கட்டுரை

கைவிடப்பட்டவரின் பிரதிநிதி

5 நிமிட வாசிப்பு

சற்றே கசப்பு நிறைந்த எழுத்து தன்னுடையது என்றே நாஞ்சில் நாடன் அவர்கள் சுயமதிப்பீடு செய்கிறார். (சூடிய பூ சூடற்க – முன்னுரை). ஒரு வாசகனாக அதைக் கசப்பு என்று என்னால் சொல்ல இயலாது. சீற்றம் என்று சொல்லலாம். அவரது சிறுகதை தொகுப்புகளில் படிப்படியாக அந்த சீற்றம் வளர்ந்து கொண்டே போவதைக் காணலாம். சீற்றம் வளர்கிறது என்றால் முதலில் ஒரு மனிதனை எரித்து, அடுத்த தொகுதியில் ஊரை எரித்துப் பின் அதற்கடுத்துப் பிரபஞ்சத்தை எரிக்கிறது என்கிற பொருளை எடுத்துக் கொண்டுவிடலாகாது. அவரது சீற்றம் முதலில் சகமனிதனின் தவிப்பைக் காணாது செல்லும் கீழ்மை கண்டு எழுகிறது. பின் அது இம்மாதிரி இழி மனிதர்கள் முன்னால் ஏன் நிற்கிறாய் என்று இரைபவனை நோக்கியும் சீறுகிறது. பின் இதைக் கண்டு நீ என்ன செய்தாய் என்று தெய்வத்தின் மீதும் சீறுகிறது. அது ஒரு சீற்றம்தான் என்றாலும் சாபம் அல்ல. யாரையும் அழிந்து போ என்று ஆசிரியர் சபிப்பதில்லை. அது ஒருவகை கனிவே. இறுதியில் இம்மாதம் ஆவநாழியில் வெளியான அவரது சமீபத்தியக் கதைவரை படித்தபின் அடித்துச் சொல்ல முடிகிறது. அவை அனைத்தும் வெறும் கனிவாகவே எஞ்சி நிற்கின்றன என்று.

அவரது கதைகள் பெரும்பாலும் கைவிடப்பட்டவனின் குரல், கைவிடப்பட்டவனை அடையாளப்படுத்தும் குரல், பின் கைவிட்ட மனிதர்களின் அறியாமையை அல்லது அகங்காரத்தைச் சுட்டும் குரல் என்றே ஒலிக்கத் துவங்கி அதற்குப் பிறகு அதன் அடுத்த படிநிலையான தீர்வை நோக்கியும் செல்கின்றன. 1998-ல் கும்பமுனி அவதரித்த பின் (நேர்காணல் சிறுகதை) அவரது கதைகள் தன் பழைய சீற்றத்தை வேறு விதமாக வெளிப்படுத்தித் தனித்துவம் கொண்ட வேறோர் இடத்துக்குச் செல்கின்றன.

கைவிடப்பட்டவர்கள் என்றால் ஏதோ வாழத்தகுதியற்றவர் அல்லது வக்கற்றவர் என்று பொருளாதார அல்லது அதிகார வரிசையில் கூறுவது அல்ல. தான் வசதியாக வாழ்ந்து தன் இரு பெண்களை நல்ல இடத்தில் வசதியாக கட்டிக் கொடுத்தவரும்தான். ஆனால் அவருக்கு அமாவாசை அன்று நல்ல சோறு கிடைப்பதில்லை. இரு மகள்களும் ‘ஏம்ப்பா இங்க சாப்பிட வரலை’ என்று கேட்டு கோபித்துக்கொள்கிறார்கள். அவரது கூச்ச உணர்வு அவருக்கும் முன்னாலேயே அங்கு சென்றுவிடுகிறது. தான் இன்னும் சாப்பிடவில்லை என்று சொல்ல நா எழ மறுக்கிறது. சொந்த மகளாயினும் தயக்கம் வந்துவிடுகிறது. வேறு ஒரு விருந்தினரை உபசரிக்கையில் சாப்பிடுங்கள் என்று அழைக்கும் நாகரீகத்தை இன்றும் மக்கள் மறந்துவிடவில்லை. ஆனால் அதைச் சொந்த தந்தையிடம் காட்டாமல் இருப்பது அந்த மகள்களின் தவறும் அல்ல. நாம் வழக்கத்துக்கு மாறாக திருநீறு பூசி வந்ததால் அவர்கள் அவ்வாறு புரிந்துகொண்டனர் என்று அவரும் தன் வீட்டிற்கே சென்று பழையதை எடுத்து உண்கிறார். தான் சாப்பிடவில்லை என்று சொல்லியிருந்தால் அது சரியாகியிருக்கும். ஆனால் பெற்றவளைத் தவிர மற்ற யாரிடமும் பசிக்கிறது என்று சொல்லி உணவு கேட்கக் கூசும் மனித மனம். அதுவே ஒருவனின் சுயம். அது அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லாத ராசாவுக்கும்தான் இருக்கிறது என்று சுட்டிக் காட்டுகின்றன இவ்வகைக் கதைகள்.

நண்பர் குழாம் இல்லாத வேறு ஒரு குழுவில் தன் பிழைப்புக்காக அல்லது தனக்கான ஏதோ ஒரு பலனைச் சாதித்துக்கொள்ள வேண்டி விருப்பமில்லாமல் புழங்க வேண்டித்தான் உள்ளது. அத்தகைய மகிழ்வுக் கூட்டங்களில், கொண்டாட்டங்களில்கூட யார் அதிகாரத்தில் பெரியவர், யார் இளைத்தவர் என்ற படிக்கட்டுகள் எக்கணமும் அதிசிறக்க எவ்வாறோ உணர்த்தப்பட்டும் விடும். தன்னியல்பாலேயே சுயமரியாதை உள்ள ஒருவர்கூட, அத்தகைய நவநாகரீக உலகில் மேல்தட்டுக்குச் சென்று புழங்க சற்று கூச்சத்தை விட்டு எழுந்தால் போதுமானதுதான். அதற்காகக் கீழ்மையில் முங்கிக் குளிக்கத் தேவையில்லை. காலைச் சற்று நனைத்துக்கொண்டால்கூடப் போதும். டேபிள் மேனர்ஸ் என்றும் கம்பெனி என்றும் அவற்றிற்குப் பெயர்களைக்கூடச் சூட்டிக்கொள்ளலாம். என்றாலும் அவ்வுலகில் புழங்கிக்கொண்டும் ஆனால் உள்ளூரக் கூசும் அகத்தோடும் இருப்பவர்கள் உண்டு. அத்தகைய தன் கூச்சத்தால் எங்கும் நாணித் தவிப்பவர்களும் உண்டு. ‘சிறுமை கண்டு பொங்குவாய் வா! வா! வா!’ என்று மகாகவி சொல்லக்கேட்டு வளர்ந்தாலும் அனைவராலும் அவ்வாறு பொங்கிவிட முடிகிறதா என்ன?

இந்தக் கைவிடப்பட்டவர்கள் கதைகளை விடவும், பின்னால் வந்த கும்பமுனிக் கதைகளை விடவும் எனக்கு மிக அணுக்கமானவை அவரது “கை கொடுக்கும்“ கதைகள். மொஹித்தே, கான்சாகிப்,’ பிராந்து’ மந்திரமூர்த்தி என்று அவர் அறிமுகப்படுத்தும் மனிதர்கள். ஒரு சிலர் முன்னேற ஒரு வாய்ப்பும் இல்லாமல், வாழ்வில் முதல் அடிகூட எடுத்து வைக்காமல் ஊரிலேயே எருமைக் கிடாவிற்கு இணையாகச் சோம்பலில் கிடந்து உழலுவதும் உண்டு. யாரோ ஓர் அய்யாவு ஆசான் (நாட்டு மருந்து) அவர்களுக்கு வாய்க்கிறார்கள். தனக்குள்ளே மூழ்கியவரை நோக்கி, வா என்று கை நீட்டுகிறார்கள். இந்தியா முழுவதும் உள்ள இத்தகைய மனிதர்களை, குழுக்களை, பண்பாடுகளை அறிமுகப்படுத்தியே செல்கிறார். நாஞ்சில் நாடன் என்று பெயர் வைத்து ஒரு பிராந்தியத்துக்குள் தன்னை அவர் சுருக்கிக்கொண்டாலும் சக மனிதர்கள் மீது நம்பிக்கை கொள்ள வைக்கும் இக்கதைகள் மூலம் அவர் உலகம் யாவிற்குமான எழுத்தாளராகவே வெளிப்படுகிறார்.

இதுவரை நாஞ்சில் நாடன் அவர்களின் எட்டுச் சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. கான் சாகிப் அதில் முக்கியமானது. அவரது மொத்த கதைகளையும் வாசித்த ஒருவருக்கு இந்தத் தொகுப்பு ஒரு முக்கூடல் போல. அவற்றில் நாஞ்சில் நாடன் அவர்களின் முற்கால கதைகளில் இருக்கும் அப்பாவிகளின் புரியா நிலையில் எழும் சீற்றத்திலிருந்து, பிற்காலக் கதைகளில் கும்பமுனியின் உக்கிரம் வரை அனைத்தும் கலந்த தொகுப்பாக இதைச் சொல்லலாம். கைவிடப்பட்டவர்களின் குரலாக ஒலித்த குரல் இங்கிருந்து அவர்களின் பிரதிநிதியாகவும் எழுந்து நிற்கிறது. நீ என்ன செய்தாய் என்று கேட்டவை இவ்வாறும் செய்யலாம் என்று செய்தும் காட்டுகின்றன. அவரது கதைகளில் மிகவும் அணுக்கமானவையாக இவற்றை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். அந்த விதத்தில் எட்டுத் தொகுப்புகளிலும் எனக்கு மிக அணுக்கமான தொகுப்பாகவும் ‘கான்சாகிப்’ உள்ளது.

கைவிடப்பட்ட பேச்சியம்மையின் ஆங்காரம்தான் அவளை வார்த்து எடுத்தது. கணவன் இல்லாது, வெறும் பதினெட்டு மரக்கால் விதைப்பாட்டில் மகனைப் பொறியியல் படிக்கவைத்து, அண்டை வீடுகள் தரும் உணவுகூட உண்ணக்கூடாது என்று மகனைக் கண்டிப்புடன் வளர்த்தது அவளது வைராக்யம். ஆனால் பிற்காலத்தில் அது அவளது மகனாலேயே சோதிக்கப்படுகிறது. ஆனால் இத்துணை காலம் அவளுடன் இருந்து அவளையும் இயக்கியது அவ்வைராக்யம்தான். அதுவே அவளுக்கு இறுதித்துணை (பேச்சியம்மை). கீழோர் முன் அமைதியாகச் செல்லும் கோம்பையும் அவன் கூட்டமும் காட்டும் எதிர்வினை அதே வைராக்யத்தின் மற்றோரு வடிவம் (கோம்பை). மற்றொரு கதையில் (பின்பனிக்காலம்) காமாட்சி நாதன் மலையம்மையை மணம் முடிக்கிறார். அது, அதே கைவிடப்பட்ட மனிதர் தன்னைப்போலவே மற்றவரைக் கண்டபின் கனிந்து வரும் தருணம். அசரீரியாக ஒலிக்கும் அறத்தின் குரலாக ஆசிரியரின் குரல் பலவகைப் பாத்திரங்களின் ஊடாக வெளிப்பாட்டுக்கொண்டே இருக்கிறது. அநாதைக் குழந்தைகள் என்பதால் கல்யாண வீட்டில் மீந்து போன உணவைத் திருப்பி அனுப்பும் சாமியார் சொல்வது ” எம்புள்ளைங்க அனாதைங்கதான் ஆனால் பிச்சைக்காரங்க இல்ல பாத்துக்கிடுங்க” என்று. ஒரு விதத்தில் அவரது முந்தைய கதைநாயகனான பண்டாரம் (இருள்கள் நிழல்கள் அல்ல) ஏற்றி வைத்த பாரத்தை இது இறக்கிவைத்தது. பண்டாரம் இன்று இருந்திருந்தால் பட்டினியாக நின்றிருக்க மாட்டான். ஆனால் பண்டாரம் அடைந்த புறக்கணிப்பு என்றும் ஒன்று உள்ளது. அது இன்று மாறிவிட்டதா என்ன? உணவும் பொருளும் தாராளமாகக் கிடைத்தாலும் புறக்கணிப்பும் அவமானமும் நுட்பமான ஒன்றாக மாறிவிட்டது. பணத்தையும் தாண்டிய ஒன்று உள்ளது; பணம் மட்டுமே வாழ்க்கையில்லை போன்றவையெல்லாம் அனைவரும் சொல்லிச் சலித்த ஒன்றாகிவிட்டது. கேட்பவரும் ‘ஆமாங்க சரியாச் சொன்னீங்க போங்க’ என்று சொல்லி எளிதாக நகர்ந்து சென்றுவிடும் அளவு அலட்சியம் நிறைந்துவிட்டது. அந்தத் தருணத்தில்தான் கும்பமுனியின் உக்கிரம் எழுகிறது. இதற்கு முந்தைய தொகுப்பு வரை இலக்கியப் பிழைகளுக்காகத் தன்னளவில் கண்ணீர் மல்கிக் கொண்டிருந்த கும்பமுனி, ஒரு பெரும் முனீஸ்வரனாக எழுந்து, ‘நாய்க்குப் புழல்ல தேனீருந்தா போயி அதையும் நக்குவீரா வோய்?’ என்று உக்கிரம் கொள்கிறார். முனீஸ்வரனின் துணையாக வரும் புரவி போலத் தவசிப்பிள்ளையும் கும்பமுனிக்கு உடன் சேர்கிறார். அந்த இரட்டை நாயனங்களின் எழுகையைக் கான்சாகிப் தொகுப்பில் காணலாம். பல இடங்களில் வயிறு நோகச் சிரிக்க வைக்கவும் தவறுவதில்லை.

சமகால எழுத்தாளர்களில் தனக்கான எவ்வித அரசியல் சார்பும் இல்லாமல், நடப்பு அரசியலின் கூத்துக்களை இலக்கியத்தில் பதிவு செய்தவர்களில் நாஞ்சில் நாடன் முதன்மையானவராகவே இருப்பார். நான் அறிந்த வரை அவர் ஒருவர்தான். இந்நாட்டு இங்கர்சால், ராமராச்சியம் என்றெல்லாம் தன் முதல் தொகுப்பிலிருந்தே அவர் தன் கருத்துகளை விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இந்தத் தொகுப்பிலும் ஒரு குதிரை பேரக் கதை உண்டு. பொதுவாகவே கும்பமுனி போஸ்ட்மேன் முதல் பிரதமர் வரை எவரையும் விட்டுவைப்பவர் இல்லை. இவ்வாறு, அரசியலையும் சமூகத்தையும் விமர்சிக்கும் அதிகாரத்தை மக்கள் அனைவருக்கும் வழங்கிவிடுவதில்லை. அது ஒரு பிதாமகனுக்கான இடம். சுய விருப்பு வெறுப்பு இல்லாமல் அதைச் சொல்பருக்கே அந்த பீடம் அமைகிறது. அது நாஞ்சில் நாடன் அவர்களுக்கு உள்ளது. காரணம் சமூக விமர்சனமோ அரசியல் விமர்சனமோ செய்யும் எந்த ஒரு படைப்பாளியும் தொடத் தயங்கும் இடம் ஒன்று உண்டு. அது தன் துறை மீதான விமர்சனம். தன் இனம் மீதான விமர்சனம். ஆனால் இங்கோ, தான் சார்ந்த மக்கள் அல்லது துறை என்றால் கும்பமுனிக்குத் தனி உற்சாகமே வந்துவிடுகிறது.

இந்தத் தொகுப்பில், ஒருவித நேரடி அஞ்சலிக் குறிப்பு போலவே உள்ள தலைப்புக் கதையான கான்சாகிப், அவர் அடையாளம் காட்டும் ஓர் உதாரண மனிதர் என்று தோன்றுகிறது. யாரும் அதிமானுடனாக அற்புதங்கள் செய்ய வேண்டாம். சிறந்த நண்பராக இருக்க அங்க தேசத்தை எழுதி வைக்கவும் வேண்டாம். தன் சக மனிதனுக்கு அளிக்கத்தக்க குறைந்தபட்ச நேசத்தையும் நண்பனுக்கு அளிக்கத்தக்க குறைந்தபட்ச நம்பிக்கையையும் அளித்தால் போதுமானது. ஒரு தோள்பட்டைப் பையாக அவர் நினைவை இலக்கிய உலகம் என்றும் சுமந்து கொண்டிருக்கும்.

இந்த ‘கான் சாகிப்’ சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினேழு கதைகள் உள்ளன. வாசித்து முடித்ததும் வாசகர்கள் ஒருவித சுயபரிசோதனை செய்து பார்க்கலாம். நம்மைப் பற்றி ஒருவர் எழுதினால் நாம் இதுபோல கான்சாஹிப் வரிசைக் கதைகளில் வருவோமா அல்லது கும்பமுனிக் கதைகளில் பாத்திரமாக வருவோமா என்று!!!

காளிப்ரஸாத்

காளிப்ரஸாத் சென்னை-திருமுல்லைவாயலில் வசிக்கிறார். சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். நாவல் மற்றும் சிறுகதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.

http://kaliprasadh.blogspot.com/?m=1

Share
Published by
காளிப்ரஸாத்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago