கட்டுரை

கவிதையின் மதம் – 6: இரண்டு சாலைகள் பிரிந்தன ஒரு மஞ்சள் வனத்தில்

7 நிமிட வாசிப்பு

அடுப்பங்கரையிலிருந்தபடியே மனைவி தன் குட்டிக்குழந்தையிடம் கேட்கிறார்: “அப்பா, எங்கே… என்ன செய்துகொண்டிருக்கிறார்?” ஓடிப்போய் அடுக்களைக்கும் கூடத்திற்குமிடையேயுள்ள வாயில்நிலையைப் பற்றி நின்று ஆடியபடி எட்டிப் பார்த்த குழந்தை, கூடத்தின் ஒரு மூலையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்தபடி அம்மாவிடம் “க வி தை…” என ராகம் போட்டது. இங்கேதான் அமர்ந்து கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார் என்பது அதன் பொருள். ஆனால் குழந்தையின் அந்தக் குரலில் திடுக்கிட்டவனாய் அவன் அசந்துவிட்டான். ஒரு கவிதைக்கணம் அது அவனுக்கு. வாழ்வின் இதுபோன்ற ஓர் அனுபவத்தை நாம் சொல்லி மாளாது அல்லது சொல்ல முடியாது.

புகைப்படம்: பிரஷாந்த்

வள்ளுவர், குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொற்கேளாதவர் என்றார். அது ஒரு பேரனுபவமாய் ஒருவர் இதயத்தைத் தொட்டுவிடும்படியாய் அமைந்துவிட்டதா? அமைந்துவிட்டது என்றால் அடுத்து அடுத்து ஒருவர் அதைப்பற்றிக்கொள்ள, பாதுகாத்துக்கொள்ள, தொடர – எந்தச் சொற்களாலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்காத, கறைபட்டிருக்காத ஓர் ஆழ்நிலைச்சொல்லுக்கே இங்கே நாம் ஏங்குகிறோம். புரிந்துகொண்டோமென்றால் பிரச்னை இல்லை. அளவீடுகளுக்குட்பட்ட ஒரு புலனனுபவ உச்சத்திலும் அது தேங்கிக்கிடந்தால் நாம் எதிர்பார்க்கும் ஒரு பெரும்பயன் இல்லையே.

அந்தக் கவிதையைப் படித்துவிட்டு மேற்செல்வோம்.

மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு

அடுத்த அறையில் என் மனைவி என் மகளிடம்
“அப்பா என்ன செய்து கொண்டிருக்கிறார்?”
“க வி தை…”

நான் அந்தச் சொல்லை எத்தனையோ பேர்
எத்தனையோ சந்தர்ப்பங்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இவ்விதமாய்
அர்த்தபுஷ்டியும் அர்த்தமின்மையும் ஒருங்கிணைந்த
ஓர் அம்ருதத்தன்மையுடன்
ஒரு நாளும் ஒலித்ததில்லை அது.
ஏன்?
அவளுக்குக் கவிதை தெரியும் என்பதாலா?
அல்லது ஏதும் அறியாத சின்னஞ்சிறுமி என்பதாலா?

நான் எழுதி முடித்த கவிதையைத்
தனக்கு வாசித்துக்காட்டியே ஆகவேண்டும் என்பாள் அவள்.
அப்போது அவளுக்குப் புரியுமொரு மொழியில்
மொழிபெயர்ப்பாகும் அக்கவிதை.
நன்றாயிருக்கிறதெனப் பரவசித்து
என் கன்னத்தை
தன் மொட்டுவிரல்களால் எடுத்து முத்தமிடுவாள்.

முதல் ரசனையை ஏற்ற
என் கவிதையின் அந்தக் காட்சியை உற்சாகத்தோடு
நான் என் கவிதை ரசிக நண்பரொருவருக்கு
நடித்துக் காட்டுகையில்
அது அக்கவிதையின்
மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பாகும்,
அதில் ‘எனது கன்னம்’ என்பது
‘வெளி’ என்றாகியிருக்கும்.

அதனாலென்ன?

மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்புதானே
முற்றான கவிதை.

சின்னஞ்சிறிய சோகம் (1992)

இந்தக் கவிதையை நாம் விளக்காமலேயே இங்கே புரிந்துகொள்ளப் பார்ப்போம். மீண்டும் நாம் வாழ்க்கை அனுபவத்திற்கே வருவோம். இந்தக் கவிதையை நான் எழுதி முடித்திருந்த சமயத்தில் ஜெயமோகன் என் வீட்டிற்கு வந்திருக்க, நான் அனுபவத்தில் கொண்ட ஆனந்தமே முதன்மையாகி நிற்கிற பரவசத்துடன் அவரிடம் கவிதையைக் காட்டினேன். அவ்வளவு தூரம் நன்றாக, கவிதையாக வரவில்லை என்றார் அவர், ஒரு தர்மசங்கடமான புன்முறுவல் பூத்தவராய். (இப்போது அவர் பார்வை மாறியிருக்கலாம். இது அன்று அக்கணம் நடந்தது அவ்வளவே). ஆனால் நான் எந்த மாதிரியான ஏற்பு, மறுப்பு, வெற்றி(?) தோல்வி(?)களுக்கெல்லாம் என்றுமே கவலைப்படாது எழுதிக்கொண்டிருப்பவன். எனது மிகச்சிறிய எதிர்பார்ப்பு இவற்றிற்கிடையேயான ஒரு நடுவண்பாதைபோலவே தோன்றும். அண்மையில் ஒருவர் ஓர் ஆங்கில நூல் முயற்சியின் கவிதைத் தேர்வுக்கென அவரே இக்கவிதையைத் தேர்ந்தெடுத்தபோதும் புதிதாக என்னிடம் எதுவும் நிகழ்ந்திருக்கவில்லை.

பிரமிளைப் போலவே ஜெயமோகனும் கவிதைகள் விஷயத்தில் தன்னை மீறும் கவிதைகளைத் தீர்மானிப்பதில் அக்கறையோடும் கவனத்தோடும் இருப்பவர். புதிய திறப்புக்கான சாத்தியங்கள் அதிலேதான் இருக்கக்கூடும் என்பது அவர் நம்பிக்கை. ஜெயமோகன் தனதைப் பல இடங்களிலும் திரும்பத்திரும்பத் கூறிக்கொண்டிருக்கிறார்.

இது வாழ்வு பற்றிய அடிப்படையையும், நம் பார்வையையும், புரிதலையும் பற்றியதுதான் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

எப்போதுமே என்ன நிகழ்கிறது என்பதை நாம் அறிந்துகொள்வதும் நாம் என்னவாகிறோம் என்பதும்தான் முதன்மையானது என்று அறிகிறோம். கவிதை ஒரு கலையாகத் தன்னை நிறுவுவதற்காகப் பிறக்கவில்லை. தன்னை வெளிப்படுத்தும் அதன் நோக்கமே தனி. பல நேரங்களில் அது தோற்றுக்கிடந்தாலும் அது பற்றி அது கவலைப்படுவதே இல்லை. அதனை நிலைநிறுத்துவது எது என்றால் அதன் உள்ளே ஒரு நம்பகத்தன்மையை உமிழ்ந்தபடி ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஓர் உண்மை, அவ்வளவுதான். ஓளி என்றும் நாம் சொல்லிவந்ததும் இதைத்தான்.

மேற்படி கவிதையில் கவிதைக்கணமாய்த் தோன்றிய ஓர் அனுபவம் (குழந்தையின் குரலைக் கேட்டதும் அடைந்த பெருங்களியும் வியப்பும், விழிப்புமான ஓர் அற்புதம்) எழுத்தின்றி வாழ்விலேயே ஒரு எடுத்துரைப்பாகத் தொடர்கிறது (நண்பனிடம் பகிர்ந்துகொள்வது) அப்போது அதில் ஏற்படும் மாறுதல் மீண்டும், மீண்டும் மீண்டும், தன்னைப் புதுப்பித்துக்கொண்டு செல்லும் கவிதையாகவே உள்ளது. இங்கே அது மிக எளிய அமைப்பிலேயே உள்ளது. இது இன்னும் இன்னுமென இடையறாத ஓர் அலையாகத் தொடர்ந்தால் அதுவே வாழ்வின் உச்சநிலை என்றுகூடச் சொல்லலாம். பிரமிள் நீளமான படிமக் கவிதைகளை எழுதுகையில் செயல்படுவது இந்த வாழ்வின் உயிர்ப்புமிக்க இந்த அலைதான்.

உயிர்ப்புமிக்க வாழ்வும் மரணமுமான நீரோட்டத்தில் எப்போதுமே புதுமையும் புத்துணர்ச்சியும்தானே இருக்கும்?

பெரிய ஆளுமைகளாகப் பெயர்பெற்றவர்கள் தங்கள் வாழ்வாலேயே அதை வெளிப்படுத்தியவர்களே ஒழிய தங்கள் வெளிப்பாட்டுத்திறன்களால் அல்ல. ராமகிருஷ்ணர் வயல்வரப்போரம் வந்து கொண்டிருந்த ஒருநாள் வானத்தில் பறந்துசென்ற ஒரு கொக்கினை அண்ணாந்து பார்க்கையில் மயங்கி விழுந்துவிட்டிருக்கிறார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிற வரி நம்பகத்தன்மையோடுதானே நம்மிடமும் ஒளிர்கிறது. இப்படி பலரது அனுபவங்களைச் சொல்லலாம்.

நாம் இங்கே இப்போது பேசிக்கொண்டிருப்பது கவிதை பற்றியா, கவிதையின் மதம் பற்றியா என்று பிரித்தறிய முடியாத ஒன்றைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோமா? இல்லை, ‘இரண்டு சாலைகள் பிரிந்தன ஒரு மஞ்சள் வனத்தில்’ எனத் தொடங்கும் ராபர்ட் ஃப்ராஸ்டின் கவிதையை இத்துடன் இணைக்கிறேன். இது மிக முக்கியமானதொரு கவிதை. நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை என்று ஒன்றுதான் உண்டு. நிபந்தனைகளற்றது அது. இதுதான் நமது அனைத்துப் பிரச்னைகளும் தொடங்கும் இடமாகவும், முடிவுக்கு வரும் இடமாகவும் இருப்பது.

பயன்படுத்தப்படாத ஒரு சாலை

இரண்டு சாலைகள் பிரிந்தன
ஒரு மஞ்சள் வனத்தில்
மன்னிக்கவும்,
இரண்டிலும் என்னால்
பயணம் செய்ய இயலாது,
அதில் ஒன்று எந்த அடிவளர்ச்சியில்
தன் பிரிவுத்திருப்பத்தை வைத்திருக்கிறது என
என்னால் இயன்றவரை பார்த்தபடி
ஒரு பயணியாக நின்றுகொண்டிருந்தேன்
நெடுநேரம்.

அப்புறம் சற்று நலமாகத் தோன்றிய
பிறிதொன்றையே தேர்ந்துகொண்டேன்
இதுவே, ஒருவேளை நல்லதொரு
கோரிக்கையாக இருக்கலாமென,
ஏனென்றால் இதுவே பசும்பச்சையுடனும்
தகுதிமிக்க அணிகளுடனும் இருந்தது.
இருந்தும்கூட அதற்காகவே
அதைக் கழித்துச் செல்பவர்கள் மெய்யாகவே
அதைக் கடந்து செல்கிறார்கள் அதைப்போலவே.
அந்தக் காலைப்போதில்
இரண்டுமே ஒன்றுபோலவே கிடந்தன
இலைகளில், மனிதர்களால் மிதியுண்ட
கருந்தடம் இல்லை.
ஓ, நான் அந்த முதலாமதை
மறக்காமல்தான் வைத்திருக்கிறேன்,
பிறிதொரு நாளுக்காக,
வழிநோக்கி நடத்தும் வழியை அறிந்தும்
நான் அய்யுற்றேன், திரும்பிவருவேனோ நான் என.

பெருமூச்சுடனே
நான் இதைச் சொல்லிக்கொண்டே இருப்பேன்:
யுக யுகாந்திரங்களாக எங்கோ
இரண்டு சாலைகள் பிரிந்து சென்றன
ஒரு மஞ்சள் வனத்தில்,
நான் ஒன்றைத் தேர்ந்தேன்
மிகக்குறைவாகவே பயன்பட்டிருந்த ஒன்றை
அது உண்டாக்கியுள்ளதுதான் அனைத்து வேறுபாடுகளும்.

ராபர்ட் ஃப்ராஸ்ட்
தமிழில்: தேவதேவன்

பெருங்கவிஞர்கள் எனப்படுவோரின் சிறந்த கவிதைகளெனப் புகழ்பெற்று விளங்கும் கவிதைகள் அனைத்துமே மிக எளிய தரிசனங்களின் பேரொளிர்வும் அரற்றல்களுமாகவே இருப்பதன் இரகசியம், மனிதர்கள் இந்த இடத்திற்கு வந்துசேர வேண்டும், சேர்ந்துவிடவேண்டும் என்ற உள்ளார்ந்த வேகம் ஒன்று மட்டும்தான்.

கவித்துவமிக்கவை என என்ன சொற்களை வைத்திருந்தார் இயேசு? இன்று நாம் தேர்ந்துகொண்டுள்ள நவீன கவிதை எவற்றையெல்லாம் உதறியனவோ அவற்றையெல்லாம்தானே நம் வாழ்வும் உதறியாக வேண்டும்? வாழ்வு ஏன் இத்துணை சிக்கல்களானது, துன்பமானது? தன்மய்யத்தினால்தானே உருவானது பொருள்வயப்பட்ட பேராசைகளும், போட்டி பொறாமைகளும் பிறவும்? இதை ஆதரித்தும் ஆதரிக்கமாலும் ஒட்டி ஒழுகியபடியும், ஒட்டாமலும் ஒரு கவிதையால் எழுந்து நிற்க முடியுமா? புரியச் சிரமமாயிருப்பது போல் தோன்றுகிறதா? இருமைநிலைக்கு அப்பாற்பட்ட ஒரு பார்வையை நாம் புரிந்துகொண்டோமானால் மிக எளிதாகவே புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். தன்மய்யத்திற்கும் தன்னியல்பிற்கும் ஏதாவது தொடர்பு, உறவு, உண்டா என்ன? எந்த வெளித்தொடர்புகளுமற்று எத்துணை அழகிய பெரிய தனிமையின் வளத்துடனும் ஒளியுடனும் திகழ்கிறது பாருங்கள் நமது கவிதையும் வாழ்வும்!

தன்னியல்பால் நம் தன்மய்யச் செயல்களை ஊடுறுவ முடிகிறது, கட்டுப்படுத்தமுடிகிறது. ஒரு நடுவண்பாதையில் பயணிக்க முடிகிறது. தன்மய்யச் செயல்களோ தன்னியல்பைவிட்டு விலகி நிற்கத்தான் முடிகிறது. ஆழமற்றவையே அது தரும் களிப்பும் துக்கமும் அங்கே கவிதை இல்லை: அதாவது தன்னியல்பின் தாரகை இல்லை.

***

குழந்தைப்பருவத்தில் ஒருநாள்.; சுற்றி நின்ற வானம் என்றுமில்லாத ஒரு பார்வையுடன் என்றுமில்லாத ஒரு பேருருக்கொண்டதாக நின்றிருந்தது. அதற்குமுன்புவரை அந்தச்சிறுவன் அதுவரை கண்டிராத ஓர் அமைதியில் – சுற்றியிருந்த மண் முதலான மரஞ்செடிகொடிகள் கட்டடங்கள் உட்பட எல்லாப் பொருட்களுமே அவனைப் போலவே அதை உணர்ந்தவாறிருக்க, ஒரு சாலை நடுவே அவன் திகைத்து நின்றுவிட்டான். அன்று அவன் அப்போதுதான் இந்த மண்ணையும் காற்றையும் ஒளியையும் வெளியையும் எல்லா உயிர்களையும் நன்கு கண்டுகொண்டவன் போலானான். எல்லாமும் கூடி இணைந்து உருவாகிக் கொண்ட பொம்மைகள் போலவே மனிதர்களும், விதவிதமான உயிர்களும்… உயிர்பிரிதல் என்பதும் மரணம் என்பதும் என்ன? இறந்தவை பிரிந்து தம் பிறப்பிடத்திற்கே மீண்டு சென்றுவிடுவதுதானே? அதுவரைக்குமாய் அவனைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த ஒரு துக்கம் அல்லது துக்கம் போன்று திரண்டுநின்ற ஒன்று இதுதானா? என்ன, இந்தப் பையன் இப்படி இருக்கிறானே என்று அவன் பெற்றோரும் உற்றாரும் சுற்றமும் புரிபடாமல் அப்புறம் கண்டுகொள்வதில் ஆர்வமற்றும் விலகிப்போய்விடுவதெல்லாம் இதைத்தானா?

அந்த அனுபவத்திற்கும் பிந்தைய ஒரு அய்ம்பது ஆண்டுகளுக்கும் பிந்தைய ஒருநாள்தான் இதே போன்றதொரு பெருங்காட்சி அவனது மைத்துனரின் மாமனார் ஒருவர் இறந்துபோன இல்லத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த வேளை… அந்த மனிதர் சற்று அறிமுகமாயிருந்தவர். அவ்வளவுதான். அவர் அப்போது அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளாகவும், சுவராகவும், சுற்றியிருந்த மரங்களாகவும், ஒளியாகவும்,, வானமெங்கும் விரிந்துகிடந்த இடமாகவும் காணப்பட்டார். விந்தைதான் இந்தப் பிரக்ஞைநிலைதான் மனிதமூளை எப்போதுமாய் அடைந்திருக்க வேண்டிய ஒன்று என்பதே அவன் எண்ணமாகியது.

வாசிப்பு தொடங்கிய காலத்தில் அவன் புத்தரையும் பவுத்தத்தையும் படித்து அறிந்தபோது – மரணம்பற்றிய அதே கண்டுபிடிப்பே அதிலும் இருந்ததைக்கண்டபோதுதான் அதுவே உண்மையை அறிவதற்கான கருவியாகச் செயல்பட்டிருப்பதையும் தெரிந்துகொண்டான்.

கிட்டத்தட்ட அனைத்துப் பெரிய ஆளமைகளுமே தங்கள் விழிப்புநிலையைத் தங்கள் குழந்தைப் பருவத்திலேயே அடைந்தவர்களாக இருக்கிறார்கள். மிகப்பெரிய அடக்கத்தையும், பார்வையும் அளித்திருக்கிற அந்த விழிப்புநிலையே சரியான மனிதர்களை உருவாக்கக்கூடியது.

அரைகுறை உள்ளொளியே ஒருவனைத் தீவிரமிக்க படைப்பாளியாகவும், போராளிகளாகவும், செயற்பாட்டாளர்களாகவும் கூட ஆக்கியிருக்கிறது. அதேசமயம் எல்லா மனிதர்களிடமுமே கருணைமிக்க தூய அந்த விழிப்புநிலை ஒரு மின்னலாக மெய்யான வாழ்வாக தன்னைக் காட்டிக்கொண்டேதான் இருக்கிறது. இதுவே எத்தகைய துயர்நெருப்பால் வதங்கும் மனிதனையும் வாழ்வை நோக்கியே ஈர்க்கும் பாசக்கயிறு மற்றும் கொடை என வேண்டும். பிரமிளின் புகழ்பெற்ற கவிதை ஒன்றைப் பார்க்கலாம்.

பல்லி

கவிதை
இறக்கத்துடிக்கும் வாலா?
உயிரோடு மீண்ட உடலா?

– எழுத்து. செப்டம்பர் 1963.

கவிதை இறக்கத் துடிக்கும் வாலா? இல்லை. உயிரோடு மீண்ட உடலா? ஆம், என்பது இதன் ஆழ்ந்த பொருள். ஓர் உள்ஒளியே இதனை என்றும் ஒளிரக்கூடிய இரத்தினம்போன்ற கவிதையாக மாற்றியிருக்கிறது. பல்லி தனது வாழ்வை மீட்டுக்கொள்வதற்காக தனது வாலை உதிர்த்துவிட்டிருக்கிற விபரம் நாம் விரித்துப்பார்த்துக் கொள்ளக்கூடிய தரிசனமாக, கண்டடைதலாக மாறியிருக்கிறது. தன்னை மீட்டுக்கொள்கிற வாழ்வே கவிதை என்ற நிலையை மனிதர்களை எட்டிவிடத் தூண்டிவிடுவதையே இனி நாம் அடையவும் சுட்டிக்காட்டுபவர்களாகவும் உள்ளோம். உண்மைதான் அதன் வழிகாட்டி.

காலம்காலமாய்த் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் மானுடச் சீரழிவைக் குறித்து கவலைகொள்பவர்களும் முழுமையான கண்டடைதலை – பாதையை – கண்டுகொண்டவர்களும் யார்? பெரியபெரிய கவிஞர்களும் மனிதர்களும்கூடத் தோற்றுப்போய்விட்ட கவிதையின் மதத்தை நாம் கண்டும் பற்றியும் பிடித்துக்கொண்டால் அடைந்துவிட மாட்டோமா? முடியும் என்பதே உண்மை. என்றாலும் ஜென் துறவிகளாலும் கவிஞர்களாலும் இன்னும் தன் மேன்நிலையை அடைந்திருக்காத மானுடச் சிக்கல்களையும் விடுதலையையும் மிகத்துல்லியமாக விவரிக்கவும் சுட்டிக்காட்டவும் இயன்ற ஒரு மிகப்பெரிய மானுட ஆச்சரிய நிகழ்வான ஜே.கிருஷ்ணமூர்த்தியாலும்கூட அது நிகழாததின் காரணம். அது எந்த ஒரு தனிமனிதனாலும் உருவாகக் கூடியதும் பின்பற்றிவிடக் கூடியதுமல்ல. ஒவ்வொருவரும் தானே அதைக் கண்டடைந்து இயற்றிக்கொள்ளாதவரை முடிவற்ற பிரச்னைகளைத்தான் மனிதனும் மனித சமூகமும் கொண்டிருக்கும்.

உருவாக வேண்டிய புனிதமான மானுடவாழ்வு துளித்துளிகளாய் நிரம்புகிற ஒரு வெள்ளம் மட்டுமே என்பதுதான் உண்மை. கவிதைக்கணங்களால் மானுடப் பிரக்ஞையில் ஏற்படும் மாற்றங்களால் மட்டுமே சாத்தியமாக உள்ளது அது. வேறு எந்த வழிகளாலும் இல்லை. பிற எல்லாமே இத்துணை காலங்களாயும் தோற்றுக்கொண்டே இருப்பதையும் தோற்றுக்கொண்டே வருவதையும் பார்த்துக்கொண்டேதானே இருக்கிறோம். நோய்நாடி, நோய் முதல்நாடி எனும் ஒரு குறள் ஞாபகம் வருகிறது. வந்தால் போதுமா? ஒவ்வொருவருமே தன்னந்தனியாகவே உணரவும் செயல்பட இருப்பதுமான பாடு இது. குப்பைகளைச் சேகரிக்கும் கல்வி அல்ல இது. கவிதையைக் கண்டடைந்துவிட்ட மனிதர்களாலும் கூடாது இது எனும்போது, நாம் கண்டுபிடிக்கிறோம் மனிதர்கள் மனிதர்கள்மீது தொடரும் உறவுநிலையே அதன் இயக்கம் என்பதை. ஆனால் ஒருவன் உண்மையைத் தெரிந்துகொண்ட பிறகு அதற்குத் துணியாத நம் மனித நிலையைப் பற்றி ஜே.கிருஷ்ணமூர்த்தி தனது சொற்பொழிவு ஒன்றில் பேசும்போது ஒரு கவிதைப்படிமத்தையே உதிர்க்க வேண்டியவரானார். அந்தக் கவிதை என்னைக் கவர்ந்த ஒரு கவி ரியோகானிடம் அப்படியே இருந்ததையும், கிருஷ்ணமூர்த்தி இதைக் கண்டிப்பாய் வாசித்திருப்பார் என்றும் அவர் எப்போதுமே தான் கற்ற கல்வியை எல்லாவற்றையுமே சுமையாக இறக்கித்தூரவிட்டவராய் அதன் சாராம்சத்திலேயே திளைப்பவர் என்பதையும் சும்மா நான் இப்போது இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்கிறது ரொம்ப இன்பமாக இருக்கிறது. அந்தக் கவிதையையும், வியப்பு ஏற்பட்ட உடனேயே நான் மளமளவென்று இருவரது பிறவிக்காலத்தைக் குறிப்பெடுத்துப் பார்த்ததையும் காட்டுகிறேன்.

உங்கள் மனம்தான் புத்தர்.
மற்றும்
நாம் கண்டடைந்த வழி என்பது
எங்கும் போகாததே.
வேறெதையும் தேடாதீர்கள் இதைத்தவிர.
தெற்கே நீங்கள் போகவிரும்பும்போது
வடக்குநோக்கி
நீங்கள் உங்கள் வண்டியைச்சுட்டினால்
எப்படி நீங்கள் வந்தடைய முடியும்?

– ரியோகான்

ரியோகானின் பிறப்பு இறப்பு ஆண்டுகள் : 1758- 1831 ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பிறப்பு இறப்பு ஆண்டுகள் : 1894 – 1986. ரியோகானின் இறப்புக்கும் கிருஷ்ணமூர்த்தியின் பிறப்புக்கும் இடையேயுள்ள காலம் 63 ஆண்டுகள். பிறப்புக்கும் பிறப்புக்கும் இடையேயுள்ள ஆண்டுகள் 136. இறப்புக்கும் இறப்புக்குமிடையேயுள்ள காலம் 155. நான் எனது குறிப்பேட்டில் எழுதிப்பார்த்து ‘விளையாடி’க்கொண்டிருந்ததில் ஒரு பகுதியை உங்களோடு இங்கே பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவுதான்.


நன்றி: சுடலைமுத்து

தேவதேவன் எழுதும் ‘கவிதையின் மதம்’ கட்டுரைத்தொடர்:

Share
Published by
தேவதேவன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago