1.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்த இரு கருந்துளைகளிலிருந்து வெளிப்பட்ட ஈர்ப்பலை (Gravitational wave) வெளி-நேரம் (space-time) இழைமத்தை (fabric) நீட்டுவதை நாம் 2016 ஆண்டு LIGO (Laser Interferometer Gravitational wave observatory) எனும் கருவி மூலம் கண்டுபிடித்தோம். நூறு ஆண்டுகளுக்கு முன் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் விசேஷ சார்பியல் கோட்பாட்டின்படி தேற்றமாக உருவாக்கப்பட்ட ஈர்ப்பலை, 2016 ஆம் ஆண்டு நிரூபிக்கப்படுகிறது.
1.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு அலையை நாம் எப்படி அடைந்தோம்? நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தேற்றமாக மனிதகுலம் அறிந்துகொண்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன் அதை அளவிடுவதற்கான கருவியை உருவாக்கி, நம் வளிக்குள் அலை நுழைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் உபயோகிக்கத் தொடங்கிய கருவி வழியாக இது நம் மடியில் வந்து விழுந்திருக்கிறது. அலைக்கும், நமக்கும் எத்தனை மகத்துவமான பயணம்!
இந்தப் பயணம் நமக்கு எந்தவிதத்தில் உபயோகமாக இருக்கிறது? மனிதன் வானத்தைப் பார்க்கத் தொடங்கிய நாள் முதல் கண்ணுக்குத் தெரிந்த கோள்களையும், நட்சத்திரங்களையும் ஆராய்ந்தான். பின்னர், வளி மண்டலத்திலிருந்து நம் வானம் வழியாக நுழைந்த நுண் துகள்களையும் அதன் பாதிப்புகளையும் கொண்டு நம் பால்வீதியின் மூலப்பொருட்களை அறிந்துகொண்டான். இன்று, நம் கண்ணுக்கும் கருவிக்கும் தெரியும் ஒளிக்கதிர்கள் மொத்த அண்டத்தில் 2 சதவிகிதம்கூட இல்லை எனத் தெரிய வந்திருக்கிறது. நம் அண்டத்தில் நிறைந்திருப்பது வெளிநேர இழைமமும், கரும்பொருள் மட்டுமே என்பதால் அவற்றை அளக்கும் கருவிகளை உருவாக்குவதற்கு பல ஆய்வு அமைப்புகள் முனைப்புடன் இயங்குகின்றன. அதன் தொடக்கமாக இந்த LIGO அமைந்துள்ளது.
காலம் மற்றும் வெளி-நேரம் பற்றி நாம் மென்மேலும் அறியும்போதெல்லாம் அவற்றைப் பற்றி நமக்கு எத்தனை குறைவாகத் தெரிகிறது எனும் உண்மையை இது போன்ற ஆய்வுகள் உணர்த்துகின்றன.
2017 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் கால்டெக் ஆய்வு மையம் துகள்களின் குவாண்டம் இயல்பான துகள் பின்னல் (Quantum Entanglement) பற்றிய ஓர் ஆய்வு முடிவைப் பிரசுரித்தது. குவாண்டம் பின்னலில் அமைந்திருக்கும் இரு துகள்கள் எத்தனை தூரத்திலிருந்தபோதும் ஒன்றோடு ஒன்று தொடர்புகொள்ளும் முறையின் அடுத்த கட்டத்தை இந்தக் கட்டுரை விவரித்திருந்தது. ஒரே மூலத்திலிருந்து வரும் இரு துகள்கள் தற்சுழற்சியில் எதிரெதிராக அமைந்திருக்கும். குவாண்டம் கொள்கையின்படி துகள்களின் தற்சுழற்சியின் வகையை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. ஒரே சமயத்தில் துகள் வலஞ்சுழியாகவும், இடஞ்சுழியாகவும் இருக்கும். சுழற்சியை அளக்க முற்படும்போது ஏதேனும் ஒரு வகையைத் தேர்ந்தெடுக்கும். ஒரே மூலத்திலிருந்து வரும் இரு துகள்களில் ஒன்றை அளக்கும்போது வலஞ்சுழியாக இருந்தால், மற்றொன்றைப் பிரிதொரு சமயம் அளக்கும்போது இடஞ்சுழியாக இருக்கும். இரண்டுமே ஒரே சுழற்சியில் இருக்காது. ஒரு வேளை முதல் துகள் இடஞ்சுழியாகச் சென்றால், மற்றொரு துளை வலமாக அமைந்திருக்கும். எத்தனை தூரம் இருந்தாலும் இரு துகள்களும் பேசி வைத்தது போல இதைச் செய்யும். இந்த ஆய்வின் அடுத்த கட்டத்தை கால்டெக் ஆய்வு மையம் வெளியிட்டது. அதாவது, துகள் பின்னலில் ஈடுபட்டிருக்கும் இரு துகள்கள் தூர இடைவெளிகளில் மட்டுமல்லாது கால இடைவெளிகளிலும் செய்தி பரிமாறிக்கொள்ளும் என்பதுதான் அந்தப் புது ஆய்வின் முடிவு. அதாவது, ஒரே மூலத்திலிருந்து வரும் இரு துகள்களைக் குவாண்டம் பின்னலில் சேர்த்தபின்னர் ஒன்றை நிகழ்காலத்திலும், மற்றொன்றை எதிர்காலத்திலும் அளக்கும்போது அவை செய்தி பரிமாறிக்கொள்கின்றன எனும் உண்மையை அடைந்துள்ளனர். காலம் மூலம் செய்தி பரிமாற முடியும் என்பது இயற்பியலில் மிக முக்கியமான முன்னகர்வு. இதை எங்கெல்லாம் பயன்படுத்த முடியும்? குவாண்டம் துகள்களின் பின்னல் மூலம் தகவல்களை நம்மால் மறையாக்கம் செய்ய முடியும். அப்படிச் செய்த செய்திகளைக் குறிவிலக்கம் செய்வதற்கு இது போன்ற துகள் பின்னலின் ஒரு பகுதி உபயோகமாகும்.
நவீன இயற்பியலில் காலம், வெளி-நேரம், ஈர்ப்பலை, குவாண்டம் பின்னல் போன்றவற்றைப் பற்றிப் பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. அவற்றைப் பற்றி ஆழமான அறிதலைப் பெற நாம் காலம் பற்றிய அடிப்படைகளை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியிருக்கிறது. நாம் காலங்காலமாக அறிந்து வரும் பல அறிவியல் உண்மைகள் இன்று முற்றிலும் சரியல்ல என நிரூபணமாகியுள்ளன. காலம் பற்றியும், வெளி-நேரம் பற்றியும் நாம் புதுவிதத்தில் அணுக வேண்டியுள்ளது. கார்லோ ரொவெலி (Carlo Rovelli), ப்ரைன் கிரீன் (Brian Greene) போன்ற ஆய்வாளர்கள் தங்கள் புத்தகங்கள் மூலம் இவற்றைப் பற்றிப் பொது மக்களுக்குத் தெரிவித்து வருகிறார்கள்.
காலம் பற்றி நாம் மீள்வாசிப்பு செய்ய வேண்டுமா?
காலம் போலச் சீராட்டிப் பாலூட்டித் தாலாட்டி வளர்ந்த அறிவியல் கருத்தாக்கம் வேறில்லை. நம் அறிதலின் முடிசூடா மன்னன். புராணகர்த்தர்கள், கிரேக்க தத்துவ அறிஞர்கள், ஆதிகவிகள், பயணிகள், விஞ்ஞானிகள், மனோதத்துவ நிபுணர்கள் என எல்லாருக்கும் காலம் குறித்துச் சொல்ல ஒன்று இருக்கிறது. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான பார்வையாக இருப்பதும் ஆச்சரயமானது. மாயநதி எனக் காலத்தைப் பற்றிக் கூறுவதும், அது அண்டத்தின் பருப்பொருள் எனவும், காலம் என்பது ஒரு திசைக்காட்டி எனவும், காலம் ஒரு திகிரி எனவும் பலதரப்பட்ட கற்பனைகள் உள. இவை அனைத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் காலம் தன்னை வெளிக்காட்டி வருவதை நம்மால் ஆச்சர்யத்துடன் பார்க்க முடிகிறது.
ஒவ்வொரு கலாச்சாரமும் காலம் பற்றி ஓர் உண்மையைச் சொல்லியுள்ளது. இந்தியத் தத்துவத்தில் காலம் என்பது சக்கரம் போலச் சுழற்சியில் சிக்கிய ஓர் இருப்பு. முன்னோக்கி மட்டுமே பாயக்கூடிய அம்பாக உருவகப்படுத்திய கிரேக்க மரபின் தொடர்ச்சி மேற்குத் தத்துவங்களிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான விஞ்ஞானத்திலும் வளர்ந்துள்ளன. சார்பியல் தத்துவம் காலத்தைப் பற்றிப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
காலம் என்றால் என்ன? காலம்தோறும் இதற்கான பதில் மாறுபட்டு வந்துள்ளது. இப்போதைக்கும் இதற்கு முன்னர் நடந்தவற்றுக்குமான தூரமே காலம் என நம் பொது புத்தி சொல்லிவந்துள்ளது. அதுதான் உண்மையா? மேற்சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் மிக நீண்ட விளக்கத்தை நாம் அளிக்க முடியும். “இப்போது” என்றால் என்ன? யாருடைய இப்போது? நிலாவில் இருக்கும் கற்களுக்கான இப்போதும், பூமியைச் சுற்றி வரும் வளிநிலையத்தில் இருக்கும் இப்போதும், இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிக்கும் என்னுடைய இப்போதும், வாசித்துக்கொண்டிருக்கும் உங்களுடைய இப்போதும் முற்றிலும் வெவ்வேறானவை. அதே போல, பார்வையாளர்களைப் பொறுத்து இந்த நொடிக்கு முன்னர் நிகழ்ந்தவை மாறுபடக்கூடும். அதனால் காலம் என்பதை இப்போதுக்கும் இதற்கு முன்னர் நடந்தவற்றுக்குமான தூரம் எனச் சொல்வதுகூடப் பிழைபட்ட பார்வையாகும். சரி, நிகழ்வுகள் முன்னே முன்னே செல்லக்கூடிய திசை எனக் காலத்தைச் சொல்ல முடியுமா? சொல்லலாம். அப்படியானால் காலம் என்பது எப்போதும் ஒரே திசையில் மட்டுமே செல்லக்கூடிய ஒன்று என நாம் உறுதியளிப்பதாக ஆகிவிடும். ஆனால், வெவ்வேறு உயரங்களில் காலம் மெதுவாகவும் வேகமாகவும் செல்கிறது என்பதை நம் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. அப்படியென்றால் காலம் என்பது என்ன?
காலத்தைப் பற்றிய சில கருத்துகளைக் கொண்டு காலத்தை விளக்கலாம். மொழியின் கட்டமைப்பை நாம் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று தளங்களில் பிரித்துக்கொண்டுள்ளோம். நம் கோப்புகளிலும், ஞாபகங்களிலும் நின்றவற்றைக் கடந்த காலம் என்றும், நம்மைச் சுற்றி “இப்போது” நடந்து வருபவற்றை நிகழ்காலம் என்றும், நிச்சயமற்ற நிகழ்வுகளின் தொகுப்புகளாகவும், நிகழக்கூடிய சாத்தியங்களின் தொகுப்பாகவும் இருப்பவற்றை எதிர்காலம் என்றும் வகுக்கலாம். இதையே அறிவியல் வேறு விதமாகச் சொல்கிறது – தேர்ந்தெடுக்கப்பட்ட சாத்தியங்கள் மற்றும் நாம் அறிந்தவற்றின் தொகுப்பு கடந்த காலமாகிறது, நாம் அறியாதவை எல்லாம் எதிர்காலம் எனலாம். இவை இரண்டுக்குமான இடைவெளியே காலம். அறிந்தவற்றிலிருந்து அறியாமை நோக்கிய பயணம். அறியாமையிலிருந்து அறிந்த சிலவற்றைத் தேக்கிக்கொண்டு தொடரும் பயணம்.
