திரைகடலுக்கு அப்பால் 2: அசடன்

13 நிமிட வாசிப்பு

1

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் வெளியான பல இலக்கியப் படைப்புகளில் கிறிஸ்து புதிய வெளிச்சத்துடன் மேலெழுந்தார். மதத்திற்கு வெளியே கிறிஸ்துவையும், நவீன மனிதனின் மனதில் அவர் ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆராய்ந்து எழுதப்பட்ட பல படைப்புகள் இக்காலங்களில் வெளியாயின. என் வாசிப்பில் இவ்வகையான படைப்புகளை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்துவேன். முதல் வகை நாவல்கள் கிறிஸ்துவின் மேன்மைகள் மற்றும் அவரை அறிந்துகொள்வதால் மனிதனுக்குக் கிடைக்கும் ஆன்மிக வளர்ச்சி குறித்துப் பேசுபவை. ஒருவகையில் கிறிஸ்துவை நேரடியாகவோ மறைமுகமாகவோ உயர்வாகவும், கவித்துவமாகவும் செறிவாக்கிக்காட்டுபவை. முதல் பார்வைக்கு இவ்வகை படைப்புகள் வாசகருக்கு வியப்பையும் எழுச்சியையும் அளித்தாலும், அவற்றின் தாக்கம் என்பது தற்காலிகமாகவும் எல்லைக்குட்பட்டதாகவுமே இருக்கிறது. அவற்றில் வாசகன் மேலதிகமாக உட்புகவோ அல்லது அவை சார்ந்து தன் வாழ்வைத் தீவிரமாக விசாரணை செய்து கொள்ளவோ அப்படைப்புகளில் இடமில்லை. அவற்றின் வெளி என்பது மிகக் குறுகியதாகவே இருக்கிறது. இந்த முதல் வகைப் படைப்புகளுக்கு மிகச்சிறந்த உதாரணங்களாக நான் முன்வைக்க விரும்புவது, பேர்லாகர் க்விஸ்ட்டின் “அன்பு வழி”, செல்மா லாகர்வாவ்-இன் “தேவமலர்”, “மதகுரு” போன்ற படைப்புகள். இவற்றை வாசிக்கையில் வாசகனுக்கு மகத்தான ஆன்மிக எழுச்சி கிடைக்கிறது. ஆனால் கடலில் சட்டென ஒரு பேரலை எழும்பி மீண்டும் நீருக்குள் மறைவது போல இந்த எழுச்சி தற்காலிகமானதாகவும் இருக்கிறது. இன்னொரு கோணத்தில், இந்த நாவல்களை நவீன நீதி போதனைக் கதைகளாக அல்லது நவீன பக்திக் கதைகளாகவும் வாசிக்க இயலும்.

இரண்டாம் வகை நாவல்கள் கிறிஸ்துவின் மகத்துவத்தைப் பேசாமல், மனித வாழ்வில் கிறிஸ்து நிகழும் தருணங்களை அடையாளப்படுத்தியும், அன்றாட வாழ்வில் மனிதனுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையில் அதிகரித்துவரும் தூரத்தையும் பேசுபொருளாகக் கொண்டவை. அதில் ஆகச்சிறந்த படைப்புகள் கிறிஸ்துவை கிறிஸ்து என்ற அடையாளத்திலிருந்து நீக்கி, பக்தி சார்ந்த எந்தவிதமாக மேல்பூச்சுகளுமின்றி, அவரை ஒரு சாதாரண மனிதனாகப் பார்ப்பவை. விமர்சனபூர்வமாக அவரை அணுகுபவை. அதன் மூலம் இந்த நவீன வாழ்வைப் புரிந்துகொள்ள முயல்பவை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், நவீன வாழ்வில் கிறிஸ்துவை ஒரு புதிய வெளிச்சத்தோடு பார்த்து அதன் மூலம் அவரை மறுவரையறை செய்பவை. இவ்வகை நாவல்களுக்கு உதாரணங்களாக, தஸ்தாயெவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்”, “அசடன்”, “கரமசோவ் சகோதரர்கள்”, நிகாஸ் கஸண்ட்ஸகீஸ்-இன் “கிறிஸ்துவின் இறுதிச்சபலம்” போன்றவற்றைச் சொல்லலாம்.

மேற்சொன்ன இரண்டாம் வகை நாவல்களே நவீன வாசகனுக்கு அணுக்கமானதாகவும், நவீன வாழ்க்கை சார்ந்து மேலதிக வெளிச்சங்களைப் பெற்றுக்கொள்ள முடிவதாகவும் உள்ளது. இந்தப் பின்புலத்தில் வைத்து வாசிக்கையில் அசடன் நாவல் ஒரு வாசகனிடம் நிகழ்த்த முற்படுவதென்ன என்பதைப் பார்க்கலாம்.

2

அசடன் நாவலைப் பலரும் கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் இடையிலான மோதலைக் குறியீட்டு வடிவில் சொல்லும் நாவல் என்றே வகைப்படுத்துகிறார்கள். உண்மையில், நாவலை இவ்வகை வாசிப்பு எளிமைப்படுத்தி குறுக்குகிறது என்றே தோன்றுகிறது. இவ்வகை வாசிப்புக்கு நாவலில் இடமிருந்தாலும் நாவலின் வீச்சு என்பது இந்தக் குறுகிய எல்லையைத் தாண்டி பலதளங்களில் விரிவடைகிறது. முதல் தளத்தில் இந்த நாவல் கிறிஸ்துவின் உருவகமான மிஷ்கினுக்கும் சாத்தானின் உருவகமான ரோகோஸினுக்கும் நஸ்டாஸியாவை முன்வைத்து உருவாகும் ஒருவகையான உரிமைப்போரைச் சொல்வதாகப் பார்க்கலாம். அதற்கு அடுத்த தளத்தில் நஸ்டாஸியாவை ஏசுவின் கையில் இருக்கும் வழிதவறிய ஆட்டுக்குட்டியாகவும், அதை மீண்டும் மீண்டும் தன் கைகளில் ஏந்தத் தவிக்கும் ஏசுவின் உருவகமான மிஷ்கினின் போராட்டமுமாகப் பார்க்கலாம். அதற்கும் அடுத்த தளத்தில் நவீன ஏசுவின் உருவகமான மிஷ்கினுக்கும் அன்றைய ருஷ்ய சமூகத்துக்கும் இடையில் இருக்கும் புரிந்துணர்வற்ற ஒவ்வாமை சார்ந்து வாசிக்கலாம். இன்னொரு தளத்தில் முழுக்க முழுக்க இந்நாவலை நஸ்டாஸியாவின் கோணத்தில் இருந்து வாசிக்கலாம். உண்மையில் அவளுடைய சிக்கல்கள் என்னென்ன, ஏன் மீண்டும் மீண்டும் அவள் இரு எதிரெதிரான முனைகளுக்கிடையே ஊசலாடுகிறாள் என்ற கோணத்தில் வாசிக்கலாம். கிறிஸ்துவும் சாத்தானும் ஏன் நண்பர்கள் போலிருக்கிறார்கள் என்ற கோணத்திலும் நாவலை வாசிக்கலாம். இப்படி எண்ணற்ற கோணங்களில் வாசிப்பதற்கான வெளியை இந்த நாவல் தனக்குள் ஏற்படுத்தியபடி இருக்கிறது.

