பலவீனத்தின் பழியாடல்

< 1 நிமிட வாசிப்பு

மனித விழியிடுக்கினுள்
பதுங்கி நெருட்டும் தூசிகளை
கண்பட்டைகளின் மீது விளக்கெண்ணெய் தடவி
உயிருடன் உறிஞ்சிப் பிடிக்கிறாள்
செல்லாயி.
காணிக்கை வாங்காமல்
அந்தத் தூசிகளையெல்லாம்
பட்டைமிளகாயுடன் சேர்த்தரைத்து
மாசாணியம்மனின்
முகத்திலப்பிக் காந்தவிடுகிறாள்.
பங்காளிகளின் பகையாட்டத்தில்
செல்லாயியினது
ஆயிரமாயிரம் வாத்துகளை
சீவிக் கூத்தாடினர்.
இடியிறங்கி எரிந்துவிழும்
தென்னங்குருத்தாக
பங்காளிகள் மூளியாக வேண்டி
மாசாணியைத் தணியவிடாது
வெக்கையாக்குகிறாள்.
வெட்டுண்ட வாத்துகளின் கால்களை
தனது கல்யாணப் பட்டுச்சீலைக்குள் முடிந்து
தலையணைப் பொட்டணமாக்கி
அணைத்திருப்பாள்.
வாத்துகள் தொளியடித்த
நிலமென மாறியிருக்கும்
ரா வானத்தில்
அப்பொட்டணம்
அவளைக் குளிர நீந்த வைக்கும்.
சூட்டுக்குறி அடையாளமிட்ட
வாத்துகளின் மூக்கை
நித்தமும் ஒவ்வொன்றாக மாட்டி
மாசாணியுடன் பேசுவாள்.
ஆயிரமாவது வாத்தின்
மூக்கையெடுத்து மாட்டுகையில்
சல்லிவேர்க் கொத்துகளாக
பங்காளிகள் மேல்
இடியாக இறங்கினாள்
மாசாணி.


ஓவியம்: Red Composition — Jackson Pollock

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்