நேர்காணல்

நேர்காணல்: நாஞ்சில் நாடன்

58 நிமிட வாசிப்பு

டிசம்பர் 31, 1947ஆம் ஆண்டு பிறந்த நாஞ்சில் நாடனின் இயற்பெயர் ஜி.சுப்பிரமணியம். ஆறு நாவல்கள், 150 கதைகள், 400க்கும் மேற்பட்ட கட்டுரைகள், மூன்று கவிதைத் தொகுப்புகள், நாற்பதிற்கும் மேற்பட்ட நேர்காணல்கள், பழந்தமிழ் இலக்கிய வாசிப்பு என நவீன தமிழ் இலக்கியத்தின் பற்பல துறைகளிலும் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பங்காற்றி வருபவர் நாஞ்சில் நாடன்.

அரூ இணைய இதழுக்காக இணையம் வழியாகவும், பின்னர் தொலைபேசி வழியாகவும் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் செய்த நேர்காணல் இது. அரூ குழுவின் சில கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. கொரோனா காலகட்ட வாழ்க்கை, எண்ணிக்கையில் ஆர்வம், சமகாலப் படைப்பிலக்கிய வாசிப்பு, அனுபவத்தை எழுதுதல், கும்பமுனி, சிறார் இலக்கியம், பழந்தமிழ் சொற்கள் என நீளும் இவ்வுரையாடல் சுனில் கிருஷ்ணனின் அறிமுகக் குறிப்போடு தொடங்குகிறது.


இரண்டு மாதங்கள் ஒதுக்கி நாஞ்சில் நாடனின் பெரும்பாலான கதைகள், நாவல்கள் மற்றும் சில கட்டுரைகளை வாசித்துக் கேள்விகளைத் தொகுத்துக்கொண்ட பிறகு, விஜயா பதிப்பகம் வெளியிட்ட நேர்காணல் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. முன்னரே நான் ஆசிரியர் குழுவில் இருக்கும் பதாகைக்காக ஒரு விரிவான நேர்காணலைக் கோவை தியாகு புத்தக நிலையத்தில் த. கண்ணன் மற்றும் நண்பர்கள் செய்திருந்தார்கள். இத்தனை நேர்காணல்களில் கேட்கப்பட்ட கேள்விகளைத் தாண்டிப் புதிதாக என்ன கேட்பது எனும் மிரட்சி. எனினும் நேர்காணலின் பெறுமதி என்பது கேள்விகளைப் பொறுத்தது அல்ல, உண்மையில் பதில்களைப் பொறுத்தது. தனது பதில்களால் இந்த நேர்காணலை நாஞ்சில் செறிவாக்கியுள்ளார்.

சுனில் கிருஷ்ணன்: முதல் கேள்வியைப் பயணங்களில் இருந்து தொடங்குவோம். நீங்கள் வருடத்தில் குறைந்தது 40 வார இறுதிகளிலாவது பயணங்கள் மேற்கொள்பவராக இருப்பவர். இந்தக் கொரோனா காலகட்டத்தில் வீடடைந்து கிடந்த அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்.

நாஞ்சில் நாடன்: எனக்கு நினைவு தெரிந்து நான் வீடடைந்து இருந்ததில்லை. பள்ளியிலிருந்து வந்ததுமே பையைத் தூக்கி வீசிவிட்டு ஆற்றங்கரையிலோ, குளத்தங்கரையிலோ இருப்பவன். மாட்டிற்குப் புல்லை அறுப்பது, மாட்டுச் சாணத்தை வழித்துக் குண்டில் போடுவது, வயலுக்கு உரம் சுமப்பது, கருமண் சுமப்பது என்று பல வீட்டுவேலைகளும் இருந்தன. வீடு என்பது உண்பதற்கும் உறங்குவதற்கும் அமர்ந்து கொஞ்சம் வாசிப்பதற்குமான இடமாகத்தான் இருந்தது. பள்ளி, கல்லூரி நாட்களில்கூட நூலகங்களிலும், அம்மன் கோயில் வாசலிலும், சாத்தான்கோவில் வாசலிலும்தான் அதிகம் இருந்தேன்.

மும்பை சென்றதும் வீடு என்பது ஆரம்பகட்டத்தில் “சால்” என்று சொல்லக்கூடிய வரிசையான அறைகள். பத்தடி அகலமும், இருபதடி நீளமும் உள்ள ஒரு பெரிய அறை. அதில் இருபது பேர் தங்குவோம். அதில் அவரவர் தலையணைகளும், அவரவரின் பாய்களும் இருக்கும். சுவரில் தலைக்குமேல் ஒரு பெரிய ஸ்டாண்ட் இருக்கும். அதில் அவரவரது டிரங்குப் பெட்டியை வைத்துக்கொள்வோம். இது போன்ற பத்து அறைகளுக்குப் பொதுவாக இரண்டு கழிப்பறைகள் இருக்கும். தங்கும் அறையில் ஒரு ‘மோரி’, அங்கு நாங்கள் பல் விளக்குவது, குளிப்பது, சவரம் செய்துகொள்வது போன்றவற்றைச் செய்துகொள்வோம். ஆக வீட்டிலிருப்பது என்பது வேலைக்குச் செல்லும் காலகட்டத்திலும் ஒரு சுகமான அம்சமாக இருந்ததில்லை. அதிகமாக வெளியில் இருப்போம். 1980’க்குப் பிறகு எனது தொழிலும் அவ்வாறே இருந்தது. மார்க்கெட்டிங்கில் இருந்ததால் இரண்டு வாரம் நான் வெளியூரில் இருப்பேன். அதற்கு முக்கியக் காரணம், எங்களது நிறுவனம் எங்களுக்குத் தந்த சம்பளம் மிகக் குறைவு. நான் 2005, டிசம்பர் 31’இல் ஓய்வு பெற்றபோது எனது மொத்தச் சம்பளம் இந்திய ரூ.12000. ஆனால், நான் இப்படி வேலை விசயமாக வெளியூர் செல்வதால் எனக்குக் கிடைத்த பயணப்படிகள் உண்டு. எனக்கு மற்ற விற்பனைப் பிரதிநிதிகளைவிட நுணுக்கமான முறைகளில் ஆர்டர்களைப் பிடிப்பது தெரிந்ததால், நிறைய ஆர்டர்கள் பிடிக்க முடிந்தது. அப்படி இந்தியா முழுவதும் பயணப்பட முடிந்தது.

நான் கோவை வந்து 31 வருடம் ஆகிவிட்டது. ஒரு நிறுவனத்தில் வட்டார மேலாளராக இருந்து ஓய்வுபெற்றேன். அப்போது மாதம் 15 நாட்கள் பயணம் செய்துகொண்டிருந்தேன். 2005’இல் டிசம்பர் 31’இல் ஓய்வு பெற்ற பிறகு இந்த 15 ஆண்டுக் காலத்தில் மாதம் எப்படியும் 4000 கிலோமீட்டர் பேருந்து மற்றும் இரயில் மூலமாகப் பயணம் செய்துள்ளேன். இந்தக் கொரோனா நெருக்கடி தொடங்கிய காலத்தில் மார்ச் ஐந்தாம் தேதி நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரியில் 2500 மாணவிகளுக்கு முன்னர் உரையாற்றினேன். அதற்குப் பிறகு அதைப் போன்று உரையாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை.

பெரும்பாலும் எனக்கு எந்த வேலையும் இல்லையென்றாலும்கூடக் காலை உணவை முடித்துவிட்டு, 11 மணிக்கு ஒரு தேநீரும் அருந்திவிட்டுப் பேருந்து ஏறி டவுனுக்குச் சென்று விஜயா பதிப்பகத்திற்குப் போவேன், அண்ணபூர்ணாவில் ஒரு காபி அருந்திவிட்டு மதியம் இரண்டு மணிக்குள் வீட்டிற்குத் திரும்பிவிடுவேன். இதில் என்னுடைய போக்குவரத்துச் செலவு ரூ.52, காபிக்கான செலவு ரூ.28. ஒரு தேவையும் இல்லாமல் விஜயா பதிப்பகத்திற்குச் செல்வேன், நண்பர்களைச் சந்திப்பேன், உரையாடுவேன், புத்தகங்களைப் பார்ப்பேன், தேவையான புத்தகங்களை வாங்குவேன். இப்படி இருந்தது.

ஆகையால், வீடடங்கிக் கிடத்தல் என்பது ஒரு சிக்கலான விசயம்தான். இன்றோடு வீட்டிலிருந்து வெளியே செல்லாமல் 256 நாட்களைக் கடந்துவிட்டேன். இதை ஒரு குறிப்பேட்டிலும் குறித்து வருகிறேன். இதைக் கொரோனா நெருக்கடி வந்துவுடனேயே குறிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்த 256 நாட்களில் ஆறுமுறைதான் நான் வீட்டுவாசலைத் தாண்டியிருப்பேன். இங்கு ‘பத்தினி’ என்ற சொல்லுக்கு ஆண்பால் என்னவென்று தெரியவில்லை. பத்தனன் அல்லது பத்தினன் என்ற சொல் இருக்குமா என்று தெரியவில்லை. என் மகள் எனக்கு இரண்டு முகக்கவசம் அணிவித்து வெளியே அழைத்துச் சென்று வங்கி வேலை போன்ற சில வேலைகளை முடித்து என்னை வீட்டில் விட்டுச் செல்வார். இப்படியாக 256 நாட்களில் நான் ஆறு முறைதான் வெளியே சென்றுள்ளேன். எனது செருப்பு கிழிந்துவிட்டால்கூட அதைச் சரி செய்துகொடுக்கிறேன், நீ வெளியே செல்லாதே என்று சொல்கிறார். சில சமயம் என் மகளிடம் சற்று லேசாகக் கேட்டுப் பார்த்தேன், “ஒரு கூரியர் அனுப்பிவிட்டு வருகிறேன், பத்து நிமிட நடைதான், இரண்டு முகக்கவசம் அணிந்துகொள்கிறேன்” என்று, “எந்த பேக்கரியிலும் தேநீர் குடிக்கமாட்டேன், யாரிடமும் நெருங்கி நின்று பேசமாட்டேன்” என்றும் சொல்லிப்பார்த்தேன் “இல்லைப்பா, என்னிடம் குடு, நான் செய்துவிடுகிறேன்,” என்கிறார் என் மகள்.

என் வீடு இருப்பது ஒரு புறநகர்ப் பகுதி. மாலை வேளைகளில் எனது பேரன்களை அழைத்துக்கொண்டு வழக்கமாக நடைப்பயிற்சிக்குச் செல்வேன். அவர்களை அழைத்துச் செல்லும்போதே வழியில் தென்படும் செடி, தாவரங்கள், பறவைகளைப் பற்றியும் சொல்லிக்கொண்டே செல்வேன். அவர்களும் அவற்றை ரசிப்பார்கள். தற்போது அப்படிச் செல்லும் உலாவுக்கு ஏங்குகிறார்கள். கொரோனாவின் இரண்டாம் அலை என்னும் இந்த அச்சுறுத்தல் போகட்டும் என்று சமாதானம் கூறிக் கொண்டிருக்கிறேன்.

சுனில் கிருஷ்ணன்: இந்தக் காலகட்டத்தில் ஒரு புதிய அன்றாட ஒழுங்குமுறையைக் கண்டடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன். அது எத்தகையது?

நாஞ்சில் நாடன்: நான் வீட்டில் இருக்கும் நேரங்களில் இசை கேட்பதுண்டு. என்னிடம் ஒரு சிறிய வானொலிப் பெட்டி உள்ளது. அதற்கு எனது ஐந்து வயதுச் சிறிய பேரன் ‘பன்னப்பாட்டு’ என்று பெயர் வைத்திருக்கிறான். அதில் கேட்கும் பாடல்கள் அனைத்தும் பன்னப்பாடல்கள். மேலும் நான் ஒரு CD Player வைத்திருக்கிறேன். அதற்கு அவன் வைத்துள்ள பெயர் ‘ராகம்’. அதை அவனே இயக்கவும் செய்வான். என்னிடம் அவன் “தாத்தா, நீ இப்போ ராகம் கேட்குறியா, பன்னப்பாட்டு கேட்குறியா?” என்று என்னைக் கேட்பான். இவை அனைத்தும் நம்மிடமிருந்து வாங்கிய சொற்கள்தாம். அதைப் போட்டுவிட்டுத்தான் வேலையை ஆரம்பிப்பேன்.

இந்த 256 நாட்களில் குறைந்தது 150 புத்தகங்களை வாசித்திருப்பேன். செப்டம்பரில் வெளியான ‘மன்னார் பொழுதுகள்’ என்கின்ற 400 பக்க நாவலை வாசித்து அதைப் பற்றிய என்னுடைய கருத்துகளை எழுதியுள்ளேன். ஆறு முன்னுரைகள் எழுதியுள்ளேன். ஏழாவது முன்னுரை டோக்கியோ’ செந்திலின் சிறுகதைத் தொகுப்பிற்கானது, அதை இரண்டாவது முறையாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படியாக வாசிக்கிறேன், பாட்டுக் கேட்கிறேன், எழுதுகிறேன். இந்த 256 நாட்களில் குறைந்தது எட்டுச் சிறுகதைகளும், 16 கட்டுரைகளும் எழுதியுள்ளேன். ஆக, அடுத்த எனது சிறுகதைத் தொகுப்புக்கும், கட்டுரைத் தொகுப்பிற்குமான விஷயம் தயாராக உள்ளது.

சுனில் கிருஷ்ணன்: இந்த நோய்த்தொற்றுக் காலகட்டம் உங்களுக்கு மனரீதியாக ஏதும் தொந்திரவுகளை அளித்துள்ளதா?

நாஞ்சில் நாடன்: பெரும்பாலான நாட்களில் இரவு உறங்கும்பொழுது மிகவும் கடுமையான சம்பந்தமற்ற கனவுகள் வருகின்றன. 1976’இல் இறந்துபோன எனது தந்தை என்னைத் திட்டுவதாகவும், எனது சிற்றப்பாவும், சித்தியும் வந்து திட்டுவதாகவும் கனவுகள் வருகின்றன. அவை என்ன என்றும் சரியாக ஞாபகத்தில் இருப்பதில்லை. சில சமயங்களில் மன நெருக்கடிகள் வேறுவிதமாக ஏற்படுகின்றன. மனதிற்கு எதுவும் பிடிக்காமலும் போகின்றது. எதுவும் செய்யவும் பிடிப்பதில்லை. எதையும் இரசித்துச் சாப்பிடுவதில்லை. சில சமயங்களில் பேரன்களிடமும் கோபம் வருகிறது.

இது என் போன்ற வயதினருக்கு ஏற்படும் நிகழ்வுகளா எனக்கு மட்டும் ஏற்படுகின்ற விசயங்களா என்றும் தெரியவில்லை. மேலும் இதிலிருந்து எப்படி மீள்வது என்றும் தெரியவில்லை. நான் எழுதிக்கொண்டோ, வாசித்துக்கொண்டோ இருந்தால் இப்படியான நெருக்கடிகள் வருவதில்லை. நான் என்னுடைய புத்தக அடுக்குகளை ஒழுங்குபடுத்துவேன். புதினங்கள், கவிதை நூல்கள், சிறுகதைத் தொகுப்புகள் என்று வகைப்படுத்தி ஒழுங்குபடுத்துவேன். இப்படி அரைநாள் ஒழுங்குபடுத்தினால், பிறகு குளித்துவிட்டு வந்து எழுதத் தொடங்குவேன். இதன் மூலமாகத்தான் என்னிலிருந்து என்னை மீட்டுக்கொள்கிறேன்.

அறிமுகமான நண்பர்கள் வீட்டிற்கே வந்து என்னைச் சந்திக்கிறார்கள். அறிமுகமில்லாத நண்பர்கள் வந்து சந்தித்துப் போனால் நான் நாட்களை எண்ணத் தொடங்கிவிடுகிறேன். தனிமைப்படுத்தபடவேண்டிய அந்த 14 நாட்கள் கடந்துவிட்டனவா என்று நாட்களை எண்ணிக்கொள்கிறேன்.

இன்னும் 32 நாட்களில் நான் 73 வயதை நிறைவு செய்துவிடுவேன். மேலும் கடந்த 30 வருடங்களாக எனக்கு நீரிழிவு நோயும், இரத்த அழுத்தமும் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்பு இதயத்தில் ஒரு stent வைத்துக்கொண்டேன் என்றாலும் ஒரு பலத்தோடு வாழ்ந்து வந்தேன். இதைச் சார்ந்த பயங்கள் இருந்தாலும்கூட, எனக்கு ஒரு நல்ல நம்பிக்கை இருக்கிறது. சாவு எப்போது வேண்டுமானாலும் வரலாம். திடீரென்று ஒரு மாரடைப்பில் உயிர் போய்விடலாம். எந்த வேலையும் செய்வதற்குக் காலம் நமக்கு அனுமதிக்காது. ஆனால், கொரோனாவில் சாகக்கூடாது என்கின்ற ஒரு திடம் எனக்கு இருக்கிறது. இதில் நான் சாகமாட்டேன், “வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற பாரதியின் வாக்கைப் போல, “கொரோனாவில் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ,” என்று நினைத்துக்கொள்வேன்.

முன்பெல்லாம் வேலையிலிருந்து ஓய்வுபெற்றாலும் காலையில் ஆறு மணிக்கு எழுந்து காபி குடித்து தினசரிகளைப் படிப்பேன். இப்போதோ ஆறுக்கு எழுந்தாலும் ஏழரைக்கு எழுந்தாலும் ஒன்றுமில்லை. நான் தற்போது இரண்டு நாளிதழ்கள் வாங்குகிறேன் (தமிழிலும், ஆங்கிலத்திலும்) ஒரு காலத்தில் நான்கு நாளிதழ்கள் வாங்கிய சமயமும் இருந்தது. நாளிதழ்களைக் கவனமாகப் படித்தே இருநூறு நாட்களுக்கு மேல் ஆகின்றது. நாளிதழ்களை வாசித்து என்ன தெரிந்துகொள்ளப் போகிறோம், தேவையான விசயங்கள் நண்பர்கள் மூலமாக வாட்சப்பில் தெரிந்துகொள்கிறோம். அதேபோல் நான் தொலைக்காட்சியையும் பார்ப்பதில்லை. என்னுடைய உலகத் தொடர்பு இலக்கியப் பத்திரிகைகள் வாசிப்பு மூலமாகக் கிடைக்கிறது.

சமீபத்தில் நான் எழுதிய ஒரு கும்பமுனி கதையில்கூட, “நான் இறந்து போனால், என்னுடைய சமாதியில் யார் வந்து இரண்டு ரசவடை வைப்பார்கள், யார் கொண்டு போய் உயிர்மை, காலச்சுவடு, நிலவெளி, அந்திமழை, காக்கைச் சிறகினிலே போன்ற பத்திரிகைகளை என்னுடைய சமாதியில் வைப்பார்கள்?” என்பது போல எழுதியிருப்பேன்.

இந்த வாசிப்பின் மூலமாகவும், இசையின் மூலமாகவும், எழுத்தின் மூலமாகவும், என்னுடைய பேரன்களின் மூலமாகவும்தான் என்னுடைய நாட்களை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறேன். தற்போது எனக்குள் எழும் சில உள்ளார்ந்த அச்சங்களை வெளியில் சொல்லமுடியாது. எனக்கு மரணம் பற்றிய அச்சமும் இருக்கிறது. அது நிச்சயம் என்றும் தெரியும். ‘நெருநல் உளனொருவன்…’ எனும் சமாச்சாரங்கள் எல்லாம் நமக்குத் தெரியாத விசயமும் இல்லை. ஆனால் அதற்குள் சில வேலைகள் செய்துமுடிக்க வேண்டியுள்ளது.

சுனில் கிருஷ்ணன்: உங்களுக்கு இங்கே செய்வதற்கு நிறைய பணிகள் உள்ளது என உறுதியாக நானும் நம்புகிறேன்.

நாஞ்சில் நாடன்: ஆம், நிச்சயமாக. என்னுடைய அம்மையின் பெயரும் சரஸ்வதி. சரஸ்வதி நாம் வழிபடுகின்ற ஒரு தெய்வம், கலைவாணி, சகலகலாவல்லி. குமரகுருபரர் ‘சகலகலாவல்லி மாலை’யின் முதல் பாடலில் கேட்பார்…

வெண்தா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்தா மரைக்குத் தகாதுகொ லோ

“நீ வெண்தாமரையில்தான் அமர்வாயா, ஏன், என் உள்ளம் என்கின்ற தண் தாமரை உனக்கு அமரத் தகாத இடமா?” என்று கேட்பார். அது போலவே நானும் கேட்கிறேன், எனக்கும் இன்னும் ஐந்து வருட ஆயுட்காலம் நீட்டிப்பு வேண்டும் என்று! ஏனெனில் எனக்கு அத்தனை காலத்திற்கான வேலை நிலுவையில் இருக்கின்றது. நான் செய்கின்ற வேலையை மற்றவர் செய்ய இயலாது என்கின்ற திமிருண்டு எனக்கு. அதை நான் மட்டுமேதான் செய்யமுடியும். அவற்றைச் செய்யவில்லை எனில், தமிழுக்கு அவை செய்யப்படாமலே போய்விடக்கூடும் எனும் அதீத நம்பிக்கை எனக்குண்டு. ஆகவே, இந்த உணர்வை மனச்சோர்வு என்றும் எடுத்துக்கொள்ளலாம். நான் எப்போதுமே மன அழுத்தத்தை உணர்ந்தாலும், அதைத் தாண்டி வந்துவிடுவேன். அது நிரந்தரமான ஒன்றாக இருக்காது.

பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்தோம், அவர்கள் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். சாப்பாட்டிற்கும், துணிக்கும், மருந்துகளுக்கும் பஞ்சமில்லை. அப்படியிருக்க மன அழுத்தத்திற்கு ஒரு காரணமுமில்லை. எனது பேரப்பிள்ளைகள் என் மீது விழுந்து குதித்து விளையாடுகிறார்கள். அன்றும் அப்படிதான், நான் 110 ஆண்டுகள் பழமையான புறநானூறு புத்தகம் வைத்துள்ளேன். அதைக் கண்ட என் ஐந்து வயதுப் பேரன், என்னைப் பார்த்து, “இது எப்போ publish ஆனது” என்று கேட்டான். அதற்கு நான், “இது 100 வருடம் முன்பு பப்ளிஷ் ஆனது” என்று கூறினேன். உடனே அவன், “அப்போ, நீ எப்போது publish ஆனாய்?” என்று கேட்டான்.

இந்தக் கேள்வியே எனக்கு அடுத்த இரண்டு நாட்களை ஓட்ட வைத்துவிடும். இது போன்று நாமே வெளிப்புற ஆதரவு, ஆலோசனை போன்றவை ஏதுமின்றி நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

சுனில் கிருஷ்ணன்: நீங்கள் 256 நாட்கள் என்று சொன்னபோது, உங்களின் ‘எண்ணப்படும்’ சிறுகதை நினைவில் வருகிறது. அதில் கதையின் நாயகன் எத்தனை முறை கலவி கொண்டான் என்பது முதற்கொண்டு எல்லாவற்றையும் எண்ணிக் கொண்டிருப்பான். உங்களுக்குப் பொதுவாகவே எண்ணிக்கையில் அதிக ஈடுபாடு உண்டா?

நாஞ்சில் நாடன்: அடிப்படையில் நான் ஒரு கணித மாணவன். எனது வீட்டில் சமையலுக்கான காய்கறிகளை நானே நறுக்குவது வழக்கம். முருங்கைக்காயைச் சாம்பாருக்கு நறுக்கும்போது, மொத்தம் 28 துண்டுகளாக நறுக்கியிருப்பேன். ஆனால், சாப்பிடும்போது என் மனைவி எனக்கு மூன்று துண்டு முருங்கைக்காய் பரிமாறினால், பகடியாக மீதி காய்கள் எங்கே என்று கேட்பேன். மாடிப்படியும் எண்ணுவேன். எங்கள் வீட்டில் பிச்சிப்பூ மரம் உள்ளது. அந்தப் பூவின் இதழ்க்கடையில் இளஞ்சிவப்பு நிறமாயிருந்தால் அதைத்தான் சாதிமல்லி என்று சொல்வார்கள். பிச்சிப்பூ என்பது எங்கள் நாட்டுப்புறச் சொல். பிச்சிபூக்களைப் பற்றி நிறைய பாடல்களும் கவிதைகளும் உண்டு. கவிமணி, ’ பின்னி முடித்திடம்மா, பிச்சிப்பூ சூடிடம்மா’ என்கிறார். ஆசிய சோதியில், “கன்னி ஒரு மகள் மையெழுதி, இரு கண்ணும் எழுதும் முன் ஓடி வந்தாள், பின்னும் ஒரு மகள் கூந்தலிலே சூடும் பிச்சி மலர் கையில் சுற்றி வந்தாள்,” என்கிறார். சங்க இலக்கியப் பாடல்களில் இடம் பெற்ற தாவரம் இது. கு.சீனிவாசன் புத்தகத்தில் இது, பித்திகம், பித்திகை, செம்மல் ஆகிய பெயர்களால் குறிக்கப்படுவதாகக் கூறுகிறார். அந்த மரத்தை எங்கள் வீட்டு வாசலில் நட்டு வைத்திருக்கிறேன். ஆறே வயதான செடி அது. அதன் மேற்பகுதியில் பிச்சி மொட்டுகளைப் பறிப்பது எனது வேலை. ஆரம்பக் காலத்தில் 50 மொட்டுகள் பறிக்கும் காலத்தில் தொடங்கி 756 மொட்டுகள் பறிக்கும் காலம்வரை போயிருக்கிறேன். இன்று காலை 111 மொட்டுக்களைப் பறித்தேன். இதைப் பறிக்கும்போதே எண்ணிவிடுவேன். இது ஒரு நோயா அல்லது நோயிலிருந்து மீட்சியா என்று தெரியவில்லை.

நான் எந்தக் கட்டடத்தில் ஏறினாலும் படிகளை எண்ணிவிடுவேன். சமீபத்தில் ஒரு இலக்கிய முகாமில் ஒரு பெண்மணி உரையாற்றினார்கள். அவரின் உரைக்கிடையே “அது வந்து, அது வந்து…” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். மூன்று முறைக்கு மேல் சொன்னபோது, என் மனம் தானாக எண்ணத் தொடங்கிவிடும். அவர் அன்று 135 ‘அது வந்து’ என்று சொன்னார். இதனால் என்ன பயன் என்றும் தெரியவில்லை. ஒரு வேளை என்னுடைய மனநோயலிருந்து என்னைக் காத்துக் கொள்ளக்கூடிய விசயமாகவும் இது இருக்கலாம் என நினைக்கிறேன்.

சுனில் கிருஷ்ணன்: இது ஒரு நல்ல பொழுதுபோக்காகக்கூட இருக்கலாம் அல்லவா?

நாஞ்சில் நாடன்: என் மகளின் ஆலோசனையின் பேரில் தினமும் மாலை ஐந்தரை மணிக்கு என் வீட்டின் மொட்டைமாடியில் நான் நடைப்பயிற்சி மேற்கொள்கிறேன், 30 நிமிடம் நடைப்பயிற்சியும், 15 நிமிடம் கை கால்களுக்குப் பயிற்சியும் செய்வேன். இந்தப் பயிற்சிக்குப் பிறகு என் உடல் மொழியில் ஒரு மாற்றத்தை உணர்கிறேன். இப்படி நடக்கும்போதே நான் வைக்கும் ஒவ்வொரு காலடியையும் எண்ண ஆரம்பித்துவிடுவேன். 2500 அடிகள். வீட்டின் உள்ளே நடக்கும்போதும் என் காலடிகளை ஒருநாள் எண்ண ஆரம்பித்தேன். அதுவும் ஏறத்தாழ 2500 அடிகள் வருகின்றன. ஆக ஒரு நாளைக்கு இவ்வாறு 5000 அடிகள் நடந்துவிடுகிறேன். 10,000, 11,000 அடிகள் நடப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு இதுவே போதும்.

எனது வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு நடக்கும்போதும் எண்ண ஆரம்பித்துவிடுவேன். 14 வருடத்திற்கு முன்பு நான் வாழ்ந்த வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு 648 அடிகள் எண்ணியிருக்கிறேன் என்பதெல்லாம் என் நினைவில் இருக்கின்றது. ஒருவேளை சதாவதானம், அஷ்டாவதானம், சோடசாவதானம் போல என்னுடையது எண்ணப்படும் அவதானமாகவும் இருக்கலாம்.

சுனில் கிருஷ்ணன்: எண்ணுவது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த எண்ணிக்கைகளை நீங்கள் நினைவு கூர்வது ஆச்சரியமளிக்கின்றது. பயணங்கள் பற்றிய கேள்வியின் தொடர்ச்சியாக மற்றுமொரு கேள்வி, உங்களின் படைப்புகளில் பயணங்களைக் குறித்த காட்சிகளை எதிரொளிகளாகக் காணமுடிகிறது. உதாரணமாக, தாங்கள் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும்போது அங்குப் பார்க்கும் ஒரு காட்சிகூடக் கதையாகிவிடுகிறது, ‘முரண்தொகை’ கதையில் ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான உரையாடல் ஒரு நல்ல காட்சி. அதே போல சதுரங்கக் குதிரை நாவலில் இரயில் நிலையத்தில் ஒரு பையனின் அழுதுகொண்டிருக்கும் காட்சியைச் சித்தரித்து இருப்பீர்கள். தொடர்ச்சியாக உங்களின் கதைகளில் பயணங்களையும் காணமுடிகிறது. தங்களின் படைப்புகளுக்கும், பயணங்களுக்குமான தொடர்பை விவரிக்கவும். பயணங்கள் தங்களின் கதைகளுக்கு ஓர் உந்துதலாக இருப்பது போல் தோன்றுகிறது.

நாஞ்சில் நாடன்: ஒரு சம்பவத்தையோ, காட்சியையோ அல்லது ஓர் உரையாடலையோ நினைவுக்குக் கொண்டுவரும்போது, அந்தச் சூழலும் சேர்ந்துதான் நினைவுக்கு வருகிறது. எந்தத் தகவலையும் இது மதிப்பற்றதா, பயனுள்ளதா என்று நான் பகுத்துக்கொள்வதில்லை. உதாரணத்திற்கு, ஒரு நூல் ஆலைக்குப் பேருந்தில் சென்று இறங்கி அரை கிலோமீட்டர் நடக்கும்போதே தென்படும் மரங்களின், பறவைகளின் பெயர்கள்தாம் முதலில் என் மனதில் நிற்கும். நான் என்னுடைய எந்தக் கதைகளிலும் ஒரு மரம் என்றோ, பறவை என்றோ குறிப்பிட்டதில்லை. அவற்றின் பெயரைத்தான் குறிப்பிட்டு எழுதுவேன். அந்த மரம் பூத்திருந்தாலோ, காய்த்திருந்தாலோ அதையும் குறிப்பிட்டு எழுதிவிடுவேன். ஒரு மின்சாரக் கம்பியின் மீது அமர்ந்திருக்கும் பறவை என்ன வகை என்று பெயருடன் குறிப்பிட்டுவிடுவேன்.

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பதிவைப் படித்தேன். அதில் ஒரு பொருளின் பெயர் தெரியாமல் இருந்தால், அந்தப் பொருளைப் பற்றிய அறிவு நமக்குப் பூர்த்தியாவதில்லை என்று குறிப்பிட்டிருந்து. அந்தப் பொருளை, எதை வைத்து நினைவிற்குக் கொண்டு வருவது? இந்த இடத்தில் இந்த மரத்தைப் பார்த்தேன் என்று வைத்துதானே அதைப் பற்றிய நினைவுகளைக் கொண்டுவர முடியும்.

இதைப் போலப் பயணங்களின்போது நோக்கமில்லாமல், நாளை இதைச் சிறுகதைகளிலோ, நாவல்களிலோ, கட்டுரைகளிலோ பயன்படுத்தப் போகிறோம் எனும் நோக்கமில்லாமல் அவை பதிந்துவிடுகின்றன. அந்த அளவு நான் உணர்திறன் உள்ளவனாக இருக்கிறேனா அதனால்தான் நான் எழுத வந்தேனா என்றும் தெரியவில்லை.

உதாரணத்திற்கு நான் 2012’இல் கலிபோர்னியாவில் 19 நாட்கள் தங்கியிருந்தேன். அங்கு திருமலை ராஜன் மற்றும் அவர் நண்பர்கள் என்னை அழைத்திருந்தார்கள். அப்போது நாங்கள் ஓரேகான் மாநிலம் தாண்டி மௌன்ட் சாஷ்தா எனும், 14000 அடி உயரமுள்ள ஒரு மலைக்குச் சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் சற்று இளைப்பாற ஓர் இடத்தில் எங்கள் வாகனத்தை நிறுத்தினோம். அப்போது எதிர்சாரியில் வந்து கொண்டிருந்த ஒரு வாகனமும் எங்களின் அருகில் நின்றது. அதிலிருந்து பத்து வயதுச் சிறுமியும், இரண்டு ஆடவர்களும் இறங்கினார்கள். அவர்களின் கையில் ஒரு குவளையும், ஒரு காலியான தண்ணீர் புட்டியும் எடுத்துக்கொண்டு, அந்தச் சாலைக்கு சற்றுப் பின்னால் இருந்த ஓர் ஓடையில் அந்தக் குவளையில் தண்ணீர் கோரிக் குடித்துவிட்டுத் தண்ணீர் புட்டியையும் நிரப்பிக் கொண்டார்கள். “இந்த நீர் எவ்வளவு தித்திப்பாக உள்ளது,” என்று சிலாகித்தபடியே எனக்கும் ஒரு குவளைத் தண்ணீரைக் கோரிக் கொடுத்தார்கள். இது ஒரு சம்பவம்.

நான் நீர்நிலையைப் பற்றிய ஒரு கட்டுரையோ சிறுகதையோ எழுதும்போது, உடனே இந்தச் சம்பவம் எனது நினைவுக்கு வந்துவிடும். அது அங்குப் பொருத்தம் இருக்கின்றதோ இல்லையோ, அதைப் பதிவு செய்யாமல் இருக்கமாட்டேன்.

எங்கள் ஊருக்கு 200 மீட்டருக்கு மேற்கே ‘பழையாறு’ ஓடுகின்றது. வீட்டின் பின்னால் தேரேகால் எனும் ஆறு உண்டு. நாங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு ஆற்றில் போய்க் கைக்கழுவுவோம். எங்கள் கிராமத்தில் 120 வீடுகளில் கழிப்பறை என்ற ஒன்றை நான் பார்த்ததில்லை. இன்று நிலைமை மாறிவிட்டது. அன்றைய நிலையைக் கற்பனை செய்துகொள்ளலாம். இந்தத் தண்ணீரில்தான் நாங்கள் குளித்தோம், ஆடு மாடுகளைக் குளிப்பாட்டினோம், துணிகளைத் துவைத்தோம். எங்களின் தொடக்கநிலைப் பள்ளி ஆற்றின் அருகே அமைந்துள்ளது. பள்ளி இடைவேளையின்போது இங்கு வந்துதான் தண்ணீர் கோரியும் குடிப்போம். சில சிறுவர்கள், இரு கைகளையும் பின்புறம் கட்டிக்கொண்டு குனிந்தும் ஆற்றையே குடிப்பார்கள். இந்தச் சம்பவங்கள் யாவும் அந்த ஓரேகான் மாநிலத்தின் காட்டோடைச் சம்பவத்தின்போது என் நினைவு அடுக்குகளிலிருந்து எட்டிப் பார்த்தன.

இதைப் போன்ற சம்பவங்கள் நாம் மனதிலிருந்து தோண்டி எடுப்பதில்லை; அவை நமது தேவைக்கு நினைவுகளில் வந்து நிற்கின்றன. பாரதிதாசன் ஒரு கவிதையில் “ஏடெடுத்தேன், கவி ஒன்று வரைந்திட, என்னை எழுதென்று சொன்னது வான்” என்பார். வான், குளம், ஆறு அனைத்தும் தம்மை எழுதச் சொல்லுகின்றன. சொற்கள் எல்லாம் தன் ஏவல் கேட்டு நிற்கும் என்பார்.

ஒரு வேளை இவைதாம் படைப்புத்தன்மையோ என்னவோ தெரியவில்லை. சில சம்பவங்கள் நினைவிலேயே இருப்பதில்லை. சமீபத்திய ஆனந்த விகடன் தீபாவளி மலரில் ‘அம்மை பார்த்திருந்தாள்’ என்ற சிறுகதை எழுதியிருந்தேன். அது என்னுடைய 12, 13 வயதில் நடந்த சம்பவம். நான் இதுவரை 150 கதைகள் எழுதிவிட்டேன். அப்பொழுதெல்லாம் இந்தச் சம்பவம் எனது நினைவுக்கு வரவில்லை. ஆனால், இப்போது அது நினைவிற்கு வருகிறது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு அதை எழுதுகிறேன். அப்போது அந்தக் காட்சி முழுவதும் நினைவிற்கு வருகிறது. எந்தத் தேடல்களும் இல்லாது, எந்தப் பிரயத்தனமும் இல்லாது, சில தேவைகளுக்காக, கதாபாத்திரங்களின் பெயரை மாற்றி எழுதுகிறேனே தவிர, அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் முதற்கொண்டு நினைவு வரும். சில நண்பர்களின் வீடுகளில் சாப்பிடப் போகும்போது, அதே வீட்டில் மூன்று வருடம் முன்பு சாப்பிட்ட மோர்க் குழம்பின் அபாரச் சுவை நினைவில் வரும். அது சம்பிரதாயப் பேச்சல்ல. இது போன்ற என்னுடைய பயண நினைவுகள்தாம் எனக்குப் பல வகைகளிலும் பயனுள்ளவையாக அமைகின்றன. மிகச் சில சமயங்களில் சில அலங்காரங்கள் செய்ய வேண்டியிருக்கும்.

இது பெரும்பாலும் எழுதுபவர்களின் இயல்புதான். நாம் நமது தேவைக்கு நினைவில் வைத்துக்கொள்கிறோம். கதைகளுடனோ, கட்டுரைகளுடனோ பயணிப்பது இந்த நினைவுகள்தாம். அவை எழுதுபவர்களுடன் சேர்த்தே தேங்கிவிடுகின்றன. ஆண்டு என்பது ஒரு கணக்கு அல்ல. தேவையில்லாத பல விசயங்கள் நமக்கு மறந்தும் போய்விடும். வயது ஏறும்போது சில புத்தகங்களின், நண்பர்களின் பெயர்கள் மறந்துவிடுகின்றன. மனதில் பல குப்பைகள் சேர்ந்துவிட்டமை ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். இந்த ஆன்ட்ராய்ட் தொலைபேசிகள் அறிவுறுத்தவது போல் என்னுடைய ஞாபகத் திறன் ஒரு சதவிகிதம்தான் இருக்கிறதோ என்னவோ. அவை முக்கியமற்றவை என்பதால் மட்டுமே மறந்து போவதில்லை. சில சமயங்களில் பல வருடமாகப் புழங்கிக் கொண்டிருக்கும் தேவாரப் பாடலாக இருக்கும், அதை எழுதியவர் அப்பரா, திருஞானசம்பந்தரா, சுந்திரமூர்த்தி நாயனாரா என்ற குழப்பம் ஏற்படுகின்றது. தேவாரப் புத்தகம் மேசை மேலே இருப்பதால் சட்டென்று புரட்டித் தெளிவுபடுத்திக்கொள்ள முடிகின்றது.

சுனில் கிருஷ்ணன்: தங்களின் ‘மாமிசப்படைப்பு’ நாவல் தங்களின் முந்திய காலத்தில் நடந்தது என்றும் அச்சம்பவங்களைக் கேள்விப்பட்டே எழுதியதாகவும் சொல்லி இருக்கிறீர்கள். மற்ற புதினங்கள் தங்களின் வாழ்க்கை அனுபவம் என்று கூறியுள்ளீர்கள். பெரும்பான்மையான தங்களின் புதினங்கள் படர்க்கையில் உள்ளன. இப்படியான வடிவத்தில் கதைகளைப் படைப்பதன் காரணம் என்ன? அதன் ஆதாயம் என்ன?

நாஞ்சில் நாடன்: படர்க்கையில் எழுதுவதில் நிறைய வசதிகள் உள்ளன. படர்க்கையில் எழுதும்பொழுது அனைத்தையும் மேலிருந்து பார்க்கக்கூடிய பார்வை கிடைக்கின்றது. அது எழுத்தாளனுக்கு ஒரு பெரிய அனுகூலமாக விளங்கும். புதிதாக எழுதவரும் பலருக்கும் நான் அறிவுறுத்துவது இதைத்தான். உதாரணத்திற்கு, படர்க்கையில் எழுதும்போது ஒரு சம்பவத்தின் இருபக்கத்தைப் பற்றியும் எழுதமுடியும். ஆனால், தன்னிலையில் கதை எழுதும்போது மறுமுனைபற்றி எழுத இயலாது.

படர்க்கையில் எழுதுவது எனக்குப் பெரிய ஆதாயமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். என்னுடைய எந்த நாவலிலும் நான் என்னைக் கதாநாயகனாக நிறுத்தி எழுதியதில்லை. என்னுடைய அனுபவங்களை நான் நீட்சி செய்து பார்ப்பேன், உதாரணத்திற்கு, ‘தலைகீழ் விகிதங்கள்’ எழுதிய பின்னணி என்னவென்றால், நான் பட்டப்படிப்பு தேர்வு எழுதிவிட்டு என் சிற்றப்பாவின் வீட்டில் அமர்ந்துள்ளேன். அப்பொழுது திடீரென்று ஒரு திருமணத்திற்கு வந்த நான்கைந்து பேர் தடதடவென்று சிற்றப்பாவின் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் என்னை மாப்பிள்ளை பார்க்க வந்துள்ளார்கள். நான் பி.எஸ்ஸிதான் படித்திருந்தேன். எனக்கு வேலையும் இல்லை. என்னைத் திருமணம் பேச வந்த அந்தப் பெண்ணையும் எனக்குத் தெரியும், இதைச் சில காரணங்களுக்காக நாவலாக எழுதியபோது எனக்கு இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை. 1977’இல் ‘தலைகீழ் விகிதங்கள்’ எனும் என் நாவல் வெளியானது. எனக்கு 1979’இல்தான் திருமணம் நடந்தது, ஆக ஒரு அனுபவத்திலிருந்து, ஒரு நிலைப்பாட்டிலிருந்து அதை நீட்டித்துப் பார்க்க வேண்டும். கற்பனை வழியாக இப்படி நடந்திருந்தால் என்ன ஆகும் என்று! ‘எட்டுத்திக்கும் மதயானையில்’ சில பகுதிகளுக்குத்தான் எனக்கு அனுபவப்பொறுப்பு, மற்றவை நான் நீட்டித்துப் பார்த்தவை. இதை என் படைப்பு என்றோ, கற்பனை என்றோ, நீட்டிப்பு என்றோ வைத்துக்கொள்ளலாம்.

‘மாமிசப் படைப்பைப்’ பொறுத்த அளவில் அது என் தாத்தாவின் கதை. அவரை நான் பார்த்ததில்லை. எனது தாய், தந்தை என இருவழிப் பாட்டனார்களையும் பார்த்ததில்லை. அந்த நாவலின் நாயகன் என் தந்தை வழித் தாத்தா. அவருக்கு நடந்த அனுபவத்தை நான் படர்க்கையில் நின்று, என் அப்பா, சிற்றப்பா, அத்தை என அவர்களின் வாய்வழிச் சொல்லப்பட்டதை மேலும் என் கற்பனையால் நீட்டித்து எழுதினேன்.

சுனில் கிருஷ்ணன்: நீங்கள் மூன்று தலைமுறை முன்னோர்களை வைத்து 800 பக்கத்திற்கு ஒரு நாவல் எழுதப் போவதாகக் கூறியிருந்தீர்கள். அதன் தற்போதைய நிலை என்ன?

நாஞ்சில் நாடன்: 10, 12 வருடத்திற்கு முன்பே எனது தாத்தா, என் தந்தை மற்றும் நான் என்று மூன்று தலைமுறைகளை வைத்து ஒரு நாவல் எழுதுவதாகக் கூறி, அதை எழுதவும் தொடங்கி, எனது தாத்தாவின் பகுதியை முடித்துத் தற்போது நிலுவையில் இருக்கிறது. இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் அதை எடுத்து மேற்கொண்டு செய்யவேண்டிய வேலைகளின் பட்டியலுடன் வைத்துள்ளேன். என் தாத்தா மற்றும் தந்தையுடன் என்னுடைய கதையையும் எழுதி முடித்து அதை வெளியிட எண்ணமுள்ளது. மூன்று தலைமுறைகளின் வாழ்க்கை, பண்பாடு குறித்ததாக இருக்கும். என் தந்தை தற்போது உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு 100 வயது தாண்டி இருக்கும். எனது தாத்தாவிற்கு 135 வயதிருந்திருக்கும். அவரை நான் பார்த்ததில்லை. அவரைப் பற்றிய சித்திரங்கள் அனைத்துமே எனது தந்தை சொன்னவைதாம். அவர் பிறந்த ஊரையே நான் என்னுடைய 60’வது வயதில்தான் சென்று பார்த்தேன்.

அவர் மூலைக்கரைப்பட்டி எனும் ஊருக்கருகில் முனைஞ்சிப்பட்டி எனும் ஊரில் பிறந்தவர். எனக்குத் தெரிந்த தகவலில் அங்குச் சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் உள்ளது. அதுதான் எங்களின் வழிபடு விநாயகர் கோயில் என்றும், அதைத் தாண்டி அங்கு வடக்குவாச்செல்வி அம்மன் கோயிலும் உள்ளது என்றும் அறிந்திருந்தேன். இப்போது அங்கு எனக்குச் சொந்தங்கள் என்று அடையாளப்படுத்தக் கூடிய அளவில் யாருமில்லை.

இப்போது எங்கள் ஊர் என்று சொல்லுகின்ற வீரநாராயண மங்கலத்தில் என் தாத்தா வந்தடைந்ததே ஒரு சம்பவம். ஒரு பெரும் பஞ்சகாலத்தில், எனது தாத்தாவின் தகப்பனார், என் தாத்தாவை அந்த ஊரைவிட்டு அனுப்பி வேறு எங்காவது சென்று பிழைத்துக்கொள் என்று சொல்கிறார். 15 வயதில் அவர் ஊரைவிட்டு நடந்து நடந்தே நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி, காவல்கிணறு, ஆரல்வாய்மொழி என இத்தனை ஊர்களைத் தாண்டி தாழக்குடி தாண்டி வீரநாராயண மங்கலம் எனும் சிற்றூருக்கு வந்து சேர்ந்து ஆற்றுப் பாலத்தின் கல்லின் மீது சோர்ந்து, மயங்கிப் படுத்துக்கிடக்கும்போது, அவ்வழியில் வந்த அவ்வூரின் பண்ணையார் ஒருவர் அவரைப் பார்த்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்தப் பகுதியை என்னுடைய நாவலில் முடித்துவிட்டேன். என்னுடைய தந்தை பற்றியும் என்னைப் பற்றியும் எழுத வேண்டியுள்ளது.

மற்றொரு படைப்பு நாஞ்சில் நாட்டு உணவுப் பண்பாட்டைப் பற்றியது. அதையும் தூசி தட்டி எடுத்து வைத்துள்ளேன். இது சமையல் செய்முறைப் புத்தகமல்ல. நான்கு குறுமிளகு, ஆறு சீரகம் போட்டுச் சமைப்பது என்பது போன்ற தகவல்கள் தருவதல்ல

உதாரணத்திற்கு, சீராளன் கறி என்று ஒன்றுள்ளது. சீராளன் என்பவன் ஒரு சிவனடியாரின் பிள்ளை. அப்பர் சுவாமிகள் அந்த வீட்டிற்கு வரும்போது அந்த சிவனடியாரின் பிள்ளை வாழையிலை பறிக்கும்போது பாம்பு கடித்து இறந்து விடுகிறான். அவனுக்கும் சேர்த்துச் சாப்பாட்டு இலையைப் போடச் சொல்கிறார் அப்பர். அந்தக் குழந்தையும் உயிருடன் வந்து அங்கே சாப்பிட அமர்கிறது. அவன் பேரில் இருக்கும் ஒரு கறியைப் பற்றி நான் எழுதியுள்ளேன். ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ என்கிற கட்டுரையை சுந்தரராமசாமி காலத்தில் ஒரு கருத்தரங்கில் நான் வாசித்தேன். அதற்கு பிறகு காலச்சுவடு கண்ணன்தான் உணவு குறித்தும் எழுதுங்கள் என்று சொன்னார்.

தற்போது செட்டிநாட்டு உணவு, உலகம் முழுவதும் பரவியுள்ளது. நாஞ்சில் நாட்டு உணவு வகைகள் அதிகம் இருப்பினும் அவற்றைப் பற்றித் தெரியாமல் போய்விட்டது. திருநெல்வேலி சொதியைப் பற்றிப் பேசாத திருநெல்வேலி எழுத்தாளன் இல்லை. நானும்கூட ஒரு கட்டுரையில் செட்டிநாட்டு மண்டியைப் பற்றி எழுதியுள்ளேன். எனது நாஞ்சில் நாட்டு உணவு எனும் நூல் 400 பக்க அளவில் இருக்கும். திருத்தி எழுதவேண்டிக் காத்துக்கிடக்கிறது.

கம்பனின் வழிநூல்கள் கிட்டத்திட்ட 150 நூல்கள் உள்ளன. நானே 100 புத்தகங்கள் வைத்துள்ளேன், ‘கம்பனின் சொல்’ பற்றி முதலில் ‘அம்பறாத் தூணி’ எழுதியதும் நான்தான். அதே போல் கம்பன் பேசுகின்ற உவமைகள் பற்றி ஒரு நூல் எழுத எனக்கு ஆசை. இவற்றை எல்லாம் முடிக்க எனக்கு ஆசையுள்ளது. எப்படியும் என்னால் 80 வயதுவரை எழுத முடியாதா?

சுனில் கிருஷ்ணன்: நிச்சயம் முடியும். ஒரு கற்பனைக் கதைக்கு ஓர் அனுபவம் முக்கியமாகிறது. அதே சமயம் அனுபவத்தை நீட்டிக்கக் கூடிய கற்பனை ஒன்றும் உள்ளது. தற்காலத்துப் புனைவுகளில் ஒருவித ஏற்றத்தாழ்வு இருப்பதாக எண்ணுகிறீர்களா? அதாவது, அனுபவம் மற்றும் கற்பனைக்கிடையே…

நாஞ்சில் நாடன்: நீங்கள் சொல்வது சரிதான். இதை ஒரு விமர்சனமாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். அனுபவங்களைச் சார்ந்து எழுதுவதைக் காட்டிலும் அனுமானம் சார்ந்து அதிகம் எழுதப்படுகின்றன. அனுபவத்தின் பலம் அபாரமானது. அனுபவத்தை எழுதுகின்றபோது அதை இன்னும் உற்சாகமாக எழுதமுடியும். எழுதி 40 வருடங்கள் தாண்டிப் போனாலும் அந்த அனுபவம் இருக்கும். சமீபத்தில் நான் இரண்டு மூன்று சிறுகதைகள் எழுதினேன். அதில் கோமரம், அன்னக்கொடை என்ற கதைகள் எங்கள் ஊர் முத்தாரம்மன் கோயில் பற்றியவை. இவற்றை என்னுடைய அனுபவத்திலிருந்து எழுதுகின்றபோது ஒரு சௌகரிய உணர்வு நமக்குக் கிடைக்கும். அதற்காகக் கற்பனையாக எழுதக்கூடாது என்று கூறவில்லை. சமீபகாலத் தமிழ்ப் புனைகதைகளில் சில வக்கிரங்கள் அதிகத் தன்முனைப்போடு செயல்படுகின்றன. கவிதைகளிலும் அது இருக்கிறது. ‘பாடுபொருள்’ என்று சொல்கின்றோம் அல்லவா! அந்தப் ‘பாடுபொருள்’ என்னவாக இருக்கிறது என்பதுதான். அவர்களுக்கு அனுபவங்கள் இல்லையா, பேசுகின்ற அளவிற்குத் துணிச்சல் இல்லையா, அனுபவங்களைச் சொல்வதில் அலட்சியமா என்று எனக்குத் தெரியவில்லை.

கண்மணி குணசேகரனின் ‘கோரை’ போன்ற நாவலில் விவசாயி எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் கூறப்பட்டுள்ளன. அது கண்மணியைத் தவிர வேறொருவரால் எழுத முடியாது. பலரும் தங்களின் அனுபவங்கள் சார்ந்து எழுதும்போது, அவை அந்தக் கதைக்கு மிகுதியான பலத்தைக் கொடுப்பதாகவே நினைக்கிறேன். இன்று பலரும் அந்தப் பலத்துடனேயே எழுதுகிறார்கள். தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பதால் படைப்புகளைப் பார்த்தவுடனே தெரிந்துவிடும் அவை அவர்களின் அனுபவங்களா இல்லையா என்று.

சுனில் கிருஷ்ணன்: செவ்விலக்கியங்கள் முதல் தற்காலப் படைப்புகள்வரை தொடர்ந்து வாசித்து வருபவர் என்கிற முறையில் உங்களிடம் இந்தக் கேள்வி. இலக்கிய வாசிப்பு பல நேரங்களில் ஒருவித சோர்வை ஏற்படுத்துகிறது. எதை வாசிப்பது என்கிற குழப்பமும், சமகாலப் புனைவுகளைப் படிப்பதா செவ்விலக்கியங்களைப் படிப்பதா என்ற குழப்பமும் தோன்றுகின்றன. தொடர்ந்து சமகாலப் படைப்புகளை வாசிப்பதற்கு எது உங்களுக்கு உத்வேகம் தருகிறது?

நாஞ்சில் நாடன்: நான் 45 வருடங்களாக எழுதுகிறேன். நேற்று எழுத வந்தவராக இருந்தாலும் 30 வருடமாக எழுதுபவராக இருந்தாலும் அவர்களோடு சேர்ந்து நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன நடக்கிறது போன்றவை எனக்குத் தெரியவேண்டும். நான் ஓய்வுபெற்ற எழுத்தாளன் என்றால் அக்கறைப்பட அவசியம் இல்லை. நானும்தானே ஓடிக்கொண்டிருக்கிறேன்.

இதில் இரண்டு நிலைப்பாடுகள் இருக்கின்றன. ஓர் எழுத்தாளராகப் புதிய எழுத்தாளர்களை வாசிக்கிறேன். சக படைப்பாளியாக அவர்களிடம் இருந்து சிலவற்றைக் கற்றுக்கொள்கிறேன். நாம் யோசிக்காத விஷயங்களை அவர்கள் யோசித்துப் பார்க்கிறார்கள் இல்லையா! அடுத்து, ஒரு வாசகனாக என்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ஓர் எழுத்தாளராக என்னுடைய அனுபவங்களைப் புனைவாக எழுதுகிறேன். அனுபவங்கள் சார்ந்து கட்டுரைகளை எழுதுகிறேன். எனக்கு அனுபவங்கள் மீது பெரிய மோகம் உள்ளது. அனுபவங்கள் இல்லாமல் பூடகத் தன்மையோடு கூடிய கற்பனையின் அடிப்படையில் எழுதப்படுகிற எழுத்தின் மீது இயற்கையாக எனக்கு ஈடுபாடு குறைவாக உள்ளது. அதற்காக அவற்றை நான் புறக்கணிப்பதில்லை. சொந்த அனுபவங்கள் அல்லது பிறரின் அனுபவ எழுத்துகள்தாம் என்னுடைய முதல் முன்னுரிமை.

சமீபத்தில் முன்னுரை எழுதுவதற்காகக் காளி பிரஸாத்தின் சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன். அந்தக் கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. டோக்கியோ செந்திலின் 12 கதைகளை இரண்டுமுறை படித்தேன். அவர்கள் கதை சொல்கிற விதம் பிடித்திருக்கிறது. கதைகளின் மீதான விமர்சனங்களும் இருக்கும். நான் எப்போதும் விமர்சனங்களைத் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவிப்பேன். என்னுடைய பாராட்டை எழுத்தில் கொடுத்துவிடுவேன். இரண்டு மூன்று கதைகளைப் படித்தவுடன் அந்த எழுத்தாளர் பற்றிய ஒரு பிம்பம் வந்துவிடும். பெருந்தன்மையாக, ‘போதும்’ என எடுத்து மாற்றி வைத்துவிடுவோம். சிறந்த ‘காஃபி’ என்பதற்காக ஒரு அண்டா ‘காஃபி’ குடிக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை அல்லவா! ஓரிரண்டு மடக்கில் தெரிந்துவிடும் அல்லவா! நாம் புகைவண்டி நிலைய ‘காஃபி’யும் குடிக்கிறோம்; ‘ஸ்டார் பக்ஸி’லும் வரிசையில் நின்று குடிக்கிறோம். இப்படித்தான் வாசிப்பும். யாரையும் நான் வாசிக்காமல் நிராகரிப்பதில்லை. விருப்பப்பட்டு வாங்கினாலும் விலைக்கு வாங்கினாலும் எனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டாலும் வாசிக்காமல் விடுவதில்லை. நான் புத்தகங்களை எடைக்குப் போட மாட்டேன். வீட்டிற்கு வரும் இலக்கிய நண்பர்களிடம் ஐந்து, ஆறு புத்தகங்கள் கொடுத்து வாசிக்கச் சொல்வேன். சமயத்தில் செலவுசெய்து கூரியரில்கூட அனுப்புவேன், படித்துப் பார்த்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று.

சுனில் கிருஷ்ணன்: கும்பமுனி பற்றிப் பேசலாம். கும்பமுனி பேசக்கூடிய பலவற்றை நாஞ்சில் நாடனாலும் பேச முடியும். இந்நிலையில் கும்பமுனிக்கான தேவை என்ன? கும்பமுனி–தவசிப்பிள்ளை எனும் புனைவு ஆளுமைகள் ஏன் தேவைப்பட்டார்கள்? அவர்கள் முதன்முதலாக உருக்கொண்ட தருணத்தை/நெருக்கடியைப் பற்றிச் சொல்ல முடியுமா? இந்தப் புனைவாளுமைகள் அளிக்கும் சுதந்திரம் என்ன?

நாஞ்சில் நாடன்: எனக்குச் சில விஷயங்களைப் புனைவுகளில் பேசுவதில் பிரச்சனை உண்டு. கட்டுரை வடிவில் எழுதப் பெரிய ஆய்வுகள் செய்ய வேண்டியிருக்கிறது. அதனால்தான் இரண்டு கதாபாத்திரங்களை உருவாக்கினேன். கும்பமுனி மற்றும் தவசிப்பிள்ளை இரண்டும் என்னுடைய வெவ்வேறான நீட்சிகள். பத்து வருடங்களுக்குப் பிறகு நான் கும்பமுனியாகும் வாய்ப்புகள் அதிகம். தவசிப்பிள்ளை என்றால் சமையல்காரர் என்று அர்த்தம். இரண்டு பேர் இருந்தால்தானே ஒருவர் கேள்வி கேட்க ஒருவர் பதில் சொல்லமுடியும். ‘Alter ego’ மாதிரி என்னுடைய சௌகரியத்திற்காக இரண்டு பேரையும் உருவாக்கினேன்.

முதன் முதலாக சாகித்திய அகாடமி விருது சார்ந்த சர்ச்சை வந்த காலத்தில்தான் கும்பமுனிக் கதையைத் தொடங்கினேன். கும்பமுனியுடன் ஒரு நேர்காணல். இதில் நல்லது கெட்டது எல்லாமே பேசமுடியும். உதாரணத்திற்கு மெரினா கடற்கரை இருக்கிறது. அது இந்தியக் குடிமகனாக இருக்கிற எல்லோருடைய சொத்து. அந்த இடத்தை ஓர் அரசியல் தலைவருடைய உடலைப் புதைப்பதற்குப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் 100 வருடத்தில் செத்துப் போனவர்கள் அனைவரையும் புதைத்தால் கடற்கரையில் நடப்பதற்குக்கூட இடம் கிடைக்காமல் போகும். இதைக் கும்பமுனி கதாபாத்திரம் மூலம் சொல்வது எனக்கு எளிதாக இருக்கிறது. தவசிப்பிள்ளை சொல்வார், ‘அரசாங்கத்திடமிருந்து கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் கேட்கலாம். கும்பமுனி என்ற மகா பிரசித்தி பெற்ற எழுத்தாளரைப் புதைப்பதற்காக, நினைவு மண்டபம் கட்டுவதற்காக இடம் கோரிக்கை செய்யலாம். பிறகு கடற்கரையில் புதைப்பதா அல்லது சொந்த ஊரில் புதைப்பதா எனக் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டாம் பாருங்கள்.’ இவ்வாறு ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு சுதந்திரமாகப் பேசமுடியும்.

நான் எழுதி இந்த வருடம் ‘பாடுக பாட்டே’ என்னும் கட்டுரைத் தொகுப்பு வெளியானது. அதில் தனிப் பாடல்கள் மற்றும் பழைய பாடல்கள் பற்றி எழுதினேன். தாசி, தேவடியாள் போன்ற சொற்களைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதியிருந்தேன். பிரபலமான பத்திரிகை விமர்சனம் எழுதி இருந்தது. நாஞ்சில் நாடன் மாதிரியான மூத்த எழுத்தாளர் “தேவடியாள்” என்று சொல்லைப் பயன்படுத்துவது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்பது போன்று அறிவுரை சொல்லியிருந்தார்கள். இதற்கு நான் எப்படிப் பதில் சொல்வது? என் தளத்தில் எழுதலாம் அல்லது கட்டுரை எழுதலாம். இதற்குக் கும்பமுனி கதை மூலம் பதில் சொல்வது எனக்கு எளிதாக இருக்கிறது. தவசிப்பிள்ளை “அப்படி ஏன் எழுதனும்? ‘பாலியல் தொழிலாளி’ அப்படினு வந்திடுஞ்சி இல்லையா. நீர் ஏன் கொழுப்பு எடுத்து தேவடியானு எழுதுறீர்” என்று கேட்பார். கும்பமுனி பதில் சொல்வார், “திருவள்ளுவர் நண்ணேன் பரத்த நின் மார்பு என்று சொல்கிறார் அப்பா ஒரு பாட்டில். நீ கண்டவளோடு படுத்துவிட்டு வந்திருக்கிறாய். அவள் மார்புச் சந்தனம் உன் மார்பில் படிந்திருக்கு; அதனால் உன் மார்பை நண்ண மாட்டேன்’ எனப் பொருள். ‘பரத்த’ என்ற சொல்லை என்னப்பா செய்கிறது?” விலைமுலையாட்டி, இருமனப்பெண்டிர், பொருட் பெண்டிர், தாசி, தேவடியாள், வேசி, பொது மகளிர், விபச்சாரி எனப் பல சொற்கள் இரண்டாயிரம் வருட இலக்கியத்தில் இருக்கு. உன் சௌரியத்துக்கு நீ பாலியல் தொழிலாளி என மாற்றிவிட்டுக் கோபம் வந்து திட்டுகிறபோது “ஏய்… பாலியல் தொழிலாளி மகனே” எனத் திட்டுகிற காலம் வரைக்கும் அந்தப் பழைய சொல் இருக்கும்தானே?

நான் எழுத்தாளனாக மிகவும் எளிமையான வலு இழந்த தனி ஆள். எனக்குச் சில அநீதிகள் நடக்கும்போது, பதில் சொல்ல முடியாத விதத்தில் தாக்குதல்களைச் சந்திக்கிறபோது அந்தக் கணக்கை நேர் செய்வதற்காகக் கும்பமுனி எனக்குத் தேவைப்படுகிறார். திருநெல்வேலிப் புத்தகக் கண்காட்சியில் பேசும்போது ‘புதுமைப்பித்தனுக்கு உங்க ஊரில் ஏன்டா சிலைகள் இல்லை எனக் கேட்டேன்’. நாஞ்சில் நாடன் வெள்ளாளன் புதுமைப்பித்தன் வெள்ளாளன் பிள்ளைமாருக்கு பிள்ளைமார் எனக் கணக்குப் போட்டுப் பேசினால், இதற்கு நான் ஏதாவது ஒரு வகையில் எதிர்வினையாற்ற வேண்டும் அல்லவா? இதற்கு ஆவநாழி டிசம்பர் இதழில் வெளியான “அங்காடி நாய்” என்ற கதையில் பதில் சொல்லியாகிவிட்டது. கும்பமுனி தவசிப்பிள்ளை இணைந்து 28 கதைகள் வந்துவிட்டன. இந்தியாவில் வங்காள மொழியில் இரண்டு கதாபாத்திரங்களை வைத்து 35 சிறுகதைகள் வந்து இருக்கின்றன. அதில் சில படமாகவும் வந்துள்ளன. சத்தியஜித் ரே கூடப் படமாக்கி இருக்கிறார். 2018இல் தமிழினி “வல் விருந்து” என்ற தலைப்பில் 19 கும்பமுனி கதைகளை வெளியிட்டது. இப்போது 3 வருடத்தில் 28 கதைகளாகிவிட்டன. 35 என்ற எண்ணைத் தாண்டிவிட வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது.

சுனில் கிருஷ்ணன்: கடந்த சில ஆண்டுகளில் கும்பமுனிதான் மிகவும் உயிர்ப்பாக இருக்கிறாரா?

நாஞ்சில் நாடன்: அந்த வகையில் சூழல் இருக்கிறது. “வல் விருந்து” சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் சொல்லியிருக்கிறேன். இந்தச் சமூகம் எனக்குச் செய்ததை நான் வட்டியும் முதலுமாகத் திருப்பித் செய்கிறேன். மொய் எழுதுகிற மாதிரிதான். இந்தச் சமூகம் எனக்கு மொய் எழுதி இருக்கிறது அல்லவா! அதற்கு கும்பமுனி மூலமாகத் திருப்பி மொய் எழுகிறேன்.

சுனில் கிருஷ்ணன்: நீங்கள் கும்பமுனி கதைகள் எழுதுவது மிகவும் சுலபமாக எழுதுவது போன்று இருக்கிறது. அதனால் ‘பூனைக்கண்ணன்’ மாதிரியான கதைகள் எழுதுவதைக் குறைத்துக்கொண்டீர்களா? அல்லது அது குறைந்ததால் இது கூடிவிட்டதா?

நாஞ்சில் நாடன்: நான் மொத்தம் 151 கதைகள் எழுதியுள்ளேன். ஆவநாழியில் ‘உண்டால் அம்ம’, விகடன் தீபாவளி இதழில் ‘அம்மை பார்த்திருந்தாள்’, மணல்வீட்டில் ‘கோமரம்’, ‘அன்னக்கொடை’ போன்ற கதைகளை ஐந்தாறு மாதங்களில் எழுதினேன். கும்பமுனி கதை எழுதுவதற்கான தேவை இருக்கும்போதுதானே அதை எழுத முடியும். முன் தீர்மானம் எதுவும் கிடையாது. ஒரு பிரச்சனையை எழுதப் போகிறேன் என்றால் கும்பமுனி கதையைச் சரளமாக எழுதிவிடுவேன். என்னை வெளிப்படுத்திக்கொள்வது எளிதாக இருக்கிறது. உதாராணத்திற்கு, வெளிவராத கும்பமுனி கதையில் அவர் கழிவறை போகக் கதவு திறக்கிறார். கக்கூஸ் மேடைக்கு மேல் ஒரு பாம்பு படம் எடுத்தபடி சுருண்டு இருக்கிறது. ஆதிசேடனின் வாரிசுகளில் ஒன்றாகத்தானே இருக்கமுடியும். ஒன்பது பெரும் பாம்புகள் உள்ளன. சமீபத்தில் ஒரு கோயில் சிலையின் கழுத்தில் ஏறி உட்கார்ந்து படம் எடுத்தான் அல்லவா! வாட்ஸ்அப்பில் பரபரப்பாக இருந்ததே! தீபம் எல்லாம் காட்டினார்களே! அங்கெல்லாம் விட்டுவிட்டு இவன் எதுக்கு கக்கூஸ் மேடையில வந்து உட்கார்ந்து இருக்கான் என்று கதவை மூடிவிட்டுச் சென்றுவிடுவார், வந்த வழியே போய்க்கொள்ளட்டும் என்று! இப்படியான சம்பவங்களை விமர்சனம் செய்ய வசதியாக இருக்கிறது. போகிற போக்கில் வேறு விஷயங்களைச் சொல்வது இல்லாமல் பிரத்தியேகமாகச் சொல்வது இதில் சுலபம்.

சுனில் கிருஷ்ணன்: மரபான வடிவங்களைப் பேணுபவர் எனும் எண்ணமே உங்களைப் பற்றிப் பொதுவாக உள்ளது. தொடக்க காலச் சிறுகதைகளை வாசிக்கும்போது அவை சிறுகதையின் உடல் பகுதி, முடிவு திருப்பம் எனக் கச்சிதமான செவ்வியல் சிறுகதை வடிவையே அதிகம் தேர்ந்துள்ளதைக் காணமுடிகிறது. காலப்போக்கில் தன்ராம் சிங், கான் சாகிப் போன்றவை ஒரு கதாபாத்திரத்தின் முழு வாழ்வையும் சொல்லிச் செல்லும் நாவல் தன்மை கொண்ட கதைகளாகப் பரிணாமம் கொள்கின்றன. சொல் ஆராய்ச்சி, சமூக விமர்சனம், ஒரு நிகழ்வு எனக் கட்டுரைத்தன்மை கொண்ட கதைகளும், தேர்தல் கமிஷனுக்குக் கும்பமுனி சொல்லும் ஆலோசனைகளும்கூடக் கதையாக வந்துள்ளன. கடவுள்கள் இடைவெட்டி உரையாடும் கதைகள், குறிப்பாக ‘ஏவல்’ போன்ற கதையில் ஒரு பனை கருக்கு பாத்திரமாகப் பேசுகிறது. ‘சதுரங்க குதிரையில்’ நாராயணனுக்கு வரும் மரண அச்சம், மேற்சொன்ன நாவல்களில் உள்ள இருத்தலியல் பகுதிகள் எனப் பலவும் உங்களை சுந்தரராமசாமி, அசோகமித்திரன், நகுலன் என நவீனத்துவ எழுத்தாளர்களுக்கு நெருக்கமாக்குகின்றன. கும்பமுனி சிறுகதைகள் மற்றும் நாட்டார் தெய்வங்கள் பாத்திரம் வகிக்கும் கதைகள் இயல்பாகப் பின்நவீனத்துவக் கூறுகள் கொண்டவையாக உள்ளன. குறிப்பாக வெவ்வேறு முடிவுகள் கொண்ட ‘படுவப் பத்து’ மாதிரியான முயற்சிகள் வியப்பை அளித்தன. இயல்பாகப் பரிணாமம் அடைந்து வரும்போது உங்களை யதார்த்தவாத எழுத்தாளர் என முத்திரை குத்துவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நாஞ்சில் நாடன்: அரைகுறை விமர்சனம் எழுதுகிறவர்கள் மற்றும் அரைகுறை வாசிப்பு உடையவர்கள், சில பேராசிரியர்கள்தாம் இப்படி அடையாளப்படுத்தப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு நம்மை ‘Brand’ செய்யவேண்டியுள்ளது. வட்டார வழக்கு நாவல்கள் எழுதி 20 வருடம் ஆகிவிட்டது. சிறுகதைகள் மற்றும் கும்பமுனி உரையாடல்களில் வட்டார வழக்கு வரும். சில சொற்களை வேண்டுமென்றே கட்டுரைகளில் பயன்படுத்துகிறேன். “வட்டார வழக்கு” என்ற டப்பிக்குள் என்னை அடைக்கிறவர்கள் இன்னும் “தலைகீழ் விகிதங்களை”த் தாண்டிப் படிக்காதவர்கள். ஒரு காலத்தில் யதார்த்தவாதம் எழுதுவது என்றால் ஏதோ கெட்ட வார்த்தை பேசுவது போன்ற எண்ணத்தைக் கொடுத்துவிட்டார்கள். கண்மணி குணசேகரன், கீரனூர் ஜாகீர்ராஜா, அழகிய பெரியவன் ஆகியோர் வட்டார வழக்கில் பல கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எந்த எழுத்தாளனும் நான் இப்போது எதார்த்தவாத, பின்நவீனத்துவக் கதைகள் எழுதப் போகிறேன் என முன்திட்டம் செய்வதில்லை. சிலர் மேற்கத்தியத் தாக்கத்தால் பிறமொழி ஆசிரியர்களைத் தழுவி அவர்கள் செய்வதுபோல் முயற்சி செய்கிறார்கள். அது அவர்களுடைய பிரச்சனை, அதில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. 40 வருடங்களுக்கு முன்னால் நாஞ்சில்நாடனைப் படித்துவிட்டு இவர் எதார்த்தவாத வட்டார வழக்கு எழுத்தாளர் எனச் சொல்வதற்கு நான் எங்குச் சென்று மேல்முறையீடு செய்வது? அதைப் புறக்கணித்துச் சென்றுவிடுவேன்.

Brecht சொல்வான், “நீ எந்தப் பெயரால் என்னை அழைத்தாலும் அது நான் இல்லை.” சரியாகச் சொல்கிறேனா என்று தெரியவில்லை.

சுனில் கிருஷ்ணன்: “நீங்கள் எந்த கனவானைத் தேடி வந்தீர்களோ அந்தக் கனவான் நான் இல்லை.”

நாஞ்சில் நாடன்: புதுமைப்பித்தன் ஓர் இடத்தில் சொல்வார், “உங்கள் கையில் உள்ள அளவுகோலைக் கொண்டு என்னை அளக்க வராதீர்கள்.” கல்லூரிப் பேராசிரியர், முற்போக்கு எழுத்தாளர், விமர்சகர்கள், ஊடகவியலாளர் என எல்லாரும் கையில் ஓர் அளவுகோலை வைத்துக்கொண்டு ஒரு படைப்பிலக்கிய ஆளுமையை அளக்க வருகிறார்கள் என்றால் அவர்கள் அளவுகோல் மீது கோளாறு. அது பற்றி நாம் ஏன் அக்கறைப்பட்டுக்கொள்ள வேண்டும்.

2000 வருடம் முன்னால் இலக்கணம் எழுதிய புலவர்கள், இலக்கணத்திற்கு ஓர் உதாரணச் செய்யுள் எழுதுவார்கள். “அம்போதரங்கம்” என்ற ஒரு பா வகை உள்ளது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பாவிற்கு இலக்கியங்களில் எடுத்துக்காட்டு கிடைக்கவில்லை என்றால் எடுத்துக்காட்டுச் செய்யுளை இவர்களே எழுதிவிடுவார்கள். இதற்குப் பழைய இலக்கண நூல்களில் நிறைய சான்றுகள் உள்ளன. அது போலப் பல கோட்பாட்டை முன்னுரைப்பவர்கள் அந்தக் கோட்பாட்டுக்குத் தகுந்த படைப்புகளை அவர்களே செய்வார்கள். அந்தக் கோட்பாடுகளை வைத்துக்கொண்டு மற்றவற்றை அளவிடுவார்கள். எதார்த்தவாதம், பின்நவீனத்துவம், மாய யதார்த்தவாதம் என்று எல்லாம் பெயர்கள்தானே. நான் எளிதாகக் கடந்து போய்விடுவேன். நீங்கள் என்ன பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும், “நான் அது இல்லப்பா; நான் வேற ஆளு,” என்று கருதிக்கொள்வேன். வழக்கும் இல்லை; பிரச்சனையும் இல்லை.

சுனில் கிருஷ்ணன்: நீங்கள் நிறைய ஆங்கில வாசிப்பு பற்றிப் பேசி இருக்கிறீர்கள். இப்போதும் ஆங்கில வாசிப்பு உண்டா?

நாஞ்சில் நாடன்: ஆங்கில வாசிப்பிற்கான நேரம் குறைத்துவிட்டது. இறுதியாக விரும்பி வாசித்த நூல் ஆசிரியர்கள் Philip Roth போன்றவர்கள். ஆங்கில வாசிப்பிற்கான நேரத்தைப் பழந்தமிழ் இலக்கியம் படிப்பதற்குப் பயன்படுத்துகிறேன். முறையாகத் தமிழ் கற்றவன் இல்லை. கணிதம் பயின்றவன். பள்ளி மற்றும் கல்லூரி என முறையே 14 வருடங்கள் தமிழை மொழியாகக் கற்றவன். அந்தத் தமிழ்க் கல்வியைக் கொண்டு தமிழ் இலக்கியக் கல்வியைப் பல வகையில் மேம்படுத்தியிருக்கிறேன். எழுதவேண்டும் என்ற உத்தேசத்திற்காகச் செய்யவில்லை.

புறநானூற்றை ஆறு உரைகளில் படித்திருக்கிறேன். சுஜாதா, சாலமன் பாப்பையா, புலியூர் கேசிகன், ச.வே. சுப்பிரமணியன், ஔவை துரைசாமிப்பிள்ளை, உ.வே. சாமிநாதய்யர் என்று பலருடைய உரைகளைப் படித்திருக்கிறேன். ஒருவர் உரை போதும். பாட்டுக்கு உரை எழுதும்போது ஒரு படைப்பாளியாய் மொழியில் பரிச்சயம் உள்ள ஒருவருக்குச் சந்தேகம் வரும். அதை உரை ஆசிரியர் சிலசமயம் தாண்டிப் போயிருப்பார். அவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அந்தச் சந்தேகத்தைத் தெளிவு பெறுவதற்காக இன்னொரு தடவை வேறொரு உரையினைப் போய்ப் பார்க்கிறேன். ஆங்கில வாசிப்பின் நேரத்தை இந்தப் பக்கமாகத் திருப்பி 10, 15 வருடங்கள் ஆகிவிட்டன.

உதாரணமாக நம்மாழ்வார் அம்மாவின் ஊர் ‘திருவெண்பரிசாரம்’. இப்போது ‘திருப்பதிசாரம்’ என்ற பெயரில் இருக்கிறது. என் ஊரிலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் அந்த ஊர் உள்ளது. 12 வயதிலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் வயதானவர்களுடன் சேர்ந்து நடந்துபோய்த் தெப்பக்குளத்தில் குளித்து, சாமி கும்பிட்டு, பிரசாதம் சாப்பிட்டு அவர்களுடனே திரும்பி வருவேன். அப்போதிலிருந்து சைவ, வைணவ இலக்கியங்கள் வாசிக்கப் பிடிக்கும்.

“ஒருவாடு உழல்வேனை” என்று நம்மாழ்வார் பாடியுள்ளார். இதற்கு உரை ஆசிரியர்கள் “ஒருபாடு உழல்வேனை” எனப் பிரிக்கிறார்கள். ஒரு+பாடு. பாடு என்றால் படுதல், துன்பம். நிறைய துன்பம் உழல்கின்ற என்னை என பொருள் எழுதுகிறார்கள். “ஒரு வாடு” என்பது ஒரு + பாடு எனப் பிரிகிற சொல் இல்லை. ஒருவாடு என்பது தனிச்சொல். ஒருவாடு என்றால் நிறைய என்று பொருள். நீங்கள் என் வீட்டுக்கு வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நான் ஐந்து, ஆறு தேங்காய்களை எடுத்துபோகச் சொல்கிறேன். நீங்கள் எங்கள் வீட்டில் ‘ஒருவாடு கிடக்கு’ எனச் சொல்கிறீர்கள். எங்கள் வீட்டிலே நிறைய கிடக்கிறது எனப் பொருள். நம்மாழ்வார் அம்மா ஊர் திருவண்பரிசாரம் என்கிற காரணத்தால் சில காலம் அவர் அம்மா ஊரில் வாழ்ந்திருப்பார். அதனால் “ஒருவாடு” என்ற சொல்லை அப்படியே கையாண்டிருப்பார். உரை ஆசிரியர் தமக்குத் தெரிந்த வகையில் பொருள் எழுதுகிறார்கள். இது சங்க இலக்கியம், கம்பன், சீவகசிந்தாமணி என எல்லாவற்றிலும் நடந்துள்ளது. உரை ஆசிரியர் பிறந்து வளர்ந்த ஊர், பெற்ற கல்வி, ஆகியவற்றின் அடிப்படையில் சொற்களுக்கு உரை கண்டுபிடிக்கிறார்கள். என்னை மாதிரி வேற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாடனுக்கு வேறு பொருள் கிடைக்கிறது.

சமீபத்தில் “செடியாய வல்வினைகள்” என்ற கட்டுரை எழுதினேன். “செடி ” என்றால் அடர்த்தி, செறிவு என்று பொருள். குலசேகர ஆழ்வார் “செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே” எனப் பாடுகிறார். எங்கள் ஊரில் செடி என்றால் பால் குடிக்கிற குழந்தைக்கு ‘செடி ‘தட்டிருக்கு’ எனச் சொல்வார்கள். செடி என்பது ‘Negative energy’. பால் குடிக்கிற குழந்தையை மாதவிடாய் காலத்தில் இருக்கிற பெண், கருச்சிதைவு அடைந்த பெண் ஆசையாகத் தூக்கிக் கொஞ்சியதால் அந்தக் குழந்தைக்கு ஊறு வருகிறது. அது ‘கீரை கடைசல் நிறத்தில்’ மலம் கழிக்கிறது. இந்த நோய்க்குச் “செடி” என்று பெயர். செடி தட்டிருக்கு எனச் சொல்வார்கள்.

“கொதி” என்ற சொல் இருக்கிறது. “கொதி” என்பது நீங்கள் சாப்பிடுகிற பலகாரத்தை ஆசையோடு பார்த்து உமிழ்நீர் சுரக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்விடத்தில் ‘கொதி’ என்றால் உங்களுக்கு வரக்கூடிய ‘Negative energy’ எனப் பொருள். அதற்குச் செரிமானம் இன்மை என்று பொருள் சொல்வார்கள். கொதிக்குத் தொடுதல், செடி தட்டுதல், காற்று பிடித்தல் என பல கை வைத்தியங்கள் உண்டு நாஞ்சில் நாட்டில்.

விவேகானந்தர் சொல்கிறார் ‘Thought is a force’ என்று. ‘நல்லா இருங்க சுனில்’ என நான் மனதார சொன்னால் அது நேர் சக்தி (Positive energy). ‘இவன் எல்லாம் எங்கங்க…’ என்றால் அது எதிர்மறை சக்தி (Negative energy). அதற்கு உண்டான பயன்கள் உள்ளன. மாய மந்திர வாதம் இல்லை.

“தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்” எனச் சொல்வது எல்லாம் இந்தச் சமாச்சாரம்தான். நான் வேறு பொருள் பார்க்கிறேன். அதனால் வேறு வகையான உரைகள் தேவைப்படுகின்றன. இந்த வாசிப்பில் அதிக கவனம் செலுத்துவதால் ஆங்கில வாசிப்பு குறைந்துவிட்டது. எதிர்மறை, நேர்மறை என்ற சொற்களைக் கையாளுகிறோம். இவற்றின் பொருத்தப்பாடு பற்றி சமீபத்தில் எழுதிய கும்பமுனி கதையில் கேட்டிருக்கிறேன்.

செய்யுள், கவிதை என்ற சொற்களைப் பயன்படுத்துகிறோம். கவிதை என்ற சொல்லே பிற்காலச் சொல். கம்பன் சொல்கிறார் “சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரி.” என்று கவி என்ற சொல்லுக்குக் கவிதல், குரங்கு, கவிஞர் எனப் பல பொருள்கள் உள்ளன. கவிதைதான் நமக்குப் பாடல் அல்லது பாட்டு.

புலவர், பாடல் ஆசிரியர், கவிஞர் எனச் சொற்களைப் பயன்படுத்துகிறோம். கவிஞர் என்ற சொல் பொதுப்பால். ஆண் பால், பெண் பால் என இருவரையும் குறிக்கும். அமைச்சர், தச்சர் எனப் பல பொதுப்பால் சொற்கள் உள்ளன. நீங்கள் கவிதாயினி எனச் சொல்கிறபோது கும்பமுனிக்கு ஓர் ஆட்சேபணை வருகிறது. இப்போதைய ஆட்சியரை அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் எனச் சொல்வீர்கள். ஆசிரியர், ஆசிரியை என்கிறீர்கள். மருத்துவர், மருத்துவச்சி போன்ற சொற்கள் உள்ளன. ஆட்சியர் என்பதற்கு என்னப்பா பெண்பால்? பெண் ஆட்சியராக இல்லையா? இது மாதிரியான கேள்விக்கு விடை தேடிப் போகிறபோது இலக்கிய அகராதிகளைப் புரட்டுகிறேன். இதற்கே நேரம் சரியாக இருப்பதால் ஆங்கில வாசிப்பைக் குறைத்துக்கொண்டேன்.

சுனில் கிருஷ்ணன்: புனைவு எழுதுவதில் கிடைக்கக்கூடிய கிளர்ச்சி கட்டுரை எழுதுவதில் கிடைக்கின்றதா?

நாஞ்சில் நாடன்: கட்டுரை என்பது தமிழில் பெரும்பாலும் தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், கம்பன், பாரதி சார்ந்து மிகவும் இறுக்கமான மொழி வடிவத்தில்தான் எழுதி இருக்கிறார்கள். எந்தப் பெரிய அறிஞருடைய கட்டுரைத் தொகுப்பை எடுத்துப் பார்த்தாலும் மிகவும் இறுக்கமாகவும் செறிவாகவும் இருக்கும். அவர்கள் ஆய்வுச் சூழலுக்குள் இருக்கும் கருத்துக்களை நான் ஆராய்ச்சி செய்வதில்லை. கட்டுரைகள் எல்லா மக்களும் வாசிக்கக்கூடிய தளத்திற்கு வரவேண்டும். கல்வியாளர்கள், கல்லூரி மாணவர்கள் மட்டும் வாசிக்கக்கூடிய விஷயம் அல்ல. இன்றைக்குக் கல்லூரிப் பேராசிரியர்கள் எழுதுகிற கட்டுரைகளை வாசிக்கும்போது “சொல்லிச் செல்கிறார்” என 20 முறை கட்டுரை முடிவதற்குள் சந்தித்துவிடலாம். மூன்று பக்கத்தில் கட்டுரை எழுதினாலும் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற வடிவம் இருக்கும். இந்த வடிவத்தைவிட்டே இன்னும் வெளியே வரவில்லை.

நான் முதன் முதலில் எழுதிய கட்டுரை “நாஞ்சில் நாட்டின் வெள்ளாளர் வாழ்க்கை, காலம் நிகழ்த்திய மாற்றங்கள்.” அந்தக் காலத்தில் சுந்தர ராமசாமியின் ஒரு கூடுகையின்போது 26 பக்கங்களில் எழுதி வாசித்தேன். அவருடைய தூண்டுதலில் அதை விரிவாக்கி முழு நூலாக்கினேன். தொடர்ந்து தூண்டுதல் வரவர நான் கட்டுரை எழுதினேன். சொல்லப் போனால் கட்டுரைகளுக்குள்ளேயே உரையாடல் வைக்கிற ஆள் நான் மட்டுமே.

ஒருமுறை கவிஞர் சிற்பி சொன்னார் “நாஞ்சில் நாடன் கட்டுரையை நவீனமாகக் கையாளுகிறார். தற்போதைய கட்டுரை இலக்கியத்துக்கு அவர் ஒரு திருப்புமுனை.” எனக்கு அது சான்றிதழ் கொடுத்தது போன்று இருந்தது. எனக்கு இயல் விருது வழங்கப்பட்டபோது அ.முத்துலிங்கம் சொன்னார் ‘கட்டுரை இலக்கியத்திற்கு நாஞ்சில் நாடன் ஒரு திருப்புமுனை’ என்று. சரியான பாதையில்தான் போகிறேன் எனத் தோன்றியது. கட்டுரைகளுக்கான தலைப்புகளையும் கல்வியாளர்கள் பயன்படுத்தும் சேமிப்பிலிருந்து நான் எடுப்பதில்லை. குடி பற்றிக் கட்டுரை எழுதியிருக்கிறேன். நான் அடிக்கடி குடிப்பவன். ஆனால் குடிநோயாளியோ குடிகாரனோ அல்ல. இதைப் பற்றி அதனுடைய நன்மை தீமைகளைப் பகுத்தாய்ந்து என்னால் சில கட்டுரைகள் எழுத முடிந்தது. இதை நீங்கள் கொண்டாடலாம்; கொண்டாடாமல் போகலாம்.

இதுவரை அச்சுக்கு அனுப்பாத, “மயிரு” என்ற சொல் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். எனக்கு எங்கிருந்து உத்வேகம் கிடைக்கிறது என்றால் ஒரு நாள் பேருந்தில் பயணம் செய்கையில் கல்லூரி மாணவர்கள் பேசிக்கொண்டு வந்தார்கள். அப்போது ஒரு மாணவன் தன் சக தோழனிடம் “அப்போ என்ன hairக்கு’டா அதைச் சொன்ன?” என்றான். அதை நான் பதிவு செய்துகொண்டேன். தமிழ் இலக்கியச் சூழலில் எந்த ஆணியையும் உன்னால் பிடுங்கமுடியாது. எந்தப் புல்லையும் பிடுங்க முடியாது எனச் சொல்கிறார்கள். இங்கே அது ஆணியைக் குறிப்பது அல்ல. இந்நிலையில் “மயிரு” என்ற சொல் மீது மட்டும் ஏன் இந்த வெறுப்பு என 13 பக்க அளவில் கட்டுரை எழுதினேன். ரோமம் (சமஸ்கிருதம்), சிகை, தலைமயிர், கேசம் (கேஸ்-ஹிந்தி), கூந்தல், அளகம், சிகாமணி, குழல் (கருங்குழலி என அம்மன் பெயர் இருக்கிறது, கார்குழலி இருக்கிறது) எனப் பல சொற்கள் உள்ளன. ஆயினும் மயிர் மட்டும் எப்படிக் கெட்ட வார்த்தையானது! திருவள்ளுவர் பயன்படுத்திய சொல்…

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

திருவள்ளுவர் பயன்படுத்திய சொல் எப்படிக் கெட்ட வார்த்தையாகும்! கம்பன் 55 முறை பயன்படுத்துகிறான். சங்க இலக்கியத்தில் ‘மயிர்’ என்ற சொல் உண்டு. அதைப் பயன்படுத்தாத இலக்கியம் இல்லை. எல்லாவற்றையும் அந்தக் கட்டுரையில் தொகுத்துள்ளேன்.

குணங்குடி மஸ்தான் சாகிபு பாடுகிறார்…

மீசையுள் ளாண்பிள்ளைச் சிங்கங்கள் என்கூட
வெளியினில் வாருங்கள் காணும்
நாசி நிரம்பவும் மயிர்தான் இரண்டுகால்
நடுவிலும் ஒருகூடை மயிர்தான்

சமகால, இலக்கிய மேற்கோள், வடமொழி எடுத்துக்காட்டுகள், சினிமா என எல்லாத் தளங்களிலும் இச்சொல்லை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் எனக் கூறியுள்ளேன். இது பற்றிக் கேட்கக்கூடிய மூத்த குடிமகனாக வயது வந்துவிட்டது.

கட்டுரையை மிகவும் ஆக்கச்சிந்தனையுடன் எழுதுகிறேன். இதுவரை 300 கட்டுரைகள் எழுதியிருப்பேன். 20 வருடமாக நாவல் எழுதாமல் போனதற்கு அதுகூடக் காரணமாக இருக்கும்.

சுனில் கிருஷ்ணன்: உங்களுடைய கதை ஒன்றில் “உணவு என்றில்லை, எதுவாயினும் புதியனவற்றை முயன்று பார்க்காதவன் உச்சங்களை அடைய இயலாது” என்று எழுதியிருப்பீர்கள். படித்தவுடன் இதுதான் நாஞ்சில் நாடன் என்று தோன்றிய வரி. உணவைப் பற்றி மட்டுமல்ல, சொற்களைப் பற்றிக் கூறும்போதும் உணவில் எப்படி எந்த விலக்கும் இல்லையோ அதைப் போலச் சொற்களிலும் எந்த விலக்கும் இல்லை. ஓர் உணவு எப்படித் தன்னளவில் இழிவானதோ மோசமானதோ இல்லையோ, அதே போல ஒரு சொல்லும் தன்னளவில் இழிவானதோ மோசமானதோ இல்லை என்று சொல்வதாகத்தான் என்னளவில் நான் உங்கள் கருத்திலிருந்து புரிந்துகொள்கிறேன். இது இவ்வாறுதான் புரிந்துகொள்ளப்பட வேண்டுமா? சொற்கள் சார்ந்து நமக்கிருக்கும் பிரச்சினைகள் என்ன? சொற்களைப் பயன்படுத்துவதில் உள்ள வரம்புகள் மற்றும் சிக்கல்கள் என்ன?

நாஞ்சில் நாடன்: கல்வியாளர்கள் ஒரு குறுக்கீடு என்று நினைக்கிறேன். ஆய்வுக் கட்டுரை எழுதுவது போல் இலக்கியவாதி இலக்கியம் படைக்க முடியாது. M.T வாசுதேவன் நாயர் மலையாளத்தில் ஒரு கதை எழுதுகிறார். முதல் வரி “வரும்.” அடுத்த வரி “வராதிரிக்குல்ல.” இதில் நீங்கள் எழுவாய் பயனிலையைக் கொண்டுபோய்ப் பொருத்த முடியாது. “வரும்” என்றால் எது வரும்? மழை வருமா? பிசாசு வருமா? பொண்டாட்டி வருவாளா? பிச்சைக்காரன் வருவானா? இது படைப்பு மொழிக்கான சுதந்திரம். இவ்வாறு மொழியின் சகல சாத்தியங்களையும் பயிற்சி செய்பவன், பரிசீலிப்பவன், யோசிப்பவன் படைப்பிலக்கியவாதி. இந்த மொழியை அடுத்த நூற்றாண்டுக்குக் கடத்துபவர்கள் கல்லூரிப் பேராசிரியர்களோ அறிஞர்களோ விமர்சகர்களோ அல்ல. படைப்பிலக்கியவாதிதான் அடுத்த தலைமுறைக்கு மொழியைக் கடத்துகிறான்.

ஆட்சியர் என்னும் சொல் முதன்முதலில் கம்பன் கையாண்ட சொல். இன்று நாம் இமாலயத் தவறு என்று சொல்வதை “வான்பிழை” என்று வில்லிப்புத்தூரார் கையாண்டிருக்கிறார். சங்க இலக்கியத்திலுள்ள முத்தொள்ளாயிரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ம.இல. தங்கப்பா பின்நவீனத்துவம் என்றால் என்ன, அதன் பொருள் என்ன என்று என்னிடம் கேட்கிறார், ஞாபகத்தில் கொள்க! அவர் ஓர் ஆங்கிலப் பேராசிரியர். Modernism – நவீனத்துவம் சரி, அது என்ன post-modernism – பின்நவீனத்துவம்? அதன் பொருள் என்ன? இதை நமக்கு அறிமுகம் செய்தது யார்? இதைப் பிடித்துக்கொண்டுதான் இத்தனை வருடங்கள் சுற்றிக்கொண்டிருக்கிறோம். Sexual enjoyment என்பதை உடலுறவு என்கிறோம். உண்மையில் அது உடல் சார்ந்தது மட்டும்தானா? இல்லை! அது உடல் மற்றும் மனமும் சார்ந்தது. உடலுறவு என்னும் சொல்லுக்கு மாற்றுச்சொல் நம்மிடம் இருக்கிறது, கலவி, உவப்பு, புணர்ச்சி, முயக்கம், கூடல் என்னும் சொற்கள் இருக்கின்றன. வையாபுரிப்பிள்ளை 1920இல் தொகுத்த பேரகராதியில் உடலுறவு என்னும் சொல் இல்லை. இந்தச் சொற்களை நமக்கு யார் அறிமுகப்படுத்துகிறார்கள்? நாம் எந்தக் காரணத்திற்காக அவர்களைப் பின்பற்றுகிறோம்?

