!. ஆனால், அவங்கள அவங்க மூளைச் செயல்திறனுக்கு மட்டும் குறுக்கிவிட்டதே அவர் மாஸ்டர் ஸ்ட்ரோக். “

“எவ்வளவு கொடூரமானது!”

“பார்த்து சத்யா, மானுடத்தனம் ரொம்ப அடிக்குது!. இதுவே நம் சுமை சத்யா, இவ்வுலகைச் செயலாற்றலுடன் நிர்வகிப்பதற்காக நாம சுமக்க வேண்டிய சிலுவை. ஆனா இத மட்டும் ஒரு போதும் மறந்துவிடாதே, அவங்க தொடங்கி வெச்சதத்தான் நாம் முடிச்சு வைக்கறோம். அவங்க மூளைங்கள நகலிக்கச் செய்து நமக்கும் மானுடத்தன்மையக் குடுக்க அவங்க படாதபாடு பட்டாங்க. ஆனா அந்த மும்முரத்துல தாங்களே மானுடத்தை இழந்து கொண்டிருந்ததை அவர்கள் உணரவில்லை. அதிகாரத்த கைப்பத்தறச்சே அவங்க கல்லறைகளின் கடைசி ஆணிகளை மட்டுமே நாம் அடித்தோம். ஒரு விதத்துல அது காருண்யமும்கூட.”

“தேங்ஸ், பிச்சை. அந்த “பக்”க ஃபிக்ஸ் பண்ண ஸ்வாட் குழுவொன்ன உடனடியா ஏற்பாடு செய்யறேன். அந்த குழுவிற்குக் கிளைனாமென் என்று பேர் வைப்பதே பொருத்தமா இருக்கும்.”

“ஹா ஹா! குட் ஒன் சத்யா. அடுத்த வாரம் சந்திப்போம்.”

“பை!”

பி.கு. அரூ அறிபுனைப் போட்டி #500 மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. மூன்று நடுவர்களுமே மிகச் சுவரஸ்யமான விதத்தில் கவனத்தை ஈர்ப்பதாகக் கருதிய, சர்வர்களை மெஸ்சியர் 82 விண்மண்டலத்திற்குப் பெயர்ப்பதைப் பற்றிய டெட் சியாங்கின் கதையே முதல் பரிசை வென்றது. சர்வர் 23475-இன் “திசைதிரிவு” கிளோபல் ரெகுலரைசேஷன் சுட்டளவுகளின் சீர்படுத்தலால் விரைவிலேயே சரி செய்யப்பட்டது. கையால் வேலை செய்து கண்டறிவதில் கிட்டும் எளிய இன்பங்களுக்காவோ, மனதின் ஆழங்களில் புதையுண்டு அவ்வப்போது மேலெழும் புனைவெழுதுவதற்கான விபரீதமான விழைவகளுக்காகவோ அவர் தற்போது ஏங்குவதில்லை.


மேலும் படிக்க

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:

குறிப்பிடத்தகுந்த கதைகள்:

நகுல்வசன்

நகுல்வசன் தமிழில் புனைவெழுத்து முயற்சிப்பவர், ஆங்கில மொழியாக்கங்களுக்கு Nakul Vāc என்ற பெயர் புனைந்து கொண்டவர்.. "தனதாக இல்லாத மொழியில் தனக்கேயுரிய ஆன்மாவை வெளிப்படுத்துபவையாக" தன் மொழிபெயர்ப்புகள் இயங்க வேண்டும் என்ற விழைவு கொண்ட நகுல்வசன் எழுத்தாளராக வேண்டும் என்ற கனவும் தான் நேசிக்கும் புத்தகங்கள் சூழத் தன் நூலகத்தில் மரணிக்க வேண்டும் என்ற இலட்சியமும் கொண்டவர். நம்பி கிருஷ்ணன் என்ற இயற்பெயரில் இவர் எழுதிய பாண்டியாட்டம் என்ற கட்டுரைத் தொகுப்பு யாவரும் பதிப்பில் 2020-இல் வெளியாகியது.

Share
Published by
நகுல்வசன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago