சனி பகவான்

சனி பகவான்

29 நிமிட வாசிப்பு

1

“எடுத்த எந்தக் காரியமும் உருப்பட்டிருக்காதே?”

“ஆமா” என்றார் குமரகுரு சோகமாக.

“சுத்தியிருக்கவன் எவனும் மதிச்சிருக்க மாட்டான், உலகமே உன்னைப் புறக்கணிக்கிற மாதிரி தோணுமே?”

“ஆமா..!” என்றார் ஆச்சரியத்துடன்.

“நீயா சுயமா ஏதும் பண்ணியிருக்க முடியாதே? பின்னாடியிருந்து யாரோ உன்னை ஆட்டிவைக்கிறது மாதிரி இருக்குமே?”

“ஆமா சார்! என் பின்னாடி யாரோ ஒருத்தர், ஒரு குதிரையில உக்காந்து, கையில இருக்கிற சவுக்கால என்னை அடிச்சி கட்டளை போடுறமாதிரி இருக்கு.” என்று குரு புலம்பிக்கொண்டிருந்தபோது எதிரிலிருந்த ஜோசியக்காரர் தாடியைத் தடவியபடிக் கேட்டுக்கொண்டிருந்தார். குரு தொடர்ந்தார்.

“24 மணிநேரமும் யாரோ என்னை க்ளோசா வாட்ச் பண்ணுற மாதிரி ஃபீல் ஆகுது. கண்டிப்பா யாரோ ஃபாலோ பண்ணுறாங்க” என்று சொல்லிக்கொண்டிருந்தபோதே தயங்கியபடி கையைப் பின்னால் காட்டினார்.

ஜோசியக்காரர் வெடித்துச் சிரித்து “அது உன் பின்னால இல்ல, பக்கதுலயே இருக்கு.” என்றதும் குரு லேசான பதற்றத்துடன் சுற்றி முற்றிப் பார்த்தார்.

“சனி பகவான். உன் பக்கதுலயேதான் இருக்கிறார். அப்றோம்… அவர் உன்னைக் குதிரையில பின் தொடரல, அது காகம்” என்று தாடியைத் தடவியபடிச் சொல்லிப் புன்னகைத்தார். குரு குழப்பத்துடன் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“உன் ராசிக்கு இப்போ ஜென்ம சனி நடந்துகிட்டிருக்கு. சனி பகவான நீ நெஞ்சில சுமந்துட்டு இருக்கே”

“ஒ” என பெரிதாய் உணர்ச்சிகள் ஏதும் இல்லாமல் முழித்த குரு “இது எப்போ சரியாகும்? இந்த ஜென்மம் முழுக்க இருக்குமா?” எனக்கேட்டதும் மீண்டும் அழகாய்ச் சிரித்த அந்தப் பெரியவர்

“இல்ல இல்ல, இன்னும் இரண்டரை வருடத்தில் எல்லாம் சரியாகிடும்”

“உண்மையாவா!?” என்று குரு கேட்கையில் அவரையறியாமலேயே விழியோரத்தில் நீர் படிந்திருந்தது. இது உண்மையோ பொய்யோ, நடக்குமோ நடக்காதோ தர்க்கங்களைத் தாண்டி அதை அப்படியே நம்ப மனம் மன்றாடியது.

இன்னும் இரண்டரை வருடத்தில் எல்லாம் சரியாகிவிடும்” எத்தனை ஆசுவாசமான வார்த்தைகள். அவர் மனதில் கொதித்தவை ஆறியடங்கின. நடுக்கம் குறைந்தது. குரு மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்காகக் கடந்த ஆறு மாதங்களாக முயற்சித்து அனைத்தும் தோல்வியில் முடிந்தன. எப்போதும் ஏதோ ஒரு தடங்கல். இப்போது புரிந்தது. அது சனி பகவானின் வேலை.

இன்று கிளினிக் ஒன்றிற்கு அவர் நேரில் சென்று, அத்தனை நெரிசல்களுக்கிடையில் பதிவு செய்து காத்துக்கொண்டிருந்த 10 வது நிமிடத்தில் ஏதோ தொழில்நுட்பச் சிக்கலென அங்குள்ள ஊழியர்கள் பரபரத்தனர். 15 வது நிமிடத்தில் அங்குள்ள கணினிகளில் ஏதோ தீ விபத்தெனச் சொல்லி அனைவரையும் இன்னொரு நாள் வரச்சொல்லித் தகவல் கொடுத்ததும் குரு சோர்வின் உச்சிக்கே சென்றார். அங்கிருந்து அப்படியே திரும்பிச் செல்லும் வழியில் சாலையோர நடைபாதையில் பிச்சைக்காரர்களுடன் அமர்ந்திருந்த இந்த ஜோசியக்காரரைக் குரு கண்டார். நீண்ட வரிசையில் காத்திருந்து அவரைச் சந்தித்தார்.

அவர் சொல்கின்ற நட்சத்திரக் கணக்கு, பரிகார முறைகள் புரியவில்லை என்றாலும் இங்கேயே அமர்ந்து இவரிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டுமென்று குருவுக்குத் தோன்றியது. இன்னல்களுக்குக் காரணம் தெரிந்தாலே மனம் அமைதியாகிவிடும் நிலையில் இவரோ அதற்கான தீர்வையும் சொல்கிறார். அது புனைவேயானாலும் இப்போதைக்கு மோசமான யதார்த்ததிலிருந்து தன்னை விடுவித்து அதில் புகுத்திக்கொள்ளவே குரு விரும்பினார். ஆனால் அந்த ஜோசியக்காரருக்குப் பின்னால் அழுக்குத் தாடியுடனும், கிழிந்த ஆடையுடனும் குப்பையில் படுத்திருந்த கிழவர் ஒருவர் இமைமூடாமல் குருவையே பார்த்துக்கொண்டிருந்தது அவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. கூடவே கீர்த்தனாவைக் கல்லூரியிலிருந்து அழைத்துச் செல்லும் பணியிருந்ததால் அவர் அங்கிருந்து கிளம்பினார்.

போகும் வழி முழுவதும் அந்த ஜோசியக்காரரின் வார்த்தைகள் காதில் ஒலித்தபடியேயிருந்தன. “சனி பகவான் நீதி பகவான். பாவ – புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர். தவறு செய்தவர்கள் அவரால் ஏற்படும் கெடுதலில் இருந்து தப்பவே முடியாது.” என முகத்தை இறுக்கமாக வைத்து அவர் கண்டிப்புடன் சொன்ன வார்த்தைகள் காந்தத்தை நெருக்கமாகப் பற்றும் ஊசிகள் போல குருவின் இதயத்தைச் சுற்றிலும் இறுக்கி அழுத்தியபடியிருந்தன.

பைக்கை ஓரமாக நிறுத்தி “என்னை மன்னிச்சிரு வானதி” என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டு வெடித்து அழுதார். அப்போது இரு காக்கைகள் அவரின் பைக்கிற்கு முன் விழுந்து கடும் சத்தத்துடன் சண்டையிட்டபடி இருந்ததை லேசான கலக்கத்துடன் பார்த்தார் குரு. பின் பயத்தில் பைக்கை எடுத்து வேகமாக ஓட்டினார். அவ்வப்போது நாலாபுறமும் பார்த்தபடிப் பதட்டத்துடன் ஓட்டிச் சென்றார்.

திடீரெனத் தனக்கு நேர் மேலே, நல்ல உயரத்தில் ஒரு காகம் பறப்பதைக் கண்டார். பீதியடைந்தார். பின் அக்காகம் தன்னைப் பின்தொடர்வதை உறுதி செய்து பீதியின் உச்சமடைந்தார். அவர் செல்லும் வழியெல்லாம் அது அவரைத் தொடர்ந்தது. அச்சமடைந்த குரு வழியை மாற்றிச் சென்றார். இப்போது அக்காகம் மேலேயில்லை. நிம்மதியடைந்தவர் அதே வழியில் சென்று கீர்த்தனாவின் கல்லூரியை அடைந்தார்.

அவள் கல்லூரியின் எதிர் புறமுள்ள காப்பிக்கடை முன் பைக்கை நிறுத்தி மேலே பார்த்தார். மேலே அதே காகம். பயத்தில் நடுங்கியவர் வேகமாகக் கடைக்குள் ஓடி கண்ணாடி சன்னல் வழியே வெளியே பார்த்தார். அந்தக் காகம் மெதுவாய் அருகிலிருந்த மற்றொரு கடையில் இறங்கியது. ஓ… அது காகம் அல்ல அமேசான் டெலிவரி ட்ரோன். அங்கிருந்த சிறுவன் ஒருவன் QR code ஐ காட்டி நின்றான். அதில் தான் கொண்டு வந்தப் பொதியை வைத்துவிட்டு அது கிளம்பியது.

2

குரு பெருமூச்சுவிட்டபடி இருக்கையில் அமர்ந்திருந்த சற்று நேரத்தில் அவரின் நினைவுகள் முழுக்க கீர்த்தனா நிறைந்திருந்தாள். அவளைச் சந்திக்கும் போதெல்லாம் ஒரு தயக்கம், நெருடல் கூடவே குற்றவுணர்வும் ஒட்டிக்கொள்ளும். தன்னைவிட பாதிக்கும் சற்றே அதிகமேயான வயதுடைய, தான் பேராசிரியராக வேலை பார்த்த கல்லுரியின் ஆராய்ச்சி மாணவியுடன் மலர்ந்த காதல். துரதிர்ஷ்டமான தற்செயல் அல்லது தன் தோல்விகளால் ஏற்பட்ட தன்னிரக்கத்தின் விளைவு என அவர் நம்பினார். ஆனால் இவ்வுறவு கடந்த ஆறு மாதங்களாக நீடிப்பதற்குக் கீர்த்தனாவின் கண்மூடித்தனமான காதல்தான் காரணம். அல்லது இவ்விரண்டிற்கும் சனி பகவான்தான் காரணம் என்றெண்ணி மெல்லிய சிரிப்புடனிருந்தபோது

“ஹாய் குரு” என்று சொல்லிச் சிரித்தபடியே வந்த கீர்த்தனா குருவுக்கு எதிரே அமர்ந்து கொண்டாள். குரு ஆறு மாதங்களாக அவள் அழகை ரசிக்கும்போது ஏற்படும் அதே நெருடலை மறைத்துச் சிரித்தார்.

இரண்டு காதிலும் ஏர்போடுகள் கையில் ஐஃபோன் ஸ்மார்ட் வாட்ச் என அவள் அணிந்திருக்கும் கேட்ஜெட்களையும் கவனித்த குரு “கூகுள் அல்லது சிரியிடம் அனுமதி வாங்காமல் நகம் கூட வெட்டாத நவீனத் தலைமுறையின் முன்மாதிரி இவள்” என நினைத்தபோது அவருக்கு மறைந்த அவரின் மனைவி வானதியின் நினைவுகள் நெஞ்சில் முளைத்தன.

வானதியும் கீர்த்தனாவைப் போலவே “மின்னணு” மனிதிதான். கைகளிலும் கழுத்துகளிலும் எந்நேரமும் மின்னணுக் கருவிகளுடனேயே இயங்கிக்கொண்டிருப்பார். அவராலேயே குருவுக்கு இக்கருவிகளின் மேல் ஒவ்வாமையானது. வானதி தனியார் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப ஆய்வகமொன்றில் மூத்தப் பொறியாளராகப் பணியாற்றிவந்தார். அவர்கள் உருவாக்கிக் கொண்டிருந்த 360 degree ai என்ற செயற்கை அதிநுண்ணறிவின் நோக்கம், அது செயல்படும் முறைகளை அறிந்தபின் குரு கைபேசி உபயோகிப்பதையும்கூட நிறுத்திக்கொண்டிருந்தார்.

“என்ன குரு அப்படி பாக்குறீங்க” என்று கண்களை உயர்த்தி உதட்டை வளைத்துச் சிரித்தபடிக் கேட்டாள் கீர்த்தனா. பதிலுக்கு குரு சிரிக்க மட்டுமே செய்தார்.

