நாஞ்சில் நாடன் 150 க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சொல்லாய்வுகள் சார்ந்து தொடர்ந்து முக்கியமான பல கட்டுரைகளை அண்மைய ஆண்டுகளில் எழுதி வருகிறார். தோராயமாக நாநூறு கட்டுரைகளுக்கு மேல் இருக்கலாம் என உரையாடலின்போது கூறினார். முறையே ‘கறங்கு’ மற்றும் ‘பாடுக பாட்டே’ அவருடைய இவ்விரு முகங்களின் அண்மைய காலப் பரிணாமத்தைக் காட்டுகின்றன. கும்பமுனிக் கதைகள், கான் சாகிப், தன்ராம் சிங், இடலாக்குடி ராசா, பூனைக்கண்ணன், ஏவல் போன்ற சிறுகதைகளே இன்று அதிகம் பேசப்படுகின்றன. அவருடைய மரபிலக்கியக் கட்டுரைகள் தமிழுக்கு அவர் விட்டுச் செல்லும் கொடை என்றே சொல்லலாம். தொடர்ச்சியாக இயங்கி வரும் மூத்த எழுத்தாளர்களை நாம் சரிவர உள்வாங்குவதில்லையோ என எனக்கு ஓர் எண்ணம். எழுத்தின் ஊடாக அவர்கள் அடைந்திருக்கும் பரிணாமத்தை நாம் கணக்கில் கொள்வதில்லை. நாஞ்சில் நாடனையும் அப்படி வட்டார வாழ்வியலை எழுதியவர் எனப் பரவலாகப் புரிந்துகொண்டுள்ளோம். ஆனால் அவருடைய அண்மைய சிறுகதைகளை வாசிக்கும்போது தமிழ்ச் சிறுகதைகளின் எல்லையை எத்தனை தூரம் நகர்த்தி இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. எனினும் இக்கட்டுரை அவருடைய சிறுகதைகளைப் பற்றியது அல்ல.
‘தலைகீழ் விகிதங்கள்’, ‘என்பிலதனை வெயில் காயும்’ ‘மாமிசப் படைப்பு’ ‘மிதவை’ ‘சதுரங்கக் குதிரை’ ‘எட்டுத்திக்கும் மதயானை’ என ஆறு நாவல்கள் எழுதியுள்ளார். 1977 ஆம் ஆண்டு ‘தலைகீழ் விகிதங்கள்’ வெளியாகிறது. ஆக சமீபத்திய நாவலான ‘எட்டுத்திக்கும் மதயானை’ வெளியாகி இருபத்தி மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. 2000க்குப் பிறகான தமிழ் நாவல்கள் பல மாற்றங்களை, பரிணாமங்களை அடைந்துள்ளன. பெருநாவல்கள் ஆட்சி செலுத்திய காலகட்டத்திற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை நாஞ்சிலின் நாவல்கள். சிறுகதையாசிரியராக அவருடைய அசலான பங்களிப்பு அளவிடப்படும் அளவிற்கு அவருடைய நாவல்கள் விவாதிக்கப்படுவதில்லை என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அவர் தொடர்ச்சியாகக் கதைகளை எழுதி வருவதால் சிறுகதைகள் பற்றிய விவாதங்களில் ஏதேனும் ஒருவகையில் அவருடைய கதைகள் விவாதத்தில் புழங்குகின்றன. ‘தலைகீழ் விகிதங்கள்’ ‘சொல்ல மறந்த கதையாகத்’ திரைப்படமான வகையில் கவனம் பெற்றது. பிற நாவல்கள் பெரிதாக விமர்சிக்கப்பட்டதில்லை. தமிழின் சிறந்த பத்து நாவல்கள் பட்டியலில் அவ்வளவாக யாரும் நாஞ்சிலின் நாவல்களைப் பட்டியலிட்டதும் இல்லை. இந்த ஆறு நாவல்களை மொத்தமாக வாசிக்கும்போது, நாவலாசிரியராக நாஞ்சில் நாடனை நாம் சரியாக மதிப்பிடவில்லை எனும் நெருடல் எனக்கு ஏற்பட்டது. என் நோக்கில் ‘என்பிலதனை வெயில் காயும்’ ‘மிதவை’ மற்றும் ‘சதுரங்கக் குதிரை’ ஆகிய மூன்று நாவல்களும் தமிழின் சிறந்த நாவல்களின் வரிசைக்கு உகந்தவை என உறுதியாகச் சொல்வேன்.
நாஞ்சில் நாடனுக்கு மெய்யியல் கோட்பாடுகள் மீது பெரிய ஈர்ப்பு ஏதுமில்லை. ‘பசியைப் புரிந்துகொள்வதற்குத் தத்துவம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. மனிதகுல வரலாறு தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு மொழிகூடத் தெரிந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை.’ (எட்டுத்திக்கும் மதயானை) எனும் பூலிங்கத்தின் மனவோட்டமே அவர் நிலைப்பாடும் எனக் கொள்ள இயலும். படைப்பில் தத்துவத்தின் பங்களிப்பை எப்போதும் நிராகரித்தே வருகிறார். எனினும் நாஞ்சில் நாடனின் தத்துவப் புலத்தை ‘இருத்தலியல்’ என வகைப்படுத்தலாம். எட்டுத்திக்கும் மதயானையில் ‘முன்னும் போகவிடாத பின்னும் போகவிடாத நின்ற பாவனையில் ஓடிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளும் சுய நிந்திப்புக்கு உள்ளான வாழ்க்கை’ எனும்வரி அவருடைய எல்லா நாவல்களின் முதன்மைப் பாத்திரங்களுக்கும் பொருந்தும். நாஞ்சில் நாடனின் நாவல்களின் தலைப்புகளை மட்டும் கருத்தில் கொண்டால்கூட அடிப்படையில் நாஞ்சில் நாடனின் நாவல்கள் இருத்தலியல் தன்மை கொண்டவை என்பதை உணர்ந்துகொள்ள முடியும். ‘தலைகீழ் விகிதங்கள்’. திருமண உறவில் சமூகப் பொது வழக்கத்தில் உள்ள ஆண் பெண் உறவுச் சமன்பாட்டைத் தலைகீழாக்குகிறது. இந்தத் தலைகீழாக்கம் ஏன் நிகழ்ந்தது? அதன் விளைவுகள் என்ன என்பதை விசாரிக்கிறது. சிவதாணுவிற்கும் பார்வதிக்குமான திருமண உறவின் நிறப் பிரிகைகள் நுணுக்கமாகப் பதிவாகின்றன. சொக்கலிங்கம் பிள்ளை, நீலாப்பிள்ளை ஆகியோரிடம் அவமானத்தை எதிர்கொள்ளும் சிவதாணு அங்கே பார்வதியின் தங்கை பவானியிடம் மட்டுமே ஆறுதலை அடைகிறான். அகங்காரப் பகடையாட்டத்தின் துல்லியப் பிரதி. ‘மாமிசப் படைப்பு’ என்பது இறைவனுக்குப் படைக்கப்படும் பலிச் சோறு. எல்லாம் இயல்பாகவும் நல்லவிதமாகவும் இருக்க வேண்டிச் செய்யப்படும் நேர்த்தி அல்லது நன்றிக்கடன். கந்தையா பலியிடப்படுகிறான். எல்லா காலங்களிலும் தங்கள் இலக்கை மனிதர்கள் அடைய எவரையோ பலியளிக்க வேண்டியதாய் இருக்கிறது.
‘என்பிலதனை வெயில் காயும்’ திருக்குறளில் இருந்து எடுத்தாளப்படும் தலைப்பு. எலும்பு இல்லாத புழு போன்ற உயிரினங்களை வெயில் வதைக்கிறது. என்பிலதனை வெயில் காயும் எனும் வரி மனதில் விரிந்தபடி இருக்கிறது. ஓர் உண்மையை, ஒரு கண்டடைதலைக் குளிர்ந்து இறுகிய உள்ளத்துடன் சொல்கிறது. ஏன் அப்படி என்றொரு கேள்வியாகவும் மன்றாட்டாகவும் அது பரிணாமம் கொள்கிறது. எலும்பு உடலுக்கு வடிவம் அளிக்கிறது, மனிதரை நிலை நிறுத்துகிறது, அதற்கு அன்பு இணை வைக்கப்படுகிறது. கதை நாயகன் சுடலையாண்டிக்கு அன்பில் குறைவில்லை. தாயும் தந்தையும் மரித்த பின்னரும்கூடத் தாத்தாவும் ஆத்தாவும் அவர்களை வருத்திக்கொண்டு அவனைக் காக்கிறார்கள். அவனிடத்தேயும் அவர்கள் மீது கொள்ளை அன்புண்டு. பொருளியல் வாழ்வே மனிதர்களைத் தாங்கும் என்பாகிறது. பசியை வடவைத்தீ என்பார்கள். பெரும்பசிதான் இங்கு வெயில். என்பு என்பதை முதுகெலும்பு எனக் கொண்டோம் எனில் பசி வாட்டும்போது மானத்துடன் தருக்கி எழுந்து நிற்க முடியுமா? மானத்தையும் ரோஷத்தையும் ஆவியாக்கியபடி நின்று எரிகிறது பசித்தீ. பசித்திருப்பவனுக்கு, ஒவ்வொரு வேளை உணவிற்காகவும் அலைந்து திரிபவனுக்கு மானத்துடன் வாழ உரிமையில்லை. அத்தகையவன் அவமானப்படுத்தப்படுவது அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழிமுறை. அவற்றை மென்று அதக்கிக்கொண்டு அவன் வாழப் பழகியாக வேண்டுமா? எனக் கேள்வி எழுப்புகிறது இந்நாவல்.
‘சதுரங்கக் குதிரை’ சதுரங்கத்திற்கு வெளியே புழங்க முடியாதது. சதுரங்கத்திற்குள்ளும் தன் விருப்பத்திற்கு ஏற்ப ஓட இயலாது. அதன் அசைவுகள் விதிமுறைகளால் முடக்கப்பட்டவை. பிற காய்களின் நிலைகள் அதன் அசைவை முடிவு செய்கின்றன. சுய விருப்பிற்கும் (free will) விதிக்கும் (fate) வாழ்க்கையுடன் உள்ள உறவைச் சுட்டிக்காட்ட பயன்படுத்தப்படும் வலுவான படிமம். மனிதன் ஒரு கணக்குடன் காய்களை நகர்த்துகிறான் ஆனால் அவற்றைப் பொருளற்று ஆக்கும் வேறொரு ஆட்டம் மறுமுனையில் நிகழ்ந்துவிடுகிறது. மனித வாழ்க்கை என்பது ஊழுடன் ஆடும் சதுரங்கம். நாராயணன் எனும் 45 வயது திருமணமாகாதவன் நாவலின் நாயகன். அவனுடைய பொய்த்துப்போகும் கனவுகளின் ஊடாக வாழ்க்கைக்கான பிடிமானத்தைத் தேடுவதுதான் நாவல். ‘எட்டுத்திக்கும் மதயானை’ அனைத்து திசைகளிலிருந்தும் மனிதன் எதிர்கொள்ளும் நெருக்கடியைச் சொல்வது. பூலிங்கத்தால் எங்கும் கால் தரிக்க முடியவில்லை. எல்லா திசைகளில் இருந்தும், இடங்களிலிருந்தும் துரத்தப்பட்டோ வெளியேறியபடியோ இருக்கிறான். எனினும் அவனை யானைகள் நசுக்கிவிடவில்லை. அவனுக்கு ஏதோ ஒரு திசையும் வழியும் புலப்பட்டுத் தொடர்ந்து ஓடுகிறான். எதையாவது பற்றிக்கொண்டு கரையேறிவிட முடியாதா என்று மனிதர்கள் ஆழ்கடலில் தங்களுக்கான ‘மிதவையைத்’ தேடித் தத்தளித்துக்கொண்டே இருக்கிறார்கள். ‘ஆழியின் ஆழத்தில் அமிழ்ந்துவிடாமல் இருக்க கையில் கிடைக்கும் எதையும் பற்றிக்கொள்கிறார்கள். கரை கைக்கெட்டும் தொலைவில் நெருங்கும்போதெல்லாம் ஒரு பேரலை அவர்களைத் திசை மாற்றி அலைக்கழிக்கிறது. மனிதன் கரைதேடி அலைந்து கரையேற முடியாமல் அலைக்கழிந்து கரைந்து போகும் மிதவை. முடிவற்ற வாழ்க்கைப் பேராழியில், கடலில் மிதக்கும் மிதவை காற்றால் அது விரும்பும் திசைக்கு அடித்துச் செல்லப்படுகிறது. மிதவையின் இலக்கை அது முடிவு செய்துகொள்வதில்லை. ஆனால் சண்முகம் அமிழ்ந்து அழிந்துவிடவில்லை. கிடைப்பதைப் பற்றிக்கொண்டு மூச்சுவிட்டுக்கொண்டுதான் இருக்கிறான்.