நான்காண்டுகள் சுவிட்ஸர்லாண்டில் தன்னுடைய வலிப்பு நோய்க்கு சிகிச்சை எடுத்துவிட்டு முதன்முதலில் ருஷ்யாவின் பீட்டர்ஸ்பெர்க் நகருக்குள் மி‌ஷ்கின் பிரவேசிப்பதிலிருந்து நாவல் துவங்குகிறது. ரயிலில் ரோகோஸினையும் லெபதேவையும் பார்க்கிறான். மிஷ்கின் என்ற இந்த கதாபாத்திரம் உலக இலக்கியத்தில் அமரத்துவம் பெற்றுவிட்டது. காரணம், அவன் ஒரு கள்ளங்கபடமற்ற, தூய்மையான ஆத்மாவாக, கூடவே பிரிக்கமுடியாத அசட்டுத்தனமுமான பாத்திரமாக நாவலில் காட்டப்படுவதுதான். உண்மையில், நாவலின் பிற கதாபாத்திரங்கள் யாவரும் இவற்றையெல்லாம் அவனிடம் அவ்வப்போது சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். தூய்மையான அறியாமை மற்றும் கள்ளங்கபடமற்ற இவ்வகை கதாபாத்திரங்கள் சமூகத்தின் பார்வையில் அசடர்களாகவும், ஏமாற்றுவதற்கான எளிய இலக்குகளாகவும்தான் பார்க்கப்படுகிறார்கள். இந்த நாவலிலும் மி‌ஷ்கின் ஒரு இளவரசனாக, செல்வந்தனாக இருப்பதால்தான் ஓரளவு சமூகம் அவனைக் கண்டுகொள்கிறது, இல்லையேல் அவனுக்குக் கிடைக்கும் இந்தக் குறைந்தபட்ச கவனிப்பாவது கிடைக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

என் வாசிப்பில் மிஷ்கினோடு ஒப்பிடத்தக்க பாத்திரங்கள் என ஐசக் பாஷவிஸ் சிங்கரின் ‘முட்டாள் கிம்பெல்’ மற்றும் டால்ஸ்டாயின் ‘அல்யோஷா’வையும் குறிப்பிடுவேன். எவர் சொல்வதையும் நம்பிவிடுபவன் கிம்பெல், கட்டளைகளுக்குக் கீழ்படிந்தே வாழ்வை முடித்துக்கொள்பவன் அல்யோஷா. இவர்களை விடவும் மனதளவில் முதிர்ச்சியடைந்தவன் மிஷ்கின். பல நேரங்களில் அவனுக்கு சரி எது தவறு எது எனத் தெரிந்திருக்கிறது. ஆயினும் புத்தி சொல்வதைப் பின்பற்றாமல் மனம் சொல்வதைப் பின்பற்றுவதால்தான் அவன் அவஸ்தைப்படுகிறான். அவனால் அப்படித்தான் இருக்க இயலும். இந்த ஒரு இயல்பு மட்டுமே பிற கதாபாத்திரங்களிலிருந்து அவனைப் பிரிக்கிறது. மனிதனின் நடவடிக்கைகளைப் பார்த்து அதனூடாக அவனை மதிப்பிடும் பிற கதாபாத்திரங்களிருந்து, அந்த மனிதனின் நடவடிக்கைகளின் தோற்றுவாயான மனதைப் பார்த்து அதன்மூலம் அவனை எடைபோடும் மிஷ்கின் தனித்துத் தெரிகிறான். கன்யாவின் வீட்டில் நஸ்டாஸியாவினால் கூச்சலும் குழப்பமும் ஏற்படும்போது, அதுவரை தான் பழகியிராத நஸ்டாஸிவைப் பார்த்து, “உன் இயல்பு இதுவல்ல” என்று அவனால் சொல்லமுடிவது பிறர் ஊடுருவிப் பார்க்க இயலாத அவளது மனத்தை மிஷ்கினால் எளிதாக ஊடுருவிப் பார்க்க இயல்வதனால்தான்.

மிஷ்கினால் ஒருவரையும் வெறுக்க இயலவில்லை. இந்தக் குணமே அவனைப் பலரும் விரும்புவதற்கு காரணமாக இருக்கிறது. அவனால் எல்லோரையும் விரும்பவும், மன்னிக்கவும் இயல்கிறது. ரோகோஸினைக் கூட அவனால் வெறுக்க இயலவில்லை. அவனை ஒரு நண்பன் என்ற இடத்தில்தான் கடைசிவரை வைத்திருக்கிறான். ரோகோஸின்தான் மி‌ஷ்கினை ஒரு எதிரியாகவே பாவிக்கிறான்.

மிஷ்கினை கிறிஸ்துவின் மனித வடிவாகவும் நஸ்டாஸியாவை அவர் கையில் இருக்கக்கூடிய வழிதவறிய ஆட்டுக்குட்டியாகவும் இந்நாவலில் பார்க்க இடமிருக்கிறது. நஸ்டாஸியாவை வாசகர்களாகிய நாம் ஒரு வெள்ளந்தியான ஆட்டுக்குட்டியாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மிஷ்கின் அவளை அவ்வாறுதான் பார்க்கிறான். அவனை மிக விரும்பும் ஒரு குடும்பப் பெண்ணான அக்லேயாவை விட்டு ஏன் அவன் நஸ்டாஸியாவின் பின் போக வேண்டும்? நஸ்டாஸியாவின் மீதான கருணை அவனுக்கு நாவலின் துவக்கத்தில் அவளுடைய புகைப்படத்தைப் பார்த்ததுமே ஏற்பட்டுவிடுகிறது.

மிஷ்கின் நஸ்டாஸியாவை நாவலின் எந்த இடத்திலும் காதலிக்கவில்லை. அவன் உண்மையில் காதலிப்பது அக்லேயாவைத்தான். நாவலின் பல இடங்களில் அவன், தான் நஸ்டாஸியாவைக் காதலிக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறான். நஸ்டாஸியாவின் மீதான இரக்கமும் கருணையும்தான் அவனை அலைக்கழிக்கிறது. மாஸ்கோவில் இருந்து மீண்டும் அவன் பீட்டர்ஸ்பெர்க் வருவது கூட அவள் மனம் ஒரு நிலையில் இல்லை, அவளுக்கு உதவி தேவைப்படுகிறது, அவள் வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறாள் என அவளிடம் சொல்வதற்குத்தான். அவளிடம் உள்ள காதலால் அவளை அவன் தேடிவரவில்லை. இரக்கத்தினால்தான் அவன் தேடிவருகிறான். ரோகோஸினை அவனது வீட்டில் சந்திக்கையிலும் இதை அவனிடம் தெரிவிக்கிறான்.

வழி தவறிய ஒரு நோயாளியை குணப்படுத்த விரும்பும் ஒரு மருத்துவரின் மனநிலையில்தான் மிஷ்கின் நஸ்டாஸியாவை அணுகுகிறான். முன்னர் சுவிட்ஸர்லாண்டில் அவன் ஆதரவளித்த இளம்பெண் மேரியை நஸ்டாஸியா நினைவுபடுத்தியதால் மேரியைப் போல நஸ்டாஸியாவையும் ஆற்றுப்படுத்தலாம் என்ற எண்ணம் அவனுள் தோன்றியிருக்கலாம். இதுவே நஸ்டாஸியாவின் மீது அவனுக்கு மிதமிஞ்சிய இரக்கம் தோன்ற காரணமாக இருந்திருக்கலாம். யெவ்கெனி பாவ்லோவிச் ஒருவன் மட்டுமே மிஷ்கினின் உளவியலைச் சரியாகப் புரிந்து கொள்கிறான்.

நஸ்டாஸியாவின் மீது மிஷ்கின் காட்டும் இந்த மிதமிஞ்சிய கருணைக்காக அவன் அளிக்கும் விலை அதிகம். தன்னுடைய மன அமைதி, மரியாதை முதற்கொண்டு இறுதியாக தன்னுடைய காதல் வரை. எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய சுயநினைவையும் இழந்து எங்கிருந்து வந்தானோ மீண்டும் அந்த இருண்ட புள்ளிக்கே திரும்புகிறான். ஆட்டுக்குட்டியைப் பின்தொடர்ந்து போகும் ஏசு முடிவில் தன்னையே இழக்கிறார்.

ஒருவகையில் நஸ்டாஸியாவுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை மிஷ்கின் முன்னுணர்வதாலேயே மீண்டும் மீண்டும் அவளைப் பின்தொடர்ந்து செல்கிறானோ என்றும் தோன்றுகிறது. ரோகோஸினிடம் அவளைத் தனியாக விட்டுவிடக் கூடாது என்ற பதைபதைப்பு மிஷ்கினிடம் இருந்துகொண்டேயிருக்கிறது. அதைத் தவிர்ப்பதற்காகவே அவன் மீண்டும் மீண்டும் நஸ்டாஸியாவைத் தேடிச் சென்றபடியிருக்கிறான். தன்னுடைய திருமண நாளன்று அவள் ரோகோஸினிடம் ஓடிவிட்ட போதும், அவள் மீதான இரக்கத்தினால்தான் அவன் அவர்களை தேடியலைகிறான். இறுதியில், எது நிகழும் என்று எண்ணினானோ, எதைத் தவிர்க்க வேண்டுமென்று அவன் முயற்சித்தானோ, அதுவே நிகழ்ந்துவிடுகிறது.

நாவலின் இந்த இறுதிக்கட்டம் மிகவும் அமைதியாகக் கடந்து செல்கிறது. நஸ்டாஸியாவின் பிரேதத்தைப் பார்த்தும் கூட அவன் ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை, ரோகோஸினை வெறுக்கவில்லை. மாறாக, ரோகோஸினிடம் அப்போதுதான் மிஷ்கின் நெருங்கிவருகிறான். அவனோடு அந்த இரவு முழுக்க ஒன்றாய் இருக்கிறான். நாவலின் துவக்கத்தில் மரணதண்டனை கூடாது என்று ஆவேசமாக வாதாடும் மிஷ்கின், இறுதியில் நஸ்டாஸியாவின் கொலையை மிக இயல்பாகவும் எந்தவிதமான அதிர்ச்சியும் இல்லாமல் அணுகுவது வியப்பூட்டும் திருப்பம். மிஷ்கினின் இந்த குணமாற்றம் மிகவும் நுட்பமாக இந்த இடத்தில் வெளிப்படுகிறது.

ஆம். இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வந்த மிஷ்கின் மீண்டும் இருளுக்குத் திரும்புகிறான். இந்நாவலில் அடிக்கடி வரும் “அபோகலிப்ஸ்” என்ற வார்த்தை எனக்கு மிஷ்கினின் இந்த வீழ்ச்சியைத்தான் நினைவுபடுத்துகிறது.

நஸ்டாஸியா இந்நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரம். நஸ்டாஸியாவைப் புரிந்து கொண்டால் கிட்டத்தட்ட நாவலே புரிந்த மாதிரிதான். நாவலின் பிற கதாபாத்திரங்களிடையே நஸ்டாஸியாவின் மீது மிதமிஞ்சிய வெறுப்பும், அவநம்பிக்கையுமே இருக்கிறது. அந்தச் சமூகமே அவளை வெறுத்து ஒதுக்குகிறது. அதற்கான காரணங்களும் மிக இயல்பாக இருக்கிறது. பல ஆடவருடன் வாழும் ஒழுக்கமற்ற பெண் என்றும் ஊரறிந்த வேசியென்றும்தான் சமூகம் அவளைப் பார்க்கிறது. மி‌ஷ்கினால் மட்டும்தான் அவளது மேலோட்டமான நடவடிக்கைகளைத் தாண்டி அவளது மனதின் அடியாழத்தைப் பார்க்க முடிகிறது.

டாட்ஸ்கியின் கண்களில் அகப்படும்வரை நஸ்டாஸியாவும் தூய ஆன்மாவுடன், ஒரு ஆட்டுக்குட்டியோடு ஒப்பிடத்தகுந்தவளாகத்தான் இருந்திருக்கிறாள். டாட்ஸ்கி அந்தச் சிறுமியை தன் ரகசிய வேட்கையை தீர்த்துக்கொள்வதற்காகப் பயன்படுத்திக்கொள்கிறான். வளரிளம் பருவத்திலேயே தன்னை விடப் பலமடங்கு வயதான டாட்ஸ்கியின் பாலியல் சுரண்டலுக்கு ஆளானபடியேதான் வளர்கிறாள் நஸ்டாஸியா. ஆனால் பிரக்ஞைபூர்வமாக அதை அவள் உணர்வதற்குள் காலம் கடந்துவிடுகிறது. அவள் அகம் முதிர்ச்சியடைவதற்குள் அவள் உடலும் இளமையும் பயன்படுத்தப்பட்டு விடுகிறது.

மிகத் தாமதக்காகக் கூட அவள் அந்த இழிந்த வாழ்விலிருந்து வெளியேறி தனக்கான மீட்சியைத் தேடிக்கொண்டிருக்க முடியும். அதற்கான வாய்ப்பைத்தான் மிஷ்கின் அவளுக்கு வழங்குகிறான். ஆயினும், அவள் அதைத் தேர்த்தெடுக்க விரும்பவில்லை. மாறாக, இழிவான தாழ்வுணர்ச்சிக்கு ஆளானவளாய், ஆன்ம அளவில் கறைப்பட்டவளாய், மீட்சிக்கு வழியில்லாதவளாக தன்னைத்தானே அவள் உருவகம் செய்துகொள்கிறாள். தன்னுடைய ஆன்ம அழுக்கை இந்தக் கேடுகெட்ட சமூகத்துக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற விருப்பம் மேலிட்டு அந்தக் கெடுவிசையினால் உந்தப்பட்டு தொடர்ந்து அந்த இழிவான பாதையையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். மேலும் அந்த இழிவான பாதையிலேயே தொடர்ந்து பயணிப்பதன் மூலம் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய சமூகத்தைப் பழிவாங்குவதாக கற்பிதம் செய்துகொள்கிறாள். இழிவான ஆன்மாக்களிடம் விருப்பமும், தூய ஆன்மாக்களிடம் விலக்கமும் கொள்ளத் துவங்குகிறாள். ரோகோஸினிடம் மீண்டும் மீண்டும் அவள் செல்வதும், மிஷ்கினை மீண்டும் மீண்டும் அவள் விலக்குவதும் இதன் காரணமாகத்தான். அக்லேயாவைக் கூட அவளாக சந்திக்கவேயில்லை. நாவலின் இறுதியில் அவளைச் சந்திப்பதும் அக்லேயாவின் விருப்பத்தின்படியே.

ரோகோஸினிடம்தான் தான் செல்லப்போகிறோம் என்று தெரிந்தும் ஏன் நஸ்டாஸியா மீண்டும் மிஷ்கினிடம் வருகிறாள், ஏன் மிஷ்கினை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கிறாள் என்ற கேள்வியைப் பின்தொடர்ந்தால் நஸ்டாஸியாவை உளவியல்பூர்வமாக அணுகியறியலாம். ஒருகாலத்தில் கள்ளமில்லாத சிறுமியாக இருந்தவள்தான் நஸ்டாஸியா. அவளைச் சீரழித்தவன் டாட்ஸ்கி. டாட்ஸ்கியிடம் சிக்குவதற்கு முன்பிருந்த நஸ்டாஸியா அழுக்கில்லாத, கறைபடியாத தூய்மையானவள். கிட்டத்தட்ட மிஷ்கினைப் போல. அதனால், மிஷ்கினைப் பார்க்கும்போதெல்லம் அவளுக்குத் தனது கள்ளமற்ற பால்யம் நினைவுக்கு வருகிறது. மீண்டும் அந்தத் தூய்மையான பால்யத்துக்கு செல்லும் ஏக்கத்தினால் மிஷ்கினிடம் வருகிறாள். ஆனால் அந்தத் தூய்மையான கடந்த காலத்திற்கு ஒருபோதும் திரும்பிச்செல்லமுடியாது, அது நிரந்தரமானதல்ல என்று உணர்ந்துகொள்வதால் மீண்டும் ரோகோஸினிடம் வந்துவிடுகிறாள். ஏனெனில், ரோகோஸினைப் பார்க்கும்போதெல்லாம் அவளது கசப்பான நிகழ்காலம் அவளுக்கு நினைவுக்கு வருகிறது. கடந்த காலத்தின் ஒளிமயமான உருவகமான மிஷ்கினைப் புறக்கணித்துவிட்டு கசப்பூட்டும் நிகழ்காலத்தின் இருண்ட உருவகமான ரோகோஸினையே அவள் நாடுகிறாள். மிஷ்கினிடம் வாழ்ந்தால் அவளுக்கான மீட்சிக்கு வழியிருக்கிறது, மாறாக ரோகோஸினிடம் சென்றால் மரணம்தான் அவளுக்குக் காத்திருக்கிறது. அதை அவளும் உணர்ந்திருக்கிறாள். முடிவில், மீட்சிக்குப் பதில் மரணத்தைத் தேடிக்கொள்கிறாள். அவளுடைய கோணத்தில், ஒருவகையில் அவளது பாவங்களுக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொள்கிறாள். இருமுனைகளுக்கிடையேயான அவளது இடைவிடாத ஊசலாட்டம் இங்ஙனம் முடிவு பெறுகிறது.

நஸ்டாஸியா, அற்பமான இழிபிறவியான தான் மி‌ஷ்கினை மணந்துகொண்டால் அவனைக் கறைப்படுத்தியது போலாகிவிடும் என்பதால்தான் அவனை அக்லேயாவை மணந்து கொள்ளச் சொல்கிறாள். நாவலின் துவக்கத்தில் தன்னுடைய பிறந்த நாள் விருந்திலேயே அதை மிஷ்கினிடம் தெரிவிக்கிறாள். அக்லேயாவுக்கும் இதை வலியுறுத்தி கடிதங்கள் எழுதுகிறாள். அக்லேயாவும் நஸ்டாஸியாவும் சந்திக்கும் அந்த இறுதித் தருணம் மிகவும் உணர்ச்சிகரமானது. அவர்கள் இருவருக்கிடையே வாக்குவாதம் வளர்கையில், அதுவரை அவர்கள் இருவரும் அணிந்து கொள்ளும் கௌரவமான புறப்பூச்சுகள் யாவும் களைந்து வெறும் பெண்களாக ஆகிவிடுகிறார்கள். நஸ்டாஸியாவுக்கு அக்லேயாவைக் குறித்து அதுவரை தான் மனதில் கட்டிவைத்திருந்த பிம்பம் கலைந்து சிதறுகிறது. அக்லேயா கேட்கும் கேள்விகளும் மிகக் கூர்மையாகவும் நேரடியாகவும் இருக்கிறது. நஸ்டாஸியாவுக்கு அக்கேள்விகளை ஒருகட்டத்தில் எதிர்கொள்ளமுடியாமல் போகும்போது அந்த தருணத்தை மிகவும் உணர்ச்சிகரமாக நாடகீயத்தனமாக மாற்றிக்கொண்டு மிஷ்கினை மீண்டும் உரிமை கொண்டாடத் துவங்கி விடுகிறாள். அதன் பிறகான திருமண நாளில் மீண்டும் அவனை விட்டு விலகி ஓடிவிடுகிறாள்.

மற்றொரு கோணத்தில் பார்த்தால், நஸ்டாஸியா இருளின் உருவகமாகவும் அக்லேயா ஒளியின் உருவகமாகவும் நாவலில் காட்டப்படுகிறார்கள். நஸ்டாஸியாவின் உடைகளின் நிறம் பெரும்பாலும் கருமையாக இருக்கிறது. அக்லேயா பெரும்பாலும் வெண்மை நிறத்துடன் தொடர்புறுத்திக் காட்டப்படுகிறாள். ஒருபக்கம் வயதில் முதிர்ந்த ஒழுங்கீனத்தின் அனுபவம் வாய்ந்த நஸ்டாஸியா, மறுபக்கம் புத்திளமை ததும்பும், வாழ்வையும் இந்த உலகையும் பெரிதாக அறிந்திராத அனுபவமற்ற அக்லேயா, இவர்களுக்கிடையில் அலைவுறும் மிஷ்கின் என இந்த முக்கோணம் விரிந்து இறுதியில் வெடிக்கிறது.

ரோகோஸின் சாத்தானின் உருவகமாகக் கதையில் தோன்றுகிறான். அவனது உருவ சித்தரிப்பில் துவங்கி அவனது ஆழ்மன எண்ணங்கள் வரை எதிர்மறையான பண்புகளையே தஸ்தாயெவ்ஸ்கி அவனில் ஏற்றிச்செல்கிறார்.

கருமையான, அழகற்ற, பார்த்ததும் ஒருவகையான அசூயையை ஏற்படுத்தும் விதமாய் அவனது உருவம் இருக்கிறது. கறுப்பான சுருட்டைமுடி, நெருப்பைக் கக்கும் சாம்பல் நிறக் கண்கள், சவம் போல வெளுத்த அவலட்சணமான முகம் என்று அவனது உருவ சித்தரிப்பும், கூடவே மதுப்பழக்கத்தினால் விளைந்த ஒழுங்கீனமான, அச்சமூட்டும் அவனது நடவடிக்கைகள் மூலமாக அவனது உள்ளமும் எதிர்மறையாகவே காட்டப்படுகிறது.

அவன் வசிக்கும் வீடு பகலிலும் இருள் நிரம்பியதாய், தூசும் ஒட்டடையும் நிரம்பி, திறக்கப்படாத அழுக்கடைந்த ஜன்னல்கள் கொண்டதாய் காட்டப்படுகிறது. இருளும், துர்நாற்றமும், அழுக்கும், அமானுடத் தன்மையும் செறிந்த வீடு அது. ரோகோஸினைப் பார்க்கச்செல்லும்போது தூரத்தில் இருந்தே அது ரோகோஸின் வசிக்கும் வீடுதான் என்று மிஷ்கினால் உணரமுடிகிறது. இறுதியில் நஸ்டாஸியா கொல்லப்படுவதும் அந்த வீட்டில்தான். அதிலும் புத்தகத்தில் மறைத்துவைத்திருக்கும் கத்தியால். ரோகோஸினை அந்த வீட்டில் முதன்முதல் சந்திக்கும்போது மிஷ்கின் அந்தக் கத்தியை எடுத்துவைத்துக்கொள்ளும்போது, கோபத்துடன் அதைப் பிடுங்கி மீண்டும் அந்தப் புத்தகத்தில் வைக்கிறான் ரோகோஸின். அந்த இடத்தில் கத்தி என்பதை நஸ்டாஸியாவின் குறியீடாகவும் பார்க்கலாம். மி‌ஷ்கினிடம் சிலுவையை மாற்றிக்கொண்டு நட்பையும் சகோதரத்துவத்தையும் உறுதி செய்து கொள்ளும் அதே நாளில் மிஷ்கினை அவன் கத்தியால் கொலை செய்யவும் வருகிறான். இவ்வகை காட்சிகளினூடாக ரோகோஸினின் எதிர்மறையான பண்புகளை தஸ்தாயெவ்ஸ்கி காட்டிவிடுகிறார்.

மிஷ்கினின் உயிரைப் பறிக்க முயன்று தோற்கும் அந்தக் கத்தி முடிவில் நஸ்டாஸியாவை வென்று விடுகிறது.

மிஷ்கின், அக்லேயாவை முதன்முதலில் அவளது வீட்டில் சந்திக்கும்போதே அவள் நஸ்டாஸியாவைப் போல அழகாக இருக்கிறாள் என்கிறான். அந்த முதல் புள்ளியிலேயே அவனையுமறியாமல் அவன் மனதில் நஸ்டாஸியாவுக்கு இணையானவளாக அக்லேயாவும் வந்தமர்ந்துவிடுகிறாள். உலகத்தையும் மனிதர்களையும் குறித்த ஒரு விரிவான பார்வையும் அனுபவமும் இல்லாதவளாகத்தான் அக்லேயா அறிமுகமாகிறாள். வீட்டுக்குள்ளேயே வளர்ந்தவள். அவளுக்கு வெளியுலகைப் பார்க்கவேண்டும், பல வெளிநாடுகளுக்கு பயணிக்க வேண்டும் என்ற வேட்கை இருக்கிறது. மிஷ்கினைப் பூங்காவில் சந்திக்கும்போதும் அவள் தன்னை எங்காவது வெளிதேசத்துக்கு அழைத்துச்செல்லமுடியுமா என்றுதான் கேட்கிறாள். அவளுக்கு பெரிய சிக்கலாக இருப்பது அவளது குடும்பம்தான். அதேசமயம் தனக்கான வாழ்கைத்துணையினைத் தேர்ந்தெடுக்க அவள் அவசரப்படவில்லை. அவளை மணக்க விரும்பும் கன்யாவை அவள் விலக்குகிறாள். அதே சமயம் மி‌ஷ்கினின் மீது அவளுக்கு ஏற்பட்டது அழிவற்ற பெருங்காதல் என்றும் சொல்லமுடியாது. மிஷ்கினின் மேல் அவள் காதல் கொள்வது சில தருணங்களின் உந்துதலால்தானேயன்றி பிறிதொரு சிறப்பான காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. “பாவப்பட்ட போர்வீரன்” கவிதையை வாசிக்கும்போது விளையாட்டாக அவனைக் கேலி செய்வதில் துவங்கிய அவளது காதல், அதன்பின் மெல்ல நெருங்குவதாகவும் பிறகு விலகிச் செல்வதாகவும் போக்கு காட்டியபடியிருக்கிறது. சில சமயம் தான் மிஷ்கினைக் காதலிக்கவில்லை என்று தன் பெற்றோரிடம் கடுமையாகச் சொல்வதும் அதன்பின் சட்டென்று தான் அவனை மட்டுமே காதலிப்பதாக ஒத்துக்கொள்வதுமாக ஒரு குழப்பமான மனநிலையையே அக்லேயா வெளிப்படுத்துகிறாள்.

நஸ்டாஸியாவுக்கு மிஷ்கினிடம் ஏற்படும் அதே இரக்கம், மிஷ்கினின் மீது அக்லேயாவுக்கும் ஏற்படுவதன் விளைவே அவள் மிஷ்கினைத் திருமணம் செய்ய ஒப்புக்கொள்வதற்கு காரணமாக இருந்திருக்கலாம். நஸ்டாஸியா என்ற மோசமான ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்து மிஷ்கினைக் காப்பாற்ற அக்லேயா விரும்பியிருக்கலாம். மிஷ்கின் மீதான அக்லேயாவின் காதல் என்பது நிலையில்லாமல் மாறிக்கொண்டேயிருப்பது போன்ற சித்திரத்தைத்தான் நாவல் ஏற்படுத்துகிறது. அவளது மனப்போக்கை எவராலும் ஊகிக்கவோ பின்தொடரவோ இயலவில்லை. முள்ளம்பன்றியை அவள் மிஷ்கினுக்குப் பரிசளிப்பதை இந்தப் பின்னணியில்தான் பார்க்க முடிகிறது.

மிஷ்கின் தன்னை நிராகரித்ததும் முன்னறியாத அதிர்ச்சியை அடைகிறாள் அக்லேயா. எந்த நஸ்டாஸியாவை அவள் வெறுத்தாளோ அதே நஸ்டாஸியா அவளது மணமகனை அவளிடமிருந்து பிரித்து விடுகிறாள். அதன்பின்னான அக்லேயாவின் வாழ்க்கை அவலமிக்கதாக மாறிவிடுகிறது. இளவரசன் என்று பொய்சொல்லித் திரியும் ஒருவனை நம்பி வெளிநாட்டுக்குச் சென்று ஏமாறுகிறாள். அதன் பின் அவளது வாழ்வும் நஸ்டாஸியாவைப் போல அலைக்கழிப்பும் துயரமுமாக முடிகிறது.

3

மிஷ்கினும் ரோகோஸினும் தங்கள் சிலுவைகளை மாற்றிக்கொள்ளுதல் நாவலின் உச்சங்களில் ஒன்று. சிலுவைகளை மாற்றிக்கொள்வதன் மூலம் வெறுமனே அவர்கள் இருவரும் சகோதரர்களாக மட்டும் மாறவில்லை. சிலுவை என்பது அவரவரின் அந்தரங்கமான ஆன்மிகத்தைப் பிரதிபலிக்கும் சின்னம். மி‌ஷ்கினின் ஆன்மிகமும் ரோகோஸினின் ஆன்மிகமும் இங்கே மாற்றம் கொள்கிறது. ஆனாலும் இதன் மூலம் இருவரின் அடிப்படையான இயல்புகள் பெரிதும் மாற்றம் அடையவில்லை. மிஷ்கினுக்கு எந்த சிலுவையும் ஒன்றுதான், சிலுவையே இல்லாவிட்டாலும் அவன் இயல்பு எவ்வகையிலும் திரிபடையப் போவதில்லை. ஆனால், மிஷ்கினின் சிலுவையைப் பெற்றுக்கொள்வதன்மூலம் ரோகோஸினின் இயல்பில் சிறிது மாற்றம் ஏற்படத்தான் செய்கிறது. சிலுவையை மாற்றிக்கொண்ட அதே நாளில் அவன் மிஷ்கினை கொலை செய்ய முயல்கிறான். ஆனாலும் அத்தருணத்தில் மிஷ்கினுக்கு வலிப்பு நோய் முற்றுவதால், அவனைக் கொல்லாமல் காப்பாற்றிவிட்டுச் செல்கிறான்.

நாவலின் மற்றொரு உச்சம் என்பது ரோகோஸினின் வீட்டில் மிஷ்கின் பார்க்கும் கிறிஸ்துவின் ஓவியம். ஹோல்பெயின் என்ற ஓவியர் வரைந்த கிறிஸ்துவின் ஓவியம் அது. சிலுவையில் இருந்து இறக்கிவைக்கப்பட்ட ஏசுவின் ஓவியம் அது. அது ரோகோஸினின் உள்ளத்தின் குறியீடாகவே இடம்பெறுகிறது.

ஒரு எளிய மனிதனின் சவம் போல ரத்தமும் சதையுமாக கிறிஸ்து படுத்திருக்கிறார். இந்தக் கிறிஸ்து அதிசயங்கள் நிகழ்த்தவல்லவரல்ல, உயிர்த்தெழவிருப்பவரும் அல்ல. அந்த ஓவியத்தைப் பார்க்கும் மி‌ஷ்கின், “இந்த ஓவியம் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களைக்கூட அவர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் விட்டொழிக்கச் செய்யும் தன்மை வாய்ந்த ஓவியம்” என்கிறான். ரோகோஸினும், “அது உண்மைதான். என்னுள்ளும் அதே விதமான மாற்றத்தையே இந்த ஓவியம் உண்டாக்குகிறது” என்கிறான். கிறிஸ்துவை ஆண்டவன் என்ற அடையாளத்திலிருந்து நீக்கம் செய்து ஒரு எளிய மனிதனாகக் காட்டும் அந்த ஓவியம் மிஷ்கின் ரோகோஸின் இருவரையுமே மனதளவில் பெரிதும் பாதிக்கிறது.

இந்த ஒட்டுமொத்த நாவலிலும் மேற்குலகின் மீதான எதிர்மறை விமர்சனம் வந்துகொண்டேயிருக்கிறது. மேற்குலகின் மீதான தஸ்தாயெவ்ஸ்கியின் விமர்சனமே நாவலின் சில கதாபாத்திரங்களின் (யெவ்கெனி பாவ்லோவிச், மிஷ்கின்) குரலாக எதிரொலிக்கிறது. அதையும் தாண்டி ருஷ்யாவின் வேர்களை மீண்டும் கண்டடைய வலியுறுத்தும் அவரது குரலையும் இக்கதாபாத்திரங்களின் வழியே தஸ்தாயெவ்ஸ்கி வெளிப்படுத்துகிறார்.

நிச்சயதார்த்த விருந்தில் மிஷ்கின் ஆற்றும் ஆக்ரோசமான சொற்பொழிவின் மூலம் இதை உணரலாம். கத்தோலிக்க மதத்தை விமர்சிக்கும் மிஷ்கின், அதிலிருந்து பிறந்ததே நாத்திகமும் சோசலிசமும் என்கிறான். கத்தோலிக்க மதமே கிறிஸ்துவுக்கு மாறான நம்பிக்கையைப் போதிப்பது என்று ஆவேசமாகப் பேசுகிறான் மிஷ்கின். கத்தோலிக்க மதம் என்பது ரோம சாம்ராஜ்யத்தின் நீட்சிதான். உண்மையான கிறிஸ்துவை அது குழிதோண்டிப் புதைத்து, அதிகாரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. போப்பின் கையில் இப்போது வாள் வந்துவிட்டது என்கிறான். ருஷ்யர்கள் செய்யவேண்டியது, கத்தாலிக்கத்தின் பக்கம் சாயாமல், தங்கள் வேர்களைத் தேடியெடுத்து அதில் நிலைகொள்ள வேண்டும் என்றும், ருஷ்யர்கள் பாதுகாத்து வைத்திருக்கும் உண்மையான கிறிஸ்துவை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மிஷ்கின் பேசுகிறான். இந்த ஆவேசமான சொற்பொழிவின் முடிவில் வலிப்பு நோய் கண்டு மயங்கி விடுகிறான்.

மெய்யான கிறிஸ்து குறித்தும், அன்றைய ருஷ்ய சமூகம் குறித்தும் மிஷ்கின் மூலமாக தஸ்தாயெவ்ஸ்கி தான் கண்டடைந்த மாற்று ஆன்மிகத்தை முன்வைக்கிறார். மாற்று ஆன்மிகம் என்பதைக் காட்டிலும் அவரது பார்வையில் இதுவே மெய்யான ஆன்மிகம் என்று வலியுறுத்துகிறார்.

4

என் பார்வையில் இந்த நாவலின் கட்டுமானத்தில் சில போதாமைகளையும் உணர்கிறேன். பொதுவாக தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் நமக்கு ஏற்படும் அந்த அந்தகரண சுத்தி (catharsis) இந்த நாவலில் எங்கும் எனக்கு தென்படவில்லை. குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கால்நிகாஃப் சோனியாவின் முன் மண்டியிட்டு மனித குலத்தின் பிரதிநிதியான அவளிடம் மன்னிப்பு கோரும் அந்த காட்சிக்கு இணையான உச்சங்களை நிகழ்த்தும் தருணங்கள் இந்த நாவலில் இல்லை. அதைப் போல பல தருணங்களை இந்த நாவலில் காட்டும் சந்தர்ப்பங்கள் அதிகம் இருந்தாலும் தஸ்தாயெவ்ஸ்கி அவற்றையெல்லாம் சாதாரண காட்சிகளாக எழுதிச் சென்றுவிடுகிறார். உதாரணத்திற்கு: ரோகோஸின் நஸ்டாஸியாவை கொலை செய்த காட்சி விரிவாகப் பதிவாகவில்லை. அதை ஒரு செய்தியாக ஆக்கிவிடுகிறார். கொலையுண்ட நஸ்டாஸியாவைப் பார்த்ததும் மிஷ்கின் எந்த எதிர்வினையுமற்று அது நடந்திருக்கவேண்டிய ஒன்றுதான் என்பதுபோல மௌனமாக அங்கீகரிப்பது போல இருக்கிறது. மி‌ஷ்கினின் இந்த மனமாற்றத்துக்கான விரிவான காட்சிப்புலங்களோ உரையாடல்களோ நாவலில் இல்லை. ஒரு மாற்று ஆன்மிகத்தை விரிவாக முன்வைக்கும் காட்சிகளோ, உரையாடல்களோ இல்லை (விதிவிலக்காக, நிச்சயதார்த்த விருந்தில் மிஷ்கினின் சொற்பொழிவைச் சொல்லலாம்). மாற்று ஆன்மிகத்தை முன்வைப்பதே தனது நோக்கமென்றால் அது தொடர்பான மேலும் அதிக காட்சிகளும் விரிவான உரையாடல்களோ சொற்பொழிவுகளோ (குற்றமும் தண்டனையும் போல) நாவலில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஓரிரு இடங்கள் தவிர எங்கும் அது நிகழவில்லை. ஒருவேளை தன்னுடைய நோக்கம் மாற்று ஆன்மிகத்தை முன்வைப்பதல்ல, மாறாக அப்பழுக்கற்ற ஒரு முழுமையான மனிதனை, கிறிஸ்து வடிவை முன்வைப்பதுதான் என்றால் அதுவும் நாவலில் முழுமையாக நிகழவில்லை என்றே சொல்வேன். நாவலின் முதல் பாகத்தில் நஸ்டாஸியாவின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வது வரை இருந்த மிஷ்கின் வேறு. அதன்பின் வரும் மிஷ்கின் வேறாக தோற்றமளிக்கிறான். முடிவில், அந்த லட்சியப் பாத்திரத்தால் என்ன பாதிப்பை ஏற்படுத்த முடிந்தது? தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்வை, ஏன் தன்னுடைய வாழ்விலேயே கூட ஆக்கபூர்வமாக எதையாவது செய்ய இயன்றதா என்றால் இல்லை என்பதே வருத்தமளிக்கும் பதில். ஒருவேளை இதை உணர்த்துவதற்காகத்தான் இந்த நாவலை எழுதினாரா என்றும் தோன்றுகிறது. கடவுள் என்றாலே காமமற்றவராகத்தான் இருக்க இயலுமா? மனிதனின் ஆதார விசையான காமம் ஏன் மிஷ்கினிடம் இல்லை? வலிப்பு நோயின் காரணமாக காமம் அவனில் ஏற்பட வழியில்லை என்ற காரணத்தை எந்த அளவு ஏற்றுக்கொள்ளமுடியும்? உயிரியல் ரீதியான இந்த அடிப்படை அம்சம் மிஷ்கினிடம் இல்லாததால்தான் அக்லேயாவோ நஸ்டாஸியாவோ அவனிடம் விலக்கம் கொள்கிறார்களா? போன்ற கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக, நாவலின் பிற்பகுதிகள் ஏன் தொய்வடைந்து இருக்கின்றன என்ற கேள்வியும் எழுகின்றது.

இதற்கான விடை தஸ்தாயெவ்ஸ்கியின் தனிவாழ்வில் இருந்திருக்கலாம். இந்த நாவலை எழுதும்போதே தஸ்தாயெவ்ஸ்கி ஒரு தவிப்பான மனநிலையிலேயே இருந்திருக்கிறார் எனத் தெரிகிறது. வெளிநாட்டில் இருந்துகொண்டே இந்நாவலை எழுதியிருக்கிறார். இடையில் அவருடைய மகள் இறந்துபோகிறாள். இக்காலகட்டத்தில் மிக மூர்க்கமாகச் சூதாடுகிறார். வலிப்பு நோயும் உச்சத்தில் இருந்திருக்கிறது. ஆக, நிலையில்லாமல் அலைவுற்றபடி ஒரு கொந்தளிப்பான மனநிலையில்தான் தஸ்தாயெவ்ஸ்கி இந்நாவலை எழுதியிருக்கிறார்.

மிக நீண்ட காட்சிகளும் மிக நீண்ட சொற்பொழிவுகளும் இதுபோன்ற செவ்வியல் நாவல்களில் எதிர்பார்க்கக்கூடியதுதான் என்றாலும் சில இடங்கள் மிகவும் நீண்டு செல்கிறது. குறிப்பாக, மிஷ்கினின் பிறந்த நாள் விருந்தில் இப்போலிட் தன்னுடைய நீண்ட கட்டுரையை வாசிப்பதைச் சொல்லலாம்.

மேற்சொன்ன குறைகள் என்னுடைய வாசிப்புக் குறைபாடாகவும் இருக்கலாம். ஆயினும், இவற்றைப் பதிவுசெய்வது அவசியம் என்று தோன்றியது.

தஸ்தாயெவ்ஸ்கியின் பலம் என்பது உச்சகட்ட நாடகீயத் தருணங்களின் மூலமே நாவலை நகர்த்திச் செல்வது. அதற்கு அவருடைய கூர்மையான மற்றும் மர்மமான துப்பறியும் சாயல் கொண்ட நடை உதவும். இந்த நாவலிலும் அவ்வகை நாடகீய தருணங்கள் நிறைந்திருக்கின்றன (கன்யா வீட்டில் நடக்கும் களேபரங்கள், நஸ்டாஸியாவின் பிறந்த நாள் விருந்து, அவதூறு கட்டுரை எழுதி மிஷ்கினிடம் சிலர் பணம் பறிக்க முயலும் காட்சி, இப்போலிட் தற்கொலை செய்ய முயற்சிப்பது, நஸ்டாஸியா- அக்லேயா சந்திப்பு).

ஒட்டுமொத்தமாக பார்க்கையில், அசடன் நாவல் சிறந்த வாசிப்பனுபவத்தை அளித்தாலும், அவரது கரமசோவ் சகோதரர்கள், குற்றமும் தண்டனையும் போன்ற ஆக்கங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு மாற்று குறைவாகவே இருக்கிறது. ஆனாலும், தஸ்தாயெவ்ஸ்கியின் மொழி, அவர் எடுத்துக்கொண்டுள்ள முக்கியமான கரு, அவருக்கேயுரிய உணர்வுச்சங்கள் செறிந்த நாடகீய காட்சிகள் போன்றவற்றால் இந்த நாவல் உலக இலக்கிய வரலாற்றில் ஒரு கம்பீரமான இடத்தை நிறுவிவிட்டிருக்கிறது.


திரைகடலுக்கு அப்பால் தொடர்: பிற கட்டுரைகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்