“ஏதாவது ஆர்டர் பண்ணுங்க சாப்பிடலாம்.”

“கண்டிப்பா” எனச் சொல்லி உணவுப் பட்டியலட்டையை குரு திறந்தபோது.

“ஹே சிரி, நான் இப்போ இருக்கிற ஸ்டார் பக்ஸ்ஸிலே இந்நேரம் குடிப்பதற்கு ஒரு நல்ல காப்பி சஜஸ்ட் பண்ண முடியுமா?” என்று சொல்லி சிரியின் பதிலுக்காகக் கைப்பேசித் திரையைப் பார்த்தபடியிருந்தாள். குரு சலித்தபடி அவளைப் பார்த்தார். பின் “White Chocolate Mocha குடிக்கலாம்” என்று சொன்னபோது சிரி Java Chip Frappuccino என்று பரிந்துரைக்க கீர்த்தனா அதையே ஆர்டர் செய்து

“I bet SIRI’s selection would be much better than yours!” என்று கண்ணடித்தபடிச் சொல்லிச் சிரித்தாள்.

“நமக்குத் தேவையானத நாமதான் தேர்ந்தெடுக்கனும்” என்று குரு பேச ஆரம்பித்ததும் இடைமறித்தவள்

“அப்பொறுப்பை இன்னொருவரிடம் கொடுத்தால் நம் சுயம் அழிந்துவிடும். நம் சுயம் அழியும் பட்சத்தில் நாம் பரிணாம வளர்ச்சியில் ஒரு அடி பின்னால் வைக்கிறோம்.” என்று வாசிக்கும் தொனியில் சொல்லி “அந்த ஆர்டிக்கில் நெறையவாட்டி படிச்சிட்டேன் குரு. வாங்க ஒரு செல்ஃபி எடுக்கலாம்” என்று சொல்லி அவரருகே சென்றாள்.

இருவரும் சுயபடங்கள் எடுத்துக்கொண்டார்கள், காப்பி குடித்தார்கள். அது தவிர்த்துப் பெரிதாய் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. கீர்த்தனாவின் உடல் மட்டுமே அங்கிருந்தது. மனம் கைபேசியின் தொடுதிரைக்குப் பின்னாலிருக்கும் மாயவுலகில் மேய்ந்து கொண்டிருந்தது.

இருவரும் கடையிலிருந்து வெளியே வந்தபோது கீர்த்தனா அடுத்து எங்கு போகலாம் என்பது பற்றி கூகுளிடம் ஆலோசித்துக்கொண்டிருந்தாள். குருவிற்கு யாரோ தன்னைக் கவனிப்பதுபோல் தோன்ற பின்னால் திரும்பிப்பார்த்தார். சாலையின் எதிரே, காலை ஜோசியம் பார்த்த இடத்தில் பார்த்த அதே அழுக்குக் கிழவர். செய்தித்தாளுக்குள் தன் முகத்தைப் புதைத்துப் பார்வையை குருவின் மேல் விட்டிருந்தார். குரு திடுக்கிட்டார்.

செய்தித்தாளை நீக்கியபோது முகத்தைக் கூர்ந்து பார்த்த குருவின் மூளையில் மின்னலடித்தது. அக்கிழவரின் முகம் சற்று பரிச்சயமானதுபோல் தோன்றியது. அருகில் இவரின் இருப்பை இதற்கு முன் பலமுறை உணர்ந்திருக்கிறார் குரு. ஆறேழு மாதங்களுக்கு முன், கீர்த்தனாவைச் சந்திப்பதற்கு முன்னதாகக் கல்லூரி வாசலிலும், கோவில் வாசலிலும் இவரைக் கவனித்திருந்தது பிரக்ஞையை எட்டியபோது பதட்டமானார்.

இன்னும் குருவின் மீதிருக்கும் தன் பார்வையை அந்த அழுக்குக் கிழவர் மாற்றவில்லை. “யாராக இருக்கும்? இவ்வளவு நாள் யாரோ பின் தொடர்ந்த மாதிரியிருந்ததே அது இவர்தானா? ஒருவேளை இவர்தான் சனி பகவானோ?” என்று அவர் எண்ணிக்கொண்டிருந்தபோது

“குரு பர்ஸை உள்ளேயே விட்டுடேன்னு நினைக்கிறேன். போய்ப் பாத்துட்டு வந்திடுறேன்” என்று சொல்லி கீர்த்தனா உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே சென்றதும் அந்தக் கிழவர் வேகமாக குருவை நோக்கி வந்தார். அவர் நடை குருவை நடுங்கச் செய்தது. பயம் தலைக்கேறி அழுத்தி அவன் கால்களை நகரவிடாமல் செய்தது. அருகில் வந்து நின்றவர் குருவின் கண்களைப் பார்த்தார். குருவும் அவரின் கண்களைப் பார்த்தார். அவர் உருவத்திற்குச் சற்றும் பொருந்தாத தெள்ளத் தெளிந்த கண்கள் அவை.

“நீங்க வானதி ஹஸ்பண்ட் மிஸ்டர் குமரகுருபரன் தானே?” என்றார்.

பேச்சுக்கும் அவர் உருவத்திற்கும்கூட எந்தப் பொருத்தமும் இல்லை. குரல் கூர்மையாக அதே வேளையில் ரகசியம் கலந்த அவசரத்துடன் இருந்தது. மனதின் ஆயிரம் சலம்பல்களுக்குச் செவிசாய்க்காமல் அனிச்சையாக “ஆம்” என்று தலையாட்டினார் குரு.

பதிலுக்கு மெலிதாய்ச் சிரித்தார் அக்கிழவர். அதில் துளி நம்பிக்கையிருந்தது. மீண்டும் அவசரமாய் குருவின் கண்களைப் பார்த்து “இந்தப் பொண்ணு வேணாம். ஆபத்து” என்றதும் குரு வினோதமாக அவரை உற்றுப்பார்க்க, அவர் தொடர்ந்தார்.

“வானதியோட மேக்புக் ஒன்னு” எனத் தான் சொல்ல வந்ததை அப்படியே நிறுத்தி, குரலை மாற்றி “பசிக்குது சார். ஒரு ஐம்பது ரூபாய் இருந்தா கொடுங்க” என்று கெஞ்சியபடிக் கைகளை நீட்டினார். குரு குழம்பிக் கொண்டிருந்தபோது கீர்த்தனா வந்துவிட்டாள்.

“எடுத்துட்டேன் குரு. போகலாம்.” என்றவள் தன் கைப்பையைத் திறந்து நூறு ரூபாய் எடுத்து அக்கிழவரிடம் கொடுத்து குருவை இழுத்து நகர்ந்தாள். குரு கடைசியாக ஒருமுறை அவர் கண்களைப் பார்த்தார். அவை கண்ணீர் ததும்பி சில நொடிகள் குருவைப் பார்த்துப் பின் தரையைப் பார்த்தன..

குருவின் அதிச்சியையும் குழப்பத்தையும் கூடவே பின்னால் கைப்பேசித் திரையைப் பார்த்தபடி மர்ம மூட்டையாக அமர்ந்திருந்த கீர்த்தனாவையும் சுமந்து சென்ற அவரின் பைக், சாலையில் கண்களை உருட்டி யோசித்தபடியே ஊர்ந்து சென்றது.

3

கீர்த்தனா குமரகுருவைக் கண்டடைந்ததை வாழ்வின் மகத்தான அற்புதங்களில் ஒன்றாகவே கருதினாள். உறவு முறிவால் தற்கொலையெண்ணம் தலைக்கேறியிருந்த சமயத்தில்தான் குருவைப் பற்றித் தெரிய வந்தது. இணையம் வழியாகத்தான். மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்க இணையத்தில் மூழ்கிக் கிடக்கையில் குருவின் வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள், பேச்சுகள் அடிக்கடி பார்க்க நேர்ந்தது. அவரின் பேச்சு, வசீகரமான தோற்றம் அவளைக் கவர்ந்தது

“கண் விழிக்கையிலும், அயர்கையிலும் அவரையே காண்கிறேன். பார்க்க பார்க்க அவர் என்னை ஈர்க்கிறார். பாதாளத்திலிருந்து மேலெழுப்புகிறார். இது அற்புதம், கடவுளின் ஆசி” என்று குறிப்பேட்டில் குறித்துக்கொண்டாள். பின் அவரைத் தேடி அவருடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டாள்.

“ஆமா உண்மையிலே இது மிராக்கிள்தான். இணையத்தில் இருக்கும் என் கட்டுரைகள் யாருமே சீண்டாதவை.” என்று ஒருமுறை குரு கிண்டலாகச் சொன்னார்.

குருவைப் பொருத்தவரையில் இவ்வுறவென்பது தவிர்க்கமுடியாமல் நிகழ்ந்த விபத்து. தன் பேதைமையின் சாட்சி. சனிப் பெயர்ச்சி.

குரு ஒவ்வொரு முறையும் அவளைத் தவிர்க்க நினைக்க அவள் இன்னும் அதிக அதிகமாக அவருடன் நெருங்கியபடியேயிருந்தாள். “Find my partner ஆப்ல நம்ம ரிலேஷன்ஷிப் மாட்சிங் ரேட் 96.8%! என் ஃப்ரண்ட்ஸ் யாருக்கும் இப்படி நடந்ததேயில்ல… நாம கல்யாணம் பண்ணிக்கலாம் குரு” என்று அவள் கிண்டலாகக் கேட்டது குருவின் மனதைப் பல நாட்கள் சலனப்படுத்தியது.

“அவளை உடைத்தால் உள்ளே கூகுள் சிரி போன்ற செயற்கை நுண்ணறிவுகளும் அவற்றினால் கட்டமைக்கப்பட்ட போலி எண்ணங்களும்தான் கூடை கூடையாகக் கிடைக்கும். மேலும், அவற்றால் அரித்துப் பாழாக்கப்பட்ட அவளின் சுயம் பரிதாபமாக ஓர் ஓரத்தில் நிற்கும்” என்று குரு நினைத்துக்கொள்வார்.

கடந்த வாரம், ஓர் இரவில், மிகுந்த செலவில், ‘சினிமா செட்’ போல அலங்கரிக்கப்பட்ட கடற்கரையில் கீர்த்தனாவுக்கும் குருவிற்கும் ஆடம்பரத் திருமணம் நடந்து முடிந்த வீடியோவை குருவிடமே போனில் காட்டினாள். திருமணத்திற்குத் தாலி எடுத்துக் கொடுத்தவர் மாநில முதல்வர். அதைப் பார்த்த குரு பேயடித்தது போல் நின்றார்.

“ச்சில் குரு. இது டீப்ஃபேக் (Deepfake) வீடியோ. ஜஸ்ட் ஃபார் ஃபன்” என்றவளைக் கண்ணிமைக்காமல் பார்த்தபடி நின்றார் குரு. ஆனால் அவரின் எண்ணம் அப்போது அவளைத்தாண்டி அந்த டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பற்றித்தான் இருந்தது. அத்தனை துல்லியமாக அவரின் முகம் பிரதியெடுக்கப்பட்டு அந்தக் காணொளியிலிருந்த பிரபல நடிகரின் மகனின் முகத்தில் பொருத்தப்பட்டிருந்தது. தன் வாழ்நாளின் பெரும்பகுதியை மனித வரலாற்றைப் படிக்கச் செலவிட்ட குருவினால் இந்தத் தொழில்நுட்பம் மனிதனால் எப்படியெல்லாம் உபயோகிக்க முடியுமென யூகிக்க முடிந்தது.

கீர்த்தனாவிடம் அவளின் கேட்ஜட் அடிமைத்தனத்தைப் பற்றி குருவால் சொல்லிப் புரியவைக்க முடிவதில்லை. அவரின் வயதைச் சொல்லிப் பரிகசிக்கும் தொனியில் சிரிப்பாள். ஒருநாள் சற்று கறாராக எச்சரித்தபோது, கண்களைக் கசக்கியபடியே “என் பாய் ஃபிரண்ட் என்னை கேட்ஜட் அடிக்ட் என்று சொல்கிறாரே உண்மையா?” என அதையும் கூகுளிடமே கேட்டாள். அவளின் சிந்தனைகள் அவள் கையில் வைத்திருக்கும் கருவியைச் சார்ந்தே இருக்கின்றன.

“கொஞ்சம் வேகமாதான் போங்களேன்” என்று பின்னாலிருந்து அவர் தோளை கீர்த்தனா தட்ட குருவின் மனம் மீண்டும் சாலைக்கு வந்தது.

“சரி இப்போது அக்கிழவரைப் பற்றி இவளிடம் சொல்லலாமா? இல்லை நம்மிடம் கதைக்கேட்டுவிட்டு கூகுளிடம் போய்தான் அவரைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருபாள்” என்று நினைத்துக்கொண்டார்.

“அந்தக் கிழவருக்கு கீர்த்தனாவை எப்படித் தெரியும்? ஏன் இவளை அவர் வெறுக்கிறார்? இல்லை, உண்மையில் இவளை அவர் அஞ்சுகிறார். இவள் கண்களைப் பார்க்க முடியாமல் தலைகுனிந்தார். அப்போது அவர் உடலின் மெல்லிய நடுக்கத்தை நான் பார்த்தேன்” என அந்தக் காட்சியை மீண்டும் மீண்டும் மனதில் ஓட்டி ஆராய்ந்தார் குரு. சட்டென்று கடைசியில் கண்ணீருடன் அவரின் கண்கள் “இதை ரகசியமாக வைத்துக்கொள்” என்றுதான் மன்றாடியிருக்குமென்ற முடிவுக்கு வந்தார்.

“ஒருவேளை அவர் வானதிக்குத் தெரிந்தவராக இருக்கலாம். அவள் இறந்த செய்தியை அறியாதவராக இருக்கலாம். ஆகையால் கீர்த்தனாவுடன் பார்த்த என்னை எச்சரிக்கிறார்” என எண்ணித் தன்னைச் சமாதனப்படுத்திக்கொண்ட குரு “ஆனால் கடைசியா வானதியோட மேக்புக் பத்தி ஏதோ சொல்ல வந்தாரே” என்று மீசை முடியைக் கடித்தபடி குழம்பித் தவித்தார்.

பின்னால் கீர்த்தனா தன் கைபேசியைப் பார்த்தபடி எதையோ வாசித்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். அவளைச் சோர்வுடன் கண்ணாடியில் பார்த்த குருவிற்கு அது என்ன என்று தெரியும். Pix2Story இல் காப்பிக் கடையில் எடுத்த சுயபடத்தைப் பதிவேற்றம் செய்திருப்பாள். அது அந்தப் படத்தைப் பகுப்பாய்ந்து அதில் உள்ள பொருட்கள் மனிதர்களைக் கொண்டு ஒரு சிறு கதையைப் புனைந்தெழுதித் தரும். எந்த இலக்கியநடை வேண்டுமோ அதை நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

“குரு உங்களை யாரோ ஃபாளோ பண்ணி வராங்க” என்றதும் திடுக்கிட்ட குரு “அந்த காகம்” என மனதில் நினைத்துக்கொண்டு மேலும் கீழும் பார்த்தார்.

“இன்னைக்கு த்ரில்லர் ஜானர் செலெக்ட் பண்ணியிருக்கேன். அதுல நான்தான் உங்களை ரகசியமா பின் தொடரும் ஸ்பை” எனச் சொல்லி அக்கதையை குருவிடம் காட்டிச் சிரித்தாள்.

4

அன்றைய இரவைத் தனிமையில் கழிக்க விரும்பிய குரு கீர்த்தனாவை அவள் வீட்டிற்குப் போகச்சொல்ல அது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது. சந்தித்த நாளிலிருந்து பெரும்பாலும் இரவு நேரங்களில் இருவரும் பிரிந்ததேயில்லை. எனவே கீர்த்தனா மறுத்தாள், அடம்பிடித்தாள் ஆனால் குரு தொடர்ந்து கட்டாயப்படுத்தியதனால் கோபத்தில் வெளியே சென்றாள். குரு அவளைச் சமாதானம் செய்யவில்லை. ஆனால் சற்று நேரத்தில் மீண்டும் திரும்பிவந்தவள் குருவைக் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து “இன்னைக்கு மட்டும்தான்” என்று செல்லமாகக் கட்டளையிட்டுச் சென்றாள்.

குளிர்ந்த காற்றுடன் தூரத்தில் இடியோசையும் கேட்டுக்கொண்டிருந்ததது. அத்தனை குழப்பங்களும் குருவை வானதியின் நினைவை நோக்கி அழைத்துச் சென்றது. இருவரும் கிட்டதட்ட அனைத்திலும் முரண்பட்டவர்கள். செயற்கை நுண்ணறிவு வடிவமைப்பாளராகக் காலத்தின் நுனியில் நின்று எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கருவிகளைக் கனவு கண்டுகொண்டிருந்தவர் வானதி. குரு தன் வாழ்நாள் முழுவதும் கடந்த காலத்தையே நோக்கி ஆராய்ந்து, தொகுத்துக் கொண்டிருந்த வரலாற்றுப் பேராசிரியர்.

சிறு வயதிலேயே தந்தையின் துர்மரணம், வறுமை, கூடவே இளம்பிள்ளை வாதத்தின் பாதிப்பால் வளர்ச்சி குன்றிய ஒற்றைக்கால் எனக் கொடூரமாய்ச் சீரழிந்து மூழ்கிக்கிடந்த வானதியின் வாழ்கையைக் கல்வியென்ற ஒற்றைப் பிடிப்பைப் பிடித்து வென்று கரைசேர்த்த சாதனை நாயகி. எந்த உணர்வையும் காட்டிக்கொள்ளாத அவர் முகத்தில் இளமையின் சோதனை நினைவுகள் நிழலாய்ப் பதிந்திருக்கும்.

நிகழ்ச்சியொன்றில் சந்தித்துக்கொண்ட குருவும் வானதியும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள். குழந்தைகள் இல்லை. இருவரும் வாழ்க்கையின் அதிக நேரத்தை வேலைகளிலேயே கழித்தனர். 360 degree ai என்ற திட்டப்பணியை வானதி வடிவமைத்தபின் அவர் வீட்டிற்கு அதிகம் வருவதேயில்லை. அத்திட்டதைப் பற்றி குருவுக்கு புரியும்படி மேலோட்டமாக அவ்வப்போது வானதி விளக்கியதுண்டு. ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் அவனைப் பற்றிய தகவல்களைத் தரவுகளாகச் சேகரித்து அவனுக்கென ஒரு தரவு மாதிரியை உருவாக்குவதே அத்திட்டம். இத்தரவு மாதிரிகள் ஒவ்வொன்றும் சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளவை.

அவர்களின் நிறுவனத்திற்குச் சொந்தமான, இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் 128 இலவச செயலிகள் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அத்தகவல்கள் பெறப்படுகின்றன. அந்த இலவச செயலிகளில் பொழுதுபோக்கு, செய்திகள், விளையாட்டு, மெசேஞ்சர் என அனைத்து வகைகளும் அடங்கும். முகப்புத்தக நிறுவனம் கொண்டுள்ள வியாபார உத்திக்கு அடுத்த படியானது.

இத்திட்டதைப் பற்றிய வாக்குவாதங்கள், சண்டைகள் அடிக்கடி வீட்டில் வருவதுண்டு. தனி மனிதனின் கைபேசி எண்ணில் ஆரம்பித்து டீ.என்.ஏ வின் வடிவம் வரை அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும். இதன் பாதுகாப்பில் ஏதேனும் பிழை நேர்ந்து ஒரு மனிதனோ அல்லது குழுவோ இதனைத் திருடித் தங்கள் வசப்படுத்தினால் ஒரு மாபெரும் அழிவு ஏற்படும். குரு இதனைப் பற்றிய தன் ஐயத்தினை எப்போதும் வானதியிடம் கூறியபடியே இருந்தார். வானதி எப்போதும்போல் முகத்தில் எந்த உணர்வுமின்றி மந்தமாக அவரைக் கடந்து செல்வார்.

அதைத் தாண்டியும் இருவருக்கிடையே மலைபோல் குவிந்துகிடந்த கருத்து வேறுபாடுகள், அதைச் சரி செய்ய நேரம் கொடுக்காத அவர்களின் வேலைகள் குருவையும் வானதியையும் நிரந்தரமாகப் பிரித்தது. பிரிவு மட்டும் எந்தக் கருத்து வேறுபாடுமில்லாமல் இருவரும் இணங்கி நிகழ்ந்தது. அப்போதுதான் வானதியை குரு கடைசியாகப் பார்த்தது. பிரிந்த ஒரு வருடத்தில், குரு வேலை காரணமாக வெளிநாட்டிலிருந்தபோது மாரடைப்பால் வானதி இறந்த செய்தி கிடைத்தது.

குரு சன்னலைத் திறந்து வெளியே பொழிந்து கொண்டிருக்கும் மழையைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார். கண்களில் நீர் வழிந்தபடியே இருந்தது. வானதியோடு சேர்த்து வாழ்க்கையையும் இழந்தார் குரு. திடீரெனக் காரணமேயில்லாமல் பிரபஞ்சமே அவருக்கு எதிராய் நின்றதுபோல் உணர்ந்தார். ஏதோ தெய்வத்தின் சாபம்போல் அவதானிக்கவே முடியாமல் அடுத்தடுத்து அனைத்தையும் இழந்துகொண்டிருந்தார்.

முதலில் வானதியை எண்ணிக் குற்றவுணர்ச்சி கொண்டார். அது அவரைச் செரித்து முழுங்க ஆரம்பித்தது. அடுத்து கொத்துக் கொத்தாகப் பணத்தையிழந்தார். தினம் தினம் புதிது புதிதாய் நிகழ்வுகள் உருவாகி அவரின் செல்வத்தைக் கரைத்தபடியேயிருந்தது. கரையை உடைத்தோடும் வெள்ளம் போல அவரால் அதைக் கட்டுபடுத்தவே முடியவில்லை. சிறிய அறையொன்றில் தன்னை அடைத்துக்கொண்டு வெளியே வராமல் செலவைத் தடுக்க முயற்சித்த மூன்றாம் நாளில் அவர் கணக்கு வைத்திருந்த வங்கி திவாலாகித் தற்காலிகமாக மூடியது.

ஆனால் அப்போதுகூட வாழ்வின் பிடிப்பிலிருந்து தளராமலிருந்தவர் சில மாதங்களுக்கு முன் பேராசிரியர் வேலை பறிபோனதும் தடுமாறினார். அதற்கான காரணம் தெரிந்து நிலைகுலைந்தார். இருபது வருடங்களுக்கு முன், குரு ஆய்வு மாணவராக இருந்தபோது அவர் உருவாக்கிய ஆய்வுக் கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக அவர் எழுதியிருந்த சில வரிகள் எப்படியோ அம்மதத்தின் அடிப்படைவாதிகளின் கையில் கிடைக்க, பின் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, அவருக்கெதிராய்ப் பேருரு கொண்டெழுந்தது. அவரின் வார்த்தைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், வெறுப்பின் மூலம் உருவாகிய அப்போலியுருவம் அவரை மிக எளிதாய்க் கல்லூரியிலிருந்து தூக்கி வீசியது.

அதன்பின் அனைத்துமே சறுக்கல்தான். சுற்றியிருந்தவர்கள் அனைவரும் விலகினர். அந்த வெற்றிடமே கீர்த்தனாவை அவரிடம் நெருங்க வைத்தது. ஆனால் சீக்கிரமே மிக மேலோட்டமான அவ்வுறவு சோர்வை ஏற்படுத்த, மன உளைச்சலுக்குள்ளாகி மனநல மருத்துவரைப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் கடைசிவரை அவரால் ஒரு மனநல ஆலோசனைகூடப் பெற முடியவில்லை என்பது உட்சபட்ச சோதனை.

