ஆலன் மூர் எழுதி, டேவ் கிப்பன்ஸ் வரைந்த, ‘வாட்ச்மென்‘ சித்திர நாவலில், தனது பழைய சகாவும், மினிட்மென் என்றழைக்கப்பட்ட கங்காணிகள் (பேட்மேன் போலத் தங்களது அடையாளத்தை மறைத்துக்கொண்டு சமூக விரோதக் குற்றங்களைத் தடுப்பவர்கள்) குழுவில் ஓர் அங்கத்தினனும், காமெடியன் என்று அழைக்கப்பட்டவனுமான எட்வர்ட் ப்ளேக் கொலை செய்யப்பட்டதை அறிந்து, ‘பாவம்’, என்கிறாள் சாலி ஜூபிடர் (சில்க் ஸ்பெக்டர் என்றழைக்கப்பட்டவள்). முதிய சாலியின் மகளும், க்ரைம்பஸ்டர்ஸ் என்ற கங்காணிகளின் குழுவின் ஓர் அங்கத்தினளுமான லாரி, அதைக் கேட்டதும் கொதிக்கிறாள். நாற்பது வருடங்களுக்கு முன் அவளை வல்லுறவு கொள்ள முயன்றவனின் மீதான, தனது தாயின் அனுதாபத்தைப் புரிந்துகொள்ள முடியாது திகைக்கும் மகளிடம் சாலி, “காலம் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. முன்பு பெரிய விசயமாகத் தோன்றியதெல்லாம் இப்போது மிகச் சிறியதாகப் படுகிறது,” என்கிறாள். கூடுதலாக, அவளையே பாத்திரமாகக் கொண்டு 40களில் வந்த ஒரு போர்னோ காமிக்ஸை (1920 – 60 காலகட்டத்தில் அமெரிக்காவில் வெளிவந்த டிஹுவானா பைபிள் என்றழைக்கப்பட்ட கையடக்க போர்னோ காமிக்ஸ்) காண்பித்து, “முதுமையில் எதிர்காலம் இருண்டுகொண்டே வருகிறது. ஆனால், கடந்த காலத்தின் இருண்ட பகுதிகள்கூட ஒளி கூடிக்கொண்டே வருகின்றன,” என்கிறாள்.
இப்படியான கங்காணிகளின் வாழ்வை, அவர்களது உன்னத லட்சியம், மேதமை மற்றும் உள்ளார்ந்த கீழ்மைகளுனூடாக விசாரணை செய்தபடியே அவர்கள் காக்க எத்தனிக்கும் மானுடத்தின் மீது அவர்களே நிகழ்த்தும் வன்முறையின் குருதி படிந்த சுவடுகளைப் பதிவு செய்கிறது ஆலன் மூரின் வாட்ச்மென்.
காமெடியன் என்றழைக்கப்படும் எட்வர்ட் ப்ளேக்கின் அகால மரணத்தைத் துப்பறியும் ரோர்ஷாக் என்ற சக கங்காணியின் டைரிக் குறிப்புகள் வழியாக விரியும் கதை, காமெடியனின் இறப்புச் சடங்கிற்கு வருகிற, வராத கங்காணிகளின் வாழ்க்கைச் சம்பவங்களைக் காலத்தில் முன் பின்னாகப் பின்னியபடி, நேர்கோடற்ற சித்தரிப்பில் காட்டுகிறது. சித்திரங்கள் வழியாக மட்டுமின்றி, பாத்திரங்களைப் பற்றிய பத்திரிக்கைக் கட்டுரைகள், செய்திகள், அவர்களது கடிதங்கள் மற்றும் அவர்களில் ஒருவனான ‘இரவு ஆந்தை‘ எழுதிய சுயசரிதையிலிருந்து சில பக்கங்கள் என்று அவர்களது வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை விரிக்கிறது. அப்படி விரியும் கதையின் மையப் பாத்திரங்கள் என லாரி ஜூபிட்டர், ரோர்ஷாக் என்று அழைக்கப்படும் வால்டெர் ஜோசெஃப் கோவாக்ஸ், இரவு ஆந்தை டேனியல் ட்ரைபெர்க், ஓசிமாண்டியாஸ் என அழைக்கப்படும் ஏட்ரியன் வெய்ட், டாக்டர் மேன்ஹாட்டன் என்றழைக்கப்படும் ஜொனதன் ஆஸ்டெர்மன் ஆகியோரைச் சொல்லலாம்.
