வலசை

வலசை

11 நிமிட வாசிப்பு

[1.அக்காடியன்]

பெரும் பிளவைப் பாதுகாத்த சிம்மநாகத்தையும், பறக்கும் மதகரியையும் அழித்து முன்னேறினான் அதிரதி அக்காடியன். அவனுடைய குறளர் படை வடம் பிடித்து இழுத்து, வெறித்த விழிகளுடன் நின்றிருந்த சதுக்கபூதத்தைக் கீழே சரித்தது. செம்பூதம் காத்த செம்பொன்னை மீட்டபோது பனிக்கரடிகளை முதல்முறையாக வெல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. எதிரிகளின் சுழலும் உட்கோபுரத்தை அதிரதி ஆஃப்ரோ குள்ளர்களின் உதவியுடன் தாக்கிக் கொண்டிருந்தான். அதன் இணை கோபுரத்தை அக்காடியன் தாக்கத் தொடங்கினான். தந்தங்களுடைய பெரும்பன்றியின் மீது ஆரோகனித்தவாறு வஜ்ராயுதம் ஏந்திய மகாரதி செனுஜா ராஜபாதையில் பறந்து வந்து கொண்டிருந்தாள். அதற்குள் சுழல் கோபுரங்களை அழித்தால், மூவரும் சேர்ந்து பனிக்கரடிகளின் மைய சதுக்கத்தைத் தாக்கலாம். அக்காடியன் காட்டாளனாக தலைமை ஏற்றிருந்த சூறாவளிகளின் குள்ளர் படை ஆரவாரம் செய்யத் துவங்கியது. சூறாவளிகளின் முதல் வெற்றி. இரும்பு, வெண்கலம், வெள்ளி, பொன், ரதி, அதிரதி, மகாரதி..என படிப்படியாக ஏழு படிகளில் ஏறியாயிற்று.. இதோ எட்டாவது படி…எத்தனை மாதக் காத்திருப்பு.. அக்காடியன் – வெல்லற்கரிய காட்டாளன்.

திடீரென்று எங்கும் இருள் சூழ்ந்தது. அக்காடியன் வலையிலிருந்து தூக்கியெறியப்பட்டான்.

“ஐயோ கடவுளே..!!” மாத்யூ வைட்ஹெட் கூச்சலிட்டான்.

கையில் பிடிங்கிய கணினி வயருடன் மேத்யூவின் அப்பா ஜேடி வைட்ஹெட் நின்றிருந்தார். ஆறடி உயரம். வழுக்கைத்தலை. சாம்பல் நிறக் கண்களின் கீழ் சதை தொங்கியது. அறுபது வயதை நெருங்கிக்கொண்டிருந்தார். பனிக்கரடிகளின் குடித்தலைவன் சாயல் இருந்தது. சென்ற வருடத்திய தணிக்கை அறிக்கையைத் தயாரித்து முடிக்க இரவில் மிகவும் பிந்திவிட்டது. உறங்கச் செல்வதற்கு முன் அவர் பார்த்தபோது மாத்யூ கணினி முன் எப்படி அமர்ந்திருந்தானோ, சிறுதும் நகராமல் அப்படியே அமர்ந்திருந்தான். செம்மை படர்ந்த கண்கள். கலைந்த தலை. கிண்ணத்தில் இருந்த பாஸ்தா காய்ந்திருந்தது.

“அப்பா!! ட்விட்ச் டிவியில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்ஸ் நேரலையில் லீக் ஆஃப் லெஜெண்ட்ஸ் பிளே ஆஃப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்…எங்க அணியின் ஜங்கிளர் நான்..தயவுசெய்து அந்த வயரை மீண்டும் இணையுங்கள்…” பொறுமையின்மையின் எல்லையில் ஒலித்தது மேத்யூவின் குரல். மேத்யூவின் புனைப்பெயர் அக்காடியன்.

“மேத்யூ…கவனி…எத்தனை முறை சொல்வது…வீடியோ கேம் விளையாடியே எப்படி ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்? நாளை ஒரு குடும்பத்தை நடத்த பணம் வேண்டாமா?” வைட்ஹெட்டின் குரலில் ஒரு நிதானமான பாவனை இருந்தது. 2008 வராக்கடன்களால் ஏற்பட்ட அமெரிக்கப் பொருளியல் நெருக்கடியில் ஜேடி வேலை இழந்தபோதுகூட மேத்யூ அவ்வப்போது படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிறுவனாகத்தான் இருந்தான்.

“இந்தக் கணினி என்னுடைய தனிப்பட்ட சொத்து…அதைத் தொட உங்களுக்கு உரிமை இல்லை..” வீடே அதிரும்படி அலறினான் மாத்யூ. அவன் உதடுகள் சில கெட்ட வார்த்தைகளை முணுமுணுத்தன.

கடிக்கப் பாயும் வளர்ப்பு நாயின் கழுத்துச் சரடை அதன் உரிமையாளர் கடைசி நொடியில் இழுப்பதுபோல், புதுப்புனலெனப் பொங்கி வந்த வெறியை “ஜேடி” என அழைத்த அவர் மனைவி செலுவின் குரல் இழுத்து நிறுத்தியது. “அப்படியா..சரி” வயரை மீண்டும் சாக்கெட்டில் சொருகிவிட்டு வைட்ஹெட் அங்கிருந்து விலகினார். கணினி மீண்டும் உயிர் பெற்றது.

அக்காடியன் செயலற்று நின்றிருந்த இடைப்பட்ட நேரத்தில் பனிக்கரடிகள் தங்கள் அரண்களையும், சுழற் கோபுரங்களையும் மீண்டும் கட்டியெழுப்பி, இழப்புகளைச் சரி செய்து எதிர்த்தாக்குதல் நடத்தத் தொடங்கியிருந்தார்கள். ஆஃப்ரோவும், செனுஜாவும் பின்வாங்கி இருந்தார்கள். மூன்று நிமிடங்களில் மறைந்த பூதங்களும், சிம்மநாகமும் உயிர் பெற்றுவிடும். ஐந்து பேர் கொண்ட அணியில் ஒருவர் சிறிது நேரம் செயலாற்றாமல் இருந்தால் விளைவுகளைச் சொல்லத் தேவையில்லை. அடுத்தகட்ட நகர்வுகளைத் திட்டமிட்டு, தன் அணியினருக்குச் செய்தி அனுப்பினான்.

பதில் வராததைக் கண்டு திரையைப் பார்த்தால் இணையத் தொடர்பு வேலை செய்யவில்லை. “ஃபக்..ஃபக்..ஃபக்.. அப்பா…”

“இணைய பில் கட்டுவது நான்…இணையம் என்னுடையது” என்று லிவ்விங் ரூமிலிருந்து கேட்டது வைட்ஹெட்டின் குரல்.

“ஓ.கே பூமர்..”

பனிக்கரடிகள் அணியினர் தொழில்முறை கேமர்கள். அவர்கள் ஐவரும் டிஜினிட்டாஸின் அலுவலகத்திலிருந்து விளையாடுகிறார்கள். இனிமேலும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் காத்திருப்பதில் பயனில்லை. ஆஃரோவான ஸ்டெபநோவை செல்லில் அழைத்துப் பேசியபடியே எழுந்து சென்றான் மேத்யூ.

வறுத்த பேக்கனையும், வேகவைத்த முட்டைகளையும் காலை உணவாக எடுத்து வைத்திருந்தார் செலு. மேத்யூ SAT தேர்வு தேதியை மூன்றாம் முறையாக மீண்டும் தள்ளிவைத்ததை இப்போது சொல்ல வேண்டாம்.

“எனக்கு இவன் சொல்வதே புரியவில்லை. நாள்கணக்காக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தால் எப்படி உருப்படுவான்?” தனக்குத் தானே கேட்டுக்கொண்டார்.

வீடியோ கேம்களை இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பும் ட்விட்ச் டிவியை அமேசான் நிறுவனம் வாங்க போவதாக நேற்று ஹாக்கர்நியூஸில் படித்திருந்தார். “2014ஆம் ஆண்டில் வீடியோ கேம் உலகின் பெரு முதலீடு” என்று அந்தச் செய்திக்குத் தலைப்பிட்டிருந்தன பத்திரிக்கைகள். மழைக்காளான்கள். எல் டொரொடொக்கள்.

[2. சால்மன் மீன்]

ஜேடியும் செலுவும் கலிஃபோர்னியா பே ஏரியாவின் தென் முனைக்கும் அப்பாலிருந்த கில்ராயில் வசித்தார்கள். வீட்டிலிருந்து பத்து நிமிட கார் பயணத்தில் கால் ட்ரெயின் ஸ்டேஷன். புல்லட் ட்ரெயின் பிடித்தால் ஒன்றரை மணி நேரப் பயணத்திற்குப் பின் சான் ஃபிரான்ஸிஸ்கோவில் அலுவலகம். தினமும் மூன்று மணி நேரத்திற்கும் மேல் பயணத்திலேயே கழித்தார் ஜேடி வைட்ஹெட். பேபி பூமர்ஸ் தலைமுறையைச் சேர்ந்தவர். நியூ ஜெர்சி மாநிலத்தில் ஜேம்ஸ் வைட்ஹெட்டின் ஐந்தாவது மகனாகப் பிறந்தார். பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த குவேக்கர் பிரசாரகர் ஜார்ஜ் வைட்ஹெட்டின் வம்சாவளியினர். வைட்ஹெட் ஆண்கள் தலைமுறைகளாகவே முதலில் வேலைக்குச் சேர்வது கடற்படையில். ஜேம்ஸ் யு.எஸ் நேவி சீல்களின் ஸ்கௌட்ஸ் & ரெய்டர்ஸ் அணியில் இருந்து இரண்டாம் உலகப்போரில் கலந்து கொண்டவர்.

ஜேடியின் கொள்ளுத்தாத்தா திமிங்கல வேட்டையில் புகழ்பெற்றவர். ஒரு மாபெரும் திமிங்கலத்தை அட்லாண்டிக், இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் துரத்தி வேட்டையாடச் சென்று அந்த வேட்டையில் பலியானார். ஹெர்மன் மெல்வில் எழுதிய மோபி டிக் நாவலின் ஆகாப் ஒரு வைட்ஹெட்தான். இப்பொழுது சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஹெர்மன் மறைந்து கால் நூற்றாண்டு கழித்துதான் நாவல் புகழடைந்தது. ஆகாப் கேப்டனாக இருந்த கப்பலின் முதலாளிகள் குவாக்கர்கள் என்று குறிப்புகள் உள்ளன. நாவலில் திமிங்கலமும் இறந்துவிடும். ஆனால் வைட்ஹெட்களுக்குத் திமிங்கலம் இறந்ததா என உறுதியாகத் தெரியவில்லை. வைட்ஹெட்களுக்கு மீன் பிடித்தல் என்றுமே பிடித்தமான பொழுதுபோக்கு. ஜேடி விடுமுறை நாட்களில் மீன் பிடிக்கச் செல்வார். திமிங்கலம் எல்லாம் இல்லை. சாக்ரமெண்டோ நதிகளில் குஞ்சு பொரிக்க வரும் சுவையான கோஹோ சால்மன் மீன்.

ஜேடியும் சில ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்த பின் பென் ஸ்டேட் பல்கலையில் நிதி தணிக்கையியலில் இளங்கலை பட்டம் பெற்று, ஐக்கிய தேசிய வங்கியில் இளம் தணிக்கையாளராகச் சேர்ந்தார். வங்கியில் பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. முன்னோர் வகுத்த வழி சென்றால் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு. வங்கி அமெரிக்க மேற்குக் கரையில் விரிவடைந்தபோது, ஜேடி கலிஃபோர்னியாவிற்கு மாற்றலாகி வந்தார். ராணுவத்திலிருந்து பல்கலைக்கழகம் வழியாக வங்கிப் பணிக்கு வந்தது, ஓயாது அலையடிக்கும் கடலில் இருந்து சுழித்தோடும் பெரு நதியின் வழியாகச் சலனமற்ற மெல்லிய நீரோடைக்கு வந்த சால்மன் மீன் என உணர்ந்தார் ஜேடி.

அன்று முன்னாள் ராணுவ வீரர்கள் தினம். ஜேடியைவிட இருபது வயது குறைவான இந்திய மேலாளர் ஜேடி ராணுவத்தில் பணியாற்றியதையும், அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்காக எப்போதும் உறுதுணையாக இருக்கும் வீரர்களுக்காகவும் நன்றி தெரிவித்து அலுவலக ஸ்லாக்கில் பதிவிட்டிருந்தார். மதிய உணவு இடைவெளியின்போது தன் மொபைலை எடுத்துப் பார்த்த ஜேடியின் முகம் வாட்டமாக இருந்தது.

“தணிக்கை அறிக்கைகளில் எதுவும் சிக்கலா?” மேலாளருக்கு அவன் கவலை.

வாட்டர் போலோ பயிற்சிக்குத் தொடர்ந்து வராததால் மேத்யூவை அணியிலிருந்து நீக்கி வேண்டியதாகிவிட்டது என்று பள்ளியின் பயிற்சியாளர் லெயிஃப் வாட்ஸ்ஆப்பில் செய்தி அனுப்பியிருந்தார்.

“இல்லை. மேத்யூவைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். லீக் ஆஃப் லெஜண்ட் இணைய கேமில் இருக்கும் முதல் பத்து ஜங்கிலர்களில் ஒருவன் என்கிறான். கல்லூரிக்குச் செல்லும் எண்ணமில்லை…ராணுவத்தில் சேரவும் விருப்பமில்லை…”

“எங்கள் மொழியில் ப்ளேயர்களை விளையாட்டு வீரர் என்று அழைப்போம். கால்பந்தாட்ட வீரர். கூடைப்பந்தாட்ட வீரர்..நீச்சல் வீரர்…விளையாட்டும் வீரம்தான்.”

“சாக்கர் வாரியர்…பாஸ்கட்பால் வாரியர்…ஸ்விம்மிங் வாரியர்..சொல்வதற்கு சிரிப்பாக இருக்கிறது. அந்த விளையாட்டுகளில் வருமானத்திற்கு வழிகள் இருக்கின்றன… குறைந்தபட்சம் அவை நல்ல உடற்பயிற்சி…ஆனால் வீடியோ கேம்களில்?”

“எங்கள் தலைமுறைகளிலும் பள்ளி நாட்களில் சூப்பர் மரியோ பின்பு பதின்பருவத்தில் ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் என வீடியோ கேம் விளையாடி மணிக்கணக்காக வீணடித்திருக்கிறோம்…ஒரு கட்டத்தில் சலித்துவிடுவான்.”

“ஆம்..நானும் நம்ப விழைகிறேன்..அவனுடைய தீவிரம் என்னை நிம்மதி இழக்கச் செய்கிறது.”

[3. மொனார்க் பட்டாம்பூச்சி]

1864ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க உள்நாட்டுப்போரில் அலபாமாவின் டஸ்கலூசா நகரம் தீக்கிரையானது. மூன்று மாதங்கள் கழித்து வேறு வழியில்லாமல், வில்லியம் ஜோட் எரிந்தழிந்த டஸ்கலூசாவிலிருந்து ஓக்லஹாமா மாநிலத்திலிருந்த சாலிசாவிற்கு தன் பத்து வயதில் வந்து சேர்ந்தார். வெயில் சுட்டெரித்த ஒரு கோடைக்காலக் கொடும்பகலில் ஒரு வாரப் பட்டினியினால் சாலிசா நகரத்தின் எல்லையில் மயங்கிக்கிடந்த வில்லியமை ஒரு முதிய செரோக்கிப் பழங்குடிப் பெண் ஒரு சோள ரொட்டியும், தண்ணீரும் தந்து காப்பாற்றினாள். விண்ணருள வந்த மெல் அமுதம் என நீண்ட அவள் கையின் மீது ஒரு மோனார்க் பட்டாம்பூச்சி வந்தமர்ந்து பறந்து சென்றதை வில்லியம் மறக்கவில்லை. அப்போது செலு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் அவள் உச்சரித்தாள்.

பண்ணைகளில் எடுபிடி வேலைகள் செய்து, மெல்ல செல்வம் சேர்த்து, குத்தகை நிலத்தில் சோளம் பயிரிட்டு, திருமணம் செய்து சாலிசாவில் ஒரு நல்ல நிலையை அடைந்தார் வில்லியம். முதியவளைத் தேடி அவளைச் சந்தித்த இடத்திற்குப் பலமுறை வில்லியம் சென்ற போதும் அவளை மீண்டும் காண முடியவில்லை. அலபாமாவின் டல்லாஸியிலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒக்லஹோமாவிற்குப் பழங்குடிகள் விரட்டப்பட்டார்கள் எனக் கேள்விப்பட்டிருந்தார். பழங்குடிகள் வந்த ‘கண்ணீர் வழி’யிலேதான் தானும் பின்பு பயணித்ததையும், செரோக்கிகளின் பெண் தெய்வத்தின் பெயர் செலு என்றும், மக்காசோளத்தின் அதிதேவதை அவள் எனவும் பின்பு அறிந்தார்.

தன் எண்பதாவது வயதில் வில்லியம் ஜோட் மீண்டும் ஒரு பெரும் பயணத்திற்கு அவர் விருப்பத்தை மீறி தயார் படுத்தப்பட்டார். ஒக்லஹோமாவும் மற்ற மத்திய மேற்கு மாநிலங்களும் பெரும் பொருளியல் வீழ்ச்சி காலத்தில் புழுதிப் புயல்களால் பிச்சைப் பாத்திரங்களாக மாறின. புல்வெளிகளை அழித்து வரம்பற்ற விவசாயம் செய்ததால், பருவநிலை மாற்றத்தால் எனப் புழுதிப்புயலுக்குப் பல காரணங்கள் சொன்னார்கள். வில்லியம் மட்டும் பழங்குடிகளின் அழிவில்லாத கண்ணீர் அலபாமாவில் அனல் காற்றாகவும், ஓக்லஹோமாவில் புழுதிப் புயலாகவும் மாறியது என்றார்.

பஞ்சம் பிழைக்க ஆயிரக்கணக்கான ஓக்கிகள் தங்கள் நிலங்களை இழந்து பொன் விளையும் பூமி என்று அறியப்பட்ட கலிஃபோர்னியாவிற்குப் புலம்பெயர்ந்தபோது சாலிசாவைவிட்டு வில்லியம் வர மறுத்தார். வில்லியத்தின் மருமகளான ஹார்லட் ஜோட் புலம்பெயர்வதைத் தவிர வேறு வழியில்லை என்றாள். அவருக்கு இருமல் மருந்து சற்று அதிகமாகத் தந்து தூங்க வைத்துக் காரில் ஏற்றினார்கள். அந்திமாலையில் வில்லியம் ஓக்லஹோமாவின் எல்லையைத் தாண்டுவதற்குள்ளேயே இறந்திருந்தார்.

ஜோட் குடும்பத்தினர் அன்னையர் வழியான நெடுஞ்சாலை ரூட் 66 இல் பயணத்தை தொடர்ந்தார்கள். ஹார்லட்டின் மகளான ரோஸ் ஜோடிற்கு மொகாவே பாலைவனத்தில் அவளுடைய முதல் குழந்தை இறந்தே பிறந்தது. ஜோட் குடும்பத்தினர் தங்கள் கடைசி சேமிப்பையும் விற்று எடுத்து வந்திருந்த பணத்தில் கலிஃபோர்னிய மத்தியப் பள்ளத்தாக்கில் பீச் பழத்தோட்டம் ஒன்றைக் குத்தகைக்கு எடுத்துக் குடியேறினார்கள்.

ஓக்லஹோமாவில் விளைச்சலே இல்லையென்றால், கலிஃபோர்னியாவிலோ பெருவிளைச்சலால் அவர்கள் பயிரிட்டிருந்த பீச் பழங்களுக்கு விலை இல்லாமல் அந்த வருட அறுவடை வீணானது. பெருவிவசாயிகளும், தரகர்களும் சேர்ந்து சிறு விவசாயிகளை நசுக்கினார்கள். ஏழைகளின் கண்களில் கோபத்திராட்சைகள் வளர்கின்றன என்றனர். விவசாயப் போராட்டத்தில் கலந்து கொண்டு, அதில் ஏற்பட்ட கலவரத்தில் ஜோட் குடும்ப ஆண்கள் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த வருடக் குத்தகைக்குப் பணமில்லை.

வில்லியம் ஜோட்டின் மருமகளும் செலுவின் பாட்டியுமான ஹார்லட் ஜோட் இதற்கு மேல் வாழ முடியாது என முடிவெடுத்து மொத்தக் குடும்பத்திற்கும் உணவில் பூச்சிமருந்தைக் கலக்கத் தோட்டத்தில் மருந்தைத் தேடியபோது, பூச்சி மருந்து பாட்டில் மீது ஒரு மொனார்க் பட்டாம்பூச்சி அதன் ஆரஞ்சு நிறச் சிறகுகள் பொன்னொளிர அமர்ந்திருப்பதைக் கண்டார். மெல்ல சிறகு விரித்து அருகிலிருந்த பூண்டு செடியின் மீது சென்றமர்ந்தது. ஓக்லஹோமாவில் வருடா வருடம் வரும் பட்டாம்பூச்சிகள் அவை. அவர்களுடைய சோளத்தோட்டத்தில் மொனார்க் பட்டாம்பூச்சிகள் தென்படத் தொடங்கிவிட்டாலே கடும் குளிர் அகன்று வசந்தம் வந்துவிட்டது என்று அர்த்தம். அந்தக் காலையில் தற்கொலை எண்ணத்தை விட்டொழிந்து மத்தியப் பள்ளத்தாக்கிலிருந்து கில்ராய்க்குத் தன் மகள் ரோஸுடன் இடம்பெயர்ந்தார் ஹார்லட். கில்ராய் பூண்டு வயல்களில் கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கி சில ஆண்டுகளில் ஒரு பூண்டு வயல் வாங்கினார். ரோஸிற்கு நீண்ட காலம் கழித்து இரண்டாவது மகள் பிறந்தபோது அவளுக்குச் செலு என பெயரிட்டார் ஹாஸ்லெட்.

ஹார்லட் செலுவிற்குப் பல முறை மொனார்க் பட்டாம்பூச்சியின் கதைகளைச் சொன்னதாலோ என்னவோ, செலுவிற்குப் பட்டாம்பூச்சிகளின் மீது பேரார்வம் ஏற்பட்டது. அவள் வளர்ந்தபின் சாண்டா குரூஸ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் இளங்கலை மாணவியாகச் சேர்ந்தாள். மாண்ட்ரே காடுகளில் மொனார்க் பட்டாம்பூச்சிகளைத் தேடி அலைந்த ஒரு நாளில்தான் ஜேடியைச் சந்தித்தாள் செலு. மாண்ட்ரே பேவில் ஓர் உணவு விடுதியில் அவளுக்குத் தெரிந்த ஒரு நண்பனுடன் ஜேடி அமர்ந்திருந்தான். வங்கியில் பணிபுரிவதாகவும், விடுமுறை நாட்களில் சால்மன் மீன் பிடித்தல் தனக்குப் பிடித்த பொழுதுபோக்கு என்றும் சொன்னான். நல்ல உயரம். சுருள் சுருளான முடி. அழகான சாம்பல் நிற கண்கள்.

சில மாதங்கள் கழித்து ஹாமில்டன் மலையிலிருந்த லிக் வான்னோக்கி அரங்கத்திற்கு ஒரு சந்திர கிரகணத்தைக் காண சாண்டா குரூஸ் பல்கலைக்கழக மாணவர் குழு ஒன்று சென்றது. அப்போது மீண்டும் ஜேடியைச் சந்தித்தாள் செலு. மொனார்க் பட்டாம்பூச்சிகள் குறித்து தான் ஆய்வு செய்ய இருப்பதாகச் சொன்னாள் செலு.

“பட்டாம்பூச்சியின் மீது ஏன் உனக்கு இத்தனை ஆர்வம்?” என்று கேட்டான் ஜேடி.

“பறவைகளும் மீன்களும் வலசை போகும் கேள்விப்பட்டிருப்பாய். பசிபிக் ஃபளைவேயில் ஆயிரக்கணக்கான பறவைகள் அலாஸ்காவிலிருந்து பாண்டகோனியாவிற்குச் செல்கின்றன..”

“ஆம். சால்மன் மீன்களை அப்படித்தானே எளிதாக நாங்கள் சாக்ரமெண்டோ நதியில் காத்திருந்து பிடிக்கிறோம்” என்றான் ஜேடி.

“ஒரு கிராம் எடைக்கும் குறைவான மொனார்க் பட்டாம்பூச்சிகளில் பல தலைமுறைகள் இணைந்து மூன்றாயிரம் மைல்கள் வலசை செல்கின்றன. மெக்ஸிகோ காடுகளில் குளிர் காலத்தின் இறுதியில் ஆழ்துயிலிலிருந்து எழும் பட்டாம்பூச்சிகள் இனப்பெருக்கம் செய்து முட்டையிட்டு மடிகின்றன; அங்கு பிறந்த பட்டாம்பூச்சிகளின் அடுத்த மூன்று தலைமுறைகள், தலைமுறைக்கு ஒரு மாதம் வீதம் உயிர்வாழ்ந்து, தொடர்ந்து வடதிசை நோக்கிப் பறக்கின்றன. இவ்வாறு மூன்று மாதக் காலத்தில் மூன்று தலைமுறைகளின் வாழ்நாளிற்குப் பின் மூன்றாயிரம் மைல் தொலைவில் இருக்கும் கனடியக் காடுகளை அடைகின்றன. கோடையின் இறுதியில் கனடியக் காடுகளிலிருந்து தென்திசை நோக்கி பறக்கும் நான்காம் தலைமுறை தொடர்ந்து பறந்து, மூன்று தலைமுறை கடந்த தூரத்தை ஒரே தலைமுறையில் கடந்து மீண்டும் குளிர்காலத் துவக்கத்தில் மெக்ஸிகோ காடுகளுக்கு திரும்பி ஆழ்துயில் கொள்கின்றன.” என்றாள் செலு.

“ஓ..” என்றான் ஜேடி. அவர்கள் இருவருக்கும் மேலே வின்மீண்கள் மின்னிக்கொண்டிருந்தன.

“லிங்கன் பிரௌவரும் அவர் மனைவியும் மொனார்க் பட்டாம்பூச்சிகளை இரண்டாண்டுகள் தொடர்ந்து அவற்றின் வலசைச் சுழற்சியைக் கண்டடைந்தார்கள். கனடியக் காடுகளில் பிறந்த நான்காம் தலைமுறை மொனார்க் வண்ணத்துப்பூச்சிகள் எப்படி மீண்டும் மெக்ஸிகோ காடுகளை அடைகின்றன என்பது பெரும் புதிர். ராக்கி மலைத்தொடருக்கு இப்பால், மொனார்க் பட்டாம்பூச்சிகளில் வேறு ஒரு கிளை கலிஃபோர்னிய மாண்ட்ரே காடுகளில் குளிர்காலத்தைச் செலவிடுகின்றன. என்னுடைய ஆராய்ச்சி மாண்ட்ரே காடுகளில் இருக்கும் பட்டாம்பூச்சிகளைப் பற்றியது.” என்றாள்.

மேலும் சில சந்திப்புகளுக்குப் பிறகு செலு, ஜேம்ஸ் மற்றும் ஹார்லட் கதைகளைச் சொன்னாள். சில வருடங்கள் கழித்து பசிபிக் க்ரோவ் காடுகளில் ஆயிரக்கணக்கான மொனார்க் பட்டாம்பூச்சிகள் மேலே பறந்த ஒரு பொன்னொளிர் மாலையில் ‘என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ என்று ஜேடி கேட்க, “ஆம்” என்று சொன்னாள் செலு.

மகிழ்ச்சியான தருணங்களில் ஜேடியிடம் “நான் இளைப்பாறும் பசிபிக் க்ரோவ் நீ” என்றும், கோபத்தில் “என்னைப் பிடித்த கிரகணம் நீ” என்றும் சொல்வாள். ஜேடியை முதன் முதலில் சந்தித்து முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன.

“மேத்யூ நான்காம் தலைமுறை மொனார்க் பட்டாம்பூச்சி. அவனைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.. கூட்டுப்புழு எப்படியும் சிறகு விரிக்கும்,” என்று ஜேடிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியபின், அன்றைக்கு நடத்த வேண்டிய உயிரியல் பாடங்களின் குறிப்புகளை எடுக்கத் துவங்கினார் பேராசிரியர் செலு.

[4.மேத்யூ]

ம்யூனி டிராம் வண்டியில் ஒரு பதின்பருவப்பெண்ணின் வலக்கையில் மொனார்க் பட்டாம்பூச்சியும், இடது முழங்கையில் கருப்பு செதில்களாலான சால்மன் டாட்டூவும் குத்தியிருந்தாள். மணிக்கட்டில் ‘Peach’ என்று சிறு மணிகளால் ஆன கைவளை அலங்கரித்தது. அவளுடைய நண்பன் முகத்தில் கரு நிற மாஸ்க் அணிந்து, பின்புறம் திரும்பி இரு பெண்களுடன் கைகளைக் கோர்த்து ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணி ஒருவருடைய கைகளை இன்னொருவர் வேகமாகத் தட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். கொரோனா முடிந்திருந்தாலும் இன்னும் சிலர் முகமூடி அணிந்தே வந்தனர். பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண்கள் பிங்க் நிற இமைச்சாயங்களும், அவற்றில் மின்னும் பொடிகளும், நீளமான இமை முடிகள் என அலங்கரித்திருந்தனர். எதிர் இருக்கையில் ஒரு ஹோம்லெஸ் பளீர் பச்சை நிற கோட் அணிந்து மூன்று இருக்கைகளை நிறைத்துக் கால்களை நீட்டி அமர்ந்திருந்தார். மிஷன் ராக் தாண்டி சேஸ் சென்டரில் அந்த பதின்பருவத்தினர் இறங்கியதும் ட்ராம் திடீரென முதுமையடைந்து போல மெல்ல ஊர்ந்து சென்றது.

சான் ஃபிரான்சிஸ்கோ சேஸ் சென்டரில் பதின்பருவத்தினர் குழுமியிருந்தார்கள். அவர்களின் இசை அரசன் இலினியத்தின் கான்சர்ட் அது. சேஸ் சென்டர் ஒரு கூடைப்பந்தாட்ட வளாகம். சில நேரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நீள்வட்ட அரங்கில் இருபதுக்கும் மேற்பட்ட சரிவு இருக்கை வரிசைகளும், அதன் மீது சிறப்பு விருந்தினர் அறைகளும், பின்பு மேலும் சாய்வு இருக்கை வரிசைகளும், இறுதியாக விளக்குகள் நிறைந்த கூரையும் என பத்து மாடி உயரத்திற்கு அந்த உள்ளரங்கம் இருந்தது. பொது வாயில்களும் சிறப்பு விருந்தினர் வாயில்களும் தனித்தனியாகக் கொடிகளில் அடையாளப்படுத்தப்பட்டு வரிசையாக மக்களைப் பாதுகாப்பிற்கு உட்படுத்தி உள்ளே அனுப்பினர். வயதான ஆண்கள் கனிவுடன் விசாரித்து மக்களுக்கு வழிகாட்டினர்.

மாத்யூ தன் புதிய டொயோட்டா 86 ஸ்போர்ட்ஸ் காரில் கான்ஸார்ட்டிற்கு வந்திறங்கினான்.

“அப்பா இப்பொழுது என்ன சொல்கிறார்?” என்று அவனுடைய ஈ.ஸ்போர்ட்ஸ் டிஜினிட்டாஸ் அகெடமி தோழன் ஸ்டெபனோ கேட்டான். டிஜினிட்டாஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஐந்து ஆண்டுகள் கடந்திருந்தன.

“இந்த வருட வருமான வரி செலுத்தும்போதுதான் கிழவர் கவனித்தார். அவருடைய முப்பது வருட அனுபவத்திற்குப் பின்னான இந்த வருட வருமானத்தைவிட என்னுடைய வருமானம் அதிகம். கிழவர் முகத்தில் தெரிந்தது பெருமையா பொறாமையா என்று தெரியவில்லை…”

“உன்னுடைய பிட்காயின்களின் மதிப்பை அறிந்தால் கிழவர் மயக்கம் போட்டுவிடுவார்…”

“செகண்டரி மார்க்கெட்டில் காயின்பேஸ் பங்குகளை வாங்கிவிட்டேன்…நூறு பில்லியன் டாலர் ஐ.பி.ஓ… கிழவர்தான் என்னுடைய டாக்ஸ் கன்சல்டண்ட். பார்த்து தெரிந்துகொள்வார்..” மாத்வூவும் ஸ்டெபெனோவும் சிரித்துக்கொண்டார்கள்.

கத்தரிப்பூ வண்ண ஒளி மேடையை நிறைத்திருந்தது. இசை ஆளுநர் “சான் ஃபிரான்சிஸ்கோ, ஐ லைக் யூ ஃபக்கிங் மச்” என்று கூவினார். வரிக்கு வரி ஃபக்கிங் என்று சேர்த்துக்கொண்டார். அரங்கம் முழுவதும் புகை பரவி மஞ்சள், நீலம், சிவப்பு வண்ண லேசர் ஒளி புகையில் ஊடுருவியது.

இலினியம் ஹூடி அணிந்து மேடைக்குப் பறந்து வந்தான். புஸ்வானங்களும், பட்டாசுகளும் மேடையில் இடைவிடாமல் வெடித்தன. கூக்குரல்கள்களால் கட்டிடம் அதிர்ந்தது. ‘பிளட்’ இசையை ஒலிக்க துவங்கினான் இலினியம். மேடையில் இருந்த பெருந்திரையில் வரிசையாகச் சிவப்பு அணுக்கள், வெள்ளை மண்டையோடு, பொன் நிறச் சிலையின் வாயில் இருந்து வழிந்தோடும் குருதி, நெடிய ரெட்வுட் மரங்களின் மீது தாக்கும் மின்னல், புல்வெளி மீது ஓடும் கிராபிக்ஸ் முயல், கருப்பு வெள்ளைக் கட்டங்களில் பறக்கும் பறவைகள் என ஒரு கொலாஜான படங்கள் தோன்றி மறைந்தன.

திடீரென்று அரங்கத்தை இருள் சூழ்ந்தது. ஒரு நிமிடத்திற்கு மேலாகியும் ஒளி எதுவும் தோன்றாததால் சில முணுமுணுப்புகள் எழுந்து, இரைச்சலாக மாறி, பின்பு பெருங்கூச்சலானது. கூட்டத்தில் ஸ்டெபனோவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேத்யூ தட்டுத்தடுமாறி வெளியேறினான். மொத்த நகரமும் இருளில் மூழ்கியிருந்தது. மொபைல் போன்கள் வேலை செய்யவில்லை. ஸ்டெபனோவைத் தேடி அலுத்து, காரில் வீடு வந்து சேர்ந்தான். வரும் வழியில் எங்குமே மின் விளக்குகள் எரியவில்லை.

மறுநாள் காலையில் நாட்டின் தலைசிறந்த லீக் ஆஃப் லெஜண்ட் ஜங்கிலர்கள் அனைவரும் உடனடியாக ராணுவத் தலைமையகத்திற்கு வருமாறு அவசரச் செய்தி வந்திருந்தது. நாட்டின் மின் கட்டுமானம் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்திருப்பதாகச் செய்திகள் பரவின.

சால்மன் மீன் குஞ்சுகள் மீண்டும் ஆழி நோக்கி தங்கள் பயணத்தைத் துவங்கிவிட்டன. நான்காம் தலைமுறை மொனார்க் பட்டாம்பூச்சிகள் கனடியக் காடுகளில் இருந்து மூன்றாயிரம் மைல் தொலைவில் இருக்கும் மெக்ஸிகோ காடுகளை நோக்கிப் பறக்கத் தொடங்கின.


புகைப்படம்: பானு

மேலும் படிக்க

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:

குறிப்பிடத்தகுந்த கதைகள்:

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்