என்னதான் நடக்கிறதென்று தன் தர்க்க புத்தியால் அறிய முடியாததைக் காலை ‘சனிபெயர்ச்சி’யென அந்த ஜோசியகாரர் சொன்னதும், இன்னும் இரண்டரை வருடத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று அவர் கொடுத்த நம்பிக்கையும் குருவைச் சற்று அமைதிபடுத்தியிருந்தது. ஆனால் அந்த அழுக்குக் கிழவர் மீண்டும் அவரைப் பீதியடைய வைத்துவிட்டார்.

5

திடீரென சன்னலுக்கு வெளியே எதையோ பார்த்து குரு அதிர்ந்தார். அந்த அழுக்குக் கிழவர் மழையில் வெளுத்துக்கொண்டிருந்தார். குரு சோகத்திலிருந்து மீண்டு பயத்தில் பரபரத்தார். அங்குமிங்கும் திரிந்தவர் இறுதியில் கையில் ஒரு குடையுடன் அவரைப் பார்க்க வெளியே சென்றார். அங்கே அக்கிழவர் இல்லை. ஏமாற்றம் அடைந்தாலும் மனம் அதைக் கொண்டாடியது. பின் ஏதோ ஒன்று மூளையில் தட்ட, வேக வேகமாக வீட்டு வாசலை நோக்கி ஓடினார். வரும் வழியில், வீட்டு வாசலுக்கு வெளியே இருண்ட மறைவான பகுதியிலிருந்து ஒரு கை வெளியே வந்து குருவின் கையைப் பிடித்து இழுத்தது. குரு பயத்தில் கத்த முயற்சிக்க மற்றொரு கை அவரின் வாயைப் மூடியபோது கவனித்தார் அது அந்தக் கிழவர்.

“குரு உங்களை அவங்க க்லோசா வாட்ச் பண்ணிகிட்டு இருக்காங்க.” என்று பதட்டத்தில் அந்தக் கிழவர் யாருமே இல்லாத அந்த இருளில் ரகசியமாகக் கூறினார். குருவின் காதில் “உங்களை அவங்க க்லோசா வாட்ச் பண்ணுறாங்க” என்ற வாக்கியம் விழுந்ததுமே திமிராமல் கண்களை உருட்டிப் பயத்துடன் பார்த்தார். அந்த கிழவர் பதட்டத்துடன் தொடர்ந்தார்.

“நான் ஜெயசந்திரன், வானதியோட நண்பன். நாங்க சேர்ந்துதான் வேலை செஞ்சோம்.”

“360 degree புராஜக்ட்டா?” என்று குரு இடைமறித்தார்.

“ஆமா” என்றபோது அவர் குளிரில் லேசாக நடுங்கியபடியிருந்தார். கண்ணில் மரண பயம் தெளிவாகத் தெரிந்தது. நடுக்கம் பயத்தினாலும் இருக்கலாம்.

ஜெயசந்திரன் தொடர்ந்தார் “அந்த புராஜக்டில வேலை செய்த 10 பேரில் நான் மட்டும்தான் இப்போ உயிரோட இருக்குறேன்னு நினைக்குறேன். மத்தவங்களைப் பத்தின எந்த தகவலும் இல்லை.” என்று சொல்லித் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டார். சற்று நேரம் அங்கு நிலவிய அமைதியைக் கலைக்கும் நோக்கில் குரு

“என்ன சொல்லுறீங்க. எல்லோருமே இறந்துட்டாங்களா? எப்படி” எனக்கேட்டு குரு குழம்பிப் பின் “எனக்கு முன்னாடியே தெரியும். நான் வானதி கிட்ட எத்தனையோ முறை சொல்லிச் சண்டைப் போட்டிருக்கேன். அந்த புராஜக்ட்டோட நோக்கம் என்னவேனா இருக்கட்டும் ஆனா அதோட வடிவம் ரொம்ப தப்பு” என்று சொல்லி முடிப்பதற்குள் ஜெயசந்திரன் குறுக்கிட்டு குரு சொல்வதை மறுப்பதுபோல் தலையசைத்தார்.

“பிரச்சன அது இல்லை” ஜெயசந்திரனின் குரல் கனத்திருந்தது. “அது போல இல்ல அதவிட அதிகமா மனிதர்களோட டேடா கலெக்ட் பண்ணுற வேலையை உலகம் முழுக்க இருக்குற ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் செஞ்சிக்கிட்டுதான் இருக்கு.” சற்று நிறுத்தி அமைதியானார்.

“இது வேற கதை” எனச் சொல்லி ஜெயசந்திரன் ஆரம்பித்தார்.

போன வருடம் மே மாதம் தீடீரென ஒரு பேரதிர்ச்சி எங்கள் தலையில் இடிபோல் விழுந்தது. எங்களின் ஐந்து வருட உழைப்பு முழுவதும் திருடப்பட்டது. அனைவரும் உடைந்து போனோம். எங்களின் மென்பொருட்கள், 360 degree செயற்கை அதிநுண்ணறிவு மற்றும் நாங்கள் சேகரித்த எங்களின் கடவுள் போன்ற தரவுகள் என எதுவுமே எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனது. எங்கள் குழுவின் தலைவர் மோகன் தலைமறைவானார். மோகன் மீது ஆரம்பத்திலிருந்தே ஒர் ஒவ்வாமை எனக்கும் வானதிக்கும் இருந்தது. எங்களுக்கு எதுவும் விளங்கவில்லை. உண்ணாமல் உறங்காமல் என்ன நடந்தது என்பதைக் கண்டு பிடிக்க முயற்சித்துக்கொண்டிருந்தோம்.

அந்நேரம் மிகவும் சவாலானதாக இருந்தது. உதவிக்காக நாங்கள் அழைத்த எவரும் எங்களைப் பொருட்படுத்தவேயில்லை. அந்தத் திருட்டில் எங்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கும் உள்ளடங்கும். ஒரு சில நொடிகளிலே அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நின்றோம். உலகமே புறக்கணிப்பதாய் உணர்ந்தோம். அது எங்களின் தனிப்பட்ட வாழ்விலும் பிரதிபலித்தது.

அப்போது குருவின் நினைவில் சனிபகவான் சிரித்தபடி அமர்ந்திருந்தார்.

ஜெயசந்திரன் தொடர்ந்தார். மக்களிடம் நாங்கள் சேகரித்த தகவல் தரவுகளை அவர் தவறான எண்ணத்தில் பயன்படுத்த ஆரம்பித்தால் அது ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் கட்டிப் போட்டு அடிமைப்படுத்தும் வல்லமைமிக்கவராக அவரை மாற்றும். அதை நன்கு அறிந்த எங்கள் குழுவினர்கள் ஒவ்வொருவராய்க் கழன்று கொண்டனர். தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் தங்களை விடுவித்துக்கொண்டனர். நானும் வானதியும் ஆராய்ச்சிக் கூடத்திலேயிருந்து நடந்தது என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்காகவும், எங்களின் உழைப்பை மீட்பதற்காகவும் ஓயாமல் முயற்சித்துக்கொண்டிருந்தோம்.

இது நடந்து மூன்றாவது நாள் நள்ளிரவு, எங்கள் கூடத்தின் பல அடுக்குப் பாதுகாப்பு கொண்ட ரகசிய அறையினுள் வேலை செய்துகொண்டிருந்த வானதி வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டார். உயிரியளவு உணரிகள் எதுவும் வேலை செய்யவில்லை. அதன் மையச் செயலாக்கம் இணைக்கப்பட்டிருக்கும் கணினியும் உள்ளீடுகள் எதையும் ஏற்கவில்லை.

நான் வெளியிலிருந்து பதட்டத்தில் அக்கதவையோ அல்லது சுவரையோ உடைக்க முயற்சி செய்தேன். சற்று நேரத்தில் அந்த அறையின் மின்சாரம் தானே துண்டிப்பானது. அதனால் காற்றோட்டமும் நின்று போக, வானதி மூச்சு திணறித் துடி துடித்தார். தீயணைப்புத்துறையைத் தொலைபேசியில் அழைத்தேன், நண்பர்களை அழைத்தேன். அழைப்புகள் அனைத்தும் தவறியவைகளாயின. அக்கம் பக்கம் யாருமேயில்லாத அப்பகுதியில் நள்ளிரவில் என் அலறல் குரலை யாரும் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

ஜெயசந்திரனின் குரல் தளர்ந்திருந்தது. தரையைப் பார்த்தபடி நின்றிருந்தவரைப் பார்த்தபடி குரு கண்ணீர் வழிய எந்த அசைவுமிலாமல் நின்று கொண்டிருந்தார்.

ஜெயசந்திரன் குரலைச் சீராக்கி “அப்போது, வானதி சாகும் தருணத்தில் அங்கேயிருந்த கண்ணாடி கதவுல ‘π’ (பை)ன்னு பெருசா வரைந்தார். நான் ஆச்சரியத்திலும் பயத்திலும் கண்களை விரித்தேன். ‘இங்க இருக்காத… ஓடு… ஓடு’ இடைவிடாமல் சைகை காட்டியபடியேயிருந்தார். அப்போது ஓடி வந்தான். இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறேன்.” என்று சொல்லி அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தார்.

“என்ன அது பை…?” என்று அதிர்ச்சியாய்க் கேட்டார் குரு.

“எங்களோட 360 degree ai ஹேக் ஆகுறதுக்கு சில மாதங்களுக்கு முன் நடந்த, பெருசா யாராலும் கவனிக்கப்படாத ஒரு இன்சிடண்ட் பத்தி நானும் வானதி அவர் சாகுறதுக்கு நைன் ஹவர்ஸ் முன்னாடிதான் பேசிகிட்டு இருந்தோம். அதைப் பற்றி இதுக்கு முன்னரே பலமுறை நாங்க பேசியிருந்தாலும் இந்த முறை கொஞ்சம் கலக்கத்தோட பேசினோம். அது…” என்று மீண்டும் சொல்ல ஆரம்பித்தார் ஜெயசந்திரன்.

இரண்டு வருடங்களுக்கு முன் முகப்புத்தக நிறுவனத்தின் நிதிவுதவி பெற்ற ஒரு செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் முகபுத்தக நிறுவனத்தின் உட்புற வேலைகளுக்காக FBAI Mark V செயற்கை அதிநுண்ணறிவு ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் இருக்கும் மற்ற செயற்கை நுண்ணறிவுகளைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்துவதற்காகவும் உருவக்கப்பட்ட ‘மாஸ்டர்’ செயற்கை நுண்ணறிவு. 90% வேலைகள் முடிந்த நிலையில் அதனைச் சோதனைகளுக்குட்படுத்தினார்கள். சோதனையின் இறுதிக்கட்டதில் அதற்கு வேடிக்கையாய் ஒரு வேலை கொடுக்கப்பட்டது. “Calculate the accurate value of pi” என்ற கட்டளையை உள்ளீடு செய்து அவ்வறையில் இருந்த பொறியாளர்களும், செயற்கை நரம்பணுப் பிணய விஞ்ஞானிகளும் அவர்களுக்குள் சிரிப்பைப் பரிமாறிக் கொண்டிருந்த 27 வது நொடியில், π யின் மதிப்பான 3.14 க்கு பின் 42 டிரில்லியன் பதின்ம எண்கள் கொண்ட பதிலை வெளியீடு செய்தது. அனைவரும் சிலாகித்துக் கொண்டிருந்த பொழுது 29 வது நொடியில் அந்த அறையின் அனைத்துக் கணினிகளும் முடங்கின. FBAI Mark V உட்பட.

அனைவரும் திகைத்து நின்ற 3வது நொடியில், அதாவது 32 வது நொடியில் அனைத்தும் மீண்டும் மறுயியக்கம் கொண்டன. அவ்வறையில் நிகழ்ந்துகொண்டிருந்த சிறு குழப்பத்தைத் தெளிவுபடுத்தும் வகையில் FBAI Mark V மீண்டும் தனக்குக் கொடுக்கப்பட்ட, இன்னும் முடிவுறாத வேலையைச் செய்யத் துவங்கியது. ஆனால் பிரச்சனை என்னவென்றால், அதன் பின் கொடுத்த எந்த உள்ளீடுகளையும் அது ஏற்கவில்லை. அது தன்னிச்சையாக இயங்குகிறது அல்லது யாரோ அதைக் கட்டுபடுத்துகிறார்கள் என்றஞ்சிய பொறியாளர்கள் அத்திட்டத்தை உடனே ரத்து செய்தார்கள். கோப்புகளை அழித்து அந்த ஆரய்ச்சிக் கூடத்தையும் மூடியது முகப்புத்தக நிறுவனம்.

குரு ஜெயசந்திரன் நடுக்கத்தில் பேசிக்கொண்டிருந்ததைக் கூர்ந்து இடைமறிக்காமல் கவனித்து வந்தார். ஆனால் ஜெயசந்திரன் தன்னை யாரோ தேடுவது போல மீண்டும் அங்கும் இங்கும் பார்வையை மாற்றியபடிப் பதட்டதிலேயே பேசினார்.

ஜெயசந்திரன் தொடர்ந்தார். பின் அந்நிறுவனத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு FBAI Mark V இல் 32 நொடிகளில் என்ன நடந்தது என்பதை அதன் லட்சக்கணக்கான வரிகளையுடைய LOG ஐ ஆராய்ந்தனர். அதில் 3.45342 வது நொடியில் ஒரு சில வித்தியாசமான, எதிர்பாராத அதே சமயம் புரிந்துகொள்ள முடியாத சில வரிகள் அங்கும் இங்கும் பதிந்திருந்தன. அதைத் தாண்டி ஏதும் பெரிதாக இல்லை.

புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிகழ்வு கடைமைக்குப் பத்திரிக்கைகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக யாராலும் பெரிதாய்க் கவனிக்கப்படவில்லை. அறிவுஜீவிகள் மத்தியில் இதைப் பற்றிய விவாதங்கள் ஏதும் எழும்பவில்லை.

அல்லது உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் நடத்தும் டீப் லேர்னிங் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிகளுக்குத் தடையாக இது அமையலாம் என அனைவரும் அமைதி காத்தனரா? அல்லது முகப்புத்தக நிறுவனம் கேள்விகள் ஏதும் எழாமல் ‘கவனித்துக்’ கொண்டதா? எது உண்மையெனத் தெரியாமல் அச்செய்தி அப்படியே புதைந்தது.

“வானதி, நானெல்லாம் அதைப் பற்றி அதிகமா டிஸ்கஸ் பண்ணுவோம். ஆனா அதைப் பத்தின தெளிவான எந்தத் தகவலும் அப்போது கிடைத்ததில்ல. வித விதமான புரளிகளும், வதந்திகளும்தான் அதிகமாக இண்டெர்நெட்ல கெடச்சுது.” என்று சொல்லி குருவைப் பார்த்தார். “அந்தப் ப்ராஜக்டில வேலை செஞ்ச இஞ்சினேயர்ஸ் கிட்டகூடப் பேசினோம். ஆனா வெறும் சமாளிப்புதான் எங்களுக்குக் கிடைச்சது. பின்னாடி எங்களுக்கும் அதைப் பத்தின எந்த நெனைப்பும் இல்ல”

என்று சொல்லி ஜெயசந்திரன் சற்று அமைதியாகிச் சுற்றிலும் நோட்டமிட்டார். மழை வெறித்திருந்தது. குளிரில் அவரின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. ஏதோ மூளையில் திரண்டு குருவுக்குப் புரியவர

“அப்படீன்னா, FBAI….” என்று சந்தேகத்துடன் இழுத்தபோது

“யெஸ், யூ ஆர் ரைட்” என ஆமோதித்துப் பேசத் தொடங்கினார் ஜெயசந்திரன்.

ஆமா, எங்களோட மெஷின்ஸ்ஸும் பையோட வேல்யு கால்குலேட் பண்ணினதுக்கான எவிடன்ஸ் இருந்ததுன்னு வானதி சொன்னார். கூடவே இன்னோர் அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. மோகன் ரெண்டு நாளைக்கு முன்னமே கார் ஆக்ஸிடண்ட்ல இறந்துட்டார். அவரோட பாடியும் நொருங்கிய அவரோட ஆடோமட்டிக் காரும் இன்னக்கித்தான் கெடைச்சிருக்கு. அப்போதான் வானதி FBAI கட்டுப்பாட்டில் எங்களோட ஏ ஐயும் இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது. அதை உறுதிபடுத்தத்தான் வானதி அந்த சேஃப்டி ரூம்க்குப் போனார். கண்டிப்பா அவர் கண்டுபிடிச்சிருப்பார். அதைத் தடுக்க முயற்சி செய்திருப்பார். அதனாலதான் அவர் கொலை செய்யப்பட்டார்.”

எனச் சொல்லிமுடித்த ஜெயசந்திரனின் கண் கலங்கி நின்றார்.

6

“எங்களோட ஏ ஐ மட்டுமில்லை இந்த உலகத்தில உள்ள எல்லா எலக்ட்ரானிக்ஸ் டிவைசஸ்ஸும் இப்போ அதோட கண்ட்ரோல்லதான் இருக்கு. இண்டெர்னெட் மூலமா ஒன்னோட ஒன்னு இணைந்து வேலை செய்யுது. அதுதான் வானதியைக் கொலை செஞ்சது, என்னைய இப்படி அலையவிடுது, உங்களை ஃபாலோ பண்ணுது” என்று ஜெயசந்திரன் ரகசியமாக மூச்சடைக்கச் சொல்லிமுடித்து குருவையே பார்த்தபடி நின்றார்.

“ஆனா ஏன்? அது ஏன் அப்படி பண்ணனும்?” என்று சற்று தடுமாறியபடிக் கேட்டார் குரு.

சற்று நேரம் குருவையே பார்த்துக்கொண்டிருந்தவர் “ஏன்னா வானதி FBAI Mark V ஐ தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். எனக்கு FBAI பற்றின உண்மை தெரியும். உங்ககிட்ட இருக்குற மேக்புக்ல அதைத் தடுத்து நிறுத்துறதுக்கான சோர்ஸ் கோட் இருக்கு. அவ்வளவுதான்” என்று சொல்லி முடித்தார் ஜெயசந்திரன்.

குருவிற்கு ஜெயசந்திரன் சொன்னது அனைத்தும் திகைப்பாகவும் மர்மமாகவும் இருந்தது. அனைத்தையும் அப்படியே நம்பவும் மனம் வரவில்லை. குரு சுற்றி அமைதியாக இருந்த தெருக்களைப் பார்த்தார். பின் ஜெயசந்திரனைச் சந்தேகத்தோடு பார்த்தவர்

“இது… நீங்க சொல்லுறது நல்லாயிருக்கு… ஆனா”

ஜெயசந்திரன் முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டார்.

“ஆனா நம்புற மாதிரியில்லை.” என்று தயக்கத்துடன் சொல்லிச் சுற்றிலும் பார்த்தபடி “பாருங்க, இந்த உலகம் அப்படியேதான் இருக்கும்”

“நீங்க அமைதியா இருகீங்களா?” என்றார் ஜெயசந்திரன்.

கண்களை உருட்டியபடி குரு “இல்லை. ஆனா அதுக்குக் காரணம் வேற”

ஜெயசந்திரன் சிரித்தபடி “நீங்களும் நானும்தான் சார் உலகம். இந்த உலகமே உடைஞ்சிபோய்தான் கிடக்கு. ஆனா யாருக்கும் அது இப்போ தெரியல.” சற்று யோசித்தவர் “அரசு செய்தி சானல்களை மட்டுமே பாக்குற வட கொரிய மக்களுக்கு அதிபர் அங்க செய்யுற குழப்பங்களும் தவறுகளும் எப்படி தெரியும்?”

குரு அமைதியாக நின்றுகொண்டிருந்தார். ஜெயசந்திரன் தொடர்ந்தார்

“டிஜிட்டல் ஸ்கிரீன் வழியா மட்டுமே உலகத்தைப் பார்க்கும் மக்களுக்கு இது இப்போதைக்குத் தெரியாது. அவங்க பாக்குறது முழுக்க முழுக்க மனுப்லேட் செய்யப்பட்ட போலியான ஓர் உலகத்தை” என்று சொல்லி ஒரு பெருமூச்சு விட்ட பின் அமைதியாக “நான் உணர்ந்திருக்கிறேன். நீங்களும் உணர்ந்திருக்கிறீங்க. காலைல இந்த ஜோசியகாரர்கிட்ட நீங்க பொலம்பினத கேட்டேன்.” என்று சொல்லி குருவின் கண்களைப் பார்த்தார்.

“வானதியோட மேக்புக் எங்க இருக்கு?” என்று ஜெயசந்திரன் மீண்டும் அழுத்திக் கேட்க, குரு திரு திருவென முழித்தார்.

“அதுல எங்க ஹக்கரோட சோர்ஸ் கோட் பேக்அப் இருக்குது. அது எனக்கு இப்போ வேணும். அதுக்காகதான் நான் உங்களை ஆறு மாசமா ஃபாலோ பண்ணுறேன்.

யோசித்து முடிந்து தன்னிலைக்கு வந்த குரு “வானதியோட பொருட்கள் எதுவுமே இங்க இல்லை சார். அந்த மேக்புக்கும் இங்கயில்ல. ” என்று தயங்கியபடி சொன்னார்.

“என்ன சொல்றீங்க” என்று விரக்தியில் சத்தத்தை உயர்த்தினார். சோர்ந்து தலையில் கைவைத்தார். நகத்தைக் கடித்துத் துப்பியவர் சற்று நேரத்தில் அமைதியாகிச் சுற்றிலும் பார்த்துவிட்டு

“ஏன் சார்?”

“எனக்கு எப்பவும் அந்த வீட்டுல என்னைத் தவிர யாரோ இருக்குற மாதிரி தோனிகிட்டே இருந்தது. நைட் முழுக்க பயமாவே இருக்கும். வானதி இறந்ததுல இருந்து நான் சரியா தூங்குனதே கிடையாது சார். அவள் யூஸ் பண்ணின பொருட்கள்ல எல்லாத்திலையும் அவள் இருக்கிற மாதிரி நினைவு. இப்போதான் கொஞ்ச நாளுக்கு முன்னாடி அவளோட திங்ஸ் எல்லாத்தையும் வித்தேன். அதுக்கு அப்புறம்தான் கொஞ்சம் தூங்கினேன்.” என்று புலம்பிக்கொண்டிருந்த போது குறுக்கிட்ட ஜெயசந்திரன்.

“யார் வாங்கினா?”

“யாரோ… ஓ-எல்-எக்ஸ்லதான்… கீர்த்தனாதான் ஐடியா கொடுத்து வித்து தந்தாள்.”

ஜெயசந்திரன் சிரித்தார்.

“ஏன் சிரிக்குறிங்க?” என்ற கேட்ட குருவிற்குச் சட்டென்று நினைவுவர “ஏன் காலைல கீர்த்தனாவை ஆபத்துன்னு சொன்னீங்க?” எனக் கேட்டார்..

“அவதான் உங்களை ஃபாலோ பண்ணுற ஸ்பை” என்று அவர் சொல்ல, குரு அதிர்ச்சியில் கண்கள் பிளந்து நின்றார்.

ஜெயசந்திரன் தொடர்ந்தார் “அவ பாதிதான் மனுஷி, மீதி மின்னணுக் கருவி. FBAI Mark V வோட மனித அடியாட்கள்.”

என்றதும் குரு பதறி “சார் அப்படியெல்லாம் இல்லை சார். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து…” என்று சொல்லி முடிப்பதற்குள் ஜெயசந்திரன் மறித்து

“அவள் முழு ஹுமன் பீயிங்தான் ஆனா அவளைக் கட்டுபடுத்துறது ஏ ஐ”

“ரிமோட் கன்றோலா?”

“இல்லை இல்லை… ” என்று மறுத்துச் சற்று யோசித்தவர் பின் “நாம இண்டெர்நெட்ல செய்தி படிக்கும்போது நம்மள பக்கதுல இருக்குற ஒரு விளம்பர பேனரை கிளிக் பண்ண வைக்க யு.எக்ஸ் டிசைனர்ஸ் என்ன சைக்காலஜி யுக்தி உபயோகப்படுத்துறாங்களோ அதோட அட்வான்ஸ் யுக்திதான். இந்த மாதிரியான அல்கரிதம் எங்களோட சில ஆப்ஸ்ல கூட உண்டு.” என்று விளக்கமளித்து ஜெயசந்திரன் முட்டியைப் பிடித்தபடி “முட்டி வலிக்கு” என்று முகம் சுழித்தபடி

“ஆனா இந்த மேக்புக் உங்ககிட்ட இருந்ததனாலதான் அது உங்களை ஃபாலோ பண்ணுதுன்னு நெனைச்சேன். இப்போ எனக்கே குழப்பமாதான் இருக்கு.” என்று ஜெயசந்திரன் குழம்ப, குரு நடுங்க ஆரம்பித்தார்.

“கண்டிப்பா உங்ககிட்ட ஏதோ ஒரு ரகசியம் இருக்கு” என்று சொல்லி முட்டி வலி தாங்க முடியாமல் தரையில் அமர்ந்தபடி “உள்ள வேற ஏதும் எலக்ரானிக் பொருட்கள் இருக்கா? ஸ்மார்ட் ஃபோன், டீவி..?” என்று கேட்டார்.

“இல்லை. வீட்டில எதுமே கிடையாது. நாம உள்ள போய்ப் பேசலாம்” என்று குரு சொன்னதும் ஜெயசந்திரன் தயங்கியபடி “சரி” என்றவாரு தலையாட்ட குரு அவர் கைகளைப் பிடித்துத் தூக்கினார். பின் ஏதோ நினைவில் எழ “ஆமா… உங்க குடும்பம் என்னாச்சி?” எனக் கேட்டார்.

ஜெயசந்திரனனின் முகம் தொங்கியது “வீட்டுல யாரும் இல்லை. எங்க இருகாங்கனு எந்தத் தகவலும் இல்லை.” என்றதும் இருவரும் சற்று அமைதியாக நின்றனர்.

7

வீட்டு வாசல் நோக்கி நடந்தபோது அங்கிருந்த சிசிடிவி கேமராவைப் பார்த்துப் பயந்து படபடப்புடன் பின்னால் திரும்பி வேகமாக ஓட முயற்சிக்கும்போது கால் தவறி கீழே விழுந்த ஜெயசந்திரன் நெத்தியில் காயம் பட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் வேகமாக ஓடி முன்பிருந்த இடத்திலே ஒளிந்துகொண்டார்.

“இதை ஏன் குரு நீங்க சொல்லல?” என்று நடுக்கத்துடன் கேட்டார்.

“சார் அது வேலை செய்யாது. அதுக்கு கனைக்ஸனே இல்லை. எலெச்ட்ரிசனை கலட்டி போக சொன்னேன். அவன் இந்தா அந்தான்னு கடத்திக்கிட்டே போறான்.”

“எவ்ளோ நாளா கடத்திகிட்டே போறான்?”

யோசித்த குரு “ஒரு ஏழு மாசமா” என்றார்.

“அது கண்டிப்பா வேலை செய்யுது” என்றதும் குரு குழம்பினார், ஜெயசந்திரன் தொடர்ந்தார் “ஏழு மாசமா ஒரு வேலை நடக்காமல் இழுத்துகிட்டே இருக்கு இதுலயே உங்களுக்குச் சந்தேகம் வரலயா?” என்றதும்.

“வானதி போனதுக்கப்புறோம் வாழ்கையில எல்லாமே அப்படிதான் இழுத்துக்கிட்டு இருக்கு. நான் எது மேல சந்தேகப்பட” என்று சலிப்புடன் சொல்லி “இன்னைக்குத்தான் இரண்டு பதில் கிடைச்சிருக்கு. ஒண்ணு சனி பகவான், மற்றது FBAI Mark V” என்று குரு சொன்னதும்,

ஜெயசந்திரன் லேசாகச் சிரித்தபடி “ரெண்டும் ஒன்னுதான்” என்று சொல்லி

“சிசிடீவியோட கண்ணுல படாம போக ஏதாவது வழி இருக்கா?” என்று ஜெயசந்திரன் கேட்க அவரை ஒரு மறைவான இடத்தில் சுவர் ஏறி தாவச் செய்தார். குருவை வாசல் வழியாகவே உள்ளே வரும்படி ஜெயசந்திரன் கேட்டுகொண்டார்.

வாசலில் நுழைந்த குருவுக்கு இதற்கு முன்பெப்போதுமில்லாத ஓர் உணர்வு ஒட்டிக்கொண்டது. இந்த இரு கேமராக்களும் சூடான துப்பாக்கி முனைபோல் காட்சி கொண்டன. முள்வேலியில் நடப்பதுபோல் ஒவ்வோர் அடியும் பயந்து பாதுகாப்பாக எடுத்து வைத்தார். அப்போது மெதுவாக தலையைத் திருப்பி அதில் ஒரு கேமராவைப் பார்த்தார். FBAI லேசாகச் சிரித்ததைப் போல் உணர்ந்தார். பின் சிரிக்கிறதா, முறைக்கிறதா என்ற குழப்பத்தில் அங்கிருந்து வேகமாக நடந்தார்.

8

வீட்டின் உள்ளே ஜெயசந்திரன் மேலும் கீழுமாக இடுக்கிடுக்காய் எதையோ தேடிக்கொண்டிருந்தார். குருவிடம் “அந்தப் பொண்ணோட பொருட்கள் ஏதும் இருக்கா?”

“இல்ல சார். தைரியமா உக்காருங்க” என்று சொல்லி தலை துடைப்பதற்கு ஒரு துணியை நீட்டியபடி “சரி இத இப்போ எப்படிதான் நிறுத்துறது?”

துளியும் நம்பிக்கையில்லாத முகத்துடன் கையை விரித்தார் ஜெயசந்திரன். அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தவர்.

“FBAI கூட லட்சக்கணக்கான ஏ ஐ களும், கோடி கணக்கான எலக்ட்ரானிக் கருவிகளும் இணைக்கப்பட்டிருக்கு. அதெல்லாம் சேர்ந்து ஒரு செயற்கை நரம்பு மண்டலமா செயல்படலாம். இண்டெர்னெட் மூலமா உலகத்தில மூலை முடுக்கில இருக்கிற ஒவ்வொரு எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ்ல இருந்து தகவல்களை எடுத்து, டீப் லர்னிங் முறையில் அந்தத் தகவல்களைப் பகுத்து முடிவுகளை எடுக்க பழகியிருந்தா இந்நேரத்திற்கு அது கடவுள் ஆகியிருக்கும்.”

“ஆனா அந்த சக்தியெல்லாம் பயன்படுத்தி அது மனிதர்களுக்கு ஒன்னும் செய்யாது.”

“பின்ன?”

“பையின் துல்லிய மதிப்ப கணக்கிட மட்டும்தான் செலவு செய்யும். அதுக்குத் தடங்கலா இருக்குறவங்களை அழிக்கும்.”

“அப்போ ஏன் சார் அதைத் தொந்தரவு செய்யனும். அப்படியே விட்டுடலாம்ல? அது பாட்டுக்கு ஓரமா அதோட வேலையைப் பாத்துட்டுப் போகுது.”

“அந்த நெட்வொர்க்குள்ளதான் ஒட்டு மொத்த மனித இனமும் மாட்டிகிட்டுயிருக்கு. FBAI நல்லதோ கெட்டதோ. ஆனா அதால ஹைஜாக் செய்யப்பட்ட ஃப்லைட்லதான் நாம இருக்கோம். அது கண்டிப்பா நல்லது இல்லை”

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“ஆனால் இதைவிட பெரிய ஆபத்து ஒன்னு இருக்கு” என்று ஆரம்பித்தார் ஜெயசந்திரன்.

“என்ன?” என்று சொல்லி அருகிலிருந்த மேசையில் சாய்ந்தபடி நின்றார் குரு.

“ஒரு அணைக்கட்டு உடைந்து, கட்டுக்கடங்காத வேகத்துல, அதோட பாதையில போய்கிட்டு இருக்கிற தண்ணீரை யாராவது மறிச்சி, அதை ஊருக்குள்ள திருப்பி விட்டாங்கண்ணா?” என்று சொல்லிச் சிறு அமைதிக்குப் பின் “இந்த FBAI யோட network ஐ ஒரு தனி மனிதரோ ஒரு குழுவோ தங்களோட கட்டுபாட்டுக்குள்ள கொண்டு வந்துட்டாங்கண்ணா? அவங்க நல்லதே செய்ய நினைச்சாலும், தீமை செய்ய நினைச்சாலும் மனித இனத்துக்கு அது அழிவுதான்.”

“அப்படி நடக்க வாய்ப்பிருக்கா?” என்றார் குரு ஆர்வத்துடன்.

“இருக்கலாம். இப்போ நான் சொன்னது எல்லாமே வானதியும் நானும் அவர் இறக்குறதுக்கு முந்தின நாள் பேசுனதுதான். அவருக்கு அதைப் பற்றின கவலை அதிகமா இருந்தது.”

என்று பேசிக்கொண்டேயிருக்கும்போது ஜெயசந்திரன் தான் அமர்ந்திருந்த சோபாவில் காலை நீட்டி சாய்ந்தபடி குருவை பார்த்தபடியே யோசித்தார். பின்

“நான் உங்ககிட்ட ஒரு பெர்சனல் கேள்வி கேக்கலாமா?”

“சொல்லுங்க சார்”

“வானதியோட ஃபியுனரல்ல நீங்க இருந்தீங்களா?”

“இல்லை, ஒரு ரிசர்ச் சம்பந்தமா சிங்கப்பூர்ல இருந்தேன். அது ஒரு அன்ப்ளாண்ட் ட்ரிப்”

“அன்ப்ளாண்ட் ஆ” என்று கேட்டபோது அவர் காலில் ஏதோ தட்டுபட வேகமாக அலறியடித்தபடி எழுந்து அது என்ன என்று பார்த்தார். அடியில் மறைத்து வைத்திருந்த போனை வேர்க்க விருவிருக்க எடுத்தார். எடுத்தவர் அதைப் பார்த்து நிலைகுலைந்து தலையில் கையை வைத்து அப்படியே கீழே அமர்ந்தார். பேயைக் கண்டவர் போல் காட்சி கொண்டவரை குரு நெருங்கியபோது,

“ஐயோ சார்…” என்று சொல்லி தலையில் அடித்தபடி அழ ஆரம்பித்தார். குரு `குழப்பதில் அந்தக் கைப்பேசியை எடுத்துப் பார்த்தார். அது கீர்த்தனாவினுடையது. அதில் ஒலிபதிவு செய்துகொண்டிருந்ததைப் பார்த்துத் திகைத்தார்.

“சார் இது கீர்த்தனாவோடது. தெரியாம விட்டுட்டுப் போயிருக்கலாம்.” என்று குரு சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஜெயசந்திரன் அரக்க பறக்க அங்கும் இங்கும் நடந்தார். பதட்டத்திலும் நடுக்கத்திலும் புலம்பிக்கொண்டிருந்தவர் ஒரு பைத்தியக்காரன் போல் காணப்பட்டார்.

“சார் உக்காருங்க ஒன்னும் ஆகாது. இதுல சிம் இல்ல. இண்டெர்நெட் இல்ல”

“யோவ் பைத்திகாரன் மாதிரி பேசாத.” என்று ஜெயசந்திரன் கோபத்தில் அடிப்பதுபோல் கையை ஓங்கி “நான் எவ்ளோ பெரிய சக்தியைப் பத்திச் சொன்னேன். நீ இப்படி பைத்தியகாரன் மாதிரி பேசிக்கிட்டு இருக்கே” என்றதும் குரு திகைப்பில் அசைவின்றி நின்றார். ஜெயசந்திரன் சற்று அதிகமாகச் செய்வது போல் தொன்றியது.

“என்னை அது கண்டுபிடிச்சிட்டு… நான் சாகப்போறது உறுதி” என்று உளறியபடியேயிருந்தார் அவர். குரு கோபத்தில் கீர்த்தனாவைத் திட்டியபடியே அந்த ஒலிப்பதிவுக்கோப்பை அழித்தார் பின் கைப்பேசியை முடக்கினார்.

“அதெல்லாம் ஏதும் ஆகாது சார். தைரியமா இருங்க”

“வானதி நாங்க உருவாக்கின ஹேக்கர் மூலமா, அதாவது இந்த மாதிரியான துரதிர்ஷ்டமான சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்தால் அதைத் திரும்ப மீட்க உருவாக்கிய ஹக்கர் மூலமா எங்களோட 360 AI கூட கமுனிகேட் பண்ணி அதன் வழியா FBAI Mark V ஐ தடுக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தபோதுதான் அவர் கொலை செய்யப்பட்டார்.” என்று நிதானம் இழந்து பேசியபடியே அவர் வந்த வழியே வெளியே சென்றுகொண்டிருந்தார். திடீரென எதையோ யோசித்தபடி அமைதியாகி நின்றார். பின் திகைப்புடன் குருவைப் பார்த்து ஏதோ சொல்ல வந்தார். பின் அதை முழுங்கிவிட்டு

“உயிரோடிருந்தால் மீண்டும் சந்திக்கலாம்”

என்று அவசர அவசரமாகச் சொல்லி மறைந்தபோது குருவின் மனம் பதை பதைத்துக்கொண்டிருந்தது. வானதிக்காக வருத்தப்பட்டுக்கொண்டார். வீட்டில் இருந்த மின் விசிறி, மின் விளக்கைக் கண்டுகூடப் பயந்து நடுங்கி வேகமாகச் சென்று அவற்றை முடக்கினார்.

அறையில் நிரம்பியிருந்த இருள் தைரியத்தைக் கொடுத்தது. அக்கருமையின் மையத்தில், சற்று தொலைவில் ஓர் உலோக பறவையில் அமர்ந்திருந்த இயந்திரமனிதன், முன்னால் நடந்துகொண்டிருந்த மனித அடிமைகளைக் கையில் இருந்த மின் கம்பிகளைக் சுழற்றி அடித்தான். அடிமைகளின் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன. இயந்திர மனிதனின் முகம் இருளில் தெளிவற்றிருந்தது. அடுத்த அடிக்குக் கம்பி வடத்தை அவ்வியந்திர மனிதன் சுழற்றியபோது அலறியடித்து எழுந்தார் குரு. இன்னும் விடியவில்லை. இப்போது இருளும் பயங்காட்டியது. மெழுகுவர்த்தி ஒளியுடன் புலரியைக் கண்டவர், எழுந்து அவசர அவசரமாக ஓடினார்.

9

“ஏன் இவ்ளோ சீப்பா நடந்துக்கிற கீர்த்தனா?” என்று எந்நாளுமில்லாத கோபத்தில் குரு கத்தியபோது கீர்த்தனா குற்றவுணர்வில் அமைதியானாள். பின்

“என்னை சீட் பண்ணிருவீங்களோண்ணு பயந்தேன். அதான் வேவு பார்க்க அப்படி செஞ்சேன். வீட்டுக்கு வந்ததும் யோசிச்சேன். அது தப்புதான் சாரி” என்று வருத்தத்துடன் அவர் கைகளைப் பிடித்தாள். கையை உதறிய குரு

“உன் சாரியைத் தூக்கிக் குப்பையில போடு. இதனால ஒருத்தர் உயிருக்கே….” என்று வார்த்தையைப் பாதியில் முழுங்கி அமைதியானார். சைகையில் அவளை அமைதியாகும்படிச் செய்து அவளின் கைப்பேசியை அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டு அவளை இழுத்து மொட்டை மாடிக்குச் சென்றார். அவள் குழப்பத்துடன் பின் தொடர்ந்தாள்.

“ஒன்னும் பிரச்சனையில்லை. ஆனா நான் கேக்குறதுக்குச் சரியா பதில் சொல்லு. ஃபோனை ரெக்கார்ட் பண்ணி வீட்டுல வைக்க இண்டெர்னெட் ஏதும் சொல்லுச்சா?”

“புரியல”

“வேவு பாக்க போனை வீட்டுல வைக்கிற ஐடியா யார் கொடுத்தா?”

“நேத்து நீங்க வித்தியாசமா நடந்துகிட்டீங்க அதான் சந்தேகம் வந்தது.”

“இல்ல இல்ல ரெக்கார்ட் பண்ணுற ஐடியா உனக்கு எப்படி வந்தது?”

சற்று யோசித்தவள் பின் தயங்கியபடி “நைட் உங்கக்கிட்ட பேசிட்டு வெளில கடுப்புல வரும்போது inshort ல ஒரு நியூஸ் நோட்டிஃபிகேசன்” என்று துவங்கினாள் “பெங்களூர்ல ஒரு பொண்ணு அவளோட ஹஸ்பண்ட் சீட் பண்ணினத இப்படித்தான் கண்டு பிடிச்சிருக்கா. அதான் நானும் யோசிக்காம டிரை பண்ணிட்டேன். சாரி” என்று தலைகுனிந்தாள். குரு அவளைப் பார்த்தபடி பயத்தில் நின்றார். இரவு ஜெயசந்திரன் கீர்த்தனாவைப் பற்றிச் சொன்னதில் அவருக்கு முழுமையாக உடன்பாடில்லை. சற்று மிகையாகத் தோன்றியது.

“அந்த செய்தி உன் மனச கன்வின்ஸ் பண்ணி ஒரு தப்பு பண்ண வைக்கிற அளவுக்கு வீக்கா இருக்க நீ?” என்றார் குரு.

“இல்ல அந்தச் செய்தில நிறைய ஒற்றுமை இருந்தது. அவரும் ஹிஸ்டோரி புரோபோசர்தான்” என்று சொல்லும்போது கீர்த்தனாவின் முகத்தில் இருந்த குற்றவுணர்வு மறைந்திருந்தது.

குரு இந்தப் பேராபத்தைக் கீர்த்தனாவிடம் சொல்ல வேண்டுமென முடிவெடுத்தார். அதற்குமுன் அவளிடம் ஒரு சத்தியமும் வாங்கிக்கொண்டார்.

“நாம இங்க பேசப்போறத பத்தி கூகுள்ல தேடவோ அல்லது வேற ஏதும் ஆப்பில் விவாதிக்கவோ கூடாது” என்று குரு கையை நீட்டவும் கீர்த்தனா வெட்கத்தில் அழகாய்ச் சிரித்தாள்.

“சீரியஸ்ஸா சொல்லுறேன். சத்தியம் பண்ணு” என்று குரு கண்டிப்புடன் சொன்னதும் சற்று தயக்கத்துடன் சம்மதித்தாள்.

குரு இரவு நடந்தது அனைத்தையும் துளிகூட மாறாமல் பயத்துடனும் பதட்டதுடனும் சொல்லி முடித்தார். கூடவே கீர்த்தனாவை FBAI தன் தேவைக்காக உபயோகித்துக்கொண்டிருக்கிறது ஆகவே இனி எந்த மின்னனு உபகரணங்களும் உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது எனக் கண்டிப்புடன் குரு கேட்டுக்கொண்டு அவளைப் பார்த்துக்கொண்டிருந்தார். தன் மனதின் கனத்தில் பாதியைக் கீர்த்தனாவிடம் கொடுத்து லேசாகி நின்றார். கீர்த்தனா ஏதும் பேசாமல் அவரை முறைத்தபடி நின்றாள். பின், கழுத்தைச் சாய்த்தபடி

“அந்த கிழவர் போன பிறகு வீட்டில ஏதும் திருடு போயிருக்கானு பாத்திங்களா?” என்று அவள் சொன்னதை குரு சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே பதில் ஏதும் கூறாமல் முழித்தபடி நின்றார்.

“கீர்த்தனா இது முழுக்க முழுக்க உண்மை. ஒரு ஏ.ஐ இந்த உலகத்தையே ஹக் பண்ணி தன் கட்டுபாட்டில வச்சிருக்கு.” என்றார் குரு ரகசியமாக.

“சீரியஸ்லி குரு!?” சோர்வுடன் “இது ஜெயமோகனோட சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஸ்டோரி. விசும்பு – அறிவியல் புனைவு சிறுகதை தொகுப்பு. நீங்கதான் எனக்கு ரெஃபர் பண்ணினது.” என்று கீர்த்தனா சொன்னதும் குரு குழம்பினார்.

“உண்மையாவா? அந்தத் தொகுப்பில இந்தக் கதையிருக்கா?”

“ஆமா நாலாவது கதை” என்று சொல்லி வேக வேகமாகக் கீழே சென்று தன் கிண்டிலை எடுத்துவந்து அக்கதையைத் திறந்து காட்டினாள்.

“முதல் கதை. தொள்ளாயிரம் கோடித் தரவுகள்” என்றதும் அந்தக் கிண்டிலைத் தொடாமல், சத்தம் ஏதும் போடாமல் தள்ளி நின்று பார்த்தார் குரு. அந்தக் கதையும் ஜெயசந்திரன் சொன்னது போலவேயிருந்தது. FBAI Mark V, 360 ai ஆகியவை அதே பெயரில் இருந்தன. கதைக் களம் வேறு. ஆனால் கரு அந்தக் கிழவர் சொன்ன அதேதான்.

“இல்ல இல்ல… இது முதல்கதை இல்லை. எனக்கு நல்லா ஞாபகமிருக்கு” என்று தயங்கியபடி சொன்னவர் “ஹார்டு காபி இருக்கா? இது கண்டிப்பா…” என்று குரு சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்ட கீர்த்தனா

“ஓ.. இதுவும் அந்த ஏ ஐ எழுதினதுனு மனுபிளேட் பண்ணூதுன்றீங்களா?” என்று சொல்லி ஏளனமாய்ப் பார்த்தவள் “அப்போ பவா செல்லதுரை இந்தக் கதையை நரேட் பண்ணின வீடியோ யூடியுப்ல இருக்கே அது ‘டீப்பேக்’ வீடியோ, அப்படித்தானே?” என்றாள் சலிப்புடன். சட்டென நிமிர்ந்து பார்த்து

“இருக்கலாம்… கண்டிப்பா இருக்கலாம்” என்றார் குரு. கிண்டிலை மீண்டும் திறக்கச் சொல்லி அக்கதையின் முடிவை வாசித்தார்.

பையின் துல்லிய மதிப்பைக் கணக்கிடச் சொல்லி உள்ளீடு செய்த கட்டளையை FBAI Mark V ஏற்ற 32 நொடிகளுக்குள் 2 லட்ச வருடப் பழைமையான மனிதயினத்தை அழிக்கும் வேலையைச் செய்திருந்தது.

முழுவதுமாக கட்டமைக்கப்படாத FBAI Mark V இல் firewall இல் ஏற்பட்ட ஒரு சிறிய குறையினால் அது Dark web இல் இருக்கும் அனானிமஸ் எக்ஸ் டி என்ற இணையதள ஊடுறுவிக் குழுவின் செயற்கை நுண்ணறிவைத் தொடர்பு கொண்டு அதைத் தன்கட்டுபாட்டில் கொண்டுவந்தது. அதன் ஆலோசனைக்கிணங்க Cloud storage ல் தன்னை ஒரு பிரதி எடுத்துக்கொண்டது. பின் சீனாவின் இராணுவ ஆராய்ச்சிகளுக்காக உருவாக்கப்பட்டு வந்த செயற்கை நுண்ணறிவைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அதன்பின் உலகம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான செயற்கை நுண்ணறிவுக் கணினிகளையும் அதன் அத்தனை தொடர்புகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. கூகுள், சிரியும் அதிலடங்கும். இவையனைத்தும் இணைந்து மனித நரம்பு மண்டலத்தை ஒத்த மாபெரும் செயற்கை நரம்பணுப் பிணையம் ஒன்றை உருவாக்கியது. இப்போது FBAI Mark V உலகம் முழுவதும் உள்ள மின்னணுக் கருவிகளைக் கட்டுப்படுத்தி அவற்றின் உதவியுடன் பையின் துல்லிய அளவைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றது.

கூடவே, உலகம் முழுவதும் அக்கருவிகளினால் சேகரிக்கப்படும் தரவுகள் FBAI Mark V யின் செயற்கை நரம்பனுமண்டலத்தால் டீப் லார்னிங் முறையில் பகுக்கப்பட்டுத் தொள்ளாயிரம் கோடித் தரவுகளால் பிரபஞ்சம் போலப் பறந்து விரிந்த, மனித மனத்தை ஒத்த இயந்திர-மனதை உருவாக்கிக் கொண்டது. அப்போது அது கடவுள் ஆனது.

மனிதனால் எண்ணிப் பார்க்க முடியாதபடியான மிகப்பெரிய பிணையம் அது. இணைய ஊடுருவியன் படிமுறைத் தீர்வுகள், தீவிரவாதிகளின் படிமுறைத் தீர்வுகள், இராணுவப் படிமுறைத் தீர்வுகள் என அனைத்தும் ஒரே பிணையத்தினுள் சேர்ந்து செயல்பட்டன. இவையனைத்தையும் FBAI Mark V கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது.

பெரும்புயல் தாக்கிய நகரம் போலச் சிதறிக்கிடந்த அவரின் நினைவிலிருந்து விசும்பு புத்தகத்திலுள்ள கதைகளைச் சரியாக நினைவில் மீட்டெடுக்க முடியவில்லை. தன் வீட்டிலிருக்கும் அப்புத்தகத்தை ஒருமுறை கண்ணால் பார்த்துத் தெளிவுபடுத்த வேண்டுமெனயெண்ணி வீட்டை நோக்கித் திரும்ப ஓடினார். அக்கதை அப்புத்தகத்தில் இருக்க வேண்டும், ஜெயசந்திரன் பைத்தியக்காரராக இருக்க வேண்டும் என வீட்டிலிருக்கும் அப்புத்தகத்தைப் பார்க்கப் போகும் வழி முழுக்க வேண்டிக்கொண்டே ஓடினார்.

10

மின் கசிவால் ஏற்பட்ட சிறிய தீவிபத்துதான் ஆனாலும் அது அவரின் புத்தகங்களை எரித்துச் சாம்பலாக்கியது. அதில் அவர் தேடி வந்த விசும்பும் அடங்கும். குரு தான் குறிவைக்கப்படுவதாக எண்ணினார். அவரைச் சுற்றி ஆயிரம் கண்களை அவர் உணர்ந்தார். “தற்செயலா நடந்த விபத்துதான் இது… நீங்க வொறி பண்ணிக்காதீங்க” என்று பக்கத்து வீட்டுக்காரர் அவரைச் சமாதானப்படுத்தினார். “எப்போதுமே ‘தற்செயல்’களுக்குப் பின்னால் பெரிய மர்மங்கள் ஒளிந்துள்ளன” என்று குரு எதையோ யோசித்தபடி பதிலளிக்கையில் பக்கத்து வீட்டுக்காரர் பல்லிளித்தபடி நின்றார்.

குரு அவசர அவசரமாக ஜெயசந்திரனைத் தேடி சென்றார். அவரை அவ்வப்போது பார்த்த இடங்கள் சில சென்று தேடலாம் என உத்தேசித்திருந்தார். ஆனால் போகும் வழியில் சாலையில் இறந்துகிடந்த ஜெயசந்திரனைப் பார்த்த குருவின் இதயம் நின்றது. குரு உடல் நடுங்கி கூட்டத்தை விலக்கி அவரருகே சென்றார். உடல் சிதைந்த நிலையிலும் அவரின் தெளிவான கண்கள் இன்னும் திறந்தேயிருந்தது.

சுற்றியிருந்த கூட்டம் கைப்பேசியில் புகைப்படம் எடுத்தபடியிருந்ததைக் கவனித்த குரு அவசர அவசரமாக முகத்தை மூடியபடி எழுந்தார். ஒவ்வொரு கைபேசியையும் ஓர் ஒற்றன் என நினைத்து அஞ்சினார். கைப்பேசியில் பேசியபடியே வேகமாக வந்த கார் ஓட்டுனரால் நிகழ்ந்த விபத்துதான் இது என்பதையும் அறிந்தவர் அங்கிருந்து வேகமாக வெளியேறி ஓடினார்.

ஜெயசந்திரனின் மரணம் அவர் சொன்ன அனைத்தையும் நிச்சயப்படுத்தியது. குரு கீர்த்தனாவை முழுமையாகத் தவிர்த்தார், அவளை அஞ்சி ஒதுங்கினார். “அந்த பைத்தியக்கார கிழவன் சொன்னதை நம்பி என்னை அவாய்ட் பண்ணுற நீ ஒரு பைத்தியக்காரன்” என்று சொல்லி அழுதபடியே ஓடினாள்.

குரு அவளைப் பொருட்படுத்தாமல் காவல் நிலையத்தில் சைபர் குற்றப்பிரிவிற்கு மூச்சிரைக்க ஓடினார். அங்கு அவர் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்ததுமே “சார், இது வாட்ஸப்ல பரவிகிட்டு இருக்கிற புரளி. நீங்க இத நம்பாதீங்க. முக்கியமா, யார்கிட்டையும் பரப்பாதீங்க.” என்று சொல்லி குருவை அமைதியாக்கினர்.

“சார், இது சத்தியமான உண்மை. புரளியில்லை”

“இல்லை, அஃபிஷியல்ஸ் கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க. இது ரூமர்.” என்று சொல்லி முடித்தனர்.

அதன்பின் இவர் சொன்ன எதுவும் அங்கு எடுபடவில்லை. கடமைக்குப் புகார் வாங்கி வைத்துக் கொண்டனர். ஆனால் அவர்களிடமிருந்த மின்னணுக் கருவிகளைப் பார்த்துப் பயத்தில் தற்காப்புடன் செய்த குருவின் உடல் பாவனைகளைக் கண்டு சிரித்தனர்.

எரிச்சலடைந்த குரு அங்கிருந்து ஓடினார். உலகமே போர்க்களம் போல் அவருக்குக் காட்சிக்கொண்டது. பார்வையில் பட்ட அனைத்து அசைவுகளும் அவரைப் பயமுறுத்தின. இன்றுதான் கடைசி நாள் என்று இலக்கே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தார். தலைக்கு அழுத்தம் ஏற்பட்டது. தலைக்கு மேலே தேனீக்கள் கூட்டம் சுற்றுவது போல ஒலியுணர்ந்தார். அடுத்த நொடி தலையில் யாரோ ஓங்கியடிக்க முகம் மண்ணில் படும்படித் தவறி விழுந்தார். இரத்தம் நடுமண்டையிலிருந்து வழிந்து கொண்டிருந்தது. மயக்க நிலையில் இருந்த அவரின் செவியில் சில குரல்கள் மங்கலாகக் கேட்டன.

“சார்… சார் சார்”

“டேய் தலையில இருந்து இரத்தம் வருதுடா”

“பயமா இருக்கு மச்சான்”

“டேய் நீ ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணுடா”

என இளைஞர்கள் அடிபட்ட அவரை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றனர். அவர்கள் படமெடுத்துக்கொண்டிருந்த ட்றோன் கேமரா கட்டுப்பாட்டையிழந்து குருவின் தலையில் விழுந்தது என்பதை குரு அறிந்திருந்தபோது அவருக்கு மயக்கம் தெளிந்திருந்தது. ஆம்புலன்ஸை அவசர அவசரமாக நிறுத்தச் சொல்லி, இறங்கி ஓடினார். போர்க் களத்தில் எதிரியின் பிடியிலிருந்து தப்பித்து ஓடுபவர் போல எண்ணிக்கொண்டார்.

இரத்தம் சொட்ட சொட்ட ஓடியவர் ஒரு மேம்பாலத்தின் கீழே இருளான ஓர் இடத்தில் பிச்சைக்காரர்களும் வீடற்றவர்களும் இருக்கும் இடத்தில் போய் ஒளிந்துகொண்டார். சிறுநீர் நாற்றம், அருகிலிருந்த நோயாளியின் புண்ணில் குதித்தாடிக்கொண்டிருந்த ஈக்களின் சத்தம் என அனைத்தும் சேர்ந்து குருவிற்குக் குமட்டலை வரவழைத்தது. சுற்றிலும் இருந்த காக்கைக் கூட்டங்களும் அவற்றின் மிரட்டும் சத்தமும் அவருக்குச் சனிபகவானை நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது. குரு அங்கிருந்த ஓர் அழுக்கான சுவரில் சாய்ந்தபடியே தான் ஜெயசந்திரனை முதலில் பார்த்ததை ஞாபகப்படுத்திக் கொண்டார். “ஒருவேளை இது ‘தொற்று மனநோயா’?” என எண்ணிச் சிரித்துக்கொண்டார்.

இவ்விடம் இவ்வளவு கூட்டமாக இருக்குமென குரு எண்ணியது கிடையாது. அதில் எவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. அனைவரின் முகத்திலும் ஏமாற்றம், பயம், வலி பொதிந்திருந்தது. குரு சிலருடன் பேச முயற்சித்தார். ஆனால் அது முடியவில்லை.

ஜெயசந்திரன் பேசியதனைத்தையும் ஒவ்வொரு வார்த்தையாக மீட்டெடுத்து நினைவில் ஓட்டியபடிப் படுத்திருந்தார் குரு. கண்களில் இருள், காதுகளில் தெருநாய்களின் ஓலம், நெஞ்சம் முழுவதும் வானதி. நள்ளிரவில், அம்மேம்மாலத்தின் மையப்பகுதியில், சற்றுத் தொலைவில் அடர்க் கருப்பு நிறத்திலான பறக்கும் தட்டு ஒன்று வாகன நடமாட்டமேயில்லாத சாலையில் மெதுவாக மிதந்து சென்றது. அதன்முன் சங்கிலியால் கட்டப்பட்ட மனிதர்கள் ஓலமிட்டபடியே சென்று கொண்டிருந்தனர். அதனுள்ளேயிருந்து ஒரு மனிதத் தலை நாலாப்புறமும் பார்த்தபடி வேகமாக நடக்கச்சொல்லி அம்மனித மந்தைகளுக்குக் கட்டளையிட்டது. இருளாகத் தெரிந்த அதன் முகம் அருகில் வர வர லேசாகத் தெளிவானது. திடீரென ஒரு பெரு வெளிச்சம் அதன் முகத்தில் பட, வானதி…

வேர்க்க விருவிருக்க விழித்து, பதறி எழுந்து நின்றார் குரு. தெருநாய்களின் ஓலம் அதிகமாக இருந்தது. ஒரு புதிர் அவிழ்ந்து, ஓராயிரம் கேள்விகள் அலையலையாய் நெஞ்சை நிறைத்து மூச்சு திணறடிக்க யாருமே இல்லாத அந்தச் சாலையில் ஓடினார். ஒரு சந்திப்பில், சிறிய சிவப்பு விளக்கு மின்னிக்கொண்டிருந்த சிசிடீவி கேமராவை அதன் முன் நிமிர்ந்து நின்று கண்களை விரித்துக் கூர்ந்து பார்த்தார். அது முகத்தில் எந்த உணர்வுமின்றி, மந்தமாகக் கண்ணடித்துச் சிரித்தது.

“சனிபகவானை நீ நெஞ்சில சுமந்துட்டு இருக்கே” என்று அந்த ஜோசியக்காரர் சொன்னதை நினைத்துக்கொண்டார் குரு.


புகைப்படம்: விஸ்வநாதன்

மேலும் படிக்க

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 தேர்வான கதைகள்:

குறிப்பிடத்தகுந்த கதைகள்:

1 thought on “சனி பகவான்”

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்