நேர்காணல்

மீம் எனும் கலை: மனோ ரெட்டுடன் ஓர் உரையாடல்

6 நிமிட வாசிப்பு

‘மீம்’ என்கிற ஆங்கில வார்த்தை முதன் முதலில் ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய The Selfish Gene புத்தகத்தில் இடம்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. நமது மரபணுக்கள் ஒரு மனித உடலிலிருந்து கூறுகளை அடுத்த சந்ததிக்கு பிரதி செய்வதன் மூலம் எடுத்துச்செல்கின்றன. நமது கதைகள், இசை, கலை, கலாச்சாரம் அனைத்துமே சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொன்றுக்கு எடுத்துச்செல்கின்றன. ஆக இவையும் மரபணுக்கள் போலவே என்பதை உணர்த்த, ஒரு சிந்தனையைக் கடத்தும் துணுக்குக்கு ‘மீம்’ என்ற பெயரை, இணையம் தோன்றும் முன்னரே 1976இல் சூட்டினார் டாக்கின்ஸ். (கிரேக்க மொழியில் ‘மைமீம்’ (mimeme) என்றால் பிரதி செய்தல். அதன் சுருக்கமே ‘மீம்’.)

அலைபாயுதே திரைப்படத்தில் சிறிது நேரம் மட்டுமே வரும் கதாப்பாத்திரங்களுக்கு எதற்காக அரவிந்த் சாமியையும் குஷ்புவையும் தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்விக்கு, இயக்குநர் மணிரத்னம் சொன்ன பதில், “அந்தக் கதாப்பாத்திரங்கள் மீது தவறில்லை என உணர்த்த நினைத்தேன். அவர்களைப் பல படங்களில் மக்கள் ஏற்கனவே பார்த்திருப்பதால், அவர்கள் நல்ல எண்ணம் கொண்டவர்கள்தான் என நிறுவ நான் திரைக்கதையில் மேலும் காட்சிகள் சேர்க்கத் தேவையிருக்காது.” இது போலதான் மீமும் — நமக்கு நன்கு பழக்கப்பட்ட பிம்பங்களைப் பயன்படுத்தும் ஒரு காமிக் வடிவம். வெறும் பொழுதுபோக்கு நையாண்டி சமாச்சாரங்களுக்குப் பயன்படுவதாகத் தோன்றினாலும், மீம்களும் கருத்துகளை, அனுபவங்களைக் கடத்துவதன் மூலம் உணர்வுகளைத் தூண்டவல்லதொரு கலைவடிவமே.

மனோ ரெட்

மீம் மாஸ்டர்கள், மீம்கள் உருவாக்குவதன் சவால்கள், மீம் மூலம் கதை சொல்லுதல், இலக்கிய மீம்கள் மற்றும் மீம்களின் வற்றாத ஊற்றாகிய நமது வடிவேலு குறித்துப் பேசுவோம், மீமர் மனோ ரெட்டுடன்.

மீம் மீதான ஆர்வம் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?

சமூக வலைதளங்களில் நண்பர்கள் சிலரது மீம்களைப் பார்த்தபோது நாமும் ஒன்றை உருவாக்கிப் பார்க்கலாம் என்று தொடங்கியதுதான். கூடுதலாக, நகைச்சுவைகள் வழியாக வடிவேலுவும் மிக நெருக்கமானவராக இருந்ததால் எளிமையாகவும் விரைவாகவும் மீம் கை கூடி வந்தது. பக்கம் பக்கமாக எழுதாமல் சொல்ல வேண்டியதை ஒரு படத்துக்குள் அடக்கலாம் என்கிற ‘கவிதைத்தனமான’ சோம்பேறித்தனமும் இதில் அதிக ஆர்வத்தைக் கொடுத்தது.

நீங்கள் மீம் மாஸ்டர் எனக் கருதுபவர் யார்? ஏன்?

உருவாக்குபவர்களைவிட அதற்கு மூலமாக இருப்பவர்களை ‘மாஸ்டர்’ என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் மீம் மாஸ்டர் என்றால் அதிகபட்சம் நகைச்சுவை நடிகர்களைத்தான் சொல்ல வேண்டும். அவர்களது உடல்மொழி, வசனங்கள் மற்றும் உருவத்தை வைத்துதான் மீம் உருவாக்க முடியும். மீமில் பாதிக் கருத்து அவர்கள் தந்ததாகவே இருக்கும். மீதிதான் நாம். நகைச்சுவை நடிகர்கள் ஒரு புத்தகம் எனில் அதில் இருந்து குறிப்பெடுக்கிற மாணவர்கள்தான் மீம் உருவாக்குபவர்கள். மேலும், கார்ட்டூன், அனிமேஷன் கதாப்பாத்திரங்கள், இப்போது பரவலான மீம்ஸில் வரும் ‘ச்சீம்ஸ்’ நாய்கூட மீம் மாஸ்டர்தான்.

“மீம் என்பது ஏற்கெனவே இருக்கும் ஒன்றின் மீது புது அர்த்தம் சேர்ப்பதுதானே. இதில் படைப்பாக்கம் குறைவாகத்தானே இருக்கிறது,” எனச் சொல்லப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

படைப்பாக்கம் குறைவாக இருக்கிறது என்று சொல்வதை நிச்சயமாக மறுக்கிறேன். நிரப்பாமல் இருக்கும் ஒரு டெம்ப்ளேட் (meme template) ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துடன் காட்சி அளிக்கும். அதைச் சரியாகவும் பொருத்தமாகவும் நிரப்புவதுதான் அவரவர்க்கான படைப்பாக்கம். ஒரு சிறந்த கதை, கவிதை எழுத எத்தனை படைப்பாக்கமும் உழைப்பும் தேவையோ அவை அத்தனையும் சிறந்த மீம் உருவாக்கவும் தேவை.

நீங்கள் உருவாக்கியதிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த இலக்கிய மீம்?

ஒரு மீமுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதற்கு அது பரவலாக அறியப்பட்ட காட்சியாக இருக்க வேண்டும். மீமுக்கான காட்சியை நீங்கள் எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

பரவலான காட்சி என்று நீங்கள் குறிப்பிடுவது எல்லோருக்கும் நன்கு தெரிந்த வசனத்துடன் கூடிய நகைச்சுவைக் காட்சி. அப்போதுதான் அந்த நகைச்சுவையுடனும் மீம் சொல்ல வரும் கருத்துடனும் எளிதாக ஒன்ற முடியும். இதில் நாம் தேர்வு செய்ய வேண்டிய தேவை அதிகம் இருக்காது. அதாவது, சம்பந்தப்பட்ட மீம் நமக்குள் உருவாகும்போதே அதற்கான காட்சியுடன்தான் உருவாகும். அல்லது அந்தக் காட்சியைப் பார்த்த பிறகே மீம் உருவாகி இருக்கும். அப்படியும் கிடைக்கவில்லை எனில் ‘எனக்கு வேற வழி தெரியல ஆத்தா’ என்று தேடிப் போவது வடிவேலுவின் காட்சியாகவே இருக்கும்.

ஒரு மீம் உருவாக்குவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? அதன் பின்னணி வேலைகள் குறித்துச் சொல்லுங்கள்.

ஒரு தகவலை நகைச்சுவையாகச் சொல்ல வேண்டும் என்பதற்கான கருவிதான் மீம். சமூக வலைதளங்களிலும் பகடி செய்வதற்குத்தான் அதிகம் பயன்படுகிறது. அந்த வகையில் மனதிற்குள் ஒரு காட்சி முழுமையடைந்த பிறகே உருவாக்குவதால் அதிகபட்சம் 10 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். சரியான நிறத்தேர்வு, எழுத்து வகை போன்ற ஒழுங்கமைத்தல்களுக்கான நேரமே அதிகம். இவற்றுள் பகடி தவிர்த்து இதுவரை செய்திடாத புதுமைகளை மீம் மூலம் சொல்ல முயற்சி செய்யும்போதுதான் அதிக நேரம் எடுக்கும். அவ்வாறு எனக்குத் தமிழ் இலக்கண மீம்களை உருவாக்கிய போது சிலவற்றுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் எடுத்திருக்கிறது.

வடிவேலு நம்மைச் சோம்பேறி ஆக்கிவிடுகிறாரா? இன்னும் புதுப்புது மீம் காட்சிகளைத் தேடிக் கண்டடைய வேண்டிய தேவை இருக்கிறதா?

வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் கடல் போல் பரந்து இருக்கின்றன. அவர் நம்மைத் தேட வைத்துக்கொண்டுதான் இருக்கிறாரே தவிர சோம்பேறி ஆக்கவில்லை. அவரது எந்தக் காட்சி எப்போது பிரபலமாகும் (trend) என்றே தெரியாது. சக மீமர் யாராவது ஒருவர் எங்காவது இருந்தபடி புதுப்புதுக் காட்சிகளைத் தேடி வடிவேலுவை வெளியில் கொடுத்துக் கொண்டுதான் இருப்பார். அதுபோக, புதுப்புது டெம்ப்ளேட்டுகளும் வந்துகொண்டுதான் இருக்கும். இதற்கு நடுவில் நாம் சோம்பேறி ஆகிவிடாமல் இருந்தால் போதும்.

நகைச்சுவை மட்டுமில்லாமல் பிற உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய வல்லமை மீம்களுக்கு உண்டா?

உண்டு! இன்பம், நகைச்சுவை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் இப்படி நவரசங்களையும் சொல்ல முடிகிற வல்லமை மீம்களுக்கு உண்டு. நாம் சொல்ல வருகிற கருத்தின் உணர்ச்சிதான் மீம். நம் கருத்து கோபமாக இருந்தால் மீம் கோபமாகவே இருக்கும். அதே கோப மீம் ஒருவருக்கு நகைச்சுவையையும் இன்னொருவருக்கு அருவருப்பையும்கூட ஏற்படுத்தலாம். இங்கே உணர்ச்சி என்பது அவரவர் ரசனை சார்ந்தது.

மீம்கள் மூலம் கதை சொல்வது சாத்தியமா?

ஒரு குறுங்கதையை ஒரு பக்க காமிக் வடிவில் வழங்க முடியும். அது சாத்தியம் எனில் மீம் மூலம் கதை சொல்வதும் சாத்தியமே. இதுவும் ஒரு போட்டோ காமிக்தானே! (வாங்களேன் நாமே முயற்சி செய்து பார்க்கலாம்)

தமிழ் மீம்களில் தற்போது நடந்துகொண்டிருக்கும் புதுமைகளாக எதைச் சொல்வீர்கள்?

புதுமையுடன் சேர்த்து திறமையையும் வைத்துச் சொன்னால் அது தமிழ் வீடியோ மீம்தான். சவாலான ஒன்றை அசாதாரணமாக உருவாக்கிவிடுகிறார்கள். ஒரு நிமிட வீடியோ மீமில் குறைந்தது 20க்கும் மேற்பட்ட காட்சிகள். சமகால அரசியல் பகடி முதல் திரைப்படத்தின் முன்னோட்டத்திற்கான பகடி வரை அனைத்திலும் அவர்களது உழைப்பு வியப்பைத் தரும். இது தவிர, அறிவியல் மீம், தமிழ் இலக்கண மீம், சமூக அவலங்களைச் சொல்லும் முற்போக்கு மீம் என அனைத்தும் புதுமையே. கல்யாண மீம், காதுகுத்து மீம், முதலிரவு மீம்கூட வந்துவிட்டது.

தமிழ் இலக்கணத்தை எளிதாக உணர்த்த மீம்கள் உருவாக்கியுள்ளீர்கள். அதே போல அறிவியலை மீம் மூலமாகச் சொல்லித் தரும் முயற்சிகள் நடக்கின்றனவா? உங்களுக்கு அப்படி ஏதும் செய்யும் திட்டங்கள் உள்ளனவா?

நண்பர் ஜெகதீசன் சைவராஜ் அறிவியலை மிக அற்புதமாக மீம் மூலம் முகநூலில் சொல்லி வருகிறார். அவரைப் பார்த்து வியக்க முடிகிறதே தவிர அதுபோல் உருவாக்கும் எண்ணம் எல்லாம் வரவில்லை. எனக்கு நன்கு தெரிந்ததைச் செய்யும்போதுதான் அது முழுமையாகவும் சிறப்பாகவும் வருவதாக எண்ணுகிறேன்.

Know Your Meme போன்ற இணையதளங்கள் ஒவ்வொரு மீம் டெம்பிளேட்டும் உருவான கதையை ஆவணப்படுத்தி வருகிறார்கள். இது போன்ற முயற்சிகள் தமிழில் நடக்கின்றனவா?

இப்படியெல்லாம் கூடவா நடக்கின்றன? தகவலுக்கு நன்றி. தமிழில் அப்படி ஒரு முயற்சியை நான் கேள்விப்பட்டதில்லை. அவ்வாறு யாராவது முன்னெடுத்தால் நானும் சேர்ந்துகொள்வேன். ஆனால், முகநூலில் என்னுடைய மீம்களை தனித்தனித் தொகுப்பாக (album) வகைப்படுத்தி வைத்துள்ளேன். இதை ஆவணம் என்று சொல்ல முடியாது. முகநூல் இருக்கும் வரை அவை இருக்கும்.

மீம் வீடியோக்கள் உருவாக்கும் திட்டங்கள் ஏதேனும் உள்ளனவா? உங்களின் எதிர்கால மீம் திட்டங்கள் என்ன?

மீம் வீடியோக்கள் உருவாக்க நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கென இருக்கும் சில மொபைல் செயலிகள் மூலமாக முயற்சி செய்து பார்த்தபோது பொறுமையும் உழைப்பும் அதிகம் தேவைப்பட்டதால் வெளி வந்துவிட்டேன். இதை வைத்துப் பார்க்கும்போது எதிர்காலத் திட்டமெல்லாம் இருப்பதாக நான் உணரவில்லை. இலக்கண மீம்களைப் புத்தகமாக்கலாம் என நண்பர்கள் சொல்லியதுண்டு அவ்வளவே!

நீங்கள் உருவாக்கிய மீம்களுக்குக் கொலை மிரட்டல்கள் வந்ததுண்டா?

உள்டப்பி (inbox) வழியாகக் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இசை ரசிகர்களிடம் இருந்தும், இலக்கியம் பற்றிய மீம்களின்போது சில இலக்கிய தாதாக்களிடமிருந்தும் மிரட்டல்கள் வந்துள்ளன.

கவிஞர்களுக்குக் காதலிகள் அதிகமுண்டு என்பார்கள். மீம் படைப்பாளிகளுக்கு எப்படி?

தோழிகள் நிறைய உண்டு. (ஃபேக் ஐடி வழியாக சில ஆண் தோழிகளும்)

உலகின் முதல் மீம் இதுவாக இருந்திருக்கலாம் என்கிறார்கள். தமிழின் முதல் மீம் எதுவாக இருந்திருக்கும்?

தமிழ்ச் செய்தித்தாளில் வந்த முதல் கேலிச்சித்திரம். (பாரதியார் தமது பத்திரிகைக்கான கேலிச்சித்திரம் பற்றி ஓவியரிடம் இப்படி இருக்க வேண்டுமெனக் கூறி தமது முகத்திலும் அபிநயங்களிலும் காண்பித்துவிடுவாராம்!)

ஒரு வினோத பிரளயம் ஏற்பட்டுப் பேரிலக்கியங்கள் அனைத்தும் அழிந்துபோய் அடுத்த நூற்றாண்டின் பேரிலக்கியங்களாக மீம்கள் வடிவெடுத்தால், உங்களின் ரியாக்‌ஷன்?

குறிப்பிட்ட காட்சிகளையே வைத்து மீண்டும் மீண்டும் அரைத்த மாவை அரைக்கும் மீம் படைப்பாளிகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…

குறிப்பிட்ட காட்சியாக (ஒரே கிரைண்டர்) இருந்தால் என்ன, அதில் வெவ்வேறு பொருட்களை (கருத்துகளை) அரைத்துப் பழகவும். கீழே உள்ள இந்த டெம்ப்ளேட்டில் வராத மீம்களா? எதை எங்கே எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் அது அரைத்த மாவா அல்லது அறுவை மீமா என்பது புரியும்.

மீம்களை ஏளனமாக அது ஒரு டயம்பாஸ் மட்டும்தான் என்பது போலப் பார்ப்பவர்களிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்வி?

“எல்லாத்துக்கும் உழைப்பு தேவை. அதுல மீம்ல மட்டும் தனியா என்ன உழைப்பு தேவை?” என்று நீங்கள் கேட்கலாம். கீழே உள்ள இந்த அறிவியல் மீம் பாருங்கள். இதற்கு உழைப்பையும் தாண்டிய அறிவு தேவைப்படுகிறது. இந்த மீம் உருவாக்கிய ஜெகதீசன் சைவராஜ் இதற்காக எவ்வாறெல்லாம் உழைத்திருப்பார் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளவும்.

மீம்களிலும் சரி நம்முடைய அன்றாட உரையாடல்களிலும் சரி நகைச்சுவை நடிகர்களின் வசனங்களும் உடல் அசைவுகளும் கலந்துவிட்டன. நம்முடைய உணர்வுகளை நமக்கே உரிய தனித்துவமான பாணியில் வெளிப்படுத்தும் தன்மையை இதனால் இழக்கிறோமா?

எந்தவொரு நகைச்சுவை வசனமாக இருந்தாலும் சரி, அல்லது நகைச்சுவை நடிகரின் உடல்மொழியாக இருந்தாலும் சரி அது நம்மை ஏதாவது வகையில் பாதிக்கும்போது அது நம்முடைய உடல்மொழியுடன் சேர்ந்துகொள்ளும். இதில் நமது தனித்தன்மைதான் அதிகம் வெளிப்படுமே தவிர வடிவேலுவோ, சந்தானமோ தெரிய மாட்டார்கள். வடிவேலு தன் கிராமத்து மக்களிடம் இருந்தே காமெடிகளை எடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். நிச்சயம் வடிவேலு வசனத்தை அவர்போல் சொல்ல முடியாது. நம்முடைய வசனமாகவே அது வெளிவரும். இதில் நமது தனித்தன்மை இன்னும் அதிகமாக மிளிரும். சொல்லப்போனால் தனித்துவமான பாணி என்பதே இருக்காதுதானே? எல்லோருக்கும் யாராவது ஒருவர் முன்மாதிரியாக இருப்பார்.

“மீம்களின் கோட்பாடுகள்” என்ற ஒரு புத்தகத்திற்கு உங்களை அட்டைப்படம் வடிவமைக்கச் சொன்னால், அது எப்படி இருக்கும்?

நிச்சயமாக வடிவேலு இருப்பார். உலகத்தை வடிவமைக்கும் நவீன கடவுள் போல் அவரைச் சித்தரித்துக் கையில் ஒரு டிஜிட்டல் பேனாவைக் கொடுத்துவிடுவேன்.


மேலும் பார்க்க

  1. மீம் உருவான கதையை விளக்குகிறார் ரிச்சர்ட் டாக்கின்ஸ் — https://www.youtube.com/watch?v=4BVpEoQ4T2M&ab_channel=OxfordUnion
  2. The Selfish Gene புத்தகத்தின் 11ஆம் அத்தியாயம் ‘Memes: the new replicators’ — http://faculty.washington.edu/lynnhank/Memes.pdf
  3. ‘மீம்’ என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன? ‘நகைப்பழிகை’ என்கிறார் கவிஞர் மகுடேஸ்வரன் ஒரு பதிவில்.
  4. மீம் நூலகருடன் ஓர் உரையாடல் — https://www.washingtonpost.com/news/the-intersect/wp/2015/12/21/tumblrs-meme-librarian-has-the-best-job-on-the-internet/
  5. ‘மீம்’ என்கிற சொல் உருவான கதை — https://www.sciencefriday.com/articles/the-origin-of-the-word-meme/
  6. மீம்களின் அவசியம் — https://www.youtube.com/watch?v=bYJZA86dPEo
அரூ குழுவினர் and மனோ ரெட்

Share
Published by
அரூ குழுவினர் and மனோ ரெட்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago