நாற்பக்கமும் மேடுறுத்தப்பட்ட நீர்நிலை
நாற்புறமும் அலைவீச
நாற்புறமும் மரங்களும் வயல்களும்
தோப்புகளும் சூழ்ந்த காதல்சிறை.
குளத்திலிருந்து பாயும் வாய்க்கால்
நதியென, சிற்றோடையென
நாணல்களுடனும் நீர்ப்பூக்களுடனும்
மொத்த முழுவிடுதலையின் துள்ளாட்டங்களுடன்!
குளம் மட்டும் என்ன,
நாற்கரைகளையும் மறந்து
தானே கடலாகிவிட்ட நிறைவுடன்!
மரங்கள், பறவைகள், மனிதர்கள், வானம் –
எல்லோர்க்குமே தெரியும்:
“நண்பகல் குளத்துக்கு
சூரியன் மட்டுமே போதும்!”
நதியென ஓடையெனப்
பாய்ந்தோடும் வாய்க்காலுக்கு
இந்தச் சிற்றூர்களின் பசியவெளிச்
சுற்றங்களே போதும்.
முகக்கவசம் அணிந்த மனிதர்கள்
விழிகளிலும் செவிகளிலும்
ஒளிரும் பேரொளியைத்தான்
உரைக்க முடியுமோ?
இந்தக் காற்றுவெளியெங்கும்
பரவிக் கிடக்கும்
நோய்க்கிருமிகளை அறிந்துகொண்டாய்
காலம்காலமாய்
பேச்சாலும் எழுத்தாலும்
சாதிக்க முடியாது தொடர்ந்துவரும்
வாயையும் மூடிக்கொண்டாய்.
நலம் காக்கும் நீர்கொண்டு
மனிதர்கள் கைகள் கழுவும் அழகில்தான்
உலகம் இதுவரை கண்டிராத
எத்துணை அக்கறையும் வாஞ்சையும்!
எல்லாச் செயல்களினதும்
இதயத்தையல்லவா
தூய்மை செய்துகொண்டிருக்கிறது அது!
எத்துணை ஆர்வத்துடன்
நீரிலே தோன்றி
நீரில் மறைந்துவிடுமுன்
பொங்கி நுரைத்துமலர்ந்து
தோய்ந்து சிரிக்கின்றன நீர்மப்பூக்கள்!
தோயும் விரல்களின்
அற்புதக் குழுநடனத்தில்தான்
நெஞ்சை அள்ளும்
எத்தகைய ஒத்திசைவு!
மானுட இலட்சியம்
நிறைவேறப் போவதன் முற்குறியோ,
நிறைவேறிவிட்ட காட்சியோ?
கைகழுவலில் கழிந்துவிட்டதும்
கைகூடி இருப்பதும்தான்
எத்தகைய நற்காட்சி? நற்குறி?
மெல்லமெல்ல
வீட்டைவிட்டும்
வீட்டிலிருந்து
வெளியேறிவருகிறவர்கள்தாம்
எத்தகைய மாமனிதர்களாய்ப்
பேரொளிர்கிறார்கள்
மலைமுடிகளிலிருந்தும்
பள்ளத்தாக்கு செழிக்கக்
கீழிறங்கி வருகிறவர்கள்போல்!
அருவிகளும்
ஓடைகளும்
பசுமைகொஞ்சும்
மலைச்சரிவுகளும்போல்!
பாதை என்பதே
கிடையாது என்கின்றன
சாலையோரத்து மரங்கள்.
இங்கேதான் இங்கேதான்
இதுதான் இதுதான்
என்கின்றன
நிலமெங்கும்
முளைத்துநிற்கும் மரங்கள்.
மரங்களின் விதைகளைக்
கொண்டுசெல்வதற்காகவே
பறவைகள்.
விதைகளை முளைக்கச் செய்வதற்காகவே
கடலும் மேகங்களும் வானமும்!
புகைப்படம்: ஶ்ரீநாத்
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…