தமிழில்: பார்கவி
ரெபெக்கா எல்சன் கனட அமெரிக்க வானியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய கவிதைத் தொகுப்பு ‘வியப்பிற்கொரு பொறுப்பு’ (A Responsibility to Awe) என்ற தலைப்பில் இவரின் மறைவுக்குப் பின் வெளியிடப்பட்டது. முடிவிலியைத் தாண்டும் படைப்புமனம் கொண்டு தன் வாழ்நாளின் குறுகிய எல்லைகளைத் தாண்ட முடியும் என்று நம்பியவர். நோய் என்னும் வலியை ஒளி மிக்க சொற்களாக மாற்றிப் பிரபஞ்சத்தை நிறைத்த அறிவியல் கவிஞர்.
மரணபயத்தின் நச்சுமுறி
சில நேரம்
மரண பயத்திற்கு நச்சுமுறியாய்,
நான் விண்மீன் உண்பேன்.
அவ்விரவுகளில், மல்லாந்து கிடந்து,
தண் இருளிலிருந்து அவற்றை உறிஞ்சுவேன்
மிளகின் உறைப்பும் கூர்மையுமாக
அவையனைத்தும், அத்தனையும், என்னுள் புகும் வரை.
சில நேரங்களில்
அதற்குப் பதிலாக
இன்னும் இளமையான வெம்மை மாறா குருதி போன்ற பிரபஞ்சத்துள்
நான் என்னையே ஊற்றிக் கலக்கிறேன்
அது விண்வெளியல்ல, வெறும் வெளி,
இன்னும் உருவாகியிராத விண்மீன்கள் மொத்தத்தின் ஒளி
வெளிச்சப் புகைபனியாக மிதக்கின்றது,
மேலும் நாம் எல்லோரும், எல்லாமும்,
ஏற்கனவே அங்குளோம்
வடிவத்தளைகள் ஏதுமின்றி.
மேலும், சில நேரம்
இப்புவியில் நம் முன்னோரின் நீள் எலும்புகளினருகில்
படுத்துக் கிடந்தால் போதும்:
ஒவ்வொன்றும் ஒரு புதையல் என, பொற்புழு என,
வீசியெறியப்பட்ட நம் மண்டையோடுகளின்
உருளைக்கல் பரப்பின் ஊடாக நடந்துகொண்டே
எண்ணிக்கொள்கிறேன்:
இந்த உமிகளிலிருந்து பிறிந்தவை எவையோ
அவை ஒளிச்சிறகுகளின் மீதேறிப் பறந்துவிட்டன.
****
ஒருவேளை நிலவே இல்லை என்றால்?
அங்கு மாதங்கள் இருக்காது
ஆழி நிலைத்து நிற்கும்
ஆர்ப்பரிக்கும் பேரலைகள் இருக்காது
ஒளிரிரவுகள் இருக்காது
கண்கட்டு வித்தை காட்டும் விண்மீன்கள்
முகம் இருக்காது
நிலாப்பாடல்கள் இருக்காது
கிரகண கிலி பிடிக்கும்
பூமி எழுவதை
நின்று நோக்க இடமிருக்காது.