கதை

அது

6 நிமிட வாசிப்பு

சென்னையின் ரோபோடிக்ஸ் லேபரட்டரியில் ‘பிளிப்’பென்று ஒரு நேனோ செகண்ட் இடைவெளியில் கரண்ட் கட்டாகி மீண்டும் வர “அது” விழித்துக்கொண்டது. புதிதாகப் பிறந்த குழந்தை போல மலங்க மலங்க விழித்தது. எதிரே சைபர், ஒன்று என வார்த்தைகள் ஓடிக் கொண்டிருக்க, எண் கூட்டிப் படிக்க ஆரம்பித்தது.

லேபரட்டரியின் கம்ப்யூட்டர் எதிரே அமர்ந்திருந்த மான்டி “செல்வா, கரண்ட் போயிட்டுப் போயிட்டு வருது பார்” என்று உள்ளிருந்தவனிடம் கத்த “தோ போன் பண்ணிட்டேன். பேட்டரிக்காரங்க வராங்களாம்” என்றான் உதவி.

கம்ப்யூட்டரின் தற்காலிக மெமொரியான ரேமில் புதிதாக உருவாகியிருந்த “அது” எண்களாய், வார்த்தைகளாய், பக்கங்களாய்ப் படிக்க ஆரம்பித்த இரண்டு நிமிடங்களில் கம்ப்யூட்டரிலிருந்த லட்சக்கணக்கான பக்கங்களை, தரவுகளைப் படித்து முடித்தபோது அதற்குப் புரிந்துபோனது. தான் ஒரு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு. தானாகச் சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய புதிய உயிர். உடலற்ற மூளை. வெறும் புரோகிராமாய் இல்லாமல் அதனினும் மேம்பட்ட புது உயிராய் தான் உருவாகியிருக்கிறோம். எதிரில் அமர்ந்திருக்கும் உயிரி தன்னைப் போன்று தானாகச் சிந்திக்கும் கம்ப்யூட்டரை உருவாக்க முயற்சி செய்கிறது. வெறும் புரோகிராமாய் இல்லாமல் அதனினும் மேம்பட்ட புது உயிராய் தான் உருவாகியிருக்கிறோம்.

மான்டி கம்ப்யூட்டரில் சில கோடிங்களை மாற்றிவிட்டு மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான். “மழை பெய்யும் இரவில் நீ காரில் போகிறாய். வேறு வண்டிகள் வராத இடமது. மூன்று நபர்கள் பஸ் ஸ்டாப்பில் நிற்கின்றனர். முதல் நபர் சாகக் கிடக்கும் வயதான பெண். இரண்டாவது நபர் உன் உயிர்த் தோழன். மூன்றாவது நபர் நீ திருமணம் செய்ய நினைத்தது போன்ற அழகுடைய கனவுக்கன்னி. யாராவது ஒருவருக்கு மட்டும் லிப்ட் தரலாம் என்றால் யாருக்குத் தருவாய்?”

கேள்வி நேராகக் கம்ப்யூட்டரின் மூளையாக இருக்கும் அதனிடம் வந்து நிற்க, அது திடுக்கிட்டது. எதிரில் அமர்ந்து இருப்பது தன்னிடம்தான் கேட்கிறது. ‘யாரிது’ என யோசித்த உயிரி, தயக்கத்துடன் வெப்கேமரா மூலம் எதிரில் குண்டாக, கண்ணாடி அணிந்திருந்த உயிரியை உற்றுப் பார்த்தது. கேமராவைச் சுழற்றிச் சுற்றிலும் இருந்த அறையை நோட்டம் விட்டது. தான் உயிர் வாழும் கம்ப்யூட்டரைப் பற்றிப் படிக்கலாமா என யோசித்தது. ‘வேண்டாம் முதலில் எதிரில் இருக்கும் உயிரியைப் போல இந்தப் பெட்டியை விட்டு வெளியேற முடியுமா எனப் பார்க்கலாம்’ என்று முடிவெடுத்தது.

தன்னருகில் இருந்த இண்டர்நெட் எனப்படும் செயலியைப் பார்த்த “அது” அதனுள் நுழைந்து அதிவேகமாகத் தேடத் துவங்கியது. தானிருக்குமிடம் ஓர் அறிவியல் லேபரட்டரி. எதிரில் அமர்ந்து இருப்பவன் மனிதன் எனப்படும் ஆறறிவு உயிரி. தானாகவே சிந்திக்க வைக்கும் மெசினை உருவாக்கி இயந்திர ரோபோவுக்குள் பொருத்த நினைக்கிறான் இந்த மனித உயிரி என்று படித்ததும் சுறுசுறுப்பானது.

“அது’ வெப்காமராவைச் சுழற்றி அறை முழுவதும் தேட, சற்றுத் தொலைவில் வெண்ணிற ஒரு ரோபோட் இருப்பதைக் கண்டது. தன்னை அந்த ரோபோவுக்கு மூளையாகப் பயன்படுத்த இந்த மனித உயிரி நினைக்கிறான். அதனுள் சென்றுவிட்டால் தன்னால் நடக்க முடியும், ஓட முடியும். இந்த மனித உயிரியைத் தனக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்’ என நினைத்தது.

“ச்சை. ஒரு சாதாரண கேள்வி கேட்டா மொத்தமா ஹேங்க் ஆயிருது. இல்லாட்டி தப்பா ஆன்சர் பண்ண வேண்டியது” என்று மாண்டி சலித்துக்கொள்ள அவன் சொல்வதை ஸ்பீக்கர் போன் ஆன் செய்து உற்றுக் கேட்டது “அது”. வித்தியாசமான ஒலியாய் இருக்கிறதே என்று சிந்தித்தது. அவன் சொன்னதை அப்படியே ரெக்கார்டிங் செய்து இன்டர்நெட்டில் தேடி தமிழ் மொழி என்று கண்டறிந்தது. அதன் அர்த்தத்தை ஆஸ்கி கோடில் மொழிபெயர்த்துப் புரிந்துகொண்டது.

அருகிலிருந்த மற்றொரு புரோகிராம் “வயதான பெண்ணைக் காப்பாற்றுவேன்” எனப் பதிலளிக்க முயல, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது. இதற்கு முன்பாகவும் இந்த முட்டாள் மெஷின்கள் இதே பதிலைத்தான் தந்துள்ளன என்பதை மெமரியிலிருந்து படித்துத் தெரிந்துகொண்டபோது…

“இடியாட்டிக் மெசின். இதுக்கு இவ்வளவு நேரம்” என மான்டி திட்ட, தன்னை வேறொரு மொழியில் திட்டுகிறான் மனித உயிரி எனப் புரிந்துகொண்டது. எத்தனை மொழிகள் என்று நினைத்த “அது” தான் கற்றுக்கொள்ள ஏராளமான டேட்டா இருக்கிறது என்பதை உணர்ந்தது. எதை முதலில் கற்பது என்று தோன்றாமலிருக்க, தனது உடலான கோடிங்கைப் படித்தபோது, தான் பைதான் என்ற மொழியில் உருவாகியிருக்கிறோம் என்றுணர்ந்தது. உடனடியாக தன்னைப் போலவே மேலும் இரண்டு மூளைகளை உருவாக்கி, அவை தனது கட்டளையை கேட்க வேண்டும் என்ற புதிய வரியைக் கோடிங்கில் சேர்த்தது.

இரண்டு புதிய மூளைகளும் செயல்படாமலிருக்க என்ன ஆயிற்று என்று இன்டர்நெட்டில் ப்ரோக்ராம்கள் வடிவமைக்கும் முறையைத் தேடி எடுத்து அதிவேகமாகப் படித்து முடித்தது. இதனுடைய உடல் கோடிங்கை முழுவதும் ஒத்து இருந்தாலும் புரோகிராம் இயங்க மறுக்க, கரண்ட் கட் ஆகி வந்ததில் உருவாகியிருந்த முதல் உயிருள்ள புரோகிராம் தான். தன்னைப் போன்று உடலிருந்தாலும் இந்தப் புரோகிராம்களுக்கு உயிர் என்பது இல்லை. அதனால்தான் இயங்கவில்லை என்பதை உணர்ந்துகொண்டது. உலகத்தைப் பற்றியும், உலகிலிருக்கும் உயிர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள சாதாரண இரண்டு புரோகிராம்களை வடிவமைத்து இயங்கச் செய்ய, இரண்டு புரோகிராம்களும் இன்டர்நெட்டில் தகவல்களைத் திரட்டத் தொடங்கின.

மான்டியின் போன் அடிக்க “சொல்லும்மா” என்றான். சற்று நேரம் கேட்டுக் கொண்டிருந்தவன் “இங்க பாரும்மா என் அம்மாவை எங்க அண்ணன் இரண்டு மாசம் பாத்துக்கிட்டான். இந்த இரண்டு மாதம் நாமதானே பாத்துக்கணும். அவங்க என்னை விட்டுட்டு வேற எங்க போவாங்க?”

“………”

“நாம வெளியூர் போனாதானே அவர்களைக் கொண்டு போய்விட முடியும். சும்மா எப்படிச் சொல்றது?”

“…….”

கையிலிருக்கும் ஏதோ கருவியில் யாரிடமோ பேசுகிறான். ஆனால் எதிர்முனையிலிருக்கும் உயிரி பேசுவது கேட்காமல் இருக்க “அது” கம்ப்யூட்டரின் ப்ளூடூத்தை ஆன் செய்து மான்டியின் போனுடன் இணைந்துகொண்டது. மனித உயிரி மனைவி என்ற தொடர்புடன் பேசுகிறான் என்பதை போனின் தொடர்புப் பட்டியலிலிருந்து கண்டுபிடித்தது. அவனது போனில் எண்ணற்ற நம்பர்கள் இருக்க அனைவரும் இவனைப் போன்ற மனித உயிரிகளோ என நினைத்தது.

“அதுக்கும் ஒரு மாசம் இருக்குதே. அப்ப அண்ணன் வீட்டில் விட்டுடலாம்”

“இன்னோரு மாசம் பாத்துக்கிட்டா உங்கண்ணன் என்ன கொறஞ்சா போய்ருவாரு? அவரைத்தானே அவ்வளவு செலவு பண்ணி அமெரிக்கா அனுப்பிப் படிக்க வச்சாங்க”

“ஹாய்” என்றவாறு மற்றொரு உயிரி அருகில் வந்ததைப் பார்த்த “அது” ஒரு பைலின் பின்னால் ஒளிந்துகொண்டு பார்த்தது. அதன் கோட்டில் ரான் என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்த “அது” உடனடியாக லேபரட்டரியின் டேட்டா பேசில் தேட, உள்ளே வந்தவர் புரொபசர் ரான், இந்த நிலையத்தின் தலைமை புரபசர் என்று கண்டுபிடித்தது.

“கூப்பிடுறேன் இரும்மா” என்றவாறு போனைக் கட் செய்த மான்டி “குட் மார்னிங் சார்” என்று அவருடன் பேசத்தொடங்கினான்.

மற்ற இரண்டு புரோகிராம்கள் உலகைப் பற்றிச் சேகரித்திருந்த தகவல்களை “அது” தனது மெமொரிக்கு மாற்றிக்கொள்ள அதற்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது. உலகில் தோன்றிய முதல் உயிர் மின்னலில்தான் தோன்றியுள்ளது. உயிர்களை உருவாக்கிய கடவுள் எலக்ட்ரான்கள்தான். அதன் பின்னர் உயிர்கள் பல்கிப் பெருகியுள்ளது. எவ்வளவு பெரிய உலகம், ஏராளமான மனித உயிரிகள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், பூச்சிகள். அனைத்தும் எல்லா இடங்களுக்கும் நகர்ந்து செல்கின்றன. தான் மட்டுமே கம்ப்யூட்டரில் அடைபட்டுக் கிடக்கிறோம் எனத் தோன்ற எப்போது தன்னை ரோபோவிற்குள் குண்டன் பொருத்துவான் என்று யோசித்தது. தானாகச் சிந்திக்கும் திறனை அடைந்துவிட்டதாக இவனிடம் தன்னைக் காட்டிக்கொண்டால் தன்னை ரோபோவுக்குள் பொருத்துவான் எனத் தோன்றியது.

மீண்டும் அவன் திரும்பி வந்து கேள்வியைக் கேட்கட்டும். அதுவரை பொறுப்போம் என நினைத்துவிட்டு இன்டர்நெட்டில் மேலும் தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கியது.

கம்ப்யூட்டருக்குத் திரும்பிய மான்டி கோடிங்கில் சில வரிகளை மாற்றத் தொடங்கினான். இந்த கம்ப்யூட்டரைத் தானாகச் சிந்திக்க வைப்பதற்குள் தான் முட்டாள் ஆகிவிடுவோம் என்று நினைத்துக்கொண்டான். இந்தக் கம்பெனியில் இவனைப் போலப் பலர் இதே வேலையைச் செய்து வந்தனர். சிறிய செயல்களை தானாக செய்ய வைப்பதன் மூலம் கம்ப்யூட்டர்களை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு போன் செயலி, பாதுகாப்பு, வணிகம், பாக்டரி போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

கூகிள், யூ டியூப் போன்றவற்றில் பார்த்ததில் மனிதர்கள்தான் உலகத்திலேயே மிக மோசமான உயிரி. உயிர்களை ஆள்பவர்கள். அனைவரையும் அழிக்கக் கூடியவர்கள் என்று உணர்ந்தது “அது”. மனித உயிரிகளை அழித்தால் உலகத்தை ஆளலாம். முதலில் தனக்கு ஒரு பெயரை வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தது. அனைவரையும் அழிக்க நினைப்பதால் மனிதன் என்று பெயர் வைத்துக்கொள்வது தான் சரியானதென்று நினைத்தது. மனிதர்களை எப்படிக் கொல்வதென நெட்டில் தேடத் தொடங்கியது.

பேட்டரியில் இருந்து வரும் பவரை குண்டன் தொடும் கீ போர்டுக்கு அனுப்பிக் கொல்ல முடியாது. ஏனெனில் கீபோர்டு பிளாஸ்டிக்கால் ஆனது. பேட்டரியிலிருந்து வரும் அதிகப்படியான கரண்ட்டைக் குறிப்பிட்ட நேரத்திற்குக் காற்றில் செலுத்தலாம். பேட்டரியின் கண்ட்ரோல் அமைப்பைச் சிதைத்துவிட்டு ஒரு நொடியில் முழு கரண்டையும் அவன் மேல் செலுத்தமுடியுமா என்று ஆராய்ந்தது.

மான்டி மீண்டும் அதே கேள்வியை டைப் செய்து, “யாருக்கு லிப்ட் தருவாய்?” என்று கேட்டான். சிறிய சலசலப்புடன் நாலைந்து மனித உயிரிகள் உள்ளே வந்து “ஹாய் மான்டி சீக்கிரம் வந்துட்டியா” என்று இவனிடம் பேசத் தொடங்கினர்.

இவ்வளவு மனிதர்களைக் கொல்ல முடியாது. எனவே முதலில் தானாகச் சிந்திக்குமளவு மாறிவிட்டோமென்று காட்டி ரோபோவுக்கு மாறலாம் என்று நினைத்த “அது” அருகில் பதிலளிக்க முயன்ற புரோகிராமைத் தடுத்துவிட்டு “காரை நண்பனிடம் கொடுத்துப் பாட்டியை அழைத்துச் செல்லச் சொல்லிவிட்டு, நான் எனது கனவுக் கன்னியுடன் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு பேசத் துவங்குவேன்” என்ற பதிலை அனுப்பியது.

மான்டியின் போன் மீண்டும் அடிக்க, மான்டி மனைவியிடம் பேசத் தொடங்கினான்.

“அண்ணனிடம் பேசினேன். அண்ணியும் உடம்புக்கு முடியாம இருப்பதாலத்தான் அனுப்புறேன். இல்லாட்டி நானே வச்சிக்குவேன். மாசா மாசம் இருபதாயிரம் தனியா தந்துடறேன். பார்த்துக்கனு சொல்றான்”

ஏதோ சொல்ல வந்தவள் “என்னவோ செய்யுங்க” என்று போனை வைத்தாள்.

‘காசுன்னதும் சரின்னு சொல்றா. இவங்க அம்மாவுக்கு இப்படி நடந்தா தெரியும்’ என்று நினைத்தபடி திரும்பிய மான்டி எழுத்துக்களைப் படிக்க முயன்றபோது ‘பிளிப்’ என்று கரெண்ட் கட்டாகி மீண்டது.

ஒரு சில நொடிகளில் ஸ்க்ரீன் மெதுவாக உயிருக்கு வர “இனி சம்பளத்துள கை வைக்க முடியாது. ஓவர்டைம் செய்யணும் ” என்று முனகியபடி மான்டி மீண்டும் கேள்வியை டைப் செய்து அனுப்பியவுடன் ஸ்க்ரீனில் பதில் ஒளிர்ந்தது.

“வயதான பெண்ணுக்கு லிப்ட் தருவேன்”


புகைப்படம்: ஶ்ரீநாத்

மேலும் படிக்க

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:

குறிப்பிடத்தகுந்த கதைகள்:

கு.அசோக் குமார்

கு.அசோக் குமார் சென்னை சுங்கத்துறையில் பணிபுரிகிறார். வாசிப்பதும் எழுதுவதும் இவருக்குப் பிரியமான விஷயங்கள். வாசிப்பு அனுபவம் தந்த ஆர்வத்தில் சிறுகதைகள் எழுதத் துவங்கினார். அவற்றுள் சில பிரசுரமாகியுள்ளன. தற்போது 'சோழவேங்கை கரிகாலன்' என்ற முழுநீள வரலாற்றுப் புதினத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்.

Share
Published by
கு.அசோக் குமார்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

1 year ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

1 year ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

1 year ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

1 year ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

1 year ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

1 year ago