கவிதை

சு.நாராயணி கவிதைகள்

< 1 நிமிட வாசிப்பு

E=mx2

கடிகாரம் உடைந்து
வெளியேறுகிறது காலம்.

பதறி நடுங்கி
செய்தித்தாளைச் சுருட்டி
விரட்டுகிறான் அவன்.

காலமோ பறந்துபோய்
புக்கோவெஸ்கியின் கவிதைகளில்
அலகுகளைத் தேடுகிறது

தொல்பொருள் எச்சங்களில்
உறங்கி ஓய்வெடுக்கிறது

அடையாளத்தைத் தேடி
புனைவுகளுக்குள்
வேகமாய்ப் பயணிக்கிறது.

வழக்கம்போல
விரும்பும் நொடிகளில் வேகமாகவும்
காத்திருக்கும்போது மெதுவாகவும்
விளையாட்டு காட்டுகிறது

கணிதச் சமன்பாடுகளில்
அடைப்புக்குறியின்மேல்
சாய்ந்துகொள்கிறது

தெருவில் இறங்கி
நான்காம் பரிமாணமாய்
ஓடத்தொடங்குகிறது.

துரத்துபவனுக்கு மூச்சிரைக்க….
அவன் பாவம், வெறும் மனிதன்.

காலம் தப்பித்ததை
ஊருக்குச் சொல்ல
மறுபடி ஓடுகிறான்.

காலத்தைக் கடக்கிற காலம்
எங்கோ போய்விட்டது…

அப்போதெல்லாம் தாத்தாக்கள்
ஊசல் கடிகாரங்களை
பூட்டியே வைத்திருப்பார்கள்.


பூமிப்பந்தில் அடையாளத்துக்காகச் செருகப்பட்ட பனிக்கட்டி

(புவியின் வரலாற்றில் அதிகபட்ச வெப்பநிலையை எட்டி உருகத் தொடங்கியிருக்கும் அண்டார்டிகாவுக்கு)

பெங்குயின்கள் அலறலோடு
உடையும் பனிப்பாறைகள்
வரலாற்றில் மிதக்கத் தொடங்குகின்றன.

கடல்பாசிகள் ஒளிரும் நீல இரவில்
வெப்பம் தாளாது
நிலத்துக்கே திரும்பிப் போவதாய்
ஏக்கக் கனவில் திமிங்கிலங்கள்.

சுறாமீனின் கவ்வும் வாயைப் போன்ற
திடீர்ப் பதற்றமும் பீதியும்
கேள்விப்படாத நிலம் அது.

எறும்புகளின் வாய்க்கு ஏற்றவாறு
பதற்றங்களைச் சிறு துண்டுகளாய்
வெட்டுகிறார்கள்.

பல்லாயிரம் வருடங்களாய்
உறைந்திருந்த பனி உருகத் தொடங்கியதும்
செயலற்று உறையக் கற்கிறார்கள் மனிதர்கள்.

கடல் வந்து முன்கதவைத் தட்டி
வாசல்களை எல்லாம் அழித்த பின்னும்
கடவுச்சொல்லுக்குப் பதிலாக
வைக்கப்பட்ட புள்ளிகளில்
கோலம்போடச் சொல்கின்றன
பொல்லாத அலைபேசிகள்.


புகைப்படம்: Akil Lakshman

நாராயணி சுப்ரமணியன்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். வனவிலங்குகளை முன்வைத்து 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே' என்ற கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார் (பாரதி புத்தகாலயம் வெளியீடு). அச்சு இதழ்கள், இணைய இதழ்கள், அறிவியல் இதழ்கள் ஆகியவற்றில் தொடர்ந்து சூழலியல் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Share
Published by
நாராயணி சுப்ரமணியன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago