திரைகடலுக்கு அப்பால் 1: குற்றமும் தண்டனையும் – தகர்க்க முடியாத தடைகள்

21 நிமிட வாசிப்பு

1

அறிவிற்கும் கருணைக்குமான யுத்தம் எப்போதும் இந்த உலகில் இருந்துகொண்டேதான் இருக்கிறது. மனித குலம் தோன்றியபோதே இந்த யுத்தமும் துவங்கிவிட்டது என்றே சொல்லலாம். கருணைக்காக, கருணை என்னும் விழுமியத்தை நிலைபெறச்செய்வதற்காகவே யுத்தங்கள் தோன்றின என்பதெல்லாம் வறட்டுவாதங்களாகவே தோன்றுகிறது. யுத்தம் என்பது ஒருபோதும் கருணையின் குழந்தையாக இருக்க முடியாது, மாறாக அது எப்போதும் அறிவின் குழந்தையாகவே இருக்கிறது. கருணையைத் தன்னில் இருந்து விலக்கிய அறிவு அது. கருணையின் இடத்தில் ஆசையை அமரவைத்த அறிவு அது. அறிவின் உச்சம் என்பது முற்றாகக் கருணையைத் துறத்தல்தானோ. மேலே செல்லுந்தோறும் தன்னுடைய பரப்பைக் குறுக்கிக்கொள்ளும் மலையைப் போல, அறிவு தன்னுடைய தீவிரமான தளத்தில் கருணையைத் துறந்துவிடுவதைத் தொடர்ச்சியாக உள்ளூர் யுத்தங்களிலிருந்து உலகப் போர்கள் வரை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். தனிமனிதனில் துவங்கி, குடும்பத்தில் வளர்ந்து, சமூகம் முழுக்க கருணையை உதறிவிட்டு முன்செல்லும் அறிவின் தடங்களைக் கண்டபடியிருக்கிறோம். “அறிவு என்பது சாத்தானின் ஆயுதம்” என்று கிறித்துவம் சொல்வதை இந்த எல்லைக்குள் நின்று புரிந்துகொள்ளலாம். “மூளைக்கும் இதயத்துக்கும் எப்போதெல்லாம் பிணக்கு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இதயத்தைப் பின்பற்றுவோம்” என்று விவேகானந்தர் சொல்வதையும் இந்தப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கலாம்.

உச்சகட்ட அறிவும் இரக்கமின்மையும் சேரும் இடத்தில் பேரழிவு தவிர்க்க முடியாததாகிறது. அதற்கு எந்தவிதமான காரணம் சூட்டிக்கொண்டாலும் அப்படிப்பட்ட அறிவு என்பது அழிவிற்கான முன்னறிவிப்பு மட்டுமே. ஒரு மனிதனிடம் இப்படிப்பட்ட அறிவு உச்சம் கொள்ளுமாயின் அவன் வாழ்க்கை எப்படியிருக்கும்? அவன் தனக்கும் தன்னைச் சூழ்ந்திருக்கும் சமூகத்துக்கும் எவ்விதமான அழிவை ஏற்படுத்துவான் என்பதை அறிவதற்காகவே ஒருவர் தஸ்தாயெவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்” நாவலை வாசிக்கலாம்.

அதற்கும் அடுத்த தளத்தில், கருணையை உதறி எழும் அறிவைக் கருணை எப்படி எதிர்கொள்கிறது, தன்னை உதாசீனப்படுத்திய அறிவைக் கருணை உண்மையில் தானும் தண்டிக்கிறதா அல்லது மன்னித்து ஏற்றுக்கொள்கிறதா என்பதை அறிவதற்காகவும் இந்த நாவலை வாசிக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை மேலே சொன்ன இரு கோணங்களே இந்நாவலை வாசிக்க முக்கியமான தூண்டுதலாகத் தோன்றுகின்றன. மற்றபடி பலரும் சொல்லும் குற்றம் என்பது என்ன? தண்டனை என்பது என்ன? குற்றத்திற்கும் தண்டனைக்கும் உள்ள தொடர்புகள் என்னென்ன, குற்றவாளியின் உளவியல் போன்றவையெல்லாம் இதற்கு அடுத்த படிகளே.

ரஸ்கோல்னிகோவ் இந்த நாவல் காட்டும் மிகச்சிறந்த அறிவாளி, சிந்தனையாளன். ஆனாலும் அவன் வாழ்வது சராசரிக்கும் கீழான கொடிய வறுமையில். சட்டம் படிக்கும் மாணவன். ஒருவகையில் நிகிலிஸ்ட். தான் ஒரு சராசரியல்ல என்று தன்னளவில் நம்பும் ஒரு மனிதன் யதார்த்தத்தில் சராசரி வாழ்வினும் கொடிய வறுமையில் உழலும்போது அவன் சிந்தனைகள் முற்றிலும் புதிய திசைக்குத் திரும்பிக்கொள்கின்றன. தன்னை ஓர் அசாதாரணமான மனிதன் என்று நம்பும் ரஸ்கோல்னிகோவ், இயல்பாகவே வரலாற்றில் அதுவரை வாழ்ந்திருந்த அசாதாரண புருஷர்களின் நிரையில் தன்னையும் இணைத்துக்கொள்கிறான். அவ்வகையில் அசாதாரணமான வரலாற்று புருஷர்களில் அவனை மிகவும் கவர்ந்த ஆளுமை நெப்போலியன். (நெப்போலியனை ருஷ்ய இலக்கியவாதிகள், குறிப்பாக டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் விரும்புவதன் காரணங்களைத் தனிக்கட்டுரையாகவே எழுதலாம்).

ரஸ்கோல்னிகோவ், இந்த மண்ணில் வாழும் மனிதர்கள் இருவகைப்பட்டவர்கள் எனக் கருதுகிறான். முதல்வகையினர், தேடிச் சோறு நிதம்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, புற்றீசலைப் போல சாதாரண வாழ்வை வாழ்ந்து தனக்கும் பிறருக்கும் எவ்வித உபயோகமும் இல்லாமல் சாகும் சாதாரணர்கள். இவர்களுக்குத்தான் மண்ணின் சட்டங்களும் தண்டனைகளும் செல்லுபடியாகும். இரண்டாம் வகையினர், அசாதாரணமானவர்கள். (ஜெயமோகனின் சொல்லில் சொல்லவேண்டுமானால் “விதி சமைப்பவர்கள்.”) மனித குலத்தை வழிநடத்திச் செல்லும் ஆளுமையுடையவர்கள். சட்டங்களைப் படைப்பவர்கள். இவர்களுக்கு முதல் வகை சாதாரண மனிதர்களின் சட்டங்களும் தண்டனைகளும் பொருந்தாது. அவற்றையெல்லாம் மீறியவர்கள் இவர்கள் என்றும் சொல்லலாம். தடைகளைத் தாண்டும் உரிமையை அவர்கள் அவர்களுக்குள்ளிருந்தே எடுத்துக்கொள்ளக்கூடியவர்கள். ஆகையால், மனித குலத்தின் நன்மைக்காக இவர்கள் செய்யும் பிழைகளும் குற்றங்களும் இவர்களைக் கட்டுபடுத்தமாட்டா. ரஸ்கோல்னிகோவ் இக்கருத்துகளைத் தன்னுடைய கட்டுரையொன்றில் வெளிப்படுத்துகிறான். இயல்பாகவே தன்னை இரண்டாம் வகையான “விதி சமைப்பவர்களின்” பட்டியலில் இணைத்துக்கொள்கிறான். குற்றங்களையும் தண்டனைகளையும் பற்றி எண்ணிக்கொண்டிருந்தால் நெப்போலியனால் வரலாற்று நாயகனாக உருவாகியிருக்க முடியாது என்று ஆணித்தரமாக நம்புகிறான். ரஸ்கோல்னிகோவ் செய்யும் கொலைக்கான காரணம் உண்மையில் இந்தக் கட்டுரையில் ஒளிந்துள்ளது.

ரஸ்கோல்னிகோவின் இந்தச் சிந்தனைகள் மேலோட்டமாகப் பார்த்தால் சரியானவையாகத் தோன்றலாம். ஆனால், நடைமுறையில் இதன் பலவீனங்களை ஒரு வாசகன் மிக எளிதாகப் பட்டியலிடலாம்.

  1. தான் ஓர் இரண்டாம் வகை ஆள் என்று பலரும் நினைக்கக்கூடும். முதல் வகையில் உள்ளோரும்கூடத் தன்னையறியாமலே தான் இரண்டாம் வகை ஆள் என்று உணரக்கூடும். அது பல அபத்தங்களுக்கு வழிவகுக்கும். (அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. தன்னை அசாதாரணமானவன் என்று உணர்வது எளிது. ஆனாலும் அதைச் செயலில் நிறைவேற்றுவதற்குத் தேவையான துணிவும், தடைகளைத் தாண்டும் வல்லமையும் முதல் வகை மனிதர்களிடம் இருக்காது என்று ரஸ்கோல்னிகோவ் இதற்கு விளக்கமளிக்கிறான்).
  2. மனித குலத்துக்கு நன்மை விளைவிப்பது என்பது உண்மையில் என்ன? மனித குல நன்மை என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். கொலை, கொள்ளை போன்ற குற்றங்களும் மனித குல நன்மை என்று ஒருவர் எடுத்துக்கொள்ளக்கூடும், ரஸ்கோல்னிகோவைப் போல. ஹிட்லர், ஸ்டாலின் முதல் ராஜபக்சே வரை மனித குல நன்மை என்பதைப் பிழையாகப் புரிந்துகொண்டு மானுடப் பேரழிவுகளை நிகழ்த்தியவர்களைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.
  3. ஒருவேளை உண்மையிலேயே இரண்டாம் வகையைச் சேர்ந்த ஒருவர் மனித குல நன்மைக்காக ஒரு அத்துமீறலைச் செய்தார் என்றால், அவனைப் போலவே இரண்டாம் வகையைச் சேர்ந்த நுண்ணுணர்வுள்ள ஒருவனிடம் மிக எளிதாக மாட்டிக்கொள்ள நேரிடும் அல்லவா. (இந்த நாவலில் போர்ஃபிரியிடம் ரஸ்கோல்னிகோவ் மாட்டிக்கொள்வதைப் போல).

நாவலில் இந்த விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, போர்ஃபிரியை முதன்முதலில் அவரது வீட்டில் சந்திக்கும் ரஸ்கோல்னிகோவ் இந்த சாதாரணர்கள் x அசாதாரணர்கள் குறித்தே மிக விரிவாகப் பேசுகிறான். தனக்கேயுரிய புத்திக் கூர்மையுடன் போர்ஃபிரியும் பல இடங்களில் ரஸ்கோல்னிகோவைத் தனது கேள்விகளால் மடக்குகிறார்.

யுக சந்திக்காக, மனித குலத்தின் நன்மைக்காக, புதிய வேதத்தின் பிதாமகனாகத் (மகாபாரத கிருஷ்ணனை இங்கே இரண்டாம் வகை மனிதர்களுக்கு மிகச்சிறந்த உதாரணமாக முன்வைக்கலாம்) திகழும் ஒருவன்தான் இரண்டாம் வகை மனிதன். அவன் தான் வாழும் காலத்திற்கு உரியவன் அல்ல. அவன் எதிர்காலத்துக்கு உரியவன். சமூகத்தை இயக்குபவன். பிற சாதாரண மனிதர்கள் எல்லோரும் நிகழ்காலத்துக்கு உரியவர்களே.

ரஸ்கோல்னிகோவ், தானும் ஒரு நெப்போலியன் என இந்த உலகிற்கு அல்ல, தனக்குத் தானே நிரூபித்துக்கொள்ளத்தான் இந்தக் கொலையைச் செய்யத் துணிகிறான். கொலை செய்த பிறகும் அவன் ஒருபோதும் தான் செய்த கொலைக்காகத் துயரம் அடையவில்லை, மாறாக தான் அந்தச் செயலைச் சரியாகச் செய்யவில்லை, அதில் தோல்வி அடைந்துவிட்டோம் என்ற கோணத்தில்தான் அவன் துன்பப்படுகிறான்.

ஒவ்வொரு அசாதாரண மனிதனும் தன்னுடைய கனவுகளையும் லட்சியங்களையும் அடைவதற்குத் தடையாக இருப்பவைகளை மூர்க்கமாக மீறுபவன். ஏனெனில் அவனது லட்சியம் மனித குல முன்னேற்றத்துக்கு இன்றியமையாதது. அப்படிப்பட்ட மேலான லட்சியத்தை அடைவதற்கானத் தடைகளை அவன் தகர்த்தத்தான் வேண்டும். அப்படி மீறுவதற்கான உரிமையை இந்தச் சமூகம் அவனுக்கு வழங்காதுபோனாலும் அந்த உரிமையை அவன் அவனுக்குள்ளிருந்தே எடுத்துக்கொள்ள வேண்டியவன்தான். சமூகம் ஏற்படுத்தும் தடைகள் மட்டுமல்ல, அவனது சொந்த மனத்தடையையும் மீறும் தகுதி படைத்தவனே அசாதாரண மனிதன் என்று ரஸ்கோல்னிகோவ் நம்புகிறான். தன்னுடைய வாழ்விலும் அத்தடைகளை மீறி முன்செல்கிறான். ஒருவகையில் அவ்விதமான தடைகளை மீறியவர்களை எல்லாம் உயர்வான நோக்கில் பார்க்கிறான். சோனியாவையும்கூட அவள் தன் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பதற்காகத் தனது உள்ளத்தடைகளையெல்லாம் தாண்டியவள் என்றே நினைக்கிறான். அவளிடம் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ள இதுவும்கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

“தடையைத் தாண்டுவது அல்லது மீறிச்செல்வது” என்பது இந்நாவலின் மையங்களுள் ஒன்று. பலரும் நினைப்பது போல இந்த நாவலின் ருஷ்யத் தலைப்பு “குற்றமும் தண்டனையும்” அல்ல. ஆங்கில மொழியாக்கத்தில்தான் இந்தத் தலைப்பு போடப்பட்டது என்கிறார்கள். நாவலின் ருஷ்யத் தலைப்பு “மீறிச் செல்வது (Stepping Across).” நாவலின் பிரதான பாத்திரங்கள் அவர்களுக்கான தடைகளை ஏதோ ஒருவகையில் மீறியவர்கள்தாம்.

தன்னுள் இரு பிளவுகளாகப் பிளந்து சிந்தித்துக்கொண்டே இருக்கிறான் ரஸ்கோல்னிகோவ். ருஷ்ய மொழியில் “ரஸ்கோல்” என்ற பெயரின் அர்த்தம் “பிளத்தல்” (splitting / schism). தன்னுள்தானே பிளவுபட்டவனை தஸ்தாயெவ்ஸ்கி கதைநாயகனாகத் ஆக்கும்போது அவனது பெயரையும்கூட நுட்பமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

பிளவுபட்ட அறிவு எப்போதுமே கருணையை உதறிவிடுகிறது. கருணையின் இடத்தை ஆணவம் எடுத்துக்கொள்வது. ஆணவம் என்பதே அன்பின்மைதான். ஆகையால், ஒரு புள்ளியில் அந்தப் பிளவுபட்ட அறிவு, கருணையின் முன்னும் தியாகத்தின் முன்னும் மண்டியிடத்தான் வேண்டும். சுயநலம் பொதுநலத்தின் முன் மண்டியிடுவதைப் போல. ரஸ்கோல்னிகோவ் சோனியாவின் முன் மண்டியிடுவதும் இதனால்தான்.

ரஸ்கோல்னிகோவைக் கொலையாளி ஆக்குவது கோட்பாடுகள் சார்ந்த சிந்தனையும் அறிவும் மட்டுமல்ல, சுயநலமும்கூடத்தான். கிழவியிடம் இருக்கும் நகைகளையும் பணத்தையும் கொள்ளையிடும் எண்ணமும் அவனுக்கு இருந்திருக்கிறது. அறிவும் சிந்தனைகளும் அவனது மூளைக்குள் வெளிச்சம் பாய்ச்சுவது போலிருந்தாலும் உண்மையில் அவன் சென்று சேர்வது சுயநலம் என்னும் இருளிடம்தான். சுயநலத்தினால் இயக்கப்படும் சிந்தனைகளும் அறிவுப்பாய்ச்சல்களும் கொண்ட ரஸ்கோல்னிகோவ் என்ற இந்தக் கதாபாத்திரத்திற்கு முற்றிலும் நேரெதிராக சோனியா என்ற மகத்தான கதாபாத்திரத்தை தஸ்தாயெவ்ஸ்கி படைத்திருக்கிறார்.

சோனியாவும் தன்னுடைய மனத்தடைகளைத் தாண்டியவள்தான். சமூகம் தன்னைப் பற்றி என்ன நினைக்கும் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், தன்னுடைய குடும்பத்தை மரணத்திலும் கொடுமையான வறுமையினின்று காப்பாற்ற மஞ்சள் அட்டை பெற்று விபச்சாரியாகிறாள். இவளும் அசாதாரணமானவள்தான். ஆனால் அவளது செயல்களுக்குப் பின் இருப்பது சுயநலமல்ல. தன்னுடைய பிழைப்புக்காகவோ தன்னுடைய வயிற்றுக்காகவோ அவள் அந்தத் தொழிலில் ஈடுபடவில்லை. அவள் தொழிலுக்குச் சென்று திரும்பும் முதல் நாளில், எப்போதும் அவளைத் திட்டித் தீர்க்கும் அவளது மாற்றாந்தாய் காத்ரீனா, ஆதுரத்துடன் அவளது காலைப் பிடித்துவிடும் காட்சி நாவலின் நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று.

சோனியாவிடம் அறிவுக்குழப்பங்கள் இல்லை. சிந்தனை மயக்கங்கள் இல்லை. மாறாக கருணையினாலும் தியாகத்தினாலும் துன்பத்திற்குத் தன்னை முற்றிலும் ஒப்புக்கொடுத்தவள். தன்னை சுயபலியிட்டு தன்னுடைய குடும்பத்திற்கு வெளிச்சம் கொடுப்பவள். துன்பத்தை அனுபவிப்பதன் மூலம் அதைக் கடப்பவள். ரஸ்கோல்னிகோவ் சோனியாவின் கால்களில் மண்டியிடுவதை, தன்னலமற்ற அன்பின் முன் சுயநலமுள்ள அறிவு பணிவதன் குறியீடாகத்தான் பார்க்க முடிகிறது.

2

இந்த நாவல் ஏன் காவல் துறையினருக்கும், குற்றப் புலனாய்வுத் துறையினருக்கும், சட்ட வல்லுனர்களுக்கும் ஒரு தவிர்க்க முடியாத கையேடாக இருக்கிறது என்பதைச் சற்று ஆராயலாம். நவீன இலக்கியத்தில் குற்றம், குற்றவாளியின் குற்றத்துக்கு முன் மற்றும் குற்றத்திற்குப் பின்னான உளவியலை விரிவாகப் பேசிய முதல் நாவல் இது. ரஸ்கோல்னிகோவின் கட்டுரையின் சாரமே இதுதான். “ஒரு குற்றச்செயலைச் செய்வது என்பது எப்போதுமே ஒரு நோய் பீடித்த மனநிலையோடு சம்பந்தப்பட்டிருக்கும்” என்பது இந்நாவல் காட்டும் முக்கியமான உண்மைகளுள் ஒன்று. ரஸ்கோல்னிகோவும் இப்படிப்பட்ட நோய் பீடித்த மனநிலையில்தான் கொலை செய்கிறான். “உனக்கு உடம்பு ஏதும் சரியில்லையா?” என்று கொலையாகவிருக்கும் அந்தக் கிழவியே அவனிடம் கேட்குமளவுக்கு அவன் நோய்வாய்ப்பட்டிருக்கிறான்.

ரஸ்கோல்னிகோவின் உளவியலை விரிவாகவே பார்க்கலாம். அவனது நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கையில், உளவியல் சார்ந்த பல வெளிச்சங்களை வாசகன் பெற்றுக்கொள்ளலாம்.

நாவலின் முதல் அத்தியாயத்திலேயே அவன், தான் செய்யவிருக்கும் கொலைக்கான தயாரிப்புகளைத் துவங்கிவிடுகிறான். அடகு பிடிக்கும் அந்தக் கிழவியின் வீட்டிற்குச் செல்கிறான். அந்தச் சூழலை நன்கு அவதானிக்கிறான். ஒரு திருடன் தான் திருடவிருக்கும் வீட்டினை நோட்டமிடுவதைப் போலத்தான் ரஸ்கோல்னிகோவும் நடந்துகொள்கிறான். இந்த முதல் அத்தியாயத்திலேயே ரஸ்கோல்னிகோவ் வாழும் சூழலைத் தெளிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. முதலின் அவன் வாழும் அந்த அறை. ஒரு மனிதனின் புற உலகம் அவனது அகத்தை நுட்பமாகப் பாதிக்கும் வல்லமையுடையது. ஒரு மனிதன் தங்கியுள்ள அறை என்பது மிக மிக இடுங்கலாகவும், அழுக்காகவும், சுகாதாரமற்றதாகவும் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்தப் புறச்சூழலின் அழுக்கும், கசகசப்பும் அவனது அகத்திலும் சென்று படிகிறது. இந்தக் காரணத்திற்காகத்தான், தியான அறைகள் மிகவும் சுத்தமாகவும், அமைதியாகவும் பராமரிக்கப்படுகின்றன. நவீன அலுவலகங்களில்கூட, பணியாளர்கள் வேலை செய்யும் மேஜை மிகச் சுத்தமாகவும், கோப்புகளும் ஆவணங்களும் மலை போலத் தேங்காமல் நேர்த்தியாகப் பராமரிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுவதும் இதனால்தான்.

ரஸ்கோல்னிகோவ் வாழும் அந்த அழுக்கு மண்டிய, இடுங்கலான, சிதைந்த அறையைப் பற்றிய குறிப்புகள் நாவல் முழுக்கத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. சில சமயம் ஆசிரியரின் கூற்றாகவும், சில சமயம் பிற கதாபாத்திரங்களின் கூற்றாகவும் அந்த அறை, வாசகனின் கவனத்துக்கு உட்படுத்தப்படுகிறது. ரஸுமிகின் ரஸ்கோல்னிகோவிடம் இப்படிச் சொல்கிறான்: “உன்னுடைய அறை ஒரு சவப்பெட்டியைப் போலிருக்கிறது, உனது மனச்சோர்வுக்கு பாதிக்குமேல் இந்த அறைதான் காரணமாக இருக்கும்.”

அடுத்ததாக, அவன் குடியிருக்கும் வீடு இருக்கும் அழுக்கான தெருவும், அதன் மனிதர்களும், அந்தப் பருவநிலையும். குற்றமும் தண்டனையும் நாவல் பிற ரஸ்ய நாவல்களைப் போலப் பனி பொழியும் தெருக்களையும், நரம்புகளை ஊடுருவும் குளிரையும் காட்டவில்லை. நாவலின் பிரதான சம்பவங்கள் அனைத்தும் நடப்பது வெயில் கொளுத்தும் கோடைக்காலத்தில். வியர்வைப் பிசுபிசுப்பும், கண் கூச வைக்கும் வெயிலும் ரஸ்கோல்னிகோவின் உளநிலையிலும் உடல்நிலையிலும் ஆழ்ந்த பாதிப்பைச் செலுத்துவதை வாசகர் உணரலாம்.

தஸ்தாயெவ்ஸ்கியின் கதைநாயகர்கள் பெரும்பாலும் உள்ளொடுங்கியவர்கள் (Introverts). தனக்குள் தானே பேசிக்கொள்பவர்கள். நண்பர்களற்றவர்கள். கூட்டத்தை அஞ்சி விலகுபவர்கள். வெளிச்சத்தை அஞ்சுபவர்கள். இருளுக்கு அணுக்கமானவர்கள். இலக்கில்லாமல் எங்கெங்கோ அலைபவர்கள். தெருவில் நடந்து செல்கையில் அடிக்கடி வழிதவறிவிடுபவர்கள். ஆனால், அன்புக்காக, கருணைக்காக உள்ளூர ஏங்குபவர்கள். ரஸ்கோல்னிகோவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரே வித்தியாசம், பிற நாவல்களின் கதாநாயகர்கள் துன்பங்களைத் தாம் ஏற்பவர்கள். ஒருபோதும் பிறரைத் துன்பப்படுத்துபவர்கள் அல்லர். ஆனால், இந்நாவலின் கதைநாயகன் ஒரு கொலைகாரன்.

கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒரு குற்றவாளியின் மனதில் எப்படி ஏற்படுகிறது என்பதே ஆராய்ச்சிக்குரியதுதான். பலசமயம் அது தற்செயலாகத் தோன்றும் ஓர் எண்ணம்தான். இந்த நாவலிலும், ரஸ்கோல்னிகோவ் மனதில் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் தற்செயலாகத்தான் தோன்றுகிறது. உணவு விடுதியில் அருகிலுள்ள மேஜையில் ஒருவர் மற்றொருவரிடம் அந்தக் கிழவியைக் கொலை செய்தாலும் தகும் என்று பேசிக்கொண்டிருக்கிறார். காற்றில் பரவும் விதையைப் போல அந்தப் பேச்சு ரஸ்கோல்னிகோவின் ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது. கொலை செய்ய வேண்டும் என்று அவன் முடிவெடுத்தபின் நடக்கும் சம்பவங்கள் எல்லாமே அவனுக்கு ஆதரவான வகையில் முற்றிலும் தற்செயலாகவே நடக்கின்றன.

ஆனால் உளவியல் ரீதியாக, ஆழ்மனதின் செயல்பாடுகள் எதுவும் தற்செயலானதில்லை. எதை நினைக்கிறோமோ அது பற்றிய செய்திகள் ஒருவன் காதுகளுக்கு வந்துகொண்டேயிருக்கும், பல சமயம் அவன் குறிப்பாக முயற்சி செய்யாமலேயே, அச்செய்திகள் அவனுக்கு வந்துகொண்டிருக்கும். பலரும் தங்கள் சொந்த வாழ்வனுபவங்களிலேயே இதை அறியலாம். அது எப்படி நடக்கிறது என்பதைத் தர்க்கரீதியாகப் புரிந்துகொள்ளவே முடியாது. ஆனாலும் அது அப்படித்தான் நடக்கும். பல சமயம் நாம் செல்லக்கூடிய ஓர் இடத்துக்கு நம் ஸ்தூல உடல் செல்வதற்கு முன் ஆழ்மனம் அங்கு சென்று அமர்ந்திருக்கும். இது போலப் பல உதாரணங்களை அடுக்கலாம்.

ஒன்றைப் பற்றியே தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்கும்போது அதற்கு நம் ஆழ்மனம் எதிர்வினையாற்றுகிறது. கூகிளில், யூடியூபில் நாம் ஒன்றைத் தேடியபின், அதைச் சார்ந்த செய்திகளே மீண்டும் மீண்டும் நன் கணினியில் தோன்றுவதைப்போலத்தான்.

ஒரு விஷயத்தைக் குறித்தே யோசிப்பது இயல்பானதுதான். ஆனால், இயல்புக்கு மீறிச் செல்லும்போது அதுவே ஒருவகை மனநோய்க்கு இட்டுச்செல்கிறது. ரஸ்கோல்னிகோவுக்கு இவ்வகை மனநோய்க் கூறுகள் உள்ளன. அவனது நண்பனான டாக்டர் ஜோஷிமோவ் அதை “monomania” என்கிறார். அதாவது, குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் மட்டுமே தனிக்கவனத்தைச் செலுத்தி வெறியோடு அதிலேயே முனைந்திருக்கும் ஒருவகை மனநோய்.

தற்செயல்களின் அணிவகுப்பு, ரஸ்கோல்னிகோவ் கொலை செய்வதற்கு எல்லா வகையிலும் உதவிசெய்கிறது. அவனுக்கு வேண்டிய தகவல்கள் தற்செயலாகவே அவனுக்கு கிடைக்கின்றன. கொலை செய்வதற்கான இணக்கமான காலச் சூழ்நிலைகளை அவனுக்கு ஏற்படுத்தித் தருகின்றன. இதன் உச்சமாக, கொலை செய்யப் பயன்படுத்தும் கோடரியே அவனுக்குத் தற்செயலாகக் கிடைப்பதுதான். ரஸ்கோல்னிகோவ் நடந்து செல்கையில், தெருவில் லிஸாவெதாவும் இரண்டு வியாபாரிகளும் பேசுவதைத் தற்செயலாகக் கேட்கிறான். மறுநாள் மாலை ஏழு மணியளவில் கிழவி வீட்டில் தனியாகத்தான் இருப்பாள் என்பதை அவர்களின் உரையாடல் மூலமாகத்தான் ரஸ்கோல்னிகோவ் அறிந்து கொள்கிறான். கொலை செய்வதற்கான அவன் பயன்படுத்த எண்ணியிருந்த கோடரி அவன் எதிர்ப்பார்த்திருந்த இடத்தில் இல்லை. அது அவனுக்கு மிகுந்த சோர்வை அளிக்கிறது. ஆனாலும், தற்செயலாக அவனது வீட்டின் காவலாளியின் அறையில் அவனுக்குக் கோடரி கிடைக்கிறது. இந்த இடத்தில் ரஸ்கோல்னிகோவே வியப்படைந்து, “இது சாத்தானின் திட்டமாகத்தான் இருக்க வேண்டும்,” என்று நினைத்துக்கொள்கிறான். அதன்பின் அவன் அந்தக் கிழவியின் வீட்டுக்குள் செல்லும்போதும் எவரும் அவனைப் பார்க்கவில்லை. சூழ்நிலை முற்றிலும் அவனுக்கு அணுக்கமானதாகவே இருக்கிறது. ஆனால், இந்தத் தற்செயல்கள்தான் அவனை இரண்டாவது கொலையையும் செய்ய வைக்கிறது. குற்றம் செய்யும்போது குற்றவாளி தன்னையறியாமல் தவறு செய்வான் என்பது முற்றிலும் நிரூபிக்கப்பட்ட உண்மை என்றே சொல்லலாம். ரஸ்கோல்னிகோவும் இதற்கு விதிவிலக்கல்ல. கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே மூர்க்கமாகச் செயல்படும் அவன், அந்த வீட்டின் கதவை மூட மறந்துவிடுகிறான். திறந்திருந்த கதவின் வழியாகத்தான் லிஸாவெதா நுழைகிறாள். அவளையும் கொலை செய்த பின்னரும்கூட அவனுக்குத் தான் கதவை மூடாதது நினைவுக்கு வரவில்லை. தன் கைகால்களையும், கோடரியையும் பொறுமையாகக் கழுவிய பின்னர்தான் அவனுக்குத் தான் கதவை மூடாதது நினைவுக்கு வருகிறது. அதுவரைகூட வெளியாள் யாரும் அங்கு வரவில்லை என்பது முற்றிலும் வியப்பளிப்பதுதான். ஆம். சாத்தானின் திட்டமேதான்.

கொலை செய்தபின் ஒருவனது மனநிலை எப்படியிருக்கும் என்பதை ரஸ்கோல்னிகோவின் மனநிலையின்மூலம் துல்லியமாக அறிந்துகொள்ள முடிகிறது. இரு சம்பவங்களை இங்கு நினைவு கூரலாம்.

  1. கொலை செய்ததும், வீட்டிற்கு வெளியே சந்தடி கேட்டு, கதவை மூடிக்கொள்கிறான். கதவுக்கு வெளியே உள்ள ஆள், அழைப்பு மணியை அழுத்தியதும், ரஸ்கோல்னிகோவுக்கு அந்த வீடே அசைவது போலிருக்கிறது. இது ஒரு நுட்பமான இடம். இலக்கிய வாசகன் தவறவிடக்கூடாத இடமும்கூட.
  2. கொலை செய்தானதும், ரஸ்கோல்னிகோவ் தன் அறைக்குத் திரும்புகையில், யாரும் இல்லாத அந்த அறை அவனது மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கிறது. அந்த நேரத்தில் யாராவது ஓர் ஆள் அங்கு வந்திருந்தாலும் அவன் தன்னையும் மறந்து கதறி அழுதிருப்பான் என்று அவன் மனநிலையை தஸ்தாயெவ்ஸ்கி வெளிப்படுத்தும் இடம்.

ரஸ்கோல்னிகோவ் சாதாரணர்கள் x அசாதாரணர்கள் என்ற கோட்பாட்டுக் குழப்பத்தில் கொலை செய்வது என்பது அவனது உளவியலின் ஒரு கோணம்தான். அவனைப் புரிந்துகொள்வதற்கு நிறைய சாத்தியங்களை தஸ்தாயெவ்ஸ்கி நாவல் முழுக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கியபடியே இருக்கிறார்.

ஒருவனது ஆழ்மனதைத் துல்லியமாக வாசகனுக்குக் காட்டுவதற்கு தஸ்தாயெவ்ஸ்கி “கனவுகள்” என்ற கருவியைத்தான் பிரதானமாக உபயோகிக்கிறார். ரஸ்கோல்னிகோவுக்கு நாவல் முழுக்க ஏற்படும் கனவுகளின் வழியே அவனது ஆழ்மனத்தை வாசகர்கள் நன்கு அறிந்துகொள்ள முடிகிறது. அதிலும், “உடல்நலம் குன்றியிருக்கும் வேளையில் ஒரு மனிதனுக்கு ஏற்படும் கனவுகள் மிகவும் அபூர்வமாகவும், வெளிப்படையாகவும், தெளிவாகவும் இருக்கும். மிக நுணுக்கமான விஷயங்களைக்கூட அவை விரிவாகக் காட்டும். இம்மாதிரியான கனவுகள் ஒரு மனிதனுக்கு வெகு காலங்களுக்கு நினைவு கூரப்படுபவையாக இருக்கும்,” என்ற வரிகளை மறக்கமுடியாது.

அவ்வகையில், கொலை செய்வதற்கு முன் ரஸ்கோல்னிகோவுக்கு ஏற்படும் முதல் கனவு மிக விரிவானதும் நுட்பமானதும் ஆகும். ஏழு வயது குழந்தையாகத் தன் அப்பாவுடன் கல்லறைக்குச் செல்லும் வழியில் ஒரு வண்டிக்காரன் தனது குதிரையை அடித்தே கொல்வதைப் பற்றிய விரிவான காட்சியமைப்புகளுடன் அவன் காணும் கனவு. இக்கனவு வாசகனை மிகவும் அதிர்ச்சியடைய வைப்பது. குதிரையை அணுவணுவாக சித்திரவதை செய்து கொல்லும் இந்தக் காட்சி வாசிக்கும் எவரையும் தொந்தரவுக்குள்ளாக்குவது. அந்தத் தெருவில் எத்தனையோ மனிதர்கள் அக்காட்சியைக் கண்டுகொண்டிருந்தாலும் ஒரே ஒரு கிழவரும், சிறுவனான ரஸ்கோல்னிகோவும் மட்டுமே இறந்து கொண்டிருக்கும் அந்தக் குதிரைக்காக இரக்கப்படுகிறார்கள். சிறுவனான ரஸ்கோல்னிகோவினால் அந்தக் கொடுமையைத் தடுக்க முடியவில்லை, பார்த்துக்கொண்டிருக்கவும் முடியவில்லை.

ரஸ்கோல்னிகோவ், அந்தக் குதிரைக்காரனது இடத்தில் அடகு பிடிக்கும் அல்யோனா கிழவியைக் கற்பனை செய்து பார்த்திருக்கக்கூடும். அதுவே அவனது மன ஆவேசத்துக்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும். குதிரைக்காரன் தன் குதிரைக்காக இரக்கப்படாமல், அதனைச் சித்திரவதை செய்து கொல்வதைப் போலத்தான் அந்தக் கிழவியும் தன்னிடம் அடகு பிடிக்க வருபவர்களை நடத்துகிறாள். அவர்களை அநியாயமாக உறிஞ்சிக் கொழுக்கும் அற்ப ஜீவி அவள். நாவல் முழுக்க ஒரு இடத்திலும், கிழவிக்காக ரஸ்கோல்னிகோவ் இரக்கப்படவேயில்லை. அவளைக் கொல்லப்படவேண்டிய ஒரு பேனைப் போலத்தான் நினைக்கிறான். ஆனால், அவன் சற்றும் திட்டமிடாமல் செய்த அந்த இரண்டாவது கொலைதான் அவனை நிலைகுலையச் செய்கிறது. காரணம், இப்போது அவன் கொன்றது அந்த இரக்கமில்லாத வண்டிக்காரனை அல்ல. அனுதாபத்துக்குரிய அந்த குதிரையை. லிஸாவெதா ஒரு அப்பாவி. கள்ளங்கபடமில்லாது, சூதுவாது அறியாது, தன் சகோதரியின் கொடுமைகளுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் ஒரு பாவப்பட்ட ஜீவன். அவளைக் கொல்வதன் மூலமாக, தன்னையும் அறியாமல், ரஸ்கோல்னிகோவ், அந்த குதிரை வண்டிக்காரனாக மாறிவிடுகிறான். இதை அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. முதல் கொலையின் மூலமாக வண்டிக்காரனைப் பழிவாங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த அவனை அடுத்த சில நிமிடங்களில் விதி வண்டிக்காரனாக மாற்றிவிட்டது. அவனது மனப்பிறழ்வுக்கு இதுவுமே ஒரு முக்கியமான காரணம் எனலாம்.

சோனியாவை ஏன் ரஸ்கோல்னிகோவுக்குப் பிடித்திருக்கிறது என்பதன் காரணம் அவன் சோனியாவையும் இந்தக் குதிரையின் இடத்தில் வைத்துப் பார்ப்பதனால் இருக்கலாம். லிஸாவெதா என்ற குதிரையைக் கொன்றுவிட்டு சோனியா என்ற இன்னொரு குதிரையின் முன் தன் பாவத்துக்காக மண்டியிடுகிறான். ஆனால், தான் செய்த கொலைக்கு இன்னொரு அப்பாவியான பெயிண்டர் மிகோலாய் மாட்டிக்கொள்வதும், அவனுக்கு இதனால் ஏற்படும் இன்னல்களுக்கும் ஒரு இடத்திலும் ரஸ்கோல்னிகோவ் வருந்தியதாகத் தெரியவில்லை.

அந்தப் பெயிண்டரின் மனநிலை இன்னொரு ஆச்சர்யம். தற்செயலாகக் கிழவியின் சில நகைகள் (ரஸ்கோல்னிகோவின் கால்சட்டைப் பையில் இருந்து நழுவியவை) அவனுக்குக் கிடைப்பதும், அதை விற்க வரும்போது எதிர்பாராமல் அவன் மாட்டிக்கொள்வதும், ஒருகட்டத்தில் அவனே தான்தான் குற்றவாளி என்று ஒத்துக்கொள்வதும், தூக்கு மாட்டித் தற்கொலை செய்ய முயற்சிப்பதும், துன்பங்களை வலிய ஏற்றுக்கொள்ளும் “ஷீஸ்மாடிக்” (schismatic) என்ற மதப்பிரிவைச் சேர்ந்தவனாதலால் அந்தப் பின்புலத்தில் வைத்து அவனைப் புரிந்துகொள்ளும் போர்ஃபிரியும் மிகுந்த வியப்பை ஏற்படுத்துபவர்கள்.

நாவல் காட்டும் முக்கியமான உண்மைகளுள் ஒன்று, கொலை செய்தபின் குற்றவாளியின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள். இந்நாவலின் பக்கங்களில் எல்லாம் இந்த மனநிலையே மிக விரிவாகக் காட்டப்பட்டிருக்கிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் வரிகளில், “ஒரு கொலையாளி குற்றத்தை மறைக்க முடியாமல் போவதற்கு வெளிவிஷயங்கள் தாண்டி குற்றம் செய்தவனிடமே இருக்கும் ஏதோ ஒரு இயல்புதான் அவன் மாட்டிக்கொள்வதற்குக் காரணமாகிவிடுகிறது.” கொலை செய்தபின் ரஸ்கோல்னிகோவின் மனநிலை, அவனது நடவடிக்கைகள், இவை யாவும் மேற்கண்ட வரியை நியாயப்படுத்துகின்றன. ஜன்னி கண்டு படுத்திருக்கும் நிலையிலும், இந்தக் கொலையைப் பற்றிப் பிறர் பேசக்கேட்கும்போதெல்லாம் அதீதமான ஆர்வத்தைக் காட்டுகிறான் ரஸ்கோல்னிகோவ். அவனது இயல்பான மனநிலைக்கு அவனால் திரும்ப முடியவில்லை. [அவனும் ரஸுமிகினும் போர்ஃபிரியை அவரது இல்லத்தில் சந்திக்கப்போகும் வழியில்தான் அவன் மனம்விட்டுச் சிரிக்கிறான். மற்றபடி நாவல் முழுக்க இறுக்கமான, கிட்டத்தட்ட மனநிலை பிறழ்ந்த ரஸ்கோல்னிகோவையே பார்க்க முடிகிறது]. பல்வேறுபட்ட எண்ணங்களும் பயங்கரமான கனவுகளும் அவனைத் துரத்தியபடி இருக்கின்றன. தடயங்களையெல்லாம் மறைக்கிறான், தன் அறையில் வைத்திருந்த கிழவியின் பர்ஸ், நகைகள் யாவற்றையும் இடம் மாற்றுகிறான். மீண்டும் மீண்டும் ஏதாவது தடயத்தை விட்டுவந்துவிட்டோமோ என்று தனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டு அவதிப்படுகிறான்.

நாவலில் போர்ஃபிரி ரஸ்கோல்னிகோவிடம், ஒரு குற்றம் செய்தபின் குற்றவாளியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும், அதனைக் காவல்துறை எப்படிக் கண்டுபிடிக்கும், தெரிந்தே குற்றவாளியை காவல்துறை சுதந்திரமாக எப்படி நடமாட அனுமதிக்கும், விட்டில்பூச்சி விளக்கையே சுற்றிவருவது போலக் குற்றவாளி எப்படிக் காவல்துறையினரையே சுற்றிவருவான் என்று மிக விரிவாக எடுத்துரைக்கிறார். ரஸ்கோல்னிகோவின் நடவடிக்கை ஒவ்வொன்றும் அவர் சொல்லும் தியரியை உறுதிப்படுத்துவதாகவே அமைகிறது.

ஒரு கட்டத்தில் தன்னை யாரும் சந்தேகிக்கவில்லை, தான் மாட்டிக்கொள்ள வழியே இல்லை என்று தெளிவான பின்னர், குற்றவாளிக்கு ஒரு சலிப்பு ஏற்படும் என்கிறார் போர்ஃபிரி. அதன்பின் அவன் தானாகவே அடிக்கடி காவல் துறையினரின் கண்களில் தென்பட்டுக்கொண்டிருப்பான் என்கிறார் போர்ஃபிரி. ரஸ்கோல்னிகோவும் அப்படித்தான் நடந்துகொள்கிறான். ஒரு கட்டத்தில் சலிப்பு மிகுதியால் அவனே சமெடோவ் என்ற அதிகாரியிடம் தான் அந்தக் கொலையைச் செய்தால் எப்படிச் செய்திருப்பேன் என்று விரிவாகச் சொல்கிறான். கொலை நடந்த அந்த வீட்டுக்கே மீண்டும் செல்வதும், அங்கு கலாட்டா செய்வதும் எல்லாம் அந்தச் சலிப்பின் உந்துவிசையினால்தான். அதனோடு மனநோய்க் கூறுகளும், உடல் நோயும் ஒன்று சேரும்போது அவனால் அவனைக் கட்டுப்படுத்திக்கொள்ளவே இயலவில்லை.

போர்ஃபிரி இந்நாவலின் மிக புத்திசாலியான கதாபாத்திரம். அவர் தோன்றும்போதெல்லாம் வாசகனுக்கு மெல்லிய உவகையே ஏற்படுகிறது. அவருக்கும் ரஸ்கோல்னிகோவுக்கும் இடையேயான அந்த அழகிய கண்ணாமூச்சி ஆட்டம் நாவலை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறது. போர்ஃபிரி மனோதத்துவ ரீதியில் குற்றவாளிகளை ஆராய்ந்து அதற்கேற்ப தன்னுடைய விசாரணை வியூகங்களை வகுத்துக்கொள்பவர். அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லின் பின்னாலும் தனக்கு வேண்டிய அர்த்தத்தை ரஸ்கோல்னிகோவ் கண்டுபிடிப்பது, அவரது ஒவ்வொரு செய்கையையும் சந்தேகத்துடன் அணுகுவது போன்றவை எல்லாம் ஒரு குற்றவாளியின் மனநிலையை மிக மிகத் துல்லியமாகக் காட்டுபவை. உதாரணமாக, பேச்சுவாக்கில் தற்செயலாக போர்ஃபிரி ரஸ்கோல்னிகோவுடன் கைகுலுக்க மறந்துவிடுகிறார். உடனே,ரஸ்கோல்னிகோவ், இவர் தன்னைக் கொலையாளி எனக் கண்டுபிடித்துவிட்டாரோ, அதனால்தான் தனக்குக் கைகொடுக்க மறுக்கிறாரோ என்று அவனுக்கு ஏற்றவகையில் விளங்கிக்கொள்கிறான். இப்படி எலியும் பூனையையும் போல அவர்கள் இருவருக்குமிடையே நடக்கும் மெல்லிய மோதலையும், புகைமூட்டமான உரையாடல்களையும் மட்டுமே தனியாக எடுத்து வாசிக்கலாம். அந்த அளவிற்கு நுட்பமான பகுதிகள் அவை. தனிப்பட்ட முறையில் எனக்கு போர்ஃபிரி மிகப் பிடித்தமான கதாபாத்திரமாக மாறிப்போனதற்கும் இதுவே காரணம்.

3

இந்நாவலில் இரு குற்றவாளிகள் இடம்பெறுகிறார்கள். ஒருவன் ரஸ்கோல்னிகோவ், மற்றொருவன் ஸ்விட்ரிகைலோவ். இந்நாவலின் மிகப் புதிர்வாய்ந்த கதாபாத்திரம் ஸ்விட்ரிகைலோவ். ரஸ்கோல்னிகோவைக்கூடப் புரிந்துகொள்ள இயலும். ஆனால், ஸ்விட்ரிகைலோவைப் புரிந்துகொள்வது வாசகனுக்கு உண்மையில் சவாலானதுதான். ரஸ்கோல்னிகோவ் சிந்தனைக் குழப்பங்களால் குற்றம் புரிகிறான். மாறாக, ஸ்விட்ரிகைலோவ் புலன் இன்பங்களுக்காக குற்றம் புரிகிறான். ஒரே வித்தியாசம், அவன் சட்டத்தில் பிடியில் வலுவாக மாட்டிக்கொள்ளவில்லை.

ஸ்விட்ரிகைலோவ், பெண்களை வெறும் போகப்படையல்களாக நினைக்கும் ஒரு கதாபாத்திரம். அவர்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதற்கு எந்த எல்லைக்கும் செல்பவன். ஒரு இக்கட்டான கடன் பிரச்சனையில் சிறைக்குச் செல்லாமல் அவனைக் காப்பாற்றிய அவனது மனைவியையே தொடர்ந்து கொடுமைகள் செய்து அவளைச் சாவை நோக்கித் துரத்தியவன். வாய் பேசமுடியாத, காது கேட்காத ஒரு சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி அவளைத் தற்கொலைக்குத் துரத்தியவன். இது தவிர, தன்னுடைய பண்ணை அடிமைகளில் ஒருவனை அடித்துத் துன்புறுத்தி அவனது தற்கொலைக்கும் காரணமாகிறான். ஐயமேயின்றி, ரஸ்கோல்னிகோவைக் காட்டிலும் பெரிய குற்றவாளி ஸ்விட்ரிகைலோவ்தான். இருவருக்கும் இடையே அடிப்படையில் உள்ள வித்தியாசம் என்பது, ரஸ்கோல்னிகோவ் மனிதாபிமானம் என்ற உணர்ச்சியை இன்னும் முற்றாக இழக்கவில்லை, கூடுதலாக அவனுக்குக் குற்றவுணர்ச்சியும் உண்டு. ஸ்விட்ரிகைலோவுக்கு இந்த இரண்டுமே இல்லை.

ஆனாலும் அவர்கள் இருவருக்குள்ளும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவரும் அதீத மனப்பிரமையுள்ளவர்கள், மனநோய்க் கூறுகள் உடையவர்கள். ரஸ்கோல்னிகோவிடம் அது வெளிப்படையாகத் தெரிகிறது. ஸ்விட்ரிகைலோவிடம் அது வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆனாலும், ரஸ்கோல்னிகோவைக் காட்டிலும் மனநோயினால் மிகத் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருப்பது ஸ்விட்ரிகைலோவ்தான். அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் இந்த ஒற்றுமையை ஸ்விட்ரிகைலோவ் முதல் சந்திப்பிலேயே உணர்ந்துவிடுகிறான். ரஸ்கோல்னிகோவினாலும் அதை உணரமுடிகிறது. ஸ்விட்ரிகைலோவ் ரஸ்கோல்னிகோவைப் பற்றி யோசித்துப்பார்க்கையில், அவன் மட்டும் பலவிதமான சிந்தனைக் குழப்பங்களால் பீடிக்கப்படாமல் போயிருந்தால் ஒரு “கெட்டிக்கார அயோக்கியனாக” (ஸ்விட்ரிகைலோவ் போல) உருவாகியிருப்பான் என்ற முடிவுக்கு வருகிறான்.

Intense hallucination (உக்கிரமான உருவெளித்தோற்றம்) என்பது மனநோயின் உச்சநிலைகளில் ஒன்று (உளவியல் நிபுணர்கள் மேலும் பொருத்தமான பெயரைச் சொல்ல முடியும்). குற்றவாளிகள், நோய்க்கூறுடையவர்கள், குடிநோயாளிகள் ஆகியோரில் இந்த உச்சநிலைகளைக் காணலாம். கனவுக்கும் நிஜத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவும் அழிந்து, கனவும் நிஜமும் ஒன்றே போலத் தோன்றும் நிலை இது. மனநோயாளிகளில் ஒரு சிலர் விழித்திருக்கும்போதே நிஜத்தில் பிறர் காணமுடியாத காட்சிகளையும், இறந்துபோன நபர்களையும் பார்க்கத் துவங்கி அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். நோய்க்கூறுகளுடையவர்களாக இருந்துவிட்டால், மிக விரைவிலேயே இந்த உச்ச நிலைக்கு அவர்கள் சென்றுவிடுகிறார்கள். கொலை செய்த மறுநாள் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது ரஸ்கோல்னிகோவின் கண்களுக்கு, போலீஸ்காரர் ஒருவர் அவன் தங்கியிருக்கும் வீட்டின் சொந்தக்காரியை அடித்துத் துன்புறுத்தும் காட்சி தெரிகிறது. அடிதாங்க முடியாத வீட்டுக்காரியின் ஓலமும் கேட்கிறது. வேலைக்காரியிடம் அவன் அதைக் குறித்துச் சொல்லும்போது, அவள் அவனை ஒரு பைத்தியக்காரனைப் பார்ப்பதைப் போலப் பார்க்கிறாள். “அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, அது உனது கற்பனை,” என்கிறாள். மனநோயின் இந்த உச்சநிலை ரஸ்கோல்னிகோவுக்கு ஒரு முறைதான் ஏற்படுகிறது. ஆனால், ஸ்விட்ரிகைலோவுக்கு அது பலமுறை மிக இயல்பு நிலையில் இருக்கும்போதே நிகழ்கிறது. இறந்துபோன தனது மனைவியின் ஆவியை அவன் பார்க்கத் துவங்குகிறான். அவளிடம் இயல்பாகவே பேசுகிறான். தன்னால் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட வேலைக்காரனின் ஆவியையும் அவனால் பார்க்க முடிகிறது. ஸ்விட்ரிகைலோவ் இதையெல்லாம் மிக இயல்பாக எடுத்துக்கொள்வதோடு ஆவிகளைப் பற்றிய தன்னுடைய அவதானிப்பை ரஸ்கோல்னிகோவிடம் பகிர்ந்துகொள்ளவும் முன்வருகிறான்.

ரஸ்கோல்னிகோவ், ஸ்விட்ரிகைலோவ், இருவருக்குமே மிக மிகத் துல்லியமான கனவுகள் வருகின்றன. இவர்கள் இருவரின் கனவுகளைத்தான் நாவலில் தஸ்தாயெவ்ஸ்கி விரிவாக எழுதிச்செல்கிறார். குறிப்பாக, தங்களால் கொலை செய்யப்பட்ட மனிதர்கள் இவர்கள் இருவரின் கனவிலும் மீண்டும் தோன்றுகிறார்கள். அந்தக் கனவுகளுக்குப் பின்னர் இருவருமே மனதளவில் மிகவும் சோர்ந்துவிடுகிறார்கள். ரஸ்கோல்னிகோவுக்கும் அந்தக் கிழவியைத் தான் கொலை செய்யும் காட்சி கனவில் தோன்றுகிறது. ஸ்விட்ரிகைலோவுக்கும் தன்னால் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட சிறுமி மீண்டும் கனவில் தோன்றுகிறாள். அடுத்த நாள் காலையில் ஸ்விட்ரிகைலோவ் தற்கொலை செய்துகொள்கிறான்.

தன்னுடைய இறுதியை முன்னரே உணர்ந்தபிறகுதான் ஸ்விட்ரிகைலோவ் பீட்டர்ஸ்பெர்க் நகருக்கு வருகிறான். துனியாவை மீண்டும் தன்வசப்படுத்த இயலும் என்ற ஒரு மெல்லிய நம்பிக்கையும் தகர்ந்துவிட்டபின் அவனுக்கு இந்த உலகில் செய்வதற்கு ஒன்றுமில்லை. அவனது தற்கொலை தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. எந்தப் பெண்ணால் தன் வாழ்வில் மீண்டும் ஒரு மலர்ச்சி ஏற்படும் என நினைத்தானோ அதே பெண்ணிடமிருந்துதான் தற்கொலைக்கான ஆயுதம் அவனுக்குக் கிடைக்கிறது.

4

ஒரு படைப்பை வாசிக்கையில் அந்தப் படைப்பின் நெகிழ்விலும் துயரத்திலும் வாசகன் ஆழமாகத் தோய்ந்து கண்ணீர் பெருக்கி அந்தரங்கச் சுத்தியடைவதுதான் வாசிப்பின் உச்சம். பாரதியின் வார்த்தைகளில், “கண்ணீர்த் துளிவர உள்ளுருக்குதல்.” ஆங்கிலத்தில் இதை Catharsis என்கிறார்கள். செவ்வியல் படைப்புகளை வாசிக்கையில் இந்த Catharsis அனுபவம் வாசகனுக்கு அதிகம் ஏற்படும். இந்த நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல. என் வாசிப்பில் Catharsis என்ற இந்த அனுபவத்தை நான் கீழ்கண்ட தருணங்களில் அடைந்தேன்.

  1. சோனியாவின் பாதத்தில் காதரீனா முத்தமிடுதல்.
  2. ரஸ்கோல்னிகோவ் சோனியாவின் கால்களில் மண்டியிடுதல். சந்தேகமேயில்லாமல், நாவலின் உச்ச தருணம் என்பது இதுவே.
  3. சோனியாவின் சிலுவையை ரஸ்கோல்னிகோவ் பெற்றுக்கொள்ளும் தருணம்.
  4. நான்கு வீதிகளும் சந்திக்கும் முனையில், ரஸ்கோல்னிகோவ் மண்டியிட்டு மண்ணை முத்தமிட்டு இந்த ஒட்டுமொத்த மனித குலத்திடமும் மன்னிப்பு கேட்பது.

காதரீனா இந்த நாவலின் பாவப்பட்ட கதாபாத்திரங்களில் ஒருவள். துயரத்தையன்றி எதையுமே தன் வாழ்வில் சந்திக்காதவள். “கடவுள் கருணைமயமானவர்தான். ஆனால் அந்தக் கருணை கடைசிவரை எங்களுக்கு மட்டும் கிடைக்கவேயில்லை” என்று சொல்பவள். இளமையில் வசதியாக வாழ்ந்தவள், பின்னர் வறுமையின் கொடிய சுழலுக்குள் சிக்கிக்கொண்டவள். கொடிய வறுமையிலும் சுத்தமாகவும், கௌரவமாகவும் வாழ முயல்பவள். சுயகௌரவமுள்ள ஏழைக்குத்தான் எத்தனை துன்பங்கள். ஆனால், வறுமையின் உக்கிரம் தாளாமல் ஒருவித அதீதமான மனச்சிதைவுக்கு ஆளாகிறவள். மர்மெலாதோவ் போன்ற ஒரு கணவனைப் பெற்றவள் வேறு எப்படி இருக்க முடியும். ஆனாலும், சுய கௌரவத்தை முற்றிலும் துறக்க முடியாமல் அவ்வப்போது அதனாலே பல சிக்கல்களிலும் மாட்டிக்கொள்பவள். குறிப்பாக தனது வீட்டுக்காரியிடம் அவளுக்கு ஏற்படும் பல்வேறு பூசல்கள். ஆனாலும், எப்படிப்பட்ட தருணத்திலும் பெண்கள் தங்கள் தந்தையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை மீண்டும் மீண்டும் பல தருணங்களில் காத்ரீனா நிரூபித்துக்கொண்டேயிருக்கிறாள். தான் வசதியான குடும்பத்தில் பிறந்தவள், ஒருகாலத்தில் செல்வச் செழிப்பாக இருந்தவள் என்பதைத் தன்னைச் சூழ்ந்திருப்பவர்களிடம் அவள் மீண்டும் மீண்டும் காட்டிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. வறுமையின் உக்கிரம் அதிகரிக்க அதிகரிக்க அவள் தன் இயல்பு நிலையிலிருந்து பிசகி மனச்சிதைவுக்கு ஆளாகிறாள். கூடவே காச நோயும் சேர்ந்துகொண்டு அவளைக் காவு வாங்குகிறது.

சோனியாவைத் திட்டிக்கொண்டேயிருந்தாலும் அவளால் சோனியாவை வெறுக்க இயலவில்லை. அவள் தனது கோபத்தையெல்லாம் கொட்டுவதற்கு சோனியா ஒருத்திதான் இருக்கிறாள். ஆனாலும், முதல் நாள் தொழிலுக்குச் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பும் சோனியாவின் கால்களைப் பிடித்துவிட்டு அவளது பாதத்தில் முத்தமிடும்போது காதரீனாவுக்குள் இருக்கும் அன்னை வெளிவருகிறாள். அவளால் அப்போது செய்ய முடிந்தது அது ஒன்றுதான். நாவலின் நெகிழ்ச்சியான தருணம் இது.

அடுத்ததாக, ரஸ்கோல்னிகோவ் சோனியாவின் அறைக்குச் சென்று அவளிடம் பைபிள் வாசிக்கச் சொல்லும் அந்தக் காட்சி. நாவலின் மையமான பகுதி இது. ரஸ்கோல்னிகோவ் ஆத்திகன் அல்ல. குற்றவுணர்ச்சி அவனைத் துரத்திக்கொண்டும் அலைக்கழித்துக்கொண்டும் இருக்கும் வேளையிலும், அவனால் ஒரு பாதிரியாரிடம் சென்று பாவ மன்னிப்பு கோர முடியாது. அவன் பாவ மன்னிப்பு கோரத் தேர்ந்தெடுப்பது ஒரு விலைமகளான சோனியாவைத்தான். அது அக்காலத்தில் எந்த விதமான அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை ஊகிக்கமுடிகிறது. மரபான மதநம்பிக்கைகளைப் புறக்கணித்து மாற்று ஆன்மிகத்தை தன் படைப்புகளில் முன்வைப்பவர் தஸ்தாயெவ்ஸ்கி. அப்படிப்பட்டவர் எழுதும் நாவலில் ஒரு பாதிரியாரிடம் தன்னுடைய கதை நாயகனை மன்னிப்பு கேட்கும்படி எழுதியிருந்தால்தான் அது செயற்கையாக இருந்திருக்கும். மனிதனுக்குள் கடவுளைத் தேடும் ஒரு படைப்பாளிக்கு சோனியாவையே பாதிரியாரின் இடத்தில் வைத்துப் பார்க்க இயலும்.

தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் அனைவரும் தனிமனிதர்கள் அல்லர். அவர்கள் யாவரும் ஒரு கொள்கையின் பிரதிநிதிகள். (ரஸ்கோல்னிகோவ் அறிவின் துயர்களால் அல்லலுறும் கதாபாத்திரம். சோனியா துன்பத்தை ஏற்றுக்கொண்டு அதை அனுபவிப்பதன் மூலம் அத்துன்பத்தைக் கடப்பவள். துன்பத்தைக் கடப்பதற்கான வலிமையை மனிதர்கள் மீதுள்ள தனது மாறாத கருணையினின்றும் பெற்றுக்கொள்கிறாள். லூசின் என்பதன் முழுமுற்றான தீமையின் பிரதிநிதி. ஸ்விட்ரிகைலோவ் சுயநலத்திற்காக, புலனின்பத்திற்காகப் பிறரைச் சுரண்டத் தயங்காதவன். குடும்பத்திற்காகத் தன்னுடைய ஆசாபாசங்களைத் துறந்து தன்னை சுயபலியிட்டுக்கொள்ள முன்வருபவள் துனியா. எந்தத் துன்பம் வந்தாலும் கலங்காமல் நேர்நிலையில் இருந்து அதைச் சந்திப்பவன் ரஸூமிகின்).

ஆகவே, சோனியாவின் கால்களில் ரஸ்கோல்னிகோவ் மண்டியிட்டு அவளது பாதங்களை முத்தமிடுவது என்பது, அறிவு கருணையின் முன் மண்டியிடும் காட்சியாகவே வாசிக்க முடிகிறது. கருணையை உதறிய குற்றவுணர்ச்சிதான் அறிவைக் கருணையின் முன் மண்டியிடவைக்கிறது. ஒரு கொலை செய்வதன் மூலம் துன்பத்தை வெல்ல நினைத்தவனுக்கு, துன்பத்தை வெல்வதற்குக் கொலையெல்லாம் செய்ய வேண்டியதில்லை, பிறருக்காக அதைத் தாம் ஏற்றுக்கொண்டு அனுபவத்தாலே போதும் என்ற தத்துவத்தின் பிரதிநிதியாக நிற்பவள் ஒரு புதிய தெய்வமாக, தேவதையாகத் தோன்றுகிறாள். அதனால்தான், உலகின் ஒட்டுமொத்த துயரத்தின் பிரதிநிதியாக நிற்கும் அவளிடம், “உலகில் உள்ள மனிதர்கள் படும் எல்லாத் துயரங்களுக்கும் முன்னால்தான் நான் மண்டியிட்டேன்,” என்று ரஸ்கோல்னிகோவினால் சொல்ல முடிகிறது.

வேறொரு கோணத்தில் பார்த்தால், ரஸ்கோல்னிகோவ் தன்னையுமறியாமல் சோனிவையை லிஸாவெதாவின் பிரதிநிதியாகக் காண்கிறான். அவளது முகம், அவளது பார்வை, இவை யாவும் லிஸாவெதாவை அவனுக்கு நினைவூட்டுகிறது. ஒருவகையில் அவன் லிஸாவெதாவின் கால்களில் மண்டியிடுகிறான் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

“லாசரஸ் உயிர்த்தெழுதல்” என்பது ரஸ்கோல்னிகோவின் ஆழ்மனதில் உள்ள நல்லியல்பு மீண்டும் உயிர்த்தெழுவதன் குறியீடுதான். அதுவரை அவனுக்கே புலப்படாதிருந்த அந்த நல்லியல்புகள் சோனியா முன் உயிர்த்தெழுகின்றன. தன்னாலும் திருந்த முடியும் என்பதன் ஆரம்ப சமிஞ்கைகளை அவனது மனம் அந்த இடத்தில் பெற்றுக்கொள்கிறது.

ஆம். கொடிய கொலைக்குற்றத்தைச் செய்த ஒருவன், ஒரு மாபெரும் சர்ச்சோ, பாதிரியாரோ வழங்கமுடியாத கடைத்தேற்றத்தை, இருள்மிகுந்த ஒரு இடுங்கிய அறையில், ஒரேயொரு மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில், ஒரு விலைமகளிடம் பெற்றுக்கொள்கிறான். அதிலும், அவள் வாசிக்கும் அந்த பைபிள் அவன் கொலை செய்த பெண்ணினுடையது. இந்த சூழலின் முரண்தான் இந்தக் காட்சியை வாசகன் மனதில் அழுத்தமாக நிறுவிச் செல்கிறது. தஸ்தாயெவ்ஸ்கி அந்தக் காட்சியை இவ்வாறு விவரிக்கிறார், “மங்கலான அந்த மெழுகுவர்த்தியின் ஒளி, வறுமையின் சித்திரம் போல் விளங்கிய அந்த அறையின் அவலத்தைப் புலப்படுத்தியதோடு, ஒரு கொலைகாரனும், ஒரு விலைமகளுமாகச் சேர்ந்து ஒரு புனித நூலைப் படிப்பதில் இணைந்திருந்த வினோதமான காட்சியையும் எடுத்துக் காட்டிக்கொண்டிருந்தது.”

சோனியாவுக்கும் ரஸ்கோல்னிகோவுக்கும் இடையேயுள்ள ஒரு பிணைப்பு இதன் பிறகுதான் மிக வலிமையாக மலர்கிறது. “உங்களை முன்பே எனக்குத் தெரியாமல் போனது ஏன்? நீங்கள் முன்னாலேயே என்னிடம் வந்திருக்கக்கூடாதா?” என்று சோனியா கேட்பது மிகுந்த நெகிழ்வூட்டும் இடம்.

“நீங்கள் துன்பத்தை எப்போது ஏற்றுக்கொள்ளத் தயாராகிறீர்களோ அப்போது என் சிலுவையை வாங்கிக்கொள்ளுங்கள்” என்ற சோனியாவின் சொல்லின்படியே, முடிவில் ரஸ்கோல்னிகோவ் அவளிடமுள்ள சைப்ரஸ் மரத்துண்டினால் ஆன சிலுவைவைப் பெற்றுக்கொண்டு காவல் நிலையம் செல்கிறான். அவனிடம் வாக்களித்ததன்படி சோனியாவும் இறுதிவரை அவனுடன் வருகிறாள்.

அவள் மட்டுமே அவனது வாழ்வின் இறுதிவரை அவனை வழிநடத்தவிருக்கும் தூய வெளிச்சம்.

வைக்கோல் சந்தையின் நான்கு முனைகளும் சந்திக்கும் அந்தச் சதுக்கத்தின் மையத்தில் சென்றதும் அவள் சொல்லியபடியே ரஸ்கோல்னிகோவ் மண்ணில் மண்டியிட்டு, மண்ணை முத்தமிட்டு, இந்த மண்ணை மாசுபடுத்திவிட்டதற்காக மன்னிப்பு கேட்கிறான். நாவலின் அழகிய உச்சமாக இந்தக் காட்சி அமைந்துவிடுகிறது. இந்த இடத்திலேயே நாவல் முடிந்துவிடுகிறது. அதன்பின் அவன் காவல் நிலையம் செல்வதும், தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்வதும் கதையைத் தர்க்கபூர்வமான ஒரு புள்ளியில் முடிக்கவேண்டுமென்பதற்காகச் செய்யபட்டதாகத்தான் தோன்றுகிறது.

5

இந்த நாவலில் முற்றிலும் நேர்நிலையான பாத்திரங்களாக துனியாவையும் ரஸுமிகினையும் சொல்லலாம். சகோதரனின் மீது கொண்ட எல்லையற்ற பாசத்தால் தன்னையே சுயபலியிடத் துணியும் அன்புநிறை சகோதரி துனியா. அன்பும், ஒழுக்கமும், கண்ணியமும், துணிவும் நிரம்பிய பெண். அவள் நினைத்திருந்தால் ஸ்விட்ரிகைலோவுடன் இணக்கமாகச் சென்று தன் குடும்பத்தையே வசதியாக்கிக் கொண்டிருக்கமுடியும். ஆனால், மிகுந்த ஒழுக்கத்தோடும் தெளிவோடும் துணிச்சலான முடிவுகளை எடுக்கிறாள். அதே சமயம் தன்னுடைய முடிவு தவறானது என்பதை உணர்ந்தபின்னர் உடனே அந்த முடிவை மாற்றிக்கொள்வதிலும் துரிதமாகச் செயல்படுகிறாள். லூசினின் சுயரூபம் தெரிந்தபின் எந்தத் தயக்கமுமின்றி அவனை வெளியேற்றுகிறாள். தனது அன்பான சகோதரனின் நல்வாழ்வுக்காக அவள் ஏங்கியபடியும் இருக்கிறாள். இத்தகைய பெண்ணிற்கு லௌகீக வாழ்வில் தோல்வி என்பதே இல்லை. அவளைப் போலவே வாழ்வை நேர்நிலையோடு எதிர்கொள்ளும் ரஸூமிகினை அவள் மணப்பது ஆச்சர்யமில்லைதான்.

ரஸுமிகின் இந்த நாவலின் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய துணைக் கதாபாத்திரம். இது போன்ற நண்பன் தனக்கு வாய்க்காதா என வாசிப்பவரை ஏங்கச் செய்யும் அளவு நட்பின் இலக்கணமாக விளங்கும் நல்லவன். இவனைப் போன்றவர்கள் எந்தச் சூழ்நிலையையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு முன்செல்பவர்கள். இவனும் வறுமையில் சிரமப்படுபவன்தான். ஆனாலும், அந்தச் சிரமங்களையெல்லாம் வெற்றிகரமாகச் சமாளிக்க சரியான திட்டங்களைத் தீட்டி, கடுமையான உழைப்பின் மூலம் வறுமையை வெல்வதற்குத் தயாராகவே இருப்பவன். ஜன்னி கண்ட நிலையில் இருக்கும் ரஸ்கோல்னிகோவுக்குத் தகுந்த சமயத்தில் பேருதவி புரிகிறான். அவனுக்குப் புதிய உடைகள், தொப்பி, காலணி போன்றவற்றை வாங்கியளித்து, வீட்டுக்காரி அவன்மேல் சுமத்திய கடன் பத்திரம் சார்ந்த தொல்லைகளையும் தகுந்தவர்களிடம் பேசி தீர்வு காண்கிறான். நோய்வாய்ப்பட்டிருக்கும் ரஸ்கோல்னிகோவுக்குத் தேநீரையும் சூப்பையும் ஊட்டிவிட்டு, அவன் அருகிலேயே இருந்து கவனித்துக்கொள்கிறான். தனது வசிப்பிடத்தையும் ரஸ்கோல்னிகோவின் வீட்டருகே மாற்றிக்கொள்கிறான். ரஸ்கோல்னிகோவைக் காண வந்த அவனது தாய் மற்றும் சகோதரியை இறுதிவரை உடனிருந்து கவனித்துக்கொள்கிறான். லூசினை வெளியேற்றியபின்னர் உடனே அவர்கள் நால்வரும் சேர்ந்து பதிப்பகத் தொழிலைச் செய்யலாம் என்ற புதிய திட்டத்தைத் தீட்டி அதுகுறித்து விரிவாக எடுத்துரைத்து அவர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கிறான். இப்படி எல்லா வகையிலும், ரஸ்கோல்னிகோவுக்கு நாவல் முழுக்க பேருதவியாக இருக்கிறான் ரஸூமிகின். ரஸ்கோல்னிகோவ் சிறை சென்றுவிட்ட பின்பும் சைபீரியாவுக்கே குடிபெயர்வதற்கான ஏற்பாடுகளையும் செய்கிறான். அவ்வகையில் ரஸூமிகின் வாசகர்களால் மறக்கவே முடியாத ஒரு கதாபாத்திரமாகவே மிளிர்கிறான்.

6

குற்றமும் தண்டனையும் நாவலின் சிறப்பம்சங்களில் ஒன்று அதன் நடை. துப்பறியும் நாவல்களுக்குரிய விறுவிறுப்பான நடை நாவலின் மிகப்பெரிய பலம். விறுவிறுப்பான அந்த நடையே இந்த நீண்ட நாவலைத் தொடர்ந்து வாசிக்கச் செய்கிறது. பொதுவாகவே தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் துப்பறியும் நாவலுக்குரிய விறுவிறுப்பான நடையைக் காணலாம். இதன் காரணமாகவே நபக்கோவ் உள்ளிட்ட சில விமர்சகர்கள் தஸ்தாயெவ்ஸ்கியைத் துப்பறியும் எழுத்தாளர் என்று விமர்சித்தனர். ஆனாலும் இந்த நடையிலும் செவ்வியல் படைப்புகளை, காலம் கடந்து நீடித்திருக்கக்கூடிய படைப்புகளை உருவாக்க முடியும் என்பதை தஸ்தாயெவ்ஸ்கி நிரூபித்துக்காட்டினார். இந்த நடையே அவரது பலம். அதிலும் குற்றமும் தண்டனையும் போன்ற நாவலுக்கு இந்த நடைதான் முற்றிலும் பொருத்தமானதாக இருக்க இயலும். நாவலின் துவக்க அத்தியாயத்திலேயே மர்மங்கள் உள்ளடங்கியுள்ளன. கொலை என்னும் சொல்லைக் கூடுமானவரை அவர் பயன்படுத்தவேயில்லை. மாறாக “அந்த செயல்” என்ற சொற்களைத்தான் துவக்க அத்தியாயங்களில் அவர் பயன்படுத்துகிறார். அதிலும், திடீரென ஒருவன் ரஸ்கோல்னிகோவ் வீட்டருகே வந்து அவனிடம், “நீதான் கொலைகாரன்,” என்று திட்டவட்டமாகச் சொல்லும் அந்தக் காட்சியில் வாசகன் அடையும் அதிர்ச்சி அவரது இந்தப் புதிர்மிகுந்த நடைக்குக் கிடைக்கும் வெற்றி எனலாம்.

இந்நாவலின் மற்றொரு சாதனை என்பது, இந்நாவலில் காலம் பிரம்மாண்டமானதாக வீற்றிருக்கவில்லை என்பது. பொதுவாக செவ்வியல் நாவல்களில் காலம் கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்டமான ஒரு கதாபாத்திரமாக வந்துகொண்டிருக்கும். நாவலை வாசிப்பதென்பது உண்மையில் காலத்தை வாசிப்பதுதான். வாசகனுக்கு இதன்மூலம் ஒரு நிகர்வாழ்வை வாழவைக்கும் ஓர் அனுபவத்தைச் செவ்வியல் நாவல்கள் வழங்குகின்றன. பல நாவல்களில் இரண்டு தலைமுறைகள், மூன்று தலைமுறைகளுக்கெல்லாம் கதை நீளும். ஆனால், கால அளவை வைத்துப் பார்க்கையில் இந்த நாவலில் நடக்கும் சம்பவங்கள் யாவும் மிகக்குறைவான நாட்களில் நடந்து முடிந்துவிடுகின்றன. முதல் அத்தியாயத்தில் ரஸ்கோல்னிகோவ் தான் செய்யவிருக்கும் கொலைக்கான ஒத்திகை பார்ப்பதிலிருந்து இறுதி அத்தியாயத்தில் காவல் நிலையம் சென்று குற்றத்தை ஒத்துக்கொள்வதுவரைக்குமான கால இடைவெளி என்பது அதிகபட்சம் பத்து நாட்கள் இருக்கும். அகண்ட காலத்தின் இடத்தை அகவயமான விவரணைகளும், விரிவான தன்னுரைகள் மற்றும் உரையாடல்களும் எடுத்துக்கொண்டிருக்கின்றன. இப்படிக் காலம் குறைவான பங்களிப்பை ஆற்றும் நாவல்கள் செவ்வியல் தன்மை அடைவதும் காலத்தை வென்று நிற்பதும் அது கைக்கொள்ளும் கருவினாலும் பேசுபொருள்களினால் மட்டுமன்று, ஆசிரியரின் கதை சொல்லல் நுட்பங்களினாலும்தான். அவ்வகையில் இந்த நாவல் தலைமுறைதோறும் மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும், மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படும், மீண்டும் மீண்டும் புதிய தரிசனங்களும் வெளிச்சங்களும் இதில் கண்டடையப்பட்டுக் கொண்டேயிருக்கும்.


திரைகடலுக்கு அப்பால் தொடர்: பிற கட்டுரைகள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்