லாரி ஜூபிட்டர், தனது தாயினால் ஒரு சாகசக்காரியாகவே வளர்க்கப்படுகிறாள். பதினாறு வயதிலேயே குற்றத்தடுப்பு சாகசத்தில் ஈடுபடுத்தப்படுபவள், நீல நிறத்தில் ஒளிரும் டாக்டர் மேன்ஹாட்டனால் ஈர்க்கப்படுகிறாள். அவனுடனான நீண்ட காதல் வாழ்வின் வினோதங்களிலிருந்து (ஒரு சமயம் இரண்டு உருவங்களாகப் பிரிந்து அவளுடன் உறவு கொள்ள முனைகிறான்) விலகும் அவள் இரவு ஆந்தை டேனியல் ட்ரைபெர்க்கிடம் சேர்கிறாள். மொத்த நாடகத்தின் இறுதியில், தனது தாயை வல்லுறவு கொள்ள முயன்றவனே தனது தந்தை என்றறிந்து அமைதி கொள்கிறாள்.
கங்காணிகள் அனைவரிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டவனாக, டாக்டர் மேன்ஹாட்டன் என்று அழைக்கப்படும் ஜொனத்தன் ஆஸ்டர்மன் இருக்கிறான். ஆராய்ச்சிக் கூடமொன்றில் எதிர்பாராதவிதமாகச் சிக்கி மறைந்து(!) போகும் அணு விஞ்ஞானியான ஆஸ்டர்மனின் பிரக்ஞை, ஏதோ ஒரு வகையில் பிழைத்து, மறைந்துபோன தனது உடலை மீளக்கட்டுவதன் மூலம், பருப்பொருள் உலகைக் கையாளும் அளப்பரிய ஆற்றலைப் பெறுகிறது. காலம், வெளி, பரிமாணங்களைத் தாண்டிய ஒன்றாகவும், அணுக்களைக் கலைத்து அடுக்கி விளையாடும் திறன் கொண்டதாகவும் அது இருக்கிறது. சூப்பர்மேனும் ஏங்கிச் சாகும் ஆற்றல். அமெரிக்க அரசாங்கம் அதற்கு டாக்டர் மேன்ஹாட்டன் என்று பெயர் சூட்டுகிறது. வியட்நாம் போருக்கு அனுப்புகிறது. கம்யூனிஸ்ட் ரஷ்யாவும் அஞ்சுமாறு செய்கிறது. டாக்டர் மேன்ஹாட்டனுக்குப் பிறகு உலகம் முற்றிலும் மாறிவிடுகிறது. அறிவியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன. உலகம் அவனது நிழலில் வாழ்கிறது என்கிறான், அவனுடன் முன்பு வேலை செய்த ஒரு விஞ்ஞானி. எப்போதும் சிந்தனை வயப்பட்டவனாகக் காணப்படும் அவன், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளால் சினம் கொண்டு பூமியை நீங்கிச் செவ்வாய் கிரகத்திற்குச் சென்று, நட்சத்திரங்களைப் பார்த்து, “நட்சத்திரங்கள் வெகு தொலைவில் இருக்கின்றன. நாம் நட்சத்திரங்கள் எனக் காண்பதெல்லாம் அவற்றின் ஒளிப்படங்களையே,” என்கிறான். கண்ணாடியாலான ஒரு மாபெரும் கட்டிடத்தை எழுப்புகிறான். தனது காதலியான லாரியைக் தொலைக்கடத்திக் கொண்டுவந்து தனது கண்ணாடி மாளிகையைக் காட்டுகிறான். அவள் இரவு ஆந்தை டேனியலுடனான தனது உறவைச் சொல்ல, பூமியுடனான தனது உறவு முடிந்துவிட்டது என்கிறான். சொல்லப்படப்போவது அனைத்தையும் முன்பே அறிந்திருந்தும் ஏன் கோபப்படுகிறான் என்று வியக்கிறாள் லாரி. போர் மூண்டு உலகம் அழியப்போவதைத் தடுக்கச் சொல்லும் அவளிடம்,” அத்தனை தலைமுறைகளின் போராட்டமும் உழைப்பும் என்ன சாதித்திருக்கின்றன?” என்று கேட்கிறான். பின்பு பூமிக்குத் திரும்பி, தன்னைக் கொல்ல முயன்று தோற்கும் ஏட்ரியன் வெய்ட்டிடம், “நான் சூரியனின் குறுக்கே நடந்திருக்கிறேன். நிகழ்ந்தன என்றே சொல்ல முடியாத வகையில் மிகவும் நுண்ணியதானதும் அதிவேகமானதுமான நிகழ்வுகளை நான் கண்டிருக்கிறேன். நீ வெறும் மனிதன்தானே,” என்கிறான். நியூட்ரினோக்களை வெறும் கண்ணால் பார்க்கும் அவனையும் மானுட நன்மை எனும் தர்க்கத்தின் துணை கொண்டு அமைதியாக்குகிறான் ஏட்ரியன் வெய்ட். விளைவாக, ஏட்ரியன் மானுடத்தின் பேரால் செய்த குற்றங்களைச் சகியாது முரண்டும் ரோர்ஷாக்கை ஆவியாக்கிவிடுகிறான். இறுதியில், டேனியலும் லாரியும் சேர்ந்திருப்பதைக் கண்டு விலகி, இன்னும் குறைந்த சிக்கல்கள் கொண்ட நட்சத்திர மண்டலங்களை நோக்கிப் போவதாகச் சொல்லி மறைகிறான்.
மைத் திட்டுக்களாலான படங்களைக் கொண்டு ஒருவரின் ஆளுமையை அளக்கும் உளவியல் சோதனையை உருவாக்கிய ஹெர்மன் ரோர்ஷாக் என்ற உளவியளாளரின் பெயரில், ‘ரோர்ஷாக்‘ என்று அழைக்கப்படும் வால்டெர் ஜோசெப் கோவேக்ஸ் ஒரு சமரசமற்ற கங்காணி. பாலியல் தொழிலாளியின் மகன், சிறுவயதில் சீர்திருத்தப்பள்ளி என்றொரு வாழ்வை விதிக்கப்பட்டவன், வல்லுறவுக்காளாக்கிக் கொல்லப்படும் ஒரு பெண்ணிற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட (கரிய வண்ணம் வெவ்வேறு வடிவங்களாக உருமாறிக் கொண்டேயிருக்கும் வெண்ணிறத் துணியாலான) ஆடையைக் கிழித்து ஒரு முகமூடியைச் செய்துகொள்கிறான். கங்காணிகளின் உலகிலேயே மிக அழகான முகமூடி. முகத்தின் இருபக்கமும் சமச்சீராக உருமாறும் கரிய திட்டுகளின் வழி ஒரு தனித்த மொழியை அது பேசுகிறது. ரோர்ஷாக்கின் மொழி. ஏனென்றால், அவனுக்கு வாழ்வென்பது தற்செயல்களாலானது. எவ்வளவு உற்றுப் பார்த்து, அதில் அர்த்தங்களை ஏற்றினாலும் அது அவ்வளவுதான். அந்த முகமூடியைப் போல. கங்காணிகள் மத்தியில் மிகவும் ஏழ்மையிலும், விட்டுவிடாத பிடிவாதத்திலும் உழல்பவனாக அவனே இருக்கிறான் (பிற கங்காணிகள் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு காலகட்டங்களில் வெளியேறுகிறார்கள்).
இதே அளவு பிடிவாதமும் கொள்கையும் கொண்டவனாக ஓசிமாண்டியாஸ் (எகிப்திய மன்னன் இரண்டாம் ராம்சேஸின் கிரேக்கப் பெயர்) என்றழைக்கப்படும் ஏட்ரியன் வெய்ட்டைச் சொல்லலாம். எலெக்ட்ரானிக் இசைப் பிரியனான ஏட்ரியன், உலகின் புத்திசாலி மனிதன் என்று புகழப்படுகிறான். தனது ஆடம்பரமான மாளிகையில், ஒரு சுவர் முழுக்கப் பதிக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சித் திரைகளில் கணந்தோறும் மாறிக்கொண்டேயிருக்கும் காட்சியுருக்களைக் கொண்டு சூழலின் போக்கை அவதானிக்கிறான். உதாரணமாக, பாலியல் கிளர்ச்சியூட்டும், வன்முறை தெறிக்கும் பிம்பங்களைக் கண்டு, குழந்தைகள் உணவு தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்க வேண்டும் என்றும், போர்க்காலங்களில் அடியோட்டமாகப் பாலியல் கிளர்ச்சியூட்டும் பிம்பங்கள் இருப்பது வழக்கம்தான் என்றும் சொல்கிறான். மாறிக்கொண்டேயிருக்கும் இந்தப் பிம்பங்கள் வழியாகத் தான் அடையும் தர்க்கத்தைத் தாண்டிய அறிதலை, வெவ்வேறு பிரதிகளிலிருந்து தற்செயலாக வெட்டி எடுக்கப்படும் வார்த்தைகளைக் கொண்டு புதிய பிரதி ஒன்றை ஆக்கும் வில்லியம் பர்ரோசின் ‘கட் அப்’ (cut-up Technique, William Burroughs) உத்தியுடன் ஒப்பிடுகிறான். உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளையும், எழுத்தாளர்களையும், ஓவியர்களையும் ரகசியமாகக் கடத்தி வைத்து, மாபெரும் திட்டம் ஒன்றை வடிவமைக்கிறான். விளைவாக, நியூயார்க் நகரத்தின் ஒரு பாதி மக்களைக் காவு கொடுத்து, உலகில் ஒற்றுமையையும் அமைதியையும் நிலை நிறுத்துகிறான். தடையாக இருக்கும் சக கங்காணிகளைத் தயக்கமின்றிக் களைகிறான்.
ஒரு வகையில், மொத்த நாவலுமே ரோர்ஷாக்கிற்கும் ஓசிமாண்டியாசிற்கும் இடையிலான முரண்களம்தான். தற்செயல்களால் ஆன எளிய மனித வாழ்வின் நீதிக்கும், உன்னத மானுடம் எனும் லட்சியத்தைச் சாதிக்க முனையும் வரம்பற்ற அதிகாரத்திற்கும் இடையிலான முரண்களம்.
கதையின் மையப்பாத்திரங்களுக்கு இணையாகவே, தெருவோரப் பத்திரிக்கை விற்பனையாளன் ஒருவனும் அவனிடம் காமிக்ஸ் ஓசி வாங்கிப் படிக்கும் சிறுவனும் வருகிறார்கள். ஒரு பத்திரிக்கை விற்பனையாளன், உலக நடப்புகளின் ஒவ்வொரு தொடர்புக் கண்ணியையும் காணுமாறு சபிக்கப்பட்டிருக்கிறான் என்று புலம்பும் அவன் வழியாகவே அந்தக் காலகட்டத்தின் நிகழ்வுகள் (உதாரணமாக, ஆஃப்கனிஸ்தான் மீதான ரஷ்யப் படையெடுப்பு) காட்டப்படுகின்றன. சிறுவன் படிக்கும் ‘கறுப்புக் கப்பல் கதைகள்’ என்ற காமிக்ஸ், மையக் கதைக்குள் ஊடு கதையாகப் பின்னப்பட்டிருக்கிறது. மையக்கதைக் கதாபாத்திரங்களின் உரையாடலுக்கு இடையிலேயே இந்த இணைக்கதைக் கதாபாத்திரத்தின் மனவோட்டங்களும் வருகின்றன (இரண்டையும் பிரித்துப் புரிந்துகொள்ளத் தோதாகப் பேச்சு சட்டக வடிவங்களில் மாறுபாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன) என்றாலும், அவை துல்லியமான ஒத்திசைவு கொண்டிருக்கின்றன. வெறும் மனவோட்டங்களின் வழியாகவே சொல்லப்படும் அக்கதை, கொள்ளையர் கப்பலால் அழித்தொழிக்கப்படும் இன்னொரு கப்பலின் மாலுமியான நாயகன், தான் கைவிடப்பட்ட தீவிலிருந்து தப்பி, கொள்ளையர் தனது ஊரில் இறங்கும் முன் சென்று மனைவி குழந்தைகளைக் காப்பாற்ற முனைவதையும், அதைச் செய்யும் முனைப்பில் அவன் தனது மனிதத்தன்மையை முற்றிலும் இழந்து அந்தக் கொள்ளையர்களில் ஒருவனாகவே ஆகிப்போவதையும் சொல்கிறது. இந்த இடத்தில், கதையோட்டம் அவனையும் ஏட்ரியன் வெய்ட்டையும் ஒரே புள்ளியில் இணைக்கிறது.
‘ஜாக் த ரிப்பர்’ என்றழைக்கப்பட்ட தொடர் கொலைகாரனை மையமாக வைத்து ஆலன் மூர் எழுதிய ‘நரகத்திலிருந்து’ (From Hell) க்ராபிக் நாவலின் சித்திரங்களைபோல (எடீ கேம்பெல் வரைந்தது) இருண்மையுடன் அல்லாது, எளிய எதார்த்த வகைச் சித்திரங்களைக் கொண்டிருக்கிறது வாட்ச்மென். எழுத்துக்கு இணையாகவே கதையின் நுட்பங்களை அது விரிக்கிறது. மொத்த நாவலிலுமே, சித்திரச் சட்டகம் எதிலும் விவரணைக் குறிப்புகள் இல்லை. உதாரணமாக, ஒரு கதாபாத்திரத்தைச் சக கதாபாத்திரம் அழைப்பதை வைத்தே நாம் அதன் பெயரை அறிகிறோம். கதாபாத்திரங்களின் மனவோட்டங்களையும் பேச்சுக்களையும் வைத்தே மொத்தக்கதையும் நிகழ்த்தப்படுவது, நாவலைச் சரளமாகப் படிப்பதைச் சவாலானதாக்குகிறது. ‘சித்திரங்களை வாசிக்கப்’ பழகாதவர்களுக்கு வாட்ச்மென் கூடுதல் சவால்.
ரஷ்ய அமெரிக்கப் பனிப்போர் உக்கிரமாயிருந்த காலத்தின் நெருக்கடியும், அணு ஆயுதப்போர் குறித்த அச்சமும் கதை முழுக்க விரவியிருக்கிறது. அந்தக் காலத்தின் அச்சம் அது. அத்தோடு, கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் அதிவேக வளர்ச்சி மேற்குலகின் ஒட்டுமொத்த வாழ்விற்கும் எதிரானது என்ற ஒரு மனமயக்கமும் சேர்ந்துகொள்கிறது (கதையில் காட்டப்படும் செய்தித்தாளில் ரஷ்யா ஆஃப்கானிஸ்தானைத் தாக்குவதுடன், பாகிஸ்தானுக்குள் நுழைவது பற்றியும், அணுஆயுத எச்சரிக்கைச் செயல்முறைகள் பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன). அதனாலேயே, நியூயார்க்கில் தான் நடத்திய மானுடப் பேரழிவிற்குப் பின், ரஷ்யா அமெரிக்காவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராகும் செய்தி கண்டு, மானுடம் மீண்டது என்று களி கொள்கிறான் ஏட்ரியன். அவனுடைய நோக்கமும் அதுவே. ஆலன் மூர், அணு ஆயுதங்களின் பிரயோகம் குறித்த பேரச்சம் நிலவிய காலத்தின் பிரதிநிதி. கதையின் போக்கில், கதாபாத்திரங்களின் செயல்களில், நல்லது கெட்டது என்று தீர்ப்பளிக்காத பாவனை இருந்தாலும், ஆலன் மூர் பழைய காலங்கள் குறித்து ஏக்கமும் இழந்தவை பற்றி விசனமும் கொண்டிருக்கிறார் என்றே நம்புகிறேன். அவர் இன்னும் இறுக்கமாக அன்பு செய்யும் உலகத்தைக் கனவு காண்கிறார். ஆனால், அதைச் சாதிப்பதற்கோ அவர் சல்லிப்பயல்களையே நம்ப வேண்டியிருக்கிறது.
நன்றி: கபாடபுரம்
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…