இத்தனை சிக்கலுள்ள காலத்தைப் பற்றி அறிவியலின் பார்வை ஒவ்வொரு நூற்றாண்டிலும் மாறி வந்துள்ளது. நம் அனைவருக்கும் பொதுவான ஒரு காலம் இருக்கிறது எனும் கட்டமைப்பிலிருந்து தொடங்கி, நம் ஒவ்வொருவரையும ஒவ்வொரு காலம் சூழ்ந்துள்ளது என்பது வரை காலம் குறித்த நமது அறிதல் மிகவும் பரந்துள்ளது.
முதலில் காலம் குறித்து நமக்குத் தெரிந்தவற்றைத் தொகுத்துக்கொள்ளலாம். பின்னர், காலம் எனும் அமைப்பின் சாத்தியங்களையும் குழப்பங்களையும் பார்க்கலாம்.
1. நம் அனைவருக்கும் பொதுவான காலம் இல்லை
ஒரே நேரத்தைக் காட்டும் இரு கடிகாரங்கள் வெவ்வேறு உயரங்களுக்குப் போகும்போது தங்கள் வேகத்தில் மாறுபடும். தரை தளத்தில் இருக்கும் கடிகாரத்தைவிட மலை மீதிருக்கும் கடிகாரம் மெதுவாக ஓடுகிறது. நமது கடிகாரங்களின் அளவீடு நொடியிலிருந்து தொடங்குவதால் இந்த வித்தியாசத்தை அளக்க முடியாது. அணு கடிகாரத்தில் ஒரு நொடியைவிட பதினாறு மடங்கு குறைவாக அளக்க முடியும் என்பதால் காலத்தின் வித்தியாசத்தை நம்மால் கணிக்க முடியும். நம் பூமியைச் சுற்றிவரும் விண்களனின் உதவியால் வேலை செய்யும் நம் வண்டிகளின் தடங்காட்டி (ஜிபிஎஸ்) இந்த வித்தியாசத்தைக் கணக்கில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் பூமியைவிட விண்களங்களில் காலம் மெதுவாகச் செல்லும். விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை இது. அதனால் பூமியில் இருக்கும் எல்லாருடைய காலமும் ஒரே வேகத்தில் செல்லவில்லை. நம்மால் உணர முடியாவிட்டாலும், காலம் மிக மிகக் குறைவான விகிதம் மாறுபடுகிறது. நம் கடிகாரம் மட்டுமல்லாது நம் சிந்தனையின் வேகமும் மிகவும் குறைவாக உள்ளது. பூக்கள் பூக்கும் வேகமும் மாறுபடுகிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதே போல, எடை மிகுந்த பொருட்களுக்கு அருகே காலம் மெதுவாக ஓடுகிறது. நம் பூமியில் காலம் செல்லும் வேகமும், சந்திரனில் செல்லும் வேகமும் ஒன்றல்ல. அதிக எடையுள்ள கோள்களுக்கு அருகே காலம் மிக மெதுவாகச் செல்லும். நம் பால்வீதிக்கு நடுவில் இருக்கும் கருந்துளைக்கு அருகே காலம் கிட்டத்தட்ட உறைந்துகிடக்கும். இந்த வித்தியாசங்களைக் கணக்கில் கொண்டு விண்களன்களின் நேர அமைப்பும் இதனால் திருத்தி அமைக்கப்பட்டிருக்கும்.
அதனால் எதிர்காலத்துக்குச் செல்வது எளிதாகிறது. கருந்துளைக்கு அருகே சில நிமிடங்கள் நாம் கடந்தால்,பூமியின் காலத்தில் நூறு வருடங்களைக் கடந்திருப்போம். நாம் பூமிக்குத் திரும்பும்போது நூறு வருடங்கள் கடந்திருக்கும் என்பதால் எதிர்காலத்தில் இருப்போம். காலப்பயணத்தின் நேரடியான நிரூபணங்கள் நம் விண்பயணங்களில் சாத்தியமாகியுள்ளது.
இவை எதுவும் புனைவல்ல, நம்மால் ஒவ்வொரு முறையும் நிரூபணம் செய்யக்கூடிய உண்மைகள். நூற்று ஐந்து வருடங்களுக்கு முன் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தேற்றங்கள் வழியே முன்வைத்த உண்மை பல முறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இவை காலம் பற்றி நாம் அறியும் நிதர்சனம்.
2. காலத்துக்கும் எண்டிரோப்பிக்கும் (அகவெப்பம்) உள்ள தொடர்பு
இது கொஞ்சம் சிக்கலானது. இயற்பியலின் இரு வேறு பக்கங்கள் இணையும் தருணம். பொருட்களின் இயக்க விதியும் (Mechanics), வெப்பத்தின் இயக்க விதியும் (Thermodynamics) கூட்டு சேரும் காலம். பல உதாரணங்கள் மூலம் பொறுமையாகக் கையாள வேண்டிய நேரம். எண்டிரோப்பி என்பது மிகவும் பழைய சொல். கிரேக்கத் தத்துவத்தில்கூட இயக்கம் நிலை மாறுவதற்கான அகக்காரணியாக இது இருந்துள்ளது. அப்படி நிலை மாற்றம் கொள்ளும்போது அந்த இயக்கத்தின் அகவெப்பம் மாறுகிறது. ஓடிக்கொண்டிக்கும் பந்து தரையோடு உராய்வதால் நிலைகொள்கிறது. உராய்தலில் வேகத்துக்கு ஏற்ப வெப்பம் உண்டாகிறது.
அதே போல, சூடான நீரில் துகள்கள் அதிக சூடான இடங்களிலிருந்து குறைவான சூட்டுக்கு இடம் பெயர்ந்தபடி இருக்கும். சூட்டை வெளியேற்றியடி திசை மாறும் இந்த இயக்கம் பொருட்களின் தன்மையை மாற்றிவிடுகிறது. அப்படி மாறுவதனால் அகவெப்பம் மாறுபடுகிறது. இந்த மாற்றம் ஒரு நொடியில் ஏற்படுவதில்லை. இந்த மாற்றம் நிகழ்வதற்கான இடைவெளியை காலம் எனலாம். அதாவது, காலம் மாறுபடும்போது பொருட்களின் அகவெப்பம் மாறும். கடந்த காலத்தில் இருக்கும் அகவெப்பமும் எதிர்காலத்தில் இருக்கும் அகவெப்பமும் ஒரே மாதிரி இருக்காது. எல்லா நகரும் பொருட்களும் இந்த நிலை மாறுதலில் ஈடுபடும்போது வெப்பம் உண்டாகிறது. அகவெப்பம் அதிகமாகிறது. அகவெப்பம் மாறுவதற்கு முன்னர் இருந்த நிலை கடந்த காலம் எனவும், மாறியபின் நிகழ்வது எதிர்காலம் எனவும் காலம் குறித்த நம் விஞ்ஞானிகளின் புதிய பார்வைக்கோணமாக இருக்கிறது.
கடந்த காலத்தின் அளவீடு அதிகம் பொதுமைப்படுத்தப்பட்டதாக இருப்பதால் நம்மால் அதன் அத்தனை அலகுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடிவதில்லை. எதிர்காலத்துக்கும் அதுவே பொருந்தும். கருப்புச் சீட்டுக்கட்டில் அகவெப்பம் குறைவாக இருக்கும் எனலாம். எல்லா சீட்டுகளும் கருப்பு நிறத்தில் இருக்கும் எனும் அளவீடைக் கொள்ளும்போது அகவெப்பம் குறைவு எனலாம். ஆனால், அதுவே நாம் சீட்டிலுள்ள எண்களையும், வகைகளையும் வைத்துப் பார்க்கும்போது அது அகவெப்பம் அதிகமாக உள்ள ஒரு அமைப்பு எனும் முடிவுக்கு வர முடியும். அதாவது, நமக்கு எந்தளவு ஒரு அமைப்பைப் பற்றி ஆழமான அறிதல் இருக்கிறதோ அந்தளவு அதன் காலத்தை மிக நெருக்கமாக உணர முடியும் – காலத்தின் மாற்றத்தையும் கணிக்க முடியும். மிக மேலோட்டமாக எடுக்கப்படும் அகவெப்பம் கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் பெரிய மாற்றத்தைக் காட்டும்.
இதை இன்னும் விளக்கமாகப் பார்ப்பது நம் பார்வையைத் துலங்க வைக்கும். கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் வித்தியாசத்தை நாம் நிகழ்வுகளின் வரிசை வழியாக உணர முடியும். இருவேறு அறைகளில் பிறக்கும் வாசம் சில நொடிகளுக்குப் பிறகு கலந்துகொண்டுவிடும். இந்த நிகழ்வைப் படம் எடுத்தபின்னர் அதைக் கடைசியிலிருந்து தொடக்கம் வரை பார்ப்பதும் ஆரம்பத்திலிருந்து பார்ப்பதும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். கலந்துபோன வாயுகள் பிரிந்து தனித்தனியாக வெவ்வேறு அறைக்குச் செல்லும்படி தெரியும் நிகழ்வின் வரிசை பொருட்களின் இயக்க விதியை மீறியதாகும். அது அகவெப்பத்தைக் குறைக்கும் வரிசை என்பதால் காலத்தின் பயணமாக எடுத்துக்கொள்ளப்படாது.
3. “இப்போது” எனப் பொதுவான காலம் இல்லை
நாம் “இப்போது” ஜன்னல் வழியாகப் பார்க்கும் சூரியன் 8.5 நிமிடங்களுக்கு முன்னர் இருந்த சூரியன். அதேபோல், நம் வெற்றுக்கண்ணுக்குத் தெரியும் ஆண்டிரோமிடா விண்மீன் 4 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒன்று. அதன் வெளிச்சம் நான்கு வருடங்களாகப் பயணம் செய்து இன்று நம்மை வந்து சேர்ந்திருக்கிறது. அப்படியென்றால் “இப்போது” என்பதற்கான அர்த்தம் என்ன? நம்மைச் சுற்றியிருக்கும் எதுவும் நம்முடைய “இப்போது” காலத்தில் இல்லை என்பதே பெளதிக உண்மை. எல்லாமே சில நானோ நொடிகள் முன்னர் நம்மைச் சுற்றி இருந்தவை.
இந்தக் கொரொனா காலத்தில் இணையம் வழி நடக்கும் பல நிகழ்வுகளைப் போல நாம் கற்பனையான ஓர் இசைக்கச்சேரி எனும் நிகழ்வை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். பல இசைக்கருவிகளும் சேர்ந்திசைக்கும் ஆர்க்கெஸ்டிரா உலகின் பல மூலைகளிலிருந்து இயங்கப்போகிறது என வைத்துக்கொள்வோம். வயலின் குழுவினர் வட துருவத்திலிருந்தும், பியானோ தென் துருவத்திலிருந்தும், குழலிசைக்கலைஞர்கள் வளி நிலையத்திலிருந்து இயங்கப்போகிறார்கள். நம் குழுவினர் அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இசைக்குறிப்புகளில் எந்தெந்த நோட்டுகளை எப்போது வாசிக்க வேண்டும் எனும் அடையாளம் இருக்கிறது. இந்த மூன்று குழுவினரும் அமைந்திருக்கும் மும்முனையிலும் காலம் வெவ்வேறு விதமாக நிகழும். இவர்கள் மூவருக்கும் “இப்போது” என்பது சில நானோ நொடிகள் வித்தியாசப்படும். இந்த வித்தியாசத்தைக் கணக்கில் கொள்ளாமல் ஒருங்கிணைப்படும் இசைக்கச்சேரி நேரப்பிரமாணத்தைக் கோட்டைவிடும். இசை ஒருங்கிணைப்பாளர் இந்தியாவிலிருந்து தனது இசைக்கோள் வழியாகக் கொடுக்கும் ஆணைகள் இம்மூன்று குழுவினரையும் ஒரே நேரத்தில் சென்று சேராது. வளிநிலையத்தில் இருப்பவர்க்கு நேரம் மெதுவாக ஓடும் என்பதால் வட துருவத்தில் இருக்கும் வயலினின் தாளத்தோடு சேர்ந்திசைக்காது.
இதையும் நம்மால் இன்றும் நிரூபிக்க முடிகிறது. நவீன இயற்பியலின் மிகவும் சலசலப்பை ஏற்படுத்திய கருத்தாக்கம் என இதைச் சொல்ல முடியும். ஏனென்றால், பொருட்களின் இயக்க விதிகளை உருவாக்கிய நியூட்டனின் விதிகள் வழியாக நாம் அறிந்த காலத்தின் தேற்றங்கள் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் வித்தியாசப்படுத்துவதில்லை. தூரம் மற்றும் காலம் வழியாக நாம் அடையும் வேகம் எல்லா காலத்திலும் மாறாதது எனும் நியூட்டனின் விதியை இந்தக் கருத்தாக்கம் தகர்த்து எறிந்தது.
அதாவது நாம் அனைவருக்கும் பொதுவான காலம் என ஒன்றில்லை. நம் ஒவ்வொருக்குள்ளும் காலம் வெவ்வேறு விதமாகச் செயல்படுகிறது. “அங்கே இப்போ என்ன நேரம்” எனும் அ.முத்துலிங்கம் எழுதிய புத்தகத்தின் தலைப்புக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஏனென்றால், நாம் “இப்போ” எனக் கேட்கும்போது ஒலியின் வேகத்தினால் நம் “இப்போ” கடந்த காலம் ஆகிவிடுகிறது. நாம் வினவும் “இப்போ”, எதிர்தரப்பு செப்பும் “இப்போ” இரண்டும் வெவ்வேறு காலகட்டம்.
அப்படியென்றால் பொருட்களின் பெளதிக இருப்பு காட்டும் “உண்மை” என்பதற்கு என்ன அர்த்தம்? ஒரு பொருள் இருக்கிறது என்பதற்கான நேரடியான “இப்போ” தரவு எதுவும் இல்லை. எத்தனை நெருக்கமாக இருந்தாலும் சில நானோ நொடி தாண்டியே அதன் இருப்பின் “உண்மை” நமக்குத் தெரியவருகிறது. நாம் அன்றாடும் பார்க்கும் உலகில் இது பெரிய பாதிப்பை உண்டாக்குவதில்லை. ஒளியின் வேகத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது நாம் பார்ப்பவை “கிட்டத்தட்ட உண்மை”. ஆனால், அண்டத்தின் அளவைக்கொண்டு பார்க்கும்போது இந்தப் பார்வை முக்கியமாகிறது.
நம் அகவெப்பத்தின் பொதுமைப்படுத்துதலுக்கு இந்த விதியைப் போட்டுப்பார்க்கலாம். வேறொரு கோளிலிருந்து நம் உலகைக் கவனித்துவரும் ஓர் உயிரினத்துக்குக் காலத்தின் இடைவெளி மிக முக்கியமாகிறது. அதன் கருவிகள் நானோ நொடிகளின் வித்தியாசங்களை உணர முடியுமென்றால், நம் உலகில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் வெவ்வேறு விதமான “இருப்பு” நிலையைக் கொண்டிருக்கும் என்பதை உணரும். மிகவும் விலகி இருந்து பார்க்கும்போது, நாம் அனைவரும் ஒரே காலத்தில் திளைக்கும் உயிரினம் என உணர்ந்தாலும், அளவீட்டின் நுண்மையைப் பொருத்து நம் உலகின் நிலைக்கும் தன்மையும் நிலையாமையும் மாறுபடுவதை வேற்றுக் கிரகவாசி உணர முடியும்.
பூமியின் தரைமட்டத்திலிருந்து பார்க்கும்போது உலகம் ஒரு தட்டை வடிவம் எனவும், மிகவும் தள்ளிப்போய்ப் பார்க்கும்போது பூமியின் வட்ட வடிவம் தெரியவருவதையும் இதனுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம். காலத்தைப் பற்றிய மேற்சொன்ன மூன்று உண்மைகளும் நிரூபணமான அறிவியல். கடந்த நூறு வருடங்களில் காலம் பற்றி மாறிய கருத்தாக்கங்கள்.
அடுத்த கட்டுரையில் காலம் பற்றி விஞ்ஞானபூர்வமாக நிரூபணமாகாத கருத்துகளைப் பற்றிப் பார்க்கலாம்.
அட்டைப்படம்: Quantum entanglementஇன் முதல் புகைப்படம்
மேலும் பார்க்க
இக்கட்டுரை எழுதுவதற்கு உதவிய நூல்கள்:
- The Order of Time – Carlo Rovelli
- Until the End of Time – Brian Greene
- Conversations about the End of Time – Umberto Eco
- The Direction of Time – Hans Reichenbach