அறிவிலுமேறி அறிதல் – 6: கவிதை – கால வெளி

2 நிமிட வாசிப்பு

கவிதையில் காலம் மற்றும் வெளி எவ்வாறு இயங்குகிறது?

காவியம்

‘சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது’

– பிரமிள்

இதில் கவியநுபவம் ஒரு காலத்தில் நிலைத்த (Suspended in time) தன்மையை கொண்டுள்ளது.

டேவிட் அட்டன்பரோவின் ‘The Amber Time Machine’ எனும் ஆவணப்படத்தில் 4:20 ஆம் நிமிடத்தில் ‘காவியம்’ கவிதையை நினைவூட்டக்கூடிய ஒரு காட்சி வருகிறது. காற்றினில் மிதந்திறங்கும் ஒரு இறகு. இதை கவியநுபவத்தின் நிகழ் கண உயிர்ப்பாக, வேகமாக நாம் கொள்ளலாம்.

செறிந்த பிரக்ஞையால் சொல் இணைவுகளால் கவிதையில் காலமும் வெளியும் தீட்டப்படுகிறது.

சிறகிலிருந்து பிரிந்த இறகும், காற்றின் தீராத பக்கங்களும், பறவையின் வாழ்வும் சொல்லில் செதுக்கிய விக்ரகங்களாக கால வெளியில் நிலைகொள்கின்றன.

பைன் மர பிசினில் சிக்குண்ட உயிர் மற்றும் ஜடங்கள், மிகச் செறிவான நுண்மைகளுடன் ஆம்பர் (Amber) புதைவடிவமாக (Fossil) பல மில்லியன் வருடங்கள் காலத்தில் நிலைகொள்கின்றன (Suspended in time)

*

கவிதையின் வெளி

கவியநுபவம்>கவிதை>வாசிப்பு>வாசிப்பநுபவம் எனும் தொடராகக்கொண்டால்,

ஒரு இலையிலிருந்து மரத்தை, மரம் பறவைகளை, பறவைகள் வானத்தை, வானம் அனைத்தையும் என வாசிப்பநுபவம் ஒரு கவிதைவாசிப்பில் நிகழக்கூடும். இது கவிதையை வாசிக்கும் பொழுது நிகழும் ஒரு மடல் விரியும் அநுபவமாக (Unfolding process) கொள்ளலாம்.

(பார்க்க: Amber Time Machine 15:53)

‘மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
அப்பறவைகள் வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடும்’

எனும் தேவதேவனின் கவிதை வரிகள் நினைவில் எழுகிறது.

இதற்கு இணையான இன்னொரு கவிதையும் இங்கே,

“ஒரு புல்லின் உதவி கொண்டு
பூமியிலொரு பச்சைக் கம்பளம் விரித்தேன்
ஒரு மரக்கிளையின் உதவிகொண்டு
புள்ளினங்கள் கொஞ்சுமோர்
பள்ளத்தாக்கை எழுப்பினேன்
ஒரு கூழாங்கல்லின் உதவிகொண்டு
மலையடுக்குகளையும் அருவிகளையும் உருவாக்கினேன்
ஒரு தேன்சிட்டின் ஆலோசனை கொண்டு
விண்ணிலோர் மாளிகை அமைத்தேன்
ஒரு கண்ணீர்த் துளி கொண்டு
வானமெங்கும் கார்மேகங்களைப் படரவிட்டேன்”

– தேவதேவன்

பிரக்ஞைபூர்வமாக நாம் கவிதையின் காலம் மற்றும் வெளியை பேச முற்பட்டாலும், கவிதை நம்மை இட்டுச்செல்வது ‘கணத்தின் மொக்கவிழ்ந்தால் காலாதீதம்’ ‘மின்னற்பொழுதே தூரம்’ எனும் அநுபவ அறிதலுக்கு என்றே நினைக்கிறேன்.


புகைப்படம்: ஶ்ரீநாத்

மேலும் பார்க்க

David Attenborough: The Amber Time Machine

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்