மற்றொரு வெளியேற்றத்தின் கதை

5 நிமிட வாசிப்பு

எட்டுத்திக்கும் மதயானை நாவலை முன்வைத்து

எட்டுத்திக்கும் மதயானை நாவலை வாசித்தபோது தி ஜானகிராமனும் அசோகமித்திரனும் இணையாக நினைவுக்கு வந்தபடியே இருந்தனர். தி ஜானகிராமனின் புனைவுலகம் தஞ்சைக் காவிரிக்கரையைத் தாண்டாதது. நகரங்கள் சித்தரிக்கப்பட்டாலும் அவை ஒரு கிராமத்து மனிதரின் அசூயையும் விலக்கமும் பிரம்மிப்பும் கலந்த சித்தரிப்புகளாகவே இருக்கின்றன. சிவஞானம், அடி போன்ற குறுநாவல்களை உதாரணமாகச் சொல்லலாம். அசோகமித்திரனுடையது முழுக்கவும் நகர்ப்புற மத்தியத்தர வர்க்க உலகம். பதற்றமும் நிலையின்மையும் அவசரமும் அந்த அவசரகதியிலேயே உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயமும் நிறைந்தவர்களால் ஆனது. தி ஜானகிராமனின் புனைவுலகில் வரும் மனிதர்களுக்குத் திட்டவட்டமான மண் சார்ந்த அடையாளம் உண்டு. அம்மனிதர்களின் உணர்வுகளைத் தீர்மானிப்பதில் அவர்களுடைய மரபுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. ஒரு வகையில் மரபும் ஆசையும் மோதிக்கொள்ளும் வெளியாகவே திஜாவுடைய பாத்திரங்களின் அகம் கட்டமைக்கப்படுகிறது. மறுமுனையில் அமியின் பாத்திரங்கள் அடையாளமற்றவர்களாகத் தெரிகின்றனர். அவர்களை நினைவு மீட்டும்போது அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனின் முகத்தில் எதை நம்மால் அவதானிக்க முடியுமோ அது மட்டுமே நினைவுக்கு வருகிறது. தூக்கிட்டுக்கொள்ள முனைந்து தோற்றவளுக்கு ஆறுதல் சொல்லும் பெண்ணுக்குக்கூட அவளைத் தேற்றிவிட்டு எழுந்து சென்று பார்க்க உடனே ஒரு வேலை இருக்கிறது.

தமிழ்ச்சூழலில் நகர்ப்புற மற்றும் கிராமியச் சித்தரிப்புகள் தெளிவான வேறுபாடுகளைக் கொண்டவை. மேற்சொன்ன இரு முன்னோடி படைப்பாளிகளுடைய கதையுலகங்களும் இந்த வேறுபாட்டினையே அடையாளப்படுத்துகின்றன. இன்று எழுதும் படைப்பாளிகள் பலரிடமும் இந்த ‘மனநிலை வேறுபாடு’ தொனிப்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது. சோ தர்மன் நாவலில் வரும் ஒரு மூதாட்டி உணவைக் காசுக்கு விற்பதை எண்ணி மனம் குமைகிறார். லஷ்மி சரவணக்குமாரின் உப்பு நாய்கள் நாவலில் நாய் இறைச்சியை ஆட்டிறைச்சி என்று ஏமாற்றி விற்பது சொல்லப்படுகிறது. நேர்மாறான உதாரணங்களையும் சொல்ல முடியும். இந்த மனநிலை சார்ந்த வேறுபாடு என்பது வாழ்க்கைச்சூழலால் உருவாகிறது என்று நினைக்கிறேன். நகர்புற வாழ்வியலை எழுதும் படைப்பாளிகளுக்குக் கிராமம் ‘வந்துசெல்லும்’ இடமாகவே இருந்து வந்துள்ளது. கிராம வாழ்வியலை எழுதுகிறவர்களும் நகரத்தை அவ்வாறே அணுகுகின்றனர்.

நாஞ்சில் நாடன் இரண்டு வாழ்க்கையையும் அறிந்தவர். ஒரு வாழ்க்கையின் மதிப்பீடு இன்னொரு வாழ்வுடன் உக்கிரமாக மோதிக்கொள்வதை இந்த நாவலின் வழியே நாம் காண்கிறோம். எட்டுத்திக்கும் மதயானை நாவலின் இன்றைய பொறுத்தப்பாடு இந்த மோதலினாலேயே உருவாகிறது.

ஊரில் ஏற்பட்ட ஒரு தகராறினால் அங்கிருந்து பூலிங்கம் என்ற இருபது வயது இளைஞன் வெளியேறுகிறான். நிர்கதியாய் வெளியேறிச் செல்கிறவர்களின் கதைகள் தமிழில் நிறையவே சொல்லப்பட்டுள்ளன. கநாசுவின் பொய்த்தேவு ஓர் ஆரம்பகால உதாரணம். அநாதையான சிறுவன் சோமு மெல்லக்காலூன்றி வளர்ந்து வெற்றிபெற்று அனைத்தையும் விட்டுச்செல்வதைப் பேசும் நாவல் அது. குடும்பத்தில் இருந்து வெளியேறும் இத்தகைய மனிதர்களிடம் ஓர் அடிப்படை ஒற்றுமை உள்ளது. அவர்களுக்கு வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் குறித்துதான் அதிகக் கவலைகள் உள்ளன. அடுத்தவேளை எங்கு உறங்குவது என்ன உண்பது என்பதுதான் வெளியேறிச் செல்கிறவர்களின் அன்றாடத்தை இயக்கும் விசையாக உள்ளது. இந்த நாவலிலும் பூலிங்கம் ரயிலேறியது முதல் உண்பதையும் உறங்குவதையும் பற்றியுமே அதிகம் சிந்திக்கிறான். நாவலின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் அடுத்த மூன்று பக்கங்களில் உண்பதோ சமைப்பதோ இடம்பெறுகிறது. இணையாகக் காமமும் குற்றங்களும்.

இது ஏன் எனக் கேட்டுப்பார்க்கலாம். நாஞ்சில் நாடன் இந்த நாவலில் சித்தரிக்கும் உலகம் உண்மையில் நம்மில் பலருக்கு அந்நியமான ஒன்று. குற்றங்கள் புழங்கும் வெளி. ஆனால் அது பூலிங்கத்தின் வழியாக ‘இயல்பானது’ என்பது போலக் காண்பிக்கப்படுகிறது. பூலிங்கம் வீட்டிலிருந்தும் ஊரிலிருந்தும் வெளியேறியவன். இப்படி வெளியேறுகிறவர்கள் அல்லது வெளியேற்றப்படுகிறவர்கள் உடனே இழப்பது இல்லம் அளிக்கும் பாதுகாப்பையும் ஊர் அளிக்கும் அடையாளத்தையும்தான். பெற்றுக்கொள்வது இல்லமும் ஊரும் அளித்த மதிப்பீடுகளைச் சுமப்பதில் இருந்து விடுதலை பெறுவது. இத்தகையவர்கள் நம்மிடம் சொல்லக்கூடிய கதையில் இல்லத்தில் இருப்பவர்களின் மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் செல்லுபடியாவதில்லை. பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்ட நியதிகள் ஏற்கத்தக்கதாகத் தெரியவில்லை. உயிர்வாழ்தற்காக மட்டுமே தினமும் உயிர்வாழ்வது உண்மையில் துன்பம் நிறைந்தது. இலக்குகள் கனவுகள் போன்ற எந்தக் கற்பிதமும் இன்றி அடுத்தவேளை உணவு குறித்து மட்டுமே சிந்திக்க விதிக்கப்பட்ட மனிதனுக்கு அவனுக்கு அடுத்த அடுக்கில் இருக்கும் மனிதர்களின் நெறிகளுடன் எப்போதுமே முரண்பாடு இருந்து கொண்டுதான் இருக்கும். பூலிங்கம் இந்த நாவல் முழுக்க அந்த முரண்பாட்டைத்தான் சிந்தித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறான். அவனுடைய சிந்தனையும் ஆசிரியர் கூற்றும் பல சமயம் பிரித்தறிய முடியாத ஒத்திசைவைக் கொண்டிருப்பதால் ஆசிரியர் கூற்றாக வரும் பெரும்பாலான வரிகளை பூலிங்கத்தினுடையதாகவே எடுத்துக்கொள்ளலாம்.

நிலையான வாழ்க்கையில் உறவுகளும் நட்புகளும் வரையறை செய்யப்பட்டதாக இருக்கின்றன. அதே அளவு சுவாரஸ்யமற்றவையாகவும். ஆனால் பூலிங்கம் இந்த நாவல் முழுக்கப் பயணித்துக்கொண்டே இருக்கிறான். அவனுக்குக் கிடைக்கும் உறவுகளும் நட்புகளும் யூகிக்க முடியாத சுவாரஸ்யம் கொண்டவை. உதாரணமாக பானுமதி மற்றும் கோமதியுடனான பூலிங்கத்தின் உறவு. பானுமதி அவனை ஈர்க்க முயன்றுகொண்டே இருக்கிறாள். ஆனால் அவள்பால் அவன் மனம் சாய்வதே இல்லை. அவளைத் தேடித் தன்னிச்சையாகக் கால்கள் நகரும்போதுகூட மனம் அவளிடமிருந்து விலகுகிறது. மாறாக, கோமதியின் இயல்பான ஆதூரம் அவளுடன் பூலிங்கத்தை ஒன்றச் செய்கிறது.

வீட்டைவிட்டுப் புறப்படும்போது /தேடிப்பார்த்தால் அவனவன் உள்ளே ஓர் அநாதை ஒளிந்திருப்பான் போலும்/ என்று எண்ணும் பூலிங்கம்தான் நாவல் முடியும்போது /வீடெதற்கு? வீடென்பது கடுமையானதோர் ஒழுக்கத்தின் பாற்பட்டது/ என்றும் எண்ணுகிறேன். இந்த அகநகர்வை அவன் அடையும் இடைவெளியில் நாஞ்சில் நாடன் துரிதமாக நகரும் நவீன வாழ்வின் மீதான தனது அத்தனை விமர்சனங்களையும் வெளிப்படுத்திவிடுகிறார். நவீனத்துவத்தின் இருண்மையை நெருங்க அனைத்து வாய்ப்புகளையும் கொண்டிருந்தும் இந்த நாவல் ஒரு தனித்துவம்வாய்த்த பிரதியாக மாறுவது இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் எத்தனையோ சமரசங்களைச் செய்து கொண்டும் வாழ்க்கையின் மீதான தேசத்தைக் கைவிடாத மனிதர்களைச் சித்தரிப்பதனால்தான்.

பூலிங்கம் தன்னுடைய கிராமத்தையும் தன்னுடைய நகர் வாழ்க்கையையும் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கிறான். நாவலில் இப்படி ஒரு பத்தி வருகிறது.

/நகரம் மனிதனின் வெட்கம், மானம், ரோஷம் எல்லாவற்றையும் சாயம் போகச் செய்துவிடும் போலும். ஊரானால், தான் செய்யும் குற்றங்களை எண்ணிப் பார்த்திருக்க முடியுமா? ரகசியமாய்க் குற்றம் செய்வதைப் பற்றி மனிதனுக்குப் பெரிய மனச்சாட்சிக் குத்தல்கள் இல்லை. காரியம் எல்லாம் அடுத்தவன் தெரிந்துகொள்வதில்தான். வாழ்வின் மதிப்பீடு என்பது பழகிய தெருவிலும் ஊரிலும் உறவுகளிலும் மட்டும் பயிராகும் செடி போலும்./

கிராமம் சமூக உறுப்பினர்களால் ஆனது என்றால் நகரம் தனிமனிதர்களால் ஆனது. கிராமம் தொடர்ந்து தன்னுடைய உறுப்பினனைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறது. நகரில் அதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. பெற்றோருடன் வசித்த ஒரு சிறுவனின் பதின்பருவத்தில் கல்லூரி விடுதியில் கொண்டு சென்றுவிடும்போது அவன் அடையும் திகைப்பும் பரவசமும்தான் ஊர்க் கண்காணிப்பில் வாழ்ந்த ஒரு மனிதன் நகருக்குள் வரும்போது அடைகிறான். அதுவரை அவன் நம்பிய கடைபிடித்த சில மதிப்பீடுகள் நொடித்து இல்லாமல் ஆவதைக் கண்முன்னே காண்கிறான். ஊரை விட்டு வெளியேறிய கொஞ்ச நாளிலேயே பூலிங்கம் கடத்தல்காரனாகிறான். ஒரு சமயம் கொலைகாரனாகக்கூட மாறுகிறான். ஊருக்குத் திரும்பிச்செல்ல வேண்டும் என்ற ஏக்கம் தன்னிடம் இருப்பதாக அவன் நம்பிக்கொண்டிருந்தாலும் நகரத்தின் கவர்ச்சி அவனை மீண்டும் மீண்டும் அமிழ்த்துகிறது. குற்றச்செயல்கள் தரும் பணத்தில் திளைக்கிறான். அவன் செய்யும் குற்றங்கள் அனைத்தும் பூலிங்கம் என்ற ‘அடையாளமற்றவனின்’ குற்றங்களே.

/பிடிபட்டபின்தான் திருடன், கொலையாளி, விபச்சாரி எல்லாம். பிடிபடாதிருப்பது முக்கியம்/

இந்தத் தர்க்கம் நாவலின் பல பக்கங்களில் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லப்படுகிறது.

/யோக்கியமாக இருத்தல்கூட அவ்வளவு முக்கியமில்லை. யோக்கியமாகத் தென்படுதல் முக்கியம்/

/பணம் வேணும் எல்லாத்துக்கும். பணம் எல்லாக் கறையையும் கழுவிப்போடும். கழுவாட்டாக்கூட பெயிண்டாவது அடிச்சிரும்/

நியதிகளால் வகுக்கப்பட்ட ஒரு பழைய வாழ்வுக்கும் வெல்வதும் வெல்லப்படுவதுமே நோக்கமென மாறிவிட்ட ஒரு நவீன வாழ்வுக்கும் இடையே நிற்கும் அல்லது இடையே சிக்கிக்கொண்ட மனிதனாக இந்த நாவலில் பூலிங்கம் வெளிப்படுகிறான். அவன் வழியே ஒட்டுமொத்தமாக வாழ்க்கையின் பெறுமானம் என்ன என்று இந்த நாவல் தேட முயல்கிறது. எந்தக் கணத்திலும் அறம் என்று சொல்லப்பட்ட ஒன்றைப் பேணிக்கொள்ள அனுமதிக்காத வாழ்க்கையின் சித்தரிப்புகளால் மட்டுமே கட்டமைக்கப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை நாவல் ஏற்படுத்துகிறது. நாவலின் தரிசனம் என்றும் இதையே சொல்லத் தோன்றுகிறது. திஜாவின் மோகமுள் நாவல் குறித்து எழுதிய கட்டுரையில் பாபு வாழ்வு குறித்துக் கற்பிக்கப்பட்ட புனைவுகளிலிருந்து வெளியேறுகிறான் என்று எழுதியிருந்தேன். பூலிங்கத்தினுடையதும் அத்தகையதொரு வெளியேற்றமே. இந்த வெளியேற்றம் மேலும் உக்கிரமானதாக இருக்கிறது.

நாவலின் தொடக்கத்தில் உயர்ஜாதிப் பெண்ணான செண்பகத்துடன் பூலிங்கத்துக்குத் தொடர்பிருப்பதாக பரவிய வதந்தியால்தான் அவன் ஊரைவிட்டு வெளியேறுகிறான்.நாவல் பூலிங்கத்துடன் செண்பகம் வெளியேறும் இடத்தில் முடிவது ஒரு நல்ல நகைமுரண். நாவலின் இறுதி அத்தியாயங்களில் செண்பகத்தின் மறுவருகையும் அவளுக்கு ஏற்படும் சிக்கல்களும் சற்று செயற்கையானதாக, நாவலின் அதுவரையிலான இயல்பான ஒழுக்குடன் இசையாததுபோலத் தெரிகின்றன. வலிந்து நுழைக்கப்பட்டது போலத்தெரியும் அவ்வத்தியாயங்களைத் தவிர்த்துப் பார்த்தால் எட்டுத்திக்கும் மதயானை ஒரு கச்சிதமான நாவல்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்