கடலுக்கடியில் இருக்கும் வெப்ப நீரூற்றுக்கள்
பிறக்கப்போகும் குழந்தையின் சிரிப்பொலியோடு
களுக் களுக்கென வெந்நீரை வெளியேற்றுகின்றன.
முத்துக்கள் நிலாப்பரல்களையும்
பவளங்கள் நாளைய சூரியன்களையும்
ஏற்கனவே அடைகாக்கத் தொடங்கிவிட்டன.
கடலுக்குள் விழுந்துவிட்டகால்பந்துக்காக
காத்திருக்கும் சிறுவனைப் போல
தொலைந்த பூமி அலையில் மிதந்துவருமென
வெறிக்கிறான் மனிதன்.
எல்லா மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை
எங்கு நோக்கினும் நீரின்றி வேறில்லை.
கட்டம் 98லிருந்து
பிரபஞ்சப் பாம்பில் சரசரவென சறுக்கி
மீண்டும் முதல் கட்டத்துக்குள் விழுந்துவிட்டோம்.
இடிமுழக்கத்தில் துயிலெழும் கயா*
கூந்தலை அள்ளி முடித்து
அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகிறாள்.
பகடைக்கற்கள் உருள்கின்றன
பெருவெடிப்பின் பானைக்குள்.
வெப்ப நீரூற்றில் சின்னதாய் ஒரு சலனம்.
தாயம்.
*கயா – கிரேக்க மதத்தில் பூமியின் கடவுள் – பூமித்தாய். பூமி என்பது தன்னைத் தானே சீரமைத்துக்கொள்ளும் உயிரினம் எனவும், எத்தனை முறை வீழ்ந்தாலும் உயிர்த்தெழும் என்றும் சொல்லும் விமர்சனத்துக்குரிய கருதுகோள் ஒன்று உண்டு.
புகைப்படம்: பிரஷாந்த்