யதார்த்தவாத எழுத்தாளர் என்றறியப்படும் நாஞ்சில் நாடன். மாமிசப் படைப்பு நாவலில் மட்டுமே அப்படி வெளிப்படுகிறார். பிற அனைத்து நாவல்களையும் நவீனத்துவ/ இருத்தலியல் ஆக்கங்கள் என்றே சொல்ல முடியும். அதிகமும் நகரத்தை மையமாகக் கொண்ட, தனிமனித அகத்தை மையமாகக் கொண்ட இருத்தலியல் தளங்களிலிருந்து கிராமங்கள் நோக்கியும், சமூகச் சூழல் நோக்கியும் இருத்தலியல் சிக்கலைப் பேசியதே நாஞ்சில் நாடன் ஏற்படுத்திய மிக முக்கியமான உடைப்பு என்று சொல்லலாம். தனிமனித இருத்தலை வரலாற்றுடன் இணைத்த முதன்மை மற்றும் முன்னோடிப் படைப்பு என ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யைச் சொல்லலாம். ஆனால் இன்று சிங்காரத்தின் நாவல்களுக்கு இருக்கும் இடம் மிதவை வெளிவந்த காலத்தில் கிடையாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ‘மிதவையில்’ சண்முகம் பம்பாய்க்கு ரயிலில் செல்லும் பகுதியை அவ்வகையில் தமிழ் நாவலின் மிக முக்கியமான பயணம் என்பேன். அகம் நோக்கி மட்டும் திரும்பியிருந்த இருத்தலியல் புனைவு குறியீட்டு ரீதியாகப் புறத்தில் வேர்கொள்ளும் பயணம் ‘மிதவையில்’ தொடங்குகிறது. ‘எட்டுத்திக்கும் மதயானையில்’ உச்சம் கொள்கிறது. மற்றுமொரு தொடர்ச்சியைச் சுட்ட வேண்டும் என்றால் எட்டுத்திக்கும் மதயானையும் அடிப்படையில் புயலிலே ஒரு தோணியைப் போல் சாகசத்தன்மை நிறைந்த நாவல்தான்.
‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலை பூமணியின் ‘வெக்கையுடன்’ ஒப்பிட்டு நாஞ்சில் நாடனின் தனித்துவமான பங்களிப்பை உணர்ந்துகொள்ள முடியும். ‘என்பிலதனை வெயில் காயும்’ வளரிளம் பருவத்தில், ஆளுமை உருகொள்ளும் காலத்தில் பசித்தவன் எதிர்கொள்ளும் அவமானங்களின் கதை எனச் சொல்லலாம். வளரிளம்பருவத்து மனதின் நுண்மைகளை வெளிப்படுத்திய மிக முக்கியமான நாவல். பூமணியின் ‘வெக்கையும்’ வளரிளம்பருவத்து வாழ்க்கையை வேறொரு பின்புலத்திலிருந்து பேசுகிறது. ‘வெக்கை’ வலுவான காட்சி சித்தரிப்புகளைக் கொண்டது. தந்தை- மகனுக்கு இடையேயான உறவைக் குறைந்த சொற்களில் காட்டிச் செல்கிறது. ‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலிலும் சுடலையாண்டி ஒரு பெருமழையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் இடம் மற்றும் அவன் தந்தையுடன் ஆற்றுக்குக் குளிக்கச் செல்லும் பகுதி ஆகியவை அபாரக் காட்சி அனுபவத்தை அளிப்பவை. ‘வெக்கையை’ விட ‘என்பிலதனை’ மேலான வாசிப்பனுபவத்தை அளிக்க முதன்மை காரணம் புறச் சித்தரிப்பு அளவுக்கே ஆழமான அகச் சித்தரிப்பை அளிப்பதுதான். யதார்த்தவாத/இயல்புவாதப் புறச் சித்தரிப்புக்கும் நவீனத்துவ/ இருத்தலியல் அகச் சித்தரிப்புக்கும் இடையிலான பாலம் என நாஞ்சில்நாடனின் நாவல்களைச் சொல்லலாம். இந்த நகர்வு பிற்காலத் தமிழ் நாவல்களுக்குப் பாதையமைத்து அளித்தது.
நாஞ்சில் நாடனின் நாவல்களின் நாயகர்கள் யார்? ‘மாமிசப் படைப்பை’ மட்டும் விதிவிலக்காக கொண்டால், வேளாண்மைக் குடும்பப் பின்னணி கொண்ட, நாஞ்சில் நாட்டுக் கிராமங்களில் ஒன்றைப் பூர்வீகமாகக் கொண்ட முதல்தலைமுறைப் பட்டதாரி இளைஞர்கள். ‘சதுரங்கக் குதிரையின்’ நாராயணன் மட்டுமே நாற்பத்தி ஐந்து வயதான திருமணமாகாத மத்தியவயதினன். ‘என்பிலதனை வெயில் காயும்’ சுடலையாண்டி கல்லூரி மாணவன், ‘எட்டுத்திக்கும் மதயானை’ பூலிங்கமும் அறிமுகமாகும்போது கல்லூரி மாணவன்தான். கல்வி இடைநின்ற கல்லூரி மாணவன் என வேண்டுமானால் சொல்லலாம். ‘மிதவை’ சண்முகமும், ‘தலைகீழ் விகிதங்கள்’ சிவதாணுவும் பட்டம் பெற்று வேலைக்காகத் தட்டழிபவர்கள். ‘மாமிசப் படைப்பு’ கந்தையாவும் நடுத்தர வயதினன்தான். இவர்கள் அனைவருமே பசித்தவர்கள், தங்கள் திறன் மீது நம்பிக்கை கொண்டவர்கள். பிலத்திலிருந்து, கிடைக்கும் நைந்த கயிற்றைப் பற்றி மேலேறிச் செல்ல முனைபவர்கள், நடைமுறை அறிவு மிகுந்தவர்கள், எப்படியாவது நிலத்தில் கால்பாவி, வேரூன்றி நிற்க வேண்டும் எனும் வெறி கொண்டவர்கள். சொல் பொறுக்க முடியாத நுண்ணுணர்வு கொண்ட ஒருவகை தொட்டாச்சிணுங்கிகள்.
அவர்கள் தனியர்கள். ‘எந்தத் தனியனும் கூர்மையான அர்த்தத்தில் சமூகத்தின் எதிரி. சமூகம் என்பதும் பொதுவான அர்த்தத்தில் தனியனுக்கு எதிரி.’ (எட்டுத்திக்கும் மதயானை) ‘உலகெங்கிலும் மனிதர்கள் நெரித்துக் கிடந்தாலும் ஒற்றைத் தனியனாய் உயிர் துடித்தது’ (என்பிலதனை வெயில் காயும்) ‘கூட்டத்தோடு போனாலும் சரி, தனியாகப் போனாலும் சரி, எப்படியும் வாழ்க்கை அர்த்தமற்றதுதானா?’ (சதுரங்கக் குதிரை) ஆகிய வரிகள் அவர்களைப் புரிந்துகொள்ள உதவுபவை. சிவதாணுவிற்கோ, சண்முகத்திற்கோ, கந்தையாவிற்கோ, சுடலையாண்டிக்கோ, நாராயணனுக்கோ, பூலிங்கத்திற்கோ சாதிப் பின்னொட்டு கிடையாது. அவர்களின் சாதி திட்டவட்டமாக நாவல்களில் சுட்டப்படுகிறது. நாயகர்களைத் தவிர பெரும்பாலான பிற பாத்திரங்கள் மிகத் தெளிவான சாதி அடையாளங்களுடன், சாதிப் பின்னொட்டுடன் திகழ்கிறார்கள் எனும்போது நாயகர்களின் பின்னொட்டுத் தவிர்ப்பு ஒரு பிரக்ஞைப் பூர்வத் தேர்வு எனக் கருத இடமுண்டு. அவன் தன் பொது அடையாளத்திலிருந்து பிரிந்த தனியன் என்பதை நிறுவுவதாகவும் உள்ளது. அவர்கள் தனியர்கள் மட்டுமில்லை தனித்துவமானவர்கள் என நம்புபவர்களும்கூட. ‘அலுவலக உடை தவிர மற்ற சமயங்களில் ஒரு காவி வேட்டியும் காவித் துண்டும்… நான் உங்களுடன் சம்பந்தம் உடையவன் அல்ல எனும் விலகல். ஒருவேளை தனக்குக் கல்யாணம் ஆகாமல் போனதற்கு அது ஒரு அர்த்தத்தையும், அத்துடன் மலிவானதோர் கம்பீரத்தையும் தரலாம்.’ (சதுரங்கக் குதிரை). ‘கெப்ளரின் இயக்க விதிகளையும் காஷி ரெய்மான் இன்டகிரல் சமன்பாடுகளையும் படித்தது காலைதோறும் புல்லறுக்கவா?’ (தலைகீழ் விகிதங்கள்) எனத் தனக்குள்ளாகக் கேட்டுக்கொள்கிறான் சிவதாணு. தான் படித்தவன் ஆகவே பெரும்பாலும் நிலத்தில் உழைக்கும் தன்னைச் சுற்றி இருக்கும் பிறரிடமிருந்து வேறானவன் என நம்புகிறான். இவ்வகையில் அவன் ஒரு தலைமுறையின் பிரதிநிதியாகிறான்.
உலக இயக்கத்தின் அநீதியைக் கண்டுணர்பவர்கள். அவற்றுக்கு எதிராகக் கொந்தளித்தும் கொப்பளித்தும் எதிர்வினையாற்றி ஓயாமல் அவர்களைத் தடுத்து நிற்கும் சுவர்களை முட்டி மோதிப் பெயர்க்கக் கனவு காண்பவர்கள். தலைகீழ் விகிதங்களில் கோலப்பப் பிள்ளையின் வயலில் தேங்கியிருந்த நீரை யாருக்கும் தெரியாமல் வெளியேற்றுகிறான் சிவதாணு. ‘கெடுதல் செய்ய வேண்டும் என்ற நோக்கம் சிவதாணுவுக்குக் கிடையாது. ஆனால் தெரிந்தே குற்றம் செய்கின்ற இந்த ஒட்டுண்ணிகளுக்குப் பதிலுக்குப் பதில் செய்துதான் தீர வேண்டும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். இடது கன்னத்தில் அறைந்தால் வலது கன்னத்தைக் காட்டு என்ற கொள்கையில் அவனுக்கு நம்பிக்கை இல்லை. அது கோழைத்தனமான ஒரு சமூகத்தை உருவாக்குகிறது என்று நம்பினான். எனவே இடது கன்னத்தில் அறைந்தவனின் இரண்டு கன்னத்திலும் அறைய வேண்டும் என்பதே அவனது சித்தாந்தமாக உருவெடுத்திருந்தது.’ நாஞ்சிலின் நாயகர்கள் ‘கோபக்கார இளைஞனாகத்தான்’ அறிமுகமாகிறார்கள். ‘சோம்பேறிக் குயிலினங்கள் ஏமாளிக் காகங்களை எத்திப் பிழைக்கும் வாழ்க்கை முறையை வெடி வைத்துத் தகர்க்க’ கனவு காண்பவர்களாகத்தான் அவர்கள் திகழ்ந்தார்கள். ‘இதோ நிற்கும் இத்தனை பேரில் எவன் என்னைக் கேட்டான்? தம்பி யாரு? எந்த ஊருக்கு போணும்? என்ன செய்யப் போறே? என்று. இவர்களின் வயல்களில் மணல் பாய்ந்தால் என்ன? வீட்டின் கூரை தீப்பிடித்து எரிந்தால் என்ன? இடிந்து சமுத்திரத்தில் ஆழ்ந்தால் என்ன? யார் யாருக்குப் பாதுகாப்பு? மக்களுக்காக மக்களே செய்யும் மக்களாட்சி… மயிரைப் பிடுங்குகிறான்கள் மக்களாட்சித் தலைவன்கள்.’ (என்பிலதனை வெயில் காயும்). ‘மாமிசப் படைப்பில்’ கந்தையா நியாயவானாகவும் முன்கோபியாகவுமாகவே வருகிறான். எட்டுத்திக்கும் மதயானை பூலிங்கத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.
வாழ்க்கைப்படியில் மேலே இருப்பவர்களின் சிறுமை கண்டு வெகுண்டெழுவது நாஞ்சில் நாடனின் நாயகர்களின் பொது இயல்பு. ஒருவகையில் அவருடைய படைப்பின் ஆதார இயல்பு எனச் சொல்லத் தோன்றுகிறது. ‘மாமிசப் படைப்பில்’ கந்தையா தன்னைக் காட்டிலும் அதிகாரம் படைத்தவர்களுடன் மோதுகிறான். கந்தையா வேலையில் சாமர்த்தியசாலி. கூலியாக இருந்தாலும் ஜாதகம் பார்ப்பது வழியாக அவனுக்கு ஒரு சமூக மரியாதை ஏற்படுகிறது. ஒருவகையின் கிராவின் நிலைநிற்றல் கதையை நினைவுபடுத்தும் சித்தரிப்பு. விவசாய வேலைக்குக் கறாராகக் கூலி வாங்கும் அவன் ஜாதகத்திற்கு அப்படி எதையும் வாங்குவதில்லை. ஊரில் பெரும் நிலக்கிழாரும் முதலடியுமான கடுவாய் கங்காதரம் பிள்ளை, அவருடைய மைத்துனன் விக்கிரமசிங்கப் பிள்ளை ஆகியோரைப் பகைத்துக்கொள்ள நேர்கிறது. விக்கிரமசிங்கப் பிள்ளையின் மகன் சோனாச்சலத்தின் அத்துமீறலைக் கண்டிப்பதில் கந்தையாவுக்கும் அவர்களுக்கும் முதல் பகை மூள்கிறது. விவசாயக் கூலிகளான தன் கூட்டத்தினர் நெல் சாகுபடி தவிர பிற சமயத்தில் ஏதேனும் ஒருவகையில் வருமானத்தைப் பெருக்க யோசனை செய்கிறான் கந்தையா. ஆற்றோரம் இருக்கும் புறம்போக்கு நிலத்தில் காய்கறித் தோட்டம் போடுகிறார்கள். அது கடும் பொறாமையை உருவாக்குகிறது. விக்கிரமசிங்கம்- கங்காதரப் பிள்ளையினர் கந்தையாவுடன் ஆடும் சதுரங்க ஆட்டம்தான் நாவல். இறுதியில் கந்தையா பலியாகிறான்.
பிற நாவல்களின் நாயகர்கள் அனைவரும் எப்படியோ பிழைத்து வாழ்கிறார்கள். அவர்களிடம் இந்த ஆவேசமும் ஆத்திரமும் உள்ளத்தில் குமுறும் அளவிற்கு வெளியே வெளிப்படுவதில்லை. அதை அனுமதிக்காத மான அவமானங்களாலும், பொருளாதார வசதியின்மையாலும், குடும்பப் பொறுப்பின் சுமையினாலும் தளையுண்டவர்கள். ரகசியமாக சிலபோது சிறு சிறு இளைப்பாறலாகத்தான் தங்கள் வஞ்சங்களை நேர் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. பூலிங்கம் வைக்கப்போருக்குத் தீ வைக்கிறான். சிவதாணு நீரைக் கொத்திவிடுகிறான். சிறுகதைகளில் உலாவரும் கும்பமுனி இதே கோபக்கார இளைஞனின் நீட்சிதான். ஆவேசம் கொண்டவன் தன்னால் எதையும் நிகழ்த்த இயலாது, தான் பல்வேறு தளைகளால் கட்டுண்டவன் என உணரும்போது கரவாக இருக்கும் கோபத்தையே பகடியாக வெளிப்படுத்துகிறான். நேர் நிற்கும்போது கந்தையா போல மரித்துப்போக வேண்டியதுதான்.
‘மாமிசப் படைப்பு’ ஒரு துருவம் எனில் ‘சதுரங்கக் குதிரை’ மற்றொரு துருவம். கோபக்கார இளைஞன் மறைந்து மத்திய வயதில் மரணத்தை அஞ்சும் தனியனின் கதையாகிறது. என் நோக்கில நாஞ்சில் நாடனின் சிறந்த நாவல் என இதையே சொல்வேன். நாராயணனுக்குப் பல்வேறு திருமண வாய்ப்புகள் நெருங்கி வருகின்றன. தன்னை விலக்கி வைத்துக்கொள்ள முயன்றாலும் உள்ளூரச் சமநிலை இழந்து தத்தளிக்கிறான், சபலப்படுகிறான். முதிர்க் காளையரின் சிக்கலைப் பேசும் பெருமாள் முருகனின் ‘கங்கணம்’ நாவலுடன் ஒப்பிட முடியும். துணைக் கதை மாந்தர்கள் மற்றும் நாவல் நிகழும் களம் ‘சதுரங்கக் குதிரையை’ ‘கங்கணத்தை’ விட மேலானதாக ஆக்குகிறது. தொழிலின் பொருட்டு அலைந்து திரிபவனின் வாழ்வு நாராயணனுக்கு. விடுதிகளும் உணவகங்களும் நாஞ்சிலின் கதைகளில் ஒரு பாத்திரம் என்றே சொல்லலாம். ஒப்பு நோக்க ‘என்பிலதனை வெயில் காயும்’ மற்றும் ‘மிதவை’ நாயகர்களைப் போலக் கடும் பசி நாராயணனை அலைக்கழிக்கவில்லை. சேர்த்து வைத்த பணத்திலிருந்து தனக்கென ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பைக்கூட வாங்கிக்கொள்கிறான். நாராயணனின் வாழ்க்கையை ஒரு மினிமலிஸ வாழ்க்கை எனச் சொல்லலாம். அவனால் எல்லைப் போர்வீரனைப் போல மூன்று மணிநேர முன்னறிவிப்பில் இடம் பெயர முடியும். அவனுடைய இயல்பை இந்த விவரணை துல்லியமாகச் சுட்டுகிறது. “நலமாக இருக்கிறேன். எல்லோரும் சுகமாக இருக்கிறீர்களா? உங்கள் கடிதம் கிடைத்தது,” என்பதற்கு மேல் நான்காவது சொற்றொடருக்குப் போராட வேண்டி இருக்கிறது. சில சமயம் தேதி போடாமல் அஞ்சலட்டைகளை அச்சிட்டு வைத்துக்கொள்ளலாமா என்றும்கூடத் தோன்றும்.” அந்நிய இடத்தில் தனித்தவனாக அறையில் இருக்கும்போது மரணபயம் ஏற்படுகிறது. ஆனால் அது அஞ்சுவதற்குரிய ஒன்றா? ‘ஆனால் உண்மையில் சாவென்பது குளிருக்கு சுகமான போர்வைக்குள் புகுந்துகொண்டு உறங்குவது போன்றதாக இருக்கலாம்’ எனப் புரிந்துகொள்கிறான்.
நாஞ்சிலின் நாயகர்கள் சிறுமை கண்டு சீறுபவர்கள் மட்டுமில்லை, மனவிரிவின் தருணங்கள் அவர்களுக்கு ஆனந்தக் கண்ணீரைப் பெருக்குகின்றன. ‘என்பிலதனை வெயில் காயும்’ சுடலையாண்டிக்கு உணவிட்ட வேலம்மை பெரியம்மாவை எண்ணும்போதும், உயர்நிலைப்பள்ளியில் மதிய உணவு விளம்பும் சதாசிவத்தை நினைக்கும்போதும், ‘யாருக்கெல்லாமோ இந்த உடம்பு கடன்பட்டிருப்பதை எண்ணி’ கண்ணீர் சிந்துகிறான். நல்ல உணவு சமைத்த, விளம்பிய அத்தனை பேரையும் நாஞ்சில் நாடனின் நாயகர்கள் நினைவில் கண்ணீருடனும் நன்றியுடனும் போற்றுகிறார்கள். ‘யாம் உண்பேம்’ ‘இடலாக்குடி ராசா’ என அவருடைய புகழ் பெற்ற கதைகளும் இத்தகைய மனவிரிவு தருணங்களால் நிரம்பியவை. உணவைச் சாதி மத அடையாளப் பாகுபாட்டிற்கு அப்பால் பகிர்ந்துகொள்வது மனவிரிவை அளக்கும் கருவியாகிறது.
நாஞ்சிலின் நாயகர்கள் உத்தமச் சீலர்கள் இல்லை. சிறுவனாக சுடலையாண்டி (என்பிலதனை வெயில் காயும்) ஒரேயொரு தேங்காயைத் திருடி பாவனாசத்திடம் மாட்டிக்கொள்கிறான். மிக விஸ்தாரமாகப் பலவேசம் பிள்ளையிடம் அவன் அடைந்த அவமானம் விவரிக்கப்படுகிறது. திருடனாகத் தண்டனைக்காகக் காத்திருக்கும் வாதை மனதைப் பதட்டமடையச் செய்கிறது. தலைகீழ் விகிதங்களில் மனைவி பார்வதியாலும் மாமனார் சொக்கலிங்கம் பிள்ளையினாலும் அவமதிக்கப்பட்டாலும் பதிலுக்கு சிவதாணுவும் பார்வதியை அகங்காரம் கொண்டு சீண்டுகிறான். ‘மிதவையில்’ முதன்முறையாக ரயிலில் பயணிக்கும் சண்முகம் எதிரில் உறங்கும் பெண்ணின் காலை நிமிண்டி கிளர்ந்து சுய மைதுனம் செய்துகொள்கிறான். ‘எட்டுத் திக்கும் மதயானை’ முழுக்கவே நியாய அநியாய இருமையைக் கடந்து வாழ்வதற்காக எந்த எல்லைவரையும் செல்லலாம் எனச் சொல்கிறது. ‘வாழ்வின் மதிப்பீடு என்பது பழகிய தெருவிலும் ஊரிலும் உறவுகளிலும் மட்டும் பயிராகும் செடி போலும்’ என்பதே பூலிங்கத்தின் கண்டடைதல். முகமறியா தேசத்தில் எவருக்காக நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்? பயணிகள் புழங்கும் எந்தச் சுற்றுலாத்தலங்களுக்குச் சென்றாலும் அங்கே அதுவரை கடைபிடித்த நெறிகள் தளர்ந்து வேறொரு மனிதர் எழுந்து வருவதை நாம் காண்கிறோம். சுற்றுலாத்தலங்கள் குற்றங்களின் தொட்டிலும்கூட. காவலுக்கு பூலிங்கத்தை இருக்கச் சொல்லிவிட்டு சேட் குடும்பத்துடன் கிளம்பிச் சென்ற பிறகு முதலாளி சேட்டின் மகனுடைய அறைக்குள் நுழைந்து வாசனை மிகுந்த சோப்பை நுரைக்க நுரைக்க தேய்த்துக் குளித்துக் கட்டிலில் படுத்து உறங்கி எழுகிறான். இரண்டு நாட்களுக்குப் பின்னர் பிடிபட்டு வெளியேற்றப்படும் தருணம் நாவலின் மிகக்கூர்மையான இடங்களில் ஒன்று. அவனுக்குப் பரிவுடன் அன்னமிட்ட பாபி “ஏன் வீட்ல நீ இதைச் செய்யணுமாடா?” எனக் கோபம் தெறிக்கக் கேட்கும்போது அவமானம் பிடிங்கித் தின்கிறது. ரயிலில் பூலிங்கம் ‘சரக்கைப்’ பறிகொடுத்தது போலவே அவனும் எவனோ ஒருவனின் பெட்டியை எடுத்துக்கொண்டு இறங்கிவிடுகிறான். சுடலையாண்டி இந்தி ஆசிரியரை வீம்பாக அவமதிக்கும் தருணம் ஒன்றை என்பிலதனை வெயில் காயும் நாவலில் வாசிக்க முடிகிறது. இந்தி ஆசிரியர் ஒரு மதிப்பெண் போட்டிருந்தால் தேர்ச்சி அடைய செய்திருக்கலாம் எனும்போது விடைத்தாளைக் கிழித்து எறிகிறான். வாசிக்கச் சொல்லும்போது இறுக்கமாக மறுக்கிறான். அவனுடைய வீம்பு ஆசிரியரை முகம் சிவக்கச் செய்து, கண்களில் நீர் சுரக்க வைத்தது. இந்தி மதிப்பெண்கள் தேர்வு முடிவுகளில் எவ்விதச் செல்வாக்கும் செலுத்துவதில்லை. நமக்கு பாதிப்பற்ற நிலையில் மனிதன் தருக்கி நின்று வீராப்பு காட்ட முடியும். ஒருவகை போலி நிறைவை பெற முடியும்.
பிரதான பாத்திரங்களின் இத்தகைய பிசிறுகள் அவர்களை அசல் மனிதர்களாக நம்முன் நிறுவுபவை. விதிவிலக்கு மாமிசப் படைப்பு கந்தையா, அவனுடைய ஆளுமையின் மறுபக்கம் ஏதும் பதிவாகவில்லை. வணிக மற்றும் பிரச்சார இலக்கியத்திலிருந்து எது நவீன இலக்கியத்தைத் தனித்துக் காட்டுகிறது என்றொரு கேள்விக்கு விடை அதன் உள்ளுறையாக இருக்கும் இந்த விமர்சனப் போக்குதான் எனச் சொல்ல முடியும். நவீன இலக்கிய நாயகர் மேடையேறி உலகத்தை, சமூகத்தை விமர்சித்துவிட்டு இறங்கிச் செல்பவர் இல்லை. அவருக்குத் தான் உட்பட எதுவும் எவரும் விலக்கல்ல.
நாஞ்சில் நாடனின் நாயகர்கள் எவருடைய பிரதிநிதி? நாஞ்சில் நாடன் பரவலாக ‘வெள்ளாள எழுத்தாளர்’ என விமர்சிக்கப்படுவது போல் அவருடைய நாயகர்கள் அனைவரும் வெள்ளாளக் குடியைச் சேர்ந்தவர்கள் இல்லை. எட்டுத்திக்கும் மதயானையின் பூலிங்கம் வேளார்க் (குயவர்) குடி. மிதவை சண்முகம் இடையர்க் குடி எனத் தெளிவாக அடையாளங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. சாதிப் பாகுபாடு தொந்தரவு செய்யும் அளவுக்கே ஒரே சாதியாக இருந்தாலும் அதற்குள் இருக்கும் வர்க்க பேதமும் நாஞ்சில் நாவல்களில் முக்கிய பேசுபொருள் ஆகிறது. சிவதாணு – சொக்கலிங்கம் பிள்ளை உறவும் (தலைகீழ் விகிதங்கள்), கந்தையா – கடுவாய் கங்காதரம் பிள்ளை (மாமிசப் படைப்பு) ஆகியோருக்கு இடையேயான உறவும் வர்க்க அடிப்படையில் புரிந்துகொள்ளத்தக்கதே. பூலிங்கம் வேலைக்குச் செல்லும் சேட் வீட்டில் தொலைகாட்சி நாடகத்தில் வரும் பெண்களைக் காணும்போது ‘இந்தியாவிற்குள் இன்னொரு பூத்துக் குலுங்கும் பாரத தேசம் இருக்கிறது போலும்’ எனத் தானறியாத வேறொரு வாழ்க்கைமுறையைப் பற்றி யோசிக்கிறான். உழைக்கும் மக்கள் மீது பல்வேறு தருணங்களில் வாஞ்சை வெளிப்படுகிறது. எட்டுத்திக்கும் மதயானையில் திம்மனின் மணப்பெண்னை விவரிக்கும்போது ‘சூரியக் கதிர்கள் காய்ச்சிப் பதப்படுத்திய முகம்’ என்கிறார். சதுரங்கக் குதிரையில் அவுரங்காபாதில் மாநில முதல்வர் நேரடியாக மக்களைச் சந்திப்பதால் ஏற்படும் ஜனநெரிசல் பற்றிய சித்திரம் ஒன்றுண்டு. தங்குவதற்கு அறைகூடக் கிடைக்காத அந்த நெரிசலில்கூட நாராயணனுக்கு மனிதர்களின் மீது எவ்வித முகச் சுளிப்புமில்லை. ‘உழைப்பின் முறுகிய உடல்கள். கிராமத்து மண்ணின் வியர்வையின் அழுக்கின் புகையிலைப் பொடியின் கலவை வாடை,’ என்றே எண்ணுகிறான்.
வேளாண்மையைக் கைவிட்டுப் பிழைப்புக்காக நகரத்தை நாடிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். சரியாகச் சொல்வதானால் நிலபிரபுத்துவத்திலிருந்து அரசு மைய சோசியலிச காலத்திற்கும் இடையிலான யுகசந்தியைச் சேர்ந்தவர்கள். சோசியலிசத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான காலகட்டத்தைக் கடந்த அடுத்த தலைமுறையினராகிய நாம் இப்போது முழு முதலாளித்துவ வாழ்வியல் கட்டத்தில் உள்ளோம். ஒரு காலகட்டத்தின் எழுத்திற்கும் யுகசந்தியின் எழுத்திற்கும் இடையில் பெரிய வேறுபாடு உண்டு. யுகசந்தி என்பது தூலமான மாற்றங்கள் மட்டுமில்லை. சூக்குமமான விழுமிய மோதல்களால் ஆனதும்கூட. ஒவ்வோர் யுகசந்தியும் ஏதோ ஒருவகையில் முந்தைய சந்தியை நகலெடுப்பதும் ஆகும்.
தலைகீழ் விகிதங்களில் சிவதாணு மாமனார் வீட்டில் வசிக்கிறான். தயக்கங்கள் இருந்த போதிலும் அவன் அங்கே தன்னைப் பொருத்திக்கொள்ள முயல்கிறான். அவனுக்கும் அவனுடைய தந்தை சிதம்பரம் பிள்ளைக்கும் இடையிலான வேறுபாட்டைக் கவனித்தால் சிவதாணு ஓர் யுகசந்தியின் பிரதிநிதி என்பது விளங்கும். ‘மாமனார் வீட்டில் வசதி வாய்ப்புகள் அமைந்தால் வாழ்வதில் என்ன சிக்கல்?’ என்றே நமக்கு தோன்றும். மாமனார் கொடுக்கும் பணத்தில் அங்கேயே வாழலாம் எனும் திட்டத்திற்கு அவனுடைய தந்தை சிதம்பரம் பிள்ளை ஒப்புக்கொள்ளவில்லை. சிதம்பரம்பிள்ளை முந்தைய யுகத்தவர். ‘வியாபாரியாக இருந்தால் லாப நட்டக் கணக்கைப் பார்த்து ஒப்புகொள்வார். ஆனால் மண்ணுடன் பிணைந்த விவசாயியால் எப்படி ஏற்க முடியும்?’ எனக் கேள்வி எழுப்புகிறார். விவசாயி வியாபாரி எனும் இருமையைக் கவனத்தில்கொள்ள வேண்டும். நிலத்துடன் பிணைப்பற்ற தலைமுறை நாம். இரு விழுமியத் தொகைகளுக்கு இடையேயான, இரு வாழ்க்கைமுறைகளுக்கு இடையேயான யுகசந்தியில் நின்று அதன் குழப்பங்களை எதிர்கொண்டு நிலைகொண்ட தலைமுறையின் பிரதிநிதிகள்தான் நாஞ்சிலின் நாயகர்கள். அந்தக் காலகட்டம் எத்தகையது? தோசை ஓர் அதிசய உணவாக இருந்த காலம். சம்பள வரவால் தூர்க்கப்படக் காத்திருந்த பள்ளங்கள் ஏராளமிருந்த காலம். வேலை பற்றிய செய்தியைத் தாங்கி வரும் தபால்காரர் நற்செய்தியை அறிவிக்க வரும் தேவதூதனாக வேலையில்லாப் பட்டதாரிகளுக்குத் தென்பட்ட காலகட்டம். தலைகீழ் விகிதங்களில் சண்முகம்பிள்ளை சொக்கலிங்கம்பிள்ளையிடம் பெண்ணைக் கட்டிக்கொடுப்பதில் உள்ள தேர்வைப் பற்றிச் சொல்கிறார் ‘பெரிய பணக்காரனுக்கு வாழ்க்கை பட்டு குறுணி அரிசி பொங்கிப்போட்டு புழுக்கச்சி வேலை செய்து சாகிறதைவிட இது உமக்குக் கசக்கவா செய்யீ..’ சொத்து என்பது புதிய யுகத்தில் நிலம் அல்ல, கல்விதான் எனும் காலமாற்றத்தை, பார்வை மாற்றத்தை அன்றைய நிலபிரபுத்துவ அமைப்பு அடைந்ததைக் குறிக்கிறது.
‘என்பிலதன் வெயில் காயும்’ சுடலையின் மனவோட்டமாக வரும் பகுதி ‘ஊரையே காலி செய்து சென்றுவிட வேண்டும், சாதிகள் பொருள்படாத நகரத்துச் சந்தில் வசிக்க வேண்டும் என எண்ணும்போதே சிற்றூரின் மகரந்தம், மனிதர்களில் சிலர் அறியாமை காரணமாக ஏதோ பேசுகிறார்கள் என்றாலும் அந்தப் புண்களை எல்லாம் ஆற்றிவிடுவதுபோல் இந்த இயற்கையின் குலவல்.’ இந்தக் குழப்பம் நாஞ்சிலின் நாயகர்களுக்கு எப்போதும் உடன்வருவது. மிதவையில் இயல்பாக இந்தக் கிராம நகர ஒப்பீடு நிகழ்கிறது. ‘துண்டு சதைக்காக நா தொங்கவிட்டுக் காத்திருப்பது போய், இங்கு சதைக் காட்சி திகட்டும் அளவுக்கு இருந்தது. பம்பாயின் அரேபிக் கடலைக் காணும்போது இங்கே கடல் கன்னியாகுமரிக் கடல் போல சவுந்தர்யம் கொண்டதல்ல. குறைப்பிரசவக் குழந்தை போலப் பயங்கரமும் ஆபாசமும் கொண்டதாக இருந்தது… இந்தக் காற்று உடலை மனதை மாசுபடுத்தும். சாப்பாட்டை நினத்தாலே ஒரு குமட்டல். பூரியின் நினைப்பே வெறுப்பூட்டியது.’ இவை சண்முகத்தின் மனவோட்டம். ஒப்புநோக்க மத்தியவயதில் இருக்கும் சதுரங்கக் குதிரை நாராயணனுக்குப் பெரிய குமைச்சல்கள் ஏதுமில்லை. சதுரங்கக் குதிரை நாராயணனுக்கு ஊருக்கு வந்து செல்லும் ஆசைகூடப் பெரிதாக இல்லை. மிதவை நாவலே காசு பிரட்டி சண்முகம் மகிழ்ச்சியாக ஊர் திரும்பும் சித்திரத்துடன்தான் நிறைவுறுகிறது. பூலிங்கத்திற்கு ஊர் திரும்ப வேண்டும் எனும் அவா உண்டு. ஆனால் அது தொலைதூரக் கனவாகிவிட்டது. கிராமத்திலிருந்து நகரத்திற்கான பெயர்வும், அதற்குரிய நியாயங்களைக் கண்டடைவதும், நகரத்தின் மீதான ஏற்பும் வாஞ்சையும் நிகழ்வதை நாஞ்சில் நாடனின் நாவல்களின் ஊடாகக் கண்டுகொள்ள முடிகிறது.
சாதிப் படிநிலைகள் குறித்துப் பல நுட்பமான அவதானிப்புகளை நாஞ்சில் நாடன் படைப்புகளில் காண முடியும். சுடலையாண்டியின் அம்மா தங்கம்மை ஈழவப் பெண். தற்கொலையில் மரணித்தவள். சுடலை தனக்கே இவ்வளவு ஆழமான கொழுப் பாய்ச்சல்கள் என்றால் அவள் என்ன செய்திருப்பாள்? எனப் பரிவுடன் புரிந்துகொள்கிறான். ஈழவத்தி வெள்ளாளத்தி எனக் குளிக்கச் சென்ற இடத்தில் அவமதிக்கப்பட்டு அதற்காக கணவரிடம் அடிவாங்கி அரளி விதையை அரைத்துக் குடித்து மரிக்கிறாள். நீருக்குள் தன்னைப் புதைத்துக்கொண்டு ‘ஒரு மலையாள ஈழவப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடி வந்த அப்பாவுக்காக, அப்பாவை நம்பி வந்து அல்லல் தாங்காமல் தன்னையே அழித்துக்கொண்ட முகம் தெரியாத தன் அம்மாவுக்காக, அந்த அம்மா வயிற்றில் பிறந்துவிட்டதால் அங்கீகாரம் இழந்து நிற்கும் தனக்காகச்’ சத்தமாக அழுகிறான். சாதி அடையாளச் சிக்கலே சுடலையின் முதன்மைச் சிக்கல். மிதவையிலும் எட்டுத்திக்கும் மதயானையிலும் தேவர்களுக்கு மட்டுமான சால் பம்பாயில் உள்ளதைப் பற்றிச் சொல்கிறது. பூலிங்கம் தன்னை தேவர் எனச் சொல்லியே அங்கே இடம்பிடிக்கிறான். ‘மாமிசப் படைப்பில்’ சைவ வெள்ளாளருக்கும் பிறருக்கும் இடையிலான உறவு கிண்டலாகத் தொட்டுக் காட்டப்படுகிறது. நாஞ்சில் நாடனின் பாத்திரங்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையேயான உறவு நுட்பமானது. பிராமணப் பாத்திரங்களின் மனக் குறுகலும் மன விரிவும் வெவ்வேறு தருணங்களில் பதிவாகிறது. ஆழ்ந்த சுயப் பரிசோதனை வழியாகப் புகட்டப்பட்ட சாதிய முன்முடிவுகளை அவர்கள் கடக்கிறார்கள். சதுரங்கக் குதிரையில் நாராயணன் காலை நடைக்குச் செல்லும்போது ஓம் க்ரீம் எனச் சத்தமாகச் சொல்லிக்கொண்டே நடக்கும் மனிதரைப் பல ஆண்டுகளாகக் கவனித்து வருகிறான், சில சமயம் அடி வயிற்றுக்குக் கீழே குத்திவிடலாமா என்றுகூட அவனுக்குத் தோன்றுகிறது. தனது அடையாளத்தை எவ்வித நுண்ணுணர்வும் இன்றி வெளிப்படுத்துவதில் உள்ள நாகரீகமின்மை நாராயணனைச் சீண்டுகிறது. ‘மிதவையில்’ பேருக்குத் தனது உணவைப் பகிர்ந்துகொள்ள முன்வரும் ஆச்சர்யாவிடம் மதிய உணவைப் பகிர்ந்துகொள்ள சண்முகம் விரும்பவில்லை. அதற்கு அவன் முன்வைக்கும் காரணம் ‘ஆச்சார்யா எனும் மங்களூர் பிராமணனுக்குத் தன்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை,’ என்பதே. கனிந்து அருளப்படுவது அவனுக்கு வேண்டியதில்லை. அளிப்பது என்பதே ஒரு சமமின்மையை உருவாக்குகிறது. ஜெயமோகனின் புறப்பாடு நூலில் உள்ள ‘கையீரம்’ பகுதியை நினைவுபடுத்தியது. அதே நாவலில், குத்தகைக்கு விட்ட பிராமணரின் வீட்டுத் திருமணத்தில் பிராமணர்களுக்கும் பிறசாதியினருக்கும் தனித்தனிப் பந்தியில் உணவு பரிமாறப்படுவதை எண்ணி வருந்தும் தந்தைக்கு, தன் நிலத்தில் பாடுபடும் கூலிகளைத் தாமும் அப்படித்தான் நடத்துகிறோம் என்பதை எப்படி புரிய வைக்க முடியும் என்று சண்முகம் யோசிக்கிறான். நில உடமையாளரான பெரியசாமி ஐயரிடம் சண்முகத்தின் தந்தை நடந்துகொள்வது போல் அவன் நடந்துகொள்ளவில்லை. பெரியசாமி ஐயரின் முன் தரையில் அமரப் பிடிக்காமல் நின்றுகொண்டே இருந்தவனை கட்டிலில் உட்காரச் சொல்கிறார் பெரியசாமி. ‘கட்டிலில் இருக்கவும், காப்பி குடித்த தம்ளரை அப்படியே விட்டுவிட்டு வரவும் ஒரு மாதிரியாக இருந்தது,’ என எழுதுகிறார். பெரியசாமியின் மருமகன்தான் சண்முகத்தை பம்பாய்க்கு வரச் செய்வது. அவருக்கும் சண்முகத்தின் அப்பாவிற்கும் ஒரே வயது என்றாலும் அவரைச் சாமி என்றே அழைப்பார். பம்பாயில் ஐயருக்குச் சமமாக அமர்ந்து உண்கிறான். அப்போது தன் தந்தை இப்படி எல்லோருடனும் உட்கார்ந்து சாப்பிட்டிருக்க முடியாது என்று நினைக்கிறான். சதுரங்கக் குதிரையில் ‘பம்பாய் நிறைய மனிதர்களின் மனதைச் சற்று விரிவுபடுத்தியுள்ளது. இல்லாவிட்டால் பிராமணன் அல்லாதவருக்கு அறை அத்தனை லேசில் தந்துவிட மாட்டார்கள்.’ எனத் தான் குடியிருந்த வீட்டைப் பற்றி எண்ணுகிறான் நாராயணன். ராகவேந்திர ராவைச் சந்தித்தபின் எப்படி இந்த ஆறேழு மாதங்கள் அவரிடம் பேச்சு கொடுக்காமல் போனோம் என அவனுக்குத் தோன்றுகிறது. திராவிடக் கட்சிகள் விஷமாய் ஏற்றியிருந்த பிராமணக் காழ்ப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என நாராயணன் ஒரு விடையை வந்தடைகிறான். திராவிட அரசியல் மீது பல்வேறு இடங்களில் விமர்சனங்களை நாஞ்சில் நாடனின் பாத்திரங்கள் முன்வைத்தபடியே உள்ளன. மிதவை நாவலில் பெரியப்பாவுடனான விவாதத்தின்போது, பெரிய வீட்டுப் பிள்ளைகள் மட்டும்தான் மருத்துவராகவும் பொறியாளராகவும் ஆக முடியுமா என்ன? அதை மாற்றிக் காட்டுவோம் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்த சூழலில் ஆட்சியைப் பிடித்த பின்னர் என்ன மாற்றம் கண்டுவிட்டது என நொந்துகொள்கிறான் சண்முகம். கிராமத்தில் இருக்கும் பழைய திராவிட அரசியலின் பகுத்தறிவு முகமான மாடசாமி அண்ணனும், பம்பாயில் நூலகத்தில் பதிவு செய்துகொள்ள உதவிய கவிப்பித்தனையும் கழக அரசியலின் எஞ்சி இருக்கும் லட்சியவாதப் பிம்பங்களாகக் கோடிட்டுக் காட்டுகிறார் நாஞ்சில். தலைகீழ் விகிதங்களில் இடதுசாரி மற்றும் திராவிடப் பகுத்தறிவு அரசியல் லட்சியவாதங்களின் தாக்கத்தைக் கூடுதலாகக் காணமுடியும். ‘மாமிசப் படைப்பு’ அவருடைய பிற நாவல்களில் இருந்து கணிசமாக வேறுபட முக்கியக் காரணம் அகச் சித்தரிப்பு இல்லாததே. ஒருவகையில் பூமணியின் படைப்புலகத்திற்கு நெருக்கமானது. விரிவான காட்சிச் சித்தரிப்பு கொண்டது. தன்னுடைய அனுபவ வட்டதிற்கு வெளியே தனது தாத்தாவைப் பற்றி ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்ததாகக் கேள்விப்பட்ட சம்பவங்களைக் கொண்டு எழுதிய நாவல் என நேர்காணலில் சொல்கிறார். ஆகவே சற்று கூடுதல் கவனத்துடன் எழுதியதாகப் புலப்படுகிறது. வர்க்கப் பிரிவினையையும் உழைப்பின் மகத்துவத்தையும் பேசும் இடதுசாரிக் கூறுகள் கொண்ட நாவல். திராவிட இயக்கத்தின் மீதான விமர்சனம் என்பது அதன் மீதான வெறுப்பாக அல்ல, லட்சியவாதம் பொய்த்துப்போனதன் கசப்பு என்றே புரிந்துகொள்ள முடியும். எதன் மீதும் நம்பிக்கையில்லாத வருங்காலம் நிச்சயமற்ற ஒரு தலைமுறையின் பிரதிநிதி. இப்போது வரலாறு திரும்புகிறது. இதே மனநிலையில் இருக்கும் இன்றைய இளைஞரின் சிக்கல் வேறாக இருக்கலாம், ஆனால் அவர்கள் பூலிங்கத்துடனும், சுடலையுடனும், சண்முகத்துடனும் தங்களை நெருக்கமாக உணரக்கூடும்.
நாஞ்சில் நாடனிடம் ஓர் எழுத்தாளராக நான் வியக்கும் புள்ளி என்பது முதல் வரியிலிருந்தே நாவலைத் தொடங்கும் வித்தையைத்தான். எட்டுத்திக்கும் மதயானை ‘தீ சுருண்டு எரிந்து கொண்டிருந்தது. ஊரே பற்றி எரிவதுபோல’ என பூலிங்கம் வைக்கோற்பரப்பிற்குத் தீ வைக்கும் தருணத்தில் தொடங்குகிறது. ‘மிதவை’ ‘பெருவயிற்றைப் பிள்ளை என்று எண்ணியதுபோல்தான் சண்முகம் பெரியப்பாவின் மீது வைத்திருந்த நம்பிக்கையும்’ என நேரடியாகக் கதையின் மையத்தைத் தொட்டுத் தொடங்குகிறது.
அதேபோல் அவர் பயன்படுத்தும் சில உவமைகள் அவருடைய தனித்துவத்தைப் பறைசாற்றுபவை. அறுவடைக்கு முன்பான காலத்தில் வெள்ளத்தில் வீணாகும் பயிர்களைப் பற்றி ‘கர்ப்பிணி வயிற்றில் எருமை மிதித்தது போல’ என்கிறார் (எ.வெ.கா). மழையில் தலையில் கொங்கானியோடு ஓடுவதன் சங்கடத்தை ‘சினிமா நடிகைகளின் மார்துணி போல். இடம் மாறி இடம் பெயர்ந்து அவனை அலைக்கழித்தது.’ (எ.வெ.கா) என விவரிக்கிறார். நடந்து செல்லும் வழியில் எலியைக் காணும்போது ‘வெள்ளாடை விதவைகள் மரியாதையாக ஒதுங்கி நிற்பது போல நின்ற பின்பு ஓடியது’ (ச கு) எனக் குறிப்பிடுகிறார். ஊரிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ரயில் நிலையத்தை ‘ஊரில் இருந்து சண்டை போட்டுக் கத்திக்கொண்டு போனது போல்.’ (ச.கு) எனச் சுட்டுகிறார். ஓடும் நீரில் குளித்துப் பழகியவனுக்குக் குழாய்க் குளியல் என்பது ‘கரண்டியால் தோசை தின்பதைப் போல்’ (எ.ம.யா) இருக்கிறது. திருடிய பெட்டியைத் திறக்க முடியாமல் இருக்கும் பூலிங்கத்தின் உணர்வை ‘கொத்தான முள் மேல் துணியில்லாத குண்டியை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் போலிருந்தது.’ (எ.ம.யா) எனச் சொல்கிறார். குற்றாலம்பிள்ளை கோள்மூட்டிவிடும்போது பயன்படுத்தும் சொலவடை ‘குடிக்கத் தண்ணியிலே குறியை விட்டு ஆழம் பாக்க சாதீண்ணு சும் மையா சொல்லுகா.’ (மா.ப) முத்தாரம்மன் கோவில் பூசாரி சடையப்ப பிள்ளையின் இயல்பை விளக்குவதற்கு ‘வேண்டாத மருமகளை வைத்து நடத்தும் மாமியார் போல், வெளியே அடித்து துரத்தப்பட்ட அடைக்கோழி போல் எப்போதும் ஒரு புறுபுறுப்பு.’ (மா.ப) ஆகிய உவமைகள் பயன்படுகின்றன. திருமணத்திற்கு வந்த பிரமுகருக்கு இடம் வேண்டி பந்தியிலிருந்து ஒரு சிறுவனை எழுப்பிவிடுகிறார்கள் பெண் வீட்டுக்காரர்கள். சிவதாணு தன்னைப் பொருத்திப் பார்க்கிறான் ‘தண்ணீர்க் கிண்ணத்தில் விழுந்த எண்ணெய்த்துளிபோல்’ (த.வி) வெள்ளுடை வேந்தர்களுக்கு மத்தியில் அழுக்கும் பிசுக்கும் தொய்ந்த ஆடையில் தனித்துத் தென்படுவதை உணர்த்துகிறார். சிவதாணு திருச்செந்தூர்க் கடலையும் கன்னியாகுமரிக் கடலையும் ஒப்பிடுகிறான். “ஆனால் இங்கே பிள்ளை அழித்த வேசையின் மனம்போல சலனமும் குமைச்சலும் இல்லாத கடல்…கன்னியாகுமரிக் கடல் அமைதியற்ற மனத்தின் கொந்தளிப்பு, படீர் படீர் என்று பாறை மீது அலைக்கரங்களை அடித்துத் தன்னை விட்டுப் பிரிந்த கணவனின் மார்மீது விழுந்து புலம்பும் பெண்ணைப் போன்று கதறும் கடல்.” (த.வி) வைகையை ரயிலில் இருந்து காணும்போது ‘கிழட்டுத் தேவடியாளைப் பார்ப்பது போல் இருப்பதாக’ உணர்கிறான் சண்முகம் (மிதவை).
சாமானியர்களையும் எழுத்தாளர்களையும் பிரிக்கும் கோடு என்பது எழுத்தாளரின் கூர்மையான அவதானிப்புத் திறன் எனச் சொல்லலாம். அவை தன்னளவில் சில அபாரமான புனைவுத் தருணங்களை உருவாக்கும். கோட்டுச் சித்திரங்களாக மனிதர்களின் ஆளுமைச் சித்திரங்களை உருவாக்கி அளிக்கும். புனைவு எழுத்தாளராக இத்தகைய தருணங்கள் மனதில் வேர்கொண்டு வளர்பவை. நாஞ்சில் நாடனின் புனைவுலகம் இத்தகைய அபாரமான அவதானிப்புகள் மற்றும் கூர்மையான ஆளுமைச் சித்திரங்களால் நிரம்பியவை. ‘வீடு மாறிப்படுப்பவர்களின் உலா தொடக்குவதற்கு இன்னும் நேரமிருக்கிறது.’ (த.வி) எனும் ஒருவரி திருமணத்திற்கு அப்பாலான உறவைச் சுட்டிப் புன்னகைக்க வைக்கிறது. தார்பாய்ச்சி கட்டிய பெண்களைக் காணும்போது ஊரில் பெண்கள் கால்களை அகற்றி நின்று இன்னொருவருக்குத் தெரியாமல் மூத்திரம் பெய்வார்கள். இவர்கள் என்ன செய்வார்கள் எனும் வினோதமான ஐயத்தை அடைகிறான் சண்முகம் (மிதவை). எதற்கும் சேர்ந்தே போகும் அலுவலகத்தில் இருக்கும் மூன்று பெண் கிளார்க்குகள் எனும் ஒருவரி அவர்களைப் பற்றிய சித்திரத்திற்குப் போதுமானதாக உள்ளது. (மிதவை) தொழிற்சாலையில் இருந்து போகிறவர்கள் ஒரு விரலைக் கழிப்பறைக்கு வெளியே நீட்டிக்கொண்டே மலம் கழிப்பார்கள் என்பது மற்றுமொரு நுண்ணிய அவதானிப்பு (மிதவை). ரெட்கிராஸ் மூலம் பழைய துணி மூட்டைகளை வீசுவார்கள். சற்று நேரத்தில் பொருத்தமில்லாத ஸ்வெட்டர்களுடன் ஓவர் கோட்டுகளுடன் கவுன்களுடன் மக்கள் திரிவர் (மிதவை). திருவிழாக்களில் தேவாரம் படிப்பதற்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார். ‘திருவிழாவில் உறங்கமாட்டேன் என்று அடம்பிடித்து நிற்கும் சிறுவர் சிறுமியரைக் களைப்பூட்டும் வகையில் பூசாரி, “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே. யே ஒப்பிலா மணியே…” என்று தேவாரம் படிப்பார். (மா.ப)
சில காட்சித்துண்டுகளை விவரித்துவிட்டு நகர்ந்துவிடுகிறார் அவை புனைவாக மனதில் வளரச் சாத்தியமானவை. கடத்தல் சாராயத்திற்காகப் பிடிபட்டுக் காவல் நிலையத்தில் உடையைக் கழற்றச் சொல்கிறார்கள். அங்கே நாற்பது வயதான ஒருவன் உள்ளாடை போடவில்லை. ‘முடி அடர்ந்த அவனுடைய ஆண் குறி நாணத்தால் தொங்கிக் கிடந்தது (எ.ம.யா) எனும் ஒரு வரியில் அவனுடைய அவமானம் கடத்தப்படுகிறது. பிரெட் பற்றாக்குறை இருந்த காலத்தில் சண்முகத்திற்கு உதவுகிறான் ஒரு கடைக்காரன். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காலை ஐந்தரை மணிக்கு காரிசன் வொர்க்ஷாப் முடியும் சந்தியில் காத்து நின்றால் ஒரு லோஃப் தருவதாய்ச் சொல்கிறான். ஒருநாள் சர்த்தார்ஜி ஒருவர் இதைக் கவனித்து மறுநாள் அவரும் பிரெட்டுக்காக நின்றார். இரண்டு நாட்களில் நாலைந்து பேர் தொங்கும் பைஜாமா நாடா முடிச்சுகளோடு நின்றனர். கடைக்காரன் பாதையை மாற்றிக்கொள்கிறான். இந்த நான்கைந்து வரிகளில் ஒரு சிறுகதை ஒளிந்துகொண்டுள்ளது. என்பிலதனை வெயில் காயும் நாவலில் ஒரு நிகழ்வு. ஏழு வயது சிறுவனாக உடல் எல்லாம் சிரங்கு புண்களுடன் குளிக்கச் செல்கிறான் சுடலை. வைக்கோல் கத்தையைக் கொண்டு புண்களின் மீது கரகரவெனத் தேய்த்துக் குளிப்பாட்டுகிறார் சுடலையாண்டியின் தந்தை. உடல் எல்லாம் எரிகிறது. போதும் போதுமென அழுகிறான். ஒருகட்டத்தில் தந்தையின் பிடியிலிருந்து நழுவி “விடுலே என்னை தாயோளி” எனக் கத்திவிட்டு கூரான கல்லை வீசி எறிகிறான். அன்பின் ரணம் பதிவாகும் ஒரு கூரிய தருணம்.
அலுவலக சகா உணவு உண்ணும் விதத்தைச் சொல்கிறார். ‘காமத் வேண்டாத தாள் ஒன்றை மேஜை மேல் விரித்து, பால் கவரில் இருந்து எட்டு பத்து சப்பாத்திகளை எடுத்து ஒவ்வொன்றையும் நாலாகக் கிழித்தான். கிழித்து அடுக்கிய பின் எவர்சில்வர் டப்பாவைத் திறந்தான். (ச.கு) இப்படி உண்பவனைப் பற்றிய ஒரு மனப் பிம்பத்தை உருவாக்கிக்கொள்ள முடிகிறது. இதேபோல் கேயார்வி எனும் மற்றொரு அலுவலக சகாவைப் பற்றிய விவரணை. பிரிவுபச்சார விழாவில் அவர் நடந்துகொள்ளும் முறையைக் கொண்டே அவர் பற்றிய சித்திரத்தைக் கொணர்ந்துவிடுகிறார். ‘பொட்டலத்தைப் பிரிக்கவில்லை. தேநீரை வாங்கிச் சூடாகக் குடித்தார். பொட்டலத்தை மறுநாள் மதிய உணவுக்காகக் கையில் எடுத்துக்கொண்டார். தலைவர், ஒய்வு பெறுபவரின் முப்பதாண்டு சேவையைத் தீவிரமாக விவரித்துக் கொண்டிருக்கும்போது கேயார்வி எழுந்து அமைதியாகப் புறப்பட்டு நடந்தார். தலைவர் சற்று நிறுத்தித் தோளைக் குலுக்கியபோது எல்லோரும் சிரித்தனர்.’ (ச.கு) துணை பேராசிரியர் மதுசூதனப்பெருமாள் பற்றிச் சொல்லும்போது ‘ஆப்பிரிக்கக் காடுகளின் குறுக்கே நூல் பிடித்து ஓடும் பூமத்தியரேகை, நாகர்கோயிலிலிருந்து அதிக மைல் தூரத்தில் இல்லை என்றாலும் டை கட்டி, கோட்டு போட்டுக்கொண்டுதான் வகுப்புக்கு வருவது. (எ.வெ.கா) என்கிறார். ஐம்பத்தி ஏழு வயதான ஆப்பரேட்டர் ஜாய்சுக்கு பீர் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தால் பத்து சினிமா பார்க்கும் காசு பறிபோய்விடும். (சகு) அந்தக் காலத்து பி.ஏ.வான பெரியசாமி ஐயர் உள்ளூர் வங்கியில் மேலாளராக இருந்தவர். ‘உமிக்கரி நிறைந்த டின்களை தேயிலை என்று நம்பிக் கடன் கொடுத்ததால் பத்தாயிரம் கட்டி வைத்து வேலையையும் ராஜி வைத்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.’ (மிதவை) என்பது சுவாரசியமான சிறுகதைக் கரு. ஒரு நிகழ்வின் வழியாக சுடலையின் தாத்தா – ஆத்தா ஆகியோருக்கு இடையேயான ஊடலும் கூடலுமான உறவைக் கோடிட்டுக் காட்டுகிறார். ஒருமுறை காசிருந்ததால் பனையோலைக் கடவம் நிறைய காய்கறிகளை ஆசையாக வாங்கி வருகிறார் தாத்தா. காய்கறி மட்டும் போதுமா உப்பு மிளகு எங்கே எனக் கேட்டு நொட்டை சொல்கிறாள். எரிச்சலில் ஐப்பசி மாதத்து நிறைந்த ஆற்றில் காய்கறிகளோடு கடவத்தை நட்டாற்றில் வீசிவிட்டு வருகிறார். திரும்பி வந்தபோது ஆத்தா முகத்தில் குறுஞ்சிரிப்புடன் சரி வந்து கஞ்சி குடியும்’ என்கிறாள். ‘தேவடியா வெளயாடவா செய்யே…?’ என்கிறார் தாத்தா. (எ.வெ.கா)
நாஞ்சில் நாடனின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று அவரளிக்கும் காட்சி அனுபவம். என்பிலதனை வெயில் காயும் நாவலில் மூன்று நாட்கள் தூக்குவதற்குக்கூட ஆட்கள் தேட வேண்டி இருந்த சாஸ்தா கோவில் திருவிழா இறுதிநாளில் வேறொன்றாக ஆகிறது. திருவிழாவின் இறுதி நாள் விவரணையும் கிழங்கு பறிக்க மலைக்குச் செல்லும் அனுபவமும், பெருமழை கொட்டித்தீர்ப்பதும் மிகவும் காட்சிப்பூர்வமானவை. தாமிரபரணியில் குளிக்க முடியாத அளவிற்குத் தோளைத் தொட்டுக்கொண்டு மலம் தடித்தடியாய் மிதந்து போகும் சித்திரம் மிதவையில் ஒருவரியில் வந்து செல்வது, ஆனால் மனதைவிட்டு அகலாதது. சதுரங்கக் குதிரை பம்பாய் நகரம், மகாராஷ்டிரத்தின் உள் பகுதிகள், கோவா, நாஞ்சில் நாடு வெவ்வேறு நிலப்பகுதிகளில் நிகழ்கிறது. அக்கோலா பயணம் மற்றும் பூர்ணாவின் வெள்ளப்பெருக்கு ஓடும் ஜல்காவ் ஜாமெட் பகுதிகள் அபாரமான காட்சி அனுபவங்களை அளித்தன. மிதவை, சதுரங்கக் குதிரை மற்றும் எட்டுத்திக்கும் மதயானை ஆகிய நாவல்களில் நீண்டதூர ரயில் பயணம் பற்றிய விவரணைகள் நிறைய உண்டு. குறிப்பாக எட்டுத்திக்கும் மதயானை குண்டக்கல், ராய்ச்சூர், ஹூப்ளி, லோண்டா, வாஸ்கோ, பம்பாய் எனப் பல நிலப்பகுதிகளில் நிகழ்வது. ரயிலேறி கிருஷ்ணாவில் இறங்கி ஆசை தீரக் குளித்துவிட்டு வருவான் பூலிங்கம். நாஞ்சில் பயண இலக்கியம் எனத் தனியாக எதுவும் எழுதவில்லை. ஆனால் புனைவின் ஊடாகவே ரயில் நேரம், பாதைகள் எனத் துல்லியமான பயண வழிகாட்டுதலை அளிக்கிறார். தலைகீழ் விகிதங்களில்கூட சிவதாணுவின் ரயில் பயணம் விவரிக்கப்படுகிறது. பயணங்கள் உடன் பயணிப்போரின் நுண்ணியச் சித்தரிப்புகளையும் உள்ளடக்கியது. சதுரங்கக் குதிரையில் ஊருக்கு வந்துவிட்டுத் திரும்புபவன், ஏறத்தாழக் கல்யாணி காட்டும் பெண்ணை மணந்துகொள்ளலாம் அல்லது குத்தாலம் காட்டும் பெண்ணை மணந்துகொள்ளலாம் என முடிவெடுத்துக்கொண்டு, ரயிலில் வரும்போது ஒரு மராத்தியப் பெண் சிறு குழந்தையைச் சகல முஸ்தீபுகளுடன் ரயிலில் அழைத்துவருவதைக் கண்டதும் சட்டெனக் குடும்ப வாழ்வு குறித்தான முடிவில் பின்வாங்குகிறான். “வாழ்க்கைப் பயணம் எளிமையாகவே இருக்கிறது. மராத்தியப் பெண்ணின் பயணம் போல எதற்கு மேலும் சிக்கலாக்கிக்கொள்ள வேண்டும்? இதென்ன உலக மகா பிரச்சனையா? தானென்ன டோடோப் பறவையின் கடைசிப் பேடையா? இந்த வம்சாவளி உலக மகா அபூர்வங்களின் ஒன்றா எப்பாடு பட்டேனும் காப்பாற்றித் தீர்வதற்கு?’ ஒரு பயணக் காட்சி நாராயணனின் வாழ்க்கை முடிவையே தீர்மானிக்கிறது.
சில அமானுட தருணங்கள், கனவுகள், ஆழ்மன சித்தரிப்புகள் மொத்த நாவலையும் அடுத்த தளத்திற்கு நகர்த்துவதாக உள்ளன. சதுரங்கக் குதிரையில் துல்ஜாப்பூருக்குச் சென்றுவிட்டு நாராயணன் காணும் வினோதமான கனவு, காமம், கல்யாணி, மலை மீது இருக்கும் உக்கிர அம்மனான துல்ஜாப்பூர் பவானி எனத் தர்க்கப்படுத்த முடியாத கலவை. அதே நாவலில் அசோக்குக்குப் பேய் பிடித்த கதை ஓர் அமானுட அனுபவத்தை அளிக்கிறது. இவை நாவலின் மைய ஒழுக்கிலிருந்து விலகியவை, ஆனால் வலுவானவை. மிதவையில் நினைவின் ஊடாகத் தான் கொன்ற நாயை சண்முகம் நினைவு கூரும் பகுதி ஒரு தனி சிறுகதை அன்பு திரிந்து வன்மமாக ஆகும். ஒரு பரிணாமத்தை நுண்மையாக விவரிக்கிறார். மிதவையின் கதைப் போக்கிற்குப் பெரிதாக எதையும் சேர்க்கவில்லை. ஆனால் இவை முக்கியமான பகுதிகளாக உள்ளன. வடிவ ரீதியாக நாஞ்சில் வரையறைகளைக் கடந்து தொடர்ந்து முன்நகர்கிறார் என்பதற்கான தடங்கள் இவை. எட்டுத்திக்கும் மதயானையிலும் திம்மனின் திருமணத்திற்குச் சென்றுவிட்டுக் குடிக்கும் நாட்டுச் சாராயம், அதன் பின்பான குழப்பங்கள் சூழ்ந்த கனவுப் பகுதியும் முக்கியமானது. மாமிசப் படைப்பில் வைரவன் சாமியின் கோமரத்தாடி மாலையப்பன்பிள்ளை காணும் கனவு தர்க்கத் தளங்களுக்கு அப்பாலான மிஸ்டிக் தன்மை உடையது. அதேபோல் மனகாவலன் சாய்ந்து கிடக்கும் கரையான் புற்றிலிருந்து முத்தாரம்மனைக் கண்டெடுக்கும் தருணம். ‘அருளும் சினமும் கலந்து தெறிக்கும் கண்களையும் கொண்ட செந்நாகம் படமெடுத்து நிற்கும் காட்சியும்’ ஒரு மிஸ்டிக் அனுபவம்தான்.
நாஞ்சிலின் புனைவுத்திறன் தொடர்ச்சியாக உணர்வு ரீதியான முடிச்சுக்களை இறுக்குவதில் வெளிப்படுகிறது. வாசகரைக் கதை மாந்தர்களுடன் உணர்வு ரீதியாகப் பிணைப்பது. அவர்களின் ஒவ்வொரு அவமானமும் தங்களுடையதாகத் தோன்றும். என்பிலதனை வெயில் காயும் நாவலில் தாத்தாவிடம் காசில்லாத சூழலில் கல்லூரிக்குச் செல்லாமல் சுடலையாண்டி மண் சுமக்கும் வேலைக்குச் செல்லும் அத்தியாயம் கச்சிதமான ஒரு சிறுகதை. தாத்தா இதை அறிந்து சீறுவது உணர்வுப்ப்பூர்வமான தருணம். இறுதியாகத் தொடர்பிலேயே இல்லாத அம்மாவழி மாமனை வேலைக்காகக் காணச்சென்று பத்துரூபாய் பெற்று அவமானத்துடன் திரும்பும் புள்ளியில் நாவல் முடிவடைகிறது. சதுரங்கக் குதிரையில் ஊரில் இறந்து போகும் அம்மாவின் சாவிற்குத் தாமதமாகச் செல்ல நேர்வதைப் பற்றி எழுதுகிறார். சாவின் துக்கம் ஒரு பக்கம் பிய்த்துக்கொண்டு இருந்தாலும், ‘போய்ச் சேர முடியாமல் காலைப் பிடித்து இழுக்கும் பொருளாதாரம் ஏற்படுத்தும் அவமானம்.’ நாராயணனைப் பெரிதாக வதைக்கிறது. தலைகீழ் விகிதங்களில் மாமனார் வீட்டில் விருந்துண்ணும்போது தன் வீட்டை, தாய் தந்தை, சகோதர சகோதரிகளை எண்ணிக் குற்ற உணர்வில் ஆழ்கிறான் சிவதாணு.
கதையின் மைய மாந்தர்கள், துணை மாந்தர்கள் மற்றும் உதிரி மாந்தர்கள் என அனைத்துச் சித்தரிப்புகளும் வலுவானவை. திருமணம் ஆகாத ஆனால் ஒய்வு பெறும் வயதில் இருக்கும் சதுரங்கக் குதிரையின் குட்டினோ நாவலில் முக்கியமான துணைப் பாத்திரம். ஓய்வுக்குப் பிறகு கோவாவில் அவனைச் சந்திக்கும்போது அவனுடைய இளவயது காதலியை மணந்துகொள்ள இருப்பதாகக் கூறி நாராயணனையும் திருமணம் செய்துகொள்ள வலியுறுத்துவான். கதை இறுதியில் மவுனமாக அறிமுகமாகி மவுனமாக மறைந்துபோகும் காதல் சமிக்ஞை அளித்த ராதா கேசவமூர்த்தி. ‘மிதவையில்’ வீட்டை விட்டு மூக்காண்டியாக ஓடிப்போய் என்.கே ராஜப்பாவாக நடிகராகத் தன்னை நிறுத்திக்கொண்ட சண்முகத்தின் பெரியப்பாவின் பாத்திரமும் சுவாரசியமான வார்ப்பு. அவரைப் பற்றி ‘வாழ்க்கையை எல்லாக் கோணங்களிலும் பெரியப்பா வாழ்ந்திருப்பதாகத் தெரிந்தது,’ என எண்ணுகிறான் சண்முகம். ஒருவகையில் அவரே அவனுடைய ஆதர்சம். அரும்பு மீசையுடனும் சந்தேகக் கண்களுடனும் சண்முகத்தை நோக்கும் சக பணியாளர் ஆச்சார்யா, பூனைக் குட்டியைத் தூக்கி வந்து பால் ஊற்றும் ரூபென் ஜோசெப், தங்க இடம் கொடுத்து ஆதரிக்கும் ஊர்க்காரக் கப்பற்படை வீரன் சுந்தரண்ணன், வாஞ்சையுடன் அன்னமிட்டு பம்பாயில் வேலை வாங்கிக் கொடுக்கும் அய்யர், சண்முகத்தின் குடிசை வீட்டிற்கு அருகில் வசித்து அவன் உடல் வேட்கையைச் சீண்டும் பருத்த உடல் கொண்ட அன்னம்மை, அரிசிக் கடத்தலில் சிக்கிச் சிறைசென்று திரும்பும் சகவாசியான செம்பகம் என ஒவ்வொரு பாத்திரமும் கச்சிதமான வார்ப்பு. எட்டுத்திக்கும் மதயானை முழுக்கவே சுவாரசியமான சிறிய கதை மாந்தர்களால் நிறைந்தவை. சோனாச்சலம், மல்லப்பா, லாரியில் ஏற்றிச் செல்லும் பெரியசாமி, ரமாகாந்த் சாப்பன் சேட், அவருடைய பாபி, பானுமதியக்கா, காவலர் ஜாங்ளே, நாதுராம் சேட், சுப்பையா, வரதராஜ முதலியாரை நினைவுப்படுத்தும் அண்ணாச்சி, மளிகைக்கடை நாடார், சாம்ராஜ் அய்யா, பூலிங்கத்தைப் போலவே வீட்டைவிட்டு ஓடி வந்த பரமு, பரமுவைத் தேடி வந்து பூலிங்கத்தால் மிரட்டப்பட்டு ரயிலேறிச் சாகும் களக்காட்டுக்காரன். அனைவருக்கும் தனித்த ஆளுமையும் அடையாளத்தையும் அளிக்க நாஞ்சில் நாடனால் இயன்றுள்ளது.
நாஞ்சில் நாடனின் அத்தனை நாவல்களும், நான் வாசித்தவரை அத்தனை கதைகளும், படர்கையில் எழுதப்பட்டவைதான். தன்னிலையில் எழுதச் சாத்தியமான கதைக்களங்களும்கூடப் படர்க்கையில்தான் எழுதப்படுகின்றன. எது அழகியல் பிழை எனக் கருதப்படுகிறதோ அதைப் பிரக்ஞைப்பூர்வமாகத் தொடர்ச்சியாக நிகழ்த்தும்போது அதுவே பாணியாகவும், தனித்துவமாகவும் ஆகிவிடும். நாஞ்சிலின் படைப்புகளில் சற்றே உரத்து ஒலிக்கும் ஆசிரியக் குரலை அப்படித்தான் மதிப்பிட முடியும். சில சிறுகதைகளிலும், நாவல்களில் சில தருணங்களிலும் அவை இடராகப் போன சமயங்களும் உண்டு. சட்டெனத் தோன்றும் ஓர் உதாரணம் மாமிசப் படைப்பில் சாந்தப்பனைப் பற்றிய குறிப்பில், அவன் கள்ளை உறிஞ்சும்போது அடையும் இன்பத்தை ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலக்கும் பேரின்பத்துடன் ஒப்பிடுவது நிரடியது. நாஞ்சிலின் முதல் நாவலான ‘தலைகீழ் விகிதங்கள்’ சற்று உரத்து ஒலிக்கும் ஆக்கம்தான். அதேபோல் அந்த நாவல் முடிவதோடு கதையும் முடிகிறது. முடிவிலிருந்து நல்லகதை திறந்து வளர்ந்துகொள்ளும் என்பது பொதுவான விமர்சனக் கூற்று. குடும்பம் அல்லாத வட்டத்தில் அறிவார்ந்த பெண் நட்பு என்பதும் கூட ஒரு காலகட்டத்தின் பொது கற்பனையாக இருக்கக்கூடும் என காந்திமதியுடனான உறவை வகுத்துக்கொள்ளும்போது தோன்றியது. எட்டுத்திக்கும் மதயானை முடிவும் விமர்சனத்திற்கு உரியதே. காதலித்தவளின் (இந்த நாவலை பொறுத்தவரை காதல் எனச் சொல்லமுடியாது. சேர்ந்து கிசுகிசுக்கப்பட்ட எனச் சொல்லலாம்) திருமண வாழ்வு ஏதோ ஒருவகையில் சிக்கலில் இருப்பதாக எண்ணுவதும் தன்னை ஒரு மீட்பராகவும் கருதிக்கொள்வதும் ஆண் மனதின் விருப்பக் கற்பனை. அதே மனநிலையை பூலிங்கமும் வெளிப்படுத்துகிறான். என்பிலதனை வெயில் காயுமில் கைவிட்டுப்போன ஆவுடையம்மாதான் எட்டுத்திக்கும் மதயானையின் செண்பகமாக வருகிறாள் எனத் தோன்றுவதுண்டு. ஆச்சரியமாக வலுவான பெண்பாத்திரங்கள் ஏதுமற்ற நாவல் என மாமிசப் படைப்பைச் சொல்லலாம். நாஞ்சில் அடிப்படையில் அனுபவச் செழுமையிலிருந்து உருவாகும் ஆக்கங்களை மேலானது எனக் கருதுபவர். அவருடைய பெரும்பாலான கதைகள் தான் அனுபவித்த அல்லது வாய்மொழியாகக் கேட்ட அனுபவப்பின்புலத்தைக் கொண்டவை. ஜெயமொகன் மூத்த எழுத்தாளர் ஒருவரிடம் சொன்ன கருத்து ஒன்றுண்டு. ‘நீங்கள் அறிந்ததைச் சொல்ல கதை எழுதுகிறீர்கள் நான் அறியாததை அறிந்துகொள்ள எழுதுகிறேன்.’ அனுபவ அடிப்படையிலான எழுத்துக்கு அனுபவமே பலமும் எல்லையும்கூட. ஆனால் இவை அனுபவ அடிப்படையிலானவைதானே எனக் குறைத்து நோக்கும் பார்வையும் தமிழில் சிலருக்கு உண்டு. இத்தகைய ஆக்கத்தின் மிகப்பெரிய பலம் என்பது இவையாவும் அனுபவத்திலிருந்து விளைந்தவை எனும் பாவனையைச் சூடிக்கொள்வதுதான். உண்மையில் எது அனுபவம் எது அனுபவத்திலிருந்து விளைந்த கற்பனையின் நீட்சி, எவை முற்றிலும் கற்பனை எனப் பிரித்தறிய முடியாது. அது எழுத்தாளருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மாமிசப் படைப்பு அவருடைய காலத்திற்கு முன்பு நடந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது என்றாலும் அதை அவர் காலத்தின் பின்புலத்துடன் பொருத்தியே மிகுந்த கவனத்துடன் எழுதியிருப்பார். அவ்வகையில் நிலபரப்பு சார்ந்து சில அனுபவங்களைக் கொண்டு அனுபவ வட்டத்தை மீறி எழுந்த ஆக்கம் என எட்டுத்திக்கும் மதயானையைச் சொல்லலாம். அடிப்படையில் அது ஒரு சாகசத்தன்மை கொண்ட நாவலும்கூட. அனுபவங்கள் எழுத எழுதத் தீர்ந்துவிடும். ஆனால் நாஞ்சில் அந்த எல்லையை வேறொரு வகையில் கடக்கிறார். நாஞ்சிலில் ஒட்டுமொத்தப் படைப்புலகைக் காணும்போது ஒரே அனுபவம் பல்வேறு சாத்தியங்களால் வெவ்வேறு கதைகளாகப் பரிணாமம் கொள்வதைக் காண முடிகிறது. அதற்கோர் உதாரணம் என செண்பகம், ஆவுடையம்மாளைச் சொல்லலாம். சிறுகதைகளில் ‘தொல்குடி’ யும் ‘அன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது’ ஒரே கதையின் இருவேறு கோணங்கள். ‘பேய்க் கொட்டு’ கதையின் நிகழ்வு சதுரங்கக் குதிரையில் நினைவுகூரப்படுகிறது. சதுரங்கக் குதிரையில் வரும் ‘சலாவுதீன்’ பற்றி எழுதும்போது ‘அவரிடமுள்ள எந்தப் பொருளையும் “இது நன்றாக இருக்கிறது” என்று சொல்லிவிடக் கூடாது. “எடுத்துக்கொண்டு போ” என்பார், அது உபசாரத்துக்குச் சொல்வது அல்ல என எழுதுகிறார். சலாவுதீன் கான் சாகிப்பாகப் பரிணாமம் கொள்கிறார். சதுரங்கக் குதிரையின் ராகவேந்திர ராவுடன் இரவு தங்கும்போது ஓரினச் சேர்க்கையாளரோ என அஞ்சி அது பற்றிப் பேசிக்கொள்ளும் பகுதி கான்சாகிப் கதையின் அதே மாதிரியான உரையாடலுடன் பொருந்திப் போவது. மாமிசப் படைப்பின் குண்டூனி குற்றாலம்பிள்ளை தலைகீழ் விகிதங்களின் கோலப்பப்பிள்ளையுடன் இணைவைக்கப்பட வேண்டியவர் தலைகீழ் விகிதங்களில் சிவதாணுவின் நண்பன் கந்தசாமியுடன் உறவில் இருக்கும் ஏற்கனவே திருமணமான கல்யாணி ஒரு சுவாரசியமான பாத்திர வார்ப்பு. பரிவுடன் அவளே பெண் பார்த்துக் காதலனுக்குத் திருமணத்தை முன்நின்று நடத்துகிறாள். முதல் நாவல் கந்தசாமி- கல்யாணியின் வேறொரு நீட்சிதான் அண்மைய நாவலான எட்டுத்திக்கும் மதயானையில் பூலிங்கம்- சுசீலா உறவு. சுசீலா திருமணம் செய்துகொண்டு வந்தபோது பூலிங்கத்திற்கு ஏழு வயது. பிள்ளைப்பேறு இல்லாத அவள் பூலிங்கத்தின் வாரிசைப் பெற்றெடுக்கிறாள். என்பிலதனை வெயில் காயும் நாவலில் சுடலையின் முதல் பாலியல் அனுபவம் திரையரங்கில் நிகழ்வது சொல்லப்படுகிறது. ஏறத்தாழ இதே போன்ற அனுபவத்தைதான் எட்டுத்திக்கும் மதயானையில் திம்மனின் கல்யாணத்திற்கு நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்திருக்கும்போது திம்மனின் அக்கா கோமதியிடம் அடைகிறான் பூலிங்கம். இதே நாவலில் பூலிங்கத்திற்கும் பானுமதிக்கும் இடையிலான உறவு எதுவாகவும் பரிணாமம் கொள்ளாமல் பூடகமாகவே கடத்தப்படுகிறது. பொதுவாகத் திருமணத்திற்கு வெளியேயான உறவுகள் மிகுந்த கரிசனத்துடனேயே நாஞ்சில் புனைவுகளில் அணுகப்பட்டுள்ளன. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் இருவரின் ஓசையைச் சாலில் கேட்கும்போது பூலிங்கத்திற்குப் பாவம் எனத் தோன்றியது. எல்லோருக்கும் எல்லாமும் தேவையாய் இருக்கிறது எனும் புரிதலுடன் உறவு மீறல்களைக் கடக்க முடிகிறது. மாமிசப் படைப்பில் விக்கிரமசிங்கத்திற்கும் அவருடைய அணுக்க வேலையாளான சாந்தப்பனின் மனைவிக்கும் இடையிலான உறவை ஊரறிய வெளிப்படுத்திக் கணக்கு தீர்த்துக்கொள்வான் கந்தையா.
பலவேசம்பிள்ளை, கடுவாய் கங்காதரம் பிள்ளை, விக்கிரமசிங்கம் பிள்ளை, சொக்கலிங்கம் பிள்ளை ஆகியோர் ஏறத்தாழ ஒரே வார்ப்பு. ரயிலில் புட்டி விற்றுச் சிறை செல்லும் திம்மனின் அனுபவத்திற்கு நெருக்கமானதுதான் மிதவை செம்பகம் அரிசி திருடிச் சிறை சென்று மீள்வது. அல்லது செம்பகம் பூலிங்கத்தின் முதல் வடிவம். பென்கர் எனும் பெயரில் மிதவையில் அறிமுகமாகும் யூதர் சதுரங்கக் குதிரையில் மீள வருகிறார். படிப்பில் ஆவுடையம்மாவுடன் இருக்கும் போட்டிதான் ஆச்சார்யாவிடம் பணியில் உள்ளது. மிதவையின் பெரியப்பா- பெரியம்மாவும் என்பிலதனை வெயில் காயுமின் ஆத்தா தாத்தாவும் ஏறத்தாழ ஒரேநிறம்.
மிதவையை வாசிக்கும்போது தோன்றியது பெருநகரத்தில் ‘சன்டாசுக்கும்’ சாப்பாட்டிற்கும் அலைந்துகொண்டே இருக்கிறான் சண்முகம். ஆனால், யோசித்துப் பார்த்தால், இடம்பெயரும் மனிதனுக்குள்ள மிக முக்கியமான பிரச்சனைகள் இவைதான் என்று தோன்றுகிறது. குறைந்த செலவில் நல்ல உணவைத் தேடி பம்பாய் முழுவதும் அலைகிறான். தண்டவாளம், வெட்டவெளி, தமிழ் மையம், ரயில்நிலையம் என ‘சன்டாசுக்குப்’ போக சுகாதாரமான இடத்தைத் தேடியும் அலைகிறான். என்பிலதனை வெயில் காயும் நாவலில் முழுக்க நனைந்தபோது இயல்பாக வறுத்த காணமோ பயிறோ சாப்பிட்டால் எப்படி இருக்கும் இருக்கும் என எண்ணுகிறான் சுடலை. ‘கருப்பட்டிக் காபிக்கேன்றே ஒரு மணம். மிளகும் கொத்து மல்லியும் சுக்கும் சீரகமும் தட்டிப் போட்டுக் கருப்பட்டி சேர்த்து கொதித்த பின் பாலூற்றி ஆற்றி..’ என இதுபோன்று வெவ்வேறு உணவுகளை, அதன் செய்முறையை, ருசியை, விவரித்தபடி இருக்கிறார். பசித்தவனுக்குப் பிரம்மம் அன்னத்தின் வடிவில் காட்சியளிக்கும் என்பதொரு மூதுரை. சடங்கு சமய ஆச்சாரங்களைப் பசி பொருட்படுத்தாது. வள்ளலார் பசி தீர்ப்பதே பிறவிப்பயன் எனக் கருதியவர். அடிப்படையில் தமிழ் சித்தர்கள் மரபு என்பதோர் அராஜக மரபு. நாஞ்சில் தன்னுடைய பாத்திரத்திற்குக் கும்ப முனி என பெயர் வைத்தது தற்செயல் அல்ல.
சூளாமணி பாடல் பற்றி முன்பு நாஞ்சில் ஒரு கட்டுரை எழுதினார்.
ஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழி
நானவிர் பற்றுபு நாலுமொருவனோர்
தேனின் அழிதுளி நக்குந் திறத்தது
மானுயர் இன்பம் மதித்தனை கொள்நீ
இந்தக் கட்டுரைக்கு இப்படியான ஒரு தலைப்பு இடுவதற்கும் நாஞ்சில்தான் காரணம். துரத்திவரும் யானையிடமிருந்து தன்னைக் காத்துகொள்ள அவன் விழும் ஆழ்குழியில் நச்சுப் பாம்பொன்று உள்ளது. கொடியைப் பற்றிக்கொண்டு மேலேறும்போது தேனடையிலிருந்து சொட்டும் தேன் நாக்கில் விழுகிறது. மானுட வாழ்வில் இன்பம் என்பது அத்தகையது என்றாகப் பொருள் கொள்ளப்படும் பாடல். வறுமைதான், அலைக்கழிப்புதான், யாவற்றையும் உண்டு அரிக்கும் வடவத்தீ பற்றி எரிகிறதுதான். ஆனால் அவனுக்கு வெறும் பசி மட்டும் இல்லை. வயிற்றுக்கு ஈவது மட்டும் போதாது. பசி என்பது வயிற்றில் குடிகொள்வது மட்டுமில்லை, அது உடலில், மனதில் குடிகொள்வதும்கூட. நுண்ணுணர்வும், அழகுணர்வும் அருளப்பட்டிருக்கிறது. பசியும், வறுமையும், யானையும், பாம்பும், காலுக்குக் கீழே பிளந்த வாயுடன் காத்திருக்கும் பாதாளமும் தேனுக்கோ அதன் ருசிக்கோ அவனைத் தகுதியற்றவனாக ஆக்கிவிடுமா என்ன?
மாமிசப் படைப்பில் தோட்டத்தை நாசப்படுத்தியவரைப் பழி வாங்க வேண்டும் எனும் வஞ்சத்துடன் கந்தையா அலைகிறான். ஆனால் அவன் உருவாக்கிய புதிய தோட்டம் ‘நெஞ்சப் புண்ணை வாழைத் தோகைகளும் தென்னை மடல்களும் அன்னத்தின் அடிவயிற்றுத் தூவி போல் மெதுவாக நீவிவிட்டன’ படைப்பூக்கம் எனும் அருமருந்து. அத்தனை அவமானங்களையும் நெருக்கடிகளையும் கடந்து பார்வதியும் மற்ற எல்லோரையும் போல் ஒரு பெண்தானே, எல்லா தம்பதியரையும் போல ஏற்ற இறக்கங்களால் ஆனதுதானே தன் வாழ்வும் எனப் புரிந்துகொள்கிறான். சிறுமையுடனும், பொறாமையுடனும் கவிழ்க்கக் காத்திருக்கும் ஆச்சார்யா மீது சண்முகத்திற்கு யாதொரு வன்மமும் இல்லை. புனைவின் ஊடாக மறுப்பக்கத்தின் நியாயத்தை, அவர்களின் வாழும் உரிமையை அங்கீகரிப்பதும் ஏற்பதுமே பெரும் ஆன்மீகத் தருணம் எனச் சொல்லலாம். அவருடைய ஒரு சிறுகதையில் ‘உணவு என்றில்லை, எதுவாயினும் புதியனவற்றை முயன்று பார்க்காதவன் உச்சங்களை அடைய இயலாது’ என எழுதியிருப்பார். சண்முகத்தின் பெரியப்பா போல் வாழ்க்கையை எல்லா கோணத்திலிருந்தும் வாழும் தடையற்ற ஏற்புடைய வாழ்வு. ஒருவகையில் இந்த வரியே அவருடைய படைப்புலகின் ஆன்மீக மய்யம் எனத் தோன்றுகிறது. பசி ருசியறியாது எனச் சொல்வார்கள். நிற்க. பசித்தவனுக்கும் ருசியுண்டு என்பதே நாஞ்சில் கண்டடைவது.
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…