நமக்கான சுதந்திரம் என்பது வேறு. நாம் அவர்களுக்குக் கால் பணிந்து நடக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. நேர்மறை என்றால் என்ன அர்த்தம்? “எதிர்” “எதிர்மறை” சரி. “ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்” கூடப் படித்திருக்கிறோம். நேர்மறை என்னும் சொல்லுக்கு என்ன பொருள்? ஆனால் இந்தச் சொல்லைத்தானே நாம் எல்லாரும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவர்கள் சொல்லித்தரும் இந்தச் சொற்களைப் பயன்படுத்துவதில் எனக்குக் கூச்சம் இருக்கிறது. இந்த அரைகுறைத் தமிழ் அறிஞர்கள் கல்வியாளர்கள்/ பேராசிரியர்கள் என்னும் தோரணையில் அமர்ந்துகொண்டு ஒரு படைப்பாளியை வழிநடத்தத் தேவையில்லை. இதை ஒரு கட்டுரை எழுதுபவன் என்னும் காரணத்தினால் எதிர்த்துக் கேட்கிறேன். நாவலைப் புதினம் என்று சொல்வதற்கு இங்கு ஒரு குழு இருக்கிறதல்லவா? தொல்காப்பியர் ஒரு மொழிக்கென இருக்கும் தனிப்பட்ட ஒலிகளை உடைய சொற்களை அப்படியே பயன்படுத்தலாம் என்கிறார்.

சுனில் கிருஷ்ணன்: கோபக்கார இளைஞனாக இருந்த நாஞ்சில் நாடன் இன்றுவரை அதே கோபக்கார இளைஞனாக இருப்பது ஒருவகையில் உங்கள் படைப்பாற்றலுடன் சம்மந்தப்பட்டது என்று நினைக்கிறேன். அந்த வன்மமோ நஞ்சோ தொலைந்துவிட்டால் எழுதுவதுகூடக் குறைந்துவிடுமோ என்று எனக்குத் தோன்றுகிறது. அதனுடன் நீங்கள் பிணைந்துள்ளது போல் உங்களுக்குத் தோன்றுகிறதா?

நாஞ்சில் நாடன்: டி.கே பட்டம்மாளின் நாவில் ரமணமகரிஷி தேனைத் தொட்டு எழுதினார் என்று படித்திருக்கிறேன். நான் ஒரு சிறுகதைத் தொகுப்பு முன்னுரையில் சொல்லியிருப்பேன், எவனோ ஒரு பாவி என் நாவில் விஷத்தைத் தொட்டு வைத்துவிட்டான். நான் அதைத் துப்பித்தானே ஆக வேண்டும்?

சுனில் கிருஷ்ணன்: ஒருவகையில் எழுத்தாளர்கள் அனைவருக்குள்ளும் சுரக்கும் நஞ்சு. வேறொரு அவதானிப்பு. உங்கள் புனைவுகளில் சட்டெனச் சில பழந்தமிழ் வரிகள் தெறித்து விழுகின்றன. அவை தன்னளவில் தனித்துத் தெரிகின்றன. உங்கள் அளவிற்கு நவீன இலக்கியத்தில் பழந்தமிழ்ச் சொற்களை, வரிகளைப் பயன்படுத்தும் சமகால நவீன எழுத்தாளர் வேறொருவர் இல்லை என்றே எண்ணுகிறேன்.

நாஞ்சில் நாடன்: ஔவையார், “நரந்தம் நாறும் தன்கையால், புலவுநாறும் என்தலை தைவரும் மன்னே!” என்று பாடியுள்ளார். அதியமானுக்கும் ஔவைக்கும் இடையிலிருந்த நெருங்கிய நட்பு புலப்படுகிறது. என்னுடைய தலையில் கண்ட எண்ணெய்யைத் தடவிப் புலால் நாறும் தலை எனக்கு. அதியமானுடைய கை நரந்தம்பூ நாறுகின்ற கை. அந்தக் கையினால் என் தலையில் தடவிக்கொடுப்பான் என்று பாடியுள்ளார். நாம் குழந்தைகளின் தலையைத் தடவுவோம் இல்லையா, அதற்குத் தகுதியான வார்த்தை தைவரல், தடவுவான் என்று சொல்லவில்லை. கொஞ்சமாகக் கள் கிடைத்தால் எனக்குத் தருவான்; எனக்குக் கொடுத்துப் பாடச் சொல்வான். நிறைய கள் கிடைத்தால் எனக்கும் கொடுத்து அவனும் குடித்து என்னைப் பாடச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருப்பான் என்று ஒரு பெண்பாற் புலவர் பாடுகிறார்.

என் பக்கத்தில் என் பேரனோ, பிள்ளைகளோ அல்லது தம்பி தங்கை பிள்ளைகளோ அமர்ந்து உணவருந்துகையில் என் தட்டில் உள்ள முந்திரிப் பருப்பையோ அல்லது நல்ல கறித்துண்டையோ எடுத்து அவர்களுக்கு வைப்பேன். இதைப் புரிந்துகொண்டால்தான் ஔவையாருடைய பாடல் புரியும். அவனுடைய தட்டில் கொழுத்த மாமிசத் துண்டுகள் வந்தால் எடுத்து என் தட்டில் வைப்பான்; நிறைய சோறு கிடைத்தால் எல்லோரும் சாப்பிடுவோம். என்னை நோக்கி ஒரு வேல் பாய்ந்து வருமானால் அந்த வேலுக்கு அவன் மார்பைக் காட்டி நிற்பான். பகைவனுடைய வேல் அப்படிப்பட்ட அவனுடைய நெஞ்சில் பாய்ந்தது. அந்த வேல் உண்மையில் அவன் நெஞ்சில் பாயவில்லை. புலவர்களாகிய நாங்கள் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் பாய்ந்து அதை ஓட்டை ஆக்கியது என்று பாடுகிறார். இதைத் தாண்டிப்போய் எனக்கு இந்த உலக இலக்கியத்தில் எதுவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை என்று இப்போது தோன்றுகிறது. இது கல்வியை மறுப்பதில்லை, இந்த அனுபவம், அதாவது ஔவை அதியமானைப் பற்றிப் பாடுவதைப் படிக்கையில் கிடைக்கும் அனுபவம். ஒரு படைப்பிலக்கியவாதியாய் என்னால் கூடுதல் கவனத்தோடு அந்த வரிகளை உணர முடிகிறது. இப்படிப் பல இடங்கள் உள்ளன. இவற்றைச் சொல்வதற்கு நமக்கு ஒரு மொழி வாய்த்திருக்கிறது. நான் ஒரு சிறுகதை எழுதும்போது எனக்குக் குறிப்பிட்ட ஒரு பாட்டு ஞாபகம் வருகிறதென்றால் இது சிறுகதைக்குப் பொருந்தாது என்று தவிர்த்துவிட்டுச் செல்லமாட்டேன். அப்படி சிறுகதைக்கென்றோ கட்டுரைக்கென்றோ யாரும் இலக்கணம் எழுதிவைக்கவில்லை. நாம்தான் தடம் போடுகின்றோம். இது ஒரு பாதை இல்லாக் காட்டில் பயணம் போகிற முயற்சி என்று ந. பிச்சமூர்த்தி சொல்கிறார். நாம் ஒரு தடம் தேடிப் போகிறோம்; அந்தப் பாதையில் போகும்போது முட்கள் கீறும், குத்தும். அதனாலென்ன.

சுனில் கிருஷ்ணன்: எப்போதாவது விமர்சனங்களால் சலிப்படைந்தது உண்டா?

நாஞ்சில் நாடன்: எனக்குச் சலிப்பு வராது. நான் ஒன்பதாம் வகுப்புக்குப் புதுப் பள்ளிக்குச் செல்கிறேன். அந்தப் பள்ளியில் முதல் ஞாயிறன்று பள்ளியைச் சுத்தப்படுத்த அனைவரையும் அழைத்தார்கள். எல்லோருக்கும் சுக்குக் காபியும் வடையும் நிர்வாகத்திலிருந்து இலவசமாகக் கொடுத்தார்கள். நானும் சென்று வரிசையில் நின்றேன். எனது உடற்பயிற்சி ஆசிரியர் என் சட்டையைப் பிடித்து இழுத்து எத்தனை தடவை குடிப்பாய் என்றார். என் இயல்பு காரணமாக நான் எளிமையான உடை அணிந்துகொண்டு நிற்கிறேன். என்னைப் பற்றி அவருக்குத் தெரியாது. அவருக்கு யாரையாவது தண்டிக்க வேண்டும். அதனால் என்னைக் கேட்கிறார். நான் அவரிடம், “நா ரெண்டாவது வாட்டி வந்தத நீ பாத்தியால” என்று ‘வால’, ‘போல’ என்று பேசிவிட்டேன். உடனே என்னை அடிக்க கை ஓங்கினார். ஒரு வார காலத்தில் நான் திறமையானவன் என்று கண்டுகொண்ட ஆசிரியர் ஒருவர் தலையிட்டு நிறுத்தினார். இது மாதிரியெல்லாம் நம்மை அடிக்க வருவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எதிராக அறிக்கைகளோ கட்டுரைகளோ வெளியிடமாட்டேன். அவர்களுக்கு என் படைப்பின் மூலம் பதிலளிப்பேன்.

சுனில் கிருஷ்ணன்: பொதுவாக, லெளகீகச் சாமர்த்தியாசாலிகள் மீதிருக்கும் விமர்சனங்களை உங்கள் கதைகளில் பார்க்க முடிகிறது. அதேவேளையில் அசடு என்று சொல்லப்படும் பாத்திரங்களின் மேல் ஒரு பரிவும் காட்டப்படுகிறது. சாமர்த்தியம் என்பது ஒரு முக்கியமான திறனாகப் பார்க்கப்படும் இந்தக் காலத்தில், உங்கள் கதைகளில் அதன் மீதான விமர்சனம் தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. அவர்கள் மீது உங்களுக்கு என்ன கோபம்?

நாஞ்சில் நாடன்: இந்தி சினிமா ஒன்றில் ஒரு காட்சி. வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்ட், வெள்ளை ஷூ அணிந்துகொண்டு ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருப்பார்கள். நகைச்சுவை நடிகன் அவர்களைப் பார்த்து வெள்ளையும் சொள்ளையுமா போட்டிருக்கிறார்கள்; ஆங்கிலத்தில் வேறு பேசிக்கொண்டிருக்கிறார்கள்; கண்டிப்பாகக் கடத்தல்காரர்களாகத்தான் இருப்பார்கள் என்ற முன்முடிவுக்கு வந்துவிடுவான். இது மிகவும் பிரபலமான இந்தி நகைச்சுவை. அதுமாதிரி கொஞ்சம் தங்களை மேதாவிகளாகப் பாவித்துக்கொள்வது எந்தப் புதிய விஷயத்தையும் தெரிந்துகொள்வதற்குத் தடையாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்னால் ஒரு புதுப் படைப்பாளியை விரும்பி வாசிக்க முடிகிறது. நான் எந்தக் காலத்திலும் நான் ஓர் ஆளுமை; இத்தனை நாவல்கள் எழுதியிருக்கிறேன் என்று சிலாகித்தது கிடையாது. யாரைப் பார்த்தும் பொறாமை கொண்டது கிடையாது. அப்படிப் பொறாமை கொள்ளவேண்டும் என்றால் கணியன் பூங்குன்றனைப் பார்த்துதான் படவேண்டும். அவரைவிடவா பெரிதாக நாம் வேலை செய்துவிட்டோம்.

சுனில் கிருஷ்ணன்: சாமார்த்தியசாலிகளின் மீதான விமர்சனம் வெளிப்பட்டது போலவே பெரும்பாலான உங்கள் கதைகளில் எதிர்பார்க்காத நபர்களிடம் இருந்து அன்பு, பரிவு வெளிப்பட்டு மனம் விரிவு கொள்ளும் தருணங்கள் பதிவாகியுள்ளன.

நாஞ்சில் நாடன்: என் மகன் வடக்கு கரோலினா சார்லெட் நகரில் வேலை செய்கிறான். அங்கிருந்து நான் வாஷிங்டன் DC வந்து விமானம் ஏற வேண்டும். எனக்கு நிர்மல் பிச்சையா என்று ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். நான் 2012’இல் அங்குச் சென்றிருந்தபோது அவரது ஒரு குழந்தைக்கு மூன்று வயது; இன்னொரு குழந்தைக்கு ஆறு வயதிருக்கும். நான் ஒரு வாரம் அங்குத் தங்கியிருந்துவிட்டு டெக்சாஸ் வழியாகக் கலிபோர்னியா வரவேண்டும். அவர்களிடம் இருந்து விடைபெறும் வேளையில் அவரது மூத்த மகள் நான் தாத்தாவுக்கு ‘பை’ சொல்லமாட்டேன் என்று சொல்லிவிட்டு ஒரு மூலையில் சென்று அமர்ந்து கொண்டாள். நிர்மல் சென்று விசாரிக்கிறார். அந்தப் பிள்ளை கேட்கிறது ’தாத்தா வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. ஆனால் ஆறு மாதங்கள் இருக்கலாம் இல்லையா’ என்று. அதற்குத் தெரிந்துள்ளது விசா அனுமதி ஆறு மாதங்கள் என்று.

இத்தனைக்கும் எனக்குத் தனியே அறை கொடுத்திருந்தார்கள். காலை விழித்தவுடன் எழுந்துவந்து என் அறைக் கதவை மெதுவாகத் திறந்து தாத்தா விழித்திருக்கிறாரா, தூங்குகிறாரா அல்லது ஊருக்குப் போய்விட்டாரா என்று தினமும் பார்ப்பார்கள். எனக்கு இது மனதில் இருக்கிறது. என் ஊர் திரும்பும் பயணத்தில் நாம் திரும்ப வாஷிங்டன் DC வந்து விமானம் ஏறவேண்டிய அவசியம் இல்லை. என் பயணச் சீட்டை மாற்றிக்கொண்டு நிர்மல் பிச்சையா குழந்தைகள்- என் பேத்திகளிஞம் விடைபெற வாஷிங்டன் DC வழியாக ஊர்திரும்பத் திட்டமிட்டேன். என் மகன் வாகனத்தில் சார்லெட் விமான நிலையத்திற்கு என்னை வழியனுப்ப வந்திருக்கிறான். அப்போது வருகைப்பதிவு செய்யும் இடத்தில் ஒரு சலுகை கொடுக்கிறார்கள். கூடுதலாக நான்கு டாலர் செலுத்தினால் முதல் வகுப்பில் பயணிக்கலாம் என்று. நான் என் மகனிடம் “என்னடா நான்கு டாலர் என்றால் 200 அல்லது 300 ரூபாய்தானே இருக்கும்; முதல் வகுப்பில் போன அனுபவம் கிடைக்குமல்லவா போட்டுக்கொடு” என்றேன். அவனும் அதைச் செய்தான். முதல் வகுப்பில் பயணம் செய்வது என் வாழ்நாளில் முதலும் கடைசியும் அதுவே.

முதல் வகுப்பில் போனவுடனே மது பானங்கள் கொடுப்பார்கள்; அதை வைப்பதற்கான அந்தக் கைப்பிடியைச் சரிசெய்ய எனக்குத் தெரியவில்லை. என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் அமெரிக்கர்.பார்ப்பதற்குப் பணக்காரர் போலிருந்தார். அவர் எனக்கு உதவினார். இதில் நான் ஒரு கூச்சமும் அடைய வேண்டிய அவசியம் இல்லை.

இதுமாதிரி நாமும் பலருக்குச் செய்திருக்கிறோம். இதுபோல நான் பிரான்ஸ் போய்விட்டுத் திரும்ப வரும்போது அபுதாபியில் விமானம் மாறினேன். ஜன்னல் பக்கத்தில் ஒருவன்; நடு இருக்கையில் மற்றொருவன்; மூன்றாவது நடைபாதை பக்கத்து இருக்கையில் நான். அன்றைக்கு குலாப்ஜாமுன் பரிமாறியிருந்தார்கள். என் அருகில் இருந்த பையன் சாப்பிட்டுவிட்டுத் தட்டைத் தூக்கிக் கொடுக்கும் வேளையில் ஜீராவை என்மீது கொட்டிவிட்டான் நான் என்ன செய்யமுடியும்! அவன் வேண்டும் என்று செய்யவில்லை. அபுதாபியில் இருந்து கொச்சி நான்கு மணி நேரம்தான். அந்த ஜீரா வாசனையோடு அமர்ந்திருக்கிறேன். சட்டையில் அந்த இடம் மொறுமொறு என்று இருந்தது. கொச்சியிலிருந்து கோயம்பத்தூர் வேறு செல்லவேண்டும். இந்த மாதிரி இடங்களில் நாம் கொஞ்சம் மனிதத் தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் நாம் கேட்டால் உதவி கிடைக்கிறது, அது எந்த ஊராக இருந்தாலும்.

சுனில் கிருஷ்ணன்: நீங்கள் தொடக்ககாலத்தில் திராவிட இயக்க ஈர்ப்பால் நாத்திகராக இருந்தாகச் சொல்லியிருந்தீர்கள். தலைகீழ் விகிதங்கள் படிக்கும்போதுகூட அதன் தாக்கத்தை உணர முடிகிறது. குறிப்பாக, கம்பனின் அம்பறாத்தூணி முன்னுரையில் உங்கள் ஆசிரியர் பத்மநாபன் அவர்களைப் போய்ப் பார்க்கும்போது அவருக்குச் சமயம் வழியாகத் தமிழ்; உங்களுக்குத் தமிழ் வழியாகச் சமயம் என்று சொல்லியிருந்தீர்கள், அதற்குப் பின் இப்போது இந்தப் பூனைக்கண்ணன் போன்ற கதைகளைப் படிக்கும்போது ஒரு சித்தன் எப்படி உருவாகிறான், அந்த அம்மையை வாடி போடி என்று ஏசக்கூடிய ஒரு நெருக்கமான உறவு அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கிறது. அதேபோல் அன்றும் கொல்லாது இன்றும் கொல்லாது, தொல்குடி போன்ற கதைகள் இரண்டும் ஒரே அனுபவம் இரண்டு கதைகளாக மாறுகிறது என்று நினைக்கிறேன். இதை ஒரு வாசகனாகப் பார்க்கையில் ஓர் ஆன்மீகப் பார்வையில் ஒரு பரிணாமம் நடந்துள்ளதாகத் தோன்றுகிறது. உங்களுடைய ஆன்மீகம் என்றால் எதைக் கொள்வீர்கள்?

நாஞ்சில் நாடன்: திராவிட இயக்கம் நல்ல செல்வாக்கோடு எங்கள் நிலத்திற்கும் வந்தது. எங்கள் கிராம நூல் நிலையத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை ஏற்றி, அது எவ்வளவு தொலைவு வரை தெரிகிறது என்று போய்ப் பார்ப்பதுண்டு. அறுவடையான வயல் நெல்லை விற்றுக் கட்சி செலவுகள் செய்ததுண்டு. நாஞ்சில் நாட்டில் தொடங்கப்பட்ட இரண்டாவது கிளை எங்கள் ஊரில் தொடங்கப்பட்டது. 120 வீடுகள் கொண்ட எங்கள் ஊரில் அன்பழகன், நாஞ்சில் மனோகரன் பேசினார்கள்.

நூலகத்தில் தென்றல், திராவிட நாடு, முரசொலி, மன்றம், நம் நாடு போன்ற பத்திரிகைகள் வரும். அவற்றைத் தொடர்ந்து வாசிப்பேன். 1967இல் B.Sc இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய கன்னியாகுமரி தொகுதி முழுக்கச் சுற்றினேன்.

“காகிதப்பூ மணக்காது; காங்கிரஸ் சமதர்மம் இனிக்காது.”
“கூலி உயர்வு கேட்டான் அத்தான் குண்டடிபட்டு செத்தான்.”
“அரியலூர் அழகேசா நீ ஆண்டது போதாதா, மக்கள் மாண்டது போதாதா?”

இது போன்ற வசனங்களை கூவிச் சென்றுதுண்டு. அதே சமயத்தில் முத்தாரம்மன் கோவிலில் கொடையும் நடந்தது. திராவிட இயக்க ஆதிக்கம் இருந்தபோதிலும், எங்கள் வீட்டில் பாயசம் வைத்தால் சாமிக்கு முன்னால் வைத்தபிறகுதான் உண்போம். பள்ளிக்குச் செல்லும்போதும் புலைமாடன் சாமியைப் பார்த்துக் கும்பிட்டுவிட்டுச் செல்வதுண்டு. கோயம்புத்தூர் வந்த பிறகும் எங்கள் ஊர் முத்தாரம்மன் கொடைக்குத் தவறாமல் செல்வதுண்டு. என் அம்மாவிடம் கேட்பதுபோல் அந்தக் கடவுளிடம் கேட்க முடியும். இது எங்கள் மரபு. ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு எனக்கு அரசியல் இயக்கங்கள் மூலம் கற்பிக்கப்பட்டவை அனைத்தும் போலி எனத் தெரிந்துகொண்டேன்.

நான் சென்னையில் வார்த்தை எனும் பத்திரிகை வெளியிட்டு விழா மேடையில், “திராவிட இயக்கம் எனும் நோயிலிருந்து மீண்டவன் நான்” என்று கூறுகிறேன். ஜெயகாந்தன் குறுக்கிட்டுக் கூறுகிறார், நான் அந்த நோய்ப் படாதிருந்தவன் என்று. இதற்கான காரணம் என்னுடைய வாசிப்பு, என்னுடைய தமிழ் மற்றும் அனுபவம்.

ரமணமகரிஷியை உ.வே. சாமிநாத ஐயர் பார்க்கச் செல்கிறார். தனக்குக் கடவுள் பக்தி பற்றித் தெரியவில்லை; தமிழ் பக்திதான் தெரியும் என உ.வே.சா கூறுகிறார். அதற்கு ரமணமகரிஷி இரண்டும் ஒன்றுதானே எனப் பதிலளிக்கிறார்.

நாராயண குரு சிவனை வணங்குகிறார். பிரதிஷ்டை செய்ய முயல்கிறார். நம்பூதிரிகள் இதற்கு ஆட்சேபனை செய்கிறார்கள். நாராயண குரு அதற்கு நான் நம்பூதரிகளுடைய சிவனைப் பிரதிஷ்டை செய்யவில்லையே, இது என்னுடைய சிவன்; அதைக் கேள்வி கேட்க இயலாது எனக் கூறுகிறார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர்கூட நான் முத்தாரம்மன் கோவிலுக்குச் சென்றேன். அங்கே எனக்கு ஒரு பரவசம் கிடைக்கிறது. அங்கே என்னில் வயது குறைந்த சாமியாடிகள், விபூதியை என்னிடம் கொடுத்து, எனக்கும் அவர்களுக்கும் பூசச் செய்வார்கள். வைரவன் எங்கள் முத்தாரம்மன் காவல் தெய்வம். அந்தச் சாமியாடி என்னில் மூத்தவர் எனக்கவர் விபூதி பூசிவிட்டு, இன்னும் நன்றாக எழுதவேண்டும் என்று கூறுகிறார். அது வைரவன் எனக்குச் சொல்வதுபோல் இருந்தது. இதைக் கூறுவது இலட்சுண அண்ணன் எனும் சாமியாடிதான். அதை அவர் பரவசநிலையில் கூறும்போது நான் அதை வாங்கிக்கொள்கிறேன். இது போன்ற காரணங்களுக்குப் பிறகு கடவுள் மறுப்பு என்னிடமிருந்து காணாமல் போய்விடுகிறது.

எழுபதுகளில் மூன்றரை ஆண்டுகள் நான் கம்பராமாயணம் ரா பத்மநாபனிடம் கற்றுக்கொண்டேன். அவர் வை.மு.கோ உரை வைத்திருப்பார். மர்ரே ராஜம் பதிப்பின் மூலம் மட்டும் என்னிடம் இருக்கும். அவரின் நூற்றாண்டை ஒட்டி நான் அவருக்குச் சமர்ப்பணம் செய்ய ஒரு கட்டுரை எழுதுகிறேன். முன்னுரையில் நான் ரா பத்மநாபனுக்கு நீர்க்கடன் செய்யமுடியாது, நூற்கடன் செய்கிறேன் என்று எழுதினேன். இது ஒரு பரவச நிலையில் இருக்கும்பொழுதுதான் வருகிறது. இராமாயணத்தில் இராமன் ஜடாயுவிற்கு மகன் ஸ்தானத்திலிருந்து நீர்க்கடன் செய்கிறார்.

மாணிக்கவாசகர் ஒரு மாட்டுக்கொட்டகையில் நின்றுகொண்டிருக்கிறார். நிறைய கன்றுகள், மேயச் சென்றுள்ள தாய்ப் பசுவின் வருகைக்காக வாட்டத்தோடு காத்திருகின்றன.

“நன்றே வருகுவர் நம் தாயர்” எனக் குறிப்பிடுகிறார். நம் தாயர் எனும் சொல்லைக் கவனிக்க வேண்டும்.

குலசேகர ஆழ்வார் ஒரு வைணவர். அவர் “விஷ்ணு கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தைச் சென்னியில் வைத்துக்கொள்வேன். சிவன் கோவில் பிரசாதத்தைத் தோளில் வைத்துக்கொள்வேன்” என்று கூறுகிறார்.

தாம்பரத்தில் அன்னை தெரசா பெண்கள் பள்ளியில் உரையாற்றச் செல்கிறேன். அங்கே இருக்கும் ஒரு சேப்பலில் அமர்ந்து தியானம் செய்கிறேன். நான் முறையாகத் தியானம் செய்யக் கற்றுக்கொண்டவன். என் குடும்ப நண்பர் பாதர் ஜெயபாலன் என் தோளைத் தொட்டு, ” நாஞ்சில் நாற்பது நிமிடம் ஆகிவிட்டது” என்கிறார். இதை நான் ஏன் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

எனக்குத் தாயர் என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்கிற ஓர் ஆசை உண்டு. தாய்போல் பாவித்து அரவணைத்த பத்து பேர் இருக்கிறார்கள். இதை ஆன்மிகப்படுத்தவில்லை. இது எனக்காக நான் உணர்ந்துகொண்ட விஷயம்.

அடுத்த அம்மன் கோவில் கொடைக்குக் கண்டிப்பாகச் செல்வேன். அந்தக் கொடையை வைத்தே நான்கு கதைகள் எழுதியுள்ளேன். கம்பன் மூலமாகத்தானே எனக்கு இராமன், இராவணன், இலக்குவன் எல்லோரும் அறிமுகமாகிறார்கள். என்னுடைய அனுபவங்கள் எதிர்த்தன்மையிலிருந்து என்னை மாற்றுகின்றன. பின்புதான் இளம்வயதில் தேர்ந்தெடுத்தது போலியானவை, பொய்யானவை என்று புரிகிறது.

தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப்
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய்
இன்னதென அறிகிலார் தாம்செய்வ திவர் பிழையை
மன்னியும் என்று எழிற்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல்

ஏசு நாதரைச் சிலுவையில் அறைகையில் அவர் கூற்றாக வரும் பாடல், H.A. கிருஷ்ணப்பிள்ளை எழுதியது.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் ஒரு கலப்பட வார்த்தை இல்லை. கம்பனின் இராமாயணத்தில் ஆறு காண்டங்கள் உண்டு: பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்.

‘யுத்தம்’ என்று யகரத்தை மொழி முதலாகக் கொட்டுச் சொல் தமிழில் கிடையாது. மரபு மீறாமல் காண்டத்தின் பெயர் வைக்கும் கம்பன் மொத்தப் பாடல்களிலும் யுத்தம் என்கிற சொல்லை உபயோகிப்பதில்லை. போர் என்றே அழைக்கிறார். தமிழ் இலக்கணத்திற்கு உட்பட்டுத்தான் எழுதுகிறார்.

நான் சங்கடப்பட்டு இருக்கும்போது குளித்துவிட்டு எனக்குப் பிடித்த இறைவனிடம் உளமாரப் பேசுவேன். எனக்கு ஒரு நம்பிக்கை அல்லது பிடிமானம் தேவையாக இருக்கிறது. இதில் ஒரு பிழையும் இல்லை. இங்கே பேசப்படும் நாத்திகம் பிழைப்புக்காகவென்று வருகிறபொழுது அதன் அடிப்படையில் ஒரு சந்தேகம் வருகிறது. அதிலொரு போலித்தன்மை தெரிகிறது.

சுனில் கிருஷ்ணன்: மகாராஷ்டிரத்தில் வலுவாக உள்ள நாடகக் கலைத்துறையிலிருந்து சினிமாவுக்கு நிறைய கலைஞர்களும் படைப்புகளும் வருகின்றன. இப்படிப் பற்பல கலைத்துறைகளுக்கு இடையில் நிகழும் பரிமாற்றங்கள் கலையைப் புதுப்பிக்க உதவுகின்றன. இது போலத் தமிழில் கலைத்துறைப் பரிமாற்றங்கள் எவ்வாறு இருக்கின்றன? உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் உதாரணங்கள் சில?

நாஞ்சில் நாடன்: மகாராஷ்டிரத் திரை உலகம் தமிழைப் போலப் பிரம்மாண்டமான, பூதாகரமான அச்சுறுத்தும் செல்வாக்குடன் இல்லை. தோராயமாக மகாராஷ்டிராவில் ஒரு வருடத்திற்கு 70 முதல் 80 வரை திரைப்படங்கள் எடுப்பார்கள். இங்கே தமிழில் 250 முதல் 300 வரை திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. தமிழர்கள் மனோநிலையில் திரைப்படங்கள் மதமாகவும் நடிகர்கள் கடவுளர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். மகாராஷ்டிராவில் இந்தப் போக்கைக் காண இயலாது.

பூமணியின் கதை திரைப்படமாக எடுக்கப்பட்டபோது அவருக்கு வர வேண்டிய ஊக்கத்தொகை வராத காரணத்தால் அது தொடர்பாக ‘NFDC’ தலைவராக இருந்த அமோல் பாலேக்கரைப் பூமணி கேட்டதன் பேரில் சந்தித்தேன். அப்போது நான் எழுத்தாளர் என்று அவருக்குத் தெரியாது. மிக நிதானமாக இணக்கமாக உரையாடி மின்தூக்கிவரை வந்து வழி அனுப்பினார். அமோல் பாலேக்கர் மராட்டியில் முக்கியமான கதாநாயகர். அக்ரீத் போன்ற படங்களைப் பார்த்தால்தான் தெரியும். இருந்தும் தோரணை பந்தா இல்லாத மனிதர். அங்குக் கலைஞர்கள் சக மனிதர்களாக இருப்பார்கள்.

சாபில்தாஸ் உயர்நிலைப் பள்ளி மூன்றாம் மாடியில் உள்ள வகுப்பறையில் நாடகம் நடத்துவார்கள். நாடகத்தில் யார் எல்லாம் நடிப்பார்கள் என்றால், நஸ்ருதீன் ஷா, அமோல் பாலேக்கர், சித்ரா பாலேக்கர், சுல்பா தேஷ்பாண்டே, ஓம் பூரி மற்றும் அம்ரிஷ் பூரி என 35 -40 பேர் அளவிலான மக்கள் அமர்ந்து நாடகங்களைக் காண்பர். தமிழில் இதைப்போல் நினைத்துப் பார்க்க முடியுமா?

மராட்டி நாடகங்களின் பங்கு மராட்டித் திரைப்படங்களிலும் இருந்தது. தமிழில் ஆரம்பக் காலத்தில் நாடகங்களின் பங்கு திரைத்துறைக்கு இருந்தாலும் நாடகத்தின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. நான் பம்பாயில் வாழ்ந்த காலத்தில் கே. ஆர். பரமேஸ்வர் நவீன நாடகங்களைத் தமிழில் முயற்சி செய்தார். ஞான ராஜசேகரன் அவரது வயிறு, மரபு, ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர் போன்ற நாடகங்களை இயக்கினார்.

கே. ஆர். பரமேஸ்வர் பாலகுமாரனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாடகம் இயக்கினார். பின்னர்ஞாநி, கோயம்புத்தூரில் புவியரசு போன்றோர் முயற்சி செய்தார்கள். ஆனால் மராட்டிய நாடகங்கள் அளவுக்குத் தமிழ் நாடகங்கள் சமூகச் செல்வாக்கு பெற்றன எனக் கூற இயலாது.

சுனில் கிருஷ்ணன்: நவீன நாடகம் ஒரு பரிசோதனை முயற்சி என்ற அளவில்தான் தமிழகத்தில் உள்ளது, சமூக ஏற்பு என்ற செல்வாக்கான இடத்தை அடையவில்லை என்று சொல்லலாமா?

நாஞ்சில் நாடன்: மகாராஷ்டிராவில் சிவாஜி நாட்டக் மந்திர், அரவிந்த் நாட்டக் மந்திர் போன்ற தியேட்டர்களில் தினமும் ஒரு நாடகம் இரண்டு காட்சிகள் நடக்கும். பஞ்சாபி நாடகங்கள், சாலி ஆதா கர்வாலி, சாந்ததா கோர்ட் ஆஹே சாலு போன்ற மராத்திய நாடகங்கள், டெண்டுல்கர் நாடகங்கள். நாடகங்களில் இருந்து அற்புதமான திரைப்படங்கள் அங்கு வந்துள்ளன. ஸ்மிதா பட்டீல், நஸ்ரூதீன் ஷா, ஓம் பூரி, அமோல் பாலேக்கர் போன்ற நடிகர்கள் வந்தார்கள். அக்ரீத் படம் வந்தது. ஜூலுஸ் போன்ற வங்காள நாடகங்கள் மராட்டியில் மேடையேற்றப்பட்டன.

எனக்கும் அது போல் தமிழில் வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நான் நாடகங்களில் நடித்ததில்லை. ஞான ராஜசேகரன், கே. ஆர் பரமேஸ்வர் போன்றோருக்குத் திரைமறைவில் இருந்து சில பணிகளைச் செய்துள்ளேன்.

குறிப்பாக ஒரு சம்பவம் கூறலாம்.

ந. முத்துசாமியின் “நாற்காலிக்காரர்” நாடகத்தின் இறுதிக் காட்சி.  நாற்காலிக்காரர் நடுவில் உட்கார்ந்து இருப்பார். நாடகத்தில் நடித்தவர்கள் எல்லாம் சுற்றி வந்து கும்மி போன்று பாடுவார்கள். ஞானசேகரன் செய்த ‘improvisation’ செய்த காட்சி அது.

’தோத்தான் தோத்தான் தோலு புடிங்கி தொண்ணூறு மாட்டுக்கு மயிரு புடிங்கி… தோத்தான் தோத்தான் தோலு புடிங்கி தொண்ணூறு மாட்டுக்கு மயிரு புடிங்கி…’ எனத் தொடர்ந்து உச்சத்தில் போய் முடியும். தமிழ் நாடகங்களுக்கு ஒரு தணிக்கையாளர் இருந்தார். அவர் “மயிர் புடிங்கி” என்ற சொல்லுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அனுமதி மறுத்தார். பின்னர் நான் மற்றும் பம்பாய் தமிழ் சங்கத் நிறுவனர் கந்தசாமியும் பேசி “தோத்தான், தோத்தான்” என மாற்றிக்கொள்கிறோம் எனக் கூறி அனுமதி பெற்றோம். இதில் ஞானசேகரனுக்குக் கோபம். வெளியே வந்த பின் கந்தசாமி கூறினார் ஒத்திகை செய்தபடி கும்மியைப் போடுங்கள், யார் வந்து பார்க்கப் போகிறார்கள் என்று.

அந்த நாடகத்தைக் கே. கே. வெங்கடாச்சாரியர் SBI legal advisor, ஆதி லட்சுமணன் vice president of Hindustan coco products போன்ற உயர் பொறுப்பில் உள்ளவர்கள் தரையில் அமர்ந்து பார்த்தார்கள். ஆனால் இங்கு ஓர் அதிகாரியையோ, முக்கியஸ்தரையோ, நடிகையரையோ தரையில் உட்கார வைக்கமுடியாது. மராட்டியில் கலைஞர்களிடையேயான புரிதல் மரியாதை எல்லாம் வேறு. அதை தமிழ்ச் சூழலில் காண இயலாது. அதனால்தான் இங்கு ஊடாட்டம் நிகழவில்லை.

நானும் சிறு வயதில் நாடகங்களில் நடித்துள்ளேன். மனப்பாடத்திறன் அதிகம் உள்ள காரணத்தால் கட்டபொம்மன், சேரன் செங்குட்டுவன் மற்றும் பெண் வேடம் தரித்துச் சில நாடகங்களில் நடித்துள்ளேன்.

ஆனால், தற்போது பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் சினிமாவைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. பிள்ளைகளும் அவற்றைப் பிரதிபலிக்கிறார்கள். அதுவே பள்ளியின் தரத்தைக் குறிக்கும் ஓர் அங்கமாக மாறி உள்ளது.

தமிழ்ச் சூழலில் கலை என்றால் சினிமா; விளையாட்டு என்றால் கிரிக்கெட். மலையாளம், வங்காளம், மாராட்டி மற்றும் கன்னடம் போன்ற இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள சூழலை இங்குக் காணமுடியாது.

சுனில் கிருஷ்ணன்: உங்கள் எழுத்து மட்டுமில்லாமல் ஆளுமை மற்றும் வாழ்க்கை மீதும் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர்கள் குறித்து?

நாஞ்சில் நாடன்: சரியாக எழுதுகிற சரியாக யோசிக்கிற எல்லா எழுத்தாளனுக்கும் மூன்று நிலைகள் உண்டு என நம்புகிறவன் நான்.

  1. மிகப் பெரிய ஆளுமையுடைய பாதிப்பில் இருக்கும் காலகட்டம்
  2. பாதிப்பைத் துறந்து அவனுடைய தகுதியோடு செயல்படுகின்ற காலகட்டம்
  3. அவனே இளம் எழுத்தாளரைப் பாதிக்கிற காலகட்டம்

என்னளவில் வாசிக்க, எழுத ஆரம்பித்த காலத்தில் என்னைப் பெரிய அளவில் பாதித்தவர்கள் புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, நீல பத்மநாதன், நகுலன் மற்றும் ஆ. மாதவன். அந்தக் காலத்தில் ஜானகிராமன், லா.ச.ரா, எம். வி. வெங்கட்ராமன், கு. ப. ராஜகோபாலன் மற்றும் கி. ரா ஆகியோரை விரும்பிப் படித்திருக்கிறேன். அவர்களுடைய பாதிப்பைப் பெற்றேனா என உறுதியாகக் கூற முடியவில்லை. அன்று இரவு, கயிற்றரவு மற்றும் சாப விமோசனம் போன்ற கதைகளை 20, 30 தடவை வாசித்திருப்பேன். “நான்மாடக்கூடலில் அன்றிரவு மூவர் உறங்கவில்லை; அதில் ஒருவன் சொக்கேசன்” என்ற முதல் வரியே எனக்கு மனப்பாடம். ஒரு சிலரின் எழுத்து நாம் இதை எழுதிப் பார்க்கலாமா எனத் தூண்டும். இதைச் செல்வாக்கு, பாதிப்பு, தூண்டுதல் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். எந்த எழுத்தாளனும் இவற்றைக் கடந்துதான் போகிறான். நாம் இன்னொரு எழுத்தாளரின் நகல் அல்ல. பாரதிதாசனுக்குப் பாரதியின் செல்வாக்கு இருந்தாலும்கூடப் பாரதிதாசன் முழுக்க முழுக்க பாரதியின் செல்வாக்கில் இருக்கும் கவிஞன் அல்ல. அவனுடைய எல்லைகள் மற்றும் அரசியல் வேறு. இவற்றைத் தனியாக வைத்துப் பார்க்க வேண்டும்.

“பூனைக்கண்ணன்” எழுத ஆரம்பித்தபோது திட்டம் வேறு விதமாக இருந்தது. கதை நகர நகர சம்பவங்கள் அப்படி வந்து விழும். எனக்கே தெரியாது அடுத்த வாக்கியம் என்ன வரும் என்று! கடைசி உரையாடல் எல்லாம் ஒரு திட்டமிடல் இல்லாமலே வந்தது. எந்த ஒரு எழுத்தாளனும் நல்ல கதையை எழுதும்போது தன்னுடைய எண்ணங்கள், முதிர்ச்சி, செல்வாக்கு மற்றும் திறமை ஆகியவற்றின் மூலம் ஆட்கொள்ளப்படுவான். இதை நாம் ஒரு Project மாதிரி செய்வது இல்லை. கோயிலிலிருந்து சிலையைத் திருடுகிற எண்ணத்தோடு வரும் ஒருவன் என்பது கதை. கதை நம்மை நகர்த்திக்கொண்டே போகிறது. தன்னுடைய முடிவை நோக்கிக் கொண்டுசெல்கிறது.

அவனுக்கும் அம்மனுக்குமான உரையாடல் ஞாபகம் இருக்கிறது. அம்மன் அவனிடம் கேட்பாள் “நல்லவன்னா யாரு? கெட்டவன்னா யாரு?” எனக்கு இது அந்தக் கணத்தில் தோன்றியது. It’s highly philosophical height என்று பின்னால்தான் தெரியும். வாசிக்கிறவர்கள்தான் சொல்கிறார்கள். அந்தத் திட்டமிடலோடு நான் ஆரம்பிக்கவில்லை அப்படி நிகழ்கிறது. ஒரு வேளை நம்முடைய படைப்பாற்றல், முதிர்ச்சி, பக்குவம், மனோபாவம் போன்ற விஷயங்கள் பங்களிப்பு செய்யலாம்.

சுனில் கிருஷ்ணன்: கும்பமுனிக்கான தூண்டுதல் எங்கிருந்து வந்தது?

நாஞ்சில் நாடன்: “கும்பமுனி”யைக் குறித்துக் கேட்டீர்கள் என்றால் தொடக்கத்தில் கும்பமுனியின் உருவம், நடத்தை, அவர் உட்கார்ந்து இருக்கிற நாற்காலி மற்றும் அவர் சாய்ந்து இருக்கிற விதம் எல்லாவற்றிலும் நகுலனுடைய சாயல் இருக்கும். ஆனால் நகுலன் பேசத் துணியாத பல விஷயங்களைக் கும்பமுனி பேசுகிறார்.

நகுலனுடன் மிக நெருங்கிப் பழகி இருக்கிறேன். அதை எந்தச் சந்தர்ப்பங்களிலும் வெளியே சொன்னது இல்லை. 1977 என்னுடைய “தலைகீழ் விகிதங்கள்” வெளியானது. இரயில் போக்குவரத்து சுலபமான பின்பு திருவனந்தபுரம் வழியே பயணங்கள் தொடர்ந்தன. 1978’இலிருந்து நகுலனுடன் மிகவும் தீவிரமான உறவு இருந்தது. பிறகு, திருவனந்தபுரத்தில் திருமணமானது இன்னொரு காரணம். வருடத்தில் ஒரு முறை 20 நாள் விடுமுறையில் ஏழு எட்டு நாட்கள் திருவனந்தபுரத்தில் தங்கி இருப்போம். தினமும் காலையிலிருந்து மாலைவரை அவரோடுதான் இருப்பேன். ஆ.மாதவன் மற்றும் நீல பத்மநாபனுடனும் இருப்பேன். நகுலன் எப்படிப் பேசுவார் எப்படி நடந்துகொள்வார் என எல்லாம் தெரியும்.

சுனில் கிருஷ்ணன்: சிறார் இலக்கியம் என்றாலே சிறுவர்கள் மட்டும் படிக்கும் இலக்கியம் என்றே பொருள்கொள்ளப்படுகிறது. ஆனால் Alice in Wonderland, Harry Potter, Lord of the Rings போன்ற புத்தகங்களைச் சிறார்களும் வாசிக்கலாம், வளர்ந்தவர்களும் வாசிக்கலாம். இருவருக்கும் எடுத்துகொள்ளப் பல விஷயங்கள் இக்கதைகளில் இருக்கின்றன. 1001 அரேபிய இரவுகள் கதைகளும் அப்படிதான். நமது ராமாயணம் மகாபாரதமும் அப்படித்தான். நவீனத் தமிழ் இலக்கியத்தில் இது போன்ற படைப்புகள் வெளிவருகின்றனவா?

நாஞ்சில் நாடன்: சுத்தமாக இல்லை என்பதுதான் என்னுடைய பதில். எனக்கே அதில் ஒரு குற்ற உணர்வு உள்ளது. நான் சிறுவர்களுக்காக ஒரு வரிகூட எழுதவில்லை. இந்திய அளவில் பார்த்தோமானால் ரஸ்கின் பாண்ட் எழுதுகிறார். அந்தத் தரத்தில் தமிழில் சிறுவர் இலக்கியம் இல்லை. Marjorie Kinnan Rawlings என்று ஓர் எழுத்தாளர் இருந்தார். அவர் மொழிபெயர்ப்புகூடத் தமிழில் வந்துள்ளது. என்னுடைய நாற்பது, ஐம்பது வயதில் அந்த வகையான சிறுவர் இலக்கியங்களை நானே படித்து ரசித்திருக்கிறேன்.

சுனில் கிருஷ்ணன்: குட்டி இளவரசன்…

நாஞ்சில் நாடன்: ஆமாம். அதை எல்லாம் இன்றும் படிக்க முடியும். நம்முடைய சிறுவர் இலக்கியம் எப்படி ஆரம்பிக்கிறார்கள் என்றால், சுற்றுலா போகிறார்கள்… அதில் ஒரு பையன் வழி தப்பிப் போகிறான்… ஒரு பூதம் பார்க்கிறான்… அது புதையலைக் காட்டுகிறது. நாம் இன்னும் இந்த நிலையில்தான் இருக்கிறோம்.

எனக்கு, 7 வயது மற்றும் 5 வயதில் பேரன்கள் இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு ஜடாயு சம்பாதி கதை சொல்கிறேன். தமிழ் இலக்கிய வாசகர்கள் பலருக்குத் தெரியாது “சம்பாதி தம்பி ஜடாயு” என்று. Jonathan Livingston Seagull போன்றபடைப்புகளை வாசித்து இருக்கிறோம். அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழில் வந்துள்ளன. அதற்கு முந்தியது “ஜடாயு, சம்பாதி”. இதைச் சொல்லுகிறபோது அவர்கள் வியந்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு எல்லா விஷயமும் சொல்ல முடியாது. குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் சொன்னால் அதிலிருந்து எடுத்துக் காலம் முழுவதும் நினைவில் வைத்துக்கொள்வார்கள்.

இப்போது பெரும்பாலும் தமிழ்ச் சிறார் இலக்கியம் எழுதக் கூடிய எழுத்தாளர்கள் ஓரிருவரைத் தவிர, அவர்களின் படைப்பாற்றல் மிகவும் குறைவாக உள்ளது. அதனால்தான் Marjorie Kinnan Rawlings போலத் தமிழில் வரவில்லையோ எனத் தோன்றுகிறது. சிறுவர்களுக்கு எழுதினாலும் ஒரு படைப்பாற்றல் வேண்டும் இல்லையா!

சுனில் கிருஷ்ணன்: பதின்மப் புனைவு (teen fiction) என்று ஒன்று இருக்கிறது அல்லவா! பொன்னியின் செல்வன் ஒரு நல்ல பதின்மப் புனைவு எனத் தோன்றுகிறது. மேற்கில் 13 வயதில் படிக்கக் கூடிய நிறைய பதின்மப் புனைவுகள் உள்ளன. ஆர்.சிவக்குமார் மொழிபெயர்த்த “சோஃபியின் உலகம்” மேற்கத்திய தத்துவத்தை (western philosophy) அறிமுகம் செய்ய, அங்கு இருக்கக்கூடிய ஐரோப்பிய பதின்ம வயதினர்களுக்கு எழுதப்பட்ட புத்தகம். அது நமக்கு அவ்வளவு பிரமாதமான தத்துவப் புனைவாக உள்ளது. அந்த வகை இலக்கியம் நம்மிடம் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

நாஞ்சில் நாடன்: அப்படித்தான் தோன்றுகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் ரொம்ப நல்ல இலக்கியம். இன்றுமே வாசிக்கலாம். நாம் எல்லாம் அதிலிருந்துதானே தொடங்கினோம்.

பதினைந்து வருடம் முன்னாடி நான், தமிழினி வசந்தகுமார், ஜெயமோகன், மதுரையிலிருந்து நண்பர் சண்முகசுந்தரம் எல்லோரும் சேர்ந்து சிவாஜி கோட்டைகளைக் பார்க்க ஒரு பயணம் சென்றோம். மதுரையிலிருந்து தொடங்கி சென்னை, ஹம்பி, பட்டடக்கல், வாதாபி, பண்டந்தர்பூர், பனுவேல் எனப் பயணித்தோம். பன்வேலில் தம்பி வீட்டிலிருந்து திரும்பி வரும்போது கில் ராய் காட், ரத்னகிரி கோட்டை மற்றும் கொங்கண் பகுதிக்கு வந்தோம். அங்கு “ஜல் ஜீரா” என்ற கோட்டையைப் பார்க்கிறோம். ஜல் – ஜலம், ஜீரா-இனிப்பு. கடற்கரையிலிருந்து 2கிமீ உள்ளே இருக்கின்ற ஒரு தீவில் ஒரு சுனை இருக்கிறது; தண்ணீர் அவ்வளவு இனிப்பாக இருக்கும். இது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு சுல்தானின் சந்ததியினர் கட்டுப்பாட்டில் உள்ளது. முழுப் படகை வாடகைக்கு எடுத்து அங்குப் போனோம். அங்கே இறக்கிவிட்டு இரண்டு மூன்று மணிநேரம் கழித்து வந்து அழைத்துப் போனார்கள். அந்தக் கடற்கரையில் குறைந்த மற்றும் உயர் அலை இருக்கும். நாங்கள் போகும்போது குறை அலை; வரும்போது உயர் அலை. இந்த ஜல்ஜீரா கோட்டையைப் பற்றிச் சாண்டில்யன் எழுதி இருக்கிறார். நாவல் பெயர் ஞாபகம் வரவில்லை. இதைப் படித்து முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீவுக்குப் போகிறேன். வரிக்கு வரி சாண்டில்யன் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.

ஆனால் மூத்த தீவிர இலக்கியவாதிகள் சாண்டில்யன் மற்றும் கல்கி மீது துவேஷத்தை வளர்க்கக் காரணமாக இருந்தார்கள். அவர்கள் பிரபலமான இதழ்களில் தொடர்கதைகளை எழுதிச் செல்வாக்குடன் இருந்தார்கள் என்பது உண்மைதான். அதே சமயத்தில் அவர்களுடைய எழுத்தைக் குறைவாக மதிப்பிட முடியாது. கண்டிப்பாக, சாண்டில்யன் அந்தத் தீவுக்குப் பயணம் செய்து ஆராய்ந்து பார்க்காமல் அதை நாவலில் எழுத முடியாது.

கனோஜி ஆங்கரே மராத்தியக் கப்பற்படைத் தளபதி. ரத்தினகிரி கோட்டையில் அவருடைய சமாதி உள்ளது. ரத்தினகிரி நிலத்துக்கும் கடற்கோட்டைக்கும் ஒரு கிமீ அளவில் சாலை போட்டுவிட்டார்கள். மலேசியாவில் கெடா மாநிலத்துக்கும் பினாங்குக்கும் போட்ட சாலை மாதிரி. சாலை வழியே பயணம் செய்ய முடியும். கனோஜி ஆங்கரே ஐரோப்பிய இலக்கியத்தில் கடற்கொள்ளையனாகச் சித்தரிக்கப்பட்டவன். அவன் ஆட்சியின் கீழ் இருந்த எந்தத் தீவையும் ஆங்கிலேயரால் வெற்றிகொள்ள முடியவில்லை. அதில் ஒன்று ஜல் ஜீரா. இதை நான் சாண்டில்யன் மூலமாகத்தானே தெரிந்துகொள்கிறேன். அது போல அகிலனின் “பாவை விளக்கு” நா.பார்த்தசாரதின் “பொன் விலங்கு” மூலமாகவும் வேறு சிலவற்றைத் தெரிந்துகொள்கிறேன்.

இது நாற்றங்கால் மாதிரி இருக்கிறது அல்லவா! இதை நான் எட்டி மிதித்துவிட்டுப் போக முடியாது அல்லவா!

நானுமே இவர்களைப் பற்றி முப்பது ஆண்டுகள் முன்பு துச்சமாகப் பேசி, நினைத்து இருக்கிறேன். இப்போதுதான் அந்தப் பக்குவம் வருகின்றது. வாசிப்பு வேகத்தை அவர்கள்தானே தூண்டினார்கள். கல்கியின் பல பகுதிகளைச் சிறுவர்களுக்குச் சுவையாகச் சொல்லமுடியும். அது சிறுவர் இலக்கியம் என்று அறியப்படுவது இல்லை.

நாம் இன்று கொண்டாடும் சில சிறுகதை எழுத்தாளரைவிட ஆர். சூடாமணி பல வகையில் உயர்வான சிறுகதைகளை எழுதி இருக்கிறார். நமக்கும் பல மூத்தோர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய சொற்களைக் கவனிக்கிறோம். பல விஷயங்களை அதிமதிப்புடன் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதில் அவர்களின் விருப்பு வெறுப்பு உள்ளன. நமக்குச் சொந்த புத்தி இருக்கும். நாம் படித்துப் பார்த்துத் தீர்மானிக்க வேண்டும்.

நான் என் பேரனிடம் சொல்வேன் எந்த உணவாக இருந்தாலும் பார்த்ததும் பிடிக்காது எனச் சொல்லாதே. ஒரு வாய் சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல். அதற்குப் பிறகும் பிடிக்கவில்லை என்றால் சொல். சாப்பிடாமல் இது நன்றாக இருக்காது, வேண்டாம் எனத் தீர்மானம் செய்யக் கூடாது.  இப்படிப் பல எழுத்தாளர்கள் எழுத்தை வாசிக்காமலே தீர்மானம் செய்து இருக்கிறோம். வாசித்துப் பார்த்த பலர் அங்கேயே தங்கிவிடுகிறார்கள். இவர்களை மீறித் தமிழ் இலக்கியம் ஒன்றுமே இல்லை என முடிவுக்கும் வந்துவிடுகிறார்கள்.

அதுதான் இவர்களுடைய அளவுகோல் ஆகிறது. அந்த அளவுகோலைக் கொண்டே கவிதை மற்றும் நாவலை ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கம் வருகிறது. இது ஒரு பெரிய துர்பாக்கியம்.

சுனில் கிருஷ்ணன்: உங்களுடைய படைப்புகளில் எட்டுத் திக்கும் மதயானை படைப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. உங்கள் மற்ற படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா?

நாஞ்சில் நாடன்: மிதவை மொழிபெயர்க்கப்பட இருக்கிறது. என்னுடைய சிறுகதைகளை மொழிபெயர்ப்பதாகச் சொல்லிப் பத்து சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்தார்கள். ஒரு கட்டத்தில் மொழிபெயர்க்க முடியாது என்று அவர்களுடைய இயலாமையைச் சொன்னார்கள். அது நேர்மையான பதிலாக எனக்குப் பட்டது. இப்போது சாகித்திய அகாதமி ஒரு தொகுப்பை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.

ஆற்றில் மாடு குளிப்பாட்டும்போது தேய்ப்பதற்குக் கைப்பிடி வைக்கோல் சுருணை எடுத்துக்கொண்டு செல்வார்கள். முடித்துவிட்டு அதைத் திரும்ப வீட்டுக்குக் கொண்டு வர மாட்டோம். அதை அந்த ஆற்றங்கரையில் போட்டுவிட்டு வந்துவிடுவோம். அடுத்து மாடு குளிப்பாட்ட வருபவர்கள் அதை எடுத்துத் தேய்ப்பார்கள். இப்படி பலர் ஒரு கைப்பிடி அளவுள்ள வைக்கோலைத் தேய்த்துத் தேய்த்து, அது மிகவும் பசுமை ஆகிவிடும். நான் ஒரு சிறுகதையில் எழுதுகிறேன், “பசுமையாகிக் கிடந்த வைக்கோல் சுருணையை எடுத்து” என்று. மொழி பெயர்ப்பாளர்களுக்கு இந்த இடம் புரியவில்லை என்றால், பசுமைக்கு green என்று பொருள் எடுத்துக்கொள்வார்கள். சிறுதெய்வ வழிபாடுகளில் படைப்புச்சோறு, கூட்டாஞ்சோறு, உளுந்தச்சோறு ஆகியவற்றை எப்படி மொழிபெயர்ப்பீர்கள்? இது மாதிரியான சிக்கல்கள் இங்கே இருக்கிறது. ஏனென்றால் நான் ஆதாரமான மண் சார்ந்த பண்போடு, மொழியோடு செயல்படுகிறேன்.

சமீபத்தில் என்னுடைய ஒரு சிறுகதைக்குத் தற்குத்தறம் என்று பெயர் வைத்திருந்தேன். பலர் என்னிடம் தற்குத்தறம் என்றால் என்ன என்று கேட்டார்கள். தற்குத்தறம் என்ற சொல்லுக்கு நான் திண்டுக்குமுண்டு என்று இன்னொரு சொல் சொல்லிவிட முடியும். ஆனால் எனக்குத் தற்குத்தறம்தான் வேண்டும் என்ற பிடிவாதம் உண்டு. தற்குத்தறம் என்பது ஒரு மலையாளச்சொல். மலையாளம் எங்கிருந்து வந்தது, அதுவும் நம்முடைய சொல்தானே. அதே போல் ஓர்மை என்ற சொல்லுக்கு லெக்சிகன் ஒருமை என்ற பொருள் தரும், எனக்கு ஓர்மையின் பொருள் நினைவு. சுரேஷ் கோபியின் படத்தில் “ஓர்மை உண்டோ ஈ முகம்” எனும் வசனம் உண்டு. என்னிடம் கேரளா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மலையாள தமிழ் அகராதி உண்டு. அதில் ஓர்மை – நினைவு என்று இருக்கிறது. இதை அடிப்படையாக வைத்து நான் ஒரு கட்டுரை எழுதுகிறேன். கட்டுரை எழுதும் போது சங்க இலக்கியத்துக்குள் போய்த் தேடிப் பார்த்தால் ஓர்ந்து, ஓர்த்து என்ற சொற்கள் கிடைக்கின்றன. நினைவுபடுத்தி என்று பொருள். 1922இல் வந்த லெக்சிக்கனில் இந்தப் பொருள் இல்லையென்றால் மொழி என்ன செய்யும்? வாழைப்பழத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருபத்தியோரு இனம் உண்டு. செவ்வாழை என்பதை நாங்கள் செந்துழுவான் என்று சொல்வோம். ரஸ்தாலி என்று சொல்லக்கூடியதை நாங்கள் வெள்ளத்துழுவன் என்று சொல்வோம். பாளையங்கோட்டானைக் கோயம்பத்தூரில் ரஸ்தாலி என்று சொல்வார்கள். நாங்கள் கதலி அல்லது ரசகதலி என்று சொல்லக் கூடியதைக் கோயம்பத்தூரில் கேரளா ரஸ்தாலி என்று சொல்வார்கள். மட்டி என்று ஒரு ரகம் இருக்கிறது. அது கன்னியாகுமரியைத் தவிர உலகில் வேறு எந்த இடத்திலும் கிடைக்காது. ஏத்தன் நேந்திரம் ஆகிறது. ஒரே தாவரத்திற்குப் பிரதேசத்துக்குத் தகுந்த மாதிரி மாற்றுப் பெயர்கள் இருப்பது ஒன்றும் தப்பு கிடையாது. பறவைகளுக்கு, விலங்குகளுக்கு, சில தாவரங்களுக்கு ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு பெயர் இருக்கிறது.

நான் அவயான் என்று சொல்கிறேன், கண்மணி குணசேகரன் அகவான் என்று சொல்கிறார். தமிழ்லெக்சிகனில் மெக்ஸிகோவில் அவயானும் கிடையாது, அகவானும் கிடையாது. அங்கே இருப்பது பெருச்சாளிதான், மலையாளத்தில் பெருக்கான். நானும் வேண்டுமென்றே பெருக்கான் என்று போடுவேன். அதில் நமக்கு ஒரு திமிரும் செருக்கும் உண்டு, வேண்டும் என்றால் படி இல்லையென்றால் வைத்துவிட்டுப் போ என்று. என்னுடைய மக்களும் அதைத்தானே உபயோகப்படுத்துகிறார்கள். நான் எதற்கு அதைத் தவிர்த்து உன்னுடைய சௌகரியத்துக்காக அதை மாற்றி அமைக்க வேண்டும்? கருக்கு என்றால் இளநீர். எனக்குக் கருக்கு என்ற சொல்லும் தெரியும், இளநீர் என்ற சொல்லும் தெரியும். ஆனால் நான் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. என்னுடைய கதாபாத்திரம் இளநீர் என்று பேசாது, இரண்டு கருக்கு வெட்டிக் குடுடா என்றுதான் கேட்கும். கருக்கு வேற்றுமொழிச் சொல்லும் அல்ல.

இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு மொழிபெயர்ப்பு செய்கிறார்களா என்பதற்கு நமக்கு ஒரு உத்தரவாதமும் கிடையாது. அவர்களைக் குறை கூறவில்லை. எல்லா மொழிகளுக்குள்ளும் இது போன்ற சிக்கல்கள் இருக்கின்றன.

சுனில் கிருஷ்ணன்: தமிழில் இதுவரை வெளியான பரீட்சார்த்த முயற்சிகளாக எவற்றைக் குறிப்பிட்டுச் சொல்வீர்கள், நீங்கள் அறிவியல் புனைவு வாசிப்பதுண்டா? உங்களுக்கு மிகவும் பிடித்தமான அறிவியல் புனைவு உண்டா?

நாஞ்சில் நாடன்: நான் ஜார்ஜ் ஆர்வெல் காலத்தில்தான் இன்னும் இருக்கேன். அனிமல் பார்ம், 1984 மாதிரி நாவல்கள் நான் தேடி விரும்பி படிக்கிற இலக்கிய வகை கிடையாது. நான் பெரும்பாலும் சொந்த அனுபவங்கள் சார்ந்து, வாழ்க்கை சார்ந்து, மண் சார்ந்து எந்த யுக்தியைப் பயன்படுத்தி எழுதப்பட்டாலும் அது போன்ற நூல்களில்தான் எனக்குப் பிரியம் அதிகம். அறிவியல் புனைவைத் தேடிப் போய்ப் படிப்பது, ஆங்கிலத்தில் படிப்பது எல்லாம் குறைந்து போய்விட்டது.

ஆங்கிலத்தில் வாசித்த முன்னூறு, நானூறு புத்தகங்களை இன்னும் வைத்துள்ளேன். அறிவியல் புனைவுகளில் மனம் ஒன்றவில்லை. பரீட்சார்த்த முறையில் எழுதப்பட்ட நாவல்கள் தமிழில் நிறைய வந்துள்ளன. நகுலனினுடைய நினைவுப்பாதை நாவல், சுந்தர ராமசாமியின் ’ஜே ஜே சில குறிப்புக்கள்’, சா. கந்தசாமியினுடைய ’அவன் ஆனது’, லா.ச.ரா வினுடைய ‘அபிதா’, புதுமைப்பித்தன் சிறுகதைகளில் சிலவற்றை முயற்சி செய்துள்ளார். மூன்று காலங்களையும் ஒன்றிணைத்துச் செய்துள்ளார். மாணிக்கவாசகர், அடியார்க்குநல்லார், நச்சினார்க்கினியார் பற்றிப் பேசுகிறார். ஒரே சிறுகதையினுள் பலவிதமான புராணங்களைச் சேர்த்து அவர் எழுதியிருக்கிறார், ‘அன்று இரவு’ என்கிற சிறுகதையில்.

அதுபோல் சமீபத்தில் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பாகி வந்த நாவல் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’. மனோஜ் குரூர் ஒரு மலையாளப் பேராசிரியர். மலையாள நாவலுக்கு ஜெயமோகன் முன்னுரை. தமிழ் நாவலுக்கு நான் முன்னுரை. கால வரிசைப்படிப் பார்த்தால் பெண்கொலை செய்த நன்னன், தகடூர் அதியன், பாரி இவர்களின் காலங்களெல்லாம் பெரும்பாலும் சமகாலம் இல்லை. அவங்களைப் பாடிய புலவர்களும் சமகாலம் இல்லை. ஆனால் அதை ஒன்றிணைத்து நாவலுக்குள் கொண்டு வருகிறார். கொஞ்சம் பேராசிரியத்தனமான சில வாசகர்கள் ‘அது எப்படி அந்தக் காலத்தில் இவர் வாழ்ந்தாரா என்று கேட்கிறார்கள். இது நாவல், இதில் அப்படிச் செய்வது ஒன்றும் தப்பில்லை. மொழியாக்கம் கே.வி.ஜெயஸ்ரீ மிகவும் நன்றாகச் செய்துள்ளார். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தாலும் அது ஒரு நல்ல பரீட்சார்த்த முயற்சி. இப்படி தொடர்ந்து மொழிக்குள்ளேயே எல்லா காலத்திலும் எல்லாமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

சுனில் கிருஷ்ணன்: பெண் படைப்புக்களைப் பெண்கள்தான் எழுதவேண்டும் என்று சில நேர்காணலில் சொல்லி இருந்தீர்கள். இயற்கையையும் உயிரிகளையும் அவதானித்துக்கொண்டு எழுதும் எழுத்தாளர்களுக்கு சக ஜீவிகளான பெண்களைப் புரிந்துகொண்டு எழுதுவதில் என்ன தடை இருக்கும் என எண்ணுகிறீர்கள்? பெண்களைப் பற்றி எழுத அவ்வளவு தடை இருக்குமா? இது ஒருவிதத் தப்பித்தல் இல்லையா?

நாஞ்சில் நாடன்: ஒரு புலியைப் பற்றி, ஒரு ஆட்டைப் பற்றி, ஒரு பூனையைப் பற்றிய எழுத்தை ஒரு புலியோ, ஆடோ, பூனையோ எழுத முடியாது என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் பெண்களுடைய சிலவிதமான புரிதல்களை ஆண் புரிந்து எழுதுவது ஓர் எல்லை வரைதான் சாத்தியம் என்று நினைக்கிறேன். பெண் எழுத்தாளர்களே அதை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு எழுதுகிறார்களா என்பது இன்னொரு கேள்வி. அவர்களுக்கு இருக்கிற பலவகையான மன உணர்வுகளை எழுதுகையில் ஓர் ஆண் அவர்களுடைய மனதினுள் ஊடறுத்துப் பார்த்தாலும்கூட அது முழுமையாகப் பார்த்ததாக இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். அவர்களுக்குப் பல நெருக்கடிகள் இருக்கின்றன. இன்று டைனிங் டேபிளில் எல்லாரும் அமர்ந்து சாப்பிடுகிறோம். சென்னையில் எனக்கு நெருக்கமான ஒரு நண்பர் வீட்டில், அவருடைய அம்மா எல்லாரும் சாப்பிட்டு முடித்ததும்தான் சாப்பிட உட்காருவார்கள். பாத்திரத்தில் கரண்டி அடிபடுகிற சத்தம் கேட்கும். நான் போய் எட்டிப் பார்த்தால் ’என்னடா உனக்கு இங்கு வேலை’ என்று அதட்டுவார்கள். இதை ஓர் ஆண் சகித்துக்கொள்வானா? நான் ஓர் உணவை ரசித்துச் சாப்பிடுகிறேன் என்றால் அதை வைத்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு மிச்சம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலையே கிடையாது. நான் சாப்பிட்டதே அவர்கள் சாப்பிட்டது போன்ற நிறைவு அவர்களுக்கு. இதை ஒரு குறையாகவும் அவர்கள் சொல்வதில்லை. இது நான் ஒரு மேலோட்டமான உவமையாகத்தான் சொல்கிறேன். இன்னும் அந்தரங்கமான ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, எத்தனை ஆண்கள் தன்னுடைய இல்லக்கிழத்தியை She has attained her full pleasure என்று ensure செய்கிறார்கள். இதை எப்படி ஒரு ஆண் சொல்ல முடியும்? As soon as he is discharged, his work is over. இன்றைய வளர்ந்த காலகட்டத்திலும், கல்வியறிவுள்ள காலகட்டத்திலும், நாகரிகமான காலகட்டத்திலும் I don’t think all the gents ensure that. இதற்கு ஒரு புரிதல் இருக்க வேண்டியிருக்கிறது. அம்பை இதைப் பற்றி விரிவாகச் சொல்வார்கள்.

சுனில் கிருஷ்ணன்: பாலியல் சுதந்திரத்திற்கும், பாலியல் சுரண்டலுக்குமான இடைவெளியை எப்படி வரையறை செய்வீர்கள்? உதாரணமாக, பேய்க்கொட்டு, தெரிவை, எட்டுத்திக்கும் மதயானை கதைகளிலும் திருமணத்திற்கு வெளியேயான உறவைக் குறித்து அதை இழிவாகவோ, அதை வைத்து ஒருவரை மதிப்பிட வேண்டியதில்லை என்பதான ஒரு கோணம் இருக்கிறது. தெரிவை கதையை எடுத்துக்கொண்டால் திருமணமாகாத நடுத்தர வயதுள்ள ஒரு பெண் கிட்டத்தட்ட ஒரு பண்டமாகப் பார்க்கப்படுவதாக ஒரு கோணம் இருக்கிறது. பொதுவாக, பாலியல் சுதந்திரத்துக்கும் பாலியல் சுரண்டலுக்குமான இடைவெளி பற்றிக் கூறுங்கள்.

நாஞ்சில் நாடன்: நான் கற்பெனப்படுவது எனும் கட்டுரை எழுதியிருக்கிறேன். ஒரே ஓர் ஆணிடம் மட்டும் தன் வாழ்நாள் முழுவதும் உறவு கொள்வதன் பெயர்தான் கற்பா? ஒருவேளை அவளுக்கு இருபத்தியேழு வயதில் திருமணமாகிறது. மூன்று மாதத்தில் கணவன் விபத்தில் இறந்துவிடுகிறான் அல்லது படுத்த படுக்கையாகிவிடுகிறான். வேறு ஒரு திருமணம் செய்யும் பொழுது அவள் கற்பிழந்தவளாகிறாளா? அவனுக்காக அவள் கட்டுப்பாடோடு இருக்கணுமா?

அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் விருப்பம் இருக்கிறது, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதை வைத்து அவர்களை நாம் மதிப்பீடு செய்ய முடியுமா? நம் ஊரில் அடுக்களைத்தாலி என்ற ஒரு சொல் உண்டு. அறுபத்தி ஐந்து வயதுள்ள கிழவன் அடுக்களையில் வைத்து நான்காம் தாரமாக திருமணம் செய்து கூப்பிட்டுவருவான். குழந்தையின்மைக்காக மறுமணம் செய்வதுமுண்டு. இதைப் பற்றி கு.ப.ரா, ஜானகிராமன் போன்றோர் எழுதியிருக்கிறார்கள். கற்பெனப்படுவது சொற்திறம்பாமை. உங்களிடம் பெறும் பணத்தைத் திருப்பித் தருகையில்தான் நான் கற்புடையவனாகிறேன். நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன், நீ சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம். இதை ஜானகிராமன் போன்றோரிடம் கற்றுக்கொண்டேன். இதைப் பற்றிப் பல இலக்கியங்களில் ஆதாரம் இருக்கின்றன. பாலியல்ரீதியான சுரண்டல் எப்பொழுதும் ஆண்களின் பக்கம் அதிகமாக இருக்கிறது. ஜெயமோகன் கூறுகிறார்- ” ஒரு துறவி பொறுப்பற்று இருக்கும் தன் சீடனிடம் பணம் கொடுத்துப் பெண்கள் இருக்கும் விடுதிக்குச் சென்று வரச் சொன்னார் என்று.” நமக்கு இரு விதமான இன்பம் உண்டு. சிற்றின்பம், பேரின்பம். பாலியல் உறவையும், பாலியல் உணர்வையும் நாம் ஏன் கேவலமான ஒன்றாகப் பார்க்க வேண்டும்? தமிழில் இதைப் புணர்ச்சி என்று சொல்லலாம். கற்று + கொண்டேன் = கற்றுக்கொண்டேன். ஒரு சொல் இன்னோரு சொல்லோடு புணர்வதுதான் புணர்ச்சி. நமக்குக் கலவி, முயக்கம், பேராசிரியர் அருளி சொல்லக்கூடிய உவப்பு எனப் பல சொற்கள் உண்டு. உவப்பு என்பதற்கு லெக்சிகனில் மகிழ்ச்சியாக இருத்தல் என்று பொருள். ஆணும் பெண்ணும் பாலியல்ரீதியாக மகிழ்ச்சியாக இருத்தல் என்றும் பொருள். இந்த உவப்பு என்ற சொல்லை ஐந்து முறை சொல்லிப் பாருங்கள், நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய சொல்லுக்கு வந்துவிடுவோம். உடலுறவு என்பது உடல்மாத்திரம் சார்ந்தது இல்லை, உடலும் சார்ந்தது. உடலுறவு என்ற சொல் லெக்சிகனில் இல்லை. முன்பு தமிழ்ப் பயன்பாட்டில் இல்லை. எந்தப் பேராசிரியர் கண்டுபிடித்தார் என்பதும் தெரியவில்லை. ஆனால் இன்று நம் எல்லோருக்கும் இந்தச் சொல் மிகப் பரிச்சயமானதாக இருக்கிறது.

முத்தொள்ளாயிரத்தில் ஒரு பாடல் உண்டு.

காராட் டுதிரம் தூஉய் அன்னை களன் இழைத்து
நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ!-போராட்டு
வென்றி களங்கொண்ட வெஞ்சினவேற் கோதைக்கென்
நெஞ்சங் களங்கொண்ட நோய்!

இது ஒரு வெண்பா.

இவள் சாப்பிடாமல் பித்து பிடித்தவள் போல் இருக்கிறாள். அன்னை இவளுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று நினைக்கிறாள். மந்திரிவாதிகளை அழைத்து ஆட்டு ரத்தத்தைத் தூவி, நீராட்டி நீங்கு என்று சொன்னால் நீங்குமா அது? என்னுடைய நோயானது போரில் வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதைக்கென்நெஞ்சங் களங்கொண்ட நோய்! திருமணத்திற்கு முன்னால் இது நடக்கிறது. அப்பொழுது அவள் கற்பிழந்தவளா? நமது உலா, தூது சிற்றிலக்கியங்களில் இது போன்ற விஷயங்கள் உண்டு. உடன்போக்கு என்ற ஒன்றும் இருக்கிறது. கற்பொழுக்கம், களவொழுக்கம் என்றும் இருக்கிறது. பரத்தை, வேசி, பொருட்பெண்டிர் இது வேறு கலாச்சாரம். சங்க காலத்தில் இது பிழையாகப் பார்க்கப்படவில்லை.

தொல்காப்பியத்தில் ஒரு சூத்திரம் உண்டு.

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” என்று.

பொய்யும் பிழையும் ஆணிடம்தான் அதிகமாக இருக்கும், பாதிக்கப்படுபவளாகப் பெண்தான் இருக்கிறாள். ஊரார் பழியை அவள் ஏற்க நேர்கிறது. கருவுற்றாலும் அவள்தான் சுமக்கவோ, கலைக்கவோ வேண்டி இருக்கிறது.

ஆண்டாள் எனும் குழந்தையை ஒரு பூந்தோட்டத்தில் மலர்ச்செடியின் அடிவாரத்தில் பெரியாழ்வார் கண்டெடுக்கிறார். வரிசையாக சால் போன்ற வீடுகள் இருக்கக்கூடிய ஒரு பெண், தாய்க்கும் யாருக்கும் அறியாமல் கருவுற்றுக் குழந்தை பெற்றுப் பூந்தோட்டத்தில் சென்று விட்டுவிடச் சாத்தியமே இல்லை. ஏதோவொரு செல்வந்தர் வீட்டுப்பெண், இருவர் மூவரின் உதவியுடன் குழந்தை பெற்று அதைக் கொல்லாமல், கொண்டு சென்றுவிட முடிகிறது. அந்தக் குழந்தைக்குப் பொறுப்பானவர் யார் என்பதை ஒரு நியாயத்துடன் பார்க்க வேண்டும், சுரண்டல் என்பது ஆண் தரப்பிலிருந்து தொடங்குகிறது. பாலியல் உறவில் யார் முன்கை எடுப்பது என்று பார்த்தால் சமயங்களில் மாறுபடும். அகலிகையைப் பற்றிப் பேசுகையில் கம்பன் கூறுகிறார்.

புக்கவளோடும் காமப் புதுமண மதுவின் தேறல்
ஒக்கவுண் டிருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும்
தக்கதன் றென்ன ஒராள் தாழ்ந்தனள் இருப்பத் தாளா
முக்கணா அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான்

தாழ்ந்தனள் என்றால் இடுப்பை விலக்கிக்கொண்டாள் என்று விளக்கவுரையில் எழுதுகிறார்கள்.

அதனால் மீண்டும் சொல்வது ஒரு பெண்ணுடைய அந்தரங்கமான உணர்வை ஆண் எழுதுவது துல்லியக் குறைவு. ஒருபோதும் அம்பை சிந்திப்பதுபோல் என்னால் சிந்திக்க முடியாது.

சுனில் கிருஷ்ணன்: பண்பாட்டு இழப்பு, நாட்டார் வழிபாடு நலிந்துகொண்டே வருவதைப் பற்றி வருந்துகின்ற நாஞ்சில் நாடன் இருக்கிறார். மறுபக்கம் புதிய பண்பாட்டை ஏற்கக் கூடிய ஆளாகவும் இருக்கிறார். இது ஓர் இன்றியமையாத மாற்றம் என்று ஏற்றுக்கொள்ள முடிகிறதா? பண்பாட்டு இழப்பு பற்றிய உங்கள் பார்வை என்னவாக இருக்கிறது? பண்பாடு என்ற சொல்லோடு பழமைவாதம் என்கிற ஒரு முத்திரை குத்தப்படுகிறதே?

நாஞ்சில் நாடன்: பண்பாடு என்பது காலத்திற்கும் மாறக் கூடியதுதானே. இதில் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று அறம், அறம் நிலையானது. மற்றொன்று ஒழுக்கம், ஒழுக்கம் மாறுதலுக்கு உட்பட்டது (variable). அறம் என்பது உலகத்தில் உள்ள எல்லோருக்கும் ஒன்றுதான். ஒழுக்கம் என்பது குடிக்குக் குடி, குலத்திற்குக் குலம் மாறும். பண்பாடு என்பதும் எப்பொழுதும் மாறாதது அல்ல, மூலமான விஷயங்களைப் புறக்கணிப்பது என்றும் இல்லை. என் தந்தையின் உடை கோவணம், வேஷ்டி, துவர்த்து. நான் கல்லூரி செல்லும் நாட்களில் எனது உடை காற்ச்சட்டைக்கு மாறிவிட்டது. வீட்டில் வேஷ்டியும் வீட்டைவிட்டு வெளியேறினால் நான்குவிதமான ஆடை அணிய வேண்டியிருக்கிறது. பண்பாடு தன்னை எப்பொழுதும் புதுப்பித்துக்கொண்டேதான் இருக்கும். அதே சமயத்தில் பழைய விஷயங்களைப் பழமை என்று புறக்கணிக்க வேண்டியதில்லை.

எனது சிறு வயதில், எங்கள் ஊரில் சுடலைமாடன் சாமி கொண்டாடி ஆராசனை வந்து ஆடுகிறபொழுது அதைப் பார்க்கும் எனக்குள் அந்தரங்கமானதொரு மெய்சிலிர்ப்பு, அதிர்வு, அச்சம், பக்தியுணர்வு இருக்கும். அவர் திரும்பினால் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து நிற்பேன். 2020இல் சுடலைமாடன் ஆராசனை வந்து ஆடுகிறபொழுது, தார்ரோட்டில் எதிரே பேருந்து வருகிறது. எனக்கு அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. சில விஷயங்கள் சூழலுக்கு ஏற்றவாறுதான் மாறுகிறது. இப்பொழுது பெருநகரங்களில் சிறுதெய்வக் கோவில்களில் திருவிழா நடந்து, பால்குடம் எடுத்து, வேலாயுதம் சூலாயுதம் வைத்துக்கொண்டு சாலையில் நடந்து செல்கிறபொழுது அவர்கள் மீது அனுதாபம்தான் ஏற்படுகிறது.

ஏன் நம்முடைய கர்ப்பக்கிரகங்களில் மின்விளக்குகள் ஏற்றப்படுவதில்லை. இது ஒரு சூழலை உருவாக்குகிற விஷயம். இது போன்று உணவுக்கும், பேச்சுக்கும், உடைக்கும் பொருந்தும். வலுக்கட்டாயமாகப் பழமை என்று சிலவற்றைப் புறக்கணிக்கும்போது ஓர் ஆதங்கம் உண்டு. அதில் சோம்பல் சார்ந்த சில காரணங்கள் வரக்கூடும். முருங்கைக்கீரை ஆய நேரம் அதிகம், முட்டைகோஸ் வெட்ட நேரம் குறைவு. ஆகவே முட்டைகோஸ் உயர்ந்ததாகவும், முருங்கைக்கீரை தாழ்ந்ததாகவும் ஆகிவிடாது இல்லையா? நமது வசதிக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்கிறோம். நான் வயதானவாக இருப்பதால் பழமைவாதம் பேசவில்லை. அதை உதாசீனப்படுத்தும்போது வருத்தமாக இருக்கிறது. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தொல்காப்பியச் சூத்திரம். இன்றும் புழங்குகிற அனைத்துச் சொல்லுக்கும் பொருள் உண்டு.

சுனில் கிருஷ்ணன்: கம்பனின் அம்பறாத் தூணியில் அசைச் சொற்கள் குறித்து ஒரு கட்டுரைகூட இருக்கிறது.

நாஞ்சில் நாடன்: ஆமாம். அசைச் சொல்லுக்கும் பொருள் உண்டு. ஒரு பொருளுக்குப் பல சொற்களும் உண்டு. யானை என்கிற ஒரு சொல் போதும்தானே?

யானை என்பது இரண்டு சீர். நேர் நேர்.
கரி ஒரு சீர். நிரை
தைம்மா என்றால் நேர் நேர்
களிறு நிரை நேர்
வாரணம் நேர் நிரை

இப்படி ஓசை நயத்துக்காக மட்டும் அவர்கள் வேறு சொற்களைக் கண்டுபிடித்து வைக்கவில்லை. எல்லாம் மக்கள் பயன்படுத்திய சொற்கள்தானே. எல்லாரும் ஒரே பெயரில் வைத்து அழைக்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. நான் என்னுடைய அசல் சொல்லை ஏன் புறக்கணிக்க வேண்டும்? என் நெருங்கிய நண்பர் ஒருவர், ஆவநாழி என்கிற சொல் எனக்கு புரியவில்லை அதை ஏன் உபயோகிக்க வைக்கிறீர்கள் என்றார். பன்னிரெண்டு கோடித் தமிழர்களுக்கும் பொதுவான சொற்களைத் தேடி அதைப் பயன்படுத்தி எழுத முடியாது. ஒரு சம்பவத்தை எழுதும் பொழுது காலத்தை உணர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

என்னுடைய பள்ளி ஆசிரியரைப் பற்றி ஒரு கதை எழுதியபோது அதில் பஸ் ஸ்டாண்ட் என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறேன். எனக்குப் பேருந்துநிலையம் என்கிற சொல்லைத் தெரியும். ஆனால் அந்தக் காலத்தில் பஸ் ஸ்டாப் என்கிற சொல்தான் உபயோகத்தில் இருந்தது.

பனுவல் போற்றுதும் எனும் தொடரை சொல்வனத்திற்கு எழுதியபோது பனுவல் என்ற பெயருக்குக் கேள்வி எழுத்தது. சென்னையில் பனுவல் என்கிற பெயரில் ஒரு புத்தகக்கடை உள்ளது.

“ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும் பாயிரம் இல்லது பனுவ லன்றே,” என்கிறது நன்னூல். பேராசிரியர்கள் பெரும்பாலும் பிரதி என்கிற சொல்லை உபயோகப்படுத்துகிறார்கள்.

சுனில் கிருஷ்ணன்: ஒரு வாசகனாக “பாடுக பாட்டே” படிக்கும்போது பேழையில் உறங்கும் பாம்பைப் போன்று சத்திமுத்தப் புலவர் நலிந்து ஆனால் உயிருடன் இருக்கிறார், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறார் என்பதை வாசிக்கும் மனம் சுடர்கிறது. படைப்பிலக்கிய எழுத்தாளரால்தான் இந்தப் பாடலுக்கு உயிர்கொடுக்க முடியும் என்று தோன்றியது. இவ்வகையில் ஒரு கல்வியாளர் இந்தப் பாட்டை விளக்க முடியாது. இந்த அர்த்தத்தில் எழுதுபவர்கள் தன்னையும் சத்திமுத்தப் புலவரையும் ஒரே மாதிரியாகப் பார்க்கக்கூடிய ஆளாகத்தான் இருக்கமுடியும். நாஞ்சில் நாடனின் மிகப்பெரிய பங்களிப்பு அவருடைய புனைவையும் விஞ்சி அவருடைய சொற்கொடை, மரபு இலக்கியத்தை, பழந்தமிழ் இலக்கியத்தை மீட்டுக்கொண்டு வந்ததுதான் என உண்மையில் நினைக்கிறேன்.

நாஞ்சில் நாடன்: பனங்கிழங்கைச் சாப்பிட்டிருப்பீர்கள். பனங்கிழங்கைச் சுட்டு அல்லது வேக வைத்து வெட்டிச் சாப்பிடலாம். இரண்டாகப் பிளந்து ஒடித்து நார் எடுத்துச் சாப்பிடலாம்.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்

இந்த உவமை கோடி ரூபாய் பெறும். நாரையின் அலகு பனங்கிழங்கு பிளந்தது போன்று இருக்கிறது என உவமை சொல்கிறார். சத்திமுத்தப் புலவர் சத்திமுத்தம் என்ற ஊரில் பிறந்தவர். மன்னனிடம் பாடிப் பரிசில் பெற முடியவில்லை என எண்ணி மதுரை மண்டபத்தில் படுத்துக்கிடக்கிறார்.

கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே.

நீயும்நின் மனைவியும் தென்றிசைக் குமரி
யாடி வடதிசைக் கேகுவீ ராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடுபார்த் திருக்குமென் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து

எங்கள் ஊர் சத்திமுத்தத்தில் மழையில் நனைந்த சுவரில் குறி சொல்லும் பல்லியின் பாடு பார்த்து என் மனைவி உட்கார்ந்திருப்பாள். அவளிடம் பேழையில் உறங்கும் பாம்பு என இருக்கும் ஏழையைக் கண்டேன் எனச் சொல் என்கிறார்.

இரண்டு பாட்டுதான் எழுதியிருக்கிறார். இன்னொன்று சிறிய பாட்டு. காளிதாசனின் மேகதூதம் முழுமையாகப் படிக்கிறோம். அவனும் இதையேதான் சொல்கிறான். அந்தக் கவிதை மொழியைச் சொல்லிப் பாருங்கள்.

“பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே.”

ல, ழ, ள’கரங்கள் நமக்குச் சரியாக உச்சரிக்க வரவில்லை. 300 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த புலவர், மொழி இருக்கிறவரை, இந்தப் பாட்டு உள்ளவரை உயிரோடு இருப்பார். இந்தப் பாடலில் உணர்ச்சிப்பூர்வமாக உள்ளே போகிறோம்.

பல ஊருக்குப் பயணம் போகிறோம். ஒரு புகைவண்டி நிலையத்தில் குளிர் காலத்தில் கம்பளி இல்லாமல் கைக்கட்டி உட்கார்ந்திருக்கும்போது சத்திமுத்தப் புலவரை நினைவு கூரலாம். இந்த மாதிரியான விஷயங்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிற பொறுப்பு நமக்கு இருக்கிறது.

சமீபத்தில் உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவில் நடந்தது. இரண்டு பாட்டுக்குப் பொருள் சொல்லச் சொன்னார்கள்.

கலம்செய் கோவே கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!

என்றொரு சங்கப் பாடல் சொன்னேன்.

வண்டிச் சக்கரத்தில் வாழும் பல்லியானது அதனோடும் சுழன்று நெடுந்தொலைவு செல்வது போல வாழ்வின் பல துன்பங்களில் அவனோடு ஒட்டி இதுவரை வாழ்ந்து வந்தாள். இப்போது அவன் இறந்துவிட்டான். அவனுக்குச் செய்யும் முதுமக்கள் தாழியைக் கொஞ்சம் பெரிதாக வனைக. எனக்கும் அதனுள் இருக்க இடம் வேண்டும் என்கிறாள். இப்போதுள்ள பெண் சூழலுடன் இதை ஒப்பிட முடியாது. அவளுடைய மனோபாவத்தைச் சொல்கிறோம். இதைப் பேராசிரியர்கள் சுவாரஸ்யமாகச் சொல்ல வேண்டும்.

நான் முறையாகக் கம்பன் படித்தவன். செய்யுள் வாசிக்கிற மாதிரி படிப்பேன்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனில்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

என்பது தேவாரம். கம்பன் படிக்கிறபோது என் ஆசிரியர் ரா.பத்மநாதன் சொன்ன முதல் பாடம், ‘நீ பொதுவாகப் படிக்கிற மாதிரி செய்யுளைப் படிக்கக் கூடாது. ஒசை நயம்படச் சொல்லவேண்டும்,’ என்பது.

மும்மை சால் உலகுக்கு எல்லாம்
மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப்பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
மருந்தினை ‘இராமன்’ என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக்
கண்களில் தெரியக் கண்டான்

(வாலி வதைப்படலம்)

“பழந்தமிழ் இலக்கியத்தில் ஒன்றும் இல்லை. அதைப் படித்துக் கவிதை எழுத வேண்டும் என்ற அவசியமில்லை,” என்ற போதனை நடந்தது. 15 வருடம் முன்னால் கோவையில் ஞானி தலைமையில் கவிதைப் பட்டறை நடந்தது. முழு நாட்கள் நடந்த கவிதைப் பட்டறையில் நிறைவு உரை நான் தந்தேன். சமகாலக் கவிதையில் உள்ள பிரச்சனைகளைப் பேசினேன். அடுத்த வாரம் கூட்டம் போட்டு முழுக்க என்னைத் திட்டினார்கள்.

நான் என்ன சொல்கிறேன் என்றால், கவிதைக்கும் உரையாடலுக்குமான வேறுபாடு என்ன? மொழிக்குள் ஓர் இசைவு இருக்கிறது. இசைவு என்றால் “சரிகமபதநி” இல்லை. சொற்களுக்கு இடையேயான இசைவு. அந்த இசைவுகூடத் தெரியாமல் பத்தியில் எழுதக்கூடிய வாக்கியத்தை நான்காக உடைத்துப்போட்டுக் கவிதை எனச் சாதித்தால் நாம் எப்படி வாங்கிக்கொள்வது?

அதற்காக, பழந்தமிழ்க் கவிதை எல்லாம் மேற்கோள் காட்ட வேண்டியுள்ளது. எதுகை, மோனை சந்தம் வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. சங்க இலக்கியத்தில் எதுகை, மோனை கிடையாது. ஓசை சார்ந்த ஒழுங்கு இருக்கிறது. வெண்பா, ஆசிரியப்பா, அகவற்பா, விருத்தப்பா போன்ற ஓசைகள் உள்ளன. அதனால்தான் அது கவிதை. கவிதைக்கு மொழியின் உச்சம் தெரியும். இதைச் சொல்லப் போனால் என் சாதியை, அம்மையைத் திட்டுகிறார்கள். இதற்கு எதிர்வினையாற்றத்தான் எனக்குக் கும்பமுனி அவசியமாகிறது.

ஓர் உரையாடலில் வெங்கட்சாமிநாதன் சொல்லி இருக்கிறார். “நாஞ்சில் நாடன்! எல்லாக் கல்லையும் முதல் சுற்றில் எறிந்துவிடாதீர்கள். மூன்று கல்லை பாக்கெட்டில் மிச்சம் வைத்துக்கொள்ளுங்கள். இரண்டாம் சுற்றுக்குத் தேவைப்படும் என்று. நான் 30 வருடமாக இதை முக்கியமான விஷயமாக மனதில் வைத்திருக்கிறேன். ஏதாவது பிரச்சனை வந்தால் இன்னும் என்னிடம் கல் இருக்கிறது.


நேர்காணல் தட்டச்சில் உதவிய நண்பர்கள் வினுதா, வினோத், பாலாஜி, ப்ரியா புரட்சிமணி மற்றும் பிழைகள் திருத்தி செழுமைப்படுத்த உதவிய நண்பர் மோகன்ராஜ், நேர்காணலுக்காக ஜூம் அக்கவுண்ட் பயன்படுத்த அனுமதித்த நண்பர் சந்தோஷ் லாவோசி மற்றும் கேள்விகள் தயாரித்து நாஞ்சில் நாடனிடம் உரையாடி அவற்றுக்கான பதில்களைப் பெற்றுத்தந்த சுனில் கிருஷ்ணனுக்கும் அரூ குழுவின் மனமார்ந்த நன்றியும் அன்பும்.

சுனில் கிருஷ்ணன் and நாஞ்சில் நாடன்

http://suneelwrites.blogspot.com/

View Comments

  • சிறந்த நேர்காணல். அவரது பிற நேர்காணல்களில் இல்லாத புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

  • பொருள் செறிந்த, நிறைவு தந்த நேர் காணல். சுனில் நாஞ்சில் நாடனை நன்கு படித்திருக்கிறார் என்பது தெரிகிறது. தமிழ் பெருமைப் படுகிற படைப்பாளி நாஞ்சில் நாடன். நன்றி. அன்புடன் ராமகிருஷ்ணன்

  • இயல்பான நேர்காணல். நல்ல கேள்விகள்... நாஞ்சில் நாடன் ஐயா அவர்களின் சொற்சேகரம் எப்போதுமே பிரமிக்கத்தக்கது. அவரின் candid speech தான் அவருடைய பலம்..

  • சரியான கேள்விகள். பதில்கள் நீளமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தது.

  • அருமை
    பல துறைகளைப் பற்றிய நாஞ்சில்
    ஐயாவின் தேர்ந்த, தெளிந்த ஞானம் மலைக்க வைக்கிறது. சுனில் அவர்களின்
    ஒவ்வொரு கேள்விக்குப் பின்னால் உள்ள
    உழைப்புக்கு ஒரு வணக்கமும்! வாழ்த்துக்களும்!

  • அருமையான நேர்காணல்.நாஞ்சில் நாடன் எழுத்து பேச்சு அனைத்தும் ரசிக்க தக்கவை.

  • நேர்காணலைப் படித்த போது சுனிலும் நாஞ்சிலாரும் அருகிருந்து பேசுவதைக் கேட்பது போலவே இருந்தது.

    நாஞ்சில் நாடனின் இலக்கியத் தேர்ச்சியும் அனுபவமும் பதில சொல்லும் லாவகமும் சிலிர்க்க வைக்கிறது.

    வினா தயாரிப்பிற்கு சுனில் கிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்.

Share
Published by
சுனில் கிருஷ்ணன் and நாஞ்சில் நாடன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago